Saturday, December 25, 2021

சிந்துபூந்துறை


-- ருத்ரா இ.பரமசிவன்


ஒரு திருநெல்வேலிக்காரனின்
நினைவுக்குள்
பளிங்குப்படித்துறையாய்
நீண்டுகிடப்பது
சிந்து பூந்துறை.
கரைத் திட்டில் அந்த‌
பனங்குட்டி நிழல்களில்
இன்னும் சொட்டு சொட்டாய்
உதிர்ந்து கொண்டிருப்பது
புதுமைப்பித்தனின்
"கயிற்றரவு"
சிந்தனைகளின்
எழுத்துச்சிதிலங்கள் தான்.
அந்த சிறுகதை
பிளந்த உதடுகளில் வழியும்
சொல் ஒலிப்புகளில்
நியாய வைசேஷிக தத்துவங்கள்
கடவுளை
பனைமரத்துச் சில்லாட்டைகளில்
வடிகட்டித்தரும்
அந்த அரைகுறைப் புளிப்பு இனிப்பு
பதனீரை உறிஞ்சுவது போல‌
எழுதிக்காட்டியிருக்கிறார்
புதுமைப்பித்தன்.
சிந்துபூந்துறைக்கும்
வண்ணாரப்பேட்டைக்கும்
நடுவே படுத்துக்கொண்டு
ஊர்ந்து கொண்டிருக்கும்
தாமிரபரணியைக்கூடத்‌
தன் எழுத்தின் தீக்குச்சி கொண்டு
உரசி உரசி
நெருப்பு பற்றவைத்து அதில் அவர்
சமுதாயத்தின்
இனிப்பையும் கசப்பையும்
பரிமாறியிருக்கும் நுட்பமே
சிந்துபூந்துறையின் கருப்பை கிழிந்த‌
பனிக்குட உடைப்புகள் தான்.
அவர் எழுத்துக்களின் பிரசவம்
ஓர் ஏழைக்குமாஸ்தா வீட்டு
கிழிந்த பாயில்
அரங்கேறும் வெப்பத்தில்
ஓர் உயர்வான இலக்கியம்
குவா குவா என்ற
ஒலிப்புகளோடு ஒரு
புதிய யுகத்தின் முகத்தைப்
பதிவு செய்யும்.
ஒவ்வொரு தடவையும் அந்த‌
சிந்துபூந்துறை ஆற்றில்
நான் முக்குளி போடும்போதெல்லாம்
ஏதோ ஒரு புதிய‌
முலாம் பூசி எழும் ஓர்மையை
தைத்துக்கொண்டு வருவதையும்
உணர்கின்றேன்.
அந்த ஆற்றுக்குள்ளும் ஒரு
ஆற்றுப்படை
ஊர்வலம் போவதை
நான் படித்துப் படித்து
அந்த பனங்காட்டுச் சலசலப்புகளின்
பனைச்சுவடிகளில்
பதிந்து கிடப்பதை பிய்த்துக்கொண்டு
வெளியேற முடியவில்லை.


------------
இனி வரும் உலகம்: பெரியார் ஈ.வெ.ரா.

"இனிவரும் உலகம்"

  -- ஈ.வெ.ரா.

முன்னுரை:
இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்குநாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர புராண இதிகாசப் பண்டிதர்கள் என்பவர்களுக்கு, அதுவும் நம் "கலை காவியப்" பண்டிதர்களுக்குத் தெரிவது சுலபமான காரியமல்ல.

ஏனெனில், நமது பண்டிதர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்களையும் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத இலக்கியங்களையும், பிரத்தியட்ச அனுபவத்திற்குச் சம்பந்தப்படுத்த முடியாத கலை காவியங்களையும் படித்து, உருப்போட்டு, அவைகளிலிருப்பவைகளை அப்படியே மனதில் பதியவைத்துக்கொண்டிருப்பதோடல்லாமல், அவைகளில் சம்பந்தப்பட்ட கதை கற்பனைகளை உண்மையாக நடந்தவைகள் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்களாவார்கள்.

பகுத்தறிவுவாதிகள், அந்தப்படிக்கில்லாமல், அனுபவத்தையும், தங்கள் கண்களில் தென்படும் காட்சிகளையும், வஸ்துக்களின் குணங்களையும், அவற்றின் மாறுதல்களையும், இயற்கையின் வழிவழித்தன்மைகளையும் அவற்றால் கண்டுபிடிக்கப்பட்டுவரும் புதுமை அதிசயங்களையும், மனிதனுக்கு முன்காலத்தில் இருந்துவந்த அறிவாற்றலையும் சிந்தித்து, இன்று உள்ள அறிவையும் ஆற்றலையும், இனி ஏற்படும் அறிவாற்றலையும், சாதனங்களையும், மற்றும் இவை போன்றவைகளையும் ஆராய்ச்சிக்காரர்களோடு நடுநிலையில் இருந்து பார்ப்பவர்களாவார்கள்.

பண்டிதர்கள், பழங்காலத்தையே சரியென்று கருதிக்கொண்டு அதற்கே புது உலகம் என்று பெயர் கொடுத்து அங்கே செல்ல வேண்டுமென்ற அவாவுடையவர்கள். பகுத்தறிவுவாதிகள் எவரும் ஓரொரு விநாடியையும் புதிய காலமாகக் கருதிப் புதிய உலகத்திற்குப் போவதில் ஆர்வமுள்ளவர்கள். பண்டிதர்கள் என்பவர்கள் "எந்த நாட்டிலும் இப்படித்தான் இருப்பார்கள்" என்று நாம் சொல்ல வரவில்லை. நம் நாட்டுப் பண்டிதர்கள் என்பவர்களில் பெரும்பாலோர்களைக் கருதித்தான் நாம் இப்படிச் சொல்கிறோம், ஏனெனில் நம்நாட்டுப் பண்டிதரென்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படவோ, அது வளர்ச்சியடையவோ முடியாமல் தடை செய்யத் தகுதியான மாதிரியிலேயே அவர்களது படிப்பும் பரிட்சையும் இருக்கிறது. 

ஆதலால் நம் பண்டிதர்கள் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய அவர்களது அறிவுக் குறைவன்று. 

தவறிக் கீழேவிழுந்த பிள்ளைக்கு அரிவாள் எதிரிலிருந்தால் எப்படி அதிக காயம் ஏற்படுமோ, அதுபோல் புராண இதிகாசக் கலைச் சேற்றில் விழுந்த நமது பண்டிதர்களுக்கு, இயற்கை வாசனை அறிவால் ஏற்படக்கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தத்தக்க வண்ணம், மூடநம்பிக்கைச் சமய(மத)ங்கள் என்னும் விஷப்பாம்புகள் அவர்களைக் கரையேறவிடாதபடி சுற்றிக்கொண்டிருக்கின்றன.

நம் மதவாதிகள்: சிறப்பாக இந்து மதவாதிகள் என்பவர்கள் பண்டித மதவாதிகளைவிட மோசமானவர்கள். பண்டிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போக வேண்டுமென்றால், மதவாதிகள் பதினாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும், பல யுகங்களுக்கும் முன்னால் இருந்த உலகத்துக்குச் செல்லவேண்டுமென்பவர்கள். இவர்கள் இருவருக்கும் பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாததும் மனித சக்திக்கு மீறினதுமான காரியங்களிலும் அசாத்தியமான கற்பனைகளிலுந்தான் நம்பிக்கையும் பிரியமும் இருக்கும். 

ஆகவே இப்படிப்பட்ட இவர்களால் கண்டறியப்படும் புது உலகம் காட்டுமிராண்டிகள் வசிக்கும் உலகமாக இருக்கும் என்பதையும் அவர்களை மதிக்கும் மக்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கையில் மூழ்கிய காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆதலால்தான் பழையவைகளுக்கே மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவைகளால் மாறுதலின் சக்தியும் அம்மாற்றத்தின் தன்மையும் அதனால் ஏற்படும் பயனும் உணர்ந்து கொள்ளவோ எதிர்பார்க்கவோகூட முடியாது என்று சொல்லவேண்டியதாயிற்று.

பழையவைகளை ஏற்ற அளவுக்கும் நற்பயன் தரவேண்டிய அளவுக்கும் உபயோகித்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின்வாங்கமாட்டோம். ஆனால் புதியவற்றிலேயே முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும், ஏனெனில் அவற்றினால் தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு புதியவற்றைக் கண்டு பிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்.

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டனைகளாகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன.

ஆகவே, இதை உணர்ந்தவர்கள் தான் இனிச் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட உலகத்தைக் காணலாம், அதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்பதை ஒருவாறு கற்பனைச் சித்திரமாகவாவது தீட்டமுடியும்.
 

இனிவரும் உலகம்:
உலகத்தை ஒருவாறு படித்தறிந்த பல பெரியார்களின் அபிப்பிராயங்களையும் உலகின் பல பாகங்களில் இதுவரை ஏற்பட்டு வந்திருக்கும் காரியங்களையும் ஊன்றிப்பார்ப்போமேயானால், இனிவரும் உலகமானது, அரசனது ஆட்சி அற்றதாகவே இருக்கும். ஏனெனில், இனிவரும் உலகம் , தங்கம், வெள்ளி முதலிய (உலோக) யங்களும் தனிப்பட்டவர்களுக்கென்று, சொத்து உடமை யும், உரிமையும் இருக்காது. ஆதலால் அப்படிப்பட்ட உலகத்துக்கு அரசனோ இன்றுள்ளது போன்ற ஆட் சியோ எதற்காக வேண்டியிருக்கும்! மக்கள் உயிர் வாழ்க்கைக்கும் ஓய்வுக்கும் அனுபவிப்புக்கும் இன்றுள்ள உழைப்புகள், கஷ்டங்கள், கட்டுக்காவல்கள் இருக்காது.

இன்றுள்ள பெருவாரியான மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து வேலை செய்யும் நேரம் அதிகம். பயன் அனுபவிக்கும் நேரம் குறைவு.

உண்ணும் உணவுப் பொருள்களுக்கும் அனுபவிக்கும் போகப்பொருள்களுக்கும் வசதி அதிகம். போதிய உணவு இல்லாமலும் குறைந்தபட்ச சுகபோக அனுபவ மில்லாமலும் பட்டினி கிடக்கும் மக்களும் வறுமையை அனுபவிக்கும் மக்களும் அநேகம்!

சுயேச்சைக்கு வசதியும் சுய நிர்ணயத்துக்கு மார்க்கமும் தாராளமாய் இருக்கிறது. சுயேச்சையோடு இருப்பவர்களோ, தன்னம்பிக்கையோடு இருப்பவர்களோ மிகக் குறைவு.

பொருள் செய்கைகளும், அவற்றிற்கு வேண்டிய மூலப்பொருள்களும் ஏராளமாயிருக்கின்றன. குறைந்த அளவு, அதாவது, இன்றியமையாத, தேவையான பொருள்கூட இல்லாமல் கஷ்டப்பட்டும், வேதனையும் படுகிற மக்கள் அநேகர்.

நிலப்பரப்பு ஏராளம்; நிலமில்லாதவர்கள் என்பவர்கள் அநேகர். இப்படிப்பட்ட, சர்வ செல்வமும் நிறைந்துள்ள உலகில் பட்டினி, வறுமை, மனக்குறை வாழ்வுக்கே போராட்டம் ஏன் உண்டாகவேண்டும்?

இவைகளுக்கும், கடவுளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இவைகளுக்கும், மதங்களுக்கும், ஏதாவது சம்பந்தம் உண்டா?

அல்லது இவைகளை கடவுளர்களுக்கும் சம்பந்தப் படுத்திக்கொண்டிருக்கும் மக்களில் எந்தக் கடவுளையாவது எந்த மதத்தையாவது நம்பிப் பின்பற்றி, வழி படுகிற மக்களில் யாருக்காவது மேலேகண்ட குறைபாட்டுணர்ச்சி இல்லை என்று கூறமுடியுமா?

அல்லது கடவுள், மதம் முதலியவைகளைப்பற்றி இலட்சியப்படாவிட்டாலும், மனிதனுக்கு மேற்கண்ட குறைகளை நீக்கிக்கொள்ள அறிவு இல்லை என்றாவது சொல்ல முடியுமா?

