Tuesday, March 31, 2020

பரணிமண்ணின் வசைச்சொல் - "பேதியில போயிருவ"

பரணிமண்ணின் வசைச்சொல் - "பேதியில  போயிருவ

——   பென்ஸி


"பேதியில  போயிருவ" என்ற வசையின் பொருள் வாந்தி அல்லது  பேதி எடுத்து மரணமடையக் கடவாய்  என்ற சாபம்.  இது பரணிமண்ணின் ஒரு வசைச்சொல்.

இதன் வரலாற்றைப் பார்ப்பதற்கு முன்னர் கும்பமேளா பற்றியும் அறிவோம். இந்து வேத ஜோதிட இயலின்படி ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பைசாகி மாதத்தில் சூரியனின் ஐந்தாவது கோளான வியாழன் கும்பம் ராசிக்குள் நுழையும்போது ஹரித்துவாரில் (உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ளது) கும்பமேளா நடத்தப்பட்டு வருகிறது என்கிறது 1759 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "சஹார் குல்சான்" ( "The Chahar Gulsan") என்ற நூல்.   கடைசிக் கும்பமேளா 2010 ஆம் ஆண்டு நடைபெற்று, அடுத்த கும்பமேளா 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டும் என்ற அறிவிப்போடு முடிந்தது.

ஹரித்வார் நகரில் 1783 ஆம் ஆண்டும் ஒரு கும்பமேளா கொண்டாடப்பட்டது. இந்தியப் புனிதப் பயணியர்களோடு அரேபிய, ஆசிய, ஐரோப்பிய வணிகர்களுமாக சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை மக்கள் அந்த மகாத் திருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர் என்று பதிவுசெய்கிறது வரலாறு. திருவிழாவின் முதல் நாளிலேயே காலராத் தொற்று ஏற்பட்டு எட்டு நாட்களில் 20,000 வரை மக்கள் மரணமடைந்தனர். ஆனால் 12 ஆம் நாள் விழா நிறைவுபெறும் நாளில் காலராத் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணப்படுத்தப்பட்டனர். எனவே ஹரித்வார் நகரத்திலேயே காலராத் தொற்றை உருவாக்கிய பாக்டீரியாக்களுக்குச் சமாதி கட்டப்பட்டது. இதைக் காலரா எபிடமிக் (Epidemic) என்கிறோம்.

இதிலிருந்துதான், தனக்குத் துரோகம் இழைத்தவர்களை "பேதியில  போயிருவ" என்று சாபமிடுவது போன்ற வசவுச் சொல் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

இதே காலராத் தொற்று 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, சர்வதேசப் பெருந்தொற்றாக உருக்கொண்டு தொடர்ந்து 24 வருடங்களில் (1899 - 1913) "The first to sixth  pandemics Cholera"ஆகப் பெயர் பெற்று பெயருக்கேற்ப 1.5 கோடி மக்களை மரணமடைய வைத்துவிட்டு விடைபெற்றது. இப்பொழுது எல்லாம் வாந்தி பேதி ஏற்பட்டால் தானே மருந்துக்கடையில் சொல்லி மருந்து வாங்கிக் குணம்பெறும் நிலைக்கு வந்துவிட்டோம். எனவே கொரோனா வைரஸ் ( COVID 19) தொற்றையும் வென்று வெளிவருவோம்.

வரலாற்றின் பக்கங்களில், கொரோனாவைவிடவும் வேகமாகப் பரவும் நோய்களும் இருந்திருக்கின்றன. அவைகளையும் வென்றிருக்கிறோம். கோவிட் - 19 ஐ போல, நம் வரலாற்றில் சர்வதேசப் பெருந்தொற்றுப் பாதிப்பாக அறிவிக்கப்பட்ட சில நோய்ப் பாதிப்புகள், அவை ஏற்பட்ட ஆண்டு, அவை ஏற்படுத்திய மரணங்கள் போன்றவற்றின் விவரம் ஆகியன,  ஆண்டு  - மரணங்கள் - நோய் - வைரஸ் ( வரிசை 7 - மட்டும் காலரா பாக்டீரியா ) என்ற வரிசைப்படி.
1. கி.பி.  165 - 180 - மரணம் 50 லட்சம்.
ஆன்டனைன் பிளேக் ( Antonine Plague)

2. கி.பி.  541 - 542 - 3.5 கோடி.
ஜஸ்டினியன் பிளேக் ( Plague of Justinian)

3. கி.பி.  735 - 737 - 10 லட்சம்.
ஜப்பானிய பெரியம்மை ( Japanese Smallpox)

4. கி.பி.  1350 - 20 கோடி.
ப்யூபானிக் பிளேக் (The Black Death or The Pestilence, Great Bubonic Plague)

5. கி.பி.  1665 - 5.6 கோடி. 
கிரேட்  பிளேக் ( The Great Plague of London)

6. இதே கி.பி.  1665  வருடத்தில் கோடைக்காலத்தில் இதே கிரேட்  பிளேக், 30 லட்சம் மரணங்கள்.
கிரேட்  பிளேக்

7. கி.பி.  1899 - 1923 - 1.5 கோடி.
காலராத் தொற்று - *பாக்டீரியா (The first to sixth  pandemics Cholera)

8. கி.பி.  1855 - 59 - 1.2 கோடி.
(இந்தியாவில்  மட்டும் சுமார் ஒரு கோடி)
மூன்றாம் பிளேக் (Third Plague)

9. கி.பி.  1889 - 1900 - 1.5 லட்சம்.
ரஷ்யன் ஃப்ளூ (Russian Flu or Asiatic Flu)

10. கி.பி.  1918 - 19 - 5 கோடி.
ஸ்பெய்ன் ஃப்ளூ (Spanish Flu)

11. கி.பி.  1957 - 58 - 11 லட்சம்.
ஆசிய ஃப்ளூ (Asian Flu - the Influenza A/H2N2)

12. கி.பி.  1968 - 70 - 10 லட்சம்.
ஹாங்காங் ஃப்ளூ (Hong Kong Flu)

13. கி.பி.  1981 - 2.2 கோடி. 
எய்ட்ஸ் (HIV / AIDS.HIV - human Immunodeficiency Virus, AIDS - Acquired Immune Deficiency Syndrome)

14. கி.பி.  2002 -  774
சார்ஸ் ( SARS - Severe Acute Respiratory Syndrome)

15. கி.பி.  2009 - 19  நாடுகள் - 2 லட்சம்
பன்றிக்காய்ச்சல் ( Swine Flu-H1N1)

16. கி.பி.  2012 - 27 நாடுகள்- 858 
மெர்ஸ் வைரஸ் ( MERS - CoV)

17. கி.பி.  2012,  2,000  அதிகமாக 
மெர்ஸ் வைரஸ் (MERS - Middle East Respiratory Syndrome, CoV - Coronavirus)

18. கி.பி.  2014 - 11,323.
எபோலா வைரஸ் (Ebola Virus)

19. கி.பி.  2019  - இதுவரையில் உலகம் முழுவதிலும் 5.5 லட்சம் மக்களைப் பாதித்திருக்கிறது.
கோவிட்  19 (COVID 19)
199 நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக வரைபடத்தில் மீதம் வைத்திருப்பது அன்டார்டிக் கண்டத்தை மட்டும்தான்.
1. 
"ல பெட்டி ஜர்னல் "(Le Petit Journal (The Small Journal) இதழில் வெளிவந்த வரைபடம்.
Drawing of Death bringing the cholera.
2.
Hand bill from the New York City Board of Health, 1832. 
The outdated public health advice demonstrates the lack of understanding of the disease and its actual causative factors.
தொடர்பு:
கடையநல்லூர் பென்ஸி 
https://www.facebook.com/kadayanallur.benzy
Monday, March 30, 2020

நூல் விமர்சனம் - ராகுல் சாங்கிருத்யாயன்

முனைவர்.க.சுபாஷிணி

 ​சில ஆண்டுகளுக்கு முன்னர் வால்காவிலிருந்து கங்கை வரை நூலை வாசித்தபோது மிகப்பெரிய பிரமிப்பு. எப்படி இந்த நூலாசிரியரால் இவ்வளவு செய்திகளை இவ்வளவு சுவார​சியமாக​த்​ தர முடிகிறது என்ற வியப்பு அது. ​நான் மிக ​அண்மையில் வாசித்த நூல் அதே நூலாசிரியர் எழுதிய ​மற்றுமொரு நூல் `​ஊர்சுற்றிப் புராணம்​`​. என்னுடைய ஆழ்மனதின் ஆர்வத்தோடு இணைந்து செல்வதால் இந்த ​நூலாசிரியரை​ப்​ பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடியதில் ஒரு நூல் கிடைத்தது.
​​ராகுல் சாங்கிருத்யாயன்​ - சாகித்ய அகாதமி வெளியீடாக பிரபாகர் மாச்வே என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு 1986ஆம் ஆண்டு வெளியீடு கண்டது​ இந்த நூல்​. இதனை​த்​ தமிழாக்கம் செய்து திரு.வல்லிக்கண்ணன் தமிழ் வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றார்.

இந்த நூலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. ​முதலில் வருவது ​ராகுல் சாங்கிருத்யாயன் பற்றிய ஒரு அறிமுகம். இது ஆரம்பம் தொடங்கி இறுதிவரை அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை மட்டும் மையப்படுத்தி அவரது சிறப்பு​த்​ தன்மையை வெளிப்படுத்தி விவரிக்கும் ஒரு பகுதி​. ​ இரண்டாம் பகுதி வாழ்க்கை என்ற தலைப்பில் பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயனின் வாழ்க்கை குறிப்பாகவும் அவரது கல்வி​த்​ தேடல், அவர் செய்துகொண்ட பெயர் மாற்றங்கள்​ அப்போதைய நிகழ்வுகள்​, திருமணம்​,​ வாழ்க்கைத் துணை பற்றிய செய்திகள், மற்றும் விரிவான அவரது பயணங்கள்​,​ திபெத்​,​ ரஷ்யா​,​ இலங்கை​,​ ஆகிய நாடுகளில் அவர் நீண்ட காலம் தங்கியிருந்து பணியாற்றிய அல்லது ஈடுபாடு கொண்ட செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும் பகுதி.

மூன்றாவதாக வருவது படைப்புகள் என்னும் பகுதி. ராகுல் சாங்கிருத்யாயன் ஒரு துறையில் மட்டுமே திறன் பெற்றவர் அல்ல. பல துறைகளில் ஈடுபாடு கொண்டு​,​ அதிலும் குறிப்பாக​,​ ஆழமான ஈடுபாடு கொண்டு வெவ்வேறு துறைகளை​ப்​ பற்றி தனது ஆய்வுகளையும் சுய அனுபவங்களையும் கருத்துக்களையும் அவர் நூலாக வடித்திருக்கிறார்​.​ அந்த வகையில் இந்தப் பகுதியில் அவரது ​எழுத்தாக்கத்தில்​​ வெளிவந்த கற்பனை படைப்புகள், வாழ்க்கை வரலாறு​ -​ சுயசரிதை, பயண விவரிப்புகள் அல்லது பயணக்குறிப்புகள் என்ற வகையிலான செய்திகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு அடுத்து வருவது நான்காவது பகுதி​.​ இது அவரது இலக்கிய சாதனைகளை விவரிக்கும் ஒரு பகுதி. இன​.​ மத பேதமற்று​.​ அறிவு ஒன்றை மட்டுமே தேடுவதை​க்​ குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் ராகுல் சாங்கிருத்தி​யா​யன்​ என்கின்றார் நூலாசிரியர்​. இந்தப் பகுதியில் அவரது முக்கிய நண்பர்களைப் பற்றிய தகவல்களை நூலாசிரியர் வழங்குகின்றார். நூலாசிரியர் பிரபாக​ர் அவர்களும்​ ராகுல் சாங்கிருத்யாய​னுக்கு ​உற்ற நண்பராக இருந்தவர் என்ற​ கருத்துக்களையும் நூலில் அறியமுடிகின்றது​ என்பதோடு ஒரு​சில இலக்கியப் பணிகளில் ​ராகுலுடன் நூலாசிரியர் பிரபாகர் ​இணைந்து செயலாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
​நூலின் ​இறுதி​ப் பகுதியில்​ ​இரண்டு​ குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது ராகுலின் வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்ச்சிகளின் பட்டியல். இரண்டாவது பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன்​னின் படைப்புகள். இந்த​ப்​ பட்டியலைப் பார்க்கும்போது வாசிக்கும் நமக்கே திகைப்பு ஏற்படுகின்றது. நாவல்கள்​,​ சிறுகதைகள்​,​ சுயசரிதை நூல்கள்​,​ வாழ்க்கை வரலாறு நூல்கள்​,​ பயணநூல்கள்​,​ கட்டுரைகள் என 74 இலக்கிய நூல்கள் இந்த​ப்​ பட்டியலில் இடம் பெறுகின்றன. இதற்கடுத்து​,​ இதர நூல்கள் என்ற தொகுப்பில் அறிவியல்​,​ சமூகவியல்​,​ அரசியல்​,​ தத்துவம்​,​ சமயம்​,​ பயண நூல்​,​ அகராதி மற்றும் லெக்சிகன்​,​ இலக்கிய வரலாறு​,​ நாட்டார் பாடல்​,​ ஆய்வு​,​ வரலாறு​,​ தொகுப்பு​,​ மொழிபெயர்ப்பு​,​ சமஸ்கிருத பதிப்பித்தல் அல்லது மொழிபெயர்ப்பு என 72 நூல்கள் பட்டியலில் இடம் பெறுகின்றன.
1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அசாம்கார்க் மாவட்டத்திலுள்ள கனிலா சர்க்கார் பன்னூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது இளமைப் பருவம் துயரம் நிறைந்த அனுபவ​த்தையே அவருக்கு வழங்கியது. மிக இளம் வயதிலேயே தனது அன்னையையும் சகோதரியையும் இழந்தார். அவருக்கு மிகச் சிறிய வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் யாருடன் நடைபெற்றது என்பதை அறியும் முன்னரே அவர் தனது பயணத்தைத் தொடங்கி விட்டதால் அந்த​த்​ திருமணம் அவரது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறவில்லை.

