Saturday, August 29, 2020

எகிப்தில் கிடைத்திருக்கும் இந்தியக் குரங்கின் எலும்புக்கூடு

எகிப்தில் கிடைத்திருக்கும் இந்தியக் குரங்கின் எலும்புக்கூடு

 - முனைவர்.க.சுபாஷிணி

அண்மைய கால உலகளாவிய அகழ்வாய்வுகளில் சுவாரஸ்யமான ஒரு தகவல் பற்றி அண்மையில் வாசித்தேன். செங்கடல் பகுதியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு துறைமுக நகரமாக இன்றைய எகிப்து நாட்டில் இருக்கின்ற பெரனிஸ் என்ற துறைமுகப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு இது.

தூங்கிக் கொண்டிருக்கின்ற குழந்தையைப் போல உடல் வைக்கப்பட்டு ஒரு இறந்த குரங்கின் உடல் புதைக்கப்பட்டிருக்கின்றது.


இந்தக் குரங்கின் எலும்புக்கூடு, இது ஈராயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும்,இது இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குரங்கு ஒன்றின் எலும்புக்கூடு என்றும் அகழ்வாராய்ச்சி குறிப்பிடுகின்றது. இந்த எலும்புக்கூடு எகிப்தின் பண்டைய பெரனிஸ் துறைமுக நகரில் விலங்குகள் மயான பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3D scan வகை ஆய்வின் வழி இது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட குரங்கு என்பதைப் போலந்து அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் மார்த்தா அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதுவரை ஆப்பிரிக்கப் பகுதிகளில் இந்திய வகை குரங்குகள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படவில்லை என்றும் இதுவே முதல் கண்டுபிடிப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பண்டைய இந்தியாவிலிருந்து கடல்வழிப் பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வாரங்கள் கப்பலில் கொண்டுவரப்பட்டு, செங்கடல் பகுதியில் இளம் வயதிலேயே இந்தக் குரங்கு இறந்திருக்க வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தக் குரங்கு இறந்து போனதற்குக் காரணம் அதன் உணவு வகை மாற்றமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றனர். இந்தக் குரங்கு படுத்துக்கொண்டிருக்கும் வகையில் இதனைப் புதைத்திருக்கின்றார்கள். அதன்மேல் துணி போன்ற கம்பளி மூடப்பட்டுள்ளதும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அருகாமையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கிடைக்கின்ற சிப்பிகள், எம்ஃபோரா பானைகளின் உடைந்த சில்லுகள், மூன்று பூனைகளின் எலும்புக்கூடுகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.

பண்டைய ரோமானியர்களும், எகிப்தியர்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குரங்குகளை வீட்டு விலங்குகளாக வைத்திருக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என்றும், அதற்காக குரங்குகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர் மார்த்தா கூறுகிறார்.விலங்குகளுக்கான மயானத்தில் இந்த குரங்கின் எலும்புக் கூடு புதைக்கப்பட்டுள்ளது என்று அறியும் போது இந்தப் பகுதியில் பண்டைய எகிப்தியப் பண்பாட்டில் ஈமக்கிரியை என்பது முக்கிய பங்கு வகிப்பதையும் மம்மிகள் உருவாக்கம், பிரமிடுகள் கட்டுமானம் என்ற சிந்தனையின் தொடர்ச்சியாக விலங்குகளுக்கும் தனிப்பட்ட மயானம் இருந்தது பற்றியும், அவை புதைக்கப்படும் போது அவற்றோடு மேலும் சில பொருட்களும் உடன் வைக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தியும் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கும் ரோமானியப்  பேரரசுக்கும் இடையிலான நீண்டகால வணிகமுயற்சிகள் மற்றும் அதன் பொருட்டு நிகழ்ந்த கடல்வழி பயணங்கள் ஆய்வாளர்களுக்கு மேலும் மேலும் பல புதிய செய்திகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. வரலாற்று ஆய்வில் அகழாய்வுகளுக்கான அதிகப்படியான கவனம் கடற்கரையோர நகரப் பகுதிகளில் நிகழ்த்தப்பட வேண்டியது அவசியம் என்பதை இத்தகைய கண்டுபிடிப்புகள் நமக்கு உறுதி செய்கின்றன.


Reference:
https://www.thefirstnews.com/article/remains-of-2000-year-old-monkeys-buried-like-sleeping-children-reveal-romans-and-ancient-egyptians-imported-them-from-india-as-household-pets-15142

வணிகமும் தமிழும்

வணிகமும் தமிழும்

முனைவர்.ப.பாண்டியராஜா


வணிகமும் தமிழும் - 1:
ஒரு பெட்டிக்கடையை எடுத்துக்கொள்வோம். அதில் சில நூறு பொருள்கள் இருக்கும். ஒருவர் கடையின் முன்பகுதியில் அமர்ந்துகொண்டு விற்பனை செய்துகொண்டிருப்பார், எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றனவோ, அவற்றைக் கைக்கு எட்டிய தூரத்தில் வைத்திருப்பார். எப்போதாவது விற்பனையாகும் பொருள்களைச் சற்றுத் தள்ளியோ, உயரமான இடத்திலோ வைத்திருப்பார். அவரைப் பொருத்தமட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் பொருள்களே மிக மதிப்பு வாய்ந்தவை. அவற்றில்  தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்.

இப்பொழுது ஒரு பெரிய விற்பனை நிலையத்தை (departmental store) எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு ஆயிரக்கணக்கான பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எனினும் எந்தெந்தப் பொருள்கள் அதிகமாக விற்பனை ஆகின்றனவோ அவற்றை மக்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் வண்ணம் வைத்திருப்பார். எனவே ஒரு கடைக்காரருக்கு எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன என்று தெரிந்துகொள்வதில் மிகவும் அக்கறை இருக்கும். ஒரு பொருள் விலை குறைந்ததாக இருந்தாலும் மிக அதிகமாக விற்பனையானால் அது வைக்கப்படும் இடத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அது மதிப்பு மிக்கதாகக் கருதப்படும். மிகவும் அதிகமான விலையுள்ள பொருளாக இருந்தாலும், அதிகம் விற்பனை ஆகாவிட்டால் அது பின்னுக்குத் தள்ளப்படும். அதற்கு அதிக மதிப்பு இல்லை. எனவே கடைக்காரரைப் பொருத்தவரையில் ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை மட்டுமல்ல, அது விற்பனையாகும் எண்ணிக்கையையும் பொருத்தது. இங்கே மதிப்பு என்பதை value என்கிறோம். விலை என்பதை Price என்கிறோம். எண்ணிக்கை என்பதை frequency என்கிறோம். இங்கு value = Price x frequency. காட்டாக, 500 ரூபாய் விலையுள்ள பொருள் 200 எண்ணிக்கை விற்றால், அதன் மதிப்பு 500 x 200 = 100000. ஆனால் 50 ரூபாய் விலையுள்ள பொருள் 2500 எண்ணிக்கை விற்றால், அதன் மதிப்பு 50 x 2500 = 125000. எனவே 50 ரூபாய்ப் பொருள் அதிக மதிப்புள்ளதாகக் கருதப்படும். 

ஒரு மிகப் பெரிய கடைக்காரருக்குத் தன் கடையில் எந்தெந்தப் பொருள்கள் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன, எவையெவை விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன என்று அறிந்துகொள்வதில் மிகுந்த நாட்டம் இருக்கும். இதற்குக் கணிதம் ஒரு வழி செய்திருக்கிறது. 
ஆமாம்,  இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பொறுத்திருங்கள். அடுத்துச் சொல்கிறேன்.


வணிகமும் தமிழும் - 2:
ABC பகுப்பாய்வு - ABC Analysis
சென்ற பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடியில் உள்ள ஆயிரக்கணக்கான பொருள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விலை (Price), விற்பனையாகும் எண்ணிக்கை (frequency) ஆகியவற்றைப் பொருத்து அதன் மதிப்பு (value) கணக்கிடப்படும் என்று பார்த்தோம். அதாவது ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை, அது விற்பனையாகும் எண்ணிக்கை ஆகியவற்றின் பெருக்குத்தொகை என்று கண்டோம். 
அதாவது value = Price x frequency.

விலை குறைந்த பொருள்கூட அதிகமாக விற்பனை ஆனால், உரிமையாளர் அதன் மீது மிக்க கவனம் செலுத்துவார் இல்லையா? அந்தப் பொருளை எங்கே வைக்கவேண்டும், எவ்வளவு வைக்கவேண்டும், தேவையான இருப்பு கைவசம் உள்ளதா என்பதில் அவர் மிக்க கவனம் செலுத்துவார். அத்தகைய பொருள்கள் A வகைப் பொருள்கள் எனப்படும். அவற்றை அடுத்து, ஓரளவு கண்காணிப்பில் இருக்கவேண்டிய பொருள்கள் B வகைப் பொருள்கள் ஆகும். ஏதோ இருக்கட்டும் என்று வைத்துக்கொள்ள வேண்டிய பொருள்கள் C வகைப் பொருள்கள் ஆகும். 

ஒருவர் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைத் தன் கடையில் வைத்திருந்தால், சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் A வகைப் பொருள்கள் என்றும், சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் B வகைப் பொருள்கள் என்றும், மீதமுள்ள 5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் C வகைப் பொருள்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, ஒரு கடையில் உள்ள பொருள்களின் மொத்த மதிப்பில் சுமார் 80 விழுக்காடு பொருள்கள் A வகைப் பொருள்கள் என்றும், சுமார் 15 விழுக்காடு பொருள்கள் B வகைப் பொருள்கள் என்றும், மீதமுள்ள 5 விழுக்காடு பொருள்கள் C வகைப் பொருள்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்படும். இவற்றில் A வகைப் பொருள்கள் மீது கடைக்காரர் தனிக்கவனம் செலுத்துவார். இந்த வகையாகப் பகுப்பதற்காகச் செய்யப்படும் ஆய்வே ABC Analysis எனப்படும். ஒருவரின் ஆய்வுநிலைக்கு ஏற்ப இந்த விகிதங்கள் வெவ்வேறு விதமாகக் கொள்ளப்படும்.

செய்முறை: 
1. ஒவ்வொரு பொருளின் மதிப்பும் கணக்கிடப்படவேண்டும். ஒரு பொருளின் விலை, ஒரு மாதத்தில் அல்லது வருடத்தில் விற்பனை ஆகும் எண்ணிக்கை ஆகியவற்றைப் பெருக்க அந்தப் பொருளின் மதிப்பு கிடைக்கும். value = Price x frequency.
2. பின் அவற்றின் மதிப்பின் இறங்கு வரிசையில் அடுக்கவேண்டும். அதாவது, மிக அதிகமான மதிப்புள்ள பொருள் மேலே முதலில் வரவேண்டும். அதற்குக் கீழே அடுத்த மதிப்புள்ள பொருள் வரவேண்டும். இப்படியாகக் கடைசிவரை எடுக்கவேண்டும். கடைசியில் இருப்பது மிக மிகக் குறைந்த மதிப்புள்ள பொருள்.
3 பின்னர் இந்த எண்களுக்குரிய கூட்டு மதிப்பு (cumulative value) கணக்கிடப்படுகிறது. முதலாவது பொருளுக்குரிய கூட்டு மதிப்பு அதுவேதான். அடுத்த பொருளுக்குரிய கூட்டு மதிப்பு முதல் இரண்டு மதிப்புகளுக்குரிய கூட்டுத்தொகை ஆகும். மூன்றாம் பொருளுக்குரிய கூட்டு மதிப்பு முதல் மூன்று பொருள்களுக்குரிய மதிப்புகளின் கூட்டுத்தொகை ஆகும். இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்கும் உரிய கூட்டு மதிப்பு கணக்கிடப்படுகிறது. 
4. பின்பு இவை விழுக்காடாக மாற்றப்படுகின்றன.

