Friday, June 19, 2015

அலெக்சாந்தரும் சமண முனிவர்களும்


-செல்வன்.

இந்தியா மேல் படையெடுத்து வந்த அலெக்சாந்தர் தட்சசீல நகரத்தை பிடித்தான். அந்த நகரில் ஜைன சன்னியாசிகளுடன் அவனுக்கு ஏற்பட்ட தொடர்பை பழங்கால கிரேக்க வரலாற்று ஆசிரியர் ப்ளுடார்க் உள்ளீட பலரும் விவரிக்கிறார்கள்.

தட்சசீல நகரில் நிர்வாண ஜைன சாமியார்கள் இருப்பதாக கேள்விப்பட்டதும் அலெக்சாந்தருக்கு வியப்பு தாங்கவில்லை. அவர்கள் தட்சசீல மக்களை அலெக்சாந்தருக்கு எதிராக தூண்டிவிடுவதாக புகார் வந்தது. சரி என சொல்லி அவர்களை பிடித்துவர அலெக்சாந்தர் படைகளை அனுப்பினான். பத்து நிர்வாண சாமியார்களை பிடித்துவரவும் அவர்களை பார்க்க ஒட்டுமொத்த கிரேக்க படையே கூடிவிட்டது."நீங்கள் எல்லாம் யார்?" என அலெக்சாந்தர் கேட்க

"நீ யார்?" என அவர்கள் தலைவரான தண்டமிஸ் (கிரேக்க ஒலிபெயர்ப்பு) திருப்பி கேட்கிறார்

"நான் அலெக்சாந்தர். கடவுளின் மகன்" (கிரேக்க கடவுள் ஜீயஸின் மகன் அலெக்சாந்தர் என்பது அன்றைய நம்பிக்கை)

"நானும் தான் கடவுளின் மகன்.."

இந்த பதிலால வியப்படைந்த அலெக்சாந்தர் "உங்கள் துடுக்குதனத்துக்கு எல்லாருக்கும் மரணதண்டனை விதிக்கிறேன். ஆனால் நீங்கள் ஞானிகள் என எல்லாரும் சொல்லுகிறார்கள். அதனால் உங்களை சில கடினமான கேள்விகளை கேட்பேன். யார் தவறான விடையை முதல் முதலாக சொல்கிறார்களோ அவர்களை முதலில் கொல்வேன். அடுத்து மற்றவரை கொல்வேன். இதுக்கு தண்டமிஸ் தான் நீதிபதி. அவர் தான் யாருடைய பதில் மோசம் என சரியாக சொல்லவேண்டும்" என்கிறான்

சரி என்றதும் முதல் கேள்வியை கேட்கிறான்

"எண்ணிக்கையில் அதிகமானவர்கள் யார்? உயிருடன் இருப்பவர்களா? இறந்தவர்களா?"

"உயிருடன் இருப்பவர்கள் தான். இறந்தவர்கள் யாருமே இப்போது இல்லையே?"

"பெரும் உயிரினங்களை உற்பத்தி செய்வது எது? கடலா, பூமியா?"

"பூமிதான். கடலே பூமியில் தானே இருக்கிறது?"

"இருப்பதிலேயே அதிக தந்திரமான மிருகம் எது?"

"இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாத மிருகம் தான்.."

"நீங்கல்லாம் எதுக்கு தட்சசீல மக்களை எனக்கு எதிராக தூண்டினீர்கள்?"

"அவர்கள் தைரியமாக வாழவேண்டும், அல்லது தைரியமாக சாகவேண்டும் என்பதால்.."

"எது முந்தி வந்தது, இரவா, தினமா?"

"தினம் தான்..ஒரு தினம் முந்தி.."

"மிகவும் விரும்புதலுக்குரிய மனிதன் யார்?"

"அதிக பலமிருந்தும், பிறர் அவனைகண்டு அஞாமல் இருக்கும் தன்மை உள்ள மனிதனே அனைவராலும் விரும்பபடகூடியவன்..."

"மனிதன் என்ன செய்து கடவுளாக முடியும்?"

"மனிதனால் செய்ய முடியாத ஏதோ ஒரு விஷயத்தை செய்வதன் மூலம்.."

"ஒரு மனிதன் எத்தனை நாள் வாழவேண்டும்?"

"வாழ்வதை விட சாவதே மேல் என நினைக்கும் காலம் வரை..."

