Saturday, June 30, 2018

சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள்


——   முனைவர் ச.கண்மணி கணேசன்.


முன்னுரை:
இளங்கோவடிகள் காட்டும் வழிபாட்டிடங்களின் வகைகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.  சிலப்பதிகாரச் செய்திகளே ஆய்வெல்லை ஆகும்.
"ஓங்குயர் கூடல் ஊர்துயில் எடுப்ப
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்
……………………………………………………….
காலை முரசம் கனைகுரல் இயம்ப "
-(ஊர்காண் காதை -அடி.- 6-14 ) என்னும் பகுதியிலுள்ள கோயில்நியமம்நகரம்கோட்டம் முதலிய வழிபாட்டிடங்களின் வகைமைக்குரிய காரணங்களையும்அவற்றின் சிறப்புத் தன்மைகளையும் விதந்தோதுவதே ஆய்வின் போக்காக அமைகிறது.

நிகண்டுகள் முதல்நிலை ஆதாரங்களாக அமைகின்றனசிலப்பதிகாரத்திற்கு முன்னர் தோன்றிய  எட்டுத்தொகையும் ,பத்துப்பாட்டும்பின்னர் தோன்றிய மணிமேகலையும்  துணை நிலை ஆதாரங்களாக அமைகின்றனஉரையாசிரியர்  கருத்துக்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாகின்றன.  வரலாற்றுமுறை ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.  பண்டைத் தமிழகத்து வழிபாட்டிடங்கள் தாம் அமைந்த இடத்தையும்நிருமித்த சமூகத்தையும்அங்கு பின்பற்றிய வழிபாட்டு முறையையும் அடியொட்டி வகைப்பட்டன.

நகர்:
நகர் என்பது அரசுக்குச் சொந்தமான நிலத்தில் மன்னன்  கட்டிய வழிபாட்டிடம் ஆகும்.

கழகத் தமிழகராதி  நகர் என்ற சொல்லுக்கு ' அரசுக்குச் சொந்தமான நிலம்என்ற பொருள் தருகிறது. (பார்க்க -துணை நூற் பட்டியல்).  பிங்கலம் நகர்படு திரவியம் ஐந்தில் ஒன்று வேந்தன் என்கிறது.(தமிழ் நிகண்டுகள்-.-312) உரிச்சொல் நிகண்டும் அங்ஙனமே நகர்படு திரவியம் ஐந்தில் ஒன்று அரசன் என்கிறது.(தமிழ் நிகண்டுகள் -.-490)  எனவே அரசன் பொது மக்களுக்காகக் கட்டிய வழிபாட்டிடம் நகர் என்று அழைக்கப் பட்டதெனலாம். 

மதுரை மாநகரில் இருந்த மேழி வலனுயர்த்தோன் வெள்ளை நகரில் காலை முரசொலி சங்கொலியுடன்  கேட்டது. (மேலது)

பரிபாடல் திரட்டின் முதல் பாடல்
"வரைகெழு செல்வன் நகர் " (அடி -49), 
"பூமுடி நாகர் நகர்"  (அடி -59),
"குளவாய் அமர்ந்தான் நகர் "  (அடி -63) ;
என்று மதுரையில் ஆதிசேஷனுக்கமைந்த  வழிபாட்டிடத்தைச் சுட்டுகிறது.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்  நகர்களை விதந்தோதுகிறார். (அடி.-227-249).

நகர்களில் ஆண்டலைக்கொடி ஏற்றினர் ;நெய்யோடு ஐயவி அப்பினர்கொழுமலர் சிதறினர்தம் வாயினின்று ஒலி எழாதவாறு வழிபட்டனர்தம்முள் மாறுபட்ட நிறத்தை உடைய இரண்டு உடையை உடுத்தினர்சிவந்த நூலைக் கையில் காப்பாகக் காட்டினர்வெண்பொரி சிதறினர் ; கொழுவிய கிடாயினை வெட்டி அதன் குருதியோடு தூய வெள்ளரிசியைக் கலந்து பலியாக இட்டனர்பல பிரப்பு இட்டனர் ; பசுமஞ்சளோடு மணப்பொருட்களைத் தெளித்தனர் ; செவ்வலரி மாலையையும் ,குளிர்ச்சி பொருந்திய பிற நறுமலர் மாலைகளையும் இணை ஒக்க அறுத்துத் தொங்க விட்டனர்மலைப்புறத்து ஊர்களையெல்லாம் வாழ்த்தினர்நறும்புகை காட்டினர்குறிஞ்சிபாடினர்பல இசைக்கருவிகளையும் முழங்கினர்இறைப்பொருள் பற்றி முரண்பட்ட கருத்துடையோர் அஞ்சும் படியாக குறமகள் தன்மேல் முருகன் அருள் வந்து ஆடும் அகன்ற வழிபாட்டிடங்கள்; "முருகாற்றுப்படுத்த உருகெழு வியன்நகர்என்று நக்கீரர் விளக்கியுள்ளார்.  
திருப்பரங்குன்றத்தை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில்  தலைமைப்படுத்திப் பாடுங்கால் நகர் என்ற சொல்லை எடுத்தாளவில்லைஎனினும் அது நகர் என்னும் வகையினதாகும் என்பது பரிபாடல் அடிகளால் தெளிவாகிறது.

