Wednesday, October 28, 2020

டிக்..டிக்... திக்...திக்...

டிக்..டிக்... திக்...திக்... 

-- பாளை ப. இசக்கி ராஜன் 


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சாமானியர்  வீடுகளில் நேரம் பார்க்கக் கடிகாரங்கள் எல்லாம் கிடையாது. அதனால் ஊரின் மையமான பொது இடம் ஒன்றில் பெரிய வெண்கல மணி ஒன்றை நிறுவி இருப்பார்கள். அதன் மூலம் ஒலியை எழுப்பி, மக்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள வகை செய்திருந்தார்கள். அது எத்தனை முறை அடிக்கிறது என்பதை வைத்து,  பொதுமக்கள் நேரத்தைத் தெரிந்து கொண்டார்கள்.

கல்வி நிலையங்களில், தோசைக்கல் அளவிலான ஒரு பொருள் வெண்கலத்தில் இருக்கும். அதில் ஒரு இரும்புக் கம்பி கொண்டு ஓங்கி அடிப்பார்கள். அதில் வரும் ஒலி தான், வகுப்பு துவங்குவதற்கும், முடிவதற்குமான அறிவிப்பு. சில இடங்களில், பேருந்துச் சக்கரத்தின் மையப் பகுதியில் இருக்கும் இரும்பு பைதாவைத் தொங்க விட்டு அதைத் தட்டி ஒலி எழுப்புவார்கள். வேறு சில இடங்களில் ரயில் தண்டவாளத்தின் துண்டுகளைப் பயன் படுத்துவார்கள். வெண்கல மணி, தண்டவாளத் துண்டு எல்லாம் இப்போது முழுவதுமாக மறைந்து விட்டன. பல அளவுகளில் கைக் கடிகாரங்கள், சுவர்க் கடிகாரங்கள் இப்போது  வந்து விட்டன. 

அந்தக் காலத்தில் சுவர்க் கடிகாரம், (Wall clock), மேஜைக் கடிகாரம் (Table clock,) கைக்கடிகாரம், (Wrist watch) என்று பல வகைக் கடிகாரங்கள் இருந்தன. இவை இயங்குவதற்குச் சாவி கொடுக்க வேண்டும்.  இப்போது வருகின்ற சுவர்க்கடிகாரங்கள், Table Top கையடக்கக்  கடிகாரங்கள், பேட்டரி மூலம் இயங்குகின்றன. சுவர்க் கடிகாரத்தில் பெண்டுலம் என்று ஒரு தொங்கட்டான் உண்டு. அது வலது பக்கமும், இடது பக்கமும் சீராக அசைந்தாடும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு ஒலி ஒன்றை எழுப்பி நேரத்தைத் தெரிவிக்கும்.  நமக்குத் தேவைப்படும் நேரத்தில் ஒலி எழுப்பும் வகையில் மேஜைக் கடிகாரத்தில் ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் படிக்கின்றன காலத்தில், அதிகாலையில் எழுந்து படிப்பதற்காக இந்த வசதியைப்  பயன் படுத்தியிருக்கிறேன். 

சில நாட்கள் பல் வேறு காரணங்களுக்காக, அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இதற்காகக் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலி வரும் வகையில் மேஜைக் கடிகாரங்களில் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த மேஜைக் கடிகாரங்களைச் சிலர் Time piece என்று சொல்வார்கள். இப்போது கைபேசிகளிலும் குறிப்பிட்ட நேரத்தை நினைவூட்டும் வகையில் ஒலி எழுப்பும் வசதி உள்ளது. நான் படித்த பாளை தூய சவேரியார் பள்ளி ஆசிரியரும், என் வகுப்புத்தோழனுமான அனந்த கிருஷ்ணனின் அப்பா திரு H. ராமநாதன் ஐயா அவர்கள், வானத்தைப் பார்த்தே, நேரத்தைத் துல்லியமாகச் சொல்லி விடுவார். 

நள்ளிரவு, அமைதி சூழ்ந்துள்ள பொழுதில், இந்த கடிகாரங்கள் வினாடிக்கொருமுறை டிக் டிக் என்று ஓசை எழுப்பும். இந்த ஓசையைக் கேட்கும் போது மனது திக் திக் என்று துடிக்கும். தொழில் நுட்ப வளர்ச்சியினால், இப்போது கைபேசி, தொலைக் காட்சிப் பெட்டி, போன்று நிறைய  electronic பொருட்களும் நேரம் காட்டும் வேலையைச்  சிறப்பாகச் செய்து வருகின்றன. அவை GPS மூலம், நேரத்தைத்  துல்லியமாகக் காட்டி வருகின்றன. 

நாம் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், அந்த நாடுகளுக்கு உண்டான நேரத்திற்குத் தானாகவே மாறிக் கொள்ளும் வசதிகள் வந்து விட்டன. சில நாடுகளில் Daylight Savings Time முறை நடைமுறையில் இருக்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டின் NSW மாநிலத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய ஆறு மாத காலத்திற்கு நேரம் GMT + 10.00 Hrs என்ற கணக்கில் வரும். அக்டோபர் முதல் மார்ச் முடிய நேரம் GMT + 11 Hrs என்ற கணக்கில் வரும். ஏப்ரல் மற்றும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் கைபேசி போன்ற கருவிகளில் எலக்ட்ரானிக் கடிகாரம் தானாகவே பின்னோக்கிச் செல்வதையும் முன் நோக்கிச் செல்வதையும் கண்டு மகிழலாம். 

பொது இடங்களில் கடிகாரங்கள் வைத்து அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரங்கள், மணிக்கூண்டு என்ற பெயரில் இன்றைக்கும் அழைக்கப் பட்டு வருகின்றன. லண்டன் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 96 மீட்டர் உயரமுள்ள மணிக்கூண்டில், நான்கு பக்கங்களிலிருந்தும் தெரியும் வகையில் பெரிய கடிகாரங்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த கடிகாரத்தின் குறுக்களவு 7 மீட்டர் ஆகும். இந்த மணிக்கூண்டு 31-5-1859 ல் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில்  மணிக்கூண்டு என்று அழைக்கப்பட்டது. பிறகு  Big Ben என்று பெயர் மாறியது. 2012 ம் ஆண்டு முதல், இங்கிலாந்து பேரரசி யான எலிசபெத்தைப் போற்றும் வகையில், எலிசபெத் கோபுரம் என்று அழைக்கப் பட்டு வருகிறது. 
clocks.jpg
clocks2.jpg
எங்களது வீடு  பாளை சாந்தி நகரில் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் உள்ள சீவலப்பேரி சாலையில், திம்மராஜபுரம் விலக்கு வரும். அங்கு நல்ல உயரமான மணிக் கூண்டு ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த மணிக் கூண்டை அடையாளம் காட்டித்தான், எங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு வழி சொல்லவேண்டும்.இந்த மாதிரியான மணிக் கூண்டுகள் இப்போது, நேரத்தைச் சரியாகக் காட்டி உதவுகிறதோ இல்லையோ, வீடுகளுக்கு வழி காட்டி மக்களுக்கு உதவுகின்றன.
----Friday, October 23, 2020

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

-- பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்


நாகபடுவானில் பானைக்குள் வைத்து நாகப் பாம்பை வழிபட்டதற்கான மிகத் தொன்மையான  சான்றுகள்  கண்டுபிடிப்பு.

