-- நூ.த.லோக சுந்தரம்
என்னுடைய 77 வது பிறந்த நாள் வழிப்பாட்டில் இம்முறை காஞ்சியில் உள்ள கோயில்களைக் கொண்டேன் (13.08.17). அன்று எடுத்த படங்களின் வரிசையில் "சொக்கீசுவரர்" கோயிலும் உள்ளது. இருப்பிட வரைபடங்கள் வைத்துள்ளேன் காண்க.
இக்கோயிலுக்கு நான் சென்ற போது வழிபாடு நேரம் கடந்துவிட்டபடியால், வழியை மூடிவிட்டு காக்கி உடையணிந்த கோயில் காவற்காரர் எங்களை உள்ளே விடவில்லை (வேறுசிலர் சென்றுதான் வந்தார்கள்; அவர்கள் காமாட்சியம்மன் கோயில் நிருவாகத்துடன் தொடர்புடையவர் போலும்!!!).
ஏறக்குறைய 8 அடி ஆழப் பள்ளத்தில் பல்லவர் கால கற்றளி பாணி ஒக்கச் சிறிய கோயில் கூகுளில் வரைபட தொகுப்பில் இருப்பிடத் தகவலில் உள்ளது. ஆனால் படம் இதுவரை யாரும் போடவில்லை நான் குறுநிலை உதவியாளன் எனும் நிலையில் முயலுவேன். தினமும் ஆயிரக்கணக்கில் காமாட்சி அம்மனை வழிபடுவோர் சிலராவது இது என்ன ஓர் கோயில் என இதனைப்பார்க்க முயலக்கூடும். உள்ளே செல்லாததால் ஒரு படம் தான் உள்ளது.
சொக்கீசுவரர் கோயில்
மாடத்துச் சிற்பங்களில் ஆடை புனைந்துள்ளதால் வழிபாட்டில் உள்ளதாகத் தெரிகின்றது. காமாட்சி அம்மன் கோயிலின் வெளிச்சுற்று தெருவில் அக்கினி மூலையில் சரியாக கிழக்குப்பார்த்த முகமாக உள்ளது. காமாட்சி அம்மன் கோயிலே கிழக்கும் பார்க்காது மேற்கும் பார்க்காது ஈசான மூலை (மகத தேசம், புத்தரின் நாடு பார்க்கின்றது). ஏனெனில், அது ஒருகாலத்தில் புத்த பள்ளியாக இருந்தது (பார்க்க: "பௌத்தமும் தமிழும்", மயிலை சீனி வேங்கடசாமி).
மேலும், இந்த காமாட்சி அம்மன் கோயிலுள் ஓர் தூணில் உள்ளதைக் காட்டி இதுதான் ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் என்கின்றனர். அதுபோல, உலகளந்த பெருமாள் கோயிலில் மூன்று திருமாலின் திவ்வியதேசங்கள் இருக்கின்றதாகக் குறுங்கோயில்களும் காட்டியுள்ளனர். ஏகாம்பரேசுவரர் கோயிலிலும் ஓர் மூலையில் மேடையில் ஓர் படிமம் வைத்து அதையும் திவ்யதேசம் என்கிறார்கள். காமாட்சி அம்மன் கோயிலின் மேற்குப்புறமாகச் சென்றால் (சிறு வழி), குமரக்கோட்டம் அடைந்து விடலாம். அங்கு முருகன் கோயிலில் காஞ்சி கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் உள்ளது.
காஞ்சியில் பல்லவர்கால பாணி கற்றளிகள் பற்பலவற்றினை யாரும் பார்ப்பதில்லை. காஞ்சி கைலாச நாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில் ஆகியவற்றையாவது பலரும் பல்லவர்கால பாணியுடைய அரிய கோயில்கள் என அறிந்து பார்க்கவாவது வருகின்றனர். ஆனால், கோடானுகோடி மக்களில் ஏறக்குறைய பல்லவர்கால பாணியில், அதே காஞ்சியில் உள்ள கீழ்க்கண்ட கோயில்களை 99.99% அறியார். அந்த ஊரில் தொடர்ந்து பல்லாண்டுகள் வாழ்பவரும் கூட இவற்றின் அருமை அறியார். அவ்வழி சில கற்றளிகள் பற்றி இங்கு வைத்தல் தகும் எனும் நிலையில், இவற்றைக் காண்க.
Siva Shrines In India and Beyond Part-2, Rao Bahadur Pammal Sambandha Mudaliar, 1946 என்ற நூலில் காணப்படும் மேலும் சில தகவல்கள் கீழே:
1. மாதங்கேசுவரர் கோயில் :-
காஞ்சீபுரம் கஸ்பாவுக்கு வெளியில் உள்ளது, வைகுண்டப் பெருமாள் கோயிலுக்குத் தென்மேற்கில், மருத்துவ மனைக்குப் போகும் வழியில் உள்ளது; கர்ப்பக்கிரகம் மகாபலிபுரம் கோயிலைப் போன்றது. நந்திவர்மன் எனும் பல்லவ அரசனால் சற்றேறக்குறைய எட்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாம். இக்கோயிலும் முக்தீசுவரர் கோயிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. இங்கு மணற் கல்லாலாய சிற்பங்கள் இருக்கின்றன. கைலாசநாதர் கோயிலுக்கு முற்பட்டதென்பர். சிறிய கோயில்; மேற்குபார்த்தது. மாதங்க முனிவர் பூசித்த படியால் மாதங்கேசுவரர் எனப்பெயர் பெற்றதாம் ; இங்கு தேவி சந்நிதியில்லை.
