Monday, February 26, 2018

தமிழில் புழங்கும் வடமொழிச் சொற்கள் சில



நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத சொற்கள் சில...

அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு

ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி

இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை

ஈ 
ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை

உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்

ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை

கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி

சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்

தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு

நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல்

மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்

ய 
யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி

ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை

ல 
லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்

வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்

ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்

ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்




ஆரோவில்லில் கலைஞர்...



——   கோ.செங்குட்டுவன்.




விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அப்போதுதான், சர்வதேச நகரமாக உருவாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்ட தமிழக அரங்கிற்கான அடிக்கல் நாட்டுவிழா, 1973ஆம் ஆண்டு, அக்டோபரில் நடந்தது.

விழாவுக்குத் தலைமை அமைச்சர் நாவலர். இதில் பங்கேற்ற, முதல்வர் கலைஞர், தமிழக அரங்குக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதன் சுருக்கம் வருமாறு:
‘விழாத் தலைவர் நம் நாவலர் அவர்கள் புறநானூறு பாடிய பெரும்புலவன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து ஓதியிருக்கிறான் என்று குறிப்பிட்டார்கள். அவர் அப்படிக் குறிப்பிட்டபோது ஓர் இளம் நண்பர் வேகமாக என் பின்னே ஓடிவந்து ஒருவேளை அந்தப் புறநானூற்றுக் கவிஞன் இந்தக் கிராமத்திலேதான் பிறந்திருப்பானோ என்று என்னிடத்தில் கேட்டார்.

அவன் இந்தக் கிராமத்தில் பிறந்தானோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அந்த முழக்கம் தமிழ்நாட்டிலே இருந்து உலகுக்கு அறிவிக்கப்பட்டது என்பது புறநானூற்றுக் காலத்திலே மாத்திரம் அல்ல, அதற்குப் பிறகு பல்லாண்டு காலம் கடந்தபிறகு இப்போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறிவிப்பதும் தமிழ்நாட்டிலே இருந்துதான் என்று எண்ணுகிற நேரத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு பல்வேறு உணர்ச்சிகளுக்கு, பல்வேறு உன்னதமான நிலைகளுக்கு வழிகாட்டுகிற நாடாகும்.

ஆரோவில் என்றால் பிரெஞ்சு மொழியில் புதிய நகர் அல்லது புதிய வாழ்வு உதயம் என்று பொருள். பிரெஞ்சு மொழியில் சொல்லிப் பார்த்தாலும் அது பொருத்தமாக இருக்கிறது. ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்துச் சொல்லிப் பார்த்தாலும் ஒரு வகையிலே இது பொருத்தமாக இருக்கிறது. உள்ளபடியே இது ஒரு மகத்தான சாதனையாகும். இந்த மகத்தான சாதனையினுடைய விளைவை உடனடியாக நாம் காணமுடியுமா என்றால் – நாளைக்கோ, நாளைய மறுநாளைக்கோ கண்டுவிட முடியுமா என்றால்  – இயலாது. ஆனால் இதற்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் இன்றைக்கே நிச்சயித்துக்கூற முடியும். அந்த எதிர்காலத்தை இப்போதே அமைத்துக் காட்ட இயலாது.

ஒரு இணைப்பு – அதாவது ஒரு சங்கமம்  – மாநிலத்துக்கு மாநிலம் அல்ல – நாட்டுக்கு நாடு – உலகத்திலே இருக்கிற பல்வேறு நாடுகளுக்கு இடையே இங்கே உருவாகிறது. நாங்கள் உலக அளவிலேகூட இணைப்பை விரும்புகிறவர்கள். இணையாமல் இருக்கிற தன்மையை எந்த நேரத்திலும் நாங்கள் விரும்பாதவர்கள். நாங்கள் என்றைக்கும் உலக அரங்கத்தில் இணைப்பை விரும்புகிறவர்கள். இந்த ஆரோவில் நகரம் நல்ல முறையிலே வளர்வதைத் தமிழ்நாடு அரசு தனக்குற்ற ஒரு இலட்சியமாகக் கொண்டு ஒத்துழைப்பை எந்த அளவுக்குத் தருமோ அந்த அளவுக்குத் தரும்.’

இவ்வாறு கலைஞர் பேசினார். ஆரோவில் இன்று வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.


படம் உதவி: விக்கிப்பீடியா

________________________________________________________________________
தொடர்பு: கோ.செங்குட்டுவன் <ko.senguttuvan@gmail.com>




Sunday, February 25, 2018

காளமேகப்புலவரும் பாண்டியநாட்டுச் சிவத்தலங்களும்



——   தேமொழி


இரட்டுற மொழிதல் என்றாலே காளமேகப்புலவர் பாடல்  என்று தமிழிலக்கியத்தில் முத்திரை பதித்தவர் கவி காளமேகம். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் கவி காளமேகம் எனப் பல வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது [1].   காளமேகப்புலவர் எழுதிய  பாண்டிய நாட்டில் உள்ள சிவத்தலங்கள் குறித்த பாடலொன்று உண்டு. இப்பாடல் காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள் நூலில் கொடுக்கப்படுகிறது [2]. தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம் வழங்கும் கவி காளமேகம் பாடல்கள் வரிசையில் 117 ஆவது பாடலாகவும் இடம்பெறுகின்றது [3].

கூடல், புனவாயில், குற்றாலம், ஆப்பனூர்
ஏடகம்நெல் வேலி, இராமேசம், - ஆடானை
தென்பரங்குன்றம், சுழியல், தென்திருப்புத் தூர், காசி
வன்கொடுங்குன் றம்,பூ வணம்.

(பாடல் - 117: சிவத்தலங்கள் / பாண்டிய நாட்டில் உள்ளவை)

1.  கூடல் - மதுரை
2.  புனவாயில் - திருப்புனவாயில்
3.  குற்றாலம் - திருக்குற்றாலம்
4.  ஆப்பனூர் - திருவாப்பனூர்
5.  ஏடகம் - திருவேடகம்
6.  நெல்வேலி -  திருநெல்வேலி
7.  இராமேசம் - திருஇராமேச்சுரம்
8.  ஆடானை - திருஆடானை
9.  தென்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம்
10. சுழியல் - திருச்சுழியல்
11. திருப்புத்தூர் - திருப்புத்தூர்
12. காசி - தென்காசி
13. வன்கொடுங்குன்றம் - திருக்கொடுங்குன்றம்
14. பூவணம் - திருப்பூவணம்;
என்னும் இவை யாவும் பாண்டிநாட்டுத் தலங்கள் ஆகும்.
என்பது பாண்டிநாட்டுச் சிவத்தலங்கள் குறித்து இப்பாடல் கொடுக்கும் குறிப்பு.

பாண்டிநாட்டுச் சிவத்தலங்கள் குறித்த இந்த வெண்பா, 1906-ஆம் ஆண்டில் உவேசா பதிப்பித்த  'திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்'  என்ற “பழைய திருவிளையாடல்” புராணத்தில் இடம் பெறுகின்றது.

கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றென்றிருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்

ஆனால், இது காளமேகப்புலவரின் பாடல் என்ற குறிப்பு உவேசா வின் நூலில்  கொடுக்கப்பெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காளமேகம் இயற்றியதாகப் பல தனிப்பாடல்கள் கிடைக்கப் பெறுகின்றன என்று காளமேகப்புலவர் குறித்த ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு [4].  இவ்விரு பாடல்களுக்கும் உள்ள வேறுபாடு; 12  ஆவதாகக் குறிக்கப்படும் சிவத்தலம்  காசி என்பது  கானை என உவேசா வின் நூலில்  கொடுக்கப்பட்டுள்ள வேறுபாடு.

பாண்டித் தலம் 14-ம் கூறும் வெண்பாவில் “காளையார்கோயில்” உள்ள கானப்பேர் என்ற ஊர் “கானை” எனக் குறிப்பிடப்படுகிறது.  இன்றைய காளையார்கோயில்  “கானப்பேர்” என்றும் “கானையம்பதி”  என்றும் அழைக்கப்பட்டது.  “கானப்பேர் எயிற் கடந்த உக்கிரப் பெருவழுதி” என்ற சங்க கால வரலாற்றுக் குறிப்பும் உண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டு எழுதப்பட்ட பழைய திருவிளையாடற்புராணத்தில்,  கானப்பேர்   “கானையம்பதி” என்றும் குறிப்பிடப்படும் (திருவாலவா. 27, 31). ஆகவே, கானை என்பது கானப்பேர் என்பதன் மரூஉப் பெயராகும்.



தேவார மூவர் முதலிக​ளான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் என்போரால் பாடப்பெற்ற 14 பாண்டிநாட்டுத் தேவாரத்தலங்கள் என அறியப்பெறும் ஊர்கள் முறையே: 1. மதுரை; 2. திருப்புனவாயில்;  3. குற்றாலம்; 4. திருவாப்பனூர்; 5. திரு ஏடகம்; 6. திருநெல்வேலி; 7. திருவிராமேச்சுரம் ; 8. திருவாடானை; 9. திருப்பரங்குன்றம் ; 10. திருச்சுழியல்; 11. திருப்புத்தூர், 12. காளையார் கோயில்; 13. திருக்கொடுங்குன்றம்  (பிரான்மலை); 14. திருப்பூவணம்.  இந்தப் பதினான்கு திருத்தலங்களும் "பாண்டி பதினான்கு" எனவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

இதே ஊர்களே குமரகுருபரரின் மீனாட்சியம்மை குறம் என்ற பாடலிலும்; 
கூடல்புன  வாயில்கொடுங்  குன்றுபரங்  குன்று
            குற்றாலம்  ஆப்பனூர் பூவணநெல்  வேலி
ஏடகமா  டானைதிருக்  கானப்பேர்  சுழியல்
            இராமேசந்   திருப்புத்தூ  ரிவைமுதலாந்  தலங்கள்
நாடியெங்க  ளங்கயற்கண்  ணாண்டதமிழ்ப்   பாண்டி
            நன்னாடும்  பிறநாடும்  என்னாடதாகக்
காடுமலையுந்  திரிந்து   குறி சொல்லிக்  காலங்
            கழித்தேனென்  குறவனுக்குங்  கஞ்சிவாரம்மே
- குமரகுருபரசுவாமிகள்

திருப்பூவணப் புராணத்திலும்; 
தென்மதுரை பரங்குன்றந்திருவிராமேச்சுரமாடானைபுத்தூர்
பன்னுதமிழேடகநெல்வேலி பகர்குற்றாலமாப்பனூர்பார்
மன்னுபுனற்சுழியல்புனவாயில் கொடுங்குன்றமெழின் மருவுகானை
பொன்மதில் சூழ் பூவணமும் பொருந்துகின்ற புகழ்ப் பொதியப் பொருப்பனாடு (117)

காளையார்கோயில் புராணத்திலும்; 
ஆலவாய் கானப்பேரூராடானைபுனவாயில்குற்
றாலமேடகம்பரங்குன்றாப்பனூர்சுழியலபுத்தூர்
மாலிராமேச்சுரம்பூவணங்கொடுங்குன்றுவேய்நெல்
வேலியாந்தலமுறுப்பாமேயதுபாண்டிநாடு. (8)

திருப்பூவணநாதருலாவிலும்; 
“திருக் கங்கை வார் சடையார் தென்பாண்டி நாட்டில்
இருக்குந் தலங்கள் பாடு என்னப் - பெருக்கம்

திகழ் பூவுலகில் சிவலோகம் என்னப்
பகர்கூட  ஆலவாய் பாடி –-  மிக மால்

பிறிக்கும்  அடியார் பிறவிக் கருவேர்
பறிக்கும் புனவாயில் பாடிக்  - குறிக்குமால்

சங்கந் திகிரி தன் நந்தும் மழு மான் எடுக்கு
நங்கள் குற்றால நகர்பாடித் -  தங்கு ஒருபால்

பெண்மைத் திருக்கோலப் பெம்மான் இனிது  உறையும்
உண்மைத் திருவாப்பனூர் பாடித் -  திண்மை அற

வாட்டும் பிறவி வழி மறித்து ஞானவழி
காட்டுந் திருவேடகம் பாடி -  நாட்டின்

விரவு திருவெண்ணீற்றின் மெய்யன்பர் கூட்டம்
பரவு திருநெல்வேலி  பாடிப் -  பரவுமுனை

சேர் திருவி  ராகவன் முன் சேனையுடன் கண்டுதொழச்
சார் திருவி ராமேச்சரம் பாடி - ஏர் தரு பொற்

கொம்பரன்  நாடானை  ஒரு கூறு இலங்குங் கோலத்து
நம்பரன்  ஆடானை நகர்பாடி -  வம்பர்

புரம் குன்ற வான் நகைசெய் பொன் மலை விற்செல்வன்
பரங்குன்றம்  மாநகரம் பாடி -  உரங் கொள்

விடைக்கும்  சரம் உகைப்பார் வீற்றிருக்கக் காணி
படைக்குந் திருச்சுழியல் பாடிக் -  கிடைக்கும் அகத்து

ஆசை உடைச் சிற்சபையில் ஐயன் திருச்சிலம்பின்
ஓசை  உடைத்  திருப்புத்தூர் பாடித் -  தேசுநலந்

தாங்கு திருத்தேர் வீதிச் சைவ ஆகமம் வேதம்
ஓங்கு திருக் கானப்பேர் ஊர் பாடி -  வாங்குந்

தனிக் கொடுங்குன்றம் அதன் தன்னை எரித்தார்
பனிக் கொடுங்குன்ற நகர் பாடித் -  தொனிக்கு மறைப்

பாவணம் பாடும் பரமன் திருக்கோயிற்
பூவணம் பாடும் பொழுதிலே -  நாவணங்கு

நாதன் புதல்வர் நவினான் மறைபாடக்
கீத இசை கின்னரர் பாடக் -  கோதிலாச்”

காட்டப்படுகின்றன.  மேற்கூறியவாறு தேவாரப்பாடல்கள், மீனாட்சியம்மை குறம், திருப்பூவணப் புராணம், காளையார்கோயில் புராணம் மற்றும் திருப்பூவணநாதருலா ஆகியனவற்றில் காளையார்கோயில் தலம் பாண்டி பதினான்கு  தலங்களில்  ஒன்றாகக் கொடுக்கப்படுகிறது.  இவை எவற்றிலுமே தென்காசி இடம் பெறவில்லை என்பதைக்  கருத்தில் கொள்ள வேண்டும். தேவாரப்பாடல்களில் “தென்காசி திருத்தலத்திற்குப் பாடல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை“.