தென்னாசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது. நாகம் பூமிக்குள் இருந்து வந்து மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதால் ஆதிகால மக்கள் அவற்றை  மண் (பாம்பு) புற்றுக்குள் வைத்து வழிபட்டனர். இதற்கு மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்து வருவதே காரணமாகும்.  இதன் காரணமாகவே   வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகராக இருந்ததெனக் கூறப்படுகின்றது. 

இலங்கையின் பூர்வீக மக்களது வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையிலான மக்கள் இலங்கை வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனக் குறிப்பிடுகின்றன. ஆயினும்   இலங்கையின் மனித வரலாறும், நாகரிக வரலாறும் விஜயன் வருகையைத் தொடர்ந்து ஏற்பட்டது எனக் கூறும்   அறிஞர்கள் பலரும் பாளி இலக்கியங்கள் கூறும் இயக்கர், நாகரை மனிதப் பிறவிகள் அற்ற அமானுசராகவே எடுத்துக் கொள்ளுகின்றனர். ஆனால்  பேராசிரியர் சத்தமங்கல கருணாரத்தினா போன்ற அறிஞர்கள் விஜயன் வருவதற்கு  முன்னர் வாழ்ந்த நாகரை இலங்கையின்  தொன்மையான இனக்குழுக்களில் ஒன்று என்பதற்கு இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புழக்கத்திலிருந்த  கல்வெட்டுக்களில் வரும் நாககுலம் பற்றிய செய்திகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர். 

இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டளவில் விஜயன் தலைமையிலான வட இந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்னரே இலங்கையில் வளமான நாகரிக வரலாறு கி.மு.1000 ஆண்டிலிருந்து தோன்றி வளர்ந்தது பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரும் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் (பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள்) உறுதிப்படுத்துகின்றன. இலங்கையின் தொல்லியற் திணைக்களப் பணிப்பாளராக இருந்த  கலாநிதி சிறான்தெரணியகல இப்பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றார். இப்பண்பாட்டு மக்கள் தென்தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறும் பேராசிரியர் கா.இந்திரபாலா இந்த நாக இன மக்களின் ஒரு பிரிவினரே இற்றைக்கு 2500 ஆண்டளவில் தமிழ் மொழி பேசும் மக்களாக மாறினர் எனக் கூறுகின்றார்.

தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு பாம்புப் புற்று வழிபாடு இருந்ததற்கான சான்றாதாரங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆனால் இக்காலத்திற்கு முன் இருந்த  ஆதியிரும்புக் காலப்பண்பாட்டில் இவ்வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் வட இலங்கையில் அண்மையில் கட்டுக்கரை, நாகபடுவான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது ஆதியிரும்புக்கால மக்களிடையே இவ்வழிபாடு இருந்ததற்கான அதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து இலங்கைக்கு ஆதியிரும்புக் காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் என்பது உறுதியாகின்றது. அவற்றுள் நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட நாகத்தைப் பானையில் வைத்து வழிபடப்பட்ட மரபு வட இலங்கை மக்களிடையே நாக வழிபாடு தொன்மையானது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. 

இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட நாக வழிபாடு பற்றிய  சான்றுகள் சில தென்னாசியாவின் ஏனைய வட்டாரங்களில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இவ்விடத்தில்  நாகபடுவான் என்ற இடப்பெயரின் பழமை, அதன் பொருள் ஆய்வுக்கு உரியது. படுவம், படுவான் என்பவை பழமையான தமிழ்ச்சொற்கள். இப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாககுளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில்; அழைக்கப்படுகிறது எனலாம். 

கலாநிதி இரகுபதி இவ்விடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குலமரபாகக் கொண்ட மக்கள்  வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார். இவ்விடத்தில்  ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன் அதிக எண்ணிக்கையில்  சுடுமண்ணாலான நாகச் சின்னங்கள், பீடத்துடன் கூடிய நாக, நாகினி சிலைகள், சிற்பங்கள், நாக கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் ஆதியிரும்புக்காலப் பண்டு மக்கள் மதவழிபாட்டில் நாகத்தை தமது குலமரபுச் சின்னமாகக் கொண்டிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவற்றுள் நாகச் சிற்பத்தைப் பானையில் வைத்து வழிபடப்பட்டதற்கான சான்றுகள் தொல்லியல் அறிஞர்களுக்குப் புதிய அம்சமாகக் காணப்படுகின்றது.

இங்கு அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் குழிகளில் ஒன்றில் அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பெரிய பானை மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் பாம்பு வந்து போவதற்கான வாய்ப்பகுதியும், அதைச் சுற்றி மூடிய நிலையில் பாம்புப் புற்றை அடையாளப்படுத்தும்  நான்கு சிறு கலசங்களும் காணப்படுகின்றன.  பானைக்குள் இருந்த மண்ணை அகற்றிப் பார்த்த போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த அழகான நாகப் பாம்பின் சிலை பானையால் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. இப்பானையின் மூன்று திசைகளிலும்  தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அமர்ந்துள்ள தெய்வத்தின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது. நான்காவது திசையில் மண் சட்டிகளின் விளிப்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகப்பாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வட்டமாகக் காணப்படுகின்றது. 
இவ்வாதாரங்கள் பாம்புப் புற்று வழிபாடு தோன்றுவதற்கு முன்னோடியாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன்  தோன்றிய  தொன்மையான வழிபாட்டு மரபு எனக் கூறலாம். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் ஒன்றுக்கு மேற்பட்ட நாக வடிவங்கள் மண் சட்டிகளில் வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் சமகாலத்தில் நாக வழிபாட்டு ஆலயங்களில் நாகதோசம் நீங்க செப்பு அல்லது மண் பாத்திரங்களில் நாகப்பாம்பை வைத்து ஆலயங்களுக்குக் கொடுக்கும் மரபு ஆதியிரும்புக் காலத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றது.

பண்டுதொட்டு திருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள பிராந்தியம்  நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இப்பெயர்களே  கி.பி.13 ஆம் நூற்றாண்டுவரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15 ஆம் நூற்றாண்டில் யாழ்பாணயன் பட்டினம் என்ற பெயரும் தோன்றும்வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டிலிருந்து வந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 

பண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும் அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக் கூறப்பட்டு வந்ததற்குத்  தற்காலத்தில் வட இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு ஆதியிரும்புக்காலப்  பண்பாட்டை அறிமுகப்படுத்திய  நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததையே கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றது எனலாம்.


