Wednesday, May 28, 2014

தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்


                ( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation)

                                            -செ.அ.வீரபாண்டியன் –



நல்ல ஆரோக்கியமான மனித  வாழ்வுக்கு, திறந்த காற்றோட்டமான இடத்தில் (Free Ventilation)  வாழ்வது அவசியமாகும். அதே போல் நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு, தாம் வாழுமிடம்,பணியாற்றுமிடம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமக்கான சமூக வெளியில் (social space) சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டமும்' அவசியமாகும்.

சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டம் இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும்,உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்.

 வளர்கின்ற குழந்தையிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவும், தமது வளர்ச்சிப் போக்கில் தமக்கான உள்ளார்ந்த ஈடுபாடுகளை (Passions) அக்குழந்தை அடையாளம் கண்டு பேணவும்,  அக்குழந்தையின் பெற்றோர்களும், வளரும் சூழலும் நல்ல சமூக சுவாசமுள்ளதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான மூச்சுத்திணறல் வகைகளில் ஒன்று வருமாறு:

தமிழ்நாட்டில்  ஒருவர் தனது குடும்பம்,நட்பு  சமூக வட்டத்தில் இன்னொருவருடன் இயல்பாக உரையாடுவது பெரும்பாலும் முடியாத காரியமாகி வருகிறது. தம்மை விட செல்வம் செல்வாக்கில் மேலான நபர் எனில், அவரிடம் குழைந்து, வாலாட்டி காரியம் சாதிக்கும் நோக்கில் பழகுவது; கீழான நபர் எனில் ஒதுக்குவது: சம அளவில் உள்ள நபர் எனில் இயன்ற அளவுக்கு தம்மை விட கீழ் என மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பது;

மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளில் ஒரு நபர் நம்மிடம் எந்த வகையில் பழகினாலும், அது ஒரு இயல்பான மனிதர் பழகுவதாக இல்லாமல் செயற்கையாகத் தானே இருக்கும். நமது சமூக வட்டத்தில் பெரும்பாலோர் அப்படியே பழகுவது அதிகரித்து வருமானால், மனித இயல்போடு வாழ விரும்புபவர்களுக்கு மூச்சுத் திணறல் வராதா?

சமூகத்தில் குழந்தைகள் வளரும்போதே, மேலேக் குறிப்பிட்டவாறு வாழும் தமது பெற்றோர்களையும், மற்ற பெரியவர்களையும் முன்மாதிரிகளாகக் கொண்டு, மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளிலேயே மற்ற குழந்தைகளுடன் பழகி வளர்வது சமூகத்தில் மூச்சுத் திணறல் மேலும் அதிகரிக்க வழி வகுக்காதா?

சிகிரெட், கஞ்சாவைப் போல் போதையாக சமூக மூச்சுத்திணறலை 'அனுபவிக்க' தொடங்கியவர்கள், அதிலும் அவ்வாழ்க்கை அவர்களுக்கு கட்டுபாடற்ற புலனின்பம்,வருமானம் போன்றவற்றிற்கும் வழிகளாக அமைந்து விட்டால், அதே 'போதையிலேயே' மற்றவர்களை 'முட்டாள்களாக'க் கருதி வாழ்ந்து மறைவார்கள்.

திறந்த மனதுடன் அறிவுபூர்வமாக விவாதம் நடப்பதற்கே வழியில்லாதவாறு உணர்வுபூர்வ போதையில் நமது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் அதிகரித்து வரும்போது, நமக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிப்பதை தடுக்க முடியுமா?

தமது கருத்துக்கு ஆதரவு தருவோரே 'உண்மையான தமிழர்' என்றும், அதை மறுப்போர் 'தமிழ்த் துரோகி' என்றும், 'கடவுள் படைத்த' நீதிபதிகளைப் போல் 'பாராட்டும், தண்டனையும்' வழங்கும் போக்கு உள்ள நபர்களிடம் இயல்பாக உரையாடமுடியுமா? அத்தகையோர் நமது சமூக வட்டத்தில் அதிகரிக்கும் போது, நமக்கு சமூக மூச்சுத் திணறல் அதிகரிக்காதா?

அதிலும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிவுபூர்வமாக வெளிப்படுத்தும் கருத்து, தமிழ்நாட்டில் மிகவும் செல்வாக்கான நபர் யாருடைய கருத்தும்/'சாதனையும்' தவறு என்ற முடிவுக்கு இட்டுச் செல்லுமானால், அது நாம் உயிர்வாழ்வதற்கு கூட சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் தமிழ்நாட்டில் உள்ளது. அந்த அளவுக்கு சமூக மூச்சுத் திணறல் அதிகரித்துள்ளது. இத்தகைய சமூக மூச்சுத்திணறல் போக்கும், தமிழ்நாடு தமிழ் அறிவுப் பாலைவனமாகும் (intellectual desert) போக்கும்   ஒன்றையொன்று வளர்க்கும் அபாயமும் உண்டு.

எனவே தான் தமிழ்நாட்டில் பெரும்பாலும் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், 'உணர்வு பூர்வ அலையில்' உள்ள பிரச்சினைகளில் ஒன்று ஆதரித்து, அல்லது 'மெள்னம்' சாதித்து தப்பித்துக் கொள்கிறார்கள். அல்லது வலிமைமிக்க கட்சிகளின்/தலைவர்களின் 'பின்பலத்தில்' தமது பிழைப்புப் போக்கில் அதை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள். புதுமைப் பித்தனைப் போல்,  எந்த பின்புலமும்/பலமும் இன்றி துணிச்சலாக  நிகழ்கால  'உணர்வுபூர்வ' பிரச்சினைகளில் தமது கருத்தை வெளிப்படுத்தும் எழுத்தாளர் இன்று இருப்பது அபூர்வமே.

மூச்சுத் திணறலை உணரத் தொடங்குவதே ஆரோக்கியமான சமூக வாழ்வு வாழ்வதற்கான அறிகுறியாகும்.அவர்கள் எல்லாம் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் சமூக வெளியிலிருந்து(social space)  விலகி, திறந்த காற்றோட்ட சமூக வெளி நோக்கி தமது வாழ்வில் மாற்றங்கள் செய்வதும் இயல்பே ஆகும்.  அதன் விளைவாக‌ தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல் அதிசயமாக  சமூக மூச்சுத் திணறலுக்கு எதிரான திறந்த காற்றோட்ட ஜன்னல்கள் ஒவ்வொன்றாக திறந்து வருகின்றன.

'உணர்வு பூர்வ, ஆதாயபூர்வ' அடிப்படைகளில் செயல்படும் நபர்களையும், கட்சிகளையும் அவர்களை அண்டி வாழ வேண்டிய அவசியம் இல்லாத பொது மக்கள் அவர்களை விட்டு விலகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அத்தகைய அமைப்புகள் நடத்தி வந்த இலக்கிய/மற்ற கூட்டங்களின்/அறைக் கூட்டங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் பெருமளவு குறைந்து விட்டது. தப்பித்தவறி நடக்கும் கூட்டங்களும், திருமணங்கள் போல் 'சமூக சந்திப்பு' வாய்ப்புகளாகவே நடைபெறுகின்றன. உணர்வு பூர்வ போதையில் பயணிக்கும் தங்களுக்கான சமூக வெளி குறைந்து வரும் போக்கை பற்றிய அறிவும், விவாதமும் ‘இத்தகைய சமூக சந்திப்பு’களில் நடைபெறுவதாக தெரியவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டில் 'தமிழுணர்வு’  குறைந்து விட்டதாக, பொது மக்களை குறை சொலவது அதிகரித்து வருகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இவர்களின் 'வாடையே'(மூச்சுத்திணற‌லே) இல்லாமல் உள்ளர்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்ந்து, சாதனைகள் படைத்து வருபவர்கள் வளர்ந்து வருகிறார்கள். 'விளம்பரமின்றி' உதவுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  லாப நட்ட நோக்கமற்ற உண்மையான அன்புடன் வாழ்பவர்களுக்கு, அவர்களது சமூக வட்டத்தில் 'முட்டாள்'கள் என்று கருதுவது மாறி, வியந்து மதிப்பதும் அதிகரித்து வருகிறது. தடையற்ற கருத்து பரிமாற்ற ஜன்னல்களுக்கான வாய்ப்புகள் இணையத்தில் அதிகரித்து வருகின்றன.

வெறுப்பு , கோபம்,  பழி வாங்கல் போன்ற எதிர் உணர்வுகளுக்கு (negative feelings) அடிமையாகி வாழ்பவர்கள் உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் பலியாவதைத் தடுக்க முடியாது என்பது தொடர்பான மருத்துவ ஆய்வு முடிவுகள் அதிகரித்து வரும் காலம் இது. லாப நட்ட நோக்கமற்ற அன்பு, சக மனிதர்களையும் இயற்கையையும் நேசித்து வாழும் உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (passions)  கூடிய,  நேர் உணர்வுகள்(positive feelings)  மிகுந்து வாழும் வாழ்வு உடல் நலனையும், மன நலனையும் வளர்க்கும் என்பது தொடர்பான மருத்துவ ஆய்வு முடிவுகள் அதிகரித்து வரும் காலமும் இது.

இவ்வாறு சமூக மூச்சுத் திணறலுக்கு எதிரான திறந்த காற்றோட்ட ஜன்னல்கள் ஒவ்வொன்றாக திறந்து வருகின்றன.  மூச்சுத் திணறல் ஏற்படுத்தி வந்த 'சமுக நோய்த் துகள்களும்' , அவற்றைப் பாதுகாத்து வரும் அமைப்புகளும் காணாமல் போகும் காலம் தொலைவில் இல்லை.



கட்டுரை ஆசிரியர்: செ.அ.வீரபாண்டியன் (pannpandi@yahoo.co.in)
http://musicdrvee.blogspot.in/                        
http://musictholkappiam.blogspot.in/

சிற்பம்/ஓவியம்/ ரசனை/ மஹாபலி புரம் 05

வாள் நட்சத்திரம் எனும் CRUXன் கதை - மகாபலிபுரம் -06

கவனிக்க : இது  ஒரு வால் நட்சத்திரம் அல்ல, வாள் நட்சத்திரம் ஆகும்



என்னடா இது நட்சத்திரக் கூட்டத்தைக் காண்பித்து ஒரு சிற்பத்தின் குறியீடாகக் காட்டுகின்றேனே என்று குழப்பம் அடைய வேண்டாம். இதைக் குறியீடாக நான் புனைவு கொள்ளும் போது தான் இந்த சிற்பத் தொகுதியின் பிரம்மாண்டம் விஸ்தீரணமாகின்றது.



குறிப்பு: வலது புறம் கீழ் இருப்பவன் இந்திரன் (வாளின் பிடியில் கைவைத்தபடி)

சென்ற பதிவில் நாம் விவரித்தோமே!! விஸ்வரூபம் கொண்ட திருமாலின் இரண்டடிகளைக் கண்டு அசூரர்கள் கவலை கொண்டிருக்க அவர்களைப் பார்த்துக் கொண்டு சற்றுத் திரும்பியபடி இருக்கும் சிற்பமான இந்திரனைக் கொல்லத் துடிப்பது போல அந்தரத்தில் நிலையில்லாத ஒருவன் கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரியும்.

அவனை நன்றாகப் பார்த்தால், அவன் தொங்கிக் கொண்டிருக்கும் உயரம், தேவர்களான சூரியன், சந்திரன் ஆகிய இருவருக்குமான மேலோகம் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம், ஆனால அவன் அதே திசையில் தொங்கவில்லை, மேலுலகத்தில் ஈர்ப்பு விசை இல்லை என்றாலும் அவன் மற்றவர்களுக்கு எதிரான திசையில் தொங்குவது போல் தெரிகிறது... இந்தச் சிற்பத் தொகுப்பைப் பற்றி சில நூலகள் மற்றும் இணையம் வாயிலாகத் தேடியதில் ஒரே மாதிரியான தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை, அதாவது அங்குத் தொங்கிய வண்ணம் இருப்பவனைப் பற்றி பல்வேறு கருத்துகள் வருகின்றன, முனைவர் சா.பாலுச்சாமியின் ”அர்ச்சுனன் தபசு” எனும் நூலில் அவனை நமுச்சி எனும் அசுரனாகவும், அவனை மகாபலியின் மகன் என்றும் கூறுகின்றார். ஆனால் மாபலிச் சக்ரவர்த்தியின் ஒரே மகன் என்று சொல்லப் படுபவன் பாணாசுரன் என்று சொல்லப் படுகிறது.

சில நூல்களில் மாபலியின் மகனாக வாமனன்  மீது கோபம் கொண்டு வருபவனை, வாமனன்  எட்டி உதைத்து விட அவன் அந்தர லோகத்தில் பறக்கிறான் என்று சொல்லப் படுகிறது, நான் ஏற்கும் கூற்றாக இவனை திரிசங்கு என்று வைத்துக் கொள்ளவே இச்சிற்பம் இடமளிக்கிறது. திரிசங்கு எனப்படும் மன்னன் பூதவுடலோடு சொர்க்கம் செல்லும் பேராசையில், விஷ்வாமித்ரரின் ஆசை பெற்று சொர்க்கத்திற்குச் செல்லும் பொழுது அவன் இந்திரனால் தடுக்கப் படுகிறான், பின்னர் அவனுக்கு மேலுலகமும் அல்லாமல் பூவுலகும் இல்லாமல் அந்தரத்தில் ஒரு சொர்க்கம் விஸ்வாமித்ரரால் சிருஷ்டித்துத் தரப் படுகிறது. அந்த திரிசங்கு தான் மகாபலியின் அசுர கணங்களை எதிர்க்க தயாராக இருக்கும் இந்திரனின் சிலைக்கு மேலே கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருக்கும் சிற்பம் என்று சொல்வது சிறப்பான பதிலாகக் கிடைக்கிறது.

புனைவுகள் :

புராணங்களில் மறைந்திருக்கும் அல்லது மறைந்திருப்பதாகத் தோன்றும் குறியீடுகள் யாவுமே சமகாலத்து வாசிப்பிற்கான இடத்தை அளிக்கின்றன என்பது என் கருத்து, அதன் மூலம் நமது அறிவியல், சமூகப், பொருளாதார வாழ்க்கை முறைமை பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன. அசுரர்கள் யாவருக்கும் (தலித்தியக்) குறியீடுகள் பொருந்திப் போகின்றன, இணையத்தில் மகாபலியை நான்காம்  வர்ணத்தைச் சேர்ந்தவனாகவே காட்டுகின்றனர், இராவணனை அந்தணர்  என்று சொல்லியும் கேட்டிருக்கிறேன், பிறப்பால் வேறு வர்ணத்தைச் சார்ந்தவன் வேறு தொழில்களில் இருப்பதை இப்புராணங்கள் காட்டுகிறது. கிருஷ்ணனும், பலராமனும், வராக மூர்த்தியும், மாருதியும் நான்காம் வர்ணம் தானே!! இறைவனுக்குப் பெரும்பாலும் நடக்கும் திருமணம், பெரும்பாலும் வேறு ஒரு குடி(Clan)யைச் சேர்ந்த தலைவியோடு தான். ஆனால் அவர்கள் ஏன் அசுரர்களாகவே சித்தரிக்கப் படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறதே!! அதே சமயம் அவர்கள் எல்லோருமே வினை முடித்து நட்சத்திரமாகுவதாகவும், இறைவனோடு சேர்ந்து விடுவதாகவும் வருகின்றது.

இந்த நட்சத்திரம் பற்றி தானே சென்ற தொடரில் விவாதித்தோம் எதற்காக நட்சத்திரத்தின் குறியீடாக அங்கு அந்தரத்தில் தொங்குபவனைக் காட்டினோம்?? திரிசங்கு என்று சொல்லப் படுதல் ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை வெறும் கட்டுக்கதை என்று புறக்கணித்தல் ஆகாது, உலகம் முழுவதுமுள்ள பண்டையக் கலாச்சாரங்களில் த்ரிசங்கு என்று சொல்லப் படும் நட்சத்திரக் கூட்டம் பற்றிய புராணக் க்தைகளும், நம்பிக்கைகளும் இருக்கின்றன.

