Monday, January 29, 2018

கடலோடிகளின் கதை

——   கே.ஆர்.ஏ. நரசய்யா.

    சென்றவருடத்தின் பிற்பகுதியில் நான் கனடா சென்றிருந்தேன். அங்குள்ள தமிழ்ச் சங்கம் கூட்டிய ஒரு அமர்வில் அங்கு வாழ் இலங்கைத் தமிழர்களைச் சந்திக்க நேர்ந்தது. எங்கேயோ பிறந்து உலகமெல்லாம் ஓடிக் களைத்து, இருக்க இடமின்றி தவித்து வந்த பலருக்கு புகலிடமளித்து வரவேற்றது கனடா. அங்கு சேர்ந்தபிறகு இத்தனை இடர்கள் பட்டிருப்பினும் சிறிதும் தமிழையோ தமது உன்னத மதத்தையோ கலாச்சாரத்தையோ மறவாது போற்றும் இவர்களது மனநிலை கண்டு வியந்தேன். அதிலும் சாதாரண மனிதர்கள் அங்கு சென்று, தமது வழித்தடங்களை மறக்காது, தமது பின்புலங்களைச் சரிவர நினைவு கூறும் ஆற்றல் கண்டும் அகமகிழ்ந்தேன். ஆகையால் ஒரு எளிய இலங்கைத் தமிழரான, பொன்னம்பலம் சிவகுமாரன் என்ற ஒரு இளைஞர், தொழிலால் கடலோடி, தம்மால் முயன்ற மட்டும் உழைத்து எனக்கு அனுப்பி வைத்த "வல்வெட்டித் துறைக் கடலோடிகள்" என்ற ஒரு அழகான நூல் எனது கவனத்தை முற்றிலுமாக ஈர்த்தது.  அழகான என்று கூறுகையில், அதன் வடிவ அமைப்பையும் தன்னுள் கொண்டிருக்கும் பொருளையும் சேர்ந்து தான் கூறுகிறேன். இவ்வளவு சிறப்பாக நூல் அமைக்கப்படுவது கனடாவின் தொழில் நுட்பத் திறனாலும், அங்கு வாழ் இலங்கைத் தமிழரின் முயற்சியாலும் தான்.


வல்வெட்டித்துறை கடலோடிகள்
ஆசிரியர்: செல்வராசகோபால், க. தா.
வெளியீடு: 2011
வெளியீட்டாளர்: விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியம்
http://www.noolaham.org/wiki/index.php/வல்வெட்டித்துறை_கடலோடிகள்


    இந்நூல் முதன் முதலாக விருத்த வடிவில் ஆக்கப்பட்டது கலாநிதி க. தா. செல்வராசகோபால் என்ற ஈழத்துப்பூராடனார் என்பவரால்.  அதைச் சேகரித்துக் கொடுத்தவர் அருள் சுந்தரம் விஷ்ணுசுந்தரம் என்பவர். அதை ஒரு புத்தக வடிவில் தொகுத்தவர் பொன்னம்பலம் சிவகுமாரன்.

    இந்நூலில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது "அன்னபூரணி"  என்ற கப்பலின் கதை சொல்லப்பட்டிருக்கும் எளிய ஆனால், தவறில்லாத முறை. இது ஒரு பாய்மரக் கப்பல். கட்டப்பட்டது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வல்வெட்டித்துறை என்னும் இலங்கைத் துறைமுகத்தில் தமிழர்களால்.

    இந்நூல் தொகுப்பதில் அதிக சிரத்தை காட்டப்பட்டுள்ளது. முக்கியமாக, வல்வெட்டித்துறையின் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் வித்துவான் வ. மு. கனகசுந்தரம், பூ. க. முத்துக்குமாரசுவாமி, செ. வைத்திலிங்கம் பிள்ளை, இ. கே. ராஜகோபால், ஆதிகோயிலடி ஜெயம் (ந. சிவரெத்தினம்), வல்வை ந. நகுல சிந்தாமணி மற்றும் பா. மீனாட்சி சுந்தரனார்.

    இந்நூல் ஆரம்பமே நம்மை வியக்க வைக்கிறது. துரதிருஷ்டவசமாக இது போல தமிழ் நாட்டில் ஒரு நூலும் கிடையாது. எழுதப்பட்டாலும் அதற்கு எவ்வாறு வரவேற்பு இருக்குமெனச் சொல்ல இயலாது.

ஆரம்பத்திலேயே பெயருக்கான காரணம் விளக்கப்படுகிறது:
    ”தனத்திரு தானியந் தைரியம் தகைசுகம்
        தந்திடும் தகவாம் தயவுடன்
    மனம்நிறை மாமதி மாண்புறு அறிவுடை
        மட்டறு கல்வியும் வீரமும் மதிப்பதும்
    அனைத்துல காளுமை ஆட்சியாம் அருளவை
        ஆகிட அருளென் றங்கரம் இணைத்துனை
    தினந்தினம் வேண்டிலென் தேவிகாள் திருவருட்
        திகழ்வுறு பாக்கியம் தேடினேன் தருகவே.

என அட்டலெட்சுமி அம்மாள் அலங்காரம் என்ற நூலில் ஒரு பா உண்டு. இதனில் சொல்லப்பட்ட எட்டுச் (அட்ட) செல்வங்களையும் "வடமொழியில் தனம், தானியம், தைரியம், சௌரியம், வித்தியா, ஜெயம், மகிமை, ராஜ்யம் என்பர்” என்ற சொற்றொடர்களுடன் முதலாகும். ஒரு கப்பல் நாட்டிற்குச் செல்வம் கொண்டு வரும் என்பதைத் திறம் பட வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    இந்நூலைத் தமிழகம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை! அரசு நூலகங்களில் வைக்கப்படவேண்டிய நூலெனத் திட்டமாக என்னால் கூற இயலும்.

    முதலில் நூலின் அமைப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சிறந்த முறையில் படங்களுடனும் விளக்கங்களுடனும் அழகான ஆர்ட் தாட்களில் கையில் எடுக்கும் போதே ஒரு விதமான இறையுணர்வை ஏற்படுத்துகிறது. இத்தனை வருடங்களில் நான் படித்த கடல், கப்பல் பற்றிய தமிழ் நூல்களில் எவையும் இதன் ஒரு சிறு பகுதிக்குக் கூட சமானமாகாது என்பது என் கணிப்பு.

    இந்நூலின் ஒரு பகுதியாக, விருத்த வடிவில் அன்னபூரணி அம்மாளின் ஆழ்கடல் பயண வரலாற்று நிகழ்வின் இலக்கிய ஓவியம் என்ற பெயரில், 30 பக்கங்களில் வல்வெட்டித்துறைக் கடலோடிகளால் 1937 – 38 ல் செலுத்தப்பட்டு அமெரிக்க மாசசூசெட்ஸ் மாநில குளோசெஸ்டர் துறைமுகத்தைச் சென்றடைந்த என்ற தொடக்கத்துடன் அழகாக ஈழத்துப் பூராடனார் வடித்துள்ளது தரப்பட்டுள்ளது. விவேகானந்தர் படத்துடன் ஆரம்பமாகும் அவ்விருத்தம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் இந்தியனைத் தலை நிமிர்ந்து நிற்கச்செய்யும்.
விவேகானந்தரைப் பற்றிச் சொல்லுகையில்,
    ”நிமிர் நெஞ்சு சீருடையில் நிலவென்னதலைப்பாகை
    நெடுமுயரம் நீள்மேனி. நிலைத்த சிலை தனை நிகர்த்து,
    அமிர்தமென ஆங்கிலத்தில் அங்கு இடம் பெற்றதொரு
    அனைத்துலக மத ஆய்வு அவை தனிலே ஏறி நின்று
    திமிரழத்த ஞானியவர் திருக்கரந் தனைக் குவித்து,
    திரண்டிருந்த மக்கள்தமை தெய்வீகச் சகோதரரே
    தமிழொத்த சகோதரிகாள் தானென்று விழித்துரைக்க
    தாரணியோர் அரண்டு விட்டார் தருவார்த்தை என்றுரைத்தார். .”
இது போல இந்தியத் தமிழர் எவரும் எழுதவில்லையே என்று என் மனம் ஏங்கிற்று!

    சிறந்த முறையில் பயணத்தின் தொடர்ச்சியை 28 பகுதிகளாக விருத்த வடிவில் தந்துள்ளார், ஈழத்துப் பூராடனார்.

    எனது கவனத்தை மிகுவாக ஈர்த்தது புலம் பெயர்ந்து குலம் வளர்த்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்ற பகுதி இதை ஒரு தனித்த ஆய்வெனவே கொள்ளலாம். பல உண்மைகள் மிக எளிதாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

    அன்னபூரணியின் அமெரிக்க வருகை ‘பாஸ்டன் க்ளோப்’ என்ற பத்திரிகையில் 1938 ஆகஸ்ட் 2 அன்று விரிவாக ஆங்கிலத்தில் தரப்பட்டிருந்ததை இங்கே சேர்த்திருப்பது நூலின் மதிப்பை நன்கு உயர்த்துகிறது. இம்மாதிரி ஆவணங்களுடன் சொற்ப நூல்களே தமிழகத்தில் காணலாம்.

    அப்பத்திரிகை, ஜோசப் கோன்ராட் என்ற சிறந்த கப்பல் பற்றிக் கதைகள் எழுதிப் பிரபலமடைந்த எழுதிய நாவலொன்றைப் படிப்பது போல உள்ளது இக்கப்பலின் நீண்ட பயணமும் வருகையும் என்றே குறிப்பிடுகிறது. ஏனெனில் இது (அன்னபூரணி) ஒரு பாய்மரக் கப்பல். அமெரிக்கர்களுக்கு  அவ்வருகை ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.

    1937 பிப்ரவரி 27 ஆம் நாள் வல்வெட்டித்துறையினின்றும் புறப்பட்ட இக்கப்பல், ஆகஸ்டு 1, 1938 அன்று மசாசூசெட்ஸ் மாநிலத்தின் குளோசெஸ்டர் துறைமுகத்தையடைந்தது ஒரு பெரும் பணிதான்.