ராகுலின் வாழ்க்கையில் 1915 முதல் 1922 வரையிலான காலகட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இளம் வயதிலேயே உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என ஓரிருமுறை வீட்டிலிருந்து வெளியேறி பிறகு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தவர் தனது தேடலுக்கு எல்லை இல்லை என்பதை உணர்ந்து கொண்டு இயல்பான வாழ்க்கையிலி​ருந்து புரட்சிகரமான ஒரு வாழ்க்கையை முன்னெடுத்த காலகட்டமிது.
ராகுல் தன் கைப்பட எழுதிய அவரது குறிப்புகள் 3000 பக்கங்களுக்கு மே​லாகும். அவரது படைப்புகளும் குறிப்புகளும் இந்தி​,​ சமஸ்கிருதம்​,​ பாலி, திபெத், போஜ்புரி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை. அவரது நூல்கள் இன்று தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய, பர்மிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.ராகுல் சாங்கிருத்யாய​னின் வாழ்க்கைக் குறிப்பை கூறும் இந்த நூலை எழுதிய நூலாசிரியர் பிரபாகர் 1948ஆம் ஆண்டு அலகாபாத் இந்தி சாகித்திய சம்மேளனத்தில் அவரோடு இணைந்து 16​,000 வார்த்தைகள் கொண்ட அலுவலக​காரியத்திற்கான சொற்களை விளக்கும் ஆங்கில​-​இந்தி அகராதி ​நூல்​தயாரிப்பதில் பணியாற்றியிருக்கின்றார்​ என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் சாங்கிருத்யாய​னி​ன் வாழ்க்கையில் பயணங்களே முக்கிய இடம் பெறுகின்றன. ஊர் ஊராக​ச்​ சென்று கொண்டே இருக்க வேண்டும்​.​ ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள சூழலுக்கேற்ப மக்களையும்​.​ ஊர்களின் சிறப்பையும் புரிந்துகொண்டு வாழ்க்கை​ பயணத்தைச்​ செலுத்த வேண்டும். புதிய செய்திகளை​க்​ கற்கவேண்டும்​.​ புதிய அனுபவங்களை​த் தேடிப்​ பெற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவரது முழு வாழ்க்கையும் அமைந்தது. முழுமையான பள்ளிக் கல்வி என்பது அவரது வாழ்க்கையில் இடம்பெறவில்லை என்றாலும் அவரது தீவிர தேடுதலும் கற்றலும் அவர் ரஷ்யாவின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக​ப்​ பணியாற்றும் வாய்ப்பையும்​,​ இலங்கையில் வித்யாலங்காரா பல்கலைக்கழகத்தில் ​பௌத்த தத்துவவியல் ​பேராசிரியராக​ப்​ பணியாற்றும் வாய்ப்பினையும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்பது வியக்க வைக்கிறது.

தனது வாழ்க்கையில் அவர் நான்கு முறை திபெத் நாட்டிற்குச் சென்றிருக்கின்றார். இறுக்கமான கெடுபிடிக​ளை சந்தித்த போதும் பல்வேறு வகையில் தான் சந்தித்த தடைகளையெல்லாம் கடந்து அவரது ஒவ்வொரு பயணங்களும் அமைந்திருக்கின்றன.

ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தபோது அவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. தனது பத்தொன்பதாவது வயதில் அவர் ராகுல் பராசா ​மடத்தில் முறையாக சாதுவாகச் சேர்ந்தபோது அவரது பெயர் ராம் உதார் தாஸ் என மாற்றப்பட்டது. அந்த மடத்தின் வருங்கால வாரிசாக​வும்​ தலைவராக வருவதற்கு வாய்ப்பிருந்தும்​,​ சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபாடின்றி அவர் அங்கிருந்து வெளியேறி​னார். வெளியேறினார் என்று சொல்வதற்கு பதில் ஓடிப்போனார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
Sunday, March 29, 2020

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு ஏற்படுத்தும் ஆர்வங்கள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு ஏற்படுத்தும் ஆர்வங்கள்

——   முனைவர் சிவ. இளங்கோ


      கீழடி அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு வரலாற்றின் மீதும் தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மீதும் ஆர்வம் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் தொல்லியல் துறை, தொல்லியல் பயிற்சிப்பட்டறை நடத்த முன்வந்ததும், அதற்கு  எட்டாயிரத்துக்கும் மேல் விண்ணப்பங்கள் இணைய வழியில் குவிந்திருப்பதைக் கண்டு அத்துறை அமைச்சரே ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் அளவுக்குத் தமிழ் மக்களின் ஆர்வ விழிகள் தொல்லியல் மீது கூர்ந்திருக்கின்றன. தமிழக அரசின் கீழடி அறிக்கைப்படி தமிழ் எழுத்துக்களின் காலம் கி.மு.2600 வரை நீண்டு, இந்தியாவின் முதல் எழுத்துரு அமைந்த மொழியாகத் தமிழை உறுதிப்படுத்தியிருப்பதே இந்த ஆர்வங்களுக்கு அடிப்படை. இதற்கு மேலும் தமிழ் மொழியின் காலம் பின்னோக்கி நீளக்கூடும் என்ற எதிர்பார்ப்புதான் தற்போதைய நாடித் துடிப்பு. அதற்கேற்றாற்போல் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு நடத்த, மத்திய அரசின் தொல்லியல் துறை அனுமதியுடன், தமிழக அரசு களமிறங்கி உள்ளது. அதே நேரம் 2004 ஆம் ஆண்டில்  ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையால் ஆய்வு நடத்தப்பட்டு, அதில் ஒருசில மாதிரிகள் காலக் கணிப்பும் செய்யப்பட்டு, அவை கீழடி முடிவுகளைவிட பின்னோக்கிச் செல்லக்கூடிய காலமாக இருக்கின்றன என்று வெளிவரும் தகவல்களால் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வின் முடிவுகளை இந்தியா முழுவதுமான வரலாற்றாய்வாளர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

பெயர்க்காரணம்:
      தமிழகத்தின் தென்கோடியில் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில், தாமிரபரணி என்று இப்போது அழைக்கப்படும் பொருநை ஆற்றின் தென்கரையில் பொன்னக்குடி (பொன்னன் குறிச்சி) என்ற ஊரின் அருகில் மேடாக அமைந்திருக்கும் பகுதியே தற்போது ஆதிச்சநல்லூர் என்றழைக்கப்படுகிறது. அப்பகுதி  பறம்பு என்றும் வழங்கப்படுகிறது. அரசின் வருவாய்த் துறை ஆவணங்களின்படி வெள்ளூர் என்னும் கிராமத்தின் எல்லைக்குள் அடங்கும் பகுதி. இங்கு முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு. ஆனால் இதற்கு தாழிக்காடு என்ற பெயர் பலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்தாழிக்காடு இடுகாட்டுப் பகுதியாக இருப்பதால், இங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி என்ற ஊர் இருந்திருக்கலாம் என்றும், அவ்வூரில்  2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு செங்கற்கட்டுமானம் தன்னால் காணப்பட்டதாகவும் அலெக்சாண்டர் ரீ, தனது 1906 ஆம் ஆண்டு அகழ்வாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


      கொங்கராயக் குறிச்சி என்னும் இப்பழமையான ஊர் பத்தாம் நூற்றாண்டுச் சமணர் கல்வெட்டுகளில் முதுகோனூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1] ஆனால் நல்லூர் என்ற பெயர் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. ஆற்றுநீர் பாயும் மருதநிலத்தில் அமைந்த ஊர்கள் நல்லூர் என்று அழைக்கப்படுகின்றன. அவை கடலோடு சேரும் ஆற்று முகத்துவாரங்களாகவும் இருக்கும்.[2]  நல்லூருக்கு முன்னே சேரும் ஆதிச்ச என்ற பெயர் 17ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.[3]  ஆதிச்ச என்ற முன்னொட்டு இராஜராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆதி தச்ச நல்லூர் என்ற பெயரே ஆதிச்சநல்லூராக மருவியது என்றும் ஒரு கருத்து உள்ளது. எனினும், நல்லூர் என்பது மட்டும் மாறாமல் உள்ளது.[4]

அகழ்வாய்வுகள்:
      ஆதிச்சநல்லூர்ப் பகுதியில் தொல்லியல் சான்றுகள் 18ஆம்   நூற்றாண்டிலேயே ஒருசிலரால் கண்டறியப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் அப்பகுதிகளில் இருப்புப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது முதுமக்கள் தாழியுடன் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. இது குறித்துப் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டது (மதராஸ் அரசாணை எண்:867 நாள் 13.08.1876). இதைக் கண்ணுற்ற ஜெர்மானியர் ஜாகோர் என்பவர் தன்னார்வத்தில் இந்தியா வந்தடைந்து ஆதிச்சநல்லூர்ப் பகுதிகளில் அம்மாவட்ட ஆட்சியர் உதவியுடன் 1876 ஆம் ஆண்டில் அகழ்வாய்வினை மேற்கொண்டார். இதில் பல அளவுகளில் மண்பாண்டங்கள், இரும்புப் பொருட்கள், எலும்புக் கூடுகள் கிடைத்தன. இவற்றைப் பெரும் அளவில் ஜாகோர் தன்னோடு ஜெர்மனி எடுத்துச் சென்றார் என்றும், அவை தற்போது பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886 இல் இங்கு இனப்பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர். இதே காலகட்டத்திற்குச் சற்று முன்னர், அவ்விடங்களில் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த கால்டுவெல், “தென்னிந்தியாவில் மிகப்பெரிய பழமையான நாகரிகமாகச் சிறந்து விளங்கியது பொருநைக் கரையே” என்று கூறியுள்ளார்.

       இதற்குப் பிறகு அலெக்சாண்டர் ரீ என்பவர், 1899 முதல் 1904 ஆம் ஆண்டு வரை 33 இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்டார். இருபத்தோரு மாட்டு வண்டிகளில் அவர் ஏற்றிச்சென்ற பொருட்கள் பலவும் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. பின்னர் 1915 இல் அவர் வெளியிட்ட அறிக்கையில் “எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதைகுழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன. தென்னிந்தியாவிலேயே மிகப் பரந்த அளவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய இடம் இதுதான்” என்று கூறினார். 1903 – 1904 ஆம்  ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்த பாரிசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயி லாப்பேக் என்பவர் நான்கு குழிகளிலிருந்து, தான் கண்டெடுத்த பொருட்களைப் பாரிசு அருங்காட்சியகம் கொண்டு சென்றார். “அப்பொருட்கள் தொன்மைத் திராவிடர்களுடையவை” என்று அவர் கருத்து வெளியிட்டார். ஜே.ஆர். ஹெண்டர்சன் என்பவர் 1914 ஆம் ஆண்டில் ஆய்வுகள் மேற்கொண்டார். இதன் பின்னர் 2004 – 2006 ஆம் ஆண்டுகளில் மத்தியத் தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்ததில் 169 முதுமக்கள் தாழிகளும், மண்பாண்டங்களும், எலும்புகளும் கிடைத்தன. இவ்வாய்வின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.[5] அதே நேரம், தற்போது (பிப்ரவரி 2020) மத்திய தொல்லியல் துறை, 2004 - 2006 ஆண்டு அகழ்வாய்வு குறித்து இடைக்கால அறிக்கையை மத்திய அரசுக்குக் கொடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.[6]

பொருட்களும், காலமும்:
      ஆதிச்சநல்லூரில் இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் நடைபெற்ற அகழ்வாய்வுகள் பலவும் அறிவியல் முறைப்படியான அகழ்வாய்வுகளாக நடத்தப்படவில்லை. மேலும் தொல்லியல் பொருட்கள், புதையல்கள் போன்றவற்றின் மீதான சட்டங்கள் ஏதும் இயற்றப்படாத நிலையில் அவற்றைத் தோண்டி எடுத்தவர்கள் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். ஆதிச்சநல்லூரில் அதிகமாகக் கிடைத்தவை முதுமக்கள் தாழி என்பதால் அவற்றை வைத்து அப் பறம்பு முழுமையும் இடுகாட்டுப் பகுதி என்றே பலர் கருத்துரைக்கின்றனர். ஜாகோரின் 1876 ஆம் ஆண்டு அகழ்வாய்வில் பலவகையான, அளவிலான மண்பாண்டங்களுடன் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், வெண்கலத்தால் ஆன உருவச் சிலைகள், தங்க நெற்றிப் பட்டயங்கள், மனித எலும்புகள், நெல், சாமை போன்ற தானியங்கள் கிடைத்துள்ளன. அலெக்சாண்டர் ரீ நடத்திய 1899-1904 ஆம் ஆண்டு ஐந்து கட்ட அகழ்வாய்வுகளில் முன்னர்க் கூறிய பொருட்களோடு வெண்கலக் கருவிகள், தங்க அணிமணிகள், கல் அம்மிகள். கலைநயம் மிக்க பூச்சாடிகள், கிண்ணம், சட்டி, சல்லடை போன்ற சமையல் பாத்திரங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை 2004 - 2005ஆம் ஆண்டுகளில் நடத்திய சிறிய பகுதியிலான அகழ்வாய்வில் பெருமளவில் முதுமக்கள் தாழிகளும் (169), அவற்றின் உள் சிறிய மண்பாண்டங்கள், எலும்புகள், தானியங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வாய்வின்போது, கோட்டைச் சுவரின் ஒரு பகுதியும், குயவர்களின் சூளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டைச் சுவர் சீரான வடிவமைப்பைக் கொண்டது. கோட்டையில் குயவர்களின் குடியிருப்பும் இருந்திருக்கிறது. மூன்று பானை சுடும் சூளைகளும், சாம்பலும், கரியும், உடைந்த பானை ஓடுகளோடு அங்குள்ளன. இரும்புக் கட்டிகள், பாசிமணிகள், சிவப்புப் பளிங்கு மணிகள் (Carnelian gems), பிறவண்ண மணிகள், பெருங்கற்காலக் குறியீடுகளைக் கொண்ட பானை ஓடுகள், எலும்பினால் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவை இக்கோட்டைச் சுவர் இருந்த பகுதிகளுக்குள் கிடைத்துள்ளன.[7]


      இவ்வாய்வில் கிடைத்த ஒருமண்பாண்டத் துண்டு தமிழர் நாகரிகத் தேடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஓட்டினில் ஒரு பெண், நெற்கதிர், நாரை, மான், முதலை ஆகியவை புடைப்பு உருவங்களாக, மிகவும் நேர்த்தியான வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் உள்ள தாழி மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், அந்தத் தாழியில் புடைப்பு உருவ முறையில் இச்சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இப்பானை ஓட்டினில் இருந்த சில குறியீடுகள் அரப்பா கால உருவ எழுத்துகளை ஒத்தன என்றும் தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ஆதிச்சநல்லூரில் கிடைத்த பானைகள் மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.[8]