கானை  என்பது காசி என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் ஏடு எழுதியவரின் குற்றமாகலாம். இதற்குக் கானை என்பதன் பொருள் குறித்த அறியாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். பிழை திருத்துவதாக நினைத்து காசி என (தென்காசியைக் குறிப்பதாக பிழையான புரிதல் நிலையில்) ஏடு எழுதியவர் மாற்றியிருக்க வேண்டும் எனக் கருதலாம்.  இது  பிற்காலப் பாடல் என்பதும் தெரிகிறது.  பாண்டியர்கள் மதுரையை இழந்தபின் தென்காசியில் வாழ்ந்த பிற்காலத்தில் எழுதப்பட்ட, 15 ஆம் நூற்றாண்டு காலத்தையொட்டிய பாடல் எனவும் கருத வழியுண்டு. எண்ணிக்கை மாறாமல் பிற்கால  இடத்தின் பெயர் நுழைக்கப்பட்டுள்ளது பாடலின் காலம் பற்றிய குறிப்பையும் கொடுக்கிறது. கானை என்பது காசி என மாற்றப்பட்டதால் பாடலில் தளைதட்டுவதும் பிழையை உறுதி செய்கிறது.  அத்துடன், பாடலை எழுதிய புலவர் கவி காளமேகம்தானா அல்லது அவர் பெயரின் கீழ்  வகைப்படுத்தப்பட்ட தனிப்பாடலா இது என்பதுவும் ஆய்விற்குரியது

பாண்டிநாட்டுச் சிவத்தலங்கள் கூகுள் வரைபடத்தில்:
https://drive.google.com/open?id=1aa-Y5xmjsH6bgR8-hdb4kNjV7cpsirf0&usp=sharing

படம்:

https://lh3.googleusercontent.com/-XCaYzfKBEVg/WotWJ4CXzcI/AAAAAAAAH2s/BqoW08euzXk5yvhgzJf9Z9nhVVJvSBSKACLcBGAs/s1600/padal%2Bpetra%2Bthalam.jpg


கட்டுரையில் இடம்பெற்ற பாண்டிநாட்டுச் சிவத்தலங்களின் புவியிடக் குறிப்புக்கள்: 
1. மதுரை (9.9195, 78.11934)
2. திருப்புனவாயில் (9.89416, 79.06361)
3. குற்றாலம் (8.9342, 77.2778)
4. திருவாப்பனூர் (9.92607, 78.12152)
5. திருவேடகம் (9.99539, 77.98885)
6. திருநெல்வேலி (8.71391, 77.75665)
7. இராமேச்சுரம் (9.28762, 79.31292)
8. திருஆடானை (9.78336, 78.91827)
9.  திருப்பரங்குன்றம் (9.88144, 78.07297)
10. திருச்சுழி (9.53456, 78.1999)
11. திருப்புத்தூர் (10.10847, 78.5973)
12. காளையார்கோயில் (9.84568, 78.63136)
13. திருக்கொடுங்குன்றம்  (10.23611, 78.43886)
14. திருப்பூவணம் (9.82596, 78.25758)
-----
மற்றும் ...
தென்காசி (8.95902, 77.31293)


குறிப்பு: 
இக்கட்டுரை எழுத தகவல் தந்து உதவிய முனைவர் காளைராசன், முனைவர் நா. கணேசன், திரு. மயிலை நூதலோசு, திரு. இராம.கி. ஆகியோருக்கு நன்றி.



துணைநூற் பட்டியல்:
[1] பாவலர் சரித்திர தீபகம், அ. சதாசிவம்பிள்ளை. பகுதி 2. கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு (பக்கம் – 97), 1979.

[2] காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன், முதற் பதிப்பு : டிசம்பர் 2010, பக்கம்: 108

[3] கவி காளமேகம் பாடல்கள், தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம் -
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0220.html

[4] திருமலைராயனும் காளமேகப்புலவரும், தேமொழி, பிப்ரவரி 17, 2018, சிறகு -
http://siragu.com/திருமலைராயனும்-காளமேகப்/

[5] இராமேசம், இராம.கி. -
https://mymintamil.blogspot.com/2018/02/Ramesam-by-Ramaki.html










Thursday, February 22, 2018

என் தமிழ்


——   கண்மணி





என் தமிழை யாராலும் கட்டிப்போட இயலாது .
ஏனென்றால் 
  அது என் மொழி-அதன் நோக்கம் எளிமை 

என் தமிழைச் சிறை வைக்க இனியும் யாரும் பிறக்கவும் முடியாது 
ஏனென்றால் 
அது என் மொழி -அதன் முகவரியே தெளிவு.

என் தமிழுக்குத் தடை சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.
ஏனென்றால் 
அது என் மொழி -அதன் மறுபெயரே உரிமை 

என் தமிழ் என்றும் துள்ளிக் குதித்து துறுதுறுவென  ஓடும். 
ஏனென்றால் 
அது என் மொழி -அதற்கு என்றும் வளரிளம் பருவம் தான்.

என் தமிழ் தாறுமாறாக ஓடாமல் தழுவிச் செல்வது என் கையில் 
ஏனென்றால் 
அது என் மொழி - அதன் ஊட்டம்  அனுபவமும் தேவையும்  

என் தமிழைக் கச்சாப் பொருளாக்கி விதிகளை உற்பத்தி செய்யட்டும்.
ஏனென்றால் 
அது என் மொழி -அதன் உயிர்ப்பு  விடுதலை 







படம் உதவி:  AR ஸ்டுடியோஸ்

________________________________________________________________________
தொடர்பு:
முனைவர்.  கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஒய்வு ),
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி.





Wednesday, February 21, 2018

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943


சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 1869-1943
நூல் விமர்சனம்

ஆசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியம்




பல நூறு ஆண்டுகளாகச் சாதீய உயர்வு தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலக்கட்டத்தில் தமக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புகளின் பலனாலும் அக்கால சுயமரியாதை சிந்தனை எழுச்சியின் காரணத்தினாலும் சமூக விழிப்புணர்வு பெற்றனர். சமூகப் பார்வை என்பது அரசியல் பார்வையுடன் ஒருமித்த வகையில், அக்காலகட்ட எழுச்சி நிலை அமைந்திருந்தது. இந்த விழிப்புணர்வின் அடையாளமாகத் தலித் மக்கள் முயற்சியில், தமது சமூகத்தவர் பிரச்சனைகளை அலசும் வகையிலும், தீர்வுகளைக் காண முனையும் வகையிலும் இதழ்கள் வெளிவரத்தொடங்கின. இந்த இதழ்கள், பத்திரிக்கைகள் பற்றி இன்று பலரும் மறந்து விட்ட சூழலில் கி.பி. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த 42 தலித் பத்திரிக்கைகள், இதழ்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி அவற்றை மேற்கோள்களுடனும், அவற்றை வெளியிட்ட ஆசிரியர், பதிப்பகத்தார் பற்றியும் தொகுத்து நல்லதொரு நூலைப் படைத்திருக்கின்றார் நூலாசிரியர். எனது அண்மைய வாசிப்புக்களில் மிக விரிவான களப்பணியுடன் கூடிய ஒரு ஆய்வு நூலாக இந்த நூலைக் காண்கின்றேன். 

20ம் நூற்றாண்டின் பத்திரிக்கை மற்றும் இதழ்கள் பற்றின முயற்சி எனப் பேசத்தொடங்கும் போது பொதுவாக பலரும் அறிந்தவையாக இருப்பவை சுதேசமித்திரன், இந்தியா, ஆனந்த விகடன், கலைமகள், கல்கி எனக் குறிப்பிடலாம். தலித் இதழ்கள் எனக் குறிப்பிட்டு தேடத் தொடங்கினால் ஒரு சிலருக்கு அயோத்திதாசப் பண்டிதரது முயற்சியில் வெளிவந்த ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை நினைவுக்கு வரலாம். இந்த நூலிலோ 42 இலக்கிய முயற்சிகள் தலித் சமூக விழிப்புணர்ச்சிக்காக இயங்கியமை பற்றியும் இவை அனைத்துமே தலித் சமூகத்தவரால் தொடங்கி நடத்தப்பட்டவை என்பதையும் அறிகின்றோம். 

கல்வி பெறுவதிலிருந்து ஒதுக்கப்பட்ட தலித் சமூகத்தவர் கல்வி பெற வேண்டும் என சீரிய பணியாற்றியோர் பலரைப் பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. திரு.ஜான் ரத்தினம் அயோத்திதாசப்பண்டிதரோடு இணைந்து திராவிடப்பாண்டியன் என்ற இதழை நடத்தியவர். இவர் 1889ம் ஆண்டு தலித் சமூகத்துக் குழந்தைகள் கல்வி கற்கும் வகை செய்ய ஒரு மாதிரி பள்ளியை உருவாக்கியிருக்கின்றார். 1892ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆண் பெண் குழந்தைகள் இருபாலருக்கும் என ஒரு பெரிய பள்ளிக்கூடத்தைத் தொடங்கியிருக்கின்றார். அதோடு சென்னை மக்கீம் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தையும், 1889ம் ஆண்டு பெண்களுக்கான மாணவியர் விடுதி ஒன்றையும் உருவாக்கியிருக்கின்றார். இவருக்கு அடுத்து 1906ம் ஆண்டு எம்.ஒய்.முருகேசம் பிள்ளை (தலித் சமூகத்தவர் குறிப்பாகப் பண்டிதர்கள் அக்காலச் சூழலில் பிள்ளை என்ற அடையாளத்தை பயன்படுத்தினர்) கோலார் தங்கவயல் பகுதியிலும், மாரிக்குப்பம் பகுதியிலும், சாம்பியன் காலணியிலும் இன்னும் வேறு சில பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியிருக்கின்றார். இவர் மட்டுமே பகல் வேளையில் இயங்கும் இரண்டு பள்ளிக்கூடங்களையும் 16 இரவு பள்ளிக் கூடங்களையும் தொடங்கியிருக்கின்றார். சிதம்பரத்தில் தலித் மக்கள் சமூக மேம்பாட்டிற்காகச் சேவை செய்தவர் சுவாமி சகஜானந்தா அவர்கள். இவர் சிதம்பரத்தில் 1910ம் ஆண்டு நந்தனார் பள்ளியைத் தொடங்கினார். தலித் சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட எம்.சி.ராஜா 1916ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ஜகந்நாதன் சாலையில், அதாவது தற்போது வள்ளுவர் கோட்டம் உள்ள சாலைக்கும் நுங்கம்பாக்கம் சாலைக்கும் இடையில் இருப்பது, ஆதிதிராவிட மகாஜன சபையின் பள்ளியைத் தொடங்கினார். எல்.சி.குருசாமி என்பவர் 1921ம் ஆண்டு சென்னை ராயபுரத்திலும் புதுப்பேட்டையிலும் இரவுப்பள்ளிகளை நிறுவினார். இவை மட்டுமன்றி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களால் தலித் மக்கள் கல்வி மேன்மைக்காக பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன என்றாலும் அவை பற்றின தகவல்களும் ஆவணங்களும் முறையாகப் பதியப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் தலித் சமூகத்துக் குழந்தைகள் நவீன ஆரம்பக் கல்வியையும் அதன் பின்னர் உயர் நிலைக்கல்வியையும் பெறும் வாய்ப்பினை பெற்றனர். இத்தகைய கல்வி வாய்ப்பு பெற்று வளர்ந்தவர்களில் சிலரே ஏனைய தலீத் சமூகத்து மக்கள் நலன் கருதி பத்திரிக்கைகளும் இதழ்களும் ஏற்படுத்தி சமூக சீர்திருத்த செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இதன் காரணமாக விளைந்தவையே அக் காலச்சூழலில் வெளிவந்த பத்திரிக்கைகளுக்கும் இதழ்களுக்கும்  எனலாம். 

இந்த நூலில் ஆசிரியர் தனது ஆய்வில் அடையாளம் கண்டு ஆராய்ந்த பத்திரிக்கைகளின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியர்களையும், பதிப்பகத்தையும், அவை முன்னெடுத்த சீரமைப்பு சிந்தனைகளையும் முடிந்த வரைக்கும் மிகச் சிறப்பாக விளக்கிச் செல்கின்றார். 

