Thursday, August 31, 2017

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


முன்னுரை:

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஒரு கவிஞராக அறியப்படுவதே நாம் பெரிதும் காணுகின்ற நிலை. ஆனால், அவர் சிறந்ததொரு வரலாற்று ஆராய்ச்சியாளராகவும், கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் விளங்கியுள்ளார் என்பது மிகுதியும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றே கருதத்தோன்றுகிறது. பேராசிரியர் முனைவர் Y. சுப்பராயலு அவர்கள் கவிமணியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

”பொதுவாக, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையைக் கவிஞர் என்றுதான் தமிழுலகம் அறியும். வரலாறு தொடர்பான அவர் கட்டுரைகள் அவ்வளவாக அறியப்படவில்லை. இவர் தேர்ந்த கல்வெட்டாய்வாளராக இருந்தார். பல வரலாற்றுச் செய்திகளை ஆழமாக ஆராய்ந்து ஆங்கில நடையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.”

அவரது வரலாறு/கல்வெட்டு ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறிய பதிவு இங்கே.



கவிமணி மண்டபம் - தேரூர்

கவிமணி மண்டபம் அருகில் - அழகிய மணவாள     விநாயகர் கோயில்       

கோயிலின் மற்றொரு தோற்றம்

கவிமணியின் விநாயகர் வணக்கம்

மாணிக்கவாசகர் காலம்:


மாணிக்கவாசகரின் காலத்தை அவரது கூற்றிலிருந்தே அறியலாம்.

”மாணிக்கவாசகர் தமக்கு முன்பிருந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற தேவார ஆசிரியர் மூவரையும் முறையே குறிப்பிட்டுள்ளார் என்பது அறியப்படுகின்றதோடு, அவர் மூவருக்கும் பின்னிருந்தவர் என்பதும் தெளியப்படும்”
இதற்காக அவர் காட்டும் மேற்கோள்கள் வருமாறு:

அப்பர் பற்றிய மேற்கோள்


    பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன்
    அணியார் பாதம் கொடுத்தி...
                         (திருவாசகம், திருச்சதகம், 89)
சூலை நோயைத் தீர்த்த (பணி தீர்த்தருளி) செய்தி, அடியார் முடியில் ஈசன் தம் பாதம் வைத்த செய்தி (அணியார் பாதம் கொடுத்தி) ஆகிய நிகழ்ச்சிகள் அப்பரையன்றி (பழைய அடியார்) வேறு யாரிடத்தும் நிகழவில்லை என்னும் கருத்தால் மாணிக்கவாசகர் காலத்தை நிறுவுகிறார்.

சம்பந்தர் பற்றிய மேற்கோள்

    பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
    பெண் சுமந்த பாகத்தன்
                        (திருவாசகம், திருவம்மானை, 8)

பண்ணார் பாடலுக்கு இறைவன் பொற்றாளம், முத்துச்சிவிகை போன்ற பரிசளித்தமை சம்பந்தரையே குறிப்பன என்கிறார்.

சுந்தரர் பற்றிய மேற்கோள்


    பாற்றிரு நீற்றெம் பரமனைப்
          பரங்கருணையோடு மெதிர்ந்து
    தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்கும்
          சோதியை................
                    (திருவாசகம், எண்ணப் பதிகம், 6)
’மெய்யடியார்’,  ‘எதிர்ந்து’  என்பவை, சுந்தரரின் திருமணக் காலத்தில் அந்தணர் கோலத்தில் தோன்றி ஆளோலை காட்டி எதிர்வாதம் பேசித் தடுத்தாட்கொண்ட மெய்யடியார்  சுந்தரையன்றி வேறு யாரைக் குறிக்க முடியும் என்பது கவிமணியின் கேள்வி.

கல்வெட்டு ஆய்வு (சாசன ஆராய்ச்சி)-1:

திருவிதாங்கூர் தொல்லியல் தலைவராய் இருந்தவர் கோபிநாதராவ் அவர்கள். அவர், திருநந்திக்கரை செப்பேடு ஒன்றினைப் படித்துப் பொருள் கொள்ளும்போது ஓரிடத்தில் தவறியதாகக் கவிமணி எடுத்துக் கூறுகிறார்.  கவிமணியார் கோபிநாதராவ் அவர்களை ‘திரு. கோபிநநாதராயர்’  என்று குறிப்பிட்டு, இராயரவர்களை “ஒரு சிறந்த அறிஞர்; ஆராய்ச்சி வல்லுநர்; அரிய காரியங்களைச் சாதித்தவர். எனினும், அவர் தவறிய இடங்கள் இல்லாமலில்லை. அவற்றுள் ஒன்றைக் கீழே எடுத்துக்காட்டுகின்றேன்.”  என்று குறிப்பிடுகிறார்.

செப்பேட்டு வரிகளில் முதல் மூன்று வரிகள் கீழ் வருமாறு: (கோபிநாதராவ் அவர்கள் படித்தவாறு). மீதமுள்ள வரிகள் விரிவஞ்சிக் காட்டப்பெறவில்லை.

1. ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமாதித்ய வரகுணர்க்கு யாண்டு எட்டு பங்குனித் திங்கள்      திருநந்திக்கரை இருந்து அடிகள்......................
2. ங்க நாடு கிழவன் மகள் ஆய்குலமாதேவியாயின முருகஞ்சேந்தியைத் திருவடி சார்த்த இவளுக்குக் குடியாக அட்டிக்குடுத்த பூ
3. ள்ளுவ நாட்டு மேற்கோட்டுப் பழங்கோப்பற்று செங்கணர் வந்தடி பல விதை பதினைங்கல வித்துப்பாடும் சாண்டன் தடி பலவிதை


கவிமணி அவர்கள் செப்பேட்டின் பொதுப்பொருள் இன்னதென்று எழுதுகிறார். அதாவது, ‘தெங்க நாடு கிழவன் மகள் ஆய்குல மாதேவியாயின முருகஞ் சேந்தியைத் திருவடி சார்த்த அவளுக்கு விட்டுக்கொடுத்த 32 கலவித்துப்பாடு கொண்ட நிலத்தைப் பார்த்திப சேகர புரத்துப் பெருமக்கள் மேற்பார்வை செய்துகொள்வார்களாக’ என்பது. ”திருவடி சார்த்த”  என்பதன் பொருளைச் சரியாக உணர்ந்தால்தான் முருகஞ் சேந்திக்கும் வரகுணதேவர்க்குமுள்ள தொடர்பும், சாசனத்தின் நோக்கமும் தெளிவுபடும் என்கிறார் கவிமணி. திரு. கோபிநாதராயரவர்கள் ‘திருவடி சார்த்தல்’ என்பதற்குத் ’திருமணம் செய்துகொடுத்தல்’ எனக் கருத்து கொண்டு, ‘வரகுணனுக்கு முருகஞ் சேந்தி மணமுடிக்கப்பட்டாள்’ எனக் கூறுகின்றார். ஆனால், கவிமணி அவர்கள், வைணவர்கள் பயன்படுத்தும் ‘திருவடி சேர்தல்’ என்னும் தொடரைச் சுட்டி, ‘திருமாலின் திருவடிகளில் சேர்தல் (இவ்வுலக வாழ்வை நீத்தல்)’ எனப் பொருள்கொள்கிறார். எனவே, முருகஞ் சேந்தி என்பவள் மணவாழ்வை வெறுத்துக் கன்னிகையாகவே இருந்து கடவுள் வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முனைவதையே ‘திருவடி சார்த்த’  என்னும் தொடர் குறிக்கிறது என்றும், அரசன் அவ்வாறு அவளைக் கடவுளின் திருவடிகளில் காணிக்கை வைத்து அவளது நல்வாழ்வுக்காக (செலவுக்காக) நிலம் விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்று நிறுவுகிறார். தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அரசன் நிலம் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை என்ன என்பதாகக் கேள்வி எழுப்புகிறார்.
 