      இந்தியத் தொல்லியல் துறை அகழ்வாய்வு (2004-2005) செய்த பொருட்களை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைப்படி அமெரிக்க (புளோரிடா) ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட கார்பன்-14 பரிசோதனையில் ஒரு பொருளின் காலம் கி.மு.791 என்றும், இன்னொரு  பொருளின் காலம் கி.மு.905 என்றும் கண்டறியப்பட்டு, அவை ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன.[9] அலெக்சாண்டர் ரீ நடத்திய அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் சில, இதற்கு முன்னரே காலக் கணிப்பு ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன. அதில் ஒரு மரத்துண்டு, கி.மு.900 என்று டாட்டா ஆய்வு நிறுவனமும், ஒரு மண்பாண்டத் துண்டு கி.மு.2000 என்றும், மற்றொரு மண்பாண்டத் துண்டு கி.மு. 4000 என்றும் மணிப்பூர் பல்கலைக் கழக ஆய்வுக் கூடமும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் அறிவித்துள்ளன. இக்காலக் கணிப்புகளால் தமிழ் மக்களுக்கு எழுத்தறிவு வருவதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்சநல்லூர் நாகரிகம் இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 3700 ஆண்டுகளுக்கு முந்தைய, கிட்டத்தட்ட சிந்துசமவெளி நாகரிகத்திற்கு இணையான நாகரிகமாக ஆதிச்சநல்லூர் நாகரிகம் உள்ளது என பி.பி.சி. செய்திகள் தெரிவிக்கின்றன.[10] வங்காள ஆராய்ச்சியாளரான பானர்ஜி என்பவர், சிந்துவெளி நாகரிகத்தைவிட ஆதிச்சநல்லூர் தொன்மையான நாகரிகம் என்றும், அதன் காலம் கி.மு.12,000 ஆண்டுகள் என்றும், இந்திய அரசு இவ்வுண்மைகளை மறைப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.[11] ஆக, சிந்துவெளிக் காலம் அல்லது அதற்கு முன்னரும் கூட தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பது தான் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் தெரிவிக்கும் செய்தி.

       மேலும், ஆதிச்சநல்லூருக்கும், சிந்துவெளிக்குமான பொருத்தப்பாடுகளில் உலோகக் கலவையில் ஆறு விழுக்காடு துத்தநாகம் கலப்பு, பானைகளின் மெல்லிய கனம், பானை ஓடுகளில் அரப்பா காலக் குறியீடுகள் உள்ளமை, சமயச் சின்னங்கள் இல்லாத நிலை, நடனமாடும் பெண் உருவம் (தாய்த் தெய்வ வழிபாடு) கிடைத்துள்ளமை ஆகியவற்றைத் தொல்லியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாட்டோடு இனம், மொழி, பண்பாடு, சமயம் ஆகிய கூறுகளில் தொடர்புடைய திராவிட நாகரிகம் என்று பன்னாட்டுத் தொல்பொருள்  அறிஞர்கள் பலரும் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். சிந்துவெளி ஆராய்ச்சியில் ஜான் மார்ஷல், ஆர்.டி.பானர்ஜி, ஐ.ஆர்.அண்டர், ஈராஸ் பாதிரியார், எச்.டி.சங்காலியா, பி.பி.லால், ஜி.எம். ஹேவிட், ஐராவதம் மகாதேவன் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். தற்கால ஆய்வறிஞர்களான அஸ்கோ பார்பலோ, ஜார்ஜ் எல். ஹார்ட், ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளத்தைக் குறிப்பாகச் சிந்துவெளி - தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பதைத் தங்கள் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.[12]  ஆனால் சிந்துவெளி நாகரிகத்தைச் சரசுவதி நாகரிகமாகக் கட்டமைக்க இந்திய அரசு பெரும் முயற்சிகள் எடுத்துவரும் இன்றைய சூழ்நிலையில், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் எத்தனை விழுக்காடு சரியான தகவலைக் கொண்டு வெளியிடப்பட உள்ளது என்பது வரலாறு, தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்விக்குறிதான்.

மொழி:
      ஆதிச்சநல்லூரில் கிடைத்த மேற்கூறிய பொருட்கள்  சங்க இலக்கியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தி சங்க இலக்கியங்கள், தமிழரின் வாழ்வியலைச் சித்தரிக்கும் எழுதப்பட்ட ஆவணம் என்று கூறுவதற்குச் சான்றாக அமைகின்றன. ஆனால், மூன்றாம் தமிழ்ச்சங்க காலத்தினைச் சேர்ந்த சங்க இலக்கியங்களில் ஆதிச்சநல்லூர் பற்றிய குறிப்புகள் இல்லை. கொற்கை, திருச்செந்தூர், பொதிகை மலை இவற்றைப் பற்றிய குறிப்புகள் மூன்றாம் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் இருப்பதால், மூன்றாம் தமிழ்ச்சங்கம் தோன்றி மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே, அதாவது, கொற்கையினைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சிபுரிந்த இரண்டாம் தமிழ்ச்சங்கக் காலத்தில் ஆதிச்சநல்லூர் நாகரிகம் இருந்திருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகிறார். அதற்கொப்பவே ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளின் காலம் கி.மு. 4000 வரை முன்னோக்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது.[13] சங்க இலக்கியக் காலத்தின் முன் எல்லை 2300 ஆண்டுகளாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், கீழடியில் எழுத்துருப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கிடைத்து எழுத்துருவின் காலத்தையும், அதன்வழி சங்க இலக்கிய முன் எல்லைக் காலத்தையும் 2600 ஆண்டுகள் என நிறுவ வழிகோலி உள்ளன. இந்தக் காலத்தைக் கொற்கை அகழ்வாய்வில் கிடைத்த தமிழி எழுத்துரு கொண்ட பானை ஓடுகள் கி.மு. 780-க்கு முன்னெடுத்துச் சென்றுள்ளன. இந்திய அகழ்வாய்வுகளில் எழுத்துரு கொண்ட பானை ஓடுகள் எங்கும் கிடைக்காத நிலையில், தமிழகத்தில் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 175 இடங்களில் 37 இடங்களில் தமிழி எழுத்துருக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவையெல்லாம் தமிழி எழுத்துரு முறை 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறைத் தெளிவாக்குகின்றன.[14]  ஆதிச்சநல்லூர் தாழிகளில் பழந்தமிழ் எழுத்துகள் இருந்தன. ‘கதிரவன் மகன் ஆதன்’ என்று பொருள் தரக்கூடிய எழுத்துகள் ஒரு தாழியில் காணப்பட்டதாக 2004 ஆம் ஆண்டு அகழ்வாய்வு செய்த மத்தியத் தொல்லியல் துறை இயக்குநர் தியாக. சத்தியமூர்த்தியும், கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி. சம்பத்தும் தெரிவித்தனர். கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனும் அவ்வெழுத்துகள் அரப்பா கால எழுத்துகளைப் போல இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார் (Front line, 01.07.2005). ஆனால் அவை யாவுமே பின்னாட்களில் மறுக்கப்பட்டன. அப்படி எழுத்துகளே காணப்படவில்லை என்றும், அவை சாம்பல் கீறல்களே என்றும் கூறப்பட்டது. தமிழி எழுத்துருவின் காலம் அசோகன் பிராமியைவிட முற்காலத்திற்குச் செல்வதால் இவை மறைக்கப்படுகின்றன என்று நடன. காசிநாதன் தனது ‘தமிழகம் – அரப்பன் நாகரிகத் தாயகம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.[15] இந்தக் காலஎல்லை, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கை வெளிவந்தால், இன்னும் முன்னோக்கிச் செல்லும் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்பாடு:
      பழந்தமிழர்ப் பண்பாட்டில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கம் மட்டுமே இருந்திருக்கிறது. இனக்குழுக் காலத்தில் கூட இறந்தோர் உடலை வெட்டவெளியில் கிடத்திப் பின் எலும்புகளைச் சேகரித்து மண்பானையில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள் சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்திருப்பதைத் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.[16] இதனுடைய நீட்சியாகவே முதுமக்கள் தாழி புதைக்கும் வழக்கத்தைக் கூறலாம். தமிழர்களின் இவ்வழக்கம் சிந்துவெளி வழி பாலஸ்தீனம், சிரியா வரை பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கி.மு. 15ஆம் நூற்றாண்டு வரையும் பழக்கத்தில் இருந்திருக்கிறது. தாழி அடக்கமுறைகளில் பின்பற்றப்பட்ட சடங்கு முறைகளும் கூட பாலஸ்தீனம், கிரேக்க, ரோமானிய நாடுகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. இறந்தவர் நெற்றியில் காசு, பட்டம் வைக்கும் சில சடங்கு முறைகள் அப்படியே பின்பற்றப்பட்டது மட்டுமல்ல, பிறநாட்டின் பரிமாற்றப்பட்ட காசுகளும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பவானி, நொய்யல் ஆற்றுப் பகுதிகளில் கிடைத்துள்ள  தாழிகளில் ரோமானிய காசுகள் கிடைத்துள்ளன. எகிப்திய பிரமிடுகளுக்கு முன்பாகவே தலைவன் அல்லது அரசன் இறந்தபின்னும் வாழத்தேவையான பொருட்கள் உடன் வைத்துப் புதைக்கும் வழக்கம் தமிழரின் தொன்மைப் பண்பாடாக இருந்துள்ளது. இத்தனை நீண்ட பரவல் இந்த நாடுகளுக்கிடையேயான வணிகப் பரிமாற்றத்தையும் குறிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலகின் பிற மூத்த இனங்களின் மண்டை ஓடுகளும் ஆதிச்சநல்லூர்த் தாழிகளில் கிடைத்திருக்கின்றன.[17]


      சுட்ட செங்கற்களால் வீடு, கோட்டை, மாளிகை கட்டும் வழக்கம் ஆதிச்சநல்லூரிலிருந்து சிந்துவெளி வரை பரவிக் கிடக்கிறது. தலைவர்கள் மாளிகை மற்றும் கோட்டைகளில்  வசிக்க, மக்கள் நீள்சதுர வீடுகளில் வசித்தனர். இந்த அமைப்பு முறையே சிந்துவெளி நகர நாகரிகத்தில் மேல்மேற்கு, கீழ்கிழக்கு முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[18]

      ஆதிச்சநல்லூர் மக்கள் இரும்பு, செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களின் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, எல்லா உலோகப்பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடமாக ஆதிச்சநல்லூர் மட்டுமே அறியப்பபட்டிருப்பதாகத் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. இந்நிறுவனம் 2004 ஆம் ஆண்டில், மத்தியத் தொல்லியல் துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆதிச்சநல்லூரில் கனிமங்கள் பற்றி ஆராய்ந்தது. அந்நிறுவன ஆய்வறிக்கையின்படி ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் ஆறுமீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டு இரும்புக் கனிமங்கள் எடுக்கப்பட்டதாகவும், பின் அந்தக் குழிகளையே முதுமக்கள் தாழிகளைப் புதைக்கப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்றும் தெரிய வருகிறது. இரும்பினில் போர்க்களக் கருவிகளும், வேளாண்மைக்குத் தேவையான கருவிகளும் செய்யப்பட்டுள்ளன. தேனிரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகிய இரும்பு வகைகளில் பானைத்தொழில், பயிர்த்தொழில், நெசவுத் தொழில் ஆகியவற்றிற்கான கருவிகளைச் செய்துள்ளனர்.

      இரும்பின் வளர்ந்த நிலைப் பயன்பாட்டால் கப்பல் கட்டும் தொழில் இங்கு முழுவீச்சில் நடைபெற்றுப் பிற நாடுகளுடன் வணிகத் தொடர்பும் பெருமளவில் நடைபெற்றிருக்கின்றன. தென்னிந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருட்களே எகிப்துக்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.[19] மேலும்,  ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கும் இரும்புப் பொருட்கள் ஏற்றுமதி நடந்து வந்தது. எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டிலிருந்துதான் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்பதும், இரும்பின் உபயோகத்தை இந்தியாவில் முதன்முதலில் அறிந்த பகுதி ஆதிச்சநல்லூர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கும் கிருட்டினாபுரத்திலும் அக்காலத்திலேயே நிலத்தின் மேற்பகுதியில் நீண்ட தொலைவுக்கு இரும்புச் சுரங்கங்கள் இருந்ததையும், சுரங்கத் தொழில் நடைபெற்றதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.[20] அதேபோல வெண்கலத்தில் குடுவைகள், சாடிகள், கிண்ணங்கள், விலங்கு உருவங்கள், மனித உருவங்கள், மகளிர் ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளன. வெண்கலப் பொருட்கள் தயாரிப்பில் மிக உயர்ந்த தொழில் நுட்பத்தை இங்கு வாழ்ந்திருந்தவர்கள் பெற்றிருந்தனர் என்றும், அதனாலேயே கலையழகு மிக்க மிகச் சிறந்த வெண்கலப் பொருட்களைத் தயாரித்து வந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கத்திலும் ஆபரணப் பொருட்கள் செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தில் ஆர்சனிக் என்ற உலோகமும் கலந்து பொருட்கள் செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவில் ஆதிச்சநல்லூரைத் தவிர்த்து வேறு எங்கும் காணப்படவில்லை என்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.[21]

ஆதிச்சநல்லூர் மக்கள் உழவின் பயன்பாட்டை அறிந்து தங்கள் உணவில் நெல், சாமை போன்ற தானியங்களைப் பயன்படுத்தி உள்ளனர். உழவுக்கான பலவிதப் பொருட்கள் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழிகளில் தானியங்கள் வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. பருத்தியை விளைவித்து ஆடைகளை அழகுற நெய்து உடுத்தி உள்ளனர். அழகு சாதனப் பொருட்களும் கிடைத்து அவர்களின் ஒப்பனைத் திறனை வெளிப்படுத்தி உள்ளன. அம்மிக்கல் போன்றவை தமிழரின் சமையல் கலை அன்று தொடங்கி இன்றுவரை நீடித்து வருவதைக் காட்டுகின்றன. மேலும், ஆதிச்சநல்லூரின் பண்பாட்டுக் கூறுகள், சிந்துவெளி வழி உலகமெங்கும் பரவியிருந்ததை பல்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிந்து வெளியில் அகழ்வாய்வு செய்த பிரிட்டிஷ் இந்தியத் தொல்லியல்துறை இயக்குநராக இருந்த ராக்கல்தாஸ் பானர்ஜி, தனது ஆய்வுக் கட்டுரையில், “இந்தியாவின் மிகத் தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அறுந்துபோகாத ஒரு சங்கிலித் தொடர் போலத் திராவிடர்களின் பண்பாட்டுத் தொடர்பு உள்ளது. மனித நாகரிகம் இந்தியாவின் தென் கோடியிலிருந்து வடஇந்தியா முழுவதும் பரவியது. பலுசிஸ்தான் வழியாகப் பாரசீகம், ஈரான், பக்ரைன் தீவு, கிரீட் தீவு வரை சென்றுள்ளது” என்று கூறியிருக்கிறார். சிந்துவெளி வரலாற்றாய்வாளர் ஈராஸ் பாதிரியார், “மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இன்றும் வாழும் உழவர், செம்படவர், பிற தொழிலாளர் வாழ்வில் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியைக் காண்கிறேன்” என்று தன் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்.[22] மேலும், சங்க இலக்கியங்கள் கூறும் அகம், புறம் என்ற காதல் மணம், போர்க்குணம் நிறைந்த வாழ்க்கை முறைக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வெளிப்படுத்தும் வாழ்வியல் முறைக்கும் பெரும் ஒற்றுமை காணப்படுவதும் நோக்கத்தக்கது.