இந்த நூலில் முதலில் வருவது சூரியோதம் இதழ். இது திருவேங்கடசாமி பண்டிதர் என்பவரால் 1869ம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. அடுத்து வருவது பஞ்சமன் இதழ். இது 1871ம் ஆண்டு வெளிவந்தது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான போராட்டக் குரலாக இந்த இதழ் செயல்பட்டதாக ஆசிரியரின் தகவல்கள் அமைகின்றன. 1872ம் ஆண்டு சுவாமி அரங்கையாதாஸ் என்பவரால் மெட்ராஸிலிருந்து வெளியிடப்பட்டது சுகிர்தவசனி எனும் இதழ் இது சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கருத்துக்களை முன்வைத்துச் செயல்பட்ட ஒரு இதழாக அமைகிறது. இந்துமத சீர்திருத்தி எனும் இதழ் 1883ம் ஆண்டு பாளையங்கோட்டையில் கே ஆறுமுகம் பிள்ளை எனும் ஆதிதிராவிடரால் தொடங்கப்பட்ட முயற்சி. வேலூர் முனிசாமிப் பண்டிதரின் முயற்சியால் 1886ம் ஆண்டு ஆன்றோர் மித்திரன் எனும் இதழ் தொடங்கப்பட்டது. சென்னை கிருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பா.அ.அ.இராஜேந்திரம் பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்ட இதழ் மஹாவிகடதூதன். இது 1886 முதல் 1927 வரை வெளிவந்தது என்றும் வேறு தலித் சமூகத்து பத்திரிக்கை ஆசிரியர்கள் இதன் வெளியீட்டைத் தொடர்ந்தனர் என்பதையும் அறிய முடிகின்றது. பறையன் இதழ் இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் 1893 முதல் 1900 வரை வெளியிடப்பட்டன. மாத இதழாகத் தொடங்கி பின்னர் வார இதழாக இது மாற்றம் பெற்றது. இந்தப் பத்திரிக்கை ஒடுக்கப்பட்டோருக்காக அதிலும் பறையர் சமூகத்தோருக்காகத் தனிப்பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து வெளிவந்தது என அறியமுடிகின்றது. திராவிடப் பாண்டியன் எனும் இதழை ஜான் இரத்தினம் அவர்களும் அயோத்திதாசப் பண்டிதரும் இணைந்து 1896ம் ஆண்டு தொடங்கினர் முதலில் ஒரு சங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் தொடர்ச்சியாக இதே பெயரில் இதழையும் தொடங்கினர் என்பதையும் இந்த நூலிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. 

இல்லற ஒழுக்கம் (1898), பூலோகவியாஸன் (1903-1917), ஒரு பைசா தமிழன், திராவிட கோகிலம், மதுவிலக்கு தூதன், ஆல்காட் கிண்டர்காடன் ரிவியூ, விநோதபாஷிதன், ஊரிஸ் காலேஜ் கிண்டர்கார்டன் மேகசின், வழிகாட்டுவோன், ஆதிதிராவிடன், மெட்ராஸ் ஆதிதிராவிடன், ஜாதி பேதமற்றோன் இந்திரகுல போதினி, சாம்பவர் நேசன், ஆதிதிராவிட பாதுகாவலன், சாம்பவகுல மித்திரன், தருமதொனி, சந்திரிகை என ஒவ்வொரு இதழைப்பற்றிய குறிப்புக்களையும் நூலாசிரியர் தேடிச் சேகரித்து இந்த நூலில் வழங்கியிருக்கின்றார். 42 இதழ்கள் மட்டும்தானா, என்று நம் மனதில் எழும்  கேள்விக்கு, இன்னும் கூட பத்திரிக்கை முயற்சிகள் இருக்கலாம், ஆனால் அவை மேலும் ஆராயப்பட வேண்டும் என்ற சிந்தனையையே வாசிக்கும் வாசகர்களுக்கு நூல் வழங்கும் செய்தியாக இருக்கின்றது. 

இந்த நூல் குறிப்பிடும் தலித் இதழ்களில் பல இன்று தமிழகத்தில் தேடிக் கண்டுபிடிப்பதில்  சிரமங்கள் இருக்கின்றன. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது அரசினால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களில் தேடினால் இவற்றைக் கண்டெடுக்க வாய்ப்புண்டு. அதோடு இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் இவற்றின் படிகள் இருக்கவும் வாய்ப்பு நிச்சயம் இருக்கலாம். அவ்வகையில் தேடுதல் முயற்சிகளை முன்னெடுத்தால் 19ம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி வெளிவந்த தலித் பத்திரிக்கைகளையும் இதழ்களையும் நாம் காணும் வாய்ப்பு கிட்டும். 

நூலாசிரியரின் கடுமையான ஆய்வு முயற்சியும்,  இத்துறையிலான விரிவான வாசிப்பும் நூலில் முழுமையாக வெளிப்படுகின்றது. நல்லதொரு ஆய்வு நூலை வழங்கியிருக்கும் முனைவர் ஜெ.பாலசுப்பிரமணியம் பாராடுதலுக்குறியவர். மேலும் சிறந்த ஆய்வுப் படைப்புக்களை அவர் வழங்க எனது நல்வாழ்த்துகள்.


குறிப்பு -  இந்த நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 

முனைவர்.க.சுபாஷினி

Tuesday, February 20, 2018

பாரதிதாசன் தேசீயக் கவிஞரா ?



——   சி.  ஜெயபாரதன்



வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர்
வேறொன்று கொள்வாரோ? .....
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?

மகாகவி பாரதியார்
(சுதந்திரப் பெருமை)

கவிஞர் பாரதிதாசன் தனிப்பட்ட எவருக்கும் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை.  கவிஞர் யாவரும் பூமியில் பிறந்த மனிதர்களே!  சாதாரண மாந்தரை விடக் கவிஞர்கள் உன்னத சிந்தனை உடையவராயினும், அவரிடமும் குறைவு, நிறைவுகள் இருக்கலாம்.  குறைகள், நிறைகள் இல்லாத கவிஞர்கள் இருப்பது வெகு, வெகு அபூர்வம்.  நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று சிவபெருமான் எழுதிய பாட்டில் கூடப் பிழை யிருப்பதாகப் பாண்டிய மன்னன் முன்பாக வாதாடியவர் புலவர் நக்கீரர்.  எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.  மேலும் எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என் பெயர் செயபாரதன் இல்லை!  நண்பர் திரு இளங்கோவன் என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதி இருக்கிறார்.  அது அவரது எழுத்துரிமை என்று கருதி, அப்பிழையை விட்டு விடுகிறேன்!  வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்!  வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப்படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது.  வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை "இளங்கோபன்" என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா எனக்குத் தெரியாது.  நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், ஹாங்ஹாங், பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பு, சரஸ்வதி போன்ற பெயர்களை எப்படித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன்.  அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று எழுதினால் பூரிப்படைவேன்.  நான் அவரது பெயரை இலங்கோவன் என்று எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா?  தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ போன்ற அன்னிய எழுத்துக்களை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை பழுதுபடாது!  உலகெங்கும் ராக்கெட் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும் இணைந்து முன்னேறுகின்றன!  தூய தமிழர்களே!  நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!

என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று "தமிழ் விடுதலை ஆகட்டும்", என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன்.  ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன்.  இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது!  தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது!  ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன!  இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை!  புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் பறைசாற்றினேன்!  திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!

இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடை களில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்!  ஆயினும் அது ஒற்றைப் பணிதான்!  நூறு பணிகள் அல்ல!  அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்!  இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்!  தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்!  தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!

"வாளினை எடடா!" என்னும் ஒரு பாடலில் பாரதிதாசன், குணம் மேவிய தமிழனை ஜனநாயகத்தில் அறமே புரியக் "கொலை வாளினை எடடா," என்று முரசடிக்கிறார்!  பாரதிதாசனின் அந்தப் பாடலை படிப்போருக்குப் பெரும் குழப்பம் உண்டாகிறது.  "காந்தியின் அறச் செயல் வெல்லும்'" என்று எழுதிய பாரதிதாசன் குடியரசு நாட்டில் கொலை வாளினை எடடா என்று ஏன் தீவிரவாதியாகக் கட்டளை யிடுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை.  இதோ அப்பாடல்:

கொலை வாளினை எடடா! மிகு
கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா! .....

தலை யாகிய அறமே புரி,
சரி நீதி உதவுவாய்!
சமமே பொருள் ஜனநாயகம்
எனவே முரச றைவாய்!

நண்பர் நாக இளங்கோவன் குடியாட்சியில் கொலை வாளினை எடுப்பது தீவிரவாதமில்லை என்று எனக்குச் சுட்டிக் காட்டுகிறார்!  இதே போல் பீரங்கி, வில்லெடுப்பு இவையெல்லாம் தீவிரவாதியின் ஆயுதங்கள் இல்லை என்றால், வேறு எவை அவரின் ஆயுதங்கள் என்று கட்டுரையில் எடுத்துக் காட்டி யிருக்கலாம்! பிளாஸ்டிக் வெடிகள் தீவிரவாதிகளின் கொலை ஆயுதங்களாக அஞ்சப்படும் இந்த காலத்தில், கொலை வாளையும், பீரங்கியையும் எந்த வகுப்பில் பிரித்து வைக்கலாம்?

பாரதியார் காலத்தில் விரிந்த பாரதிதாசனின் பாரத விடுதலைத் தரிசனம், பிற்காலத்தில் குறுகித் தமிழக விடுதலையாகச் சுருங்கிப் போனது என்று தெளிவாகக் கூறுகிறார், நண்பர் இளங்கோவன்.  இதை எதிர்த்துத்தான் பாரதியார் தனது "சுதந்திரப் பெருமை" என்னும் பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர்
வேறொன்று கொள்வாரோ? .....
விண்ணில் இரவிதனை விட்டுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ?  ....
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ?

பாரதியின் நிழலில் வளர்ந்த பாரதிதாசன் கடைசிப் பாதிக் காலத்தில் எப்படிச் சுதந்திர தேவியை மறந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது!

அக்கா, அக்கா என்றாய்
அக்கா வந்து கொடுக்க
சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே !

என்று  நக்கல் புரிகிறார் கவிஞர் பாரதிதாசன்  !

பாரதியாரின் தாசனாகக் கூறிப் பெயரைக் கூடப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர். பாரதியார் “ஆனந்த சுதந்திரம் அடைத்து விட்டோம்”, என்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடியவர். ஆனால் பாரதிதாசன் சுதந்திரப் போராட்டத்தைக் கிடைக்குமா வென்று கிண்டல் செய்தவர்.

‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் ‘ என்று பாரதியார் தீர்க்க தரிசியாய் 1908 இல் கனவு காணும் போது, விடுதலை இயக்கத்தைப் பாரதிதாசன் ஒரு பாட்டில் நக்கல் புரிந்து கேலி செய்வதைப் பலர் அறிய மாட்டார்கள்! கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன், ‘அக்கா! அக்கா! என்றாய், அக்கா வந்து கொடுக்க சுக்கா, மிளகா, சுதந்திரம் கிளியே ? ‘ என்று எள்ளி நகையாடுகிறார்!

அகிலவலைத் திண்ணை, பதிவுகளில் வெளிவந்த எனது விஞ்ஞானக் கட்டுரைகளைப் பாராட்டியதற்கு நண்பர் நாக. இளங்கோவன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றி.



ஒரு கவிஞன் ஆத்மீகக் கவிஞனாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்க வில்லை!  ஆத்மீகக் கவிஞனாக இருக்க வேண்டிய தேவையு மில்லை! கவிஞன் எப்படி இருக்க வேண்டும் என்று ஓர் இலக்கண விதியை நான் ஆக்க விரும்பவும் வில்லை!  கவிஞன் தானாக உருவாகிறான்.  கவிஞன் தானாக மாறுகிறான்.  ஆனால் பாரதியின் நிழலில் தோன்றித் தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்ட கவிஞர் சுப்புரத்தினம் மெய்யாகப் பாரதியாரின் சீடரா என்பதைத்தான் நான் சிந்தித்து உளவு செய்கிறேன்.  முதலில் பாரதியின் சீடராய்த் துவங்கிப் பாதி காலத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்டு வேறு வடிவில் உலவி வந்தார் பாரதிதாசன் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன்.

ஓர் கடவுள் உண்டு!
பேரும் அதற்கில்லை!
பெண்டும் அதற்கில்லை!
தேரும் அதற்கில்லை!
சேயும் அதற்கில்லை!

என்று பாரதிதாசன் தன் கடவுள் நம்பிக்கையைத் தனித்துவ முறையில் அழகாகக் காட்டி உள்ளார்.  ஆனால் அதை ஆத்மீகக் கருத்தென்று நான் சொல்ல மாட்டேன்.  இந்து சமயக் கருத்துக்களைப் பாடிய பாரதியாரின் எண்ணற்ற ஆத்மீகக் கவிதைகள் மாதிரி பாரதிதாசன் பலவிதப் பக்திப் பரவசக் கவிதைகள் எழுதவில்லை.  நண்பர் கிரிதரன் கூறியபடி, காளி, முத்து மாரி, சிவன், பராசக்தி, விநாயகர், முருகன், கலைமகள், லட்சுமி, கண்ணனைப் பலவிதத் தோற்றங்களில் கண்டு சூரியன், அக்கினி மீது துதிகள், ஊழிக் கூத்து, சக்திக் கூத்து என்றெல்லாம் தோத்திரப் பாடல்கள் பாடித் தான் முழுக்க முழுக்க ஓர் ஆத்மீகக் கவிஞராகக் காட்டி யிருக்கிறார், பாரதியார்.  அவர் பாடிய பல வேதாந்த பாடல்களைப் போல், வசன கவிதைகளில் தனது விஞ்ஞான அறிவைக் காட்டியது போல் பாரதிதாசன் தன் பாக்களில் எழுத வில்லை!

ஈசன் வந்து சிலுவையில் மாண்டனன்!
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்!