சொல்லப் போனால் கி.மு 15ம் நூற்றாண்டுக்கு முந்தைய பாபிலோனிய, கிரேக்க, எகிப்திய சீன நாகரிகங்களிலும், தொல் ஆஸ்திரேலியப் பழங்குடி, மாயன், அர்ஜெண்டினா என்று இந்த நட்சத்திரக் கூட்டம் (CRUX) பற்றிய கதைகள் இருக்கின்றன.இன்று வரை இந்த நட்சத்திரக் கூட்டத்தின் முக்கியத்துவம் இருக்கிறது, இதை நீங்கள் இந்த நாட்டுக் கொடிகளில் காணலாம்.




எப்படி இந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்தது என்று பார்த்தோமேயானால்? அதற்கு கிடைக்கும் விடை மிக எளிமையானது, இரவு நேரங்களில் சம வெளியிலோ அல்லது பாலைவனத்திலோ ஏன் முக்கியமாக கடல் பயணங்களில் கூட இந்த நட்சத்திரக் கூட்டம் தான் தெற்கு திசையினைக் காட்ட உதவும், அதனால் தான் இதனை Southern Cross என்றும் சொல்லுவர்.  கிரேக்க மற்றும் எகிப்திய நாகரிகங்கள் அதை ஒரு (இறந்த பின்னும் அவர்களைக் காக்கும்)அரசன் கையில் வாள் ஏந்தி நிற்பது போல உருவகப் படுத்தினர், என்ன இத்தொகுப்பில் தொங்கும் திரிசங்கும் அப்படித் தானே இருக்கிறான். சமீபத்தில் இந்தக் கதையினை (Ancient Aliens) எனும் tv Seriesலும் இதைப் பார்த்தேன்.

சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் அவன் தலை கீழாகத் தான் தொங்கிய படி இருப்பான், நமது நம்பிக்கைகளின் படி 88 நட்சத்திரக் கூட்டம் இருக்கும் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் (அது உண்மையில் நட்சத்திரத் தொகுப்பு) தானே பெயர் சொல்லியுள்ளோம், அப்படியென்றால் இந்த CRUX  எனும் நட்சத்திரக் கூட்டம் என்ன நட்சத்திரமாக இருக்கும், அந்த 22வது நட்சத்திரமா ?? ஆமாம் அதன் பெயர் என்ன திருவோணம்...

அட அது தான் திருவோணம்!!! வாமனனின் மூன்றாவது அடியால தலைக்கனம் ஒழித்த மாபலிச் சகரவர்த்தி, இறந்த பின் தன் பாட்டனாராகிய பிரகலாதனைப் போன்று நட்சத்திரமாக இறைவன் வரமளிக்கிறார், அது தான் திருவோணம் என்று கூறுகின்றனரே என்றும் கேள்வி எழுந்தது என்னுள். ஆம் அதுவும் சரி தான் பிரகலாதன், மாபலியைப் போல நட்சத்திரமாகுவதும், திரிசங்கு எனும் நட்சத்திரமும் அவர்களோடு சேர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் CRUX என்பது நட்சத்திரக் கூட்டம் தானே!! இப்படி வெவ்வேறு புராணங்களில்; நம்பிக்கைகளில் நட்சத்திரங்களும், மண்டலமும், வெளியுமாக பரந்து கிடக்கும் பாரத நம்பிக்கைகள் ஒரு மதத்திற்கானவை மட்டுமன்று, ஏனென்றால் இந்நாடு பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிகப் பெரியது..

ஒரு சிற்பத் தொகுதியானது, புராணத்தின் கதையினை மெருகூட்டி செதுக்கப்பட்டப் படைப்பாகவே இருக்கிறது என்று நான் உணர்கிறேன். ஆனால் புவியில் துருவ மாற்றம் மற்றும் பூமியின் சுற்றுப்பாதையின் இடப்பெயர்வு என்று 26000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழக்கூடிய shift-ஆக இதைப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் ஏற்றுக் கொள்ள இடமளிக்கிறது. இதைத் தான் Precession of Equinox என்று சொல்வார்கள். அந்த 26000 வருடங்களுக்கு ஒரு முறை பூமியின் நிலத்தட்டுகளிலும் பெரியதொரு மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆன்மிகம் மற்றும் புராணங்களில் மட்டுமல்லாது எல்லா பேரிடர்களிலும், துயரங்களிலும் இறைவன் மீது இருக்கும் நம்பிக்கை தான் கடைசி முயற்சியாக இருக்க முடியும், சமீபத்தில் ரிஷிகேஷில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஒரு கோயிலின் மணியைப் பிடித்தாவாறே பல மணிநேரங்கள் தொங்கிக் கொண்டிருந்தவனை நினைவு கூர்ந்தேன், அவன் உயிர் பிழைத்தது யாரின் செயல்??.


தொடரும்....

ஜீவ.கரிகாலன்


கவனிக்க : //சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் ”அவன் தலை கீழாகத் தான் தொங்கியபடி இருப்பான்” // இதில் மாற்றுக் கருத்தும் இருக்கிறது , நட்சத்திரங்களை இணைத்து வரையும் பொழுது அவன் கையில் வாள் ஏந்தியபடி தான் இருப்பான்,  பூமியின் வேறு ஒரு பகுதியில், சமவெளியில் நின்று இதைப் பார்க்கும் பொழுது அவன் தலை கீழாய்த் தொங்குவான் என்கிற உருவாக்கம் சரியானது என்று சொல்ல முடியாது.

ஒருவேளை அவன் தெற்கு திசை நோக்கி வாள் நீட்டி இருப்பதால்... அது இச்சிற்பத் தொகுதியில் வடிக்கப் பெறும் போது தெற்குத் திசையினைக் குறிப்பதற்குப் பயன்பட்டிருக்கும். இந்த நட்சத்திரத்தினைக் கொண்டு தான் முன்னோர்கள் இரவில் திசை அறிவதற்கு  பயன்படுத்தி வந்தனர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது

- ஜீவ.கரிகாலன்
www.thoyyil.blogspot.com

kaalidossan <kaalidossan@gmail.com>

Sunday, May 25, 2014

தந்தி அனுப்புதல் குறித்த விளக்கம்! செத்துக்கிட கட்டுக்கட!

செத்துக் கிட கட்டுக் கட




ஆதி நாட்களில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு செய்தி ஒன்று அனுப்பிட வேண்டும் என்றால் புறாக்களின் காலில் செய்திச் சுருளைக் கட்டி அனுப்பினார்.  பின் குதிரைத் தபால் வந்தது.

1836ல் சேமுவெல் மார்ஸ் என்பவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செய்தியயை கம்பிகளின் மூலம் அனுப்பிட முடியும் என்று கண்டு பிடித்தார்.  அதெற்கென ஒரு சங்கேத மொழியையும் கண்டு பிடித்தார்.  அந்த சங்கேத மொழிதான் மார்ஸ் கோட் என்பது.  ஆங்கில எழுத்துக்கள் 26க்கும் கட், கட என்ற இரு ஒலிகளைக் கொண்டு வடிவமைத்தார்.  எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மே 24ம் தேதி அமெரிக்காவில் வாஷின்டனில் இருந்து பால்டிமோருக்கு தந்தி கொண்டு ஒரு செய்தியயை முதன் முதலாக அனுப்பினார்.  “என்ன செய்துள்ளார் இறைவன்!” என்பது அந்தச் செய்தி.

கீழுள்ள படத்தில் புள்ளி கட் என்னும் ஒலியைக் குறிக்கும்.  கட என்பதை கோடு குறிக்கும்.




இந்த கட்டுக் கடவை உண்டாக்கிடும் கருவி கீழுள்ள படத்தில் பார்க்கலாம்.




இக்கருவியின் கைப்பிடியை ஒரு நொடி அழுத்தி விட்டால் அது “கட்”. .அழுத்திய கைப்பிடியை அழுத்திய நிலயில் சில நொடிகள் பிடித்திருந்தது பின் விட்டால் அது “கட” ஆகும்.

கம்பி மூலம் ஒரு இடத்தில் இருந்து மறு முனைக்கு இது விட்டு விட்டுச் செல்லும் மின்சாரமாகச் செல்லும்.  மறு முனையில் இயங்கிடும் ஒரு மின் காந்தக் கருவி “கட்”, “கட” என்னும் ஒலிகளை எழுப்பும்.  மார்ஸ் சங்கேத மொழி பயின்றவர் அதை எழுத்துக்களாக மாற்றி செய்தியினை சேர வேண்டியவருக்கு ஆள் மூலமாக சேர்த்திடுவார்.

இந்த சேவை தான் தந்தி என்பது,  இது பெருமளவில் தபால் நிலையங்கள் வழியே இயங்கியது.  ரயில்வேயும் இதே மார்ஸ் கோடை உபயோகத்தில் கொண்டு வந்தனர்.

தந்தி சேவையை டெலி பிரின்டர்கள் எடுத்துக் கொண்டன.  கூடவே டெலெஃபோனும் அடித்தது சாவு மணி தந்திக்கு.

நம் நாட்டில் செத்துப் போன தந்தி சேவை சென்ற ஆண்டு ஜூலை பதினான்காம் தேதி புதைக்கப் பட்டது..

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் “செத்துக் கிட கட்டுக் கட”.


ஆக்கம் திரு நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் -- திருநீல கண்டர் 7


எங்கள் ஊர் கோவில் திருவிழாவின் மூன்றாவது நாள்.  இயக்குனர் இருள்சாமியின் ஆக்கத்தில் நடந்தது திருநீலகண்ட நாயனார் நாடகம்.

பூஜை முடிந்தது. மேடையை மறைத்திருந்த ஒட்டுப் போடப்பட்டு திரையாய் மாறி இருந்த சீலையை ஒரு புறமிருந்து மறு புறம் சுருட்டிக் கொண்டே ஓடினார் ஒருவர்.

நாடக நடிகர்கள் அனைவரும், இயக்குனர் இருள்சாமியுடன் மேடையில் தோன்றி இறை வணக்கம் பாடினர்:

தொந்திக் கணபதியே
எங்கள் குரல் கேட்டே
வந்திடு நீ இங்கே
கந்த மிகு மலரும்
திங்க நல் கொழுக் கட்டையும்
தந்திடுவோம் நாங்க
காத்திட வேண்டும் நீ
எங்க நாடகம் தனையே

‘திரைப் பையன் கையில் சீலையின் ஒரு முனையைப் பிடித்த படி ஓடுகிறான் மேடையின் முன் புறம் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு.  மறைகிறது மேடை திரைச் சீலையின் பின்னே.

சிறிது நேர இடைவெளிக்குப் பின் மீண்டும் ஓடுகிறான் அவன் கையில் திரைச் சீலையை சுருட்டிய படி

மேடையில் சில பானைகள், சட்டிகள் ஒரு புறம்.  மறு புறத்தில் குயவனின் சக்கரமும், பிசைந்த களி மண்ணும்.  “நீல கண்டம்… நீல கண்டம்” என்ற படி குயவன் ஒருவன் சுற்றிக் கொண்டிருக்கிறான் பாதி செய்து வைத்த பானை கொண்ட சக்கரத்தினை,

மேடையின் ஒரு புறத்தில் இருந்து மேடைக்கு வருகிறார் உடலெல்லாம் சாம்பல் பூசி ஜடாமுடியும் கழுத்தில் உத்திராட்ச மாலையுமாய் சிவனடியார் ஒருவர், “நீல கண்டம் நீல கண்டம்
என்றபdi.  அவர் கையில் ஒரு திருவோடு.

“தென்னாடுடய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
நீல கண்டம் நீல கண்டம்”

என்று பாடுகிறார்.

“ஐயா வருக வருக” என்றபடி அவர் காலில் விழுகிறார் நீல கண்டக் குயவனார்.  பின் கைகளைக் கட்டியபடி கேட்கிறார், ”ஐயா உங்களுக்கு நான் என்ன சேவை செய்ய வேண்டும்?  ஆணையிடுங்கள்.  செய்திடக் காத்திருக்கிறேன்.”

“நீலகண்டா நான் சில நாட்களுக்கு சைவத் திருத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று ஐயனை தாரிசித்து வர நினைத்துள்ளேன்.  பயண ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டேன்.
.
“ஐயனே அடியேன் என்ன செய்ய்ய வேண்டும் சொல்லுங்கள்.”

“சொல்கிறேன்.  என்னிடம் உள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷம் ஒன்றினை உன்னிடம் கொடுத்து விட்டுப் போகிறேன்.  அதை நீ பத்திரமாய் வைத்திருந்து நான் திரும்ப வந்து கேட்கும் போது தர வேண்டும்.  செய்வாயா?”

“ஐயா சிவனடியார் தாங்கள் கேட்பதை செய்ய மறுப்பேனா?  கட்டாயம் செய்வேன் ஐயா.  என்னிடம் கொடுங்கள் அதை.  பத்திரமாய்ப் பாதுகாத்து வைக்கிறேன்.”

“இந்தா அந்த பொக்கிஷம்” என்ற படி தன் கையில் இருந்த திருவோட்டினை நீலகண்டனிடம் தருகிறார் சிவனடியார்.  நீலகண்டன் அதை வாங்கி தன் குடிசையின் முன்னே ஒரு பள்ளம் தோண்டி புதைத்து வைக்கிறான்.

“சிவோகம் சிவோகம்” என்றபடி சிவனடியார் வெளியேறுகிறார் அங்கிருந்து.”

திரை விழுகிறது.  தப்பு தப்பு திரைச் சீலை ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் ஓடி அரங்கினை மறைக்கிறது.

“சில மாதங்களுக்குப் பின்” என்று கணீரென ஒலித்திட இருள்சாமியின் குரல், திரைச் சீலைப் பையன் சீலையினைச் சுருட்டிக் கொண்டு ஓட, மேடையில் அதே குயவன் வீட்டு சீன்.

“சிவோகம் சிவோகம்” என்ற படி அரங்கில் நுழைகிறார் சிவனடியார்.  “அய்யா வருக வருக“ என்று அவர் காலில் விழுகிறான் நீலகண்டன்.

“நீலகண்டா எனது பொக்கிஷம் எங்கே?”

“இதோ தருகிறேன் ஐயா” என்றபடி திருவோட்டைப் புதைத்த இடத்தைத் தோண்டுகிறான்.  அங்கு திருவோட்டைக் காணோம்.

“எங்கே,,, எங்கே?  என் ஆஸ்தி எங்கே?  திருடி விட்டாயா நீ அதை நான் சந்தேகப் பட்ட படி?”  உரக்கக் கத்துகிறார் சிவனடியார்.

“மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ அறியேன்” என்று பாடுகிறான் நீலகண்டன்.

“திருப்பித் தாராவிட்டால் என் பொக்கிஷத்தை, நான் ஊரைக் கூட்டி உன்னை உதைகச் செய்வேன்.  மன்னனிடம் முறையிட்டு சிறைக்கும் அனுப்பிடுவேன்.”  மீண்டும் கத்துகிறார் சிவனடியார்.

அப்போது கந்தல் உடையில் ஒருவன், “அய்யா இந்த ஏளெ பசியாத்திக்க எதுனா காசு போடுங்க அய்யா” என்று கையில் இருந்த இரண்டு இருபத்தி ஐந்து பைசா நாணயங்கள் கொண்ட திருவோட்டினைக் குலுக்கிய படி கூட்டத்துள் நுழைகிறான்..

 


(“அய்யா இந்த ஏளெ பசியாத்திக்க எதுனா காசு போடுங்க அய்யா”)

“சோமாறீ…….சோமாறீ நீயாடா லவுட்டி வெச்சுக்கின திருவோட்டெ?  பாவம் தவிக்குறாரு இல்லெ நீல கண்டரு.  கொண்டாடா அதெ இங்கெ” இன்ற படி அவன் மீது பாய்கிறார் தாணாக் காரர் தங்க வேலு.

தொடர்ந்திடக் கூச்சலும் குழப்பமும் ஓடி மறைக்கிறது மெடையினை திரைச் சீலை.

அத்துடனே முடிவுக்கு வருகிறது நாடகமும்.  காரணம் கூடி இருந்தவர்கள், “பாவம் நீல கண்டன்”  “இல்லை இல்லை பாவம் பிச்சைக் காரன்” என எரிஞ்ச கட்சி எரியாத கட்சி மாதிரி இரு கட்சிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால்.