இவற்றில் 80% வரை உள்ள பொருள்கள் A வகைப் பொருள்கள் ஆகும். 
95% வரை உள்ள பொருள்கள் B வகை பொருள்கள் ஆகும். 
மீதமுள்ளவை C வகைப் பொருள்கள்.
கீழே ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

1.பொருள்  விலை எண்ணிக்கை
 1. 46.00 200
 2. 40.00    10
 3. 5.00        6680
 4. 81.00 100
 5. 22.00   50
 6. 6.00         100
 7. 176.00 250
 8. 6.00         150
 9. 10.00    10
 10. 4.00            50

2.பொருள் விலை   எண்ணிக்கை   மதிப்பு (விலை x எண்ணிக்கை)
 1 46.00 200 9200.00
 2 40.00   10 400.00
 3 5.00       6680 33400.00
 4 81.00 100 8100.00
 5 22.00   50 1100.00
 6 6.00         100 600.00
 7 176.00 250 44000.00
 8 6.00         150 900.00
 9 10.00   10 100.00
 10 14.00   50 700.00
 மொத்தம் 98500.00

3.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு (இறங்கு வரிசையில்) 
 7 176.00 250 44000.00
 3 5.00        6680 33400.00 
 1 46.00 200 9200.00 
 4 81.00 100 8100.00 
 5 22.00   50 1100.00 
 8 6.00          150 900.00 
 10 14.00    50 700.00 
 6 6.00          100 600.00 
 2 40.00    10 400.00 
 9 10.00    10 100.00 
            மொத்தம்    98500.00

4.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு   கூட்டுமதிப்பு (cumulative value)
 7 176.00 250 44000.00  44000.00 
 3 5.00       6680 33400.00  77400.00 
 1 46.00 200 9200.00          86600.00 
 4 81.00 100 8100.00          94700.00 
 5 22.00 50 1100.00          95800.00 
 8 6.00        150 900.00          96700.00 
 10 14.00   50 700.00          97400.00 
 6 6.00         100 600.00          98000.00 
 2 40.00    10 400.00           98400.00 
 9 10.00    10 100.00           98500.00
            மொத்தம் 98500.00

5.பொருள் விலை   எண்ணிக்கை மதிப்பு   கூட்டுமதிப்பு    விழுக்காடு தரம்
 7 176.00 250 44000.00 44000.00  44.67   A
 3 5.00       6680 33400.00 77400.00  78.58  A
 1 46.00 200 9200.00  86600.00  87.92   B
 4 81.00 100 8100.00  94700.00  96.14   B
 5 22.00 50 1100.00  95800.00  97.26   C
 8 6.00         150 900.00  96700.00  98.17   C
 10 14.00 50 700.00  97400.00  98.88   C
 6 6.00        100 600.00  98000.00  99.49   C
 2 40.00 10 400.00  98400.00  99.90   C
 9 10.00 10 100.00  98500.00        100.00   C
            மொத்தம் 98500.00   100.00

அதாவது மொத்த மதிப்பான 98500.00 என்பதை 100 எனக் கொண்டால் ஏனையவற்றின் மதிப்பு மொத்த மதிப்பின் விழுக்காடாகக் கிடைக்கும். நாம் A-வகுப்பு பொருள்கள் 80% எனக் கொண்டுள்ளதால், விழுக்காடு 78.58 வரையிலான பொருள்களான முதல் இரண்டு பொருள்கள் A வகையைச் சேர்ந்தவை. மிக முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டியவை. அடுத்து, 95% வரையிலான பொருள்கள் B வகையைச் சேர்ந்தவை. எனவே, கூட்டு மதிப்பில் 87.92, 96.14 என்ற விழுக்காடுகளைக் கொண்ட 1, 4 ஆகிய பொருள்கள் B வகையைச் சேர்ந்தவை. இவை அடுத்த அளவு முக்கியத்துவம் பெறுகின்றன. மீதமுள்ள 5, 8, 10, 6, 2, 9 ஆகியவை C வகையைச் சேர்ந்தவை. பொருள் 3 விலை மிகக் குறைவாக இருந்தாலும், தேவை மிக அதிகமாக இருப்பதால், கடைக்காரரைப் பொருத்தமட்டில் மிக மிக முக்கியமான பொருள் ஆகிறது
அட்டவணை 6.(படம் பார்க்க)இங்கே பாருங்கள், பொருள் 7, பொருள் 3 ஆகியவைதான் மிக அதிகமாக விற்பனை ஆகின்றன. பொருள்கள் 5,8,10,6,2,9 ஆகியவை எப்போதாவது விற்பனை ஆகின்றன. எனவே மிகக் குறைந்த அளவுப் பொருள்களே அதிகமாக விற்பனை ஆகின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான பொருள்கள் எப்போதாவது விற்பனையாகின்றன. எனவே உரிமையாளர் தன் விற்பனைத் திறத்தை மேம்படுத்தவேண்டும். இங்கு 10 பொருள்களே எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கான பொருள்கள் இருந்தால் இம்முறையின் சிறப்பு எளிதில் புரியும். அதிலும் கணினியின் பங்கு இங்கு அபாரமானது. விற்பனையையும், விலையையும் கொடுத்தால் அனைத்தையும் நொடியில் கணினி கணக்கிட்டு முடித்துவிடும்.

மீண்டும் நினைவில் கொள்வோம்: A பகுதியில் எத்தனைக்கெத்தனை பொருள்கள் அதிகமாக இருக்கின்றனவோ, C பகுதியில் எத்தனைக்கெத்தனை பொருள்கள் குறைவாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு உரிமையாளர் மகிழ்ந்துகொள்ளலாம். 
இதனை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கு நேர் எதிரிடையான சூழலை இலக்கியத்தில் பார்க்கப்போகிறோம்.
இலக்கிய ஆய்வில் இதன் முக்கியத்துவத்தை அடுத்துக் காண்போம். 

இந்த ABC பகுப்பாய்வைச் சங்க இலக்கியங்களுக்குப் புகுத்திப்பார்க்கலாம். 
அதற்கு முன் சங்க இலக்கியத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் - அறிமுகம் இல்லாதவர்க்கு - அடுத்த கட்டுரை


வணிகமும் தமிழும் - 3:
இந்தத் தலைப்பிலான முதல் இரண்டு கட்டுரைகளில் ABC பகுப்பாய்வு (ABC Analysis) என்றால் என்ன என்று பார்த்தோம். இப்போது அதனை எவ்வாறு இலக்கியத்துக்குப் பொருத்துவது எனக் காண்போம். 
இந்த ABC பகுப்பாய்வினைச் சங்க இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்க்கப்போகிறோம். 
எனவே முதலில் சங்க இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு ஒரு சுருக்கமான முன்னுரை தரப்போகிறேன். 
இது சங்க இலக்கியம்பற்றித் தெரியாதவர்களுக்கு மட்டுமே. 
அடுத்த கட்டுரையில் அதனை ABC பகுப்பாய்வு செய்வோம்.

சங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்:
தமிழ்மொழி ஒரு செம்மொழி என்பதை இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் தமிழ்மொழியிலுள்ள சங்க இலக்கிய நூல்களே ஆகும். இந்த நூல்கள் அனைத்தும் செய்யுள்கள் அல்லது செய்யுள்களின் தொகுப்புகளாகும். இந்த நூல்களிலுள்ள மொத்தச் செய்யுள்களின் எண்ணிக்கை 2381 ஆகும். இவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 473 ஆகும். இந்தப் புலவர்களில் வணிகர், குயவர் போன்ற பலவகையான தொழில்களைச் செய்வோர் உண்டு. நாடாளும் மன்னர்களும் பல பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில் பெண்பாற்புலவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாகும். இந்தச் சங்க நூல்களின் பெரும்பாலானவை கி.மு 300-க்கும் கி.பி.200 -க்கும் இடைப்பட்ட பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்டவை.

சங்கம் என்ற சொல்லுக்கு அவை அல்லது சபை என்று பொருள். தமிழ் அறிஞர்களின் சபை தமிழ்ச்சங்கம் எனப்பட்டது. தமிழ் இலக்கிய ஆய்வும் செய்யுள் இயற்றுதலும், வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்களைத் தொகுப்பதுவும் இதன் பணி. இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் சங்க நூல்கள் கடைச் சங்க நூல்கள் எனப்படும். இதற்கு முன்னர் முதற்சங்கம், இடைச் சங்கம் என்ற இரண்டு சங்கங்கள் இருந்ததாகவும், அவற்றில் தொகுக்கப்பட்ட நூல்கள் கடற்கோளால் அழிக்கப்பட்டன என்றும் மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. அவற்றுள் முதற்சங்கம் என்பது தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்தன என்றும் அறிகிறோம். மூன்றாம் சங்கமான கடைச்சங்கம் இன்றைய மதுரையிலிருந்தது. இந்தச் சங்கங்களை உருவாக்கி, ஆதரித்து, வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள்.

இந்தச் சங்கப்பாடல்களுள் நெடும்பாடலாக இருக்கும் பத்துப் பாடல்களைத் தொகுத்து அதனைப் பத்துப்பாட்டு என்று பெயரிட்டனர். அவை, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை என்பன. இவற்றுள் திருமுருகாற்றுப்படை காலத்தால் மிகவும் பிற்பட்டது என்பர் ஆய்வாளர். இவற்றுள் மிகச் சிறியது 103 அடிகளைக் கொண்ட முல்லைப்பாட்டு என்ற பாடலாகும். மிகப்பெரியது 782 அடிகளைக் கொண்ட மதுரைக்காஞ்சி என்ற பாடல். 

அடுத்து நூற்றுக்கணக்கான குறும்பாடல்களைப் பல்வேறு தலைப்புகளில் பிரித்து அவற்றை எட்டுத்தொகுதிகளாக ஆக்கினர். இவை எட்டுத்தொகை நூல்கள் எனப்படும். அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன. இவற்றுள் பரிபாடலும், கலித்தொகையும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்பர்.

இந்தச் சங்க நூல்கள் எதைப்பற்றிப் பாடுகின்றன? மிகப்பெரும்பாலும் அவை மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பற்றிப் பாடுகின்றன. அதிலும் பெரும்பாலான பாடல்கள் காதல்வயப்பட்ட ஆண்/பெண்ணின் அக உணர்வுகளை மிக அழகாக எடுத்தியம்புகின்றன. அவற்றின் மூலம் பண்டைத் தமிழரின் அன்றாட வாழ்க்கைமுறைகளை அழகிய சொல்லோவியங்களாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன.  புறநானூறு என்ற ஒரு நூல் மன்னர்களைப் பற்றியும் அவர்களிடையே நடந்த போர்களைப்,பற்றியும்,  வள்ளல்களைப் பற்றியும், பெருமையுடன் விவரிக்கிறது. ஆங்காங்கே மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவங்களையும் சொல்லிப்போகிறது. 
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (Every city is my city, Every person is my relative)
என்ற உலகம் வியந்து பாராட்டும் ஒற்றை வரி இந்தப் புறநானூற்றில் உண்டு. 

சங்க இலக்கியங்கள் சொற்செறிவு மிக்கவை. குறைந்த அளவு சொற்களில் மிகுந்த பொருளைத் தரக்கூடியனவாய்த் திகழ்கின்றன. பொதுவாக இயற்கையை ஒட்டிய விவரணங்களே சங்க இலக்கியத்தில் உண்டு. புனைவுச் செய்திகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. உவமைகளைக் கையாளுவதில் சங்கப் புலவர்கள் பெரும் திறன் வாய்ந்தவர்கள். ஒரு பறவையைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் மூக்கு, சிறகு, கால்கள், கால்நகங்கள் என நுணுக்கமான வர்ணனைகளைக் கொடுப்பதில் வல்லவர்கள். 