என்று ஏசு பெருமானைப் பற்றி இந்து சமயவாதி பாரதியார் எழுதுகிறார்.  பிறகு இஸ்லாமியரின் தேவரான அல்லாவைப் பாராட்டி இந்து ஆத்மீகவாதி பாரதியார் பாடுகிறார்.  ஆனால் இதற்கு முற்றிலும் எதிராகப் பாரதிதாசன் ஏசு, முகமது, சிவன் ஆகியோர் பக்கம் போகாதே என்றல்லவா மக்களுக்குப் பாதை காட்டுகிறார்.  பண்டித நேரு, "உலக ஆற்றல்களிலே மிகச் சக்தி வாய்ந்தவை மதங்களும், மத நம்பிக்கைகளும்," என்று தன் நூல் ஒன்றில் கூறுகிறார்.  எந்த அணு ஆயுதங்களாலும், பல நூற்றாண்டுகள் பூமியில் ஆலமரமாய் வேர் ஊன்றி, விழுதுகள் விட்ட மதங்களையும், அவற்றின் தனித்துவ மதக் கடவுள்களையும் அழிக்க முடியாது!  ஆத்மீகக் கவிஞரான பாரதி ஒருவனுக்கு அது புரிந்திருப்பதால் அவர் மதங்களை வெறுக்காமல் வரவேற்கிறார்.  விவேகானந்தர், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆத்மீகவாதிகளுக்குச் சான்றாகக் கூறலாம்.  அவ்விதம் நோக்கினால் பாரதிதாசனை ஓர் ஆத்மீகக் கவிஞராகக் கருத முடியுமா என்பது ஐயப்பாடே!

பாரதியாருடன் இருந்த பிரெஞ்ச் பகுதியில்தான் பாரதிதாசன் ஆரம்ப காலக் கவிதைகளை எழுதியிருக்க முடியும் என்பது என் கருத்து.  பாரதிதாசன் வசித்த புதுச்சேரியில் பாரதியார் போல் அநேகக் கவிதைகளைத் தான் எழுத முடிய வில்லை என்று நண்பர் கிரிதரன் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை.  பண்டித நேரு ஆங்கில ஆட்சியில் கைதி செய்யப்பட்டு, வடநாட்டில் அகமத்நகர் கோட்டைச் சிறையில் இரண்டரை ஆண்டுகள் [1942-1945] அடைபட்டுள்ள போதுதான், உலகப் புகழ் பெற்ற அவரது, "இந்தியக் கண்டுபிடிப்பு" [Discovery of India] என்னும் நூலை எழுதினார்.  ஆக்க உந்து சக்தி உள்ளவருக்கு வாழும் தளம் எதிர்ப்பு அளித்துத் தடை செய்தாலும், படைப்புகள் இரகசியமாய் எழுதப்பட்டு அன்னிய நாடுகளில் வெளியாகி யிருப்பதை நாம் வரலாறுகளில் படித்திருக்கிறோம்.

பாரத விடுதலை மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பாரதிதாசன் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் என்பதில் எனக்கு ஐயமில்லை என்று நான் எனது முதல் புகாரி கவிதை விழாக் கட்டுரையில் கூறி யிருக்கிறேன்.  இப்போது உருவக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பாரதிதாசன் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் என்பதில் எனக்கு ஐயமில்லை என்று சொல்கிறேன்.  நண்பர் கிரிதரனின் இரண்டாம் கட்டுரைப்படி பாரதிதாசன் பாரதியார் காலஞ் சென்ற பின்னும் 9 ஆண்டுகள், அதாவது மொத்தம் 39 வருடங்கள், பாரத விடுதலைப் பற்றி நினைவில் வைத்திருந்தார் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.  ஆயினும் பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துள்ள சமயம், பாரதிதாசனிடம் நான் சுட்டிக் காட்டிய சில குறைபாடுகள், மறைபாடுகள் இன்னும் விளக்கம் பெறவில்லை!  தேசப் பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, பாரதிதாசன் இரங்கல் கவிதை எதுவும் எழுதாமல் புறக்கணித்தது ஒன்று.  அடுத்தது, பாரதம் விடுதலை பெற்று 200 ஆண்டு கால வரலாறு மாறியதைப் பற்றிக் கண்டும் காணாமல் புறக்கணித்தது.  பாரதிதாசனைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் இவற்றின் காரணங்களை எனக்கு எடுத்துச் சொன்னால் நான் தெரிந்து கொள்வேன்.

பார்க்கப் போனால் இரட்டைக் கவிஞர்கள் பாரதிதாசன் வடிவில் வாழ்ந்திருப்பது போல் எனக்குத் தெரிகிறது! பாரதியார் காலத்தை ஒட்டிச் சுமார் 39 வருடங்கள் பாதி வயதுவரைக் கடவுள் நம்பிக்கை கொண்டு, காந்தியார் மேல் பாசமும், விடுதலைப் பற்றும் கொண்டு வாழ்ந்த கவிஞர் ஒருவர்.  பிறகு சுமார் 34 வருடங்கள் காந்தியாரைத் துறந்து, பெற்ற சுதந்திரத்தைப் போற்றாது, முற்றிலும் வேறான பகுத்தறிவுக் கருத்தாளராக வாழ்ந்த கவிஞர் அடுத்தவர்.  இவ்விரண்டு கவிஞர்களில் யார் மெய்யானர், யார் பொய்யானவர் என்பதைப் பாரதிதாசனின் கவிதை ஆக்க எண்ணிக்கை, கவிதைக் கருத்துக்களைப் படிப்போர்களே ஊகித்துக் கொள்ளட்டும்.  பாரதி மறைவுக்குப் பின்னர் வாழ்ந்த பகுத்தறிவுப் படைப்பாளியான பாரதிதாசனே மெய்யான கவிஞர் என்பது என் கணிப்பு!  பாரதியாரின் பக்கத்தில் இணையாக நிறுத்திப் பாரதிதாசனை ஓர் ஆத்மீகக் கவிஞராகவோ அல்லது ஒரு தேசீயக் கவிஞராகவோ என்னால் கருத முடியவில்லை!

(நன்றி  PathivukaL By V.N. Giritharan)


தகவல்:
1. தமிழ் இலக்கிய வரலாறு, டாக்டர் மு. வரதராசன் [சாகித்திய அக்காடெமி வெளியீடு, பதினெட்டாம் பதிப்பு (2003)]
பாரதியார் பற்றிப் பக்கங்கள்: இக்காலப் பாட்டிலக்கியம் (236-349)
பாரதிதாசன் பற்றிப் பக்கங்கள்: (349-355)

2. தமிழ் இலக்கிய வரலாறு, பேராசிரியர் எம். ஆர். அடைக்கலசாமி எம்.ஏ. [ராசி பதிப்பகம் முப்பத்து ஆறாவது பதிப்பு (2003)]
பாரதியார் பற்றிப் பக்கங்கள்: 20 ஆம் நூற்றாண்டுக் கவிதைகள் (235-241)
பாரதிதாசன் பற்றிப் பக்கங்கள்: (241-246)

3.   பாரதிதாசன் கவிதைகள்  [உமா பதிப்பகம், சென்னை ..   மார்ச்  2007]

4.  http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html



________________________________________________________________________
தொடர்பு: சி.  ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)
http://jayabarathan.wordpress.com/









இராமேசம்


——   இராம.கி.

திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (~ கி.பி.1230) செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியால் இயற்றப்பட்டது. பிறவாயாக்கைப் பெரியோனின் 64 திருவிளையாடல்களை விவரிக்கும் நூல்களில் இதுவே தமிழில் முதலெழுந்ததாய்த் தெரிகிறது. நம்பியார் புராணத்தை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுநூலாக முதன்முதல் 1906 இல் வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார். அதன் மறுபதிப்பு உ.வே.சா. நூலகத்தால் 1972 இல் மீண்டும் வெளியிடப்பெற்றது. இதற்குமுன் முழுதாகவன்றி அங்குமிங்கும் உதிரி உதிரியாய்ச் சில செய்திகளைத், தேவாரம், கல்லாடம், திருவாசகம் போன்றவற்றில் அறியலாம். இதற்கப்புறம் எழுந்த பல நூல்களில் கி.பி. 1660 இல் எழுந்த பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதாகும்..

அது என்னவோ தெரியவில்லை. பின்னவர் நூலையே பலரும் இக்காலத்திற் பேசுகிறார். ஆனால் உள்ளீடு பார்த்தால், அக்காலச் செய்திகளை (குறிப்பாகப் பாண்டியன் கடுங்கோன், அவனுக்கும் முந்தைய களப்பாளர் காலச் செய்திகளை) அறிய பரஞ்சோதியார் நூலை விட நம்பியார் புராணமே பயனுள்ளது. (இதன் pdf படியை முனைவர் ழான்லுக் செவ்வியார் எனக்கு அனுப்பிவைத்தார். மாணிக்கவாசகர் காலம் பற்றிய என்னாய்விற்கு இந்நூலே பெரிதும் உதவியது.) தமிழறிஞரில் மிகப் பலர் நம்பியார் புராணத்தின் பயன்பாட்டை உணர மறுக்கிறார். என்னைக்கேட்டால் திருவாலவாயுடையார் புராணத்தை  மீளாய்வது பயன்தரும். உருப்படியாக ஆய்வுசெய்யத் தான் நம்மூரில் ஆளில்லை. தமிழாய்வு பெரிதும் தளர்ந்துள்ளது. நானிங்கே சொல்லவருவது வேறு.

உ.வே.சா. வெளியீட்டின் முகவுரையில் பாண்டி நாட்டுத் தேவாரத்தலங்களாய் 14 தலங்களைக் குறிப்பிடும் வெண்பாவொன்று வரும்..

கூடல் புனவாயில் குற்றால மாப்பனூ
ரேடகநெல் வேலி யிராமேச - மாடானை
தென்பரங்குன் றஞ்சுழிய றென்திருப்புத் தூர்கானை
வன்கொடுங்குன் றம்பூ வணம்

இங்கு காட்டப்படும்  “இராமேசத்தின் பழைய பெயரென்ன?” என்று எழும் கேள்விக்கு . . .  இதன் விடையோடு தொடர்புடைய மற்ற செய்திகள் பலருக்கும் பயன்படுமென்று எண்ணி இங்கே பதிகிறேன். முதலில் ஈசம் என்ற சொல்லின் பொருளறியவேண்டும். (சிவன்கோயில்கள் பலவும் ஈசமென்றே சொல்லப்படும்.) ஈசமென்பது திசைதொடர்பான சொல். திசைகள்பற்றிய என் பழந்தொடரின் 3 ஆம் பகுதியில் (http://valavu.blogspot.in/2008/04/3.html) ஈந்து>ஐந்து>ஐந்திரம், கிழக்குத்திசை குறிக்குமென நிறுவினேன்.

ஈந்து>ஈத்தின் தொடர்பாய் ’ஈசம்’ எழுந்து, வடகிழக்கைக் குறிக்கும். ஈசன்/சிவன் வடகிழக்குத் திசைக்கு உரியவனென்றே மனையடிநூலில் சொல்லப்படும். இந்தியப் பெருநிலத்தின் வடகிழக்கிற்றான் குயிலாலுவ>கயிலாலுவ மலையுள்ளது. சிவன் அம்மலையில் உள்ளதாகவே தமிழரிற் பலரும் தொன்மஞ் சொல்வர். கயிலாயமன்றி ஈசன் திருவுரு அமைந்த இடங்களும்/கோயில்களும் கூட ஈசமென்றே அழைக்கப்பட்டன. ஈசத்தைச் சங்கதம் வகரஞ் சேர்த்து ஈஸ்வமாக்கும். இதேபோல் ஈசனை தமிழ்முறைப்படி மதிப்புக்கூட்டி ஈசராக்கி சங்கத முறைப்படி ஈஸ்வராக்குவர். ஈஸ்வரிலிருந்து தமிழ்முறைப்படி ஈஸ்வரம்>ஈச்சுரம் ஆகும். இப்படித் தமிழும் சங்கதமும் மாறிமாறி ஊடாடியே சிவன் கோயில்களுக்கான பெயரெழுந்தது. சங்கதம் பழகவேண்டாமெனில் ஈசமே நமக்குப் போதும். 




சிவனுக்கெனச் சொல்லப்படும் 12 சோதிலிங்கங்களில் இராமேசத்தைத் தமிழ்நாட்டிலும், சோமேசத்தைக் கூர்ச்சரத்திலும், நாகேசம், குசுமேசம் போன்றவற்றை மராட்டத்திலும், விசுவேசத்தை உத்திரப் பிரதேசத்திலும் பொருத்துவர். இவையத்தனையும் ஈசமென்று முடியுந் தலங்கள். அகரமும் ஈகாரமுஞ் சேர்ந்து வடமொழிப் புணர்ச்சியில் ஏகாரமாகும். இதுபோக, வித்தநாதம் (வைத்யநாதம்), வீமநாதம் (பீமநாதம்), திரியம்பகமென்ற 3 தலங்கள் மராட்டத்திலும், திருப்பருப்பதம் (சிரீசைலம்) ஆந்திரத்திலும், ஓங்காரம், உஞ்சை (உச்செயினி) மத்தியப் பிரதேசத்திலும், கேதாரம் உத்திரப்பிரதேசத்திலும் காட்டப்படும். இராமேசத்தில் 2 இலிங்கங்கள் உண்டு, முதல் இலிங்கம் மணலால் ஆனது. இரண்டாவது கல்லால் ஆனது. முதலாவதைச் சீதை பிடித்துவைத்தாள் என்றும், இரண்டாவதை அனுமன் வடக்கிருந்து கொண்டுவந்தானென்றுஞ் சொல்லப்படும். (தொன்மக்கதைகள் உண்மையா, இல்லையா என்ற சிக்கலுக்குள் நான் போகவில்லை. நம்புபவனுக்கு அவை உண்மை.)