வாங்க நாமும் ஊட்டெப் பாக்க போகலாம் நமக்கு ரெண்டு தரும அடி விழுறதுக்கு முன்னெ.

(படம் கீழை இளையவன் வலைப் பூவில் இருந்து)

23-05-2014                                     நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் -- நாடகம் போடலாம் வாங்கடா! 6





“டேய்….. குண்டுமணி, கோவாலு, பாண்டி, மாரி வாங்கடா பிச்சுக்குப் போயி காத்து வாங்கலாம்.  வெளிலெ வெய்யிலு தாங்கல.  பம்பரம், கோலி குண்டு, கிட்டிப் புல்லுன்னு ஆடவும் முடிலெ.”

“பீச்சு வெட்ட வெளிலெ இன்னும் வெய்யிலு ஜாஸ்தியா இருக்காது?”

“இருக்காதுடா.  அங்கெ கடல் காத்து வீசு மில்லெ?  அங்கெ இருக்குற மரத்தடி ஒண்ணுலெ ஒக்காந்து யோசிப்போம் இன்னி போதெ எப்பிடிப் போக்குறதுன்னு.”

“அதுவும் சர்தாண்ணே”,  ஏக காலத்தில் நால்வர் சொல்ல மெரீனா பீச்சை நோக்கி நடக்கிறார்கள் ஐவரும்

அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்ததும், ஆரம்பிக்கிறான் கோவாலு, “அண்ணே சீட்டு ஆடலாமாண்ணே?”

“வாணாண்டா.  ரோந்து வர மாமூங்க நாம மூணு சீட்டு ஆடுறோம்னு நம்மெ வேனுலெ அள்ளிகிட்டுப் போயி நல்லா கவனிச்சு உட்டூடுவாங்க.”

“அதுவும் சரிதாண்ணே.  அப்பொ இன்னா பண்ணலாம் போது போக?”

“சொல்றேண்டா.  வெச்சிருக்கேன் வளி ஒண்ணு.  நாடகம் போடலாம்” என்று சொல்லியபடி தன் அரை நிஜார் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்கிறான் கபாலி ஒரு கட்டுக் காகிதத்தை.

“நாடகமா?  என்னா நாடகம்ணே?”

“கண்ணகி நாடகம்டா.”

“சரி….நாடகம் போடுறதுன்னா அதுக்கு கதெ, வசனம், நடிகருங்கன்னு வேணுமேண்ணே?”

“எல்லாம் இருக்குடா தயாரா” என்றபடி ஒவ்வொருவர் கையிலும் ஒரு காகிதத்தைத் திணிக்கிறான் கபாலி.

“அண்ணே இது யாரு அண்ணே கதெ வசனம் கா.கா. ந்னு?”

“தெரிலெ?  கஸ்மாலம்…கஸ்மாலம்.  க.க, ன்னா கருப்புக் கபாலிடா.  ஒரு ஸ்டைலா இருக்கணும்னுதான் அப்பிடி வெச்சுகிட்டேன் என் பேரெ."

“ஆமாம்.  ஆளு இருக்குறதே நெருப்புக்குக் குளிப்பாட்டினாப்புளெ.  இதுலெ பேரெ வேர காக்கான்னு வெச்சுக்கணு மாக்கும்?” முண முணக்கிறான் குண்டு.

“டேய் என்னடா குண்டு மொண மொணக்குறே?”

“ஒண்ணு மில்லேண்ணே.  அங்கினெ ஒரு காக்கா கருவாட்டெக் கொத்திகினு போவுதுன்னேன்.  அண்ணே யாருக்கு என்ன பார்ட்டு?”  ”

“சொல்றேன்.  டேய் கோவாலூ நீ தான் கோவலன்.  கண்ணகிக்கு யாரெப் போடலாம்?” தலையைச் சொரிகிறான் கபாலி.

“அண்ணே குண்டுமணியெப் போடலாண்ணே.”  இது கோவாலூ.

“ஆமாண்டா…..நான் கண்ணாம்பா வாட்டம் ஒரு ஃபிகரு தேடிகிட்டு இருக்கேன்.  குண்டு கல்யாண மாட்டம் ஒரு ஆளெக் காட்டுறான் இவன்.  சரி வேறெ வளி இல்லெ.  சமாளிச்சுப்போம்.  ஆரு பாத்திருக்காங்க நேரிலெ கண்ணகியெ?”

“அண்ணே எனக்குப் பயாமா இருக்கண்ணே சூசூ வந்துடுமோன்னு.”

“என்னடா பயம்?”

“அந்தம்மா மறுபடி ஆட்சிக்கு வந்தூட்டாங்க.  என்னெயெக் கொண்டு போயி எங்குனா ஒளிச்சு வெச்சுடு வாங்களோன்னு பயமா இருக்கண்ணே,”

“அதெல்லாம் ஒண்ணியும் ஆவாதுடா.  சூடுண்ட பூனெ அடுப்பாண்டெ போகாதூன்னு சொல்லுவாங்க இல்லெ?  அவுங்க ஒண்ணும் பண்ண மாட்டாங்க ஒன்னியெ.  சரி………அது என்னமோ சூசூன்னியே. என்னடா அது?”
“அதுவாண்ணே?  நான் வேலெ செஞ்சுகிட்டு இருக்குற பஞ்சாபி ஊட்டுலெ கொளெந்தெயெ அந்த ஊட்டு அம்மா பாத் ரூமுலெ கொண்டு போயி நிறுத்தி வெச்சுகிட்டு ‘சூசூ கரோ… சூசூ கரோ…’ ம்பாங்க.  கொளெந்தெ சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ஒண்ணுக்குப் போகும்.  அதான் நானும் பேண்டெ நனெச்சிக்கிடு வேனோங் கெறதெ நாசூக்கா சூசூப் போயிடு வேனோன்னு சொன்னேண்ணே.”

“டேய் குண்டு நீ மொதல்லெ ஒரு ஓரமாப் போயி ஒண்ணுக்கடிச்சூட்டு வாடா.”

“வாணாண்ணே.  சமாளிச்சுக்குவேன்.”

“சரி.  குண்டு நீ கோவலனக் கூப்டு ஒன் டயலாகெ ஆரம்பி.”

“சரீண்ணே.  நாதா…”

“கட் கட்.  நீ எந்த நாளுலெடா இருக்கே?  சிலப்பதிகாரக் காலத்துலெயா? ‘நாதா…’ ங்குறான்.”  இந்த காலத்துக்கு ஏத்தாப்புளெ கூப்பிடுடா.”

“சரீண்ணே, கோவல்ஸ்…’

“டேய் நிறுத்துடா.  இப்பொதான் அமெரிக்காவுலேந்து வந்து குதிச்சாப்புளெ கோவல்ஸ்….கேவல்ஸ் ஸுங்கறான்.’

அதற்குள்ளாக அங்கு ஒரு போலீசு வேன் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய இரண்டு கான்ஸ்டேபிள்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் தங்கள் கைத் தடிகளைச் சுழற்றிய படி நாடகக் குழு அருகே வந்து, “ஏய் என்னடா இங்கெ அஞ்சு பேரு கூட்டம் போடுறீங்க?  ஊருலெ 144 போட்டுருக்குறது தெரியாது?  நாலு பேருக்கு மேலெ ஒண்ணு சேரக் கூடாதூன்னு சட்டம் சொல்லுது.  ஏறுங்கடா வண்டீலெ” என்று சத்தம் போட தலை தெரிக்க ஓடுகிறார்கள் ஐவரும் தங்கள் வீடுகளை நோக்கி.

நாடகம் முடிஞ்சாச்சுங்க.  ஏந்து போயி ஒங்க வேலெயெப் பாருங்க வெட்டிலெ போது போக்குறதெ உட்டூட்டு.


15-05-2011                                              நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

Wednesday, May 21, 2014

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் -- நாடகம் பார்க்கலாம் வாங்க!

நாடகம் பாக்கலாம் வாங்க


பொன்மலை திருச்சியின் தென் பகுதியில் உள்ள ஒரு ஊர்.  அந்த ஊரின் முக்கியமே அங்குள்ள ரயில்வே தொழிற்சாலைதான். 1930 – 40 களில் இந்தியாவிலேயே மிகப் பெரிய ரயில்வே தொழிற்சாலை என்று சொல்வார்கள் அதை.  மற்ற ஊர்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு அந்த ஊரில் இருந்த மூன்று வித இருப்புப் பாதைகள், அகல, குறுகிய மற்றும் நடுத்தர என்று.

இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ரயில்வே எஞ்சின்கள், பயணிகள் செல்லும் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் இவை எல்லாமே பழுது பார்க்கப் படுவது பொன்மலை தொழிற்சாலையில் தான்.  பழுது பார்க்கப் பட்ட பின் அந்த எஞ்சின்களை ஓட்டிப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத்தான் முன்று வித இருப்புப் பாதைகளும் இருந்தனவோ இவ்வூரில்?

பொன்மலை முற்றிலுமாக ஒரு ரயில்வே காலனி.  ஊருக்குத் தென் பகுதியில் வேலி போட்டு தடுத்திருக்கும்.  அதற்குப் பின் இருந்த இடம் பொன்மலைப் பட்டி.  அங்குதான் என் தந்தையும் சித்தப்பாவும், நடிகர் ஜெயஷங்கரின் தாத்தாவும் வீடுகள் கட்டி இருந்தனர்.

எங்கள் வீடும் சித்தப்பாவின் வீடும் அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் இவை இரண்டுக்கும் இடையே வேலி எதுவும் கிடையாது.

பொன்மலைப் பட்டியிலும், அதன் பக்கத்து கிராமமான கொட்டைப் பட்டியிலும் மற்றும் ரயில்வே காலனியிலுமாக இரண்டு கோஷ்டிகள்.  ஒன்றின் தலைவன் மருதை.  மற்றொன்றின் தலைவன்........ பெயரை மறந்து விட்டேன்.  இந்த இரு கோஷ்டிகளிடையே அடிக்கடி மோதல் எற்படும்.  வெட்டு குத்து கொலை சர்வ சாதாரணம்.

ஓர் இரவு கோஷ்டி சண்டை எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து விட்டது.  ஒருவரை ஒருவர் செங்கல்லாலும் வேல் கம்புகளாலும் தாக்கிக் கொண்டனர்.  சில கற்கள் எங்கள் வீட்டின் வாசல் கதவின் இரும்பு வலையினைப் பதம் பார்த்தன.   எங்களுக்குக் கொலை நடுக்கம்.  அப்பா ஊரில் இல்லை. சித்தப்பாவுக்கு செய்தி சென்றது.  சித்தப்பவிடம் ஒரு துப்பாக்கி உண்டு.  அவர் அதை தென்னை மரங்களில் கூடு கட்டி அவ்வப்போது எங்கள் தலைகளைப் பதம் பார்க்கும் கழுகுகளை சுடுவதற்கு உபயோகிப்பார்.  ஒரே குண்டில் கழுகினை சுட்டுத் தள்ளுவார் சித்தப்பா.

துப்பாக்கியுடன் வந்த சித்தப்பா இரு முறை எச்சரிக்கைக்காக வானை நோக்கி சுட்டார்.  மின்னல் வேகத்தில் மறைந்தது சண்டை கோஷ்டிகள்.  மறுநாள் காலை வாசலில் சென்று பார்த்தால் செங்கற்களும், கூரிய இரும்பு வேல் முனை கொண்ட ஒரு ஒடிந்த வேல் கம்பும் எங்கள் வீட்டு வாசல் கதவு முன்.

எங்கள் சித்தப்பா பார்ப்பதற்குப் புலி.  ஆனால் உள்ளத்தளவில் அவர் ஒரு குழந்தை.  மானின் மென்மை உண்டு அவர் குணத்தில்.  சித்தப்பா வீட்டில் எந்த வேலையாக இருக்கட்டும், பல்பு மாற்றுவதில் இருந்து பம்பு ரிபேர் செய்வதுவரை, எனது மூத்த அண்ணனும் நானும் ஆஜராகி விடுவோம்.  மூத்த அண்ணன் சீனியர் மெகேனிக்.  நான் ஜூனியர் அசிஸ்டன்ட்.

நாங்கள் இருவரும் வேலையில் முனைந்திருப்போம்.  சித்தப்பா திடீரெனெ, “அம்மங்காரே” (அவர் சித்தியை அப்படித்தான் கூப்பிடுவார், ஒன்று விட்ட மாமாவின் மகள்தானே அவள்) “காபி கொண்டுவா” அல்லது “ஜூஸ் கொண்டுவா” என்று உரத்த குரலில் ஆணை இடுவார்.  தனக்காகத் தான் கேட்கிறார் என்று நினைத்தால் காபியோ, ஜூஸோ வரும்போது, “பையா எறங்கி வா.  ஒர்க்கர்ஸ் டீ”, என்பார்.

எங்களுக்கும் சித்தப்பா இல்லாமல் ஒரு வேலையும் ஆகாது.  எங்கள் வீட்டின் எதிரே இருந்த பெரிய காலி இடத்தைத் திருத்தி பூப்பந்து களமோ, கால் பந்து களமோ அமைப்பதற்கும்,  மட்டைகள், பந்துகள் வாங்குவதற்கும் சித்தப்பாவின் கை தேவையான ஒன்று.  அவ்வளவு ஏன்?  கால் பந்தின் உள்ளிருக்கும் ரப்பர் உறை பஞ்சர் ஒட்டி ரிபேர் செய்ய முடியாத அளவுக்குக் கிழிந்த பின் அதற்குள் வைக்கோலை அடைத்து விளையாடுவதிலும் கூட அவரும் பங்கு கொள்வார்.

பொன்மலைப் பட்டியில் அன்நாடகளில் இருந்த வீடுகளில் எங்கள் வீட்டு நடுக் கூடம் தான் மிகப் பெரியது, 32 அடி நீளம். 16 அடி அகலம்.  மற்ற அறைகளின் ஒட்டுக் கூரை 11 அடி இருந்தபோது நடுக் கூடம் மட்டும் 15 அடி உயரம் கொண்டது.  நீண்ட இரு பக்கங்களிலும்  மேலாக ஆறு சிறிய ஜன்னல்கள் இருக்கும் உஷ்ணக் காற்று வெளியேறுவதற்காக.  மாடியில் இருந்து கூடத்தில் நடப்பதை அந்த ஜன்னல்கள் வழியே பார்க்கலாம்.

ஒரு நாள் திடீரென இரு வண்டிகளில் நாடகம் போடுவோர் உபயோகிக்கும் திரைகளும், நாற்காலிகளும், பெஞ்சுகளும் வந்திறங்கின.  பெரிய அண்ணனின் ஏற்பாடு அது.  அவனும் அவனது சகாக்களுமாக சேர்ந்து நாடகம் போட ஏற்பாடு செய்திருந்தனர்.  சித்தப்பாவுக்கும் பரம சந்தோஷம்.

டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப் பட்டிருந்தன.  ஒரணாவுக்குத் தரை, இரண்டணாவுக்கு பெஞ்சு, நாலணாவுக்கு நாற்காலி. (இன்றைய 6, 12 மற்றும் 25 காசு)

குறித்த நேரத்தில் நாடகம் ஆரம்பித்தது.  டிக்கெட் வாங்காததால் நான், என்னை விட இரண்டு வயது பெரிய ஒரு அண்ணன், எனது மூன்று தங்கைகள் எல்லோருக்கும் பால்கனி சீட், அதான் மாடியில் இருந்து ஜன்னல் வழியே பார்க்கும் இடங்கள்.

நாடகத்தில் என் பெரிய அண்ணனின் பாகம் கதா நாயகனின் நண்பனாக.  ஆனால் பாவம் மூன்று நாட்கள் முன்னதாக அவனது ஒரு கண்ணில் பெரிய கிருக்கட்டி ஒன்று தோன்றவே தலையில் பெரிய கட்டு இருந்ததால் அவனுக்கு வேறு பாகம் அளிக்கப் பட்டது.  ஒரு விதவையின் பாகம்.  அந்த விதவை பாகம் ஏற்க வேண்டிய பையன் எக்காரணத்தாலோ அன்று வரவில்லை.

குறித்த நேரத்திற்கு மணி அடிக்க நாடகம் துவங்கியது.  கூடவே பீடிப் புகையும்.  நாலணா கொடுத்து நாடகம் பார்க்க வருபவர்கள் கோல்ட் ஃப்ளேக் சிகெரெட்டும், ஹவானா சுருட்டுமா பிடிப்பார்கள்?  கிளாவர் பீடியும், ஹாட்டின் பீடியுந்தான் அவர்கள் கையில்.

