Wednesday, August 16, 2017

ஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

முன்னுரை:
அண்மையில், கோவையைச் சேர்ந்த அசோக் என்னும் இளைஞர், ஊத்துக்குளியில் இருக்கும் பழங்காலக் கிணறு ஒன்றைப் பார்வையிட்டு அது பற்றிய கருத்துச் சொல்லவேண்டி ஊத்துக்குளிக்கு அழைத்துச் சென்றார். ஊத்துக்குளியில் கைத்தமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் சாலையோரத்திலேயே இந்தக் கிணறு அமைந்துள்ளது. கிணறு பல காலமாக நீரின்றிப், பொறுப்பறியா மக்களால் குப்பை கொட்டுமிடமாக மாற்றப்பட்டு வந்துள்ளது. அண்மையில், இப்பகுதியில், சுற்றுச் சூழல், இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இளைஞர் குழுவொன்று, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பணிகளைச் செய்து வருகின்றது. அக்குழுவினர், மேற்படி கிணற்றைக் கண்ணுற்று, குப்பைகளை முழுதும் அகற்றியதோடு இதன் வரலாறு பற்றி அறிந்து வெளிப்படுத்தும் முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, கிணறு தூய்மையாகக் காணப்படுகிறது. மழை பெய்தபின் சிறிது நீரும் காணப்படுகிறது.

பழங்கிணறு-படிக்கிணறு:
இக்கிணற்றின் ஒட்டுமொத்தத் தோற்றமே இதன் பழமையை எடுத்துக் காட்டுகிறது. கிணறு முழுதும் கல்கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. ”படிக்கிணறு”  (STEP-WELL)  என்னும் வகையைச் சேர்ந்தது.  வடநாட்டில் குஜராத், இராஜஸ்தான், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், கருநாடகத்தில் விஜய நகர அரசின் தலை நகராய் விளங்கிய ஹம்பியிலும் படிக்கிணறு வகைக் கிணறுகள் உள்ளன. மொத்த எண்ணிக்கை  பத்துக்கு மேல் இரா எனத்தெரிகிறது. இவை, எண்ணற்ற படிகளைக்கொண்ட வடிவமைப்புக்கும், அழகான கட்டிடக் கலைக்கும் பேர் பெற்றவை. தமிழகத்தில் இத்தகைய படிக்கிணறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் திருவெள்ளறை என்னும் ஊரில் உள்ள படிக்கிணறு “நாலுமூலைக் கிணறு”  என்றும், “ஸ்வஸ்திகா கிணறு”  என்றும் அழைக்கப்பெறுகின்றது. கல்வெட்டில் இக்கிணறு “மாற்பிடுகு பெருங்கிணறு”  என்று குறிக்கப்படுகிறது. இது பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் கம்பன் அரையன் என்பான் வெட்டுவித்தது. மற்றொன்று மயிலாடுதுறையில் உள்ள குளம் ஒன்று படிக்கிணறு வடிவத்தை ஒத்துள்ளது.

ஹம்பி - படிக்கிணறு
 
மயிலாடுதுறை - படிக்கிணறு வடிவமுள்ள குளம்
 
 