இராமேசக் கோயில் தேவாரகாலத்தில் மிகச்சிறிதே. இன்றுள்ள மண்டபங்கள், சுற்றாலைகள் எல்லாம் அன்றில்லை. மிஞ்சிமிஞ்சிப் போனால் கருவறையைச் சுற்றி ஒரு சுற்றாலை இருக்கும். 12 ஆம் நூற்றாண்டில், பாண்டியரின் தாயாதிச் சண்டையில் ஊடுவந்த ஒரு சிங்கள மாமன், மன்னன் பராக்கிரம பாகுவே பழங்கோயிலை இடித்து இன்றுள்ள கோயிலின் அடிப்படை அடவை உருவாக்கினான் என்பர். (நாம் விரும்பினாலும், விரும்பாவிடினும், தமிழர்-சிங்களர் ஊடாட்டம் நம் வரலாற்றில் நெடுகவேயுண்டு. இதைத் தவிர்க்கமுடியாது. அவனுக்கு நாம் பெண் கொடுத்தோம், அவன் வீட்டில் பெண் எடுத்தோம். அது தொடர்கதை.) 

கோயில் இறைவர்பெயர் இராமநாதர் (மணல் இலிங்கத்திற்கு அது பெயர்.). அவருக்கு முன்னிருக்கும் கல் இலிங்கத்திற்கு இராமலிங்கமென்று பெயர். (எத்தனை பேருக்குத் தெரியுமென்று தெரியவில்லை. இராமசாமியெனில் அது பெருமாளைக் குறிக்கும். இராமநாதனெனில் சிவனைக் குறிக்கும். இவன் ”ரம்மிய”மானவனா? அன்றி இராமனுக்கு நாதனா? என்பது பார்வையைப் பொறுத்தது. இறைவி பெயர் மலைவளர் காதலி,(பருப்பத/பர்வத வர்த்தினி என்பது சங்கதவாக்கம்.). கோயிலுக்குள் உள்ள பல்வேறு நீர்நிலைகள் உப்புநீர் மேல் கூடியுள்ள நன்னீரால் ஏற்படுவது. இன்று நம்மூர் ஐயர்கள் இங்கு கிடையாது. பண்டாக்கள் என்னும் மராட்டியக் குருக்களேயுண்டு. இது வரலாற்றிலேற்பட்ட விசயநகர, மராட்டிய, நாயக்கர் தாக்கம் என்றெண்ணுகிறேன். இன்றுள்ள மண்டபங்கள் எல்லாம் இவர்களால், பின்வந்த சேதுபதிகளால், எழுந்தது. மூன்றாம் சுற்றாலை மிகப் பெரிது. கோயிலிற் கூட்டம் சொல்லிமாளாது. ஒரே இரைச்சல். அங்குமிங்கும் ஓட்டம். எங்கும் பார்த்தால் நீர்ச்சகதி.

காசிக்கும், குமரிக்கும் (அப்படித்தான் சோழர்காலக் கல்வெட்டெல்லாம் சொல்கிறது) சொல்லப்பட்ட இடையுறவு எப்படியோ காசிக்கும், இராமேசத்திற்குமாய் மாறி விட்டது. எப்பொழுது மாறியதென்பது சுவையான ஆய்வு. ஒருவேளை பாண்டியராட்சி முடிந்தபின் ஏற்பட்டதோ, என்னவோ? கோயிலுக்குள் இந்தியே இங்கு அன்றாட மொழியாய்த் தெரிகிறது. விரைவு வண்டிகளில் நம்மூர்க்காரரை விட வடவர் கூட்டமே மிகுந்துள்ளது. கோயிலின் கிழக்குவாசலுக்குமுன் நீராடுங்கடலில் குப்பைகளும், மாசுகளும் நிரவிக் கிடக்கின்றன. இதை யாராவது சரிசெய்தால் என்ன என்று தோன்றுகிறது. ”ஸ்வட்ச் பாரத்” எங்கு போயிற்றென்று தெரியவில்லை. இன்னுங்கூட மரங்களைநட்டுத் தீவைச் சற்று சரி செய்யலாம். வறட்சி கூடிவருகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு பெரிதாகவேயுள்ளது. கோயிலில் தெரிசனத்தை முடித்தபின், அப்துல்கலாம் நினைவகத்தில் கூட்டம் கூடுகிறது. தீவின் பொருளியல் வளர்ச்சியில் அதுவொரு மாற்றம். 

தேவாரகாலத்தில் இராமேசம் ஒரு தீவில்லை. (ஏனென்று கீழே சொல்கிறேன்.) இராமநாதபுரத்திலிருந்து கடலுக்குள் நீண்டுசெல்லும் துருத்தியாகவே அதுவன்று இருந்திருக்கலாம். துருத்தியின் முடிவில் வில்வடிவில் பாதி முழுகியும் முழுகாதும் நிலமிருந்து அப்பக்கம் மன்னாரை இணைத்தது. அதையே சேது என்றார். மன்னாருக்கு அடுத்தது திருக்கேதீச்சுரம். வில்வடிவின் தொடக்கமான விற்கோடியை தனுஷ்கோடியென சங்கதத்தில் பெயர்த்துச் சொல்வார். (விற்கோடியைத் தொல்முதுகோடி என்று சிலர் சொல்லமுற்படுவது புரட்டு. அகநானூறு சொல்வது இந்த இடமில்லை. அது திருமறைக்காட்டிற்கு அருகிலுள்ள கோடிக்கரை. அதைப்பற்றி வேறு இடங்களில் நான் நெடுகப் பேசியுள்ளேன். மீண்டும் இங்கு பேசிப் பொரித்தெடுக்க வேண்டாமென விடுக்கிறேன்.)

இன்று இராமேச்சுரத்திலிருந்து விற்கோடி வரை தமிழக அரசினர் உருப்படியான சாலை ஒன்றைப் போட்டுள்ளார். ஒருமாதம் முன் இராமேசம் போனபோது இதைப் பார்த்தேன். வியந்துபோனேன். இப்பொழுது இராமேசம் வருவோர், தானியை எடுத்துக்கொண்டு விற்கோடி வரை போய்வருகிறார். அடுத்தமுறை நீங்களும் போய்வாருங்கள். பார்த்து வியக்கவேண்டிய ஓரிடம். துருத்திக்குள் நடந்து சென்று இந்தியமுனை தொடும்போது, அங்கிருந்து வில் வளர்வதை நன்றாகவே உணரமுடியும் , நாசா வெளியிட்ட படத்திலும் இதைப்பார்க்கலாம். இது மாந்தன் செய்த சேது என்பதை மட்டும் நான் ஏற்கேன். வானம் தெளிவாகி, பார்வை கூர்மையாகி, கையில் தோற்றப்பெருக்கி இருக்குமானால், அந்தப்பக்கக் கோடியில் நிலத்தைப் பார்க்கலாம்.



சம்பந்தர் காலத்தில், இன்றிருப்பதைவிட 2,3 மீட்டர்கள் கடலாழம் குறைந்திருக்கும். துருத்தி இன்னும் சில கிலோமீட்டர் நீண்டிருக்கும். வெகு எளிதில் சம்பந்தர் கேதீச்சுரம் பார்க்கும் தொலைவிற்குப் போயிருப்பார். இந்தப்பக்கத்திலிருந்து அவர் திருக்கேதீச்சுர விமானத்தைக் கூடப் பார்த்திருக்கலாம். யார்கண்டார்? (இராமேசம் அன்று தீவில்லை என்று ஏன் சொன்னேன்? தீவாயிருந்தால், படகு வைத்தல்லவா இராமேசம் போயிருக்கமுடியும்? பின் அதேபடகில் திருக்கேதீசம் போக என்ன சிக்கல்? ஆனால் அவர் போகவில்லையே? இங்கிருந்தே கேதீசத்திற்கும் திருகோணமலைக்கும் பதிகம் பாடிவிட்டாரே? இத்தனைக்கும் அருகில் பாண்டிய அரசி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் கூட இருந்தாரே? அப்படியென்றால் என்ன பொருள்? கேதீசத்தை விற்கோடியிலிருந்து பார்க்கமுடிந்தது. இடையில் கடல். பிள்ளையை வைத்துக்கொண்டு இக்கு (risk) எடுக்க அரசியும், அமைச்சரும் விரும்பவில்லை. அதேபொழுது இராமநாதபுரத்திலிருந்து நடந்தே, அல்லது ஊர்திவழி நகர்ந்தே, இராமேசம் வரமுடிந்தது என்று தானே பொருள்?

மயிலை சீனி வேங்கடசாமியும், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, குறிப்பிட்ட விழாநாட்களில் இராமேசத்து இராமலிங்க ஊருலவரைத் தூக்கிக்கொண்டு இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் வரை வந்து, அங்கு ஒருநாள் வைத்திருந்து கோயிலுக்கு மீண்டும் எடுத்துச்செல்வரென்று தெளிவாக ஆதாரத்துடன் பதிவுசெய்வார். ஆகப் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இராமேசம்  தீவல்ல. வெறும் துருத்தி. பார்த்தீர்களா? இவ்வளவு சொன்னேன். இராமேசத்தின் மறுபெயர் சொல்ல விட்டேனே? ஒருகாலத்தில் எங்கள் அரசர்களின் குடும்பப் பெயர் சேதுபதி. அவர்கள் சேதுக்கு ”பதி”. சேது என்பது முன்னால் சொன்னேனே அந்த விற்கோடிக்கு அப்புறம் உள்ள இயற்கை இணை. சேதுள்ள ஊர் சேதூர். அந்த ஊருக்குப் போகும் 2 விரைவுவண்டிகளின் ஒன்றின் பெயர் இராமேசுரம் விரைவி, இன்னொன்று சேது விரைவி. சேதுதான் அந்தவூரின் மாற்றுப்பெயர். இராமநாதபுரச் சீமையில் யாரைக் கேட்டாலும் இம்மாற்றுப்பெயரைச் சொல்வர்.

”சேதுவை மேடுறுத்தி வீதிசெய்வோம்” என்றான் பாரதி.
”சேடனென்னப் பொலிந்தது சேதுவே” கம்பரா. சேதுப. 66
“சேதுவின் இராமநாதனை நிறுவிய காதையை” என்பது சேதுபு.அவை.1
“சேதுகாவலன் திருவணை காவலன்” கல்லாடம்.
“சேதுபுராணம்” என்பது 16 ஆம் நூற்றாண்டில் நிரம்பவழகிய தேசிகரால் பாடப்பெற்ற இராமேசுரப்புராணம்.


________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com





Monday, February 19, 2018

உனகோடி கைலாசகர் சைவத்தலத்தின் பண்டைய பெருஞ்சிற்பங்கள்


——   நூ.த.லோக சுந்தரம்.


கிழக்கு ​இந்தியாவின் ஓர் மாநிலமான​ ​​​'தி​ரிபுரா​'​​ ​வில், ​ ​ 11 நூற்றாண்டு ​'​ பால​'​* மன்னர்  பரம்பரை​யின் பண்டைய பெருஞ்சிற்ப இறை உருவங்களை  "உனகோடி" மாவட்டத்து கைலாசகர் சைவத்தலத்தில் காணலாம். மாமல்லபுரம் அருச்சுனன்​ த​ப​​​சு ​எனும் ​பெரும்பாறைமுகப்பு பொளிப்பு (bas-relief) ​ களுக்கு ​இணையான பெரிய அளவினதாகவும் வனப்புடனும்  காணப்படுகின்றன.




உனகோடி என்றால் கோடிக்கு ஒன்று குறைவு என்பது பொருள். பார்வதி ஓரிரவில் கோடி சிலைகளைப் படைக்குமாறு 'குல்லு கம்ஹார்' என்ற சிற்பிக்கு ஆணையிடுகிறார்.  ஆனால் எவ்வளவு முயன்றும் சிற்பியால் அக்கட்டளையை நிறைவேற்றமுடியாமல் கோடிக்கு ஒரு சிற்பம் குறைவாகவே உருவாக்கப்பட்டதால் இச்சிற்பத் தொகுதி உனகோடி என்று (வங்காள மொழியில்) அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.

பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களும், கல் சிற்பங்களும் மிகப் பெரியன. சுமார் 30 அடியைவிட உயரமான, ​நெற்றிக்கண் உடைய சிவனின் தலையின் மீது உள்ள சடைமுடி மட்டுமே பத்தடி  உயரம் கொண்டது. தலையின்  இரு பக்கங்களிலும் தேவியர் சிலைகள் உள்ளன.   சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை அவர்களில் ஒருவர். 





தாழும் அருவிகளின் கீழேதான் சடைமுடியுடன் கூடிய சிவனை, ​சீரிய கலை உணர்வுடன் ​பொ​ளித்திருக்க வேண்டும்.  ஆனால், இந்நாளில் அருவி சிறிதே விலகி பக்கத்தில் ஓடுகின்றது. 






எதிரில்  அரைப்பகுதி தரையில் புதைந்துள்ள நந்தி சிலையும் உள்ளது. விநாயகர், மாறன்கணை,​ ​கங்கை தாங்கிய சடைமு​டி, திரிபுரம் எய்த​ சிவ​ன்,  காளி எனவும்  இவை யாவும் புராணங்களை விளக்குபவை.  ஆதலால், இச் சிலைகளின் தொகுப்பு அப்பகுதியில் ​ சைவ-காளி  வழிபாடு இருந்தமையைக் காட்டுகிறது.  ​

இந்த மிக அரிய  தொல்லியல் கல் சிற்ப வளாகம்  இந்தியத்தொல்லியல் துறையினால் பராமரிக்கப்பட்டாலும் விளம்பரப்படுத்தப்படாமல் உள்ளது.  இந்திய பெருநாட்டில் போக்குவரத்து  மிக மிகக் குன்றிய ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதும் ஓர் இடர்பாடு தான்.  மேலும்,  UNESCO பட்டியலின் கீழ் தொல்லியல் வளாகத்தைக் கொணர்ந்தாலும் சுற்றுலாத்துறை வளரலாம்.