எங்களுக்கு பீடி புகை அவ்வளவும் வந்தது.  எங்கள் வயிற்றில் குமட்டல் எடுத்தது.  நாடகம் பார்க்கும் ஆவலில் அதைப் பொருத்துக் கொண்டோம்.


காட்சிகள் மாறிக் கொண்டே போக நாடகமும் சூடு பிடித்தது.  என் அண்ணன் நடிக்கும் காட்சி வந்தது.  தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வெள்ளைப் புடவையில் காட்சி தந்த என் அண்ணனைப் பார்த்ததும் அதுவரை பீடிப் புகையை சகித்துக் கொண்டு தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த சித்தப்பா எரி மலையென வெடிக்க ஆரம்பித்தார் தன் சிம்மக் குரலில்,  “மொட்டெச்சி வேஷம் போடவாடா இத்தெனெ ஆர்பாட்டம்?  இத்தெனெ செலவு?  எவண்டா அவன் இங்கெ வீட்டுக் குள்ள பீடி குடிக்கிறது?  போங்கடா எல்லாம் வெளிலெ” என்று கத்தினார்.

அவ்வளவுதான்.  திரை விழுந்தது. நாடகம் பார்க்க வந்தவர்களெல்லாம் அடித்துப் பிடித்து வெளியே ஒடினர்.  நாங்களும் பால்கனியில் இருந்து கீழே இறங்கினோம்.

நாடகந்தான் முடிஞ்சிடுச்சே.  நீங்களும் கிளம்புங்க ஒங்க ஊட்டெப் பாக்க.


(பி.கு.  இது கற்பனைக் கதை அல்ல.  எங்கள் வீட்டில் ஆயிரத்தித் தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.)

ஆக்கம்:  திரு நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் --நாம் வாழும் வாழ்க்கை

தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர்.  அவர் பல ஆயிரம் பாடல்கள் இயற்றி உள்ளார் அவை.  எல்லாமே பக்திப் பாடல்கள்.  அவற்றில் அழகான ஒன்று ரேவதி ராகத்தில் அமைந்த  “நாநாடி ப்ரதுகு நாடகமு” என்ற பாடல்.  அதனைத் தழுவி தமிழில் ஒரு பாடல் இதோ:

பல்லவி

நாம் வாழும் வாழ்க்கை யோர் நாடகம் தான்
என்றுமே வேண்டும் இன்பமாம் முக்தி

                                                (நாம்.....)


அனுபல்லவி

பிறப்பதும் நிஜமே இறப்பதும் நிஜமே
இடையில் வாழ் வாழ்க்கையோர் நாடகமே
வாழ்க்கையே மாயந்தான்
முக்தியே உண்மை காண்

                                               (நாம்.....)

சரணம் - 1

உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்
வந்திடா துன்கூட சென்றிடும் வேளையில்
வந்திடும் நிச்சயம் நீ செய் நன்மைகள்
தீமைகள் இவற்றின் பலன்கள் தான்

                                              (நாம்.....)




சரணம் – 2

கெட்டதின் பலன் தான் விட்டிடா துன்னையே
நல்லதின் பலனோ கைவிடா துன்னையே
எங்கும் நிறை ஆண்டவன் தாள் பணி என்றும் நீ
அடைவாய் நிச்சயம் இன்பந் தரும் முக்தியே

                                              (நாம்.....)

 ஆக்கம்: திரு  நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் - திரெளபதி வஸ்திர அபஹரணம்!


திரைக்குப் பின்னால் – 1 – திரௌபதி வஸ்த்திராபரணம்



“துச்சாசனா இன்னுமா சீலையெ உருவி முடிக்கலே?”

“அண்ணா உருவ உருவ அது வந்துகிட்டே இருக்குதே.”

மெல்லச் சொல்கிறான் துரியோதனன், “ரெண்டு வருசத்துக்கு முன்னெ ஆரெம்கேவீலெ விளம்பரத்துக்காக வெச்சிருந்த சீலெயெக் கட்டிக்கிட்டு வந்தூட்டாளோ இந்த திரௌபதி?”

இயக்குனர் சொல்கிறார், “திரௌபதீ கூப்புடும்மா கிருஷ்ணனெ சீக்கிரம்.  சீலெ முடியப் போவுது.”

“ஆபத் பாந்தவா…. அனாத ரக்ஷகா… காப்பாத்து என்னெ.”

ஒப்பனை அறையில் இருந்து வருகிறது ஒரு குரல், “சார் கிருஷ்ணனுக்கு போட இருந்த நீலச் சாயத்துக்கு பதிலா செவப்பு சாய பாட்டிலெக் கொண்டாந்திருக்காங்க சார்.  தலெய்க்கு வெய்க்குற மயிலு பீலியையும் புல்லாங் குழலையும் காணும் சார்.”

“நீலச் சாயமும், மயிலு பீலியும் கொழலும் இல்லாட்டிப் பரவாயில்லையா.  அந்த ஆளே நெருப்புக்குக் குளிப்பாட்டின நெறந்தான்.  பெட்ரொமாக்ஸு வெளீச்சத்துலெ நீலத்துக்கும் கருப்புக்கும் பெரிசா வித்தியாசம் ஒண்ணும் தெரியாதையா.  கொழலுக்கு பதிலா அங்கெ கெடெந்த ஃபுட் ரூலெக் குடுத்து அனுப்பையா”.

“சார் பக்கத்துலெ இருக்குற நாயர் கடெய்க்குப் போயி ஒரு சிங்கிள் டீ குடிச்சீட்டு வறேன்னு போன கிருஷ்ணனெ இன்னும் காணும் சார்.”

“ஆபத் பாந்தவா… அனாத ரக்ஷகா…. என்னெக் காப்பத்துடாப்பா” தலையைத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அண்ணாந்து பார்த்த படி கத்துகிறார் இயக்குனர்.

இயக்குனரைத் தொடர்ந்து துரியோதனன், “துச்சாதனா விடு சீலையை.  நீ மிகவும் களைத்துப் போய் விட்டாய்.  போய் ஏதேனும் சிற்றுண்டி தின்று விட்டு வா.  மீண்டும் தொடரலாம் புதிய தெம்போடு உன் வேலையை.”

“யொவ் தெரெ…. கீளெ உடுய்யா தெரெயெ” என்று இயக்குனர் கத்த விழுகிறது திரை.

(படம் இணைய தளம் ஒன்றில் இருந்து)


  கட்டுரை ஆக்கம்:திரு.  நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

நாடகமே உலகம் --திரைக்குப் பின்னால் -- அல்லி ராணி தர்பார்

திரைக்குப் பின்னால் – 2 – அல்லி ராணி தர்பார்

எங்க ஊரு கோவிலுலெ திருவிளா வந்துச்சு.  திருவிளான்னா பொய்க்கால் குதிரெ, ஒயிலாட்டம் மயிலாட்டம், நாட்டியம், நாடகம், தெருக்கூத்துன்னு இல்லாமையா?  ஒரு நாளு அல்லி ராணி தர்பார்னு நாடகம் நடந்திச்சு.

"என்னாது அலி ராணியா?”

அலி ராணி இல்லேங்க.  அல்லி ராணி தர்பாருங்க.  அல்லிப்பூ கேட்டதில்லே நீங்க?  அது போல அல்லீ அல்லீன்னு ஒரு ராணி.

“அல்லீ அல்லீன்னு ரெண்டு வாட்டியா?  நேத்து கல்பட்டாரு சொல்லிக்கிட்டு இருந்தாரே வெள்ளெக் கொக்கோட விஞ்ஞான ரீதியான பேரு ‘சிகோனியா சிகோனியா’ ன்னு அது போலவா?”

இல்லீங்க.  ஒங்க மனசுலெ நல்லாப் பதியணும்னு தான் ரெண்டு வாட்டி சொன்னேன் பேரெ.

“மேலெ சொல்லுங்க கதெயெ.”

சொல்றேன்.  நாடகம் பாக்க வந்தவங்க கூட்டம் நல்ல கூட்டம்.  ஊரே தெரண்டு வந்திருந்தீச்சுன்னு சொல்லணும்.

கிணி கிணின்னு மணி சத்தம் கேட்டீச்சு.  அப்போ தெரெக்கிப் பின்னாடி ஒரு சின்ன வெளிச்சம் மெதுவா கோளி முட்டெ வடிவத்துலெ சுத்த ஆரம்பிச்சு அந்தரத்துலெ ஒரு எடத்துலெ அப்பிடியே நின்னீச்சு.  பாட்டு ஒண்ணு கேக்க ஆரம்பிச்சுது, “மங்கள விநாயகா சரணம்…….. எங்கள் நாடகத்தே காத்திடணும்” னு.  கூடவே கூட்டு பாட்டா இன்னும் அஞ்சாறு குரலுங்க, மங்கள வினாயகா சரணம்னு.

‘தெரெச் சீலெ தடிமனான இருக்குமே?  அது பின்னாடி நடக்குறது எப்பிடீங்க தெரியும்னு கேக்குறீங்களா?  எங்க ஊருலெ நாடகம் போடுறது நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியா என்ன?  எங்க ஊருக் காரங்க ஏளெட்டு பேரு சேந்து போடுறது தானே?  நாலு பளய சிலெயெ சேத்து தெச்சு கீளெ ஒரு நீள மூங்கிலெ வெச்சுக் கட்டினது தானுங்களே தெரெச் சீலெ?  பின்னாடி சூடம் கொளுத்தினா தெரியாது அந்த சீலெ வளியா?

சூடம் அணெஞ்சிது.  தடதடன்னு ஏளெட்டு பேரு ஓடுற சத்தம்.  கூடவே, “சீக்கிரமா நகத்துங்கடா நாற்காலீங்களே” ன்னு.

“தூக்க முடீலீங்க இந்த அரியாசனத்தெ.  பொண கனம் கனக்குது இது.”

“பொண கனம் கனக்குதுன்னா நாலு பேரா சேந்து தூக்குங்கடா.”

நாற்காலிகளெ நகத்துற சத்தம் அடங்கவும் தெரெ மேலெ போகுது.  மேடேலெ நடுவுலெ அரியாசனத்துலெ கிரீடம் வெச்சுக் கிட்டு ஒரு பொண்ணு.  அதான் அல்லி ராணி.  அவளுக்கு முன்னாடி ரெண்டு பக்கமும் வரிசையா அஞ்சாறு நாற்காலிங்க.  அதுங்களுலெ தலெப்பாக் கட்டிக் கிட்டு ஆளுங்க.

ஓரு ஆளு மேடெ ஓரெத்துலேந்து ஒடெம்பெ இடுப்புக்கு மேலெ முன்னாடி வளெச்சுக் கிட்டு, கையி ரெண்டெயும் கூப்பி வெச்சுக் கிட்டு வரான்.  “ஒற்றா சொல் நீ வந்த விசயம் என்ன?  என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய்?” கேக்குறா அல்லி ராணி.

குனிஞ்ச தலெ நிமிராமெ கூப்பிய கை அகலாமெ ஆரம்பிக்கிறார் அவர்’  “அல்லி அரெ… சாணி அரெ… அல்லி அரெ… சாணி அரெ…” ன்னு ஒடெஞ்செ கிராம போனு பிளேட்டு மாதிரி.

“அடேய் அது அல்லி அரெயும் இல்லெ.  சாணி அரெயும் இல்லேடா.  முளுசா அல்லி அரசாணியாரேன்னு சொல்லுடா” ன்னு சற்று உரக்கவே கத்துகிறார் இயக்குனர் இருள்சாமி.

“கவலெ உடு வாத்தியாரே.  நான் சமாளிச்சுக்குறேன்.  புச்சு இல்லெ அவன்.  அதான் நடுங்குறான்.  நடுக்கத்துலெ சொல்லிக் குடுத்த பாடத்தெ மறந்தூட்டான்.”  இது அல்லி ராணி மெல்லிய குரலில்.  முன் வரிசெலெ இருக்குற எங்க காதுலெ மட்டும் உளுது அது.

தொடர்கிறாள் அல்லி ராணி.  “ஒற்றரே ஏன் நடுங்குகிறது உங்கள் உடல்?  சொல்லுங்கள் சொல்ல வந்ததை.”

உடல் நடுக்கம் முளுசுமா நிக்காமலே ஆரம்பிச்சாரு ஒத்தரு, “ராணியாரே அருச்சுன மகாராசன்னு…”

சொல்ல வந்ததெ முடிக்கலெ அந்த ஆளு.  கோவத்தோட ஏந்திரிக்கிறா அல்லி ராணி.  கையிலெ இருந்த கத்தியெத் தூக்கிப் புடிச்சிக் கிட்டு, “என்னது மகாராசனா?  என்ன விட ஒசந்தவனாடா அவன்?  காட்டுடா எங்கெ இருக்கான் அவன்.  ஒரு கை பாக்குறேன் அவனெ” என்றபடி வேகமாக மேடையில் தூக்கிப் பிடித்த வாளுடன் ஒரு சுற்று வருகிறாள்.  அப்போது…..

“என்ன ஆச்சு?  என்ன ஆச்சு?”

அல்லி ராணியோட பின்னிய ஜடெ மேடெ ஓரத்துலெ சட்டீலெ வெச்சிருந்த ரோஜாச் செடி முள்ளுலெ மாட்டிக் கிச்சு.  ஜடெ, டோப்பா, கிரீடம் மூணுமா கீளெ உளுந்துது.  அல்லி ராணி இதெ கவனிக்காமெ சுத்தி வந்தா மேடெயெ, “ஆருடா அருச்சுன மவராசன்…. பாருடா இந்த அல்லி ராணி பராக்கிரமத்தே” ன்னு பாடிய படி தன் கிராப்புத் தலையோடு.

அல்லி ராணிக்கு ஏது கிராப்புத் தலென்னு கேக்குறிங்களா?  அல்லி ராணியா வந்தது ராணிபார்ட்டு ரங்கதொரெங்க.  அவரு கொரலு சன்னமா பொம்பிளெ கொரலாட்டம் இருக்குங்க.  அதுனாலெ எங்க ஊருலெ எப்போ ட்ராமா போட்டாலும் ரங்கதொரெ தாங்க ராணி பார்ட்டு.

சனங்கள்ளாம் பெரிசாக் கை தட்டினாங்க அந்த வேடிக்கேயெப் பாத்து.  அல்லி ராணிக்கு, அதான், நம்ம ரங்கதொரைக்கு ஒரே சந்தோசம் சனங்க தன்னோட வீரா வேச வசனத்தெப் பாத்துதான் கை தட்டுறாங்கங்கற நெனெப்புலெ.

இயக்குனரு இருளுசாமி இந்த வாட்டி கொஞ்சம் ஒரக்கவே கத்தினாரு, “உடுங்கடா தெரெயெ” ன்னு.  தெரெ விளுந்தீச்சு.

எதுக்கு இன்னும் குந்திக்கிட்டு இருக்கீங்க.  கட்டுங்க நடெயெ ஊட்டெப் பாக்க.  அதான் நாடகம் முடிஞ்சிடிச்சே.

02-12-2012                                            நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

நாடகமே உலகம் - திரைக்குப் பின்னால் - - பொம்மலாட்டம்

 



சிலருக்கு வாழ்ந்திட வழி வகுக்குது பொம்மலாட்டம்.  சிலருக்கோ அவர்கள் வாழ்க்கையே ஒரு பொம்மலாட்டம்.  இரண்டிலுமே சூத்திரதாரி நூலை இழுத்திட ஆடுகின்றன பொம்மைகள்.

மதராசில் (அதுதான் சென்னை நகரின் அந்நாளையப் பெயர்) செந்நிறத்தில் கலை நுணுக்கத்தோடு கம்பீரமாய் நிற்பது உயர் நீதி மன்றம்.  அதன் ஒரு புறம் எஸ்ப்ளனேட் சாலை.  அந்த சாலையில் சில உயர்ந்த கட்டிடங்கள்.  அவற்றுள் ஒன்றின் பின்னே வெளியூர் சென்றிடும் பேருந்து நிலையம்.  அதன் அருகிலேயே மற்றொரு கட்டிடத்தின் பின்னே ஒரு திறந்த வெளி மைதானம்.  இவ்விரண்டுக்கும் இடையே பேருந்து நிலையத்திற்கு வந்து போகும் பேருந்துகளும் பயணிகளும் செல்வதற்கென ஒரு தெரு.

