Friday, October 30, 2015

விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளி (1938)

- கோ.செங்குட்டுவன்.கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விழுப்புரம் இரயில்வேயில் பெருமளவு– ஆங்கிலோ இந்திய – தொழிலாளர்கள்தான் பணியாற்றினர். இவர்கள் தங்கள் குழந்தைகள் பயிலுவதற்கு தனியாக ஒரு பள்ளித்தேவை எனக் கருதினர். தங்கள் எண்ணத்தை அப்போதைய புதுச்சேரி மறைமாவட்டப் பேராயர் டாக்டர்.கோலஸ் என்பவரிடம் வெளிப்படுத்தினர்.

இதன்பேரில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கார்மேல் கன்னியர் சபையால் நடத்தப்பட்டு வந்த தெரசா எனும் கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்தை டாக்டர். கோலஸ் அணுகினார். இதனைத் தொடர்ந்து மேரி, ரீட்டா ஆகியோர் தலைமையில் செர்லிஸ்டெய்ன், ஹயாசின்த், பெனிகுனா ஆகியோர் அடங்கிய கார்மேல் கன்னியர் சபையினர் விழுப்புரம் வந்தனர்.

கிழக்குப் பாண்டிரோடில் இரயில் நிலையம் மற்றும் கிறிஸ்து அரசர் ஆலயத்தையொட்டி மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த “லாபோன்சா பங்களா” பள்ளிக்காகத் தேர்வு செய்யப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தினர் அந்த இடத்தை இவர்களுக்கு வழங்கினர். அங்கு, 21.01.1938இல் “சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்” தொடங்கப்பட்டது.

கார்மேல் கன்னியர் சபையால் கேரளாவுக்கு வெளியே சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம், இக்கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் இங்குப் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 18. மேலும், அன்றைய விழுப்புரத்தில் இரயில்வே இருபாலர் பள்ளி இயங்கி வந்ததால், சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் 5,6,7ஆம் வகுப்புகளுடன் தொடங்கப்பட்டது என்பதும், பின்னர்தான் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1947இல் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாகவும், 1949இல் உயர்நிலைப்பள்ளியாகவும், 1978இல் மேனிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.

இங்கு உயர்தர இசைப்பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பியானோ கற்றுக் கொண்ட மாணவர்கள், புகழ்ப்பெற்ற இலண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றனர் என்பது, விழுப்புரத்துக்குப் பெருமை சேர்க்கும் விசயமாகும்.   


  
 
கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com
 
 
 
 
 
 

Wednesday, October 28, 2015

கட்டாக் காலிகளின் கொக்கரிப்பு மேய்ச்சல்

--மறவன்புலவு க. சச்சிதானந்தன்.


25.10.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல்
வயல் வரப்புகளில் 30-40 மாடுகள், ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்தன. யாரோ கலைத்துக் கொண்டிருந்தார்கள்.

24.09.2015 மறவன்புவில் மழை தூறத் தொடங்கிய நாள். காய்ந்த நிலம் ஈரமானது. ஆனாலும் உழவோ விதைக்கவோ முடியாத ஈரம்.

05.10.2015 வரை தூறலாக வழங்கிய வானம், அடுத்த சில நாள்கள் மழையாகப் பொழிந்து தந்தது. உழவு தொடங்கியது. நெல் விதைப்பும் தொடர்ந்தது.

16.10.2015 தொடக்கம் கால்நடைகளை (கோழி, ஆடு, மாடு) வயல்களுக்குள் விடவேண்டாம் என்ற ஒலிபெருக்கி அறிவித்தல் தெருவெங்கும் சந்து பொந்தெங்கும். அடுத்த நாள் வயல்களுள் ஆடுகள் மாடுகள் இல்லை. வீட்டருகு வயல்களில் விதைத்த நெல்மணிகளைச் சில கோழிகள் கொறித்தன. அதுவும் அதற்கடுத்த நாள்களுள் கூடுகளுள் முடங்கின.

