Showing posts with label இராம.கி.. Show all posts
Showing posts with label இராம.கி.. Show all posts

Thursday, December 9, 2021

செவிமடல் பாகங்கள்

-- திரு.  இராம.கி. 


அண்மையில், மின்தமிழ் மடற்குழுவில், ஒரு  செவிமடல் படத்தைக் கொடுத்துப் பாகங்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.  




தோடு, தண்டட்டி, தொங்கட்டான் என வித விதக் காதணிகள் போடும் நம்மூரில், செவிமடல் பாகங்களுக்கான ”இணைத் தமிழ்ச் சொற்களைச்” சான்றோடு சொல்ல நம்மிடம் எழுத்துப் பதிவுகள் இல்லை. இவ்வணிகளைப் போடும் பழக்கமும் அருகி விட்டது. இனியும் இப்படியொரு சொல்லில்லாச் சோகம் வேண்டாம். படத்தில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்க் கலைச் சொற்களைப் பார்ப்போம். 

             முதலில் வருவது Helix (n.) இதற்கு விளக்கமாய், ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில், "a spiral thing," 1560s, originally of the volutes of Corinthian capitals, from Latin helix "spiral, a volute in architecture," from Greek helix (genitive helikos), a word used of anything in a spiral shape (an armlet, a curl of hair, the tendril of a vine, a serpent's coil), which is related to eilein "to turn, twist, roll," from PIE *wel-ik-, from root *wel- (3) "to turn, revolve," from PIE root *wel- (3) "to turn, revolve." The classical plural is helices என்று போட்டிருப்பர். 

தமிழில் spiralயைப் புரி என்போம். வலம்புரி/ இடம்புரிச் சங்கு எனும் சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். புரி என்பது கிடைப் பரிமானத்தில் (horizontal dimension) மட்டும் விரியும். helix-ஓ, குத்துப் பரிமானத்திலும் (vertical dimension) விரியும். 

”சுழிப்பு” என்ற சொல் முதலில் வட்டத்தைக் குறித்தாலும் வேக நீரோட்டத்தில் உள்நோக்கிய குழிவு ஏற்படுவதை மறக்க வேண்டாம். "சுழலுக்குள் மாட்டினான்" எனும்போது நம்மை அறியாமல் helix ஐச் சுழிகை என்ற சொல்லால் உணர்த்துகிறோம். 

சுல் எனும் வேரிலிருந்து சுழி எழுந்தது போல், சுரி என்ற சொல்லும் எழும். சுரிகுழல் = helical ஆகச் சுருண்டு கிடக்கும் முடிக்கற்றை. ”சுரிமுகம்” இது குத்துத் திசையிலும் சுருண்ட சங்கைக் குறிக்கும். நத்தைக்கூட்டைக் கூடச் சுரிமுகம் என்பார். இன்னொரு விதமாய் திருகாணி (helical screw) எனும் போது, திருகு என்ற சொல்லும் helical motion- யைக் குறிக்கிறது. முறுக்கு என்பதும் கூடத் திருகிக் கொண்ட தன்மையைக் குறிக்கும். முறுகு, திருகு, சுழிகை, சுரிகை என்ற நான்கும் ஒரே பொருளைக் குறித்தாலும், வேற்றுமை காட்டும் முகத்தான் இக்கால அறிவியல் புழக்கமாய்ச் சுரிகையையே  helix-க்கு இணையாகக் கொள்ளலாம்.

             அடுத்தது cartilage. இதைக் குருத்தெலும்பு என்பார். குருத்து = இளமை. cartilage (n.) "gristle; firm, elastic animal tissue," early 15c., from Old French cartilage and directly from Latin cartilaginem (nominative cartilago) "cartilage, gristle," which is possibly related to cratis "wickerwork".

             மூன்றாவது சொல் snug (adj.) 1590s, "compact, trim" (of a ship), especially "protected from the weather," perhaps from a Scandinavian source such as Old Norse snoggr "short-haired," Old Swedish snygg, Old Danish snøg "neat, tidy," perhaps from PIE *kes- (1) "to scratch" (see xyster). Sense of "in a state of ease or comfort" first recorded 1620s. Meaning "fit closely" is first found 1838. தமிழில் சிக், நச், என்று ஒலிக்குறிப்புச் சொற்களால், பொருந்தப் பிடிக்கும் வினையைக் குறிப்போம். நெக்கு-தல் வினை,  ஒன்று இன்னொன்றில் பொருந்தலையும். நெக்கு விடுதல் என்பது பொருத்துவாய் விடுதலையும் குறிக்கும். ”நெகிழ்ச்சி” என்பதும் கூட இதன் தொடர்ச்சியாகலாம். என்னைக் கேட்டால் நெக்கு என்பது snug இற்கு இணைகாட்டும் என்பேன்.

             conch = சங்கு. இதற்குப் பெரிய விளக்கம் சொல்ல வேண்டாம்.

             அடுத்தது,  Tragus = துருகு. (n.) eminence at the opening of the ear,செவி வாசலில் துருகி வரும் எழுச்சி. துரு-த்தல் = முன்வரல். " 1690s, Modern Latin, from Greek tragos in this sense (Rufus of Ephesus), properly "he-goat;" so called for the tuft of hair which grows there, which resembles a goat's beard.

             Anti-Tragus = துருகெதிர்.  (பின்னொட்டையே பெரிதும் பயன்படுத்தும் மரபு தமிழில் உண்டு.)

             Lobe மடல்; 2nd Lobe 2 ஆம் மடல்; 3rd Lobe 3 ஆம் மடல்

             Rook = துருகடி.  துருகு வளையத்தின்  அடிப்பாகமாய் இது அமையும். 

             Daith = குருத்தடி. (இன்னும் பொருத்தமான சொல்லைத் தேடவேண்டும்.)





Sunday, May 31, 2020

நெல்லும் தமிழரும் தென்கிழக்கு ஆசியாவும்

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும்

-- இராம.கி.

            ”Paddy என்பது நெல்லை குறிக்க ஆங்கிலம் பயன்படுத்தும் சொல். இதன் மூலச்சொல் Pady என்கிற மலாய் மொழி சொல் என அறியாமல் ஆங்கிலம் உளறும். நெல்லை படியால் அளக்கும் செயலால் நெல்லை படி என்றே அழைத்தனர்.  சாப்பாட்டிற்கு அவங்கதான் படியளக்கிறாங்க என்றால் உணவுக்கு அவர்கள்தான் நெல் அளந்து கொடுக்கிறார்கள் என்றேபொருள். ஆகவே தமிழ் அளத்தல் அளவான படி என்பதே ஆங்கிலத்தில் படி. ப்பேடி என்ற உச்சரிப்பில் வழங்கப்படுகிறது” என்ற சிற்றிடுகையைத் ”தமிழரின் தொன்மை, பண்பாடு, வரலாறு தொடர்பான பதிவுகள் குறித்த ஆய்வுதள (STARCH)” எனும் முகநூற் குழுவில் ஒருமுறை கண்டு வியந்துபோனேன். ஒருவேளை சொற்பிறப்பியல் என்பது சிலருக்குக் குடிசைத் தொழில் ஆகிவிட்டதோ? என்ன ஆயிற்று இவருக்கு? சான்றின்றி இப்படிக் கற்பனையிற் சொல்ல முடியுமா?
            இவர் காட்டும் எழுத்துப் பெயர்ப்பு சரியா? Paddy யில் 2 d உண்டே? ஆங்கிலம் உளறுகிறதா? இன்னொரு மொழியை இப்படிச் சொல்லலாமா? “தமிழ் உளறுகிறதெ”ன வேற்றார் சொன்னால் நாம் வாளாய் இருப்போமா? தவிரப் ”படி” எப்படி நெற்பெயராகும்? சான்றென்ன? அளக்கப்படும் பொருளுக்குப் பகரியாய், வேறெதிலும் அளவையலகு பெயராகியது உண்டோ? குறிப்பிட்ட மலாய்ச்சொல் Padyயா Padiயா? எப்படி அப்பெயர் அங்கு வந்தது? Padi, அரிசி/நெல்லைச் சேர்ந்து குறிக்காதா? (மலாயில் nasi=சோறு.) நெல்வேளாண்மை அங்கெப்படி ஏற்பட்டது? இந்நண்பர் மட்டுமன்றி, பன்னூறு தமிழரும் ”நெல் நம்மூரில் தோன்றிய கூலம்” என்றே ஆதாரமின்றி எண்ணிக் கொள்கிறார், பேசவுஞ் செய்கிறார். நம்மூரிற் புழங்குபவற்றை நாமே கண்டுபிடித்தோம் என்பது சரியா? இங்கிருந்து அரிசி மேற்கே போனது சரியாகலாம். ஆனால், மேற்குலகே முழுவுலகு ஆகிவிடுமா? தவிரத் தானாய் நெல் வளர்ந்தது ஒருகாலம் எனில் பயிரிடத் தொடங்கியது வேறு காலமன்றோ?
            இயற்கையரிசி 8500-13500 ஆண்டுகள்முன் சீன யாங்க்ட்சி ஆற்றங்கரையில் தோன்றியிருக்கலாமென ஒருசிலரும், (பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோசு, வியத்நாம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு) சேர்ந்த பழஞ் சுந்தாலாந்துக் கண்டத்தில் எழுந்திருக்கலாமென வேறு சிலரும் ஆதாரத்தோடு சொல்வார். மேலும் 5000 ஆண்டுகள்முன் கொரியா, சப்பான், கங்கைச் சமவெளிகளில் நெல் வளர்ந்ததற்கும் ஈனியல் (genetics), தொல்லியல் (archeology) சான்றுகளுண்டு. தவிர, புதுக்கற்காலத்தில் (பொ.உ.மு.9000-8000) அலகாபாத் மாவட்டம் கோல்திவாவில் கான் நெல்லும் (Oryza rufipogon) பயிர் நெல்லும் (Oruyza sativa) விளைந்ததாய்ச் (Indian archeology A. review 1974-75, 80 Indian Archeology A review 1976076, 88 Sharma et al;, Beginnings of Agriculture, Allahabad, Abinash Prakashan, 1980, 184) சொல்வர். இவையெலாம் பயிரியல் (agronomy), பழம் புதலியல் (Paleobotany) ஆதாரங்களோடு வருங் குறிப்புகள். இவற்றையெலாம் "“ப்பூ” என்று உதறித் தள்ள முடியாது.
            அண்மையில் Antiquity இதழிலும் Journal of Archaeological Science இதழிலும் ஆக்சுபோர்டு, பனாரசு இந்து பல்கலைக்கழகங்கள் இணைந்துநடத்திய ஆய்வறிக்கையில், அரியானாவிலுள்ள Rakhigargh பகுதியில் 2430-2140 BC அளவில் கான்நெல், பயிர்நெல் சார்ந்த வேளாண்மைக்குச் சான்று பகர்வார். இத்தோடு ஒன்றை மறக்கக்கூடாது. அரிசி, சிந்து சமவெளியில் தோன்றிய பயிரல்ல. அது கங்கைக் கரையிலிருந்து சிந்து சமவெளிக்குப் பெயர்ந்தது என்றே அறிவியல் சொல்லும். வடபுலத்தில் நெல்வந்த திசை கிழக்கிருந்தே தொடங்கும். கங்கைக் கரைக்கு அது எப்போது வந்தது? தெரியாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இயற்கையிலோ, மாந்தமுயற்சியிலோ நெல்தாவரம் எழுந்து/வளர்ந்து, பின் வணிகம், மாந்தநகர்ச்சி போன்றவற்றால் வேறிடம் நகர்ந்தது. அவற்றிற்சில வேறிடங்களில் பயிரிடவும் படலாம். நம்மூரில் பயிரிடப் படுவதாலே நம்பெயர் உலகெங்கும் உள்ளதென ஒருபோதுங் கூறமுடியாது. இதுவரையறிந்த அறிவியற் செய்திகளின் படி நெல் பெரும்பாலும் சீனத்தின் யாங்ட்சி ஆற்றங்கரை, யுன்னான் மாநிலம், அல்லது தென்கிழக்காசியா பகுதி என ஏதோவொன்றில் தோன்றி நம்மூருக்குப் பரவியிருக்கலாம் என்பதே பழம்புதலியலாரின் கணிப்பு. கீழே விரிவாய்ப் பார்ப்போம்.
            ”தமிழரே மூத்தார், மலேசியர் இளையரெ”னும் அண்ணன்கார முடிவு அடிப்படையில் சரியானதல்ல. ”சிலவற்றில் அவர்முந்தி சிலவற்றில் நாம் முந்தி.” இன்று நாம்காணும் இரட்டை விலாவரிக் கலத்தின் (double outrigger canoe) கட்டுமானத்தை தென்கிழக்காசியரிடமிருந்தே நாம் கற்றோம். அதன் பின்னரே கலங்களின் கவிழாக் கட்டுமானத்தேவை நமக்குப்புரிந்தது. தவிர, இற்றை மடகாசுகர் மொழியான மலகாசி, மலேசிய/இந்தோனேசிய மொழிகளோடு தொடர்புற்றதென்பர். இவ்விரு நாட்டவர்க்கும், மலகாசி இனத்தார்க்கும் ஈனியல் தொடர்புண்டு. (Human settlement of Madagascar occurred between 350 BC and 550 AD by Austronesian peoples, arriving on outrigger canoes from Borneo.) இவையெலாம் நெடுங்காலம் கடற்பயணப் பழக்கம் தென்கிழக்கு ஆசியருக்கு இருந்தால்தான் முடியும். ”யாம் மூத்தவர், நீரிளையர்” எனும் சங்கத நடை முறையை ஏற்காது சாடுகிறோமே? அதேபாதையிற் நாம் பயணித்து நம்மிலுங் கீழே மலேசியரை இறக்குவது சரியா? அது முன்னுக்குப் பின் முரண் இல்லையா?
            மாற்றோர் செய்தால் தவறு, நாம் செய்தால் சரியா? தமிழ், தமிழென்பதில் கவனம் வேண்டாமா? வெகு எளிதில் நாம் பொதுக்கையர் ஆகும் (facist) இயலுமை உங்களுக்குப் புரிகிறதோ? இணையமெங்கும் அவ் வியலுமையை நான் காண்கிறேன். கரணம் தப்பினால் மரணம். நண்பரின் இடுகை போல் சொல்வது முறையற்றது. சற்று கிடுக்கிப் பாருங்கள். புரியும். குமுக மிடையங்களில் (social media) ஒருவர் இடுகையை மற்றோர் விழைவதும், முதுகில் தட்டிக்கொடுப்பதும், அவைநாகரிகத்தால் ஒன்றுஞ்சொலாது நகர்வதும், ”எழுதுவதெலாஞ் சரி”யென எண்ணுவதும், ஒருவர் எழுத்தை மற்றோர் முன்வரிப்பதும் முகநூலாருக்கு வேண்டின் நலம்பயக்கும். தமிழை வளர்க்குமா? சற்று ஓர்ந்துபாருங்கள். இதுபோற் போலிச்செய்திகள் பெரிதாய் உலவுங்காலத்தில். நம் அறிவியற் பார்வையைக் கூட்டிக் கொள்ளலாமே?
            ஏற்கனவே ”குமரிக்கண்டம், தமிழே முதன்மொழி, உலகில் உள்ளதெலாம் தமிழன் தந்ததே, நுல்லிய (million) ஆண்டுகள் முன் தமிழனிருந்தான்”.போன்ற உள்ளீடற்ற கூற்றுக்களை நம்ப, உலகிற் பலரும் அணியமாய் இல்லை. ”ஆப்பிரிக்கா விட்டு ஓமோசேப்பியன் வெளியானதே 70000 ஆண்டுகளென” ஒரு சிலரும். ”1.5/3.5 இலக்கம் ஆண்டென” வேறு சிலரும் தரவுகளோடு வாதாடுகையில், அதனூடே புகுந்து தமிழனின் நுல்லிய கால வாழ்வுக்கு நாம் தரும் தரவுகளென்ன? தொல்லியலா? மாந்தவியலா? ஈனியலா? குமரிக் கண்டம் என்பதற்கும் அடிப்படை வேண்டாமா? தவறாய்ப் புரிந்துகொண்ட இலக்கிய ஆதாரம் மட்டுமே போதுமா? வரலாற்றிற்கு முந்தைக் காலத்தில் இலக்கியம் உண்டோ? நாம் முந்தையர் என்று சொல்ல எத்தனை புலங்களில் ஆய்வு செய்தோம்? வெறும் வாய்ப் பந்தல் போடுவதே நம்மைக் கொண்டு செல்லுமா?
            சொற்பிறப்பியல் வழி தமிழுயர்த்த நினைப்போர், குமுக மிடையத்தில் அரசியற் பார்வை கொள்ளாது, பாவாணர் புகழை மட்டும் பாடாது, அருள் கூர்ந்து பாவாணர், ப.அருளி, கு.அரசேந்திரன் போன்றோரின் கட்டுரைகளை ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் புலமை கொள்ளுங்கள். ”முந்தையோர் எந்த அளவிற்குச் சலித்துப் பார்த்துக் கவனத்தோடு பொருள் சொன்னார்? சொற்பிறப்பியல் என்பது எப்படி நகர்கிறது? எவ்வொலி எப்படித் திரியும்?, எது முறை, எது முறையற்றது? நாம் சொல்வதன் ஏரணமென்ன?, மக்கள் பயன்பாடென்ன? முற்படுத்தும் கருத்துகளுக்கு இலக்கிய, கல்வெட்டு, பிறமொழி, பிறபுல ஆதாரங்களுண்டா?” எனப் பாருங்கள். தோன்றியபடி 4 எழுத்துகளைத் திருத்திப் போட்டு, அதன்வழி உன்னித்து Folk etymology காட்டுவது, முறையற்றது. (நான்சொல்லும் சொற்பிறப்பியலைக் கூட ஏற்கமறுப்போர் இணையத்திலுண்டு. அதுகண்டு நான் சினமுற முடியுமோ?). இதுபோற் கூற்றை எல்லா மொழியியலாரும் சட்டென ஏற்கார். சொற்பிறப்பியல் என்பது நம்முன் நடக்கும் ”அந்தர சால” மாகை (magic) அல்ல. மீறிச் செய்ய நாம் அடம்பிடித்தால், people would not take us seriously. ”Non-sensical arguments” என்று கூறி நகர்வர்.
            இத்தொடரில் நான் நெல்லை மட்டும் பேசவில்லை. மாழை, வணிகம், கடற் பயணம், நகர்ச்சியெனத் தமிழருக்கும், தென்கிழக்காசியருக்கும் பொதுவான பல்வேறு செய்திகளைப் பற்றியும் பேசுகிறேன். ”நெல்லும், தமிழரும் தென் கிழக்காசியாவும்” என்பது சரியாக ஆயப்படாத ஒரு புலம். இதில் மனத்தடையே மிகுதி. நான் சொல்வதிற் சிலவற்றை நீங்கள் ஏற்கலாம், சிலவற்றை ஏற்காதும் போகலாம். ”கிழக்கைப் பார்” என்பது ஒருவகை அரசியல் சூளுரையல்ல. மேலை நாடுகளைக் கண்டு ஏங்கும் பலதமிழருக்கு அது தொலைநோக்கை கற்றுத் தரும் முயற்சி. ”எல்லாமே தமிழெ”னும் “ஏகாந்தப் பார்வையிலிருந்து” சற்றிறங்கி வருவோம் நண்பர்களே! கிழக்கிலும் மேற்கிலும் கடல்வழி நாம் நகர்ந்துகொண்டே இருந்தோம். நம் பழம் நாகரிகம் அதன் விளைவாலும் ஏற்பட்டதே. ஈதலும் சரியில்லை. கொடுத்தலும் சரியில்லை. தருதலே மெய்க்கு நெருங்கியிருக்கும் (ஈ,தா, கொடு பற்றித் தொல்காப்பியம் படியுங்கள்.) 

            இனிப் Paddyக்கு வருவோம். ”Oryzus Sativa வின் விதப்புகளான Indica, Japanica” ஆகிய இரண்டுமே 8000/9000 ஆண்டுகள் முன் இந்தியாவுள் நுழைந்து கலந்ததாய்ப் பழம்புதலியல் (Paleobotany) சொல்லும். கங்கைக்கரையில் 8000 ஆண்டுகள்முன் நெல்பயிரிட்டாரோ என்றுகூடச் சிலர் ஐயுறுவார். மேற் சொன்னபடி இராக்கிகார்கில் பொ.உ.மு. 2430-2140 இல் கான்நெல்/ பயிர்நெல் சேர்ந்த Oryzus Sativa Indica நெல்லிருந்ததற்குச் சான்றுண்டு. கங்கைக்கரைக் கட்டுரைகளைப்பற்றி அறிய, Ancient India - New Research ed. Upinder Singh, Nayanjot Lahiri Oxford University Press, 2009 என்ற நூலிலுள்ள Human- Plant Interactions in the Middle Gangetic Plains: An Archeobotaical Perspective (From the Mesolithic upto Third Century BC) by Shibani Bose pp 71-123 என்ற கட்டுரையைப் படியுங்கள். ”இதுபோன்ற ஓர் அருமையான கட்டுரை, காவிரி, வைகை, தண்பொருநைச் சமவெளி பற்றி வெளிவராதா?” என்றும் ஏங்குகிறேன். கண்டேனில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.
            தமிழ்கூறும் நல்லுலகில் இதுபோல் புதலியல், தொல்லியல், தமிழியல் சேர்த்து ஆய்வுகள் நடப்பது மிகக்குறைவு. காட்டாகச் சொல்கிறேன். ஆயிரம் ஆண்டுப் பழமைகொண்ட வீராணம் ஏரியில் நாலைந்து ஆழ்துளைப் புரை இட்டு மண்கூறு (solil sample) எடுத்தாலே கடந்த 1000 ஆண்டு வெதணம் (climate), மழை நிலவரம், புதலியற் செய்திகள், பயிரிட்ட வகைகள், வெவ்வேறு நெல் வகைகள் எனப் பல உருப்படியான செய்திகளைக் கண்டுபிடிக்கலாம். அவற்றை இலக்கியத்தோடு பொருத்தியுங் காட்டலாம். அப்போதுதான் நம் இலக்கியத்தைப் பிறர் நம்புவர். அதையெல்லாம் செய்வதற்கு நாமோ, நம் அறிஞரோ, அரசுகளோ, கல்வி நிலையங்களோ என்றும் முயன்றதேயில்லை. நம் போகூழால், நம் பின்புலம் பற்றி நாமென்றும் ஆய்ந்ததில்லை. ஆனால் “எட்டுத்தொகை, பத்துப்பாட்டென” இலக்கியக் குறிப்புக்களை மேடை நிறையப் பேசுவோம். மீள மீளச் சொன்னதையே கூறின், சலிப்பு வராதோ? நம்பகத் தன்மை கூடுமோ? பேச்சொரு பக்கம். ஆய்வு இன்னொரு பக்கம் அல்லவா? இரண்டும் நமக்கு வேண்டுமே? இக்குறையை வெவ்வேறு அரங்குகளில் நான் சொல்வதாலேயே என்னை ஒதுக்கும் தமிழார்வலரும் தமிழறிஞரும் மிகுதி. நான் “தமில் வால்க” ஆளல்லன்.
            நெல்லெப்போது தமிழகம் போந்தது? எனக்குத் தெரியாது. நமக்குக் கிட்டிய சான்றுகளின் படி பொ.உ.மு. 490 இல் பயிர்நெல் பொருந்தலில் இருந்தது. இதற்குமுன் குறைந்தது பொ.உ.மு. 2250 இல் நெல் தமிழகத்தில் இருந்திருக்கலாம். (ஆனால் ஊகம் போதுமோ?) கரும்பை நம்மூர்க்குக் கொணர்ந்தது அதியமானின் முன்னோரெனச் சங்கவிலக்கியம் சொல்லும். நன்செய்ப் பயிர்களான நெல்லும் கரும்பும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்ததாகவே இற்றைப் புதலியலுஞ் (Botany) சொல்கிறது. நெல் கரும்பிற்கு முன் வந்திருக்கலாம். அது கங்கை வழியா? கடல் வழியா?- என்பதில் இன்னும் தெளிவில்லை. பொதுவாய்க் கங்கைக்கும் காவிரிக்கும் அக் காலகட்டத்தில் உறவிருந்ததா? தெரியாது. ஆனால் தமிழர் கடற்பயணம் 4230 ஆண்டுகள் முன் நடந்ததற்குச் சான்றுண்டு. ஈனியலின் படி ஆத்திரேலியப் பழங்குடிகளில் 11% பேருக்குத் தமிழரோடு தொடர்புண்டாம். (இதுபோக ஆத்திரேலியப் பழங் குடிகளுக்கும், நம்மூர்ப் பிரான்மலைக் கள்ளருக்கும் 65000 ஆண்டுத் தொடர்பு உண்டு.) 4500 ஆண்டுகள் முன் தமிழர் கடலிற் பயணித்திருக்கலாமென ஆதிச்சநல்லூர் அகழாய்வும் உணர்த்தும்.
(https://www.eurekalert.org/pub_releases/2013-01/m-gf011413.php?fbclid=IwAR2yBnP69hgoxretM2_1WVMkPtcG0OLKSb4RO1H5p9bfyY5UYqTdkyjl5fU.)
(https://www.bbc.com/news/science-environment-21016700?fbclid=IwAR2l6H5VI-uI1VI9EzKrpP3TcBS6fsAwAqpxl020Nma010oCfqZA2Kmqos)
            இன்னொருவகையில் தென்கிழக்காசியரும் தமிழகம் வந்திருக்கலாம். (வியப்பாகிறதோ?) ஏனெனில் 7500 ஆண்டுகள்முன் சுந்தாலாந்தின் மிச்சப்பகுதி கடலுளமிழ்ந்து ஒரு தீவக்குறையும், சில தீவுகளும் மட்டுமே எஞ்சின. கடற் கோளில் அவர் கண்டமிழந்தார்; நாமோ ஆதாரமின்றிக் கண்டம் இழந்ததாய்ச் சொல்லிக் கொள்கிறோம். நாம் பாராட்டும் நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், வெளியிலிருந்து வந்தவையே. (பலா பற்றிச் சொல்ல முடிவதில்லை.) இதுகேட்கும் பலர்க்கும் அதிர்ச்சியாகலாம். கடற்பயணவழி நம் பொருள்/சொற்கள் தென்கிழக்காசியா போகலாமெனில், அவர்சரக்கும் நமக்கு வரலாமே? அதேபோது, அரிசிப்பொருளும் சொல்லும் தமிழகவழி மேலையர்க்குப் போயிருக்கலாம். பிற்காலத்தில் நம்மிடமிருந்து ”Paddy” மலேசியா/இந்தொனீசியா போயிருக்கலாம் நாமும் கடல்வழி அங்கு போய் வந்தோமே? சரி, மெனக்கெட்டு, தமிழர் ஏன் கடற்பயணம் போனார்? தன்னேர்ச்சியாய் (accidental) தென்கிழக்காசியாவைக் கண்டபின் அதன் பயன்கருதி வணிகம் நடந்ததோ? அன்றி அக்கரைச்சீமை போகும்வழியை அவரிடமிருந்து தான் கற்றோமோ? இப்போது ஏதுஞ் சொல்லமுடியவில்லை.
            ஒருவேளை தென்கிழக்காசியாவிற்குப் போனது மணிகள்/மாழைகளைக் கருதியோ?- என்றுகூட எண்ணிப்பார்க்கலாம். ஏனெனில் பண்டமாற்றிற்கு, பொருளியல் வளர்ச்சிக்கு, இவை முகன்மையானவை. வெண்கலத்திற்குப் பெயர்போன தமிழகத்தில் வெள்ளீயக் (தகரக்) கனிமம் கிடையாது என்பது உங்களுக்குத், தெரியுமோ? ஆனால், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. செம்பை, அதன் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஆலையும் வெண்கலஞ் செய்யும் வார்ப்பாலையுங்கூட தண்பொருநைக்கு (தாம்பிரபருணிக்கு) அருகிருந்தன. இது தவிரக் கடந்த 1500 ஆண்டுகளில், தொடர்ந்து chozha bronze இற்குத் தமிழகம் பெயர் பெற்றது. அது எப்படி? வியப்பாக இல்லையா? சோழியன்குடுமி சும்மா ஆடிவிடுமா, என்ன? வெண்கலத்திற்குத் தேவையான வெள்ளீயம், என்பது நெடுங்காலமாய் அக்கரைச் சீமையிலிருந்தே நமக்குக் கிட்டியது. அந்தக் கதையையும் கீழே பார்ப்போம்..
            அக்கரைச்சீமை என்பது முதலில் மலேயா, தென்தாய்லாந்தைச் சேர்ந்த அக்காலக் காழகத்தைக் குறிக்கும். (பின்னால் பொருள் விரிந்தது.) கரு மண்ணைக் காழென்று சொல்லாய்வறிஞர் கு.அரசேந்திரன் குறிப்பார். பட்டினப்பாலையில் வரும் ”காழகத்து ஆக்கம்” நினைவுக்கு வருகிறதா? (பெரும்பாலும் அது தகரமாகலாம். நாம் தென்கிழக்காசியா போனதும் அதற்காகவே ஆகலாம். விரிவாகவே கீழே பார்ப்போம்) காழகம்>கழாகம்> கடாகமெனத் தமிழ்த்திரிவு தொடங்கும். பின் இது Kataha எனச் சங்கதம் போகும். Kadaram, Kidaram, Kidara என்று மேலுந்திரியும். சங்கத்தமிழ் புரியாக் காலத்தில் ஊற்றுத் தெரியாமல் கடாரத்தைக் கடன்வாங்குவார். Chieh-Cha எனச் சீனத்தின் I-Tsing தன் பயணநூலில் இந்நாடுபற்றிப் பதிவார். Kalah என அரபியிலும், Quedah என மேல்நாடுகளிலும் சொல்வர்.
            [காழெனில் வேறு செய்திகளும் நினைவு வரும் பொதுவாய்க் கருப்பு நம்மை விடாது தொடரும். குமரிக்கண்டக் கருத்தொதுக்கி மொழிவழி நோக்கின், நம்முறவுகள் புரியும். யா>யாமம்= கருப்பு. யாம்> ஸ்யாம்>அசோம்>அஹோம்= அசாம் குடிகள். அசோம்>அசாம்; யாம>ஸ்யாம்>சாம்>சான்= பர்மாப் பழங் குடிகள். ஸ்யாம்= தாய்லந்து. ஸ்யாம்>சாம்= தாய்லாந்தின் பழங்குடிகள்; கம்போடியாவிலும் உண்டு. சாம்>சம்>சம்பா= வியத்நாம் குடிகள். வியத்நாமிற்கே ’சம்பா’ என்ற பழம்பெயருண்டு. யா>யாவம்>யாவகம்> ஜாவகம்= இந்தோனேசியாவின் முகனத்தீவு (மற்ற தீவுகளைப் பற்றி வேறு இடத்திற் சொல்வேன்); யாகம்>ஞாகம்>நாகம்> நாகர்= கருப்பர். யாகர்>யக்கர்> யக்‌ஷர்= ஈழப் பழங்குடிகள். இவரை இயக்கர், நாகரென்றும் அழைப்பர். நாகர்>negro, உலகெங்கும் பரவிய இப்பெயரின் சொற்பிறப்பு ஒருகால் நம்மூர் ஆகலாம். (வியப்பாகிறதா?) ”க்க”, “க்ர” ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம். நாகர்/நக்கவர் = கருப்பர். (அம்மணப் பொருள் வேறுவகையில் எழுந்தது.) நக்கவர்>நக்கவரம். இதை நாகதீவம் என்று அரபிகளும் குறிப்பிட்டார். அசாமிற்குப் பக்கம் இருப்பது நாகாலாந்து. பர்மாவில் உள்ள சான் குடிகளோடு நாகாலாந்து மக்கள் தொடர்புற்றவர்.
            இனிக் கருமுதல்>கம்முதல்= ஒளிகுன்றல்; கம்மம்>கம்மை= தமிழிலும், கெமேரிலும் கருப்பு. கமர்>கெமர்= கம்போடியர். அந்துவன்>அந்துமன்> அந்தமான் என்பதும் கருப்பே. (அந்துவன் சேரலென முதற் சேரனைச் சொல்கிறோமே? அவனுங் கருப்போ? குட்டி அந்துவன் தீவுப் பழங்குடிகளின் பெயர் ஓங்கு (Onge/aung). இதன்பொருளை அம்மொழியில் இன்னுந் தேடுகிறேன். தெற்கு/நடு அந்துவனின் ஜாரவா மக்களுக்கு அவர்மொழியில் ஓங்கென்றே பெயர். (ஜாரவா=- இந்திக்காரர் வைத்த பெயர்) ஜாரவா மொழிக்கும் தமிழுக்குமுள்ள உறவுச்சொற்களை வேறுதொடரில் சொல்வேன். மேலேபோனால் அக்கால அங்கம் (இக்கால வங்கம்) கூட ஓங்கின் திரிவாகலாம். வங்காளிகளுக்கும், ஓங்குகளுக்கும், தமிழருக்கும் ஈனியல் தொடர்புண்டு. ஆப்பிரிக்காவில் தொடங்கிய பழம்மாந்தர் நம்மூர் வந்து, கடற்கரை வழி தென்கிழக்காசியா போய், முடிவில் ஆத்திரேலியா சேர்ந்தாரே, அவருங் கருப்பே. நாமும் கருப்பு. நம்மில் ஊடிவரும் சிவப்பும் வெளுப்பும், பழுப்பும் பின்னால் ஏற்பட்டவை புகாரைத் தலைநகராக்கிய நாகநாடு, சோழநாட்டுப் பகுதி. நாகபட்டினம், நாகர்கோயில், சம்பாபதி (புகார்) இவையெலாம் இத்தொடர்பு காட்டும். வடதமிழகத்தின் ஒரு முகன்மைக் குமுகரை சாம்பவர் என்பார். சாமளம் நம்மை விடாது].
            வெண்கலம் மட்டுமின்றிப் பித்தளையும் கூட நம்முடன் தொடர்புள்ளதே. துத்தநாகம், காரீயம், வெள்ளீயம், செம்பு, வெண்கலம், பித்தளை போன்ற மாழைகளும், அட்டிழைகளிலும் [alloy (v.) c. 1400, "mix (a metal) with a baser metal," from Old French aloiier, aliier "assemble, join," from Latin alligare "bind to, tie to," from ad "to" (see ad-) + ligare "to bind, bind one thing to another, tie" (from PIE root *leig- "to tie, bind"). சங்கதம் இதை “மிஸ்ரலோக”மாக்கும்.] தமிழரின் பங்கு கணிசமானது. பழந்தமிழக எஃகு/இரும்பைப் பேசும் தொல்லியலார், அட்டிழைகளையும் பார்க்க வேண்டும். இரும்புக் காலத்தின் முன் தமிழருக்குச் செம்புக்காலம் கிடையாது என்பது, ஆதிச்சநல்லூர் பார்க்கின், அவக்கர முடிவாகும். செம்பு எங்கு கிடைத்தது? நாகம் (Zinc), காரீயம் (Lead), வெள்ளீயம் (Tin) போன்றவை எங்கு கிடைத்தன? இனக்குழு வரலாற்றில் எப்படியவை எழுந்தன? இவற்றை நாடி தமிழன் எங்கு சென்றான்? போனவிடங்களில் கொசுறாகச் சிலவற்றை அள்ளிக் கொணர்ந்தானா? உள்ளூர் வாழ்வை இக்கொசுறுகள் மாற்றினவா? தமிழகத் தென்பகுதியை நாமின்னும் சரியாய் ஆயவில்லையோ?- என்ற கேள்விகளும் எழுகின்றன.
            இன்னொன்றையும் எண்ணிப்பாருங்கள். முல்லைநில வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை விளைவித்துத் துய்த்த தென்பாண்டித் தமிழன் எப்படி வெளியூர் நெல்லுக்கு மாறினான்? நீர்ப்பாசனம் இங்கெப்படி முகன்றது? ஒருவேளை நெல்லை வைத்தே மருதம் நம்மில் முகிழ்த்துக் கிளர்ந்ததோ? ”அரிசிச்” சொல் எங்கிருந்து நமக்கு எப்படிக் கிடைத்தது? வ்ரிஹி என்று சங்கதத்தைத் தூக்கிவந்து, ”அரிசிக்குச்” சிலர் அணைகொடுப்பதை நானேற்பதில்லை. பார்லி, கோதுமை சாப்பிட்டவர் அரிசிக்குச் சொல்தந்தாரென்பது சிறிதும் நம்பமுடியாதது. (அரிசியை வேற்றுமொழிச் சொல்லென நான் சொன்னவுடன் என்மேல் சீறிப்பாயுந் தமிழர் நிறையவே இருக்கலாம்.) தமிழர்க்கும் தென்கிழக்காசியருக்குமான தொடர்புகளென்ன? இப்படி அடுத்தடுத்துப் பார்க்கப் போகிறோம்.