சமயம்:
        இந்தியாவிலேயே மிகவும் பழமையான, சிந்துவெளி நகர நாகரிகத்திற்கு இணையான நாகரிகமாக ஆதிச்சநல்லூர் திகழ்கிறது. இனக்குழுக்கள் கால முன்னோர் வழிபாடுதான் இப்பகுதிகளில் முதன்மை யாக இருந்திருக்கிறது. தொடர்ந்து தாய்த்தெய்வ வழிபாடுகளுக்கான தடயங்கள் பலவும் கிடைத்திருக்கின்றன. அலெக்சாண்டர் ரீயின் அகழ்வாய்வில் வெண்கலப் பெண் சிலை கிடைத்திருக்கின்றது. இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓட்டுப் புடைப்புப் பொறிப்பில் பெண் உருவத்துடன் விலங்கு, பறவை, நெல்கதிர் உருவங்களும் காணப்படுகின்றன. இவை தாய்த் தெய்வ வழிபாட்டை உறுதிப்படுத்துகின்றன. இதுவரை தமிழ்நாட்டினில் தமிழகத் தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட 40 அகழ்வாய்வு இடங்களிலும் முன்னோர் வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாட்டைத் தவிர வேறு சமய வழிபாடுகளுக்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. பழந்தமிழர் வழிபாட்டில் நடுகல் வழிபாட்டைத் தவிர வேறு எவ்வித வழிபாடும், கடவுளரும் இல்லை என்பதே சங்க இலக்கியக் கொள்கையாக உள்ளது. பகைவர் படைகளை முன்னின்று எதிர்த்து, யானைகளைக் கொன்று, தானும் வீழ்ந்த வீரர்களுக்கு அமைக்கப்பட்ட நடுகற்களுக்கு நெல்தூவி வழிபடுதல் அல்லாது, நெல்தூவி வழிபடக்கூடிய வேறு கடவுள் எதுவும் இல்லை என மாங்குடிக் கிழார் என்னும் புலவர் சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூலில் (புறநானூறு – 335) குறிப்பிடுகிறார். சமயங்கள் உருவான காலத்திற்கும் முற்பட்ட பழந்தமிழர் நாகரிகத்தைத்தான் சங்க இலக்கியங்களும் கட்டமைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
   
தொகுப்புரை:
      தமிழர்கள் தொன்மையான மாந்த இனத்தினர் என்பதும், தமிழ் மொழி உலக மொழிகளுள் மிகவும் தொன்மையானது என்றும் பல காலங்களில் பல்வேறு அறிஞர்கள், ஆய்வாளர்கள் தெரிவித்து வந்துள்ளனர்.[23] அதற்கான அகச்சான்றுகளாகத் தமிழ் மொழியில் சங்க இலக்கியங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், புறச்சான்றுகளாகத் தமிழர் பண்பாட்டினை வெளிப்படுத்தும் நகர நாகரிகங்களை அண்மையில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அதே நேரம், இந்த அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பல்வேறு நாடுகளிலும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து ஆதிச்சநல்லூரில் அமையவிருக்கும் அருங்காட்சியகத்தில் வைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பங்கு உள்ளது.[24]

   
      இந்தியா மதவழியில் மேலாதிக்கம் கொண்ட சமுதாய அமைப்பினில் பல நூறு ஆண்டுகள் இருந்து வந்ததால் வரலாறு வளைக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் காலங்காலமாய் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் இந்தியத் தொல்லியல் துறையும், தமிழக அரசின் தொல்லியல் துறையும் நடத்திவரும் அகழ்வாய்வுகளில் தமிழ்ச் சமுதாயத்தைத் தொன்மையான சமுதாயமாக அடையாளப்படுத்தும் வழிகளில் தொல்பொருள்களும், பழமையான கட்டிட அமைப்புகளும் கிடைத்து வருகின்றன. காலம், இனம், மொழி, பண்பாடு, சமயம் ஆகிய கூறுகளின் வழி, தமிழ்மொழியின் காலம் முதன்மை நிலை அடைவதை மேலாதிக்கச் சமுதாயக் கட்டமைப்பினில் சிக்கி இருக்கும் இந்திய அரசு விரும்பாத போக்கு இன்றுவரையும் நிலவி வருகிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்படாத நிலை குறித்துத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம், “தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லாமல் இருப்பதுபோல் தெரிகிறது. இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று முத்தாலங்குறிச்சி காமராசு போன்றோர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் 15.02.2019-இல் கூறியிருப்பது நோக்கத்தக்கது.[25]
   
      இந்நிலையில் தற்போது (பிப்ரவரி 2020) ஆதிச்சநல்லூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழ்வாய்வு மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் (2020–2021) ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி மத்திய அரசு அறிவித்திருந்த ஒருசில நாட்களில், இக்கட்டுரை உருவாக்கம் பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அருங்காட்சியகம் மற்றும் வேலி அமைக்க ஆதிச்சநல்லூர் பறம்பில் பெரிய இயந்திரம் கொண்டு தோண்டியதில் காலத்தால் தொன்மைவாய்ந்த பல தாழிகள் சிதைக்கப்பட்ட செய்தி வரலாற்றார்வலர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட தாழிகள் நொறுக்கப் பட்டிருப்பதைப் படத்துடன் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.[26 ]இந்நிலையில் மீண்டும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், கீழடி உள்ளிட்ட பல இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழ்வாய்வைத் தொடங்கி உள்ளது. இந்த அகழ்வாய்வின் அறிக்கைகளும், முன்னர் கிடப்பில் இருக்கும் அகழ்வாய்வு அறிக்கைகளும் நேர்மையாக வெளியிடப்படுமாயின் தமிழர்கள் பெருமைப்படத்தக்க அளவிலேயே அவை அமையும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

அடிக்குறிப்புகள்:
1.  ஜெயக்குமார்.கோ, தமிழ்மணம், varalaru.blogspot.com, 2.08.2013.
2.  ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும் பேரும், சென்னை, 2006, பக் .28.
3.  Dinamani, 4.4.2019.
4.  இதேபோன்று ஆறு கடலோடு கலக்கும் கழிமுகப் பகுதிக்கு முன்னால் உள்ள மருதநிலப் பகுதி, நல்லூர் என இடைக்கழி நாட்டுப் பகுதியிலும் வழங்கி வருகிறது. சங்க இலக்கியங்களில் எயிற்பட்டினம் என்று வழங்கப்படும் இன்றைய மரக்காணத்தை அடுத்துள்ள இரண்டு கழிமுகத்துவாரப் பகுதிகளுக்குள் அமைந்துள்ளது, இடைக்கழிநாடு. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப் படை நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Francis Cyril Antony (ed.), Gazetteer of India, vol II, Union Territory of Pondicherry, 1982, p. 1524 / இக்கட்டுரை ஆசிரியரின் கள ஆய்வுகள். 
5.  Excavations of Archaeological site in Tamil Nadu (1969 – 1995), Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, 2004, P46-56 / தொல்தமிழ், சதக்கத் ஆய்விதழ் சிறப்புப் பதிப்பு, அக்டோபர் 2019, ப.73, 97. / அமுதன், ஆதிச்சநல்லூர் – கீழடி, மண்மூடிய மகத்தான நாகரிகம், 2017, பக்.81 -91.
6.  The Hindu, 03-02-2020.
7.  ta.m.wikipedia.org.
8.  கல்வெட்டு, 19.04.2015 / m.facebook.com / tarr
9.  The Hindu, 06.04.2019 / தினமணி, 04.04.2019.
10.  BBC News Tamil, 05.04.2019 / bbc.com
11.  கல்வெட்டு, 19.04.2015 / m.facebook.com / tarr
12.  முனைவர் சிவ.இளங்கோ, சிந்துவெளி அவிழும் முடிச்சுகள், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், 2019, ப.7.
13.  BBC News Tamil, 05.04.2019 / bbc.com
14.  தொல்தமிழ், op.cit., p.74, 99.
15.  ஏர் இதழ் – 2019 / erithazh.blogspot.com
16.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கச் சிறப்பு மலர், தமிழ்நாடு அரசு, 2010, ப.7.
17.  ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளில் கிடைத்த மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகளின் எண்ணிக்கை குறித்துப் பல்வேறு செய்திகள் உள்ளன. அவரவரும் தங்கள் ஆவலில் ஆய்வுசெய்து, கிடைத்தவற்றைத் தங்களோடு எடுத்துச் சென்றதே இதற்குக் காரணம். இதனால் அங்குக் கிடைத்த ஒருசில மண்டை ஓடுகளை வைத்து, திராவிட இனம் சார்ந்த மண்டை ஓடுகள் எட்டு விழுக்காடு அளவில் உள்ளன என்றும் கருத்துரைக்கின்றனர். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ஆறு மண்டை ஓடுகளும் 3000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மை வாய்ந்தவை. அதிலொன்று ஆஸ்திரலாய்டு இனக்குழுவை ஒத்திருக்கிறது. அதே நேரம் ஆஸ்திரலாய்டு – திராவிட இனங்களின் நெருங்கிய தொடர்பினை ஆய்வாளர் ஹக்சுலி குறிப்பிட்டுள்ளார். தொல் ஆஸ்திரேலிய இனம், தொல் திராவிட இனம் (புரோடோ-திராவிடர்கள்), தென்னிந்திய மலைவாழ் இனம், வேடர்கள் மற்றும் சகாய் இனக் குழுக்களின் மண்டை ஓட்டுத் தோற்ற ஒற்றுமையை, எலியட் ஸ்காட்டின் அறிக்கையை மேற்கோள்காட்டி ஆதிச்சநல்லூர் மண்டையோடுகள் குறித்து ஆராய்ந்து எழுதிய சக்கர்மேன் விளக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கிடைத்த தல்காய் இன மண்டையோடு மற்றும் உடலமைப்புடன் புரோடோ - திராவிடர்களின் உடலமைப்புகள் ஒத்திருக்கின்றன என்றும் சக்கர்மேன் நிறுவியுள்ளார். இவை தவிர, ஆப்பிரிக்க நீக்ராய்டு இனக்குழு மண்டை அமைப்பு, ஐரோப்பிய கிரிமால்டி இனக்குழு மண்டை அமைப்பு ஆகியவற்றை ஒத்த மண்டை ஓடுகளும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகளில் அடக்கம். பன்னாட்டுத் தொல் குடிமக்களின் மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் புதைந்து கிடைப்பதானது, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கடந்து வணிகப் பரிமாற்றம் செய்த தொல்குடிகள் ஒரே சமூகமாக வாழ்ந்த இடம் தமிழகம் என்பதற்கான தொல்லியல் சான்றே ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பதை நிரூபிக்கின்றன. (Source: https://www.facebook.com, Nivedita Louis, Referred by தேமொழி, தமிழ் மரபு அறக்கட்டளை, 24.09.2019).
18.  ஆர். பாலகிருஷ்ணன், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், 2017, p.60. 
19.  http.//keetru.com / 14.03.2014. (Reffering the research paper presented by J.M.Heath at The Journal of the Royal Aisatic Society of Great Britain and Ireland, Vol.5, No:2, Cambridge University Press, 1839, pp.390-397).
20.  https://www.jstor.org/stable/pdf/25207527.pdf / முத்தமிழ் வேந்தன், ஆதித்தநல்லூர் புகழ்பெற்ற சுரங்கத் தொழில் நகரம், source:https://www.facebook.com /story.php (based on அ.இராமசாமி, தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, 2013, பக்.88-93), Referred by தேமொழி, தமிழ்மரபு அறக்கட்டளை, 25.09.2019.
21.  தொல்தமிழ், op.cit., pp.74,99,100 – 101.
22.  மருதநாயகம் ப, தேவநேயப் பாவாணர் சொல்லாய்வும் சொல்லாடலும், இராச குணா பதிப்பகம், சென்னை, 2017; ப.45, 46.
23.  தினத்தந்தி, 06.11.2019.
24.  1876 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜாகோர் நடத்திய அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்று பெர்லினில் உள்ள வோல்கர்குண்ட், ஹேம்பர்க் அருங்காட்சியகத்தில் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் அவை என்னென்ன என்று அறியும் பட்டியலையோ அல்லது அந்தப் பொருட்களையோ யாரும் பார்த்ததில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் அமைப்பை நடத்தி வரும் முனைவர் க. சுபாஷினி, இதுகுறித்த புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 04.10.2019 அன்று நடைபெற்ற தொல்தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கில் சுபாஷினி பேசும்போது, பெர்லினில் 99 அருங்காட்சியகங்கள் இருப்பதாகவும், இதற்கான தேடலில் ஈடுபட்டபோது, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுப் பொருட்கள் ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் (Asian Art Museum) இருக்கும் செய்தியை அறிந்ததாகவும், அவையும் காட்சிப்படுத்தப் படாமலும், கட்டுகள் பிரிக்கப்படாமலும் இருக்கும் நிலையைத்தான் தான் அங்கு அறிந்ததாகவும் கூறினார். அவருடைய நேர்காணல்  யூ டியூபிலும் உள்ளது. இணையதளம்: தமிழ் மரபு அறக்கட்டளை.
25.  இந்து தமிழ் திசை, 16.02.2019.
26.  Indian Express, 09.02.2020.


