Wednesday, September 27, 2017

விஜயநகரர் ஆட்சியில் கொங்குநாடு

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
 

முன்னுரை:
23-09-2017 அன்று, கோவை வாணவராயர் அறக்கட்டளை சார்பாக, ”விஜய நகரர் ஆட்சியில் கொங்கு நாடு”  என்னும் தலைப்பில் முனைவர். ஜெ. சௌந்தரராஜன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். இவர் சென்னைப்பல்கலைப் பேராசிரியர். யு.ஜி.சி. நல்கையில் விஜய நகரர் கட்டடக் கலை பற்றி ஆய்வு மேற்கொண்டவர். அவருடைய உரைக் கருத்துகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

இந்தியக் கட்டடக்கலை – ஒரு முன்னோட்டம்:
இந்தியக் கட்டடக்கலை சிந்து சமவெளிப் பண்பாட்டில் தொடங்குகிறது. கி.மு. 2250 முதல் இந்தப் பண்பாடு தொடங்குகிறது. 1919-1922 காலகட்டத்தில் ஜான் மார்ஷல் அகழாய்வு செய்ததில் கட்டடங்களின் கூறுகள் வெளிப்பட்டன. ஆனால், அவை “CIVIL ARCHITECTURE”   வகையைச் சேர்ந்தவை. கோயில் கட்டடக் கலைக்கான சான்றுகள் எவையும் கிட்டவில்லை. ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகியன பாக்கிஸ்தான் பகுதிகள். நேருவின் அறிவுரையால், 500 இடங்களில் மேற்பரப்பு ஆய்வுகள் நடந்தன. கட்டட அடித்தளத்தின் எச்சங்களும், தூண்களின் எச்சங்களும் கிடைத்தன. அடுத்து, அசோகர் காலத்தில் சைத்தியங்கள் (புத்தர் கோயில்கள்)  கட்டப்பெற்றன. கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை கட்டுமானங்கள் நிறைய ஏற்பட்டன. சாரநாத், சாஞ்சி, கயா, நாளந்தா, அமராவதி, பூம்புகார் ஆகிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை. அசோகனின் மகனும், மகளும் இலங்கை செல்லும்போது புகாரில் விகாரையில் வழிபட்டுள்ளனர். ஜைனத்துக்கும் பல்வேறு இடங்களில் கோயில்கள். கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், பக்தி இயக்கம் வளர்ச்சியுற்றபோது கோயில்கள் கட்டப்பெற்றன. கி.பி. 5-8  நூற்றாண்டுகளில்  குகைத் தளக் கட்டுமானங்களும் (NATURAL CAVERNS) , குடைவரைக் கோயில் கட்டுமானங்களும் ஏற்பட்டன. இவ்வகைக் கட்டுமானங்கள் சாளுக்கியரால் தொடங்கப்பெற்றன.

தமிழகத்தில் கட்டடக் கலை:

பல்லவர்களும், முற்காலப் பாண்டியர்களும், சோழர்களும் தொடர்ந்தனர். கட்டடக் கலை மூன்று வகையினது. திராவிடம், வேசரம், நாகரம். திராவிடம் தென்னகத்துக்குரியவை. மற்ற இரண்டும் வடநாட்டுக்குரியவை. தென்னகத்தில், விஜயநகரப் பேரரசு உருவானபோது, அவர்களுடைய கட்டடக் கலைப்பாணி, பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோரின் மரபு அல்லது பாணியைச் சேர்த்து ஒரு புது வளர்ச்சியாக உருவெடுத்தது.

விஜய நகர் அரசு – உருவாதல்:
விஜய நகரம் (அரசு) கி.பி. 1334-இல் உருவானது. ஹரிஹரர், புக்கர் ஆகியோரால். சங்கமச் சகோதரர்கள். விஜய நகரம் பேரரசாக உருவெடுத்தது. கி.பி. 1358 முதல் கி.பி. 1667 வரை தென்னிந்தியா முழுதும் ஆளுகை. சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு ஆகிய நான்கு அரசர்குடிகள் இப்பேரரசை ஆட்சி செய்தனர்.  


தில்லியிலும், தக்கணத்திலும் சுல்தான்களின் ஆட்சியில், இந்துப் பேரரசான விஜயநகர் மீது சுல்தான்களின் தாக்குதல் தொல்லைகள். அகமது நகர், கோல்கொண்டா, பிஜப்பூர், பிதார் ஆகிய நான்கு சுல்தான்கள், அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஒருங்கே வன்மையாகத் தாக்கியதில் ஈடுகொடுக்கமுடியாமல் விஜய நகர் வீழ்ந்தது. இந்த நான்கு சுல்தான்களும் பாமினி சுல்தான்கள் என்னும் பொதுப்பெயர் கொண்டவர்கள். போர் நடைபெற்ற இடம் தலைக்கோட்டை. இராபர்ட் சிவெல், விஜய நகர் அரசு, சுல்தான்களால் அழிக்கப்படாதிருந்தால், ஒரு மிகப்பெரிய வலுவான, இந்திய நாடு முழுமையையும் ஆளத்தக்க அரசாக உருவெடுத்திருக்கவேண்டியது என்று குறிப்பிடுகிறார். விஜய நகர் அரசின் அழிவு பற்றி  ROBERT SEWELL, “THE FORGOTTEN EMPIRE”  என்னும் தம்முடைய நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

