Tuesday, November 29, 2016

ஜமனாமரத்தூர்

ப்ரகாஷ் சுகுமாரன்

”டேய், கண்ணன் எங்கடா இருக்கான்”

”சார், சொல்லியனுப்பி இருக்கம் சார், வந்துகிட்டே இருக்கும்..”

”அவனெப்ப வந்து, நாங்க எப்படா கெளம்புறது, பரதேசிப்பய, எங்கனா கள்ளடிச்சி போதைல கெடக்கப்போறான், போய் பாத்துட்டு வாங்க. யோவ் அதிகாரிங்க வந்தா டீ, காபி போட்டு தரணும்னு கூட தெரியாதா ?”

”மன்னிச்சிக்கங்க சார், இங்க கடையெல்லாம் இல்ல. வீட்ல இருந்த பால புள்ளைக்கு கொடுத்தாச்சு. அடுத்தமுறை செஞ்சிடறேன் சார். பெரியவருக்கு அந்த பழக்கமெல்லாம் கெடையாது. அதாலதான் இந்த வயசுலயும் ஆனைங்கள வெறட்ட முடியுது. ராத்திரி பூரா அதுங்க பின்னாடியே போயிட்டு, வெடி காத்தாலதான் வந்து படுத்தார். சீக்கிரம் வந்துடுவார்”

“இப்படியே சொல்லிகிட்டு இருங்க, மரத்த கடத்துறதா கேச போட்டு உள்ள தள்ளிடுறேன்”

”சாமீ, வந்துட்டேன். ஆனைங்க சுத்தறப்ப, ஏஞ்சாமி இம்மாம்பேரு வந்திருக்கீங்க ?”

“வா கண்ணா, அதுங்கள வெறட்டத்தான் வந்திருக்கோம், எங்கேருக்குங்க ?”

“சுத்தி ஒம்பது நிக்குதுங்க, நடுவுல நின்னுகிட்டு எங்கேருக்குன்னு கேக்கறீங்களே ?”

”யேய், என்னய்யா சொல்றே, சாந்திரம் தானே அதுங்க காட்ட விட்டு வெளிய வரும்னு சொன்னாங்க”

”அது சரிதான் சாமீ, நீங்க என்ன டவுன்லயா நிக்கறீங்க, நிக்கறதே காடு, இதுல அதுங்க எந்த காட்ட விட்டு ராவுல வெளில வரணும் ?”

“அட இருய்யா வரேன்”

“சார், எல்லாம் இங்கதான் இருக்காம், நாம போயிட்டு அப்றம் வருவோம்”

“சரி சரி, நீங்க இருந்து பாத்துக்கங்க, பாத்து பைய செய்யுங்கய்யா, இன்னிக்குள்ள இங்கேருந்து விரட்டிடணும், நா போளூர் கெஸ்ட் அவுஸ்லதா இருப்பேன், எதாயிருந்தாலும் மைக்ல சொல்லுங்க”

“கண்ணா, ஐயா வேற கெளம்பிட்டாரு, இனி எங்க பொழப்பே ஒன்ன நம்பித்தான்யா இருக்கு. என்ன செய்யணும்னு பாத்து சொல்லு”

“நல்லா வர்றீங்க சார், மொதல்ல இத்தன பேரு இங்க நிக்க வேணாம். எல்லாரையும் ஜமனாமரத்தூருக்கு போயிடச் சொல்லுங்க, விடிகாத்தால தான் மேல் சிப்பிலிலருந்து வாலியம்பாற வழியா எறங்கினாங்க. இப்ப கீழ் சிப்பிலிலதான் இருக்குதுங்க. ஒங்காளுங்கள்ள பீடி, சுருட்டு பிடிக்கறவங்கள எல்லாம் மொதல்ல அனுப்பிடுங்க. அந்த வாட அதுங்களுக்கு ஆகாது. ஒரு நாளஞ்சி பேரு இருந்தா போதும், மத்தவங்களையும் அனுப்பிடுங்க”

“இவ்ளோ பேருல நாலு பேத்த நிறுத்த சொன்னா, எவன்யா இருப்பான். வேணா நானொருத்தன் நின்னுகிட்டு, மத்தவன அனுப்பிடவா ?”

”சரி, அப்படின்னா எல்லாத்தையும் ஊருக்குள்ள இருக்க சொல்லிடுங்க, எங்காளுங்க 10 பேரு மட்டும் இங்கயே இருக்கட்டும். சாமீ, அங்க ரெண்டு ஆளுங்க உக்காந்து படம் பிடிக்கிறாங்க பாருங்க, அவங்கள ஒடனே கூப்பிடுங்க, 3 ஆன சாமிங்க சுத்திடுச்சி”

“ஏம்பா, ரிப்போர்ட்டரு இங்க ஓடியா, அந்த ஆளையும் கூட்டியாய்யா”

“யோவ், நான் சொல்றது ஒங்காதுல விழல, வந்துடுங்கய்யா, சுத்தி வந்துடுச்சிங்க”

“ஜவகர், ஃபாரஸ்ட்காரனுங்க கத்தறாங்க பாரு, வா போகலாம்”

“திரும்பி சான்ஸ் கிடைக்காது, என் கேமரால ஒரு யானை சிக்கிடுச்சி, மீதி எங்க இருக்குன்னு பாத்து நீ எடு”

“சுத்தி முள் மரங்கதான் தெரியுது, வேற எதுவும் தெரியல”

“இரு ப்ரகாசு, ரெண்டே நிமிஷம், யானைங்கள படம் எடுத்துட்டா அப்றம் நம்ப வேலை முடிஞ்சிரும்”

(”யோவ், கிட்ட வந்துடுச்சாம்யா, வாங்கய்யா”, என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால்.. வாட்சர்கள், கார்டுகள், அதிகாரிகள், உள்ளூர் மக்கள் என கிட்டதட்ட 200 பேர் கூட்டமாக அங்கு இருந்த தடம் கூட இல்லை)

“யோவ் ஜவகர், ஒருத்தரையும் காணோம், வாய்யா போகலாம்”

(சட சடவென மரங்கள் முறியும் சத்தம்)

“யே, அறிவுகெட்டவங்களா, அத்தினி பேரு கூப்பிடுறோம், வரலைன்னா எப்படி, ஒங்களால இன்னிக்கு நானும் ஆன சாமிக்கு படையலாகப் போறேன், வாய்யா இப்படி”

(கண்ணனின் கைப்பிடி உடும்பு பிடியாக இழுக்க, ஓட முடியாமல் ஓடியதில் கை, கால், தலை என எல்லா பகுதிகளிலும் முள் கிழித்திருந்தது. சிறு குழந்தைகள் நடை பழகும் போது அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவது போல, ஓடத் தெரியாத குழப்பம் ஏற்பட்டதால் ஆங்காங்கே விழுந்ததில், கை-கால் முட்டிகளில் சிராய்ப்புகள். ஆனால் கையை பிடித்து இழுத்து ஓடிய கண்ணனின் கால்கள் சரியாக ஓடின, கண்கள் சரியாகத் தெரிந்தன. காட்டுக்குள்ளும் ராஜபாட்டைகள் அவருக்கென விரிந்தன)

“ஓட முடியலை இருங்க, மூச்சு வாங்குது, என்னோட வந்த இன்னொருத்தர வேற காணோம்”

“என் தம்பி அவன இன்னேரம் இழுத்துட்டு போயிருப்பான். பேசாம வா. பேசினா அதுங்க திரும்பி வரும். சுத்தி அவ்ளோ பக்கத்துல கறுப்பு சாமிங்க இருக்கறது கூட தெரியாம என்னத்த படம் பிடிச்சீங்க ?”

“இல்லையே, வெறுங்கண்ல பாத்தப்ப நெழலாட்டமா தெரிஞ்சுது. ஆனா கேமரால பாத்தா ஒன்னு கூட தெரியலையே”

“நல்ல ஆளுங்கய்யா நீங்க. டருக்கி ரவைக்கு ரெட்டைங்களோட சந்தோஷமா இருந்ததாலே தப்பிச்சீங்க, இல்லாட்டி களியாகி இருப்பீங்க. மொதல்ல வெள்ள சட்டைய கழட்டுங்க. ஒங்க கண்ணுல படக்கூடாதுன்னுதானே இவ்ளோ மேல வந்து தங்குதுங்க, அப்புறம் ஏன் விடாப்பிடியா தொரத்தறீங்களோ. போற வார வழியெல்லாம் சிமெண்ட் கட்டடம் கட்டிட்டா, கறுப்புங்க எப்படிதான் வலச போவும் ? பாவம் அதுங்களும் கூடி கொலவ வேணாமா ? என்னமோ போங்க. பாவம் தண்ணீக்கு என்ன பண்ணுமோ தெரியல. மறுபடி மேல் சிப்பிலிதான் போகணும்”

(13 கிலோ மீட்டர் தூரம் ஓடிக் கடந்தது கவர்மெண்ட் கெஸ்ட் அவுஸ் கண்ணில் பட்டதில் தெரிய வந்தது)

“சார், அவ்ளோ பேர் இருந்தாங்க, ஒரே நிமிஷத்துல ஒருத்தரையும் காணோம், நல்லவேளையா கண்ணன்னு ஒருத்தரு வந்தாரே அவரு பிடிச்சி இழுத்து வந்ததால் தப்பிச்சேன். சட்டையெல்லாம் கிழிஞ்சி போச்சி. கூட இருந்த ஜவகர வேற காணோம்”

“உங்கள யாரு அவ்ளோ கிட்ட போயி படமெடுக்கச் சொன்னது, மைக்ல தகவல் வந்ததும் டென்ஷன் மண்டைக்கு ஏறிடுச்சி. செவள பத்திரமா ஜவகர கூட்டியாந்து எங்காளுங்க கிட்ட விட்டுட்டான். ஜீப்ல கூட்டிகிட்டு வர்றாங்க, நீங்க கொஞ்சம் வெளிய போயி இருங்க”

(காத்திருந்த நேரத்தில் கேட்டது)