            செம்பு 7 பங்கும் வெள்ளீயம் (=தகரம்) 1 பங்கும் கொண்ட வெண்கலத்தில் தான் தமிழர் தென்கிழக்காசியா போன கதையின் சுவையாரம் தொடங்குகிறது {Bronze is an alloy consisting primarily of  copper, commonly with about 12-12.5% tin and often with the addition of other metals [such as aluminium (அலுமினியம்), manganese (காந்தயம்), nickel (நவையம்) or zinc (துத்தநாகம்)] and sometimes non-metals or metalloids [such as arsenic (நஞ்சகம்), phosphorus (ஒளியகம்) or silicon (மண்ணகம்)]}. [1968/69 இல் கோவை நுட்பியற் கல்லூரியின் முத்தமிழ் மன்றம் வெளியிட்ட ”தொழில் நுட்பம்” மலரில், “தனிமங்களின் முறைப்பட்டியல்” என்ற கட்டுரையை வெளியிட்டேன். அதை இற்றைப் படுத்தி என் வலைப்பக்கத்தில் வெளியிட முயல்கிறேன். அதைக் கொண்டு அங்கமில் (inorganic) வேதியல் முழுதையும் நல்ல தமிழில் பெரும்பாலும் சொல்லிவிடலாம். இப்போதைக்குப் பொறுத்து இருங்கள்.] இப்பகுதியில் தொடர்புள்ள மாழைச் செய்திகளைப் பார்ப்போம்.
            அதுவென்னவோ, தெரியவில்லை. ”சிந்து நாகரிகம் தமிழரது” என்று சொல்வதிலும் கேட்பதிலும் புல்லரித்துப் போகும் நம்மிற் பலரும் பொ.உ.மு. 2500-1750 ஐச் சேர்ந்த ஆதிச்சநல்லூரைக் கொஞ்சமும் கண்டு கொள்வதில்லை. (2004 இற்கு அப்புறம் தொல்லாய்வு அங்கு நடைபெறவேயில்லை. நம்மூர்ப் போராளிகளுக்கும் வேறு வேலை வந்துவிட்டது. அரசியல் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. ”சிந்து சமவெளி” என்பதிலே நம்மூரார் குளிர்ந்து போகிறார். வேறு வழியின்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கிட்டுக் கேட்கவேண்டி உள்ளது. வெறும் பேச்சில் முழம்போட்டே நம் பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பரப்புரையும் நடக்கிறது. சிந்து மாந்தர் திராவிட இனமென ஈனியல் சொல்கிறதாம். எனவே தமிழர் வடமேற்கிருந்தே வந்தாராம். இது சொல்லி நம்மை 3000 BC ஈரான் எலாமைட்டிற்குக் கொண்டு செல்வார். கொஞ்சம் பொறுங்கள் ஐயா! ஆதிச்சநல்லூரில் எவ்வளவு பரப்பு அகழாய்ந்தீர்? 0.1% தேறுமா? அதுவே, தமிழரின் பழமை, 3750 ஆண்டுகள் இருக்குமெனக் காட்டுகிறதே?
            அப்புறமென்ன 3000 BC ஈரான்? ஆதிச்சநல்லூர்க் காலவரங்கைத் (range of time) துல்லியமாய் நிறுவ, இன்னும் எவ்வளவு தொல்லாய்வு வேண்டும்? செய்தோமோ? [ஆதிச்சநல்லூர் தாழிகள் மூன்று அடுக்கில் உள்ளது என்பார். முன் ஆய்ந்த பிரெஞ்சுக்காரர் மூன்றாம் அடுக்கின் காலத்தை பொ.உ.மு. 2000 என்பார். இப்போது நீதிமன்றத்தில் பொ.உ.மு.905 என இறக்குகிறார். அண்மையில் காலங் கண்ட தாழி மேலா, நடுவா, கீழா? தெரியாது. திரு இராம மூர்த்தியின் அறிக்கைக்குக் காத்து நிற்போம். ”என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது.” என்றுமட்டும் சொல்லத் தோன்றுகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டுமென்பார் வள்ளலார். இப்போதைக்கு வாய்மூடிக் கொள்கிறேன்.) கீழடிக்குக் கொடிபிடிப்போர் ஆதிச்சநல்லூர்க்கு அறைகூவுக! அதற்குள் தமிழன் வந்தேறி எனவுரைக்கப் பலரும் முயல்கிறார். அத்தனை மகிழ்வா? கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவர் வானமேகி வைகுன்றம் போனாராம். சரி வெண்கலத்திற்கு வருவோம்.
            ஆதிச்சநல்லூரிலிருந்து கிழக்கே ஆற்றுவழி 25 கி.மீ ஏகின், கொற்கை வந்து விடும். தொல்லாய்வின்படி இதுவே தமிழகத்தின் பழந்துறைமுகம். (அற்றைக் கடல் இற்றைவிட 8 கி.மீ உள்தள்ளியது. ஈனியல் சொல்வதுபோல் பொ.உ.மு. 2350 இல் தமிழர் கடல்வழியே ஆத்திரேலியா போனது மெய்யெனில், கொற்கை/ ஆதிச்சநல்லூரின் பழமை பொ.உ.மு.1750 இற்கும்முன் சிந்துவெளி அளவிற்குப் போவதும் உறுதியே. என் புரிதலில் 2 நாகரிகங்களும் பெரும்பாலும் சமகாலத்தவை. சிந்துநாகரிகம் போல் இங்கும் வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. ஆதிச்சநல்லூர் வெண்கலத்தில் 23% வரைக்குங் கூடத் தகரஞ் சேர்த்தாராம். (பொதுவாய் வெண்கலத்துள் 14% க்குள் தான் தகரமிருக்கும். கணக்கதிகாரமோ 20% வரைக்குங் கூடச் சொல்லும்) சிக்கலான இச் சேர்க்கையை எப்படிச் செய்தாரென இற்றை மாழையியலார் வியப்பார். தவிரச் செம்பு 8 பங்கும், தகரம் 1 பங்கும் காரீயம் 4 பங்கும் கலந்த, தளவு> தரவு>தரா (heavy leaded bronze) வெண்கலமும் கூட நம் புழக்கத்திலிருந்ததாம். காரீயமுஞ் செம்புங் கொண்ட இந்த அட்டிழையை இக்காலத்தில் கவண் மாழை (gun metal), செம் பித்தளை (red brass) என்றழைப்பர்.
            இனி, வெண்கலஞ் செய்யச் செம்புவேண்டுமே? தாம்பர பொருநை, தாம்பர அம்பலம், தேரிக்காடுகள் போன்றவை செம்பின் தமிழக இயலுமையை உணர்த்தினும், செம்புக் கனிமம் நெல்லையிற் பேரளவு கிட்டியதற்குச் சான்று இல்லை. (இக்கால விழுப்புரம் மாவட்டத்தில் கொஞ்சம் செம்புக் கனிமம் உண்டு.) ஆதிச்சநல்லூரிற் செம்பு சிறிது பிரிக்கப்பட்டதாயும், அதேபொழுது கணிசமான செம்பு, வெண்கலப் பொருள்கள் கிட்டியதாயும் தொல்லாய்வு சொல்லும். கடலுக்கப்பால் ஈழத்திலும் தாம்பரம், மணிகள் (குறிப்பாய் மரகதம்) கிடைத்ததாம். பழந்தமிழகத்திலிருந்து ஈழம் வேறு பட்டதல்ல. முகன நிலத்திலிருந்து 3000/4000 ஆண்டுகளுக்கு முன் அது தீவாய்ப் பிரியுமுன், நம்மைத் தொட்டுந் தொடாதும் இருந்தது. இல்>ஈல்> ஈழ்>ஈழம். ஈல்>ஈர், இல்>இலு>இரு>இரள்> இரண்டு; இல்> இலு>இலங்கை போன்ற சொற்கள் நிலம்பிரிந்த செய்தியைக் குறிக்கும். இலங்கை என்றசொல் சிங்களமல்ல. அதுவுந் தமிழே. எல்லாவற்றையும் ”டக்”கென இன்னொரு மொழியாய்ச் சொல்லிச் சொல்லி நாமிழந்தது மிக அதிகம்.
            இந்தியாவிற் செம்பு அதிகங் கிட்டியது வடக்கே தான். அதே பொழுது அச் செம்பு அங்கிருந்து நமக்குக் கிட்டாதும் இல்லை. வணிகம் எதற்கு இருந்தது? துணைக் கண்ட வணிகத்திற்கு உதவுவதாய் அக்காலத்தில் உத்தர, தக்கணப் பாதைகள் இருந்தன. பொ.உ.மு. 600-200களில், நந்த-மோரியர், இப் பாதைகளைக் காவந்து செய்தார். (விரிவாக என் “சிலம்பின் காலம்” நூலிற் கண்டு கொள்க!) இப் பாதைகள் எப்போது ஏற்பட்டன என்பது இன்னும் ஆயாத ஒன்று. கோதாவரி ஆற்றங்கரையில் நூற்றுவர் கன்னரின் படித்தானத்திலிருந்து (Paithan closer to Aurangabad, Maharashtra) அசந்தா, எல்லோரா வழி வடக்கே நகர்ந்து, தபதி, நருமதை ஆறுகளைக் கடந்து, மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa அல்லது விதிசா Vidisha) வந்து, நேர் வடக்கே திரும்பி, தொழுனை (= யமுனை) ஆற்றங்கரையின் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி/ சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தி சேருவதையே தக்கணப் பாதை என்பர். தெற்கே தகடூரில் தொடங்கி கருநாடக ஐம்பொழில் (Aihole) வழி படித்தானம் போன பாதை தக்கணப் பாதையின் நீட்சியாகும்.
            பழங்காலத் தமிழரை இந்திய வடபகுதிகளோடு இணைத்தது தக்கணப் பாதையும் அதன் நீட்சியுமே. நூற்றுவர் கன்னர் நாணயங்கள் தமிழ், பாகதம் எனும் 2 மொழிப் பயன்பாட்டைக் காட்டின. சங்ககாலப் பாலைப் பாக்கள் சொல்லும் வணிகம் இவ்வழி நடந்தது. இந்தியாவின் பழஞ் செப்புச் சுரங்கங்கள் தக்கணப் பாதையோடு தொடர்புற்றன. இராசத்தானம் கேத்ரியில் இருந்து 660 கி.மீ. தள்ளி உஞ்சை வரத் துணைப் பாதையும் இருந்தது. இதே போல் மத்தியப் பிரதேசம் மலஞ்சுகண்டிலிருந்து தக்கணப் பாதையின் விதிசா (மகதத் துணைத் தலைநகரம். அசோகன் பட்டத்திற்கு வருமுன் இங்கே ஆளுநன்.) வர 420 கி.மீ ஆகும். இது போக சார்க்கண்டு சிங்க்பூமிலும் செம்பு கணிசமாய்க் கிட்டியது. பல்வேறு சாத்துகளின் வழி பெரு வண்டிகளில் செம்புக் கனிமத்தைத் தக்கணப் பாதையால் தெற்கே கொணர்வதில் அன்று எந்தச் சரவலுமில்லை. இது போல் பொ.உ.மு. 2600 களில் சிந்து வெளியிலும் இராசத்தானச் செம்பு (ஓமான் செம்பும்) கிடைத்தது. எனவே செம்பு கிடைப்பில் நாம் சிந்து வெளியாரிடம் வேறுபட்டவர் இல்லை.
            [சிந்து வெளியார் என்போர் தமிழர் ஆகலாம். அது முற்றிலும் வேறு ஆய்வு ஆகும். அதை வைத்துச் சிந்து வெளியிலிருந்தே தமிழர், தமிழகம் வந்தார் என்பது ஓர் ஊகம் அவ்வளவு தான். அதற்கான ஆதாரம் இதுவரை வெளி வந்ததைப் படித்தால் ஏற்கும் படியில்லை. ஓய்வுற்ற திரு,. பாலகிருட்டினன், இ.ஆ.ப, வின் முயற்சியால், ஐராவதம் மகாதேவனைப் பின்பற்றி, ”பானைப் பாதை” என்ற வாதமும் இப்போது கிளம்பியுள்ளது. பல்வேறு தமிழரும் இதை அப்படியே நம்புகிறார். இதுவே உண்மையென்றும் சொல்லித் தமிழறிஞர் இடையே இப்போது பரப்புரையும் குழப்பலும் நடக்கிறது. நான் புரிந்துகொண்ட வரை புறம் 201 ஆம் பாடலைக் கொண்டு தமிழர் துவாரகையிலிருந்து தெற்கே வந்தார் என்று சொல்ல முற்படுவது குறைப் புரிதலாகும். அது வேளிரின் நகர்ச்சி பற்றிப் பேசுகிற பாடல். வேளிர் மட்டுமே, தமிழரா, என்ன? வேறு யாருமே இல்லையா? வேளிர் தமிழகத்திற்கு வந்து சேரும் போது மற்ற தமிழர் இங்கு இருந்திருக்கலாமே? இல்லையென்று சொல்ல ஆதாரங்கள் உண்டா?)
            ஒருகாலத்தில் இருக்கு வேதத்தின் காலத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார். இப்போது பெரும்பாலும் அது பொ.உ.மு. 1500-1200 என்ற முடிவிற்குப் பலரும் வந்தாகி விட்டது. அப்புறம் ஆரியர் இங்கேயிருந்து தான் இரோப்பா போனார் என்றார். ஆரியர் பெரும்பாலும் இந்தியாவினுள் வந்து குடியேறியவர் என்பது இப்போது, அரியானாவின் Rakhigarhi இல் நடந்த தொல்லாய்வின் வழி பொடிப் பொடி ஆகிவிட்டது. சிந்து நாகரிகம் என்பது திராவிட/தமிழிய நாகரிகம் என்று ஆகிவிட்டது. ஆனால் சிந்துவிலிருந்து தான்.தமிழர் தமிழகம் வந்தாரென்பது ஒரு புதுவிதத் திரிப்பு. இதற்குதவும் வகையாய் ஆதிச்சநல்லூரில் 2004இல் கிடைத்த எச்சங்களின் காலத்தைப் பொ.உ.மு.905, 791 என்றது வாய்ப்பாகப் போய்விட்டது. என்னைப் பொறுத்தவரை 2004 ஆம் ஆண்டு ஆய்வு குறைப்பட்ட ஆய்வு. இன்னும் ஒருமுடிவிற்கு வந்துசேர முடியாத நிலையிலேயே நாம் உள்ளோம். அண்மையில் இன்னொரு புதுப்பூதங் கிளம்பியுள்ளது. சிந்தவெளி நாகரிகம் பொ.உ.மு, 9000 ஆண்டுகள் முந்தையதாம்! இதையெப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? தொல்லியலில் நடக்கும் அரசியல்/குழப்பம் முடியவே முடியாது போலிருக்கிறது. “எப்படியாவது தமிழரின் பழமையைக் குறை” என்பதே நோக்கம் போலும்.]