விஜய நகரக் கட்டடக் கலை:
விஜய நகரக் கட்டடக் கலை,  மூவகையில் முன்னர் இருந்தவற்றைவிட வளர்ச்சியுற்றது எனலாம். அவை CIVIL ARCHITECTURE, RELIGIOUS ARCHITECTURE, MILITARY ARCHITECTURE.  கோயிற்கட்டடக் கலையில், விஜய நகரப் பாணியில் புதிய அமைப்பு மண்டபங்கள். 16 கால், 100 கால், 1000 கால் மண்டபங்கள் எனப் பல்வேறு மண்டபங்கள் கட்டப்பெற்றன. இவை, உற்சவ மண்டபங்கள், நாட்டிய மண்டபங்கள் எனப் பலவகையானவை. மொத்தம் 14 வகைகள் உள்ளன. கோயில்களில் முன்பில்லாத கட்டுமானங்களாகக் குளங்கள், கோபுரங்கள் ஆகியன எழுந்தன. ஹம்பியில் நிறையக் கோயில்கள் பெரிய அளவில் கட்டப்பட்டன. 


ஹம்பி 26 கி.மீ. பரப்புடையது. இயற்கை அரண் கொண்டது. மூன்று பக்கங்களில் மலைக்குன்றுகள், நாலாவது பக்கம் துங்கபத்திரை ஆறு. MILITARY ARCHITECTURE - FORTIFICATIONS  வகையில் கோட்டைகளும், மதில்களும், அகழிகளும் விஜய நகர் அரசு காலத்தில் கட்டப்பெற்றன. 

ஹம்பி

மதுரை, தஞ்சை, செஞ்சி போன்று எட்டு நாயக்கர் அரசுகள் விஜய நகர் அரசின் கீழ் இயங்கியபோது இவ்வாறான கோட்டைகள் பெருகின. கோயில் தூண்களில் இசைத்தூண்கள், ஒரே கல்லில் வேலைப்பாடுகளோடு கூடிய தூண்கள், யாளித் தூண்கள்  ஆகியன புதியதாகத் தோன்றின. அதிட்டானப் பகுதியில், யாளி வரிகள், யானை வரிகள் ஆகியவை நிறைய இருந்தன. இராமாயணக் கதைக் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டன. இதே காட்சிகள் கோயில் சுவர்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டன. சிவபுராணம், விஷ்ணு புராணம் ஆகிய நூல்களிலிருந்து காட்சிகள் எடுத்தாளப்பட்டுத் தூண் சிற்பங்களாக வடிக்கப்பட்டன. கோபுரங்கள் 11, 13 நிலை மாடங்களைக்கொண்டு உயர்ந்து நின்றன. இவை இராய கோபுரங்கள் எனப்பெயர் பெற்றன.ஹம்பியில் உள்ள அரசியர் குளிக்கும் குளம், தாமரை மகால் (LOTUS MAHAL) , ஆகியவை CIVIL ARCHITECTURE  வகையைச் சார்ந்தவை. தாமரை மகால், GUEST HOUSE  போன்றது. 

 அரசியர் குளிக்கும் குளம்

 தாமரை மகால்

இக்கட்டடத்தில் தற்போதுள்ள குளிர் சாதன அமைப்பு, கட்டுமானத்திலேயே உள்ளடங்கியது. தூண்கள், சுவர் ஆகியவற்றின் பூச்சு, கண்டசர்க்கரை, முட்டை, சுண்ணாம்பு போன்ற பத்து வகைப் பொருள்கள் கொண்ட சாந்துக் கலவையால் ஆனது. எனவே, எப்போதும் குளிர்ச்சி நிலவும் அமைப்பு. ஹம்பியில் உள்ள யானைக் கூடங்கள்(யானைக்கொட்டடி), அரசு இயந்திரத்துக்கான நிருவாகக் கட்டிடங்களே என அறிஞர்கள் கருதுகின்றனர். 

யானைக் கூடங்கள்


கட்டிடங்கள் உயரமாகக் கட்டப்பட்டன. இந்த உயரம், காற்று, ஒளி, குளிர்ச்சி ஆகியவற்றுக்குக் காரணமாய் அமைகிறது. கோபுரங்களின்மீது கட்டப்படும் சுதைக் கட்டுமான வேலைப்பாடுகள் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும் தன்மையுடையவை. விஜயநகர் காலத்தில் வீரபத்திரர், காளி, துர்க்கை ஆகிய கடவுளர்களின் கோயில்கள் மற்றும் சிற்பங்கள் தனிச் சிறப்புள்ளவை. லேபாக்‌ஷி வீரபத்திரர் கோயில் குறிப்பிடத்தக்க ஒன்று. சிருங்கேரியில் உள்ள கோயில், கட்டடக்கலைகள் பல இணைந்து கட்டப்பட்டது. கோயில்களில் தேர்கள் விஜயநகர் காலச் சிறப்பு அடையாளங்கள். அதுபோலவே, கோயில்களில் ஓவியங்களும். கோயிற்சுவர்கள், மேற்கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டன. இராசி ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.