செவ்வேளைப் பற்றிப் பாடும் 8வது பரிபாடல் 'திருமாலும்சிவபெருமானும்பிரமனும்பன்னிரு ஆதித்தரும்அசுவனி மருத்துவர் இருவரும்எட்டு வசுக்களும்பதினோரு உருத்திரரும்எட்டு திக்குப் பாலகரும்பிற தேவர்களும்அசுரரும்முனிவரும் உன்னைக் காணத் திருப்பரங்குன்றம் வருவதால் அது இமயத்தை ஒக்கும் என்று தொடங்குகிறது.மதுரையிலிருந்து  செல்லும் வழியில் திரளான பெண்கள் வழிபாட்டுக்குரிய சந்தனமும்தூபமும்விளக்கும்மலர்களும்பொன்னாலான கயிறும்முழவும் ,மணியும்மயிலும்கோடரியும்பிணிமுகமும் ஏந்திச் சென்று தொழுதனர்ஆடுவோர் கொட்டும்தாளவொலியும்பாடுவோர் ஒலியும்எதிரொலியும் சேர்ந்து முழங்கும், "கடம்பமர் செல்வன் கடிநகர் " (அடி -126) என்று நல்லந்துவனார் பாடியுள்ளார்.

குன்றம் பூதனாரின்  18வது பரிபாடல் திருப்பரங்குன்றம் இமயம் போலப் புகழ் பெற்றது ;குன்றின்  சிகரம் முகில் முழங்கி மின்னப்படுதலால் முருகப் பெருமானின் ஓடையுடைய  களிற்றை ஒக்கும்குன்றிலுள்ள எழுதெழில் அம்பலம் காமவேளின் படைக்கலக் கொட்டிலை ஒக்கும் என்று போற்றுங்கால், "காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர்" (அடி . 28&29) என்கிறது.

நப்பண்ணனாரின்  19ம் பரிபாடல் மதுரை மக்கள் திரளாக ஆடை அணிகலன்களோடு தலையில் மலரும் சூடி குதிரையின் மேலும் , தேரிலும் ஏறி வந்தமையைக் கூறிபாண்டியன் மகளிரோடும்அமைச்சர்களோடும்மக்களோடும் குன்றில் ஏறி வலம் வந்த காட்சி விண்மீன்கள் சூழத் திங்கள் மேருவை வலம் வந்தமையை ஒத்திருந்தது என்கிறது.
".........................நெடியோய் நீ மேய
கடிநகர் சூழ் நுவலுங்கால் ",
என்னுமிடத்து நகர் என்னும் வகையினதாகவே
திருப்பரங்குன்றம் சுட்டப்படுகிறது.

நகர் என்னும் வகையிலமைந்த வழிபாட்டிடங்கள் மதுரைதிருப்பரங்குன்றம்காஞ்சி ஆகிய ஊர்களிலும்பிற ஊர்களிலும்  இருந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன.

பலராமனுக்குரிய  நகரும்ஆதிசேடனுக்குரிய நகரும்மதுரையில் இருந்தன. (கருத்து மேலது)

திருப்பரங்குன்றில் முருகனுக்குரிய நகர் இருந்தது. (கருத்து மேலது)

பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்  காஞ்சி  மாநகரில் சுடுமண்ணால் கட்டப்பட்ட நெடுநகர் தாமரைப்பொகுட்டு  போலக் காட்சியளித்ததென்கிறார் .(அடி .-404-405)

மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார்செம்பியன்றன்ன  செஞ்சுவர் புனைந்து - கயம் கண்டன்ன நகர் இருந்ததென்கிறார்அது சமணர் வழிபாட்டிடம் என்றும் குறிப்பிடுகிறார். (அடி .-475-488)

மருதனிளநாகனார் மருதக்கலியில், "கடவுட் கடிநகர்பற்றிப் பேசுகிறார். (பா-84-அடி -6)

பாலை பாடிய பெருங்கடுங்கோ "அணங்குடை நகரின் மணந்த பூ ".... பற்றிப் பேசுகிறார். (அகநானூறு -பா -99) இவர் கொங்கு நாட்டுக் கரூரை ஆண்ட சேர மன்னன் ஆதலால் இவர் பாடும் நகர் அவரது தலைநகரில் இருந்தது எனல் தகும்.

வெறி பாடிய காமக்கண்ணியார் முருகனுக்குரிய வளநகரில் களம் நன்கு இழைத்துகண்ணி  சூட்டிபாடிபலிகொடுத்துசெந்தினையைக் குருதியோடு கலந்து தூவி முருகு ஆற்றுப்படுத்ததாகப்  பாடியுள்ளார். (அகநானூறு-பா-22-அடி.-10)

நக்கீரர் ஊணூர்க்கு உம்பர் இருந்த மருங்கூர்ப் பட்டினத்தில் விழவுறு  திருநகர் (பாடபேதம்இருந்ததாகப் பாடியுள்ளார்.(அகநானூறு -227)
1.1.2.9 விற்றூற்று  மூதெயினனார், "கடிநகர் புனைந்து கடவுள் பேணியதாகப் பாடியுள்ளார். (அகநானூறு -136)

கோயில்:
கோயில் என்பது வேத நெறிப்படி தீமுறை வழிபாடு நிகழ்ந்த இடமாகும்.

புகார் நகரில் இந்திர விழா தொடங்கிய போதுபிறவா யாக்கைப் பெரியோன் கோயிலிலும்அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலிலும் வால் வளை மேனி வாலியோன் கோயிலிலும்நீலமேனி நெடியோன் கோயிலிலும் நான்மறை மரபின் தீமுறை நிகழ்ந்தன என்கிறார் இளங்கோவடிகள். (இந்திர விழவு ஊரெடுத்த காதை -அடி.141-175)

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கோயில் என்ற சொல்லைப்  பயன்படுத்தவில்லைஆனால்  வேத மரபைப் பின்பற்றிய வழிபாட்டிடங்களைத் தனியாகப் பட்டியலிட்டுள்ளார்அலைவாய்ஆவினன்குடிஏரகம் ஆகிய மூன்று இடங்களிலும் வேத முறைப்படி வழிபாடு நிகழ்ந்தது.