            சரி செம்பின் ஊற்றையும் அது வரும் வழியையும் பார்த்தோம். வெண்கலஞ் செய்ய ஈயம் வேண்டுமே? ஈயத்தில் காரீயம், வெள்ளீயமென 2 வகை சொல்வார். காரீயம் அதிக அணுவெடையும் (207.2), குறை உருகு வெம்மையுங் (melting temperature 327.5 பாகை செல்சியசு) கொண்டது. வெள்ளீயமோ குறை அணுவெடையும் (118.71) இன்னுங் குறை உருகு வெம்மையும் (231.9 பா.செ.) கொண்டது. வேறிரு மாழைகளின் உருகு வெம்மையை (செம்பு 1085 பா.செ., இரும்பு 1538 பா.செ) இவற்றோடு ஒப்பிட்டால் நான் சொல்வது புரியும். 2 ஈயங்களும் குறைவெம்மையில் எளிதிலுருகி நீர்மமாகிவிடக் கூடிய மாழைகளே. இதுபோல் இயலும் மாழைகள் மிக அரிது. [அறை வெம்மையில் நீர்மமாய் இருப்பது இதள்(Mercury) மட்டுமே]
            நீர்மங்கள் (நீர் போன்றது நீர்மம்) தமக்கென வடிவங்கொள்ளா. ஓர் ஏனத்தில் ஊற்றுகையில், ஏனவுருக் கொள்ளும். இன்னொரு ஏனத்திற்கு மாற்றின் இவை இழியும் (= சாரையாக வடியும்) இதனால், ஆங்கில liquid ஓடு இணை காட்டி நீர்மத்தை இழிதையென்றுஞ் சொல்லலாம்.
(வழக்கம்போல்  ஆங்கிலச் சொல்லிற்கு நான் இணைகாட்டுவதை பலரும் மறுப்பார். இந்தை யிரோப்பியத்தோடு தமிழை இணைக்கலாமா? ”என்னவொரு அவச்சாரம்?” என்றுஞ் சிலர் எண்ணுவர். மற்றுஞ் சிலரோ வில்லியம் சோன்சு, மாக்சு முல்லர், எல்லிசு, கால்டுவெல் சொன்னவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு அப்புறம் பாவாணர்வழி ஒப்புமைகளைப் புறந்தள்ளி தமிழியம், இந்தையிரோப்பியனிடை கடன்வாங்கல் தவிர்த்து உறவே இல்லென்பார். எனினும் ஆழ்ந்துநோக்கின் 1000, 2000 சொற்களுக்குமேல் உறவுள்ளன, ஆய்வு செய்யத்தான் ஆளில்லை. என்னைத் திட்டுவதிலும், அவதூறு பேசுவதிலும் நேரஞ்செலவழிப்போர் நான் சொல்வதை உள்வாங்கிக் கொஞ்சமேனும் ஆய்வில் ஈடுபட்டால் நல்லது)
            பொதுப்பெயராய் மட்டுமின்றி ”இழியம்” என்பது விதப்புப் பொருளுங் காட்டும். குறை வெம்மையில் உருகி இழியும் 2  மாழைகளையும் இழியம்>ஈயம் என்போம். (வட தமிழகத்தில் வாழைப்பழம்> வாயப்பயம் ஆவதில்லையா? இழியம்>ஈயம் என்றாவதும் இதுபோற் பழக்கத்தால் தான். கருப்பீயம் காரீயமாயும், வெளிறிய ஈயம் வெள்ளீயமாயும் ஆனது. காரீயத்தை ஆங்கிலத்தில் இழிதை (Lead) என்பார். சொல்லூற்றுத் தெரியாத வேதிப் பெயராய் plumbum என்பதும் புழங்கும். தொடக்கத்தில் காரீயத்தால் குழாய் செய்ததால் (plumbing), plumbum குழாயைக் குறிக்குமோ என ஐயுறுவார். ”புழல், புழம்பிற்குத்” தமிழில் குழாயென்றே பொருள். தமிழ் அடிப்படை இல்லாது, Lead, plumbum போன்ற சொற்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. (இதைப் போல் சொல்வதால் தான் சிலருக்கு நான் பொல்லாப்பு ஆவேன். அதெப்படி Lead, plumbum- இற்குத் தமிழ்மூலங் காட்டலாம்? பலராலும் இவற்றை நம்ப முடிவதில்லை.) இழியம்>ஈயத்தோடு இன்னொரு சொல்லும் தமிழிலுண்டு. வழிங்கம்> வயிங்கம்>வங்கம். இதுவும் உருகியிழியும் மாழைகளான காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் போன்றவற்றைக் குறிக்கும். இனி வெள்ளீயத்திற்கு வருவோம். இதற்கும் உருகி இழியும் இயல்புண்டு.
            வெள்ளீயத்தின் நிறம் என்பது முற்றிலும் வெள்ளையல்ல. வெளிறிய கருமை. தகதகவெனும் ஒளிக்குறிப்பில் தகளம்>தவளம் ஆனது, தகளம்>தகடம்>தகரம் என்பது வேறு வகையில் வெள்ளீயத்திற்கான சொல் வளர்ச்சி. தவிர, வெள்ளீயத்தை மிகவெளிதில் அடித்துத் தட்டித் தகடாக்கலாம். தள்>தட்டு> தட்கு>தக்கு>தகு.. இதனாலும் தகு>தகள்>தகடு>.தகடம்>தகரம் ஆகும். ஆங்கிலத்தில் வரும் stannum, tin போன்றவையும் இவற்றோடு தொடர்பு உடையவை தாம். இன்று நுட்பியல் வளர்ந்துவிட்டது. எல்லா மாழைகளையும் சூடாக்கித் தகடாக்கி விடலாம். தகரக் கனிமம் (cassiterite SnO2 associated with lepidolite bearing pegmatites) சட்டிசுக்கர் தண்டேவாரா மாவட்டத்தில் இன்றுங் கிடைக்கிறது. ஆந்திரக் காக்கிநாடாவிலிருந்து வடக்கே 330 கி.மீ தொலைவில் இச்சுரங்கம் அக்கால அடர்காடுகள், மலைகளுக்கு நடுவிலிருந்தது. யாருக்கேனும் அந்தக் காலத்தில் இதனிருப்புத் தெரிந்ததற்கு இதுவரை சான்றில்லை.
            (நம்மூரில் உள்ள தகடூர், தகளம்>தகடம் பயனுற்ற ஊரா? அல்லது கிட்டிய ஊரா? ஒருவேளை பின்னால் இரும்பு கிடைத்துத் தகடாக்கினாரா? தெரியாது) வெண்கலச் சிறப்புற்ற தமிழர்க்கு வெள்ளீயம் எப்படிக் கிடைத்தது? அங்கு தான் தமிழரின் கடற்பயண முகன்மை புரிகிறது. பர்மா, தாய்லாந்து, மலேசியா, இந்தொனீசியா ஆகியவற்றை நம் தமிழர் அக்கரைச்சீமை என்பார். கம்போடியா, சம்பா (வியட்நாம்), பிலிப்பைன்சு கூடத் தமிழர் அறிந்தவையே. மொலுக்காத் தீவுகளின் மணப்பொருள் தேடியும் தமிழர் போனார். பெருத்த ஆமையோட்டுப் பரிசல்களும் கடற்பயண வழியில் தேடப்பட்டன. [https://www.ancient-origins.net/news-history-archaeology/2000-year-old-lost-city-rhapta-may-have-been-found-tanzania-006234] பல்வேறு மணிகள் தேடியும் தமிழர் கடல் தாண்டி நகர்ந்தார்.
            கடல் தாண்டுவதில் ஈழஞ் சேர்க்காதது நமக்கு ஏற்கனவே அது தெரிந்தது என்பதாற்றான். ஈல்>ஈழ்>ஈழம் என்பது முகனை நிலத்தில் பிரிந்த நிலம் எனும் ஓர்மையால் ஏற்பட்டது. இற்றைக்கு 18000 ஆண்டு தொடங்கி 2500 ஆண்டு வரை சிச்சிறிதாய் இப்பிரிவு ஏற்பட்டது. பொ.உ.மு. 1000-500 அளவில் கோடிக்கரை, யாழ்ப்பாணம், தலைமன்னார், தனுக்கோடி, ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட கடலடி நிலமும், குமரியின் தெற்கில் 250 கி.மீ. நீள நிலப்பரப்பும் முற்றிலும் அழிந்தன. (நான் குமரிக்கண்டத்தை நம்புவதில்லை. ஆனால் தமிழ்நாட்டோடு ஒட்டிய குமரிநிலம் அழிந்ததை நம்புகிறேன்.) இவ்வழிவிற்கு அப்புறம் சோழரிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் இற்றைப் புதுக்கோட்டை மாவட்டம்), சேரரிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் கேரளத் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டம்) பாண்டியர் பறித்துக்கொண்டார். (இலக்கியத்தில் இது பதிவாகியது.)
            65000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நெய்தல் மாந்தர் (costal people) தமிழகம் வந்தபோது ஈழம் தமிழகத்தோடு சேர்ந்திருந்தது. இருப்பினும் அவ்வெச்சங்கள் தமிழகத்தில் கிட்டவில்லை. ஓர் ஈழக் குகையில் 30000-40000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்று கிட்டியது. விழுப்புரம் மாவட்டத்தில் 10000.15000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குழந்தையின் மண்டையோடு கிளர்ப் படிவமாய்க் (glazed fossil) கிடைத்தது. (நம்மில் பலரும் இலக்கம் ஆண்டுகளுக்கு முந்தைய அத்திரம்பாக்க ஓமோ எரக்டசு மாந்தரோடு நெய்தல் மாந்தரைக் குழப்பிக் கொள்கிறோம். அத்திரம்பாக்க ஆய்வு இன்றும் பலரை ஓர்ந்துபார்க்க வைக்கிறது தான். ஆனால், நம்மை எந்தப் பாதைக்கு அது இட்டுச்செல்லும்? தெரியாது.) மணிமேகலையின் படி ஈழத்திற்கு இரத்தினத் தீவெனும் பெயருமுண்டு. ஈழமென்ற சொல் கூட ஈலன்>ஐலண்ட் (island) ஈல் (isle) எனும் இந்தையிரோப்பியச் சொற்களைத் தூண்டியிருக்கலாம். ஆங்கிலச் சொற்பிறப்பியலில் island, isle ஆகியவற்றின் ஊற்றுவாய் தமக்குத் தெரியாது என்பார். ஈழமெனும் குறிப்பிட்ட விதுமைச் சொல் உலகெங்கும் தீவுகளைக் குறிக்கப் பொதுமைப்பட்டிருக்கலாம் என்பது என் முன்னீடு.
            மணிபல்லவம் என்றபெயர் பெரும்பாலும் மணிமேகலா தெய்வத்திற்கும் புத்த நெறிக்கும் தொடர்புடையது ஆகலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிய நாகனார் (>நாயினார்>நயினார்) தீவே மணிபல்லவம் என்று சிலர் சொல்வர். ஒரு வேளை முழு ஈழத்தீவிற்கும் இது இன்னொரு பெயரோ எனவும் தோன்றுகிறது. இதையெப்படி நிறுவுவது? இச்சொல் மணி, பல்லவமெனும் இருசொற் புணர்ச்சியால் ஆனது. ’மணிபல்லவத்தைக்’ கவனித்தால்,’ப’ வலி மிகாதிருப்பது புலப்படும். “புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்” என்றநூலில் மலேசிய அறிஞர் செ. சீனிநைனா முகம்மது (இலக்கணந் தவறாது தமிழ் ஆவணம் எழுத விழைவோர் இந்நூலைப் படியுங்கள். அடையாளம் வெளியீடு. 1205/2 கருப்பூர்சாலை, புத்தநத்தம் 621310, தொலைபேசி 04332 273444) ஒரு விதி சொல்வார். நிலைமொழி  இ,ஐ,வு,ய்,ர்,ழ்,ம்- என முடியும் பெயர்ச்சொல் ஆகவும், வருமொழி ககர, சகர, தகர, பகரத்தில் தொடங்கும் பெயர்ச் சொல் ஆகவும் இருந்தால், வலி மிகாதென்பார். இதன் காட்டுகளாய் காய்கறி, பசி பட்டினி, ஈவுசோவு, இலைதழை, கூழ்கஞ்சி, குலங்கோத்திரம் போன்றவற்றை சொல்வார். இக்கூட்டுச் சொற்களின் இருவேறு பகுதிகள் ஒரே பொருளையும் இருவேறு தோற்றங்களையுங் காட்டுவதைக் கவனிக்கலாம்.
            கறி =  உணவிற்காகக் கடிப்பது. கறிக்காகும் காயும், கறிக்காகாத காயும் உலகில் உண்டு. அதேபோல் பசி தானாயும் எழலாம். பட்டினி கிடந்தும் எழலாம். பட்டினியாலெழும் பசி விதப்பான சேர்க்கை. சோர்வால் வரும் ஈ(ர்)வு (=பிரிப்பு) ஈவுசோ(ர்)வு என்பது இன்னொரு இரட்டைக் கிளவி. தாழ்ந்து கிடப்பது இலைதழை. உயர் இலையிலிருந்து வேறுபட்டது. இலைதழையும் இரட்டைக் கிளவியே. கூழாகிய கஞ்சி, கூழல்லாக் கஞ்சியினின்று வேறுபட்டது. குலம்= பெருங்குழுப்பெயர். கூட்டம்>கோத்திரம் என்பது தந்தைவழி உறவுகொண்டது இவ்விளக்கப் பார்வையில் மணிபல்லவத்தைப் புரிந்து கொள்ளலாம் மணி என்பது பொதுமைப்பொருள் கொண்டது. பல்லவம், அம்மணிக்கு விதப்புத் தோற்றம் கொடுக்கிறது. முதலில் மணியைப் பார்ப்போம்.
            மணிக்கு jewel, bead என 2 பொருள் சொல்வர். சிவநெறி, புத்தநெறியில் அக்க மணிக்குப் பெருஞ்சிறப்புண்டு. "ஓம் நமச்சிவாய", "ஓம் மணிபத்மே ஹூம்" போன்ற மந்திரங்களை 108 முறை விடாது சொல்லும்போது எண்ணிக்கைக்கு ஆக சமய நெறியாளர் அக்கமணி மாலை பயன்படுத்துவர். அக்கமணி, கடவுள் மணி, கண்டம்/கண்டி/கண்டிகை, கள்மணி, முள்மணி, உலங்காரை போன்றன அக்கமணியின் மறுபெயர்கள். சங்கதத்திலிதை உருத்திர அக்கம்>ருத்ராக்கம்> ருத்ராக்ஷம் என்பார். அக்கமணி, ஒரு குறிப்பிட்ட காய்/பழத்தின் உள்ளிருக்கும் செந்நிறக்கொட்டை. ஆனால், பழத்தின் தோலோ கருநீலம் ஆயிருக்கும். (சிவனின் தொண்டை நீலமாவது புரிகிறதா?) அதனால் கருநீலப்பழக் கொட்டை (blueberry beads) என்றும் ஆங்கிலத்தில் பெயருண்டு. கருநீலத்தைக் குறிக்கும் மணிப்பெயர் தமிழில் மட்டுமே உண்டு. தோலைத் தவிர்த்து கொட்டையையே முதலில் அறிந்த வடமேற்கு ஆரியர் அதை ருத்ர அக்ஷம் என்றே சொல்வார்.
            இப்பழக் கொட்டைகளில் பல முட்களும், பொதுவாய் 5 முகங்களுமுண்டு. சிலவிதக் கொட்டைகளுக்கு 5 இலுங் குறைந்தும், சிலவற்றிற்கு 5 ற்கு மேல் 21 வரைக்குங் முகங்களுண்டு..கொட்டைகளைக் காயவைத்து அவற்றூடே துளையிட்டு மாலையாக்குவதும் தானஞ் (>த்யானம்) செய்கையில், எண்ணிக்கைக்காக, அக்கமாலையை உதவிக்குக் கொள்வதும் சிவ, புத்த சமய நெறியாரின் வழக்கம். அக்க மணி, தானத்திற்கு (>த்யானத்திற்கு) ஓர் தளவாடம் (tool). விதப்பான இக்கொட்டை தரும் மரத்தை ஆங்கிலத்தில் Elaeocarpus ganitrus roxb என்பர். இது 60-80 அடிவரை கூட வளரும். இமயமலை அடிச்சாரலிலிருந்து கங்கைச்சமவெளியிலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலும், நேபாளம், தென்கிழக்காசியாவிலும், பாப்புவா நியுகினியிலும், ஆத்திரேலியாவிலும், குவாம், ஹவாய், சீனம், தைவான், போன்ற விடங்களிலும் இது வளர்கிறது. இந்தொனீசியா, மலேசியா, ஈழத்திலும் (கண்டி, நுவெரெலியா) கூட இதுவுண்டு. மணிமேகலை காலத்தில் இம்மரம் ஈழத்தில் அதிகமாய் இருந்ததோ, என்னவோ?
            உல்>ஒல்>அல் என்பது கூர்மையைக்குறிக்கும் வேர்ச்சொல். அல்லுதல்= கூர்த்தல். குற்றல். முடிதல். காலங்காட்டும் இடைநிலைகள் சேர்த்து 3 தொழிற்பெயர்களை இதன் வழி அடையாளங் காட்டலாம். அல்ந்தல்> அன்றல்*>அந்தல்= முடிதல்; அல்கல்= கூர்தல், குற்றல், குறைதல், இது அல்கல்>அஃகல்>அக்கல் என்றுமாகும். அல்வல் = கூர்வுதல் குற்றல், குறைதல் இது அல்வல்>அவ்வல்>அவல் என்றும் ஆகும். அஃகம்>அக்கம் என்பது மேலே சொன்ன கொட்டைக்கு இன்னொரு பெயர். அவமும் அதே பொருளே. அக்கம் புரிந்தால் பல்லவப் பெயரும் புரிந்து போகும். பல்லவம், மரத்திற்கும், மரம் வளரிடத்திற்கும் ஆன பெயர். மரச்சிறப்பால் நாகனார் தீவிற்கும் ஈழத்திற்குமே மணிபல்லவப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

            ஈழம் தவிர்த்தால், தமிழகக் கிழக்குக் கரையிலிருந்து வணிகங்கருதி தென்கிழக்காசியாவிற்கே தமிழர் முதலில் சென்றிருக்கமுடியும். இந்திய உள்நாட்டுவணிகம் உணர்த்தும் பாலைப்பாட்டுகள் மட்டுமின்றி கடல் வாணிகம் உணர்த்தும் நெய்தற்பாட்டுகளும் முகன்மையே. தென்கிழக்கு ஆசியப் பார்வையில் வெளிவரும் கடல்வாணிகச் செய்திகளை நம்மிற் பலரும் கூர்ந்து கவனிக்கமாட்டோம் என்கிறோம். மேலைவாணிகம் ஈர்க்கும் அளவிற்குக் கீழைவாணிகம் நம்மிற் சிலருக்கு முகன்மையாய்த் தெரிய வில்லை. சேரர் தொண்டியின் (இற்றைக் கோழிக்கோடு) கப்பல்கட்டுந் திறன் பொ.உ.1421 வரை சிறந்ததால் சீனக்கடலோடி செங்கே தன் கப்பற் கட்டுமானம் முடிந்தபின் கலங்களைத் தொண்டிக்கனுப்பி அவற்றின் உள்ளக நேர்த்தியை (internal efficacy) ஓராண்டு தங்கிச் சீர்செய்து போனானாம். ஆகக் கால காலமாய்த் தமிழரின் கடலோடுந் திறனுக்குக் கொஞ்சமுங் குறைச்சலில்லை. அது சரி, அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழரெப்படி அறிந்தார்?
            அக்கரைச் சீமையின் இருப்பை அறிந்ததில் நண்பர் ஒரிசா பாலு சொல்லும் ஆமை மிதப்புக் கடல்நீரோட்ட வழியை நானேற்கத் தயங்குவேன். அலை பரந்தெழும் நாட்களில் படகு/கப்பல் ஓட்டுவோர் நுட்பக் கருவிகளின்றி வெறும் பார்வையாலேயே, ஆமைகளைத் தொடர்ந்து செல்லமுடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு. [ஆமைகளைப் பின்பற்றாது நார்வேயின் தோர் ஐயர்தால் (Thor Heyardahl) பல்வேறு பழங் கடற்பயணங்களை மீள நிறுவிக் காட்டினாரே?] வெறுமே நீரோட்டம், உடுக்கள், காற்று- இவற்றைக் கொண்டே ஒரு கடலோடி கடலுக்குள் நகர முடியாதா?- என்ற கேள்வி எனக்குண்டு. தவிரச் சிந்து வெளியில் தமிழ்ப் பெயர்கள் உள்ளதாய்க் கூறும் திரு. பாலகிருட்டிணன் இ.ஆ.ப. வைப் பின்பற்றி, உலகெங்கும் 19000 தமிழ்ப் பெயர்கள் உள்ளனவெனப் பாலு கூறுவதையும் நான் ஏற்கத் தயங்குவேன். திரு. பாலுவின் கடலாய்வு இன்னும் ஆழமாய், அறிவியலோடு பொருந்தி வருமெனில், கட்டாயம் நான் கவனிப்பேன்.
(தமிழ்ப் பெயர் என்று நாம் சொல்பவற்றை அவ்வந் நாட்டுமொழிகளில் எப்படியழைத்தார்? எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டன?- என்று பார்க்க வேண்டாமா? நம் பார்வையே சரியென ஒருபக்கச் சார்பாய் எப்படிச் சொல்ல முடியும்? இப்படித்தான் ஒரு நண்பர் தென் அமெரிக்காவின் தித்திகாக்கா ஏரியை எந்த ஆதாரமும் இன்றித் தித்திக்கும் ஏரி என்றார். ஆப்பிரிக்காவின் தங்கனிக்காவை தேங்கனிக்காடு என்றார். இதுபோன்ற கூற்றுக்கள் தமிழிணையத்தில் இப்போது பெருகிவிட்டன. யாருமே கேள்வி கேட்காததால் இதுபோலும் கூற்றுக்கள் அடுத்தடுத்து எழுகின்றன. என்னைக் கேட்டால் இந்தப் போக்கு சரியில்லை மஞ்சள் கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த் தான் தெரியும். அது உண்மையாகிவிடாது. Let us show some sense of balance.)
            இப்போதைக்கு இன்னோர் இயலுமை மட்டுமே எனக்குத் தென்படுகிறது. 7500 ஆண்டுகள் முன் சுந்தாலாந்துக் கண்டம் முற்றிலுமழிந்து தீவுகளும் தீவக்குறையுமாய் எஞ்சியபோது இரட்டை விலாவரிக் கலங்களில் (double outrigger canoe) அக்கரைச்சீமையார் மேற்கே தமிழகத்திற்கு ஏன் வந்திருக்கக் கூடாது? அதாவது பொது உகத்தில் (coomon era), மலகாசித் தீவிற் சென்று குடியேறும் முன்னரே நம்மூருக்கு அவர் வந்திருக்கலாமே? அப்படிக் குடியேறியவரை நம்மூரில் நாகரெனக் குறித்தாரோ? அவர் குடியேறிய இடங்கள்தாம் சம்பாதிப் பட்டினம் (புகார்), நாகப்பட்டினம் போன்றவையோ? நாகர் தீவுகளிலிருந்து வந்தவர் குடியேறிய நிலம் நம்மூரிலும் நாகநாடு ஆனதோ?
            பழஞ் சோழநாட்டில் நாகநாடு, வளநாடு என 2 பகுதிகளுண்டு. (சிலப்பதிகார வாழ்த்துப் பாடலைக் கூர்ந்து படியுங்கள். ”நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ்மன்னும் புகர்நகர் அது தன்னில்” என்பது பாதாள உலகமா? எத்தனை நாள் உரையாசிரியர் கூற்றிற்குச் செவி சாய்ப்பீர்?) நாக நாட்டிற்குப் புகார் தலைநகர், வளநாட்டிற்கு உறையூர் தலைநகர். இருவேறு சோழரும் பங்காளிகள் ஆகவும் இருந்தார். முரண்பட்டும் இருந்தார். அவர் இடையே ஒற்றுமைக் குறைவு. நாகர் எழுதிய பாடல்களெனச் சங்க இலக்கியத்தில் பலவுமுண்டு. அவரை நாகரெனத் தனியே அழைத்ததின் பொருள் என்ன? எல்லோரும் போல் அவரும் தமிழரெனில் அவருக்கேன் தனிப்பெயர்? ஒருவேளை நாகர் தமிழர்க்கு நெருங்கி வந்தவரும் அதேபோது இன்னொருவகை வேறுபட்டவரும் ஆனவரோ? சிந்தனை குறுகுறுக்கிறது. இப்போதைக்கு நமக்கேதுந் தெரியவில்லை. ஆயினும் இயலுமைகளைப் பேசாதிருக்க முடியவில்லை. நாகப்பட்டினம், புகார், காரைக்கால் போன்ற இடங்களில் ஈனியலாய்வு செய்யலாம்.
            அக்கரைச் சீமை போகத் தமிழர்க்கு வாகானது 10 பாகையில் அமையும் கிடைநீரோட்டமாகும். இது குட்டியந்துவன் தீவிற்கும், (9.17 N 92.41 E) பேரந்துவன் தீவிற்கும் (11.62 N 92.73 E. அந்தமான். தமிழ்ப்பெயரை அடையாளங் காணாது நாம்நிற்பதால் ஹண்டுமான், ஹனுமானென மாற்றார் ஏதேதோ சொல்கிறார். நாமும் மயங்கி நின்றுவிடுகிறோம்.) இடையே செல்லும் பாதையாகும். நக்கவரம் தீவு (9.16 N 92.76 E), குட்டியந்துவன் தீவிற்கும் தெற்கிலுள்ளது.
            அக்காலத் துறைமுகங்களான கடல்மல்லை 12.63 N 80.19 E, புதுக்கை 11.90 N 79.82 E, புகார் 11.15 N 79.84 E; நாகப்பட்டினம் 10.77 N 79.84 E கோடிக்கரை 10.28 N 79.28 E; மருங்கூர்ப் பட்டினம் 9.84 N 79.08 E, அழகன்குளம் 9.36 N 78.97 E ஆகிய வற்றில் புறப்பட்டால் இலங்கையைச் சுற்றவேண்டாம். மாறாகக் கொற்கை 8.63 N 78.86 E, முசிறி 10.15 N 76.20 E, சேரர் தொண்டி (இற்றைக் கோழிக்கோடு) 11.26 N 75.78 E என்று புறப்பட்டால் இலங்கையைச் சுற்றித் திரிகோணமலை 8.59 N 81.28 E வந்து 10 பாகை நீரோட்டத்தைப் பிடிக்கவேண்டும். (கடல் நீரோட்டத்தை உதவியாய்க் கொள்ள, தமிழகக் கிழக்குக் கடற்கரையிலிருந்து புறப்பட்ட கலங்கள் மணிபல்லவம், திரிகோணமலை போய்ச் செல்வது இயல்பே.கொற்கை வழித் தொலைவு கூடினும் திரிகோண மலையில் 9.16 N 92.76 E தங்கி உணவு, நீரைச் சேகரித்துச் செல்லலாம்.)
            ஆகப் பழந்தமிழகத்தின் எத்துறையிலிருந்து கிழக்கு நோக்கி கடல்வழி புறப்பட்டாலும், அந்துவன் தீவுகள் / நக்கவரத் தீவுகளின் வழி செல்வதைத் தவிர்க்க முடியாது. அதற்குங் கிழக்கில் செல்ல முயன்றால் 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லாந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம். நெல்லும் தகரமும் நாடிப் போகையில் கிரா ஈற்றுமம் நமக்கு முகன்மை யானதே. அதை விரிவாகப் பேச உள்ளேன். அதற்கு மாறாய் நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்றால் சுமத்திராத் தீவின் அக்க முனையை (இதையும் அக்கமுனை>அக்கயமுனை>அக்ஷயமுனை என்று சங்கதப் படுத்தி நம்மைப் பலருங் குழப்புவார்) அடையலாம். இன்றைக்கிதை ”பண்டார் அச்சே” என மலாய்மொழியில் அழைப்பார்.
[அக்கரைச்சீமைச் செய்திகளுக்குமுன் ஓர் இடைவிலகல். தமிழிலக்கியத்தில் முதன்முதல் அக்கரைச்சீமை நம் இலக்கியங்களில் குறிக்கப்படுவது மணிமேகலையிற்றான். மணிபல்லவம் வந்த மணிமேகலை புத்த பீடிகையால் தன் பழம்பிறப்பு உணர்ந்து, மணிமேகலா தெய்வத்தால் 2 மந்திரம் பெற்று, தீவுதிலகையின் அறிவுறுத்தலால் அஃகயப் பாத்திரம் பெற்று, புகாருக்குத் திரும்பி, அறவண அடிகளிடம் ஆபுத்திரன் திறமும் பாத்திரமரபும் அறிந்து, ஆதிரைவழி பிச்சை பெற்று, உலக அறவியில் பசிப்பிணி ஆற்றி, சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கி, உதயகுமாரன் கொலையுற்றதால், சிறைப்பிடிக்கப் பட்டு, பின்னால் அரசனும் அரசியும் உண்மையை அறிந்து, இவளைச் சிறையிலிருந்து விடுவிக்க, ஆபுத்திரன் நாடான சாவகத்திற்கு ஏகுவாள்.]
            இற்றை இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியத்நாம் நாடுகளில் சிற்சில வேறுபாடுகளோடு பரவிக்கிடக்கும் ஒரு கதை, மணிமேகலை 14 ஆம் காதையிலும், பெரும்பாணாற்றுப் படையில், ”திரைதரு மரபின் உரவோன் உம்பல்” என்ற 31 ஆம் அடிக்கு அதன் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கொடுக்கும் விளக்கத்திலும் வரும் (இருவேறு தோற்றமுள்ள) ஒரு கதையும் ஒன்றிற்கொன்று உறவுகாட்டும். தென்கிழக்காசியத் தொடர்பு காட்டும் இக்கதையின் முகன்மை, ஆழத்தை, நம்மிற் பலரும் உணர்ந்தோமில்லை. கீழே மணிமேகலை கதையைச் சொல்கிறேன். நச்சினார்க்கினியர் சொல்வதை இத்தொடரின் வேறிடத்தில் பார்ப்போம். (நாகநாடென்று தமிழகத்திற்கு வெளியே மணிமேகலையில் குறிக்கப்படுவது தென்கிழக்காசியா முழுமையும் குறித்திருக்கலாம். இது சோழரின் நாகநாட்டிலும் வேறுபட்டது. முந்தையதை வெளியக நாகநாடென்றும், பிந்தையதைச் சோழ நாகநாடு என்றுங் குறிப்போம்.).
            புகார்ச் சோழனாகிய நெடுமுடிக்கிள்ளி கடற்கரை சார்ந்த புன்னைச் சோலையில் ஒரு வெளியக நாகநாட்டு மங்கையைக் கண்டு காதலித்து ஒரு  திங்களளவும் அவளோடு உறைந்தான். ஒருமாதங் கழிந்த பின் அவனிடஞ் சொல்லாது அவள் அகல, எங்கு ஒளிந்தாள் என அரசன் தேட, அரிய ஆற்றல் உடைய சாரணன் ஒருவன் அங்கு வரக் கண்டு, அவனிடம் அரசன் மங்கை பற்றி உசாவ, ”மங்கையைக் கண்டிலேன் ஆயினும் முற்செய்தி அறிவேன். வெளி நாகநாட்டு அரசனாகிய வளைவணனின் தேவி வாசமயிலையின் மகள் அவள். பெயர் பீலிவளை, அவள் பிறந்தபோது ’பரிதி குலச் செல்வன் ஒருவனைக் கூடி இவள் கருவுற்று வருவாள்’ என நிமித்திகர் சொன்னார். நீ கூறியவள் அவளாகலாம். அவள் வயிற்றுத் தோன்றிய நும்மகனே இனி உன்நாடு வருவான். அவள் வாராள். இன்னுமொரு செய்தி. மணிமேகலா தெய்வத்தின் கடுஞ்சொல்லால் உன்நகரைக் கடல் கொள்ளும். இந்திரசாபம் இருத்தலால் அது தப்பாது. இதை உண்மையெனக் கொண்டு இந்நகரைக் கடல் கொள்ளாதபடி, ஆண்டு தோறும் இந்திரவிழவை மறவாது செய்து வருக” என்று அச்சாரணன் சொன்னானாம்.
            மணிமேகலையின் பாட்டி சித்திராபதி சோழ அரசிக்கு இக் கதையைச் சொல்லி, ”அந்நாள் தொடங்கி நகர மக்கள் நடுங்கிப் போனார். இடைவிடாது இந்திர விழாவும் நடந்து வருகிறது. இப்போது மணிமேகலை சிறையுற்ற செய்தியை அறிந்து மணிமேகலா தெய்வம் சினமுற்று வரலாம்” என்றுஞ் சொல்வாள். அறவண அடிகளின் அறிவுரையால் சோழ அரசன் மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவிக்க, அவள் அங்கிருந்து புறப்பட்டு ஆபுத்திரன்நாடு ஏகி அவனைப்பார்த்து அவனுடைய முற்பிறப்பைச் சொல்லி மணிபல்லவத்திற்குக் கூட்டிவருவாள். [இதுவரை சொன்ன பீலிவளை கதையோடு தென்கிழக்கு ஆசியக் கதை சற்று வேறுபடும். பெரும்பாணாற்றுப் படையின் உரையாசிரியரான நச்சர் மாற்றுக்கதை சொல்வார். அத்திரிவை கம்போடியா பற்றிப் பேசும் போது பார்ப்போம்.)
            நாம் இங்குப் பேசவிழைந்தது அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழர் அறிந்தது பற்றியதாகும். மணிமேகலையையும், பெரும்பாணாற்றுப் படைக்கான நச்சர் உரையையும் பார்க்கும் போது, மணிமேகலை காலத்திற்கு (பொ.உ.400களில்) முன்னேயே, சங்ககாலத்திலேயே (பொ.உ.மு.550-பொ.உ.250), தமிழர்க்குச் சாவக நாட்டின் இருப்புத் தெரிந்திருக்கிறது என்பதாகும் இதற்குமுன் எப்போது இவ்விருப்புத் தெரிந்தது? - என்பதை ஆத்திரேலியப் பழங்குடிகளின் ஈனியல் ஆய்வு வழி அறியலாம். ஏறத்தாழ 11% ஆத்திரேலியப் பழங்குடியினருக்குத் தமிழ்க் கலப்பிருப்பதும், இக்கலப்பு பொ.உமு. 2350 இல் ஏற்பட்டிருக்கலாம் என்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டது. எனவே தென்கிழக்கு ஆசியாவைத் தமிழர் ஓரளவாவது அறிந்தது இற்றைக்கு 4350 ஆண்டுகள் முன்னராகும்..அது மிக நீண்ட காலம் தான். தாய்லாந்து/ மலேசியாவின் இலங்காசோகம், தக்கோலம், தாம்பலிங்கம் ஆகியவற்றைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