விஜய நகர் ஆட்சியில் நாயக்கர்களின் தனி ஆட்சி:
விஜய நகர் ஆட்சியின் பெரும்பரப்பின் நிர்வாகம், ஆங்காங்கே நாயக்கர்களை நியமித்து அவர்களைச் சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதித்ததனால் சிறப்புற நடைபெற்றது எனலாம். இல்லையெனில், பெரியதொரு நிலப்பரப்பைச் செம்மையாக விஜய நகர் மையத்திலிருந்து அரசு ஆளுகை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது. எட்டு நாயக்கர்களுக்குத் தனி உரிமைகள் தந்தனர். நாயக்கர்களின் வருவாயில் ஒரு பகுதி விஜய நகர் அரசுக்கு. விஜய நகர அரசு கேட்கும்போதெல்லாம் நாயக்கர்கள் படையுதவி அளிக்கக் கடமைப்பட்டவர்கள். கொங்கு நாடு, மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது. மதுரை நாயக்கர் ஆட்சியின் காலம் கி.பி. 1529-1736 ஆகும். திருமலை நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. நாயக்கர் ஆட்சியில், கொங்குநாட்டில் பெரும் கோயில்கள் எழுந்தன; சீரமைக்கப்பட்டன. அவினாசி, பேரூர், பவானி, தாரமங்கலம் ஆகிய ஊர்க்கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. விஜய நகர் ஆட்சியின் தொடக்கத்தின்போது தெலுங்கு மொழியினர் தமிழகத்தில் குடியேறியதும், பின்னர் தொடர்ந்த நாயக்கர் ஆட்சியில் கன்னட மொழி மக்கள் கொங்கு நாட்டில் குடிபெயர்ந்ததும் நிகழ்ந்தன. நாயக்கர் ஆட்சிக்கு முன்பே, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் ஹொய்சளர் ஆட்சியில் கன்னட மக்கள் கொங்குப்பகுதியில் குடிபெயர்ந்த நிகழ்ச்சியும் உண்டு. கோவை, சத்தி, ஈரோடு, கோபி, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் கன்னட மக்கள் குடிபெயர்ந்தனர். கொங்குப்பகுதி பழங்காலந்தொட்டு பருத்தி விளைந்த இடமாதலால் அதைச் சார்ந்த ஆடைத்தொழில் (நெசவு) பெருமளவில் வளர்ந்தது. SILK ROAD என்று வணிகத்தில்  குறிப்பிடுவார்கள். கோவையில் ROBERT STANES  என்பவர் இத்தொழிலின் முன்னோடி எனலாம்.

விஜய நகரர் காலத்தில், தமிழ் அல்லாத மாற்று மொழியாளர்கள் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர். நாலாயிரப்பிரபந்தம் நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் மிகுதியும் பரவியது. நாயக்கர் காலச் சுவர் ஓவியங்களில், ஓவியங்களின் கீழ் தமிழ் எழுத்துகளால் சிறு குறிப்புகள் எழுதப்பட்டன. புராணக்கதை பற்றிய ஓவியங்களில் இவ்வாறு விளக்கக் குறிப்புகளைக் காணலாம்.
விஜய நகர அரசர்கள் இந்துக் கடவுளர்களை வணங்கும் பற்றாளர்களாக இருப்பினும், சமயப் பொறை கொண்டவர்கள். பிற சமயங்களைப் புறக்கணியாமல் அணைத்துச் செல்லும் இயல்பினராயிருந்தனர். பிஜப்பூரில், விஜயநகரர் தர்கா கட்டியுள்ளனர்.

விஜய நகர ஆட்சி-கொங்குப் பகுதி:
கொங்குநாட்டைப் பொறுத்தவரை, கல்வெட்டுச் சான்றுகள் வாயிலாக மூன்று அரசர்கள் அறியப்படுகிறார்கள். வீரநஞ்சராயர், வீரசிக்கராயர், பிரதாப ஹரிஹரராயர் ஆகியோர். விஜய நகரர் ஆட்சிக்காலத்தில் கொங்குப்பகுதியில் கல்வி வளர்ச்சியுற்றது. இலக்கியங்கள், சமற்கிருதத்திலும் தெலுங்கிலும் இயற்றப்பட்டன. கொங்கு மண்ணின் – தமிழகத்தின் -  தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது தெளிவு. கல்வெட்டுகளில், பிரசஸ்தி என்னும் மெய்க்கீர்த்திகள் தெலுங்கு மொழியிலேயே அமைந்தன.

படங்கள் உதவி: விக்கிப்பீடியா
___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

Thursday, September 21, 2017

எங்கிருந்தாவது ஒரு புயல்

-- ருத்ரா இ பரமசிவன்

 