தொடர்பு:
முனைவர் சிவ.இளங்கோ,
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி- 605 011.
இந்தியா.
பேசி: 99940 78907,
Mail ID: ilangosiva57@gmail.com

கலைஞரைக் கவர்ந்த செங்கம் கல்வெட்டு

கலைஞரைக் கவர்ந்த செங்கம் கல்வெட்டு

——   மா.மாரிராஜன்

கல்வெட்டு காலாண்டிதழ்; தொல்லியல்துறையின் பருவ இதழ் வெளியீடுகளில் மிகவும்  சிறப்பான ஒன்று கல்வெட்டு காலாண்டிதழ். 1974 ஆம் ஆண்டு முதல் இவ்விதழ்  45 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவருகிறது. பல்வேறு தொல்லியல் தரவுகளை உள்ளடக்கிய ஒரு நீண்ட காலமாக வெளிவந்த காலாண்டிதழ். இதன் முதல் இதழ் ஏப்ரல்14 ம் தேதி  1974 இல் வெளிவந்தது.

முதல் இதழில் முதல் தொல்லியல் கட்டுரையாக அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் "என்னைக் கவர்ந்த கல்வெட்டு" என்ற தலைப்பில் செங்கம் நடுகல் பற்றிய கட்டுரை வெளிவந்தது.என்னைக் கவர்ந்த கல்வெட்டு
தமிழக முதல்வர்

      செங்கத்தில் உள்ள சிலையின் படமொன்றை இங்கே காணலாம். அச்சிலை என்னை மிகவும் கவர்ந்தது. வீரனொருவன் நிற்கின்றான். அவன் பின்னால் ஒரு நாய் நிற்கிறது. இதுதான் அந்தச் சிலையின் அமைப்பு. பல்லவர்களிலே பெரும் புகழ் பெற்ற மன்னன் மகேந்திரவர்மன் காலத்தியது அது. எருமைப் பண்ணையின் காவலன் அவன். அவனைக் கள்ளர்கள் வீழ்த்திவிடுகிறார்கள். வீரனுக்குத் துணையாக நின்ற நாய் அந்த அடி பட்ட வீரன் விழுந்து கிடந்த இடத்திலேயே, அவனை அடித்து வீழ்த்திய கள்ளர்களோடு போரிட்டு, அந்தக் கள்ளர்களை வீழ்த்தி வெற்றி கண்டது. இதைக் கல்வெட்டாக ஆக்கியிருக்கின்றார்கள். இன்றைக்குச் சிலை வைத்து, சிலைக்குக் கீழே யார் தலைவர், யார் திறப்பாளர் என்று எழுதினால் கூட கோபித்துக் கொள்ளுகின்ற புண்ணியவான்கள் எல்லாம் நாட்டிலே இருக்கின்றார்கள் அன்றைக்கு ஒரு நாய் இரண்டு பேரை அடித்துக் கடித்துக் கொன்றது. அதற்கு ஒரு கல்வெட்டு எடுத்தான். நன்றி மறவாதது நாய் மாத்திரமல்ல, அந்தக் காலத்துத் தமிழனும் நன்றி மறவாதவனாக இருந்தான் என்பதைக் காட்டிக் கொண்டான் அந்தக் கல்வெட்டின் மூலமாக.


எவ்வளவு அழகான கல்வெட்டு
            "கோவிசைய மயீந்திர பருமற்கு"
அவர்கள் மகேந்திரவர்மன் என்று எழுதினார்களோ அல்லது மகீந்திரவர்மன் என்று எழுதினார்களோ, கல்வெட்டிலே இருப்பது
            "கோவிசைய மயீந்திர பருமற்கு முப்பத்து நான்காவது: வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கையார் இளமகன் கருந்தேவக்கத்தி"

      காவல் காத்த அந்த வீரனுடைய பெயர் கருந்தேவக்கத்தி என்பதாகும். மகேந்திரவர்மனுடைய காலத்தில், 34-வது ஆண்டில், வாணகோ என்கின்ற அரசருடைய மருமக்களான பொற்றொக்கையாருடைய இளமகன் கருந்தேவக்கத்தி,
            "தன் எருமைப் புறத்தே வாடிபட்டான் கல்”,
      எருமைகளைக் காப்பாற்றுகின்ற அந்த காவல் கூடத்தில் அவன் கொல்லப்பட்டான்.


      அந்த இடத்தில் " கோவிவன் என்னும் நாய்",  நாயினுடைய பெயரே கோவிவன்.  இப்பொழுது ஏதேதோ பெயர்கள் வைக்கிறோமே, ஆங்கிலப் பெயர்களை நாடி - அப்பொழுது,

            "கோவிவன் என்னும் நாய் இரு கள்ளரைக் கடித்து காத்திருந்த வாறு."

      இப்படி அந்தக் கல்வெட்டிலே எழுதப்பட்டுள்ளது ஒரு நாயினுடைய வீரச்செயல்; அதற்கு முந்தி தான் எடுத்துக் கொண்ட பொறுப்பை கடமையுணர்வோடு செய்து, அங்கே கொல்லப்பட்ட ஒரு வீரனுடைய வாழ்க்கையை இந்தக் கல்வெட்டிலே அன்றைக்கு காண்பித்திருக்கிறார்கள் என்றால் இது நம்முடைய பழங்கால மன்னர்களால், பழங்காலத் தமிழர்களால், தமிழ் நாட்டு மக்களால் எவ்வளவு போற்றப் பட்டிருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.


தொடர்பு: மா.மாரிராஜன் (marirajan93@gmail.com)
Saturday, March 28, 2020

சிதம்பரம் கோயிலில் சரஸ்வதி பண்டாரம்: ஒரு புதிய பார்வை

சிதம்பரம் கோயிலில் சரஸ்வதி பண்டாரம்: ஒரு புதிய பார்வை

 ——   முனைவர் ஆ.பத்மாவதி      சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் சரஸ்வதி பண்டாரம் என்ற ஒரு நூல் நிலையம் இருந்தது. இச்செய்தியை முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனது கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

      சரஸ்வதி பண்டாரம் என்றால் நூல் நிலையம் என்று பொருள். சரஸ்வதி என்பது நூல்களையும், பண்டாரம் என்பது கருவூலம் என்பதையும், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என்பதையும் குறிக்கும்.

      சிதம்பரம் சரஸ்வதி பண்டாரத்தில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இருந்தன. இந்த சுவடிகளைப் பார்த்து மீண்டும் புது ஓலைகளில் எழுதுவதற்கு இருபது பண்டிதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தமிழ் சுவடிகளையும், சமஸ்கிருத சுவடிகளையும் ஒப்பிட்டு எழுதும் பணியும் நடைபெற்று வந்தது. இந்த சுவடிகளில் “சித்தாந்த ரத்னாகரம்”- என்ற சுவடி நூல் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. நூல் நிலையத்தை நிர்வாகம் செய்வதற்கு, பாண்டிய மன்னன் காலத்தில் நிலம் தானமளிக்கப்பட்டிருந்தது. நூல் நிலையத்தைச் சரிவரப் பராமரிப்பது, விரிவுபடுத்துவது, பண்டிதர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எடுத்து எழுதுவது போன்ற  பணிகளைக் கவனித்து வந்தவர் சுவாமி தேவர் என்பவர். இச் செய்திகளை எல்லாம் கூறும் பாண்டிய மன்னனின் காலம் கி.பி. 1251 முதல் 1284 வரை ஆகும்.

      சிதம்பரம் சரஸ்வதி பண்டாரத்தைப் பராமரித்து வந்த சுவாமி தேவர், சித்தாந்த ரத்னாகரம் எழுதியவராக இருக்கலாமோ என எண்ணத்தோன்றும். அப்படி நினைப்பதில் தவறொன்றுமில்லை. இவர்தான் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு ராஜகுருவாகத் திகழ்ந்தவர். இம்மன்னன் காலத்தில்தான் இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். எனவே இந்த சரஸ்வதி பண்டாரம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திற்கு முன்னமேயே மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் இயங்கி வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் காலம் கி.பி. 1178 முதல் 1218 வரை ஆகும்.

      சேக்கிழார் எழுதிய சைவ சமய நாயன்மார்களின் வரலாறு தான் பெரியபுராணம். சிதம்பரம் கோயிலிலிருந்துதான் பெரியபுராணத்தை எழுதினார் என்று கூறுகிறது திருமுறைகண்ட புராணம். அவர் சிதம்பரம் கோயிலைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? நாயன்மார்களின் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான மூலங்களும், சைவ சமயத் தத்துவ நூல்களும் நிறைந்த ஒரு அருமையான நூல் நிலையம் சிதம்பரம் கோயிலிலிருந்ததுதான் காரணமாக இருந்திருத்தல் வேண்டும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் முதல்மந்திரியாகப் பணிபுரிந்தவர். எனவே மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலேயே சிதம்பரத்தில் நூல்நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் காலம் கி.பி. 1133 முதல் 1150 வரை ஆகும்.

      மணவிற்கூத்தன் என்ற ஒரு சிற்றரசன், மூவர் முதலிகள் எனக்கூறப்படும் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் எழுதிய தேவாரப் பாடல்கள் அனைத்தையும் செப்பேடுகளில் எழுதி சிதம்பரம் கோயிலில் வைத்தான் என்று அக்கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அப்படியென்றால் இந்தத் தேவாரச் செப்பேடுகள் அங்குள்ள சரஸ்வதி பண்டாரத்தில் தானே வைக்கப்பட்டிருக்கும். அதனால் இந்த சிற்றரசன் வாழ்ந்த காலமாகிய, முதலாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலத்திலும் சரஸ்வதி பண்டாரம் இயங்கிக் கொண்டிருந்தது என்றுதானே பொருள். முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1070 முதல் கி.பி. 1122 வரை ஆட்சி புரிந்தவனாவான்.

      இன்று நமக்குக் கிடைக்கும் முதல் மூவரின் தேவாரத் திருமுறைகள் சிதம்பரத்திலிருந்து எடுத்த ஏட்டுப்பிரதிகளின் நகலாகும். கண்டுபிடித்துத் தொகுத்து அளித்தவர்கள் முதலாம் இராஜராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பி என்ற கல்வியாளரும் ஆவார். இவர்கள் சிதம்பரம் கோயிலில் மூடிக்கிடந்த ஓர் அறையினுள்ளிருந்து எடுத்தார்கள் என்கிறது திருமுறைகண்ட புராணம். இந்தச்சுவடிகள் ஏன் சிதம்பரத்தில் வைக்கப்பட்டிருந்தன? அங்கு நூல்நிலையம் இருந்த காரணத்தினால் தான் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

      இந்த சரஸ்வதி பண்டாரம் சிதம்பரம் கோயிலில் எந்த இடத்திலிருந்தது? “மன்றுளாடும் கூர்த விருட் கண்டர் புறக்கடையின் பாங்கர், ஆர்ந்த தமிழிருந்தவிடம்” என்று கூறும் திருமுறைகண்ட புராணம்.  மற்றொரு பாடலில் “ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல் பால்” இருந்தது என்றும் கூறுகிறது.

       திருமுறைகண்ட புராணம் கூறுவதைக் கொண்டு பார்க்கும்போது, சரஸ்வதி பண்டாரம் நடராஜர் கோயிலில் வடமேற்கிலிருந்தது என்பது தெரிகிறது. சரஸ்வதி பண்டாரம் பற்றிக்கூறும் சுந்தர பாண்டியனது கல்வெட்டு, மூன்றாம் பிரகாரத்தின் சுப்பிரமணியர் சன்னிதியின் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. எனவே திருமுறைகண்ட புராணம் கூறும் இடமும் சரஸ்வதி பண்டாரம் பற்றிய கல்வெட்டு உள்ள இடமும் ஒன்றாக இருப்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

      இராஜராஜ சோழன் காலத்தில் மூடிக்கிடந்த அறையினுள் உள்ள சுவடிகள் செல்லரித்துக்கிடந்தன, என்று கூறப்பட்டுள்ளதால் ராஜராஜன் காலத்திற்கு  முன்பிருந்தே இந்த சரஸ்வதி பண்டாரம் மூடிக்கிடந்திருக்கிறது. என்ன காரணத்திற்காக யாரால் மூடப்பட்டது என்பது தெரியவில்லை. மேற்கூறிய செய்திகள் மூலம் சரஸ்வதி பண்டாரம் ராஜராஜனுக்குப் பின்னர் வாழ்ந்த மன்னர்கள் காலத்தில் சிறப்பாக இயங்கி வந்திருக்கிறது என்பதால் மூடிக்கிடந்த அறையைத் திறந்த ராஜராஜன் காலம் முதல் அந்த சரஸ்வதி பண்டாரம் சரிவரப் பராமரிக்கப்பட்டு, செயல்பட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று கூறலாம்.

      ராஜராஜனுக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் சுந்தரர். இவர் எழுதிய திருத்தொண்டர் தொகையில் முதல் வரியிலேயே “தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்கிறார். சேக்கிழார் புராணத்தின் மூலம் தில்லையில் வாழ்ந்த அந்தணர்கள் மூவாயிரவர் என்று தெரிகிறது.  இவ்வாறு மூவாயிரவர், ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்று கூறப்பட்டு ஒரு குழுவாகச் செயல்பட்டு வந்த இடங்களில் எல்லாம் பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே சிதம்பரத்தில் கல்வி நிறுவனம் ஒன்று இருந்திருத்தல் வேண்டும். அந்த நிறுவனத்தின் நூல்நிலையம் தான் இந்த சரஸ்வதி பண்டாரம்.