திருச் சீரலைவாய்:
அலைவாயில் எழுந்தருளிய முருகனின் தோற்ற வருணனை இக்கருத்தை வெளிப்படுத்துகிறது.(அடி .77-124).அவன் ஆறு முகங்களுடன்   பன்னிரு கைகளுடன் காட்சியளித்தான்மூன்றாவது முகம்  வேதநெறிப்பட்ட தீமுறை வழிபாட்டை நோக்கியதுபல இசைக்கருவிகளும் சேர்ந்து விண்ணதிர இன்னிசை எழுப்பின.  வெண்சங்கு முழங்கியதுதிருச்சீரலைவாயில் முருகன் காட்சியளித்த பெற்றியையும்அங்கு வேத நெறிப்படி தீமுறை நிகழ்ந்த தன்மையையும் நக்கீரர் வருணிக்கிறார்.

திரு ஆவினன்குடி:
ஆவினன்குடியில் எழுந்தருளிய முருகனை வழிபடநூறு வேள்விகளைச் செய்த இந்திரனும்தன் ஐராவதத்திலேறி  முருகனை வழிபடவந்தான்.முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்தனர்.அங்கு முருகன் குற்றமில்லாத கற்புடைய மடந்தையுடன் எழுந்தருளியிருந்தான்.(அடி.- 125-175). வேத மரபைப் பின்பற்றிய இந்திரனும் தேவர்களும் வந்து வணங்கிய தலமாதலால் ஆவினன்குடி வேதமரபைப் பின்பற்றிய கோயில் என்பது வெளிப்படை.

திருவேரகம்:
ஏரகத்தில் எழுந்தருளிய முருகனை வழிபட அறுவகைத் தொழிலும் வழுவாமல்உயர்குடிப் பிறந்துபிரம்மசரியப்  பேராண்மை மிகுந்துமுத்தீப் பேணிஇருபிறப்புடைய அந்தணர் வந்தனர்பூணூல் அணிந்து புலராத ஆடையுடன் தலைமேல் கைகுவித்துஆறெழுத்து மந்திரத்தை  வேதநெறி வழுவாமல்  ஓதி, மலர்தூவினர். (அடி.- 176-189)
                                
கோயில்கள் தலைநகரங்களிலும் பிற  ஊர்களிலும் இருந்தன. நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயில் பாண்டியனின் தலைநகர் மதுரையில் இருந்ததாக இளங்கோவடிகள்  பாடியுள்ளார். (மேலது)

அவரே பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்அறுமுகச் செவ்வேள் கோயில்வால்வளைமேனி வாலியோன் கோயில்நீலமேனி நெடியோன்  கோயில்மாலை வெண்குடை மன்னவன் கோயில் என  ஐந்து  கோயில்கள் புகாரில் இருந்ததாகவும் பாடியுள்ளார். (இந்திர விழவு ஊரெடுத்த காதை அடி.-141-175)

திருமுருகாற்றுப்படை மூன்று கோயில்களை வரிசைப்படுத்துகிறது:
அலைவாய் இன்றைய திருச்செந்தூர் ஆகும்கடற்கரையில் அமைந்துள்ள இப்பதியில் பண்டுதொட்டு முருகன்கோயில் ஒன்று நிலவுகிறதுஅகநானூறு (பா.266), புறநானூறு (பா.55), பரிபாடல் (பா.5), இறையனார் அகப்பொருளின் 7ம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை விளக்கத்தின் மேற்கோள் பாதொல்காப்பியக் களவியல் 23ம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரைவிளக்கத்தின் மேற்கோள் பா அனைத்தும் அலைவாயைச் சுட்டுகின்றன.

ஆவினன்குடி இன்றைய பழனித்தலம் ஆகும்இன்றும் பழனிக்கருகில் ஆவிக்குடி என்ற ஊரொன்று உள்ளது.

பண்டைத் திருவேரகம் எங்குள்ளது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.சுவாமி மலை என்றும் ,மலை நாட்டகத்தே ஓர் பதி  என்றும் ,தென் கன்னட மாவட்டத்தில் புத்தூர் வட்டத்திலுள்ள குமார பர்வதம் என்றும் கூறுவோர் உளர் (திருப்புகழ் - பா.-217, பத்துப்பாட்டு - முதற்பகுதிபெருமழைப்புலவர்.பொ.வே.சோமசுந்தரனார்-..-திருமுருகு.-.-77& இராசமாணிக்கனார்மா.- பத்துப்பாட்டாராய்ச்சி ப.-130).
கோட்டத்தில் தீமுறை வழிபாடு நிகழ்ந்தால் அது கோயில் என்றே அழைக்கப்பட்டது.   

மலைமகளிர் முதன்முதலில் கண்ணகியை வழிபட்ட இடம் மங்கலமடந்தை கோட்டம் என்று அழைக்கப்பட்டது.அப்போது அங்கு வேதமரபு பின்பற்றப் படவில்லை.மலைவளம் காண வந்த செங்குட்டுவன் இமயக் கல்லெடுத்து வந்து கங்கையில் நீர்ப்படை செய்து அக்கோட்டத்தில் கடவுள் மங்கலம் செய்தான்.மாடல மறையோன் அறிவுறுத்த நூன்மரபின்படி அக்கோட்டத்தில் வேள்விச்சாலை அமைத்துத் தீமுறை செய்ததால் அவ்விடத்திற்கு தேவந்தியும் ,ஐயையும் ,காவற்பெண்டும் வந்துசேர்ந்த பொழுது இளங்கோவடிகள் அக்கோட்டத்தைக் "கோமகள் தன் கோயில்” என்று குறிப்பிடுகிறார்.(வாழ்த்துக்காதை -உரைப்பாட்டு மடை)

ஆனால் வேள்வி முடித்து ,கண்ணகி வரந்தருங்கால்வேத மரபினின்று மாறி தேவந்தியை நித்தல் விழாவணியாக பூவும் புகையும் மேவிய விரையும் காட்ட ஏவியபோது "பத்தினிக்கோட்டம்என்றே உரைக்கிறார் (வரந்தரு காதை-அடி -151).