    அத்துறைமுகத்தைச் சென்றடைந்தபோது மாலுமிகள் தமது வந்தனங்களை ஆண்டவனுக்குச் செலுத்திவிட்டு, நெற்றி நிறைய விபூதியுடன் நின்ற காட்சியை ஆங்கிலத்தில் பாஸ்டன் க்ளோப் இவ்வாறு விவரிக்கிறது:
The Sacred Ash
    Some of the Hindus sported a yellow dab on the forehead. The inquirer was informed that the dab was called the 'sacred ash' and its presence brought their God, Siva, closer to them. Siva knew all personally who wore that mark, they said. A spot on the forehead is whitewashed and then powdered and the dab stuck on that spot.  The Hindus who belong to a high caste in Ceylon held their weekly worship on Friday night, their Sunday, by the way.

    சொல்லப் போனால், இது ஒரு சாதாரண நூலல்ல; இதன் மகிமை என் போன்ற கடலோடிகளுக்கு முக்கியமாகத் தென்படும். எவ்வளவு தான் படித்துத் தெரிந்து கொண்டாலும், அவ்வுணர்வு கடலில் கப்பலில் சென்றவர்களுக்குத் தான் தெரியும். இவர்கள் தான் உண்மையான தேசபக்தர்கள். நாட்டின் தூதுவர்கள். உழைப்பினாலும், தளராத முயற்சியாலும் உயர்ந்தவர்கள்.

    நூலைப் படித்து முடிக்கையில் ஏதோ ஒரு சக்தி நம்மையே பிடித்து ஆட்டுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    நூலாக்கியவர்களைச் சிரம் தாழ்த்தி வாழ்த்துவதைத் தவிர என்ன செய்ய இயலும்? முக்கியமாக நண்பர், சக கடலோடி, பொன்னம்பலம் சிவகுமார் போற்றுதலுக்குரியவர்.

________________________________________________________________________
தொடர்பு:  கே.ஆர்.ஏ. நரசய்யா (narasiah267@gmail.com)
Sunday, January 28, 2018

அட்லாண்டிக் கடலைக் கடந்த தமிழ்க்கப்பல்


——   செல்வன் 


    அட்லாண்டிக் கடலைக் கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க்கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக்கப்பல் இதுவே எனத் தெரிகிறது.

    1938ம் ஆண்டு வல்வட்டித்துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக்கப்பல் வணிகம் செய்து வந்தனர். கொச்சின், ரங்கூன் முதல் அரபு நாடுகள் வரை அவர்களின் பாய்மரக்கப்பல்கள் சென்று வந்தன.

    1938ல் வளவை மாரியம்மன் தீர்த்தத்திருவிழாவில் கலந்துகொண்ட அன்னபூரணி எனும் கப்பலின் அழகில் மயங்கிய வில்லியம் ராபின்சன் எனும் அமெரிக்கர் அந்தக் கப்பலை விலைக்கு வாங்கினார். அதை பாஸ்டன் துறைமுகத்துக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஐந்து தமிழ் மாலுமிகளுக்கு வழங்கப்பட்டது

    கனகரத்தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் கிளம்பிய அக்கப்பல் மாலுமிகள் யாருமே அமெரிக்காவை முன்னர் கண்டதில்லை. சூயஸ் கால்வாய் வழியாகச் சென்று ஐரோப்பா வழியே அமெரிக்கா செல்லவேண்டும். கொலம்பஸின் கடல்பயணத்தை மிஞ்சிய தூரம். கொலம்பஸிடம் மூன்று கப்பல்களும் நூற்றுக்கணக்கான மாலுமிகள் இருந்தனர். இவர்கள் ஐந்தே பேர்.

படத்தில்: அன்னபூரணி கப்பலில் தமிழ் மாலுமிகள்

    அத்தனை தடைகளையும் தாண்டி பாஸ்டன் துறைமுகத்துக்கு மூன்று மாதத்தில் கப்பலை கொண்டு சென்றுவிட்டனர். சட்டை அணியாமல் திருநீறு, குடுமியுடன் கூடிய ஐந்து பேர் பாஸ்டன் துறைமுகத்தில் பாய்மரக் கப்பலில் இறங்கிய காட்சியை காண பாஸ்டன் நகரமே கூடியது. பனிமூட்டம், காற்று வீசாத கடல் எனப் பல தடைகளைத் தாண்டி இந்தச் சாதனையை அவர்கள் செய்தார்கள்.

    அதன்பின் அந்த ஐந்து மாலுமிகளும் பாஸ்டனில் தங்கிவிட்டதாகத் தெரிகிறது. தகவல் உதவி: 

(1) வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் - ராஜகோபால்
http://www.noolaham.org/wiki/index.php/வல்வெட்டித்துறையிலிருந்து_அமெரிக்கா_வரை_கப்பலோட்டிய_தமிழர்கள்

(2) அமெரிக்க கடற்படையில் வல்வெட்டித்துறை அன்னபூரணிஅம்மாள் கப்பல் ! - பொன்.சிவா(சிவகுமாரன்)
https://eelamaravar.wordpress.com/2017/03/12/annapoorani-ship/

(3) “Westward ho!”
http://www.sundaytimes.lk/090419/Plus/sundaytimesplus_01.html________________________________________________________________________
தொடர்பு:  செல்வன் (holyape@gmail.com)


திருவாடானைக் கோயில் கல்வெட்டுகள்


——   முனைவர் கி. காளைராசன்

    பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற தலங்கள் பதினான்கு.  அதில் திருவாடானைத் திருத்தலமும் ஒன்று (புவியிடக் குறிப்பு: 9.783656, 78.919450).  

    திருவாடானையில் சுவாமியின் பெயர் ஆதிரெத்னேசுவரர்.  ஞானசம்பந்தரின் பதிகமும், அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழும், திரு உ.  வே.  சா.  அவர்களின்  திருத் தலங்கள் வரலாறும், சேக்கிழார் பெரியபுராணமும்,  திருவாரூர் சாமிநாத தேசிகர் இயற்றிய திருவாடானைப் புராணமும் இக்கோயில் உறையும் இறையின்  சிறப்பைக் கூறுகின்றன. 
1) திருவாடானை சுவாமி சந்நிதிக்கு அருகே மண்டபத்தின் தரையில் உள்ள கல்வெட்டுமுதல் கல்வெட்டின் பாடம்:
1 .....த்தான் எழுத்து
2  ...எழுத்து படைமுகமழ(கி)ய..
3  தேவன் பொன்னாண்டான்  தற்குறியு
4  த்தான் எழுத்து வத்தராய கங்கன் எழுத்து
5  (யான் போ..)ழகியாள் தற்குறி
6  ருமாள் எழுத்து இன்னாட்டுக்கு
7  சொல்ல இப் ப்ரமாணம்  எழுதி
8  ட்டுக் கணக்கு கூத்தாடுவான் வி
9 ன் சேனாவரையன் எழுத்து

குறிப்பு: இது கல்வெட்டின் இறுதிப்பகுதி. சாட்சிக் கையொப்பம்  இட்டவர்களின் விவரம். தேவன் பொன்னாண்டான், வத்தராய கங்கன்,  (அ)ழகியாள், (பெ)ருமாள், சேனாவரையன் போன்றோர் கையொப்பம் இட்டுள்ளார்கள். இவர்களில், படிப்பறிவு பெறாதவர்கள் இருவர்; இவர்கள் இருவரும் கையொப்பம் இடாமல் தம்முடைய அடையாளத்துக்கென்று தம் குறிகளை (கீறல்களை?) இட்டுள்ளார்கள. இதை “தற்குறி”  என்று  மூல ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பர். இதன் அடிப்படையிலேயே, இந்த மரபு தொடர்ந்து, இன்றும் எழுத்தறிவில்லாதவர்களைத் “தற்குறி” என்று வழங்கும் வழக்கு நிலைபெற்றுவிட்டது. தற்குறிப் பெண்மணி ஒருத்தி சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் நிர்வாகத்தில் ஏதோவொரு பணியில் ஈடுபட்டவளாக இருக்கலாம். பிரமாண ஓலை எழுதியவன், நாட்டுக்கணக்கு (கணக்கன்) கூத்தாடுவான் என்பவன் ஆவான்.  ஒவ்வொரு ஊருக்கும் ஊர்க்கணக்கு இருப்பர்; ஒவ்வொரு நாட்டுப்பிரிவுக்கும்  ஒரு நாட்டுக்கணக்கு இருப்பர். நாட்டுக் கணக்கு இந்த ஆவணத்தை எழுதியதாலும், சாட்சிக் கையெழுத்து பலர் இட்டதாலும், இக்கல்வெட்டு குறிப்பிடும்  நிவந்தம் பெரிய அதிகாரி ஒருவராலோ, அல்லது அரசனின் நேரடி ஆணை மூலமாகவோ அளிக்கப்பட்டிருக்கவேண்டும் எனலாம்.

-------------------------------------

2) அம்மன் சந்நிதியில் உள்ள பிள்ளையாருக்கு அருகே மண்டபத்தின் தரையில் உள்ள கல்வெட்டு
இரண்டாவது கல்வெட்டின் பாடம்:
1 ............(நாட்டு கீழ்)..
2 .... ...களப்பாளராயன் எழுத்தெ...
3 ..........ழகிய பெருமாளான (வீர)
4 ..   (திரு) வாடானைத் தா....கண்....
5 ..... முத.... யார்....சிஷ்யப்ர....
6 ..........ல் விலைகொண்ட ....
7 ..................
8 ......................

குறிப்பு: திருவாடானை ஊர்ப்பெயர் காணப்படுகிறது. களப்பாளராயன் என்பவன் பெயரும் உள்ளது. செய்தியைச் சரியாக அறிய இயலவில்லை. 


    துண்டான கல்வெட்டுகள் தரையில் பதிக்கப் பெற்றிருப்பதால், இதுபோன்ற கல்வெட்டுகள் நிறையவே இருந்திருக்கலாம் என்றும், அவையனைத்தையும் புதுப்பித்தே இத்திருக்கோயில் புனர்நிர்மாணம் செய்யப் பெற்றுள்ளது என்றும் உணர்ந்து கொள்ள முடிகிறது.


நன்றி:
கல்வெட்டுகளைப் படித்து உதவியவர்
——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
தொடர்பு:  doraisundaram18@gmail.com அலைபேசி :  9444939156.


