-- தேமொழி
தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தமிழர் குரல் கொடுப்பது ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற இந்நாள் மெரீனா கடற்கரைப் போராட்டம் வரையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்ற நூற்றாண்டில் தமிழுக்காகக் குரல் கொடுத்ததுடன் உயிரும் கொடுத்தவர்களைக் கண்டது தமிழகம். அவர்களில் ஒருவர் 'கண்டன் சங்கரலிங்கனார்'. விருதுநகரைச் சார்ந்தவரும், நாட்டுப்பற்று மிக்கவரானவருமான சங்கரலிங்கனார் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக விளங்கியவர். சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியது சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானத்தின் 'தமிழரசுக் கழகம்'. இதுவே 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றக் கோரிக்கையின் முதல் எழுச்சியொலி. அந்நிகழ்ச்சி கொடுத்த தாக்கத்தில் "சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்" என்ற கோரிக்கையையும் அதனுடன் மேலும் 11 கோரிக்கைகளையும் முன் வைத்து 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் உண்ணாவிரதத்தைத் துவக்கினார் சங்கரலிங்கனார். இவர் கோரிக்கை குறித்து சட்டமன்ற விவாதங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும் ஆக்கப்பூர்வமாக முடிவு எதுவும் மாநில அரசால் எடுக்கப்படவில்லை. சங்கரலிங்கனார் முன்வைக்கும் கோரிக்கைகளில் பத்து கோரிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் வருகிறது என்று முதலமைச்சர் காமராஜர் குறிப்பிட்டார்.
முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றிருந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணாதுரை, காங்கிரசின் பாராமுக நடவடிக்கையால் நம்பிக்கை இழந்திருந்த சங்கரலிங்கனாரைச் சந்தித்தார். அப்பொழுது அவர் தனது கோரிக்கைகளைக் குறிப்பாக தமிழ்நாடு என்ற பெயர்மாற்றக் கோரிக்கையை அண்ணாவாவது நிறைவேற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அண்ணாதுரையிடம் வைத்தார். தலைவர்கள் பலர் சங்கரலிங்கனாரது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தியும் கொள்கைப்பிடிப்பின் காரணமாக மறுத்துவிட்டார் சங்கரலிங்கனார். உடல் நலிவுற்ற அவர் தனது இறுதிச் சடங்குகளை செய்யும் உரிமையை பொதுவுடமைக் கட்சித் தோழர்களுக்கு அளித்துவிட்டு, 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தின் விளைவாக உடல்நலிவுற்று 13.10.1956 அன்று உயிர் துறந்தார். அவர் மறைந்த 42 நாட்கள் கழித்து 24.11.1956 அன்று மாநில சட்டமன்றத்தில் சென்னை மாகாணம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டும் என்ற தீர்மானம் வைக்கப்பட்டது. 'மெட்ராஸ்' என்பதே வழக்கத்தில் அனைவரும் பரவலாக அறிந்துள்ள பெயர், இது போன்ற பெயர் மாற்றம் குறித்து நாட்டின் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறினார் அன்றைய தொழில்துறை அமைச்சர் திரு. ஆர்.வெங்கடராமன். அதைத் தொடர்ந்து மாநில அரசு பெயர் மாற்றத் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்தது.
சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் தலைமையில் 25.12.1960 அன்று கோகலே மண்டபத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு நடைபெற்று தமிழகத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றது. மாணவர்களும் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தனர். 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், "போராட்டத்தைக் கைவிடுங்கள். இந்தப் பெயர் மாற்ற விஷயம் பற்றி சென்னை சர்க்காரின் நிலையை 24-ஆந் தேதிக்குப் பிறகு சட்டசபையில் விளக்குகிறேன். அந்த முடிவு உங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கலாம். அதோடு, பிரிட்டிஷ் ராணியார் சென்னைக்கு வருகை தரும் சமயத்தில் இங்குப் போராட்டங்கள் நடப்பது நம் பண்புக்கு அழகல்ல. போராட்டத்தை அடியோடு கைவிடாவிட்டாலும், ராணியார் விஜயம் செய்யும் தினங்களிலாவது அதை நிறுத்தி வைக்கவும்" என்று தமிழரசுக் கழகத்தின் தலைவர் திரு. ம. பொ. சி. யிடம் கேட்டுக் கொண்டார். அவரும் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ஒத்துழைத்தார்.