இதனால் கோயில் நடைமுறைக்கும் கோட்ட நடைமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடு புலப்படுகிறது.

கோட்டம்:
கோட்டங்கள் தலைநகரங்களிலும்பிற ஊர்களிலும் இருந்தனஅங்கு விழா அறைந்துதூண் நாட்டிக் கொடியேற்றினர்இசைக்கருவிகளை முழக்கிபூப்பலி செய்துகாப்புக்  கடை நிறுத்திமலர் தூவிநறும்புகை காட்டி ,மணி முழக்கி வழிபாடு நடந்ததுதெய்வத்தின் கோலத்தைப் புனைந்தும்  வழிபாடு நடத்தினர்தெய்வமேறப்பெற்றும் ஆடினர். ஈமப் புறங்காட்டிலும்  கோட்டங்கள்  இருந்தன.

சிலப்பதிகாரம் புகார் நகரில்  பத்து கோட்டங்களும் ,செங்கோட்டு உயர் வரையில் மங்கல மடந்தை கோட்டமும்கொடும்பைக்குத் தெற்கே மதுரை செல்லும் வழியில் ஐயை கோட்டமும்மதுரைக்குள்ளே கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்இன்னொரு தேவகோட்டமும்  இருந்ததாகக் கூறுகிறது.

 இந்திர விழா தொடங்கிய போது வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசினைக் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி விழாவை அறிவித்தனர்.வால் வெண் களிற்றரசு என்ற ஐராவதக் கோட்டத்தில் விழாவிற்குரிய தூணை நாட்டினர்தருநிலைக் கோட்டம் என்ற கற்பகத்தருக்கோட்டத்தில்  விழாவிற்குரிய மங்கல நெடுங்கொடியை வானுற ஏற்றினர். (இந்திர விழவு ஊரெடுத்த காதை -அடி .-141-175)

இளங்கோவடிகள் தேவந்தியின் வாழ்க்கை பற்றிப் பேசும் போது (கனாத்திறம் உரைத்த காதை -அடி .-5-15) மாலதி பால் விக்கிச் சோர்ந்த பாலகனின் உடலோடு அமரர் தருக்கோட்டம் ,வெள்யானைக் கோட்டம் ,புகர் வெள்ளை நாகர் கோட்டம் ,பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம்ஊர்க்கோட்டம்வேற்கோட்டம்வச்சிரக் கோட்டம்புறம்பணையான் வாழ் கோட்டம்நிக்கந்தக் கோட்டம்நிலாக்கோட்டம் முதலிய கோட்டங்கட்குச் சென்று  ஏங்கியழுது பின் பாசண்டச்சாத்தன் கோட்டத்தில் பாடு கிடந்தாள் என்கிறார்.

மலைமகளிர் முதன்முதலில் கண்ணகியை வழிபட்ட இடம் மங்கலமடந்தை கோட்டம் எனப்படுகிறது.(வரந்தரு காதை அ .-88) குரவை ஆடும் போதும்மகளிர் கண்ணகியை வழிபடுகின்றனர்தொண்டகம் தொட்டுசிறுபறை தொட்டுகோடு வாய் வைத்து கொடுமணி இயக்கிகுறிஞ்சி பாடிநறும்புகை எடுத்துபூப்பலி செய்துகாப்புக்கடை நிறுத்திவிரவு மலர் தூவிப் பரவினர். (குன்றக்குரவை -அடி . -11-22)

கோவலனும் கண்ணகியும் கவுந்தியுடன் மதுரை செல்லும் வழியில் ஐயை கோட்டத்தில் எயினர் கொற்றவைக்கு வழிபாடு நிகழ்த்தியமையைக் கண்டனர். (வேட்டுவவரி-அடி.-4-74) ஒரு பெண்ணுக்குக் கொற்றவையின்  கோலத்தைப் புனைந்து போற்றினர்அத்துடன் சாலினி தெய்வமேறப்பெற்று  வருவதுரைத்தாள்.
மதுரையில் கோழிச் சேவல் கொடியோன் கோட்டத்தில் காலை முரசம் ஒலித்தது. (ஊர்மேலது)

கோவலன் பொற்கொல்லனிடம் தன் மனைவியின் காற்சிலம்பை விலையிடக் கொடுத்து விட்டுத் தான் ஒரு தேவகோட்டச் சிறையகத்துக் காத்திருந்தான்.(கொலைக்களக்காதை - .- 126)

புறநானூறு முருகன் கோட்டம் பற்றிப் பேசுகிறது.(பா.-299)

சுடுகாட்டில் இருந்த வழிபாட்டிடங்கள் கோட்டங்கள் என்று பெயர் பெற்றமையை மணிமேகலை கூறுகிறதுபீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றிலுடன் காடமர் செல்வியின் கழிபெருங்கோட்டமும்குறியவும்நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்அரசர்க்கு அமைந்த ஆயிரம் கோட்டமும் புகார் நகரத்து ஈமப்புறங்காட்டில் இருந்தன என்கிறார் சாத்தனார். (சக்கர வாளக்கோட்டம் உரைத்த காதைஅடி.-51-166).