”சார் இன்னிக்கு யானைய வெறட்ட 300 ஊராளுங்கள கூட்டியாந்து, அவங்களுக்கு சோறு செஞ்சி போட வேண்டியதா போச்சி. இன்னிக்கு மட்டும் 30,000 ரூபாக்கு பட்டாசு வாங்கி வெடிச்சோம், மத்த செலவெல்லாம் சேத்து ஒன்ற லட்சம் ஆகிடுச்சி. இதோட 13 நாளு. சீக்கிரமா பில்ல அனுப்பச் சொல்லுங்க. இன்னும் எத்தன நாளைக்குதான் யானைங்கள வெறட்டறதோ தெரியல. இன்னிக்கு பிரஸ்காரங்க உள்ள வந்து, ஒரே பிரச்சினையாகிடுச்சி”

“சார், ஓகே சார். பில் பாஸானதும் அனுப்பிடுறேன் சார். இன்னிக்கே வந்துட்டாலும், நாளைக்கு நான் நேர்ல வந்துடறேன் சார். 300 னு போடுறத, 400 னு போட்டா, இங்கேருக்க ஆளுங்கள இன்னும் கொஞ்சம் நாளைக்கு சரி கட்டலாம். ஓகே சார். நன்றி சார்”

Sunday, November 27, 2016

திசை திரியும் வயங்கு வெண்மீன்

--முனைவர்  ப. பாண்டியராஜா




பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் காவிரியின் சிறப்பையும், கரிகால் பெருவளத்தான் மாண்பையும் சிறப்பித்துக் கூறுகிறார். பருவமழை பொய்த்துப்போனாலும் காவிரி வற்றாத நீர்வளம் கொண்டிருக்கும் என்று கூறவந்த புலவர் தன் பாடலை இவ்வாறு தொடங்குகிறார்:

    வசையில்புகழ் வயங்குவெண்மீன்
    திசைதிரிந்து தெற்குஏகினும்
    தற்பாடிய தளியுணவின்
    புள்தேம்பப் புயல்மாறி
    வான்பொய்ப்பினும் தான்பொய்யா
    மலைத்தலைய கடற்காவிரி (- பட்: 1-6)

இங்கு வயங்கு வெண்மீன் என்று கூறப்படுவது சுக்கிரன் எனப்படும் வெள்ளி என்ற கோள் (கிரகம்) ஆகும். இந்த வெள்ளி தான் வழக்கமாகச் செல்லும் பாதையினின்றும் திரிந்து தெற்குப்பக்கம் சென்றால் வானம் பொய்க்கும் – அப்படிப் பொய்த்தாலும் காவிரி பொய்க்காது என்கிறார் புலவர். இது அணைகள் கட்டப்படாத அன்றைய காவிரி.

பட்டினப்பாலை மட்டுமல்ல, இன்னும் சில இலக்கியங்களும் வெள்ளி திசைமாறிப் பயணிப்பதன் விளைவுகளைப் பற்றிக் கூறுகின்றன.

    இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட 

- என்கிறது புறநானூறு (பாடல் 35).

    

    கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
    விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    ………………………………………………………
    காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை 

- என்கிறது சிலப்பதிகாரம் (காதை 10:102-108)

    

    கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
    தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை 

- என்கிறது மணிமேலை (பதிகம்:24,25)

எனவே இது அன்றைய தமிழரின் நம்பிக்கை என்பது உறுதியாகிறது.


இந்த ஆண்டில், இன்னும் சில நாட்களுக்கு, பகலவன் மறைந்த பின்னர் மேற்குத்திசையில் பார்த்தால் சற்றே தென்புறத்தில் ஒளிர்வுள்ள ஒரு வெள்ளைப் புள்ளியைக் காணலாம். இதுதான் இப் பாடலில் குறிப்பிடப்படும் வயங்கு வெண்மீன்.

கீழ்க்கண்ட படம் 2016 -இல் ஒரே இடத்தில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளி மாலையில் தோன்றும் நிலைகளைக் காட்டுகின்றது. இதில், வெள்ளி தெற்குப்பக்கம் எழுந்து உயர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்வதைக் காணலாம்.

 

இந்த ஆண்டு வெள்ளியானது சரியான மேற்குத்திசைக்குச் சற்றே வடக்குப்பக்கத்தில் ஆகஸ்ட்டு மாதம் தோன்றி, மெதுவாக மேலெழுந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, இப்போது தெற்கு எல்லையில் இருக்கிறது. இப்போதும் இன்னும் சில மாதங்களுக்கும் வெள்ளி மேற்கில் வெகுநேரம் காட்சியளிக்கும். அதன் பின்னர் மெதுவாகக் கீழிறங்கி அடுத்தாண்டு ஏப்ரல் தொடக்கத்தில் மறைந்துவிடும்.

இவ்வாறு வெள்ளி தெற்குப்பக்கம் நகர்வது மிகவும் அரிதானது. சாதாரணமாக இது வடக்குப்பக்கமே காணப்படும். ஆனால் இவ்வாறு இந்த ஆண்டு வெள்ளி தெற்குப்பக்கம் ஏறி வருகிறது.

இதுவே வடகிழக்குப் பருவக்காற்று பொய்த்து வறட்சி ஏற்படுவதற்கான அறிகுறி என பண்டை இலக்கியங்கள் கூறுவதைப் பார்த்தோம்.

இதே மாதிரி நிகழ்வு 2013 டிசம்பரில் நிகழ்ந்தது. அந்த ஆண்டும் வ.கி.பருவமழை பெருமளவு பொய்த்துப்போனதைக் கண்டோம்.
பார்க்க: http://www.deccanchronicle.com/131227/news-current-affairs/article/ne-monsoon-tamil-nadu-worst-18-years

இந்த ஆண்டும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது நீண்ட வறட்சிக்கான எச்சரிக்கையோ என அஞ்சத் தோன்றுகிறது.



 




___________________________________________________________
  
 

DR. P.PANDIYARAJA
ppandiyaraja@yahoo.com          
http://sangacholai.in/
http://tamilconcordance.in/
___________________________________________________________




Wednesday, November 23, 2016

கோயில் திருப்பணிகள்

திரு.துரை சுந்தரம்
தமிழ் மரபு அறக்கட்டளை

     அண்மையில் தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி அவர்கள் கூறியதாகத் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி
வெளியானது. அவருடைய கூற்று வருமாறு :

 ”கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள்,   ஆகிரமிப்புகள், நகரமயமாதல் போன்றவைகளால் நம் நாட்டுப் பொக்கிஷங்களின் பாரம்பரியத் தனமை மறைந்து வருகிறது.”

மேற்கண்ட கூற்றில் சுட்டப்பெறும், திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள் காரணமாகப் பல கோயில்கள் அவற்றின் பழமையான தோற்றத்தை முற்றிலும் இழந்து (கல்வெட்டுகள் சிதைக்கப்படுமேயானால், கல்வெட்டுகளையும் இழந்து) பழங்கோயில் என்னும் வரலாற்று அடையாளமே தெரியாமல் போவது வேதனைக்குரியது.  அண்மையில், காங்கயம் வட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது, பார்ப்பினி என்னும் ஊரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியைப் பார்த்தேன். 
       பார்ப்பினி பெரியநாயகியம்மன் கோயில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், கி.பி. 1685-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இக்கோயிலில் இருப்பது பதிவாகியுள்ளது. இக்கோயிலின் பழந்தோற்றம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கோயில். முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுத் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயில், கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய கூறுகளோடு 1685-க்கு முன்பே இருந்துள்ளது. 1685-இல் முன்மண்டபத்தைக் கண்ணந்தை, காடை குல கோத்திரத்தைச் சேர்ந்த காணியாளர்கள் மூவர் கட்டுவித்த செய்தியை மேற்சொன்ன கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் பார்ப்பினி என்னும் இந்த ஊர் வீரசோழபுரம் என்னும் பழம்பெயரால் குறிக்கப்படுவதினின்றும் கோயிலின் பழமையை அறிந்துகொள்ளலாம். ஆனால், இன்று தரை மட்டம். நூற்றுக்கணக்கான கற்கள் எறிந்து கிடக்கின்றன. கீழுள்ள படங்கள், கோயிலின் நிகழ்கால நிலையைச் சொல்லும். இருந்த ஒரே ஒரு கல்வெட்டும், இக் கற்குவியல்களுக்கிடையில் எங்கேயுள்ளதோ?

                      கோயில் தரைமட்டம்-திருப்பணி தொடக்கம்




                                               எறிந்து கிடக்கும் கற்கள்











       தொல்லியல் துறைக்கும் அறநிலயத்துறைக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவைப் பேணுகின்ற கடமை தொல்லியல் துறைக்கு இல்லையா? நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்தப்பொருளும் தொன்மையானது என வரையறை செய்கிறது தொல்லியல்துறை . மாவட்டம் தோறும் தொல்லியல் துறையின் அலுவலகம் ஒன்று இயங்கிவருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகையாக ஒரு முந்நூறு கோயில்கள் இருக்கக்கூடும். தொல்லியல் துறை, அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் துணையோடு, ஒரு கல்லூரி ஐம்பது கோயில்களுக்குப் பொறுப்பு எனக் கோயில்களை ஒதுக்கி, கல்லூரியில் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்குள் எல்லாக்கோயில்களும் கள ஆய்வுக்குட்படுமாறு செய்யலாம். அத்துணைக் கோயில்களைப்பற்றிய தரவுகளையும் கணினியில் பதிவு செய்து, கோயில் நிருவாகத்தினரோடு தொடர்பு (நல்லுறவு?) கொண்டு கோயிலின் அனைத்துப்பணிகள் பற்றிய செய்திகளும் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்யலாம். இளைய தலைமுறையினர்  வரலாற்று அறிவு பெறுவர். கோயில்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என நம்பலாம்.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

Monday, November 21, 2016

மனு தர்மம் குறித்து சில விளக்கங்கள்

அறிமுகம்: தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் நடைபெற்ற ஒரு கருத்துரையாடலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கேள்விகளையும் அதற்கான பதில் கருத்துக்களையும் இந்தப் பதிவில் தொகுத்து அளிக்கின்றோம்.  