உலக சீவராசிகளுக்குள்ளே மனிதனே அதிக அறிவு பெற்றவன். கடவுள்களையும், மதங்களையும், ஞானமார்க்கங்களையும், ஆத்மார்த்த அரிய தத்துவங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்திருக்கிறான். எத்தனையோ மனிதர்கள் 'தெய்வீகசக்தி பெற்று' தெய் வத்தோடு கலந்தும், தெய்வமாகியும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களாலும் மேற்கண்ட குறைபாடு, பட்டினி, அவரவர் உணவுக்கே கஷ்டப்படுவது முதலாகிய சாதாரணத்தன்மைகள் கூட நீடிக்கப்படவில்லை என்றால், இவற்றிற்கு முக்கிய காரணம், மேலே குறிப் பிட்ட கடவுள், மதம், ஞான மார்க்கம், நீதி, ஒழுக்கம், அரசாட்சி என்பவைகளும், மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அதிக அறிவை மேற்கண்டவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து வேறுபடுத்தித் தனித்திருந்து சிந்தித்துப் பார்க்காததும் தான் காரணங்களாகும் என்பது விளங்க வில்லையா?

இப்போழுது மக்களில் ஒரு சிலர் மேற்கண்ட "ஆத்மார்த்தம்" முதலிய "சூட்சமங்களில்" உள்ள கவலையையும் மூடநம்பிக்கையையும் விட்டுத் தம் அறிவையும் அனுபவத்தையுமே நம்பிச் சிந்தித்ததன் காரணமாகவே பல அற்புதங்களும், அதிசயங்களும் காண முடிந்தபின், மேல்நாடுகளிலே அதிகம் பேர் அந்தப்படி சிந்திக்க முன்வந்து விட்டார்கள். பழைய உலகம் இனி நிலைக்காது என்று முடிவு கட்டுகிறார்கள். புதிய உலகத்தைப்பற்றியே சிந்திப்பதும் சித்தரிப்பதும், எதிர்பார்ப்பதுங்கூட இன்று பல அறிஞரின் கவலையாகப் போய்விட்டது.

ஏன் பிறக்கவேண்டும்? சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபடவேண்டும்? ஏன் சாகவேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்து சிக்கலான பிரச்னைகளாக இருந்தவை இன்று தெளிவாக்கப்பட்டுப் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்தப் போக்குச் சீக்கிரத்தில் மக்களின் பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கித்தான் தீரும். அப்போதுதான் நான் முன் சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரச ஆட்சி இருக்காது. கடினமான உழைப்பு என்பது இருக்காது. இழிவான வேலை என்பது இருக்காது. அடிமைத் தன்மை இருக்காது. ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது. பெண்களுக்குக் காவல் கட்டுப் பாடு, பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.

காந்தியாரைப் போலவும், மடாதிபதிகளைப் போலவும், அரசர்கள், ஜமீன்தாரர்கள் முதலிய பெரும் பெரும் செல்வான்கள், போக போக்கியம் அனுபவிப்போர்கள் போலவும், பார்ப்பனர்கள் போலவும், உலக மக்கள் யாவரும் உயர்வாழ்வு வாழவேண்டுமானாலும், அவ்வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய சவுகரியங்கள் ஏற்படவும், நிலைக்கவுமான காரியங்கள் ஏற்பட ஒரு மனிதனுக்கு ஒருநாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம், அல்லது இரண்டு மணி நேரத்துக்குமேல் வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும், அவன் "எனக்கு வலிக்கிறது" என்று சொல்லுவது போல், உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும், குறைபாடுகளையும், ஒவ்வொருவரும் (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும் படியும், அனுபவிப்பது போல் துடிக்கும்படியும் அவ்வளவு கூட்டுவாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.

உலகில் எந்தப்பாகத்திலும் இன்றைய மாதிரியான போர் நடக்காது. மக்கள், மக்களால், யுத்தம், கொள்கை, கொலை முதலியவற்றின் பேரால் மடியமாட்டார்கள். உணவுக்காக வேலை செய்ய வேண்டிய வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. மக்கள் 'உடற்பயிற்சிக்காக வேலை செய்ய வேண்டுமே', என்கின்ற கவலை கொண்டு உழைப்பு வேலைக்காக அலைவார்கள்.

அதிசயப் பொருளும், அற்புதக்காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் அனுபவிப்பார்கள். இலேவாதேவிக்காரர்கள், தனிப் பட்ட வியாபாரிகள், தொழிற்சாலை, இயந்திரசாலை முதலாளிகள், கப்பல், இரயில், பஸ் சொந்தக்காரர்கள், கமிஷன் ஏஜண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜண்டுகள், தரகர்கள், விளம்பரங்கள், மற்றும் வேறு எவ்விதமான தனிப்பட்ட இலாபமடையும் மக்களும், தொழில்களும் எவையுமே இருக்காது. சண்டைக்கப்பல், யுத்தப்படை யுத்த தளவாடங்கள் வேண்டி இருக்காது என்பதோடு, மக்களைக் கொன்று குவிக்கும் சாதனமோ அவசியமோ, எதுவுமே இருக்காது.

வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும், முயற்சியும் மிகச்சிறிய அளவுக்குவந்துவிடும். சுகம் பெறுவதிலும், போகபோக்கியமடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும், ஆராய்ச்சியும் முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும். மக்களின் தேவைகள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் செலவழிக்க வேண்டிய நேரம், மிகமிகக் குறை வாகவே இருக்கும்.

உதாரணமாக, மக்கள் முன்பு கொஞ்சமான உடை அணிந்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் துணி நெய்பவர்கள், ஒரு நிமிடத்துக்குச் சுமார் 150 இழைகள் தான் கோத்து வாங்க (நெய்ய) முடிந்தது. இன்று மக்கள் முன்னைவிட பல மடங்கு அதிகமாகத் துணியை அணிகிறார்கள் என்றாலும், அவ்வளவும் கிடைக்கும் படியான அளவுக்கு மேலே நெசவுத்துறையில் விஞ்ஞானம் அபிவிருத்தி அடைந்து ஒரு நிமிஷத்துக்கு 15000 இழைகள் கோத்து வாங்கும்படியான இயங் திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

சிகரெட்டுகளைப்பற்றிச் சிந்திப்போமானால் அக் காலத்தில் ஒரு நிமிடத்துக்கு இரண்டு மூன்று சிகரெட் டுகள் தான் சுற்ற' முடிந்திருக்கும். ஆனால் இன்று ஒரு நிமிடத்துக்கு 2500 சிகரெட்டுகள் ஒரு இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் ஒருபக்கம் புகையிலையைப் போட்டால் மறுபக்கம், ரயிலில் எற்றும்படியான மாதிரியில் சிகரெட்டுப் போக்குகள் கொண்ட பெட்டிகள் கட்டாகக் கட்டப்பட்டு விடுகின்றன என்பதோடு அந்தச் சிகரெட்டுக் கம்பெனியின் பெயர் அந்த ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் சரியாய்ப் பதியவில்லையானால், பதியாத சிகரெட்டை இயந்திரம் கீழே தள்ளி விடுகிறது. இப்படிப்பட்ட நுட்பமான இயந்திரங்கள் இப்போதே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் போது, இனி வருங்கால இயந்திர உலகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமா! இம்மாதிரி யாகவே வாழ்வுக்கு வேண்டிய எல்லாத் தேவைத் துறைகளிலும் இயந்திர சாதனங்கள் பெருகும்போது, நாட்டு மக்களில் ஒவ்வொருவரும் ஆண்டிற்கு இரண்டு வாரம் வேலை செய்வதனாலேயே மக்களுக்கு அவசியமான எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகி விடலாம்.


வேலை இல்லாமற் போகாது:
ஆகவே ஒரு ஆண்டில் மீதி உள்ள 50-வாரங்களும் மக்களைச் சும்மா, சோம்பேறிகளாய் இருக்கச்செய்யுமே என்று யாரும் பயப்படவேண்டியதில்லை.

வாழ்க்கைச் சாதனங்களுக்கு எப்படிக் காலமும் யோசனையும் கண்டுபிடிப்புகளும் தேவை இருக்கிறதோ, அதுபோலவே மக்களின் ஓய்வுக்கும், உடற் பயிற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், போக போக்கியத்துக்கும் யோசனைகளும் ஆராய்ச்சிகளும், சாதனங்களும், அவைகளைச் சுலபமாகச் செய்ய வசதிகளும் கண்டு பிடிப்பதும், அவை நாளுக்குநாள் மாற்றமடைவதும் ஆகிய காரியங்களில் மீதி நாட்கள் செலவழிக்கப்பட வேண்டி இருக்கும்.

அக்கால நிலை நாம் வரையறுக்க முடியாத அற்புதங்களையும், அதிசயங்களையும் கொண்டிருக்கும் என்று சொல்லுவது மிகைப்படச் சொன்னதாக ஆகாது. ஆதலால் மக்கள், குறிப்பாக அறிவாளிகள் சிந்தனையாளர்கள் முற்போக்கில் கவலை உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு இவற்றின் மூலம் சதாவேலை இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகள் இன்று உள்ளது போல் கூலிக்கு வேலை செய்வது போலவோ, இலாபத்துக்கு வேலை செய்வதுபோலவோ இல்லாமற் உற்சாகத்துக்காகவும், போட்டிப் பந்தய உணர்ச்சி போன்ற தூண்டுதலுக்காகவும் ஊக்கத்துடன் வேலை செய்வதாக இருக்கும்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்கு பயன்படச் செய்து கொள்ளுவது என்ற கருத்தே வளரும்.


சோம்பேறிகள்: 
இப்படியானால் சோம்பேறிகள் வளர்ந்துவிடமாட்டார்களா, என்று கேட்கலாம். இப்படிப்பட்ட காலத்தில் சோம்பேறிகள் இருக்க முடியாது. இருப்பார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இவர்களால் சமூகத்துக்குத் தேவையான எந்த வேலையும் குறைந்து போகாது. அதனால் ஒரு கெடுதியும் ஏற்பட்டுவிடாது. ஆதலால் அப்படிப்பட்ட இவர்கள் வேலையில் ஈடுபடுவதைவிட சும்மா இருந்து சாப்பிடுவது அவர்களுக்கே கஷ்டமாயிருக்கும்.

பொதுவாகவே அந்தக் காலத்தில் மனிதர்கள் உண்மையிலேயே தங்களுக்கு "வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே" "வீணாக நேரம் கழிகிறதே" என்று வேலைக்கு போராடிக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இச்சோம்பேறிகளால் அனுகூலம் ஏற்படுமே தவிர, யாருக்கும் கவலை இருக்காது.  எல்லாமக்களுக்கும் அவர்கள் ஆசைதீர வேலை கொடுக்க முடியாத காலமாக இருக்குமே ஒழிய, அந்தக்காலம் வேலைக்கு ஆள் தேடவேண்டியதாகவோ, 'அவன் வேலை செய்யவில்லை' இவன் வேலை செய்யவில்லை' என்று கருதுவதாகவோ, குறை கூறுவதாகவோ இருக்காது.


"இழிவான" வேலை:
"இழிவான" வேலைகளுக்கு ஆள் கிடைக்குமா? என்ற கேள்வி பிறக்கலாம். இழிவான வேலை என்பது வருங்காலத்தில் இருக்க முடியாது. சரீரத்தில் செய்யப் படவேண்டிய எல்லாக் காரியங்களும் அநேகமாக இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும். கக்கூசு எடுக்கவேண்டியதும், துலக்கவேண்டியதும், வீதி கூட்டவேண்டியதும்கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்துவிடும். மனிதன் பாரம் எடுக்கவேண்டியதோ ஆள் இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவேயிருக்காது. அக்காலத்தில் கவுரவம் வேண்டும் என்பவர்கள் பொதுஜன நன்மை சவுகரியம் ஆகியவைகளைச் செய்யவேண்டி இருக்கும் என்பதோடு, அதில் ஏற்படும் போட்டியினால் 'இழிவான' வேலைக்கும் எப்போதும் கிராக்கி இருந்து கொண்டே இருக்கும்.