உன்னையே நீ எண்ணிப்பார்

உன்னையே நீ எண்ணிப்பார்

 -- ருத்ரா இ.பரமசிவன்


நம் மைல்கற்கள்
களைத்து விட்டனவோ?
இனி அந்த
குழியைத்தவிர வேறு
எதற்கும்
இனி நடப்பதற்கு மைல்கற்கள்
நடுவதற்கும் அவசியம் இல்லையோ?
மனித மலர்ச்சியின்
பயணம் இதற்குமேல்
நடைபோட இயலாமல்
மனிதம் தன்
சுவாசத்தையெல்லாம்
இழந்து விட்டதோ?
அதோ பாருங்கள்
முக கவசங்கள் மற்றும்
கவச உடைகளின்
உடைந்து போன
செயற்கை சுவாசக்கருவிகளின்
குப்பைமேடுகள் எல்லாம்
இமயமலைகளையும் விழுங்கி விடும்
உயரத்துக்குச்
சென்று விட்டனவே!
அஞ்சத்தேவையில்லை.
பயங்களை உதறி விடுங்கள்.
கொரோனாவுக்குள்
ஒரு ரகசிய சங்கீதத்தின்
சுருதி ஒன்று
மனிதனுக்கு
மெல்லிதாய் கேட்கத்தான்
செய்கிறது.
ஓ! மனிதா!
என்னை விடவும் கொடியதான‌
மூடத்தனத்தின் அரசியல்
உன்னை மூடிக்கிடக்கிறதே!
என்னால்
உன் கூட்டுக்குள்ளேயே
முடங்கிக்கிடந்தாவது
அந்த ஒளியை
அந்த ஒலியை
அந்த விஞ்ஞான நுட்பத்தை
நீ
புரிந்து கொள்ள முயலக்கூடாதா?
வானம் அளந்து
பிரபஞ்சங்களையெல்லாம்
உரித்துக்கொண்டு
கிளர்கின்ற அறிவின் ஒளி
உன் மீது
புதிய வெளிச்சத்தைப் படரவில்லையா?
பூஜை நைவேத்தியங்கள்
பக்தர்கள் இன்றி எளிமையாக‌
நடந்தன.
பிரம்மோற்சவங்கள் எல்லாம்
அப்படியே
பிரம்மங்கள் இன்றியே
இன்னும்
எளிமையாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஆம்.
கடவுள்கள் இன்றி
அவற்றின் பேரால் பொய்மை போற்றும்
சாதி மதங்கள் இன்றி
காழ்ப்புகள் கழன்று
இந்த உலகம் எளிமையாகச்
சுழன்று கொண்டிருக்கிறது.
மனிதா!
உன் மூளையை எல்லாம்
கழற்றி
கொரோனாவாய் ஆகிய
இந்த அடகுக்காரனிடம்
கொடுத்துவைத்திருக்கிறாய்.
ஏதோ ஹெல்மெட்டைக் கழற்றி
கொடுத்து வைத்திருப்பது போல.
போதும்!
நீ பயந்து பயந்து செத்தது.
எப்போது
உன் உயிர்களை
சிந்தனையால் சாகடிக்கவே முடியாத‌
உன் அறிவின் செல்களை
இந்த "அடகிலிருந்து" மீட்டுக்கொள்ளப்போகிறாய்?
இதற்கு
அசலும் வேண்டாம் வட்டியும் வேண்டாம்.
"உன்னையே நீ எண்ணிப்பார்"
உன் சமுதாயத்தையே நீ எண்ணிப்பார்"
அது போதும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், அரசு மற்றும் மக்களின் உரிமைகளும் கடமைகளும்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், அரசு மற்றும் மக்களின் உரிமைகளும் கடமைகளும்

--- சொல்லாக்கியன்    


உலகின் ஒவ்வொரு நாட்டுக் குடிமகனும், அந்தந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில், எல்லா சட்டங்களின் ஊற்றுக்கண்ணாகவும் அரசியல் அமைப்புச் சட்டமே திகழ்கின்றது. ஒரு நாடு நல்ல வழியில் செல்கின்றதா அல்லது தீய வழியில் செல்கின்றதா என்பதை உரசிப்பார்க்கும் கல்லாகவும் அரசியல் அமைப்புச் சட்டம் நிலவுகின்றது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரத்தைச் சுருக்கமாகக் காண்பதற்குமுன், அதன் பின்புலத்தையும் சிறிது காண்போம். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், உலகில் உள்ள எல்லா நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களைக் காட்டிலும், மிகவும் அருமையான சட்ட ஆவணம் ஆகும். ஏனெனில், இதை உருவாக்கியவர்களில் பலரும் சட்ட மேதைகள், உலக வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், புதிய சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கத் துடித்தவர்கள். பி. என். ராவ், ராஜேந்திர பிரசாத், பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, சரோஜினி  நாயுடு, அன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், அம்ரித் கவுர், விஜயலக்ஷ்மி பண்டிட் போன்றவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். உலகத்திலேயே மிகவும் அற்புதமான நாடாக இந்தியாவைக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் இன்பக்கனவைக் கண்டதனால், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், அயர்லாந்து என, உலகில் உள்ள பல அரசியல் அமைப்புச் சட்டங்களின் நல்ல பண்புகளை எல்லாம் ஒன்று சேர்த்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அதன் இறுதி வடிவில் உலகச் சட்டவரலாற்றின் ஒளிமிக்க சிகரம் எனலாம். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னோட்டம் (Preamble):  
சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பண்புகளாகும். பொது நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  ஆகியவை, அதன் இலக்குகளாகும் என்று முன்னோட்டம் (Preamble) குறிப்பிடுகின்றது. 

இந்திய அரசின் கொள்கைக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles of State Policy): 
முன்னோட்டத்தை மேலும் விளக்கும் வகையில், இந்நெறிமுறைகள் அமைந்துள்ளன. 
இவை, அயர்லாந்து அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டன. டாக்டர். அம்பேத்கர், இவற்றை, இந்திய அரசியலமைப்பின் “புதுவகையான முக்கியத்துவம்” என குறிப்பிடுகிறார்.

அரசாங்கமானது, மக்கள் நலனிற்காக கொள்கைகளை வகுக்கும் போதும், சட்டங்களைச் செயல்படுத்தும் போதும், நெறிமுறையின் இலட்சியங்களை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட வேண்டும் என்பது அரசியலமைப்பின் அறிவுறுத்தலாகும் மற்றும் நாட்டின் சட்டமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய அங்கங்களுக்கும் பரிந்துரைப்பதாகும். 