சங்க இலக்கியங்களில் மதக் கோட்பாடுகள் குறிப்பிடப்படவில்லை. இவற்றில் மிகவும் பிற்பட்ட காலற்றவை என்று கருதப்படும் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்களில் பல இந்து மதக் கடவுளர்களும், புராணச் செய்திகளும் அதிகமாகக் காணப்பட்டாலும், சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் மதச்சார்பற்றவை - non-religious - என்றே கூறலாம். 

பொதுவாக, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம், மத நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்வியல்நெறிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் காண உதவும் பலகணி அல்லது ஜன்னல் என்று சங்க இலக்கியங்களைக் குறிப்பிடலாம்.

A.K.Ramanujan என்ற ஆய்வாளர் கூறுவார், “These poems are not just the earliest evidence of Tamil genius. The Tamils in all their 2000 years of literary effort wrote nothing better".


வணிகமும் தமிழும் - 4:
சென்ற பகுதிகளில் ஒரு பல்பொருள் அங்காடியில் உள்ள ஆயிரக்கணக்கான பொருள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விலை (Price), விற்பனையாகும் எண்ணிக்கை (frequency) ஆகியவற்றைப் பொருத்து அதன் மதிப்பு (value) கணக்கிடப்படும் என்று பார்த்தோம். அதாவது ஒரு பொருளின் மதிப்பு என்பது அதன் விலை, அது விற்பனையாகும் எண்ணிக்கை ஆகியவற்றின் பெருக்குத்தொகை என்று கண்டோம். 
அதாவது value = Price x frequency.

இதன் அடிப்படையில் ஓர் அங்காடியில் உள்ள பொருள்களை எவ்வாறு A வகைப் பொருள்கள் என்றும் B வகைப் பொருள்கள் என்றும் C வகைப் பொருள்கள் என்றும் பிரிக்கலாம் என்பதனை ஓர் எடுத்துக்காட்டுடன் கண்டோம். இப்போது இந்தப் பகுப்பாய்வை எவ்வாறு இலக்கியத்திற்குப் பயன்படுத்தலாம் என்று காண்போம். இந்த ஆய்வுக்குச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 

ABC பகுப்பாய்வு - இலக்கியத்தில் பயன்பாடு:
இலக்கிய ஆய்வுக்கு இந்த ABC பகுப்பாய்வு எந்தவகையில் பயன்படுகிறது என்பதைக் காண்போம்.

இதற்கு எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியங்கள் அனைத்தையும் மொத்தமாக எடுத்துக் கொள்வோம். சங்க இலக்கியங்களில் மொத்தம் 172902 சொற்கள் இருக்கின்றன. சொற்களைப் பிரிக்கும் முறையைப் பொருத்து இந்த எண்ணிக்கை ஓரளவு மாறலாம். இவற்றில் பல ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வரலாம். இந்தச் சொற்களைப் பிரித்து அவற்றை அகரவரிசையில் அடுக்கி, அவற்றில் தனிச்சொற்களை மட்டும் அவற்றின் எண்ணிக்கையுடன் கணக்கிடவேண்டும். நமது கணக்கீட்டில் சங்க இலக்கியங்களில் 25078 தனிச் சொற்கள் இருக்கின்றன. இவைதான் நமது ‘பண்டகசாலையிலுள்ள' பொருள்கள். இவற்றில் விலையுயர்ந்தவை, விலை குறைந்தவை என்ற பாகுபாடு கிடையாது. எனவே எல்லாச் சொற்களின் விலையையும் 1 என எடுத்துக்கொள்ளலாம். எனவே, இந்தச் சொற்கள் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற எண்ணிக்கைதான்(frequency) இவற்றின் மதிப்பும் ஆகிறது. 


இந்த மதிப்புகளின் இறங்கு வரிசையில் இந்தச் சொற்களையும் அவற்றின் எண்களையும் எழுதுகிறோம். பின்பு இந்த மதிப்புகளின் கூட்டு மதிப்பையும் காண்கிறோம். பின்னர் அவற்றின் விழுக்காடுகளையும் காண்கிறோம். 

இந்த 25,000 க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட நீண்ட அட்டவணையில் முதல் 20 சொற்கள் இவைதான்.
1. 1248 (0.70%)( 0.70%) - என
2. 1004 (0.56%)( 1.26%) - அன்ன
3. 951 (0.53%)( 1.80%) - நின்
4. 740 (0.42%)( 2.21%) - கண்
5. 733 (0.41%)( 2.63%) - பெரும்
6. 683 (0.38%)( 3.01%) - என்
7. 644 (0.36%)( 3.37%) - நீர்
8. 629 (0.35%)( 3.72%) - அம்
9. 608 (0.34%)( 4.07%) - பல்
10. 568 (0.32%)( 4.38%) - இரும்
11. 540 (0.30%)( 4.69%) - பூ
12. 526 (0.30%)( 4.98%) - மா
13. 511 (0.29%)( 5.27%) - நீ
14. 506 (0.28%)( 5.55%) - இல்
15. 497 (0.28%)( 5.83%) - வாய்
16. 494 (0.28%)( 6.11%) - தோழி
17. 494 (0.28%)( 6.39%) - போல
18. 486 (0.27%)( 6.66%) - கால்
19. 484 (0.27%)( 6.93%) - உடை
20. 460 (0.26%)( 7.19%) - தலை

அதாவது, சங்க இலக்கியங்களில் ’என’ என்ற சொல் 1248 முறை வருகிறது. இதுதான் சங்க இலக்கியங்களில் மிக அதிக எண்ணிக்கையில் வருகின்ற சொல். மொத்தத்தில் இதன் விழுக்காடு 0.70% அடுத்துள்ள எண் விழுக்காடுகளின் கூட்டு மதிப்பு (Cumulative value). அது கூடிக்கொண்டே வருவதைக் காணலாம். இந்த நீண்ட அட்டவணையில் இறங்கிக்கொண்டே சென்றால் 6 முறை வருகின்ற சொற்களின் இறுதியில் கிடைக்கும் கூட்டு மதிப்பு 81.01% . இந்தச் சொல்லின் வரிசை எண் 4526. எனவே இந்தச் சொல்லுக்கு முன்னர் இருக்கும் 4500க்கு மேற்பட்ட சொற்கள் எல்லாம் A வகைச் சொற்கள் ஆகின்றன. மொத்தத்தில் இது 18%. இந்தப் பதினெட்டு விழுக்காடு சொற்கள்தான் சங்க இலக்கியங்களில் எண்பது விழுக்காட்டளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே மிகக் குறைந்த அளவிலான சொற்களே சங்க இலக்கியங்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சங்க இலக்கியங்களின் சொல்வீச்சின் சிறப்பை உணர்த்தும். 

நான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டது போல, ஒரு அங்காடியில் A வகைப் பொருள்கள் மிக அதிகமாக இருந்தால் உரிமையாளர் மிகவும் மகிழ்வார். ஆனால் இலக்கியத்தில் A வகைச் சொற்கள் மிக அதிகமாக இருந்தால் அது சொல் வறட்சியைக் குறிக்கும். அந்த வகையில் இங்கு A வகைச் சொற்கள் மிகக் குறைவாக இருப்பது சங்க இலக்கியங்களின் சொல் வளத்தைக் குறிக்கும்.

அடுத்து, இதே அட்டவணையில் மேலும் இறங்கி வந்தால், 2 முறை வருகின்ற சொற்களின் இறுதியில் கிடைக்கும் கூட்டு மதிப்பு 92.21% . இந்தச் சொல்லின் வரிசை எண் 14465. எனவே A வகைச் சொற்களை அடுத்து இந்தச் சொல்லுக்கு முன்னர் இருக்கும் சுமார் 10,000க்கு சொற்கள் எல்லாம் B வகைச் சொற்கள் ஆகின்றன. மொத்தத்தில் இது 40%. இந்த நாற்பது விழுக்காடு சொற்கள் சங்க இலக்கியங்களில் 2,3,4,5 முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

14,466 -ஆவது சொல்லிலிருந்து கடைசிச் சொல்லான 25,329-ஆவது சொல் வரையுள்ள அத்தனை சொற்களும் சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த 10,000 -க்கும் அதிகமான சொற்கள்தான் C வகைச் சொற்கள் ஆகின்றன. இவை 40 விழுக்காட்டுக்கும் அதிகமான சொற்கள். ஒரு கடையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருள்கள் வருடத்திற்கு ஒரே ஒரு முறை விற்றால் கடைக்காரர் நொந்துபோய்விடமாடாரா? ஆனால் இலக்கியத்தில் அப்படியில்லை. சங்க இலக்கியத்தில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமான சொற்கள் ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று காணும்போது இது சங்க இலக்கியத்தின் சொல்வளத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. 
எனவே, இந்த ABC பகுப்பாய்வு மூலமாக சங்க இலக்கியத்தின் சொல் வளமும், சொல் வீச்சும் ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்கள் - For ABC Analysis Graph
1. 1248 (0.70%)( 0.70%) - என

2. 1004 (0.56%)( 1.26%) - அன்ன
3. 951 (0.53%)( 1.80%) - நின்
4. 740 (0.42%)( 2.21%) - கண்
5. 733 (0.41%)( 2.63%) - பெரும்
-------------------------------------------
-------------------------------------------
4520. 6 (0.00%)(80.99%) - மேக்கு
4521. 6 (0.00%)(80.99%) - மைந்தின்
4522. 6 (0.00%)(80.99%) - மொழிந்து
4523. 6 (0.00%)(81.00%) - மொழியும்
4524. 6 (0.00%)(81.00%) - மொழிவல்
4525. 6 (0.00%)(81.00%) - யாங்ஙனம்
4526. 6 (0.00%)(81.01%) - யாணர்த்து
-------------------------------------------
-------------------------------------------
11461. 2 (0.00%)(92.21%) - வைப்பவும்
11462. 2 (0.00%)(92.21%) - வையக
11463. 2 (0.00%)(92.21%) - வையகத்து
11464. 2 (0.00%)(92.21%) - வையமும்
11465. 2 (0.00%)(92.21%) - வையா
-------------------------------------------
-------------------------------------------
25324. 1 (0.00%)(100.00%) - வௌவினர்
25325. 1 (0.00%)(100.00%) - வௌவினன்
25326. 1 (0.00%)(100.00%) - வௌவினை
25327. 1 (0.00%)(100.00%) - வௌவுநர்
25328. 1 (0.00%)(100.00%) - வௌவுபு
25329. 1 (0.00%)(100.00%) - வௌவும்_காலை

இந்த அட்டவணைப்படி எண்ணிக்கை 6, அதாவது 81.01 என்ற கூட்டுமதிப்பு உள்ள சொல்லுக்கு முன்னர் இருக்கும் சொற்கள் எல்லாம் A வகைச் சொற்கள் ஆகின்றன. அதன் பின்னர், எண்ணிக்கை 2, அதாவது 92.21 என்ற கூட்டுமதிப்பு உள்ள சொல்லுக்கு முன்னர் இருக்கும் சொற்கள் B வகைச் சொற்கள் ஆகின்றன. அடுத்து வருபவை எண்ணிக்கை 1 உள்ளவை. இவை C வகைச் சொற்கள்.

முடிபாக, ஏறக்குறைய 1,70,000-க்கு மேற்பட்ட சொற்களில் 25,000-க்கு மேற்பட்ட தனிச்சொற்களுள்ள சங்க இலக்கியங்களில் 18 விழுக்காடு அளவுக்கான சுமார் 4500 சொற்கள் மட்டுமே 80 விழுக்காடு அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். எனவே சங்க இலக்கியங்களில் ஒரு கட்டுக்கோப்பான சொற்பயன்பாடு இருப்பது தெரிகிறது. மேலும் 90% - 100% பயன்படுத்தப்படும் சொற்கள் மிகவும் அரிதான சொற்கள். அவை மொத்தத்தில் 40%. அதாவது 40% சொற்கள் அருஞ்சொற்களாக இருக்கக் காண்கிறோம். இது, சங்க இலக்கியங்களின் சொல்வளத்தைக் காட்டுகிறது.Thursday, August 27, 2020

திருக்குறளில் நகைச்சுவை!