சார்ங்கலனின் தாய் கோதமை அவனது இறந்த உடலைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டின் எயிற்புறத்தில் சம்பாபதித்  தெய்வத்தை அழைத்து முறையிட்டுத் தன் மகனுக்கு உயிரை மீட்டுத் தருமாறு   வேண்டுகிறாள்தெய்வங்கள் எல்லாம் தோன்றி அவள் வேண்டுதலை  நிறைவேற்ற இயலாது என்று கூறிய கோட்டமே சக்கரவாளக் கோட்டம் ஆனது.(சக்கர.-அடி .-176-182)

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கோட்டம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லைஆனால் "ஊரூர் கொண்ட சீர்கெழு விழவுவேலன் தைஇய வெறியயர்களன்காடுகாகவின் பெறுதுருத்திவேறுபல் வைப்பு,  முச்சந்திநாற்சந்திஐஞ்சந்திஆற்றின்கரைகுளக்கரைபுதுப்பூங்கடம்புமன்றம்பொதியில்கந்துடை நிலை  என்று நீளமாக அவர் வரிசைப்படுத்தும் இடங்கள் கோட்டங்கள் என்று சொல்லக்கூடியனவாய் உள்ளன. (அடி .-220 -226)

மருதக் கலியில் மருதனிள நாகனார் "புத்தேளிர் கோட்டம்பற்றிப் பேசுகிறார் (கலித்தொகை - பா.- 82 - அடி - 4 ). தலைவி தன் மகனை சேடியுடன் தேவர் கோட்டத்திற்கு அனுப்புகிறாள்.

முல்லைக்கலியில் தலைவியின் அழகை விதந்தோதும் பகுதியில் - அவள் மடையடும் பாலொடு காமன் கோட்டம் புகுந்தால் ;காமன் படையிடுவான் என்று பாடியுள்ளான் சோழன் நல்லுருத்திரன்.(கலித்தொகை -பா. -109 -அடி -20)

பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்  புகார் நகரில் இருந்த  நிலாக்கோட்டம் பற்றிப் பாடியுள்ளார். (அடி .34-36) சிலப்பதிகாரம் குறிப்பிடும் சோமகுண்டம் ,சூரியகுண்டம் என்னும் இரண்டு நீர்த்துறைகளும் இங்கு "இரு காமத்து இணை ஏரிஎனச் சுட்டப்பட்டுள்ளமை அதன் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. (அடி .-38-39)   

கோட்டங்களில் விலக்கான பெண்கள் கூட ஒதுங்கி இருந்தனர்பிணத்துடன் கூட செல்லக்கூடிய வழிபாட்டிடங்களாக  அவை இருந்தன.

கலம்தொடா மகளிர் முருகன்கோட்டத்தில் ஒதுங்கி இருந்தது போலக் குதிரைகள் ஒதுங்கி நின்றன என்ற உவமை கோட்டத்தில் விலக்கான பெண்களும் ஒதுங்கி இருப்பதுண்டு எனப் புறநானூறு காட்டுகிறது. (மேலது)

தேவந்தியின் கணவனாகிய பாசண்டச் சாத்தன் வரலாறு கூறுங்கால்மாலதி என்ற பார்ப்பனத்தி மூத்தாள் குழவிக்குப் பாலூட்டபால்விக்கிப்  பாலகன் தான்சோரபார்ப்பானொடு மனையாள் தன் மேல் சுமத்தப் போகும் பழிக்கு அஞ்சி அவள் இறந்த குழந்தையின் உடலோடு பல கோட்டங்கட்குச் சென்று அழுது முறையிட்டு இறுதியாக பாசண்டச் சாத்தன் கோயிலில் பாடு கிடந்தாள். (கனாத்திறம் உரைத்த காதை-அடி.-5-15) சடலத்தோடும் செல்லக் கூடிய வழிபாட்டு  இடமாக கோட்டம் இருந்தது என்பது இதனால் தெரிகிறது.

நியமம்:
நியமம் என்ற சொல்லுக்கு திவாகர  நிகண்டு 'செய்கடன்' (தமிழ் நிகண்டுகள்-.-124-சூத்.-1750),' நியதி' (மேலது -.151-சூத் .-2200),' அங்காடி' (மேலது-.-158), 'தெய்வம் வழிபடல்' (சூத். -2412-.184) என்று 4 பொருள்களைத்  தருகிறதுபிங்கலம்; 'அட்டாங்க யோகத்துள் ஒன்றுஎன்றும் (சூத். -419-.314),' தெய்வம் வழிபடல்என்றும்  (சூத். - 421- .314),' கடைவீதிஎன்றும் (சூத்.-3727-.-429) பொருள் தருகிறதுகைலாச நிகண்டு சூளாமணி;' கூலம் பெறும் அங்காடிஎன்கிறதுதெய்வம் வழிபடல் ,நியதி , செய்கடன் ,அட்டாங்க யோகத்துள் ஒன்று என்னும் பொருட்கள் நான்கையும் பார்க்கும் போது ஆகம முறைப்படி மக்கள் வழிபாடு செய்த இடமே நியமம் எனலாம்.

நியமம் என்பது அந்தணரும்அரசரும் அல்லாதார் கட்டிய வழிபாட்டிடம் ஆகும்.அங்கு வேள்வி நிகழ்த்திக் கடவுள் மங்கலம் செய்யும் வழக்கமிருந்தது.