கவிகளும், இதர சித்திரக்காரர்களும், நாவலர்களும், சிற்பிகளும், போட்டி போட்டுக்கொண்டு புதிய உலகை (தோற்றத்தை) உண்டாக்குபவர்களாகவே இருப் பார்கள். திறமையானவர்களுக்குத்தான் வேலையும் மதிப்பும் கிடைக்கும், மற்றவர்கள் அலட்சியப்படுத்தப் படுவார்கள்.


"ஒழுக்கக் குறைவு":
அக்காலத்தில் 'ஒழுக்கக் குறைவு' என்பதற்கு இடமே இருக்காது. ஒழுக்கக்குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன்மூலம் கிடைக்கப்படாத ஏதாவது லாபமோ, திருப்தியோ, ஆசைப் பூர்த்தியோ ஏற்படவேண்டும். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும் தனிப்பட்டவர் மனக்குறைக்கும், ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது. தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதை விட அதிகமாகக்கொண்டோ, வேறொருவன் இருக்கிறான், அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும்போதுதான் அதிருப்தியும், மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக்கொள்வதற்குத்தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாயவிரோதமாய் கட்டுத் திட்டத்துக்கு மீறி நடக்கவேண்டியவனாகலாம். பொதுவாக இன்று ஒழுக்கம், நியாயம், கட்டுத்திட்டம் என்பவைகளே பெரிதும் உயர்வு தாழ்வுகளையும் தனிப்பட்டவர்கள் உரிமைகளையும் சவுகரியங்களையும் நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவைகளேயாகும். ஆகையால் இவை இரண்டும் இல்லாத இடத்திற் அவை இரண்டுக்கும் இடமிருக்காது. அதுபோலவே திருட்டுக்கும் இடமிருக்காது. 

கங்கைக்கரை ஓரத்தில், குடியிருப்பவர்கள் கங்கை நீரைத் திருடவேண்டிய அவசியம் ஏற்படுமா? அல்லது அவர்களது தேவைக்கு மேல் அதிகமாக எடுப்பார்களா? "நாளைக்கு வேண்டுமே," என்று சேகரித்து வைக்க முயற்சிப்பார்களா? ஆதலால் தேவை உள்ள சாமான்கள் தாராளமாய் வழிந்தோடும் போது திருட்டுக்கு இடமே இருக்காது. அதிகமாய் எடுத்துக்கொள்ள அவசியமும் இருக்காது. பொய் பேசவேண்டிய அவசியமும் இருக்காது. அதற்கும் ஏதாவது இலாபம் இருந்தால்தானே பொய்பேசநேரிடும். குடியினால் மக்களுக்கு எவ்விதக் கெடுதியும் ஏற்பட இடமிருக்காது, கொலை செய்யும்படி தூண்டத்தக்க காரியமும் இல்லாமல் போய்விடும். சூது ஆடுவது என்பதும், பந்தயப் போட்டியாயிருக்கலாமே தவிர பண நஷ்டமாக இருக்காது.


விபசாரம்:
விபசாரம் என்பதும் இருக்க நியாயமில்லை. ஏனெனில் பணத்துக்காகவும், பண்டத்துக்காகவும் விபசாரம் என்பது அடியோடு மறைந்தே போகும். மக்களுக்குத் தன்மான உணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆளமுடியாது. ஒருவர் தயவைக்கோரி ஒருவர் இணங்கிவிட முடியாது. ஒருவரை ஒருவர் அதாவது ஆணும் பெண்ணும் மனப்பூர்வமான சமவிருப்பமின்றி காதல் அனுபவிக்கமாட்டார்கள். கலவி விஷயத்தில் யாவருக்கும் தேர்ந்த அறிவும், கல்வியும் ஏற்படும். ஆனதால் மனமொத்த உண்மைக் காதல் வாழ்க்கையென்பதைத் தவிர, புதுமைக்காக, மாறுதலுக்காக அடிக்கடி மாறும் தன்மை சுலபத்தில் ஏற்பட்டுவிடாது, அன்றியும் உடல் நலம் பற்றிய அறிவும் கவலையும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும், தன்மான உணர்ச்சியும் இருக்கும். "விருப்பமில்லாத இடத்தில், சம்பந்தம் இல்லாத இடத்தில் இச்சை வைப்பது தனது சுயமரியாதைக் குறைவு" என்றே ஆண் பெண் இருபாலரும் கருதுவார்கள். பெண் அடிமையோ ஆண் ஆதிக்கமோ இல்லாமலும், பலாத்காரமோ வற்புறுத்தலோ உடல் நலத்திற்கு கேடோ இல்லாமலும், ஒத்த காதல், ஒத்த இன்பம், ஒன்றுபட்ட உள்ளம் கொண்ட கலவியால் சமுதாயத்துக்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டு விடாது. ஆதலால் விபசாரம் என்பதற்கு இடமில்லாது போகும்.

மூளைக்கோளாறான குணங்கள் என்பவைகளை இயற்கையாக உடையவர்கள் யாராவது இருந்தால் அதற்கு மாத்திரம் பரிகாரம் தேட வேண்டிய அவசியம் இருக்கலாம். அதுவும் அப்படிப்பட்டவர்களால் பிறருக்கோ, தங்களுக்கோ கேடு ஏற்படுவதாய் இருந்தால் மாத்திரம் தானே? ஆதலால் பஞ்சேந்திரியங்களும் ஒரே துறையில் ஒரே சமயத்தில் இன்பந்தரக்கூடிய இவ்வின்பத் துறையில் இயற்கைக்கேடு, சமுதாயக்கேடு அல்லாமல் வேறு காரியத்திற்குக் கட்டுப்பாடு இருக்காது.


மற்ற சவுகரியங்கள்:
▪️  போக்குவரவு எங்கும் ஆகாயவிமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
▪️  கம்பியில்லாத் தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
▪️  ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
▪️  உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்திலிருந்துக் கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்விகற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு சத்துப்பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்.

மனிதனுடைய "ஆயுள் நூறு" ஆண்டு என்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.

பிள்ளைப்பேறுக்கு ஆண்பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்து துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை 'இன்செக்க்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.

மக்கள் பிறப்புக் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.


போகப்பொருள்: 
போகப் பொருள்களும் வெகு தூரம் மாற்றமடைந்துவிடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்ற மடைந்துவிடும்.

ஒரு டன்னுள்ள மோட்டார்கார் ஒரு அந்தர் வெயிட்டுக்கு வரலாம். பெட்ரோல் செலவு குறையலாம். பெட்ரோலுக்குப்பதில் மின்சார சக்தியே உபயோகப் படுத்தப்படலாம். அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.

மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடியவிதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் பெருகும். விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன் படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களுக்கும் சவுகரியம் தருகிற பொது சாதனங்களாக அமையும்.

இவ்வளவு மாறுதல்களோடு இனிவருங்காலம் இருக்குமாகையால், இன்றைய உலக அமைப்பிலே உள்ள, அரசு, உடமை, நீதி, நிர்வாகம், கல்வி முதலிய பல துறைகளிலும், இப்போது எவை எவை பாதுகாக்கப்பட என்னென்ன முறைகள் கையாளப்பட்டுவருகின்றனவோ, அம்முறைகளுக்கெல்லாம் அவசியமில்லாமற் போய் விடும் என்பதோடு அவை சம்பந்தமாக இன்று நிலவும் பல கருத்துக்கள் அர்த்தமற்றதாகவும் போய்விடும்.


கடவுள்:
இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்கமாட்டார்கள்.

கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறியோர்களுக்குப் போதிக்கப்பட்டும் காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவமுமாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும் காட்டிக்கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர் களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப்போகும். ஏனெனில் கடவுளை நினைக்க ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தான் நினைப்பான் —   சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விபரம் தெரிந்துவிடுவதாகவும்; சகல தேவைகளும் மனிதனுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாவதாகவும் இருந்தால் ஒரு மனிதனுக்கு கடவுளை கற்பித்துக்கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்.  மனிதன் உயிரோடு இருக்கும் இடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானத்துக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமில்லாத மோட்சம் ஒன்றை ஏன் கருதுவான். அதற்கு ஏன் ஆசைப்படுவான். "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும்" என்பது அறிவின் எல்லையாகும். விஞ்ஞானப்பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக்காது.

சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத்திற்கு ஒரே ஒரு காரணம் தானே இருந்து வருகிறது. அக்காரணம் என்ன வென்றால்  "இந்த உலகத்தோற்றத்திற்குக் காரணம் என்ன? காரணபூதமாய் இருப்பது எது? அதுதான் கடவுள்" என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞானிக்குச் சுலபத்தில் அற்றுப்போனவிஷயம். நம்முடைய வாழ்வில் நாம் எதை கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்ளுகிறோம். தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக்கொள்ளுகிறோம். தெரிந்ததைத் தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலகத்தோற்றத்துக்கும் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒருசமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அதற்காக ஒரு காரியத்திற்கும் தேவை இல்லாத கடவுளை எவனும் வணங்கமாட்டான்.


மோட்ச நரகம்:
புதிய உலகத்தில் மோட்ச நரகத்திற்கு இடம் இருக்காது. நன்மை தீமை செய்ய இட மிருந்தால் தானே மோட்சமும், நரகமும் வேண்டும்; எவருக்கும் யாருடைய நன்மையும் தேவை இருக்காது. புத்திக்கோளாறு இருந்தால் ஒழிய ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்யமாட்டான். ஒழுக்கக்கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?

எனவே இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சந்ததிகள் இந்த மாறுதல்களைக் காணவேண்டுமென்றும், இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக்கொண்டும் வாழ்க்கையென்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய், வாழ்க்கை என்றால், மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்றும், ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.

"நம்மால் என்ன ஆகும். அவனன்றி ஓரணுவும் அசையாதே என்று வாய் வேதாந்தம் பேசமாட்டார்கள்.  நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும் அவர்களின் எண்ணமாகவும் இருக்கும். என்றோ யாரோ, எதற்காகவோ, எழுதிவைத்த ஏட்டின் அளவோடு நிற்கமாட்டார்கள். சுய சிந்தனை யோடு கூடிய தாகவே அவர்களின் செயல்கள் இருக்கும். மனித அறிவீனத்தால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையுங்கொண்டு உழைப்பார்கள். அவர்களின் தொண்டு, மனித சமுதாயத்தை நாளுக்குநாள் முன்னுக்குக்கொண்டு வந்தவண்ணமாகவே இருக்கும். சுய சிந்தனைக்கு இலாயக்கற்றவர்களே இந்த மாறுதல் களைக்கண்டு மிரள்வதும், 'காலம் வரவரக் கெட்டுப் போச்சு', என்று கதறுவதுமாக இருப்பார்கள். 

இன்றைய மக்களிலே பலருக்கு, பழமையிலே இருக்கும் மோகம், அறிவையே பாழ்செய்து விடுகிறது, புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்துவிடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்புகளால் இலாபமடையும் கூட்டம், புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும் பாமரரின் ஞானசூன்யம், சுயநலக்காரனின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல், வேலை செய்வோரே, இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும். 

அந்தச் சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று, வாலிபர்கள், பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வரவேண்டி இதை முடிக்கிறேன்.

இனி வரும் உலகம்: பெரியார் ஈ.வெ.ரா.
குடி அரசு பதிப்பகம், ஈரோடு
ஆறாம் பதிப்பு - 1961
தமிழன் அச்சகம், ஈரோடு.
விலை: 15 காசு
[தமிழ் இணையக் கல்விக்கழகம்  —   https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010846_இனி_வரும்_உலகம்.pdf]

------------------------------Friday, December 24, 2021

எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

-- திரு. தியாகலிங்கம், நோர்வேகுறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர்  திரு. தியாகலிங்கம், நோர்வே அவர்கள் வழங்கிய உரை.  