அது
வானத்திலிருந்து வந்து
விழுந்த‌
சுத்தமான ஒலித்துண்டுகள்
என்றார்கள்.
ஒலி என்றால்
அதை ஏற்படுத்திய‌
குரல் வளையின் தசைநார்கள்
யாருடையது
என்ற கேள்விகள் எழுந்தன.
கேள்விகள் கேட்டு
எச்சில் படுத்தாதீர்கள்
என்றார்கள்.
அது
மனித செவிகளுக்குள்
நுழைவதும்
மறுபடியும்
மனித நாக்குகளின்
உமிழ்நீர் தோய்ந்து
குரலாக வெளிவருவதும்
தீட்டோ தீட்டு என்றார்கள்.
அப்படியென்றால்
அது
எவ்வளவு புனிதம் வாய்ந்ததாய்
இருக்கவேண்டும்?
மனிதர்கள்
அதை "அறிவு"ப்புலன் கொண்டு
ஸ்பர்சிப்பதே
ஆபாசம் என்றார்கள்.
அதை "அஸ்பர்ஸ்யோகம்" என்று
ஒரு மாண்டூக ரிஷி
வறள வறள மந்திரம் சொன்னான்.
அது
அப்படியே
எங்கே எல்லாமோ போனது.
உள்ளூர்க்காரன்
அர்த்தம் தேடவே
பயந்தார்கள்.
வெளிதேசக்காரர்கள்
அந்த வெங்காயத்தோல்
உரித்தார்கள்.
இப்போது எல்லாம் புரிந்தது.
மனிதனுக்கு மனிதன்
யுத்தம் புரிந்தது...
இவன் சொன்னது அவனுக்கு
அதர்மம்.
அவன் சொன்னது இவனுக்கு
அதர்மம்.
ரத்தம் பீறிட்டு
வானத்தையே சிவக்க வைத்தது.
சோமாச்செடியை நசுக்கி நசுக்கி
கள் குடித்தது.
அதையே ஒருவனுக்கு
ஊற்றி ஊற்றிக் கொடுத்து
வெறி யேற்றி யுத்தம் செய்யச்சொல்லி
மந்திரங்கள் குவித்தது.
வஜ்ராயுதங்கள்
மக்களைக் கொத்து கொத்தாய்
தலை கொய்தது.
அடுத்தவன் அணைக்கட்டுகள்
பொறாமையால்
அடித்து நொறுக்கப்பட்டது.
வெள்ளம் மனித இனத்தை
பூண்டற்று போகச்செய்தது.
எல்லாம் "ஸ்லோகங்களின்"
இரைச்சல்களால்
திரை போடப்பட்டன.
இந்த குட்டு உடைந்ததை
தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே
கடவுளின் புத்திரர்கள்.
இதை அறிய முற்படும்
மற்றவர்கள் காதுகளில்
ஈயத்தைக்காய்ச்சி ஊற்றுங்கள்
என்றார்கள்.
மனித சரித்திரத்தின்
அருவருத்த முகங்களைக்
காட்டும்
அவை இன்னும்
மனிதம் எனும்
வெளிச்சத்தின் மீது
சடங்கு சம்பிராயதங்களின்
கல்லறைகளாய்
அழுத்திக்கொண்டிருக்கின்றன.
எங்கிருந்தாவது
ஒரு இர்மா புயல் வேண்டும்
இவற்றை அடித்து நொறுக்க!


படம் உதவி: சமூக வலைத்தள பகிர்வு

______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

Tuesday, September 19, 2017

மறுதால்தலை பிராமி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊரில் மறுகால்தலை என்ற சிறு குன்று உள்ளது. தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகில் இணைகின்றன. இவ்வூரில்  உள்ள சிறு குன்றுகளில் ஒன்றில் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் ஒன்றுள்ளது.    இதில் சமண முனிவர்களுக்கென்று அமைக்கப்பட்ட கற்படுக்கைகள்  காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டை முதன் முதலாக 1906ம் ஆண்டில் அப்போதைய நெல்லை மாவட்டக் கலெக்டர் ஹெமைடு என்பவர் கண்டறிந்தார்.

குகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் ஏறக்குறைய 40 செ.மீ உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1ம் நூற்றாண்டாகும்.

"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம்"

வெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும்.


சமஸ்கிருதத்தில் "கஞ்சணம்" என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இக்கல்வெட்டில் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதியைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம். காசிபன் என்ற சொல்லில் உள்ள "சி" என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும்.

இத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும்கல்வெட்டுப் பகுதிக்குமிடையில் சுமார் 40 அடி இடைவெளி அமைந்துள்ளது. 

இந்த சிறு குன்றின் அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பாகுபலியின் சிற்பம் ஒன்றும் உள்ளது. பாகுபலியின் சிற்பம் இன்று சாஸ்தாவாக மாற்றம் கண்டு சாஸ்தா தெய்வ வழிபாடு இன்று நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் குலதெய்வ வழிபாடு செய்யும் இடமாகவும் இப்பகுதி அமைந்திருக்கின்றது.

முனைவர்.க.சுபாஷிணி

Saturday, September 16, 2017

பெயரில் என்ன இருக்கிறது?


-- தேமொழி 

பெயரில் என்ன இருக்கிறது?  ரோஜாவிற்கு என்ன பெயர் சூட்டினாலும் அது நறுமணம் வீசத்தான் போகிறது என்று ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட ஜூலியட் பாடலுக்கான விளக்கமல்ல நாம் பார்க்கப்போவது.  'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை 'தமிழ்நாடு' என மாற்றவேண்டும் என இந்தியப் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களையும் ஒரு மீள்பார்வை செய்யும் பொழுது நமக்கு இந்த வரிகள் நினைவில் நிழலாடும்.