      இங்கிருந்துதான் ராஜராஜன் உடன் சென்ற நம்பியாண்டார் நம்பி என்ற கல்வியாளர் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையையும் எடுத்திருக்கிறார். பின்னர் அதைப் பின்பற்றி நம்பி எழுதியதுதான் திருத்தொண்டர் திருவந்தாதி. சுந்தரர் காலத்திலேயே இங்கு ஒரு நூல்நிலையம் இருந்த காரணத்தினால் அவர் எழுதிய தேவார நூல்கள் அங்கு வைக்கப் பட்டிருந்தன. சுந்தரர் காலத்திலேயே தில்லை வாழ் அந்தணர்களால் நுால் நிலையம் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்று கூறலாம். இந்த நூல்நிலையத்தில் அதாவது சரஸ்வதி பண்டாரத்தில் அப்பரும், ஞான சம்பந்தரும் எழுதிய தேவாரப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன. முதலாம் ராஜராஜன், நம்பியாண்டார் நம்பியின் உதவியுடன் தேவாரங்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்தான். மூடிக்கிடந்த சரஸ்வதி பண்டாரத்தை. ராஜராஜனே திறப்பு விழா செய்தான் என்பதை உமாபதி சிவாச்சாரியார் திருமுறைகண்ட புராணத்தில் 'பண்டாரந் திறந்து விட்டான் பரிவு கூர்ந்தான், என்கிறார்.
தொடர்பு:
முனைவர் ஆ.பத்மாவதி, மேனாள் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்
(drepipadma@gmail.com)Tuesday, March 24, 2020

நெடுந்தீவின் செவி வழி வரலாறு

நெடுந்தீவின் செவி வழி வரலாறு

——   வ.ஐ.செ.ஜெயபாலன்     நெடுந்தீவுக்கு முதன் முதலில் தென்னிந்தியக் குடியேறிகள் வந்தபோது (எல்லா குடியேற்றங்களும் தனிநாயக முதலி வரவு எனப் பொதுப்பட அழைக்கப்படுகிறது), நெடுந்தீவில் வாழ்ந்த ஆதிக்குடிகளின் இரண்டு தலைவர்களுக்கும் ”தனிநாயக முதலிக்கும்” பேச்சு வார்த்தை நடந்ததுபற்றி சொன்னார்கள். இக்கதை தெரிந்த ஒருசிலர் இப்போதும் இருக்க வாய்ப்புள்ளது. ஒரு தலைவன் பெயர் ’கிடந்தான்’ என ஞாபகம். முதியவர்களை யாராவது இதுபற்றி தகவல் கேட்டு எழுத வேண்டுகிறேன்.

     கதைகள் பலவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது நெடுந்தீவு (Delft Island)  பௌத்தர்களின் இரகசிய பின்தளமாக இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. முக்குவர்கள் (வெடியரசன் முக்குவ தலைவர்களின் பொதுப்பெயர் ) அரசபகையால் பாதிக்கப் பட்டவர்களை (பௌத்தர்களை என நினைக்கிறேன்) படகுகள் மூலமாக நெடுந்தீவுக்கு கொண்டுவர,  நெடுந்தீவு மூலமாக இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். முக்குவருக்கும் மீகாமன் படைகளுக்கும் (கரையார் தலைவர்களின் பொதுப்பெயர்) மோதல்கள் பற்றியும் பௌத்த பிக்குணிகள் கரை இறங்கும்போது கடற்கரை வரைக்கும் பந்தல் போடப்பட்டது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று டச்சு கோட்டையுள்ள இடத்தில் முதலில் மீகாமன் கோட்டை இருந்ததாம். நெடுந்தீவு மக்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த சிக்கல் முக்குவர்களின் அகதிப் படகுகளின் தளமாக நெடுந்தீவு இருந்ததுதான். அரச பகையால் வெளியேறியவர்களும் மத மோதல்களாலும் வெளியேறிய பெளத்த அகதிகளை இலங்கைக்குத் தப்ப வைத்ததில் முக்குவர் பங்கு ஆராயப்படவேண்டும். 

     முக்குவர்களுக்கும் சோழர் கடற்படையிலிருந்த கரையாருக்கும் இடையிலான மோதல்கள்தான் நெடுந்தீவு புத்தளம் மட்டக்களப்பில் வழங்கும் பல்வேறு வெடியரசன் கதைகளின் மூலம் எனத் தோன்றுகிறது. நான் கேட்ட செவிவழிக் கதைகளும் என் ஆய்வுகளும் கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் பெரிய அளவு முக்குவர் வாழ்ந்திருக்கிறார்கள். கரையாருடனான மோதலில் புத்தளம் கிழக்கு மாகாணம் எனப் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி கணிசமான பகுதிகள் கரையோரங்களைவிட்டு உள்நாட்டுக்கு வந்து வெள்ளாளர்களோடு கலந்துவிட்டமையை உணர்த்துகிறது. தமிழ் பௌத்தத்துக்கும் முக்குவருக்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட வேண்டும்.

[யாழ்ப்பாண வெள்ளாளர் சமுகம் யாழ்ப்பாணத்தில் நில உடைமை பெற்ற உள்ளூர் மற்றும் ஆங்கிலேயரின் ஆரம்பக் காலம்வரை தமிழகத்திலிருந்து அடிமைகளோடு வந்து குடியேறிய பல்வேறு சாதிகளது ஒருங்கிணைவால் உருவானதாகும். இவர்களுள் போர்த்துக்கீச டச்சு ஆவணங்களில் அதிகம் குறிப்பிடப்படும்  மடப்பள்ளிகள் ஆவர். மடப்பள்ளிகள் பௌத்தர்களான முக்குவர் என்பது என் கருத்து. 1977ல் நான் யாழ்மாவட்ட சாதிகளை ஆராய்ந்தபோது மடப்பள்ளி வெள்ளாளர் என்கிற பெயரில் அவர்களை யாழ் பெருமாள்கோவில் வட்டாரங்களில் அடையாளம் கண்டேன். ஆய்வு மேற்கொண்டபோது அவர்கள் பெருமாளை வழிபடுகிறவர்களாக இருந்தார்கள். கரையாருக்கு அஞ்சி நயினாதீவில் இருந்து புத்தளம் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் முக்குவர்களுள் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாகிவிட்டார்கள்.]

     யாழ்ப்பாண மன்னரின் நண்பர்களும் போர்த்துக்கீசர் கடற்கொள்ளையர்களாகக் குறிப்பிடப்படும் குஞ்சாலி மரைக்காரின் பரம்பரைகள் (Mappila Muslim) நெடுந்தீவில் முகாமிட்டிருந்திருக்கிறார்கள். என் தாய்வழி முன்னோர் முஸ்லிம்களோடு சேர்ந்து போர்த்துக்கீசருக்கு எதிராகப் போராடி இருக்கிறார்கள். அதனால் எங்கள் தாயின் தந்தை வழி முன்னோர்கள் “கலிமா கூட்டம்” எனப் பட்டம் பெற்றனர். கடைசிக் குஞ்சாலி மரைக்கார் சிரச்சேதம் செய்யப்பட்ட பின்னர் அவர்களது மருமகன் டொம் பெட்ரொ ரொட்ரிக்கோ என போர்த்துக்கீச பெயர்பெற்ற சின்ன மரைக்கார் உதவியுடன் 1919ல் போர்த்துக்கீசரை நெடுந்தீவில் இருந்து சொற்ப காலம் துரத்தி இருக்கிறார்கள். இவர்கள் போரில்  இறந்துபோனாலும் தங்கள் நண்பர்களைச் சுவர்க்கத்தில் சந்திக்க வேண்டும் என்பதால் குஞ்சாலி மரைக்காரின் கடற்படையினர் அவர்களுக்குக்  காதுகளில் கலிமா ஓதி வந்திருக்க வேண்டும்.

     கச்சத்தீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு,  அனலைதீவு, ஊர்காவல்துறை தீவு, மண்டைதீவு, காரைதீவு வரைக்குமான ஒன்பது தீவுக்கூட்டங்களும் என் சின்ன வயதுகள் வரை ஊர்காவற்துறை நிர்வாகப் பிரிவுக்குள் இருந்ததில் ஊர்காவற்துறை என்கிற பொதுப்பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இதனால் போர்த்துக்கீச ஆவணங்களில் தனதீவா (Tanadiva Island) - ஊர்காவற்துறை என்கிற குறிப்புகள் ஊர்காவற்துறையை மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களில் நெடுந்தீவு உட்பட ஒன்பது தீவுக் கூட்டங்களுக்கும் பொதுப்பெயராகவும் பயன்பட்டுள்ளது எனத் தோன்றுகிறது. இதுபோல சங்க, சங்க மருவிய காலத்து மணிபல்லவம் என்றசொல் பௌத்தர்கள் இரகசிய பின்தளமாக பயன்படுத்திய தீவுக்கூட்டங்களைக்  குறிக்கும் பெயராகவும் பயன்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். ஆய்வுக்குரிய எனது ஊகம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

     சொற்ப காலம் நெடுந்தீவை இலங்கையின் தலைவாசலாகவும் பாக்கு நீரிணையின் காவல் கோட்டமாகவே சோழர்களும் முஸ்லிம்களும் போர்த்துக்கீசரும் டச்சுக்காரரும் கருதினார்கள் எனத் தோன்றுகிறது. தற்போது என் தந்தைவழி ஒன்றுவிட்ட சகோதரன் சசி நெடுந்தீவு பிரதேச சபை தலைவராக இருக்கிறார். அவர் நம்முன்னோர் சொல்லிய ஊர்க் கதைகள் தெரிந்த முதியவர்களை அடையாளம்காண உதவக்கூடும்.

பசுத் தீவு என்கிற நெடுந்தீவு (Island of the Cows):
     அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நெடுந்தீவில் முற்றங்களில்  பூங்கன்றுகள் போல வளர்க்கப்பட்ட எங்கள் ஊரின் பணியாமைக்கும் வீரத்துக்கும் அடையாளமான பண்டைய பருத்தி இனம் பெரும்பாலும் அழிந்து போயிற்று. நெடுந்தீவு மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்; எங்காவது குப்பை மேடுகளில் அல்லது காடுகளில் நெடுந்தீவுப் பருத்தி இனத்தைக் கண்டால் தயவு செய்து அதனை உங்கள் வீட்டிலும் பாடசாலைகளிலும் நட்டு வளர்த்துப் பாதுகாக்கவும். எங்காவது நூல் நூற்கும் ராட்டினம் போன்ற கருவிகள் இருந்தால் அவற்றைப் பாதுகாப்பதுடன் எனக்கும் அறியத்  தாருங்கள்.

     நெடுந்தீவுக்கு போர்த்துக்கீசர் வைத்த பெயர் Ilha das Vacas இது பசுத் தீவு என்கிற நெடுந்தீவின் பழைய பெயரின் மொழி பெயர்ப்பாகும். பதிவுகளில் பருத்தி தீவு என்கிற பெயரும் காணப்படுகிறது. நெடுந்தீவு காலம்காலமாக சிறந்த பருத்தி விளை நிலமாக இருந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகப்  பருத்திச் செய்கையும், ஆடு மாடு வளர்ப்புமே நெடுந்தீவின் செல்வமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஆசீவக பௌத்த சமண மதங்கள் கொலை வெறியுடன் அழிக்கப்பட்ட காலங்களில் படகுகளில் தப்பி வந்த அகதிகளுக்குச்  சோறிட்டுப்  புகல் அளித்து இலங்கையின் ஏனைய பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ வழி அனுப்பிவைத்த செல் விருந்தோம்பி, வரும் விருந்து பார்த்திருந்த அறம் நெடுந்தீவுக்கு உரியது.

     கலோனியர் கால பதிவுகள் பலவற்றில் நெடுந்தீவு மக்கள் பலர் நூற்றாண்டுக்குமேல் வாழ்வதுபற்றிய சேதி குறிப்பிடப்படுகிறது. அதற்குக் கள் முக்கிய உணவாக எல்லோராலும் உண்ணப்பட்டதே காரணம் எனச் சிலர் கருதினர். ஆனால் நீண்ட ஆயுளுக்குக் கள் காரணமென உறுதியாகச் சொல்லமுடியாது என 1929இல்  வெளிவந்த Romantic Ceylon நூலின்  ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவர் கருத்துப்படி நெடுந்தீவு மக்கள் அதிக காலம் வாழ்வதற்கு நல்ல பால், பனை ஒடியல் சாப்பாடு, கடல் காற்று, கவலையின்மை, மக்களின் அப்பாவி மனதுமே காரணம். அவர் தனது புத்தகத்தில் 160 வயது  குஞ்சிச்சியையும் 100 வயசு சின்னாசியையும் நெடுந்தீவில் சந்தித்ததுபற்றிக்  குறிப்பிடுகிறார். 98 வயசு வரைக்கும் குஞ்சிச்சி யாழ்ப்பாணத்திலிருந்த தனது உறவினர் வீட்டுக்குப் போய் வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இன்று எமக்கு ஒடியல் உணவுகளும் சின்ன மீன்களும் இனிப்புக்கள் அல்லது பதநீர் இவை எட்டாத பொருட்கள் ஆகிவிட்டனவே.

     அரேபிய மற்றும் மாப்பிள்ள முஸ்லிம் கப்பல் வாணிகர்களின் கொச்சி தமிழ்நாட்டில் வேதாளை (மண்டபம்) நெடுந்தீவு வர்த்தக கப்பல் வலைப்பின்னல் ஊடாக நெடுந்தீவு வர்த்தகம் செழித்தது. போர்த்துக்கீசருக்கு எதிரான கடற்போர்கள் நெடுந்தீவிலும் நடந்துள்ளது. டொன் பீத்ரோ றொட்றிகோ என போர்த்துக்கீசரால் அழைக்கப்பட்ட கடற்போராளி அலி மரைக்காருடன் சேர்ந்து நெடுந்தீவில் இருந்து சிலகாலம் போர்த்துக்கீசரை துரத்தி அடித்த வரலாறும் நெடுந்தீவுக்கு உண்டு. இத்தகைய போர்க் குணத்தின் ஆதாரம் பருத்திச் செய்கைதான். நெடுந்தீவின் வீரத்தின் அடையாளமான பருத்தியைத் தேடிக் கண்டுபிடித்துக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

     போர்த்துக்கீசர் முதலில் குதிரை வளர்க்க ஆரம்பித்ததுமே பருத்தி கிழக்கூரில் இருந்து சாறாப்பிட்டிவரை நீண்டிருந்த எங்கள் பருத்தி தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பருத்தி நூல் ஆடை வர்த்தகமும் டச்சுக் காரரின் ஏகபோகமானது. இதற்கு எதிராக எங்கள் மக்கள் கிளர்ச்சி செய்தனர். டச்சுக்காரர் நெடுந்தீவின் வளமான பருத்தி தோட்டங்கள் முழுவதையும் அழித்து குதிரைகளுக்கான புல்வெளியாக்குவதும், அதனை மீறி எங்கள் முன்னோர் பருத்தி செய்கையில் ஈடுபடுவதுமாக டச்சுக் காரர் காலம் பருத்திக் கலகக் காலமாகவே இருந்தது. இறுதியில் பருத்திச் செய்கையைத் தடை செய்து டச்சுக் காரர் கடும் சட்டம் போட்டனர்.  எங்கள் முன்னோர் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் முன்னோர் தமது பணியாமையின் அடையாளமாக வீடுகளில் பருத்தியை பூங்கன்றுகளாக வளர்த்தனர். இதன் மூலம் எங்கள் முன்னோரின் போராட்ட உணர்வும் பருத்தி விதைகளும் எதிர்காலங்களுக்காகக் காப்பாற்றப் பட்டது.