எஸ்.பொ. வுடன் எனக்கு இருந்த தொடர்புகள், அனுபவங்கள் பற்றி மிகவும் சுருக்கமாகக் கூறுவதென்றால்,  எஸ்.பொ. வுடனான பழக்கம் என்பது எனது வாழ்வில் கிடைத்த இலக்கிய, குருகுல, மனிதநேயக் கணத்துளிகள் என்றுதான்  நினைக்கிறேன்.  அழிவின் அழைப்பிதழ்  என்கின்ற நாவலை நான் காகிதத்தில் கிறுக்கி வைத்திருந்த காலம் அது. நோர்வேயின் வடதுருவத்தில் தனிமையாக இருக்கும் பொழுதே அந்தப் பணி நடந்தது. அதை வெளியிட வேண்டும் என்கின்ற பேராசையுடன் அலைந்து திரிந்தேன். அப்போது என்னோடு வசித்து வந்த குகனேரியப்பன் என்பவர் அவஸ்ரெலியாவில் வசித்து வந்த எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் தொடர்புகொண்டு எஸ்.பொ.வை அறிமுகப்படுத்தினார். அதன் பின்பே 1994 ஆண்டு அவரைச் சந்திக்க சென்னை சென்றேன்.  அழிவின் அழைப்பிதழ் எனது முதலாவது நாவலாக அச்சேறியது. அது மித்ர பதிப்பகத்தின் நாலாவது பதிப்பும், முதலாவது நாவலுமாகும்.

ஒரு மதியம்போல கோடம்பாக்கத்தில் இருக்கும் பாலத்திற்குக் கீழே, மசூதியோடு இருந்த மித்ர அச்சகத்திற்குப் போயிருந்தேன். அப்பொழுது எஸ்.பொ, இளம்பிறை ரஹ்மான் இருவரும் அங்கே இருந்தார்கள். இருவரும் மிகவும் மென்மையாக அன்பாகப் பேசினார்கள். எஸ்.பொ கதைத்தால் அதில் நிறையத் தமிழ் இலக்கியக் கூறுகள், நெளிவு சுளிவுகள், எள்ளல்கள், பொதிந்து இருக்கும். நட்பு அதில் உறவாடும். முதல் சந்திப்பிலிருந்தே எனக்குப் பிடித்துக்கொண்ட விடயம் அது. அவரது பேச்சுத் திறமைக்கு அவரே நிகர் என்பதே சத்தியம்.   சிலர் அவரை ஈழத்துப் பாரதி, ஈழத்து ஜெயகாந்தன் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைத் தமிழுலகு மொத்தத்திற்குமான ஈடுயிணையற்ற படைப்பாளி அவர் என்று நினைக்கிறேன். வானத்தில் இருக்கும் நட்சத்திரம் போன்றவர். அவருக்கு ஈழம் என்று அணை போடக்கூடாது என்று நினைக்கிறேன். எப்படி பாரதி தமிழ் உலகு முழுமைக்கும் சொந்தமான, நிகரற்ற படைப்பாளியோ, அதைப்போலவே எஸ்.பொ. என்பது என் கருத்து.

கோடம்பாக்கத்தில் அவரைச் சந்தித்த போது அவரின் வயதிற்கு என்னால் அவரை ஒரு குருவாக, அல்லது அப்பா போன்ற ஸ்தானத்திலேயே வைத்துப் பார்க்க முடிந்தது. அதுவே எனது இறுதி வரையுமான எஸ்.பொ பற்றிய தரிசனமாக இருந்தது என்பதே உண்மை. ஆனால் நான் பார்த்தவரை அவர் எல்லோரையும் வயது வித்தியாசம், தகமை வித்தியாசம் இல்லாமல் நட்பாகவே நடத்துவார். நண்பர் போலவே பழகுவார். பாரியாரோடும் (ஈஸ்வரம்) மிகவும் தோழமையாகப் பழகுவார். சிறு குழந்தைகளுடனும் அதைப் போலவே பழகுவார்.

ஒரு நாவலை எழுதிவிட்டால் அதை வெளிக்கொண்டு வராது வைத்திருப்பது இயலாத காரியம். என்னிடம் சில நாவல்கள் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் விடுமுறை கிடைக்கும் போது சென்னை பயணமாவேன். ஆண்டுவாரியாகப் பட்டியல் இட முடியாத நிலையில் உள்ளேன்.  1994 – 1999 இடையில் அவரை சில முறைகள் சந்தித்து இருக்கிறேன். அவருடன் ஒரு புத்தக அறிமுக விழாவிற்கு Book point இற்குச் சென்ற ஞாபகம் உண்டு. அப்படி ஒரு நிகழ்வில்; சிவசங்கரி, மாலன், அம்பிகைபாகன், பிரபஞ்சன், கணேசலிங்கம் மற்றும் பல இலக்கியப் பிரபலங்களை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  கவிஞர் இன்குலாப்பை மித்திர அச்சகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தான் மாத்திரம் உயரத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணாது மற்றவரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் சிந்தனை கொண்டவர் என்பதை நான் கண்டேன்.

Espo1.jpg
சென்னையில் அவரைச் சந்தித்தபோது வெறுமனே எனது நாவல்களைப் பிரசுரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது, அதை எப்படிச் செப்பனிடுவது (editing செய்வது) என்று எனக்குப் பயிற்சி தந்தார் என்பதை நான் என்றும் மறக்க முடியாது. நான் அதற்காகக் கோடம்பாக்கத்தில் அவரது பதிப்பகத்திற்கு அருகே இருந்த விடுதியில் தங்குவேன். அவர் அப்போது மாலை வேலைகளில் அங்கே வந்து, நாவலில் என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும், எப்படி மெருகூட்ட வேண்டும் என்பதை அழகாகப் பயிற்றுவிப்பார். உண்மையில் நான் அச்சேற்றுவதற்குத் தயாராக இந்த நாவல்களை அங்கே கொண்டு சென்றது இல்லை. அதை அச்சேற்றுவதற்குத் தயாராக்கியதே அவர்தான். இதைச் சொல்வதற்கு நான் பின்னிற்கவோ வெட்கப்படவோ இல்லை. அன்று அவர் தந்த பயிற்சி இன்று எனக்கு உதவுகிறது என்பது உண்மை. ஆகக்குறைந்தது எனது படைப்புக்களையாவது நானே சொந்தமாக இயன்ற அளவு செம்மைப்படுத்தி வெளியிட முடிகிறது.

எஸ்.பொ, பாரியார் ஈஸ்வரம் அவர்களோடு ஒஸ்லோவுக்கு 2000 ஆண்டு இலக்கியப் பயணமாக வந்திருந்தார். எனது நாளை நாவலை வெளியிட்டதோடு ஒஸ்லோவில் இலக்கியச் சந்திப்பும் நடந்தது. அப்போது எனது இல்லத்திற்கும் வருகை தந்திருந்தார். அது எனது வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.  எஸ்.பொ. வுக்கு பல அவமதிப்புகள் ஏற்பட்டதான வருத்தம் அவரிடம் இருந்தன. அது உண்மையும் கூட. ஈழத்திலும் சரி, புலம் பெயர்ந்த தேசங்களிலும் சரி சிலர் தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொள்வதற்காக, அல்லது கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாத காழ்ப்பில் அவருக்கான மதிப்பை அளிக்கத் தவறிவிட்டார்கள் என்பது என் எண்ணம். இன்றும் அதைப் பலர் ஒத்துக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். அவர் வார்த்தையில் சொல்வதென்றால் 'எலியோட்டம் ஓடுகிறார்கள்'.  

மேற்கூறியவற்றை விடவும் அவரிடம் வேறு சில கவலைகள் இருந்தன. அதைப்பற்றியும் என்னுடன் கதைத்தது ஞாபகம் இருக்கிறது.  ஒன்று கோடம்பாக்கம் பாலத்திற்குக் கீழே இருந்த பதிப்பகத்தை மாற்ற வேண்டி வந்தபோது ஏற்பட்ட சிக்கல். அதில் அவர் மனமுடைந்து போய் இருந்தார். அது மிகவும் கரடுமுரடாக நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன்.  அதன் பின்பு பதிப்பக உரிமையில் அல்லது செயற்பாட்டில் ஏற்பட்ட சிக்கலிலும் மனமுடைந்து போய் இருந்தார். அதைப் பற்றிக் கதைக்கும் போது 'உங்கள் நேரம் என்பது தமிழ் உலகிற்கானது. அதை அற்ப விஷயங்களுக்கு நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்' என்று கூறினேன். தமிழை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்கின்ற கோபமும் அவரிடம் இருந்தது. அதைச் சில முன்னீடுகளிலும் காணலாம்.

எஸ்.பொ. வுக்குச் சென்னையில் போகுமிடங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தன. அவரது பேச்சில் பலர் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். சபையில் துணிவோடு, மிகவும் இயல்பாக அவரால் பேசமுடியும். அவர் பேசத் தொடங்கினால் அரங்கம் தானாகக் கட்டுண்டு கிடக்கும். கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகத்திடம் இருந்து ஒரு விருது கிடைத்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். எதற்கு என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. மது அருந்துவதைப் பற்றி எஸ்.பொ.வின் பாரியாருக்கு மிகுந்த கவலை இருந்தது. மது அருந்தாமலிருந்தால் இன்னும் அதிக காலம் இருப்பாரே என்றும், அதனால் தமிழுக்கு மேலும் ஊழியம் செய்ய முடியுமே என்று கவலைப்படுவார். அவர் வீட்டில் எனக்கும், ஓவியர் புகழேந்திக்கும், யுகபாரதிக்கும் ஒரு நாள் விருந்து கொடுத்தார். அப்போது இந்தியாவில் திருமணம் செய்திருந்த மகன் உயிரோடு இருந்த காலம். மித்ரவுக்கு அடுத்ததாக அதுவும் அவருக்குப் பின்னாளில் மிகுந்த கவலையைத் தந்த விடயமாகும்.

இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் காலையும் மாலையும் அலுவலகத்திற்கு வந்து, தனது தமிழ் ஊழியத்தை யாகம் செய்வது போலச் செய்வார். தொடக்கத்தில் சென்னையில் வாட்டி எடுக்கும் வெப்பத்திற்குள், ஒரு சிறிய இடத்தில் அது நடந்தது. பின்னாளில் அது விஸ்தரிக்கப்பட்டுக்  குளிரூட்டப்பட்டது. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு கணமும் தமிழ் இலக்கியம் என்று வாழ்தல் அவர் வாழ்க்கையாக அமைந்தது. அதைப்போல ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலும் பலர் உண்மையான தமிழ் ஊழியம் செய்வது பற்றி அவர் பெருமைப்படுவார்.

ஒரு முறை ஒரு நாவலை வாசித்தால் பின்பு வரிவரியாக எங்கெங்கே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவிற்குக் கிரகிக்கும் அபார சக்தி அவரிடம் இருந்தது. அது என்னை வியப்பில் ஆழ்த்தும். அதைவிட அரசியலா, வரலாறா, பொது அறிவா, எது என்றாலும் ஆழமாக, துல்லியமாக அவர் நினைவில் நிலைத்து நிற்பதைப் பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறேன். அப்படியான விடயங்களை வாசித்து அறிந்து கொள்ளவும் அவர் ஊக்குவிப்பார். எனக்கும் சிலவற்றைப் பிரதி எடுத்துத் தந்திருக்கிறார். அத்தோடு எந்தெந்த படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்கின்ற தன் கருத்தையும் தெரிவிப்பார்.