________________________________________________________________________
தொடர்பு:  முனைவர் கி. காளைராசன்
kalairajan26@gmail.com
http://kalairajan26.blogspot.in/ 


Friday, January 26, 2018

பாண்டியர் ஆட்சியில் கொங்குநாடு——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
    கோவை வாணவராயர் அறக்கட்டளை சார்பாக மாதந்தோறும் நடைபெறும் சொற்பொழிவுகளின் வரிசையில் நவம்பர்,2017 மாதத்துக்கான சொற்பொழிவைத் தொல்லியல் அறிஞர் திரு சொ.சாந்தலிங்கம் அவர்கள்  நிகழ்த்தினார். அது பற்றிய ஒரு பதிவு இங்கே.

பாண்டியர் வரலாறு:
    பாண்டியர் வரலாற்றைச் சரியாகக் கணிக்க இயலாதவாறு குழப்பமே காணப்படுகிறது. பாண்டியர் பற்றிய வரலாற்றை ஓரளவு 10-ஆம் நூற்றாண்டு வரையிலும் நிரல் படுத்தலாம். ஆனால், பிற்காலப் பாண்டியர் வரலாற்றைத் தெளிவுற நிரல் படுத்துவது கடினம். காரணம், பாண்டிய அரசர்கள் நாற்பத்தைந்து பேர். அவர்களின் பெயர்களோ ஆறு பெயர்களுக்குள் அடக்கம். வல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீர பாண்டியன், பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் என்னும் இந்தப் பொதுப்பெயர்களிலேயே மேற்சொன்ன நாற்பத்தைந்து பாண்டியர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த அரசர்களுக்குள் இருக்கும் உறவு, ஆட்சியில் இருப்பவர் யார் என்பன பற்றித் தெரிந்துகொள்வது கடினம். கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளிலிருந்து -குறிப்பாகக் கோள் நிலைக் குறிப்புகளின் துணையோடு - கல்வெட்டு அறிஞரும் பொறியாளருமான திரு. குடந்தை சேதுராமன் அவர்கள் பாண்டியரை ஓரளவு வரிசைப்படுத்தியுள்ளார்.

பாண்டியநாட்டுப் பழமை:
    பாண்டிய நாடே பழம்பதி என்னும் தொடர் பாண்டிய நாட்டுப்பழமையைச் சொல்லும். வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே பாண்டியர் வாழ்ந்திருப்பினும், அவர்களைப் பற்றிய குறிப்புகள் அசோகனின் பாறைக்கல்வெட்டிலிருந்துதான் தொடங்குகின்றன. கி.மு. 300க்கு முன்னரே மதுரையில் பாண்டியர் ஆட்சி இருந்துள்ளது. கி.மு. 300 தொடங்கி, கி.பி. 1700 வரை தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த மரபு பாண்டியர் மரபு.

கொங்குநாட்டின் வணிக வளம்:
    கொங்குநாட்டின் வணிக வளமே, பெரிய அரசர்கள் கொங்கு நாட்டைக் கைப்பற்றக் காரணம் ஆகும். உரோமானிய வணிகர்கள் கொங்கு வழியே தமிழகத்தில் வணிகம் மேற்கொண்ட வரலாறு அனைவரும் அறிந்ததொன்று. கொங்கு நாட்டில்,  கத்தாங்கண்ணி, கரூர், கலயமுத்தூர் ஆகிய இடங்களில் கொல்லிப்புறை, மாக்கோதை, கொல்லிரும்பொறை ஆகிய பெயர்களமைந்த உரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்பதைக் கொடுமணலில் கிடைக்கப்பெற்ற பானை ஓட்டு எழுத்துகளிலிருந்து அறிகிறோம்.

கொங்கு நாடும் பாண்டியரும்:

    நாடு பிடிக்கும் பேராசை எல்லா அரச மரபினர்க்கும் இருந்த ஒரு பொது இயல்பு. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய தனி நாட்டரசர்கள் போல் கொங்குநாட்டுக்குரிய தனி அரசர்கள்  இருந்ததில்லை. மூவேந்தர்களுமே, பல்வேறு காலகட்டங்களில் கொங்குநாட்டை அடிப்படுத்த முயன்றார்கள். பின்னாளில், போசளர்களும் முயன்றுள்ளனர். கொங்கு நாட்டை ஆட்சி செய்த கொங்குப்பாண்டியர் பற்றிய குறிப்பு  பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் முதன்முதலாகக் காணப்படுகிறது. பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் பாண்டியர் தொண்டைமான் பற்றிய குறிப்புள்ளது. பொற்பனைக்கோட்டை என்னும் ஊரின் நடுகல் கல்வெட்டும், பிராமிக்கல்வெட்டும் கொங்கர் பற்றிக் கூறுகின்றன. மேற்படி நடுகல் கல்வெட்டுக் குறிப்பே தமிழகத்தில் பாண்டியர் பற்றிய முதற்குறிப்பு எனலாம்.

    சங்ககாலப் பாண்டியர்கள் கொங்குப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது பற்றியோ அல்லது கொங்கு நாட்டுடன் சங்ககாலப் பாண்டியர் கொண்டிருந்த தொடர்பு பற்றியோ சான்றுகள் எவையுமில்லை. 7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான பக்தி மறுமலர்ச்சிக் கால இலக்கியங்களில் பாண்டியர் குறிப்புகள் உள்ளன. கூன்பாண்டியனின் மகன் கோச்சடையன். அவனது ஆட்சிக்காலத்தில் (கி.பி. 700-738) கொங்குப்பகுதியைக் கைப்பற்றியிருக்கவேண்டும். வேள்விக்குடிச் செப்பேட்டில் இவன் “கொங்கர் கோமான் கோச்சடையன்”  என்று குறிப்பிடப்பெறுகிறான். இவனுடைய மகன் இராசசிம்மன் மழகொங்கத்தை அடிப்படுத்தினான் என்னும் குறிப்புள்ளது. மழகொங்கம் என்பது கொல்லிப்பகுதியின் கொல்லி மழவர் தொடர்பானது. கொல்லிப்பகுதி சேர மரபின் அதியமான் ஆண்ட பகுதி. பல்லவர்களும், சேரர்களும் அதியரோடு சேர்ந்து பாண்டியனை (இராசசிம்மனை) எதிர்த்துப் போரிட்டனர். அவர்களை வென்று பாண்டியன் மழகொங்கை ஆட்சி செய்தான். மழகொங்கில் பாண்டியர் ஆட்சி கி.பி. 730 முதல் கி.பி. 768 வரை நிலவியது. அதன்பின்னர் தொடர்ந்து பாண்டியர் ஆட்சி நடைபெற்றதற்குச் சான்றுகள் இல்லை.

    ஜடில பராந்தகன் என்னும் பராந்தக நெடுஞ்சடையன் கி.பி. 768 முதல் கி.பி. 815 வரை ஆட்சி செய்த பாண்டிய அரசன். இவனுக்குத் தளபதியாகவும் அமைச்சனாகவும் திகழ்ந்தவன் மாறன் காரி என்பவன். இந்த மாறன் காரி, கங்கரை வென்று கங்க இளவரசி பூசுந்தரியைப் பராந்தக நெடுஞ்சடையனுக்கு மணமுடித்தான். பராந்தக நெடுஞ்சடையன், காஞ்சிவாய்ப் பேரூரில் குன்றமன்னதோர் கோயிலை (விண்ணகரத்தை) எழுப்பினான் என்பது வரலாற்றுக் குறிப்பு. கி.பி. 1190 வரை பாண்டிய நாடு சோழரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இக் காலகட்டத்தில், பாண்டியருக்கும் கொங்குக்கும் தொடர்பில்லை. 1190 முதல் 1216 வரை முதலாம் சடையவர்மனின் ஆட்சி பாண்டியநாட்டில் அமைந்தது. 1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் கொங்குப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். இவன் “அடல் மன்னன்”  என்று குறிப்பிடப்பெறுகிறான். இவன், கொங்குப்பகுதியில் தென்கொங்கு, வடகொங்கு ஆகிய இரு பகுதிகளின் அரசர்கள் தமக்குள் போரிட்டுக்கொண்டிருந்தபோது இருவரையும் பாண்டிநாட்டுக்கழைத்துப் பேசி அவர்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்தி இருவரையும் தனித்தனியே ஆட்சி செய்ய வைத்தான்.

    முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1253-1283) என்பவன், தெலுங்குச் சோழரையும், கொங்கையும் ஈழத்தையும் வென்றதாகக் குறிப்புள்ளது. அவனைத் தொடர்ந்து இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கொங்கில் ஆட்சி செய்தான். இவன் இராசகேசரி என்னும் பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டவன். தொடர்ந்து கி.பி. 1283 முதல் கி.பி. 1296 வரை விக்கிரம பாண்டியன் கொங்குப்பகுதியில் ஆட்சி செய்தான். இராசிபுரத்துக் கல்வெட்டொன்று இந்த விக்கிரம பாண்டியனைக் குறிப்பிடுகிறது.

கொங்கில் பாண்டியர் பணிகள்:
    கல்வெட்டுகளில் பல்வேறு செய்திகளில் பாண்டிய நாட்டவர் கொங்குப்பகுதியில் செய்த பணிகள் பற்றிக் கூறுகின்றன. ஆனைமலை ஆனைக்கீசுவரர் கோயிலில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்தின் இருஞ்சோணாடு (இருஞ் சோழ நாடு) என்னும் நாட்டுப்பிரிவைச் சேர்ந்த மண்ணையார் கோட்டையில் இருக்கும் சேனாபதி சுந்தரப் பெருமாள் வாழ்வித்தாரான பல்லவராயர் என்பவர் ஆனைக்கீசுவரர் கோயிலில் பெற்ற நாச்சியார் என்னும் அம்மன் கோயிலை அமைத்தார் என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் இருஞ்சோழ நாடு என்னும் பாண்டியப்பகுதி தற்போதுள்ள சாத்தூர்ப் பகுதியாகும். அடுத்து, அவிநாசிக் கோயிலில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்துத் திருக்கானப்பேற்றைச் சேர்ந்த அதளையூர் நாடாள்வான் என்பவன் சந்தியா தீபம் திருவிளக்கொன்று எரிப்பிக்கக் காசுக்கொடை அளித்துள்ளான் என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் திருக்கானப்பேறு என்னும் பாண்டியப்பகுதி தற்போதுள்ள காளையார் கோயில் பகுதியாகும். பேரூர்க் கோயிலில் உள்ள வீரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்து இரணிய முட்ட நாட்டுச் சிறுபாலை என்னும் ஊரைச் சேர்ந்த பெரியான் சொக்கன் என்பவன் சந்திரசேகரர் செப்புத்திருமேனியை எழுந்தருளுவித்து, இந்தத் திருமேனிக்கு அமுதுபடி செய்ய, ஸ்ரீயக்கி பழஞ்சலாகை ஆனை அச்சு என்னும் காசு எட்டினைக் கொடையாக அளித்துள்ளான் என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் இரணியமுட்டநாடு என்னும் பாண்டியப்பகுதி தற்போதுள்ள அழகர்கோயில் பகுதியாகும். இடிகரை வில்லீசுவரர் கோயிலில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு, பாண்டிமண்டலத்து மிழலைக்கூற்றத்தில் ஓர் ஊரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அமுதுபடிக்காகப் பதினைந்து காசுகள் கொடையளித்துள்ளார் என்று கூறுகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் மிழலைக்கூற்றம் என்னும் பாண்டியப்பகுதி தற்போதுள்ள அறந்தாங்கிப் பகுதியாகும்.