மேலும், செப்பேட்டு வரிகளின் இறுதியில் இரண்டு எழுத்துகள் சிதைந்து போயுள்ளதைச் சுட்டிக்காட்டி, சிதைந்த இரு எழுத்துகளைச் சரியாக ஊகம் செய்து நிரப்புகிறார். திருத்தப்பட்ட பாடம் வருமாறு;

1.  ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமாதித்ய வரகுணர்க்கு யாண்டு எட்டு பங்குனித் திங்கள் திருநந்திக்கரை இருந்து அடிகள்....................(ர்தெ)
2.   ங்க நாடு கிழவன் மகள் ஆய்குலமாதேவியாயின முருகஞ்சேந்தியைத் திருவடி சார்த்த இவளுக்குக் குடியாக அட்டிக்குடுத்த பூ(மிவ)
3.   ள்ளுவ நாட்டு மேற்கோட்டுப் பழங்கோப்பற்று செங்கணர் வந்தடி பல விதை பதினைங்கல வித்துப்பாடும் சாண்டன் தடி பலவிதை (நா)



முதலியார் ஓலை ஆவணங்கள்-ஆய்வு:
வேணாட்டுப்பகுதியில் வணிகத்தொழிலில் ஈடுபட்டிருந்த நகரத்தார், பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் நகரத்தார் நிலையிலிருந்து வேளாண் நாட்டார் தலைவர்களாய் உருவானார்கள். அப்போது அவர்களுக்கு “முதலியார்” என்னும் பட்டம் வழங்கப்பட்டிருக்கக் கூடும். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: இடைக்காலத்தில் சோழர் ஆட்சியில் அரசு/நாட்டு நிருவாகத்தில் இருந்த தலைவர்கள் முதலி, பிள்ளை ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர் என்பது கல்வெட்டுகள் வாயிலாகத் தெரியவரும் வரலாற்றுச் செய்திகளாகும்.) நாஞ்சில் நாட்டின் வடக்கே அழகிய பாண்டிபுரத்தில் வாழ்ந்த முதலியார்கள் பாதுகாத்த 600 ஓலை ஆவணங்களில் வேணாட்டு அரசுடனான தொடர்பு காணப்படுகிறது. இவ்வோலை ஆவணங்கள் 17,18–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில், நிலவரி, வேளாண் குத்தகை, மதுரை நாயக்கர் படையெடுப்பு, மடங்கள், கோயில்கள், கட்டாய உழைப்பு, சாதிச் சடங்குகள், அடிமை முறை ஆகியவை பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகள் உள்ளன. முதலியார் ஓலை ஆவணங்களின் முதன்மையை உணர்ந்த கவிமணி அவர்கள், அவற்றைத் திருவனந்தபுரம் ஆவணக்காப்பகத்தில் சேர்த்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். ஒரு நூறு ஓலைகளைப் பெயர்த்தெழுதி வைத்தார். அரசு தொடர்பான 19 ஓலைகளைக் கேரள ஆய்வுக்கழகத்தின் கட்டுரைத் தொகுப்பில் (Kerala Society Papers) வெளியிட்டு வரலாற்றுலகுக்குத் தெரியப்படுத்தினார்.
மேற்படி 600 ஓலை ஆவணங்களும் தற்போது திருவனந்தபுரம் ஆவணப்பாதுகாப்பு மையத்தில் உள்ளன. கவிமணி அவர்கள் தம் குறிப்புகளில் இவ்வோலைகளை அழகியபாண்டியபுரம் பெரியவீட்டு முதலியார் வீட்டு ஆவணங்கள் என்று குறிப்பிடுகிறார். 


இதில் சிறப்பான கூறு என்னவெனில், இவ்வோலை ஆவணங்கள் மூன்று வகையில் எழுதப்பட்டவை. தமிழ் மொழி, தமிழ் எழுத்து; மலையாள மொழி, தமிழ் எழுத்து; தமிழ் மொழி, மலையாள எழுத்து ஆகிய வடிவங்களில் எழுதப்பட்டவை. இம்மூன்று வகை ஆவணங்களையும் முறையாக ஆய்ந்து அனைத்தையும் தமிழ் எழுத்து வடிவில் பெயர்த்த திறனாளர் கவிமணி அவர்கள்.




கவிமணி மண்டபத்தில் கவிமணியின் படம்


     



துணை நின்ற நூல்கள்:
1. கவிமணியின் உரைமணிகள்-பாரி நிலையம் (மூன்றாம் பதிப்பு, ஜூலை, 1977.)
2. முதலியார் ஓலைகள்-அ.கா.பெருமாள்-காலச்சுவடு பதிப்பகம்.(முதல் பதிப்பு, டிசம்பர், 2016.)

Tuesday, August 29, 2017

கல்லணை ஆஞ்சநேயர் கோயில் கல்வெட்டு

-- திரு. துரை  சுந்தரம்;  திரு. நூ.த.லோக சுந்தரம்


முன்னுரை:
இணையக் குழுக்களுள் ஒன்றான மின்தமிழ் குழுவின் உறுப்பினர் திரு.
நூ.த.லோக சுந்தரம் அவர்கள்  ஒரு கல்வெட்டுப் படத்தை வெளியிட்டு அதன் பாடத்தைப் படித்துத் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கல்வெட்டு, பல சுவையான செய்திகளுக்கு அடித்தளமாய் இருந்தது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.




படம் தெரிவு: மயிலை நூ த லோ சு


கல்லணையில் ஓர் ஆஞ்சநேயர் கோயில்:
கல்லணை வரலாற்றுப் புகழ்பெற்றது. சோழ மன்னன் கரிகாலன் கட்டியது. கல்லணையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலின் ஒரு மூலையில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 1804-ஆம் ஆண்டு, கல்லணையில் இருக்கும் ஒரு மதகு ஆங்கிலேயர் ஒருவரால் செப்பனிடப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கிறது.
கல்லணைக் கல்வெட்டு
 படம் தெரிவு: மயிலை நூ த லோ சு

கல்வெட்டின் செய்திகள்:

கல்வெட்டின் படத்தைக் கீழே காணலாம். கல்வெட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு வரிகள் ஆங்கிலத்திலும், அவற்றை அடுத்து ஐந்து வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் வருமாறு:

அ) ஆங்கிலக் கல்வெட்டின் பாடம்:

       1 Repaird this COLLING
       2  LAH & Erected the 268
       3  Upright Stones
       4   By Capt. J.L. Calddel
       5   A.D. 1804

ஆங்கிலக் கல்வெட்டு, கி.பி. 1804-ஆம் ஆண்டில் கல்லணையின் மதகு ஒன்றை ஆங்கிலேயரான காப்டன் ஜே.எல். கால்டெல் என்பவர் செப்பனிட்டதாகக் கூறுகிறது. செப்பனிடும் பணியின்போது 268 கற்கள் சீரமைத்து வைக்கப்பட்டன என்பதாகக் கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக அறிகிறோம். ஆங்கிலக் கல்வெட்டில் மதகு என்பதற்கு ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சொல்லான “கலிங்கு” என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பானதொன்று. அதை ஆங்கில எழுத்துகளால் ”கலிங்”  என்று எழுதியுள்ளனர். “கலிங்கு” என்னும் சொல் மதகைக் குறிக்கும். இச்சொல், கல்வெட்டுகளில் மிகுதியாகப் பயின்றுவரும் சொல்லாகும். ஆங்கிலக் கல்வெட்டில் எழுத்துப்பிழை இருப்பதைக் காணலாம்.