நான் அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்றாலும் எழுதுவது. ஒவ்வொரு நாளும் சிறிதாவது எழுத முயல்வது. எஸ்.பொ. இறுதிக் காலத்தில் தனது படைப்பைவிட மற்றவர்களின் படைப்பிற்கு அதிக நேரம் செலவு செய்திருக்கிறார். அதை நாங்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். தமிழ் உலகே அதற்கு நன்றி செலுத்த வேண்டும். எஸ்.பொ. வின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதைப் பலர் அறிந்திருப்பார்கள். அது மட்டுமல்ல, அவர் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தனி வடிவமைப்புடன், தனிக் கலையழகுடன் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். பதிப்பாசிரியராக நிச்சயம் அவர் கௌரவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அவர் எழுதிய முன்னீட்டில் ஒரு பகுதி தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.  எனக்காக  1994 இல் இருந்து 2014 வரையும் ஒன்பது புத்தகங்களை வெளியிட்டுத் தந்ததிருக்கிறார். நான் அதற்கு என்றும் நன்றியுடையவன் ஆவேன். அதைச் சாத்தியமாக்க ஒத்துழைத்த அவரது துணைவியாருக்கும் குடும்பத்திற்கும் எனது நன்றிகள்.  ஒருகட்டத்தில் மித்ர அச்சகத்தை எடுத்து நடத்தும்படி கேட்டுக்கொண்டார். என்னால் நோர்வேயில் இருந்து குடிபெயர முடியாத இக்கட்டான நிலையிலிருந்ததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது போயிருந்தது.  எஸ்.பொ. வுடன் பல முறை தொலை பேசியில் கதைக்கும் வாய்ப்பும், சில கடிதப் பரிமாற்றங்களும் எனக்குக் கிட்டியிருந்தன. அவையும் எனக்குக் கிடைத்த அற்புதமான நினைவுகளே.

எஸ்.பொ. வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்பது யாவரும் அறிந்ததே. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரு நல்ல ஆசானின், ஒரு நல்ல குருவின், ஒரு நல்ல தந்தை போன்றவரின் இழப்பாகும். எஸ்.பொ. அவர்கள் இலக்கியம் மட்டும் படைக்கவில்லை. பல புதிய எழுத்தாளர்கள் உருவாக ஊக்கமளித்தார். அவர்களை மேலும் செழுமைப்படுத்தினார் என்பதும் மறக்க, மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.  அவர் இன்று இல்லாவிட்டாலும் அவர் படைப்புகள், அவர் ஆற்றிய தமிழ் ஊழியம் என்பன என்றும் அவரை ஞாபகம் கொள்ள வைக்கும் கல்வெட்டுக்கள். எஸ்.பொ என்றால் எஸ்.பொ. தான். அவருக்கு இணையாக யாரையும் ஒப்பிடத் தேவையில்லை. அவராக, அவரின் உச்சம், அதை யாரும் தொடமுடியாது என்று எண்ணுகிறேன்.

----
எஸ்.பொ. இன்றி நவீன ஈழத்தமிழ் இலக்கியம் இல்லை

-- க. நவம்


குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர் க. நவம், இதழியலாளர், கனடா அவர்கள் வழங்கிய சிறப்புரை.  


எஸ்.பொ.வுக்கும் எனக்கும் இடையிலான ஊடாட்டம் - ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது வகிபாகம் - அவரது இலக்கியம் சார் கருத்துநிலை - என எல்லை வகுத்து, எனது கருத்துக்களைச் சுருக்கமாக முன்வைக்கிறேன்.

நவீன ஈழத்தமிழ் இலக்கியப் புத்தகங்களைப் பள்ளிக் காலத்திலேயே படிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியிருந்தது. எஸ்.பொ.வின் ‘சில புத்தகங்கள்’ அப்போதைய என்னைப் போன்ற சின்னஞ் சிறிசுகளின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ, வீட்டில் புத்தகங்களோடு புத்தகமாய்ப் புதைத்து வைக்கப்பட்டிருந்த காலமது. விளங்கினது பாதி – விளங்காதது பாதியென, அசுமாத்தம் ஏதுமின்றி அவசர அவசரமாகப் படித்துவிட்டு, மீண்டும் கிடந்த இடத்தில் அப்படியே அவற்றை நானும் பதுக்கி வைத்த ஞாபகம். ஆனாலும் தொடர்ந்து அவ்வப்போது எஸ்.பொ.வைப் படித்துவந்த எனக்கு, அவரது எழுத்தில் காரணம் தெரியாத ஒரு கவர்ச்சி இருந்து வந்தது. அவரை என்றைக்காவது ஒருநாள் காணவேண்டும் என்ற ‘காதல் மனதில் பெருகி இருந்தது’ என்றுகூடச் சொல்லலாம்.

1973 அல்லது 74ஆக இருக்க வேண்டும் - கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் நான் ஆசிரியப் பணியாற்றிவந்த தருணம், அகில இலங்கைத் தமிழ்த் தினவிழா மிகப்பெரும் ஏற்பாடுகளுடன் அங்கு நடைபெற்றது. அதன்பொருட்டு எஸ்.பொ. உட்பட, கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளிகள் பலரும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அன்றுதான் நான் எஸ்.பொ.வை முதன்முதலாகக் கண்டேன். சற்றே காலம் கடந்த காட்சிப் படிமத்துடன் கூறுவதாயின், ‘மாமேரு மலையை அண்ணாந்து பார்த்த மலைப்புடன்’ அவரைத் தூர நின்று பார்க்கக் கிடைத்ததே தவிர, துரதிருஷ்டவசமாக அவருடன் பேசவோ பழகவோ எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

எண்பதுகளின் ஆரம்பத்தில் என்னினத்தவர்க்கும் எனக்கும் இலங்கையில் விளைவிக்கப்பட்ட இன்னல்கள் காரணமாக - நாடுகள், கடல்கள், கண்டங்கள் கடந்து, பரதேசியாக கனடா வந்து சேர்ந்திருந்தேன். ஆனாலும், எஸ்.பொ.வின் வார்த்தைகளில் சொல்வதாயின், நீண்ட பயணங்களிலும் அவற்றையும் மீறி, நெடிதுயர்ந்த ஆய்க்கினைகளிலும், அமோக இழப்புக்களிலும் ‘நான் தமிழன்’ என்ற பிரக்ஞையை மட்டும் கனடாவில் தொலைக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை இங்கு கலை இலக்கிய முயற்சிகள் தவிர, மனதுக்கு இதந்தரும் வேறெந்தப் பொதுக் காரியங்களாலும் என் ஏதிலி வாழ்வின் தழும்புகளை என்னால் முற்றாக மூடிமறைக்க முடியவில்லை. இவைகளே எனது மனதுக்குக் குதூகலம் அளித்தன; வாழ்வுக்கு அர்த்தத்தை வழங்கின. ஆகையால், அவ்வப்போதான சிறுசிறு அஞ்ஞாதவாசம் தவிர, இத்துறைகளுடனான சிநேகிதம் இங்கும் தொடர்ந்தது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் வெளியிட்டுவந்த ‘நான்காவது பரிமாணம்’ கலை இலக்கிய இதழினூடாக, சென்னையில் தமது இலக்கிய ஊழியத்தை மேற்கொண்டுவந்த எஸ்.பொ.வுக்கும் எனக்கும் தொடர்புகள் ஏற்பட்டன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே புத்தாயிரத்தில் தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்குவார்கள் என ஒரு வெற்றுப் புலம்பலாய் அல்லாமல், ஆறுகோடி தமிழ் மக்கள் வாழும் சென்னைத் தலைநகரிலே ஒவ்வொரு சொல்லினது அர்த்தமும் உணர்ந்து பிரசித்தம் செய்தவர், எஸ்.பொ. அந்த நம்பிக்கையின் அடையாளமாக, புலம்பெயர்ந்த கதைஞர்களின் 39 புதுக் கதைகளை ‘பனியும் பனையும்’ என்ற மகுடத்துடன் தமது மித்ர வெளியீடாக 94இல் வெளியிட்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, கனடாவிலிருந்து கதைகளைத் திரட்டி அனுப்பியவர்களுள் நானும் ஒருவன்.
['பனியும் பனையும்' நூலினை 'நூலகம்' தளத்தில்  - வாசிக்க... http://noolaham.net/project/01/65/65.pdf]

Espo3.jpg


உலகச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு, 2000ஆம் ஆண்டு செப்ரெம்பரில் எஸ்.பொ. கனடா வந்து, 2 வாரம் தங்கியிருந்தபோதுதான் அவரைச் சந்தித்து நேரடியாகப் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொள்கை அடிப்படையில் நாமிருவரும் முரண்பட்டவர்கள் தான்; ஆனாலும் இங்கு இடம்பெற்ற பல சந்திப்புகளின் போதெல்லாம் என்னோடு பயணிப்பதையே அவர் தமது விருப்புக்குரிய தேர்வாகக் கொண்டிருந்தார். மொன்றியால் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்புக்கென, ஒருநாள் காலை புறப்பட்டு, அது முடிந்த கையோடு மீண்டும் அன்று மாலையே ரொறன்ரோ திரும்பினோம். எங்கள் இருவரதும் மனைவியர்கள் வாகனத்தின் பின் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு, தத்தமது வீடுகளில் ‘கோழி குட்டி போட்ட கதைகளையும் –  ஆடு குஞ்சு பொரித்த கதைகளையும்’ அந்நியோன்யமாக்கப் பரிமாறிக்கொண்டு வந்தனர்.


ஆனால் அந்த 12 மணிநேரக் கார்ப் பிரயாணத்தில் இடம்பெற்ற, ‘குருஷேத்ர கீதா உபதேசத்தின்போது’, தொடர்ந்து வினாக்களைத் தொடுத்த பார்த்தனாக நானிருந்தேன். கீதாசிரியன் கண்ணனாக இருந்து அலுக்காமல், சலிக்காமல் எனது வினாக்களுக்கான விடைகளாக அவர் மனம் திறந்து என்னோடு பகிர்ந்துகொண்ட செய்திகள், தகவல்கள், அனுபவங்கள், அறிவுரைகள் விலைமதிப்பற்றவை. தமது வாழ்வியல் அனுபவங்களை இளைய படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்வதை, இலக்கியச் சகாயத்திற்கு உதவும் ஒரு சல்லாபமாக மதிக்கும் அவரது அன்றைய பகிர்வுகள் ஓர் அருமந்த நூலாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகுதியுடையவை. அதேயாண்டு, மார்கழி மாதம் கனடாச் சிறப்பிதழாக, கணையாழி வெளிவந்தமைக்கும், அதன் தொகுப்பாசிரியராக நான் பங்காற்றியமைக்கும், எஸ்.பொ.வின் முன்னெடுப்பும் முயற்சியுமே முழு முதற்காரணங்கள். அதன் பின்னர் அவர் மறையும்வரை, சில கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் மூலமாக மட்டுமே அவருடனான உறவும் தொடர்பும் நீடித்திருந்தன.

இனி, ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது வகிபாகம் என்ன என்பதை ஒரேயொரு வரியில் சொல்வதாயின், எஸ்.பொ. என்ற இந்த மகத்தான இலக்கிய ஆளுமை இன்றி, ஈழத்து நவீனத் தமிழ் இலக்கிய வரலாறே இல்லை. சிறுகதை, உருவக்கதை, நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, கல்வி, வானொலி, சினிமா என்று அவர் அகலக் கால் பதிக்காத துறையே இல்லை. அபிமன்யு, அம்யுக்தன், கொப்பன் கணபதி, கொண்டோடிச் சுப்பர், புரட்சிப்பித்தன், பழமைதாசன், ராஜ்மித்ரா, ராஜபுத்ரா என்ற மாறுவேடங்களுடன் எழுத்துலகில் நடமாடிய இவர், சிறுகதை மன்னன், ஈழத்து ஜெயகாந்தன், நடைச்சிற்பி என்றெல்லாம் விதந்துரைக்கப்பட்டவர்.