கோசர் பண்டைத் தமிழகத்து மதுரையை அடுத்த செல்லூரின்  கிழக்கே ஒரு நியமத்தை நிறுவினர் .அங்கு கடவுள் மங்கலம் செய்தபொழுது வேள்வி நிகழ்த்தினர்.
"அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது
பெருங்கடல் முழக்கிற்  றாகி  யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியமம் ஆயினும் "
(அகநானூறு -பா. -90 அடி .-9-12)என்று  மதுரை  மருதனிள நாகனாரின் அகப்பாடல் கோசர் நிருமித்த நியமம் பற்றிப் பேசுகிறதுஅந்த  நியமத்தையே பாசிழை விலையாகக் கொடுத்தாலும் தலைவியின் பெற்றோர் அவளை மகட்கொடை  நேர்வர் அல்லர் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
"கெடாஅத் தீயின்  உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழூஉச்சமம் ததைய
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று  அரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை  யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல ........."
(அகநானூறு -பா -220-அடி.3-8)

என்று  செல்லூரில் நிகழ்த்திய வேள்வி பற்றி மதுரை மருதனிளநாகனார் பாடியுள்ளார். 'கடாம் வழியும் யானைக்கூட்டம் அழியும்படியாக அரச குலத்தை அழித்த பரசுராமர் அரிதின் முயன்று முடித்த வேள்வியில் கயிறை அரையில் யாத்த காண்தகு வனப்பை ஒத்து செல்லூரில் நிறுவிய உயர்ந்த  வேள்வித்தூண் அரிய காவலுடையதாய் இருந்ததுஅது போல தலைவியின் மாணெழில் ஆகம் காண்பதற்கரிதுஎன்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.இவ்விரு பாடல் கருத்துக்கள் மூலம் செல்லூரில் கோசரால் நிருமிக்கப்பட்ட நியமம் என்ற வகையைச் சேர்ந்த வழிபாட்டிடம் பற்றிய செய்தி விளக்கமுறுகிறது.

மணிமேகலை மதுரையிலிருந்த சிந்தா தேவி நியமம் பற்றி பலமுறை குறிப்பிடுகிறது. (ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை -அடி.-105-188, பாத்திர  மரபு கூறிய காதை -அடி .-10,17&18) ஆபுத்திரன் சாலி என்னும் பார்ப்பனிக்குத் தகாத ஒழுக்கத்தால் பிறந்தவன்.சாலி மகவைத் துறந்து சென்றமையால் பசுவால் புரக்கப்பட்டான்இளம்பூதி என்ற அந்தணனின் வளர்ப்பு மகன் ஆனான்வேள்விப் பசுவைக் காப்பாற்றினான்.அந்தணர்கள் அவனை ஆகவர் கள்வன் என்று விரட்டினர்.அவன் சென்ற ஊர்களில் எல்லாம் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லை இட்டனர்அவன் கலைநியமம் என்றழைக்கப்பட்ட கலைமகளின் நியமத்தில் தங்கினான்அந்தணர்கள் இழித்தும் பழித்தும் ஒதுக்கிய ஆபுத்திரன் தங்கிய நியமம் அந்தணரல்லாதார் நிறுவிய வழிபாட்டிடம் என்பது வெளிப்படை.

நியமங்கள் தலைநகரங்களிலும் இருந்தன.பிற ஊர்களிலும் இருந்தன.

மதுரையிலிருந்த " உவணச்  சேவல் உயர்த்தோன் நியம"த்தில்  காலை முரசொலி சங்கொலியுடன்  எழுந்தது. (மேலது )

 புகார் நகரிலிருந்து கிளம்பி ஆற்றுவீஅரங்கம்  வந்து சேர்ந்து அங்கிருந்த இலகொளிச் சிலாதலத்தில் சாரணர் தலைவன் சொன்ன உபதேசத்தைக் கேட்ட  கவுந்தியும் ,கோவலன் கண்ணகியும்
"நீரணி மாடத்து நெடுந்துறை போகி
…………………………………………………
தீது தீர் நியமத் தென்கரை எய்தி " யதாகத் தான் நிகழ்ச்சிகள்
தொடர்கின்றன. (நாடு காண காதை -அடி .-215-217)இவ்வடிகளுக்கு உரை எழுதும் பெருமழைப் புலவர் நியமத்தை ஒரு வழிபாட்டிடமாகத் தான் கருதுகிறார்.

பண்டை மதுரையில் இரண்டு பெரிய நியமங்கள் இருந்தன.
மாங்குடி மருதனார் 
"ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்துச்
சாறயர்ந்தெடுத்த உருவப் பல்கொடி  "
(மதுரைக்காஞ்சி -அடி.- 365&366) என்ற தொடர் மூலம் மதுரையில் இரண்டு நியமங்கள் இருந்தன என்றும்அங்கு திருவிழாவுக்காக அழகிய வண்ணக் கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன என்றும் கூறுகிறார் . தொடர்ந்து பிற  கொடிகளை வரிசைப்படுத்தி அங்காடித் தெருக்களின்  காட்சிகளையும் வருணித்த பின், "மழுவாள் நெடியோன் தலைவனாக..." (அடி.-455-460) எல்லாத் தெய்வங்கட்கும் மாலையில் விழா முழவு முழங்கியது என்கிறார்.

இன்றைய மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தலவரலாறும்தனஞ்செயன் என்னும் வணிகன் தான் கடம்பவனக்காட்டில் முதலில்                                      சொக்கநாதர் வழிபாட்டிடத்தை நிறுவினான் என்கிறது.