"வாழ்வு, சாவு? இரண்டில் எது வலுவானது?"

"வாழ்வு..ஏனெனில் அது பல நோய்களையும்,. பிரச்சனைகளையும் தாங்குகிறது..சாவால் அது முடிவதில்லை"

இப்படி அனைத்து கேள்விகளுக்கும் அனாசயமான பதில் வரவும் அசந்த அலெக்சாந்தர் "இதில் மோசமான பதிலை சொன்னது யார்?" என கடைசிகேள்வியை தண்டமிஸை நோக்கி கேட்கிறான்

"முதல் பதில் தான் இருப்பதுலேயே மோசமானது....அதன்பின் 2,3,4.." என வரிசையாக எல்லா பதிலும் மோசம்" என்கிறார் தண்டமிஸ்

"இப்படி ஒரு தப்பான தீர்ப்பை கொடுத்ததுக்கு உன்னை முதலில் கொல்லுவேன்" என்கிறான் அலெக்சாந்தர்

"என்னை முதலில் கொல்ல  முடியாது. ஏன் என்றால் முதல் முதலாக மோசமான பதிலை சொன்னவரை முதலில் கொல்வதாக தான் சொன்னீர்கள். என்னை நீதிபதியாகவும் நியமித்தீர்கள். என் தீர்ப்பு முதல் சன்னியாசியின் விடைதான் முதல் தவறான விடை" என்றதும் மகிழ்ச்சியடைந்த அலெக்சாந்தர் அனைவருக்கும் பரிசுகளை கொடுத்து விடுதலை செய்து அனுப்பினான்

இப்படி அன்றைய கிரேக்க தத்துவஞானிகளால் விடைகாண முடியாத கேள்விகளுக்கு அனாசயமாக பதில்கூறி படையெடுப்பில் யாராலும் வெற்றிகொள்ளமுடியாத மகா அலெக்சாந்தருக்கு ஆன்மிகரீதியான தோல்வியை பரிசளித்தார்கள் நம் சமண முனிவர்கள்.இவர்களை குறிக்க ஜிம்னோசொபிஸ்ட் (நிர்வாண ஞானிகள்) எனும் வார்த்தை அன்றுமுதல் கிரேக்க மொழியில் ஏற்பட்டது.________________________________________________________

செல்வன் - holyape@gmail.com
________________________________________________________


Saturday, June 13, 2015

தமிழர்களின் விளையாட்டு
தமிழர்களின் விளையாட்டு எத்தனை என்பது தெரியுமா ?

விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்பதும் சில இடங்களில் கால்பந்து கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் காலை இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றாலும் கணினியில் விளையாடுவதும் இது தான் விளையாட்டு என்றாகி விட்டது . பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்கள் இன்று அழிந்து போய் வருகிறன. . இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளயாடப்படுவதில்லை. சிறுவர் (பையன்கள்) ஆண், பெண் என இரு பாலருக்கும் , அணி விளையாட்டு என பல வகை இருந்துள்ளது.நான் படித்து எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் .

இனி இந்த விளையாட்டை விளையாட ஆசைப் படுவீர்கள்.

வகையாய் பிரிக்கப் பட்டுள்ளது.


சிறுவர் (பையன்கள்)

கைத்திறன்:
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலிட
4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண் பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி
16. கோடுகிழித்து ஆடும் குண்டு (பூந்தா) /கோலி விளையாட்டு
17. குழி பறித்து ஆடும் குண்டு.(சிறு குழிக்குள் விரலால் அடித்துக் கொண்டுவந்து சேர்த்தல்) /கோலி விளையாட்டு

கால் திறன்:
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு:
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு:
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு:
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி:
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்:
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா


சிறுமியர்

உடல்-திறன்:
1. சில்லு (சில்லி)

கைத்திறன்:
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்:
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு:
1. கும்மி


இருபாலர் இளைஞர்

உடல் திறன்:
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்திஞ
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை
22. காலாட்டுமணி கையாட்டுமணி

உல்லாசம்:
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்:
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தாம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்):
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு:
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்


காளையர்

1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்


கன்னியர்

1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப் பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்

1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்


பாப்பா விளையாட்டு

1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு (ஐலேலம் ஐலகப்பல் விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)


எல்லாரும் விளையாடும் விளையாட்டு

கலை விளையாட்டு:
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்:
(மக்கள் ஆடல்கள் / விழா விளையாட்டு)
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு:
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி


தொகுப்பு: திரு. மதிவாணன்
(ssmmathivanan@gmail.com)

மேலதிகத் தகவல் உதவி: முனைவர். மலர்விழிமங்கையர்க்கரசி
Wednesday, June 10, 2015

ராஜராஜ சோழனின் முதல் போர்

-- ஆர். ஜெய்குமார்.