1. இந்தியா, ஒரு நல அரசு (Welfare State): ஒரு மக்கள் நல அரசு, வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் செல்வத்தைச் சமச்சீரான முறையில் விநியோகிப்பது ஆகிய கொள்கைகளின் அடித்தளத்தில் அமைந்தது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், இந்திய நாட்டின், வரலாற்றின்  அநீதி, அடிமைத்தனம், சமமின்மை, போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான, இந்தியா ஒரு மக்கள் நல அரசாக விளங்க வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

2.  சோசலிசம்: பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டி, நியாயமான சமூக அமைப்பை உருவாக்க வேண்டிய கடமையை, அரசுக்கு இது சுமத்துகிறது. மக்கள் அனைவருக்கும், சமூக பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க முயல வேண்டும் என்று, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் வாசகம் 38 கூறுகின்றது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்தல் (வாசகம் 39 d )
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதன் மூலம் சமமான நீதி முறையை ஏற்படுத்துவது (வாசகம் 39 A) 
மனிதாபிமான வேலைச்சூழல் அமைய, பேறுகாலச் சலுகை கிடைக்கும் வகை. (வாசகம் 42)
ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தையும் பொது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது அரசின் கடமை. (வாசகம் 47)

3. காந்தீயம்: கிராமப் பஞ்சாயத்துக்களை அமைத்தல். (வாசகம் 40)
கிராமப் புறங்களில் தனிநபர் அல்லது கூட்டுறவு முறையில் குடிசைத் தொழில்களை மேம்படுத்துதல். (வாசகம் 43)
உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு செய்யக்கூடிய மதுவகை மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் தடுத்தல். (வாசகம் 47)
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை, அறிவியல் வகைகளில், அரசு அமைத்தல்.  பசுவதையைத் தடுத்தல். கன்றுகள் மற்றும் பால் தரும் பசுக்கள் தீவனம் இன்றி வாடும் கால்நடைகளின் நலன்களைப் பேணுதல்.  (வாசகம் 48)

4. சமத்துவம்: நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வருதல். (வாசகம் 44)
ஆறு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியளிப்பது. (வாசகம் 45)
நலிவடைந்த பிரிவினரின், குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடிகள் ஆகியோரின், கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்புக் கவனம் கொண்டு அரசு வளர்க்க வேண்டும். (வாசகம் 46)
நிர்வாகத்திலிருந்து நீதித்துறையைப் பிரித்தல். (சரத்து 50)

வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பின் தத்துவார்த்தமான பகுதிகள் மற்றும் ஆன்மா நிறைந்த பகுதிகளாகும். நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என கிரான்வில்லி ஆஸ்டின் (Granville Austin) குறிப்பிடுகிறார். 

அடிப்படை உரிமைகள்: அடிப்படை உரிமைகளுக்கு, இந்திய அரசியலமைப்பின் பகுதி – III ல், வாசகம் 12 முதல் 35 வரை, உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பகுதி – III, இந்தியாவின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுகிறது.  இங்கிலாந்தில், வரலாற்றின் முதன் முறையாக 1215 – ல், அரசரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டதும், பிரபுக்கள் மற்றும் சாதாரண மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டதும், இந்த மகா சாசனம் மூலம்தான்.  

வாசகம் 12 – ன்படி, “அரசு” என்ற சொல்லில், பின்வருவன அடங்கும்:
(1) இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்; மற்றும்
(2) ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்; மற்றும்
(3) இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள் அல்லது பிற அதிகார அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள், நீதிபதிகள் ஆகிய யாவரும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே இயங்கவும், அதைக் காக்கவும்,  கடமைப்பட்டவர்கள். 

வாசகம் 13(2) –  குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவோ அல்லது மீறுவதாகவோ அரசு எந்தச் சட்டத்தையும் இயற்றக் கூடாது மற்றும் இந்நிபந்தனைக்கு முரணாகச் சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது அம்முரண்பாடு அளவிற்கு இல்லாநிலையதாக ஆக்கப்படும்.

சமத்துவ உரிமைகள் (வாசகம் 14 முதல் 18 வரை):
வாசகம் 14 –  சட்டத்தின் முன் அனைவரும் சமம். அனைவருக்கும் சமத்துவ சட்டப் பாதுகாப்பு. 

வாசகம் 15 – மதம், இனம், சாதி, பால், இடம் அல்லது பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பாரபட்சம் காட்டக்கூடாது. 

வாசகம் 16 –  அரசின்  வேலைவாய்ப்புகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு,

வாசகம் 17 –  தீண்டாமை ஒழிக்கப்படுகின்றது. தீண்டாமையின் எல்லாவகையான  நடைமுறையும் தடைசெய்யப்படுகின்றது    . தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர் எவராயினும், சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.

சுதந்திர உரிமைகள் (வாசகம் 19 முதல் 22 வரை): 
வாசகம் 19:
1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம், 
2. ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம், 
3. கழகங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம், 
4. இந்தியா முழுவதும் சென்று வர சுதந்திரம், 
5. இந்தியாவிற்குள் எப்பகுதியிலும் தங்கி வாழும் உரிமை, 
6. எந்த தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தைச் செய்யவும் சுதந்திரம்.

வாசகம் 20: 
எந்த ஒரு நபரும் தனக்கு எதிராகவே சாட்சியம், வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தக்கூடாது.

வாசகம் 21: 
எந்த நபரின் வாழ்க்கையையும் அல்லது தனி நபர் சுதந்திரத்தையும், சட்டத்தின்  நடைமுறைகளால் தவிர, பிற வழிகளில் பறிக்கக் கூடாது.
குழந்தைப்பருவத்தின் பாதுகாப்பிற்கான உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சுழலுக்கான உரிமை, மனித கௌரவத்திற்கான உரிமை போன்ற உரிமைகள் மீறப்படும் போது, பிரிவு 21-ன் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாக வேண்டுமென்று ஏராளமான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வாசகம் 22: 
கைது செய்வதற்குண்டான காரணங்களை எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
தன் சார்பாக வாதாட, ஒரு வழக்கறிஞரை, தன் விருப்பப்படி கைது செய்யப்பட்டவர் அமர்த்திக் கொள்ளலாம்.
கைது செய்யப்பட்ட நபரை, அவர் கைதான நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள், குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன், முன்னிலைப்படுத்த வேண்டும்.

சுரண்டலுக்கு எதிரான உரிமை வாசகம் 23 முதல் 24 வரை:
வாசகம் 23: 
மனித இழிதொழில் வாணிகமும், ஊதியமற்ற கட்டாய உழைப்பு முறை மற்றும் இது போன்ற பிற வலுக்கட்டாய உழைப்பு முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இத்தடையை மீறி அவ்வாறு ஏதேனும் செய்யப்படுமானால், அது தண்டிக்கத்தக்கக் குற்றச் செயலாகும்.

வாசகம் 24:
14 வயதிற்குப்பட்ட குழந்தைகளை யாரும், தொழிற்சாலையிலோ அல்லது சுரங்கத்திலோ பணிக்கு அமர்த்தக் கூடாது. மேலும் பிற அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
 
சமய சுதந்திர உரிமை வாசகம் 25 முதல் 28 வரை:
வாசகம் 25:
பொது அமைதி, ஒழுங்கு, சுகாதாரம், அறநெறி ஆகியவற்றுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் உட்பட்டு எல்லோரும் தங்கள் உளநெறிக்கு உகந்ததாகப்படும் சமய நம்பிக்கையைக் கொள்ளவும், சுதந்திரமாக அதனைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு அதன் உண்மையை உணர்த்திப் பரப்பவும், அரசியல் சட்ட உரிமையைப் பெற்றிருக்கின்றார்கள்.