கேள்விகளை முன்வைப்பவர் டாக்டர். வீ.எஸ்.ராஜம்

இவர் தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில்  தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில்   ஒருவராக இடம் பெறுகின்றார் . தமிழகத்தின் மதுரையில் பிறந்து, கல்விகற்று, தொழில் புரிந்து, பின்னர் வட  அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர்  மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்.  ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவை´..

  • Reference Grammar of Classical Tamil Poetry 
  • The Earlier Missionary Grammar of Tamil
  • சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..


கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் திரு. கௌதம சன்னா

இவர் தமிழகத்தில் வசிப்பவர். எழுத்தாளர், ஆய்வாளர், களப்பணியாளர். தமிழகத்தில் சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், பெண்கள் ஆகியோரின் உரிமைகளை முன்னிருத்தி பணியாற்றும் சிந்தனையாளர்களுள் ஒருவராக சன்னா இருக்கிறார். தீவிரமான களப்பணியும் ஆய்வும் இவரது இலக்குகளாக இருக்கின்றன. மார்க்ஸ், பண்டிதர், அம்பேத்கர் குறித்த இவரது ஆய்வுகள் பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது பேட்டிகள் சிலவற்றை மேற்கத்திய பல்கலைக் கழகங்கள் சில பதிவிட்டுள்ளன. ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க சில நூற்களை இவர் வழங்கியிருக்கின்றார். அவை..
  • மதமாற்றத் தடைச்சட்டம் வரலாறும் விளைவுகளும்
  • அயோத்திதாசப் பண்டிதர் (சாகித்ய அகாடமி வெளியீடு)
  • Reading Other Side - Special Submissions Interview with Gowthama Sannah, http://www.southasianist.ed.ac.uk/article/view/147

சேரி சாதி தீண்டாமை.. குறித்த இவரது ஆய்வு தொடர், இணையங்களில் குறிப்பாக மின்தமிழ் தளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றது.

-மின்தமிழ் மேடை ஆசிரியர் குழு





ராஜம்:
அன்புள்ள திரு சன்னா, வணக்கம். எனக்குள்ள சில ஐயங்களுக்கும்  கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.   நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது?
கௌதம சன்னா:
அன்புள்ள ராஜம் அம்மையாருக்கு வணக்கம்.  உங்களது கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவில் விடையளிக்க முனைகிறேன்.

தலித் என்கிற வார்த்தை 1940களிலேயே மராட்டியத்தில் புழக்கத்திலிருந்த வார்த்தை. தலித் சமிதி என்கிற இயக்கம் அன்றைக்கு இருந்தது. ஆனால் அது எவ்வளவு வீச்சாகச் செயல்பட்டது என்பது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை. சில வேளை அம்பேத்கரின் இயக்கத்தைக்கூட அது எதிர்த்துச் செயல்பட்டது. ஆயினும் 1972ம் ஆண்டு தலித் என்கிற சொல் திரும்ப வரலாற்றில் தோன்றியது. அமெரிக்காவில் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் (Black Panthers) ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியும், அது நிறவெறியை எதிர்த்து தீவிரமாக போராடியது, அந்த இயக்கத்தின் தாக்கத்தினால் மகாராட்டிரத்தில் 1972ஆம் ஆண்டு  தோன்றியது “தலித் பாந்த்தர்ஸ்” (தலித் சிறுத்தைகள்) இயக்கம்  அதை முன்னெடுத்தவர்கள் மராட்டியத்தில் இடது சாரி மற்றும் அம்பேத்கரின் சிந்தனைகளால் உந்தப்பட்ட அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் மற்றும் போராட்ட குணமுள்ள இயக்கவாதிகள். இவர்கள் பெரும்பாலும் பட்டியல் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்களில்  இடதுசாரி சிந்தனைக் கொண்ட பார்ப்பனர்கள் மற்றும் இடைச்சாதியினர் சிலர் இருந்தனர். தலித் என்கிற சொல்லுக்கு அவர்கள் கொடுத்த பொருள்… “மண்ணின் மைந்தர்கள்”; மண்ணில் தோன்றியவர்கள், வீழ்த்தப்பட்டவர்கள் என்கிற பொருளில் அதைக் கையாண்டனர். இந்த இயக்கம் தீவிரமாக வளர்ந்து ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் இயக்கமாக மாறியது. பெண்கள் அதன் பின் திரண்டனர். அந்த இயக்கத்தின் தீவிரத்தினால் “தலித்” என்கிற சொல் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்குப் பரவியது. தொடக்கத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல்லாக இருந்த தலித் எனும் அரசியல் சொல்லாட்சி, நாளடைவில் குறிப்பிட்ட சாதிக்கான சொல்லாக குறுக்கப்பட்டது. அதன் பின் நீண்ட வரலாற்றுக் கீழறுப்புகள் இருக்கின்றன.
ராஜம்:
இந்த மகா அற்புதப்பிறவி மனுவும் ஒருநாள் செத்திருக்கவேண்டும், இல்லையா? இல்லை, ஓர் ‘அமானுஷ்யப்’ பிறவியாக, தான்தோன்றியாக உலவும் வரம் பெற்று உலவுகிறாரா?
கௌதம சன்னா:
இங்கே குறிப்பிடும் குறிப்புகள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்குமாயின்
மற்றவர்களுக்கு உதவும் என நினைக்கிறேன். எனவே தவறாக எண்ண வேண்டாம்.
மனு என்பவர் மகா அற்புதப் பிறவியோ அமானுஷ்யப்பிறவியோ அல்ல. எல்லாவிதமான ஆசைகளும் விருப்பங்களும் கொண்ட மனிதப் பிறவியே.  மின் தமிழ் மடலாடற் குழுமத்தில் மனுவைப்பற்றி பேசியவர்கலுக்கும் சேர்த்தே இங்கு என்னுடைய பதிலைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். எனவே இந்த விளக்கம் சற்று விரிவாகவே இருக்கும்.

–  மனு ஸ்மிருதி குறித்து என்னுடைய பதில்களைப் படித்த சிலரிடத்தில் ஒருவித மூட நம்பிக்கை இருப்பதைப் பார்க்கிறேன். சமஸ்கிருத இலக்கியங்கள் அத்தனையும் பார்ப்பனர்களின் படைப்பு போல நம்புகிறார்கள் என்பதுதான் அது, அதனால் மதி திருகி மோதுகிறார்கள். எனவே மனுவைப் புரிந்து கொள்வதற்கு மனு வாழ்ந்த காலத்தின் சமூகச் சூழலை கொஞ்சம் விளங்கிக் கொண்டால் எளிதாக இருக்கும். 
–  இந்தோ ஆர்ய இலக்கியங்கள் எனப்படும் வேதம், ஸ்மிருதி உள்ளிட்ட அடிப்படை இலக்கியங்களில் பார்ப்பனர்களின் பங்களிப்பு இல்லை. உபநிடதங்களில் மட்டுமே அவர்களின் பங்களிப்பு தொடங்குகிறது. அதாவது பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதத் தொடங்கியதை கொண்டு இந்த மூட நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள்.
–  பண்டைய இந்தியச் சமூகத்தில் நாகர்கள் மற்றும் ஆரியர்கள் என இரு பெரும் பண்பாட்டுச் சமூக பிரிவுகள் இருந்தன. ஆரியர்களில் ரிக் வேத ஆரியர்கள், அதர்வண வேத ஆரியர்கள் (பசுவைப் போற்றுபவர்கள்) என இருபிரிவுகள். இவர்கள் எப்போதும் மோதிக்கொண்டிருந்தார்கள்.
– இந்த ஆரியர்களில் முதலில்  மூன்று வர்ண அமைப்புகள் இருந்தன அதன்படி பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர். பிற்காலத்தில் சத்திரியர்களிலிருந்து நான்காம் வர்ணமான சூத்திரர் தோன்றினர். இவர்களை வர்ணாஸ் என்று அழைத்தனர் அதாவது வர்ணாஸ்ரமம். இவற்றிற்கு வெளியே இருப்பவர்கள் அவர்ணாஸ். இந்த அவர்ணர்களும் வர்ண அமைப்பில் திரிந்த அல்லது கலப்பு வர்ணத்தவர்களால் உருவானவர்கள். இந்த அமைப்பைப் பற்றின குறிப்பு ரிக் வேதம் புருஷ சுக்தத்தில் முதன் முதலில் காணப்படுகிறது. ஆனால் அந்தப் புருஷ சுக்தம் இடைச்செருகல் எனப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
–  எனவே வர்ணத் தோற்றம்  மனு விளக்கியதையே அனைவரும் பேசத் தொடங்கினர். மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்சியை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம். எனவே இப்போது மனு யாரென்று புரியுமென்று நினைக்கின்றேன்.
–  ஆனால் ஏன் மனு கண்டிக்கப்படுகிறார். தமது தொகுப்பில் அவர் இந்தோ ஆர்ய சமூகத்தின் பிராமணர்களுக்குச் சமூகத்தின் உச்ச நிலையை உறுதிப்படுத்த ஏராளமான விதிகளை அதில் சேர்த்தார். அதே நேரத்தில் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் ஏராளமான தடைகளை விதித்தார். இதுதான் அடிப்படைக் காரணம். இதற்குக் காரணம் இருக்கிறது. மனு ஒரு வைசியர் அதாவது வியாபாரி வர்ணத்தவர். வியாபார வர்க்கம் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமாகவே இருக்கிறதல்லவா அதுதான் அங்கேயும் நிகழ்ந்தது. ரிக் வேதத்தில் பெண்களுக்கு இருந்த பல உரிமைகளையும் மனு குழிதோண்டிப் புதைத்தார்.
– தீண்டாமை  பற்றி சிலர் பேசும்போது மனுதான் அதை உருவாக்கினார் என்று பேசுகிறார்கள், அது தவறு – தீண்டாமை பற்றி மனுவின் கருத்து என்று ஏதுமில்லை. அவர் தீட்டை  மட்டுமே பேசுகிறார். ஏனென்றால் அவர் காலத்தில் தீண்டாமை என்கிற கருத்தாக்கமே உருவாகவில்லை.
– இங்கு மடலாடற் குழுமத்தில் சிலர்  சண்டாளர்களும் தலித்துகளும் ஒன்று என்று நினைக்கிறார்கள், அது முற்றிலும் தவறு.  சண்டாளர்களுக்கும் தலித்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியானால் சண்டாளர்கள் என்றால் யார்..?
‘இது  மனு தரும் விளக்கம்.. சூத்திர தந்தைக்கும் பிராமணத் தாய்க்கும் பிறந்தவன்(ள்) சண்டாளனாகிறான்(ள்). இந்த கலப்பு மணம் வர்ண அமைப்பினை சிதைத்துவிட்டதால் இவர்களுக்குப் பிறந்த மகன்/மகளுக்குத் தனித்த ஏற்பாடு அவசியமாகிறது. அதை அனுமதித்தால் அது வழக்கமாகி வர்ண அமைப்பு முற்றிலும் சிதைந்து போகும் எனவேதான், சண்டாளர்களை வர்ண அமைப்பிலிருந்து தள்ளி வைப்பதுடன் அவர்களைக் கீழான நிலையில் வைப்பதை மனு விரும்பினார். எனவே சண்டாளர்கள் சுடுகாட்டின் ஓரம் வசிக்க வேண்டும். உடைந்த பானையில் உண்ண வேண்டும். நாயால் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியைச் சாப்பிடலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்தார்.