ஆ)  தமிழ்க் கல்வெட்டின் பாடம்:

1 1804 இல் - த.ர
2 ராச (?) - கெவுணர்
3 மெண்டாரவற்க
4 ள் உத்திரவுப்படி
5  க்கி மகண ச- ராச -மே
6 ம்பன் ஜெம்சு  (?) ல
7.......................


தமிழ்க் கல்வெட்டு வரிகளிலிருந்து, முழுமையான செய்தியை அறிய இயலாது. சொற்றொடர்கள் முழுமையானதாக இல்லை. கி.பி. 1804-ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. மதகு செப்பனிடுதல் பற்றிய சொற்றொடர்கள் இல்லை. அரசு ஆணையின்படி என்னும் தொடர் மூலம் செப்பனிடும் பணி அரசு ஆணையின்படி நிறைவேற்றப்பட்டது. என்பது அறியப்படுகிறது. தமிழ்க் கல்வெட்டில், ஆங்கில அதிகாரியின் பெயர் முழுமையானதாக இல்லை. அவருடைய பெயரின் முன்னொட்டாகவுள்ள “ஜே”  என்னும் எழுத்தின் விரிவான “ஜேம்சு”  என்பது குறிக்கப்பட்டுள்ளது. 1800 களில் “ஜே”  என்பது போன்ற நெடில் எழுத்துகளைக் குறிலாகவே எழுதும் வழக்கம் இருந்துள்ளது. முதல் வரியின் இறுதி எழுத்துகளும், இரண்டாம் வரியின்  முதலில் உள்ள ”ராச”  என்னும் எழுத்துகளும்,  சென்ற நூற்றாண்டு வரை மூத்த வயதினர் எழுதும் வழக்கப்படி “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ” என்பது போன்ற ஒரு தொடரைக் குறிப்பதாகலாம். 2, 3 , 4  வரிகளில் உள்ள  “கெவுணர்மெண்டாரவற்கள்” என்பது,  ”கெவர்ண்மெண்(ட்)டாரவர்கள்”  என்பதன் பிழையான வடிவம் என்று கூறலாம்.  மேம்பன் என்னும் சொல்,  ”கேப்டன்” என்பதைக்குறிப்பதாகலாம்.  ஐந்தாம் வரியில் காணப்படும் தொடரான “மகண ச-ராச-”  என்பது, மீண்டும்  “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ” என்பதையொத்த ஒரு தொடராகலாம்.


ஆஞ்சநேயர் கோயிலின் பின்னணி:
கல்லணையைச் செப்பனிடும் பணியின்போது, 19-ஆவது திறப்பில் நடைபெற்ற பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எத்துணை முயன்றும் பணியை முடிக்க இயலவில்லை. ஆங்கிலேய அதிகாரி ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் காட்சியளித்த ஆஞ்சநேயர், 19-ஆவது திறப்புக்கருகில் தமக்கு ஒரு கோயில் எழுப்புமாறும் அந்தத் திறப்பைத் தாம் காத்துத் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். அதிகாரி அதைப் பொருட்படுத்தாமல் பணியைத்தொடர்ந்துள்ளார். ஓரிரு நாட்களில், குரங்குகள் சில குழுவாக அவரைத் தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது. அவருக்கு வந்த கனவு மேஸ்திரி ஒருவருக்கும் வந்துள்ளது. பணியின்போது ஓரிடத்தில் தோண்டியதில் அங்கு ஓர் ஆஞ்சநேயரின் திருமேனி கிடைத்துள்ளது. அதன் பிறகே, கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், வேளாண்மைக்காக இவ்வணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும்போது, இந்த ஆஞ்சநேயருக்குப் பூசைகள் நடைபெறுவதும், ஒவ்வோர் ஆண்டும் பயிர் விளைந்ததும் முதல் நெற்கதிரை ஆஞ்சநேயருக்குப் படையலிட்டுப் பூசை நடைபெறுவதும் வழக்கம்.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலும் ஜே.எல். கால்டெல்லும்:
சென்னையில் கதீட்ரல் சாலையில் அமைந்திருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலைக் கட்டியவர் ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்பவராவர். கி.பி. 1815-இல் முதன் முதலாக இக்கிறித்தவக்கோயில் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்டது. 200 ஆண்டுகளைத் தாண்டிய இக்கோயிலைக் கட்டிய ஜேம்ஸ் கால்ட்வெல், இந்த ஆகஸ்ட் மாதம் 20-27 தேதிகள் அடங்கிய சென்னை வாரக்கொண்டாட்டங்களின்போது நினைவு கூரத்தக்கவர். இந்த ஜேம்ஸ் கால்ட்வெல்லும், கல்லணையைச் செப்பனிட்ட ஜேம்ஸ் கால்டெல்லும் ஒருவராயிருக்கக் கூடுமா? ஆய்வுக்குரியது.

31-08-2017 அன்று இணைத்த புதிய செய்தி:
முனைவர் நா.கணேசன் (ஹூஸ்டன்)  அவர்கள் ஜேம்ஸ்.எல். கால்ட்வெல் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர், செயிண்ட் ஜார்ஜ் கதிட்ரலைக் கட்டியவரும் கல்லணையைச் செப்பனிட்டவரும் ஒருவரே என்று கருதி இப்புதிய செய்தி இணைக்கப்படுகிறது. கால்ட்டெல் என்னும் ஆங்கிலப்பெயர் இதுவரை கேள்விப்பட்டிராத, எங்கும் படித்திராத பெயர் என்பதையும் இங்கு கருதவேண்டும்.


ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்னும் பொறியாளரின் முழுப்பெயர் ஜேம்ஸ் லில்லிமேன் கால்ட்வெல் (JAMES LILLIMAN CALDWELL)  என்பதாகும். 1799-ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் மீது ஆங்கிலேயர் படையெடுத்து நடந்த போரில் (போரில் திப்பு இறந்துபடுகிறார்) கலந்துகொண்டு காயமுற்றவர். பின்னர், கல்லணையை ‘சர்வே’ செய்து 1804-இல் கல்லணையை மேம்படுதினார். அதன்பிறகு, சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலை வடிவமைத்தார். 1858-இல் ‘ஜெனரல்’  என்னும் உயர்பதவி பெற்றார். 1863-இல் மறைந்தார்.
இக்கருத்தில் வரலாற்றுப்பிழை நேர்ந்துள்ளதாகக் கருதும் வரலாற்று ஆய்வாளர்கள் தகுந்த சான்றுகளை முன்வைக்கும்போது கருத்துகள் மாறக்கூடும். வரலாற்றைச் செப்பனிடத் தொடர்ந்த ஆய்வுகளும் தேவை. ஆய்வு முடிவுக்ள் மாறுவதும் இயல்பு.