 

குறிப்பு:
*பால (= பால்) எனும் சொல்லிற்கு காப்பாற்றுபவன்/இறைவன்,  அதாவது ஓர் மன்னன் தலைவனின் கடமை/தொழில்  தனது  நாட்டுக் குடிகளை ஓம்புதல் ஆகும்  (காட்டாக: கோ'பால்' = கறவை மாடுகளை ஓம்புகின்றவன், தன'பால்' = செல்வத்தினை காப்பாற்றுகின்றவன், தரம் 'பால்' = அறத்தைப் பேணுபவன் , மகி 'பால்'  ' = பெண்களைப் போற்றுபவன் என அறியப்படும்). இன்றும் பால் எனும் குடும்பப் பெயர்/பட்டப்பெயர் கொண்டோர் 
 வங்காளத்திலும் அக்கம்பக்கத்து நாடுகளிலும் வாழ்கின்றனர். 



படங்கள்: நன்றி இணையப் பக்கங்கள்



________________________________________________________________________
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்)

Sunday, February 18, 2018

யாளி

——   இராம.கி.

"யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்களுடையதா? தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா?" என்றதொரு கேள்வி சொல்லாய்வுக்குழுவில் கேட்கப்படுவது.  இக்கேள்வி ஆழமானது. இதற்கு நீளமாகத்தான் விடையளிக்கமுடியும்.

யாளி, முதற்சொல்லல்ல. ஆளியே முதல். ஆளல்/ஆள்தல் என்பது அதிகாரங் குறிக்கும் வினை. ஆட்சி, ஆட்டம், ஆடலென 100க்கும் மேற்பட்ட சொற்களை ஆல்>ஆள் என்றவேர் உருவாக்கும். நிலத்தை, வித்தையை ஆள்பவன் ஆளன்/ஆளி. பரி 8-64 இல் முருகனையே கூட ஆளியென்பார். இன்னொரு வகையில் ஆளி என்பது தோழி, மனைவியைக் குறிக்கும். நிலத்தலைவன் ஆளியானது போல் காடாளுஞ் சிங்கமும் ஆளியானது. ஆழ்ந்து பார்க்கின், விலங்குலகில் அரசனுக்கு இணைச்சொல் ஆளியே. யானையளவிற்குப் பெருவிலங்கையும் அடித்துண்ணும் வலிகொண்ட சிங்கம் காட்டை ஆள்வதாய் இந்தியப்புரிதலில் ஒரு தொன்மமுண்டு.

இன்று கூர்ச்சரம் போன்ற இடங்களில் மட்டும் சிங்கம் வதிந்தாலும், சங்ககாலத்தில் நம்மூரிலுமுண்டு. (அரி, ஆளி, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல பெயர்களில் சிங்கம் சங்கநூல்களிற் பேசப்படும்). சிங்கம் என்றசொல் சங்கநூல்களில் இல்லைதான். ஆனால் சங்கநூலிற் பழகாது மக்களிடை காலங்காலமாய்ப் புழங்கிவந்த தமிழ்ச்சொற்கள் மிகப்பல. சங்கநூற்களை நான் அகரமுதலிகள்போல் என்றுங் கருதியதில்லை. அக்காலத் தமிழின் ஒருபகுதியை மட்டுமே அவை பதிவுசெய்தன. அவ்வளவு தான். புலி மட்டுமே தமிழர் விலங்கு, சிங்கம் நமக்கு அயலென அறியாமையிற் கதைகட்டுவதையும் நான் ஏற்பதில்லை. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குப் பரம்பலை, இன்றுபோற் கருதுவது சரியல்ல. சிங்கங் குறித்து ஒருசேரப் புழங்கிய யாளி, ஆளியின் சங்கச் சொல்லாட்சிகளை இங்கு கீழே விவரிக்கிறேன். முதலில் நாம் காணப்போவது பெரும்பாணாற்றுப்படை 258-260 வரிகளில் வரும் யாளி.

[ஓர் இடைவிலகல். . .  ’முக’வெனும் தமிழ்ச்சொல்லிடை வழக்கம்போல் ரகரம்நுழைத்து ம்ருகவெனும் சங்கதச்சொல் கிளைக்கும். முக>ம்ருக>மிருக. அதை மீளக் கடன்வாங்கி மிருகமெனத் தமிழிற்பயிலாது, முக>மக>மா என்ற தமிழ்ச்சொல்லையே பயிலலாம். காண்க முகன்>மகன்>மான்; முகள்>மகள்>மாள். ஆளிக்கு இன்னும்வேறு பொருட்பாடுகளுண்டு. குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது linseed ஐக் குறிக்கும் ஆளிவிதை. ஆளிநெய் நம்மூரில் இல்லாவிடினும், குளிர்நாடுகளில் அது பெரிது. ஆளிநாரிற் செய்த ஆளித்துகிலும் (linen), எகிப்தியன், சுமேரியன், பாபிலோனியன், கிரேக்கம் போன்ற விடங்களில் பெரிது. நம்மூர் பருத்திக்கு மாற்றாய் பட்டோடு ஆளியும் பழந்தமிழகத்தில் இறக்குமதியானது.]
பாட்டிற்கு வருவோம்.

அணங்குடை யாளி தாக்கலின் பலஉடன்
கணம்சால் வேழம் கதவுற்றா அங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை

இப்பாடல் வரிகள் ”யானைக்கூட்டத்தில் இருந்தவொரு யானைமேல் மீவிலங்கு மூர்க்கமாய்த் தாவிப்பாயுஞ் சிங்கங் (”அணங்குடை யாளி”) கண்டு அச்சுற்று விரைந்தோடும் யானைகள் போல் கரும்புச் சாறுபிழி எந்திரங்கள் விரைந்தசைந்து என்றுங் குறையாத ஓசையை எழுப்புகின்றனவாம். யாளிகள் தாக்க முடிவுசெய்தால், அணங்கு தம்மேல் ஏறியதுபோல் எழுச்சியுற்று இரைகளின்மேற் பாயுமென்பது இங்கு சொல்லப்படும் செய்தி. அதென்ன, “அணங்குடை யாளி” ?  அணங்குக் கருத்தீட்டைப் புரிந்துகொள்வதில் பல தமிழறிஞர் தடுமாறியுள்ளார். பெண்முலைக் காம்பில் அணங்கு இறங்குகிறதென்று கூடத் தவறாகப் பொருள்சொல்வார். நானறிந்தவரை, அணங்கைச் சரியாக, விரிவாக விளக்கியவர் முனைவர் வி.எஸ்.ராஜம் மட்டுமே.

நம் வாயுள் மேலிருப்பது அண்ணம். நமக்கு மேல்/முன் இருப்பவன் அண்ணன். அண்ணுதல்/அணங்குதலுக்கு மேலேறுதலென்று பொருள். ஆழ்ந்துபார்த்தால் ”அங்கு” எனும் ஈற்றில்முடியும் தமிழ்ச்சொற்கள் கணக்கற்றவை. ”சுரம்” பற்றிச் சொல்லாத பாலைப்பாட்டுக்களே இல்லை (153 குறிப்புகள் சங்கநூல்களில் உண்டு, சங்கப்பாட்டுகளில் 50% க்கும் மேலானவை பாலைப்பாட்டுக்களே.) சுரங்கம் தமிழ்ச்சொல்லென நொதுமலாருக்கு உறுதியாகச் சொல்லலாம். அணங்கும் அதுபோன்ற ஈறு கொண்டதே. அணங்கு பற்றிய 150 குறிப்புகளாவது சங்கநூல்களிற் காணலாம்.

சிலகுறிப்பிட்ட நேரங்களில் மனம்பேதலித்து, தன்னையே (கும்பிடும் சாமி, அல்லது ஏற்கனவே இறந்த யாரோவொரு முன்னவரென) வேற்றாளாய்க்கருதி பேசவும் செயற்படவும் ஒருவர் தொடங்கினால், “என்னவாச்சு இவருக்கு? சாமிகீமி வந்துருச்சா?” என்கிறோமில்லையா? இக்கால உளவியலில் இதை மீமாந்த நிலையென்றும், schizopherenic state களில் ஒன்றென்றும் சொல்வார். நம் ஆன்மாவிற்கு மேல் இன்னோர் ஆன்மா ஏறியதாய் உணரப்படும் இந்நிலையை நாட்டுப்புறங்களில் (குறிப்பாகச் சிவகங்கைச்சீமையில்) ”சாமி வந்தது” என்பார். தென்பாண்டி நாட்டில் இது வழமை. முருகனுக்குக் காவடி எடுத்துப்போகிறாரே? செடிலில் தொங்குகிறாரே? ஐயனார்கோயில், அம்மன்கோயில் விழாக்களில், பூக்குழி நெருப்பின்மேல் நடக்கிறாரே அதெல்லாம் இந்தச் சாமிவந்த நிலையில் நடப்பது தான். (இவற்றை அறிவியல் பார்வையில் காண்பதும், படியாதார் பார்வையில் காண்பதும் அவரவர் உகப்பு.)

திருவிழாக்களிலும், முன்னோர்க்குப் படைக்கையிலுங் கூடச், ”சாமி வருவது” நடக்கும். இன்னார்க்கு மட்டுமே சாமி வரும் என்றில்லை. நிகழ்விற் கூடிய இருபாலரில் யாரோ ஒருவர் நிகழ்ச்சியோடு ஒன்றி, மீமாந்த உள உந்தலில், மறைந்த முன்னோர் பேசுவது போலோ, தொழப்படும் சாமியே வந்தது போலோ செயற்படத் தொடங்குவதைப் பலமுறை கண்டிருப்போம். அப்போது “சாமி வந்திருச்சு;” என்றுசொல்லி பொதுமக்கள் நாடு, குமுகம், குடும்பமென எதிர்காலம் பற்றிக் குறிகேட்பார். குறிநடக்குமா, நடவாதா என்பது வேறுகதை. இன்றைக்குநாம் “சாமி” என்பதையே சங்ககாலத்தில் “அணங்கு இறங்கியதாய்ச்” சொன்னார். அணங்கு என்றசொல் தான் வழக்கில் மறைந்தது. 2000 ஆண்டுப் பழக்கம் இன்றும் நம் வாழ்வில் நீடிக்கிறது. அணங்கென்பது மாந்தர்மேல் மட்டுமின்றி, விலங்குகள்மேலும் ஏறலாமென்பது சங்ககால நம்பிக்கை. அப்படித்தான், “அணங்குடை யாளி” என்ற சொல்லாட்சி பிறந்தது.



இன்றுவரை நம்மூர்க் கோயில்களிலுள்ள யாளிச்சிற்பங்கள் பாய்ந்துதாக்கும் பொதிரையே (posture) பெரிதுங் காட்டும். அணங்கை உணர்த்த, யாளிச் சிலைகளின் வாயிலிருந்து முறுக்கிய தண்டொன்று வெளிவருவதாய்க் காட்டுவர். அதைப்பலரும் யானைத்துதிக்கையோடு ஒப்பிடுவர். உருவகம் புரியாச் சிற்பிகள் அதைத் துதிக்கையாக மாற்றியதுமுண்டு. (ஆனால் உண்மை மாறாது. பழஞ்சிற்பங்களிலும் வெவ்வேறு சிற்பப்பள்ளிகளுண்டு. ஒருபள்ளியின் விதப்பை முழுச் சிற்பக்கலைக்கும் பொதுமையாக்க முடியாது. தமிழர்மனத்தை ஆட்கொண்ட உறுப்பு துதிக்கையாகும். பிள்ளையார்மேல் நாம்கொள்ளும் ஈர்ப்பும் துதிக்கையாற்றான் வந்தது.) ”வாயில் வெளிவருந் தண்டு” என்பது ஒருவித மீமாந்த உள்ளமையை (surrealistic) சிற்ப வழி உணர்த்தும் உத்தி. தண்டு என்பது யாளியோடு சேர்ந்த உள்ளமை (realstic) உறுப்பில்லை. தண்டை/துதிக்கையை ஒதுக்கின், யாளி, கற்பனையுருவுமல்ல. அடிப்படையில் அதுவொரு பாயுஞ்சிங்கம்.   

இதுபோன்ற கலையுத்திகள் இன்றுங்கூட மீமாந்த உள்ளமைகொண்ட வண்ணப்படங்களிலும் சிற்பங்களிலும் (surrealistic paintings/scluptures) வெளிப்படும். முகனப் (நவீன/modern) படங்களில் உணர்வு வெளிப்படுத்த படத்தில்வரும் உருக்களைச் சிதைப்பதும், இல்லாத அலங்காரங்களை ஏற்றுவதுமுண்டு. காட்டாக விகடன் நிறுவனம் வெளியிடும் ”தடம்” இதழில் கதைப்பட மாந்தரின் கழுத்து பெரிதும் நீட்டிக் காட்டப்படும். அதன்வழி பேசும்மாந்தரை ஓவியர் உணர்த்துகிறாராம். நாளைக்கு இந்தப் படங்கள் 100 ஆண்டுகள் கழித்துக்கிடைத்தால், தமிழர் நீண்டகழுத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லி விடுவோமா? என்ன மடத்தனம்? கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் புரிந்துகொள்ள வேண்டாமா? உள்ளமையை அப்படியே அச்செடுக்கும் கலைக்கு மாறாய், உணர்வுகளை வெளிக் கொணரும் உத்திகள் எல்லாக்காலமும் இருந்துள்ளன. நம்மூர்க்கோயில் யாளிச்சிற்பங்களின் வாய்களிலும் இதுவுண்டு. யாளியின் கொடுரத்தை வெளிப்படுத்தத் தண்டு அடையாளமானது. சீனத்து நீர்ப்பாம்பின் வழி 'திராகன்' எனும் விலங்கை உருவகிக்கையில் இதேபோல் வாயில் நெருப்பு வெளிவருவதாய்ப் படங்களிலும் சிற்பங்களிலுங் காட்டுவர். அந்நெருப்பும், யாளித்தண்டும் மூர்க்க உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வு வெளிப்பாட்டையும், உள்ளமை உறுப்பையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. Art appeciation என்பது ஒரு திறமை. அடுத்து பொருநராற்றுப்படை 139-142 வரிகளைப் பார்ப்போம்.

ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலைகோள் வேட்டம் களிறு அட்டாஅங்கு

சில்= நுண்ணிய துண்டு. இது இழை, மயிராகவும் இருக்கலாம். சிலிர்த்தல் = துளிர்த்தல். மயிர் துளிர்ப்பதும் சிலிர்த்தலே. உடம்பு சிலிர்த்தல் = மயிர்க்கூச்செறிதல். சில்>சில்கு>சிலுக்கு= துளையிற் புகுதல், மாட்டிக் கொள்ளுதல். சிலுக்கு>சிக்கு = எளிதில் சீவமுடியா, தாறுமாறாய் மாட்டிய கேசம். இதற்கு குடுமியும். உச்சிப்பொருளும் சொல்வர். சிக்கு>சிக்கை>சிகை. சிக்கு>சிங்கு>சிங்கம் = சிகையுள்ள ஆண்விலங்கு. இதுவே சிங்கம்>சிம்ஹ என வடக்கே சொல்லப்பெறும். சிகையால் மதர்ப்புத் தோற்றங் கிடைப்பதாய் இந்தியத் துணைக்கண்டத்தில் பலருங் கருதுவர். சிங்கமே இன்று பொதுப்பெயர்.

சங்ககாலத்தில் அரி/ஆளி. நன்= நளினம். நங்கை= பெண். நன்மான்= பெண்விலங்கு. ஆளி நன்மான்= பெண்சிங்கம். ”ஆளி நன்மான் அணங்குடைக் குருளை” = தாயின் அருகுள்ள சிங்கக்குட்டி. குருளை (girl என்ற இந்தையிரோப்பியன் சொல் இதற்கிணை)= குட்டி (விதப்பாகப் பெண்குட்டி). இங்கு புனிற்றிளங் கரிகாலனுக்கு உவமை சொல்வதால் குருளை சிறுவனைக் குறிக்கிறது. 

”பால்குடிமாறா மாத்திரத்து அணங்குடைக் குருளை, தன் பெருமைமிக்க தோளில் மிகுவலிசெருக்கித் தன் முதல்வேட்டையிற் களிற்றையடித்தது போன்ற” காட்சி இங்கே விவரிக்கப்படுகிறது. இச்சிங்கம் போல் இளமைமாறாக் கரிகாலன் களிறுபோன்ற தம்முறவுப் பகைவர்மேற் பாய்ந்தானாம். இங்கும் ஆளி என்பது உள்ளமை விலங்கே. கற்பனையல்ல. அடுத்தது ஆரியவரசன் பிரமதத்தனுக்குச் (இவன் மகத அரசனென்றே நான் எண்ணுகிறேன். வேறிடத்தில் பேசவேண்டும்) சொன்ன குறிஞ்சிப்பாட்டு 252-253 ஆம் வரிகள்.
 
அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்

இதில் கொலைவெறி மிகுந்த புலியும், ஆளியும், உளியமும் (கரடியும்), துளைக்கொம்பு கொண்ட காட்டுமாடுகளின் ஆணும், ஆண்யானையும் பேசப்படுகின்றன. இயல்விலங்குகளோடு ஓர் கற்பனை விலங்கு சேர்த்துப் பேசப்படுமா? கபிலர் போன்ற பெரும்புலவர் அத்தகைய தவற்றைச் செய்வாரோ? எனவே ஆளி என்றசொல் இந்தியாவில் தசையும், எலும்புமான உள்ளமை விலங்கே. இனி நற்றிணை 205, 1-5 வரிகளைப் பார்ப்போம்.

அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து
ஆளி நன்மான், வேட்டுஎழு கோள்உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய, வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு, வயக்களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய்,

”அருவி ஓசையெழும் பெருங்குன்றின் அடுக்கத்தில் வேட்டையில் போட்டிக்குவந்த கொள்நகம்கொண்ட, உடம்பெலாம் பூப்போல் புள்ளிகொண்ட சிறுத்தையை அங்கிருந்து தொலைத்த ஆளிநன்மான்.
 தானடித்துக்கொன்ற, கூர்த்தந்தங்களுடைய வலியயானையை இழுத்துப்போகும் அருமையான காடு” என்பது இதன்பொருள். பூம்பொறி உழுவை, இங்கு சிறுத்தையைக் குறிக்கும். யானைவேட்டையில் சிறுத்தைக்கும் ஆளிக்கும் இங்கே போட்டி நடந்திருக்கிறது. சிறுத்தையை விரட்டி, யானையைக் கொன்று, உணவாயிழுத்துப் போனது கற்பனையா? உண்மை விவரிப்பா? இன்னுமா இதில் ஐயம்? ஆளி என்பது ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால் சிங்கமே. (அந்த மரத்தில் பேயிருக்கிறது, இந்த மரத்தில் பூதமிருக்கிறது என்போருக்கே கற்பனை விலங்குகள் உதிக்கும். அடுத்தது அகம் 78, 1-6 வரிகள். . .

நனந்தலை கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ்கிளர் முன்பின்
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய்புகு, கடாத்து
பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்
இரும்பிணர்த் தடக்கையில் ஏமுறத் தழுவ
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்

”நிறைசூலியான பெண்யானை அகன்றகாட்டில் ஆளியையஞ்சி, தன்கூட்டத்தை நாடிவந்து தழுவ, வண்டுகள்சுற்றி ஓசையெழுப்ப, மதநீர்சொட்ட, புள்ளிமிகுநெற்றி பொலிந்திருக்க, வலிமிகுத்ததால் முன்னும்பின்னும் அசைந்தபடியிருக்கும் வயக்களிற்று ஒருத்தல் தன் கருங்கோங்கிலவு மரம்போன்ற துதிக்கையால் ஏமமுறும்படி அணைக்கும், சாரல்” என்பது இதன்பொருள். ஒருத்தல் = கூட்டத்தில் தனித்துச் செம்மாந்துதெரியும் விலங்கு. இங்கு ஆண்யானை. ஏமம்= safety. ஆளிகண்டு அஞ்சிய நிறைசூலியானையை ஏமத்திற்காக வயக்களிற்று ஒருத்தல் தழுவுகிறது. அதன்பின்னும் பெண்யானை நடுங்குகிறது. இதுவும் ஓர் இயற்கைவிவரிப்பே. இதில் கற்பனையாளி எங்குவந்தது? யானையைச் சிங்கமடிப்பதும், கொல்வதுமே குறிப்பால் உணர்த்தப்படுகிறது. அடுத்தது அகம் 252, 1-4 வரிகள். 

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும்

புலிபற்றிய ஓர் அவதானம் தமிழகத்திலுண்டு. புலி எப்போதும் தனக்கு வலப்பக்கத்து இரையையே பாய்ந்தடிக்குமாம். இடப்பக்க இரையை அடிக்காதாம். அப்படி அடிக்கவேண்டுமெனில் சுற்றிவந்தே செய்யுமாம். அச்செய்தியே இங்குமேலே சொல்லப்படுகிறது. (இதைப்போய் துணுச்சாரை (dinasaur), அது இது என்று சிலர் சொல்வது அறிவியலில் ஆழாத பேச்சு. துணுச்சாரைகளின் காலத்தில் மாந்தருங் கிடையாது, தமிழுங் கிடையாது. அவற்றின் மிச்சசொச்சம் தான் இன்றுள்ள பறவைகள். உடலியல் தெரிந்தோர் இதற்கு விளக்கந்தரலாம். தமிழார்வலர் சற்று நிதானத்தோடு, விளக்கங்களைக் கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.) படுத்தல்= அடித்தல் “இடம்படுப்பை அறியாத, வலம்படு வேட்டையை விரும்பும், வரிப்புலி நடுங்கும்படி உள்வந்து, உயர்நெற்றி கொண்ட யானையின் புள்ளிமுகத்தில் ஆளியடித்து வெண்தந்தத்தைப் பிய்க்குமாம்:” இந்த வரிகளில் வருவதும் ஓர் இயல்விவரிப்பே. ஆளி என்பது ஒரு கற்பனை விலங்கல்ல. கற்பனை சிலரின் மனத்திலுள்ளது. பொதுவாகச் சங்கநூல்களில் மீமாந்த/மீவிலங்குக் கற்பனை என்பது மிகக்குறைவு. (பிற்காலக் கற்பனைகளை முற்காலத்திற் செலுத்துவது சரியல்ல.) அடுத்தது அகம் 381- 1-4   

ஆளி நல்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப.
ஏந்தல் வெண்கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்,

”தனித்துச் செம்மாந்துவரும் அணங்குடைய பெண்சிங்கம், குட்டியானையைக் கொன்று அதன் முளைத்தந்தம் விலக்கி, சதையுண்ணுவது கண்டு, நெடுந்தளர்ச்சியோடிருக்கும் வலியபெண்யானை புலம்பி நிற்பதைக்கண்டு யாருக்கும் அச்சம்வரும்படி அவ்விடம் இருந்ததாம்.” ஒரு தாயின் குட்டியை இன்னொரு தனிப்பெண் சாப்பிடுகிறாள். இது கொடிய இயற்கை. ஆனால் கற்பனையல்ல. யாளியைக் கற்பனை விலங்கென்போர், எவ்வளவு பெரிய கொடுமையையும் ஒருமாதிரி sanitize செய்துவிடுகிறார். தாமரையிலைத் தண்ணீராய் எவ்வுணர்வும் நம்மைப் பாதிக்காது நாமும் படித்து நகர்கிறோம். சிங்கமென ஆளியை நகமுஞ் சதையுமாய் உணர்ந்தாற்றான் நமக்கது உறுத்துகிறது. அடுத்தது புறம் 207, 6-9 வரிகள்.

மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்ளவிந்து அடங்காது வெள்ளென
நோவாதோன் வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே

”தானேகனியாத காயின்பொருட்டு, உள்ளவிந்து அடங்காது, நம்மேல் வெளிப்பட இரங்காதவனிடம் நின்றுதிரங்கி, வலியவிலங்கின் முன்பின் அசையும் ஆளிபோல், உலமருகலாமோ?” என்பது இதன் பொருள். ”கனியாத விலங்கின் தசைவேண்டிச் சிங்கம்தான் சுற்றிச்சுற்றிவரும். தானே கனியாதவனிடம் நாம் வேண்டிநிற்கலாமோ?”. என்பது இங்கே புலவரின் குறிப்பு. இதைப் படித்தபிறகுமா ஆளி ஒரு கற்பனை விலங்கென்போம்?

இதேபோல் சிலப்பதிகாரம் காட்சிக்காதையில் “ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்” என 48 ஆம் வரியில் வருவதும் சிங்கமே. ஆளியின் அணங்கென்பது பெண்சிங்கக் குட்டி, அரியின் குருளை என்பது ஆண்சிங்கக் குட்டி சில உரையாசிரியர் நினைப்பதுபோல் இங்குவரும் ஆளி கற்பனை விலங்கல்ல. அப்படிச் சிலர் கருதுவது இடைக்காலத்து வந்த சங்கத ஊடாட்டத்தாலாகும். தமிழில் இருப்பதையெல்லாம் சங்கதவழி வந்ததாய்ச் சொல்லும் போக்கு.

அடுத்து வேட்டுவவரியில் வெட்சிப்புறநடைப்பாட்டின் ”கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும்போலும்” என்ற 4 ஆம் வரிக்கு “ஆளிக்கொடி உயர்த்துங் கொற்றவை” என அடியார்க்கு நல்லார் பொருள்சொல்வார். கொற்றவைக்குச் சிங்கக்கொடியையே நம்மூரில் கற்பிப்பார். சிங்கந்தான் அவளுக்கான வையம். (= wagon, வாகனம்; அகராதிகளில், சிலம்பில் பயனுற்ற இந்த ’வையம்’ எனும் நற்றமிழ்ச்சொல்லை அருள்கூர்ந்து பயனுறுத்துங்கள். மீண்டும் மீண்டும் ’வாகனம்’ வேண்டுமா)? (ஆளிபோக ஆளரி என்றசொல் ஆண்சிங்கத்தையும், கூடவே நரசிம்மனையும் குறிக்க நாலாயிரப் பனுவலில் பயன்படும். ’கோளரி’ என்பது சிங்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்வர்.)

சங்க இலக்கியங்கள் போக திருக்கோவையார், இறையனார் அகப்பொருளுரை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், நக்கீரதேவரின் பதினோறாந் திருமுறை, பெரியபுராணம், திருக்குற்றாலத் தலபுராணம் எனப் பல்வேறு நூல்களிலிருந்தும் சான்றுகாட்டலாம். நான் புரிந்துகொண்டவரை இவை எல்லாவற்றிலும் சிங்கப்பொருளேயுண்டு. உரைகாரர்சொல்வதால் மட்டுமே அவற்றைக் கற்பனை விலங்குகளாய்ச் சொல்லமுடியாது. மூலங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பாடல்களுக்குப் பொருள் சொல்வதில் உரைகாரர் பங்கு பெரிதெனினும், அவர் சொல்வதை அப்படியே ஏற்கத் தேவையில்லை. மூலத்தின் ஒத்திசைவு பார்த்து ஏற்கலாம். இக்கால அறிவியல், நுட்பியல் செய்திகளோடு கொஞ்சமாவது பொருத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திற்குமாய் ஒரு புனைவு இருக்காதா, என்ன?