காந்தளூர்ச் சாலைப் போர், சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மேற்கொண்ட மிக முக்கியமான போர். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் போர், முதலாம் ராஜராஜனுக்கும் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மனுக்கும் இடையில் நடந்தது.

காந்தளூர்ச் சாலை
காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம் என ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இந்த இடம் முற்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.
போர்க் கலைகள் மட்டுமின்றி போர் நுட்பங்களும், வியூகங்களும் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. தனுர்வேதம் எனப்படும் வில்வித்தைப் பயிற்சி, களறிப்பயிற்சி, வர்மம் ஆகிய போர்க் கலைகள் போதிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு ராஜாங்க நிர்வாகமும் பயிற்றுவிக்கப்பட்டுவந்துள்ளது.
இச்சாலையின் போதகர்கள் சட்டர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர். இச்சாலையின் தலைமைச் சட்டர் பொறுப்பு மதிப்பு மிக்க ஒன்றாகத் திகழ்ந்துள்ளது. தலைமைச் சட்டருக்கு ஓர் அரசனுக்குரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இச்சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

இங்குப் பல்வேறு சிறு சிறு நாடுகளைச் சேர்ந்த சிற்றரசர்களும், படைத் தளபதிகளும், இளவரசர்களும் பயிற்சி பெற்றுள்ளனர். அக்கால கட்டத்தில் நடந்த பல முக்கிய அரசியல் நடவடிக்கைகளிலும், போர்களிலும் இச்சாலையின் பயிற்சி முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது .


 செங்கம் கல்வெட்டு
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01783/history__2__1783408g.jpg

ராஜராஜ சோழனும் பாஸ்கர ரவி வர்மனும்
கி.பி. 985ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் ராஜராஜ சோழன். இவருடைய தந்தை சுந்தர சோழன் ஆவர். காந்தளூர்ச் சாலைப் போர் ராஜராஜனின் முதல் போராகப் போற்றப்படுகிறது.

பாஸ்கர ரவி வர்மனின் காலகட்டம் கி.பி. 962இலிருந்து கி.பி. 1019வரை. இவருடைய ஆட்சியில் சேர நாடு, குடமலை நாடு, வேணாடு, கொங்கு நாடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. அதவாது இன்றைய கேரளத்தின் கோழிக்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள பகுதி. மிக நீண்ட ஆட்சிக் காலம் உடைய சேர மன்னன் பாஸ்கர ரவி வர்மன். 58 ஆண்டுக் காலம் இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் யூதர்களுக்குச் சமூகத்தில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரமாக இவர் யூதர்களுக்குத் தாமிரப் பட்டயம் (Jewish Copper Plate) அளித்துள்ளார் . இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் சேர நாட்டில் காந்தளூரில் போர்ப் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வந்துள்ளது.

போருக்கான பின்புலம்
முற்காலச் சோழர்கள் வீழ்ச்சிக்குப் பின் உறையூரில் சிற்றரசர்களாகக் குறுகியிருந்த சோழர்கள், விஜயாலய சோழன் காலத்தில் கி.மு. 9ஆம் நூற்றாண்டில்தான் எழுச்சி பெற்றனர். அவர், முத்தரையர்களை வீழ்த்தித் தஞ்சையைக் கைப்பற்றி, தஞ்சைச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தார். இதன் பிறகு பெரும் செல்வாக்குடன் வளர்ந்த சோழ சம்ராஜ்ஜியம் பராந்தகச் சோழன் காலத்தில், ராஷ்டிரகூடர்களுடன் நடந்த தக்கோலம் (அரக்கோணம்) போரில் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியது.

இப்போரில் பராந்தகனின் மகன் ராஜாதித்தன் கொல்லப்பட்டார். பராந்தகனின் இறப்புக்குப் பின் அவருடைய இளைய மகன் கண்டராதித்தன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். கண்டராதித்தன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் பலவீனமடைந்தது.
சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. அவர் ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டார். ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். சேர, பாண்டிய, ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர்ச் சாலையின் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி எனச் சொல்லப்படுகிறது.