துணை நின்றவை :

1  www.Columbuslost.com (https://www.columbuslost.com/Temples/Hanuman-Temple-inside-a-Dam-in-Kumbhakonam/info)   http://devrajbandla.photoshelter.com/image/I0000TLhINGvhwIw  

2 An Anglican treasure –Article by Sriram V. The Hindu-April 24, 2015.
நன்றி :  முனைவர் திரு.நா.கணேசன், ஹூஸ்டன்.

___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156


நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com

___________________________________________________________

Monday, August 28, 2017

அரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்



-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 
முன்னுரை:
அண்மையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் வெளியீடான “நிகமம்”  என்னும் நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது, அந்நூலில் மேற்படிப் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் வீ.செல்வகுமார் என்பவர் எழுதிய ”கெனிசா தாள் ஆவணங்கள்” என்னும் ஆய்வுக்கட்டுரை ஈர்த்தது. வணிக வரலாற்று ஆய்வுகளை உள்ளடக்கிய பல கட்டுரைகளின் தொகுப்பு நூலே “நிகமம்”.  அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.  ”நிகமம்” என்னும் சொல் வணிகக் குழுவினரைக் குறிப்பதாகும். தமிழ் நாட்டில் பல இடங்களின் பெயர்கள் நெகமம் என்றிருப்பதைக் காணலாம். நிகமம் என்பதே நெகமம் என் மருவியுள்ளது. தமிழகத்தில், சமணக்குகைத்தளங்களில் காணப்பெறும் தமிழ்த் தொல்லெழுத்தான தமிழியில் (தமிழ் பிராமி) பொறிக்கப்பட்ட, மாங்குளம் கல்வெட்டில் “வெள் அறை நிகம(த்)தோர்”  என்னும் தொடர் உள்ளது. தமிழகத்தின் கடல்சார் வணிகம் பற்றிய செய்திகளுக்கு அயல்நாடுகளில் சான்றுகள் கி.மு. முதல் நூற்றாண்டளவிலேயே கிடைத்துள்ளன. மேற்படி ”கெனிசா தாள் ஆவணங்கள்” என்னும் ஆய்வுக்கட்டுரை, இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றை (வணிக வரலாற்றை) அறிய உதவும் அரேபிய ஆவணங்களைப் பற்றிக் கூறுகிறது.

கெனிசா தாள் ஆவணங்கள்-Genizah manuscripts:


எகிப்து நாட்டின் பழைய கெய்ரோ நகரில், பென் எஸ்ரா (Ben Ezra) என்னும் பெயரில் யூதர்களின் வழிபாட்டிடம் (யூதப்பள்ளி) (Synagogue) ஒன்றுள்ளது. அங்கு, 1890-இல் இலட்சக் கணக்கான துண்டுத் தாள் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கடித ஆவணங்கள். ஹீப்ரு, அரபு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை. கெனிசா (Genizah) என்பது யூதப்பள்ளிகளில் பழைய ஆவணங்களைச் சேர்த்துவைக்கும் அறையைக் குறிக்கும். இந்த கெனிசா ஆவணங்களில் இந்தியாவுடன் தொடர்புடைய வணிகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்களில், ஆபிரகாம் பென் ஈஜு (Abraham Ben Yiju), மட்முன் பி. ஹசன் பந்தர் (Madmun B. Hassan Bundar) ஆகியோர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்களின் கடிதங்கள் ஹீப்ரு மொழியில் உள்ளன. இவற்றில், இந்தியாவைச் சேர்ந்த நகோடா இரமிஷ்ட் (Nakhodah Ramisht), நம்பியார் என்பவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும், மேற்குக் கடற்கரை, குஜராத், கர்நாடகக் கல்வெட்டுகளில் சுட்டப்பெறும் பட்டணஸ்வாமி எனப்படும் நகரத்தலைவர் பற்றிய குறிப்புகளும் இந்த ஆவணங்களில் உள்ளன.

அமெரிக்க எழுத்தாளரான அமிதவ் கோஷ், தம் பயண நூலில் அரேபியரான பென் ஈஜு என்னும் கடல் வணிகரைப்பற்றி எழுதியுள்ளார். பென் ஈஜு சில காலம் இந்தியாவில் தங்கியிருந்துள்ளார். மேலைக்கடற்கரையில் இவருக்கு ஒரு தொழிற்சாலை இருந்துள்ளது. அஷு என்ற ஒரு நாயர் பெண்ணை மணந்துள்ளார். பொம்மா (Bomma)  என்னும் ஓர் அடிமை அவருக்கு இருந்தார். இந்த அடிமை, துளு நாட்டைச் சேர்ந்தவர் எனக்கருதப்படுகிறது. இவ்வணிகருடைய கடிதங்கள் கி.பி. 1132 முதல் கி.பி. 1149 வரை நடந்த நிகழ்வுகளைக் கூறுகின்றன. ஹசன் பந்தர், ஏடன் துறைமுகத்தில் பென் ஈஜுவின் வணிகப்பிரதிநிதியாக இருந்தார்.

இந்திய வணிகர்கள் யார்?

1) நம்பியார்
செல்வகுமார் அவர்களின் கட்டுரையில், மேற்படி இந்திய வணிகர்களைப் பற்றிய செய்திகள் இல்லை. இந்திய வணிகர்களைப் பற்றிய தேடலில் சில கூடுதல் செய்திகள் கிடைத்தன. பென் ஈஜு, ஹசன் பந்தருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஒரு பொதி (வணிகப் பொருள் பொதி?)யினை நகோடா ரமிஷ்ட்டின் கப்பலிலும், மற்றொரு பொதியினை நம்பியார் கப்பலிலும் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார். நம்பியார் என்னும் குடியினர், நாயர் குடியினரைப்போன்றவர். மலபார் பகுதியில், இடைக்காலத்தில், இக்குடியினர் இருவரும் வைசியரைப்போல் வணிகத்தில் ஒருபோதும் ஈடுபட்டவரல்லர். இவர்கள், தற்காப்புக் கலையில் ஈடுபட்டவராவர். எனவே, நம்பியார் என்பவர், மலபார்ப் பகுதியிலிருந்துகொண்டு கப்பல் உடைமையாளராய் பென் ஈஜுவின் வணிகச் செயல்களில் பங்கு கொண்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக, நம்பியார் மங்களூர்ப் பகுதியில் இருந்துகொண்டு பென் ஈஜுவுக்காக அவர் சார்பில் இயங்கியவர் எனலாம். தற்போதைய “பினாமி”  என்பதுபோல. நம்பியார், நாயர் வகுப்பினர் கடல் பயணம் மேற்கொள்ளாதவர் என்பதும், அவர்களுக்குச் சமற்கிருதம் அல்லாது அரபு மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் இந்தக் கருதுகோளுக்கு வலு சேர்க்கும். கூடுதலாக, நகோடா என்னும் சொல்லொட்டு இவர் பெயரில் இல்லை என்பதும், இரமிஷ்ட் என்பார் பெயரில் மட்டுமே நகோடா இணைந்துள்ளதையும் நோக்கவேண்டும். இரண்பீர் சக்கரவர்த்தி என்னும் வரலாற்றாளர், நகோடா என்னும் சொல் “நகூடா”, “நாவித்தகா”   என்னும் சொற்களோடு தொடர்புடையது என்றும், இவை (நகூடர், நாவித்தகர்)  கப்பல் உடை+மையாளராய் வணிகம் செய்தவர்களைக் குறிப்பன என்றும் தம் ஆய்வில் நிறுவுகிறார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  நாவித்தகர் என்பது கப்பலை (மரக்கலத்தை)க் குறிக்கும் “நாவாய்”  என்னும் சொல்லோடு பொருந்துவதாக உள்ளது கருதற்பாலது.)