நவீன ஈழத்தமிழ் இலக்கிய உலகை ஒருகால் வழிநடத்திக்கொண்டுவந்த மாபெரும் இயக்கமொன்றைத் தமது வீரியம் மிக்க எழுத்தாற்றலைக் கொண்டும் - கரு, நடை, உத்திமுறை என்பவற்றைக் கையாளும் தமக்கேயான தனித்துவத்தினைக் கொண்டும் எதிர்த்து நின்ற துணிச்சலாளர். எதையும் புதிது புதிதாகச் செய்து பார்த்து, அதன் வெற்றி தோல்விகள் மீது மீண்டும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக, சக எழுத்தாளர் பலருடன் இணைந்து மத்தாப்பு, மணிமகுடம் போன்ற மேலும் பல கூட்டு முயற்சி இலக்கியங்கள் தோன்றக் கால்கோளமைத்தவர். ஆங்கிலப் புலமையாலும் - ஆசிய, ஆப்பிரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் வாழ்ந்தமையால் கிட்டிய பட்டறிவினாலும் - ஒரு பண்பட்ட படைப்பாளிக்குரிய பரந்துபட்ட பார்வையினையும் ஆழ்ந்தகன்ற நுண்ணுணர்வையும் தனதாக்கிக் கொண்டவர். இவ்வாறாக, தாம் சென்ற இடமெல்லாம் தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, இலக்கியத்தை, தனித்துவத்தைப் பெருமையுடன் வெளிக்கொணர்ந்து வந்த பெருமகன், அவர். ஒரு யாழ்ப்பாணத்தவனாகப் பிறந்து, யாழ்ப்பாண வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை உட்கொண்டு, அதே சமயம் ஒட்டுறவற்ற ஒரு துறவு மனப்பக்குவத்துடன் யாழ்ப்பாண வாழ்க்கையை உற்றுநோக்கியதன் பெறுபேறாகவே ‘நனவிடை தோய்தல்’ என்னும் புதிய இலக்கிய வடிவம் உட்பட, அலாதியான படைப்புக்கள் பலவற்றை ஆக்கி அளித்தவர்.

மலிவான பிரசுர களங்கள் என்னும் போர்வையுடன், புலம்பெயர்ந்த தமிழனின் குருதியும் வியர்வையும் உறிஞ்சிச் சுகிக்கப்பட்டு வந்த ஒரு காசாசைக் காமாலை நோய்ச் சூழலில், மித்ர வெளியீடு என்ற அழுத்தகம் ஒன்றை ஆரம்பித்து, அவனதும் ஏனைய பலரதும் படைப்புகள் நூலுருப் பெறுவதற்கு ஆவன செய்தவர். இவ்வாறாக ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவர் வகித்த பாகங்களின் விபரங்களைத் தொடர்ந்து அடுக்கிக்கொண்டே போகலாம்.

எஸ்.பொ. ஒருமுறை சொன்னார், “தமிழ் ஊழியம் என்னைப் பொறுத்தமட்டில் ரோஜாமலர்ப் படுக்கையாக அமையவில்லை. அது முள்முடி தரித்த, சிலுவை சுமந்த யாத்திரை! ஏன் இந்த ஆய்க்கினைகள்? என் தமிழ்ச் சேவிப்பிலே சதா புதிதுகளைத் தேடுகிறேன். அதுவும் இடையறாத ஓய்வில்லாத தேடல். அது இருட்டு அறையிலே கறுப்புப் பூனையைத் தேடுவதல்ல. அன்றேல் காரட் தொங்கும் தடிக்குப் பின்னாலான கழுதை ஓட்டமுமல்ல! அது உண்மையின் உள்ளொளி நாடிய தேடல்.” எஸ்.பொ.வினது இலக்கியக் கருத்துநிலையினைக் கோடிட்டுக் காட்டுவதற்கு அவரது வாய்வழி வந்த இந்த ஒப்புதலை விட வேறென்ன வாக்குமூலம் வேண்டிக் கிடக்கின்றது?

கைதேர்ந்த எழுத்துநடை வேறுபாடுகளுக்கும் அப்பால், தமது எழுத்துக்களில் உயிராக - ஊடுபாவாகப் பரவியிருப்பது இலக்கியச் சத்தியமே என்பதை "There was something in common in the diversity of styles which I employ" என ஆங்கிலத்தில் அழகாக ஒருமுறை கூறியிருக்கின்றார்.

படைப்பாளிகள் சத்தியத்திற்கு முன்னுரிமை கொடுத்துப் படைக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தும் எஸ்.பொ., இந்தப் படைப்புச் சத்தியத்திற்கு உண்மையே அழகு; பொய்மைக்குத்தான் பூ வேலையும் பூச்சு வேலையும் தேவை எனச் சொல்லியிருக்கின்றார்.

மேலும், “இலக்கியத்தில் சமூக முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உள்ளடக்கமே பிரதானமானது என மார்க்சியவாதிகள் கருதுகின்றனர்” எனக் கூறும் எஸ்.பொ., இலக்கியத்தில் இந்த உருவம், உள்ளடக்கம் என்ற பகுப்புமுறை கொச்சையானது என எதிர்வினையாற்றி வந்துள்ளார்.

இவ்விதமாக, இஸங்கள், கோட்பாடுகள், தத்துவங்களின் அடிப்படையில் வாழ்வியலை உற்று நோக்கும் வழிமுறையை விடுத்து, படைப்பு மொழியைத் தனது போக்கில் நகரவிட்டு எழுதும் கட்டற்ற எழுத்து முறையை அவர் கையாண்டவர். மூடி மறைக்கப்படும் மானுட நடத்தை குறித்த உண்மையை உண்மையாகச் சொல்ல வேண்டும் என்ற வேட்கையுடன், ஒரு சராசரி மனிதனது ஆழ்மன விருப்புக்களையும் சபல சஞ்சலங்களையும் இலக்கியமாக்கித் தந்தவர்.

மேலும், மண்வாசனையுடன் கூடிய ஈழத்து வட்டார மொழி வழக்குகளை, அட்ஷர லட்ஷணம் பிசகாதபடி, அவற்றிற்கே உரிய அழகியல் நுட்பங்களுடன் கையாண்டு வெற்றி கண்டவர் என்றும், ஒரு கைதேர்ந்த இலக்கியப் படைப்பாளிக்குரிய கட்டற்ற நுட்பமான கதைகூறு முறை கைவந்த கலைஞர் என்றும் விமர்சகர்களால் புகழ்ந்து கொண்டாடப்பட்டவர். ஒரு சிறுகதையையோ அல்லது ஒரு நாவலையோ படைக்க முற்படும்போது, அதில் தாம் சித்தரிக்கவிருக்கும் கருப்பொருளுக்கு ஏற்ற பொருத்தமான எழுத்து நடையையும் உருவத்தையும் கொடுக்க வேண்டும் என்று நம்பும் எஸ்.பொ., தம்மை அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படைப்பாளி என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கின்றார்.

சர்ச்சைக்குரிய ஒரு படைப்பாளியாக தம்மை இனங்காட்டிக்கொண்ட அவர், எதன் பொருட்டும் சலுகை காட்டாமல் தன்னளவில் கண்ட உண்மைகளைத் துணிந்து சொல்லவும் எழுதவும் ஒருபோதும் தயங்கியதில்லை. அதன் உடனடி விளைச்சலாக ஏககாலத்தில் எதிர்ப்பையும் ஆதரவையும் சம்பாதித்துக் கொண்டவர். தமது செழுமை மிக்க மொழி வல்லபத்தினாலும் ஆக்கத்திறனாலும் நெருக்கமான உறவுகளையும், அதேவேளை ஆழமான பிளவுகளையும் எதிர்கொண்டவர். ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அது இல்லாதவன் ஒரு படைப்பாளியே அல்ல. நுண்ணுணர்வு உள்ளமையால் தான் மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை அவனால் பார்க்க முடிகிறது. அதேவேளை, அந்த நுண்ணுணர்வுதான் அவனை எதிர்வினை ஆற்றுபவனாகவும் ஆக்கிவிடுகின்றது. அதன் விளைவாக அவன் ஏகப்பட்ட புறந்தள்ளலுக்கும் ஆளாகின்றான். அது எல்லாப் படைப்பாளிகளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு பேரவலம், சாபக்கேடு. இந்நிலையில், நுணுக்கரிய நுண்ணுணர்வு கொண்ட எஸ்.பொ. மட்டும் எப்படி இந்த நியதியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்!

2000ஆம் ஆண்டு அவர் கனடா வந்திருந்த சமயம், ஒருநாள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, நான் கேட்டேன் – “பிரேம்ஜியும் கனடாவிலதான் தன்ர பிள்ளையளோட வாழ்ந்துகொண்டிருக்கிறார், தெரியுமோ?” “ஓமடா தம்பி… கேள்விப்பட்டனான்” என்று எஸ்.பொ. சுருக்கமாகப் பதில் சொன்னார்.

“நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போறன். நீங்கள் ஏன் அவரை ஒருக்கால் சந்திக்கக் கூடாது?”

ஒரு கணநேர தாமதத்தின் பின் எஸ்.பொ. சொன்னார் -  “அதுக்கென்ன, சந்திக்கலாம்…”

உடனே பிரேம்ஜியைத் தொலைபேசியில் அழைத்து “எஸ்.பொ. உங்களைச் சந்திக்க விரும்புறார். கூட்டி வரட்டுமா?” எனக் கேட்டேன். “எனக்கொரு பிரச்சினையும் இல்லை, நவம்.” மறுமுனையிலிருந்து பதில் வந்தது. உடனடியாக நானும் எஸ்.பொ.வும் புறப்பட்டுச் சென்றோம்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆயுட்காலப் பொதுச் செயலாளராக இருந்தவர், பிரேம்ஜி. கோட்பாட்டு ரீதியில் கைலாசபதியையும் சிவதம்பியையும் பிரேம்ஜியையும் எஸ்.பொ.  தன் பரமவைரிகளாக வரிந்துகட்டிக்கொண்டிருந்தமை ஊருலகறிந்த ரகசியம்.

அதே பிரேம்ஜியின் வீட்டை நாங்கள் சென்றடைந்தபோது, அவர் வாசலில் எமக்காகக் காத்து நின்றார். இருவரும் இன்முகத்துடன் ஒருவரை ஒருவர் வரவேற்றனர். இலக்கியக் கோட்பாட்டு முரண்பாடுகளையும் மன முறுகல்களையும் மறந்து, தேநீர் அருந்தி அன்போடு அளவளாவினர். சுமார் ஒரு மணித்தியால உரையாடலின் பின்னர் அதே மலர்ந்த முகத்துடன் பிரேம்ஜியிடமிருந்து விடைபெற்று என்னுடன் புறப்பட்டு வந்தவர், எஸ்.பொ.

இது மட்டுமன்றி, இதே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளர் தெணியானின் தம்பிதான் நான் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும், என்னோடு எந்தவிதக் கோபதாபமும் இன்றி, சம்பிரதாயம் ஏதுமற்ற அன்போடும் அளவிறந்த மரியாதையோடும் உறவாடிப் பழகி வந்தவர், எஸ்.பொ.

என்னதான் கொள்கை ரீதியான மோதல்களும் முரண்பாடுகளும் இருந்தாலும், காலம் பூராவும் கறாரான விமர்சனங்களையும் கண்டனங்களையும் அள்ளிக் கொட்டினாலும், நேருக்கு நேர் காணக் கிடைக்கின்றபோது நயத்தக்க நாகரிகத்துடனும், இனிமை தோய்ந்த இங்கிதத்துடனும் பேசிப் பழகும் மனப் பக்குவம் பெற்றவர் எஸ்.பொ. அவர்கள் என்பதற்கான இருசிறு உதாரணங்கள் இவை. முடிவாக -

ஷேக்ஸ்பியர் தனது காதலிக்கு எழுதிய கவிதையில் இப்படிச் சொன்னாராம் –
‘So long as men can breath or eyes can see,
So long lives this, and this gives life to thee’
அதுபோலவே, மனித இனம் வாழும்வரை எஸ்.பொ.வின் படைப்புகளும் வாழும்; அவரது படைப்புகள் வாழும்வரை அவரும் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வார்.  

-----------

எஸ்.பொ.: இரண்டெழுத்தில் ஓர் ஆளுமை

எஸ்.பொ.: இரண்டெழுத்தில் ஓர் ஆளுமை

-- அ.பாலமனோகரன், டென்மார்க்குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர் அ.பாலமனோகரன், டென்மார்க் அவர்கள் வழங்கிய தலைமையுரை.  