ராஜராஜ சோழன் தன் குருவுடன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01783/history__1__1783409g.jpgகாந்தளூர்ச் சாலைப் போர்
தொண்டைநாடு, கொங்குநாடு, பாண்டியநாடு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிய ஒரு வலுவான அரசாக மாறியிருந்த சோழப் பேரரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது சேர நாட்டில் இயங்கிவந்த காந்தளூர்ச் சாலையாகும். நுட்பமான போர்த் தந்திரங்கள், தற்காப்புக் கலைகள், தாக்கும் நுட்பம் ஆகியவை அங்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில் இது போன்ற போர்ப் பயிற்சிக் கூடங்கள் அண்டை நாடுகள் எங்கும் செயல்படவில்லை. தன் அண்டை நாட்டில் ஒரு போர்ப் பயிற்சிக் கூடம் செயல்படுவது சோழ நாட்டின் பாதுகப்புக்கு உகந்ததல்ல என்று கருதியதால் ராஜராஜன் இப்போரை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் தன் சகோதரனான ஆதித்த கரிகாலனின் கொலையில் பின்னணியில் இருந்து செயல்பட்டது காந்தளூர்ச் சாலையில் பயிற்சிபெற்ற வீரர்கள்தான் என்பதால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப் போர் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு கூற்று உண்டு.

முதலில் ராஜராஜன் சேர நாட்டிற்குத் தன் தூதுவரை அனுப்பிப் பேச்சு வார்த்தை நடத்த முயன்றான். ஆனால் அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட சோழ நாட்டுத் தூதுவரைச் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மா சிறைபிடித்தார். இதுதான் ராஜராஜன் உடனடியான படையெடுப்புக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.

ராஜராஜனுக்கும் பாஸ்கரவர்மனுக்கும் இடையிலான இப்போர் கடற்போராக இருந்ததது எனவும் சொல்லப்படுகிறது. திருவனந்தபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் ராஜராஜன் சேரர்களின் கப்பல்களை வீழ்த்தி வெற்றியடைந்தார்.

‘காந்தளுர்ச் சாலை கலமறுத் தருளிய கோவி இராஜராஜ கேசரி’ என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பது கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம். இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றி பெற்றான். காந்தளூர்ச் சாலை சோழர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

சர்ச்சைகளும் விவாதங்களும்
காந்தளூர் சாலைப் போர் குறித்தான விவாதங்கள் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தளூர்ச் சாலை என்பது ஒரு கடற்கரை நகரம் என்றும் இப்போர் கப்பற்படைகளுக்கு இடையில் நடந்ததெனவும் சொல்லப்படுகிறது. ராஜராஜன் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ள சொற்களின்படி, (‘காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி’) கலம் என்றால் கப்பல் எனப் பொருள் கொண்டு சில ஆய்வாளர்கள் இது போன்ற ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இது பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காந்தளூர்ச் சாலை என்பது பிராமணர்களுக்குச் சோறிடும் ஒரு கூடம் என்றார். அங்குச் சோறு அடுவதை சேர மன்னன் நிறுத்திவிட்டான். சோழ மன்னன் ராஜராஜன் அதில் தலையிட்டுக் காந்தளூர்ச் சோற்றுச் சாலையில் உணவு வழங்க வேண்டியதை முறைப்படுத்தினர் என்னும் புதிய கருத்தை வெளியிட்டார். ஆனால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

செங்கம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ‘நடுகல்’லில் ‘சாலைய் மறுத்து அங்குள்ள மலைஆளர் தலை அறுத்து’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காந்தளூர்ச் சாலைப் போரில் தன்னை எதிர்த்த மலையாளர்களின் தலையை அறுத்தான் எனபதை அறிய முடிகிறது.
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலே காந்தளூர்ச் சாலைப் போர் என நடன. காசிநாதன் தன் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் மேற்கொள் காட்டப்படவில்லை.

ஆதாரங்கள் : 1.இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் – சி. இளங்கோ, அலை

நன்றி: தி இந்து நாளிதழ்
ராஜராஜ சோழனின் முதல் போர் - திஇந்து
http://tamil.thehindu.com/society/lifestyle/article5762389.ece