விட்டு விட்டுத் தொட்டுத் தொட்டுப் பெய்த மழை. உழவுச் சால்களில் நீர்தேங்குவதும் உடனே வற்றுவதுமாக. புழுக்கம் தரும் வெயிலிலும் காயாத வயல் தரை. முந்தி விதைத்த வயல்கள் பசுமைத் தரைகளாக. 20.10.2015 அன்று மறவன்புலவு பார்க்குமிடமெங்கும் நீக்கமறப் பசுமைத் தரையானது. மறவன்புலவு மட்டுமன்று. கிழக்கே தளங்களப்பு, மேற்கே கைதடி-நாவற்குளி, அப்பால் தச்சன்தோப்பு வரை. கொடும் வெயிலில் காய்ந்த வயல்களில் எரிந்த புல்களைக் கண்டு புகைந்த கண்களுக்குப் பசுமை விரித்துக் குளிர்வித்தனள் நிலம் என்னும் நல்லாள்.

முளைவிட்ட நெல் வயல்களில் மாடுகள். மேய்ந்து கொண்டிருந்தன 30-40 மாடுகள். என் வயிறு புகைந்தது.கைகள் மரத்தன. கால்கள் சோர்ந்தன. கண்கள் பனித்தன. நெஞ்சம் பதைத்தது.

நகைகள் அடைவில். உயர் வட்டியில் கடன். உந்தால் உழுவிக்க, கைகள் விசிற, விரல்வழி சிதறும் நெல்மணிகள் விதையாக, விதைத்த ஐந்தாம் நாள் உந்தால் உழுது மறுக்க, ஒவ்வொரு பரப்புக்கும் சில ஆயிரங்கள் செலவாக, கண்களைக் குளிர்வித்த பசுந்தரையே நெஞ்சில் பாலை வார்த்தது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வாதாரம் தேடும் வேளாண் பெருமகனுக்கு.

அந்தப் பசுமையை, முளைவிட்ட நெல்மணிகளை, மிதித்து, உழக்கி, நுனியில் கடித்துக் குதறும் மாடுகளை என் செய்யலாம்? காலில் கயிறால் கட்டிப் பழக்கமற்ற மாடுகள். எனவே கட்டாக் காலிகள். எவருக்கும் சொந்தமில்லாத மாடுகள். கிட்டப் போனால் எவரையும் முட்டித் தள்ளும் மூர்க்க மாடுகள். கலைத்தால் வாலைக் கிளப்பி மிரட்டும் நாகுகள், நாம்பன்கள், பசுக்கள், எருதுகள்.

1999 மார்கழி தொடக்கம் 2009 ஆவணி வரை 10 ஆண்டுகள் உயர்பாதுகாப்பு வலையமாக மறவன்புலவை அரசுப் படையினர் மாற்ற, மக்கள் விட்டுச் சென்ற மாடுகள் பல்கிப் பெருகிக் கட்டாக் காலிகளாக, சில ஆண்டுகளுக்குமுன் பல பிடிபட, சில பிடிபடாமல் உலவுகின்றன அறுகு வெளி தொடக்கம் தச்சன்தோப்பு வரை நீண்ட கட்டற்ற வெளிகளில்.

மறவன்புலவில் 1250 ஏக்கர் நெற்செய்கை வயல்கள். தனங்களப்பில் 800-900 ஏக்கர் நெற்செய்கை. கைதடி நாவற்குளியில் 750-800 ஏக்கர் நெற்செய்கை. யாவும் இப்பொழுது இந்தக் கட்டாக் காலிகளின் கொக்கரிப்பு மேய்ச்சலில். காலையில் பசும் நெல்லை மேய்தல், பகலில் குளமொன்றில் நீரருந்துதல், இரவில் மேட்டு நிலத்தில் ஓய்வு. எவருக்கும் சொந்தமில்லாத எதுவும் நிலப்பரப்பிலும் நிலத்தின் கீழும் வானத்தில் இருந்தாலும் அவை அரசுக்குச் சொந்தமல்லவா? இந்தக் கட்டாக் காலிகளும் அரசுக்குச் சொந்தமானவையே.