திருவெள்ளறை-மாற்பிடுகு பெருங்கிணறு
  
 
திருவெள்ளறைக் கிணறு - உட்புறத்தோற்றம் 
 

 
ஊத்துக்குளிப் படிக்கிணற்றின் சிறப்பு:
தமிழகத்தில் உள்ள மேற்குறித்த திருவெள்ளறை மாற்பிடுகுப் பெருங்கிணற்றை (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு-பல்லவர் காலம்)  ஒத்த வடிவமைப்பில் ஊத்துக்குளிக் கிணறும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. திருவெள்ளறைக் கிணற்றில் மையத்தில் சதுரமாக உள்ள கிணற்றுப்பகுதியைச் சுற்றிலும் நான்கு பக்கங்களில் படிகளோடு கூடிய நான்கு வழிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளிக் கிணற்றுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்த வேற்றுமை தவிர இரண்டுமே ஒத்த தோற்றத்தைக் கொண்டுள்ளன. இரண்டிலுமே, கிணற்றின் சுற்று வடிவ விளிம்பின் (எல்லைச் சுவர்) மேற்பகுதியில் சதுரப் பரப்பாயில்லாமல் உருள் வடிவம் கொண்டுள்ளது. இதைப் பார்க்கையில், தஞ்சைப் பெருங்கோயிலின் அதிட்டானப்பகுதியில் உள்ள உருள் குமுதப்படையின் தோற்றம் நினைவுக்கு வரும். அழகான கட்டுமானம்.

ஊத்துக்குளிப் படிக்கிணறு-பல தோற்றங்கள்


கிணற்றுக்குள் வேலைப்பாடுள்ள தூண்கள்

திருவெள்ளறைக் கிணற்றின் சுற்றுவடிவ விளிம்புகள் சிற்பங்கள் எவையுமின்றி வெற்று விளிம்புகளாயுள்ளன. ஆனால், ஊத்துக்குளிக் கிணற்றின் விளிம்புகள் சிற்பங்களைக்கொண்டிருக்கின்றன. சதுரப்பகுதியின் நான்கு விளிம்புகளிலும் நான்கு நந்திச் சிற்பங்களும், நுழைவு வாயிலின் விளிம்புகள் இரண்டில் இரண்டு யாளிச் சிற்பங்களும் உள்ளன. இவை தவிர, தரையிலிருந்து முதன்முதலாய்க் கீழிறங்கும் நுழைவுப்பகுதியில் இரண்டு யானைச் சிற்பங்கள் உள்ளன. கிணற்றின் உள்பகுதியில், வேலைப்பாடுகள் அமைந்த இரு தூண்களும் அவற்றின் குறுக்கே விட்டம்போல் கிடத்தப்பட்ட ஒரு கல்லும் சேர்ந்து ஒரு தோரணவாயில் போலத் தோற்றம் அளிக்கும் அமைப்பும் காணப்படுகிறது. இந்தத் தூண் தோரணம், கிணற்றின் மேல் பகுதியில் நீரை இறைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏற்றத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது. ஏற்றத்தின் கிடைமட்டக் கல்துண்டுகள் தூண்களையும் தாண்டி நீண்டுள்ளன. கிணற்றின் இரு பக்கங்களில், தரையிலிருந்து நேரடியாக இறங்கும் வண்ணம் ஆறு பெரிய கற்கள் செருகப்பட்டுள்ளன. தூண்கள், அடிப்பகுதியில் சதுரம், நாகபந்தம், பதினாறு பட்டைகள் கொண்ட சித்திரக் கண்டக் கால்கள், கலசம், தாடி, தாமரை, பலகை ஆகிய கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளன. தூணின் உச்சியில் யாளி முகம் காணப்படுகிறது. தூணின் சதுரப்பகுதியில் அன்னம், சிங்கம், சூலம் போன்ற புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இது போன்ற தூண் வேலைப்பாடு திருவெள்ளறைக் கிணற்றில் இல்லை.

கிணற்றின் உட்புறச் சுவர்கள் முழுதும் ஆங்காங்கே சிறு சிறு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மனித முகம், நின்ற நிலையில் மனித உருவம், வணங்கும் நிலையில் மனித உருவம், லிங்கம், பூதகணத்தின் முகம், பிள்ளையார், குட்டியை ஏந்திய குரங்கு, குத்துக்காலிட்ட நிலையில் சிங்க உருவம், மீன் உருவம், ஆமை உருவம், நாயும் பன்றியும் இணைந்த உருவம், யாளி, தனித்த ஒரு நாயின் உருவம், இரண்டு யானைகள் போரிடும் காட்சி ஆகியவை புடைப்புச் சிற்பங்களாய் உள்ளன.
 