தமிழுக்காகவும்  தமிழருக்காகவும்  தமிழர் குரல் கொடுப்பது ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற  இந்நாள் மெரீனா கடற்கரைப் போராட்டம் வரையிலும் தொடர்ந்து  நடந்து வருகிறது.  சென்ற நூற்றாண்டில் தமிழுக்காகக் குரல் கொடுத்ததுடன் உயிரும் கொடுத்தவர்களைக் கண்டது  தமிழகம்.  அவர்களில் ஒருவர் 'கண்டன் சங்கரலிங்கனார்'. விருதுநகரைச் சார்ந்தவரும், நாட்டுப்பற்று மிக்கவரானவருமான  சங்கரலிங்கனார் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக விளங்கியவர்.  சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியது  சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானத்தின் 'தமிழரசுக் கழகம்'.  இதுவே  'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றக் கோரிக்கையின் முதல் எழுச்சியொலி.   அந்நிகழ்ச்சி கொடுத்த தாக்கத்தில்  "சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்" என்ற கோரிக்கையையும் அதனுடன் மேலும் 11 கோரிக்கைகளையும் முன் வைத்து 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் உண்ணாவிரதத்தைத் துவக்கினார் சங்கரலிங்கனார்.  இவர் கோரிக்கை குறித்து   சட்டமன்ற விவாதங்களில் பலமுறை  விவாதிக்கப்பட்டாலும் ஆக்கப்பூர்வமாக முடிவு எதுவும் மாநில அரசால் எடுக்கப்படவில்லை.   சங்கரலிங்கனார் முன்வைக்கும் கோரிக்கைகளில் பத்து கோரிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் வருகிறது என்று முதலமைச்சர் காமராஜர் குறிப்பிட்டார். 

முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றிருந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணாதுரை, காங்கிரசின்  பாராமுக  நடவடிக்கையால் நம்பிக்கை  இழந்திருந்த  சங்கரலிங்கனாரைச்  சந்தித்தார். அப்பொழுது  அவர் தனது கோரிக்கைகளைக் குறிப்பாக தமிழ்நாடு என்ற பெயர்மாற்றக் கோரிக்கையை அண்ணாவாவது நிறைவேற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அண்ணாதுரையிடம் வைத்தார்.  தலைவர்கள் பலர் சங்கரலிங்கனாரது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தியும் கொள்கைப்பிடிப்பின் காரணமாக  மறுத்துவிட்டார் சங்கரலிங்கனார்.  உடல் நலிவுற்ற அவர் தனது இறுதிச் சடங்குகளை செய்யும் உரிமையை பொதுவுடமைக் கட்சித் தோழர்களுக்கு அளித்துவிட்டு, 76  நாட்கள் தொடர்  உண்ணாவிரதத்தின் விளைவாக உடல்நலிவுற்று   13.10.1956 அன்று உயிர் துறந்தார். அவர் மறைந்த 42 நாட்கள் கழித்து 24.11.1956 அன்று மாநில சட்டமன்றத்தில் சென்னை மாகாணம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டும் என்ற தீர்மானம் வைக்கப்பட்டது.  'மெட்ராஸ்' என்பதே வழக்கத்தில் அனைவரும் பரவலாக அறிந்துள்ள பெயர், இது போன்ற பெயர் மாற்றம் குறித்து நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறினார் அன்றைய தொழில்துறை அமைச்சர் திரு. ஆர்.வெங்கடராமன். அதைத் தொடர்ந்து மாநில அரசு பெயர் மாற்றத்  தீர்மானத்தைத்  தள்ளுபடி செய்தது.

சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் தலைமையில் 25.12.1960 அன்று கோகலே மண்டபத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு நடைபெற்று தமிழகத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றது. மாணவர்களும் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தனர்.  1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், "போராட்டத்தைக் கைவிடுங்கள். இந்தப் பெயர் மாற்ற விஷயம் பற்றி சென்னை சர்க்காரின் நிலையை  24-ஆந் தேதிக்குப் பிறகு சட்டசபையில் விளக்குகிறேன். அந்த முடிவு உங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கலாம். அதோடு, பிரிட்டிஷ் ராணியார் சென்னைக்கு வருகை தரும் சமயத்தில் இங்குப் போராட்டங்கள் நடப்பது நம் பண்புக்கு அழகல்ல. போராட்டத்தை அடியோடு கைவிடாவிட்டாலும், ராணியார் விஜயம் செய்யும் தினங்களிலாவது அதை நிறுத்தி வைக்கவும்" என்று தமிழரசுக் கழகத்தின் தலைவர்  திரு. ம. பொ. சி. யிடம் கேட்டுக் கொண்டார்.  அவரும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒத்துழைத்தார்.

"சென்னை ராஜ்யத்துக்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும்" என்று திரு. சின்னத்துரை 24.2.1961 அன்று கொண்டுவந்த தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதத்திற்குப் பதில் அளித்தார் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், "இனி தமிழில் குறிப்பிடும் போதெல்லாம் 'சென்னை ராஜ்ஜியம்' 'தமிழ்நாடு' என்றே அழைக்கப்படும். ராஜ்ஜியத்திற்குள் நடைபெறும் அரசாங்கக் கடிதப் போக்குவரத்துகள் அனைத்திலும் இனி 'தமிழ்நாடு' என்ற பெயரே குறிக்கப்படும்.  ஆனால் ராஜ்யத்திற்கு வெளியே எழுதும்பொழுது ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றே குறிப்பிடுவோம். அரசியல் சட்டத்தில் ஆங்கிலத்தில், 'மதராஸ் ஸ்டேட்' என்ற பெயர்தான் பொறிக்கப்பட்டிருக்கிறது.  அதை மாற்ற அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும். அதை இப்போது மாற்ற வேண்டிய அவசியமில்லை" என்று  மாநில அரசின் முடிவை அறிவித்தார். இதனைச் செயலாக்கும் விதமாக மறுநாளே நிதிநிலை அறிக்கையை வெளியிடும்பொழுது சென்னை ராஜ்ஜியம் எனக் குறிப்பிடாது, "தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை" என வெளியிட்டார்.  தமிழக மக்களும் தற்காலிகமாக சமாதானமடைந்தனர். 