உணவு உற்பத்தியைப் பெருக்கவேண்டும், நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணவேண்டும், அதற்காகக் கமக்காரரை ஊக்குவிக்கவேண்டும். மானிய விலையில் உரம், விதைநெல், கடன் என்பன வழங்கவேண்டும் என்ற கொள்கை அரசுக்கு. அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் அரசே விதைத்து முளைவிட்ட வயலில் கட்டாக் காலி மாடுகளை மேயவிட்டால்?

இஃது எங்கள் பணியல்ல, பிரதேசச் செயலகத்திடம் முறையிடுக என்றார் சாவகச்சேரிக் காவல்நிலையப் பொறுப்பாளர். கட்டாக்காலி மாடுகள் பிரதேச சபையின் பொறுப்பில் வருவன. நெல் விதைத்தபின் வருவன யாவுக்கும் கமநல சேவைத் திணைக்களமே பொறுப்பு என்றார் பிரதேசச் செயலர். நாங்கள் என்ன செய்யமுடியும் என்றார் பிரதேச சபைப் பொறுப்பாளர். பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன் என்றார் கமநலசேவைத் திணைக்களத் துணை ஆணையர். தளங்களப்புக் கமக்காரர் அமைப்புத் தலைவரும் மறவன்புலவுக் கமக்காரர் அமைப்புத் தலைவரும் (ஒலிபெருக்கியில் அறிவித்தவர்) ஆற்றாமையால் கைவிரித்தனர். இன்றே கடிதம் கொடுக்கிறேன் என்றார் அரசின் நிலதாரி.

20.10.2015இல் கட்டாக் காலி மாடுகளை என் கண்கள் கண்டது முதலாக என் முயற்சிகளுக்குக் கிடைத்த விடைகள் இவை. நான் கடிதங்கள் எழுதினேன். இன்று வரை தோராயமாக 50 ஏக்கர் நெல்வயல்களை அரசின் கட்டாக் காலி மாடுகள் மேய்ந்து அழித்தன. தடுக்க எவரும் முன்வரவில்லை. கண்டால் கலைக்கும் சில வேளாண் பெருமக்களைத் தவிர. இன்று 25.10.2015வரை மாடுகள் வயல்களுள் முளைவிட்ட நெல்லை மேய்கின்றன.

அரச அலுவலர்களுக்கு மாதம் முடிய வங்கியில் சம்பளத் தொகை. ஓடித்திரிய மகிழுந்து. அழைக்கத் தொலைப்பேசி. பணிக்குக் குளுரூட்டிய அறைகள். கூட்டங்களுக்குப் போயுள்ளார், களத்துக்குப் போயுள்ளார் மேல்நிலை அலுவலர் என்ற செய்தி தரும் கீழ்நிலை அலுவலர். யாவும் குடிமகன் தரும் ஊழியமும் வசதிகளும். அவர்கள் ஊழியம் பெற்று வசதியுடன் வாழ்கிறார்கள். உணவு உற்பத்திக்கு ஓயாது உழைக்கும் கடன் மிஞ்சிய வேளாண் பெருமகன் தன்னை மாய்ப்பதற்கு முயல்வதைத் தவிர வேறு வழி?

 

மறவன்புலவு க.சச்சிதானந்தன்
 
மறவன்புலவு க.சச்சிதானந்தன்

tamilnool@gmail.com


வேதக்கல்லூரி இயங்கிய “எண்ணாயிரம்”

- கோ.செங்குட்டுவன்.

எண்ணாயிரம் ...

விழுப்புரம் அருகே அமைந்துள்ள சின்னஞ்சிறிய கிராமம். வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த ஒரு ஊர்.  இதற்குக் காரணம் இராசேந்திரச் சோழன் காலத்தில் (கி.பி.1012-1044) இங்கு இயங்கி வந்த வடமொழி வேதக்கல்லூரியாகும். இக்கல்லூரிக்காக சோழப் பேரரசன் 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறான்.