காலி மைதானத்தின் இரு பக்கங்களில் பெட்டிக் கடைகள் பயணிகள் கடைசி நேரத்தில் எடுத்து வர மறந்த சாமான்களை வாங்கிடுவதற்காக.  அவற்றில் கிடைக்காத சாமான்களே இருக்காது என்று சொல்லாம்.  சோப்பு, சீப்பு, கண்ணாடி, பற்பசை, தின் பண்டங்கள் இத்தியாதி.

பெட்டிக் கடை பார்த்ததுண்டா நீங்கள்?

பெட்டிக் கடைகள் என்பவை நான்கு கால்களின் மேல், சுமார் இரண்டரை அடி உயரத்தில் அமர்ந்திருக்கும் மரப் பலகைகளால் ஆன சிறு கடை.  தகரத்தால் ஆன கூரை.  கடையின் முன் புறம் மேல் நோக்கித் திறந்திடும் முழு அகலக் கதவு.  பெட்டிக் கடையின் கால்கள் முன் புறமும், இரு பக்கங்களும் மரப் பலகையால் மூடப் பட்டிருக்கும்.  பின் புறம் ஒரு ஆள் தவழ்ந்து உள்ளே நுழைந்திடும் அளவிற்கு ஒரு நுழை வாயில் கதவு.  சில கடைகளில் இந்த இடத்தில் ஒரு சாக்குத் துணி தொங்கிக் கொண்டிருக்கும்.

திறந்த வெளியில் ஒரு கட்டில்.  கட்டிலைச் சுற்றி இங்கும் அங்குமாக உதிரிக் கற்களால் ஆன விறகடுப்புகள்.  அந்த அடுப்புகளின் அருகில் சில சட்டிப் பானைகளும், குப்பைத் தொட்டியில் இருந்து பொறுக்கி வந்தது போன்ற அலுமினியத் தட்டுகளும்.  கட்டிலில் ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்க ஆண்.  முகத்தில் க்ஷவரம் செய்யப் படாத தாடி மீசை.  எண்ணை கண்டு பல மாதங்கள் ஆன பரட்டைத் தலை.  அவர் பிறரை அடக்கி ஆள்வதைப் பார்த்தால் அவர் தான் அந்த இடத்தின் உரிமையாளரோ என்னும் அளவிற்கு நம் மனதில் சந்தேகம் எழும்.

இந்தச் சூழலில் தான் அரங்கேறுகிறது நம் பொம்மலாட்டக் கதை.

ஒரு நாள் கையில் கைத் தடியுடன் வந்த இரு போலீஸ் காரர்கள் அங்கிருந்த சட்டிப் பானைகளை உடைக்க ஆரம்பித்தனர்.  அங்கிருந்தவர்களில் சிலர் ஓடி மறைந்தனர்.  அங்கே நின்று வேடிகை பார்த்துக் கொண்டிருந்த இரு பெண்களை மட்டும் தங்களோடு எஸ்ப்ளனேட் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.

தன் கடமைகளை ஆற்றுவதில் தான் எத்தனை ஈடுபாடு அந்த காவல் காரர்களுக்கு!  சட்டத்துக்குப் புறம்பாக சர்க்கார் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தான் எத்தனை கவனம்!

மதிய சிற்றுண்டி அருந்துவதற்காக ‘அம்பீஸ் கபே’ நோக்கி நடந்து கொண்டிருந்த நான் தற்செயலாக எஸ்ப்ளனேட் காவல் நிலையப் பக்கம் என் பார்வையைத் திருப்பினேன்.  அங்கு வராந்தாவில் அந்த இரு பெண்கள்.  உள்ளே ஆய்வாளரிடம் பேசிக் கொண்டிருந்தது பரட்டைத் தலை.  சிற்றுண்டி முடித்துத் திரும்பிய போது காவல் நிலையத்தில் அந்தப் பெண்களும் இல்லை.  பரட்டைத் தலையும் இல்லை.

ஒருக்கால் அவர்களை எதிரிலேயே இருந்த நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்களோ?  இது என் அடுத்த சந்தேகம்.  அதிக நேரம் நீடிக்க வில்லை அது.  அலுவலகம் திரும்பிய நான் அவர்களை அவர்களது வழக்கமான இடத்தில் பார்த்தேன், கட்டிலில் பரட்டைத் தலையும், கீழே தரையில் அந்த இரு பெண்களும்.

பின் ஒரு நாள் காக்கி அரைச் நிஜாரும், பெல்ட்டும், வெள்ளை அரைக் கை சட்டையும், தலையில் நெட்டி, காக்கித் துணி இவற்றால் செய்த தொப்பியும் (hat), கையில் சிகப்புப் பட்டி போட்டுக் கட்டிய கோப்பு ஒன்றுமாக ஒரு நடுத்தர வயதுக் காரர் வந்து சேர்ந்தார் அந்த மைதானத்திற்கு.  வந்தவர் நேராக பரட்டையிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார்.  அவர் முதுகுப் புறம் என் பக்கமாக இருந்தால் என்னால் ஊகிக்க முடிய வில்லை அவர்களுக்குள் என்ன பேச்சு நடந்தது என்பதை.

ஆகா பிறந்திடப் போகிறது பொன்னான விடிவுக் காலம் இந்த தெரு வாழும் ஏழைகளுக்கு.  அவர்கள் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகளும், கணக்கெடுப்பும் எடுக்க வந்துவிட்டாரே இந்த அரசு அதிகாரி!  இதோ அவர் தன் கையில் இருந்த கோப்பினைக் கட்டிலில் வைத்து விட்டுத் தவழ்ந்து சென்று ஒரு பெட்டிக் கடையின் கீழ் புகுந்து கொண்டிருக்கிறார்.

சில நிமிஷங்களுக்குப் பின் வெளியே வந்த அவர், அவிழ்ந்திருந்த தனது பெல்டினை சரி செய்து கொண்டு நேரே பரட்டையிடம் சென்று அவர் கையில் எதையோ திணித்தார்.  பின் அவர்கள் இருவரும் முதலில் மெதுவாகப் பேசிப் பின் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தனர்.

பரட்டை ‘அரசு ஊழியர்’ தன் கையில் திணித்த அந்தப் பொருளை அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து, உரத்தக் கத்தினார், “காசைத் திருப்பித் தர முடியாது.  வேணுன்னா இன்னோரு வாட்டி போயிட்டு வா” என்று.

அவர்கள் இப்படி வாக்கு வாதம் செய்து கொண்டிருந்த போது பெட்டிக் கடை அடியிலிருந்து எலும்பும் தோலுமாய் ஒரு பெண் தவழ்ந்து வெளியே வந்தாள்.  அப்போது தான் இந்த மர மண்டைக்கு உதயமானது ‘அரசு ஊழியர்’ பெட்டிக் கடைக் கீழே சென்று என்ன குறிப் பெடுத்தார் என்பது.

வெளியில் வந்த பெண் சற்று நேரம் விடாது இருமிக் கோழை துப்பினார்.  அதற்கு எதிரொலி போல பரட்டையும் ஓரிரு முறை  இருமி எச்சில் துப்பியது.

சில நாட்கள் கழிந்தன.  ஒரு நாள் அங்கு ஒரு இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத் தக்க ஒரு பெண் வந்து சேர்ந்தாள்.  அன்று பூராவும் அவள் கவலையோடு உட்கார்ந்திருந்தாள்.  நெடுந் தூரப் பயணக் களைப்பாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது எனக்கு.

புதிதாக வந்தவளைத் தன் அருகிலேயே கட்டிலில் அமரச் செய்தது பரட்டைத் தலை.  அவளுக்கு புதிய சேலையும், அருகில் இருந்த பூக்கடையில் இருந்து தொடுத்த மல்லி, கதம்பச் சரங்களும் வாங்கி வந்து கொடுத்து அவளைச் சூடிக் கொள்ளச் செய்தது..

மறு நாளிலிருந்து புது வரவு அந்த இடத்திற்கே ராணி போலச் சுற்றி வந்து, அங்கிருந்த பெண்களோடு பேசி கொண்டு இருந்தது.

ஒரு நாள் அந்த மைதானத்தில் கும்பல்.  தம்பட்டம் அடித்த படி ஒருவர்.  அவரைச் சுற்றி குதியாட்டம் போட்டிடும் சிலர்.  அவர்கள் பின்னே தரையில் ஒரு பாடையில் எலும்புத் தோல் பெண், ரோஜா மாலைகள் அணிந்து.

அடுத்த நாள் ஓங்கி ஒரு அறை விட்டு, ‘ராணி’ யை பெட்டிக் கடை அடியில் புகச் செய்தது பரட்டைத் தலை.  சில நொடிகளில் அதே பெட்டிக் கடையின் கீழே நுழைந்தார் ஒரு வெள்ளைக் காரர்.  சென்னைத் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி இருக்கும் ஒரு கப்பலின் ஊழியராக இருக்க வேண்டும் அவர்.

அப்போது தான் புரிந்து எனக்கு அவள் அவ்வப்போது இருமிக் காரி உமிழ்ந்து கொண்டிருந்த பரட்டைத் தலைக்கு சொந்தக் காரி இல்லை. சொந்தம் எனத் தன் ‘குடும்பத்துள்’ சேர்ததிட முதலீடு செய்து வாங்கி வந்து இருக்கிறார் அவர் அந்தப் புது வரவை என்பது.

சில நாட்களுக்குப் பின் மீண்டும் கும்பல் அந்த மைதானத்தில்.  அதே தம்பட்டம், குதியாட்டம் போடும் கும்பல்.  கூடவே அவ்வப்போது சங்கும், தடிமனான பித்தளைத் தட்டினைத் குச்சியால் தட்டி எழுப்பிடும் மணியோசையும்.

மைதானத்தின் நடுவே மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பாடையில் ரோஜா மாலைகள் அணிந்து நேற்று வரை அங்கு பொம்மலாட்டம் நடத்திய சூத்திரதாரி பரட்டைத் தலையின் சடலம்.

ஒரு நாள் நகராட்சி ஊழியர்கள் சிலர், யந்திரங்கள் உதவி கொண்டு, பெட்டிக் கடைகளை இடித்துத் தரை மட்டமாக்கினர்.

இப்படியாக முடிந்தது ஒரு பொம்மலாட்டம்.

“ஒரு நல்ல கதை எழுத வேண்டும் என்றால், படைப்பாளி அந்தக் கதையின் ஒரு பாத்திரமாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்” என்று ரஷ்ய நாவலாசிரியர் அலெக்சாண்ட்ரே குப்ரின் என்பவர் எழுதிய “யாமா தி ஹெல் ஹோல்” என்ற கதையின் முன்னுரையில் படித்திருக்கிறேன்.

“பொம்மலாட்டம்” நல்ல கதையோ இல்லையோ தெரியாது எனக்கு.  ஆனால் தெரிந்த ஒன்று நான் இக் கதையில் ஒரு பாத்திரம் இல்லை.  பார்வையாளனே என்பது.

மூன்றாவது மாடியில் இருந்த என் அலுவலக அறையின் ‘பால்கனி’ ஒன்றில் இருந்து அலுவலகப் பணி ஆரம்பிக்கும் முன்னும், உணவு இடை வேளையிலும் காற்று வாங்கிட நின்ற போது பார்த்தவற்றைத் தான் இங்கு அளித்திருக்கிறேன்

(பொம்மலாட்டம் படம் இணையத்தில் இருந்து)


கட்டுரை ஆக்கம்:  திரு நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan knn1929@gmail.com

Tuesday, May 20, 2014

சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம் - -வராக மண்டபம்--04

 விஸ்வரூபம்

வெறும் உற்று நோக்குதலில் ஆரம்பித்தது தான், ஆனால் இப்பொழுது சிலைகள் என்னோடு பேச ஆரம்பித்து விட்டன, ஏனென்றால் புராணங்களை தொன்மை வடிவத்திலேயே பார்க்காமல் என் இன்றைய வாழ்வோடு பொருத்திப் படுத்திப் பார்க்க முடிகின்றது, அதனை அறிவியல் தத்துவத்துடனோ அல்லது முரண்களுடனோ ஒப்பிட்டுப் பார்ப்பதில் ஒரு அலாதிப் பிரியம் இருக்கிறது.


ஆயிரமாண்டுகளைத் தாண்டி நிற்கும் இது போன்ற கலை படைப்புகள் வரலாற்றைத் தாண்டி வேறு என்னவெல்லாம் சொல்கின்றன?. அதை அறிந்து கொள்ளப் பெரிய அளவிலான சிற்ப அறிவோ, புராண-வேத ஞானமோ, இல்லை அறிவியல் கோட்பாடுகளையோ அறிந்திடாத சாமான்யனாலும் எவ்வளவு தான் ஒன்றிட முடியுமோ?


விஸ்வரூபம் என்பது மனிதன் தன் அகந்தையை அழிக்க உதவும் காட்சி, அகந்தை அழியும் போது அவன் இதுவரை வாழ்வில் தீர்மானித்து வைத்த அத்தனை ஒப்பீடுகளும், வேறுபாடுகளும், சுயகௌரவமும் அழிந்து போய் விடும் தான் என்பது ஒன்றுமில்லை என்று தெரிந்து கொள்ளும் பொழுது. தன் கர்வத்தை அழிப்பதற்கு, தான் ஒன்றும் விஷேடமானவனில்லை, தன்னால் மட்டும் எல்லாம் முடிவதில்லை என்று எண்ணுவதற்கு, நாம் சிறியவனாக, வரியவனாக தெரிவதற்கு நம்க்கு முன் ஒரு பிரம்மாண்டம் இருக்க வேண்டும், அந்த பிரம்மாண்டம் நம் கண்களுக்கு புலனாவதில்லை எறும்பினைப் போன்று.


  ஆம், எறும்பின் பார்வையில் எதிரில் நிற்கும் நமது முழு உருவமும் தெரியுமா என்ன?? ஆனால் இங்கு ஒரு ரூபம் விஸ்வரூபம் அடைந்திருக்கிறது என்பதை உணர மட்டும் முடியும், ஏனென்றால் நாம் எல்லோரும் அகந்தை ஒழியவே விரும்புகிறோம், அதுவே உன்னதமான தேடலாக ஒரு மனிதனுக்கு இருக்க முடியும். தன்னைப் பற்றி இனிமேல் வியப்பதற்கோ, பேசுவதற்கோ இனி ஒன்றுமில்லை என்று உணரும் கணம் தான் எத்தனை விஷேசமானது?? - கடினமானது.. அதை ஒரு மொட்டை மாடியிலோ, திறந்த வெளியிலோ படுத்துக் கொண்டே ஒரு அகண்ட குடையாய் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை பார்க்கும் போதும் நிகழும், அந்தக் குடைக்குப் பின்னும் மிகப்பெரிய பிரபஞ்சத்தை நாம் உணரும் பொழுது அதே மாதிரி அகந்தை அழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


வராக மண்டபத்தின் இடப்பக்கச் சுவற்றில் இருக்கும் த்ரிவிகர்ம சிலைத் தொகுப்பில் இப்படி உலகை வென்ற பேரரசனினின் அகந்தை அழிந்த காட்சி புடைக்கப் பட்டிருக்கிறது. இந்தச் சிற்பக் காட்சி வடிப்பதற்கு மிகக் கடினமான நிகழ்வாக பதிந்துள்ளது என்பது மறுக்கமுடியா உண்மை. காரணம் இதை காட்சிப்படுத்தத் தேவைப் படும் கற்பனைத் திரன் தான் இதற்கு அடிப்படை, மகாபலியினை வதம் செய்யும் பொருட்டு இரண்டடியில் உலகத்தையும், விண்ணையும் அளக்கும் வாமனனின் விஸ்வருபத்தை வடிக்க வேண்டும் என்றால் எளிதாகக் கிட்டுமா கற்பனை.