Espo.jpg

டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் மூத்தவன் நான் என்பதாலேயே எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன். இந்த நிகழ்வில் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களுடன்  மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தவர்களும், அவருடைய ஆக்கங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்த அறிஞர்களும், அவருடைய அன்பு இரசிகர்களும் எனப் பல பேராசிரியர்களும், கல்விமான்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர். அவர் வளர்த்துவிட்ட எழுத்தாளர்களும் இவர்களுள் அடங்குவர்.  இந்த வரிசையில் வருவதற்கு எனக்குள்ள தகுதி மிகவும் குறைந்ததுதான். ஆனாலும் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளன் என்ற வகையில் அமரர் அவர்களுடன் எனக்குப் பழகக் கிடைத்த ஒரு சில சந்தர்ப்பங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.

எஸ்.பொ. என்ற இரண்டெழுத்து ஆளுமை உலகத் தமிழ் இலக்கிய உலகில் மாத்திரமன்று, அரசியல், சமுதாய ஏற்றத் தாழ்வுகள், பொதுவுடைமை தனியுடைமை தத்துவங்கள், உளவியல் உண்மைகள், உறவுச் சிக்கல்கள், முரண்பாடுகள் போன்ற எண்ணற்ற பரந்துபட்ட துறைகளில் தனது ஆளுமையை மிக ஆழமாகப் பதிந்துள்ளது.

உலகத் தமிழ் இலக்கியப் பூங்காவில் பல நினைவுத் தூபிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் எமது மனங்களில் பிரமாண்டமாக எழுந்து நிற்பது வள்ளுவருக்கு குமரிமுனையில் அமைக்கப்பட்ட அவருடைய சிலைதான். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களையும் இவர் ஒருவரா எழுதினார் என மேல்நாட்டு அறிஞர்கள் பலர் அதிசயப்பட்டதாகவும் அறிகின்றோம்.

என்னுடைய எண்ணத்தில் அமரர் எஸ்.பொ. அவர்களும் உலகத் தமிழ் இலக்கியப் பூங்காவில் நிமிர்ந்து நிற்கும் ஒரு நினைவுத் தூபியாகவே தெரிகின்றார். வெறும் தூபியாக மட்டுமல்லாமல் அவர் ஒரு கோபுரமாகக் காட்சியளிக்கின்றார். அந்தக் கோபுரத்தில் அவருடைய அத்தனை ஆக்கங்களும் சிலைகளாக அமைந்துள்ளன. அவருடைய எழுதுகோல் சித்தரிக்காத துறைகளே இல்லை என்பதுபோல் பலநூறு படைப்புக்கள் அந்தக் கோபுரத்தில் மிளிர்கின்றன. இந்த மெய்நிகர் நினைவேந்தல் நிகழ்வில், பல அறிஞர்களும் பேராசிரியர்களும் என்னுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்தக் கோபுரத்தைச் சுற்றிவந்து காட்டியது போன்று நான் உணர்ந்தேன். இவர்களில் சிலர் 'தோள் கண்டார் தோளே கண்டார்' எனக் கம்பன் கூறியதுபோல் தத்தமக்குப் பிடித்த சிலைகளையே சித்தரித்து மகிழ்ந்தனர். அமரரின் 'தீ', சடங்கு' போன்ற படைப்புக்களை மட்டுமே கஜுராஹோச் சிற்பங்களைப் போல் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.

ஆனால் பல பேராசிரியர்களும், அறிஞர்களும் அமரர் எஸ்.பொ.வின் ஏனைய பல, தனித்தன்மை வாய்ந்த வல்லமைகளை வியந்து, விபரமாக எனக்கு அறியத் தந்தனர். அப்போதுதான் சதாவதானி என்ற சொல் எனது நினைவுக்கு வந்தது. எந்த ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாலும் அதையிட்டுத் தனது, தனித்தன்மை வாய்ந்த கருத்தைச் சொல்லவும், எழுதவும், கவி புனையவும் கூடிய ஆற்றலையும்  கொண்டவர் எஸ்.பொ. அவர்கள் என எனக்குத் தெரியவைத்தனர். பல்துறை அவதானி என்று அழைக்கப்பட வேண்டியவர் எஸ்.பொ. அவர்கள். அவருடைய எழுதுகோல் தொடாத துறையே இல்லை என்று துணிந்து கூறமுடியும்!

எனது எழுத்தாசான் அமரர் மூதூர் வனா அனா அவர்கள்தான், தனது ஆத்ம இலக்கிய நண்பன் எஸ்.பொ. அவர்களையிட்டு எனக்குக் கூறியவர். ஒரு வரியிலேயே, இலக்கண வழு எதுவுமின்றி ஒரு சுவையான சிறுகதையை எழுதியவர் எஸ்.பொ. அவர்கள் என அறியத் தந்தார். இதைப் போன்றே அவரையிட்ட பல அரிய சங்கதிகளை அவர்மூலம் தெரிந்து கொண்டேன்,

நோபல் பரிசுபெற்ற வங்கக் கவிஞர் தாகூரைப் போன்று மகாகவி பாரதி உலகளவில் பிரசித்தம் பெறாது போனமைக்குக் காரணம் அவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்திலே வெளிவராமையே என்று சொல்வார்கள். ஆனால் அமரர் எஸ்.பொ. அவர்கள் ஆங்கிலத்திலேயும் பல ஆப்பிரிக்க நாவலாசிரியர்களுடைய ஆக்கங்களை நமக்கு அளித்திருக்கின்றார்.

இவ்வளவு அற்புத ஆற்றல்கள் கொண்ட, மிக எளிமையான குணம் படைத்த எஸ்.பொ. அவர்கள் ஈழத் தமிழ் இலக்கிய உலகுப் பிரபலங்கள் சிலரால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டில் அவருக்கு அபரீதமான புரிதல் தமிழறிஞர் மத்தியில் இருந்தமை யாவரும் அறிந்ததே.

தர்மன் தர்மகுலசிங்கம் அவர்கள் நிகழ்வில், எஸ்.பொ. அவர்களைப் பற்றிய விரிவான ஓர் ஆராய்ச்சி நூலை பிஎச்டி பட்டம் பெறுவதற்கு எழுதி அதனை உலகறியச் செய்ய யாராவது முன்வந்தால் அதற்கான பொருளாதார உதவியைத் தானே வழங்கமுடியும் என்று அறிவித்திருந்தார். இக் கனவு நனவாகவேண்டும்.

எனது இரண்டு நாவல்களைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எஸ்.பொ. அவர்கள் தமது மித்ரா பதிப்பகத்தில் வெளியிட்டிருந்தார். அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னீட்டில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"மண்பற்றை ஒரு வெறியாகத் தன்னுள் வளர்த்து, கிழக்கிலங்கைக் கதைக்கலையின் பிதாமகராய் வாழ்ந்த வ. அ. வை ஆதர்சமாகவும், குருவாகவும் சம்பாவனை செய்யும் வன்னிக் கதைஞருடைய இரண்டு நாவல்களையும் கடந்த பத்து நாள்களுக்கிடையில் மூன்று தடவைகள் எழுத்தெண்ணி வாசித்திருக்கின்றேன். அத்தகைய வாசிப்பு ஒரு பதிப்பாசிரியர் ஒருவரின் கடமையாகும். அப்பணி பல சமயங்களில் சுமையாக இருக்கும். ஆனால், இங்கு அக்கடமை மகா சுகமாக அமைந்தது குறிப்பிடத் தக்கது."

என்னை 'வன்னிக்கதைஞர்' என அமரர் எஸ்.பொ. குறிப்பிட்டதை நான் மிகவும் உயர்வாகவே கருதுகின்றேன். வசிட்டர் வாயால் பிரம்மரிசி என அழைக்கப் பட்டமை போன்று!

தமிழ் இலக்கியப் பூங்கா போன்றே பலதுறைகளில் நினைவுப் பூங்காக்களும் நினைவுத் தூபிகளும் ஏராளமாக உள்ளன. எமது காலத்தில் இவற்றில் ஒரு சிலதையே தரிசிக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டுகின்றது. வானவெளியிலே ஒளிவீசும் எண்ணற்ற விண்மீன்களைப் போன்றும், கடற்கரைகளிலே கொட்டிக் கிடக்கும் கோடிக்கணக்கான மணற் துகள்கள் போன்றும் எண்ணுக்கடங்காத் தூபிகளும், கோபுரங்களும், நடுகற்களும் நிறைந்து கிடக்கின்றன.

இந்தப் பூங்காக்களின் தரையிலே, காலை தோன்றி மாலையில் மடிந்துவிடுகின்ற ஆயிரமாயிரம் புற்பூக்களும் உண்டுதான். இவை புற்பூக்கள் என்பதனால் அவை சமானியமானவை அல்ல! மன்னன் சாலமன்கூட அத்தகைய வண்ண ஆடைகளை அணிந்ததில்லை என்று இயேசு ஒரு சமயம் கூறியிருக்கிறார்.

இந்த உலகில் காலத்தைக் கடந்தும் வாழ்கின்ற ஆக்கங்களை எஸ்.பொ. அவர்கள் போன்ற மகாமனிதர்கள் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கும் விட்டுச் சென்றுள்ளனர். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப்படும் என்பது பொய்யாமொழிப் புலவர் எமக்குக் கூறியது. எச்சம் என்பதை ஒருவருடைய பிள்ளைகள் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் மட்டுமல்ல அவர்கள் வீட்டுச் செல்லும் ஆக்கங்களும் அவர்களுடைய எச்சங்கள்தான்!

எஸ்.பொ. அவர்களின் எச்சங்களாகிய அவருடைய ஆக்கங்களும் அவருடைய தகமையை எமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன!


மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை:
முதல் நாள் நிகழ்ச்சி - https://youtu.be/jhdCoGC3qoA
இரண்டாம் நாள்நிகழ்ச்சி - https://youtu.be/Xm4426tMVis

--

Wednesday, December 22, 2021

புதுக்கோட்டைக் குடைவரைகள்


-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


வெள்ளாற்றை மையமாகக் கொண்டது புதுக்கோட்டை. வெள்ளாற்றின் கரையே சோழ பாண்டிய நாட்டு எல்லை ஆக இருந்தது என பழைய பாடல் ஒன்று கூறுகிறது.
        “வெள்ளாறது வடக்காம் மேற்குப்பெருவழியாம்*
        தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
        ஆண்டகடல் கிழக்காம் ஐம்பத்தறுகாதம்
        பாண்டிநாட்டெல்லைப்பதி.”

வெள்ளாறு வட எல்லையாகவும், மேற்கு எல்லையாகப் பெருவழியும், தெளிந்த நீர் கொண்ட கன்னி(குமரி) தென் எல்லையாகவும்,  (பல பாண்டிய மன்னர்களாலும்  துறைமுகமாகக் கொண்டு) மனநிறைவுடன் ஆட்சி செய்யப்பட்ட கடல்  கிழக்கு எல்லையாகவும், இந்த ஐம்பத்தாறு காதம் வரை விரிந்துள்ள நிலமே பாண்டிநாட்டின் எல்லைக்கு உட்பட்ட இடமாகும்.
(*பெருவழி என்பதற்குப் பதில் பெருவெளி என்ற பாட பேதமும் உண்டு).

சங்ககாலம் முதல் பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், அவர்களுக்குக் கீழே இருந்த குறுநிலத் தலைவர்கள், முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர்கள், வழுதூர் பல்லவராயர்கள்,  சிற்றரசர்கள் ஆகியோர் புதுக்கோட்டையை கிபி 15 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு உள்ளார்கள். கிபி 17 ஆம் நூற்றாண்டு முதல் 1948 வரை புதுக்கோட்டையானது ஒரு  தனியரசாக ஒன்பது மன்னர்களால் ஆட்சி செய்த பகுதியாக இருந்துள்ளது. 

Pudukkottai Cave Temples.jpg
குறிப்பிடத்தக்க வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல குடைவரைகள் புதுக்கோட்டைப்பகுதியில் உள்ளன. 