திருக்குறளில் நகைச்சுவை! 

-- சொ.வினைதீர்த்தான்


திருக்குறளில் உவகையளித்து சிந்திக்க வைக்கும் சில குறட்பாக்கள். 

முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா?
கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம்.
அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!

ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!
மற்றொருத்தி கூறினாளாம் சூடாக எதையும் குடிக்க மாட்டேனென்று; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுவிடுமாம்.

பூவை தலையிலே வைத்தாளாம் ஒருத்தி. இடுப்பு ஒடிந்து செத்துவிட்டாளாம். பாவி பூவின் காம்பை எடுக்காமல் வைத்து விட்டாளாம்!
விண்மீன்கள் எல்லாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!
தலைவியைப் பார்த்துவிட்டு குவளை பூ படக்கென்று தலையைத் தொங்கப்போட்டதாம்; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினாலாம்!

ஒருத்தன் தன் கண்ணின் பாவையைப் போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேண்டும் அல்லவா!
உன்னை நினைத்தேன் என்றானாம்; மறந்தாயா என்று அழுதாளாம்.
இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்த பிறப்பில் பிரிவு நேருமோவென்று கண் கலங்கினாளாம்.

தும்மிய கதையெல்லாம் சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும்! வள்ளுவர் தான் எச்சரித்துள்ளாரே, “கல்லாதவரும் மிகவும் நல்லவரென்று;" எதுவரை? கற்றறிந்தவர்கள் முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும் வரையாம். ஆதலால் நிறுத்திக்கொண்டு மேற்கண்ட விளக்கங்களுக்கான குறட்பாக்களை நண்பர்கள்  பார்வைக்கு இணைத்துள்ளேன்.

//முட்டாள்களோடு நட்புக்கொள்ளுதல் மிகவும் இனிமையானதாம். ஏனென்றால் பேதையரான அவர்கள் பிரிந்து சென்றால் வருத்தம் ஏற்படாததல்லவா?//
இதை விளக்கும் குறட்பா...
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். (குறள்: 839)

//கயவரும் தேவரும் ஒத்தவராம். தேவர்களைப்போலக் கயவரும் மனம் போன போக்கில் தாம் விரும்பினதைச் செய்தலாலாம்.
அறிஞரை விடக் கயவர் திருவுடையவராம். அறிஞருக்குக் கவலை இருக்க வாய்ப்பு உண்டு. கயவருக்குத்தான் நெஞ்சத்தில் கவலையில்லையே!//
இக்கருத்துக்களைப் பிரதிபலிக்கும் குறள்கள்...
"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்" (குறள்: 1073)
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்" (குறள் 1072)

//ஒருத்தி சொன்னாளாம் நான் கண்ணுக்கு மை தீட்டமாட்டேனென்று; கண்ணிலே இருக்கின்ற காதலனுக்கு உறுத்தி துன்பம் தந்துவிடுமாம்!
"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள்: 1127)
//மற்றொருத்தி கூறினாளாம் சூடா எதையும் குடிக்க மாட்டேனென்று; நெஞ்சத்திலே இருக்கிற காதலரை அது சுட்டுவிடுமாம்.//
"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து" (குறள்: 1128)

//பூவை தலையிலே வைத்தாளாம் ஒருத்தி. இடுப்பு ஒடிந்து செத்துவிட்டாளாம். பாவி பூவின் காம்பை எடுக்காமல் வைத்து விட்டாளாம்!//
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" (குறள்: 1115)

//விண்மீன்கள் எல்லாம் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரு நிலையில் இல்லாமல் கலங்கினவாம். தலைவியின் முகத்திற்கும் சந்திரனுக்கும் வித்தியாசம் புரியாமல் தான்!//
"மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன்" (குறள்: 1116)
//தலைவியைப் பார்த்துவிட்டு குவளை பூ படக்கென்று தலையைத் தொங்கப்போட்டதாம் ; அவளுடைய கண்ணுக்கு இணையாக மாட்டோம் என்று வெக்கத்தினாலாம்!//
"காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று" (குறள்: 1114)

//ஒருத்தன் தன் கண்ணின் பாவையைப் போகச்சொன்னானாம்; அவன் காதலியை அமரவைக்க இடம் வேண்டும் அல்லவா!//
"கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்" (குறள்: 1123)

//உன்னை நினைத்தேன் என்றானாம்; மறந்தாயா என்று அழுதாளாம்.
இந்தப்பிறவியில் பிரியமாட்டேன் என்றானாம். அடுத்த பிறப்பில் பிரிவு நேருமோவென்று கண் கலங்கினாளாம்.//
இச்செய்திகளை உள்ளடக்கிய இரண்டு குறளமுதங்கள்...
"உள்ளினேன் என்றேன் மற்ற என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்" (குறள்: 1316)
"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்"  (குறள்: 1315)

//தும்மிய கதையெல்லாம் சொன்னால் இந்த பதிவு நீண்டுவிடும்!.//
"வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று" (குறள்: 1317)

//வள்ளுவர் தான் எச்சரித்துள்ளாரே, “கல்லாதவரும் மிகவும் நல்லவரென்று;’ எதுவரை? கற்றறிந்தவர் முன்னிலையில் பேசாது அமைதியாக இருக்கும் வரையாம்.//
"கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்" (குறள்: 403)

ஒற்றுமை

ஒற்றுமை

-- கவிஞர் புகாரி

கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்

காற்று தறிகெட்டு
தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது
நீர் ஆவியாகிக்
கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது
நிலம் பாளம் பாளமாய்ப்
பிளந்து கிடந்தது
நெருப்பு திக்குகளெங்கும்
திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது
வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய
கிழிக்கப்பட்டுக் கிடந்தது

அலறிச் சென்ற
அவசர ஊர்தி ஒன்றின்
பின்னால் ஓடினேன்

மருத்துவமனை!
அவசர சிகிச்சைப் பிரிவு!

படுக்கையில்
அடையாளம் தெரியாமல்
ஓர் உருவம்

குளுகோஸ்
ஏறிக்கொண்டிருந்தது
ஆக்சிஜன்
பொருத்தப் பட்டிருந்தது
இதயத்துடிப்பு
கண்காணிப்பில் இருந்தது

யார் நீ…?
என்று கேட்டேன்

நான் தான் ஒற்றுமை என்றது

என்னாயிற்று…?
ஏன் இப்படி கிடக்கிறாய்…?
என்றேன்?

வெறுப்பு என்னை
வெட்டிப் போட்டுவிட்டது
அகந்தை என்னை
அறுத்துப் போட்டுவிட்டது
சுயநலம் என்னைச்
சூரையாடிவிட்டது
வன்முறை என்னை
வழித்துப் போட்டுவிட்டது
என்றது

உதவிக்கு
யாருமே வரவில்லையா…?
என்று கேட்டேன்

சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று
சமத்துவமே என்னைக் காப்பாற்று
அறமே என்னைக் காப்பாற்று
அன்பே என்னைக் காப்பாற்று
ஞானமே என்னைக் காப்பாற்று
என்று கதறினேன்…
என்றது

ஒன்றுகூடவா உன்னைக்
காக்க வரவில்லை…?
என்று கேட்டேன்

சிதைந்த தசைகளைக் கூட்டி
மிகுந்த சிரமப்பட்டு
வறட்சியாய்
ஒரு புன்னகையை உதிர்ந்தது

புன்னகைக்காதே
பதில் சொல் என்றேன்
கோபத்தோடு

எனக்கும் முன்பே
என்னைவிடவும் படு மோசமாய்
கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு
அசரசப் பிரிவுகளில்
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கின்றன சில
சவக்கிடங்கில்
அடுக்கப்பட்டுவிட்டன பல….
என்றது

என்றால்….
மனிதர்களே இல்லாத
மயான பூமியா இது…?
என்றேன் கலவரத்தோடு

அது சரி…. நீ யார்…?
உன்னால் என்னைக் காக்க முடியுமா…?
என்று கேட்டது

அடுத்தநொடி
அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்

கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்

O

குறிப்பு:  ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை


Friday, August 21, 2020

டாக்டர் .T.A.சங்கரநாராயணன்

-- வசந்த் கட்டளைக்  கைலாசம் MD


            இந்திய மருத்துவத்துறையின் வளர்ச்சியில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தென் இந்தியாவின் முக்கிய நகரமான மெட்ராஸ் நகரில் முதல் தனியார் மருத்துவமனை 1900களில்  டாக்டர் .T.A.சங்கரநாராயணன் அவர்களால் நிறுவப்பட்டது.  இதற்கான குறிப்புகள் 'சோமர்செட் பிலேனே' (Somerset Playne) எனும் பிரிட்டிஷ் புவியியல் வல்லுநர் எழுதிய  "Southern India, Its History, People, Commerce and Industrial Resources " எனும் நூலில் பதிவிடப்பட்டுள்ளது. 

TA Sankara Narayanan3.JPG


            1913 இல் இந்தியாவிற்கு வருகை தந்த பிலேனே தனித்து உதவியாளர்களுடன் தென் இந்தியா நிலப்பரப்பை முழுவதும் பயணம் செய்து பதிவிட்டார் . அவர் The Foreign and Colonial Compiling and Publishing Company எனும் பதிப்பகம் நிறுவி தனது புத்தகங்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட Southern India, Its History, People, Commerce and Industrial Resources எனும் நூல் சென்னை வரலாற்றின் மேற்கோளாகத் திகழ்ந்து வருகிறது. இதில் தென்னிந்தியாவின் தொழில் நிறுவனங்களின் பதிவுகளில் முதல் தனியார் மருத்துவமனை நிறுவனரான டாக்டர் சங்கரநாராயணன் பற்றி விரிவாகப் பதிவிட்டிருக்கிறார். 

            மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறைகளில் அறிவுசார் வல்லுநர்கள்  நிறைந்திருந்தனர். கனிமங்கள் மற்றும் தாவரங்கள் பற்றிய அறிவால் மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணமுடிகிறது. "பொது " மருத்துவர் என்கின்ற நிலை மாறி வருகிறது. இன்றைய இளம் மருத்துவ பட்டதாரிகள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறைகளில் சிறப்புப் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

TA Sankara Narayanan2.JPG


            மருத்துவர் சங்கரநாராயணன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்று 1904 ஆண்டு மருத்துவ பணியைத் துவங்கினர். காது, மூக்கு , தொண்டை சிறப்பு மருத்துவராக பணியாற்றினார். இவரது பெரும் திறமையும் புகழும் காரணமாகத் தனது  நோயாளிகளுக்குத் தனது சொந்த பொருட்செலவில் மருத்துவமனை  நிறுவும் நிலை ஏற்பட்டது. இந்த மருத்துவமனை பிரமிக்கத்தக்க வகையில் பிராட்வே நான்கு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. மிகச்சிறந்த அறிவியல் திட்டமிடல்களுடன் தற்கால மருத்துவ வசதி பெற்றிருக்கிறது. 24  உள்நோயாளி படுக்கைகள் இருந்தன. அங்கு மருத்துவம் பெற்ற நோயாளிகள் டாக்டர் சங்கரநாராயணன், உதவியாளர்கள் மற்றும் செவிலியர்களின் திறமை , சீறிய பண்பைப் பெரிதும் பாராட்டினார். மெட்ராஸில் இதைப்போன்று வேறு எந்த நிறுவனமும் இல்லை. ஏப்ரல் 1914, இதன் திறப்புவிழாவிற்கு 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர், இது அந்த கட்டிடத்தின் புகழ் மட்டும் அல்ல அதன் உரிமையாளரின் புகழும் சேர்ந்ததாகும். மருத்துவர் சங்கரநாராயணன் தனது  சொந்த பொருட்செலவில், ரூபாய் 50,000, இப்படி ஒரு மேம்பட்ட மருத்துவ வசதியைப் பாமரரும் பயன்படும் வகையில் புரிந்த சேவையால் இந்த சமுதாயத்தின் நன்றிகளுக்கு உரியவராகிறார். மருத்துவர் சங்கரநாராயணனின் தந்தை திருநெல்வேலி மாவட்டத்தின்  மிகவும் மதிக்கப்படும் குளத்தூர் ஜமீன்தார் ஆவர்.