இந்தப் 19ம் நூற்றாண்டு நேபாள ஓவியத்தில் பார்க்கும் பொழுது, மூன்று கால்கள் மட்டுமே தெரியும், மூன்று அடிகளையும் காட்சிப் படுத்த வேண்டும் என்பதால் முதல் அடியை நிலத்திலும், இரண்டாம் அடியை விண்ணிலும், மூன்றாம் அடியை மூன்றாவதாக ஒரு காலினைக் கொண்டு மகாபலியின் தலையில் வைப்பதாக இதன் ஓவியர் கற்பனை செய்திருக்கிறார். மிகக் கடினமான கற்பனை தான், ஆனாலும் மூன்றாவது காலுக்கு இணையாக மற்றொரு காலினை இவரால் காட்ட முடியாது போய் விட்டது. ஏனென்றால் அது நான்காவது அடி என்று சொல்லிவிடும், அதற்காக வெறும் மூன்று கால்களை மட்டும் வரைந்து வைத்துள்ளார் ஓவியர்.


மகாபலிபுரம் எனும் பெயர்க் காரணத்திற்கான மகாபலியின் சிற்பத் தொகுதி இந்த வராக மண்டபத்தில் தான் அமைந்திருக்கிறது, குரு சுக்ராச்சாரியாவின் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, அந்தணச் சிறுவனான வாமனனிடம் வாக்கு கொடுக்கிறான். வாமனன் விஸ்வரூபம் எடுக்க முதலடியில் உலகையும், இரண்டாமடியில் விண்ணையும் அளக்கிறான். இதே போன்று தத்ரூபமாக வராக மண்டபத்தில் அந்த இரண்டடியினையும் வைத்து விட்ட திருமாலின் விஸ்வரூபம் படைக்கப் பட்டுள்ளது, அப்படியென்றால் மூன்றாவது அடி??




மூன்றாவது அடி இங்கே தேவைப்படுமா என்ன? தன் கர்வம் அழிந்து சக உயிர்களில் ஒருவனாக தன்னை ஒரு பேரரசன் உணர்ந்து கொள்ளும் இடம் தானே மூன்றாவது அடி, மூன்றாவது அடி என்பது அவன் தலையில் அல்ல தலைக்கணத்தில். திருமாலின் இடப்புறம் அமர்ந்திருக்கும் சிலை தான் ம்காபலியாக இருக்க வேண்டும் அவனது இடப் புறம் குரு சுகராச்சாரியராகவும் காலின் வலது புறம் இருப்பவர்கள் மகாபலியின் ஆரவாரங்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம, அல்லது நாக ராஜனும், இந்திரனும் என்றும் வைத்துக் கொள்ளலாம். இந்திரன் தன் உடைவாளில் கை வைத்திருக்கிறான். ஒருவேளை இந்த அவதாரம் வாயிலாக சகோதரனாகிய திருமாலினை சரணடையாவிட்டால் அவனிடம் போர் செய்யும் பொருட்டு இப்படி வாளினில் கை வைத்த படி இருக்கலாம்.


மொத்தம் மூன்று வரிசைகளில் இச்சிற்பத் தொகுதி படைக்கப் பட்டிருக்கிறது, அதில் கீழ் வரிசையில் நமக்கு வலப்புறம் உள்ள இந்திரனைத் தவிர மற்ற மூவரும் துயரில் இருப்பதாகக் காட்டுகிறது. இந்திரனுக்கு சொர்கத்தை மீட்டுத் தரும் பொருட்டு தான் வாமன அவதாரத்தினை இறைவன் எடுப்பதால் அந்தச் சிற்பம் இந்திரனாகவே இருக்கட்டும். மேலிருக்கும் முதல் வரிசையில் மொத்தம் மூன்று சிற்பங்கள், நமக்கு இடப்புறத்தில் தாமரையில் அமர்ந்திருப்பது சிவன், தாமரை மீது அவர் அமர்ந்தபடி ஆசி வழ்ங்குவது போல் படைக்கப் பட்டிருக்கிறது, அதற்கு எதிரே மூன்று முகம் கொண்ட பிரம்ம தேவன் விண்ணில் அடியெடுத்து வைத்த விஸ்வரூபப் பெருமானின் பாதம் தொட்டு வணங்குவது போன்று படைக்கப் பட்டிருக்கிறது, பிரம்ம தேவனும் தாமரை மீதமர்ந்தபடி பக்தியோடு திருமாலின் திருவடியை வணங்க அவருக்கு எதிரே கையில் நீர்க்குடத்தோடு ஒரு கரடி உருவம் ஒன்று, திருவடிக்குப் பாதாபிஷேகம் செய்ய கொணர்ந்து வந்தது போல் இருக்கின்றது, அது பிரம்ம தேவனுக்கு உதவியாக இருக்கலாம். அந்தக் கரடி , இமயத்தின் அரசனாகிய சம்புவதன் (ஜாம்பவானாக இருக்கக் கூடும்), இரண்டடியில் உலகை அளந்த இறைவனை ஏழுமுறைச் சுற்றி வலம் வந்ததாகக் கதை இருக்கிறது அல்லவா??


இராண்டாம் வரிசையில் எதிரெதிரே இரண்டு தேவர்கள், பார்த்தவுடனே எளிதாகச் சொல்லிவிடலாம அவர்கள் சூரியன் சந்திரனென்று. மேலே நாம் விவரித்த நேபாளச் சித்திரத்தில் விண்ணை அளப்பதற்காக உயர்த்தியிருக்கம் காலகளை தமது கரங்களில் ஒன்றைக் கொண்டு பற்றியிருப்பது போல் வரையப் பட்டிருக்கும். அது அவர் தன் கால்களை அந்தரத்தில் தூக்கியிருப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஒரு கரம் காலினை பிடித்துக் கொண்டிருக்கும், இந்தச் சிற்பத் தொகுதியில் அப்படியல்ல, ஒரு காலினைத் தூக்குவதற்கு ஏதுவாக தனது வலது கரத்தினையும் தூக்கியிருப்பது போல் காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் (well balanced), நாட்டிய முத்திரை போல.


தன் எட்டுக் கரங்களில் இரு கரங்களைத் தவிர சக்கரம், சங்கு, குத்துவாள், வாள், கேடயம் மற்றும் வில் ஆகிய ஆயுதங்களை ஏந்திய படியும், ஒன்றினை காலைனைத் தூக்குவதற்கு ஏதுவாக மேலே தூக்கியபடியும், மற்றொன்றினால் ஆசி வழங்க்வும் செய்யும் விஸ்வரூபத்தின் அழகு இதற்கு ஒப்ப வேறெந்தச் சிற்பத் தொகுதியிலும் கிடைக்கவில்லை (இணையம் வாயிலாக மட்டுமே தேடினேன் என்பது வருத்தமே!!). சிலவற்றை பின்னிணைப்பாகத் தருகிறேன். புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் குகைச் சிற்பங்களை இதற்கு ஒப்பாகவும் தனிச் சிறப்புடனும் வியப்பதற்கு இடமுண்டு, ஆனால் மாமல்லையைப் போல் நாமக்கலில் ஒரு பார்வையாளனுக்கு அனுமதியில்லை அங்கு வழிபடப்பட்டுக் கொண்டிருக்கிறது, புதுக் கோட்டையிலோ அழிந்துக் கொண்டிருக்கிறது..


ஆனால் இந்தச் சிற்பத் தொகுதியில் எனக்குக் கிடைக்கும் புனைவுக்கான இடம் இங்கு இல்லையோ என அஞ்சினேன்...... நல்ல வேளை, என் Fictionக்கு அவை இடமளித்தான்.... இரண்டாம் வரிசையில் தலைகீழாக ஈர்ப்புவிசைக்கு எதிராக கையில் குறுவாள் ஏந்தியபடி ஒருவன். பரவசத்துடன் அதை அடுத்த பகுதியில் சொல்ல விரும்புகிறேன்....அதுவரை உங்களுக்கு அவனைப் பற்றி ஒரு துப்பு இந்தப் படத்தில்.

த்ரிவிகர்ம சிற்பத் தொகுதி பற்றியே அடுத்த பதிவும்....



அந்தரத்தில் தொங்கும் பேரரசன்


- ஜீவ.கரிகாலன்

பிற வாமனச் சிற்பங்கள்:



நாமக்கல் குகை சிற்பம்



Taken at Rani ki Vav, Patan, Gujarat.




கோசல சிற்பம் -கர்நாடகா




பட்டடக்கல் சிற்பம் - கர்நாடகா


கட்டுரை: திரு ஜீவகரிகாலன்

Thursday, May 15, 2014

சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம் - -வராக மண்டபம்--03


வராக மண்டபம் - கஜலட்சுமி

முதல் பகுதியில் நாம் பார்த்த கொற்றவை சிற்பத்திற்கு சமமாக, கர்பகிரஹத்தின் வலப்பக்கம் இருக்கும் கஜலட்சுமியின் சிற்பம் மிக அழகுணர்ச்சி உடையது. இதன் இடது பக்கம் இருக்கும் துர்கை சிற்பம் தரும் உணர்வுகளில் இருந்து மிகவும் வேறுபட்ட உணர்வை கஜலட்சுமியின் சிற்பம் தருகிறது. இந்த காட்சியானது கஜலட்சுமியின் நீராடல், இதைப் புனித நீராடல் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். இத்தொகுதியில் யானை குடங்களில் தண்ணீர் மொண்டு தன் எஜமானியைக் குளிர்விப்பதும், தோழிகள் மலர்ந்த முகத்துடன் பூக்களும், வாசனை திரவியங்களும், மலர்களும் கொண்டு தலைவியை குளிர்விப்பது மிகவும் அழகியல் ததும்பும் காட்சியாகத் தோன்றுகிறது.

கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரை இருக்கை முழுவதுமாக மலர்ந்திருக்கிறது. இந்த நிலையானது,  தேவி தலைவனை எதிர்கொள்ளும் முன்னே ஆயத்தமாகி இருக்கும் பாவனையாக என்னிடம் காட்டுகின்றது. அதனால் தான் தாமரை முழுவதுமாக மலர்ந்திருக்கும் நிலை எனக்கு ஒரு குறியீடாகத் தோன்றுகிறது.



இந்தப் புரிதலில் ஒருவேளை உங்களுக்கும் எனக்கும் சில பிரச்சினைகள் வரலாம், எவ்வாறு நாங்கள் வணங்கும் தேவியை இப்படித் தவறாக நீ பார்க்கிறாய் என்று கூட யாரேனும் கேட்கலாம்?. இறைவழிபாடு மீது எனக்கும் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் சிற்பங்கள் வெறுமனே வணங்குவதற்கு என்று மட்டும் தோன்றவில்லை. அந்தச் சிற்பம் மீது ஆடைகள் சாத்தி வணங்குவதைக் கூட நான் வன்முறையாகத் தான் பார்க்கிறேன். இந்த இடைவெளி தான் கலைஞர்களை மக்கள், தங்களிடம் இருந்து அந்நியப் படுத்தும் இடமாக நான் பார்க்கிறேன், இது இன்றைய நவீன கலைஞர்களுக்கும் பொருந்தும் நிலை தான்.

என்னைப் பொருத்தவரை சிற்பங்களில் தெரியும் நிர்வாணம் நமது தொன்மையைப் பேசுகின்றது. இது போன்ற சிற்பங்களின் வாயிலாக மட்டுமே  நாம் வழிபடும் தெய்வங்களை நமது வரலாற்றோடு இணைத்துப் பார்க்க சாதாரன மனிதர்களாலும் முடிகிறது. அவற்றின் வாயிலாக புராணங்களை நிதானமாக அனுக முடிகின்றது. இது இன்னும் சில கதவுகளைக் கடந்து நமக்கும் புராணத்திற்குமான இடைவெளியை குறைக்க உதவும். சரி, மீண்டும் கஜலட்சுமியைப் பார்க்கச் செல்வோம்.

இந்தப் புனித நீராடல் ஒரு தலைவியை, தலைவனோடு வழியனுப்புதல் பொருட்டு நடக்கும் ஒரு சடங்கினைப் போன்ற காட்சியைத் தருகின்றதால் , தலைவியை -அதாவது கஜலட்சுமி எனும் தத்துவம் பற்றி நாம் சிறிது கவனிக்க வேண்டிய அவசியம் வருகிறது, அவள் சமுத்திரத்தின் மகள் என்றும், செல்வத்தின் மூலம் என்றும் கிடைக்கிறது. கடலில் இருக்கும் செல்வம் பற்றி இன்னும் அறிவியலாலேயே முழுவதும் அறிந்து கொள்ள முடியவில்லை தானே!!

ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில் இது போன்ற குறியீடுகளைப் பற்றியும் பேச்சு எழுந்தது, நிறையவே நம் பழைய கலைகளில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி பேசினார். கடல் என்று பல இடங்களில் புராணம் காட்டுவதும் ஒரு குறியீடு தான், அவர்கள் ‘அண்டத்தையே கடல்’ என்று குறிக்கிறார்கள் என்றார். அப்படியென்றால் திருப்பாற்கடலில் மலையைக் கடையும் கதை - அவை எல்லாமுமே ஒரு குறியீடுதான், சமுத்திரம் என்பது அண்டமாக, அதில் பாற்கடல் எனும் ஒரு பகுதி மட்டும் (மில்கிவே) உருவாகிறது, கடைதல் என்பதே ஒரு பிக்பேங்க மாதிரி என்றார் அவர். இது அறிவியல் பார்வையில் அபத்தமாகத் தோன்றினாலும், அந்தக் குறியீடுகள் என்ற பதம் ஆற்றும் செயல், முக்கியமாக புராணத்தின் மையத்தை (நம்பிக்கை) தகர்க்கிறது என்றால் அவை ஏன் அறிவியலாகவும் இருக்கக் கூடாது என்று எண்ணிப் பார்க்க இடமளிக்கிறது (Art is a Science). சிறிய எறும்புகளுக்கு நம் உருவம் புலப்படாதது போல் நம்மாலும் பார்க்க இயலாத பரிமாணங்கள் இருக்கத் தானே செய்கின்றன, இந்த மர்மம் கலைகளாகவே எடுத்துரைக்கவும் படுகின்றன (Science is an Art).

இந்தச் சிற்பத்தில் கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரைக்குக் கீழே அலைகள் இருப்பதை கவனித்துப் பாருங்கள்!! கடலில் தாமரை மலருமா என்ன?? புராணங்களின் படி இது பாற்கடல், அப்படியென்றால் இந்தக் குறியீடு இன்னும் பல விளக்கங்களைக் கோருவதற்கு இடமளிக்கின்றது.

அதுபோல காலங்காலமாக நாம் புராணங்களில் அழித்து வரும் நாகர்கள் குறியீடுகளா? அது என்ன வரலாற்றை எல்லாம் சொல்கிறது என்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இம்மல்லைச் சிற்பங்கள் வேறு சில இடங்கள் குறிப்புணர்த்துகின்றன, அதைப் பற்றி வேறு ஒரு பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரில் குறியீடு, சரித்திரம், புராணம் பற்றியெல்லாம் பேசினாலும், ஒரு சாதாரண பார்வையாளனாய் என்னை அல்லது என்னைப் போன்றவர்களை இச்சிற்பங்கள் எப்படிக் கவர்கிறது? அதை எப்படி எல்லாம் நாம் பார்த்து ரசிக்க இடமளிக்கிறது? அதனோடு எவ்வாறு உரையாட முடியும் என்கிற நிலைகளை புனைவோடு நிரப்புவதற்கு தான் முயற்சி செய்து வருகிறேன்

மீண்டும் சிற்பக் காட்சிக்கே வருவோம், இதைக் குறியீடாகப் பார்க்காமல், புராணமாகவும் பார்க்காமல் அந்தச் சிற்பத் தொகுதி(panel)யாக மட்டும் பார்த்தோமேயானால், அதாவது மையமாக இருக்கும் தேவியின் பின்புறம் நிற்கும் யானைகள், தோழிகளின் கைகளில் இருக்கும்  பொருட்கள் எல்லாம், அவளை ஒரு tribal (பழங்குடி) இனத் தலைவியாக அடையாளம் காட்டுகிறது - முக்கியமாக தோழமையுடன் அருகில் நிற்கும் யானைகள். அவ்வாறன்றி ஒரு பழங்குடி இனத்திற்கே அவள் மணமுடித்து சென்றிருக்கலாம். அவள் தலைவனை (திருமால்) மணமுடித்தோ அல்லது வினை முடித்து அகத்தே திரும்புபவனை (அவதாரம் முடித்து) எதிர்நோக்குவதற்காக தலைவி தயாராகிக் கொண்டிருக்கிறாள் மிக அழகாக, நறுமணத்துடன்.