வாசகம் 26:
அரசியலமைப்புச் சட்டத்தின் பொது அமைதி, ஒழுங்கு, அறநெறி, சுகாதாரம் ஆகியவற்றின் நலனுக்குட்பட்டு,
1. ஒவ்வொரு சமயரும் அதற்குரிய அற நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்.
2. சமய சம்பந்தமான விஷயங்களில் தனது சொந்த விவகாரங்களைத் தானே மேலாண்மை செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்.
3. அசையும் சொத்துக்களையும், அசையாச் சொத்துக்களையும் சேர்த்துக் கொள்ளவும், உரிமையாக்கிக் கொள்ளவும் உரிமை பெற்றுள்ளார்.
4. அவ்வாறு சேர்ந்து சமயக் கூடங்களுக்கு உரிமையாக்கிக் கொண்ட சொத்துக்களைச் சட்டங்கள் கூறும் முறையில் நிர்வகித்துக் கொள்ளவும், உரிமை பெற்றிருக்கின்றது என்று அரசியலமைப்புச் சட்டம் விளம்புகிறது.

வாசகம் 27:
எச்சமயத்திற்கும் அல்லது அதன் உட்பிரிவிற்கும் வரி விதித்து, அவ்வரியின் வருவாயைச் சமய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் செலவு செய்யும் நோக்கத்துடன் எந்த ஒரு குடிமகனும் வரிப்பணம் கட்ட வேண்டுமென்று வற்புறுத்தக் கூடாது என்று கூறுகின்றது.

வாசகம் 28:
அரசின் நிதி உதவிகளை முழுமையாகப் பெற்று, கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில், சமய போதனை செய்வது தடுக்கப்படுகிறது.
அரசின் நிதி உதவியைப் பெறாமல் கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்படவில்லை.
மேலும், பள்ளிக் குழந்தைகளைக் கட்டாய மத போதனைகளைக் கேட்க வேண்டுமென்று கட்டாயப் படுத்தக் கூடாது.

கலாச்சார மற்றும் கல்வி வாசகம் 29 முதல் 30 வரை:
வாசகம் 29:
(i) இந்தியாவில் எப்பகுதியில் வாழ்பவராக இருப்பினும், தனி மொழி ஒன்றை அல்லது எழுத்து முறையை அல்லது தனிக் கலாச்சாரம் ஒன்றைப் பெற்றிருக்கும் சமூகத்தினர் அம்மொழி, எழுத்து வடிவம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியலமைப்பு சட்ட உரிமையைப் பெற்றுள்ளார்கள்.
(ii) அரசுக் கல்விக் கூடங்களிலும் அல்லது அரசின் உதவி பெற்று நடத்தப்படுகின்ற கல்வியியல் சாலைகளிலும், எந்தவொரு குடிமகனுக்கும், சமயம், இனம், சாதி, மொழி அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றினால், கல்வி பெறும் வாய்ப்பை மறுக்க முடியாது.

வாசகம் 30:
மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறுபான்மையினராக உள்ள எல்லாரும், தங்கள் விருப்பப்படி கல்விக் கூடங்களை ஏற்படுத்தி அவற்றை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய முதல் உரிமையை வழங்குகிறது.

உரிமைகளைக் காப்பதில், அரசியலமைப்பு வாயிலான தீர்வு:
வாசகம் 32 (வாசகம் 226 – உயர்நீதிமன்றம்):
அடிப்படை உரிமைகளால் பாதிக்கப்பட்ட நபர், அரசியலமைப்பு மூலம் தீர்வு பெறலாம். பாதிக்கப்பட்ட நபர் நேராக உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்பதே, ஒரு அடிப்படை உரிமையாகும். ஏனெனில் அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்கவும், உரிமை மீறலைத் தவிர்க்கவும், உரிமையை நிலைநாட்டவும், இவ்வாசகம் வகை செய்கிறது.
எனவே, இந்த வாசகத்தை ஒரு போதும் செயலிழக்கச் செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடியாது. மேலும், “இந்த அரசியலமைப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஏதாவது ஒரு குறிப்பிட்ட வாசகத்தின் பெயரைக் கூறும்படி என்னிடம் கேட்கப்பட்டால்,  இவ்வாசகம் இல்லாமல் இருப்பின், அரசியலமைப்பே செல்லாத ஒன்றாகக் கூடிய இவ்வாசகத்தினைத் தவிர, வேறு எந்த வாசகத்தையும் நான் குறிப்பிடமாட்டேன். இது, அரசியலமைப்பின் இருதயம், ஆன்மா ஆகும்” என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படின், உச்ச நீதிமன்றம் எவ்வகையான நீதிப்பேராணை அல்லது உத்தரவுகளைப் பிறப்பிக்குமோ, அவற்றை, வாசகம்  226-ன்படி, உயர்நீதிமன்றமும் பிறப்பிக்கலாம்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை பிறப்பிக்கும் அதிகாரமானது, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விடப் பரந்தது, என வாசகம் 226 கூறுகிறது.
ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால் தான், வாசகம் 32-ன்படி உச்ச நீதிமன்றம் ஆணை பிறக்கும். ஆனால், அடிப்படை உரிமையின்றி சாதாரண உரிமைகள் மீறப்பட்டாலும், உயர்நீதிமன்றம் அவ்வாணையைப் பிறப்பிக்கும்.
1. ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை (Habeas Corpus): சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிறைபிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்கும்.
2. செயலுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus): பொதுக் கடமையான ஒரு செயலை, ஓர் அதிகாரி அல்லது கூட்டமைப்பு அல்லது கீழ் நீதிமன்றம் செய்யத் தவறினால், அக்கடமையைச் செய்விக்கும். 
3. நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை (Certiorari): நீதிமுறை சார்ந்த அலுவல்களைச் செய்யும் தீர்ப்பாயங்கள், அதிகாரிகள், தம் அதிகாரவரம்பை மீறிச் செயல்பட்டாலோ, அறமுறைக்கு மாறாக நடவடிக்கை எடுத்தாலோ, அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கம் செய்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தமக்கு அனுப்புமாறு நீதிமன்றம் ஆணையிடும். 
4. தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition): கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பை மீறி அல்லது சட்ட முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அவை மேற்கொண்டு நடத்தாமல் தடைசெய்யும். 
5. தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo Warranto) : பொது அதிகாரப் பதவியில் உள்ளவர், எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவி, பதில் கூற ஆணையிடும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும், பிரெஞ்சுப் புரட்சி, உலக மக்களுக்கு அளித்த பெருங்கொடைகள்.  இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில், சமத்துவம் என்பதற்கு முதன்மை தரப்பட்டுள்ளது. காரணம், பல்லாண்டு காலமாய் இந்தியாவில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளே. 

எளியதை வலியது அடக்குவதும், எளியதிடமிருந்து வலியது பறிப்பதும் விலங்குலகில் மட்டுமல்ல, மனித சமுதாயத்தின்  நெடிய வரலாற்றில், இன்றும் நிகழ்ந்து கொண்டேதான்  உள்ளது. இனிவரும் காலங்களிலும்,  வெவ்வேறு வடிவங்களில், அவற்றைத் தொடர முயன்று கொண்டேதான்  இருக்கும். மக்களின்  தொடர்ச்சியான  விழிப்புணர்வாலும், உரிமைகளுக்கான  போராட்டங்களாலும் மட்டுமே, அம்முயற்சிகளைத் தடுக்க முடியும்.