            இதைப்போன்றே  திருநெல்வேலி டவுன்  இல் குளத்தூர் சமீன்தார் மருத்துவமனை ஒன்றை சொந்தச்செலவில் நிறுவினார். ஆனால் அறியப்படாத காரணங்களினால் அது செயல் பாட்டிற்கு வரவில்லை. அவரது சந்ததியினர் 5 தலைமுறைகளாக, 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இந்தியா மற்றும் அல்லது உலகின்  பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவை ஆற்றி வருகின்றனர்.


சான்றுகள்: 
Southern India: Its History, People, Commerce, and Industrial Resources - https://books.google.com/books?id=8WNEcgMr11kC&source=gbs_navlinks_s


TA Sankara Narayanan1.JPG

குறிப்புகள்: 
சென்னையில் முதன்முதலாகத் தனியார் மருத்துவமனையினை நிறுவிய குளத்தூர் ஜமீன் டாக்டர்.T.A.சங்கரநாராயணன் கட்டுரை ஆசிரியரான அமெரிக்க மருத்துவர். வசந்த் கட்டளைக்  கைலாசம் MD அவர்களின் தாய்வழி கொள்ளுப் பாட்டனார் ஆவார்.

Tuesday, August 18, 2020

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு

கல்வெட்டில் குற்றம்,  தண்டனை,  தீர்வு

-- முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

முன்னுரை:
            இடைக்காலத் தமிழக வரலாற்றில் அரசுத்துறை மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது. பல்வேறுத்துறை அதிகாரிகள்,  ஊர்,  நகர சபைகள்,  கோயில் நிர்வாகம் ஆகிய அமைப்புகள் திறம்படச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கு,  தர்மநெறி பிறழாமல் கடமையாற்றியுள்ளனர். இருப்பினும் அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றுவது,  பொது நிறுவனங்களின் சொத்துக்களை முறையற்ற வழியில் அனுபவிப்பது,  லஞ்சம் வாங்குதல்,  கோயில் மற்றும் அறநிறுவனங்களில் வைக்கப்பட்ட நிரந்தர  இருப்புகளைக் கையாடல் செய்தல்,  கொலைக் குற்றங்கள்,  தற்கொலைக்குத் தூண்டுதல் என முறைகேடான செயல்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. அரசும் இதைக் கண்டறிந்து எதிர் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள்  நடைபெறாமல் பார்த்துக் கொண்டது. குற்றங்களைக் கண்டறிதல்,  தண்டித்தல்,  தீர்வு என ஏராளமான நிகழ்வுகள் இடைக்கால கல்வெட்டில் காணக்கிடக்கின்றன. அவைகளைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

குற்றங்களின் வகை:
            இடைக்காலத்தில்  அதிகார குவிப்பு மையங்களாக விளங்கிய பிரம்மதேயங்கள்,  சதுர்வேதிமங்கலங்கள்,  கோயில் நிர்வாகம்,  கிராம சபை போன்றவற்றில் குற்ற நிகழ்வுகள் நடந்துள்ளதைக் கல்வெட்டுக்கள் சுட்டுகின்றன.  இக்குற்ற நடவடிக்கைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.   அரசின் உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்  சரியாகக் கணக்குக் காட்டாமல் இருத்தல். அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து பிறர் சொத்துக்களை  அபகரித்தல்,  கையூட்டு வாங்குதல்,  அரசுக்கு வரிசெலுத்தாமல் நிலங்களை அனுபவித்தல்,  தம் கடமையைச் செய்யாமல் ஏமாற்றுதல்.
2.   கோயில் வழிபாட்டுக்கென வைத்த நிரந்தர வைப்புகளைத் திருடுதல்,  தாமே அனுபவித்தல்.
3.   திட்டமிடப்பட்ட கொலை,  தற்செயல் கொலை,  தற்கொலைக்குத் தூண்டுதல்,  முன்பகை காரணமாகக் கொலைகள் என குற்றவியல் வழக்குகளை வகைப்படுத்தலாம்.

            இவற்றில் முதல் இரண்டு குற்றங்கள் சிவில் குற்றங்களாகவும்  மற்றவை கிரிமினல் குற்றமாகவும் கருதலாம். இத்தகைய குற்றங்கள் பற்றிய செய்திகள் நமக்கு கி.பி 9 ஆம் நூற்றாண்டிலிருந்து  கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்களில் கிடைக்கின்றன. இத்தகைய குற்றங்களைப்  புரிந்தவர்கள் நிறைந்த உரிமைகளும்,  தன்னாட்சியுரிமை பெற்ற தேவதான,  பிரம்மதேய,  சதுர்வேதிமங்கலத்தை நிர்வாகம் செய்யும் பிராமணர்கள், வழிபாடு செய்து சமயத்தை வளர்க்கும் தேவகண்மிகள் போன்ற அலுவலர்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளனர். சாமானிய மக்களும் குற்றச் செயல்களில்; ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகிறது.

திட்டமிட்ட கொலை:
            பாண்டிய நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டில்  நடைபெற்ற கொலை வழக்கின் விசாரணை பற்றி சிவகங்கை மாவட்டம்,  திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணபெருமாள் கோயிலில் உள்ள மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் ஐந்து அலுவலர்கள் இருந்தனர். இவர்களுள் ஒருவர் வாமனபட்டர் என்பவராவார். இவர் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி கோயிற் பணிகளை முடித்து கிழக்கு வீதி வழியாகத் தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது  சத்தியநாவன் என்பவன் தெருவின் இருமங்கிலும் தன் அடியாட்களை ஆயுதங்களோடு நிறுத்திவைத்திருந்தான். பட்டர் இருட்டில் வருவதை அறிந்த அவ்வடியாட்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். சத்தியநாவனும் அடியாட்களும் அருகிலுள்ள பன்றித்திட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாயினர்.

            கொலையாளிகள் தப்பியோடவே “மூலப்பரிஷத்து” என்ற சபையினர் ஒன்று கூடினர். சத்தியநாவனுக்குச் சொந்தமான நிலங்கள்,  வீடுகள்,  தோட்டங்கள் முதலிய உடைமைப் பொருட்களும் ஆண்,  பெண் பணியாட்களும் கையகப்படுத்தப்பட்டு  சொக்கநாராயணப் பெருமாள் கோயிலுக்கு உடைமையாக்கப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கொலை நடந்த பத்து நாட்களுக்குள் வழங்கப்பட்டது. மேலும் கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான தேவர்கள்நாயன் என்பவன் அயல்நாட்டிற்குத் தப்பிச்சென்றதை அறிந்த ஊர்சபை அவனுடைய சொத்துக்களையும் கையகப்படுத்தி கோயிலுக்கு உரிமையாக்கினார். இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த  நான்கு மாதங்களுக்குப்பின் சத்தியநாவன் மகன் சேர்மலைப்பெருமாள் என்பவன் அவ்வூர்க் கோயில் அலுவலர் முதல் பணியாளர்கள் வரை அனைவரையும் ஒருங்கு கூட்டினான். தம்தந்தை செய்த கொலைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை எனவும்,  தாம் நிரபராதி என்றும்,  உடைமைகளின் பறிமுதலால் தாம் பெருந்துன்பத்திற்கு  ஆளாகியிருப்பதாகவும் ஊர்சபை கையகப்படுத்திய நிலங்கள்,  வீடுகள்,  தோட்டங்கள்,  பணியாளர்கள் முதலிய அனைத்தையும் மீள அளிக்க வேண்டுமென்றும்,  அதற்கு ஈடாகக் கோயிலுக்கு எண்ணூறு பணம் கொடுப்பதாகவும் விண்ணப்பம் செய்தான்.

            அவனுடைய வேண்டுதல் விண்ணப்பத்தில் உண்மையிருப்பதை ஊர் சபையோர் உணர்ந்தனர். அவ்விண்ணப்பத்தையும் ஊர்ப்  பொதுமக்களின் பரிந்துரையையும்  ஊர்சபை ஏற்றுக்கொண்டது. கோயிலுக்கு வீரகேரள மலையரையன் சந்தி என்ற கட்டளையைத் தொடர்ந்து நிறைவேற்றி  வைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் சேர்மலைப் பெருமாளுக்கு உடைமைகள் அனைத்தும் மீள வழங்கப்பட்டது.

பிறன்மனை விருப்ப கொலை:
            விழுப்புரம் மாவட்டம்,  திருக்கோவிலூர் வட்டம் ஜம்பையில் உள்ள சம்புநாதர் கோயிலில் முதலாம் இராஜராஜனின் கி.பி 1013 ஆண்டில் வெளியிடப்பட்ட  கல்வெட்டில் பிறன்மனை விருப்பத்தால் நடந்த கொலை பற்றிக் குறிப்பிடுகிறது. பாலைப்பந்தல் என்னும் ஊரைச் சார்ந்த அங்காடி பொற்றாமன் என்பவன் வாணிபம் செய்து வந்தான். அவன் சீமாதேவி என்னும் பெண்ணை தன் வாழ்க்கை துணைவியாகக் கொண்டிருந்தான். நாவலூர் என்ற கிராமத்திலிருந்து இவ்வூரில் வாழ்ந்து வந்த சீராளன் என்பவன் சீமா தேவியை அடைய விரும்பினான். ஒரு நாள் நள்ளிரவில் சீமாதேவியைக் கற்பழிக்கும் நோக்கில் வீட்டில் புகுந்து கட்டாயப்படுத்தி இழுத்தான். இந்நிகழ்வை நேரில் பார்த்த அங்காடிப்பொற்றாமன் சினம் கொண்டு சீராளனைக் குத்தி கொன்றான்.

            இவ்வழக்கை விசாரித்த ஊர்சபையோர் அங்காடிப் பொற்றாமனின் செயல் மனவெழுச்சியால் நிகழ்ந்ததாகக் கருதினர். இருப்பினும் சீராளனைக் கொன்ற குற்றத்திற்காக ஒரு நந்தா விளக்கைச் சூரியச் சந்திரர் உள்ளவரை இவ்வூர்க் கோயிலில் எரிக்க வேண்டுமென ஆணையிட்டனர். ஊர்சபையோர் கணவனை இழந்த சீராளனின் மனைவியை அணுகி இத்தீர்ப்பிற்கு இசைவையும் பெற்றனர்.

முன்பகை கொலை:
            கி.பி.1127 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விக்கிரம சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக்  கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாடு பெண்ணைத் தென்கரை நாட்டிலிருந்த கடம்பூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தைப் பற்றி விவரிக்கிறது. ககடம்பூரில் வாழ்ந்த கூடலுடையான் குளத்தான் சேந்தன் என்பவனுக்கும்,  பிச்சன்பன்மன் கண்டன் என்பவனுக்கும் பகை மூண்டிருந்தது. முன்பகைக் காரணமாக இருவரும் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது கூடலுடையான் சேந்தன் முட்டிக்குத்தியதில் பிச்சன்பன்மன் கண்டன் இறந்தான். இவ்வழக்கு ஊர் சபையோரிடம் வந்தது. பன்மன்கண்டனின் தந்தை,  பிச்சன்பன் மனைவியும்,  உடன் பிறந்த தம்பியான பெரியனையும்,  அவன் தம்பி முனையானையும்,  இளையான் அக்களனையும் அழைத்துப் பேசினர். அவர்கள் அனைவரும் கூடலுடையான் சேந்தன் செய்த கொலைக் குற்றத்திற்காக அவனை அறச்செயல் செய்ய வேண்டினர். அவர்களுடைய அனுமதி பெற்ற சபையினர் ஊர் வழக்கப்படி உரியனசெய்வதாக உறுதியளித்தனர். இக்குற்றத்திற்காகச் சேந்தனிடம் தண்டமாக முப்பத்திரண்டு பசுக்களைக் கைக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அம்முடிவை பன்மன்கண்டனின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டனர். சேந்தனும் அத்தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு முப்பத்திரண்டு பசுக்களைக் கொடுத்தான்.