மறு ஆண்டு (26.02.1962) நடந்த தேர்தலில் அண்ணாதுரை தனது காஞ்சீபுரம் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவினார். சட்டமன்றத்திற்குத் தெரிவாகாமல் விட்டாலும்  பாராளுமன்ற மேலவை உறுப்பினராகும் வாய்ப்பைப் பெற்றார். பாராளுமன்றத்தில் இந்திய சட்டவரைப்படி இனி 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்காமல் 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் செய்ய வேண்டும்  என்று 1963 ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட விவாதம் தொடர்பாக  அவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஓர் உரை.  அதில் தனது தமிழ்ப்பற்றையும், அறிவுக் கூர்மையையும், வாதத்திறமையையும் முற்றிலும் வெளிப்படுத்தும் விதமாக அவர் ஆங்கிலத்தில் வைத்தக் கருத்துகள் வியக்க வைப்பது. ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமையை ஒத்திருந்தது அந்த உரை. 

இம்மாற்றம் சென்னை மாகாணத்தில் வாழும் தெலுங்கு, மலையாளம், கன்னட மக்களின் விருப்பத்திற்கு மாறானது என்பது பாராளுமன்ற விவாதத்தில் குறிப்பிடப்படும் கருத்தாக இருந்தது. இது பொருளற்றது, மாநில அளவில் தமிழில் தகவல் பரிமாற்றம் செய்பவற்றில் தமிழ்நாடு என்று 24.2.1961 அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து நிதியறிக்கையும் தமிழ்நாட்டின் நிதிநிலையறிக்கை என்றே வெளியிடப்பட்டாகிவிட்டது.

பரிபாடல், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இரண்டாயிரம் ஆண்டு காலத்திய பழந்தமிழ் இலக்கியங்களிலேயே தமிழர் வாழும் பகுதி  தமிழர்களின் நாடு என்றுதான்  குறிப்பிடப்படுகிறது. மாநிலத்தின் தலைநகர்  பெயரிலேயே மாநிலத்தின் பெயர் அமைய வேண்டும் என்றால் இப்பொழுது அகமதாபாத் குஜராத்தின் தலைநகராகவும், சண்டிகார் பஞ்சாபின் தலைநகராகவும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  தலைநகர் பெயரில் மாநிலம் இருக்க வேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எனவும், ஆந்திரா என்பது  ஹைதராபாத் எனவும், பஞ்சாப் என்பது சண்டிகார் எனவும், குஜராத் மாநிலத்தை  அகமதாபாத் மாற்றம் செய்யத் தேவை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.  அவரது   பாராளுமன்ற உரையின் மிக முக்கியமான கருத்தைக் கவரும் வாதம் பின்வருவது. 

எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர் (இவர் காங்கிரஸ் கட்சியின் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்), "தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிடப்போகிறீர்கள்?" என்று கேட்டார். “எனக்கு என்ன லாபம் என்றா கேட்கிறீர்கள்? பாராளுமன்றத்திற்கு லோக்சபா என்றும், மக்களவைக்கு ராஜ்யசபா என்றும், குடியரசுத் தலைவருக்கு  ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே. இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன? அதனால் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்ற மாற்றுவதால் உங்களுக்கு என்ன இழப்பு? பெயர் மாற்றம் என்னும் இந்தச் சிறு தொல்லையை, தங்களது தொன்மையான நிலத்தின் பெயர் மீட்கப்படுவதில் கோடிக்கணக்கான தமிழர் பெறப்போகும்  மனமகிழ்ச்சி ஈடுகட்டாதா” என்ற எதிர்க்கேள்வி எழுப்பினார் அண்ணாதுரை. 