அடிப்படைக் கடமைகள் (வாசகம் – 51 A)
• அரசியலமைப்புக்குக் கீழ்ப்படிந்து, அதன் நோக்கங்களையும், நிறுவனங்களையும் மதிப்பதுடன் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் மதித்து நடத்தல்;
• நமது சுதந்திரப் போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உன்னதமான நோக்கங்களைப் பேணிக்காத்துப் பின்பற்றி நடத்தல்;
• இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிக்காத்தல்;
• நாட்டைக் காப்பதுடன், தேவையானபோது, நாட்டு நலப்பணிகளையும் செய்தல்;
• சமய, மொழி, வட்டார, பிரிவினை வேறுபாடுகளை எல்லாம் கடந்து, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதர உணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தல்; பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கின்ற செயல்களை விட்டொழித்தல்;
• பல்வேறு கூறுகளுடைய நமது பண்பாட்டின் வளமான பாரம்பரியத்தை மதித்துப் போற்றிக் காத்தல்;
• காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை மேம்படுத்திப் பாதுகாத்தல், உயிரினங்களிடையே பரிவுடன் இருத்தல்;
• அறிவியல் மனப்பாங்கு, மனிதாபிமானம், ஆராய்ச்சி உணர்வு, சீர்திருத்த மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்தல்;
• பொதுச் சொத்தைப் பாதுகாத்தல்; வன்முறையை விட்டொழித்தல்;
• தொடர்ச்சியாக நம் நாடு தன்னுடைய முயற்சியில் பல முன்னேற்றங்களைக் காணவும், சாதனைகளைப் படைக்கவும் தனிமனித மற்றும் கூட்டு முயற்சிகள் அனைத்திலும் திறமையை வளர்க்கப் பாடுபடுதல்;
• 14 – வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர்களும், காப்பாளர்களும் வழங்கவேண்டும் என்கிறது. 
இந்த கடமைகள், 2002-ம் ஆண்டு 86-வது சட்டத்திருத்தம் வாயிலாகச் சேர்க்கப்பட்டது. இவையாவும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் (வாசகம் 368):
அரசியலமைப்பையும் அதன் செயல்முறைகளையும் திருத்துவதற்கான அதிகாரத்தை, பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது. பாராளுமன்றமானது அரசியலமைப்பினைத் திருத்தி புதிய பகுதிகளைச் சேர்க்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது நீக்கவோ முடியும். ஆனால், இதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே செய்ய வேண்டும். எனினும், பாராளுமன்றமானது, அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பை மீறி திருத்தம் செய்யக்கூடாது.

நெருக்கடி நிலை (வாசகம் 352):
இந்தியா முழுமைக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்கோ, போர் அல்லது அன்னிய ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கலகத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துவார்.

கூட்டாட்சி (Federation):
ஒப்பந்தம் என்று பொருள்படும் இலத்தீனிய ‘போடஸ் (Foedus)’ என்ற சொல்லிலிருந்து கூட்டாட்சி என்ற சொல் ஏற்பட்டது. இதற்கு, கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயும் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொருள். தேசிய ஒற்றுமையோடு, மாநில உரிமைகளையும் பாதுகாக்க அமைக்கப்படும் அரசாங்க முறையே, கூட்டாட்சி. ஒற்றையாட்சி முறையில், மத்திய அரசாங்கம் தீட்டும் சட்டங்களை, எல்லா மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவின் அரசியல் சட்டம் என்பது எழுத்துப் பூர்வமான ஓர் ஆவணம்; மேலும் உலகிலேயே மிக அதிகபட்ச விரிவுடைய அரசியல் சட்டமும் இதுதான். அரசியல் சட்டத்தின் உச்சநிலையை இது நிறுவியுள்ளது. காரணம், மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டுமே, தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட களங்களில், சுதந்திரமாகச் செயல்படுவதற்குரிய அதிகாரங்களை, அரசியல் சட்டம் விளக்கமாக அளித்துள்ளது.

வாசகம் 343: 
இந்தியை அலுவல் மொழியாகக் குறிக்கின்றது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இந்தித்திணிப்பை எதிர்க்கின்றன. ஏற்கனவே, இந்தியால் பல மொழிகள் அழிந்துவிட்டன. பாகிஸ்தானில், உருது தேசிய மொழியாய் இருக்கும் போதிலும், உருதும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக உள்ளன. ஏனெனில், அங்கும், உருதுவைத் தவிர, பஞ்சாபி, சராய்கி, பாஷ்டோ, சிந்தி, பலுச்சி, குஜாரி, காஷ்மீரி, இந்த்கோ, பிராஉயி, ஷீனா, பால்டி, கோவார், தத்கி, அர்யான்வி, மார்வாரி, வாகி, புருஷாகி எனப் பல மொழிகள் பேசப்படுகின்றன. எனவே,  இந்த வாசகத்தை வரலாற்றுப் பூர்வமாக ஆராய்ந்து, திருத்தம் கொண்டுவர வேண்டியது எதிர்கால அவசியமாகும்.  

அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூன்று பட்டியல்கள் (வாசகம் 246): 
மத்திய, மாநில மற்றும் பொதுப்பட்டியல்கள். மத்திய அரசின் பட்டியலில், பாதுகாப்பு, இரயில்வேக்கள், தபால் மற்றும் தந்தி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 97 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 
மாநிலப் பட்டியலில், பொதுச் சுகாதாரம், காவல் போன்ற உள்ளூர் நலன் சார்ந்த 66 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 
மின்சாரம், தொழிற்சங்கம், பொருளாதார மற்றும் சமூக திட்டமிடல் போன்ற 47 அம்சங்கள், மத்திய மற்றும் மாநிலம் ஆகிய இருதரப்புக்குமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற வகையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஆனால், இன்றைய சூழலில், மாநிலங்களின் நலன்களை விலையாகக் கொண்டு, மையத்திற்குச் சாதகமான விதத்தில், ஒரு சாய்வுப் போக்கு நிலவுகிறது.
மத்திய அரசுடன், மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் மாநிலங்கள் பணியாற்றியாக வேண்டும் எனும் கட்டாயம் நிலவுகின்றது. 
இந்திய அரசியல் சட்டம், தனது வடிவத்தில் கூட்டாட்சித் தன்மையுடனும், உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சித் தன்மையுடனுமே அமைந்திருக்கிறது.