அந்தத் தலைவன் எப்படி தலைவியை அடைந்திருக்கிறான்?, எப்படி வினை முடித்திருக்கிறான் ?அல்லது எந்த அவதாரத்தில் இருந்து திரும்புகிறான்? என்பதை அருகில் இருக்கும்  சிற்பக் காட்சி விளக்குகிறது.

தெரியுமா உங்களுக்கு:
இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லை என்றாலும் -
பல்லவர்களுக்கும் பவுத்த சமயத்திற்கும் தொடர்பு இருந்தமைக்குப் பல சான்றுகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் கஜலட்சுமியைப் போன்ற சித்திரம் புத்தனின் பிறப்பைக் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது.
கஜலக்ஷ்மி எனும் அம்சம் முன்னொரு காலத்தில் ஆண் தெய்வமாகவும் வழங்கப் பட்டிருக்கிறது, அதுவும் 07-08 ஆம் நூற்றாண்டு வரை என்று சொல்கிறார்கள்.

ஓவியங்கள் - 19ம் நூற்றாண்டு படங்களில் திருப்பாற்கடல் பற்றிய ஓவியங்கள் - ஓவியர் பெயர் தெரியவில்லை.





அடுத்த பகுதியில் சந்திப்போம்


 பகிர்வு திரு ஜீவ.கரிகாலன்..........

Sunday, May 11, 2014

சிற்பம்/ஓவியம்/ரசனை/மஹாபலிபுரம் --- வராக மண்டபம்--2

02.வராக மண்டபம்

உலகின் தலைசிறந்த சிற்பங்களினூடே நான் என்ன செய்யப் போகிறேன்? அல்லது என்னால் என்ன செய்து விட முடியும்? நான் என்ன வரலாற்றாய்வாளனா? நான் - கல்வெட்டு, சிற்ப சாத்திரம் மட்டுமல்ல இறை வழிபாடு, புராண அறிவு என்று கூட பெரிதாகக் கற்றுக் கொள்ளாதவன் தான். இருந்தபோதும், கொஞ்ச நாட்களாக என்னால் சிற்பங்களோடு பேச முடிகிறது, என் கற்பனையை இங்கே காட்சிப்படுத்திப் பார்க்க முடிகிறது, சில புதிய கதைகளை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடிகிறது. ஏடுகள், நவீன தியான முறைகள் போன்றவற்றில் கிடைக்காத அமைதி சித்திரங்களோடும், சிற்பங்களோடும் நான் இருக்கையில் கிடைக்கின்றது. இவற்றோடு என்னால் மட்டுமல்ல, உங்களாலும் பேச முடியும், சிரிக்க முடியும், உரையாட முடியும். அலங்காரச் சொற்களால் நிறைந்த போலித் தன்மை நிறைந்த மனிதர்களிடையேயான உரையாடல்களில் இல்லாததைத் துறந்து, இச்சிலைகள் அணிந்திருக்கும் நிர்வாணம் தான் நம்மிடம் உண்மையாகப் பேசும், அதுவும் நிறையவே பேசும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான் காது கொடுத்துக் கேட்க வேண்டும், அதற்காகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்- என்னைப் பொருத்தவரை ஆழ்ந்து/உற்று நோக்குதல் தான் சிற்பம் பற்றி பயில இருக்கும் ஒரே வழி.

முதற்பகுதியில் திருமூர்த்தி குகைக் கோயிலைப் பார்த்தோம்!! இப்பொழுது நாம் செல்வது வராக மண்டபத்தில், திருமூர்த்திக் கோயிலில் இருந்து தென் புறமாகக் குன்றிலிருந்து கீழிறங்கி நடக்கும் பொழுது, முதலில் வருவது விநாயகர் சன்னதி, பெரும்பாலும் பூட்டப்பட்டு இருக்கும் அறையில் கம்பிகளின் ஊடே ஐங்கரன் அருள்பாளிக்கிறார், அங்கே மட்டும் இறைவனாக இருப்பதால் இன்று வரை கன்னத்தில் ஒத்திக் கொண்டு நகர்ந்து விடுகிறேன். கொஞ்சம் அவ்வழியே மேலேறினால் முதலில் வருவது வராக மண்டபம்.



வராக மண்டபம் முன் தோற்றத்தில் நான்கு தூண்களால் ஆன மண்டபமாக குடையப்பட்டிருக்கிறது, இரண்டு தூண்கள் முழுமையாகவும், இரண்டு பாதி மட்டும் செதுக்கப்பட்டும் இருக்கும், நான்கு தூண்களும் யாளியின் முதுகில் நிற்பது போல வடிக்கப்பட்டிருக்கும். மண்டபத்திற்குள் நுழையும் பொழுதே நாம் இதில் கால் நனைப்பதற்கு ஏதுவாக வாயிலின் முகப்பில் ஒரு தொட்டி போன்ற அமைப்பு தோற்றமளிக்கிறது. இது தற்கால மல்லைக்கு மிக முக்கியமான மண்டபம், மஹாபலிபுரம் என்ற பெயருக்கு பொருந்தும் சிற்பம் இச்சன்னதியில் இருப்பதால், இதைக் கட்டிய மன்னன், இதைத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதியிருக்கிறான். இதன் காரணமாகவே இச்சன்னதியில் நுழைவதற்கு கால்களைச் சுத்தம் செய்ய ஏதுவாக ஒரு தொட்டியும் அமைக்கப்ப்ட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.


உள்ளே மூலவருக்கான சன்னதி வழக்கம் போல வெற்றிடத்துட்ன் இருந்தாலும், அதைச் சுற்றிலும் மொத்தம் நான்கு புடைப்புச் சிற்பக் காட்சிகள் இருக்கும். ஒன்று வராகச் சிற்பம், இரண்டு – மஹாபலி-வாமன சிற்பம், மூன்று -கஜலட்சுமியின் சிற்பம், நான்கு-துர்கை. இது போக கர்பகிரகத்தின் வெளிப் புறத்தில் இரு மருங்கிலும் துவார பாலகர்களின் சிலை இருக்கும், அது போக இந்த மண்டபத்தில் ஒரு அதிசயம் இருக்கிறது. அது பெரும்பாலும், வந்து செல்லும் அநேகருக்கும், ஏன் பல வழிகாட்டிகளும் அறிந்திடவில்லை, இல்லை அதைப் பற்றி சட்டை செய்து கொள்ளாமலே இருக்கலாம். இதனாலேயே நான் சில மணி நேரம் வரை அந்த மண்டபத்தில் சிற்பங்களோடு தேங்கியபடி நின்றிருந்தேன்.

முதலில் துர்கையை தரிசிப்போம், பல்லவர் சிற்பங்களில் துர்கைக்கு மிக உயர்ந்த இடம் உண்டு, பெரிய அளவில் ராஜ்ஜியத்திற்கான போர்ச் சூழலில் எதிரிகளால், பல்லவர்கள் ஆண்டு வந்த 2 – 9ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் இருந்து வந்ததால். கொற்றவை அவர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமான இடத்தைப் பெருகிறாள். கொற்றவை வழிப்பாட்டை, காளியுடன் சேர்த்து பலர் குழப்பிக் கொள்கின்றனர். கொற்றவை வேறு, காளி வேறு - கொற்றவையை நோக்கும் பொழுது அவளது இனம்(CLAN) குறித்த வரையறைகளை ஒருவரால் குறிக்க முடியும், காளியோடு அப்படி பொருத்திப் பார்க்க முடியாது. சுருக்கமாக சொல்லப் போனால், கொற்றவை மனித வரலாற்றோடு மிக நெருக்கம் கொண்டவை, அவை புனையப்பட்டதாகக் கூறினாலுமே நெருக்கமுடையது தான்.


படத்தில் இருப்பது போல, மையத்தில் இருக்கும் துர்கை, பக்தனுக்காக காட்சியளிப்பது போன்ற நிலையில்(வரமளிக்கும்), தாமரை போன்ற பீடத்தில் நின்றவாறு புடைக்கப் பட்டிருக்கிறது. நான்கு கரமுடையவளாக, சங்கையும், வட்டினையும் ஏந்தியபடி நிற்க அவள் இடது புறம் அவளை நமஸ்கரிக்கும் சிற்பமும் அதற்கு நேரே எதிரே தன் தலையை வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு பலியாளின் சிற்பமும் இருக்கின்றது. போர்க் காலங்களில் இத்தகைய பலி கொடுக்கும் சம்பவங்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. இது மிகவும் உணர்ச்சியமயமான சிற்பக் காட்சி எனலாம். துர்கை பலியாகின்றவனுக்கு அருள் செய்யக் காட்சியளிக்கும் அதே வேளை, நான்கு கனங்கள் இந்தக் காட்சிக்கும் பின்புலத்தில் அதாவது இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பூதகணங்களாக படைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் இருக்கும் நான்கு பூதகணங்களை, இரண்டு விதமாக என்னால் பார்க்க முடிகிறது. அதாவது பூதகணங்கள் ஒரு உயிர் பிரிவதைக் (அவர்கள் உலகமான மேலுலகத்திற்கு வருவதால்) கொண்டாடுவதைக் காட்சிப் படுத்த அவர்கள் நடனம் ஆடுவது போல மெய்மறந்த நிலையில் கொண்டாடும் காட்சியாகத் தோன்றியது. அது ஒருவேளை - நான்கு கணங்களும் சேர்ந்து போடும் ஆட்டமாகவும் இருக்கக் கூடும். அதேநேரம் - அங்கே ஒரே ஒரு பூதகணம் மட்டும் துள்ளிக் குதித்து வர இருக்கும் புதிய ஆன்மாவை எதிர்பார்த்து மகிழ்வதாகவும், நடனமாடுவதாகுவும்(கூத்து) புரிந்து கொள்ளலாம். நான் இரண்டாவதாக சொன்னது போல் பார்ப்பது தான் இந்தச் சிற்பக் காட்சியை மிகவும் முக்கியமாகக் காட்டுகிறது, அதாவது ஒரே சிற்பத்தின் பல்வேறு நிலைகள் படக்காட்சி போல விரிகின்றது, காமிக்ஸ் கதைகளுக்கெல்லாம் முன்னோடியாக இவற்றைப் பார்க்கலாம். தன்னைத் தானே பலியிடல் தான் இந்த சிற்பக் காட்சியின் மையக்கரு என்பதை உணர முடிகிறது.

யுத்தகளத்தில் வெற்றிக்காக விழும்/பிரியும் முதல் உயிர் அந்த நாட்டின் சரித்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா பண்டைய நாகரிகங்களிலும் (மாயன்,எகிப்திய) இது போன்ற உயிர்ப்பலிச் சடங்குகள் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். யுத்தத்தின் போது, காலாட்படையில் முதல் சில வரிசைகளில் அணிவகுத்துச் செல்லும் எல்லோருமே கிட்டதட்ட பலி கொடுக்கப்படுபவர்கள் தான். இப்படிக் கொடுத்துதான் சாம்ராஜ்யங்கள் உருவாக்கப் படுகின்றன. இதைப் போன்ற சடங்குகளை பின்னாளில் வரும் சமூகத்திற்கு ஆதாரப் படுத்துவதற்காக மட்டுமன்று, மிகவும் சக்தி வாய்ந்த, புனிதம் மிக்க இந்த மண்டபத்தில் ஒரு பலி கொடுக்கும் நிகழ்வையும் பதிந்ததன் மூலம் அவன் போன்ற எண்ணற்ற வீரர்களுக்கு அம்மன்னன் அஞ்சலி செலுத்துகின்றான்.

இன்றும் இது போன்ற உயிர்ப்பலிகள் நம் காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன, ஆனால் தேசத்திற்காக தன்னைத் தானே கொடுப்பவர்கள் என்ற தியாக நிலை எல்லாம் மாறிவிட்டது. இதுவரை ஒரு அரசு நிகழ்த்தும், அரசின் நலனுக்காக நிகழ்ந்து வந்த இது போன்ற பலிகள், இன்று நிறுவனங்களின் லாபத்திற்காக, வளர்ச்சி என்ற பெயரில் நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்ற அரசியல் சிந்தனையும் அம்மண்டபத்தின் உள்ளே வந்து போனது. ஏனென்றால் நான் சிற்பத்தினோடு பேசுகிறேன், “உங்கள் காலத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது தெரியுமா?? நீ எங்களைக் குறை கூறாதே” என்று அந்தப் பலியாள் என்னைப் பார்த்து அரசியல் பேசியது.

அந்த மண்டபத்திற்குள் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன?? அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம்
(உங்கள் கருத்துகள் அவசியம்)

ஜீவ.கரிகாலன்.

Friday, May 9, 2014

சிற்பம்/ஓவியம்/ரசனை/ மஹாபலிபுரம் ---- திருமூர்த்தி குகை-----1

# சிற்பம்/ஓவியம் - ரசனை

எனது பள்ளிக் காலங்களில் எதைப் பார்த்து பயந்து இருந்தேனோ, ஒளிந்து கொண்டேனோ,(அறிவியல் படங்கள் வரையப் பிடிக்காமல் தான் வணிகப் பாடத்தை தேர்ந்தெடுத்தேன்)  இன்று அதே ஓவியங்கள் மீதும் சிற்பங்கள் மீதும் தீராக் காதலோடு இருக்கிறேன். உண்மையில் இதற்காகவாது தேசாந்திரம் சென்று பல கோயில்களையும் சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்கிற  பேராசை என்னுள் இருக்கிறது.

உண்மையில் நான் முதல் முறை மஹாபலிபுரம் வந்த போது, அது ஒரு போரிங்  பிக்னிக் ஸ்பாட்டாகவே எனக்குத் தோன்றியது; “வெறும் சிற்பங்களைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?” என்று தோன்றியது; நண்பர்களோடு சென்று கடற்கரை மணலில் அமர்ந்து பேசிவிட்டு திரும்பியதே போதும் என்று இருந்தது. மற்ற படி பெரும்பான்மையான மக்களைப் போலவே, நாம் பார்க்கும் சிற்பங்களில் ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தாலே போதும், டிஜிட்டல் யுகத்தில் பிரிண்ட் போட அவசியம் இல்லாததால் சகட்டு மேனிக்கு நிழற்படங்கள் எடுத்துக் கொள்கிறோம். யானையின் தந்தத்தை பிடித்தவாறு, சிங்கத்தில் சவாரி செய்தவாறு,  கருவறைக்குள் சென்று கடவுள் போஸ் கொடுத்தவாறு கடந்து விடுகிறோம் மஹாபலிபுரத்தை. இந்த நகரத்தினை ஓரளவுக்கு களவு செய்யும் காதலர்கள் தான் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.

      ஆனால் முதன் முதலாக சிவகாமியின் சபதம் வாசித்து முடிக்கையிலேயே மீண்டும் மஹாபலிபுரம் செல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். அதை வாசித்த மனநிலை ஒரு ஃபிக்‌ஷனை உள்வாங்கியிருக்கிறது. ஆடும் பெண் சிலைகளில் சிவகாமியைத் தேடினேன்.  ஆயனச் சிற்பியின் உளியின் ஓசை அகச்செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. கருவறைக்குள் இல்லாத தெய்வங்களில் ஏசுவிற்கும் இடம் இருக்குமோ என்ற கல்கியின் உணர்வுகள் வராமல் இல்லை. சரித்திரத்தில் ரோமானியர்களும், பிற நாட்டினர்களும் வணிகம் பொருட்டு பல நூறு வருடங்கள் முன்னரே வந்து சென்ற மண்ணில் கடலலைகள் சரித்திரம் பேசின, ஆனாலும்  இவை எல்லாம் புனைவே. அதுவும், வேறு ஒருவருடைய புனைவு.

     இன்னும் சில சரித்திர புத்தகங்கள் வாசித்தேன், அருமையான கலைஞர்களின் நட்புக் கிட்டியது ஓவியங்கள் குறித்தும் சில புத்தகங்கள் வாசித்தேன். மீண்டும் சென்றேன் மஹாபலிபுரத்திற்கு, ஒரு மன்னன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டியும் தன்னையும், தன் மண்ணின் பெருமை என தான் நம்பியதையும், தன் அரசாட்சியை மக்களுக்கு சொல்ல முடியுமென்றால் அது கலைகளின் வழியே தானே சாத்தியமாகிறது ??. அதனால் தான் பல்லவ நாட்டின் முக்கியமான துறைமுகமாக விளங்கிய இவ்வூரிலேயே இந்தப் பணிகளை அவன் துவங்கியிருக்கிறான் என்று தோன்றியது.