1.  மலையடிப்பட்டி குடைவரை:
Pudukkottai Cave Temples1.jpg

Pudukkottai Cave Temples2.jpg
கீரனூருக்கு வடபுறம் இரண்டு குடைவரைகள் உள்ளன. ஒன்று சிவனுக்கு மற்றொன்று விஷ்ணுவுக்கு. நந்திவர்ம பல்லவனால் எடுக்கப்பட்ட இக்கோயிலில் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்ட நந்தி உள்ளது. மேலும் சப்தமாதர்கள் ஆயுதங்களுடனும், சிம்ம வாகனத்தில் உள்ள காளியும் சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர். மேற்குப் புறம் திருமால் பாம்பணையில் துயில் கொள்வது போலவும் தேவர்கள் போன்றோர் விஷ்ணுவைப் பார்ப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் கிடந்த கோலத்தில் அவரது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா வருவது போலவும்,  மேலும் நின்ற அமர்ந்த கோலங்களிலும்,  நரசிம்ம அவதாரத்தின் இரண்யவத சிற்பங்களும்  இங்கு உள்ளன. தந்திவர்மப்  பல்லவனின் கல்வெட்டு கொண்ட பல்லவர்கால குடைவரை இது.
 
2.  குன்றாண்டார் குடைவரை:
Pudukkottai Cave Temples4.jpg

இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கல்வெட்டுகள் இரண்டு இங்கு உள்ளது என்பதால் இது பல்லவர் காலத்துக் குடைவரையாகும். பாறையிலேயே இருக்குமாறு மூலவர் லிங்கத் திருமேனி கருவறை உள்ளே உள்ளது. துவாரபாலகர்கள் மனித உருவச் சிற்பமும் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர் சிற்பங்களும்  இங்கு உள்ளன. பல்லவர்களுக்குப் பிறகு பாண்டியர், சோழர் முன் மண்டபத்தை ஏற்படுத்தியுள்ளனர்

3.  நார்த்தாமலை குடைவரை:
நகரத்து ஊர் மலை என்பது நார்த்தாமலை என மருவியது. பழியிலி ஈஸ்வரம் முத்தரையர் குடைவரை இது. சிறியநங்கை என்ற பெண் நந்தி  வைக்க ரிஷபக் கூட்டை ஏற்படுத்திய செய்தி நிருபதுங்கன் கல்வெட்டு ஆக உள்ளது. அருகே சமணக் குடைவரை தெற்கு வடக்காக நீள் சதுர வடிவத்தில் கருவறை, முன் மண்டபம் என தாய்ப்பாறையிலேயே உள்ளது.

4.  பதினெண் பூமி விண்ணகரம் குடைவரை:
பதினெண் பூமி என்ற வணிகக் குழு விஷ்ணுவின் 12 சிற்பங்களைத் தாய் பாறையிலேயே செதுக்கி உள்ளனர். பதினெண் பூமி விண்ணகரம் என்ற பெயர் கொண்டதாக கல்வெட்டு கூறுகிறது.

5.  திருகோகர்ணம்:
சதுர ஆவுடையாராக லிங்கத் திருமேனி இருப்பதாலும் மாறன் சடையன் கல்வெட்டு இங்கு உள்ளதாலும்  இக்குடைவரை பாண்டியர்களுக்கானது. மலையின் சிறு பகுதியில் கருவறை, முன் மண்டபம் தாய்ப்பாறையிலேயே உள்ளது. கங்காதரர், வலம்புரி விநாயகர் சிற்பங்களும்  இங்கு உள்ளன.

6.  சித்தன்னவாசல் குடைவரை:
Pudukkottai Cave Temples3.jpg
மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் குடைவரை செதுக்கி ஓவியம் தீட்டியதாக கல்வெட்டுச்  செய்தி இருப்பதால் இக்குடைவரை பாண்டியர்களுக்கானது. இங்கு அஜந்தா ஓவியத்துக்கு இணையான ஓவியம் உள்ளது. கருவறை, முகமண்டபம் மூன்று சமணர்களின் புடைப்பு சிற்பமும் இங்கு உள்ளன.

7.  குடுமியான்மலை மேல் தளி:
இக்குடைவரை குடுமிநாதர் கோயில் எனக் கல்வெட்டு கூறுகிறது. சதுர ஆவுடையாக லிங்கத் திருமேனி மற்றும் கோமாறன் சடையன் கல்வெட்டு இருப்பதால் இது பாண்டியர்களுக்கானது எனத் தெரிகிறது. இங்கு ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும்   பல்லவகிரந்தத்தில் வெட்டப்பட்ட  இசைக் கல்வெட்டு வீணை குறித்த குறிப்பைக் கொண்டுள்ள சங்கீதக் கல்வெட்டு உள்ளது. புடைப்புச் சிற்பமாக  வலம்புரி விநாயகரும்,  துவாரபாலகர்கள் அருகிலேயே தெற்கு பார்த்து மனித வடிவமாக உள்ளனர்.

8.  தேவர்மலை:
திருமயம் தாலுகாவில் கோட்டூர் அருகே, பேரையூர் மேற்கே காட்டிற்குள் சிறுமலையில் உள்ளது. சதுர ஆவுடை கொண்ட லிங்கத் திருமேனி, மற்றும் துவாரபாலகர்கள் மனித உருவத்தில்  உள்ளனர். இங்கே அரிட்டாபட்டியில் உள்ளது போல லகுலீசர் சிற்பம் உள்ளது. மற்ற இடங்களில் காணப்படும் லகுலீசர் சிற்பம் உதிரி சிற்பமாக உள்ளவை.

9.  திருமயம்:
மலைமேல் திருமயம் கோட்டைக்குள் சதுர ஆவுடையார் லிங்கத்திருமேனியும்,  ‘பரிவாதிநிதா’  என்ற கல்வெட்டும்  உள்ளது. இது ஏணிப்படிகளில் ஏறிப் பார்க்குமாறு இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு  பாதுகாக்கப்படும் பாண்டியர் காலக் குடைவரையாகும்.

10.  திருமயம் மலை மேற்குக் குடைவரை:
அடிவாரத்தில் மேற்கு குடைவரையில்  கிழக்கு நோக்கி சிவன் லிங்கத் திருமேனியாக தாய்ப்பாறையிலேயே சதுர ஆவுடையார் கொண்டும், மனித உருவில்  துவார பாலகர்களும் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் இங்கும் ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும்  கல்வெட்டும்  சிறு குறிப்புடன் இங்கும் உள்ளது, மிகப் பெரிய லிங்கோத்பவர் உருவம் தாய்ப்பாறையில் புடைப்புச் சிற்பமாக  உள்ளது.

11.  திருமயம் மலை கிழக்குக் குடைவரை:
அடிவாரத்தில் கிழக்கே விஷ்ணு குடைவரைக் கோயிலும் பாம்பணையில் விஷ்ணு சயன கோலத்திலும்,  மேலே தேவர்கள் அகத்தியரும் உள்ளது போலவும்,  பூமாதேவியை  தூக்குவதற்கு வரும் அரக்கர்களை விரட்ட பாம்பு விஷத்தைக் கக்கி தாக்குவது மாதிரியும்,  அவர்கள் பயந்து ஓடுவது மாதிரியாகவும் சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வருடம் ஒருமுறை இதற்கு தைலக்காப்பு நடைபெறும்.  சைவ வைணவ வழிபாட்டுச் சண்டையைக் கருத்தில் கொண்டு  13ஆம் நூற்றாண்டில்  ஹொய்சாள மன்னர் வீர சோமேஸ்வரனின் தண்டநாயகன் இருபகுதிக்கும் இடையே நடுவில் எழுப்பிய  'கையுருவிச் சுவாரால்' இப்பகுதி பிரிக்கப்பட்டு தனித்தனி வழிபாட்டிற்காக  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

12.  நச்சாந்துபட்டி மலையக் கோவில்:
பொன்னமராவதிக்கு ஒரு கிலோ மீட்டர் வடக்கில் மலையக் கோவில் இருக்கிறது. இங்கு நச்சாந்துபட்டி அருகே, இம்மலையின் அடிவாரத்தில் வடபுறத்தில்  சிவன் குடைவரை கோயில் உள்ளது. அதில்  கருவறையில் எட்டுப் பட்டைகளுடன் உள்ள ஆவுடையாருடன் லிங்கத் திருமேனியாக மூலவர் உள்ளார். இங்கு உள்ள அபிஷேகம் நீர் செல்லும் பாதையானது சிங்கம் முகமாக உள்ளது. இங்கும் ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும்  கல்வெட்டு உள்ளது.

13.  தெற்கு குடைவரை:
இதே பகுதியில், தெற்கு குடைவரையில், கருவறை முன், மண்டபம் எனவும் மூலவர் எட்டுப்பட்டை ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனியாக, புடைப்புச்  சிற்பமாக உள்ளார். தூணின் தொகையானது தரங்கப் போதிகைகள் கொண்டு உள்ளது.  எதிரே வலம்புரி விநாயகர் புடைப்பு சிற்பமாக தாய்ப்பாறையிலேயே உள்ளார்.

14.  பூவாலக்குடி குடைவரை:
பொன்னமராவதிக்குக் கிழக்கே இருக்கும் பூவாலக்குடி என்ற ஊருக்குத் தெற்கே உள்ள ஒரு சிறிய மலையில், ஆவுடையாரும் லிங்கமும் கொண்ட கருவறை உள்ளது.   அமரூன்றிய முத்தரையன் என்ற 8 ம் நூற்றாண்டு மன்னனால் உருவாக்கப் பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. பின்னர்  இந்தக் குடைவரைக் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் மண்டபம் கட்டி  விரிவு படுத்தப் பட்டுள்ளது.

15.  குலாலகோட்டையூர் குடைவரை:
திருமயம் - இராயவரம் வழியில், ராயவரத்திற்கு மேற்கே குலாலகோட்டையூர் என்று அழைக்கப்படும் கோட்டையூர் இராயவரம் சிவன் குடைவரைக் கோயில் உள்ளது.  இந்த  இராயவரம் குலாலகோட்டையூர் குடைவரையில் சுற்றுப்பாதை இல்லாமலேயே அமைந்த அரை வட்ட வடிவ ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனியாக மூலவர் அமைக்கப்பட்டுள்ளார். இது வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.

16.  ஆயிங்குடி குடைவரை:
இராயவரம் நேர் தென்புறத்தில் ஆயிங்குடியில் உள்ள மலைக்குடைவரையில்  பாறையிலேயே லிங்கத் திருமேனியாய் மூலவர் உள்ளார். பின்பு நகரத்தார்களால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. முத்தரையர்கள், பல்லவர்கள் பாண்டியர்கள் மேன்மையை ஏற்றுக் கொண்டு ஆட்சி செய்ததால் தங்களுக்குச் சாத்தான் மாறன் என்ற பெயர் வைத்துக் கொண்டனர். பல்லவர்கள் முதலாம் மகேந்திரவர்மனின் வீணை பரிவாதினி என்ற கல்வெட்டு கிடைக்கின்றது.

நார்த்தாமலைக்குத்  தெற்கே பல்லவராட்சி இருந்ததற்கான சான்றும் இல்லை. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் கல்வெட்டு, பெரும்பிடுகு முத்தரையர், மடைசெய்த கல் தூண் கல்வெட்டு,  முத்தரையன் என்னும் கல்வெட்டு, நாமனூர் குளத்தில் வட்டெழுத்து  அவனீஸ்வர கல்வெட்டு என கிட்டத்தட்ட ஆயிரம் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் சமீப காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
முனைவர். ப. தேவி அறிவு செல்வம் 

குறிப்பு: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  நடத்தும் இணையவழி திசைக் கூடல் உரைத்தொடர் நிகழ்ச்சி வரிசையில், டிசம்பர் 11, 2021  அன்று,  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவரும், கல்வெட்டு அறிஞருமான திரு. கரு. ராசேந்திரன் அவர்கள் "புதுக்கோட்டை மாவட்ட குடைவரைக் கோயில்கள்" என்ற தலைப்பில் வழங்கிய உரையிலிருந்து  முனைவர். ப. தேவி அறிவு செல்வம் அவர்கள் தொகுத்த தரவுகள் கட்டுரை. 
படங்கள் உதவி: முனைவர் க. சுபாஷிணி. 
கூகுள் வரைபடத்தில் இடக்குறிப்பு உதவி: முனைவர் தேமொழி


புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைக் கோயில்கள்: திரு. கரு. ராசேந்திரன்
உரை-யூடியூப் காணொளியாக:
https://youtu.be/XDSob-c3_k0