2) நகோடா இரமிஷ்ட்
நகோடா என்பது கப்பல் உடைமையாளராய் வணிகம் செய்தவரைக் குறிப்பதால், நகோடா இரமிஷ்ட் குஜராத் பகுதியைச் சேர்ந்த இந்திய வணிகர் எனக் கருதப்படுகிறது. ஒரு சில தாள் ஆவணங்கள் குஜராத்திய எழுத்துகளைக் கொண்டுள்ளன என்றும் கருதப்படுகிறது.

2) பட்டணஸ்வாமி
பட்டணஸ்வாமி என்னும் பெயர் துறைமுகத் தலைவர் என்னும் ஒரு பதவிப் பெயராகலாம் என்று கருதப்படுகிறது. கருநாடகக் கல்வெட்டுகளில் இச்சொல் பயில்கிறது என்னும் செய்தியின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் சில கன்னடக் கல்வெட்டுகளிலும், வேறு நூலாதாரங்களிலும் தேடுதலை மேற்கொண்டபோது சில செய்திகள் கிடைக்கப்பெற்றன. போசளர்கள் (ஹொய்சளர்கள்) கருநாடகத்தில் இடைக்காலத்தில் கி.பி. 1346 வரை ஆட்சி செய்தவர்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் பட்டணஸ்வாமி என்னும் பதவி இருந்துள்ளது. இப்பதவியில் இருந்தோர், நகரத் தலைவர்களாய் (இன்றைய “மேயர்”  பதவி போன்றது) இருந்துள்ளனர். இக்காலகட்டத்தில், நகரம் என்பது வணிக நகரம் ஆகும். வணிகச் சந்தைகள் கொண்டது.  நானாதேசிகள், ஐந்நூற்றுவர் போன்ற வணிகக் குழுக்கள் தங்கி வணிகத்தில் ஈடுபட்ட இடங்கள். துறைமுக நகரங்களும் இவற்றில் அடங்கும் எனலாம். வணிகத்தொடர்புள்ள இந்த நகரங்களின் தலைவர்கள் பட்டணஸ்வாமி என அழைக்கப்பட்டனர். இவர்கள் அரசுக்கும் வணிகர் குழுக்களுக்கும் பாலமாய் இயங்கியவர்கள் எனலாம். வணிகத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வரி வருவாய், வணிகச் சந்தைகள் ஆகியவற்றை மேற்பார்வையிட்டனர் என்றும் கருதப்படுகிறது.

கன்னடக் கல்வெட்டுகளில் பட்டணஸ்வாமிகள்

1 சாமராஜநகரம் வட்டம்-பசவாபுரம் கல்வெட்டு எண் : 236          காலம்-போசளர் : கி.பி 1316
கல்வெட்டு வரி 19,20
..பட்டணசாமி கெம்பசெட்டிய
மக மாத செட்டி ...
...
(கெம்பசெட்டியின் மகன் மாத செட்டி)

2 சாமராஜநகரம் வட்டம்-அரகலவாடி கல்வெட்டு எண் : 301 காலம்: கி.பி 1555
கல்வெட்டு வரி 4,5,6 
வீரநஞ்சராய மஹாராயர குமாரராத சிக்கராயரு
தெரக்கணாம்பிய பட்டணஸ்வாமி பைர செட்டிய
மக திருமலெசெட்டியரிகே கொட்ட கிராம...
(உம்மத்தூர் அரசர் சிக்கராயர் தெரக்கணாம்பி
நகரத்தின் பட்டணசாமி பைரசெட்டியின் மகன்
திருமலை செட்டிக்குக் கொடுத்த கிராமம்)

3 யளந்தூர் வட்டம்-யளந்தூர் கல்வெட்டு எண்: 5 காலம்: கி.பி. 1244
இது தமிழ்க் கல்வெட்டு.
கல்வெட்டு வரி 6
....பட்டணசாமி மகன் சாங்கண்...

4 யளந்தூர் வட்டம்-யளந்தூர் கல்வெட்டு எண்: 62 காலம் போசளர் கி.பி. 1328
கல்வெட்டு வரி 43 
மான்யவாகி பட்டணஸ்வாமிகளு......
5 யளந்தூர் வட்டம்-கணிகனூ கல்வெட்டு எண்: 172 காலம்: கி.பி. 13-ஆம் நூ.ஆ.  இது தமிழ்க் கல்வெட்டு
கல்வெட்டு வரி 4  
.......பட்டணசாமி திருவிளக்கால் பொன் மூன்றும்
வைத்தார்


6 யளந்தூர் வட்டம்-அம்பளி கல்வெட்டு எண்: 210 காலம் போசளர்: கி.பி. 1244           
இது தமிழ்க்கல்வெட்டு
கல்வெட்டு வரி 6
பட்டணசாமி மகன் .....
7 கொள்ளேகாலம் வட்டம்-காமகெரெ கல்வெட்டு எண்: 57  விஜயநகரர் காலம் : கி.பி. 1366
கல்வெட்டு வரி 10,11,12
.....மாம்பள்ளி மொடஹள்ளி, கொங்க
பட்டணத சமஸ்த நானாதேசிகளு ...
பட்டணஸ்வாமி ...

மாம்பள்ளி, மொடஹள்ளி, கொங்கபட்டணம் ஆகிய நகரங்களின் நானாதேசி
வணிகரும் பட்டணசாமிகளும்

8 கொள்ளேகாலம் வட்டம்-காமகெரெ கல்வெட்டு எண்: 62  விஜயநகரர் காலம் : கி.பி. 1354
கல்வெட்டு வரி 10,11,12
...மோடிஹள்ளி சிங்கண நல்லூர
பட்டணஸ்வாமி ராக்கண்ண
சிங்கண நல்லூரின் பட்டணசாமி ராக்கண்ண(ன்) என்பவர்


9 கொள்ளேகாலம் வட்டம்-குரஹட்டி ஹொசூர் கல்வெட்டு எண்: 76  காலம் : கி.பி. 16-ஆம் நூ.ஆ.
கல்வெட்டு வரி 4,5
....ஆலம்பாடி பட்டணஸ்வாமி நஞ்ச...
ஆலம்பாடி என்னும் நகரத்தின் பட்டணசாமி.
அவரது பெயர் “நஞ்ச”  எனத் தொடங்குகிறது.

10 ஹுணசூர் வட்டம்-மரதூர் கல்வெட்டு எண்: 14 காலம்: கி.பி. 15-ஆம் நூ.ஆ.
கல்வெட்டு வரி 1
.... பட்டணசாமி நாகி செட்டி....

மேற்படி கல்வெட்டுகளின் செய்திகள்:
மேற்படி கல்வெட்டுகளிலிருந்து நகரங்களின் தலைவர்களாயிருந்த பட்டணஸ்வாமிகளில் பலர் செட்டிகள் என்னும் வணிகர்கள் என்பது புலனாகிறது. ஒரு கல்வெட்டில், பட்டணஸ்வாமி ஒருவர் நானாதேசி வணிகருடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார் என்பதையும் காண்கிறோம். எனவே, பட்டணஸ்வாமி என்னும் பதவியிலிருந்தோர் வணிகக் குழுவினரைச் சார்ந்தோரே என்பதாகக் கருதலாம். வணிகராயிருப்பதனால், அவர் அரசுடன் இயைந்து வணிக நடவடிக்கைகளைச் சிறப்புறக் கண்காணித்திருக்கக் கூடும் என்பதும் புலனாகிறது. அரபு நாட்டைச் சேர்ந்த கப்பல் உடைமையாளரான வணிகர்கள், கருநாடகப்பகுதியில் தங்கள் வணிக நடவடிக்கைகளை நகரத்தலைவர்களான பட்டணஸ்வாமிகளின் தொடர்போடு மேற்கொண்டிருக்கவேண்டும் எனக் கருதலாம்.