இந்தியை ஆட்சிமொழியாகத் திணிக்கப் பலமுறை முயன்று தோல்வியுற்ற மத்திய அரசு 1965 குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தது.  வெகுண்டெழுந்தனர் தமிழக மக்கள். மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல திமுக தலைவர்களை சிறையில் அடைத்தது. ஆனால் மாணவர்கள் (அன்றும்) போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.  இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடிய அன்றைய மாணவர் எழுச்சி மக்களின் மனப்பான்மையில் தாம் தமிழர் என்ற எண்ணத்தை நன்கு வேரூன்றச்  செய்தது.  இன்றைய  ஜல்லிக்கட்டு எழுச்சி போன்றே, அன்றும் மதுரையில் துவங்கிய எழுச்சி, மாணவர்கள்  காங்கிரசாரால் தாக்கப்பட்ட பின்னர் சூறாவளியாய் சுழன்றடித்து தமிழக மாணவர்களை வீறுகொண்டு எழச் செய்தது. சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் மாணவர் இராசேந்திரன்  போராட்டத்தில் உயிரிழக்க, தொடர்ந்து வேகம் பெற்று பல தீக்குளிப்புகள், உயிரிழப்புகள், போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் என 18 நாட்கள் உள்நாட்டுப் போர் போன்ற ஒரு  கொதிநிலையை எட்டி  வெடித்துச் சிதறியது. பின்னர் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என்று முன்னர் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னரே போராட்டம் ஓய்ந்தது.   காமராஜர் திட்டம் என்பதை முன்மொழிந்து கட்சிப்பணியில் கவனம் செலுத்தி வந்தார் காமராஜர்.  அவருக்குப் பின் தலைமையேற்றவர்கள் தாக்குப்பிடிக்கமுடியாமல் திணறி, மாணவர் மீது ஏவிவிட்ட அடக்குமுறை தொடர்ந்து வந்த மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்குச் சாவுமணி அடித்து சமாதியும் எழுப்பியது.

தமிழக வரலாற்றின் திருப்புமுனையான 1967 ஆம் ஆண்டின்  பொதுத் தேர்தலில் 133 தொகுதிகளில் அறுதிப்பெரும்பான்மை பெற்று,  உதயசூரியனாய் உதித்தெழுந்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா, அந்த சித்திரைத் திருநாளான 14.04.1967 அன்று  “தமிழக அரசு தலைமைச் செயலகம்”  என்ற பெயர்ப்பலகையை  சென்னைக் கோட்டையின்  முகப்பில்  திறந்து வைத்தார்.  தொடர்ந்து, 18.07.1967 அன்று 'சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும்' என்ற அரசியல் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில்  முன்மொழிந்தார் அறிஞர் அண்ணா.  ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதலை  அண்ணா  பெற்ற பின்னர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடர்ந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என அறிவித்தார் முதல்வர் அண்ணாதுரை. பாராளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா பின்னர்  (23.11.1968 அன்று) நிறைவேற்றப்பட்டது.

பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘கலைவாணர் அரங்கில்’ கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டு அது விழாவாக கொண்டாடப் பட்ட அன்று உடல்நலக் குறைவால் வாந்தியும் மயக்கமுமாகச் சோர்ந்திருந்தார் அண்ணா. மருத்துவர்கள் அந்த விழாவுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்க, கோபத்துடன், "என் தாய்நாட்டுக்கு பெயர் சூட்டும் இந்த நாளில் போகாமல் உயிருடன் இருப்பதைக் காட்டிலும் இறப்பதே மேல்!" என்றார். கலைவாணர் அரங்கில் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று  தமிழ்நாடெங்கும்  தமிழ்நாடு பெயர் மாற்ற விழா கொண்டாடப்பட்டது. 

அந்த நாள்  தாம்  தமிழரென்றும்,  தாம் வாழும் நாடு தமிழ்நாடு என்றும் பெருமிதத்துடன் தமிழர் உலகத்திற்கு அறிவித்த நாளாக வரலாற்றில் இடம் பெற்றது.


தகவல் கொடுத்து உதவிய கட்டுரைகள்:
1. அறிஞர் அண்ணாதுரையின் பாராளுமன்ற உரை. உதவி: திராவிட பேரவை
2. தினத்தந்தி-வரலாற்றுச் சுவடுகள், தினத்தந்தி, இரண்டாம் பதிப்பு, 2010
3. ஆனந்தவிகடன்-காலப்பெட்டகம்: 1926 முதல் 2000  வரை... , விகடன் பிரசுரம் - 574, மூன்றாம் பதிப்பு, 2011
4. அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு, விகடன், 16/09/2015
5. தியாகி சங்கரலிங்கனார், பி.தயாளன், 2013.


நன்றி: FeTNA 2017

படம் உதவி: தி.மு.க. தளம்

______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________

Thursday, September 14, 2017

அடையாற்றின் குறுக்கே உள்ள சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம்

-- நூ.த.லோக சுந்தரம் 

 
சென்னை சைதாப்பேட்டை (முன்னர் இது சயீதுகான் பேட்டை என அறியப்பட்டது என்பது விக்கிப்பீடியா மூலம்  தெரிகிறது) பகுதியில் அடையாற்றின் குறுக்கே எழுப்பப்பட்ட பாலம் 1726 ல் கட்டப்பட்டது. இது சென்னையின் மிகப் பழமையான, நீளமானபாலம் ஆகும்.  இதனைச் சிலரே அறிந்திருப்பார்கள் எனலாம். இப்பாலத்தின் பழைய  ஓவியங்கள் சிலவற்றை இணையத்தில் கண்டேன். பலரும் அறிந்திரார் எனும் கருத்தில் இங்கு வைத்துள்ளேன்.   அவற்றுடன் கல்வெட்டுச் சான்றுகளுடன் முறையான  ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட பதிவுகளும்  வைக்கப்படுகின்றது. 
   