பாண்டி நாட்டில் கல்வி:
    மேற்படிக் கல்வெட்டுச் செய்திகளில் குறிப்பிடப்பெறுகின்ற கொடையாளர்கள் அனைவரும் பாண்டிய நாட்டில் பெரிய பதவிகளில் அதிகாரிகளாகப் பணியில் இருந்தவர்களாக இருக்கவேண்டும். பாண்டிய நாட்டில் குறிப்பிட்ட சில ஊர்களில் கல்வி மேம்பட்ட நிலையில் அமைந்திருக்கவேண்டும் என்பது புலப்படுகிறது. இந்த ஊர்களில் கல்வி கற்று அரசியல் நிருவாகப் பயிற்சி பெற்றவர்கள் பாண்டிய அரசில் அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்று அறியப்படுகிறது. பாண்டி நாட்டுக் கல்வெட்டுகளில் காணப்படும் முத்தூற்றுக் கூற்றம், மிழலைக் கூற்றம், கரவந்தபுரம், திருத்தங்கல், அண்டநாடு ஆகிய பகுதிகள் இவ்வகை ஊர்களே. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: ஆய் அரசன் கருநந்தடக்கன் ஆட்சியில், பார்த்திவசேகரபுரம் என்னும் ஊரில் காந்தளூர்ச் சாலையை ஒத்த ஒரு கல்விச்சாலை இருந்தது என்று செப்பேட்டுச் செய்தி ஒன்று கூறுவது இங்கு கருதத்தக்கது. இவ்வகைச் சாலைகளில் பயின்றவர்கள் மூவேந்த வேளான் போன்ற பெரும் பட்டப்பெயர்களோடு அரசுப்பதவியில் இருந்தார்கள் என்பது கல்வெட்டுகள் சொல்லும் செய்தியாகும்).

இடைக்காலச் சமூக நிலை: 
    இடைக்காலத்தில் சில சமுதாய மக்களுக்குச் சில உரிமைக் குறைபாடுகள் நிலவின. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலத்தில் தொடங்கிப் பிராமணர்க்கு இருந்த உரிமைகள் மற்ற சமுதாயத்தினர்க்கு இருந்ததில்லை. உரிமைக் குறையால் ஏற்பட்ட உயர்வு-தாழ்வு வேறுபாடுகள் காரணமாகக் கி.பி. 1300-க்குப் பிறகு பல்வேறு சமூகக் குழுக்கள் எழுந்தன. சித்திரமேழியார், முத்தரையர், கம்மாளர் ஆகிய குழுவினர் தனித்து இயங்கித் தம் உரிமைக் குறைகளைக் களையும் முயற்சியில் ஈடுபட்டனர். மாயூரம் அருகில் ஆலங்குடியில் கம்மாளர்கள் மாநாடு நடத்தியுள்ளனர். கொங்கு நாட்டு உடுமலைப்பகுதியில் உள்ள கடத்தூர்க் கோயில் கல்வெட்டில் பாண்டியர் ஆட்சியில் கம்மாளர்களின் முறையீட்டில், அரசன் அவர்களுக்குச் சில உரிமைகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தில் நிகழும் நன்மை தீமைகளின்போது இரட்டைச் சங்கு ஊதுதல், பேரிகை உள்ளிட்ட இசைக் கருவிகளைக் கொட்டுதல், வீடுகளுக்குச் சாந்திட்டுக்கொள்ளுதல், காலில் செருப்பணிதல் ஆகியவை அந்த உரிமைகள். (ஒரு குறிப்பிட்ட அளவு பொன்னை அரசனின் சரக்கில் – கருவூலத்தில் - செலுத்திய பின்னரே அரசன் இந்த உரிமைகளை வழங்கினான் என்பர் தொல்லியல் அறிஞர் திரு. பூங்குன்றன் அவர்கள்). மக்களிடையே அடிமை முறை இருந்தது. கோயிலுக்கு அடிமையராக விளங்கிய தேவரடியார்கள் ஒரு குறிப்பிட்ட குலத்தவர் மட்டுமே அல்லர். கம்மாளர்களிலிருந்தும் தேவரடியார் வந்திருக்கிறார்கள்.

கொங்கு நாட்டில் பாண்டியர் தடயங்கள்:
    கொங்கு நாட்டில் பாண்டியர் காலக் கோயில்கள் கூத்தம்பூண்டி, கொளிஞ்சிவாடி, விஜயமங்கலம் (நாகேசுவரர் கோயில்) சேவூர் (சுந்தர பாண்டிய விண்ணகரம்), பேரூர் (பெருமாள் கோயில்) ஆகியன. பாண்டியர் கோயில் கலைப்பாணியில் குறிப்பிடத்தக்கக் கூறாக விளங்குவது அக்கோயில்களில் உள்ள தேவ கோட்டங்கள். அவற்றில் கோட்டச் சிற்பங்கள் இரா. பாண்டியர் கலைப்பாணிச் சிற்பங்களில் ஒற்றைக் கழுத்தணி மட்டுமே காணப்படும். கொங்கு நாட்டில் உள்ள கொடுமுடி, “பாண்டிக் கொடுமுடி”  என்றே வழங்குகிறது. இங்குள்ள கோயிலில், திரிபுராந்தகர் செப்புத்திருமேனியும், சதுர தாண்டவ நடராசர் செப்புத்திருமேனியும் பாண்டியர் காலச் செப்புத்திருமேனிகளாகும். காலிங்கராயன் கால்வாய் பாண்டியரின் தடயங்களில் ஒன்று. அண்மையில், கோவை வேடபட்டிக் குளத்தில், நின்ற நிலை இரட்டை மீன்களும் செண்டும் உள்ள பாண்டியர் சின்னம் கொண்ட மதகுக் கற்றூண்கள் கண்டறியப்பட்டன.
கொளிஞ்சிவாடிக்கோயில் - பாண்டியர் காலம்

கூத்தம்பூண்டிக் கோயில் - பாண்டியர் காலம்

சதுர தாண்டவ நடராசர் - செப்புத்திருமேனி - கொடுமுடி

சதுர தாண்டவ நடராசர் - அண்மைத் தோற்றம்

திரிபுராந்தகர்  - செப்புத்திருமேனி - கொடுமுடிபாண்டியர் ஆட்சியின் இறுதி:
    தமிழகத்தில் நெடியதொரு காலம் தம் மரபைக் காட்டிய ஓர் அரசு எனில் அது பாண்டிய அரசமரபேயாகும். 13-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி அல்லது இறுதிப்பகுதியே பாண்டியர் ஆட்சியின் முடிவு.


________________________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

விவேகானந்தர்: புத்தர் ஓர் உன்னத மனிதர்


——   சி.  ஜெயபாரதன்
    உலகத்திலே உன்னத மனிதராக நான் மதிப்பவர் இருவர் : கௌதம புத்தர், ஏசு கிறிஸ்து. ஏசு நாதரின் மலை உபதேசத்தையும், கீதையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை எத்தகைய எளிமையாக உள்ளன ! தெருவில் நடக்கும் சாதாரண மனிதருக்கும் அவை புரிகின்றன !   எத்தகைய மகத்தான படைப்புகள் அவை ! அவற்றில் மெய்ப்பாடுகள் தெளிவாக, எளிதாகக் கூறப்பட்டு இருப்பதை நீங்கள் அறியலாம்.

    புத்தர் மேன்மையான மெய்ப்பாடுகளை உபதேசித்தார். வேத நெறிகளை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் போதித்தார். உலக மாந்தருக்கு அவற்றை எடுத்துக் கூறினார். அவரது உன்னத போதனை நெறிகளில் ஒன்று மனித சமத்துவம் ! மனிதர் சம மதிப்புள்ளவர். அந்த கருத்தில் எவருக்கும் தனிச்சலுகை இல்லை. புத்தரே சமத்துவத்தைப் போதித்த ஓர் மகத்துவக் குரு ! ஒவ்வொரு மனிதருக்கும், மாதருக்கும் ஆன்மீக உன்னதம் அடைவதில் ஒரே தர உரிமை உள்ளது. அதுதான் புத்தரின் போதனை. குருமாருக்கும், பிற மானிடருக்கும் இருந்த வேற்றுமை புத்தரால் நீக்கப்பட்டது.


    புத்தரின் வாழ்க்கை ஒரு மகத்தான கவர்ச்சி கொண்டது. என் வாழ்நாள் முழுவதும் நான் புத்தரைப் போற்றி வந்தேன். யார் மீதும் இல்லாத ஒரு தனி மதிப்பு அவர் மீது எனக்கிருந்தது : அவருக்கிருந்த அந்த மன உறுதி, அந்த அச்சமற்ற தன்மை, அந்த அளவில்லா அன்பு . . . (என்னைக் கவர்ந்தது.)

    ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் வாழ்ந்தவர். அப்போது வாழ்ந்த இந்திய மக்கள் உயர்ந்த கல்வி கற்றவராக இருந்திருக்க வேண்டும். ஆழ்ந்த விடுதலை மனத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். பெருவாரியான மக்கள் புத்தரைப் பின்பற்றினர். அரசர்கள் தமது அரச பீடத்தை விட்டகன்றனர் ! நாட்டு அரசிகள் தம் அரசாங்கத்தை விட்டுச் சென்றார். பல யுகங்களாக மதக் குருமார்கள் போதித்த நெறிமுறைகளுக்கு மாறாகப் புரட்சிகரமாக இருந்த புத்தர் உரைமொழிகளைப் பின்பற்றினர். ஆதலால் மக்களின் மனது அக்காலத்தில் சுதந்திரமாக விரிந்திருக்க வேண்டும்.