"சென்னை ராஜ்யத்துக்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும்" என்று திரு. சின்னத்துரை 24.2.1961 அன்று கொண்டுவந்த தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதத்திற்குப் பதில் அளித்தார் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம், "இனி தமிழில் குறிப்பிடும் போதெல்லாம் 'சென்னை ராஜ்ஜியம்' 'தமிழ்நாடு' என்றே அழைக்கப்படும். ராஜ்ஜியத்திற்குள் நடைபெறும் அரசாங்கக் கடிதப் போக்குவரத்துகள் அனைத்திலும் இனி 'தமிழ்நாடு' என்ற பெயரே குறிக்கப்படும். ஆனால் ராஜ்யத்திற்கு வெளியே எழுதும்பொழுது ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றே குறிப்பிடுவோம். அரசியல் சட்டத்தில் ஆங்கிலத்தில், 'மதராஸ் ஸ்டேட்' என்ற பெயர்தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும். அதை இப்போது மாற்ற வேண்டிய அவசியமில்லை" என்று மாநில அரசின் முடிவை அறிவித்தார். இதனைச் செயலாக்கும் விதமாக மறுநாளே நிதிநிலை அறிக்கையை வெளியிடும்பொழுது சென்னை ராஜ்ஜியம் எனக் குறிப்பிடாது, "தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை" என வெளியிட்டார். தமிழக மக்களும் தற்காலிகமாக சமாதானமடைந்தனர்.
மறு ஆண்டு (26.02.1962) நடந்த தேர்தலில் அண்ணாதுரை தனது காஞ்சீபுரம் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவினார். சட்டமன்றத்திற்குத் தெரிவாகாமல் விட்டாலும் பாராளுமன்ற மேலவை உறுப்பினராகும் வாய்ப்பைப் பெற்றார். பாராளுமன்றத்தில் இந்திய சட்டவரைப்படி இனி 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்காமல் 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 1963 ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட விவாதம் தொடர்பாக அவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஓர் உரை. அதில் தனது தமிழ்ப்பற்றையும், அறிவுக் கூர்மையையும், வாதத்திறமையையும் முற்றிலும் வெளிப்படுத்தும் விதமாக அவர் ஆங்கிலத்தில் வைத்தக் கருத்துகள் வியக்க வைப்பது. ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமையை ஒத்திருந்தது அந்த உரை.
இம்மாற்றம் சென்னை மாகாணத்தில் வாழும் தெலுங்கு, மலையாளம், கன்னட மக்களின் விருப்பத்திற்கு மாறானது என்பது பாராளுமன்ற விவாதத்தில் குறிப்பிடப்படும் கருத்தாக இருந்தது. இது பொருளற்றது, மாநில அளவில் தமிழில் தகவல் பரிமாற்றம் செய்பவற்றில் தமிழ்நாடு என்று 24.2.1961 அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து நிதியறிக்கையும் தமிழ்நாட்டின் நிதிநிலையறிக்கை என்றே வெளியிடப்பட்டாகிவிட்டது.
பரிபாடல், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இரண்டாயிரம் ஆண்டு காலத்திய பழந்தமிழ் இலக்கியங்களிலேயே தமிழர் வாழும் பகுதி தமிழர்களின் நாடு என்றுதான் குறிப்பிடப்படுகிறது. மாநிலத்தின் தலைநகர் பெயரிலேயே மாநிலத்தின் பெயர் அமைய வேண்டும் என்றால் இப்பொழுது அகமதாபாத் குஜராத்தின் தலைநகராகவும், சண்டிகார் பஞ்சாபின் தலைநகராகவும் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைநகர் பெயரில் மாநிலம் இருக்க வேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எனவும், ஆந்திரா என்பது ஹைதராபாத் எனவும், பஞ்சாப் என்பது சண்டிகார் எனவும், குஜராத் மாநிலத்தை அகமதாபாத் மாற்றம் செய்யத் தேவை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார். அவரது பாராளுமன்ற உரையின் மிக முக்கியமான கருத்தைக் கவரும் வாதம் பின்வருவது.
எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர் (இவர் காங்கிரஸ் கட்சியின் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்), "தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிடப்போகிறீர்கள்?" என்று கேட்டார். “எனக்கு என்ன லாபம் என்றா கேட்கிறீர்கள்? பாராளுமன்றத்திற்கு லோக்சபா என்றும், மக்களவைக்கு ராஜ்யசபா என்றும், குடியரசுத் தலைவருக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே. இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன? அதனால் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்ற மாற்றுவதால் உங்களுக்கு என்ன இழப்பு? பெயர் மாற்றம் என்னும் இந்தச் சிறு தொல்லையை, தங்களது தொன்மையான நிலத்தின் பெயர் மீட்கப்படுவதில் கோடிக்கணக்கான தமிழர் பெறப்போகும் மனமகிழ்ச்சி ஈடுகட்டாதா” என்ற எதிர்க்கேள்வி எழுப்பினார் அண்ணாதுரை.