தற்கொலை வழக்குகள்:
            கி.பி.1055 ஆம் ஆண்டு முதலாம் இராஜேந்திர சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டில்  இராஜேந்திர சோழ வளநாட்டின் பெண்ணை ஆற்றின் தென்கரையில் கூகுர்ப்பாடி என்னும் ஊர் இருந்தது. இதேவூரில் வீரபுத்திரன் என்பவனின் அன்னை சேந்தன் உமையாளும் வாழ்ந்து வந்தாள். அவரை வரிசெலுத்த வேண்டுமென அவ்வூர் அரசு அலுவலரான பழங்கூரன் குன்றன் என்பவன் வற்புறுத்தினான். அனைத்து வரிகளையும் சேந்தன் உமையால் செலுத்திவிட்டதாகவும் எதற்கும் வரிசெலுத்த வேண்டியதில்லை எனவும் மறுத்துக்கூறிவிட்டாள். பழங்கூரன் உமையாளை அரசன் முன்பு நிறுத்தி வரியை மீண்டும் செலுத்தச்செய்தான். அச்செயலால் மனம் நொந்த சேந்தன் உமையாள் நஞ்சு குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.நான்கு திசைகளிலிருந்த பதினெண் ஊர்களைச்சேர்ந்த ஊர்சபையினர் அனைவரும் கூடினர். வரி செலுத்திய சேந்தன் உமையாளை அரசன் முன்பு கொண்டு நிறுத்தி அவரை மீண்டும் வரி செலுத்தச் செய்து,  அவமதிப்புக்குள்ளாக்கிய செயலே தற்கொலைக்குக் காரணம் என உணர்ந்தனர். பழங்கூரன் குன்றனுக்கு ஊர்சபையோர் முப்பத்திரண்டு பொற்காசுகளைத் தண்டம் விதித்தனர். அக்காசுகளை முதலீடாகக் கொண்டு அதன் வட்டியில் நாள்தோறும் உழக்கெண்ணெய் வாங்கி கோயிலில் விளக்கு எரிக்க ஆணையிட்டனர்.

            இரண்டாம் இராஜேந்திரசோழனின் நான்காம் (கி.பி.1055 – 1056) ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்ற வணிகக்குழுவினர் இருந்தனர். இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி கட்டிலேறுவதற்குத் (திருமண சடங்கு) தயாராக இருந்தாள். தில்லைக்கூத்தனும்,  மற்றொருவனும் அதற்குத் தடையாக இருந்து மணமகனுக்கு இராமன் என்பவனின் மகளைத் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் முதல் பெண் நஞ்சு குடித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள். இதனை அறிந்த திசை ஆயிரத்து ஐநூற்றுவரும்,  பெருநிரவியரும் இதற்குப் பிராயச்சித்தமாகச் சங்கு பரமேசுவரியை எழுந்தருளுவித்து இவ்வூர்க் மாதேவர்க்கு மூன்று சந்தியும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தற்செயல் கொலைகள்:
            திண்டிவனம் வட்டம்,  கிடங்கில் பக்தபிரஹதீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கசோழனின் 21வது (கி.பி.1091) ஆட்சியாண்டைச் சார்ந்த கல்வெட்டு தற்செயல் கொலையைப் பற்றிக் கூறுகிறது. ஓய்மாநாட்டு குடிப்பள்ளி கிராமத்தில் மாலன் என்பவனின் மகன் கற்றளி என்னும் ஆறு வயது சிறுவன் இருந்தான். இவன் ஒருநாள் கையில் அரிவாளைக் கொண்டு மரத்தை வெட்டிக்கொண்டிருந்தான். அப்போது இவ்வூர்க் பொன்மகனார் மகன் நக்கன் என்னும் ஏழு வயது சிறுவன் விளையாட்டாகக் கையை நீட்டக் கையை வெட்டிவிட்டான். சிறுவன் நக்கன் இறந்து விடுகிறான். தன்மகன் கற்றளி கையை வெட்டி மரணத்தை ஏற்படுத்திய செயலுக்காக மாலன் மனம் நொந்து கோயிலுக்கு விளக்கெரிக்க நாள்தோறும் உழக்கெண்ணெய் அளித்துள்ளான்.

            விழுப்புரம் மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை வட்டத்தில் எலவனாசூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் பத்தாம் ஆட்சி யாண்டைச் சார்ந்த (கி.பி. 1173) கல்வெட்டு தற்செயல் கொலை வழக்கைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஜனநாதவளநாட்டு பரனூர்க் கூற்றத்து மாடூரில் வாழ்ந்த கோச்சாத்தன்காமன் என்பவனின் அகமுடையாள் ஏதோ காரணத்திற்காக தன் மகள் மீது கடும் கோபத்துடன் அரைமனை (அரிவாள்மனையாக இருக்கலாம்) கோலை வீசினாள். அக்கோலானது இலக்கு மாறி இதேவூரை சார்ந்த மிண்டன்காமன் என்பவனுடைய மகள் மீது பட்டது. காயமுற்ற அப்பெண் இருபது நாள்வரை இன்னல்பட்டு இறந்தாள். இவ்வழக்கு ஊர்சபைக்கு வந்தது. குற்றங்களைத் தீர விசாரித்த சபையோர் கோச்சாத்தன்காமனின் அகமுடையாள் உயிர்க்கொலை செய்யும் நோக்கில் அரைமனைகோலை எறியவில்லை. இந்நிகழ்வு எதிர்பாராமல் கைப்பிழைப்பாடாக நடந்த விபத்து என்று தீர்ப்புக் கூறினார். இருப்பினும் கோச்சாத் தன்காமனிடம் முப்பத்திரண்டு பசுக்களைத் தண்டமாகப் பெற்றனர். இப்பாவத்திற்குக் கழுவாயாக கோச்சாத்தன் அகமுடையாள் கோயிலுக்கு விளக்கு வைக்க இருதிறத்தாரும் ஒப்புக்கொண்டனர்.

            இதேகோயிலில் உள்ள மூன்றாம் இராஜராஜசோழனின் பத்தாவது ஆட்சியாண்டு (கி.பி.1226) கல்வெட்டு மற்றொரு தற்செயல் கொலை வழக்கைப்பற்றிக் கூறுகிறது. வடநாரையூர்க் கூற்றத்து வாணபிராட்டியிலிருக்கும் ஆறிக்குளத்தூருடையான் முடிகொண்டான் காரியாந வீரபாலன் என்பவன் பன்றி வேட்டையாட இரவு காட்டிற்குச் சென்று அம்பு எய்ய,  அது குறிதவறி புஞ்ச நூற்பள்ளிபடியன் கந்தனான புஞ்ச நூற்போயன் மகன் தில்லையான் ஆறாயிரப்போயன் மீது பட அவன் இறந்து விடுகிறான். இவ்வழக்கை விசாரித்த ஊர் சபையோர் இச்சம்பவத்திற்கு ஏதேனும் முன்பகை உள்ளனவா என்பதைத் தீரவிசாரித்தனர். இந்நிகழ்வு தற்செயலாக நடந்ததே தவிர பகையேதுமில்லை என்று தீர்ப்புக் கூறினர். இதன் கழிவிரக்கமாக வீரபாலன் எலவனாசூர் கோயிலுக்கு முப்பத்திரண்டு பசுக்களைத் தானமாகக் கொடுத்துள்ளான்.

சிவில் வழக்குகள்:
            பண்டையகால அரசுக்கு நிலவருவாயே நிரந்தரவருவாயாகும். “அறு கூறினால் புரவு மாயாதியும் பொன்னும் பெறுமாறு சோழகோன்” என்ற கல்வெட்டு வரியில் ஆறில் ஒருபங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டதை அறிய முடிகிறது. இதில் “புரவு” என்ற சொல் நிலவரியைச் சுட்டுவதாகும். இவ்வரிகளை வசூல் செய்வதற்காக ஒவ்வொரு ஊரிலும் புரவுவரி சீகரணம்,  புரவு வரியார்,  புரவுவரித் திணைக்களநாயகம் என்ற பெயரில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மக்களிடம் நிலவரியை வசூல் செய்து அரசுக்குச் செலுத்த வேண்டும். இருப்பினும் வரி ஏய்ப்பு செய்பவர்கள், பொய்க்கணக்கு எழுதும் அதிகாரிகளும் இருந்துள்ளனர். இவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிக் காண்போம்.

            கடலூர் மாவட்டம்,  காட்டுமன்னார்கோவில் வட்டம் ஓமாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டில் நிலவரி செலுத்தாதவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிக் கூறுகிறது. ஸ்ரீஉலகளந்த சோழச்சதுர்வேதிமங்கலத்திலிருந்த சிலர் நிலத்தின் மீதான வரியைச் செலுத்தாமல் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இவர்களுக்கு இதேவூரைச் சேர்ந்த பிராமணர்கள் சிலர் பிணையளித்திருந்தனர். பிணையளித்தவர்களும் வரியைச் செலுத்தவில்லை. இதனால் வரியை உடனே செலுத்துமாறு இவர்களுக்கு ஆணையிடப்பட்டது. ஆணைப்படி வரிகட்டத் தவறியதால் பிணைஅளித்தவர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவர்களின் நிலத்தை பிணைவிளையாகப் பெற்றுக்கொள்ளயாரும்  முன்வராததால் நிலத்தின் ஒரு பகுதியினை கோயில் நிர்வாகத்தினரே விலைக்குப்  பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினர். கோயில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஆபரணங்களை விற்று நிலங்களை கோயில் நிர்வாகமே வாங்கியது.

            தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பலூர் கைலாசநாதர் கோயிலில் உள்ள மூன்றாம் இராஜராஜ சோழனின் 19ஆம் ஆட்சியாண்டைச்சார்ந்த கல்வெட்டு பொய் கணக்கு எழுதியதற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையைப்பற்றிக் கூறுகிறது. “நம்மூரில் காணி உடையநாய் கணக்கெழுதி வன்தசேஞலூருடையான் மதளை உத்தமப்பிரியன் எல்லோமுக்கும் மேற்கிராமத்து துரோகியாய் கணக்கெழுதலாகா தொழிகையால் இவனும் இவன் வங்கிஷத்தாரும் இவன் உறவு முறையென்று வந்து கணக்கெழுதுவார்களாகில் திருவாணை புவன முழுதுடையாராணை” என்ற கல்வெட்டு வரியால் சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன் என்பவன் பொய்க்கணக்கு எழுதியதை அவ்வூர் சபையோர் தணிக்கை செய்தபோது கண்டறிந்தனர். உடனே அவனை அரசுப்பணியிலிருந்து நீக்க ஆணையிடப்பட்டுள்ளது. இனி அவனும்,  அவனது வழித்தோன்றல்களாக வருவோரும்,  அவனுடைய உறவினர் என்று சொல்லிக் கொண்டு வருகின்றவர்களுக்கு ஊர்கணக்கு எழுத நிரந்தர தடை விதிக்கப்பட்டதையும் உணரமுடிகிறது.