நன்றி.  துணை நின்றவை:
1. The Mystery of Nambiyar Nakhuda  (from website "Historic Alleys" by Maddy)
2. Sri Kshetra Hombuja (blog)



___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

Saturday, August 26, 2017

திருவாரூர் கொடுங்கைக் கல்வெட்டு



திருவாரூர் ருணவிமோசன ஈசுவரர் கொடுங்கைக் கல்வெட்டு

படம் உதவி: முனைவர் காளைராசன் 


கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு துரை  சுந்தரம், கோவை: 
கல்வெட்டுப் படம் படிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. படித்தவரையில் அதன் பாடம் கீழே தந்துள்ளேன். உயரத்தில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளதே ஒழியச் சிறப்பான செய்தி இல்லை. நிலக்கொடையைப் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டுப்பாடம்:
1 .......கவும் இவ்வூர் வெள்ளாளன்.........................
2 ஞ்ஞூறும் இந்நிலம் ஒன்றரைக்கும்  இத்தேவர் பண்டாரத்தே
   கிரையத் திரவியமும்
3 ... சிகாமணி வளநாட்டு வேளாநாட்டு ப்ரஹ்மதேயம்
  (களை?)ச் சாத்தந்குடி ஸபையோ(ம்)
4 ....நிலம் தாங்கள் வேண்டுங் குடிகளுக்கு (ஊர்)க்காலால் 
   அடுத்து முதலாந நெல்
5 ............................திருவமுது........  இருநாழியாக ....
6 .........யும் ........த்து................நில்ம்
குறிப்புகள் :
சிவப்பு மையில் காட்டப்பெற்றவை கிரந்த எழுத்துகள்.
கல்வெட்டு நிலக்கொடை பற்றியது. ஒரு வெள்ளாளன் கொடுத்த  கொடையாகலாம்.
இரண்டாம் வரியில் உள்ள “ஞ்ஞூறும்”  என்பது “ஐஞ்ஞூறும்”   என்பதன் குறைவடிவம். ஐந்நூறு குழியாக இருக்கலாம்.
நிலம் ஒன்றரை என்பது ஒன்றரை மா -நிலமாக இருக்கலாம்.
கொடை நிலம், பிரமதேயச் சபையினர் விற்ற நிலமாக இருத்தல்வேண்டும். நிலத்தை விற்றுக் கிடைத்த பொருள் கோயிலின் கருவூலத்தில் (பண்டாரத்தே)  சேர்க்கப்படுகிறது. "கிரையத்திரவியம்” என்னும் தொடரால் இது விளக்கம் பெறுகிறது.
இத்தேவர் என்பது  கோயிலின் இறைவரைக் குறிக்கும்.
பிரமதேயத்தின் பெயர் மூன்றாவது வரியில் சாத்தன்குடி என்னும் பகுதிப்பெயரில் சுட்டப்பெறுகிறது.  இந்தப் பிரமதேய ஊர் சோழ நாட்டின் சத்திரிய சிகாமணி வள நாட்டில் வேளாநாடு என்னும் நாட்டுப்பிரிவில் இருந்தது.
கொடை நிலத்தை (வேண்டும்) உழுகுடிகளுக்குக் கொடுத்து உழவால் வந்த விளைச்சலில் கோயிலின் அமுதுபடிக்காக நெல் அளந்து தரப்படவேண்டும். நெல்லின் அளவு இரு நாழி குறிக்கப்படுகிறது. ஊரில் வழக்கிலிருக்கும் அளவு கருவியான ஊர்க்காலால் நெல் அளக்கப்படவேண்டும். கால் என்பது நெல் அளக்கும் கருவியைக்குறிக்கும். இக்கருவிகள் ஊருக்குப் பொதுவாக ஒன்றும், கோயிலுக்குப் பொதுவாக ஒன்றும் எனப்  பலவாறு அமையும். கருவிகளுக்குத் தனியே பெயரும் அமைவதுண்டு. இராசராசன் கால், ஆடவல்லான் கால் ஆகிய பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரின் “திருவாரூர் மாவட்டத்  தொல்லியல் வரலாறு” என்னும் நூலின் குறிப்புப்படி, திருவாரூர் வட்டம்  சத்திரிய சிகாமணி வளநாடாகவும்,  வேளாநாடாகவும் இருந்துள்ளது.


 

Friday, August 25, 2017

மனிதம் சுடர்க!

-- ருத்ரா இ பரமசிவன்
 



நடந்து செல்.
நிமிர்ந்து செல்.

வானம் மட்டுமே உன்னை இடிக்கும்.
அப்போதும் அந்த‌
வானத்தோடு கொஞ்சம் கிசு கிசுத்துப்பார்.
அன்பும் அறிவுமே
இங்குக் கடல்கள்
இங்கு வானங்கள்
இங்கு விண்வெளி மண்டலங்கள்
என்று சொல்லிப்பார்
இப்போது
வானம் உன் காலடியில்.

உன் காலடிகள் தோறும்
அத்வைதம் தான்.
மானிடத்துள் கடவுளர்கள்.
கடவுள் எனும் பாஷ்யம்
பல்லுயிர் நேசமே.
இதில் வெட்டரிவாள்களுக்கும்
வேல் கம்புகளுக்கும்
இடமில்லை.
துப்பாக்கிகள் கூட‌
முறிந்து போகும்
சோளத்தட்டைகளே.

உலக மானிடம் என்ற‌
பேரொளியில்
சில்லறை மதங்கள்
வெறும் மூளித்தனமான‌
இரைச்சல்களே.
உன் கடவுள் என் கடவுள்
என்று ஜீவ அப்பத்தை
கூறு போட்டு
தின்னும் குரங்குகள் அல்ல‌
நாம்.
அது என்ன தான்
என்று
அறிவின் நுண்ணோக்கியிலும்
ஆய்வின் விண்ணோக்கியிலும்
உற்றுப்பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும்.
இது தான்
என்று சமாதி கட்டும்போது
அதில் நசுங்கும்
சிற்றெறும்பின் குரல்
உன் காதுகளில் விழவில்லையா?
ஆம்..
அறிவு ஊர்ந்து செல்லும் இடங்கள்
எத்தனை எத்தனையோ?
அதன் தடம் தெரிந்தால் போதும்.
மாய சொப்பனங்களுக்கு
வர்ணங்கள் பூசாதே!
கலக்கங்களையும் அச்சங்களையும்
கல்வெட்டுகள் ஆக்காதே..