படித்துப் பார்த்தால், சங்ககாலப் புனைவென்பது குறைந்த அளவோடிருக்கும். இடைக்கால, இக்காலப் புனைவுகளோ தறிகெட்டுப் பறக்கும். (நாகரிகம் வளர, வளரக் கற்பனை கூடுவது எங்கும் இயல்பு.) வேண்டுமானால், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூருக்கு வாருங்கள். அங்குள்ள பெருத்தங்கா (ப்ரத்யங்க்ரா-கொற்றவை. சங்கத ரகர, யகர, வகர நுழைவுகளால் நாம் தடுமாற, நம்சொற்களே நமக்குப் புரியாதபடி மாயங் காட்டும். இங்கே திருமாலின் தங்கையே கோயில் மூலத்தி) கோயிலில் நாம் நினைத்துப்பார்க்காத அளவிற்குப் புதுப்புனைவுத் திருமேனிகளைச் செய்துவைத்திருப்பார். குறி சொல்வதும் அங்கு நடைபெறும். நாளெலாம் கவலும் இற்றைமாந்தர் “எத்தைத் தின்றால் பித்தந் தெளியும்?” என்றலைவதால், கூட்டமங்கு நிரம்பிவழியும். ”அந்த யாகம், இந்த யாகம்”என விதவிதமாய் நடைபெறும். இதையெலாம், 1000/2000 ஆண்டுகளுக்கு முந்தையக் கதைகளென்று சொல்லிவிட முடியுமா? புதுப்புதுப் புனைவுகள். வெளிப்பாடுகள்.

இன்றுதானே வியந்தகைப் (fantasy) படங்கள் நம்மூரில் பெருத்துப்போயின? மக்களை வியக்கவைக்க தோட்டாத்தரணிகள், சாபுசிரில்கள், எந்திரன்கள், பாகுபலிகள், ஆன்மேற்றங்கள் (animation), வரைகலை (graphics) முயற்சிகள், நகர்வுக்கட்டுகை (Motion capture). என்னதான் இல்லை இந்தக்காலத்தில்? விதம்விதமான நுட்பமுயற்சிகள் எழயெழ, வியந்தைக்கதைகள் நம்மிடை கூடத்தானே செய்யும்? ஆரி பார்ட்டார் போன்ற புதினங்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி எல்லாமொழிகளிலும் கூடிவருகின்றனவே? புதினங்களைச் செய்வதிலும் மாகை உள்ளமை (magical realism) என்ற புதுமுயற்சி கூடுகிறதே? புதினங்களின் போக்கிலும் கற்பனை கூடுகிறதே?. 8000-22000-100000 என்று சொலவம் பெருகிய மாபாரதம் 1500 ஆண்டுகளில் பெருவளர்ச்சி கண்டதல்லவா?. இன்றோ ”வெண்முரசு” என்றபெயரில் செயமோகன் 16 நூல்களை எழுதுகிறார். முடிக்கும்போது எத்தனை நூல்கள் எழுதுவாரோ? மொத்தத்தில் மாபாரதப் புனைவு அனுமார் வால்போல் வளர்ந்துகொண்டே போகிறது.

ஆளிப் புனைவும் அப்படித்தான். சிங்கம்> (சிங்கம்+யானை) > (சிங்கம்+யானை+நாகம்) > (சிங்கம்+யானை+நாகம்+அரசாளி) என்று விரிந்துகொண்டே போகிறது. கற்பனைக்கு அளவென்ன? இவற்றையும் யாரோவொருவன் கதையெழுதுவான், படமெழுதுவான்; சிலைவடிப்பான். அவற்றைப்பற்றி நம் கொள்ளு/எள்ளுப் பேரன்/பேத்திகளும் பேசிக்கொண்டிருப்பார்.

நான் சொல்லவந்தது மிக எளிது. யாளியின் தொடக்கம் இயற்கை சார்ந்தது. பின் கூடியது கற்பனை வளம். இதில் தமிழரசர்/தெலுங்கரசர் என்பதெல்லாம் முகன்மையில்லை. சங்கத ஊடாட்டம் கூடியதும், புராணப்புளுகு கூடியதுந்தான் காரணம்.

அரசாளி (=வல்லூறு)  பேரரசுக் காலத்தில் அரசக்குறியீடாய் மாறியது. (இற்றை அமெரிக்க அரசின் குறியீடும் அதுவே.) ஆலுங் காரணத்தால் அது எழவில்லை. (ஆலல்= சுற்றல்; ஆலா= சுற்றிச் சுற்றிவரும் கடற்பறவை) நானறிந்தவரை, ஆளிக்கு பறவைப் பொருள் எந்த நூலிலும் சொல்லப்படவில்லை. முதன்முதல் அதைப் பார்த்தது இன்றுவந்த செயமோகனின் ”ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா” என்ற பதிவே (http://www.jeyamohan.in/106894#.WojLwzbrbIU). இதிலொரு சாமியார் அகளி எனும் பறவைபற்றிக் குறிப்பிடுவார். அகளி, ஆளியென்று திரியலாம். உகள்>உவள்>உவளை என்பது தமிழில் எழக்கூடிய சொல்லே. (உவளல்= உயரல் என்பது அகரமுதலியிலுண்டு. ”உவளை” இல்லை. ’உவணம்’ உண்டு.) உவள்>உவண்>உவணம்= கழுகு, கருடன். உயரப் பறக்கும் வல்லூறு. உவளை இந்தையிரோப்பியன் eagleக்கு இணையாகலாம். ஆனால் தோற்றந் தெரியவில்லை என்றே இந்தையிரோப்பியன் சொற்பிறப்பு அகரமுதலிகள் சொல்லும். பெரிய கருநிறப் பறவை என்றே அதற்குப் பொருள்சொல்வார். தமிழில் கருளன்>கருடன், கள்>கழு>கழுகு, கழு>கழுளன் ஆகிய சொற்களெல்லாம் பொருள்வழி, கருநிறப்பறவையையே குறிக்கும்.

ஆளற்பொருளின் நீட்சி. ஆளிகளுக்கு அரச ஒப்பீட்டில் எழுந்தது. காடுலவும் விலங்குகளுக்குச் சிங்கம் ஆளியானதுபோல், பறவைகளையுஞ் சேர்த்த மொத்த விலங்குகளுக்கு அரசாளியானது போலும். இக்கற்பனை, யாளியோடு சேர்வது இயல்பு தான். பல அரசுகளின் இலச்சினையாக அரசாளி இருந்தது. அண்டபேரண்டம் என்பதெல்லாம் இதற்கும் அதிகமான கற்பனை வளர்ச்சி. (அரசாளியின் தொடக்கம் ஆளி என்பதே. கற்பனை கூடாதென நான் எப்போதுஞ் சொல்லவில்லை. எது அடிப்படை, எது மேலொட்டு, எது கற்பனை எனப்புரிந்துகொள்ளுங்கள் என்றே வேண்டுகிறேன்.  .       

முடிக்குமுன் ஆளி என்றசொல் யாளியானது பற்றிச் சொல்லவேண்டும். ஒருசிலர்க்கு இதைச் சங்கதமென்று சொல்லாவிடின் தலைவெடித்துவிடும் போற் தோன்றுகிறது, இல்லாவிடில் இவரின் “ஜன்மம் சாம்பல்யம் அடையாது” போலும். இவர்போன்றவர் மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்த்து நிலையைப் புரிந்துகொள்ளவும் மாட்டார். நான்பார்த்த வரை, சங்கதத்தில் ”யாளி, யாடி, யாதி” என்ற எச்சொல்லுக்கும் இப்பொருள் கிடையாது. ”வ்யாடி” என்றே முதற்சொல் காட்டுவார். (அதற்குச் சிங்கமென்ற பொருளும் வராது. ”கொடூரவிலங்கு” மட்டுமே வரும்.) ’வியாலி/வ்யாளி’ என்ற வடிவைத் திரிசொல்லாகவே சங்கதங் காட்டும். வ்யாடி என்பதை வி+அட் என 2 சொற்களிலிருந்து எழுந்ததாய்க் காட்டுவார்.

व्याड
(H1) व्याड [p= 1036,3] [L=209669] mfn. (said to be fr. 3. वि+- √अड् ; cf. व्याल) malicious , mischievous L. (with loc. , g. शौण्डा*दि)
(H1B) व्याड [L=209670]    m. a beast of prey MBh. R. Ma1rkP.
(H1B) व्याड [L=209671]    m. a snake L.
(H1B) व्याड [L=209672]    m. " a rogue " or " a jackal " (= वञ्चक) L.
(H1B) व्याड [L=209673]    m. N. of इन्द्र L.

வி என்பதற்கு ”பலதிசைகளில் பரந்த” என்று பொருள்சொல்வர். இச்சொல் தமிழிலும் உண்டு. விய்தல்= விரிதல். விய்வம்>வியுவம்>விசுவம் என்றால் விரிந்த பேரண்டமென்று பொருள். இதுவும் சங்கதம் போகும். விசுவநாதனென்று சிவனுக்குப் பெயர்சொல்கிறோமே? விய்யில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் 40/50 ஆவது உண்டு. ”அட்” என்பதற்குச் சரியான பொருளை சங்கதத் தாதுபாடத்தில் நான் காண முடியவில்லை. endeavour என்ற பொருளை அட் என்ற சொல்லின் பொருளாய்ப் பார்த்தேன். இவையிரண்டுஞ் சேர்ந்து எப்படி வியாடியாய் மாறியதென்று புரியவில்லை. யகர உடம்படுமெய் தமிழிலுண்டு. சங்கதத்திலுண்டோ? கேள்விப்பட்டதில்லை. இங்கே கூட்டுச்சொல்லில் யகர உடம்படுமெய் வந்துள்ளதே? சங்கதச் சொல்லாயின், அது இயலுமா? யாராவது சொல்லுங்கள்.

வியாடியிலிருந்து வியாளி வந்ததென்பது தலைகீழாகத் தேடுவதையொக்கும். தமிழுக்கும் பாகதத்திற்கும் தெலுங்கே இடைமொழி என்பார் பாவாணர். ’சோழ’ என்ற தமிழ்ச்சொல் தெலுங்கில் ’சோட’ ஆகும். சற்று கலிங்கம்போனால் ’சோர’வாகும். வடக்கே சோட/சோர எனவிரண்டும் புழங்கும். இதுபோல் ள/ட/ர திரிவு பலசொற்களில் உண்டு. வியாளியிலிருந்து வியாடி ஏற்படுவதே இயல்பான திரிவு. தெலுங்கையும் ஒடியத்தையும் உணராதோரே தலைகீழாய்ச் சொல்வர். வியாளியைத் திரிசொல்லாய் மோனியர்வில்லிமசு ஏற்றுக்கொண்டதே நமக்கு அதன் ஊற்றைக் காட்டுகிறது. வியாளியை விய்+ஆளி என்று பிரித்தால் வினைத்தொகை அதனுள் புகுந்து விளையாடுவது புரியும். விய்ந்த ஆளி, விய்கிற ஆளி, விய்யும் ஆளி.  இக்காலத் தமிழில் விய்தலைக் காட்டிலும் வியல்தலே விழைவோம். வியல்ந்த ஆளி, வியல்கிற ஆளி, வியலும் ஆளி. ஆளிமான் காடுமுழுதும் நகர்ந்துகொண்டேயிருக்கும். தனக்கு உணவு கிடைக்கும் பெரும்பரப்பில் பரந்துகொண்டே இருக்கும். வியாளி நல்ல தமிழ்ச்சொல். சரி, யாளி என்பது எப்படி? யாக்கல்/ஆக்கல், யாக்கை/ஆக்கை, யாடு/ஆடு, யாண்டு/ஆண்டு, யாமை/ஆமை, யாய்/ஆய், யார்/ஆர், யாறு/ஆறு, யானை/ஆனை என்ற இணைகள் எப்படியானதோ, அதே படிதான் தமிழில் இது காலகாலமாய் இருக்கும் பழக்கம். இதை விய்யாளி என்றாலும் வியாளி என்றாலுஞ் சரிதான், வடக்கே இச்சொல் தான் போயிருக்கிறது.

அப்புறம் ”சிங்கம் சங்ககாலத்தில் தமிழகத்திலில்லை”, என்றுசிலர் சொல்வது கூடைச்சோற்றுள் பூசனி மறைப்பது போலாகும். சிங்கமென்பது ஆளி மட்டுமல்லாது அரி, அறுகு, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல்வேறு பெயர்களில் சங்கநூல்களில் ஆளப்பெற்றுள்ளது. பூசனியை மறைப்பவர் எந்த விலங்கியல் சான்றை இங்கு காட்டியுள்ளார்? சும்மா, போனபோக்கில் இப்படிச்சொன்னால் எப்படி? நான் சங்க நூல்களை நம்புகிறேன். அதிலுள்ள செய்திகள் அக்காலப் பட்டகைகள் (facts), புரிதல் (understanding) என்றே நம்புகிறேன். பட்டகைகளை ஒதுக்கித் தான் புகலும் தேற்றே (theory) சரியெனும் கற்பனைவாதி நானல்ல. யாளி பற்றிய என் தொடர் முடிந்தது. பொறுமையுடன் படித்த எல்லா நண்பருக்கும் என்நன்றி.



படம் உதவி:  http://www.wikiwand.com/en/Western_Chalukya_architecture




________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com