பெருமழைப்புலவர்பொ.வே.சோமசுந்தரனார் ஓவியத்தைக் கண்டாலொத்த காட்சியினை உடைய இரண்டாகிய பெரிய அங்காடித்தெருவின் கண் திருக்கோயில்களுக்கு விழா நிகழ்த்திக் கட்டின அழகினை உடைய பல கொடிகள் இருந்தன என்கிறார்நிகண்டுகள்  நியமம் என்ற சொல்லுக்கு கடைத்தெரு என்றும் பொருள் கூறுவதால் அவர் இவ்வாறு உரை வரைந்தார் எனலாம் (கருத்து மேலது). திருவிழாக் கொடிகள் கடைத் தெருக்களில் ஏற்றப்பட்டிருந்தன என்று பொருள் கொள்வதை விட இரண்டு பெரிய நியமங்களாகிய வழிபாட்டிடங்களில் ஏற்றப்பட்டிருந்தன  என்று பொருள்  கொள்வது பொருத்தமுடையதாக அமைகிறது  இதே நியமம் என்ற சொல்லுக்கு சிலப்பதிகார உரை எழுதும் போது வழிபாட்டிடம் எனப் பொருள் கொள்கிறார் பெருமழைப்புலவர்.(கருத்து எண் மேலது).

மதுரைக்கு வடக்கிலுள்ள செல்லூரின் கிழக்கே  கோசர் நிறுவிய நியமம்  இருந்ததுமதுரை  மருதனிள நாகனாரின் அகப்பாடல்கள்  கோசர் நிருமித்த நியமம் பற்றிப் பேசுகின்றனஅது செல்லூரின் கிழக்கே பெருங்கடல் போன்ற ஆரவாரத்தை உடையதாய் இருந்ததுபுதிதாகக் கட்டப்பட்டது.

உரையாசிரியர் நா.மு.வேங்கடசாமி நாட்டாரும் ,கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையும் நியமம் என்பது கோசர் வாழ்ந்த ஊர் என்று பொருள் தருகின்றனர்.ஆனால் 220ம் அகப்பாடல் விளக்கத்தைப்  பார்க்கும் போது (கருத்து மேலதுஅங்கு வேள்வித்தூண் நாட்டப்பட்டமை  புலனாவதால் அது ஊரன்றுவழிபாட்டிடம் என்பது உறுதியாகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடும் குமட்டூர் கண்ணனார் அவனது தலைநகராகிய மூதூரில் ஒரு நியமம் இருந்தது என்கிறார்.
"விழவு அறுபரியா முழவுமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்து "
(பதிற்றுப்பத்து -பா.- 15-அடி .-18&19)
என்ற பாடலடியிலுள்ள நியமம் முடிவில்லாதவிழா காரணமாக முழவொலி கேட்கும் வழிபாட்டிடம் என்பது தெளிவு.

ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை 'பொன்னை மிகவுடைய கடை வீதி ' என்று பொருள் தருவது ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.ஏனெனில் இங்கே விழாவும் அது தொடர்பான முழவும் சேர்த்துப் பேசப்பட்டுள்ளது.இரண்டு கூறுகளும் வழிபாடு தொடர்பானவை.அத்தோடு பிங்கல நிகண்டு நியமம் என்பதற்கு தெய்வம் வழிபடல் என்றும் பொருள் கூறியுள்ளது.

கல்லாடனார் பாடும் அகப்பாடல் (அகநானூறு-பா.-83)" நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் "என்று புல்லி ஆண்ட வேங்கடத்திலிருந்த மூதூர் பற்றிக் குறிப்பிடுகிறதுஉரையாசிரியர்கள் ந.முவேங்கடசாமி நாட்டாரும் ரா.வெங்கடாசலம் பிள்ளையும் 'அங்காடி இருக்கும் மூதூர்என்று பொருள் கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லைஏனெனில் ஒரு ஊரை அங்கிருக்கும் கோயிலை அடியொட்டி கோயில் மாநகர் என்று இருபதாம் நூற்றாண்டில் வழங்குகிறோம்இந்த வழக்கத்தின் முன்னோடியாக 'நியம மூதூர்என்ற தொடர் அமைகிறதுஎனவே வேங்கடத்தில் பேரோடும் புகழோடும் ஒரு வழிபாட்டிடம் இருந்ததமை தெளிவு.

நற்றிணை 45ம் பாடல் "நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்என்ற தொடரை அப்படியே எடுத்தாண்டுள்ளதுஇங்கு சுட்டப்படும் மூதூர் ஒரு கடற்கரையின் அருகே இருந்தது.அந்த ஊரைச் சார்ந்த செல்வந்தனின் மகன் பரதவர் மகளை விரும்பிக் காண வந்தமையைப்  பாடல் விவரிக்கிறதுநியமம் ஒரு வழிபாட்டிடம்ஆதலால் ஊரைச் சுட்டும்போது அதன் பெருமை கருதி நியம மூதூர் என்று  வழங்கியுள்ளனர்

சிலப்பதிகார உரையாசிரியர்கள் எல்லோரும் நகர்நியமம்கோட்டம் அனைத்தையும் கோயில் என்றே பொருள் உரைத்துள்ளனர்அவர்களது காலத்தில் அவ்வாறு வழங்கியிருக்கலாம்ஆனால் நிகண்டுகள் சொல்லும் கழகத் தமிழகராதியும்பொருள் கோயிலுக்கும்பிற வழிபாட்டிடங்களுக்கும் இடையில் இருந்த நுட்பமான வேறுபாட்டை எடுத்துக் காட்டுகின்றதுசங்க இலக்கியங்களிலும்மணிமேகலையிலும்  இத் தொடர்கள் பயின்று வரும் முறைமையும் இக்கருத்தை உறுதிப் படுத்துகின்றன.

முடிபுகள்:
வழிபாட்டு முறையையும் ,நிருமித்த சமூகத்தையும் ,இடத்தையும் அடியொட்டி  வழிபாட்டிடங்கள் வேறுபட்ட பெயர்களில் வழங்கின.