வாசகம் 370:
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு நிலை வழங்கி இருந்தது. 
அதன்படி இந்திய அரசியலமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களும் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருந்தாது.
இந்தியாவிலேயே இந்த மாநிலத்திற்கு மட்டும் தான் தனியாக “ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு” எனும் மாநில அரசியல் அமைப்பு இருந்தது.
இவ்வாசகம் அகற்றப்பட்டதால், இன்றைய நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பொருந்தும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தன்னாட்சி அமைப்புகள்:
வாசகம் 324: தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி அமைப்பாகும். eci.gov.in/
வாசகம் 280: நிதி ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். https://fincomindia.nic.in/ShowContentOne.aspx?id=3&Section=1
வாசகம் 315: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி அமைப்பாகும். https://www.upsc.gov.in/about-us/commission-
வாசகம் 148: இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத்தலைவரை, குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். https://cag.gov.in/
வாசகம் 338: தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்.
வாசகம் 338A: பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்.http://www.ncsc.nic.in/pages/display/12-whos-who
வாசகம் 76: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரைக் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

தன்னாட்சி அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை என்றால், மக்களின்  சுதந்திரமும் பறிபோகும், எதேச்சதிகாரம் மட்டுமே மிஞ்சும் என்பது வரலாற்றுப்பாடம். 
அரசியலமைப்புச்சாரா அமைப்புகள்:
1. திட்டக்குழு
2. தேசிய வளர்ச்சிக் குழு
3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் https://hrcnet.nic.in/HRCNet/public/Home.aspx
4. மத்திய கண்காணிப்பு ஆணையம் http://portal.cvc.gov.in/cvproject/
5. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா http://lokpal.gov.in/ 
6. நிதி ஆயோக் https://niti.gov.in/

இறுதியாக, 2005 – ஆம் ஆண்டின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’, மிகவும் முக்கியமான  சட்டமாகும். குடிமக்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவது அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையையும் - பொறுப்பேற்றுக் கொள்ளுதலையும் முன்னெடுத்துச் செல்வது,  ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் நமது ஜனநாயகத்தை, மக்களுக்காகப் பணி செய்வதை அதனுடைய உண்மையான அர்த்தத்தில் மேற்கொள்ளுமாறு செய்வது - ஆகியவையே தகவலறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.

பணியைச் சோதித்தறிவது, ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசோதிப்பது, அத்தகைய ஆவணங்களையும், பதிவேடுகளையும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளாகப் பெறுவது, அவற்றின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் பெறுவது, அவற்றிலிருந்து குறிப்புகள் எடுப்பது, மற்றும் பொது அதிகார அமைப்பு அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சான்றாதாரங்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுவது போன்ற இவையனைத்துமே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்குவனவாம். 

தகவல் அறியும் உரிமையை இச்சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ள உரிமைக்குச் சமமான விதத்தில் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது.
ஒரு பொது அதிகார அமைப்பிடமிருந்து, ஏதேனும் ஒரு தகவல் கோருகிற ஒரு நபர், தனது விண்ணப்பத்துடன் ரூ.10 (ரூபாய் பத்து) மதிப்புள்ள இந்திய அஞ்சலக ஆணை அல்லது வங்கி காசோலை அல்லது வங்கி கேட்போலை – ஒன்றை, அப்போது அதிகார அமைப்பின் கணக்கு அலுவலருக்கு வழங்கப்படும் வகையில், தகவல் கோருவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகச் சேர்த்து அனுப்ப வேண்டும்.
சாதாரணமான நடைமுறைப்படி, பொது அதிகார அமைப்பினால் விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் ஒரு விண்ணப்பதாரருக்கு அவர் கோரும் தகவல் அளிக்கப்பட வேண்டும். அத்தகவல் ஒரு குறிப்பிட்ட நபரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருக்கும் பட்சத்தில், 48 மணி நேர அவகாசத்திற்குள், அவ்வாறு கோரப்படும் தகவல் வழங்கப்பட்டுவிட வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அதன் வடிவத்திலும், சாரத்திலும் மிகவும் உன்னதமான படைப்பாகும். கூடவே, தகவல் அறியும் உரிமைச் சட்டமும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மிகவும் உறுதுணையானதாகும்.
ஆனால், எந்த அழகிய வண்ணமாலையும், யார் கையில் இருக்கின்றது என்பதைப் பொறுத்தே, அது அணியப்படும் அல்லது குதறப்படும். 
ஊடகமும், நீதிமன்றங்களும் சுதந்திரம் இழந்து கையறுநிலையில் இருக்கும்போது, அரசியல் அமைப்புச் சட்டம் தவறான கைகளில் இருப்பின், அது, தொடர்ந்து அவ்வாறு இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது, மக்களின் கடமையாகும். 
மக்களே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் இறுதிக் காவலர்கள். 

மேலும், ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரம், இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ஐ அடிப்படையாய் கொண்டதாகும். முதலில், அது ஆங்கிலேயரின் நலன்களையும், பின்பு, மேலாதிக்கத்தினரின் உள்நோக்கங்களையும் கொண்டதாக இருந்தது. என்னதான், அம்பேத்கரோ பிறரோ திருத்த முயன்றாலும், சில நுணுக்கமான எதிர்மறை அம்சங்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், கண்களுக்குப் புலனாகாமல் மறைந்துள்ளன. ஆழமாய் ஆய்ந்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டியது, எதிர்கால சந்ததியின் கடமையாகும். அதற்கான ஆய்வுகளைத் தொடரவேண்டியது இளைய சமுதாயத்தின் உடனடி பணியாகும். 

Thursday, October 15, 2020

தலையங்கம்: கடிகையால் கவனயீர்ப்புக்கு உள்ளாகும் கல்வி மற்றும் ஆய்வுப் புலங்கள்

தலையங்கம்: கடிகையால்  கவனயீர்ப்புக்கு  உள்ளாகும் கல்வி மற்றும் ஆய்வுப் புலங்கள்

- முனைவர்.க.சுபாஷிணி

வணக்கம்.

மின்தமிழ் மேடை காலாண்டிதழின் வழி  உலகத் தமிழர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா பெருந்தொற்று பல்வேறு சங்கடங்களை உலகளாவிய வகையில் ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில் தொய்வின்றி இணைய வழியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பல்வேறு நடவடிக்கைகளின் வழியாகத் தமிழ் வரலாற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நாம், சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளையும் கவனிக்க மறப்பதில்லை என்பதற்குச் சான்றாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகள் திகழ்கின்றன.

கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தியிருக்கின்றோம். அவை தமிழர் வரலாறு, பண்பாட்டியல், மொழி தொடர்பான ஆய்வுகள் என்ற ரீதியில் மிகுந்த  முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.   

`கடிகை` தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் தெற்கு தூர கிழக்காசியவியல் நடுவம் -(Institute of South and East Asian studies ISEAS) என்ற தனித்துறை கிழக்காசியவியல் மற்றும் தூரக் கிழக்காசியவியல் ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன் 8.8.2020 அன்று தொடங்கப்பட்டது.

நகரங்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை கடந்த 3 ஆண்டுகளாக `டிஜிட்டல் மெட்ராஸ்` என்ற சிறப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகின்றோம். இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நிகழ்வாக 22-23 ஆகஸ்ட் மாதம் இரு நாட்கள் காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளைத் தாங்கி இந்த இரண்டு நாட்கள் நிகழ்வு  நடைபெற்றது. இந்த நிகழ்வின் அனைத்து காணொளிப் பதிவுகளையும் டிஜிட்டல் மெட்ராஸ் வலைப் பக்கத்தில் www.digital-madras.tamilheritage.org காணலாம்.