            முன் சொன்னதுபோல், புகாரிலிருந்து சாவகம் புறப்படும் கப்பல்கள் அந்துவன்/நக்கவரம் தீவுகளுக்குப் போய்ப் பின் அங்கிருந்து 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லாந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம், அல்லது நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்று சுமத்திராத் தீவின் அக்க முனையை அடையலாம். இதை வலஞ்செய்து மலாக்கா நீரிணை வழியே சுமத்திராவின் மலையூர், சம்பி, பலெம்பாங் போன்ற நகர்களை அடையலாம். இன்னும் கீழே போனால் சாவகத்திலும் அடையலாம். [மலாக்கா நீரிணை வழியை தமிழர் முதலில் அறிந்ததுபோல் தெரியவில்லை. அது காழகத்தில் சிலகாலம் இருந்தபின் கண்டுபிடித்த வழி.] முதலில் கிரா ஈற்றுமத்தைப் பார்ப்போம். அங்குள்ள ’தக்கோலம்’ எனும் நகரம் அக்காலத்தில் பெரிதும் முகன்மையானது.
[கூகுள் முகப்பைக் கொண்டு நான் சொல்லும் இடங்களைக் கூர்ந்து கவனித்து அறியுங்கள். நாம் துழாவிக் கொண்டிருப்பது வரலாற்றிற்கு முந்தைய காலம். வரலாறு என்பது எழுத்து எழுந்ததற்குப் பின் உள்ள காலம். வரலாற்றிற்கு முந்தையது என்பது pre history. தொடக்க வரலாறு என்பது proto history. தமிழி எழுத்து என்பது இற்றை நிலையில் பொ.உ.மு.800 இல் தொடங்கியது. (ஆகப் பழமையான பானைச்சில்லு.கொற்கையில் கிடைத்தது.) அதற்கு முன்னிருந்த சான்றுகள் எவையும் இன்னும் கிட்டவில்லை. சிந்து சமவெளி எழுத்துகளைப் போன்ற பானைக் கீற்றுகள் தமிழகத்திலும் கிட்டியுள்ளன அவற்றின் காலம் மீவுயர்ந்து பார்த்தால் பொ.உ.மு. 2600. நாம் இங்கே பொ.உ.மு. 2600க்கும் முந்தைய நிலையைத் தேடுகிறோம். நெல் இதற்கு முன் இங்கிருந்ததா?].
            பழந்தமிழக மேற்குக் கரையிலிருந்து புறப்படுங் கலங்களுக்கு செங்கடற் கரை பெருனிக்கெ (Bernike) என்பது எவ்வளவு முகன்மையோ, அதேயளவு முகன்மையானது இத் தக்கோலம். பெருனிக்கே பெயரைக் குறித்த கிரேக்க ஆசிரியர் தாலமி, தக்கோலத் துறை பற்றியும் தம் பூகோளநூலில் சொல்லியிருப்பார். சயாமியமொழியில் தக்கோலத்தைத் தக்குவா பா என்பார். தமிழர் தொடர்ந்து தக்கோல நகருக்குப் போய்வந்து கொண்டிருந்தார். பொ.உ 800/900 அளவிலிருந்த பல்லவர்காலத் தமிழடையாளங்களும், அவனிநாரணனான 3 ஆம் நந்திவருமன் பெயரால் பெருமாள் கோயில்/சிலைகள், குளம், கல்வெட்டுகளும் இங்கு தொல்லாய்வில் கிட்டின. குறைத்துநடந்த இவ்வாய்வுகளைக் காண்கையில், அவ்வூர் வெகுகாலத்திற்கு முன்பேயே ஒருவேளை உருவாகி இருக்கலாமென்று தோன்றுகிறது.
            பல்வேறு தமிழ்வணிகக் கூட்டத்தார் இங்கு வந்து போயுள்ளார். தவிர, பொ.உ. 3, 4 ஆம் நூற்றாண்டின், ”பெரும்பத்தன் கல்” [பட்டன்>பத்தன்= தங்கம், வெள்ளி ஆசாரி”] எனும் தமிழி வாசகத்தோடு, (பொன்தேய்த்து) மாற்றுரைக்குங் கல்லும், பல்வேறு மணிகளும் அருகிலுள்ள குவான்லுக் பட்டில் (Khuan Luk Pat) கிட்டின. முதன்முதலாய்த் தமிழர் எப்போது தக்கோலம் போனார்? தெரியாது. தாய்லாந்தின் தொடைபோல் கீழிறங்கும் இப்பகுதியை ”கலங்கா வல்வினை இலங்காசோகம்” என இராசேந்திரன் மெய்கீர்த்தி சொல்லும். யாரோ ஒருவர் இலங்காசோகத்தை இலங்கா அசோகமெனப் பிழைபடப் பிரிக்க, அதுவே எல்லாவிடத்தும் பரவி. அசோகரோடு அதையொட்டி விதவிதமாய்க் கதைத்து அடையாளங் காணமுடியாது செய்தார். நமக்குத்தான் வடவருக்குத் தாசர் ஆகும் மனப்பாங்கு அதிகமாயிற்றே? (Interpretation through Sanskrit has diverted many research in S E Asia.).  தமிழ்வழி அறிந்தால் இலங்காசோகத்தின் சொற்பிறப்பு சட்டென விளங்கும்.
            இல்தல்>ஈல்தல்>ஈழ்தல் வினை தமிழில் பிரித்தலை உணர்த்தும் முகனை நிலத்திலிருந்து ஈழ்ந்தது ஈழம். இல்தலை இலங்குதலென்றுஞ் சொல்வர். அதற்கும் பிரித்தல் பொருளுண்டு. இலங்கையும் ஈழம் போலவே தமிழ்ச் சொல் தான். [அது சிங்களமில்லை. இந்தையிரோப்பியனில் isle/ஈல், island/ஈலண்ட் என்று பொதுப்படச் சொல்கிறோமே அதுகூட ஈழம் என்ற விதப்புப் பெயரின் பொதுமையாக்கல் ஆகலாம்.] இலங்குதலின் எதிர்ச்சொல் இலங்காதிருத்தல். சுள்>(சொள்)>சொள்கு>சொகு>சோகு>சோகம் என்பது திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351] திகுதிகுவெனத் திரண்டதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச்சொல் பிறந்தது. இலங்காசோகம்= பிரியாத்தொடை. இற்றை வடமலேசியாவின் இப்பழம்பெயர். எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை தொடை நீண்டுகிடக்கிறது. பொ.உ.2 ஆம் நூற்றாண்டில் காழக(கடார) அரசு இலங்காசோகத்தில் தொடங்கியிருக்கலாம் என்பார். இதுவே தென்கிழக்காசியாவின் முதலரசுத் தொடக்கமாம்.
            தக்கோலத் துறையிற் கீழிறங்கி நிலம்வழி கிழக்கே 290 கி.மீ பயணித்தால், பசிபிக் பக்கமுள்ள தாம்பரலிங்கம் வரும் [இராசேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் வரும் மா (பெரிய) தாமலிங்கம் இதுவே.]  இதன் முகன்மையும் பெரிதே. இதன் இற்றைச் சயாம்பெயர் நகோன் சி தம்மராட் 8.43 N 99.56 E. ஒருகாலத்தில் இது காழகஅரசைச் சேர்ந்தது. (காழகஅரசு பின்னாளில் சுமத்ராவின் பலெம்பாங்ஙைத் தலைநகராய்க் கொண்ட சிறீவிசயத்தின் சிற்றரசானது.) தாம்பரலிங்கத்தில் சிறீவிசய அரசன் கட்டிய புத்தர் கோயிலும், அதுசேர்ந்த தமிழ்க் கல்வெட்டும் கிட்டியது. இத்துறைமுகம் சிலகாலம் கம்போடியர் கட்டுப்பாட்டிலிருந்தது. தாமலிங்கத்திலிருந்து பசிபிக்கில் நகர்ந்தால், எளிதாய்க் கம்போடியா போகலாம். (மலாக்கா நீரிணைவழி போகவேண்டியதில்லை.) கம்போடியா பற்றிக் கீழே பார்ப்போம்.
                        கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
                        தீதமர் வல்வினை மா தாம லிங்கமும்
            என்று இருவேறு இலங்காசோக நகர்களை இராசேந்திர சோழன் மெய்கீர்த்தி பேசும். தக்கோலத்தின் தெற்கே, இக்கால வுக்கெட்டுச் (Phuket) சுற்றுலாத் தீவும் (இது இன்று பெயர்பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க தக்கோலம் பெயர் பெறவில்லை.). அதன் கிழக்கே கிரா ஈற்றுமக் கிராபிப் (Grabi) பகுதியும் தெரியும். அதன் தெற்கே இலங்காவியை (6.37N 99.78E) அடையலாம். இதன் நேர்கிழக்கில் பசுபிக்கடற் பக்கம், ”பட்டினம்” என்ற ஊருமுண்டு. (மலாயில் பட்டனி. இதன்பொருள் துறைமுகம். அதேபொழுது, வரலாற்றாய்வர் சொற்பிறப்பு அறியாது ”சங்கதம், அது, இது” எனக் குழம்புவதுமுண்டு. தென்கிழக்காசியா எங்கணும் இப்படி நடப்பது மிகச் சாத்தாரம். தமிழ்வழி செல்லவேண்டிய பாதையைச் சங்கதக் கல் தடைப்படுத்தும் தமிழ்வழி பார்க்காவிடின் பல இடங்களில் தடுமாறுவோம். இவ்வாறு சங்கதம் தமிழை நிறையவே படுத்தியுள்ளது. இலங்காசோகமும், மலேசியாவின் பெருலீசு, கெடா, பினாங்கு மாநிலங்கள் சேர்ந்ததே அற்றைக் காழகம். காழகநிலமே தமிழர் முதலிற்கான நிலமுமாகும்.
            காழகத்திற்குச் சுங்கைப்பட்டென்றும் பெயருண்டு. (Sungai Batu ஆற்றுப்பட்டு. நம்மூர் செங்கழுநீர்ப்பட்டு, நீர்பெயற்று போல் இதைப் புரிந்து கொள்ளுங்கள்.) பட்டு, தமிழில் குடியிருப்பைக் குறிக்கும். சுங்கை= ஆறு., பெருநை, ஓடை. அந்தக் காலச் சுங்கைப் பட்டினம் இன்று சுங்கைப்பட்டாணி என்று பெயர் திரிந்து தமிழூற்றை மறைத்து நிற்கும். இலங்காவிக்கும் தெற்கில் மலேசிய மேலைக்கடல் துறையாக இற்றைப் பினாங்கு உள்ளது. சரி, தமிழர் தக்கோலம் போன காரணமென்ன? வெண்கலத்திற்குத் தேவையான தகரம் முதலில் தக்கோலத்தில் கிட்டியிருக்கலாம்.
            பர்மா தொடங்கி, தாய்லாந்து/ மலேசியத் தீவக்குறை வழி, இந்தோனேசியத் தகரத் தீவுகள் வரை வடக்கு-தெற்கில் 2800 கி.மீ நீளம் 400 கி.மீ அகலம் தென்கிழக்காசியத் தகர வளைபட்டை (Tin Belt) உள்ளதால், தக்கோல வடக்கிலும் தெற்கிலும் தகரச் சுரங்கங்கள் உருவாகின. இற்றையுலகின் 54% தகரத்தேவையை (9.9 நுல்லியன் தொன்கள் million tonnes) இவ்வளைப்பட்டை நிறைவுசெய்கிறது. அவ்வளவாய்க் காடும் மலையுமின்றி, சிறுசிறு குன்றுகளும், எளிதில் கனிமஞ் சேகரிக்கும் நிலப்பாங்கும் கொண்டதால் தகரக் கனிமம் எளிதிலிங்கு வாரப்பட்டது. இதனாலேயே தகரமென இவ்வூர்க்குப் பெயரிட்டாரோ, என்னவோ? பேச்சில் ரகரம் லகரமாவது சிலமொழிகளின் பழக்கம். தகரம்>தக்கலம்>தக்கொலம்>தக்கோலம் என்பது இயல்பான திரிவு. சயாமிய மொழியில் இன்றும் ”தக்குவா” என்ற சொல் தகரத்தைக் குறிக்கும். இற்றைப் பெயரான ”தக்குவா பா” அதன் வழி உருவானதே.
            செம்போடு தகரஞ்சேர்த்துக் கடின வெண்கலமாக்கி, கூர்ங்கருவி, படைக்கலன் செய்யப் பயன்படுத்தினார் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் நடந்த வெண்கலக் காலப் (Bronze Age) பயன்பாடே மென்மேலும் தகரச் சுரங்கங்களைக் கண்டுபிடிக்க ஏதுவானது. தகரத்தின் முதற்கிடைப்பு பொ.உ.மு. 3500 இல் துருக்கியிலும், பின் இங்கிலாந்திலும் இருந்தது. எகிப்து, சுமெரியா, பாபிலோனிய, அக்கேடிய நாடுகளில் வெண்கல வாணிகம் செய்தோர், தகரச்சுரங்கங்கள் இருந்த இடங்களின் அடையாளங்களை, குறிப்பாக இங்கிலாந்தின் இருப்பை, மூடி மறைத்தார். ஏறத்தாழ பொ.உ.மு. 310 இல் தான் இம்மறைப்பு கிரேக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் தகரச்சுரங்கங்களைத் தம்பக்கம் கைக்கொள்ளவே உரோமானியர் இங்கிலாந்தை அடிமைகொண்டார்.
            [தகரத்தை ஆங்கிலத்தில் [tin Old English tin, from Proto-Germanic *tinom (source also of Middle Dutch and Dutch tin, Old High German zin, German Zinn, Old Norse tin), of unknown origin, not found outside Germanic. Other Indo-European languages often have separate words for "tin" as a raw metal and "tin plate;" such as French étain, fer-blanc. Pliny refers to tin as plumbum album "white lead," and for centuries it was regarded as a form of silver debased by lead; hence its figurative use for "mean, petty, worthless."] என்றும், stannum [stannic (adj.) "containing tin," 1790, from Late Latin stannum "tin" (earlier "alloy of silver and lead"), a scribal alteration of Latin stagnum, probably from a Celtic source (compare Irish stan "tin," Cornish and Breton sten, Welsh ystaen). The Latin word is the source of Italian stagno, French étain, Spanish estaño "tin." The chemical symbol Sn is from Late Latin stannum] என்றும் சொல்வர்.] இதேபோக, தகரம் சீனத்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் பயன்பட்டதற்குச் சான்றுண்டு.           
            பொ.உ.மு. 2300-2000 அளவில் வடகிழக்குத் தாய்லந்தின் கோரட் சமவெளியில் வெண்கலஞ் செய்ததற்கும், பொ.உ.மு.1600 இல் வியத்நாமில் செய்ததற்கும் சான்றுண்டு. இதனூடேதான் தகரம் தமிழர்க்குத் தெரியவந்திருக்கவேண்டும்.

குறிப்பு: மே 25, 2020 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சியில் வழங்கிய உரை

தொடர்பு:
இராம.கி.
Iraamaki <iraamaki@bsnl.in>






Wednesday, February 13, 2019

மந்திரம் - ஒரு பொருள் விளக்கம்



—  இராம.கி.


            இரு மொழிகளிலும் சிறந்த புலமைபெற்ற சிவாச்சாரியார்களையும், பட்டர்களையும் வைணவ ஆச்சாரியார்களையும் உள்ளடக்கிய தென்னிந்திய அருச்சகர் சங்கம் வெளியிட்ட சிவாகம விளக்கவுரை நூலிலிருந்து எடுக்கப்பட்டதாக மந்திரமென்ற சொல்லுக்கு
சமசுகிரதத்தில் ‘மந்திரம்’ என்னும் சொல் மநநம் + த்திராணம் என்னும் இரு சொற்களின் புணர்ச்சியால் ஏற்பட்டதாகும் இச்சொல் வாசகம் வாச்யமென்று இரண்டாக விரியும். அதாவது தான் நினைத்த பொருளைப் பிறர்க்குத் தெரிவித்தலும், பிறர் தெரிவித்ததனைத் தாமுள்ளுணர்தலமாகும் 
            என்று விளக்கம் சொல்லப்பட்டது. படித்து நான் வியந்துபோனேன். என் குறைபட்ட மொழியியலறிவில் புரிந்துகொண்டபடி, மநநம்+த்ராணம் என்பது ஒருநாளும் மந்திரமாகாது. புணர்ச்சியில் அது மநந்த்ராணம் என்றே திரியும். கண்டமேனிக்குச் சங்கத இலக்கணம் இப்படியெல்லாம் வேலை செய்யாது. இதுபோன்ற “பௌராணிக விளக்கங்களை” வைத்துப் பொருள்கொள்வோருக்கு என்னசொல்ல முடியும்?. மோனியர் வில்லியம்சைப் பாருங்கள் என்றுமட்டுமே சொல்லமுடியும். பௌராணிகர்களைப் பார்த்தால் தடுமாறத்தான் வேண்டும். மந்திரத்தின் தாதுவாக ”மந்”நையே மோனியர் வில்லியம்சு அகரமுதலி சொல்லும். அத்தாது, ஆத்மனேபாதத்தில் சொல்லப்பட்டதில், 8.4 ஆம் வகையைச் சேர்ந்ததாம். பாணினியின் தாது பாடப்படி, அது xxx, 9; xxv, 670 என வகைப்படுத்தப் படும்.

            இதன் அடிப்பொருள் to think, believe, imagine, suppose, conjecture என்பதே. இதன் அடிவழி வந்த சொற்கள் பல. மந, மநந, மநஸ், மநு, மநுஷ், மநோ, மந்த்து, மந்த்ர, மந்த்ரி போன்றவையும் பிறவும் ஆகும். இவையெலாம் ஒழுங்கான சங்கத இலக்கணவழி வந்த சொற்கள். ”சூ, மந்திரக்காளி, ஓடிவா, ஓடிவா” என்றபடி, மநந்த்ராணம் என்றசொல் மந்த்ரம் ஆகிவிடாது. மந்த்ர என்பதற்கு instrument of thought, speech, sacred text or speech, a prayer or song of praise என்று பொருள் சொல்வர். இதன்படி “சிவசிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் மணிபத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடு நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு .......” போன்று இன்னும் பலவும் மந்திரங்களே. அவற்றைச் சொல்வதில் ஒருவிதமான எழுச்சி, நிறைவு, அமைதி போன்றவை ஒருவருக்குக் கிடைக்குமானால் அம் மந்திரங்களுக்குப் பயனுண்டு தான். இவை மனம் தொடர்பானவை.

            மந் எனும் தாதுக்கும் முந்தையதாய் முல்*>முன்>மன் எனும் வேரைத் (முன்னு-தல் வினையைத்) தமிழ்ச்சொற்பிறப்பியல் சொல்லும். (”வேறுபல முன்னிய விரகறி பொருந - பொருநராற்றுப்படை 3) கன்னடத்திலும் இது முந்நு என அமையும். ஞாவகம் கொள்ளுங்கள். மொழியீற்றில் னகரம் என்பது நகரத்தின் போலி. சொல்முடிவில் வெரிந் என்றசொல் தவிர்த்து மற்ற சொற்களில் னகரமே ஈற்றாகும். பொதுவாக முன்னுதலென்பது பொருந்தல் பொருளையே உணர்த்தும். மு- வும் நு வும் பல சொற்தொடக்கங்களில் போலிகள்.’ மன்>மன்னு, மனம், மனசு, மனனம், மன்>மான்>மாந்து, மாந்தன், மந்திரம், மந்திரி என்ற சொற்களைத் தமிழென்றுஞ் சொல்லலாம். மன்னுந் திரம்(>திறம்) தமிழில் மந்திரமாகும். இதற்குச் சங்கதத்தைத் துணைக்கழைக்கத் தேவையில்லை.

            அன்றாடம் நாம் காணும் காட்சிகளை, பட்டறிந்தவைகளை, ஏதோசிலவோடு பொருத்துகிறோம். அப்பொருத்தல்களே நம்மூளையில் பதிகின்றன. பின் நினைவாகின்றன. முன்>நுன்>நின்>நினை என்பதும் முன்னுதலின் இன்னொரு வடிவுதான். இதேபோல் முன்>உன்>உன்னு என்பதும் இன்னொரு வடிவு. உல்>உள்>உள்ளம் என்பதும் மனத்தின் இன்னொரு சொல். உள்>ஒர்>ஓர்>ஓர்தல்= பொருந்தல். கருதல், கண்ணுதல் என்ற சொற்களும் பொருந்தல் தொடர்புள்ளவை செ>செத்து>சித்து>சிந்து>சிந்தனை என்பதும் கருதல் தொடர்பானது. முன், நினை, உன், உள், ஓர், கண், கருது, சித்து என்பவற்றின் அடியிலும் பலநூறு தமிழ்ச்சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சங்கதப்படுத்திப் பார்ப்பது நம்மை அடிமைத்தனத்திற்கே இட்டுச்செல்லும். வழக்கம்போல் ஒரு சிலர் எதுமுந்தி என்பதில் குடுமிப் பிடிச் சண்டையும் போடலாம். அது வேறு கதை.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
            என்று வரையறை தருவார் தொல்காப்பியர் (செய்யுளியல் 178). இதைவிடச் சிறப்பான வேறு வரையறையை மந்திரத்திற்கு நான் கண்டேனில்லை. மேலேசொன்ன “சிவசிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ தமிழ்  நாராயணா, ஓம் மணிபத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடு நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு .......” என்பன வெல்லாமும் நிறைமொழி மாந்தரின் ஆணையில் கிளந்தவையே. மந்திரம் என்பது வாய்மொழி எனவுஞ் சொல்லப்படும். திருமூலர் அருளிய திருமந்திரமும், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியுங் கூட மந்திரவகையைச் சேர்ந்தவை தான். வாய்மொழி என்பதைச் சிவவாக்கியர் நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் ஒரு பாட்டில் சொல்லுவார்:
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணன்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ? நாதனுள்ளி ருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?  
            முள்ளுதல்> மொள்ளுதல் என்பது வாய்க்குள் நாவை உருட்டி ஒலிஎழுப்புவது. மொள்>மொழு>மொழி என்பதும் அதே பொருள்தான். முள்>முழங்கு = சத்தமாய் ஒலியெழுப்புவது. முள்>முழு<முணு> முணுமுணுப்பு= காதில்கேட்காத அளவிற்கு மென்குரலில் சொல்வது., பலரும் மந்திரம் சொல்லும்போது சத்தமிட்டுச் சொல்ல மாட்டார். முணுமுணுத்தே சொல்வார். மந்திரம் என்றால் என்னவென்று புரியச் சிவவாக்கியரின் மேலுள்ள வாக்கும் தேவைதான்.



தொடர்பு: 
இராம.கி.  (iraamaki@bsnl.in) 
http://valavu.blogspot.com







Sunday, July 8, 2018

சாத்தன்



 ——   இராம.கி.


”சாத்தன் என்றசொல் தமிழா?” என்றும், ”இதற்கும் மேலைநாகரிகத்தில் சொல்லப்படும் சாத்தானுக்கும் தொடர்புண்டா?” என்றும் முகநூல் சொல்லாய்வுக் குழுவிற் கேட்கப்பட்டது. இதன் மறுமொழியை சட்டெனச் சொல்லமுடியாது. பழங்குடிகளின் தொழிற்பிரிவு, சாதி/வருணத் தோற்றம், தமிழ்/சங்கத ஊடாட்டமெனப் பலவும் சொன்னாற்றான் ”சாத்தனின்” ஆழம் புரிபடும். சாத்தான் தொடர்பு வேறு வழிப்பட்டது. ஏற்கனவே தப்புந்தவறுமாய் நம்மைச் சுற்றியும், இணையத்திலும் ஏராளம் சொல்லப் பட்டுள்ளது. இவற்றையும் மீறி ஒழுங்குறப் புரிந்துகொள்ளப் பெருமுயற்சி தேவை. மெதுவாய்ப் படித்து, அசைபோட்டு ஓர்ந்துபார்த்துப் புரியவேண்டும், சாத்தனைத் தனிவாணிகனென்றும் வணிகக்கூட்டத்தில் ஒருவனென்றும் 2 விதங் காணலாம். வணிகத்தையும் 2-ஆய்ப் புரிந்துகொள்ளலாம். வாணியம்/வாணிகத்தின் குறுக்கமென்பது ஒன்று. பண்ணியம்/பண்ணிகம்>பணிகம்>வணிகம் எனுந் திரிவு இரண்டாவது. ’பண்ணிகத்தை’ விட ’வாணியம்’ மாந்தர் சிந்தனையில் முந்தையது. இவற்றைப் புரிந்துகொள்ள, பழந்தமிழர் குமுகாயப் பழக்கங்களை அறியவேண்டும்.

புதுக் கற்கால நாகரிகத்தில் வெவ்வேறு இனக்குழுக்களாய் (பொ.உ. மு 2000 க்கும் முன்னர்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனத் திரிந்த காலையில், கூர்த்த கல்முனைகொண்ட சூலம்/வேல் போன்றவற்றால் விலங்குகளை வெட்டித்தின்றதும். மீன்களைக் குத்திக்கொன்றதும் போக, குழுக்கள் தம்மிடையேயும் சண்டை/போட்டி போட்டுக்கொண்டார். பிழைபட்டுச் சரிசெய்யும் முறையில் செம்பும், இரும்பும் ஆக்கும்நுட்பத்தைக் கற்றதால், கல்முனைகள், பொ.உ.மு. 2000 க்கு அருகில், மாழைமுனைகளாய் மாறி, மாந்த நாகரிகத்திற்குப் பெரும் உந்தலைக் கொடுத்தன. விலங்கு வேட்டையிலும், மாற்றாரை வெல்வதிலும் வெற்றி கூடின. ஒவ்வோர் இனக்குழுவினரும் அவரவர் புழங்கும் நிலம் அவர்க்கே சொந்தமென உரிமை பாராட்டத் தொடங்கினர். தனிச்சொத்து கூடக்கூடக் குழுக்களின் கட்டமைப்பு, குறிப்பாக அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்னும் அகன்று, இறுகியது; அதிகாரம் கூடியது.

சூலம்/வேலுக்கு அடுத்ததாய்த் தென்னக மேற்குக்கடற்கரை நெய்தலிலும், அதையொட்டிய குறிஞ்சியிலும் வில்/அம்பு ஆயுதமெழுந்தது. (வில்லடையாளம் சேரருக்கு.) விலங்குகளையும், வேற்றுமாந்தக் கூட்டத்தையும் அருகிற் சென்று கொல்வதினும் தொலை நின்று, வில்வளைத்து, அம்பெய்திக் கொல்வது இன்னும் நேர்த்தியென ஒருவேளை நினைத்தரோ?!? தெரியாது.! தம் குழுவிழப்பைக் குறைத்து, மாற்றாரிழப்பைக் கூட்டப் பழந்தமிழருக்கு வில்/அம்பு உறுதியாய் வகைசெய்தது. இதற்கப்புறம் நேரடிச்சண்டையிற் கொலைசெய்யச் சூலம்/வேலை விடச் செம்பு/இரும்பால் ஆன அரிவாள்/கத்தி வாகாய் ஆனது. (ஆதிச்சநல்லூரின் செம்பும், கொங்கின் இரும்பும் ஆயுதம் நாடி உருக்கப்பட்டதை ஆய்வாளர் மறவார். ஆதிச்ச நல்லூரின் காலம் பொ.உ.மு.2000க்கும் முந்தையது. இரும்புசெய்தது பொ.உ.மு.1500/1200 ஆக இருக்கலாம். கொங்கில் இரும்பு, தங்கம், மணிகள் என்பவற்றிற்கே தமிழக இனக்குழுக்கள் தொடர்ந்து மோதின.)

இம்மோதல்களின் முடிவில் சேர, சோழ, பாண்டியப் பெருங்குடிகள் எழுந்தன. இவற்றுள் வேளிரும் பிறருங் கொஞ்சங் கொஞ்சமாய் கரைந்துபோனார். சேர, சோழ, பாண்டியர்க்கு முன் கணக்கற்ற இனக் குழுக்கள் தமிழகத்துள் இருந்திருக்கும். அவற்றின் பாதுகாப்பைக் கவனிக்க அக்குழுக்களுள் மூவேறு வகையார் விதப்பாய் எழுந்தார். ஆயுத வழி பார்த்தால் முதல்வகையாரைச் சூலத்தார் (= வேலார்) என்றும், இரண்டாம் வகையாரை வில்லியர் (=அம்பார்) என்றும், மூன்றாம் வகையாரைக் கத்தியர் (=அரையர்) என்றும் அழைக்கலாம். முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் இன்னுங் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை குறைந்த பெருமானரின் (இவரேதோ வடக்கிருந்து வந்தாரென்பது ஒருதலைச் செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்துசேர்ந்தவர் இணைந்துகொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியலதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக்குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்தவிடத்தில் ஓர் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லைதாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலையும் வில்லியரே செய்தார்.

{{இங்கோர் இடைவிலகல். சங்கதம் கத்தியரைக் கத்ரியர்>க்ஷத்ரியர் என்றாக்கும். (தமிழில் நாம் அவரை அரயர்>அரசர் என்போம். வேறு வகையில் கத்தியின் இன்னொரு வடிவான வாளைக் கொண்டு வாள்மர்>வார்மர்>வர்ம என்றும் சங்கதம் கையாளும்) இதேபோல் வித்தையரை/விச்சியரை சங்கதம் விசையர்/வைசியர் என்றாக்கும்.(தமிழில் நாம் அவரை வாணிகர் என்போம்.) சூலத்தரைச் சங்கதம் சூல்த்தர்/சூத்தர்/சூத்ரர் என்றாக்கும். (தமிழில் வேலரை வேல்>வேள்>வேளாளர் என்போம்.). ”வேலைப்பகிர்வில்” தொடங்கிய தொழிற்பிரிவு நெடுங்காலங்கழித்து, பொ.உ.300 இல் குப்த அரசுகாலத்தில் இந்தியா எங்கணும் அகமுறைத் திருமணத்தால்/ பிறப்புமுறைப் பிரிவால் நிலைப்படுத்தப்பட்டது. முட்டாள்தனமான சாதி/வருணத் தோற்றம் நம்மூரில் இப்படி எழுந்ததே.

சங்ககாலத்தில் அகமுறைத் திருமணங்கள் மிகக் குறைவு. சங்க இலக்கியத்தில் கற்பிலும் மேலாய்க் களவே கொள்ளப்பட்டது. இன்றுங் கூட அகமுறைத் திருமணம் ஒழிந்தால் (காதல் திருமணங் கூடினால்) தமிழ்க் குமுகாயத்தில் சாதி/வருணம் இல்லாதுபோகும். அப்பன் வேலையை மகன்செய்வது இன்று மிகக் குறைந்துபோனது. ஆனாலும் வருக்கத் தாக்கம் அழியவில்லை.) பழந்தமிழ்க் குடிகளிடம் ஏற்பட்ட அதே தொழிற்பிரிவு தமிழகம், வட இந்தியா, உலகின் மற்ற குடியினரென எல்லோரிடமும் இருந்தது. அவரவர் கையாண்ட பெயர் வேறாகலாம். ஆனால் கருத்தீடு ஒன்றே. நால்வகையார் இருந்த குழுக்கள் பெருகி பல்வேறு சண்டைகளில் ஒருகுழு இன்னொன்றிற் கரைந்து அதிகாரக் கட்டுமானம் கூடிக் கிழார், அரயர்(>அரசர்), மன்னர், வேந்தரென மேலும் இறுகியது. வேந்தர் சங்க காலத்திலேயே வந்துவிட்டார்.}}

நாளா வட்டத்தில் அடுத்த இனக்குழுக்களுடன் எப்போதுமே போர்செய்ய முற்படாது, சிலபோது ஒன்றுகூடி உறவாடிப் பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றார் பொருள்/பண்டத்திற்கு மாற்றி வரவும் வில்லியர் முற்பட்டார் கொஞ்சங்கொஞ்சமாய் இனக்குழுக்களிடை பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதனால் ஏற்பட்ட பண்டமாற்றில் சில குறிப்பிடத் தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம்பெற்றார். வில்லறிவு, இங்கு வில்+தை= விற்றை>வித்தை>விச்சை எனச்சொல்லப்படலாயிற்று. வில்லியர், வித்தையர்> விச்சையர் என்றும் சொல்லப்பட்டார். வில்+தல் விற்றலாயிற்று. விற்றையும் விற்றலும், (போர்த்திறமை, பண்டமாற்று என்ற) 2 வேறு வில்லியர் செயல்களையுந் தொடக்கத்திற் குறித்தன முடிவில் தகரம்பயின்ற சொல் போர்த்திறமையையும், றகரம்பயின்ற சொல் பண்டமாற்றையும் குறிக்கத் தொடங்கிற்று. (இம்மெய்வேறுபாட்டை இன்றும்நாம் பயில்கிறோம்.) வில்லியருக்கு இன்னொரு பெயரும் அவர்கையாண்ட, சிறுவுருவங் கொண்ட கூர் அம்பு/வாளி/வாணியால் ஏற்பட்டது. வில்லியர் என்பார், வாணியர் என்றும் இங்கு சொல்லப்பட்டார். பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப்பெயர் உருவானது. [ஆங்கிலத்தில் இவரை trader என்பார்.]

2 ஆம் வகை வளர்ச்சியாய்ப் பிற்காலத்தில் இயல்பொருள்களின் மேல் மாந்தவுழைப்புச் செலுத்தி நெளிவு சுளிவு, சுவை, நேர்த்திகளைக் கூட்டிப் பயனுறப் பண்ணும் நுட்பம் சிச்சிறிதாய்ப் பிழைபட்டுச் சரிசெய்வதாய் எழுந்தது. பண்ணல் பழகாக் காலத்தில் உலர்ந்து வறண்டு, சருகாகிய (உப்புக்கண்டம், கருவாடு, தோல், எலும்பு, கொம்பு, உலர்காய்கள், இலைகள், பயிர்கள், கூலங்கள் போன்ற வறள்/ வறைப் பொருள்களையே மாந்தர் பரிமாறிக்கொண்டார். இப்பரிமாற்றமே வாணிகம் எனப்பட்டது. பின்னால் பண்ணல் பழகியகாலத்தில் பண்ணம்>பண்டம் என்றசொல்லும், பண்ணிகம்>பணிகம்>வணிகம் (= பண்ணி விற்பது; manufacture and sale) என்றசொல்லும் எழுந்தன. முடிவில் வாணிகம், வணிகமென்பன ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தன. அவற்றின் வேறுபாட்டை இன்றுநாம் உணர்வதில்லை.