அரசுக்குச் சொந்தமான நிலத்தில் மன்னன் கட்டிய வழிபாட்டிடம் நகர் என்று அழைக்கப்பட்டதுஆதிசேஷனுக்கும்,பலராமனுக்கும் மதுரையிலும்முருகனுக்குத் திருப்பரங்குன்றிலும் நகர்கள் இருந்தனஊணூர்க்கு உம்பர் இருந்த மருங்கூர்ப் பட்டினத்திலும்,காஞ்சியிலும்கொங்குக் கரூரிலும் நகர்கள் இருந்தன.
கோயில் என்பது வேதநெறிப்படி தீமுறை வழிபாடு நிகழ்ந்த இடமாகும்.மதுரைபுகார்அலைவாய்ஆவினன்குடிஏரகம் ஆகிய ஊர்களில் கோயில்கள் இருந்தன.

கோட்டங்கள் விலக்கான பெண்கள் கூட ஒதுங்கி இருக்கும் இடமாக இருந்தன.சுடுகாடுஆற்றங்கரைகுளக்கரைசந்திசதுக்கம்மன்றம்பொதியில்வெறியாடுகளன்விழாவயர் இடங்கள் எங்கும் கோட்டங்கள் இருந்தனஎனவே சடலத்தோடு கூட அங்கே சென்றனர்புகார் நகரில் பத்து கோட்டங்கள் இருந்தனநிலாக்கோட்டமும்,காமன் கோட்டமும்மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தனமதுரையில் முருகனுக்கும் பிற தெய்வங்களுக்கும் கோட்டங்கள் இருந்தனஉறையூரிலிருந்து மதுரை செல்லும் வழியில் ஐயை கோட்டம் இருந்ததுசெங்கோட்டு உயர் வரையில் மங்கல மடந்தை கோட்டம் இருந்ததுகோட்டத்தில் வேள்விச்சாந்தி நிகழும் போதுஅது கோயில் எனப்பட்டது.

அந்தணரும் அரசரும்  அல்லாதார் நிருமித்த வழிபாட்டிடம் நியமம் ஆகும்அங்கு ஆகம முறைப்படி வழிபாடு நடந்ததுகடவுள் மங்கலத்தின் போது வேள்விச்சாந்தி செய்வதுண்டுமதுரைக்கு வடக்கில் செல்லூரில் கோசர் கட்டிய நியமம் இருந்ததுமதுரையில் இரண்டு பெரிய நியமங்கள் (மழுவாள் நெடியோனுக்கும்திருமாலுக்கும்இருந்தன.சிந்தா தேவிக்கு ஒரு நியமமும் இருந்ததுசேரர் மூதூரிலும்பெயர் சுட்டப்படாத ஒரு கடற்கரை மூதூரிலும் நியமங்கள் இருந்ததாக சங்க இலக்கியம் காட்டுகிறதுவேங்கடத்தில்  நியமத்தோடு கூடிய மூதூர் இருந்தது.

வருணப் பாகுபாடு பண்டைத் தமிழகத்தில் காலூன்றி இருந்தமையை பல்வேறு வழிபாட்டிடங்கள் தெளிவுறுத்துகின்றன.
துணை நூற் பட்டியல்:
1)    அகநானூறு -களிற்றியானை நிரை - .மு.வேங்கடசாமி நாட்டார் & ரா.வெங்கடாசலம் பிள்ளை (..) - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -2009
2)    அகநானூறு - மணிமிடை பவளம் - .மு.வேங்கடசாமி நாட்டார் &ரா.வெங்கடாசலம் பிள்ளை (..) - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -2007
3)    கலித்தொகை - நச்சினார்க்கினியர் (..) - திருநெல்வேலிதென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -2007
4)    கழகத்தமிழகராதி - 1993ல் பணியாற்றிய துறையில் பார்வையிட்ட இந்நூலின் அட்டையும் வெளியிட்ட ஆண்டு பற்றிய பக்கங்களும் இல்லைஇது 1993க்கு முந்தைய பதிப்பு என்பது மட்டும் உறுதி.
5)    சிலப்பதிகார மூலமும்  உரையும் - பொ .வே .சோமசுந்தரனார் (..) - திருநெல்வேலிதென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - 1975
6)    தமிழ் நிகண்டுகள் - தொகுதி -1 - வே.சுப்பிரமணியன் - (..) மெய்யப்பன் பதிப்பகம் - முதற் பதிப்பு -2013
7)    திருப்புகழ் -கழக வெளியீடு -497-முதற் பதிப்பு -1974
8)    நற்றிணை -நாராயணசாமி ஐயர் (..)- திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு -2007
9)    பத்துப்பாட்டு மூலமும் உரையும்  தொகுதி - 1 - பொ.வே.சோமசுந்தரனார் (..) - திருநெல்வேலிதென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் - 2007
10)   பத்துப்பாட்டு மூலமும் உரையும்  தொகுதி  - 2 - பொ.வேசோமசுந்தரனார் (..) - திருநெல்வேலிதென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் - 2008 
11)   பதிற்றுப்பத்து - ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை (..) - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு - 2007
12)   பரிபாடல் - பொ.வே.சோமசுந்தரனார் (..) - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் - 2007
13)   புறநானூறு பகுதி - 2 -ஒளவை .சு.துரைசாமிப்பிள்ளை (..) - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு - 2007 .
14)   மணிமேகலை - .மு.வேங்கடசாமி நாட்டார் & ஒளவைசு.துரைசாமிப்பிள்ளை (..) - பாகனேரி..வை.தமிழ்ச்சங்க வெளியீடு  14 - முதல் பதிப்பின் மறு பதிப்பு -1964
15)   ராசமாணிக்கனார்மா. - பத்துப்பாட்டாராய்ச்சி - மு.வரதராசன் (பொ ...) சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை வெளியீட்டு எண் - 26 - முதல் பதிப்பு - 1970


_______________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)