        தொடர்ந்து வரும் எல்லா ஞாயிறுகளிலும் மாமல்லபுரம் செல்ல ஆரம்பித்தேன். இந்த நாட்களில் சிற்பங்களோடு இப்பொழுது என்னால் பழகவே முடிகிறது, கலைகளின் வழியே நான் பிரதானமாக எழுதி வரும் இதற்கு சம்பந்தமே இல்லாத பொருளாதார கட்டுரைகளுக்கோ, சமூகக் கட்டுரைகளுக்கோ, அறிவியல் புனைவுகளுக்கோ அந்த சிற்பங்கள் உதவக் கூடும் என்று என் உள்ளுணர்வு சொல்லியது. வராக மண்டபத்தில் எதிரொலித்த என் குரலின் மாத்திரைகளில் இருந்த விநோதம் என் கதைகளில் பயன்படலாம்; கடற்கரைக் கோயிலில் ஜலகிரிடை செய்யும் மாய சிற்பங்கள் என் கனவுகளைச் சூறையாடலாம்; அர்ஜுனனனின் தவக் கோலம் என் சுயம் பற்றிய சிந்தனைகளை மறு கட்டமைக்கலாம்; பாண்டவ ரதத்தில் படைக்கப்பட்டிருக்கும் சில காதல் காட்சிகள் என் வாழ்விலும் வரலாம்; நகரத்தை சுற்றியிருக்கும் ஆறு போலே ஒரு அரசியல் என்னைச் சூழலாம். நகரத்திலிருந்து அப்புறப் படுத்தப் பட்டிருக்கும் பல பவுத்த, சமண சின்னங்களைப் போல நான் கூட என் கனவுப் பாதையில் இருந்து தூக்கி எறியப் படலாம் தான்.

     இதனால் தான் நான் மாமல்லபுரம் பற்றி கொஞ்சம் பதிவிட விரும்புகிறேன். இவையாவும் என் ரசனைகள். என் நுகர்வு:

01. மஹாபலிபுரம் - திருமூர்த்தி குகை



கோயிலின் வெளித் தோற்றம்

மஹாபலிபுரத்தில் ரசித்துப் பார்ப்பதற்கு என பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளாத இடம் என்றால் அது இந்த திருமூர்த்தி குகை தான். அர்ஜுனன் தபசு செய்யும் குன்றின் கீழ் திசையில் இருக்கின்றது, இந்தக் கோயிலின் புறத்தோற்றம் மூன்று அறைகளாகத் தெரியும்.இதற்கு இடபுறம் துர்கையின் சிலை ஒன்று இருக்கிறது. இது 07ஆம் நூற்றாண்டில் உருவானது என்று கல்வெட்டு கூறுகிறது. திருமூர்த்தி என்பது சிவனைக் குறிக்கும், மூன்று அறைகளிலும் ஒரே மாதிரியான புடைப்புச் சிற்பங்கள் பார்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றும். அதன் மைய அறையில் ஒரு லிங்கம் பதியப்பட்டிருக்கும்.

முதலில் நாங்கள் சென்ற குழுவில் இருந்தவர்கள் பார்ப்பதற்கு மூன்றுமே ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்கள் உற்று கவனித்தால் தான் தெரியும், மூன்று அறைகளிலும் உள்ள சிற்பங்களில் இருக்கும் சிலைகள் காட்சிப்படுத்துபவை என்ன என்று மையத்தில் நின்ற நிலையில் ஒரு சிலை, இட, வல புறங்களில் அமர்ந்த நிலையில் இரு சிலைகள். மையத்தில் இருக்கும் சிலை திருமூர்த்தி - சிவன் என்பதை எளிதாகக் கண்டு கொள்ள முடியும். முதல் அறையில் சிவனுக்கு இட புறம் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையின் நெற்றியில் இருக்கும் நாமம் இன்னும் சிதிலமடையாததால் (மற்ற அறைகளில் இருக்கும் சிற்பங்களில் நாமம் தெரியவில்லை) விஷ்னு என்று கண்டு கொள்ளலாம்.

பின்னர் விஷ்னுவிற்கு சமமான ஆண் தெய்வமாக பிரம்மன் ஒருவனே இருக்க முடியும் (சைவ மரபில்) என்பது தெளிவு.  ஆக, இந்த மூன்று அறைகளையும் மாற்றி மாற்றி கவனிக்கும் பொழுது. இந்த குகை ஒரு ஒளிக்காட்சி(அனிமேஷன்) போன்ற ஒரு பிம்பத்தை மனதில் ஏற்படுத்துகிறது.புராணங்களின் எனக்கு பெரிதாக அறிவு இல்லை தான், மற்ற மதத்தில் இருப்பவர்களுக்கு கிடைப்பது போல் (அவர்களாக இறைவனுக்கு என்று வாரத்தில் நாட்களை ஒதுக்குவது), என் மதம் என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோளையோ, கட்டளையினையோ பிறப்பித்தது இல்லை. சில நேரங்களில் பெரியவர்கள் மூலம் அதை ஊட்டும் பொழுது, நான் அதை மறுத்தும்  வெளி வந்து விடுகிறேன்.

ஆயினும் இவற்றை தெரிந்து கொள்ள குழந்தைமை எனும் அற்புதப் பருவம்  இடம் கொடுத்தது, கதைகளின் வடிவில் என் அன்னையிடம், என் பாட்டியிடம் இருந்தன .அங்கிருந்து மனதில் புதைந்த பாத்திரங்கள் பின்னர் இந்த நாள் வரை காத்திருந்து வெளியே எழுந்தது . யார் பெரியவன் என்கிற போட்டியில் சிவனின் ஆதி, அந்தம் தேடி புறப்பட்ட விஷ்னுவும், பிரம்மனும் இறுதியில் தோற்று, தன் தோல்வியை ஒப்புக் கொண்டு , சரணடைந்து, வரம் பெற்ற காட்சிகளாய் விரிந்தது இந்த சிற்பங்கள். காமிக்ஸ் எனும் படக் கதை போல, ஒரு புராணக் கதையினை எலிமையாக நினைவுகளிலில் இருந்து பின்னர் மீட்டெளச் செய்தது.

கீழேயுள்ள படத்தில் கவனித்தால் தெரியும், அந்த மூன்று காட்சிகளிலும், முதல் அறையில் சிவனிடம் உபதேசம் பெருவது போலவும், அடுத்த  காட்சியில் பூஜிப்பது(நமஸ்கரிப்பது போலவும்), மூன்றாம் அறையில் இறைவன் அருள் செய்வது போலவும் முடிகிறது.





நம்மைப் போன்றவர்கள், சிற்பங்களை ரசிப்பதற்கு அதன் தொழிற்நுட்பங்கள் பற்றிய அறிவு கூட தேவையில்லை, அது உணர்த்தும், காட்சி படுத்தும் செய்திகள், வரலாறு பற்றிய பின்புலம் அறிந்திருந்தாலே போதும். மஹாபலிபுரத்தில் இப்படி நிறையக் கதைகள் இருக்கின்றன, இங்கே இருந்து நோவா வெள்ளம் பற்றி கூட சிந்திக்க முடிகின்றது (வரும் தொடர்களில் இது பற்றி பதிவு செய்கிறேன்).

நீங்கள் யாரேனும் திருமூர்த்தி குகையில் இதைப் போன்ற காட்சியை உணர்ந்து இருந்தால் சொல்லுங்கள், ஒருவேளை உங்களுக்கு அவர் வேறு கடவுளர் போலவோ!! அல்லது வேறு புராணம் என்று கூடத் தெரியலாம். கலை அப்படிப் பட்டது தான், அது அத்தனை பரிமாணங்கள் உடையது.

அடுத்த பகுதியில் வராக மண்டபம் பற்றி காண்போம்.
இரண்டாம் அறை



மூன்றாம் அறை



இரண்டாம் அறை

சிற்பம்/ஓவியம் - ரசனை

தொடரும்....


பகிர்வு திரு ஜீவ கரிகாலன்

Sunday, May 4, 2014

புண்ணிய பாரதம்


இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!!





மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது. 1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன .

அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது . ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது.

5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்.

மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!!

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது. 1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன .

அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது . ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது.

5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்.

மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


பகிர்வு திரு வினைதீர்த்தான் அவர்கள்.

Friday, May 2, 2014

தமிழ் இலக்கியங்களில் யாழிசை

http://blog.dinamani.com/?p=3634
சுமேரியா பற்றிய குறிப்புகள் உள்ளன

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். நரம்புக் கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ் முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.

இந்த யாழ் கருவியின் பெருமையை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு எடுத்துரைக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரை அமைந்துள்ளது.

இயற்கையோடு எழுந்த இசை தமிழிசை. ஆற்றொலி, அருவியொலி, வண்டொலி, தும்பியிசை, குயிலின் கூடி ஒலிக்கும் இசை தமிழிசையாம்.

யாழ் நூல் என்ற பழந்தமிழ் நூல் விபுலாநந்தரால் இயற்றப்பட்டதாம். அதன் சிறப்பியல்புகளை விபுலாநந்தர் விளக்கியுரைத்தபோது ஈர்க்கப்பட்ட பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், யாழை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சி செய்தது தனிச் சிறப்புடையதாம். வில்யாழ், பேரியாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ் என அதன் பகுப்புகள் அமையும்.

பண்டை நாளில் சிறப்புப் பெற்றிருந்த மிசரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீகக் கடற்கரை நாடான அழிந்து விட்ட சுமேரியாவிலும் “சால் தேயா’ எனச் சிதைந்த சோழ தேசத்திலும், சேரர் வென்று ஆட்சி புரிந்த கிரேக்கத் தீவு, அதனருகே இருந்த யவனபுரத்திலும், உரோமர் வருதற்கு முன் இத்தாலியிலும், பழைய ஸ்பெயின் தேசத்திலும், தமிழ் மக்கள் வாழ்ந்து நாகரிகம் பரப்பினர் என மேற்றிசை அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டு வெளியிட்டுள்ளனர். இந்நாடுகளில் யாழிசைக் கருவி தெய்வமாகவே போற்றப்பட்டது என விபுலாநந்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார். சிந்து நதி தீரத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் “முகிஞ்ட தரை’ எனப் பொருள் தரும் மொகஞ்சதாரோவின் இறந்தோர் மேடான இடத்திலும் மிதுனராசி யாழ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு திணையாழுருவக் குறியீடு செய்யப்பட்டுள்ளதை விபுலாநந்தர் சுட்டிக் காட்டுவது காணத்தக்கது. அடிகளார் பத்து ஆண்டுகள் யாழ் நூலை ஆய்ந்து பல நுண்ணிய விளக்கங்கள் தருதல் காணலாம்.

கி.மு.3000-த்தில் சுமேரியர் பயன்படுத்திய கலைப்பொருள்களுள் யாழும் ஒன்றாம். அது ஆங்கிலத்தில் “ஆர்ப்’ எனப்படும். எகிப்தியர் பயன்படுத்திய யாழ், பிரமிடுகள் எழுந்த காலத்தில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. யாழ் பழந்தமிழகத்தில், சங்க காலத்திற்கு முன்னரே காணக் கிடைத்துள்ளது.

யாழ் உருப்பியலுள் வில்யாழ் பற்றிய விளக்கம் கடைச்சங்கப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய பெரும்பாணாற்றுப்படை பாடலடிகளில் காணலாம்.

“”தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
ஒன்றமர் உடுக்கை கூழார் இடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந் நுணவிர் புகை கமழகத்தை முயன்று
ஞெலி கோற் கொண்ட பெரவிறல் நெகிழா
செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின்
இன்தீம் பாலை முனை குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரபுரி நரம்பின்
வில்யாழ் இசைத்தம் விரலெறி குறிஞ்சி
புல்லார் வியன்புலம் போகி”  என்பதாம். வில்யாழின் இசை வண்டின் இமிரிசையை ஒத்த காரணம் ஒலியைப் பெருக்கிக் காட்டக் கூடிய பத்தர் குமிழும் கொம்பே இதில் கோடாக-பத்தராக அமைந்துள்ளது. புதியதாகச் செய்யும் முறைக்குரிய அளவுகளையும் நூலில் தந்துள்ளமையைக் காணலாம்.

கல்லாடம் கூறும் நாரதப் பேரியாழ் 32 விரல் அளவு அகலம், நான்கு விரல் அளவு நீளம்  முனைகளைக் கொண்ட இந்த யாழ் ஆயிரம் தந்திகளைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 1008 விதமாக இசை வேதங்களை வாசிக்க இயலும் மும்முனை என்பது மந்திர, மத்யம் கேட்க அமைக்கப்பட்டிருந்தது. இக்கருவி இத்தாலி தேசத்தவர் பயன்படுத்தும் அரமண்டிலம் என்ற கருவியை ஒத்தது என ஆபிரகாம் பண்டிதர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

தொல்காப்பியம் தொடங்கி பல சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் யாழைப் பற்றிய இனிய செய்திகளை நமக்குத் தருகின்றன. தொல்காப்பியத்தில்,
…………இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்

எனவரும் நரம்பின் மறை என்பது இசைக்குறிப்பு மட்டுமன்று, நச்சினார்க்கினியர் கூறும் யாழ் நூலையும் நினைக்கச் செய்யும். குழலை விட யாழை விட இனியது மழலை என்பார் திருவள்ளுவர். இக்கருவிகளில் வரும் ழகரச் சிறப்புப் போன்றே மழலைச் சிறப்பு இனியதாம். மழலை மொழிச் சிறப்பு எவ்வாறோ அவ்வாறே யாழிசைச் சிறப்பு.

பதிற்றுப்பத்தில் பகைவர்க்குப் பணியாத தன்மையுடைய மன்னரை பேரியாழ் துணையுடன் பாணர் பண்பாடிப் போற்றுவதாக அமையும் பாடலொன்று,
வண்டுபடு கூந்தல் முடி புனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலைப் பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட
இனிது புறந்தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலின்
என அமையும். நெடுநல்வாடையில் ஆடல், பாடல் இரண்டிலும் வல்லமை வாய்ந்த மகளிர், யாழை மீட்டி, இனிமையுறப் பாடல் பாடும் செய்தி குறிப்பிடப்படுகிறது. யாழின் நரம்புகள் முறுக்கவிழ்ந்திருந்தால், தம் மார்பில் ஒற்றிச் சூடுபடுத்தி யாழை மீட்டிய நிலையினை,
ஆடல் மகளிர் பாடல் கொண் புணர்மார்
தண்மையில் திரிந்த தண்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப
(நெடுநல்.67-70)

என விளக்கும். யாழின் கோடாகிய கொம்பு பெரும்பாலும் கரிய நிறத்துடன் விளங்கியமையைப் பல சங்க இலக்கியங்கள் சான்று காட்டுகின்றன.yazh

யாழின்  இனிமைக்கு விளக்கம் காட்டும் மதுரைக் காஞ்சிப் பாடலொன்று,
தாதுண் தும்பி போது முரன்றால்
கோதில் அந்தணர் வேதம் பாட
சீரினது கொண்டு நரம்பின் தியக்கி
யாழோர் மருதம் பண்ண
(மதுரை.655-658)   எனக்கூறும்.

வேதம் பாடுநர் இசையுடன் மருதப் பண்ணும் கலந்து ஒலிப்பது யாழிசையின் சிறப்பாக உள்ளது. யாழில் பண்ணல், பரிவட்டணை ஆராய்தல், தைவரல், நண்ணிய செலவு, குறும்போக்கு ஆகிய குற்றங்கள் நீங்கிய யாழைக் கையில் தொழுது வாங்கும் இயல்பால் யாழின் தெய்வீகத் தன்மை புலனாகும். அத்தகைய யாழை பண்ணாராய்ச்சி வித்தகர் விருப்பப்படி மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியும் தக்கதே எனக் கருதத் தோன்றுகிறது.

 நன்றி : தினமணி  http://blog.dinamani.com/?p=3634

பகிர்வு:   பேராசிரியர் நாகராஜன்