புடைப்புச் சிற்பங்கள் சில







யாளிச் சிற்பம்

கிணற்றின் காலம்:
ஊத்துக்குளிக் கிணறு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. எனவே, நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இளைஞர்களின் நற்பணி:

ஊத்துக்குளிக் கிணறு, முன்பே தொல்லியல் துறை சார்ந்த ஆய்வர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. ஆனால், நானூறு ஆண்டுப்பழமையுள்ள இக்கிணறு பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்திகள் வெளியாகவில்லை என்றே தோன்றுகிறது. கிணற்றின் வரலாற்றுச் சிறப்பு மக்களை எட்டவேண்டும். இதன் சிறப்புணர்ந்து ஊர் மக்கள் இக்கிணற்றை முறையாகப் பாதுகாத்து, எதிர்வரும் சந்ததியினர்க்குக் கொண்டு சேர்க்கவேண்டும்.

கிணறு, பராமரிப்பின்றிப் புறக்கணிக்கப்பட்டுக் குப்பை கொட்டுமிடமாகக் கிடந்த அவல நிலையில், “இயல்வாகை” என்னும் பெயரில் இயங்கும் இளைஞர் அணியினர், பெரும் முயற்சியெடுத்து நான்கைந்து முறை கிணற்றைத் தூய்மைப்படுத்தி இன்றைக்குள்ள நிலைக்குக் கொணர்ந்துள்ளனர். அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்கள் “பசுமை வனம்” என்னும் மற்றொரு குழுவினர் ஆவர். பள்ளிக் குழந்தைகளும் இந்தப் பணியில் சேர்ந்துகொண்டனர் என்பது சிறப்பு. வரலாற்றை வெளிப்படுத்த ஆர்வம் கொண்டுள்ள இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

மேலும் சில தொல்லியல் தடயங்கள்:
கோவை நண்பரும் வரலாற்று ஆர்வலருமான பாஸ்கரன் அவர்கள், தாம் ஊத்துக்குளிப் பகுதியில் பயணம் மேற்கொண்டபோது, கல்திட்டை, கல்வட்டம் ஆகிய பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பதைக் கண்டதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரிடம் தொலைபேசியில் பேசி, அச்சின்னங்கள் இருக்குமிடத்தைப் பற்றி அறிந்துகொண்டபின், அவற்றைப்பார்க்க முடிவு செய்து, என்னை அழைத்துவந்த கோவை அசோக்குடனும் இயல்வாகைக் குழுவைச் சேர்ந்த அசோக், அழகேசுவரி, ஈரோட்டைச் சேர்ந்த, இயற்கை வேளாண்பொருள் அங்காடி நடத்தும்  ஜெகதீசன் ஆகியோருடனும் பயணப்பட்டோம். மாடுகட்டிப்பாளையம் என்னும் ஊர்ப்பகுதியில் மேலே குறிப்பிட்ட பெருங்கற்காலச் சின்னங்களைக் காணுவது நோக்கம். உடன் வந்த அனைவருக்கும் வரலாற்று எச்சங்களாக இன்றும் காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்கள் பற்றிய அறிமுகம் இல்லை. அவர்களுக்கு அவற்றைப் பற்றிய சில செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப் படுகின்றன.

பெருங்கற்காலச் சின்னங்கள்:

இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சங்ககாலம் அல்லது வரலாற்றுக் காலம் என்று குறிப்பிடப்பெறும் காலத்துக்கு முன்னர் தமிழகத்தில் இரும்புப் பயன்பாடு விளங்கிய காலகட்டத்தில் மக்களின் வாழ்வியலில், இறந்தோர் நினைவாக ஈமச் சின்னங்களை அமைத்து வழிபடும் மரபு இருந்துள்ளது. இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் அப்போது இருக்கவில்லை. இறந்தவர்களின் உடலைக் குறிப்பிட்ட ஒரு வெளியில் இடுவதுதான் வழக்கமாக இருந்தது. இயற்கைச் சூழலில் விலங்குகளும், பறவைகளும் உடலைத் தின்று முடித்தபின்னர், எலும்புகளைக் கொணர்ந்து புதைவிடத்தில் புதைப்பர். இறந்தோர் பயன்படுத்திய சிறு பொருள்களையும் அந்தப் புதைவிடத்திலேயே வைப்பர். புதைவிடத்தின் அடையாளம் தெரியவேண்டி அதைச் சுற்றிலும் பெரும் பலகைக் கற்பாறைகளை நான்கு பக்கங்களிலும் நிறுத்தி, அதன் மேற்பகுதியைப் பெரியதொரு பலகைக் கல்லைக் கொண்டு மூடிவிடுவர். முகப்புப் பகுதியில், முழுதும் மூடாமல் வாயில் போன்று திறப்பு இருக்கும்படி அமைத்திருப்பார்கள். இந்த அமைப்பு, கல்திட்டை எனப்படும். தரையின் மேல் பகுதியில் திட்டை போன்று இருப்பதால் இது கல்திட்டை. ஆங்கிலத்தில் “DOLMEN”  என்பார்கள். இறந்தவர்கள் ஆவி வடிவில் இருந்து நன்மையும் வளமும் சேர்ப்பார்கள் என்பதான ஒரு நம்பிக்கையின்பால் எழுந்த வழக்கம். அடுத்து இன்னொரு வகைச் சின்னங்களில், புதைவிடத்தைச் சுற்றிலும் பெரும் பெரும் உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்கி அடையாளப்படுத்துவர். இது கல்வட்டம் எனப்படும். ஆங்கிலத்தில் இதனை “CAIRN CIRCLE”  என்பார்கள். இந்த நினைவுச் சின்னங்களில் பெரிய பெரிய கற்கள் பயன்பட்டமை கருதி இவற்றைப் பெருங்கற்சின்னங்கள் அழைக்கிறார்கள்.

பனியம்பள்ளியில் கல்திட்டைகள்:

மாடுகட்டிப்பாளையத்தை நோக்கி தொட்டம்பட்டி வழியாகப் பயணம் செய்யும்போது, மாடுகட்டிப்பாளையம் ஊரை நெருங்கும் முன்னரே ஒரு சாலைப்பிரிவு காணப்பட்டது. அங்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் பனியம்பள்ளி ஊராட்சி நீருந்து நிலையக் கட்டிடமும் அருகில் உயர்நிலை நீர்த்தொட்டியும் இருந்தன. அந்த இடத்தில் சாலையோரம் இரு கல்திட்டைகள் புலப்பட்டன.

முதல் கல்திட்டை:
முதல் கல்திட்டையில், சாலையிலிருந்து பார்க்கும் நேர்ப்பார்வையில், சாய்ந்த நிலையில் சுவர்போல இணைந்த இரண்டு பலகைக் கற்களும், அதன் மேல் ஒரு மூடு கல்லும் புலப்பட்டன. சற்று அருகில் சென்று அடுத்த பக்கத்தைப் பார்வையிடுகையில் அது, கல்திட்டையின் திறப்பு வாயில் என்பது புலப்பட்டது. மூன்றாவது பக்கத்தைப் பார்க்கையில், அங்கு, சுவர்போல ஒழுங்கான பலகைக் கற்கள் காணப்படவில்லை. சற்று ஒழுங்கற்ற இரண்டு பாறைக்கற்கள் சாய்ந்த நிலையில் காணப்பட்டன. நான்காவது பக்கத்தைச் சரியாகப் பார்க்கவொண்ணா நிலையில் சிறு சிறு வேப்ப மரங்களும் புதர்ச் செடிகளும் மூடியவாறு காணப்பட்டது. கலைந்துபோன நிலையில் கற்கள் இருப்பதாகத் தெரிந்தது.