– மனு குறிப்பிடும் பிராமணருக்கும் தற்கால பிராமணருக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியும் என்று நம்புவது எப்படியோ, அப்படியே, சண்டாளருக்கும் தலித்துகளுக்கும் உள்ள தொடர்பு இருக்கும் என நம்புவதும் ஓர் அறியாமை. மேற்கண்டகுறிப்புகள் மனு யார் என்பதை விளக்கியிருக்கும் என்று நம்புவதோடு அவரை உயர்த்திப் பிடிக்க நினைப்பவர்களுக்கும் ஒரு தெளிவைத்தரும்.
ராஜம்:
மனு  செத்தபின் அவரது உடலை  … இடுகாட்டுக்கோ சுடுகாட்டுக்கோ அதை எடுத்துச்சென்று அந்தப் பிணத்தைக் கையாண்டவர் எந்தச் “சாதி”யினர் என்று தெரியவருகிறதா? அந்தப் பரமபுருஷனின் எந்தப் பகுதியிலிருந்து கிளைத்த ‘குலம்/சாதி’ மனுவின் செத்த உடலைப் புதைத்தது/எரித்தது என்று தெரியவருகிறதா?
கௌதம சன்னா:
மனு செத்துப்போனவர்தான். அவர் இறந்திருந்தால் அவரது பிணத்தை சண்டாளர்தான் எரித்திருக்க வேண்டும் என்பது உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் சண்டாளர்கள் பிணத்தை எரிக்க வேண்டும் என்பது மனுவின் விருப்பமாக இருந்தாலும், எல்லா நேர்வுகளிலும் அப்படி நடக்கவில்லை. பல சண்டாளர்கள் மிகச்சிறந்த மேதைகளாக, குறுநில மன்னர்களாக இருந்திருக்கின்றனர். சண்டாளர் பெண்கள் பேரழகிகளாக இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்களை மணம் புரிந்து கொள்ள மன்னர்களும் விரும்பினார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சண்டாளர்கள் ஆர்ய பண்பாட்டினைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் விளங்கும்.
நீங்கள் கேட்டது போல அந்தப் பரம புருஷனின் எந்தப் பகுதியிலிருந்து கிளைத்த குலம்/சாதி மனுவின் செத்த உடலைப் புதைத்தது எனக் கேட்டிருக்கின்றீர்கள். மனு ஒரு பரமபுருஷனல்ல.  ஆனால் மனு குறிப்பிடும் பரமபுருஷன் அவனது உடலிலிருந்து  நான்கு வர்ணத்தவர்கள் மட்டுமே பிறந்ததாகச் சொல்கிறார். அவர் சொல்லும் பரமபுருஷனின் வாயிலிருந்து பிராமணரும், தோளிலிருந்து சத்திரியரும், தொடையிலும் வைசியரும், காலிலிருந்து சூத்திரர்களும் பிறந்தார்கள். இவர்களுக்குப் பிணத்தை புதைக்கும் பணியைக் கொடுக்க மனுவிற்கு விருப்பமில்லை. அதனால் தான் வர்ணத்தில் திரிந்தவர்களுக்கு அத்தொழிலைக்கொடுக்க வேண்டும் எனக்கட்டாயப்படுத்துகின்றார்.

– மேலும் மனுவின் பிணத்தை எரித்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தோ ஆர்ய சமூகம் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அது நாகர்களின் பழக்கம்.
எனவே.. மேற்கண்ட விளக்கங்கள் சிறு ஒளிக்கீற்றை வழங்கும் என நம்புகிறேன். இந்த மனுவுக்கும் மனு நீதி சோழனின் மனுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொள்ளும் சிலர் இந்தோ ஆர்ய பண்பாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொள்வது ஒரு நகைச்சுவை.
ராஜம்:
மனுவின் பிணத்தை யார் எரித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த “தீட்டு” இருந்திருக்கவேண்டும்! அதை நினைத்துப்பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட குழுவினர்மேல் மட்டும் அந்தத் தீட்டை ஒட்டுவது நேரியதன்று. ஆனாலும் அந்த மனுசர் சண்டாளர்களுக்கு இவ்வளவு கொடுமையான கட்டுப்பாட்டை விதித்திருக்கவேண்டாம். தான் செய்ய அருவருக்கும் ஒரு செயலைச் செய்தவர்களுக்கு நன்றிசொல்லாமல் கீழ்நிலைப்படுத்தி வைத்த அவலத்தை என்னவென்று நோவது?  மருத்துவப் படிப்பில் புகுந்த எல்லாருமே பிணத்தைத் தீண்டாமலா படிப்பை முடித்திருப்பார்கள்? அவர்களுக்குத் “தீட்டு” இல்லையாம்! ஆனால், இயற்கையின் அவலத்தால் மாதவிலக்குப் பெறும் பெண்களுக்குத் தீட்டாம்! காஞ்சிப் பெரியவர் பெண்கள் கல்லூரிக்குள் நுழையவே தயங்கி, மாட்டையும் கன்றையும் முதலில் போகவைத்து அந்த இடங்களைத் “தூய்மையாக்கி” அங்கே நடந்தாராம். சிருங்கேரி மடத்து ஆச்சாரியார் எங்கள் கொள்ளுப்பாட்டியின் வீட்டிற்கு வந்தபோது (விதவையான) என் பெரியபாட்டியை ஆச்சாரியார் கண்களில் படாமல் மாடிக்கு அனுப்பிவைத்தார்கள்! இத்தனைக்கும் … மாளிகை மாதிரி இருந்த அந்தப் பெரிய வீட்டில் “பாதபூஜை”க்காகச் செலவழித்த பணத்தில் அந்தப் பாட்டியின் பங்கும் இருந்தது! கைம்பெண்ணைப் பார்த்தாலே “தீட்டு” ஒட்டிக்கொண்டுவிடுமோ?
கொடுமை.
கௌதம சன்னா:
மேலும் மனுவின் மீது ஏன் கடும் வெறுப்பு உருவானது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. உங்களின் கேள்வியின் படியே பிராமணப் பெண்கள் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதலும் மனுவின் மீது வெறுப்பு வர ஒரு காரணமே. ஏனென்றால்,  அவர் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவர்ணர்களுக்கும் விதித்த கடும் கட்டுப்பாடுகள், தண்டனைகள் கொடுமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.   பிராமணர்களுக்கான அனுகூலமாக அதை மேற்கொண்டார் என்பதில்தான் வெறுப்பு உருவாகிறது. எனவே அந்த அனுகூலங்களை அனுபவித்தவர்கள் மனுவை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கலாம், பாதிக்கப்பட்டவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?  குறிப்பாக, இந்தோ ஆர்ய பண்பாட்டுப் பெண்களுக்கு அவர் இழைத்த மூன்று கொடுமைகளைப் பார்க்கலாம்.
  1. பெண்களுக்குப் பூணூல் உரிமையை மறுத்து அவர்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பைத் தடுத்தது.
  2. குழந்தை திருமணத்தை நியாயப்படுத்தியது.
  3. விதவைகள் உடன் கட்டை ஏறவேண்டும் என்று அதற்கு மத அங்கீகாரம் கொடுத்தது.
இந்த மூன்றும் பெண்களுக்கு எதிராக மனு மேற்கொண்ட பண்பாட்டு போர் என்றே பார்க்கிறேன். பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் அனுபவித்த பல கொடுமைகளுக்கு இவையே அடிப்படையாக இருந்தன என்றால் மிகையல்ல.
மேலும், மனுவின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்  என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் நினைத்தால்கூட மனுவை இக்காலத்தில் முழுமையாகப் பின்பற்ற முடியாது.
உதாரணமாக, மாட்டுக்கறியைப் பிராமணர்கள் எப்படிச் சாப்பிட வேண்டும், அதன் வகைகள் எத்தனை, குறிப்பாகப் பசு மாட்டுக்கறியைப் பிராமணர்கள் தானம் பெற்று அதை எப்படி தமது குழுவிற்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். சடங்குகளில், யாகங்களில் கொழுத்த பசுவினைக் கொன்று அதை எப்படி யாகம் வளர்ப்பவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏராளமாகச் சலுகைகளைப் பிராமணர்களுக்கு அளித்தார். மனுவைப் போற்றும் அவரது பக்தர்கள் இதைப் பேசினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
பெண்கள், நாகர்கள் மிலேச்சர்கள், அவர்ணர்கள், தஸ்யூக்கள் ஆகியோர் மீது மனு காட்டிய வெறுப்பு.. எல்லாம் வரலாறாக இருக்கிறது. சுய சாதிப் பற்றோ, பிறசாதி வெறுப்போ ஆய்வுக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வார்கள் என நினைக்கிறேன்.  மற்றபடி மனுவின் அறிவாற்றலை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கொள்கைகளை வெறுக்கிறேன்.
ராஜம்:
நேரம் ஒதுக்கிப் பொறுமையாக என் வினாக்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி, திரு. சன்னா!

பலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி!


மனு செத்தாலும் “மனுதர்மம்" சாகவில்லை, சாகாது என்றே தோன்றுகிறது.

நாகர்கள் பற்றி நீங்கள் சொன்ன குறிப்பு எனக்குள் நெடுநாளாக உறுத்திக்கொண்டிருந்த ஒரு கருத்தை உறுதி செய்தது, திரு. சன்னா! மிக்க நன்றி!

நாகர்களைப்பற்றி நீங்கள் தனியாக ஒரு பதிவாகவோ கட்டுரையாகவோ எழுதினால் பலருக்கும் தெளிவு பிறக்கும்.

பொதுவாக … நாகலோகம் என்றால் “பாதாள உலகம்” என்றே பொருள் சொல்லிவந்திருக்கிறார்கள்.

பீமனோ அர்ஜுனனோ … அவன்கூட நாகலோகத்திலிருந்து ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டானாமே? நான் புராணப்படிப்பில் ரொம்பவே மட்டம் (weak)!

நாகநாடு (சிலப்பதிகாரத்தில் வழங்குகிறது), நாகலோகம், நாகர்வாழ் மலை (மணிமேகலையில் வருவது) இதெல்லாம் கண்காணாத பாதாளலோகம் இல்லை என்பது என் கருத்து.


Thursday, November 17, 2016

பட்டம் பற... பற... காத்தாடி வெங்கடேசன்

--கோ.செங்குட்டுவன்




பட்டம் பறக்க விடுவது என்பது சிறுவயதில் நமக்குக் கிடைத்தச் சுகமான அனுபவம். இந்த அனுபவத்துக்காக நாம் பட்டபாடு... அப்பப்பா சொல்லி மாளாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் அந்த அனுபவங்கள் ஒளிந்திருக்கின்றன. அவையெல்லாம் நம் குழந்தைகளுக்கு இன்றும் கிடைக்கின்றதா? முழுமையாக என்று இல்லாவிட்டாலும்கூட, இன்றும் குழந்தைகள் பட்டம்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருச்சியிலோ அல்லது கோவையிலோ வானில் பட்டங்கள் பறந்து கொண்டிருந்தால், அவை விழுப்புரம் பட்டங்களாகத்தான் இருக்கும் என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் வெங்கடேசன் (வயது 48). விழுப்புரம் வடக்கு ஐயனார் குள வீதியில் 40 ஆண்டுகளாகப் பட்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் இவர். பட்டம் என்று சொல்கிறோமே இந்தக் காத்தாடிக்குப் பேர் போனது கொல்கத்தா தானாம். அங்கு மக்களின் மகிழ்ச்சி பட்டங்களாகப் பறந்து கொண்டிருக்கும். இதற்காக, கொல்கத்தாவுக்குச் சென்று சிலநாட்கள் தங்கியிருந்து தொழில்முறை குறித்து வெங்கடேசன் கற்று வந்திருக்கிறார். 





பட்டம் செய்வதற்கு முக்கியத் தேவையான அந்தக் குச்சி(பேம்)கூட கொல்கத்தாவிலிருந்து விழுப்புரத்துக்கு வரவழைக்கப் படுகிறது. பட்டம் செய்யும் தொழிலானது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில்தான் நடக்கிறது என்று சொல்லும் வெங்கடேசன், ‘இப்போதும்கூட திருச்சிக்கு அனுப்புவதற்காகப் பட்டங்களை செய்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார். இப்படியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுவையில் இருந்தும் இவருக்கு ‘ஆர்டர்’கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தொழிலில் வெங்கடேசனின் மிகப்பெரிய மூலதனமே அவரது உழைப்புதான். காலை ஏழு மணிக்கே தனதுப் பணியைத் தொடங்கிவிடுகிறார். இரவு வரை இது தொடர்கிறது.

‘கொஞ்சம் சோர்ந்துவிட்டால் அவ்வளவுதான்’ என்று சிரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது உதடுகள்தான் அசைகின்றனவே தவிர, அவரது கைகளும் கண்களும் வேலையின் மீதே கவனமாக இருக்கின்றன. ‘இப்படி சோம்பல் இல்லாமல் உழைத்தால், எப்படியும் மாதம் ஒன்றிற்கு 3ஆயிரம் பட்டங்கள் வரை செய்து விடலாம்’ என்கிறார் வெங்கடேசன்.

‘சரி. குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்துவிட்டச் சூழலில், இந்தத் தொழிலில் பாதிப்பு இல்லையா?’ கேட்டேன்.

‘இல்லை’ என்று சொல்லும் அவர், ‘தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பட்டங்கள் பறந்து கொண்டுதான் இருக்கிறது’ என்கிறார். அதே நேரம் பட்டம் தொழில் முன்பு போல இல்லை எனும் உண்மையையும் அவர் ஒத்துக்கொள்கிறார். இதற்கு வெங்கடேசன் சொல்லும் காரணம், ‘மாஞ்சா நூலுக்கு விதிக்கப்பட்டத் தடைதான்’.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சா நூல் ஏற்படுத்திய பாதிப்புகள், இந்தத் தொழிலையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அப்போதெல்லாம் பட்டம் விடுவது, போட்டிக்கான ஒரு விளையாட்டாக, ஒருவரதுப் பட்டத்தை இன்னொருவர் வானத்திலேயே வெட்டுவது, வீரவிளையாட்டாக இருந்தது. இதற்கு முக்கியத் தேவை, மாஞ்சா ஏற்றிய நூல். இப்போது மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுவதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும்.

இதனால், வெங்கடேசன் பயன்படுத்தி வந்த, மாஞ்சா போடும் 2 இயந்திரங்கள் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. பட்டம் பறக்க விடுவது, இப்போது பொழுது போக்குக்கான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. ஆனாலும், பட்டங்கள் பறந்து கொண்டு தான். இந்தத் தொழிலின் எதிர்காலம்?

‘உடலில் தெம்பு இருக்கிறவரை இதில் என் உழைப்பு இருந்து கொண்டிருக்கும்’ என்று உறுதியுடன் சொல்லும் வெங்கடேசன், ‘இதைக் கற்றுக்கொள்ள முன்வருபவர்களுக்குச் சொல்லித் தரவும் தயாராக இருக்கிறேன்’ என்கிறார்.

நீண்ட நேரம் ஆகிவிட்டது. அவரதுப் பணியில் மேலும் குறுக்கிட விரும்பவில்லை. அவரிடமிருந்து விடை பெற்றேன்.




நீங்களும் ‘காத்தாடி’ வெங்கடேசனுடன் பேச விரும்பினால், 9677559979 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..! 



_____________________________________________________
 

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

Tuesday, November 15, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 8

- இராம.கி.

அடுத்தது அகநானூறு 386, இதைப் பாடியவரும் பரணரே. இதன்திணையும் மருதம். மருதம் பாடுவதில் பரணருக்கு ஒரு விழைவு இருந்திருக்கிறது. இங்கும் நீர்நாய், ஆற்றுவாளை போன்ற குறியீடுகள் வந்து போகின்றன. இவர்காலத்தில் தமிழகம் வந்துபோன உத்தேயர் பற்றிய குறிப்பு இலைமறைகாயாய் உள்ளது. பாணர், விறலியரின் தொடர்பு தொட்டுக்காட்டப்படுகிறது. பாணரின் தோள், கைவலியும் வெளிப்படுகிறது. துறை; தோழி வாயில் மறுத்தது. தலைமகள் தகுதி சொல்லியதுமாம். தலைவனின் பரத்தமை ஒழுக்கங்கண்டு தலைவி ஊடல்கொண்டாள். தேடிவரும் தலைவனிடம் தோழி பரத்தையால் நடந்ததுசொல்லி, ”அப்பரத்தை எப்படியெலாம் கள்ளமாய்ப்பேசினாள்? அவள் பேச்சுக்கேட்டு எவ்வளவு வெட்கினேன் தெரியுமா” என்றும், “அவளிப்படி பேசக்காரணம் யார்? உன் நடத்தை தானே? உடன் மாற்றிக்கொள்” என்ற உட்கருத்தையும் இப்பாடலால் விளங்கிக்கொள்ளலாம். பாடலினூடே ஆரியப்பொருநன் பற்றிய செய்தியும் வருகிறது.

பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
வாளை நாளிரை தேரும் ஊர
நாணினேன் பெரும யானே பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த
திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணையன் நாணி யாங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மையீர் ஓதி மடவோய் யானுநின்
சேரி யேனே அயலி லாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்
தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல்வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப்பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு ”நாணினேன் யானே” என்பதை இரண்டுதரம் திருப்பிப்போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

புலவு நாறு இரும் போத்து வாளை
பொய்கை நீர்நாய் நாள் இரை தேரும் ஊர
பெரும
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்
சேரியேனே அயல் இலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கைத்
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி
மெல்ல வந்து நல்ல கூறி
பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் கண்டே.
நாணினேன் யானே

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து
ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி
நற்போர்க் கணையன் நாணியாங்கு
நாணினேன் யானே

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். புலவு நாறு இரும் போத்து வாளை = தசைநாற்றமுள்ள பெரிய ஆண் ஆற்றுவாளையை; பொய்கை நீர்நாய் = குளத்து நீர்நாய் (Otter); நாள் இரை தேரும் ஊர = நாளிரையாய்த் தேர்ந்துகொள்ளும் ஊரைச் சேர்ந்தவனே! பெரும = பெருமகனே!