சென்னை சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின்மேல்,  நீளமான, வழக்கம்  போல்  நீரோட்டத்திற்கு 90 பாகையில் குறுக்காகவும்  வடக்கு தெற்காகவும்  கட்டப்பட்ட பாலம் ​​​"மார்மலாங்கு ​பாலம்"  ​என வழங்கப்பட்டது.  ​​ பொது ஆண்டு 1726  (உரோம எண்ணில்: MDCCXXVI )​ ஆண்டு எனக்குறிக்கப்பட்ட கல்வெட்டு​ சான்றும் உள்ளது.  பழமையான இப்பாலம் புதுப்பிக்கப்பட்டு இன்று 47 ஆண்டுகளுக்குமேல் ஆகின்றது.

தொல்லியல் துறையினர் வழி,  சென்னை மாநகரக் கல்வெட்டு ஆவண எண் 208/1967 என்கின்ற நூலக​தட்டுகளில் வைத்துள்ள,  ​"​சென்னை" மாநகர கல்வெட்டுகள்"​ எனும் தலைப்புடன் முனைவர் இரா​.​ நாகசாமி பதிப்பாசிரியராக​, ​ தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடாக 2009 இல் வழிவந்த நூலில் கீழ்க்காணும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது

​மாவட்டம்:        சென்னை              
வட்டம்:        தென்சென்னை ​
​ஊர்:        சைதாப்பேட்டை  ​ 
கல்வெட்டு:     4 *  
பதிப்பு:    274 Antiques From Santhome & மயிலாப்பூர் பகுதி- II, பக்கம் 119
மொழி:        பாரசீகம்
வரலாற்று ஆண்டு:    கிபி 1726
இடம்:        சைதாப்பேட்டை பாலத்தின்  கிழக்குப்பக்க சுவரில் பதிக்கப்பட்ட கல்லில் உள்ளது

 
The Marmalong Bridge - William Hodges (1744–1797)
Yale Center for British Art
http://collections.britishart.yale.edu/vufind/Record/1666698
__________________________________________


The Armenian Bridge, near St.Thomas's Mount, Madras - 1798
Copyright : The British Library Board
http://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10152469706471675

Plate 10 from the second set of Thomas and William Daniell's 'Oriental Scenery'. The old bridge on the Adyar River was originally built in 1726 by an Armenian, as recorded by a Latin inscription on it, and has been replaced by the Marmalong Bridge. The Little Mount in the distance is connected with the story of the martyrdom of the Apostle St Thomas who went to India after the Crucifixion and lived there periodically. It is crowned by a Portuguese church built in 1612.
__________________________________________

 
 Marmalong Bridge, Madras - Justinian Gantz (1802–1862)
http://www.artnet.com/artists/justinian-gantz/marmalong-bridge-madras-ct6JFpsGl6lmoaDsNzbZqw2
__________________________________________ Marmalong Bridge  before the new one was constructed (1966) by Sridhar Venkataraman
__________________________________________
 

 Maraimalai Adigal Bridge (Photo by R Muthusamy) 

 __________________________________________
ஆர்மீனிய நாட்டைச் சேர்ந்த வணிகர்  "கோச பீடற்சு உசுகன்" (Coja Petrus Uscan)  என்பவர் மக்களின் நன்மைக்காக இப்பாலத்தைக்காட்டியுள்ளதாய் இந்தக்  கல்வெட்டு குறிக்கின்றது.

 மார்மலாங்கு பாலம்  அடிக்கல்  அரபி+இலத்தீன் மொழிகளில்

                                     1      HUNC PONTUM
                                     2      EDIFIKARI JUSSIT
                                     3      PRO BONO PUBLICO
                                     4     COJA PETRUS USCAN
                                     5      NATIONE ARMEN
                                     6      ANNO SALVTIS
                                     7      MDCCXXVI
​                                   ________________________


Plaque Commemorating the  construction of Marmalong Bridge by Coja Petrus Uscan
(multinlingual inscriptions in Persian, Latin and Armenian)
இப்பாலத்தின் போக்குவரத்துக்கான சேவைத் தகுதி குறைந்து வந்தபோது,  பொது ஆண்டு 1960 களில்  மிகவும் புதிதாக  ​"மறைமலை அடிகள் பாலம்" என​ பெயருடன் மாபெரும் பாலமொன்று  ​"அண்ணாசாலை" என்ற பெயருடைய  (முன்னர் ஆங்கிலேயர்களால் கோட்டைக்கும்​ ​ பரங்கி​** (பிரங்கிமலை)  மலைக்கும்​ ​ இடையே  ​அமைக்கப்பட்ட) மவுண்டு சாலையில் கட்டப்பட்டு, தற்கால மாநகராட்சி வாகன  பயணத்திற்கு 47 ஆண்டுகளாகப் பயனில் உள்ளது.


* மற்ற மூன்று முறையே  சிவன் (காரணீசுவரர்), திருமால் (சீனுவாசப்பெருமாள்), விநாயகர் (சித்தி விநாயகர்) கோயில்களில் காணப்பட்டு படி எடுக்கப்படவை ​
** பிரங்கி என்றால் வெளிநாட்டினர் எனப்பொருள் இந்தியில் (பறங்கியர் எனவும் தமிழில் வழங்கும்). சில விஷமிகள் பிருங்கி முனி எனும் புராணங்களில் காணும் கற்பனை பெயர்களுடனும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர்.

படங்கள்:  கூகுள் தேடலில் கிடைத்தவை________________________________________________________ 


நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________