இங்கு இளநிலை மாணவர்கள் 270பேரும், முதுநிலை மாணவர்கள் 70 பேரும், ஆசிரியர்கள் 14பேரும் இருந்திருக்கின்றனர்.  இளநிலை மாணவர்கள் 270 பேர்களில் 40 பேர் ரூபாவதார இலக்கணமும், 75 பேர் ரிக் வேதமும், 75 பேர் யஜுர் வேதமும், 20 பேர் வாஜசனேய சாமவேதமும், 20 பேர் சண்டோக சாம வேதமும், 10 பேர் அதர்வ வேதமும், எஞ்சிய 10பேர் பௌதாயன கிருஷ்ய சூத்திரம், கல்ப சூத்திரம், ஞான சூத்திரம் ஆகியவற்றையும் பயின்றுள்ளனர்.  முதுநிலை மாணவர்கள் 70 பேர்களில் மேம்பட்ட பாடங்களான வியாபரணத்தை 25 பேரும், பிரபாகர மீமாம்சத்தை 35 பேரும், வேதாந்தத்தை 10 பேரும் படித்துள்ளனர்.  

இளநிலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது. முதுநிலை மாணவர்களுக்கு பத்துநாழி நெல் தினசரி கொடுக்கப் பட்டது.  மீமாம்சமும் வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு ஊதியமாக தினசரி ஒரு கலம் நெல் கொடுக்கப்பட்டது. வேதாந்தப் பேராசிரியருக்கு கூடுதல் ஊதியமாக ஒன்றரைக் கலம் நெல் வழங்ககப்பட்டது. மற்ற ஆசிரியர்களுக்கு ஒரே அளவு ஊதியமாக முக்கால் கலம் அல்லது மூன்று குருணி கொடுக்கப்பட்டது.  தானியமாகக் கொடுக்கப்பட்ட இந்த ஊதியத்தைத் தவிர ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்குத் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

வேதாந்த ஆசிரியருக்கு இந்தத் தங்கம் கொடுக்கப்படவில்லை. காரணம், வேதாந்தத்தைச் சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிப்பது சட்டப்படியும், வழக்கப்படியும் தடை செய்யப்பட்டிருந்தது. வேதாந்த ஆசிரியருக்குத் தங்கம் கொடுக்கப்படாதிருந்ததற்கு இதுவே காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பார் “சோழர்கள்” நூலாசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி.
சோழராட்சியில் கோயில்களில் அழகியத் தமிழில் தேவாரம் ஓதப்பட்டது. அதே நேரம் வடமொழி வேதமும் கற்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  எண்ணாயிரம் கிராமத்தில் இயங்கிய இவ்வேதக் கல்லூரி காலப்போக்கில் அழிந்து விட்டது.  இதுபற்றிய விவரங்களைச் சொல்லும் கல்வெட்டுகள் மட்டும், இங்குள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலில் எஞ்சி நிற்கின்றன.எண்ணாயிரம் – கவிகாளமேகம் பிறந்த ஊர் என்பதும் கூடுதல் சிறப்பாகும். 
கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே....

-- தேமொழி.

*A journey from Madras  என்ற நூலில் வெளியான, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் பயன்பட்ட உழவுக் கருவிகளின் படங்களின் தொகுப்பு பக்கம் 38:


பக்கம் 47:


பக்கம் 51:


பக்கம் 53:


பக்கம் 45:


ஏற்றம்:_____________________________________

*A journey from Madras 
through the countries of Mysore, Canara, and Malabar, performed under the orders of the most noble the Marquis Wellesley, governor general of India, for the express purpose of investigating the state of agriculture, arts, and commerce; the religion, manners, and customs; the history natural and civil, and antiquities, in the dominions of the rajah of Mysore, and the countries acquired by the Honourable East India company
by Hamilton, Francis, 1762-1829. 1n; East India Company cn

Published 1807தேமொழி
தேமொழி

themozhi@yahoo.com