இந்தியை ஆட்சிமொழியாகத் திணிக்கப் பலமுறை முயன்று தோல்வியுற்ற மத்திய அரசு 1965 குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என அறிவித்தது. வெகுண்டெழுந்தனர் தமிழக மக்கள். மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல திமுக தலைவர்களை சிறையில் அடைத்தது. ஆனால் மாணவர்கள் (அன்றும்) போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடிய அன்றைய மாணவர் எழுச்சி மக்களின் மனப்பான்மையில் தாம் தமிழர் என்ற எண்ணத்தை நன்கு வேரூன்றச் செய்தது. இன்றைய ஜல்லிக்கட்டு எழுச்சி போன்றே, அன்றும் மதுரையில் துவங்கிய எழுச்சி, மாணவர்கள் காங்கிரசாரால் தாக்கப்பட்ட பின்னர் சூறாவளியாய் சுழன்றடித்து தமிழக மாணவர்களை வீறுகொண்டு எழச் செய்தது. சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் மாணவர் இராசேந்திரன் போராட்டத்தில் உயிரிழக்க, தொடர்ந்து வேகம் பெற்று பல தீக்குளிப்புகள், உயிரிழப்புகள், போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் என 18 நாட்கள் உள்நாட்டுப் போர் போன்ற ஒரு கொதிநிலையை எட்டி வெடித்துச் சிதறியது. பின்னர் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என்று முன்னர் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னரே போராட்டம் ஓய்ந்தது. காமராஜர் திட்டம் என்பதை முன்மொழிந்து கட்சிப்பணியில் கவனம் செலுத்தி வந்தார் காமராஜர். அவருக்குப் பின் தலைமையேற்றவர்கள் தாக்குப்பிடிக்கமுடியாமல் திணறி, மாணவர் மீது ஏவிவிட்ட அடக்குமுறை தொடர்ந்து வந்த மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்குச் சாவுமணி அடித்து சமாதியும் எழுப்பியது.
தமிழக வரலாற்றின் திருப்புமுனையான 1967 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் 133 தொகுதிகளில் அறுதிப்பெரும்பான்மை பெற்று, உதயசூரியனாய் உதித்தெழுந்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா, அந்த சித்திரைத் திருநாளான 14.04.1967 அன்று “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்ற பெயர்ப்பலகையை சென்னைக் கோட்டையின் முகப்பில் திறந்து வைத்தார். தொடர்ந்து, 18.07.1967 அன்று 'சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும்' என்ற அரசியல் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்தார் அறிஞர் அண்ணா. ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றத் தலைவர் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதலை அண்ணா பெற்ற பின்னர் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அண்ணாவின் குரலைத் தொடர்ந்து “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என மும்முறை முழங்கினர். “இத்தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தமிழர்க்கு – தமிழர் வரலாற்றுக்கு – தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என அறிவித்தார் முதல்வர் அண்ணாதுரை. பாராளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா பின்னர் (23.11.1968 அன்று) நிறைவேற்றப்பட்டது.
பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘கலைவாணர் அரங்கில்’ கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டு அது விழாவாக கொண்டாடப் பட்ட அன்று உடல்நலக் குறைவால் வாந்தியும் மயக்கமுமாகச் சோர்ந்திருந்தார் அண்ணா. மருத்துவர்கள் அந்த விழாவுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்க, கோபத்துடன், "என் தாய்நாட்டுக்கு பெயர் சூட்டும் இந்த நாளில் போகாமல் உயிருடன் இருப்பதைக் காட்டிலும் இறப்பதே மேல்!" என்றார். கலைவாணர் அரங்கில் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று தமிழ்நாடெங்கும் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா கொண்டாடப்பட்டது.
அந்த நாள் தாம் தமிழரென்றும், தாம் வாழும் நாடு தமிழ்நாடு என்றும் பெருமிதத்துடன் தமிழர் உலகத்திற்கு அறிவித்த நாளாக வரலாற்றில் இடம் பெற்றது.
தகவல் கொடுத்து உதவிய கட்டுரைகள்:
1. அறிஞர் அண்ணாதுரையின் பாராளுமன்ற உரை. உதவி: திராவிட பேரவை
2. தினத்தந்தி-வரலாற்றுச் சுவடுகள், தினத்தந்தி, இரண்டாம் பதிப்பு, 2010
3. ஆனந்தவிகடன்-காலப்பெட்டகம்: 1926 முதல் 2000 வரை... , விகடன் பிரசுரம் - 574, மூன்றாம் பதிப்பு, 2011
4. அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு, விகடன், 16/09/2015
5. தியாகி சங்கரலிங்கனார், பி.தயாளன், 2013.
நன்றி: FeTNA 2017
படம் உதவி: தி.மு.க. தளம்
______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com ______________________________________________________________________
themozhi@yahoo.com ______________________________________________________________________
No comments:
Post a Comment