    புத்தர் மானிட நன்னெறி படைப்புக்காகப் பிறந்தவர். எப்படி மக்களுக்கு உதவுவது என்பது மட்டுமே புத்தரின் சிந்தனையாக இருந்தது. வாழ்நாள் பூராவும் தனக்கென அவர் எதுவும் கருதியது கிடையாது. அவரது உன்னத மூளையைப் பற்றிச் சிந்திப்பீர். எதிலும் உணர்ச்சி வசப்படுவது அவரது வழிமுறையன்று. அவரது பூதகரமான மூளையில் மூட நம்பிக்கை, குருட்டுப் பழக்க வழக்கங்கள் எவையும் கிடையா.

    புத்தர் வாழ்ந்த போதும் உன்னதமாய் இருந்தார். இறந்த பிறகும் உன்னதமாய் ஒளிர்ந்தார். தான் இறக்கும் போது தனக்காக அவர் எந்த மதிப்புச் சின்னத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வில்லை ! புத்தரை அதனால் நான் போற்றி வழிபடுகிறேன்.

    குருவுக்குச் சீடராக இருப்பது எளியதன்று. அதற்கு அநேகச் சுயத் தயாரிப்புகள் அவசியம். பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். உலகளாவிய சகோதரத்துவ உணர்ச்சி மட்டுமில்லாது, உலகளாவிய ஒற்றுமைக்கு நம் வேத நெறிகள் விளக்கம் அளிக்கின்றன. உலக வரலாறு என்பது புத்தரின் சரிதையும், ஏசுவின் சரிதையும் கொண்டிருக்க வேண்டும்.

    வயதாக வயதாக எனக்கு ஒவ்வொன்றும் மனித உறுதியில்தான் அடங்குகிறது என்று தெரிகிறது. என்னுடைய புதிய உபதேசம் இதுதான்.

    புத்தரின் பணியாட்களின் பணியாட்களுக்கு நானொரு பணியாள் ! புத்தரைப் போலோர் தனக்கென வாழா ஓர் உத்தமரை நான் இதுவரைக் கண்டதில்லை.அவரது உன்னத சிந்தனைகள் இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் பரவிச் சென்றன. இரக்கக் குணம் மிக்க இளவரசராகவும், துறவியாகவும் வாழ்ந்து ஓர் ஆட்டின் உயிரைக் காக்கத் தன்னுயிரை அளிக்கவும் தயாராக இருந்தவர்.

    உன்னத ஆன்மீக மெய்ப்பாடுகளை உபதேசிக்க ஒருவர் மிக்க இளைய வயதிலே துவங்கக் கூடாது ! கீதையையும், மற்ற வேதாந்தத்தில் உள்ள உன்னத படைப்புகளையும் படிக்க வேண்டும்.

    புத்தரிடம் உலக நாடுகள் போற்றும் உன்னத இதயம் இருந்தது. மதத்தை ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டுவந்து அதனை மனித நடைமுறைக்கு அமைத்த எல்லையற்ற பொறுமை அவரிடம் இருந்தது. . . . . ஞானச் சூரியன் புத்தர் இதயத்தோடு சேர்ந்து வரையறை யில்லா அன்பும் பரிவும் மேலோங்குவது இன்றைய உலகில் நமக்குத் தேவை. அத்தகைய சேர்க்கை நமக்கு உன்னத வேதாந்த சிந்தனை அளிக்க வல்லது. . . . . விஞ்ஞானமும், மதமும் சந்தித்துக் கைகுலுக்க வேண்டும்.

-----கர்மயோகி விவேகானந்தா (1863-1902)


பெர்னார்ட் ஷாவின் தமிழாக்கம்,  "உன்னத மனிதன்" நாடக நூலில்  சி.  ஜெயபாரதன்

________________________________________________________________________
தொடர்பு: சி.  ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு பெறுவிழா

உலகத் தமிழ் பண்பாட்டு பெருவிழா மலருக்கான என் வாழ்த்துச் செய்தி!!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கலை பண்பாட்டுப் பெருவிழாவிற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணைச்செயலாளர் என்ற வகையிலும், உலகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் என்கின்ற வகையிலும், மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர் பெருமக்களுக்கும், பேராளர்களுக்கும், உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய அன்பினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்ற இத்தருணத்தில் இப்பெருவிழாவிற்கான எனது செய்தியாக பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

வங்கக்கடல் பரப்பின் ஒரு முனையில் வாழும் தமிழர்கள் உலக சமுதாயங்களோடு போட்டியிட்டும், இயைந்தும் உலகளாவிய தமது பெருவாழ்வை கட்டமைத்துக் கொள்ளவேண்டிய காலத்தில் நாம் இன்று இருக்கின்றோம். தமிழகம், இலங்கை ஆகிய இரு பகுதிகளின் ஊடாக மட்டுமே உலகத்துக்கான தமிழர் பார்வை கட்டமைக்கப்படும் நிலை இனி வரும் காலத்தில் நீடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. உலகின் பல பாகங்களில் தமிழர்கள் குடியேறி புதுவிதமான உலகைப் படைப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அப்படிப் பார்க்கின்ற போது தமிழகம், இலங்கை , மலேசியா, சிங்கை, கனடா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், ரீயூனியன் தீவுகள், ஆகிய நாடுகளிலுள்ள தமிழர்களிடையே ஒருங்கிணைப்பு உருவாகி உலகத்தமிழர் பண்பாடு கட்டமைக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.


மேலும், தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து உலகிற்குக் காட்டப்படும் பண்பாட்டு அடையாளங்கள் இன்னும் சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. சாதி, மற்றும் அது உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளை உலகிற்கான பண்பாடாக இனிமேலும் தமிழர்களால் முன்வைக்க முடியாது. அதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர்கள் முன்னெடுத்துச் செல்வார்களேயானால் உலக அரங்கில் தமிழினம் தனிமைப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. மாறாக, நமது ஆதித்தமிழர் மரபில் இருந்த சமத்துவ பண்பாட்டுக் கூறுகளையே உலகிற்கான நமது அடையாளமாக நாம் முன்வைக்க வேண்டும். தமிழ் மரபினைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்திவரும் எம் போன்ற ஆய்வாளர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து தமிழ் பண்பாட்டின் அடையாளங்களின் மூல வடிவங்களைக் கண்டறியும் முயற்சியில், புதிய வெளிச்சங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன.


கிழக்காசிய நாடுகளின் பண்பாடுகளைக் கட்டமைத்ததில் பண்டைய கால தமிழர்கள் மிகப் பெரும் பங்காற்றியிருக்கின்றார்கள் என்கின்ற ஆச்சரியப்படத்தக்க உண்மைகளை இந்த உலகம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தூரம் இல்லை. கிழக்காசிய நாடுகளில் தமிழர்கள் கூலிகளாகவும் கொத்தடிமைகளாகவும் தாம் போய் சேர்ந்தார்கள் என்கின்ற அண்மைய வரலாறு ஒரு சிறு அளவிலான உண்மை மட்டுமே. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் உருவாக்கிய கிழக்காசிய பாதைகளின் வழியேதான் நாம் இன்னமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது சீனர்கள் உருவாக்கிய பட்டுசாலைகளை விட மிக நீண்டதும் மிகப்பழையதுமானதுமாகும். இந்தத் தமிழச் சாலைகள் கிழக்காசியா மட்டுமன்றி மேற்கு நோக்கி ஐரோப்பிய, ஆப்பிரிக்க எல்லைகள் வரை போயிருக்கின்றன என்கின்ற வரலாற்று உண்மையை உங்களிடம் இந்த வாழ்த்துச் செய்தி வழியாகப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

வருங்காலத்தில் நமது தற்காலத்து மத அடையாளப் பார்வைகளை விலக்கி ஒரு மதச்சார்பற்ற, சாதிசார்பற்ற பண்பாட்டினை முன்னிறுத்தும் வரலாற்றுப் பார்வையைத் தமிழர்கள் முன்னெடுப்பார்களேயானால் உலக பண்பாட்டைக் கட்டமைப்பதில் நாம் முன்னோடிகளாக இருக்க முடியும் என்ற உண்மையை உரத்துச் சொல்ல முடியும். எனவே முன் நிபந்தனைகளின்றியும் முன்சாய்வு இன்றியும் நாம் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் முன்னெடுப்போம் என்ற அறைகூவலோடு இந்தப் பெருவிழாவிற்கு எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
(துணைச்செயலாளர், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை )

Thursday, January 25, 2018

குன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்மதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.

மதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில்,  அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில்  இந்த  ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது.  இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது..

இந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன.  கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர்  எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது. 

குன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு  அஸ்தகிரீசுவரர்  கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன்  அஸ்தகிரீசுவரர்  என அழைக்கப்படுகின்றார்.  இந்த இரண்டு குடைவரைக் கோயில்களும்  முற்காலப் பாண்டியர்களின் அட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.

அஸ்தகிரீசுவரர்  கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை.  இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை  நோக்கிய வகையில்  வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும். 

இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது. 

அஸ்தகிரீசுவரர்  என்ற பெயர் கொண்டுள்ள இக்குடைவரை கோயிலின் தமிழ்ப்பெயர் பற்றிய தகவல்கள் ஆராயப்பட வேண்டியவை. 

இக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது.

Saturday, January 20, 2018

பாலமலை
பாலமலை
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

முன்னுரை

நண்பர் துரை.பாஸ்கரன், அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்ளச் சில இடங்களைப் பரிந்துரை செய்வது வழக்கம். அவ்வாறான இடங்களுள் ஒன்றுதான் பாலமலை. 16-01-2018 அன்று பாலமலைக்குப் பயணப்பட்டோம். அது பற்றிய ஒரு பதிவு இங்கே.


பாலமலை-இருப்பிடம்

கோவை-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் பெரியநாயக்கன்பாளையம். பெரியநாயக்கன்பாளையம் என்றதுமே நம் நினைவுக்கு வருகின்றவர் தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களே. வழக்கறிஞர், விடுதலைப்போராட்ட வீரர், காந்தியவாதி, கல்வியாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்ட, கொங்குநாடு பெருமைகொள்ளும் பெரியார்களுள் ஒருவர். அவர் நிறுவிய இராமகிருஷ்ண வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து பிரியும் ஒரு கிளைச்சாலை வழியே கோவனூர் என்னும் ஊரை அடைந்தால் அங்கிருந்து செல்லும் மலைப்பாதை பாலமலைக்குச் செல்கிறது.