     1950ல் சின்ன வயசில் உடுவிலில் இருந்து என் தந்தையாரதும் தாய்வழிப் பாட்டனாரதும் ஊரான நெடுந்தீவுக்குக் குடிபெயர்ந்து சென்றபோது நெடுந்தீவு வீடுகளின் முற்றங்களில் பருத்தி பூங்கன்றாக வளர்க்கப் படுவதைக் கண்டேன். மூன்று நூற்றாண்டுகள் நெடுந்தீவு மக்களின் பணியாமைக்கும் வீரத்துக்கும் அடையாளமாகப் பாதுகாக்கப் பட்ட பருத்தியை எங்களால் பாதுகாக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடாகும். தயவு செய்து நெடுந்தீவு இளைஞர்கள் மீண்டும் எங்கள் வாழ்வின் வரலாற்றின் வீரத்தின் சின்னமான பருத்தியைத் தேடிக் கண்டுபிடித்து வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் வளர்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோளாகும்.

     அதுபோல நெடுந்தீவு பற்றிய கலோனியக் கால பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் தீவின் தாவரவியல் அடையாளங்களெனக் குமரி கற்றாளை, கர்ப்பூரப்புல், சிவப்பு கற்றாளை, காவோதி,  பனை என்பவை நினைவுக்கு வருகிறது. காவோதி வருடா வருடம் ஏலம் விடப்பட்டு யாழ்ப்பாணத்திற்குப் புகையிலை செய்கைக்கு உரமாக ஏற்றப்பட்டது பற்றிய கலோனியப்  பதிவுகள் உண்டு.  அரிய மருத்து பொருளான செங்கத்தாளை போர்க்காலத்திலும் பின்னரும் தென்னிலங்கை பயணிகளால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டது. இவற்றைத் தேடிக் காப்பாற்றுவது இளைஞ தலைமுறையினரின் தலையாய கடமையாகும்.

தொடர்பு:  
வ.ஐ.செ.ஜெயபாலன்
Jaya Palan 
https://www.facebook.com/jaya.palan.9
+91 99414 84253

Saturday, March 21, 2020

நீறு ஆடிய களிறும் வெண்கோயில் மாசும்—   முனைவர்.ப.பாண்டியராஜா


          பாடல்களில் வரும் உவமைகளில் சில கவிதைக்கு அழகூட்டும்; சில காட்சிக்கு மெருகேற்றும், இன்னும் சில புலவரின் கூர்த்த அறிவைக் காட்டும். இவை மூன்றுமே அமையப்பெற்ற ஓர் உவமையை இங்குக் காண்போம்.

                    அறம் நிலைஇய அகன் அட்டில்
                    சோறு வாக்கிய கொழும் கஞ்சி
                    யாறு போல பரந்து ஒழுகி
                    ஏறு பொர சேறாகி
                    தேர் ஓட துகள் கெழுமி
                    நீறு ஆடிய களிறு போல
                    வேறுபட்ட வினை ஓவத்து
                    வெண் கோயில் மாசு ஊட்டும் - பட் 43 - 50

          சோழநாடு சோறுடைத்து என்பார்கள். வற்றாத காவிரியால் வளம் கொழித்த அன்றைய சோழநாட்டில் ஒரு காட்சி இது. இன்றைக்குப் பஞ்சகாலத்தில் கஞ்சித்தொட்டிகள் அமைத்து, இல்லாதோர்க்கு உணவளிப்பர். அன்றைக்கும் இது போல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் காவிரி பாயும் நாட்டில் கஞ்சித்தொட்டிகளா? அவ்வளவு வறுமையா? என்று வியக்க வேண்டாம். உழைக்க முடியாதோரும், கவனிப்பார் இல்லாதோரும், சோற்றுக்கு வழியின்றிப் பிச்சையெடுத்துப் பிழைப்பர். இது அரசுக்கு இழிவானது. இந்த இழிவைப் போக்க, கரிகால்வளவன் தன் ஊர்களில் அட்டில்களை உருவாக்கினான். (அட்டில் = அட்டு + இல்) அடுதல் என்பது சமைத்தல் என்ற பொருள் தரும். எனவே அட்டில் என்பது சமையலறை என்ற பொருள் தரும் அழகிய சிறிய சொல். இன்றைக்கு நாம் அதைப் பெரும்பாலும் கிச்சன் (kitchen) என்றே சொல்லிப் பழகிவிட்டோம். சிறிது சிறிதாக இம்மாதிரிச் சொற்களைப் பயன்படுத்துவது நாம் தமிழுக்கு - நம் தமிழுணர்வுக்குச் செய்யும் தொண்டு ஆகும். 

          இந்த அட்டிலில் வடித்துக்கொட்டிய கஞ்சி ஆறு போல ஓடுகிறதாம். முன்பெல்லாம், சோற்றை ஆக்கி, வடிப்பார்கள். வடிக்காமல் ஆக்குவதைப் பொங்குவது என்பார்கள். விறகடுப்பில் இது சிரமமானது. சரியான பக்குவத்தில் இறக்கிவைக்காவிட்டால், சோறு அடிப்பிடித்துப்போகும்,  அல்லது வேகாமலோ, குழைந்தோ போய்விடும். எனவே, அரிசியை உலையிலிட்டு, நிறைய நீர் வார்த்து, கிண்டிக்கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது, அகப்பையால் எடுத்து வெந்துவிட்டதா என்று நசுக்கிப் பார்ப்பார்கள் (ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்).  சரியான பதத்துக்கு வந்தவுடன் மீதமுள்ள நீரை வடித்துவிடுவார்கள். அதற்கு, பாத்திரத்தின் மேல் துளையிட்ட ஒரு தட்டை மூடி, முன்புறமாக ஒரு சட்டியை வைத்து அதன் விளிம்பில் சாய்த்து வைப்பார்கள். எஞ்சியுள்ள நீர் எல்லாம் இறங்கிவிடும். இந்த நீரையே கஞ்சி என்பார்கள். பெரும்பாலும் இதை மாடுகளின் குழிதாளியில் ஊற்றிவிடுவார்கள். அல்லது பருத்தி ஆடைகளுக்கு விறைப்புக்காகப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு வடித்து விடுவதால், சோறு பெரும்பாலான சத்துகளை இழந்துவிடுகிறது என்பர் அறிவியலார்.

          மன்னன் அமைத்த அட்டில்களில் எந்நேரமும் சோறாக்கி வடித்துவிடுவதால், கீழே கொட்டிய கஞ்சி தெருக்களில் ஆறு போலப் பரந்து ஒழுகியதாம். இது மிகைப்படுத்தல் ஆகாதா? இல்லை. மாறாக வியப்பையும், பெருமையையும் தோற்றி நிற்பது. ஓர் அரசியல் நிகழ்ச்சிக்கு வந்த பெருந்திரளான கூட்டத்தைப் பார்த்துக் கடலெனத் திரண்ட கூட்டம் என்று வருணிப்பதோ, கண்கள் மிக்க நீர் சொரிந்தால், மழையெனப் பெருகிய கண்ணீர் என்று கூறுவதோ மிகைப்படுத்தல் ஆகாது. இது அன்றாட வழக்கு. நம் மரபுகளில் ஒன்று. சொல்லப்போனால், இப்போது சொன்னது இங்குள்ள ஒவ்வோர் அடிக்கும் பொருந்தும்.

          மாடுகள் கஞ்சியை விரும்பிக் குடிக்கும். வீட்டு மாடுகளை அவரவர்கள் பார்த்துக்கொள்வர். முந்தைய காலங்களில், ஒவ்வோர் ஊரிலும், சாமிக்கு நேர்ந்துகொண்டு, காளைக் கன்றுகளைப் படைப்பார்கள். இவற்றைக் கோயில் மாடுகள் என்பர். பார்ப்பதற்கு முரட்டுக்காளைகள் போல் தோன்றும். ஆனால் யாரையும் முட்டமாட்டா. அவை ஊர் முழுக்கச் சுற்றித்திரியும். அப்படிச் சுற்றித் திரியும் காளைகள் ஒன்றையொன்று பார்த்துவிட்டால், சீறியெழுந்து பாய்ந்து சண்டையிடும். அப்படிப்பட்ட காளைகள் இந்தக் கஞ்சியைக் குடிக்க வருகின்றன. போட்டியிருந்தால் சும்மா விடுமா? இவற்றின் சண்டையில், கஞ்சியும் மண்ணும்  கலந்து தெருவே சேறாகிவிடுகிறது. இந்தச் சேற்றின் மீது வேகமாகத் தேர்கள் ஓடிவந்தால் எப்படியிருக்கும்? பார்த்தவர்கள் பயந்துபோய் ஒதுங்கிக்கொள்வார்கள். அப்படி ஒதுங்கமுடியாத சுவர்களில் இந்தச் சேறு திட்டுத்திட்டாய்ப் படிகிறது. அரண்மனை அட்டில் அல்லவா? அதன் சுவர்கள் நன்கு வெள்ளை அடிக்கப்பட்டு அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டனவாய்த் திகழ்கின்றன. இந்த வெண்சுவற்றில் கருப்புக்கருப்பாகச் சேறு அப்பிக் கிடக்கிறது. இக்காட்சி, புலவருக்கு, சுண்ணாம்பைப் பூசிக்கொண்ட யானையைப் போல் தோன்றுகிறது. நீறு என்பது வெண்சாம்பல் என்ற பொருள் தரும். நெற்றியில் பூசிக்கொள்ளும் விபூதி என்பது திருநீறு - திருநீர் அல்ல.


          வெண்மையான சுண்ணத்துகளில் விழுந்தெழுந்த களிறு, கருமையான சேறு படர்ந்த வெண்சுவருக்கு உவமை.
உவமானம்          ←→          உவமேயம்
களிறு          ←→          சுவர்
சுண்ணம்          ←→          சேறு
இவ்வாறு நேர்நேராய் அமைந்த பொருள்களில் ஒரு முரண் இருப்பதைக் கவனித்தீர்களா?

களிற்றின் நிறம் கருப்பு          ←→          சுவரின் நிறம் வெள்ளை
சுண்ணத்தின் நிறம் வெள்ளை          ←→          சேற்றின் நிறம்.கருப்பு.

          அதாவது, வெள்ளை நிறச் சுண்ணம் பூசிய கறுப்பு நிறக் களிறு, கறுப்பு நிறச் சேறு படர்ந்த வெள்ளை நிற மதிலுக்கு ஒப்பாகிறது. இப்படி முரண்பாடான உவமையைக் கையாளலாமா?

          சாதாரணமாக, முகத்தில் தாடி, மீசை வைப்பது வழக்கம். சிலர் மிகப் பெரிய தாடி,மீசை வைத்திருப்பர். காதுவரை உயர்ந்த தாடி கன்னங்களையும் மறைத்து நிற்கும். மீசையோ மிக உயர்ந்து மேலுள்ள மூக்கையே மூடிவிடும். அப்படிப்பட்டவர்களைப் பற்றிக் கூறும்போது, தாடிமீசைக்குள் முகத்தை வைத்திருப்பவர்கள் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவது வழக்கம். இப்பொழுது உங்கள் ஐயம் தீர்ந்துவிட்டதா? இல்லையென்றால் விளக்குகிறேன்.

          வெள்ளையும் கருப்புமாக ஒரு யானை வந்தால் நமக்கு ஐயம் எழுவதில்லை. கரிய யானை வெள்ளையாக எதையோ அப்பிக்கொண்டு வந்திருக்கிறது என்போம். வெள்ளையும் கருப்புமாக ஒரு சுவர் இருந்தாலும் நமக்கு ஐயம் இல்லை. ஆனால், வெண்மையான சுவரில், ஏகப்பட்ட கருப்பு இருந்தால், வெள்ளைச் சுவரில் கருப்பு அப்பியிருக்கிறதா அல்லது கரிய சுவரில் யாரோ அங்கங்கே வெள்ளை தடவியிருக்கிறார்களா என்று வேடிக்கையாகக் கேட்போம். மிகப் பெரிய அளவில் கஞ்சி ஓடி, மிகப் பெரிய அளவில் சேறு உருவாகி, அதன் துகள்கள் மிகப் பெரிய அளவில், இது வெள்ளையாக இருந்த சுவர்தானா என்று நாம் வியக்கும் அளவுக்குப் படிந்திருக்கிறது என்பதை வலியுறுத்தவே புலவர் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் எனலாம்.