மாதங்கேசுவரர் கோயில்
2. ஐராவதேசுவரர் கோயில் :-
ராஜ வீதிக்குக் கிழக்கில் கச்சேசுவரர் கோயிலுக்குச் சமீபத்தில் வடக்கில் உள்ளது. ஒரு தந்தத்தை இழக்க ஐராவதம் பரமசிவத்தைப் பூசித்து அத்தந்தம் பெற்ற ஸ்தலம். பல்லவ கட்டிடம் , எட்டாம் ஆண்டின் கடைசியில் கட்டப்பட்டது. மிகவும் சிறிய கோயில். கோயில் பூர்த்தியாக வில்லை.
ஐராவதேசுவரர் கோயில்
3. முக்தீசுவரர் கோயில் :-
இது ஒரு பழைய பல்லவா லயம், வைகுண்டப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ளது, இரயில் நிலையத்திற்குப் போகும் பாதையில் மாதங்கேசுவரர் கோயிலுக்கு வடக்கிலுள்ளது, நந்திவர்மன் காலத்து கல்வெட்டு இங்கு ஒன்றுளது. இதன் பூர்வீகப் பெயர் தர்மமகாதேவி ஆலயம், தர்மமகாதேவி எனும் பல்லவ அரசியால் கட்டப்பட்டது போலும். சுமார் 1200 - வருடங்களுக்கு முற்பட்ட கட்டடம் ; சிலர் இதைக் கைலாச நாதர் கோயிலுக்கு முற்பட்டதென்று எண்ணுகின்றனர். கோயில் சிறியது. ஈசான தேவதை பூசித்த ஸ்தலம்.
இது ஒரு பழைய பல்லவா லயம், வைகுண்டப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ளது, இரயில் நிலையத்திற்குப் போகும் பாதையில் மாதங்கேசுவரர் கோயிலுக்கு வடக்கிலுள்ளது, நந்திவர்மன் காலத்து கல்வெட்டு இங்கு ஒன்றுளது. இதன் பூர்வீகப் பெயர் தர்மமகாதேவி ஆலயம், தர்மமகாதேவி எனும் பல்லவ அரசியால் கட்டப்பட்டது போலும். சுமார் 1200 - வருடங்களுக்கு முற்பட்ட கட்டடம் ; சிலர் இதைக் கைலாச நாதர் கோயிலுக்கு முற்பட்டதென்று எண்ணுகின்றனர். கோயில் சிறியது. ஈசான தேவதை பூசித்த ஸ்தலம்.
முக்தீசுவரர் கோயில்
4. சுரகரீசுவரர் கோயில் :-
கோயிற் கட்டடத்தின் தரையமைப்பு, அக நாழிகையை (கருப்பக்கிருகத்தை)யும் அதன் முன்புறத்தில் சிறிய இடைகழியையும் உடையது. கருப்பக்கிருகத்தைச் சார்ந்தஇடைகழிக்கு இடைநாழிகை (அர்த்த மண்டபம்) என்பது பெயர். அகநாழிகை (கருப்பக்கிருகம்) பெரும்பாலும் சதுரமான அமைப்புடையது. மிகச் சில, வட்ட வடிவமாக இருக்கும். காஞ்சிபுரத்துச் சுரகரீசுவரர் கோயிலின் தரையமைப்பு வட்டவடிமான அகநாழிகை கொண்டது (தமிழர் வளர்த்த அழகு கலைகள், மயிலை சீனி வேங்கடசாமி).
சுரகரீசுவரர் கோயில்
"மாதங்கேசுவரர் கோயில்" (மாதங்கம் = யானை; இங்கு ஐராவதம்); மற்றும் "ஐராவதேசுவரர் கோயில்" -- மாதங்க+ஈசுவரர் = மாதங்ககேசுவரர் (வடமொழி புணர்ப்பு = அ ஆ முன் இ ஈ வர ஓர் ஏ தோன்றும்) எனவே ஒரே ஊரில் மாதங்கேசுவரர், ஐராவதேசுவரர் கோயில் என இரு பழம் கோயில்களைக் காணமுடிகின்றது. சிலப்பதிகாரத்தில் காவிரி பூம்பட்டினத்தில் இந்திரனின் ஐராவதம் என்கிற வெள்ளை யானையை மக்கள் வழிபட 'வெள்ளையானைக் கோட்டம்' இருந்துள்ளது (பார்க்க: "அமரர் தருக்கோட்டம், வெள்ளையானைக் கோட்டம்"- சிலப்பதிகாரம், கனாத்திறம் உரைத்த காதை, 9). இவையன்றி, முக்தீசுவரர் கோயில், சுரகரீசுவரர் கோயில் இவை எல்லாம் கைலாச நாதர் கோயில், வைகுந்த பெருமாள் ஆலயம் போல தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் உள்ளன.
________________________________________________________
நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________
No comments:
Post a Comment