நகர்ந்து கொண்டே இரு.
சூரியன் ஆனாலும்
பூமி ஆனாலும்
புளூட்டோ ஆனாலும்
நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
நகர்ந்து கொண்டே இருக்கும்போது தான்
நிற்கவும் செய்கிறீர்கள்.
அந்த இனர்ஷியா எனும்
அக ஈர்ப்பும் புற விடுப்பும்
சமம் ஆகும் ஒரு புள்ளியை
கணிதப்படுத்துவதில் தான்
விஞ்ஞானிகள்
தங்கள் ஆயுட்காலங்களையெல்லாம்
தொலைத்து இருக்கிறார்கள்.
விருப்பு வெறுப்பு எனும்
உணர்ச்சிகள்
தீயாக உன்னைச்சூழ விடாதே!
சிவ உருவெளி எனும்
சச்சிதானந்தங்கள்
எல்லா மக்களும்
எல்லா மக்களுக்குமாக‌
வாழ்ந்து இன்புறுவதே.
வேறு நமைச்சல்களுக்கு இடமில்லை.
எல்லா உயிர்களின் ஊற்றுக்கண்ணும்
மனிதம் வழியாகத் திறக்கட்டும்.
அது திக்கெட்டும் பாயட்டும்.
மனிதம் வாழ்க!
மனிதம் சுடர்க!

______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

Tuesday, August 22, 2017

பழந்தமிழ்ப் பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள்

-- நூ.த.லோக சுந்தரம்


பழந்தமிழ்ப் பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள் - நச்சினார்க்கினியர் உரை வழி கண்ட சில . . .


புகுமுன்-முன்குறிப்பு:
பல ஆண்டுகளுக்கு முன் செவ்விய மொழியாம் நம் தமிழுக்கு மதுரைத் திட்டம் எனும் பயன் மிகு மின்னூலகத் திட்டத்திற்காக நூற்றுக்கணக்கான நூல்களை பல்வேறு நூலகங்களில் தேடிய நிலையில் கண்ட பெருநூல் தொகுப்புகளில்,  பல பழம் ஆசிரியர்கள் தம்  தொல்காப்பிய உரைகளும்  கண்டேன்.  அவற்றைப் பார்க்கும் நேரம், அவற்றின் ஊடே உரைவிளக்கும் நிலையில் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகளாக பற்பல  நூல்களின் பாடல்கள் காட்டப்பட்டுள்ளன.  அவற்றில் தற்காலம் யாவரும் தொடர்பு கொள்நிலையில் பலவகை ஊடகங்களில் கிட்டுவன நீங்கலாக,  இவை யாவும் எந்தநூலைச் சார்ந்தவை என என்னால் அறிய இயலா நிலையில் உள்ளன எனப்பட்டனவற்றைத் தொகுக்க தொடங்கினேன்.  ஆனால், எவர்க்கும் எந்நாளும் நேரும் தடைகள் இயற்கையாக வந்து தொகுப்புப் பணி ஒரு சிறு தூரமே சென்றது.   'நச்சினார்க்கு இனியனாரின் மேற்கோள்கள் தொகுப்பு' எனும் தலைப்பின் ஓட்டம் நின்றது. இத்தொகுப்பில் இனம் தெரியாத நூல்களின் பாடல்களுடன் நூற்பாக்களும் அடங்கும். அத்தொகுப்பின்  முன்னோட்டமாக வைத்த பத்தியை இங்குக் காண்க. அதனில் நகைச்சுவை எனும் மெய்ப்பாட்டில் வருவனவற்றால் தமிழ் மொழி மீது சிலருக்கு ஆர்வம் பிறக்கலாம் எனும் கருத்தில் வைக்கும் விடுகதைப்  பாடல்கள் இவை.

வழங்கு பழம் சங்கநூல்களில் விரவாது, தனிப்பாடல்களாகவோ மற்றும் யாதோ ஒரு பிற்கால நூல்தம்  பாடல் வரிகளாகத் தோன்றுவன மட்டும் ஈங்கு படைக்கப் பட்டுள்ளன.  புறத்திரட்டு, பெருந்தொகை,  நீதித்திரட்டு, பன்னூல் திரட்டு, தனிப்பாடல் திரட்டு, சீட்டுக்கவித் திரட்டு என்பன சில திரட்டு நூல்கள். அழிந்துபட்ட பல நூல்களினின்று மேற்கோளாக மேற்கண்ட திரட்டு நூல்களில்  குறையாக உதிர்ந்தனவாகக் கிடைத்த தொன்மை வாய்ந்த பாடல்களைத் தொகுத்து அவற்றின் சிற்சில கீற்றுக்களாவது நமக்குக் கிடைக்கச் செய்து பெரியதொரு தொண்டு புரிந்துள்ளன.  இவ்வகையில் முத்தொள்ளாயிரம், வளையாபதி, போல்வனவற்றின் பாடல்கள் சிற்சிலவாவது கிட்டினமை அறிந்திருப்பீர்.

பல உரைஆசிரியர்தம் மேற்கோள்கள் வழி மட்டும் சேர்மமாகவே காண்பவற்றில் மேற்படி உரையில், நூல்பெயர் மட்டும்  அறிந்து, அவற்றின் தனிப்பாக்களாய் ஆனால் சிறுதொகுதி அளவாவது ஆவன, அவ்வத் தலைப்புகளில் படைக்கப்பட்டு தகடூர் யாத்திரை, பெரும்பொருள்-விளக்கம், ஆசிரியமாலை, குண்டலகேசிப் போல்வன (இவை என்னால்) மதுரை திட்டத்தில் பதியப்பட்டுள்ளன காணலாம்.


நச்சினார்க்கினியர் உரைமேற்கோள் பாடல்கள் திரட்டு - பகுதி 1:
கீழ்க்காணும் பாடல்களில் அடியில் காணும் எண் எந்நூற்பாவின் கீழ் ஆசிரியர் இப்பாடல்களைக் காட்டினார் என்பதனை காட்டும் குறிப்பே.  இப்பாடல்கள் அவை தாங்கு நூல்பெயர் அறியப்பட வேண்டிய தனிப்பாடல்களின் அல்லது அவற்றின் வரிப்பகுதிகளின் தொகுப்பெனவே கொள்க. புகுநிலையோரும் எளிதாகப் படிக்க சந்தி பிரிக்கப்பட்டன.

"நச்சினார்க்கினியனார் உரை வளம்" என பெருந்தொகுப்பாக கண்டன நச்சினார்க்கினியர் உரையுள் காணும் மேற்கோள்கள் சில...

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல்

(1)

அதனில் நூற்பா 176,

"பிறை கவ்வி மலை நடக்கும்"   
          [= யானை (பிசி), ஒப்போடு புணர்ந்த உவமம்]


வினா:  இது எது எவ்வடி ???                           
விடை:  எறும்பி



(2)

நூற்பா 176 அதனிலேயே,
 
"முத்துப்போல் பூத்து முகிழில் கிளிவண்ணம்
நெய்த்(து) ஓர் குருதி நிறம் கொண்டு வித்துதிர்த்து"
          [=கமுகு (பிசி), ஒப்போடு புணர்ந்த உவமம்]


வினா: இது என்ன  எப்பொருளைக் காட்டும் ???
விடை: பாக்கு



(3)

நூற்பா 176 அதனிலேயே,

"நீராடான் பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின் ஊராடு நீரில் காக்கை"
          [=நெருப்பு (பிசி), தோன்றுவது கிளந்த துணிவு]


வினா: இது என்ன பொருள் ???                     
விடை: நெருப்பு



(4)

நூற்பா 180 அதனில்,

"குடத்தலையர் செவ்வாயில் கொம்(பு) எழுந்தார் கையின்
அடக்கிய மூக்கினார்  தாம்"  
          [=குஞ்சரம்-குறிப்புமொழி, எழுத்தாலும் சொல்லலும் பொருள் அரியாவாகி  பொருள் புறத்தே நின்றது] 