நண்பரும் நானும் பேருந்து ஒன்றில் பயணப்பட்டுப் பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து கோவனூர் சென்றோம். கோவனூர் என்னும் ஊர் பழம் வரலாற்றுடன் தொடர்புடையது. இருளர் என்னும் பழங்குடிகளின் தலைவன் கோவன். இவன் பெயரால் கோவன்புத்தூர் என்னும் கோவை உருவானதாகக் கருதப்படுகிறது. அதே பெயருடைய ஒரு தலைவன் பெயரில் இந்த கோவனூர் வழங்கியிருக்கலாம். ஏனெனில், கோவனூரை அடுத்துள்ள குறிஞ்சி நில மலைப்பகுதிகள் ப்ழங்குடிகள் வாழ்ந்த பகுதிகளாகும்.


கோவனூரிலிருந்து பாலமலை செல்ல வாடகை ஜீப்புகள் நிறைய உண்டு. ஒரு பத்துப்பேர் கட்டணத்தைப் பகிர்ந்துகொண்டு பயணம் செய்யும்படியான ஏற்பாடு. கோவனூரிலிருந்து பாலமலை நோக்கிப் போகும் மலைப்பாதை. மலைப்பாதைக்கே உரிய வளைவுகள். பாதையின் இரு மருங்கிலும் மலைச் சரிவுகள். அண்மைக்கால மழைபொழிவின் காரணமாக மலைச்சரிவு மரங்கள் அடர்ந்து பசுமையாகக் காணப்பட்டது. ஓரிரண்டு இடங்களில் மரங்களற்ற பாறைப்பகுதி தொலைவில் வெண்மையாகக் காணப்பட்டது. விழியக்காட்சி எடுக்காதது குறையாகப் பட்டது. ஜீப்புக்குள்ளிருந்து ஒளிப்படம் எடுப்பதற்குக்கூட ஓர் இசைவு கிட்டவில்லை. நேரே கோயிலை அடைந்தபின்னரே ஒளிப்படக் கருவியை வெளியே எடுத்தோம்.


பாலமலை அரங்கநாதர் கோயில்மலைமேல் ஒரு பெரிய சமதளப்பகுதியில், நான்கு புறமும் மதில் சூழ்ந்து, மூன்று நிலை கொண்ட கோபுரத்துடன் கோயில் காட்சியளித்தது. கோயிலின் முன்புறம் கொங்குப்பகுதிக்கே உரிய கருட கம்பம் என்னும் விளக்குத்தூணுடன் விளங்கும் சிறு மண்டபம். கோயில் மிகப் பழமையானதாகக் கருதப்பட்டாலும், கோயில் கட்டுமானம் அதன் பழமையை ஒரு முந்நூறு ஆண்டுகள் பின்னோக்கிக் காட்டுகிறது எனலாம். கோயிலினுள் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளில் கல்வெட்டுகள் எவையும் இல்லை. கொங்குப்பகுதியில், பல இடங்களில், கால்நடை மேய்ப்பின் பின்னணியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆநிரைகள் எங்கோ ஓரிடத்தில் தாமாகவே பாலைச் சுரந்து திரும்பியபின் பட்டியில் பால் கறக்க இயலாத நிலையைக் கண்ணுறுவதும், பின்னர், காரணத்தை ஆய்கையில் அந்த ஆநிரைகள் தான்தோன்றி இறையுருவங்களுக்குப் பாலைச் சொரிவதை அறிந்து அவ்விடங்களில் இறைவழிபாடு தொடங்குவதும் ஆன செவிவழிக் கதைகள் நிறைய வழங்குகின்றன. ஒன்றுபோல, எல்லாக்கோயில்களுக்கும் இவ்வகைப் புனைவுப் பழங்கதைகள் (தலபுராணங்கள்) வழக்கில் இருப்பது எண்ணத்தக்கது. இதன் பின்னணியில், கால்நடை வளர்ப்பும், பழங்குடிகளும் இருப்பது, பழங்குடிகளின் இறைவழிபாட்டுத் தலங்களின் தொன்மையை எடுத்துக்காட்டும். பாலமலைக் கோயிலின் தலபுராணத்திலும் மேற்சொன்ன கதை, ஆதிவாசி என்னும் பழங்குடியினர் தொடர்புடன் குறிக்கப்படுகிறது.

  

கருடகம்பத்தில் எழுத்துப் பொறிப்பு

கருடகம்பம் கலகட்டுமானம் கொண்டது. சிறிய மேடை மண்டபத்தின் நடுவில் கல்லாலான விளக்குத்தூண். நான்கு மண்டபத் தூண்கள். அவற்றில் இரு தூண்களில் ஆண் சிற்பம் ஒன்றும், பெண் சிற்பம் ஒன்றும் காணப்பட்டன. அவை, இந்த கருடகம்ப மண்டபத்தை நிறுவியவர்களாக இருக்கவேண்டும். கருட கம்பக் கட்டுமானத்தில் இவ்வாறு சிற்பங்களை வடிப்பது பெரும்பாலான வழக்கம். இந்தப் புடைப்புச் சிற்பங்களின் வடிவமைப்பு, இந்தக் கட்டுமானம் நாயக்கர் காலத்துக்கும் சற்றே பிற்பட்டது என்பதைக் காட்டியது. விளக்குத் தூணின் அடிப்பகுதிச் சதுரங்களில் சங்கு, சக்கரம் ஆகியன புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. சங்குருவம் செதுக்கப்பட்ட சதுரப்பகுதியில் இரண்டு வரிகளில் எழுத்துகள் காணப்பட்டன. முதல் வரி படிக்கக் கூடியதாக இருந்தது. இரண்டாவது வரியில் எழுத்துகள் புலப்படவில்லை. எழுத்தமைதி பிற்காலத்துக்குரியது. கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு:


                                                   கருடகம்பம்


                             கருடகம்பத்தூணில் ஆண், பெண் சிற்பங்கள்                                        கருடகம்பத்தில் எழுத்துப் பொறிப்பு1  சருவசித்து வரு. சித்தி

2  (ரை மீ)


சருவசித்து என்பது தமிழ் ஆண்டுகளின் சுழற்சி ஆண்டுகள் அறுபதில் ஒன்றான "சர்வஜித்து"  என்பதன் திரிபு. "சர்வஜித்து" ஆண்டு, 1887 அல்லது 1947 ஆகிய ஆங்கில ஆண்டுகளோடு பொருந்தும். கருட கம்பத்தின் கட்டுமானப் பழமை, கல்வெட்டின் எழுத்தமைதி ஆகியவற்றைக் கொண்டு இதன் காலம் 1887 எனலாம்.


கொங்கும் பழங்குடி மரபும்

குறிஞ்சி நிலப்பகுதியைச் சூழ்ந்த காடும் காடு சார்ந்த முல்லைப்பகுதிகள் நிறைந்தது கொங்கு நாடு. சங்க காலம் தொட்டுப் பல்வேறு குடிகளின் வாழிடப்பகுதியாகக் கொங்குநாடு திகழ்ந்துள்ளது. வேட்டைத் தொழிலையும், கால்நடை வளர்ப்பையுமே முதன்மையாகக் கொண்ட கொங்கு மக்கள், மழை நீரைச் சார்ந்து புன்செய்ப் பயிர்களை விளைவித்தும் வாழ்ந்துள்ளனர். தொல்குடிகள் குழுக்களாகவும், பின்னர் குடிகள் வளர்ச்சியுற்ற நிலையில் வேளிர் தோற்றமுமே இங்கு நிகழ்ந்த அரசியல். அடுத்துள்ள மன்னன், (முடியுடை) வேந்தன்  ஆகிய நிலைகள் கொங்குப்பகுதியில் சங்க காலம்தொட்டு அமையவில்லை. இடைக்காலத்தில் சோழரின் ஆளுகையில் கொங்கு நாடு வந்தபின்னரே, சோழரின் கிளை அரசர்களான கொங்குச் சோழரின் ஆட்சி இங்கு நிலைபெற்றது. அவர் காலத்தில்தான், நன்செய்ப் பயிர் வேளாண்மை இடம்பெற்றுப் பழங்குடிகள் வேளாண் சமூகத்துடன் இணைக்கப்பெற்றனர். அதுவரை வழக்கிலிருந்த, பழங்குடிகளின் பழந்தெய்வ நாட்டார் வழிபாடு சோழர்காலப் பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைக்கப்பெற்றது. இதன் அடிப்படையிலேயே, பாலமலைப் பழங்குடிகள் வழிபட்டு வந்த சிறு தெய்வ வழிபாட்டிடம், பின்னாளில் பெருந்தெய்வ வழிபாட்டுக் கோயிலாக உருப்பெற்றிருக்கக் கூடும் என்று கருத இடமுண்டு. எனவேதான், பாலமலை அரங்கநாதர் கோயிலின் தோற்றம் குறித்த வரலாற்றில் பாலமலைப் பழங்குடிகளையும் இணைத்துக் கூறுகிறார்கள். அவர்கள் (பழங்குடிகள்), அரங்கநாதரின் பாதுகாவலர்கள் என்று கருதப்படுகின்றனர். கோயில் திருவிழாவின்போது அவர்களுக்குத் தனிக் கட்டளைகள் இருப்பதும் மேற்சொன்ன காரணத்தினால்தான். பழங்குடிகளைத் தற்போது ஆதிவாசிகள் என அழைக்கின்றனர்.