 
முதல் கல்திட்டை

முதல் கல்திட்டை-வேறு தோற்றங்கள்


கல்திட்டைக்குள் ஒரு நடுகல்:
முகப்பிலுள்ள வாயிலுக்கருகில் சென்று பார்த்தால் ஒரு வியப்பான காட்சி. ஆண் உருவம் ஒன்றும், பெண் உருவம் ஒன்றும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட ஒரு நடுகல் சிற்பத்தின்  அழகான தோற்றம். ஆணின் உருவம், இடப்புறமாகக் கொண்டை முடிந்து, மீசையுடன் காணப்படுகிறது. செவிகளிலும், மார்பிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளிலும் தோளிலும் வளைகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு உள்ளது. வலது கையில் ஒரு நீண்ட வாளினைத் தரையில் ஊன்றியவாறு வீரன் நிற்கிறான். அவனது இடையிலும் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனது இடது கை தொங்கிய நிலையில் காணப்படுகிறது. விரல்களில் மோதிரங்கள் தெரிகின்றன. பெண்ணின் உருவம் வலப்புறமாகக் கொண்டை முடிந்து தலையில் அணிகலன்களோடு காணப்படுகிறது. கழுத்திலும் இடையிலும் அணிகலன்கள் உள்ளன. கைகளில் வளைகள் உள்ளன. கைகளில் எதையும் ஏந்தியிருப்பதாகத் தெரியவில்லை. வலது கையை மடக்கியவாறு உயர்த்தியும், இடதுகையை நேராகத் தொங்கவிட்டும் நிற்கிறாள். இடையாடை கீழே கால்வரை காணப்படுகிறது. கால்களில் கழல்கள் உள்ளன. வீரனுக்கு மட்டும் எடுக்கப்பட்ட நடுகல்லாக இருப்பின் பெண்ணின் கைகளில் மதுக்குடுவை ஒன்று காணப்படுவது வழக்கம். இங்கு அவ்வாறில்லாமல் ஆண், பெண் இருவர் சிற்பங்கள் ஒன்றாகக் காணப்படுவதால், இது ஒரு சதிக்கல்லாக இருக்கக்கூடும். அல்லது மனைவியோடு காட்டப்பெற்ற வீரனின் நடுகல்லாக இருக்கக்கூடும்.
கல்திட்டைக்குள் ஒரு நடுகல் சிற்பம்


இரண்டாம் கல்திட்டை:
இரண்டாம் கல்திட்டையிலும் நான்குபுறமும் பலகைக்கல் சுவர்களும், முன்புறம் திறப்பு வாயிலும் உள்ளன. இங்கும் ஒரு நடுகல் சிற்பம் உள்ளது. அது வெளிப்புறத்தில் சாய்க்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண், பெண் உருவங்கள் உள்ளன. உருவங்கள் தெளிவாக இல்லை. ஆடை, அணிகள் புலப்படுகின்றன. பெண்ணின் இடப்புறம் காலடியில் ஒரு சிறிய மனித உருவம்போல் தோன்றுகிறது. அது ஒரு குழந்தையின் உருவமாயிருக்குமோ என்னும் ஓர் ஐயத்தை ஏற்படுத்துகிறது. 