வினா:  இது எது எவ்வடி ???
விடை: எறும்பி

 

 "இந்நான்கு  பாடல்களில் வரும் விடுகதைகளுக்கும் தமிழ்மொழி புலமை  குறைவுள்ளோரும் முயல்வதில் தவறில்லை.  விடை காண முயலலாம். எனினும் விடைகளை அங்கேயே விளக்கம் பகுதியில் காண்க. இந்நாளில் பலரும் விடை காண்பது மிக மிக அரிதானதாகும்.  நானும் இடர்ப்பட்டவனே. ஆனாலும் ஆசிரியர் காட்டிய குறிப்புவழி விளக்கம் அளிக்க வல்லவனவற்றை  இங்கு வைத்துள்ளேன்


விளக்கம்:
(1) யானை:
— "பிறை கவ்வி";
வெண்மை நிறத்துடன் மெல்லிய திங்களின் பிறைக் கீற்றுப்போல் வளைந்து தன்  வாயிலிருந்து கிளம்பி வெளியாகி வருதலால்; அதனை யானை தனது  வாயிலால் கவ்வியது போல் தோன்றுதல். இஃது, உருவகம்.
எந்த உயிரினத்தாலும் கவ்வ முடியாத நிலவினை வாயினில் பற்றுவதாகக் காட்டுவது.

— "மலைநடக்கும்";
உருவில் பெரியதாகி கரிய நிறத்துடன் ஓர் சிறு குன்றுபோல் அசைந்த நடையில் வருதலால்; இதனில் இரு முரண் தொடைகளை காணலாம்.
எங்கும் மலையோ குன்றோ  தனது நிலையிலிருந்து நகராத ஒன்றினை நடந்து வருவதாகக் காட்டுவது.




[[வேறு:
தென்னிந்திய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் வேறுபாடுகள் மூன்று:—
(i) அதன் காதுகள்—  ஆப்பிரிக்க யானையின் மேல் காது தலையில் சேரும் இடம் கிடையாக சென்று தலையுடன் இணையும்.  ஆனால் தமிழகத்து (தென்னிந்திய) யானையின்  காதுகள் மனிதரைப்போல் 'ஒ'கர வடிவில் வளைந்த நிலையில் தலையுடன் இணையும்.

(ii) அதன் நெற்றி—  ஆப்பிரிக்க யானையின் நெற்றியின் மேல்பகுதி இரு பக்கமும் பந்துகள் போன்ற அமைப்பு குறைந்தும், சற்றே பின் நோக்கிச் சாய்ந்திருக்கும்.    ஆனால் தமிழகத்து யானையின் நெற்றியில் இருபக்கமும் உருண்ட பந்துகள்போன்ற அமைப்புடன் சாய்த்து நெடிதாக சாய்த்து  உயர்ந்து காணும்.

(iii) அதன் தந்தம்—  ஆப்பிரிக்க இனத்தினில் ஆண் பெண் இரு பாலுக்கும் தந்தம் உண்டு. ஆனால் தமிழக யானைக்கு சில ஆணிற்கு மட்டுமே தந்தம் வளரும்.  மேலும் சில வைரம் பாயாது வளருமாம். பெண்களுக்குக் கிடையா.]]


(2) கமுகு:
— "முத்துப்போல் பூத்து முகிழில் கிளிவண்ணம் நெய்த்(து) ஓர் குருதி நிறம் கொண்டு வித்துதிர்த்து";
பாக்கு மரம்  இதன் பூ  வெண்மையாகப் பூத்து, பின் பச்சைநிற உருண்டை காய்களாகத் திரண்டு, பின் அவையே சிவந்த  நிறத்தை அடைவது பேசப்படுகின்றது.



[[வேறு:
பாக்கு மரம் பூக்கும் காலங்களில் அதன் தோப்பிலிருந்து நல்ல மணம் வீசுமாம். இவ்வாறாக ஒரு மங்களூர் வாழ் பெண்மணி ஒருமுறை எனது கோவை இரயில் பயணம்  ஒன்றில் காட்டியதும் உண்டு.]]


(3) நெருப்பு:
— "ஊராடு  நீரில் காக்கை"; 
நாளும் முத்தீ பேணுதல் தம் தொழிலாகக் கொண்டவர் பார்ப்பனர்.  தீயுடனேயே நீங்கா தொடர்புடையவராதலால் அவர்களின் நெருப்பு பிணைப்பினால்  அவர் பெயரே நெருப்பினுக்கும் ஆகு பெயராகியது.
அதாவது,
பார்ப்பான் என்றால் தீ = நெருப்பு,
நிறம் செய்யான் = சிவந்த நிறமுடையவன்,
நீரும் நெருப்பும் எதிரெதிரானது. ஒன்று இருக்குமிடம் மற்றொன்று கூடாது.  ஒருவேளை இரண்டும் கலந்தால், அதாவது நெருப்பின் மேல் நீர் விழுந்தாலோ அல்லது  நீரில் நெருப்பு விழுந்தாலோ,  நெருப்பு காக்கையாகிவிடுமாம். அதாவது, ஊராடு  நீரில் காக்கை என்பது, சிவப்பு நிறம் மாறி கரிய நிறம் பெற்றுவிடும் என்று காட்டுகின்றது.

 

>[[வேறு:
இந்த நூற்பா மறைமுகமாகப் பார்ப்பனர் பொதுவாக மற்ற இனத்தினருடன்  கலக்கக்கூடாது. அப்படிக் கலந்தால் அவர்கள் கருநிறமுடையவராகி தன் பண்பை முற்றிலும் இழந்துவிடுவார் எனக்காட்ட இயற்றப்பட்டிருக்க வேண்டும்]]


(4) யானை:
— "குடத்தலையர் செவ்வாயில் கொம்(பு) எழுந்தார் கையின் அடக்கிய மூக்கினார்  தாம்";    
யானைகளுக்கு நடு உச்சி தலையின் இடையில் கிண்ணம்போல் இரு குழி ஒன்று உண்டு. தெருக்களில் வரும் யானைகளை விளையாட்டாகச் சிறுவர்களை முதுகில் ஏற்றி அவரிடம் பெறும் சிறு காசுகளை யானை தனது துதிக்கையால் பெற்று தர,  பின் பாகன் பெற்று இந்தக் கிண்ணம்  (குடம்) போன்ற குழியில்தான் போட்டுவைப்பதை நாளும் காணலாம்.


ஆக, குழி உடையத்  தலையை பெற்றது யானை என்பதை 'குடத்தலையன்' என்பது குறிக்கிறது.  தனது சிவந்த வாயிலிருந்து எழும் இரு தந்தங்களை உடையது  என்பதை 'செவ்வாயில் கொம்பெழுந்தான்' என்பது குறிக்கிறது.
யானை அதன் மிகத் திறனுடன் பயன்கொள்ளவல்ல துகிக்கையானால் பல்வேறு பணிகளை செய்து கொள்ளும் திறனுடையது என்பதை  யாவரும் அறிவர்.  அதன் முகத்தின் நுனியில்தான்  அதன் மூக்கு உள்ளது. அதன் வழிதான் உயிர் மூச்சுவிடுகின்றது. அதனால் கையில் அடக்கிய மூக்கினார்  என்றது இந்தப் புதிர். 




________________________________________________________ 








நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________