”மைஈர் ஓதி மடவோய் = ”கருவகிள் கூந்தலுடைய இளம்பெண்ணே1; யானும் நின் சேரியேனே = நானும் உன் சேரியள்தான்; அயல்இலாட்டியேன் = பக்கத்து வீட்டுக்காரி; நுங்கை ஆகுவென் நினக்கு = உனக்குத் தங்கையாவேன் என; தன் கைத் தொடு = என்று தன் கையால் தொட்டு; மணி மெல் விரல் = மாணிக்கம் பொருந்திய விரலால் (இங்கே மாணிக்க மோதிரமிட்ட விரல் குறிக்கப் படுகிறது); தண்ணெனத் தைவர = தண்ணெனத் தடவி; நுதலும் கூந்தலும் நீவி = என் நெற்றியும், கூந்தலும் நீவி; மெல்ல வந்து நல்ல கூறி = மெதுவாய் வந்து நல்லன கூறி; பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் = பகலில் வந்துபெயர்ந்த (அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு; நாணினேன் யானே = (“ஒருவேளைத் தவறாக ஐயுற்றோமோ?” என) நான் நாணினேன்.

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி = பாணனின் மற்போர் நெஞ்சுரங் கண்டு வருந்தி; பெரும்பாணர், சிறுபாணரென்பார் விறலியாட்டத்தில் முழவடித்துத் (accompanying artists) துணை நிற்பர். முன்னே பேசப்பட்ட பரத்தை ஒரு விறலியாயும் (ஆட்டக்காரி) இருந்தாள் போலும். இவ்வுவமையில் பாணன் விறலிக்குப் பகரியாகிறான். ஓர் இசைக் கச்சேரியோ, நடனக் கச்சேரியோ 3,4 மணிநேரம் நடந்தால், முழவும், பறையும் தொடர்ந்தடிக்க நல்ல வலு வேண்டும். உடல்வலுக் குன்றியவரால் முடியாது. பாணர் (இக்கால மேளகாரருங்கூட) நல்ல கட்டுப்பாங்கான உடல்வலுக் கொண்டிருப்பர். அக்காலப் பாணனுக்கு மற்போர் தெரிவதும் வியப்பில்லை. இங்கே கணையன் [கணை = தண்டாயுதம், வளரி, தூண், குறுக்குமரம். அக்காலத்தில் வீட்டின் பெருங்கதவுகளில் தாழ்ப்பாள் போட்டு கணைய மரத்தைக் குறுக்கே செருகிவைப்பர். பின்னாளில் இது இரும்புப்பட்டையாய் மாறியது. செட்டிநாட்டு பெருங்கதவுகளுக்கு இன்றுங் கணையப் பட்டயங்களுண்டு. கணையன் = வலியன்; கணைக்கால் இரும்பொறை என்னுமோர் சேரமன்னனும் இருந்தான்.] என்பான் பாணனோடு தான் பொருதற்கு மாறாய் ஆரியப்பொருநனைக் கூலிக்கமர்த்திப் பொருத வைத்தான்.

இத்தொடரின் மூன்றாம் பகுதியில் உத்தேயர் (>யுத்தேயே>யௌதேய) என்ற ஆரியகணம் பற்றிச் சொன்னேன். அவர் ஆயுத கணமென்றும் சொல்லப்பட்டார். முடியரசில்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்த இவர் போர்மூலம் பொருள்திரட்டி நாட்டினுள் நகர்ந்துகொண்டிருந்தார். அகண்ட அரசை ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங்கூட்டமாய்ச் சிலகாலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ் சென்று விரிந்துகொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப்போர் நடத்துவார். கொள்ளை அடிப்பார்; நகர்ந்து போவார். தென்னாடு நோக்கி இவர் படையெடுத்ததை இவர் நாணயம் தெற்கே கிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர்க் குறிஞ்சி முருகன் வழிபாடும் இரண்டறக் கலந்து போனதாலும் அறிகிறோம். இவற்றைப் பின்னிப் பிணைந்து திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இவ்வழிபாட்டுக்கலப்பு ஒரு தனியாய்வு. யாராவது செய்யவேண்டும்.) யாரேனும் பொருள் கொடுத்து ஒரு வேலைக்கு அனுப்பிவைத்தால், (இக்கால அடியாட்கள் போல) இந்த உத்தேயர் யாரோடும் மற்போர் செய்யவோ, போர்கொள்ளவோ தயங்கமாட்டார். இங்கே ஆரியப் பொருநன் ஓர் அடியாள் (mercenary) என்பது மறைபொருள்..

எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன் = எதிரே சண்டையிடும் ஆரியப் பொருநன்; [இங்கே தலைவியின் தோழிக்கு கணையனும், தலைவிக்குக் கணையன் ஏற்பாடு செய்த ஆரியப்பொருநனும் உவமையாகிறார். ஒருவேளை தலைவி ஆரியன் போல வெள்நிறங் கொண்டவளோ, என்னவோ?] நிறைத்திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி = திரண்ட, முழவுத்தோளிலும், கையிலும் திறனொழிந்துபோய் சரிந்து கிடக்கை நோக்கி; [நல்ல முழவடிக்கக் கூடிய வலுக்கொண்ட தோள் இங்கே ஆரியப் பொருநனுக்கும் அணியாய்ச் சொல்லப்படுகிறது.] நற்போர்க் கணையன் நாணியாங்கு = நற்போர் செய்யக்கூடிய கணையன் நாணியது போல; நாணினேன் யானே = நானும் நாணினேன்.

”நான் பெரிதாய் நினைத்துக்கொண்டிருந்த என் தலைவியை இந்தக் கள்ளி கீழே சாய்த்துவிட்டாள். என் தலைவியின் நிலைகண்டு நான் வெட்கிப்போனேன்” என்பது உட்கருத்து.

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

“கருவகிள் கூந்தலுடைய இளம்பெண்ணே!
நானும் உன் சேரியள் தான்;
பக்கத்து வீட்டுக்காரி;
உனக்குத் தங்கையாவேன்”
என்று தன் கையால் தொட்டு,
மாணிக்கம் பொருந்திய விரலால்
தண்ணெனத் தடவி,
என் நெற்றியும், கூந்தலும் நீவி,
மெதுவாய் வந்து நல்லன கூறி,
பகலில் வந்து பெயர்ந்த,
(அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு,
“ஒருவேளை தவறாக ஐயுற்றோமோ?” என)
நான் நாணினேன்.

பாணனின் மற்போர்
நெஞ்சுரங் கண்டு வருந்தி,
எதிரே சண்டையிடும்
ஆரியப் பொருநன்
திரண்ட, முழவுத்தோளிலும்,
கையிலும் திறனொழிந்து போய்,
சரிந்து கிடக்கை நோக்கி,
நற்போர் செய்யக்கூடிய கணையன்
நாணியது போல்
நானும் நாணினேன்


[தொடரும்]
__________________________________________________________________










இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

Monday, November 14, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 7


- இராம.கி.


அடுத்தது அகநானூறு 276. இதைப்பாடியவர் பரணர். ஆரியவரசனான பெருகதத்தனுக்குக் (ப்ரகத்தன்) குறிஞ்சிப்பாட்டால் தமிழ்மரபைக் கற்றுக்கொடுத்த கபிலரோடு, உரையாசிரியர் பலரும், பரணரைச் சேர்த்துக் கூறினும், காலத்தாற் கபிலருக்கு இளையராகவே தென்படுகிறார். பெருகதத்த மோரியன் காலம் பொ.உ.மு.187-185. பொ.உ.மு.185 இல் புஷ்யமித்திர சுங்கன் அவனைக்கொன்று தானே முடி சூடுவான். சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் (ஏன் சேரருக்குங் கூட) ஆகாத நிலையில் சுங்கனை எதிர்த்து, நெடுஞ்சேரலாதன் வடக்கே படையெடுத்துப் போனான். பெரும்பாலும் சேரநாட்டாரான பரணர். மாமூலனார் போல், அரசியற்செய்திகளை பாடல்களிற் பிணைப்பார். இவர் பாடல்களோடு, ஆதன் குடியினரை, குறிப்பாய்க் கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனைப் பொருத்தினால், முதிய வயதிற் செங்குட்டுவனைப் பரணர் பாடியது புரியும். செங்குட்டுவன் காலம் பொ.உ.மு. 131 - 77. கபிலரின் காலம் ஏறத்தாழ பொ.உ.மு.197-143 என்றும், பரணரின் காலம் பொ.உ.மு.180-123 என்றுங் கொள்கிறோம். செங்குட்டுவன் பட்டமேறிய 8 ஆண்டுகளுள் பரணரின் ஐந்தாம் பத்து பெரும்பாலும் எழுந்ததென முடிவு செய்யலாம்.

இப்பாடலின் திணை மருதம். தலைவியின் தோழியர் கேட்கும்படியாகப் பரத்தை சொன்னது. ஆரியர் களிறுகளுக்களிக்கும் பயிற்சி இப்பாட்டில் உவமையாய்ச் சொல்லப்படுகிறது. இப்பயிற்சி வடமொழி ஆணைகளால் நடந்ததாய்ச் சங்க இலக்கியக்குறிப்புண்டு. அதைக்கொண்டு ’சங்கதச்சிறப்பு’ சொல்வாருமுண்டு. பொறுமையோடெண்ணின், இதுபோற் கூற்றுக்களெழா. ஆணைமொழி என்பது இலக்கணம் கூடிய மொழியல்ல. சில ஒலிகள், சொற்கள், செய்கைகள் இவ்வளவுஞ் சேர்ந்ததே ஆணைமொழியாகும். வடமொழியெனில், அது சங்கதமா, பாகதமா? கேள்விக்குரியது. இன்றும் தென்கிழக்காசியாவில் யானைப் பயிற்றுவிப்புண்டு. அமெரிக்க விலங்குக்காட்சி சாலைகளிலும், வித்தையரங்குகளிலும் (circus) யானைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை அந்தந்த நாட்டுமொழியிற்றான் நடைபெறுகின்றன. சங்ககாலத் தமிழகத்தில் யானைகள் வடமொழியின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டனவா? - என்பதற்கு வரலாற்றில் காரணமிருக்கலாம். பாட்டைப்படித்து விளக்கம் தேடுவோம்..