விற்றலிற் கிளைத்த சொல் விலை. இதையொட்டிய கூட்டுச்சொற்களும் தமிழிலுண்டு. எல்லோருமறிய விலைபகர்வது பகர்ச்சி (=price). விலை ஏல்த்துவது ஏற்றல்/ஏலம். இந்தையிரோப்பியனில் கீழே சொல்லப்படும் சாலும் ஏலும் கலந்து sale ஆகும். வில்கொண்டு விற்பென்றுஞ் சொல்வோம். விற்பிப்பது விற்பனை. விலை படியும்வரை, நிறையும்வரை, சாலும்வரை பரக்கப்பேசுவது சால்+தல்= சாற்றல்/ சாத்தலாயிற்று. சால்தல், விற்பனையாளருக்கு இருக்கவேண்டிய இயல்பு. சாத்தல் தொழில் செய்வோன் சாத்தன். இன்னொரு பக்கம் வில்லால் வேட்டையாடும் தொழிலில், வில்லிற்சிக்கியது (அங்கியது)/ வில்லாலழிப்பது விலங்கு. (பாணிக்கிற/அசைகிற காரணத்தால் சங்கதத்தில் ப்ராணி என்றார். உய்கின்ற/மூச்சு விடுகின்ற காரணத்தால் தமிழில் உயிரி.) ஓரிடத்தின் எல்லையை அம்பு தைத்து அக்காலங் குறித்ததால், வில்லால் அங்கப்பட்ட (உறுப்பாக்கிய) நிலம், முன்னுரிமையைக் குறிக்கும். தற்கால வில்லங்கப்பொருளும் வில்லடி, வில்லடை போன்றனவும் தொடர்பொருள்களைக் குறிக்கும். வில்லியரின் பண்டமாற்றில் நடக்கும் கூடல், சொலல் குறித்தே மேற்சொன்ன ”சால்” வினையெழும். அகரமுதலிகளில் ”சாலுக்கு” 2 வகைப் பொருள்சொல்வர். முதல் வகை நிறைதல், பொருந்தல், முற்றல், மாட்சி பெறுதல் என்பதாகும். இரண்டாம் வகை விளம்பரப்படுத்தல், விரித்துரைத்தல், சொல்லல், நிறைத்தல், அடித்தல், புகழ்தல், அமைத்தல் போன்றவையாகும்.

முதற்சொல் சால்>சார்>சார்தலெனத் திரியும். 2 ஆவது சால்+தல்/சாற்றலாகும். அணிதல், தரித்தல், பூசுதலென்பது சார்த்தலாகும். மனம்நிறைதலுக்கு/ அமைதியடைவதற்கு ஆடுங்கூத்து சா(ர்)ந்திக்கூத்து. ஏற்கனவே கல்யாணமாகி, 60 அகவை நிரம்பியவன் மனைவியோடு மீளத்திருமணஞ் செய்வது சாந்திக் கல்யாணம். இளம் ஆணும் பெண்ணும், திருமணத்தின்பின் கூடுவதும் சாந்திக் கல்யாணமே. சார்= கூடுகை. சார்தல்= சென்றடைதல், புகலடைதல், அடுத்தல், பொருந்தியிருத்தல், சார்பெழுத்து= முப்பது தலையெழுத்துக்களைச் சார்ந்த குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம். சால்= நிறைவு; சால்பு= மேன்மை, சான்றாண்மை, தன்மை, மனவமைதி; சாலை= ஓரிடத்திலிருந்து இன்னோரிடங் கூட்டிச்சொல்லும் பாதை. சான்றார்/சான்றோர்= (நற்குணங்கள்) நிறைந்தவர். சாதுவன்= நல்லவன், ஐம்புலன் அடக்கியவன், அருகன், ஆதிரை கணவன்; சாந்தன்= அமைதியுடையோன், அருகன், புத்தன்; சாந்தி= அமைதி, தணிவு, மேல் சா(ர்)ந்தி= மேலேயுள்ள ஐயனார்கோயிலில் பூசைகளைச் செய்கிறவன்.

பலரறிய வெளிப்படச் சொல்லலால் சாற்றல்/ சாத்தலுக்கு வேதமென்ற பொருளுமுண்டு. வேதத்தின் இறைச்சிப் பொருள் கருதி மறையென்பார். (நாளாவட்டத்தில் வேதமுடிவான வேதாந்தம், தருக்கம் போன்ற நூல்களும் சாற்றமாயின. சாற்றம்>சாத்தம்>சாத்ரம்> சாஸ்த்ர என்று சங்கதத்தில் வரும். சாஸ்த்ரம் தெரிந்தவன் சாஸ்த்ரி. பெருமானரிற் படித்தவன். இவனே சால்மன்>சார்மன்>சர்மனும் ஆனான். படித்தவன் என்பது பொருள். ”முதலிற் சொல்வது, அடுத்தது, அடுத்தது” என வெவ்வேறு தோத்திரங்களையும், பாசுரங்களையும் பெருமாள் கோயிலிற் சொல்லும் முறைக்குச் சாற்றுமுறை என்று பெயர். சால்ந்ததை, நிறைந்ததை, முடிந்ததைச் சொல்வது சான்றானது. இதைச் சால்க்கு>சாக்கு என்றுஞ்சொல்வர். சால்க்கைச் சொல்பவன் சால்க்கி>சாக்கி. சங்கதத்தில் இது சாக்ஷியாகும். முடிக்கத் தகுந்தது சால்த்த>சார்த்தத் தகுந்தது எனப்படும் சாத்து>சாத்தியம் இப்படியெழுந்ததே. “இப்படி நடக்கக் கூடுமா? இது சாத்தியமா?” எனும்போது உள்ளிருப்பது சாலெனும் வினையடியே.

சாத்தவன்/சாத்தன் = வாணிகன், ஐயனார், அருகன், புத்தன், வாணிகக்கூட்டத் தலைவன். சாத்து = வணிகர் கூட்டம். ஐயனார் கோயில் பூசாரி சாமியாடி எதிர்காலம் பற்றி ஏதேனுஞ் சொல்வானானால் அவனும் சாத்தன் எனப் படுவான். ஐயனார்கோயில் சாத்தன் சாமி (இதையே பழந்தமிழ் இலக்கியம் அணங்கு என்னும்) ஆடுவான். சாலினி= தேவராட்டி, சாமியாடும் பெண்பூசாரி. குறிப்பிட்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பலவிடங்களில் வேதநெறி ஏற்க அரையர் தயங்கினர். பொ.உ.மு.800-500 களில் வேதமறுப்பு வடக்கே பெரிதாகிப் போனது. அற்றுவிகம் (=ஆசீவிகம்), செயினம், புத்தம் என்ற மூன்றும், இவற்றுக்கு முந்தைய சாங்கியம், விதப்பியம் (வைஷேஷிகம்), சாருவாகம் (உலகாய்தம்), ஞாயம் (ந்யாயம்) போன்றவையும் வேதமறுப்பு நெறிகள் என்பார். இவற்றை முதலில் வாணிகரே பெரிதும் புரந்தார். பின் அரசரும் சேர்ந்துகொண்டார். வடமேற்கிருந்து வந்த வேதருக்கு இந்தியக் கிழக்கில் புரவலர் குறைந்ததால், வேறு வழியின்றி தெற்குநோக்கி வரத் தொடங்கினார்.

வேதமறுப்பு நெறிகள் அடிப்படையில் கடவுள் மறுப்பு நெறிகளே. தம்முள் அவை வேறுபடினும், சில பொது ஓர்மைகளைச் சுட்டின. பொ.உ.மு.500 களில் வேதமறுப்பு ஆசான்களின் பாதப்படிமங்கள் வைத்தும், பின் உருவங்கள் வைத்தும் மக்கள் தொழத்தொடங்கினர். கொஞ்சங்கொஞ்சமாய் பள்ளிகள் கோயிற் கருத்தீட்டுள் வந்தன. இனக்குழுப் படையல்கள், பழக்கவழக்கங்கள், கொண்டாட்டங்கள், நினைவேந்தல்கள் பள்ளிகளில் நடக்கத்தொடங்கின. (நிக்கந்தநாதர்/ மகாவீரர் உட்பட்ட) செயினத் தீர்த்தங்கரர், அற்றுவிகத்தின் மற்கலி கோசாளர் (மகாவீரர் தவிர்த்த தீர்த்தங்கரர் அனைவரும் அற்றுவிகத்திற்கும் ஏற்றவரே), பூரணகாயவர், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூஉத் தலையார் (எனப்பட்ட அஜிதகேச கம்பலர்), சஞ்சய பேலட்ட புத்தர், (இன்று நாமெல்லோரும் அறிந்த) கோதம புத்தர் (முந்தைய 23 தீர்த்தங்கரர் பற்றிப் புத்தருங் கேள்வி கேட்கமாட்டார்.) ஆகியோர் அனைவரும் நாளாவட்டத்தில் ”ஐயன்= ஆத்தன்/ஆதன்/ ஆசான்/ஆசன்/ ஆஸ்ரியன்” என அறியப்பட்டார்.  (தமிழ் ஐயனும் பாகதப் பகவானும் ஒரே பொருளன) இக்காலத்தில் சில பெருமானரை ஐயரென்கிறோம் இல்லையா? பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உபஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளாவட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய்ச் ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக நீலகேசி மொக்கல வாதம் 413 ஆம் பாட்டில்,
ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்
சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?
வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன
ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்
என்று வரும். 50 ஆண்டுகள் முன் நம்மூரில் ’குப்பன், சுப்பன்’ பழகியது போல் (இப்போது இஷ்/புஷ் என்று பொருள்புரியாது வடமொழிப்பெயர் இடுகிறார்.) சங்ககாலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. இன்றைக்கும் மிச்ச சொச்சங்களாய், திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனவுண்டு.]

நந்தர் காலத்தில், அவர்தவிர்த்த வடபுலத்தரசர் வடமேற்கிருந்து வந்த வேதநெறியால் கவரப்பட்டு ஏராளம் வேள்விகளை பென்னம்பெரிதாய்ச் செய்யத் தொடங்கினார். பல்வேறு விலங்குகள் குறிப்பாய் ஆடு, மாடு, குதிரைகள் ஆகுதிகளாகின. கொஞ்சம் அசந்தால் இவற்றை அரசச்சேவுகர் பிடித்துப்போகும் நிலை ஏற்பட்டது. கால்நடைகள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் தேவையான குமுகாயத்தில் இந்நடவடிக்கை பெரும் இடரை ஏற்படுத்தியது. மக்கள் கொதித்தெழுந்தார். பார்சுவநாதர் கூற்று பொதுமக்களுக்குப் பெரிதானது. கொல்லாமை பெரும் அறமாய் நாடெங்கும் போதிக்கப்பட்டது. ஓரிடந் தங்காது ஊரூராய் பரிவரைந்து அலைந்த பரிவரையர் (>பரிவ்ராஜக) சொல்வது வட இந்தியாவெங்கணும் எடுபட்டது. வேதநெறி தாக்கிற்கு இலக்கானது. வேத நெறியைக் கேள்விமேல் கேள்விகேட்டு கொக்கிபோட்ட எழுவரும் சம்மணங்கூட்டித் தானத்தில் (த்யானத்தில்0 ஆழ்ந்ததால் சமணர் எனப்பட்டார். இவரைப் பின்பற்றியோரும் சமணரானார். பொ.உ.800 க்கு அருகிற்றான் சமணர்>ஸ்ரமண என்பது செயினரை மட்டும் விதப்பாய்க் குறித்தது. (ஒருகாலத்தில் புத்தரையே சமண என்றார்.)

சமணருக்குச் சாத்தரே பெருமாதரவு. நந்தரை எதிர்த்தெழுந்த மோரியருக்கு வேறுவழியில்லை. அவரும் வேதமறுப்பு நெறிகளைச் சாரவேண்டியிருந்தது. வேதநெறியை முற்றிலும் சாடாது, அதேபோது வேதமறுப்பு நெறிகளைப் புரந்து மோரியர் ஆட்சிநடத்தினார். வேதநெறியினர் மோரியரின் கீழிருந்த படைவல்லுநரின் உதவிநாடிக் காத்திருந்தார். சுங்கரும், கனகரும் மகதத்தில் அரசேறிய காலத்தில் வேதநெறி மீண்டும் தழைக்கத் தொடங்கியது. இவ்விரு குலத்தாரும் மோரியருக்கு அப்படியே தலைகீழாய் மாறினர். வேதமறுப்பு நெறிகளை முற்றிலும் சாடாது, அதேபொழுது வேதநெறி புரந்துவந்தார். நந்தர்/மோரியர் காலத்தில் தம் இயக்கவெளி குறைந்த காலத்தில் தமிழகம் நோக்கியும் வேதநெறியார் நடந்துவந்தார்.

சங்க இலக்கியத்தில், உலகாய்தம், சாங்கியம், ஞாயம், விதப்பியம், அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நெறிகளின் கருத்துகளோடு வேதநெறியும் இழையும். இப்பொதுமையை உணராது சங்ககாலக் குமுகாயம் ஒருநெறி மட்டுஞ் சார்ந்ததென்பது குறை அவதானிப்பு. சங்ககாலத்தில் சிவ, விண்ணவ வழிபாடுகள் உண்டு. ஆனால் சிவ, விண்ணவ நெறிகள் கிடையா. சங்கம் மருவிய காலத்திற்றான் அவையெழுந்தன. ஆழ்ந்து நோக்கின் அவை இளைய நெறிகள்; தனிப்பட்டு எழுந்தவையாகவும் தெரியவில்லை. வேத நெறியின் அடிதொட்டு மேற்கட்டுமானமாய்ச் சிவ, விண்ணவ வழிபாடுகளைக் கொண்டு, பின்னாற்றான் தம் மெய்யியல்களை எழுப்பின. நானறிய மாணிக்கவாசகரும் (அவரைநான் 4/5 ஆம் நூற்றாண்டாய்க் கொள்வேன். நானெழுதிய ’மாணிக்கவாசகர் காலம்’ தொடர்கட்டுரை இன்னும் முடிபடாதிருக்கிறது) திருமூலருமே சிவநெறி மெய்யியலுக்கு வழிவகுத்ததில் முதன்மையானவர். மணிமேகலையே (பொ.உ.450) சிவநெறி இருப்பை முதன்முறையாகத் தமிழிற் சொல்லும்.
இனி வாணிகத்தைப் பார்ப்போம். அற்றைமக்கள் ஊடாட்டத்தில், பொருள்பரிமாறும் வாணிகத்தில் பெரிதாய் இருந்தவை 3 பகுதிகளே. ஒன்று மகத நகரங்கள், இன்னொன்று தக்கசீலம், மூன்றாவது நூற்றுவர்கன்னரின் (சதகர்ணிகளின்) படித்தானம்/Paithaan nearer to Modern Aurangabad (மேலும் அது அழைத்துச் செல்லும் தமிழக நகரங்கள்.) இருவேறு வாணிகப்பாதைகள் அன்று இயல்பாய் எழுந்தன. (”சிலம்பின் காலம்” நூலில் விரிவாய்ப் பேசினேன். ஆர்வலர் அதைப் படியுங்கள்.) உத்தரப்பாதை, மகதத்தைத் தக்கசீலத்தோடு கணுத்தும் (connect). தக்கணப்பாதை மகதத்தைக் கோதாவரிக் கரையிலுள்ள படித்தானத்தோடு இணைக்கும். படித்தானத்திலிருந்து இற்றை கர்நாடக ஐஹோலெ (=ஐம்பொழில்) வழி தகடூருக்கு நீட்சி ஏற்பட்டது. மூவேந்தர் நகர்களிலிருந்து தகடூருக்குத் தனித்தனிச் சாலைகள் இருந்தன. மூவேந்தருக்குச் சமமாய் வடக்கே அதியமான் (சத்யபுத்ரன் என்று) சிறப்புப் பெற்றது பூகோளத்தால் மட்டுமே. தெற்கிருந்து சாத்துக்கள் தகடூர், ஐம்பொழில், படித்தானம் போய் மகதம் போகும். தமிழகத்தில் உருவான ஏதொன்றையும் விற்க வேண்டுமெனில் உள்ளூரை விட்டால் மகதமே போகவேண்டும். இல்லையேல் கலமேறி கடல்கடந்த வெளிநாடுகள் போகவேண்டும்.

{{சிலப்பதிகாரத்தில் கோவலன் தந்தை மாசாத்துவான் உள்நாட்டு வாணிகன். சிலம்பு முழுக்க அவன் இயற்பெயர் தெரியாது. அவன் தொழிற்பெயர் பாண்டிநாட்டிலும் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் பாண்டியனவையில் கண்ணகி தன்னை அறிமுகப்படுத்துகையில் “மாசாத்தன் மருமகள்” என்று சொல்லிக்கொள்கிறாள். கோவலன் அவ்வளவாய் அடையாளந்தெரியாத ஆள். கண்ணகி தந்தை பெருங்கடலோடி. (மாநாய்கன்/மாநாவிகன். பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன்.. நாவுதல்=கொழித்தல், கப்பலோட்டல். பல தமிழாசிரியரும் தவறாக அவனைக் கடல்வாணிகன் என்பார். அவ்வளவு பேரெடுக்காது, தன் வாணிகத்தைச் சரியே கவனிக்காது கோட்டைவிட்ட கோவலனே கடல்வாணிகன்.}}

சங்க இலக்கியத்தில் 50 விழுக்காட்டுப் பாட்டுகள் பாலைப் பாட்டுகளே. அதில்வரும் பாலை இன்றும் பெரிது சொல்லப்படும் இராயல சீமையே. ஐம்பொழில், இற்றை பெல்லாரி மாவட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதையொட்டிய இற்றை ஆந்திரக் கர்நூல், கடப்பா மாவட்டங்களும் இதிற்சேரும். இவற்றின் விவரிப்பும் சங்க இலக்கியங்களில் உண்டு. சாத்து வேலை என்பது அவ்வளவு எளிதானதல்ல. முதலில் கடினவேலை என்று பொருள்பட்டுப் பின் பல்வேறு சாத்தரும் தக்கணப்பாதையின் நெளிவுசுளிவு தெரிந்து போய்வந்த காரணத்தால் சாத்தார வேலையானது. (சாத்தம்>சாத்தாரம்>சாத்தாரன்> சாதாரண். இதன் இற்றைப்பொருள் சாதாரணம்= எளிமை என்பதே) இதற்கு இன்னொரு பெயருமுண்டு. சமண>சாமாண>சாமண்ய>சாமான்ய வேலை. வேடிக்கை என்னவென்றால், சமணர் என்ற சொல் பொதுமக்களையே குறித்திருக்கிறது என்பது தான். சாதாரணம், சாமான்யம் என்ற இரு சொற்களும் வடமொழி போல் தோற்றம் கொண்டாலும் அடிப்படை தமிழிற்றான்.      
  
இனி சாத்தாரின் கோயில்களுக்கு வருவோம். இன்றைக்கு நாம்பார்க்கும் பல்வேறு ஐயனார் கோயில்களிற் சில பார்சுவருக்கு எழுந்தவை சில மற்கலிக்கு எழுந்தவை, சில பூரணருக்கு எழுந்தவை சில பக்குடுக்கை நன்கணியாருக்கு எழுந்தவை, சில நிக்கந்த நாதருக்கு எழுந்தவை, சில கோதம புத்தருக்கு எழுந்தவை. (தென்பாண்டி நாட்டில் பல்வேறு சாத்தருக்கும் ஐயனார் கோயில்களும் காளி கோயில்களுமே குலதெய்வக் கோயிலாகும்.) சாத்தன் கோயில்களைச் சாஸ்தா கோயில் என்று சங்கதஞ் சொல்லும். பொ.உ.500-900 களில் எழுந்த பக்தியியக்கத்தில் ஐயனார் கோயில்களிற் பல சிவன் கோயிலாகவும், சில விண்ணவன் கோயிலாகவும் மாறின. (அவற்றை நானிங்கு சொன்னால் பலருக்கும் வியப்பாகும்.) சில இரண்டுங்கெட்டான் ஆயின (ஐயனார் கோயிலில் ஐயனாருக்கு முன் யானை வாகனத்திற்குப் பின்னால் இலிங்கம் வைக்கப்பட்டிருக்கும்.) நடைமுறைகள் திரிந்து, ஐயனாருக்கு தீவங் காட்டித் திருநீறு கொடுப்பார்.

ஆனாலும் இன்னொரு பக்கம் இக்கோயில்களுக்கே சிறப்பாய்ப் பெரியகருப்பர், சின்னக்கருப்பர், பதினெட்டாம்படிக் கருப்பர், தொட்டியக்கருப்பர் எனப் பல்வேறு காவல்தெய்வங்கள் இருக்கும். காவல் தெய்வங்களுக்கெனக் களிமண் புரவி, களிறு பொம்மைகள் வைக்கப்படும். புரவியின்முன் அரிவாள் ஏந்திய கத்தியரும், வேலேந்திய சூலத்தாரும் காட்சி தருவர். ஆண்டுக்கொருமுறை ஊரில் யாரேனும் வேண்டிப் புதிய புரவியெடுப்புகள் நடக்கும். ஆண்டுக்கொருமுறை சிவன் இராத்திரி அன்று படையல் கொடுக்கப்படும். கருப்பருக்கு அலங்காரஞ் செய்வர். கோழி, ஆடு படைப்பர், ஆனால் ஐயனார் திருநிலைக்கு முன் திரைபோட்டு மறைத்துவிடுவார். ஐயனார் முற்றிலும் மரக்கறி அல்லவா? அவருக்குக் கறி ஆகாது.

கொஞ்சம் ஆழப்பார்த்தாலே இற்றை வேதநெறி தழுவிய சிவநெறிக்கும், விண்ணவநெறிக்கும் புறம்பான பல செய்முறைகள் ஐயனார் கோயில்களில் நடைபெறுவது தென்பட்டுவிடும். ஆனாலும் எல்லாம் மேலோட்டச் சிவநெறிப் பூச்சுகொள்ளும். ஓவென்று பெரிதாயெழுந்த சிவநெறிக்கு முன் தம் அடையாளத்தை மூடிமறைத்து வெளித்தோற்றங்காட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளோ என எண்ணவைக்கும். எத்தனை ஊர்களில் மகாவீரருக்கும், பார்சுவருக்கும், நேமிநாதருக்கும், ஆதிநாதருக்கும். புத்தருக்கும் மற்கலிக்கும், பூரணருக்கும், நன்கணியாருக்கும் நெற்றியில் திருநீறு பூசி துணிசுற்றி இன்னும் இரு கைகளை வலிந்து பூச்சில் ஏற்படுத்திக் கலிகாலத்தில் காப்பாற்றினாரோ? தெரியாது. சில வேதமறுப்பு நூல்கள்கூட அங்குமிங்கும் வேதம் போற்றும் சில சொலவங்களை, பாட்டுக்களைத் தூவிக்கொண்டு, தம்மைக் காப்பாற்றிக் கொண்டன. 2600 ஆண்டுகளிற் சிலபோதுகளில் சாத்தார மதங்களால் (வேதமறுப்பு நெறிகளால்) தம்வளர்ச்சி தடைப்பட்டதால், வேதநெறிக்கு இந்நெறிகளின் மீது பெரும் முரண் உண்டு. ”இச்சாத்தான்கள் நம்மைச் சாடுகிறாரே?” என்ற கோவமுமுண்டு. வேதநெறிப்பட்ட சிவநெறியும், விண்ணவநெறியுங்கூட வேதமறுப்பு நெறிகளை எதிரிகளாகவே பார்த்தன. பொ.உ.500-இலிருந்து பொ.உ.1000 வரை தெற்கே நம்மிடை நடந்த பக்தி இயக்கம் சாத்தாரமானதில்லை. இது பற்றிய ஆய்வுங் கூடக் குறைவு. ”இந்துத்துவம்” கூடியுள்ள இந்நாளில் இதைச் செய்யப் பலரும் தயங்குகிறார்.

அடுத்தது சாட்டுதல். சால்>சாள் என்பது இன்னொருவகையில் சார்தலை/சார்த்த்தலைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்டு அடையாளங் காட்டுவது சாட்டுதலாகும். சாட்டுதல் = பிறனிடம் சார்த்துதல், குற்றஞ் சுமத்தல், அடித்தல். ஏதோவொன்று விரும்பியவகையில் நடக்காமற் போவதற்கு ஒருவன் காரணனென்று பேசுவது சாடுதலாகும். to accuse என்று ஆங்கிலத்தில் பொருள்கொள்ளும். சாடுதல் = அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக்கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், ஆசைதல், ஒருகட்சிக்குச் சார்பாய் இருத்தல். சாட்டியம் = வஞ்சகம், பொய். சாத்தான் என்ற சொல்லிற்கு மேலை நாகரிகங்களில் தொடக்கமில்லை. அது யூத வழக்கத்திலிருந்து மேலை நாகரிகத்திற்கு வந்தது. தேவனை ஏற்காதவர் சாத்தர் எனப்பட்டார். சாத்தரின் தலைவன் சாத்தான் எனப்பட்டான். சாத்தான் தேவனைச் சாடுகிறானாம் என்றே மேலையரின் கிறித்தவ, யூதச் சிந்தனை இருந்தது. நம்மூர்ச் சாடலும், மேலையர் சாடலும் ஒன்று போலவே தெரிகிறது. இரு நிலங்களிலும் இருந்த சாத்தான் -சாடல் தொடர்பு காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா? அல்லது இரண்டிற்கும் ஏதோவொரு காலத்தில் தொடர்புண்டா? தெரியாது. வரலாற்றின் எத்தனையோ கதவுகள் திறக்காமலேயே போயுள்ளன. அவற்றில் இதுவொன்றோ?







________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com








Monday, April 2, 2018

சங்ககாலச் சேரர் வரலாறு


——   இராம.கி.



1

  சிலம்பின் "காட்சிக்காதை 163 ஆம் வரியில் வரும் 'ஆரிய மன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு' என்பதன் பொருளென்ன?" என்று ஒரு கேள்வி எழுந்தது: இதற்கானவிடை சற்றுநீளமானது. அதைச் சொல்லுமுன் சங்ககாலச் சேரர்வரலாற்றையும், அதற்குதவியாய் இணையத்திலுள்ள மகத அரசர் காலங்களையும் சற்று ஆழமாய்ப் பார்க்கவேண்டும்.

சிலப்பதிகாரக் காலத்தில் வடக்கே மகத அரசே பேரரசாய் இருந்தது. (என் ”சிலம்பின் காலம்” நூலையும் படியுங்கள்.) மகதத்தோடு பொருதாதவன் அந்தக்காலத்தில் வடக்கே மேலெழ முடியாது. அல்லாவிடில் மகதத்திற்கடங்கிக் கப்பங்கட்டவேண்டும். தெற்கிருந்து படையெடுத்துப் போனவன் (இந்தப் படையெடுப்பை இதுவரை எந்த வடவரும் ஏற்றதில்லை. பாகதச் சான்றுகள்  ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. வெறுமே “தமிழ் வாழ்க” என்று கூப்பாடு போடுவதிற் பயனில்லை. சிலப்பதிகாரத்தைச் சரியாய்ப் பொருத்தித் தேடவேண்டும். இல்லாவிட்டால், 5/6 ஆம் நூற்றாண்டுப் புதினம் என்று சொல்லித் திரியவேண்டும்) மகதத்தைச் சண்டைக்கிழுக்காது தமிழன் போய்வந்தானென்பது ஒரு கட்டுக்கதையாகிவிடும் ”இளங்கோ வடிகட்டிய பொய்சொல்கிறார்” என்று கருதவில்லையெனில், கதைக்காலம் மகதத்தோடு பொருந்த வேண்டும்.




கதையை 5, 6 ஆம் நூற்றாண்டிற்குத் தள்ளுகிறவர் வஞ்சிக்காண்டத்தையே மறுக்கிறார். “எல்லாமே கப்சா, இதுவொரு புதினம்” என்பார் ஒருநாளும் வஞ்சிக்காண்ட முகன்மை புரிந்தவர் இல்லையென்று பொருளாகும். அவர் தமிழரை இழிவுசெய்கிறாரென்பது இன்னொரு ஆழமானபொருள். அப்படிமறுக்கிறவர் ”சேரன் யாரோடு போர்செய்திருப்பான்?” என்பதை ஆதாரத்தோடு சொல்லவேண்டும். இளங்கோவென்ற எழுத்தாளர் கற்பனைக்கதை சொல்லியிருந்தால், மதுரைக்காண்டத்தோடு முடிப்பதே சரியான உச்சக்கட்ட உத்தியாகும். அதற்கப்புறம் காதையில் ஓரிரு காட்சிகளைச் சொல்லி “சுபம்” என முடித்திருக்கலாம். (அப்படியே சிறுவயதில் இரவெலாம் நான் விழித்துபார்த்த 15 நாள் கண்ணகி கூத்துக்கள் நடைபெற்றன. இக்கூத்துகளை 3,4 முறை பார்த்திருக்கிறேன். கோவலன் கதையெனும் நாட்டுப்புறக் கூத்துப்பாட்டும் அப்படித்தானிருக்கும். வஞ்சிக்காண்டமிருக்காது.)