தெப்பக்குளம்

கோயில் அமைந்துள்ள சமதளத்தை அடுத்து, பள்ளமான ஒரு பாதை கீழிறங்கிச் செல்கிறது. அவ்வழியே இருபது நிமிடப்பயணமாக இறங்கிச் சென்றால் ஓர் அழகான தெப்பக்குளம் உள்ளது. வழியில் பாதையெங்கும் துண்டுக் கற்களைப் பாவியுள்ளனர். கற்கள் பாவப்பட்ட பாதையும், அதன் இருமருங்கிலும் இருக்கும் காட்டுச் செடிகளும் காண அழகானவை. தெப்பக்குளம் பழங்காலக் கட்டுமானத்துடன் தோற்றமளிக்கிறது. குளத்தின் நீர் தேக்கப்படுகின்ற அடிப்பகுதி ஒரு நீண்ட சதுர வடிவில் அமைக்கப்பட்டு அதன் தலைப்பகுதி (தென்பகுதி) மட்டும் வட்டத்தின் வில் வடிவத்தில் வளைவாகக் கட்டப்பட்டு அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளது. வடபகுதிக்கு மிக அருகில் ஒரு மண்டபம் (நீராழி மண்டபம்?) உள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து கிளம்பி நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டு மேலே நிலப்பரப்பில் சுற்றுச் சுவர்களுடன் குளத்தின் கட்டுமானம் நேர்த்தியாக உள்ளது. சுற்றுச் சுவர்களின் மூன்று பக்கங்களில் மூன்று திறப்புகள், கீழே இறங்குவதற்காக. குளத்தின் உட்பகுதியில் வடமேற்கு மூலையில் ஆறு தூண்களோடு ஒரு மண்டபம். அதில் ஏழு கன்னிகளின் சிலைத்தொகுப்பு ஒன்று காணப்படுகின்றது. குளத்துக்கு வெளியே வட கரையில், பன்னிரண்டு தூண்களுடன் சற்றுப் பெரிதாக ஒரு மண்டபம் உள்ளது. மண்டபங்கள் இரண்டும் மக்கள் புழக்கமின்றிப் பாழடைந்துள்ளன. மொத்தத்தில், தெப்பக்குளம் அதன் பழந்தோற்றத்துடன், நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுப்பழமையை நினைவூட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில், குளத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்திருக்கும்.


               கற்கள் பாவிய அழகான பாதை


                          தெப்பக்குளத்தின் பல்வேறு தோற்றங்கள்      
                      குளத்துக்கு வெளீயே- மண்டபம்


                         குளத்துக்கு உள்ளே - மண்டபம்


                           மண்டபத்துள் கன்னிமார் சிற்பம்சித்தர் பீடம்

தெப்பக்குளத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் காட்டுச் செடிகளையும் பறவைகளின் ஒலிகளையும் பார்த்துக் கேட்டு மகிழ்ந்தோம். நண்பர் தாவரவியல் அறிந்தவர். தம் இளமைக் காலங்களில், மலைப்பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிகளில் (TREKKING) பங்கு கொண்டவர். எனவே, அவர் "இது புல்புல் பறவையின் ஒலி; இது மூக்குத்திப்பூ; இதன் பெயர் தொ3ட்3ட3 தும்பை."  என்றெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததில் வியப்பில்லை. 


              தொட்ட தும்பை. -  பூவுடன்   


                                   மூக்குத்திப்பூ


மீண்டும் கோயில் இருக்கும் சமதளப்பகுதிக்கு வந்ததும், அங்கிருந்த கிருஷ்ணானந்த சித்தர் பீடத்தைப் பார்த்தோம். நீலகிரியில் ஹுலிக்கல் கிராமத்தில் 1913-இல் பிறந்து, இளம் வயதில் மனம் துறவு வழியை நாட, இமயமலைப்பகுதியில் முப்பது ஆண்டுகளைக் கழித்துக் கிருஷ்ணானந்தா என்னும் பெயரில் திரும்பிவந்து இந்தப் பாலமலையில் தனிமைத் தவத்தில் த்ங்கியவர் 1983-இல் மறைந்தார் என்று இவரது வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது. இவரது பிறப்பிடம் நீலகிரியாதலால், நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்துத் தன்னார்வலர் சிலர் இந்த சித்தர் பீடத்தைப் பேணி வருகின்றனர். ஓர் அறையில் சித்தரின் படமும், மற்றுமோர் அறையில் சித்தரின் சிற்ப உருவமும் வழிபாட்டில் உள்ளன. தரைக்குக்கீழ் நிலவறையில் தியான அறையும் உள்ளன. நுழைவு வாயிற்சுவரில் கன்னட எழுத்துகள் புலப்பட்டன. கன்னட எழுத்துகளைப் படிக்க முடியும் என்னும் ஆர்வத்தால் அருகில் சென்று பார்த்தேன். அவ்வெழுத்துகள் கன்னட எழுத்துகளின் வடிவங்களைப் போலிருந்தாலும் எந்த எழுத்தும் முழுதாகக் கன்னட எழுத்தோடு பொருந்தவில்லை. அங்கிருந்த படுகப் பெண்மணி, இந்த எழுத்துகள் படுக மொழியின் எழுத்துகள் என்று கூற, வியப்பேற்பட்டது. காரணம், துளு, படுகு(படுக), குடகு, கொங்கணி ஆகிய மொழிகளுக்குத் தனி எழுத்துகள் இல்லை; கன்னட எழுத்தையே பயன்படுத்துகின்றனர். இந்த ஐயத்தைக் கேட்டபோது அப்பெண்மணி, அண்மையில் ஓலைச்சுவடிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி இங்குவந்த ஒருவர் இந்த (படுக) எழுத்துகளால்,


                       ஓம்

                     பூஜ்ய ஸ்ரீ

              குரு கிருஷ்ணானந்தய

                     நமஹ


என்று எழுதிச் சென்றார் என்னும் செய்தியைச் சொன்னார். படுக மொழிக்கு எழுத்துகள் கண்டறியப்பட்டது  ஆய்வுக்குரியது.


                             சித்தர் பீடம்


                 படுக மொழியின் எழுத்துகள்


                                                               சித்தர்இருளர் பதிகள்

கோயிலின் கோபுர வாசலில் இருளர் குடியைச் சேர்ந்த ஒரு இணையரைப் பார்த்துப்பேசினோம். அவர்களிடம் பேசியதில் கிடைத்த செய்திகள்:  பாலமலையைச் சுற்றிலும் ஏழு மலைக்கிராமங்கள் உள்ளன. அவை, குஞ்சூர்பதி, பெரும்பதி, பெருக்கைப்பதி, பெருக்கைப்பதிப்புதூர், மாங்குழி, பசுமணி, பசுமணிப்புதூர் ஆகியன. மேற்சொன்ன இணையர் குஞ்சூர்பதியைச் சேர்ந்தவர்கள். கணவர் அரங்கசாமி; மனைவி காளியம்மா. கணவர் 75 அகவையைக் கடந்தவர்; மனைவி 60 அகவையைக் கடந்தவர். மனைவி கோயில் வாசலில் பூ விற்பவர். கணவர் வேளாண் கூலி. இந்த ஏழு மலைக்கிராமங்களிலும் சேர்ந்து சற்றொப்ப ஆயிரம் இருளர் குடியினர் வாழ்கின்றனர். இவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் பாலமலையே மையம். குடிமைப் பொருள் வழங்கும் அங்காடியும் இங்கு பாலமலையில்தான். பாலமலைக் கோயிலும், கோயில் விழாக்களும் இவர்களுக்கு மேன்மையானவை; முதன்மையானவை. மேற்சொன்ன இணையரின் இரண்டாம் தலைமுறைப் பேத்தி, கல்லூரியில் படிக்கிறாள். கொங்குச்சோழர் காலத்திலிருந்து (12-ஆம் நூற்றாண்டு முதல்) இன்றுவரையிலும் நிகழ்ந்த மாற்றம் இவ்வளவுதானா?


குஞ்சூர்பதி காளியம்மாவிடம் அவர் பேசும் மொழி யாது எனக் கேட்டபோது, அவர் படுக மொழி என்று சொன்னார். படுகரின் மொழி படுகு. கோவைக்கொங்குக்கும் நீலகிரிக்கும் வட பகுதியாய் அமைந்த கருநாடப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மொழி வடுக (படுக) மொழியாயிற்று. ஆதலால், தமிழ்ப்புலத்தைச் சேர்ந்த இருளருக்குத் தமிழை வேராகக் கொண்டுள்ள ஒரு மொழிதானே இருக்கவேண்டும் என்று ஒரு கேள்வி எழுகிறது. இது ஆய்வுக்குரியது. காளியம்மா, அவர் மொழியைப் பேசிக்காண்பித்தபோது, கன்னடம் கலந்த படுக மொழியை என்னால் அடையாளம் காண முடிந்தது. ஆனால், தமிழின் "அம்மா" என்பதற்கு அவர் மொழியில் "அக்3கா3" என்றும், "அப்பா" என்பதற்கு அவர் மொழியில் "அம்மா" என்றும் அவர் சொன்னது மிகவும் மாறுபட்டுத் தோன்றியது. 


                 குஞ்சூர்பதி அரங்கசாமி


                     குஞ்சூர்பதி காளியம்மா


குருவரிஷி மலை  குருடி மலை

பாலமலைக் கோயிலிலிருந்து பார்த்தால் எதிரே நெடிதுயர்ந்த ஒரு மலை காணப்படுகிறது. இம்மலையில் தங்கியிருந்த முனிவர் ஒருவர் பெயரால் குருவரிஷி மலை என்றழைக்கப்பட்ட மலை, காலப்போக்கில் மருவி குருடிமலை என்று வழங்குவதாயிற்று. இந்த மலையில், பெரிய பாறை போல அமைந்திருக்கும் ஓர் உச்சி, மேல்முடி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த மேல்முடியிலும் அரங்கநாதருக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. இது பற்றிச் சென்ற 2017-ஆம் ஆண்டு "தினமணி"  நாளிதழ் வெளியிட்ட சிறப்பிதழில் வெளியான செய்திப்பகுதியை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.


                         குருடிமலைத் தோற்றம் - பாலமலையிலிருந்து


மேல்முடி அரங்கநாதர் கோயில்  "தினமணி"  நாளிதழ்ச் செய்தி

கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள மேல்முடியைப் பாலமலை அடிவாரத்திலிருந்து நான்கு மணி நேர நடைப்பயணம் மூலம் அடையலாம். இங்கும் அரங்கநாதர் கோயில் உள்ளது. பாறைப்படிக்கட்டுகள். வழியில் தண்ணீர் சோலை, வழுக்குப்பாறை ஆகிய இடங்களில் அரிய மூலிகைகள், செடிகள். கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கருகே உள்ள "மல்லாண்டைப் பாறை"யினைப் பழங்குடிகளும் மற்றவரும் வணங்குகின்றனர். வேளாண்மைப் பணி தொடங்கும் முன் இந்த "மல்லாண்டைப்பாறை"யை வழிபடுவது மரபு. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  வேளாண் மரபில் மல்லாண்டை வழிபாடு பற்றிக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரை இதே வலைத்தளத்தில் "தாசபாளையத்தில் மல்லாண்டைஎன்னும் தலைப்பில் உள்ளது. வெளியான நாள் 20-12-2015.) இக்கோயிலிலிருந்து வடக்கே ஒரு மணி நேர நடைப்பயணத்துக்குப் பின்னர் நாம் அடையும் காட்சி முனை "நாடுகண்ட போலி"  என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட காஃபித்தோட்டம் இன்றும் மேல்முடியில் உள்ளது.