நீளிரும் பொய்கை இரைவேட் டெழுந்த
வாளைவெண் போத்து உணீஇய நாரைதன்
அடியறி வுறுத லஞ்சிப் பைப்பயக்
கடியிலம் புகூஉம் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு
ஆவது ஆக இனிநா ணுண்டோ
வருகதில் அம்மவெம் சேரி சேர
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடிபயின் றுதரூஉம் பெருங்களிறு போலத்
தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்தவன்
மார்புகடி கொள்ளேன் ஆயி னார்வுற்று
இரந்தோர்க் கீயாது ஈட்டியோன் பொருள்போல்
பரந்துவெ ளிப்படா தாகி
வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள்வரும் புணர்ச்சிகளைப்பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

வாளை வெண்போத்து உணீஇய
நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை
தன்அடி அறிவுறுதல் அஞ்சிக்
கடிஇலம் பைப்பயப் புகூஉம் கள்வன் போலச்
சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு
இனி நாண்ஆவது ஆக உண்டோ
எம்சேரி சேர வருகதில் அம்ம
அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத்
தாரும் தானையும் பற்றி
ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத்
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது பொருள்ஈட்டியோன் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
ஓம்பிய நலனே வருந்துகதில்லயாய் .

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். வாளை வெண்போத்து உணீஇய = வெள்ளிய ஆற்றுவாளைப் (Wallago attu) போத்து உண்பதற்கு; வாளையை ஆற்று வாளை என்றுமழைப்பர். உற்றுப்பாருங்கள் தமிழ்ப்பெயரே தலைகீழாய் மீனியற் பெயராகிறது. தெற்காசியா/தென்கிழக்காசியாவில் பரவலாக ஆறு, ஏரி, குளங்களில் இவ்வெள்ளைமீன் கிட்டத்தட்ட 1 மீ. நிரவல் நீளத்தோடும், 18-20 கி.கி. எடையோடும் வளர்கிறது. ஆண்மீன் பெண்மீனைவிடப் பெரியது; ”போத்து” ஆணைக் குறிக்கும். கடல்வாளையோடு ஆற்றுவாளையைப் பலருங்குழப்புவர்..கடல்வாளை குமரிக்கடற்கரைகளில் பெரிதுங்கிடைக்கும். மருதத்திணை என்பதாலும், நீர்நிலையில் நாரை சாப்பிடமுயல்கிறது என்பதாலும் இது நந்நீர் மீனையே இங்கு குறிக்கிறதெனலாம்.

நீள்இரும் பொய்கை எழுந்த இரைவேட்டு நாரை = நீள்பெருங் குளத்தெழுந்த இரைதேடும் நாரை; ”நீள்பெரும்” பெயரடை செவ்வகக் குளத்தைக் குறிக்கிறது. பொள்ளிச்செய்த குளம் பொய்கை..தன்அடி அறிவுறுதல் அஞ்சி = ”எங்கே தன்னடை (மீன்களுக்கு) அறிவுறுத்திவிடுமோ?” என அஞ்சி; கடிஇலம் பைப்பய புகூஉம் கள்வன் போல = காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும் கள்வனைப் போல; ’பைய’ என்பது இன்று திருச்சிக்குத் தெற்கேதான் புழங்குகிறது. வடதமிழகத்தார்க்கு இச்சொல் புரியாமற் போகலாம். ஆனால் சங்க இலக்கியங்களில் பெரிதும் புழங்கியுள்ளது. சாஅய் ஒதுங்கும் துறைகேழ் ஊரனொடு = சாய்ந்தொதுங்கும் துறைநிறை ஊர்த்தலைவனோடு; ஆற்றோர துறையனாதலின் துறைகேழ் ஊரன். இனி நாண் ஆவது ஆக உண்டோ = இனியும் நாணப்படுவதில் பொருள் உண்டோ? எம்சேரி சேர வருகதில் அம்ம = பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேரவாருங்கள்; இது ஒருவிதமான வல்லமைப் போட்டிக்கான கூவல். 

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காணத் = செவ்வரி உண்கண் பொருந்திய அவன்வீட்டுப் பெண்கள் காண; இங்கே ஊரன்கிழத்தி மட்டுமின்றி, அவன்வீட்டு அனைத்துப்பெண்களும் பேசப்படுகிறார். தாரும் தானையும் பற்றி = அவன் மாலையையும், ஆடையையும் பற்றி; இன்றும் சேலை முன்’தானை’ பயில்கிறோம். வேட்டியின் ஒருபக்கமும் தானைதான். ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல = ஆரியர் பெண்யானைகொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல; இங்கே 2 உண்மைகள் பேசப்படுகின்றன. ஒன்று யானையின் உடற்கூறு, யானையின் வாழ்க்கை, யானையைப் பழக்கும் நடைமுறை ஆகியவற்றோடு தொடர்பானது.. இதை முதலிற் பார்ப்போம். இன்னொன்று வரலாற்றின் பாற்பட்டு, வடமொழிவழிப் பயிற்றுவிப்பு பற்றியது. இதை இரண்டாவதாய்ப் பார்ப்போம்..

யானைகள் பொதுவாய்க் குடும்பங் குடும்பமாய்த் திரியும் இயல்புடையன. ஆணோ, பெண்ணோ ஓரொரு யானையும் 50, 60 ஆண்டுகள்கூட வாழலாம். யானைக்குடும்பம் பெண்ணையே தலைவியாய்க் கொள்ளும். அகவைமுற்றிய ஆண்யானைகள் இதில் அடங்கியே வாழும். அதேபொழுது ஆண்யானைகளுக்குக் குடும்பங்களில் அழுத்தமில்லாதில்லை. குறிப்பாக விடலை யானைகள் குடும்பத்தோடு ஒட்டிவாழ்ந்தாலும், 14-15 வயதில் இனப்பெருக்க ஊறுமங்கள் (hormones), குறிப்பாய்த் தடித்திரமம் (testosterone), ஊறுவதால், குடும்பத்திலிருந்து விலகித் தனியாகவோ, வேறு ஆண்யானைகளுடன் சேர்ந்தோ அலையும்.. அப்போது வேறுகுடும்பப் பெண்யானையால் ஈர்க்கப்பட்டு, உடலுறவுகொண்டு, அக்குடும்போடு சேர்ந்துவிடலாம். (கிட்டத்தட்ட சேரலத்து மருமக்கள் தாயமுறை போன்றது தான்.)

தடித்திரம ஊறல் மாந்தரைப்போல் யானைகளுக்கு சீராகவமையாது. பருவம்பொறுத்துக் கூடக்குறைய அமையலாம். எக்கச்சக்கமாய் அளவுகூடிய யானைகளுக்கு மதம் (musth) பிடிக்கிறது. மிதமிஞ்சிய ஊறுமஞ் சுரந்த நிலையே மதமாகும். இதன் விளைவால், நெற்றித்தும்பில் (தும்பு=ஓரம்; temple of the forehead. நெற்றிப்பொட்டென்றுஞ் சொல்வர்.) பொக்குளந் தோன்றி அதுவெடித்துச் சீழ்வடியலாம். இச்சீழைத்தான் மதநீரென்பார். இது வடியும் நேரத்தில் இன்னதென்றறியாமல் சினங்கூடி, யானை வெய்யழிப்புத் (violent) தோற்றமுங் காட்டும். மதங்கொண்ட யானையை அடக்குவது கடினம். மதத்தை இறக்கி வழிக்கொணர்வது ’கலை,கொடுமையென எல்லாஞ்’ சேர்ந்தது. (இக்காலத்தில் ஊசிகள்போட்டும் மதங்குறைப்பர்.) சில ஆண்யானைகளுக்கு அடிக்கடி மதம்பிடிக்கலாம். சிலவற்றிற்கு எப்போதோ நடக்கலாம். சிலவற்றிற்கு நடக்காமலே போகலாம். எல்லாநேரமும் யானைக் கூட்டங்களில் அவற்றைக் கட்டுள் கொணர்வன பெண் யானைகளே. அதேபோல, தனித்துத் திரிந்த விடலை யானைகளைப் பிடித்துவந்து பழக்கும்போதும் பாகர்கள் பெண் யானைளை வைத்தே ஒழுங்கு நடைமுறையைச் சொல்லிக் கொடுப்பார்.           .

இனி இரண்டாம் கேள்விக்குப் போவோம். இற்றை மக்கள்திரள் ஈனியலின் (population genetics) படி, ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பழங்குடிமாந்தர் 70000 ஆண்டுகளுக்குமுன் இந்தியா வந்தார்;  வந்தவரில் ஒருசாரார் இங்கிருந்து பர்மாபோய், பின் ஒவ்வொரு நாடாய்க் கடந்து ஆசுத்திரேலியா போய்ச் சேர்ந்ததாய் அறிவியல் கூறும். நெய்தலார் (coastal people) என்றழைக்கப்பட்ட இன்னொரு சாரார் இங்கேயே தங்கிக் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் வாழ்ந்தார். வரும்போது இவர் ஏதோவொரு மொழியைக் கொண்டுவந்தாரென்றே அறிவியல் கூறும். அம்மொழி எது என்ற சிக்கலுக்குள் இப்போது போகவேண்டாம். ஆனால் அதிலிருந்து பல்வேறு காலங்களில் கிளைத்தவையே தமிழிய (திராவிட) மொழிகளாகும். பாகதமும் இதிலிருந்து தான் கிளைத்தது, அது வட திராவிடம் தான்  என்று ஒரு சாராரும், ”இல்லை வேறொரு மாந்தப்பெயர்வில் அது உள்நுழைந்தது” என்று இன்னொரு சாராருஞ் சொல்வர். இன்றுள்ள நிலையில் இந்தப்புதிரையும் விடுவிக்க முடியாது. 

அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்நெய்தலாரே நாட்டின் உட்பகுதிகளுக்குள் நுழைந்தார். முல்லைவாழ்க்கையும், குறிஞ்சிவாழ்க்கையும் அதன்பின் ஏற்பட்டன. (நம்மிற்பலரும் குறிஞ்சியே முதலென்று எண்ணிக்கொள்கிறோம். அப்படிக் கிடையாது.) இன்னும் காலங் கழிந்து, முல்லை/நெய்தல் ஊடாட்டத்தில், நுட்பியல் மாற்றங்கள் ஏற்பட்டு மருதவாழ்க்கை உருவானது. குறிஞ்சி, முல்லையில் குறுநில மன்னர் தோன்றினார். மருத வாழ்க்கையில் பேரரசரும், வேந்தரும் தோன்றினார். பொ.உ.மு.1000-800 களில் வடக்கே 16 கணபதங்களிருந்து அவையே பொ.உ.மு. 600 களில் 3, 4 வேந்தர்களாய் மாறி, முடிவில் பொ.உ.மு.500-450 களில் மகதமே பேரரசு என்னும் நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட இதேகாலத்தில் தமிழகத்திலிருந்த இனக்குழுக்கள் ஒன்றோடொன்று கலந்து சேர, சோழ, பாண்டியர் எனும் பெரும் இனக்குழுக்கள்வழி மூவேந்தரமைந்தார். இக்காலத்தில் தமிழகத்தினூடே குறுநிலவேளிர் இருந்தது போலவே வடக்கிலும் மகதத்தைச் சுற்றியும் ஊடேயுமிருந்தார். மகத நாகரிகத்திற்கும், தமிழ நாகரிகத்திற்கும் பல்வேறு ஒப்புமைகளும் போட்டிகளும் இருந்தன. (அவற்றை இங்கு விரிப்பின் பெருகும். என் ”சிலம்பின் காலம்” நூலில் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.)

தமிழகத்தைப் பார்க்க, மகதம் பென்னம்பெரிய நிலம். மக்கள்தொகைக் கூடக்கூட கங்கைக்கரையை ஒட்டிய காடுகளை அழித்து அவ்விடங்களில் மருதத்தை ஏற்படுத்தும் தேவை மகதத்திலெழுந்தது. போர்க்கைதிகளாலும், வரிச்சலுகைகளால் தூண்டப்பெற்ற மக்களாலும் பெருவாரியான மக்கள் நகர்த்தப் பெற்றனர். மரங்களை அழிப்பதும், வெட்டிய மரங்களை அகற்றுவதும் தேவை என்றபோது யானைகளே கதியென்றாயிற்று. தவிர, 16 கணபதங்களும் ஒன்றுக்கொன்று பொருதி, சில அழிந்து சில பிணைந்து முடிவில் மகதத்தின் படை விரிந்தது. எந்தக் கோட்டையின் பாதுகாப்பும் மாற்றார் வலுக்காட்டிற்கு (offence) எதிரான, வலுவெதிர்ப்பு (defence) முனைப்புக்களே. வலுவெதிர்ப்பைச் (defence) [தொடர்புள்ள மற்ற சொற்கள் சேமம்(safety), பாதுகாப்பு(security), காவல்(police)] சுருக்கமாய் அரணென்றுஞ் சொல்லலாம். armyக்கு அரணமென்றும் ஒரு சொல் பரிந்துரைத்தேன். கி.மு.462-446 இல், மகதவரசன் அசாதசத்துவிற்குப் பின்வந்த, உதயபட்டனின் பாடலிபுத்தக் கோட்டையில் 54 வாயில்கள், 570 எயில்மாடங்கள் இருந்தனவாம். அவ்வூர் ஏறத்தாழ 14.5 கி.மீ. நீளம், 2.5 கி.மீ. அகலங் கொண்டதெனில் ஊர்நடுவே எவ்வளவு பெருங்கோட்டை இருந்திருக்கும் ?! - என்று சற்று எண்ணிப்பாருங்கள். இவ்வளவு பெரிய கோட்டையைக் காப்பாற்ற எவ்வளவு பெரிய படைவேண்டும்? யானையில்லாது கோட்டைகளை எப்படிக் காப்பாற்றமுடியும்? தகர்க்கமுடியும்?

அலெக்சாந்தர் இந்தியாவந்த நேரத்தில், நந்தரிடம் 9000 யானைகள் இருந்ததாய்ச் சொல்வர். அதேபொழுது, மற்ற அரசரிடம் (தெற்கேயிருந்த மூவேந்தரிடமுங் கூட) அவ்வளவு யானைகளில்லை. 1000 தேர்ந்தால் அதிகம். பரப்பளவிற்குறைந்த அரசுகளில் யானையிருப்புக் குறைவு. அரசின் பொருளாதாரம், வலுவெதிர்ப்பு போன்றவை வளர, யானைகளை அடக்குவதும், பழக்குவதும், பயன்படுத்துவதும் தேவையாயிற்று. எண்ணிக்கையிற் கூடிய யானைகள் தேவைப்பட்டன. எனவே மகதத்தில் யானைப்பாகர் மிகுத்துப் போனார். அந்நாட்டின் பலமருங்கிலும் யானைப்பயிற்சி மையங்கள் இருந்திருக்கலாம். அருத்த சாற்றம் (Arthasastra) இதை விரிவாகப் பேசும். (சங்க இலக்கியம் புரிய அருத்தசாற்றப் பின்புலம் தேவை.) பின்னால் மகத அரசுகள் சிதைந்தபோது யானைப்படைகளுஞ் சுருங்கின.

அக்காலத்தில் யானைகளைப் பழக்க மிகுந்த ஆண்டுகள் பிடித்ததால், போர் முடிந்தவுடன், எதிரி யானைப்படையைத் தம்படையோடு சேர்த்துக்கொள்ளும் விந்தைப் பழக்கமும் இருந்தது. (யானையைப் பிடித்துச் சிலவாண்டுகள் பழக்கிவைக்கும் செலவும், முயற்சியும் குறைந்துபோகுமே? சட்டென்று சேர்த்துக்கொள்ளலாமே?) எனவே நாளாவட்டில் நாடெங்கணும் யானைப்பாகர் நடுவில் வடமொழியான ஆணைமொழி பொதுவாகிப்போனது.

19 ஆம் நூற்றாண்டு நடைமுறையை நான் சொல்லலாம். இங்கிருந்து சுரினாம், ப்வ்யூஜி போன்ற நாடுகளுக்குப்போன இந்தியக்கூலிகள் தமிழ், தெலுங்கு போன்ற தம் மொழிகளை மறந்தே போனார். பெயரிலும் சில பழக்கங்களிலும் மட்டுமே தமிழிருக்கும். தங்களோடு அங்குவந்த பீகாரிகளின் மொழியான 19 ஆம் நூற்றாண்டு இந்துசுத்தானியே இவருக்கும் நாளடைவில் பொதுமொழியானது. அது நம்மூர் ”சர்க்கார்” சங்கத இந்திக்கும் வேறுபட்டது. இன்று சென்னையின் பலவிடங்களில் குறிப்பாக நான் 4 ஆண்டுகளிருந்த சோழிங்கநல்லூரில், ஞாயிற்றுச் சந்தையின் பொதுமொழி இந்தியாயிருக்கிறது. அங்கே பெரிதும் வாங்க வருவது பீகார், சார்க்கண்ட, சட்டிசுக்கர், ஒடிசா மாநிலங்களிருந்து வந்த கட்டிடத்தொழிலாளர். அதேபோல் கும்மிடிப்பூண்டியிலிருக்கும் பல்வேறு வடகிழக்கு மாநில மக்களால் அந்தூர்க் கடைவீதியில் இந்தியே பெரிதும் புழங்குகிறது. அதேபோல் சென்னை சவுகார் பேட்டையில் இருக்கும் மார்வாரிகளால், இந்தியே பெரிதாகிப் போனது. திராவிடம் பேசும் கட்சிகளே அங்கு இந்தியில் நுவலிகளை (notices) அளிக்கின்றன. எல்லாம் தேவை (demand) - அளிப்புத் (supply) தான். ஆரியர் வடமொழி வழியே சங்ககாலத் தமிழகத்தில் யானை பயிற்றுவித்தது ஒரு விலங்கியல், பொருளியல் ஊடாட்டம். அதற்கும் மொழிவிதப்பிற்கும் தொடர்பைக் காண்பது பொருளற்றது. இனி பாட்டிற்குள் போவோம்.

தோள்கந்தாகக் கூந்தலின் பிணித்து = என்தோளைத் தறியாக்கி என்கூந்தலால் கட்டிப்போட்டு; அவன் மார்பு கடிகொள்ளேன் ஆயின் = என்மார்பில் அவனைச் சிறைகொள்ளேனாயின்; ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் = ஆர்வமுற்று இரந்துவருவோர்க்கு ஈயாது ஈட்டியவன் பொருள்போல்; பரந்து வெளிப்படாதாகி = பரந்து வெளிப்படாதாகி, ஓம்பிய நலனே = (இதுநாள்வரை) காப்பாற்றிய என்னழகு; வருந்துகதில்லயாய் = வருந்தி அழியட்டும்.  .

இனிப் பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

வெள்ளிய ஆண்வாளை உண்பதற்கு,
நீள்பெருங் குளத்தெழுந்த இரைதேடும் நாரை,
”எங்கே தன்னடை (மீன்களுக்கு)
அறிவுறுத்திவிடுமோ?” என அஞ்சி
காவலுள்ள இல்லத்துள் மெதுமெதுவாகப் புகும்
கள்வனைப்போல சாய்ந்தொதுங்கும்
துறைநிறை ஊரனொடு
இனியும் நாணப்படுவதில் பொருளுண்டோ?

பெண்களே! எம் (பரத்தைச்)சேரிக்குச் சேரவாருங்கள்!

செவ்வரி உண்கண் பொருந்திய அவன்வீட்டுப் பெண்கள் காண
அவன் மாலையையும், ஆடையையும் பற்றி,
ஆரியர் பெண்யானையை கொண்டு பயிற்றுவிக்கும் ஆண்யானை போல
என் தோளைத் தறியாக்கி என்கூந்தலாற் கட்டிப்போட்டு
என்மார்பில் அவனைச் சிறைகொள்ளேன் ஆயின்
ஆர்வமுற்று இரந்துவருவோர்க்கு ஈயாது
பொருளீட்டியான் போல்
பரந்து வெளிப்படாதாகி
(இதுநாள்வரை) காப்பாற்றிய என்னழகு
வருந்தி அழியட்டும்.


[தொடரும்]
__________________________________________________________________










இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________