நமது பயணத்தில் நாம் 20ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். 2001 ஆகஸ்ட் 27 ஆம் தேதி தமிழ் மரபு காப்பு என்ற குறிக்கோளுடன் பணியாற்றத் தொடங்கிய நமது அரசு சாரா தொண்டு நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை, கடந்த 19 ஆண்டுகளில்  பன்னாட்டு அறக்கட்டளை நிறுவனமாக விரிந்து பல தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆதரவுடன் தொடர்ந்து பற்பல பணிகளில்  மனநிறைவுடன் பயணிக்கின்றது .  (2001லிருந்து 2020 வரை கடந்து வந்த பாதை விழியப் பதிவு வெளியீட்டைக் காணலாம் https://youtu.be/cK44QcuMod4 )

 உலகளாவிய நீண்டகால கடல் பயண அனுபவங்களைக் கொண்ட மூத்த வரலாற்றாய்வாளர்  `கடலோடி` நரசையாவின் அனுபவப் பகிர்வாக ஐந்து நாட்கள் `கடலோடி நரசையா உடன் கடல் ஆடுவோம்!` என்ற தலைப்பில் 5 நாட்கள் தொடற் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

`சங்கம் பீடியா` - இணையம் வழி  சங்கத்தமிழ் ஆய்வுகளின் தொகுப்பாக ஒரு சிறப்புப் பக்கம் தமிழ் மரபு அறக்கட்டளையின் புதிய திட்டமாக செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பேராசிரியர் முனைவர் பாண்டியராஜா அவர்களின் நீண்டகால முயற்சியான சங்கச்சோலை, சங்கத்தமிழ் தொடரடைவு, சங்கச்சொற்களஞ்சியம் ஆகிய வலைப்பக்கங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் அடங்கிய பக்கமாக விளங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டு வருகின்றது.

 நல்லாசிரியர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நிகழ்த்தியது.

 இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதும், பசுமையை நேசிக்கும் பண்பை இளையோரிடம் கொண்டு சேர்க்க வேண்டியதும் நமது முக்கிய கடமை என்ற நோக்கத்துடன் மதுரை மாவட்டத்தில் உள்ள சங்கரலிங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி  மாணவர்கள் முயற்சியில் அக்கிராமத்தில் 600 பனை விதைகளை நடும் நிகழ்வும் முருங்கை மரங்களை நடும் நிகழ்வும் செப்டம்பர் 23ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது.

வரலாற்று ஆய்வுகளில் அதிகம் கவனம் பெறாத துறையாக நெய்தல் நில ஆய்வுகள் அமைந்துவிடுகின்றன.   தனித்துவத்தைக் கொண்டிருக்கின்ற இந்தத் துறையில் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இரண்டு நாள் சிறப்பு நிகழ்ச்சியாக `நெய்தல் நில பண்பாட்டு ஆய்வுகள்` என்ற பொருண்மையில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களது உரை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் என்ற வகையில் செப்டம்பர்   26-27 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றன.

மேலும் `கடிகை` தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் ஐரோப்பிய தமிழியலாய்வுத் துறை  10.8.2020 அன்று தொடங்கப்பட்டது. 

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். -குறள் 664

என்ற குறளுக்கொப்ப,  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் வழியாக தமிழர் வரலாறு, ஆவணப்பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை செவ்வனே செய்து வரும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.  

தமிழால் இணைவோம்!   தமிழால் சிறப்போம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

"கல்வெட்டுப் படி"

 "கல்வெட்டுப் படி"

- மா.மாரிராஜன் 


வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள சாசனங்களான கோவில் கல்வெட்டுகள். இக்கல்வெட்டுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட்டனர் நம் முன்னோர். ஒரு அரசன் கோவில் ஒன்றைச் செப்பனிடும் போது, அங்குள்ள பழையக் கல்வெட்டுச் செய்திகளைப் படியெடுப்பார்கள். செப்பனிடும் வேலை முடிந்தபின்பு படியெடுத்த கல்வெட்டுச் செய்தியை மீண்டும் கல்லில் வெட்டுவார்கள்.

" இது ஒரு பழம் கல்வெட்டு " என்ற குறிப்புடன் கல்வெட்டுச் செய்தியைப் பதிவு செய்வார்கள். குடுமியான்மலைக் கோவில் மடப்பள்ளியின் கீழ்புறச்சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு. மதுரைகொண்ட கோபரகேசரியான பராந்தகனின் 33 ஆம் ஆட்சி யாண்டு, அதாவது கி.பி.940 வெட்டப்பட்ட கல்வெட்டு.  

பராந்தகனின் படைத்தளபதியான கொடும்பாளூர் வேளிர் குல சிற்றரசன் பராந்தகன் குஞ்சரமல்லனான வீரசோழ இளங்கோ வேளான் என்பவர் இலங்கையின் மீது படையெடுத்தார். படையெடுப்பு தனக்கு வெற்றியைத் தரவேண்டும் என்று குடுமிநாதருக்கு நில தானம் செய்து வேண்டுகிறார்.

"ஈழ மறிய போகிறேன் "  என்பது கல்வெட்டு வாசகம். நடைபெற்ற ஈழப்போரில் வெற்றியும் பெற்றார். பராந்தகனுக்கு மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரி என்ற விருதுப்பெயரும் கிடைத்தது. இக்கல்வெட்டு சாசனம் குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலில் வெட்டப்பட்டுள்ளது.  இது கி.பி. 940 இல் நடந்த நிகழ்வு.

280 ஆண்டுகளுக்குப்பிறகு. கி.பி.1220ல்,  மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலம். அவனது 4 ஆம் ஆட்சியாண்டில் பாண்டிய நாட்டை மீட்டு, சோழர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன் என்று பெரும் புகழ் பெற்ற பாண்டிய மன்னன். இவரது காலத்தில் குடுமியான்மலைக் கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கின. 280 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட பராந்தகனின் கல்வெட்டைப் படியெடுத்து, கோவில் வேலை முடிந்தபிறகு அச் செய்தியை மீண்டும் கல்லில் பதிவு செய்தார்கள்.


"இதில் கல்வெட்டு படியெடுத்துப் படி எடுத்தபடியே வெட்டுகவென்று உடையார் அருளிச் செய்த வெட்டின படியாவது " என்று சாசனம் தொடங்குகிறது. சோழனது கல்வெட்டு சாசனம், பாண்டியனால் புதுப்பிக்கப்பட்டது. 280 ஆண்டுகளுக்கு முந்தைய அதே கல்வெட்டுச் செய்தி மீண்டும் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறாகக் கல்வெட்டுகளைப் போற்றி, படியெடுத்து, பாதுகாத்த நமது வரலாற்று ஆவணங்கள் ..

இன்று .....? கல்வெட்டுக்களைச் சிதைத்தும், சுவரொட்டி ஒட்டியும் ...தொடர்கிறது  அவலம்...


Reference: புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள். No 255