குருவரிஷி மலையும் "லாம்டன் உச்சியும் (LAMBTON'S  PEAK)

குருடிமலை என்று தற்போது வழங்கும் குருவரிஷிமலை ஆங்கிலேயர் காலத்தில் (1800களில்) LAMBTON'S PEAK என்னும் பெயரில் வழங்கிற்று. வரலாற்றுச் செய்திகளைப் பதிவிடும்  குறிப்பாகச் சென்னை பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பதிவிடும்  -  எஸ்.முத்தையா அவர்கள் 2002-ஆம் ஆண்டு ஜூன் 3 "ஹிந்துநாளிதழில் பதிவிடும்போது வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள எழுதிய செய்தியை மேற்கோள் காட்டுகிறார். அது பின்வருமாறு:

                               லாம்டன் உச்சி

                            (இணையத்திலிருந்து)


"கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிப் பயணம் செய்யும்போது, ஒரு மலைத்தொடர் கண்ணில் படும். அதன் உச்சி (சிகரம்) ஒரு முக்கோண வடிவில் தோற்றமளிப்பதையும் பார்க்கலாம். இதுதான் "லாம்டன் உச்சி"இங்கு நான் என் குழந்தைகளுடன் மலை ஏறிச் சென்றுள்ளேன். அப்போது ஒரு மலைச்சரிவு முழுதும் வெள்ளை நிற மலர்கள் பூத்த மரங்கள் தென்பட்டன. அது ஒரு கைவிடப்பெற்ற தேயிலைத்தோட்டம். பிரிட்டிஷார் அந்த மலைத்தொடரை "லாம்டன் மலைத்தொடர்" என்ற பெயரால் குறித்தார்கள். 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த மலைத்தொடரில் புலிகளும், சிறுத்தைகளும், காட்டெருதுகளும் மிகுந்திருந்தன. தேயிலைப்பயிர் செழித்துவளரவில்லை என்ற காரணத்தினால் இந்த மலைத்தொடரும் "லாம்டன் மலைத்தொடர்" என்னும் பெயரை இழந்தது. ஆனால், ஆவணங்களில் "லாம்டன் மலைத்தொடர்"  என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. தற்போது "குருடிமலை" என்ற பெயரால் வழங்கும் இம்மலையின் உச்சி, நெடுந்தொலைவிலிருந்தும் கண்ணில் படும் வகையில் உள்ளது. ஈரோட்டிலிருந்து கோவை நோக்கி வரும் வழியிலேயே இந்த உச்சி கண்களுக்குப் புலப்படுவது சிறப்பு. வானம் தெளிவாக இருந்த ஒரு நாளில்,  ஏற்காட்டில் "LADY'S  SEAT"  என்னும் முனையிலிருந்து நானே இதைப் பார்த்திருக்கிறேன். சேலம் அரசிதழைப் (GAZETTEER) பார்க்கும் வரையிலும் "லாம்டன் உச்சி" யைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதன் பிறகே அவ்வுச்சியைப் பார்க்கும் முனைப்பு வந்தது."


மேலே "தினமணி"  நாளிதழ்ச் சிறப்பிதழில், மேல்முடியில் காஃபித் தோட்டம் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்படும் செய்தி,  தியடோர் பாஸ்கரனின் தேயிலைத் தோட்டக்குறிப்பிலிருந்து மாறுபடுகிறது.


லாம்டன் உச்சி  பெயர்க்காரணம்


                    வில்லியம் லாம்டன்

                 (இணையத்திலிருந்து)


லாம்டன் உச்சிக்கு அப்பெயர் வந்த காரணம் பொருள் நிறைந்தது. "லெஃப்டினண்ட் கர்னல்" வில்லியம் லாம்டன் (Lieutenant-Colonel William Lambton 1753-1823) என்பார் ஒரு நிலவியலாளர்; நிலம் அளக்கும் அறிவியல் அறிஞர். பிரிட்டிஷ் படையிலிருந்து "லெஃப்டினண்ட்"  பதவி உயர்வு பெற்று 1796-ஆம் ஆண்டு இந்தியா வந்தவர்; திப்பு சுல்தானுடனான நான்காம் மைசூர்ப்போரில் 1799-ஆம் ஆண்டு கலந்துகொண்டவர். போரில், வானவியல் பற்றிய தம் அறிவுத்திறத்தால் பலவகையில் துணையாய் இருந்தவர். ஜெனரல் பார்ட் (GENERAL BAIRD)திப்புவின் படை முகாமை ஓர் இரவுப்பொழுதில் தாக்கப் புறப்படும்போது, நாள் மீன்களின் (நட்சத்திரங்கள்) இயக்கத்தைக் கொண்டு, ஆங்கிலப்படை தவறான திசையில் செல்வதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மைசூரைக் கைப்பற்றியதும் அப்பகுதியை அளவீடு செய்யவேண்டிய ஒரு திட்டத்தை முன் வைத்தவர். ஏற்கெனவே, கர்னல் காலின் மெக்கன்சி (COLONEL  COLIN MACKENZIE இது போன்ற வேறொரு அளவீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவிட்டதால், லாம்டனின் திட்டம் முதலில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர், கிளைவ் பிரபுவால் ஒப்புகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1802-இல் லாம்டன், "முக்கோண அளவீட்டியல்"  (TRIGONOMETRICAL SURVEY) என்னும் தொழில் நுட்ப அளவீட்டு முறையில் பணியைச் சென்னை "செயிண்ட் தாமஸ் மவுண்ட்" பகுதியிலிருந்து தொடங்கினார். 1806-இல் குருடி மலை முனை அளக்கப்பட்டது. இதன் காரணமாகவே "லாம்டன் உச்சி (LAMBTON'S PEAK)  என்னும் பெயர் குருடி மலைக்கு அமைந்தது. 


லாம்டனின் முக்கோண அளவீடு, உலகிலேயே மிகப்பெரியதொரு திட்டமாகக் கருதப்படுகிறது. 1802-ஆம் ஆண்டு தொடங்கிய அவரது திட்டப்பணி நாற்பது ஆண்டுகள் கழித்து 1843-ஆம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட்டால் (George Everest) நிறைவுற்றது. நிறைவில், எவரெஸ்ட்  முனை உலகிலேயே உயர்ந்த சிகரம் என்னும் முடிவு எட்டப்பெற்றது. 2002-ஆம் ஆண்டு லாம்டனின் "முக்கோண அளவீட்டியல்" திட்டத்தின் இருநூறாம் ஆண்டு நிறைவை நினைவு கூரும் ஆண்டு.  அவர் பயன்படுத்திய THEODOLITE  என்னும் கருவி அரை "டன்"  நிறையுடையது; அதைத் தூக்கிக் கையாள பன்னிரண்டு ஆள்கள் தேவைப்பட்டார்கள் என்பது வியப்பான செய்தி.

                  

                 THEODOLITE  கருவி            

                 (இணையத்திலிருந்து)


Frontline – Issue 9 Apr-May, 2002

He died to the cause at the age of 70, midway through his task, while surveying at a place called Hinganghat in Maharashtra, where is situated his uncared-for grave, today no more than a flat, weathered and battered piece of stone.லாம்டன், தம் எழுபதாவது வயதில் மகாராட்டிரத்தில் வார்தாவுக்கு அருகில் "ஹிங்கன்காட்"  என்னுமிடத்தில் பணியின்போது மறைந்தார். அங்கே எழுப்பப்பட்ட அவருடைய கல்லறை இன்று யாராலும் கண்டுகொள்ளப்படாமல், காற்றாலும் மழையாலும் வெயிலாலும் மோதுண்டு சிதைந்து கிடக்கும் ஒரு கல்லாகத்தான் இருக்கக் கூடும். மகாராட்டிர அரசின் தொல்லியல் துறை இக்கல்லறையைப் பேணி வைத்துள்ளதா என்பது தெரியவில்லை. கல்லறையின் படமும் - கல்லறையில் கல்வெட்டும் இருக்கலாம் - கல்வெட்டின் படமும் கிடைக்குமா?


முடிவுரை

பாலமலைப் பயணத்தின்போது, தொல்லியல் தடயங்கள் எவையும் கிடைப்பது அரிது என்னும் எண்ணத்தோடுதான் பயணப்பட்டோம். பழங்குடிகளின் வழிபாட்டுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் அரங்கநாதர் கோயில் பழமையானது என்றும், கோயிலின் தெப்பக்குளம் பழமையானது என்றும் அறிந்து அவற்றைப் பார்க்க எண்ணிச் சென்ற எங்களுக்கு லாம்டன் உச்சி பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது மகிழ்வையும் நிறைவையும் அளித்தது. "சேலம் அரசிதழைப் (GAZETTEER) பார்க்கும் வரையிலும் "லாம்டன் உச்சி" யைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை."   என வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரனே கூறியிருக்கையில் கொங்கு மக்கள் எத்துணை பேருக்குத் தெரிந்திருக்கும்? எனக்கும் நண்பர் பாஸ்கரன் குறிப்பிடும் வரையில் குருடி மலை என்னும் பெயர் மட்டுமே தெரியும். கோவைப்பகுதியின் மற்றுமொரு வரலாற்றுச் செய்தியைச் சிலருக்காவது கொண்டுசேர்க்கும் வண்ணம் வலைப்பூ வழி இக்கட்டுரை அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். 
துணை நின்றவை:

WIKIPEDIA

FRONTLINE MAGAZINE – ISSUE 9, 2002.

4  THE HINDU METROPLUS , CHENNAI-JUN 03, 2002.

"தினமணி"  பாலமலை தேர்த்திருவிழா சிறப்பிதழ்-2017

-------------------------------------------------------------------------

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.