இரண்டாம் கல்திட்டையின் சில தோற்றங்கள்
       
இரண்டாம் கல்திட்டை அருகில் உள்ள நடுகல் சிற்பம்


மாடுகட்டிப்பாளையம் பெருங்கற்காலச் சின்னங்கள்:
அடுத்து, பனியம்பள்ளியிலிருந்து மாடுகட்டிப்பாளையம் ஊரை நோக்கிப் பயணப்பட்டோம். ஓரிரு கி.மீ. தொலைவில் ஊர் இருந்தது. அங்கு சிலரிடம் கல்வட்ட அமைப்பை எடுத்துச் சொல்லி, அவ்வாறு ஏதேனும் கற்சின்னங்கள் உள்ளனவா எனக்கேட்டோம். சிலர் சாலையிலிருந்து சற்றுத்தள்ளியிருந்த இரயில் பாதைக்கருகில் பெருங்கற்கள் காணப்படுவதாகக் கூறவே அங்கு சென்று பார்த்தோம். கல்வட்டங்கள் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இருந்தன. இரயில் பாதை அமைக்கும் பணியில் நிறையக் கற்கள் கலைக்கப்பட்டுச் சிதறல்களாக இருந்தன. பெரும்பாலும் கல்வட்டங்களில் காணப்பெறும் கற்கள், ஓர் ஒழுங்கு முறையில் வடிக்கப்பட்ட உருண்டைக் கற்களாக அமையும்   இங்கு அவ்வாறான உருண்டைக் கற்கள் காணப்படவில்லை. ஒழுங்கற்ற வடிவில் பெருங்கற்கள் இருந்தன. கல்வட்டத்தின் ஒரு முழுத்தோற்றம் அங்கு எங்களுக்குக் கிட்டவில்லை.
 
இரயில் பாதைக்கருகில் பெருங்கற்களின் எச்சங்கள்

 
 கல்வட்டங்கள்:
அங்கிருந்து அகன்று, விஜயமங்கலம் சாலையில் சற்றுத் தொலைவு சென்றதுமே, சாலையோரம் வலது புறத்தில் ஒரு காட்சி எங்களைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. சாலையோர வேலிக்கப்பால், செடிகளோ புதர்களோ இன்றிச் செம்மண் நிலம் ஒன்று கண்முன்னால் பரந்துகிடந்தது. அந்த நிலத்தில் கல்வட்டங்கள் இரண்டு மூன்று, சிதையாமல் வட்ட வடிவத்துடன் அருமையாகத் தோற்றமளித்தன. அந்த நிலப்பரப்பிற்குள் செல்ல இயலாதவாறு தார்ச்சாலைக்கருகில் நெடுகவும் நெருக்கமான வேலி இருந்தது. எனவே, நாங்கள் வேலியை ஒட்டி நடந்துசென்று ஒரு வீட்டை அடைந்தோம். வீட்டு உடைமையாளர்தாம் அந்த நிலத்துக்கு உடையவரும். அவரிடம் பேசி, அவருடைய ஒப்புதலோடு அவர் திறந்துவிட்ட வேலித்திறப்பினுள் நுழைந்துசென்று கல்வட்டங்களைப் பார்வையிட்டோம்.
கல்வட்டங்கள்


 ஆட்டுப்பட்டியின் அழகான தோற்றம்

 மூன்று கல்வட்டங்கள் நல்ல நிலையிலும், ஒரு கல்வட்டம் அரைவட்டப்பகுதியாகச் சிதைவுற்றும், மற்றொன்று கற்கள் சிதறிய நிலையிலும் காணப்பட்டன. நிலத்தில், ஒரு  ஆட்டுப்பட்டி அழகாகக் காட்சியளித்தது. நிலத்து உடைமையாளர் பெயர் மகேசுவரன். அவருடைய பாட்டன் காலத்திலிருந்து அந்தக் கல்வட்டங்கள் இருந்துள்ளன என்றும், நிலத்தைப் பண்படுத்தும் ஒவ்வொரு முறையும் கல்வட்ட அமைப்புகளைச் சிதைக்காமல் விட்டுவைத்திருப்பதாகவும் அவர் கூறியது எங்களுக்கு மிக வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளித்தது. அத்தி பூத்தாற்போல் ஒரு சிலர் இதுபோன்ற நன்மையாளர்களாயிருக்கின்றனர்.
 
கல்வட்டங்கள்

 
தொடர்ந்து இக்கல்வட்டங்களை இன்றுள்ளவாறே பேணவேண்டும் என்னும் கோரிக்கையோடு அவருக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லி விடைபெற்றோம்.
___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

No comments:

Post a Comment