          இது தொடர்பான இன்னொரு கேள்வி. கருப்புக் குதிரைகள் உண்டு. வெள்ளைக் குதிரைகளும் உண்டு. வரிக்குதிரையின் படத்தைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளைக் குதிரையின் மீது கருப்புக் கோடுகளா அல்லது கருப்புக் குதிரையின் மீது வெள்ளைக் கோடுகளா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!தொடர்பு:
முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/


திருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும் ——    துரை.சுந்தரம்   


அவிநாசி:
            ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் அமைந்திருந்த ஊர் அவிநாசி. இது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் ஒரு புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.  விநாசம் என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு அழிவு என்பது பொருள்.  வினைக்கோட்பாடு என்னும் ஒரு மெய்யியல் கோட்பாடு உண்டு. நாம் ஆற்றும் வினைகளுக்கேற்ப நம் வாழ்க்கை அமையும் என்பது அதனுடைய எளிய விளக்கம். நல்வினை நன்மையையும், தீவினை தீமையையும் பயக்கும். விநாசம் என்னும் அழிவுக்கு எதிர்ச்சொல் அவிநாசம். நாம் ஆற்றிய தீவினைகளை அழித்து என்றும் அழியா நன்மையை (புண்ணியம்) நமக்கு அளிக்கும் அழிவிலாப் பூமியாக அவிநாசி ஊர் விளங்குவதால் அப்பெயர் பெற்றது எனலாம். அத்தகு ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஈசன் அவிநாசியப்பன். அவிநாசி என்னும் நிலையான பெயர் கொண்ட இவ்வூருக்கு ஒரு இயற்பெயர் இருந்தது. இப்பெயர் பலரும் அறியாப் பெயராகும். திருப்புக்கொளியூர் என்பதே அவ்வியற்பெயர். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் இவ்வூர்க் கோயிலுக்கு வந்து வழிபட்டுப் பாடிய தேவாரப் பதிகத்தில் ”திருப்புக்கொளியூர் அவிநாசி”  என்றே குறிப்பிடுகிறார். கி.பி. 1350-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இவ்வூரை  “வடபரிசார நாட்டுப் புக்கொளியூர்”  என்றே குறிப்பிடுகிறது.

அவிநாசிக் கோயிலின் பழமை:
            வரலாற்று ஆய்வாளர் குடந்தை சேதுராமன், சுந்தரரின் காலத்தை கி.பி. 700-728 எனக் கணித்துள்ளார். எனவே, அவிநாசிக்கோயில் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கொள்ளலாம். ஆனாலும், கோயில், கற்கட்டுமான அமைப்பைப்பெற்றுக் கல்வெட்டுகள் பொறிக்கப்படும் காலகட்டத்தைக் கொங்குச் சோழர்  ஆட்சியின்போதே அடைந்தது. காலத்தால் பழமையான கல்வெட்டு கொங்குச் சோழ அரசன் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்தது. (கி.பி. 1152).

கல்வெட்டுச் செய்திகள்:
            சிறப்பான செய்திகளைத் தாங்கிய பல கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. அவிநாசி, கொங்குநாட்டில் இருந்த நிருவாகப் பிரிவுகளான இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்றான வடபரிசார நாட்டில் அமைந்திருந்தது. இந்த நாடுகளுக்கு நாட்டுச் சபைகள் என்னும் நிருவாகச் சபைகள் இருந்தன.  இருப்பினும், வெள்ளானூர், பூலுவனூர் ஆகிய இரு ஊர்களுக்குத் தனித்து ஊரளவில் சபைகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.  இச்சபையினர் வரியாகக் கிடைத்த கம்பினை (கண்பு என்று கல்வெட்டு குறிக்கிறது) அவிநாசிக் கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர்.  கோயிலுக்கு அரசன் பசுக்களைக் கொடையாக அளித்த செய்தி, கொங்கு நாட்டில் இக்கோயில் கல்வெட்டில் மட்டுமே காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு, பாண்டிமண்டலத்தைச் சேர்ந்த காளையார்கோயில் அதளையூர் நாடாள்வான் என்னும் தலைவன் கோயிலுக்கு விளக்கெரிக்க காசுக்கொடை அளித்ததைக் கூறுகிறது. காளையார்கோயிலின் பழம்பெயர் திருக்கானப்பேறு என்பதாக இக்கல்வெட்டால் அறிகிறோம். இன்னொரு கல்வெட்டு, கோயிலில் பணி செய்து வருமானம் பெறுவதற்கான உரிமையான “காணி” யுடைய தச்சர், கொல்லர், தட்டாருக்கு அரசன் நேரடி ஓலை ஆணை பிறப்பித்துச் சில உரிமைகளை அளிக்கிறான் என்பதைக்கூறுகிறது. இவர்கள், தங்கள் வீடுகளில் நன்மை தீமை நிகழ்வுகளின் போது பேரிகை என்னும் இசைக்கருவியைக் கொட்டிக்கொள்ளலாம் என்பதும், சங்கு ஊதிக்கொள்ளலாம் என்பதும் அந்த உரிமைகளாகும். 16-ஆம் நூற்றாண்டு விஜய நகரர் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டு ஒன்று, குளம் வெட்டி, அதன்மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் வருவாயில் அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியில் பாதியை அவிநாசிக் கோயிலுக்கு அளித்ததைக் கூறுகிறது.  சுந்தரர் முதலை வாய்ப்பிள்ளையை மீட்ட நிகழ்வைக் குறித்து ஒரு கல்வெட்டு, “முதலைக் குளத்திலே முதலைவாய்ப் பிள்ளைக்கு”   என்று கூறுகிறது.

சீனக்குடை பற்றிய கல்வெட்டு:
            மிகச் சிறப்பான கல்வெட்டுச் செய்தி ஒன்றை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.  கொங்குச்சோழ அரசரில் வீரராசேந்திரன் காலத்துக் கல்வெட்டு ஒன்று.  கி.பி. 1222-ஆண்டில் பொறிக்கப்பட்டது. வடபரிசார நாட்டிலிருந்த பார்ப்பார் சான்றார்க்குச் சில உரிமைகளை வழங்கி அரசன் ஓலை வழி ஆணை பிறப்பிக்கிறான்.  அரசன் யானை மீது அமர்ந்து உலா வருகையில் அவனுக்கு முன்னும் பின்னும் சாமந்தர், படை வீரர், பிரதானிகள் புடை சூழ உலா வருதல் நடைமுறையாய் இருந்துள்ளது.  பொது மக்களின் காட்சிக்காக எனலாம்.  இதைக் கல்வெட்டு ”உலாகம்”  என்று குறிப்பிடுகிறது. அது சமயம், மேற்சுட்டிய பார்ப்பார் சான்றார் அரசனின் ஊர்வலத்தில் குதிரை மீதமர்ந்து செல்லும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறான். மேலும் அவர்கள் சீனக்குடை பிடித்துக்கொண்டு வரும் உரிமையையும் அளிக்கிறான். அந்நாள்களில், அணி மணிகளால் அழகுபடுத்தப்பட்ட குடைகள் பிடித்து அணிவகுப்பில் கலந்துகொள்ளல் மிகப்பெரிய சிறப்பாகவும், பெருமையாகவும் கருதப்பட்டது. அதிலும், சீனக்குடையான பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை மேன்மைக்குரியது. இவ்வுரிமையைப் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள்.  பல்வேறு வரிசைகள் (உரிமைகள்) மற்ற சாதியார்க்கு அளிக்கப்பட்டிருந்த போதிலும் சீனப்பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது. வேறு பல உரிமைகளும் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள். தழைக்குடை (பனையோலைக் குடை) பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் சுவர்களுக்குச் சாந்து (காரை அல்லது சுதை) பூசிக்கொள்ளலாம். வீட்டின் இரு வாசல்களிலும் கொடி கட்டிக்கொள்ளலாம். படை அணிவகுப்பின்போது ஆரம் பூணலாம். நன்மை தீமை நிகழ்வுகளில் சேகண்டி ஒலிக்கும் உரிமை உண்டு. பச்சைப்பட்டு மேலாடையாக அணிந்துகொள்ளலாம். அவர்களின் குழந்தைகளுக்குப் பொன்னாலான காறை என்னும் அணிகலன் அணிவிக்கலாம். திருமணத்தின்போது கட்டணம் கட்டி ஊர் சூழ வலம் வரலாம்.

 
            இந்த உரிமைகளை எல்லாம் பார்ப்பார் சான்றார்கள் இலவசமாகப் பெறவில்லை.  அரசனுடைய கருவூலத்தில் பொருள்(பொன்) வைத்த பின்பே இத்தகைய வரிசைகள் அளிக்கப்பட்டன. தற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்காகப் பல கோடிப் பணம் முதலீடு போலச் செலுத்தி இருக்கை அமைக்கும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். அண்மையில், இவ்வாறு அமெரிக்க ஹார்வர்டு பல்கலையில்  இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது போலத்தான், சில குடிகள் தங்கள் உரிமைக்காக அரசனின் கருவூலத்தில் பொருள் செலுத்தியுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம். அரசனுடைய கருவூலம் கல்வெட்டில் “சரக்கு”  என்னும்  பெயரில் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு, அரசன் நேரடியாகக் கூறுகின்ற பாணியில் அமைந்திருப்பதால், கல்வெட்டில் “நம் ஓலை குடுத்தபடியாவது” என்றும், “நம் சரக்குக்குப் பொருள் வைத்தமையால்”  என்றும், “நாம் குடுத்த வரிசையாவது”  என்றும்  எழுதப்பட்டுள்ளது.  

கல்வெட்டறிஞர் மா.கணேசனார்:
            அவிநாசிக் கோயிலின் கல்வெட்டுகளை ஆய்வு செய்த பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள், 1980களில் இக்கல்வெட்டினை ஆய்வு செய்து சீனக்குடை பற்றிய செய்தியை நாளிதழில் வெளியிட்டுக் கோயிலின் பெருமையை எடுத்துரைத்தார். அச் செய்திக் குறிப்பில், சீனாவுடன் இக் கொங்குப்பகுதிக்கு வணிகத்தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்னும் ஆய்வுக்கருத்தை முன்வைத்தார். சீனாவுடனான வணிகத்தொடர்பால் சீனப்பட்டு இங்கு வந்திருக்கவேண்டும் என்பது அவருடைய ஆய்வுக்கணிப்பு.  இதற்கு மாற்றுக்கருத்தாக,   சீனம் என்னும் சொல் “ஜைனம்”  என்னும் சொல்லின் மாற்று வடிவம் என்றும், சீனக்குடை என்பது “ஜைனக்குடை”  என்பதைக் குறிக்கும் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  இரண்டுமே ஆய்வுக்குரியன.  ஜைனம் -  அதாவது சமண சமயம் -   கொங்குப்பகுதியில் செல்வாக்குடன் இருந்துள்ளது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. அதற்கான சான்றாதாரங்கள் கொங்குப்பகுதியில் மிகுதியும் கிடைத்துள்ளன.   விஜயமங்கலம் என்னும் ஊரருகில் சீனாபுரம் என்னும் ஓர் ஊர் உள்ளது.  அவ்வூருக்கும் சீனத்துக்கும் தொடர்பேதுமில்லை என்றும், அவ்வூர் “ஜைனபுரம்”  என்று வழங்கிப் பின்னர், “ஜீனபுரம்”  என்று மருவி இறுதியில் “சீனாபுரம்”  என்று திரிந்துள்ளது எனக் கூறப்படுகிறது.  சீனாபுரத்தில் ஜைன சமயத்து எச்சங்கள் உள்ளன.  இருப்பினும், “ஜைனக்குடை”  என்பது யாது என விரிவாக ஆராயப்படல் வேண்டும். ஜைனத் தீர்த்தங்கரர் சிற்பங்களில் அவ்வுருவங்களுக்கு மேற்புறம் தலைக்கு மேல் மூன்று குடைகள் ஒன்றை அடுத்து ஒன்றாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  ஜைன மதத்துத் துறவிகளுக்கும் பெரியார்களுக்கும் இவ்வகையான முக்குடைச் சிறப்பு வழங்கப்படுவதில்லை.  தீர்த்தங்கரர் நிலைக்கு உயர்ந்த இருபத்து நான்கு பேர்க்கு மட்டுமே இச் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.  முக்குடை அமைப்பு சிற்பங்களில் மட்டுமே காணப்படுவதொன்று.  ஜைனக்குடை என்று ஒரு குடை இருந்துள்ளது என்பதற்கும், அது எவ்வகையில் சமுதாயத்தில் பயன்பாட்டிலிருந்தது என்பதற்கும் சான்றாதாரங்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. இந்நிலையில், கல்வெட்டில் வரும் குடை சீனப்பட்டுக்குடை அல்ல என்று அறுதியாக மறுக்க இயலாது.  ஜைனக்குடை பயன்பாட்டில் இருந்திருந்தாலும், அக்குடையை ஜைனரல்லாத பார்ப்பார் சான்றார்க்கு அரசன் ஏன் உரிமையாக வழங்க வேண்டும் என்னும் கேள்விக்குத் தகுந்த விடை தேடப்படல் வேண்டும். சீனப்பட்டு ஒரு வணிகப்பொருளாக இங்குப் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதைப் புறம் தள்ள இயலாது. சோழர் காலத்தில் கடல் கடந்து வணிகம் நடைபெற்றது. வணிகம் 13-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்திருக்கலாம். வணிகப் பொருளாகச் சீனப்பட்டு இங்கு வந்திருக்கலாம். 

முடிவுரை:
            கட்டுரையின் முடிப்பாக, ஜைனக்குடை பற்றிச் சமண அறிஞர் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்த செய்திகளை இங்குக் குறிப்பிடுதல் நலம். சமணத்தில் போற்றப்படும் முக்குடை என்பது தீர்த்தங்கரர்களுக்கு மட்டுமே உரித்தானது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களில் முக்குடை அமைப்பைக் காணலாம். சமணப்பெரியார்களைக் கற்சிலையாக வடிக்கும்போது, ஒற்றைக் குடை காட்டப்படுவதுண்டு. சமணத்தில் விழாக்களின்போதோ, சடங்குகளின்போதோ சமணப்பெரியோருக்குக் குடை நிழல் காட்டும்  நிகழ்வுகள் வழக்கத்தில்  இல்லை. இச்செய்திகள், கல்வெட்டறிஞர் கணேசனார் அவர்களின் ஆய்வுக்கணிப்புக்கு வலு சேர்க்கின்றன. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சீனத்தில் தமிழ் வணிகர்களின் செயல்பாடுகள் இருந்துள்ளமைக்குச் சான்றாக, அண்மையில் சீனாவின் ஃபியூஜி (FUJIYAN) மண்டலத்தில் குவான் ஜௌ (QUANZHOU) நகரத்தில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வெளியானதைக் குறிப்பிடலாம். இவ்வாறாக, அவிநாசிக் கோயிலின் சீனக்குடை பற்றிய கல்வெட்டு ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியை முன்வைத்து ஆய்வுக் களத்துக்கு வழியமைக்கிறது  எனலாம்.


நன்றிக்குரியவர்கள் :  
1.  மறைந்த கல்வெட்டு அறிஞர்  முனைவர் மா. கணேசனார்.
2. திரு பானுகுமார் அவர்கள்,  சமண அறிஞர், சென்னை.தொடர்பு: 
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.