ஒருகதையை எங்கு முடிக்கவேண்டுமென்பதற்கு உளவியல் தொடர்பாய்க் கதையிலக்கணமுண்டு. அக்கதையிலக்கணம் மீறிச் சிலப்பதிகாரமுள்ளது. கண்ணகி பாண்டியனைப் பழிவாங்கியதும் மதுரையை எரித்ததும் சிலம்பின் முடிவல்ல. மதுரைக்காண்டத்தில் முடிவது சிலம்பு அணிகலனின் அதிகரிப்பால் வந்தது. வஞ்சிக்காண்டத்தில் முடிவது சிலம்பெனும் மலையரசின் அதிகாரம். அது வடக்கேபோய் வெற்றிகொண்டு தமிழகத்திற் தன்னைப் பேரரசனாய்க் காட்டிக்கொள்கிறது. அதனாற்றான் சிறைப்பிடித்த ஆரியவரசரை மற்றவேந்தருக்குக் காட்டச்சொல்கிறான். சிலம்பென்ற சொல்லிற்கு காப்பியத்தில் இருபொருளுண்டு. ”இளங்கோ வஞ்சிக்காண்டத்தை ஏன் தன்நூலில் வைத்தான்? அதிலென்ன சொல்லவிழைகிறான்? உட்கருத்தென்ன? ஒரு காட்சி, காதை, காண்டம் நூலில் ஏன் வருகிறது?” என்பதே கட்டுக்கதைக்கும், காப்பியத்திற்குமான வேறுபாடு.

சிலம்பில் வரும் ஆரியவரசர் பெரும்பாலும் மகதத்திலும், மகத்தைச் சுற்றியுமிருந்தவரே. வடக்கென்றவுடன் நம்மையறியாது தில்லியையும், தில்லிக்கு வடமேற்கையுமே எண்ணிக் கொள்கிறோம். அது பிற்காலப்பார்வை. பழங்காலத்தில் வடக்கென்பது வாரணாசி, பாடலிபுத்தம் சுற்றிய பகுதிகளே. சங்ககாலத்திற் கங்கையே வடக்கின் வற்றாத ஊற்று பாடலிபுத்தத்தை தக்கசீலத்தோடு உத்தரப்பாதையும், தென்னாட்டோடு தக்கணப்பாதையும் கலிங்கத்தோடு கடற்கரைப்பாதையும் இணைத்தன. மூன்றாம்பாதை அக்காலத்தில் தமிழகத்தை இணைக்கவில்லை. பெரும்பாலான பயணங்கள், படையெடுப்புக்கள் உத்தர, தக்கணப்பாதைகளின் வழியே நடந்தன. இற்றை அவுரங்காபாதிற்குத் தெற்கே கோதாவரி வடகரைப் படித்தானத்தில்> பயித்தான்> பைத்தான்) தக்கணப்பாதை முடிந்தது. மோரியருக்கான தண்டல் நாயகராய் படித்தானத்திலிருந்து, பின்பு ஆளுநராகவும் மன்னராகவும் நூற்றுவர்கன்னர் (சாதவாகன்னர்) மாறினார். நூற்றுவர்/ சாத்துவருக்கு, நொறுக்குவரென்ற பொருளுண்டு. நூறென்ற எண்ணிக்கைப் பொருள் கிடையாது. சிலம்புக்காலத்தில் நூற்றுவர் கன்னரும், அவருக்கு வடக்கில் இருந்த மகதக் கனக அரசரும் வலியிழந்திருந்தார்.

மொழிபெயர்தேயக் கருநாடக, வேங்கடத்தின் (காடுவிரவிய வேகுங்கடத்தில் மக்கள் வதிவது மிகக்குறைவு) வழி தகடூர் ஊடே மூவேந்தர் நாட்டிற்கு தக்கணப்பாதையின் தொடர்ச்சி இருந்தது. Plus there was a standing Tamil army to protect the language changing country as per Maamuulanaar. மொழிபெயர்தேயத்தைத் ”திராமிரசங்காத்தம் 1300 ஆண்டுகள் காப்பாற்றியதென்றும், தானே சங்காத்தத்தை உடைத்ததாயும்” கலிங்கக் காரவேலன் தன் கல்வெட்டிற்குறிப்பான். மொழிபெயர் தேயத்தை ஒட்டியதால் நூற்றுவர்கன்னர் நாணயத்தின் ஒருபக்கம் தமிழும், இன்னொரு பக்கம் பாகதமும் இருந்தது. நூற்றுவர்கன்னர் தாம் சுருங்கிய காலத்தில் ஆந்திர அமராவதிக்குத் தலைநகரை மாற்றிக்கொண்டார். நூற்றுவர்கன்னர் தொடங்கியது படித்தானம்; முடிந்தது அமராவதி. கன்னருக்குப்பின் படித்தானத்தில் கள அப்ரர்>களப்ரர் அரசேறினார். பின்னாளில் அவரே மூவேந்தரைத் தொலைத்தார். (களப்ரர் என்கிறோமே, அவர் இவர்தாம்.) சங்ககாலத்தில் தொண்டைநாட்டிற்கு மேல் கலிங்கம்வரை கடற்கரை தவிர்த்திருந்தது தொண்டகக் காடு (>தண்டக ஆரண்யம்) எனவாயிற்று. பின் இக்காடழிந்து இற்றை ஆந்திரமானது. காடழித்த காரணத்தால் பல்லவருக்குக் காடவர்/ காடுவெட்டி என்ற பெயர்வந்தது.
      
தகடூரிலிருந்து வயநாடு வழியாகக் குடவஞ்சிக்கும், கொங்குவஞ்சி வழியாக உறையூருக்கும், பொதினி (பழனி) வழியாக மதுரைக்கும் பாதைகளிருந்தன. (இன்றும் பாதைகள் இப்படித்தான்.) குறிப்பிட்ட இக்கூட்டுச்சாலைகள் இருந்ததாலேயே அதியமான்கள் வடக்கே அறியப்பட்டார். காரணமின்றி அசோகன் சத்தியபுத்திரரைச் சொல்லவில்லை. மகதத்திலிருந்து தமிழகம் வர தகடூரின் அதியமானைத் தாண்டி வரமுடியாது. இன்று சிங்கப்பூரை மீறி இந்தியப்பெருங்கடலிலிருந்து பசிபிக்பெருங்கடலுக்குள் எந்தக்கப்பலாவது போகமுடியுமா? அதன் தடந்தகை இருப்பாற் (strategic existence) சிங்கப்பூர்
பெரிதாகப் பேசப்படுகிறது. அப்படியேதான் தகடூரின் இருப்பு தமிழகத்திலிருந்து வடக்கே போவதற்கு இருந்தது.

(சங்கப்பாடல்களில் பாதிக்குமேல் பாலைத்திணைப் பாடல்கள். அவற்றிற் பெரும்பகுதி வணிகத்திற்போன செய்திகள்தான். வணிகரெல்லாம் எங்குதான் போனார்? முடிவில் எல்லாமே மகதத்திற்குத்தான். அதேபோல மகதத்திலிருந்தும் தமிழகம் வந்தார். அவருக்கு வேண்டிய பொன் (வடகொங்கிற்-பிற்காலத் தென்கருநாடகம்-கிடைத்தது. எவன் கொங்கைக்கவர்ந்தானோ அவனே தமிழரிற் பெருவேந்தன்.), மணிகள் (தென்கொங்கிற் கிடைத்தன. கொங்குவஞ்சி இதனாலேயே சிறப்புற்றது.), முத்து (நித்தில்>நிதி என்றசொல் முத்திலெழுந்தது. பாண்டிநாடு முத்திற்குப் பெயர்போனது), பவளம் (சோழநாட்டிற் கிடைத்தது.) இன்ன பிற செல்வங்கள் (குறிப்பாய்ச் செலாவணிச் சரக்குகள்-exchange goods) கிடைக்கவேண்டுமெனில், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வராது முடியாது. எந்த நாடு செலாவணிச் சரக்குகளை அதிகம் கொண்டதோ, அதுவே அக்கால வணிகத்தில் வென்றது. மகதத்தைவிடச் சிறுபரப்பே கொள்ளினும், செலாவணிச் சரக்குகளால் தமிழர் அக்காலத்தில் தனிப்பெரும்நிலை கொண்டார். இவ்வணிகத்திற்குக் கொங்குவஞ்சியும், தகடூரும் முகன்மையாயிருந்தது உண்மைதான். அதையாரும் மறுக்கவில்லை. தொல்லியல் வெளிப்பாடுகள் அதைத்தான் காட்டின. மணிகளுக்கும், மாழைகளுக்கும் கொங்குமண்டலம் பெயர்பெற்றது. அதைவைத்துச் ”சேரர்தலைநகரே இங்குதான் இருந்தது” என்பது சற்று அதிகம். வானத்திற்கும் புவிக்குமாய் கோட்டைகட்ட முயல்வதாகும். கொங்குவஞ்சி என்றுமே குடவஞ்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தது. வேண்டுமென்றே கொங்குவஞ்சியைத் தூக்கிப்பிடிப்பவர் ஆய்வின்றிப் பேசுகிறார்.  (எவ்வளவு தான் பாண்டியர் மதுரையைப் பேசினாலும், கொற்கை தான் பாண்டியரின் தோற்றுவாய். கொற்கையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டார்.)

(ஒவ்வொருவரும் தம் வாழிடங்களைத் தூக்கிப்பிடிப்பதற்காய் ஏரணத்தைத் தூக்கிக் கடாசுவது பொருளற்றது. ”திருச்சியிலிருந்து மதுரைக்கு காரைக்குடி வழியேதான் எல்லோரும் போனார்” என்று நான் சொன்னால் பலருஞ் சிரிப்பார். விராலிமலை வழிதான் குறைத்தொலைவுப் பாதை என்பது உள்ளமை நடைமுறை. மக்கள் மதிப்பார்.) கொங்குவஞ்சி வாணிகத்தில் தகடூரோடு தொடர்புற்றது இயற்கையே. ஆனால் சிலம்பை ஆழப்படித்தால் குடவஞ்சியின் சிறப்புப் புரியும். (கொஞ்சம் பொறுக்கவேண்டும். இப்பொழுதுதானே 4,5 ஆண்டுகள் முன்னே தொல்லியலார் முசிறிப்பட்டணத்தைக் கண்டுபிடித்தார். அங்கிருந்து சிறுதொலைவிற் குடவஞ்சி கிடைத்துவிடும்.)

இனி மகதத்தின் பல்வேறு அரசர் காலங்களுக்கு வருவோம்.

அலெக்சாண்டர் இந்தியாவின்மேற் படையெடுத்தது பொ.உ.மு.327/326 என்பர். (இது ஒரு வரலாற்று முற்றைப் புள்ளி. இதைவைத்தே இந்தியவரலாற்றைக் கணிக்கிறார்.)

சந்திரகுத்த மோரியன் காலம் பொ.உ.மு.321 - 297 (இவனுக்கு முந்தைய நந்தர் காலத்தைக் குறிக்கும் சங்கப்பாடல்களும் உண்டு. குறிப்பாய் மாமூலனார் பாடல்கள். சங்க இலக்கியத்தை ஒழுங்காகப் பொருத்தாத காரணத்தால் சங்ககாலத் தமிழர் வரலாற்றை, இன்றுங்கூடத் தப்பும் தவறுமாய்ப் புரிந்துகொள்கிறோம். கமில் சுவலபில் கணிப்பிலிருந்து வெளியே வந்தாலொழிய இது புரியாது.)

பிந்துசார மோரியன் காலம் பொ.உ.மு. 297 - 273 (இவன்தான் தென்னகத்தின் மேல் படையெடுத்தவன். இவன் படையெடுப்பைப் பற்றிச் சுற்றிவளைத்துச் சங்கப்பாடல்கள் உண்டு. தமிழ் மூவேந்தரைத் தோற்கடிக்க முடியாமல் இவன் படைகள் திரும்பிப் போயின.)

தேவானாம்பியதசி அசோகன் காலம் பொ.உ.மு. 268 - 232 (இவன் ஆட்சிக்கு வருவதற்கு முன் 4 ஆண்டுகள் ஒரே குழப்பம் மகதநாடு வேந்தனில்லாது இருந்தது. கணக்கின்றித் தன் சோதரரைக் கொன்றே அசோகன் பட்டத்திற்குவந்தான். இந்தியவரலாற்றில் முகன்மையான மன்னன். தமிழ்மூவேந்தரின் இருப்பையும் அதியமான்களின் இருப்பையும் தன் கல்வெட்டுக்களிற் பதிவுசெய்தவன். இவன் செய்த கோத்தொழில் தமிழ்மூவேந்தரால் பாராட்டப்பட்டது போலும். ஏனெனில் தேவானாம்பிய தசி என்ற பட்டம் அப்படியே தமிழாக்கப் பட்டுச் சேரருக்கு முன்னொட்டாக்கப் பட்டதென்பார். மயிலை சீனி வேங்கடசாமியார். இமையவர அன்பனென்பது திரிந்து இமையவரம்பனாகிப் பின் ”இமையத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது. அதேபோல; வானவரன்பனும் வானவரம்பனாகி ”வானத்தை வரம்பாய்க் கொண்டவன்” என்று தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டது.. இமையவரம்பனும், வானவரம்பனும் மாறிமாறிச் சேரருக்கு முன்னொட்டாயின. தேவானாம்பிய என்ற பாகதமுன்னொட்டை இலங்கையரசன் தீசனும் அப்படியே வைத்துக்கொண்டான். சேரரோ அதைத் தமிழ்ப்படுத்திச் சூடிக்கொண்டார். There must have been a mutual admiration society. வேத, சிவ, விண்ணவ நெறிகளும், வேதமறுப்புச் சமயங்களும், பல்வேறு மெய்யியல்களும் விரவிக் குடவஞ்சியில் சமயப்பொறை இருந்தது சிலம்பாலும் மேகலையாலும் தெரிகிறது. வேதமறுப்புச் சமயங்களை ஆய்ந்தாலொழிய தமிழர்வரலாறு புரிபடாது.)
    
தசரதன் காலம் பொ.உ.மு. 231 -224 (இவன் அசோகனின் முதல் மகனல்லன். அடுத்த மகன். அசோகனின் இரண்டாவது அரசி முதல் மகனைச் சதிதீட்டிக் கொன்றுவிடுவாள். எப்படி இராசேந்திர சோழனுக்கு அப்புறம் ஒவ்வொருமகனும் ஏதோ வகையில் கொல்லப்பட்டு சோழர் குடிவழியழிந்து தெலுங்குச் சோழராட்சி ஏற்பட்டதோ, அதே போல ஆழமான சூழ்ச்சி அசோகனின் மகன்களுக்கும் நடந்திருக்கிறது. இவ்வளவு புத்தம், செயினம், அற்றுவிகங்களுக்கு நடுவே இந்தவிதக் கொலைகளும் அசோகனுக்குப் பின் நடந்தன. வரலாறு மருமமானது.)

சம்பாதி காலம் பொ.உ.மு. 224 - 216 (இவனும் அசோகனின் மகன். தசரதன் இருக்கும்போதே இவன் ஒருபக்கம் ஆளுநனாய் இருந்து பின்னால் அரசப்பொறுப்பை ஏற்றுக்கொள்வான்.)

சலிசுகா காலம் பொ.உ.மு. 215 - 202 (இவன் சம்பாதியின் மகன்)
தேவ வர்மன் காலம் பொ.உ.மு.202-195
சடாதன்வன் காலம் பொ.உ.மு.195-187

பெருகதத்தன் காலம் பொ.உ.மு.187-185 (இவனைத்தான் சேனையதிபதி சுங்கமித்திரன் கொலைசெய்து தன்குடியை மகத அரசிலேற்றினான். இந்தப் பிரகதத்தனுக்குத் தான் பெரும்பாலும் கபிலர் குறிஞ்சிப்பாட்டைச் சொல்லியிருக்கலாமென ஊகிக்கிறோம். கபிலர் போன்றவர் ஒரு குறுநில மன்னனுக்காகக் குறிஞ்சிப்பாட்டை பாடினாரென்பது ஐயமாக உள்ளது. சேர, சோழ, பாண்டியருக்கு இணையான வேந்தர் அக்காலத்திற் சிலரே இருந்தார். மகதமே எல்லாவற்றிற்கும் தலைமையானது. அந்தப் பெருகதத்தனுக்குக் குறிஞ்சிப்பாட்டு சொல்லுவது கபிலருக்கு நன்மை பயக்குமல்லவா?)


இனிச் சுங்கருக்கு வருவோம்.



2


புஷ்யமித்ர சுங்கன் காலம் பொ.உ.மு. 185-149 (பெருகதத்த மோரியன் ஒரு படையணி வகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சூழ்ச்சியால் அவனைக் கொன்று, அவனிடம் சேனைத்தலைவனாயிருந்த புஷ்ய மித்திரன் ஆட்சிக்கு வந்தான். அவந்தியின் பெருமானர் குலத்தைச் சேர்ந்த இவன் தான் இந்தியாவில் வேதமறுப்புச் சமயங்களின் ஆளுமையைத் தடுத்து நிறுத்தி, வேதநெறிக்கு முன்னுரிமை கொடுத்து, மீண்டும் தழைக்க வைத்தவன். இவனையும், இவன் மகனையும் வேதநெறியார் சிறப்பாகவே கருதியிருக்கவேண்டும். ஏனெனில் குப்தர் காலத்திய அரசவை இவரைப் போற்றியிருக்கிறது. புஷ்ய மித்ரன் காலத்தில் புத்தமதம் ”மத்தியதேசத்தில்” இல்லாது போய், வடமேற்கே இற்றை ஆப்கனித்தானுக்குத் துரத்தப்பட்டதென ஆய்வாளர் சொல்கிறார். ஆனால் அதேபொழுது வேதமறுப்புச் சமயங்களுக்கான ஆதரவை இவன் முற்றிலும் நிறுத்திவிடவில்லை. இந்த அரசனின் ஆளுமை நருமதையாறு வரைக்கும் இருந்தது.)

அக்னி மித்ரன் காலம் பொ.உ.மு. 149-141 (இவன் புஷ்ய மித்ரனின் மகன். வேதநெறியைத் தூக்கிப்பிடித்த பிற்காலக் குப்தர்களின் அவைசேர்ந்த காளிதாசர் எழுதிய ”மாளவிகாக்னிமித்ரம்” நாடகத்தின் நாயகன் இவனே. புஷ்ய மித்ரனின் நடவடிக்கைகளுக்கு இவனும் பொறுப்பானவன். வேதநெறிக்கு மறுமலர்ச்சி கொடுத்தவனென்பதால் இவன் காளிதாசனின் நாயகன் ஆனானோ, என்னவோ? )

வசுஜ்யேஷ்டன் காலம் பொ.உ.மு. 141-131
வசுமித்ரன் காலம் பொ.உ.மு. 131-124
பத்ரகன் காலம் பொ.உ.மு. 124-122
புலிந்தகன் காலம் பொ.உ.மு. 122-119

வஜ்ரமித்ர பாகபத்ரன் (இவன்காலத்தில் மகதம் ஆட்டங்கொள்ளத் தொடங்கியது. பாடலிபுத்தத்திற்கு மாறாய் விதிசாவுக்கு (Beznagar. இற்றை ம.பி. மாநிலத்தில் உள்ளது. இங்கே அசோக மோரியன் முதற்கொண்டு மகத இளவரசர் ஆட்சி புரிவார்.) தலைநகர் மாற்றப்பட்டது. மகதம் கொஞ்சங் கொஞ்சமாய்ச் சுருங்கியது. மகதப்பகுதிகளைக் கவர்ந்துகொள்ள கலிங்கர், நூற்றுவர்கன்னர், இந்தோ-சித்திய “சக” அரசரென்று பலரோடு சண்டைகள் தொடங்கிவிட்டன. இக்காலத்தில் பாணினியின் ”அட்ட அத்தியாயி” இலக்கணத்திற்கு பதஞ்சலி மாபாடிய (மகாபாஷ்ய) விரிவுரை எழுதினார். பிங்களர் செய்த சங்கத யாப்பிலக்கணமான சந்த சாற்றம் (சந்த சூத்ரம்) சுங்கர் கால முடிவில் பொ.உ.மு. முதல் நூற்றாண்டில் எழுந்திருக்கலாம். பாகபத்ரன் ஆட்சிமுடிவில் நூற்றுவர்கன்னர் மகதத்தைத் தாமே பிடித்துக் கொள்ள முயலத்தொடங்கிவிட்டார். மகதம் வலியிழந்தது இந்தியாவெங்கணும் அன்று தெரிந்திருக்கும். இந்நேரத்தில் சேரனும் வடக்கே படையெடுத்துப் போகத் துறுதுறுத்தது இயற்கையே. இக்காலத்தில் தான் தன் தந்தையின் சார்பாக முதல்முறை வடக்கே சேரன் வந்துள்ளான். அவன் தாய் கங்கையில் முழுக்காட வந்ததாய்ச் சிலம்பின் காட்சிக்காதை 160-161 வரிகள் தெரிவிக்கும். சிலம்பில் 2 படையெடுப்புகளும் குறித்துக் காட்டப்படுகின்றன.

கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை யாட்டிய அந்நாள்”

இங்கே கோமகள் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகள் நற்சோணையை. அவள் கங்கையிலாடியது பெரும்பாலும் வாரணாசியாய் இருக்கும். இன்றும் தெற்கிலிருந்து அலகாபாத், கயை, வாரணாசி போயாடுவதில் தமிழர் பலரும் அளவற்ற ஆர்வங் கொள்கிறோமே? அது அன்றும் நடந்திருக்கலாம். சேரன் சிவநெறியாளன். விண்ணவப் பெருஞ்சோற்றை (ப்ரசாதம் என்று சங்கதப்படுத்துவர். அதையே சொல்லி நம் தமிழ்ப்பெயரை மறந்துவிட்டோம்.) தலையில் வாங்க மறுத்தவன். தோளிலேற்க ஒருப்பட்டவன். மகதக் குழப்பத்திற் தான்புகுந்து விளையாட முடியும் என்று சேரனுக்குத் தெரிந்த காரணத்தால் கண்ணகி கதையை தன் அரச முயற்சிக்குப் பயன்படுத்தினான். (வடக்கிலிருந்து intelligence information வந்ததும் வஞ்சிக்காண்டத்திற் சொல்லப்படும்.) There must have been an empire building politics with these expeditions. We should not be very naive to these aspects. Cheran was as intelligent as our modern leaders are.

தேவபூதி காலம் பொ.உ.மு. 83-73 (இவனே கடைசிச் சுங்க அரசன். அளவுக்கு மீறிய காமத்திலும், கேளிக்கையிலும் ஈடுபட்ட இந்த அரசனை இவனுடைய முதலமைச்சனான வாசுதேவக் கனகனே பின்னாற் கொன்றுவிடுவான். அதற்கப்புறம் கனகரே ஆட்சிசெய்வார். தேவபூதிக்குத் தனுத்ர பூதி என்ற பெயரும் இருந்திருக்கலாம். பாகதச் சான்றுகளைக் கொண்டு அதை உறுதி செய்யவேண்டும். ”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்ரன் சிவேதன்” என ஆரியவரசர் பெயர்களைச் சிலப்பதிகாரஞ் சொல்லும். ”இவற்றில் எவை இனக்குழுப்பெயர், எவை இயற்பெயர்?” என்று சொல்லமுடியவில்லை. ஆனால் ”சிங்கன் தனுத்ரன்” என்பது ”சுங்கன் தனுத்ரனாய் இருக்குமோ?” என்ற ஐயம் கட்டாயமாய் எழுகிறது.

செங்குட்டுவன் பொ.உ.மு.80 இல் படையெடுத்து வரும்போது பெரும்பாலும் இவ்வரசனுடன் போர்புரிந்திருக்கலாம். மகதம் தமிழர்க்குப் பகைநாடு என்பதை இந்திரவிழவு ஊரெடுத்த காதையில் “மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்” என்ற வரிகள் தெளிவாக வெளிப்படுத்தும். அதற்கப்புறமே ”யாரைநோக்கிச் செங்குட்டுவன் படை எடுத்திருப்பான்?” என்பது எனக்கு விளங்கியது. மகதம் பற்றிப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கட்டமாய்ச் செருகி உராய்ந்துபார்க்க உள்ளிருக்கும் படம் விளங்கிற்று. செங்குட்டுவனின் படைபலம் தெரிந்து அவனைத் தம் கைக்குள் வைத்து அவன்மூலம் மகத அரசிற்கு ஊறுவிளைவித்துப் பின் தாம் கைப்பற்றிக்கொள்ள முற்பட்டே நூற்றுவர்கன்னர் செங்குட்டுவனுக்கு உதவியிருக்கிறார். ”இமயத்திலிருந்து பத்தினிக்குக் கல்லெடுக்க நீங்கள் போகவேண்டுமா? நாங்கள் செய்யமாட்டோமோ?” என்பதெல்லாம் சரியான அரசதந்திரம் (tactics). தடந்தகை (strategy). தவிர நூற்றுவர்கன்னருக்கும் சேரருக்கும் நெடுநாள் உறவு இருந்திருக்கலாம். புறம் 2 இல் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடியது, ”ஈரைப்பதின்மரும் பொருதுகளத்தொழிய” என்பது பாரதப் போர்க்களத்தைக் குறிக்காது நூற்றுவர் கன்னர் போர்க்களத்தைக் குறித்திருக்கலாமோ? - என்ற ஐயப்பாடும் எனக்கு உண்டு.

தவிர, செங்குட்டுவன் படையெடுப்பின்போது பெயருக்கு தேவபூதி மகத அரசனாயிருந்து கட்டுப்பாடெலாம் முதலமைச்சனிடமே இருந்திருக்கலாம். சேரன் போரிறுதியில் பிடித்துப்போனது வசுதேவக் கனகனா, அன்றி அவன் தந்தையா என்பது தெரியவில்லை. ஆரியஅரசர் என்போர் மகதங் காக்க இவனுக்குப் பின்னிருந்தோராவர். அவர் ஆயிரம்பேர் என்பது ஒருவிதப் பேச்சுவழக்கு. (“இவனுக்குப் பின்னால் ஆயிரம்பேர் நின்றார் தெரியுமா?” என்று இன்றும் உரையாடலிற் சொல்கிறோமில்லையா? அதைப்போல் இதைக் கொள்ளவேண்டும். உறுதியான எண்ணிக்கையென்று கொள்ளக்கூடாது.)

(கனக அரச குடியினர், இவரைக் கனவர் என்றுஞ் சொல்லலாம். பொதுவாக வடவரின் பெயர் அப்படியேவா நமக்கு மட்டுப்படுகிறது? கன்வன் என்று பிராமியில் எழுதுவது கனவன் என்றே தமிழியிற் படிக்கப்படும். வகரமும் ககரமும் தமிழிற் போலிகள் நாவற்பழம் நாகற்பழம் ஆகிறதே? எனவே கனவன் கனகனாவது இயற்கையே.)

வசுதேவன் காலம் பொ.உ.மு.75-66 (விசயன், வசுதேவனென்று பெயர்வைப்பது மகாபாரதத் தாக்கத்தால் இயல்பாயிருந்தது. கனக அரசர் விண்ணவப் பெயரையே கொண்டிருந்தார். சிங்கள அரசன் விசயனின் மகன் வசுதேவன் என்பதையும் இங்கு எண்ணிப்பார்க்கவேண்டும். சிலம்பில் கனகன் விசயன் என்பது பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் என்பதுபோல், இனக்குழுப்பெயர் முதலிலும், இயற்பெயர் முடிவிலும் வந்திருப்பதாய்க் கொள்ளவேண்டும். பல தமிழாசிரியர் இது புரியாது கனகன், விசயன் என்று இரண்டு பெயராகவே சொல்லித் தருவர். இதுவென்ன குப்பன், சுப்பன் போலவா? சேரன் ஒருவன், செங்குட்டுவன் இன்னொருவனா? சிறைப்பிடித்துவந்த ஆரிய அரசர் எல்லோரையும் கண்ணகி கோயில் குடமுழுக்கின் போது சேரன் விட்டுவிடுவான். எனவே அதற்கப்புறம் வசுதேவக் கனகனோ, அன்றி அவன் தந்தையோ வடக்கே விதிசா/பாடலிபுத்தம் போய் தேவபூதியைக் கொன்று கனக அரசை நிறுவ முயற்சி செய்திருக்கலாம்.

பாகதச் சான்றில்லாமல் சிலம்பாற் கொண்ட கருதுகோள்களை நிறுவிக்க இயலாது. சுங்க, கனக அரசரின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னுங் கிடைக்கவில்லை. பாகத நூல்கள் குறைந்தே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. சங்கத நூல்களே எங்குப் பார்த்தாலும் இழைகின்றன. மோரியர் வரலாறு எழுதினால், அதற்கப்புறம் குப்தர் வரலாற்றிற்கு, பொதுவான வரலாற்றாசிரியர் ஓடி விடுகிறார். இடையில் பெருத்த இடைவெளி யாருக்கும் தோன்றவில்லை. சங்ககால வரலாறு எழுதவேண்டுமானால் இந்த இடைவெளி பாகத வாயிலாய் நிரப்பப்படவேண்டும். அன்றேல் வேறு ஏதாவது சான்றுகள் கிடைக்கவேண்டும்.

பூமிமித்ரன் காலம் பொ.உ.மு.66-52
நாராயணன் காலம் பொ.உ.மு.52-40

சுசர்மன் காலம் பொ.உ.மு.40-30 [பஞ்சதந்திரம் எழுந்த காலம் இவன் காலமே. “சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்” என்ற கட்டுரைத்தொடரை என் வலைப்பதிவிற் படியுங்கள். பஞ்சதந்திரத்தை வைத்தும் சிலம்பின் காலத்தைக் கீழிழுத்தால் தமிழர் வரலாறு “காலி” என்றெண்ணி திரு நாகசாமியும் அவர் சீடர்களும்  முயல்கிறார் போலும். ”சிலம்பு 6 ஆம் நூற்றாண்டு நூல்” என்ற தன் கருத்தை வலியுறுத்தி, அவர்சொன்னார், இவர்சொன்னாரென வழக்கம்போல் இலக்கியக் காணிப்பை மட்டுமே தொகுத்துத் தற்குறிப்பேற்றஞ் செய்யாது ஏரண வரிதியோடு (with logical flow) ”இவ்விவற்றால் இப்படி, இதுபோல் அமைகிறதென்று” தானே அலசிச் சான்றுகள் கொடுத்து ஒரு கட்டுரையாக அது அமைய வேண்டும்.

இனி சேரர் குடிக்கும் காட்சிக்காதை 156-164 வரிகளுக்கும் வருவோம்.



3

முதலில் சேரர் குடியின் ஆதன் கிளையைப் பார்ப்போம் (செங்குட்டுவனைப் பின்னர் விரிவாய்ப் பார்ப்போம்).

சங்ககாலச் சேரரில் சுள்ளியம் பேரியாற்றங்கரையில் குட வஞ்சியில் (கொடுங்களூர்) ஆதன் குடியும், அமராவதி (ஆன்பொருநை) ஆற்றங்கரையில் கொங்கு வஞ்சியில் (கரூர்) இரும்பொறைக் குடியும் ஆட்சி புரிந்தார். குட வஞ்சி, கொங்கு வஞ்சியினுங் காலத்தால் முந்தையது. இக்கிளைகள் எப்பொழுது பிரிந்தன? தெரியாது. அதே பொழுது இப்பிரிவுகள் தமக்குள் இறுக்கங் கொண்டனவென்றுஞ் சொல்லமுடியாது. (இரும்பொறைப் பிரிவின் செல்வக் கடுங்கோவிற்கு வாழியாதன் என்ற பெயர்முடிவும் உண்டு.) நமக்குக் கிடைத்த பாடல்களின் படி ஆதன்களில் மூத்தவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன். (மாவலியாதன்/ மகாபலி, பெருகலாதன்/ ப்ரஹ்லாதன் என்ற தொன்மக் கதையாரும் இவர் குடியினரே என்றுசிலர் சொல்வர்.) 2 கிளையினரின் ஆட்சிக் காலங்கள் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் அறியப்படும். ஒரு சேரன் காலத்தை ஏரணத்தோடு நிறுவினால், மற்றவர் நிலைப்புகளைப் பதிகச்செய்தியால் ஓரளவு சீர்ப்படுத்தலாம். 

பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு நடந்ததென்று கொண்டு மற்ற சேரரின் காலத்தைச் சிலம்புக் கால ஆய்வின் மூலம் குறித்தேன்.

மணிகள், மாழைகள் (metals), மண்ணூறல்கள் (minerals) கிடைத்த கொங்குநாடு மூவேந்தரும் தொடர்ந்து பந்தாடிய மேட்டு நிலமாகும். கொங்கு நாட்டை வேளிராண்டு, மூவேந்தருக்கும் பொதுவாக இருந்த வரை ”த்ராமிரசங்காத்தம்” நீண்டகாலந் தொடர்ந்தது. என்றைக்குக் கொங்கு வேளிரிற் பெண்ணெடுத்து, மணவுறவு கொண்டாடிச் சேரர் தம்பக்கம் வளைத்தாரோ, அதன்பின் தமிழருள் உட்பகை பெரிதாகிப் போய் தமிழர் முன்னணி குலைந்தது. கலிங்கத்துக் காரவேலன் அந்நேரத்தில் ”பித்துண்டா” எனுங் கொங்குக் கருவூரைக் கைப்பற்றினான். அந்துவஞ்சேரல் இரும்பொறை காலத்தில் இது நடந்திருக்கலாம். கொங்குக்கருவூரை மீண்டும் சேரர் பிடித்திருக்கிறார். காரவேலனின் பாகதக் கல்வெட்டும், மாமூலனாரின் அகநானூறு 31 உம் ஆழ்ந்து பொருத்திப் பார்க்கவேண்டிய செய்திகளாகும். சங்கப்பாடல்களின் ஆய்வு ஆழப்படுகையில், சமகால ஆளுமைகளைப் பொருத்தி, உள்ளார்ந்த ஒத்திசைவை (internal consistensy) நாடுவதால் நான் செய்த காலமதிப்பீடு கடந்த 7,8 ஆண்டுகளாய்ச் சிறிது சிறிதாய் மாறிக் கொண்டேயுள்ளது. பதிற்றுப்பத்திலில்லாத சேரர் காலத்தை இன்னும் நான் பொருத்தவில்லை. கீழ்வரும் காலப் பிரிவுகளை ஒருவித முன்னீடுகளென்றே சொல்லலாம். எதிர்காலத்திற் சான்றுகள் வலுப்படும்போது மேலும் திருத்தங்கள் நடக்கலாம் (It has still not reached a definitive stage). 

வானவரம்பன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190 - 143 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்திலேயே அசோக மோரியனின் தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே சுங்கர்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர்கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர்கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பாற் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத்தொடரையும் படியுங்கள்.

இப்பாட்டில் வரும் ஈரைம்பதின்மர், நூற்றுவர்கன்னர் தான். பலருஞ் சொல்வதுபோல் பாரதப்போரின் கௌரவரல்ல. புறம் 2 இல் வருஞ்செய்தியை கௌரவ - பாண்டவப் போராய்ச் சித்தரிப்பதை நான் ஒப்புபவனில்லை. அப்படிச்சொல்வது தேவையற்ற ”பௌராணிகப்” பார்வை. காலப் பொருத்தமின்றிக் கௌரவருக்குச் சேரர் பெருஞ்சோற்று மிகுபதங் கொடுத்தாரென்பது விழுமியங்கள் வழியாகவும் பொருந்தவில்லை. ”தம்நண்பருக்கானது தமக்கானது” போல் கன்னரின் தும்பைப்போர்த் தோல்விகளைச் சேரர்நினைத்து, போரிலிறந்தவருக்காகச் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்திருக்கலாம். கன்னரின் முன்னோருக்குப் படையலெடுத்து, ”சேரரும் அவரும் ஒரே குலம் போலத்தான்” என ஊருக்கேயுணர்த்திச் சேரன் நட்பும் சொந்தமுங் கொண்டாடுகிறான். “சேரனே! கன்னருக்காக நீ பரிந்து முன்வந்து பெருஞ்சோற்று மிகுபதம் கொடுத்தாயே? அவன் குலமும், உன்குலமும் ஒன்றெனப் பறைந்தாயே? உன் சிறப்பை என்னவென்று சொல்வோம்?” என்று முரஞ்சியூர் முடிநாகர் வியக்கிறார்.

உதியன்சேரலாதன் பொதினி ஆவியர்குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப்பழனியே பழம்பொதினி. அதனடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர்குடியோடு சேரர்குடியினர் கொடிவழிதோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றுஞ்சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொண்டு கொங்குவஞ்சியில் இவன் ஆண்டான் என்பது நம்பக்கூடியதாய் இல்லை.) இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 166 - 109. இவனுக்கு 2 மனைவியர். தன்தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன்.) மூத்த மகள் பதுமன்தேவியை முதல் மனைவியாகப் பெற்றான். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென 2 மக்கள் பிறந்தார். அடுத்தவள் ஞாயிற்றுச்சோழன் மகள் நற்சோணை. (=சோணாட்டுக்காரி; பொன்போன்றவள். சோணையெனும் பொன்னாறு மகதத்திலும், பொன்னி சோழநாட்டிலும் ஓடின. பொன்னிறத்திற்கும் சோழருக்குமான இனக்குழுத்தொடர்பை நாம் இன்னும் உணர்ந்தோமில்லை. அகம் 6-இன் 3,4 ஆம் அடிகளைப் பார்த்தால் ஐயை என்பது விதுப்பெயராயும், நற்சோணை பொதுப்பெயராயும் ஆகலாம்.) இவளுக்குப் பிறந்த செங்குட்டுவன் முந்தை இருவருக்கும் இடைப்பட்ட புதல்வன். இளங்கோவின் இருப்பு சிலம்பின் வரந்தருகாதை 171-183 வரிகளிலன்றி வேறெங்கும் தென்படவில்லை. அக்காதை இடைச்செருகலென நான் ஐயுறுவதால் இளங்கோ செங்குட்டுவனின் தம்பியென நம்பமுடியவில்லை. (நான் அப்படிக் கொள்ளவில்லை.) 

”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”

என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம் பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். மணக்கிள்ளி யார்? மருவல்= தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage - போயிருக்கிறது.) மருமகன்/மகள் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒருகுடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன்படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூ,நெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங்கொண்ட மகனும் மகளுமாவர். மணமகன்/மணமகள் வீடு, மணவீடு/மருவீடு ஆகும். (சிவகங்கைப் பக்கம் மருவீடு என்ற சொல் உண்டு.) மணக்கிள்ளியின் பொருள் ”சம்பந்தங் கொண்ட கிள்ளி” என்பது தான். மணக்கிள்ளியெனும் உறவுப்பெயரைப் பதிகம் பாடியோர் காரணம் புரியாது இயற்பெயராக்கி விட்டார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலே யுள்ள அடியைப் புரிந்துகொள்ளவேண்டும். 

சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், ஐயை/நற்சோணையின் தந்தை, உறையூர்ச் சோழன் தித்தனாவான். யா, இருளைக்குறிக்கும் இற்றல்=போக்குதல்; யாயிற்றன் = இருளை இற்றுகிறவன்/போக்குகிறவன். யா>ஞா>நா திரிவில் யாயிற்றன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்>ஆயிற்றன்>ஆதிற்றன்> ஆதித்தன்> ஆதித்த என்பது வடபுலமொழிகளில் சூரியனைக்குறித்தது. தமிழில் ஆதித்தனின் முதற்குறை தித்தன் ஆகும். முதற்குறைப் பெயர்கள் சங்ககாலத் தமிழிற் பரவலாயுண்டு. தித்தனே பட்டமேறும் போது முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளியெனும் பெயர் பெறுவான். புறம் 13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக் கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்தவஞ்சேரல் இரும்பொறைக்கு அடையாளங் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனென்று சிலம்பு புகலும். சமகால அரசரைப் பார்த்தாற் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி எனும் தித்தனே, செங்குட்டுவனின் தாத்தனான ஞாயிற்றுச் சோழனாவான். 

அதேபொழுது தித்தனின் மகன் பட்டஞ் சூடுமுன் வெளியன் எனப்படுவான் ஏதோகாரணத்தால் தித்தனுக்கும் வெளியனுக்கும் மனம்வேறாகி உறையூரை விட்டு விலகித் தந்தையின் வளநாட்டுத்துறையான கோடிக்கரையில் வீரவிளையாட்டு, இசை, நடனக் கூத்துகளென வெளியன் சிலகாலங்கழிப்பான். தித்தனுக்குப்பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில்/வழிகளில் வேல்வீசுந் திறன் கொண்ட கிள்ளி) என்றபெயரில், வெளியன் உறையூராண்டான். நெடுஞ்சேரலாதன் மைத்துனனும் செங்குட்டுவனின் தாய்மாமனும் தித்தன்வெளியனெனும் வேற்பல்தடக்கை பெருவிரற்கிள்ளியே ஆவான். சேரலாதனும் வெளியனும் ஒருவருக்கொருவர் முரணிச் சண்டையிட்டு போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடினார் (புறம் 62, 368). புறம் 62 இல் சொல்லப்படும் போர் மச்சான்-மைத்துனன் இடையெற்பட்டதாகும். பெருவிறற்கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறிப் பங்காளிச் சண்டைகூடி செங்குட்டுவனே அதைத்தீர்த்து 9 அரசருடன் போரிட்டு மாமன்மகனைப் (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகலாம்) பட்டமேற்றுவான். வஞ்சிக் காண்ட வழி இவ்வளவு பொருத்தங்களை உணர்ந்தபிறகாவது, சிலம்பைச் சங்கம்மருவிய காலமென்றும், 6 ஆம் நூற்றாண்டென்றுங் குழம்பாது ஒழியலாம்.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 156 - 132. இவன் நெடுஞ்சேரலாதனின் தம்பி. வேந்தனாகாததால், வானவரம்பனெனும் பட்டமுங்கொள்ளாதவன். நெடுஞ்சேரலாதனே நெடுங்காலம் ஆண்டான். அண்ணன் தம்பிக்கிடையே மிகுந்த அகவை வேறுபாட்டிற்குக் காரணமில்லை. 25 ஆண்டுக் காலம் தம்பி இருந்ததால் அண்ணன் ஆட்சி நடந்தபோதே தம்பி இறந்திருக்கலாம். பதிற்றுப்பத்தைத்தவிர வேறெங்கினும் இவன்செய்திகள் குறைவு. பல்யானைச் செல்கெழுகுட்டுவனுக்கு அப்புறம் இளையரே ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருக்கலாம். (பொதுவாக வேந்தப்பொறுப்புக் கொண்டவரே நீண்டகாலம் ஆட்சிசெய்தார். அம்முறையில் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே இயல்பான முறையில் வேந்தனாகிறார். பல்யானைச் செல்கெழு குட்டுவனும், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் நீட்சிமுறையில் ஒன்றாகி, நார்முடிச்சேரல் மீக்குறைந்த காலம் வேந்தனாகியிருக்கிறான்.  

அடுத்தது களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன்காலம் பொ.உ.மு. 131-107. இவன் இயற்பெயர் தெரியவில்லை. “களங்காய்க்கண்ணி நார்முடி” ஒருவகை முடியைக் குறிக்கும். நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இறந்தபின்னால், மூத்தாள்மகனுக்கும், இளையாள் மகனுக்கும் சமகாலத்தில் நெடுஞ்சேரலாதன் இளவரசுப்பட்டஞ் சூட்டியிருக்கவேண்டும். இந்த நாட்பட்ட பட்டஞ் சூடலால், நெடுஞ்சேரலாதனுக்கு அப்புறம் நார்முடிச்சேரல் வானவரம்பனென்ற பட்டஞ் சூடி அரசுகட்டிலேறியிருக்கலாம். இவனுக்கு இன்னொருபெயரும் இருந்திருக்கலாமென்று ஊகிக்கிறோம்.   

புறம் 62 ஆம் பாட்டில் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் வளநாட்டு வேற்பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளியும், பொருதுகையில் இருவரும் இறந்து பட்டதாய்க் கழாத்தலையார் சொல்வார். அதேபொழுது புறம் 65 ஆம் பாட்டில் நாகநாட்டுக் கரிகால்வளவன் [பெரும்பாலும் இரண்டாம் கரிகாலன். முதற்கரிகாலன் கி.மு.462 இல் மகதத்தின்மேற் படையெடுத்ததைச் சிலம்பாலறிவோம். முதற்கரிகாலனையும், அடுத்தவனையும் குழப்பித் தமிழாசிரியர் தடுமாறுகிறார்.] வெற்றி பெற்றதையும், பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததையும் சொல்வார். எனவே நெடுஞ்சேரலாதன் வேறு, பெருஞ்சேரலாதன் வேறு. ஆழ ஆய்ந்தால் 62 ஆம் பாட்டில் இறந்ததாய் விவரிக்கப்படுபவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனென விளங்கும். அப்படியெனில் 65 ஆம் பாட்டில் வரும் பெருஞ்சேரலாதன் யார்? .

நார்முடிச்சேரல் வாகைப்பெருந்துறையில் நன்னனை வெற்றிகொண்டது பதிற்றுப்பத்தில் பெருஞ்செயலாய்ச் சொல்லப்பெறும். ”வாகைப் பெருந்துறைச் சேரலாதன்” என்ற கூற்றே, ”பெருஞ்சேரலாதன்” பெயருக்கு விளிகொடுத்ததாகலாம். அதைவைத்துப் பார்த்தால், கி.மு.131-107 என்ற இடைப்பகுதியில் அண்ணனைப் பெருஞ்சேரலாதனென்றும் நடுத்தம்பியைக் குட்டுவச் (=சிறிய) சேரலாதனென்றும், கடைத்தம்பியை ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்றும் அழைத்திருக்கலாம். பெரும்பாலும் நார்முடிச்சேரலே பெருஞ்சேரலாதனாக வாய்ப்புண்டு. இவ்விளக்கத்தோடு புறநானூற்றில் சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய 66ஆம் பாட்டைப் பார்க்கலாம். இப்பாட்டில் கரிகால் வளவன் பெயர் வெளிப்பட வரும். பெருஞ்சேரலாதனைப் பெயர் சொல்லாமற் குறிப்பு வரும்.  

செங்குட்டுவனுக்குமுன் அவன்தம்பி வானவரம்பன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பார்ப்போம். ஆடுகோட்பாடு என்பதற்குப் பதிற்றுப்பத்தின் பதிகம் ”நெடுந்தொலைவுள்ள தொண்டகக் காட்டினுள் பகைவர் கொண்டுபோன வருடைக் (ஆடு) கூட்டத்தைப் பெருமுயற்சியால் தொண்டித்துறைக்குத் திரும்பக் கொண்டுவந்தவனெ”னப் பொருள்சொல்லும். பழங்காலப்போர்களில் ஆக்களைக் கவர்வதை வெட்சித்திணையென்றும், அவற்றை மீட்டுவருவதைக் கரந்தைத்திணையென்றும் சொல்வர். இப்போரை ஆகோட் பூசலென்றுஞ் சொல்வதுண்டு. அதேபோல் ஆடுகோட் பூசலுமுண்டு. தொல்காப்பியர் கரந்தையை வெட்சிக்குள் ஒரு பகுதியாகவே சொல்வார். அதுபோல் ஆடுகோள் மீட்பும் ஆடுகோட்பாட்டின் பகுதியாய்க் கொண்டால் இச்சேரலாதனின் சிறப்புப் புரியும்.


பெரும்பாலும் இவன்காலம் பொ.உ.மு. 106 - 75 ஆகும். செங்குட்டுவன் கங்கைக்கரை போகிய செயல் பதிற்றுப்பத்தின் 4 ஆம் பத்தில் வாராது பதிகத்தில் மட்டுமே வரும். எனவே கண்ணகிக்குக் கல்லெடுத்தது குட்டுவன் கடைசிக்காலத்தில் நடந்திருக்கலாம். செங்குட்டுவனுக்கப்புறம் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பட்டத்திற்கு வந்திருக்கிறான். அதுவுமல்லாது வானவரம்பனென்ற பட்டமும் சூடுவான் அவன் வேந்தனானதற்கு அதுவே அடையாளம். அண்ணனுக்கப்புறம் பட்டத்திற்கு வந்ததால் பெரும்பாலும் சிலப்பதிகாரம் இவனுடைய அரசவையில் தான் அரங்கேறியிருக்க வாய்ப்புண்டு. செங்குட்டுவனின் மகன் குட்டுவன் சேரல் (இயற்பெயர் தெரியாது) பற்றிய விவரம் தெரியவில்லை.


சேரர்குடியின் இரும்பொறைக் கிளைக்குப் போவதற்குமுன் விட்டுப்போன வேறொரு செய்தியைச் சொல்லவேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு இருந்த ஆட்டனத்தியெனும் இன்னொரு பாகம். ஆடுவதில் பெருந்திறன் பெற்றவன் ஆட்டனத்தி. செந்நிறத்தால், அத்தியெனும் விளிப்பெயரும் பெற்றான். (அத்து= சிவப்பு.. ஒன்றுவிட்ட இவன் செங்குட்டுவன் என்றாரோ?) ஆதன்குடியைச் சேர்ந்த நெடுஞ்சேரலாதன் வளநாட்டிற் பெண்ணெடுத்தான். அவன் மகன் நாகநாட்டில் பெண்ணெடுத்தான். பெரும்பாலும் இவனே 2 ஆம் கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்தவனாவான். ஆட்டனத்தி ஆதிமந்தி காதலைச் சங்க இலக்கியம் பரவலாய்ச் சொல்லும். பரணரும் பாடுவார். நம்மைக் குடையும் ஒரே செய்தி. தம்பியின் மாமனோடா (நார்முடிச் சேரல் எனும்) பெருஞ்சேரலாதன் சண்டையிட்டு உண்ணா நோன்பிருந்தான்? பெரிதும் வியப்பளிக்கிறது. என் செய்வது? சேரரும் சோழரும் பலமுறை தமக்குள் பெண்கொடுத்துப் பெண்வாங்கியிருக்கிறார். அதேபொழுது ஒருவருக்கு ஒருவர் முரணிப் பொருதியுமிருக்கிறார். உறவுக்குள் மணஞ்செய்வதும் பின் மாமன், மச்சான், மைத்துனன் என்று சண்டையிடுவதும் தமிழர் மரபில் நெடுங்காலம் தொடர்ந்து நடைபெறுவதாயிற்றே?



4
 
இனி இரும்பொறைக்கிளைக்கு வருவோம். கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைதான் இக்கிளையின் மூத்தவன். இவனை நரிவெரூஉத்தலையார் புறம் 5 இல் பாடுவார். இவன் எந்தக் காலமெனத் தெரியவில்லை. ”கருவூரேறிய” என்பதால் இவனுக்கு முன் சேரர் கருவூரில் இல்லாதது தெரியும் (சங்ககாலமென்றாலே கொங்குவஞ்சியை வலிந்திழுப்போருக்குத்தான் புரியமாட்டேனென்கிறது.) அடுத்து அந்துவன் சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 190-147. உதியஞ்சேரலுக்கு இவன் பங்காளி. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் அந்துவஞ் சேரலின் மாடத்திலிருந்த போது கருவூர் அரசவீதியில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை மதம்பிடித்துத் தடுமாறியதை அடையாளங் காட்டி விவரிப்பார். அந்துவன்மனைவி பெரும்பாலும் வல்வில் ஓரியின் சோதரி ஆவாள். ஏழாம்பத்துப் பதிகத்தில் ”ஒருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி” எனவரும். பலரும் ஒருதந்தையை அடையாளங்காண்பதிற் சரவற்படுவர். பெருமுயற்சிக்கப்புறம் அது விளங்கியது.

தமிழில் உல்>உரு>உரம் என்பது வலிமையைக் குறிக்கும். உரு>ஒரு>ஒருதல், வலியுறுதலைக்குறிக்கும். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொருள் 590, 591, 592) போன்ற வலியுள்ள ஆண்விலங்குகளின் பொதுப்பெயரை ஒருத்தல்/ஓரி என்று குறிப்பார். வலியுள்ள ஆண்மகனுக்கும் ஒருத்து, ஓரிப் பெயர்களை இட்டிருக்கிறார். அப்படியிடும் போது ஒருத்தின் அந்தை ஒருத்தந்தை, ஒரியின் அந்தை ஓரியந்தை என்று அமைவர். இரு சொற்களும் பிணைந்து ஒருதந்தை எனவுமாகலாம். சாத்து அந்தை = சாத்தந்தை, கொற்று அந்தை = கொற்றந்தை, பூது அந்தை = பூதந்தை என்ற பெயர்கள் அமைவதுபோல் இதைக் கொள்ளலாம். ஆக ஒருதந்தையின் மகளை அந்துவனுக்குக் கட்டிவைத்தால் கொல்லிமலை தம் உரிமைக்குள் வருமென்று சேரர் நினைத்தார். அது நடக்கவில்லை. பின்னால் மலையமான் திருமுடிக்காரியோடு கூட்டுச்சேர்ந்து ஓரியைத் தோற்கடித்துக் கொல்லியை இணைப்பார்.

”வேளிரைத் தொலைத்து நிலஞ்சேர்க்கும் அரசியலை” மூவேந்தர் தொடர்ந்து செய்தார். மணவுறவும், இல்லையேல் போர்ச்செயலும் தொடர்ந்து பயன் பட்டன. சங்ககால முடிவில் கொஞ்சங் கொஞ்சமாய் வேளிர் ஒழிக்கப்பட்டார் (Eventually the segmentary states were unified into 3 large states) . சங்க இலக்கியம் படிக்கையில் வரலாற்றுவரிதியாய் இதையுணரலாம். பொ.உ.மு. 250 - 75 கால அளவில் இவ்வாட்சி மாற்றங்கள் நடந்தன. இனக்குழுவரலாற்றில் சங்க இலக்கியத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு இக்காலத்திற்றான் எழுந்தது. இதற்குமுன் பொ.உ.மு. 600-250 வரையும், இதற்குப்பின் பொ.உ.மு.75 - பொ.உ.150 வரையும் சங்க இலக்கியம் விரவினாலும், உச்சக்கட்டம் நடுவிலிருந்த காலந்தான்.

[. . .  இப்புரிதலை அடையாமற் செய்வதற்கே பொ.உ. 5, 6 ஆம் நூற்றாண்டு என்று சிலர் குழப்பியடிக்கிறார். குறைத் தொன்மங் கொண்ட secular literature ஐ உணரவிடாது குழப்புவதுங் கூட ஒருவித நிகழ்ப்புத் (agenda) தான். இந்த நிகழ்ப்பிற்குள் பல தமிழாசிரியரும் சிக்கிக் கொண்டார். நிகழ்ப்புக் கொண்டோர், மோரியர் பங்களிப்பையும் குறைத்தே பேசினார். குப்தரையே தூக்கி வைத்தார். தொல்லியல் செய்திகள் இவற்றைக் குப்புறத் தள்ளி மோரியர் பங்கை உணரவைத்தன. தமிழர்ப் பங்கும் வெளிப்படும். கீழடி, பொருந்தல், கொடுமணம், பட்டணம் போன்றவை தொடர்ந்தால்...... இந்த ஆய்வுகள் நடைபெறாது தடுக்கவே நிகழ்ப்பாளர் முயல்கிறார்.] 

அடுத்துச் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்திற்கு வருவோம் இது பெரும்பாலும் பொ.உ.மு. 164-140 ஆகும். அந்துவனுக்கும், ஒருதந்தை மகளான பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்தவன். தவிர, நெடுஞ்சேரலாதன் மனைவியின் தங்கையான சிறிய பதுமன்தேவியை மணந்தவன். எனவே செல்வக்கடுங்கோ நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தைவழியில் ஒன்றுவிட்ட தம்பியும், மனைவிவழியில் சகலையும் ஆவான். குடவஞ்சியில் நெடுஞ்சேரலாதனுக்கு இளையனாய் இவன் வளர்கையில், கொங்குக்கருவூரின் மேல் காரவேலன் படையெடுப்பு நடந்திருக்கலாம். அப்படையெடுப்பு ஒருவித வஞ்சிப்போர். உழிஞைப்போரல்ல. வயதானபின் சேரலப் பூழிநாட்டிற் சிலகாலமிருந்த வாழியாதன், அந்துவன்சேரலுக்குத் துணையாய் கொங்குக்கருவூருக்கு நகர்ந்தான். வேள்பாரி இறந்த பிறகு கபிலர் வாழியாதனிடம் பரிசில் பெற்றிருக்கிறார். தமிழரல்லா இரு அரசரோடு உழிஞைப் போர் நடத்தி ஏராளமான பொருள்களை இவன் கொள்ளையடித்ததை

சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற்று இருவர் ஓட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே

என்று ஏழாம்பத்தின் 3-ஆம் பாட்டில் கபிலர் சொல்வார். இவ்விரு அரசர் யார்? தெரியவில்லை. ஒருவேளை வாழியாதன் தந்தைகாலத்தில் கரூரைக் காரவேலன் சூறையாடியதற்குப் பழிவாங்கும் ...முயற்சியை இது குறிக்குமோ? ஏதோ மருமம். மொத்தத்தில் வாழியாதன், அவன் மகன், பேரன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாதனையும், செங்குட்டுவனையும் பார்க்கக் குறைந்தகாலமே ஆண்டார். ஆனாற் சேரர்குடிக்கு பெரிய அடித்தளம் போட்டார். இம்மூவரைப் பற்றிய விவரம் இலக்கியத்திலன்றி வேறு முறையிலும் உறுதி செய்யப்பட்டது புகளூர்க் கல்வெட்டின் மூலமாகும்.

முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்
கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்த கல்

என்றுவரும் புகளூர்க்கல்வெட்டில் கோ ஆதன் சேல்லிரும்பொறை என்பது (செல்வக்கடுங்)கோ (வாழி)ஆதன் சே(ர)ல்லிரும்பொறை குறித்தது. பெருங் கடுங்கோன் என்பது (தகடூர் எறிந்த) பெருஞ்சேரல் இரும்பொறையையும், இளங்கடுங்கோ என்பது (குடக்கோ) இளஞ்சேரல் இரும்பொறையையுங் குறிக்கும். ஆகச் சங்ககாலமென்பது கற்பனையில்லை.

[. . .  “சங்க இலக்கியமென்பது ரூம்  போட்டு யோசித்து 7,8 பண்டிதர் 9 ஆம் நூற்றாண்டிற்செய்த பெரிய ஏமாற்று” என்பார் பேரா. ஹெர்மன் தீக்கன். (இதே வார்த்தைகள் இல்லெனினும் பொருள் அதே). அதேபோற்றான் “சிலம்பு கற்பனைப்புதினம். 6 ஆம் நூற்றாண்டில் ரூம்  போட்டுயோசித்தார்” என்று திரு.நாகசாமியும், திரு. திரு.நா.கணேசனுஞ் சொல்கிறார்கள். மொத்தத்தில் தமிழர் ஏமாற்றுப் பேர்வழிகளென்று இவர்கள் சொல்கிறார்கள். தேமேயென்று நாமுங் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.]

“இளங்கடுங்கோ இளங்கோவாக அறுத்த கல்” என்பதால் கல்வெட்டுக்காலம் பொ.உ.மு. 122 க்கு அருகிலிருக்கும். ஆனால் திரு. ஐராவதம் மகாதேவனோ பொ.உ. 3 ஆம் நூற்றாண்டென்பார். பொதுவாகத் திரு.ஐராவதம் மகாதேவனுக்கும், மற்ற கல்வெட்டாய்வாளருக்கும் சங்ககாலக் கல்வெட்டுக்களில் 2.3 நூற்றாண்டுகள் வேறுபாடுண்டு. பொருந்தல் ஆய்விற்கு அப்புறம் தான் மகாதேவனிடம் சில மாற்றங்கள் தென்படுகிறது. ஆனால் நிகழ்ப்பாளர் மகாதேவனின் பழைய கூற்றையே பிடித்துக்கொண்டு தொங்குவர். அது அவர்களுக்கு ஏந்து இல்லையா?

அடுத்து வருவது வாழியாதன் மகன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 139-123. இவனே சங்க இலக்கியத்தின் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர். இவனும் தன் தாத்தன், தந்தையின் வழியொட்டி வேளிரை ஒடுக்குவதில் கவனஞ் செலுத்தினான். குறிப்பாக தகடூர் அதியமான்களைச் சாய்த்ததில் இவனுக்குப் பெரும் பங்குண்டு. அசோகன் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தரோடு, தக்கணப் பாதையின் காணிப்பரான (Supervisor) அதியமான்களைத் “சத்தியபுதோ” என்று குறித்திருப்பார். இத்தனைக்கும் அதியர் சேரரின் ஒன்றுவிட்ட பங்காளி. ஆயினும் தனியிருப்பை உறுதிசெய்தவர். அதிகை ஊரிலிருந்து குடிபெயர்ந்ததால் அதியமான் எனப்பட்டார். சேரரின் கிளை என்பதால், சேரரின் கண்ணியும் தாரும் அதியருக்கு அடையாளம் ஆகின. இவரே கரும்பைத் தமிழகத்துள் கொண்டுவந்தாரென்ற தொன்மமுமுண்டு.

மலையமான் திருமுடிக்காரியோடு போரிட்டு திருக்கோவிலூரை நெடுமானஞ்சி கைப்பற்றியதாலும், வேறேதோ காரணத்தாலும், அதியமானுக்கும் சேரருக்கும் முரணேற்பட்டு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் அதியமான் நெடுமிடலோடு போரிட்டு அவனைச் சாய்ப்பான். இச்செய்தி நாலாம்பத்து 2 ஆம் பாடலில் பதியப்பெறும். பின் நெடுமிடலின் மகன் அஞ்சியோடும் சேரர்பகை தொடரும் போர்த் தளவாடங்கள் குறைந்ததால் கோட்டைக்குள் நெடுமானஞ்சி அடைந்துகிடந்து, பின் உழிஞைப்போர் நீண்டதால் வேறுவழியின்றி வெளிவந்து, வஞ்சிப்போராய் மாறும். பெருஞ்சேரல் இரும்பொறையுடன் போருடற்றி நெடுமானஞ்சி உயிர்துறப்பான். இச்செய்திகள் ”தகடூர்யாத்திரை”யில் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால் உ.வே.சா.விற்கு இந்நூல் கிடைக்கவில்லை, அங்கும் இங்குமாய் 56 பாடல்களே கிடைத்தன. அவற்றில் ஒருபாடல் நமக்குச் செய்தி பகர்கிறது.

கால வெகுளிப் பொறைய!கேள் நும்பியைச்
சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர்
கோல்கொண்டு மேற்சேரல் வேண்டா வதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறிசு.

என்ற பாட்டின் மூலம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒருதம்பி இருந்த செய்தி தெரியும். இதற்குச் சான்றாய், குட்டுவன் (=சிறியவன்) இரும்பொறை என்பவனையே இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையாய் ஒன்பதாம் பத்தின் பதிகம் அடையாளங் காட்டும். மேலுள்ள கல்வெட்டு, தகடூர் யாத்திரைப் பாட்டு, ஒன்பதாம் பத்தின் பதிகம் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்தால், இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் தத்துப் புதல்வன் போலிருக்கிறது. அவனுடைய இயல்பான தந்தை குட்டுவன்சேரல் இரும்பொறையே.

இன்னொரு செய்தி சேரநாட்டின் தோல்வினைஞரான படுமரத்து மோசிகீரனார் பற்றியது. பெருஞ்சேரல் இரும்பொறையின் சிறப்பைக் கூறுவது. புறம் 50 இல் “மன்னா! அலங்காரஞ்செய்து உழிஞைப் போருக்குப்போய் வெற்றிபெற்று மண்ணுமங்கலஞ் செய்து வரும் முரசமெனில், நான் சேக்கையில் ஏறியிரேன். முரசம் பேணவந்தநான் மிகுந்த அசதியால் கட்டிலிலேறி அமர்ந்துவிட்டேன். ஆயினும் உன்வீரர் குற்றமாய்க்கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது களைப்புத்தீரக் கவரிவீசிச் சிறப்புச்செய்தாய். முரசைப்பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியுமென நீ பாராட்டினாய்! உன்செயல் புகழவேண்டியதே? - என்று சொல்வார் (மோசிகீரனாரென்ற என் கட்டுரைத்தொடரையும் படியுங்கள்).

அடுத்தது குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை. இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 122-107 ஆகும். குறைந்த காலமே ஆட்சி செய்திருக்கிறான். இவனே மருதம்பாடிய இளங்கடுங்கோ என்பர். குட்டுவஞ்சேரல் இரும்பொறைக்கும், மையூர்கிழானின் (இற்றை மைசூரைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தன். அரசனல்லன்) வேண்மகள் (வேளிர் மகள்) அந்துவஞ் செள்ளைக்கும் (செள்ளை இயற்பெயர், அந்துவன் பெரும்பாலும் மையூர்கிழானின் பெயராகலாம்.) பிறந்தவன். (வேந்தரென்பார், ”அரசர், மன்னர், வேந்தரில்” மட்டுமல்லாது கிழாரிலும் பெண்ணெடுப்பார் போலும்.) மையூர் கிழானான இவன் தாத்தனே இவன் அமைச்சனாய் இருந்துள்ளான். புரோகிதனை விடவும் உயர்வாய் இளஞ்சேரல் இரும்பொறை இவ்வமைச்சனைக் கருதினான்.

இந்த இரும்பொறை தம்மை எதிர்த்த இருவேந்தரையும், விச்சிக்கோவையும் வீழ்த்தினான். இவன் காலத்தில் செங்குட்டுவன் தாய்மாமனான வேற்பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளி நெடுஞ்சேரலாதனோடு பொருதி இறந்ததன்பின், சோழவளநாட்டில் பங்காளிச்சண்டை பெருகியது. உறையூர்மணிமுடிக்குப் பலரும் உரிமைகொண்டாடினார். அதிலொருவன் பொத்தியாண்ட பெருஞ்சோழன். (பெருஞ்சோழன் என்பது பொதுவான பெயர். விதப்பான பெயரன்று. பல உரையாசிரியரும், தமிழாசிரியரும் இவனைக் கோப்பெருஞ்சோழனோடு குழம்பித்தவிப்பதை என்னால் ஏற்கவியலாது. கோப்பெருஞ்சோழன் முற்றிலும் வேறுகாலத்தவன். இன்னொரிடத்தில் விளக்குவேன்.) இளஞ்சேரல் இரும்பொறை பொத்திச் சோழனையும், வித்தைகளில் வல்லவனான பழையன் மாறனையும் (இவன் பாண்டியருக்குக் கீழ் இருந்த குறுநில மன்னனாகலாம்.) தோற்கடித்து ஏராளம் பொருள்களைக் கவர்ந்து பலருக்கும் பிரித்துக் கொடுத்து உதவினான். (இளஞ்சேரல் இரும்பொறைக்கப்புறம் சோழரிடையே நடந்த பங்காளிச் சண்டையை முற்றிலும் முடிவிற்குக் கொண்டுவந்தவன் சிலம்பின்படி செங்குட்டுவனேயாவான்.).

தவிரக் கொங்குவஞ்சியில் சதுக்கபூதத்தை நிறுவிச் சாந்திவேண்டி, இளஞ்சேரல் இரும்பொறை வழிபாடுகள் நடத்தினானாம் (சாந்திசெய்தலென்பது குறிப்பிட்ட படையல்கள்மூலம் வழிபாடு செய்தலாகும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி, கீழ்சாந்தி என்ற சொற்கள் இன்றுங் குருக்கள் மாரைக் குறிப்பதை ஓர்ந்து பார்த்தால் சாந்தியின் பொருள் விளங்கும். இந்தச்சொல் பழந்தமிழில் குறிப்பிட்ட பூதப்பூசகருக்கு இருந்தது புரியும். குருக்கள் என்பதெல்லாம் பின்னால் வந்த சொற்கள்.) சதுக்கபூதமே பின்னாளில் பிள்ளையாராய் மாறிப் புரிந்துகொள்ளப்பட்டதென்று பேரா. ந.சுப்பிரமணியன் ”Tamil polity" என்ற நூலிற் சொல்வார். இந்நாளில் ஊருக்கொரு (ஏன், வீதிக்கொரு) பிள்ளையார் இருப்பது போல் அந்நாளில் ஊருக்கொரு சதுக்கபூதம் இருந்தது. சதுக்கபூத விவரிப்பு அப்படியே பிள்ளையார் விவரிப்புப் போலவே இருக்கும். சதுக்கபூதம் கி.பி. 4,5 ஆம் நூற்றாண்டுகளில் சிவனின் பிள்ளையாய் மாறிவிட்டது போலும்.
 
இனி அடுத்த பகுதியில் கடல்பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவன் என்று முதலிலும் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் என்று பிற்காலத்திலும் பெயர் பெற்றவனைப் பார்ப்போம்.



5


இனி கடல்பிறக்கோட்டிய வெல்கெழுகுட்டுவனென முதலிலும் கங்கைப்பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவனெனப் பின்னும் பெயர்பெற்றவனைப் பார்ப்போம். இவன் காலம் பொ.உ.மு.131-77 ஆகும். வெல்கெழுகுட்டுவன் வேறு, செங்குட்டுவன் வேறென்று பலகாலம் தமிழறிஞர் பிளவுபட்டார்.

[. . . வேடிக்கையென்ன தெரியுமோ? இவன் இயற்பெயர் என்னவென யாருக்குமே தெரியாது. இன்றுங் குட்டுவனைக் குட்டனென்றே மலையாளத்திற் சொல்வார். சிறியவனென்று பொருள். அகவை, அளவு, முறை இப்படி எத்தனையோ வகையில் ஒருவன் குட்டனாகலாம். ஈழப் பெருந்தலைவரான பிறகும் கூடப் பிரபாகரனைத் ”தம்பி” என அழைத்தவர் மிகுதி. அவர் பெயர் உண்மையில் தம்பியா? இல்லையே? அவர் விளிப்பெயரே பரவலாய் ஈழமெங்கும் எல்லோருக்கும் பழகிப்போயிற்று. குட்டுவனும் அப்படித்தான். வெல்கெழு குட்டுவன்= வெல்லுங் குணங்கொண்ட குட்டுவன்; செங்குட்டுவன்= செந்நிறக் குட்டுவன். அவ்வளவுதான் தமிழரில் இப்படிப் பெயர்கள் அமைவது வியப்பேயில்லை சில பெயர்கள் மக்கள் வழக்காற்றில் சட்டென்று பொருந்திக்கொள்ளும்.  ஆனாலும் ’பெரியார்’ என்றால் சிலருக்கு முட்டிக்கொள்ளும். ’ஈ.வே.இராமசாமி நாயக்கர்’ என்பதே சரியாம். ’பாவாணர்’ என்று சொல்லக்கூடாதாம். ’ஞா.தேவநேயன்’ என்று சொல்லவேண்டுமாம். ஒருதமிழ் மடற்குழுவில் முன்பொருவர் இதுபற்றி அடம்பிடித்துச் சொன்னார். சிரித்துக்கொண்டேன். என்றாவது புத்தரைத் திரு.சித்தார்த்தன் என்றோ, மகாவீரரை திரு.வர்த்தமானன் என்றோ யாரேனுஞ் சொல்வாரோ? ’மகாத்மா’வெனில் யாருக்கேனும் விளங்காது போமோ? சரி “மகாப் பெரியவா” என்றால்? நான்தான் சொன்னேனே? தமிழரிற் குறிப்புப்பெயர்கள் சரளம், ஏராளம்.]

சென்ற பகுதிகளில் மோரியர், சுங்கர், கனகர், நூற்றுவர்கன்னர், ஆதன்கள், இரும்பொறைகள் என ஆழமாய்க் காலக்கணிப்புக்குள் போனதற்குக் காரணமுண்டு. வரலாற்றில் பிருக்குமானம் (parsimony) முகன்மையானது. குறைவான ஊன்றுகோள்களில், நிறைவான தரவுகளோடு ஆழமான ஏரணம் இருந்தாற்றான் வரலாறு வழிக்குவரும். அதைவிடுத்து ஏரணமேயின்றி வரலாற்றுத் தரவுகளை வறட்டுத் தனமாய் அலசினால் ஒருபக்கமும் நகரமுடியாது.

சேரர் காலக்கணிப்பில் நடக்கும் இருவேறு குழப்பங்களைச் சொல்கிறேன். கேளுங்கள்.  குட்டுவன் 55 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தான். அவன்விறல் வெளிப்பட வெளிப்பட ஒவ்வொருவரும் விதம்விதமாய் அழைத்திருப்பார். 25 வயதிற் குட்டுவன் இளங்கோ ஆகையில் புலவர் பரணருக்கு 50 வயதென வையுங்கள். கடல்பிறக்கோட்டிய செயல் அடுத்தசில ஆண்டுகளில் நடந்தால், பரணர் அதைச்சொல்வார். கங்கைக்கரை போகையில் செங்குட்டுவனுக்கு 80 ஆனால் பரணர் 105 வயதுவரை உயிரோடிருந்து சொல்வாரா? பரணர் சொல்லாததாலே, வெல்கெழு குட்டுவனும் செங்குட்டுவனும் வெவ்வேறென்போமா? அதுவென்ன ஏரணம்? இப்படியொரு வெட்டிவாதம் இங்கு நெடுநாள் நடந்தது. இல்லையெனில் பதிற்றுப்பத்தின் பதிகம் ”பெருஞ்சோழர் ப்ரசத்தி” போன்றதென்று சொல்லி ஏற்றுக்கொள்ள மறுப்பார்.

என் கேள்வி: ”பெருஞ்சோழர் ப்ரசத்திகளையும் பல்லவர் ப்ரசத்திகளையும்” பின் எப்படி நம்புகிறீர்கள்? அதையும் தூக்கி எறியலாமே? இந்த ப்ரசத்திகளை நம்புவீர்கள், பதிற்றுப்பத்தின் பதிகங்களை நம்பமாட்டீர்கள் என்றால் அது ஓர் ஓரவஞ்சனை தானே? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகள்” இப்படிச் சொல்லிச்சொல்லியே தமிழரைக் காயடித்தார். ”When it comes to assigning importance to Tamils, always create doubts in people's perception”. இது எந்த அளவிற்குப் போனதெனில், தமிழர் கருத்துச் சொன்னாலே, ’இந்தாலஜி’ குழுமத்தில் கேலியும், சிரிப்பும், நக்கலும் எழுந்துவிடும். அவர்கள் ஐராவதம் மகாதேவனையே பொருட்படுத்தமாட்டார். இதெல்லாம் எப்படி நடந்தது? ”6 ஆம் நூற்றாண்டு ஆசாமிகளின்” தாசானுதாசப் பணிவு தான் காரணம். 

இன்னொருபக்கம் விவரமிலா ஆர்வலர், 58+25+25+55 எனக்கூட்டிச் செங்குட்டுவன்வரை ஆதன்குடிக்கு 163 ஆண்டு இருப்புச்சொல்வர். சரஞ்சரமாய் ஆண்டுகளைக் கூட்டுவது சரியா? தந்தைக்கும், மகன்களுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே மேல்மடி (overlap) இருக்காதா? அப்படியொரு கனத்த நூல் (பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்- கணியன்பாலன், எதிர் வெளியீடு) அண்மையில் வெளிவந்தது. அதைப் படிக்கையில் வருத்தமானது. விரிவாய் அலசவும் வேதனையாகிறது. இவ்வளவு பெரிய உழைப்பில் ஏரணங் குறைந்தால் எப்படி? 6 ஆம் ஆண்டு ஆசாமிகள் ஒருமுனையெனில் மேல்மடி கவனியாத இவர் போன்ற ஆர்வலர் இன்னொரு முனை. தமிழர் வரலாறு இந்த இருவரிடமுஞ் சிக்கி அலைபடுகிறது.

இனிக் காட்சிக்காதை 156-164 வரிகளைப் பார்ப்போம்.

கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்

இது அமைச்சன் வில்லவன்கோதையின் கூற்று. பொதுவாய்ப் பலரும் ஒருமுறையே செங்குட்டுவன் வடக்கேபோனதாய் எண்ணிக்கொள்கிறார். கிடையாது. இருமுறை போயிருக்கிறான். கதைக்காலத்தில் (கி.மு.77க்குச் சற்றுமுன்) பாண்டியநாடு குழப்பம்/கலகத்திலே இருந்தது. வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் பங்காளிச்சண்டை. இளஞ்சேரலிரும்பொறை நடத்திய போருக்குப்பின், குட்டுவனே 2 வேந்தர், 7 குறுநிலமன்னரோடு பொருதித் தன் மாமன்மகனை சோழவளநாட்டின் தலைவனாக்குவான். புகார்ச்சோழன் (பெரும்பாலும் 2ஆம் கரிகாலன், அல்லது அவன் மகன்) அதை ஏற்றுக்கொள்ளாது முரண்டு பிடித்தான். இக்காலத்தில் சேரனே பேராற்றல் கொண்டவனாயிருந்தான். அதனாற்றான் தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவனாய்த் தன்னை எண்ணிக்கொண்டான்.

சேரருக்குத் தம்நாட்டின் வடக்கிருந்த கொங்கணரைக் (மங்களூர் தாண்டி மேலைக் கொங்கணம்/கோக(ர்)ணம்/கோவா கடற்கரையை ஒட்டியவர்) கட்டுக்குள் வைப்பது மிகத் தேவை. அப்பொழுது தான் கார்வார் (Karwar) வரை மேலைக் கடல்வணிகத்தைச் சேரர் தம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்குமேல் சோப்பாராத் (Sopara; nearer to modern mumbai) துறையிலிருந்து இவரின் நண்பர் நூற்றுவர் கன்னர் பார்த்துக்கொள்வார். சேரரையும், கன்னரையும் மீறி நாவலந்தீவின் மேற்குக்கடற்கரையில் அன்றைக்கு யாரும் எதுவுஞ் செய்யமுடியாத நிலையே இருந்தது. அந்தக் காலத்தில் கடல்வணிகம் தமிழர்க்கு முகன்மையானது. கொங்கணரை அடக்கியதற்கும் அதுவே காரணம். கடல் பிறக்கோட்டிய செயலென்பது கடற்கொள்ளையரைத் தொலைத்தது தான். மேலைக்கடல் வணிகம் சேரருக்குத் தேவையானது. மிளகை மேற்குநாடுகளுக்கு ஏற்றி அனுப்பவேண்டாமா?

அடுத்தது கலிங்கர் (கோதாவரிக்குமேல் இற்றை ஆந்திரமும் ஒடிசாவுஞ் சேர்ந்த பகுதியர்). இவரைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்கு வரலாற்றுக் காரணமுண்டு. கதைக்காலத்திற்கு 100 ஆண்டுகள் முன் பொ.உ.மு. 172 இல் கலிங்கத்தைக் காரவேலன் உச்சநிலைக்குக் கொணர்ந்தான். அவனுடைய அத்திக்கும்பாக் கல்வெட்டுத் தமிழர்வரலாற்றை உறுதிசெய்யும். ஆனால் தமிழர்பார்வையில் அதைப்படித்த அறிஞர் மிகக்குறைவு. எதிர்காலத்தில் யாரேனுஞ் செய்தால் நல்லது. (Shashi Kant எழுதிய The Hathigumpha inscription of Kharavela and The Bhabru Edict of Asoka, D.K.Printworld (p) Lud, 2nd ed 2000 என்ற பொத்தகத்தையும் படியுங்கள்.) பொ.உ.மு. 424 இலிருந்து தொடர்ந்து வந்த .”த்ராம்ர சங்காத்தத்தை - தமிழர் முன்னணியை (இது 252 ஆண்டுகல் இல்லை 1300 ஆண்டுகள் இருந்தது என்பது இன்னொரு நோக்கு. அதையும் ஆராயவேண்டும்.)” பொ.உ.மு.175 இல் குலைத்து கொங்குக்கருவூர் வரை [கல்வெட்டிற் சொல்லும் பித்துண்டா இதுவென்பது என் கருத்து] உழிஞைப் போரில் காரவேலன் வந்து, கொங்குவஞ்சியைத் தொலைத்து அந்துவஞ்சேரல் இரும்பொறையைத் தடுமாற வைத்திருக்கிறான்.

அக்காலம் ஆதன்குடியினரும், இரும்பொறைக் குடியினரும் விரிவடையாக் காலம். அத்திக்கும்பா கல்வெட்டு எழுந்து 6/7 ஆண்டுகள் கழித்து நெடுஞ்சேரலாதன் ஆட்சிக்கு வந்தான். அந்துவஞ்சேரல் காரவேலன் தாக்குதலிலிருந்து தப்பி உதியன்சேரலாதனிடம் ஓடிவந்திருக்கலாம். கருவூரைச் சாய்த்ததோடு பாண்டியரையும் காரவேலன் பதம் பார்த்தான். (கரூரிலிருந்து மதுரை வருவது எளிது.) ஏராளம் முத்துக்கள், செல்வங்களையும் கவர்ந்து சென்றுள்ளான். காரவேலன் கல்வெட்டின் (பொ.உ.மு.172) 11,13ஆம் வரிகளை சேர்த்துப் பொருந்திப் படித்தால், தமிழகத்திற்குப் பெரும்படை வந்தது புலப்படும். இதற்குப் பழிவாங்கவே 60/62 ஆண்டுகள் கழித்து கி.மு..112 இல் செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பின் மூலம் கலிங்கத்தைத் தாக்கியிருக்கவேண்டும். 

சசிகாந்த் போல ஒருசிலர் பித்துண்டாவைக் கலிங்கத்திற்குச் சற்றுவெளியே கோதாவரியின் தென்கரை நகரமென்றும் அதைப் பிடித்தவுடன் கன்னபெண்ணை (கிருஷ்ணா) வரையிலும் காரவேலன் அரசு விரிந்ததென்றுஞ் சொல்வர். என்னால் அவ்விளக்கத்தை ஏற்க முடியவில்லை. ஏனெனில் அங்கிருந்து பாண்டியரைத் தாக்க நேரே வரமுடியாது. இடையில் சங்ககாலத்துத் தொண்டைமானும், சோழரும் இருந்திருப்பர். என்னதான் முன்னணி உடைந்தாலும், தம்மை மீறிப் படையெடுத்துப் போவதை சோழர் ஒப்புக்கொள்ளார். தவிர, இவரையும் கடந்து வந்தால் கல்வெட்டில் சோழரைக் கடந்ததாய்ச் செய்தி வந்திருக்கும். ஆனால் அது வரவில்லை. எனவே அன்று நூற்றுவர்கன்னருக்குத் தெற்கே பேரரசாயிருந்த சேரரைக் கருநாடகம் வழியேதான் காரவேலன் நெருக்கியிருக்கவேண்டும். தவிரப் பாண்டியர் செல்வங் கவர்ந்தது ”கொற்கைக் கடல்வழி” என்றுந் தோன்றவில்லை. இதுபோன்ற உழிஞைப்போர் அற்றை நிலையில் கடல்வழியே படகுகளைப் பயன்படுத்தி நடக்கமுடியுமா? மிகுந்த ஐயம் வருகிறது.

கொடுங்கருநாடர் ஒழுங்குமுறையிலா ஆட்சியாளர். இற்றை வட கருநாடகத்தில் இருந்தவர். தென் கருநாடகம் அப்போது தமிழ்பேசிய நாடு. பங்களர், கங்கர், கட்டியராகியோராற் ஆளப்பட்ட பகுதி. கட்டியர் இற்றை வேலூர், சேலம், கோலார்ப்பகுதிகளில் ஆட்சிசெய்தார். கங்கர் இற்றைப் பெங்களூரு, மைசூருப் பகுதிகளை ஆண்டார். அற்றை வடகொங்கே பின்னால் கங்கநாடாகியது. பங்களர் நாடென்பது இப்போதையச் சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களைச் சேர்த்தது. இந்த அரசோடும் குட்டுவன் பொருதினான்.

கொங்கணர், கொடுங்கருநாடர், கலிங்கர் ஆகியோர் சிறிதே தமிழ்கலந்த பாகதம் பேசினார். (இரா. மதிவாணன் ”கருநாட்டிற்குப்” பெருநாடென்றே பொருள்சொல்வார். மயிலை சீனி வேங்கடசாமியும் ”கரு”விற்குப் “பெரு” எனும் பொருளே சொல்வார். பெருநாடு = மகாராஷ்ட்ரம். அடிப்படையில் வட கருநாடும் மாராட்டியமும் ஒரேபொருளென்று இருவருஞ் சொல்வார்.) இவர் பகுதிகளே (modern maharashtra, North Karnataka, Telingana, North Andhra, and Orissa) மாமூலனார் குறிக்கும் மொழிபெயர் தேயமாகும். பங்களர், கங்கரென்போர் அற்றைக்காலத்தில் தமிழ் பேசினார். பின் கொஞ்சங் கொஞ்சமாய் 1000 ஆண்டுகளில் இவர்தமிழ் கன்னடமாகியது. கட்டியர் கடைசிவரை (1950 வரை) தமிழராகவே தங்கிப்போனார். இந்தியவிடுதலைக்கு அப்புறமே இவர் வலிந்து தெலுங்கராக்கப்பட்டார். இப்பகுதிகளுக்கு வடக்கே பொ.உ.மு.100 அளவில் நூற்றுவர்கன்னர் (சாதவா கன்னர்) ஓரோபொழுது தனியாகவும், மற்றபொழுதுகளில் மகதப்பேரரசிற்கு அடங்கியுமிருந்தார். 

கொங்கணர், கலிங்கர், கொடுங்கருநாடர், பங்களர், கங்கர், கட்டியராகிய அனைவரும் விந்தியமலைகளுக்குத் தெற்கேயிருந்தவர். வடவாரியர் அம்மலைகளுக்கு அப்பாலிருந்தவர். (தமிழிலக்கியத்தில் ஆரியர் என்றழைப்பதில் விந்தியமலைகளே விளிம்பை வரையறுத்தன.) இந்த எழுவரையும், செங்குட்டுவன் தன் முதற்படையெடுப்பில் தோற்கடித்தான். இதில் ஆரியர் பெரும்பாலும் விதிசாவில் ஆட்சி செய்த சுங்கராகலாம். அகண்ட மகதத்தை மோரியரிடம் கைப்பற்றிய சுங்கர் வெகுவிரைவிற் சுருங்கினார். பாடலிபுத்தத்தைச் சுற்றிய நிலம் காரவேலன் காலத்தில் சுங்கரிடமில்லை. விதிசா. மகிழ்மதி, உச்செயினி நகரங்களைச் சூழ்ந்தநிலமே அவரிடமெஞ்சியது. காரவேலன் தன் பாகதக்கல்வெட்டில் ’பகசத்தி மித்தா’ என்றே பாடலிபுத்த அரசனைக்குறிப்பான். (சங்கதத்தில் ’ப்ரகசக்தி மித்ரா’ என்றாகும். பஞ்சதந்திரத்து மகதகுமாரர் ”வசுசக்தி, உக்ரசக்தி, அனந்தசக்திப்” பெயர்களை இது நினைவுபடுத்தும்) ”மித்ராக்” கொடிவழியார் எத்தனையாண்டு பாடலிபுத்தம் ஆண்டாரெனத் தெரியாது.

”இந்த 7 பேரோடு நடந்த வண்டமிழ் மயக்கத்தில் (போரில்) யானைமேலிருந்து சேரன்செய்த வேட்டை என் கட்புலத்திற் பிரியவில்லை. இவ்வேட்டமுடிவில் கங்கைப்பேர்யாற்றுப் பெருவெள்ளத்தில் எம் “அரசமகளை” (நற்சோணையை) முழுக்காட்டிய அந்நாளில் ஆயிரம் ஆரியமன்னருக்கு எதிரே நீயொருவனேநின்ற போர்க்கோலம் என்விழியில் அப்படியேநிற்கிறது” என்று வில்லவன்கோதை புகழ்ந்து பேசுகிறான். “இன்னொரு முறை வடக்கே போவோம்; ஆரிய அரசருக்குப் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லாமற் சொல்லுகிறான். இங்கு ஆயிரம் ஆரியமன்னரென்பது அப்படியே எண்ணிக்கையிற் கொள்ளக்கூடாது. அதுவொரு சொலவடை. ”ஆயிரம்பேருக்கு முன் செய்துகாட்டினான்” என்று சொல்வதில்லையா?

[. . . ஆயிரமென்பது தமிழ்வேர்கொண்ட சொல்லே. பேரனைத் தாத்தனாக்கும் வழக்கங் கொண்டவர்  தலைகீழாய்  ஸஹஸ்ரம்>ஸாஸிரம்>ஸாயிரம்>ஆயிரம் என்பார். இத்தகையோருக்கு  மறுமொழி சொன்னால் நீளும். வேறொருமுறை பார்ப்போம்.]

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் தான்.

  "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் வையாபுரியாரிலிருந்து, இக்கால இடதுசாரியர் வரை பலருண்டு. பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் கூடச் சிலம்பின் காலத்தைப் பின் தள்ளுவார்கள்.) செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் மகதத்தை ஆண்டார்கள்? அக்காலத்தில் பெருநகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல்லெடுத்தாவெனில், கிட்டத்தட்ட அவ்விடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர்கன்னர் யார்? நூற்றுவர்கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவன் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?"

  இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயன்றிருக்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.) நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது தான். [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]

மொத்தத்தில் சிலம்பை ஆழ்ந்து படித்தால், பெரும்பாலும் சிலம்புக் கதையின் காலம் கனகர் ஆட்சிக்குச் சற்று முன், கி.மு.75-80 யை ஒட்டியிருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. வெறுமே வரந்தரு காதையையும், மகாவம்சப் பட்டியலையும் வைத்துக் கொண்டு உள்ளிருக்கும் முரண்களைப் பார்க்காது முதலாம் கயவாகுவின் காலமாய் கி.பி.177-யை வைத்துக் கொண்டு அதையே சிலம்பிற்கும் காலமாய்ச் சொல்லுவது சற்றும் பொருத்தமில்லை. 
 





மேலும் தகவலுக்கு:
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்:
http://valavu.blogspot.in/2013/02/1.html
http://valavu.blogspot.in/2013/02/2.html
http://valavu.blogspot.in/2013/02/3.html

புறநானூறு:
http://valavu.blogspot.in/2010/08/2-1.html
http://valavu.blogspot.in/2010/08/2-2.html
http://valavu.blogspot.in/2010/08/2-3.html
http://valavu.blogspot.in/2010/08/2-4.html
http://valavu.blogspot.in/2010/08/2-5.html

மோசிகீரனார்:
http://valavu.blogspot.in/2010/09/1.html
http://valavu.blogspot.in/2010/09/2.html
http://valavu.blogspot.in/2010/10/3.html


________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com