மெகா வரியேய்ப்பு நடவடிக்கை:
            பழையவடஆர்க்காடு மாவட்டம் அரக்கோணம் வட்டம் திருமால்புரத்திலுள்ள சோழர் கல்வெட்டில்  மெகாவரியேய்ப்பு முறைகேடு பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு நூறு வரிகளைக் கொண்டது. இவ்வரியேய்ப்பு முதலாம் ஆதித்த சோழனின் 22ஆவது (கி.பி 893) ஆண்டிலிருந்து,  உத்தம சோழனின் நான்காம் (கி.பி 974) ஆட்சியாண்டு வரை ஏறக்குறைய 82 ஆண்டுகள் நடந்துள்ளது. திருமால்புரத்துக் கோயில் வழிபாட்டிற்காக புரவுநெல் 3,000 காடி,  இரவு நெல் 561 காடி,  பொன்னாக 200 கழஞ்சு,  சிற்றியாற்றூர் என்ற ஊரும் தானமாக அளிக்கப்பட்டது. இவ்வூர் நிலங்களில் சங்கப்பாடிகிழான் என்பவனின் நிலம் மட்டும் நீக்கி பிற நிலங்கள் அனைத்தும் கொடையாக அளிக்கப்பட்டன.

            இந்த ஊரை ஏற்று மேற்கூறிய அளவு வரியைச் செலுத்தும் பொறுப்பை புதுப்பாக்கம் சபையோர் ஏற்றுக்கொண்டனர். இது தொண்டைமானாற்றூர் துஞ்சினதேவரின் (முதலாம் ஆதித்த சோழன்) 21 ஆட்சியாண்டில் கொடுக்கப்பட்டு 22 ஆவது ஆண்டில் சாசனம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றிய  விவரம் அரசாங்க வருவாய் கணக்குப் புத்தகத்தில் எழுதப்படவில்லை. ஆனால் இப்படி  அரசுக் கணக்கில் எழுதப்படாமல் இருந்த விவரம் பராந்தக சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகும் புதுப்பாக்கத்துச் சபையோர் கோயிலுக்குச் சேரவேண்டிய  பொன்னையும்,  நெல்லையும் கொடுக்காமல் இவ்வரசனின் 36 ஆவது ஆண்டுவரை அதாவது முப்பத்திரண்டு ஆண்டுகள் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அரசன் சபையோரிடமிருந்து  சங்கப்பாடிகிழான் முதலிய அனைத்து நிலங்களையும் மீட்டு கோயிலின் நேரடி நிர்வாகத்தில் விடுகிறான்.

            ஆனால் இப்படி முன்னர் நீக்கிய சங்கப்பாடிகிழான்  நிலத்தைக் கோயிலுக்கு வரியிலிட்டு குடுத்தப்பின்னரும் அந்த நிலத்தைப் புதுப்பாக்கதுச் சபையோர் வன்முறையினால் கைப்பற்றி அனுபவித்துக் கொண்டதுடன் கோயிலுக்குச் சேரவேண்டிய இறையையும் கட்டாமல் விடுகின்றனர். இந்த வரியேய்ப்பை  எதிர்த்துக் கேட்ட கோயில் அதிகாரிகளையும் அவர்கள் துன்புறுத்தியுள்ளனர். சபையோர்களின் அட்டகாசம்  எல்லை மீறியபோது இத்தகவல் அரசனிடம் முறையிடப்படுகிறது. அதனை கேட்ட அரசன் கோயில் அதிகாரிகளையும்,  சபையோரையும் அழைத்து நேரடி விசாரணை செய்த போது ஊழல் வெளிப்படுகிறது. சபையோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். மேலும் இவ்வழக்கு விசாரணையானது இப்பகுதியின் பிரம்மதேயக் கிழவர்கள்,  நாட்டார்கள்,  நகரத்தார்கள்,  ஊரார்கள்,  பள்ளிச்சந்தம் மற்றும் பிற சபை அமைப்புகளின் அலுவலர்கள் போன்றோர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அப்போது மன்னனுடன் கருமம் ஆராய்கின்ற அதிகாரி ஒருவனும்,  நடுவிருக்கை,  ஆணத்தி,  வாய்க்கேழ்வி,  ஓலை எழுதும் அதிகாரி,  ஓலைநாயகம்,  புரவுவரி அதிகாரி,  உத்தரமந்திரி,  வரிப்பொத்தகக் கணக்கு ஆகிய வருவாய்த்துறை அதிகாரிகளும் உடனிருந்து வழக்கை நடத்தி ஒழுங்குபடுத்தியுள்ளனர். இதிலிருந்து பிரம்மதேய சபையோர்கள் அரசனின் ஆணைகளையே மதியாமல் ஏமாற்றும் துணிச்சல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். இவ்வழக்கிற்காக மன்னன் காஞ்சிபுரம் வந்து விசாரணை செய்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தண்டனைகள்:
            சபையோர் நீதி வழங்குவதில் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் வாதி,  எதிர்வாதி ஆகியோரின் முன்னிலையில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினர். மேலும் வாதியின் குடும்பத்தினரை அழைத்து இக்குற்றத்திற்கு என்ன வழிகாணலாம் எனக்  கேட்கப்பட்டிருப்பது ஊர்சபையோரின்  மிக உயர்ந்த நீதி வழங்கும் பண்பைக் காட்டுகிறது. மேலும் சபையோர் மரண வழக்குகளைக் கையாண்ட விதம் அளப்பரியதாக உள்ளது. காரணம் கொலைக் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பெறாமல் குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் தண்டம் விதித்து அத்தொகையைக் கோயிலுக்கு விளக்கெரிக்க நிவந்தமாக அளிக்க வேண்டுமென விதியமைத்துள்ளனர். மனிதன் சமுதாய,  அரசியல் சட்டங்களுக்கு மேலாகத் தன்னுடைய மன சாட்சிக்குக் கட்டுப்பட்டவன் ஆவான். கொலைசெய்தல் கொடுமையான செயல் என்று  அறிந்தும் மனவெழுச்சியால்  அறிவிழந்து அக்கொடிய செயலுக்கு உட்படுகிறான். சூழ்நிலையே ஒருவனைக் குற்றவாளியாக  ஆக்குகிறது. இதனை உணர்ந்த சபையோர் கொலைக்குற்றம் செய்தவர்களுக்குத் தாம் செய்த தவற்றை உணர்ந்து சிந்திக்க  வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய கருது கோளை கொண்டிருந்ததை அறியமுடிகிறது. குற்றம் செய்தவனை மரணத்தின் மூலம் தண்டிப்பதை விட அவனைச் சீர்திருத்துவதில் தான்  நீதியின் பெருமை நிலைநிறுத்தப்படுகிறது.  குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்க விதியிருந்தும் 302 இ.பி.கோ வின் கீழ் ஆயுள்தண்டனையாக மாற்றி விதிப்பதற்கு ஒப்பாக இக்கல்வெட்டு தீர்ப்புகள் உள்ளன. காலம் தாழ்த்தினால் நியாயம் மறுக்கப்படுகிறது என்பர். கல்வெட்டுக்களில் காலம் தாழ்த்தப்படாமல் நீதி வழங்கிய முறை சிந்திக்க வைப்பதாக உள்ளது.

தீர்வுகள்:
            வேண்டுமென்றே திட்டமிட்டுக் கொலை செய்தமை இன்றைய குற்றவியல்  சட்டம் இ.பி.கோ 300 விதிக்குப்பொருந்த வாமனப்பட்டர் சத்தியநாவனால் கொலைசெய்யப் பெற்றான். மரணம் நேரிடும் என்று தெரிந்தே மரணம் நேரிடும் வகையில் ஈடுபட்டமை இன்றைய குற்றவியல்  விதி இ.பி.கோ.299 விதிக்குப் பொருந்த சீராளனை அங்காடி பொற்றாமன் கொன்றது. இந்தியக் குற்றவியல் சட்டம் 350 பிரிவில் உடலைத் தாக்குதல்  குற்றம் எனக் கூறப்பட்டுள்ளது. கோச்சாத்தன்காமன் அகமுடையாள் அரைமனைகோல்; எறிந்தது,  வீர பாலன் அம்பு எய்ந்தது. கற்றளி என்னும் ஆறுவயது சிறுவனின் கையை வெட்டியது போன்ற நிகழ்வுகள் தற்செயலாக வேட்டையாடும்போதோ,  சுடும்போதோ,  நேரிடக் கூடிய மரணம் இன்றைய குற்றவியல் விதி இ.பி.கோ 304 சட்டப்பிரிவின் படி குற்றமாகும்.

            முதலாம் பராந்தகனின் காலத்தில் ஊர் சபைகள் எவ்வாறு குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு  இயங்கின என்பதை அவனது 19 மற்றும் 21 ஆவது ஆட்சியாண்டு  கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டு ஊர்ச்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஊரில் நடக்கும் சபை தேர்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய  உறுப்பினர்களின் தகுதி,  விதிமுறைகள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவ்விதி முறைகளின் வீரியத் தன்மைகளை நோக்கும் போது,  எந்த அளவுக்கு முந்தைய கால நிர்வாகத்தில் உறுப்பினர்கள் ஊழல் புரிந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. இதனை உணர்ந்த அரசன் ஊழலை நிரந்தரமாகத் தடுக்கும் விதிகளை ஆராய்ந்து வகுத்தளித்துள்ளான். இதன்மூலம் கிராம நிர்வாகத்திலிருந்த ஊழலின் ஊற்றுக் கண்கள் முழுவதும் அடைக்கப்பட்டது எனலாம்.

            முதலாம் பராந்தகனுக்குப் பின்பு இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது தொண்டைமண்டலம். திடீர்  அரசியல் மாற்றத்தால் கிராம சபையில் ஊழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகச் சபையோர் நீதி வழங்கும் முறைக்கான விதிமுறைகளை ஒழுங்கு படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. உத்திரமேரூரில் மகாசபை பேரம்பலத்தின் முன்புள்ள திண்ணையில் பகல் நேரத்தில் கூடி நீதி வழங்கியதையும்,  ஊர்சபையோர்   எடுத்த சில முடிவுகள் பற்றியும் கன்னரதேவனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
·              ஊர்சபையோரால் தண்டிக்கப்பெற்ற குற்றவாளிக்கு விதித்த தண்டத்தொகை அனைத்தையும் உடனே ஊர்சபை வசூல் செய்ய வேண்டும். வசூல் செய்த தொகையை  அந்த ஆண்டே கிராமத்தை ஆட்சி செய்யும் பெருமக்கள் குழுவிடம் கணக்கைக் கொடுத்து பைசல் செய்யவேண்டும்.
·              அவ்வாறு தண்டத்தொகை செலுத்த இயலாமல் தீர்வு பெறாத வழக்குகளைச் சபையோரைக் கொண்டு மீண்டும் தண்டம் விதிக்கச் செய்து முழுத்தொகையும் வசூல் செய்ய வேண்டும்.
·              தண்டனை பெற்ற ஒருவன் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து தன் குற்றமின்மையை மெய்ப்பிக்க விரும்பினாலோ,  வேறு சபையோரிடம் தன்னுடைய வழக்கை முறையிட்டு நீதி பெற விரும்பினாலோ,  அதற்கும் அக்கிராம சபையினர் ஆவன செய்ய வேண்டும். அவ்வூர் நடுநிலையாளரையும்,  பாதுகாவலரையும் உடன் சேர்த்துப் பேசித் தண்டிக்கப்பெற்ற அதே ஆண்டிற்குள் அவ்வழக்கைத் தீர்த்து வைக்க வேண்டும்.
·              தீர்வுபெறாத வழக்குகளை மீண்டும் சபையோரைக் கொண்டு உடனடியாக தீர்க்க வேண்டும்.    
·              இவ்வாறு கிராம காரியம் செய்வோர் செய்யாத நிலையில் அவர்களுடைய பதவியைப் பறித்து காணம் பொன் தண்டமிட்டனர். மேலும் எவ்வித அநீதிச் செயல்களும் நிகழாமல் வழக்கைத் தீர்த்துக் கொடுக்க உத்திரமேரூர் சபையோர்  உறுதியளித்துள்ளனர்.

            எனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனுக்குடன் விசாரணை செய்து தீர்ப்பதில் கிராமசபை உறுப்பினர்கள் எந்த அளவிற்கு விவேகத்துடன் செயல்படவேண்டும் என்பதை உத்திரமேரூர் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.

முடிவுரை:
            தமிழக வரலாற்றில்  இடைக்கால சோழர் காலமாகும், பராந்தக சோழனது காலத்திற்கு பிறகும்,  இராஜராஜனின் ஆரம்பக்காலத்திலும்,  சோழப் பேரரசின் இறுதி காலகட்டத்திலும்,  அதிகமாக ஊழல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பராந்தகனுக்குப் பிறகு கெடிலக்கரை வரையில் இராஷ்டிரகூடர்களின் ஆளுகையின் கீழ் தொண்டைநாடு சென்றது. இக்காலத்தில்தான் அப்பகுதியில் கிராமசபை,  கோயில்  நிர்வாகம்,  சதுர்வேதிமங்கலம்,  பிரமதேயங்களில் ஊழல்கள் மலிந்த நிகழ்வுகள் நடந்;தேறியுள்ளன. அதன் பிறகு முதலாம் இராஜராஜசோழன் மேற்கொண்ட  அதிரடி நடவடிக்கையால் நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் சோழப்பேரரசின் இறுதி நூற்றாண்டில் ஆட்சி செய்த வலிமை குன்றிய சோழவேந்தர்களின் காலத்தில் உள்ளாட்சி அமைப்பினர் எதேச்சைய அதிகாரம் பெற்றவர்களாகச் செயல்பட்டதை உணரமுடிகிறது. மேலும் 399 ஆண்டு சோழர்; ஆட்சியில் வலிமை மிக்க,  வல்லமைபெற்ற தலைமையில் ஊழல்,  குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் அறியமுடிகிறது.

குறிப்பு நூல் பட்டியல்:
1.   தென்னிந்தியக் கல்வெட்டுகள்,  மடலம் VII
2.   கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்,  மடலம்; I
3.    INSCRIPTIONS TEXTS OF THE PUDUKOTTAI STATE
4.   ஜம்பை ஓர் ஆய்வு,  தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை
5.   தென்னிந்தியக் கல்வெட்டுகள்,  மடலம் XXII
6.   கல்வெட்டு ஆண்டறிக்கை,  மடலங்கள் 1914, 1918, 1927, 1939
7.   அருண்மொழி ஆய்வுத் தொகுதி,  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
8.   ச.கிருஷ்ணமூர்த்தி,  வரலாற்றில் எலவானாசூர்க்கோட்டை
9.   தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்,  பிற்கால சோழர் வரலாறு
10. தென்னிந்தியக் கல்வெட்டுகள்,  மடலம் XVII
11. M.S. கோவிந்தசாமி,  “அசோகரும் அவருடைய காலமும்”

தொடர்பு:
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி - தஞ்சாவூர்Friday, August 14, 2020

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

--  ரெங்கையா முருகன்

(வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு 07/07/1908)

            1908 ம் ஆண்டு மார்ச் மாதம் வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் இணைந்து அன்றைய வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்புப்பேச்சு நிகழ்த்தியமைக்காக இந்தியத் தண்டனைச் சட்டம் 124-A. மற்றும் 153 – A ஆகிய சாதாரண பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நடத்திய விசாரணைக்குப் பின்பு திருநெல்வேலி ராஜநிந்தனை வழக்காக மாறியது.

            1908 மார்ச் 17 ம் தேதி வ.உ.சி, சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இந்த வழக்கைத் தொடுத்தவர் எல்.எம், வின்ச். கோரல்மில் வேலை நிறுத்த போராட்ட வெற்றி, பி.சி.பால் சிறையிலிருந்து வருகையையொட்டிய மாபெரும் சிறப்பு அரசியல் கூட்டங்கள், ஆரம்பத்தில் 500 பேர் கூடிய கூட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 3000 பேர்க்கு மேல் கூடிய கூட்டங்கள் போன்றவை ஆங்கிலேயருக்குக்  கிலியை உண்டாக்கியது.

            இக் கூட்டத்தில் சுதேசிய கொள்கைகளான புறக்கணிப்பு, மற்றும் சுயராஜ்ஜியம், காலணியாதிக்க எதிர்ப்புணர்வு அனல் கக்கும் பேச்சுக்கள் நெல்லை மக்களை எழுச்சியடையச் செய்தது.  தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் அசர வைக்கும் மேடைப் பேச்சினால் சாதாரண அடித்தட்டு மக்களிடையே அரசியல் உணர்வை எழுப்பியதால் நெல்லை, தூத்துக்குடி எங்கும் வந்தேமாதரம் கோசம் வானைப் பிளந்தது.பாளையங் கோட்டையிலிருந்து  நடந்து சென்று கொண்டிருந்த ஹார்வி சகோதரர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். சுதேசிய உணர்ச்சியின் மிகுதியால் திருநெல்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்த புகழ் பெற்ற ஐரோப்பிய ஏபெல் சர்க்கஸ் கம்பெனி பொதுசனங்கள் ஆதரவின்மையால் முடங்கியது.  தமிழகமெங்கும் சுதேசிய பற்றாளர்கள் உருவாகி அரசியல் சொற்பொழிவாற்றி சுதேசிய கொள்கைகளைப் பரப்பியதில் ஜி.சுப்பிரமணிய அய்யர், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா போன்றோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.

            இதற்கிடையே சுதேசிய எழுச்சியைக் கண்டு எரிச்சலடைந்த கலெக்டர் வின்ச் அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காக வழக்கு கோரி வ.உ.சி, சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள். மேலும் 107வது பிரிவு 4வது விதியின் கீழ் சட்டம் வகுத்துரைக்கும் விசாரணை முடியும் வரை தனது விருப்பப்படி சிறைக்காவலில் வைக்க நீதிபதிக்கு அதிகாரமுண்டு. மார்ச் 12 ம் தேதி மூவரும் நன்னடத்தை உத்தரவாதம் வழங்கினாலும் கலெக்டர் வின்ச் ஏற்க மறுத்ததோடு மாவட்ட சிறையில் வைத்து ஏப்ரல் 1 ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தான்.வின்ச் தனது அதிகார மமதையினால் சட்டச்சூழ்ச்சியின் மூலம் மூவரையும் கட்டாய காவலில் வைக்கப்பட்டதால் கொதிப்படைந்த நெல்லை மக்கள் கலகத்தில் இறங்கினர். பத்மநாப அய்யங்கார் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

            அரசின் பிரதிநிதியாக இந்த வழக்கினை இ.பி.பாவெல் (அரசு வழக்கறிஞர்), மதுரை அமர்வு நீதிபதி ஆர்தர் பிரான்சிஸ் பின்ஹே ஆகியோர் திருநெல்வேலி துணை அமர்வு வழக்குகளை விரைவாக நடத்தப் பரிந்துரைக்கப்பட்டு, இ.எச். வாலஸ் திருநெல்வேலி துணை நீதிபதியாக்கப்பட்டார். இந்த நெல்லை வழக்கில் வ.உ.சி.க்காக வாதாடியவர் தஞ்சாவூர் என்.கே.இராமசுவாமி அய்யர் மற்றும் சடகோபாச்சாரி, நரசிம்மச்சாரி ஆகியோர். சுப்பிரமணிய சிவாவிற்காகப்  பால் பீட்டர் பிள்ளை மற்றும் கவுடல். இந்த கலக வழக்கில் 927 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இறுதியாக 97 பேரிடம் விசாரிக்கப்பட்டனர். ஆட்சி எதிர்ப்பு வழக்குகளில் 327 பேரிடம் விசாரிக்கப்பட்டனர். சுமார் 25 நாட்கள் தொடர்ந்து ஆட்சியெதிர்ப்பு வழக்கில்  பின்ஹேயால் விசாரிக்கப்பட்டனர். மார்ச் முதல் ஜூலை வரை சுமார் மூன்று மாதங்கள் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

            இந்த வழக்கு ஜூலை மாதம் 7ம் தேதி தீர்ப்பு என்று பின்ஹேயால் அறிவுறுத்தப்படுகிறது. நாடெங்கும் எப்படித் தீர்ப்பு வரக் காத்திருக்கிறதோ என்ற பரபரப்பான சூழலில் கிடக்கிறது. தீர்ப்புக்கு முன்னதாக வ.உ.சி . அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் திருநெல்வேலிக்கு வந்து தங்கியிருந்தனர். மேலும் இந்த வழக்கை நடத்தும் விதத்திலேயே தெரிந்து விட்டது. வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவினையும் சிறைக்கு அனுப்பிவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுதான்.

            இறுக்கமான சூழலில் ஜூலை 7ஆம் தேதி காலையில் வ.உ.சி.யின் மைத்துனர் பிச்சையா அவர்கள் காப்பி கொண்டு வந்து கொடுக்கிறார். மைத்துனரின் முகம் வாடிய நிலையில் இருப்பதை அறிகிறார்.ஒரு கட்டத்தில் தாளமாட்டாமல் மைத்துனர் அழுகிறார்.தெய்வச் செயல்படி நடக்கிறது மைத்துனரே. அதே தெய்வத்துணையால் சீக்கிரம் திரும்ப வருவேன் என்று கூறி மனதைத் தேற்றி என் மனைவியிடமும்(மைத்துனரின் தங்கை) கவலைப்படாமல் இருக்கச் சொல் என்று கூறுகிறார். அத்துடன் தன் பொறுப்பிலிருந்த புத்தகங்கள் மற்றும் நகைகளை மைத்துனரிடம் ஒப்படைக்கிறார்.

            மதியவேளை உணவு கொண்டு வந்த வேளையில் மூத்தமகன் தன் தந்தை பெயர் கொண்ட உலகநாதன் கேட்டைத் திறந்து வந்த வேளையில் வ.உ.சி. தனது இளம் வயது பாலகனைக் கண்டதும் பதை பதைத்துத் தூக்கி முத்தம் கொடுத்துக் கொஞ்சினார். இதனை தமது சுயசரிதையில்

            “என்னுயிர் முதல் மகன் ஏகினன் கேற்றுள். என்னுயிர் பதைத்தது; என்னுளம் அழிந்தது;எடுத்தேன்; முத்தினேன்;என் மடியில் வைத்தேன்;கொடுத்தேன் தின்பன. கூறினேன் சில சொல்.
என்று பதிவு செய்கிறார்.

            தனது குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுகிறார். மகன் உலகநாதன் வ.உ.சி.யை நோக்கிக் கீழ்க்கண்டவாறு குறுக்கு விசாரணை செய்கிறான்.


                        “அய்யா அம்மை (அம்மா-வ.உ.சி. மனைவி) அழுது கொண்டிருக்கிறாள்" என்றான்.
                        “அய்யா நீயும் அம்மாவோடு சேர்ந்து அழுதையா” என்று கேட்கிறார்.
                        “நான் அழவில்லை. ஆனால் உன்னை இன்று பொழுதடைந்ததும் அசலூருக்கு கூப்பிட்டுப் போகிறார்களாமே மாமா சொல்கிறான், நிசம்தானா அய்யா ” என்று மழலை மொழியில் கேட்க, அவரோ என்ன சொல்வதென்று அறியாமல்
                        “மாமா உன்னை அழ வைக்க அப்படிச் சொல்லியிருக்கிறான்” என்று பையனைத் தேற்றுகிறார்.
                        "சரி அது போகட்டும். நான் அசலூரு சென்றால் நீ அழாமல் தைரியமாக இருப்பியா” என்று சின்னஞ்சிறு பாலகனிடம் கேட்கிறார்.
                        சிறைக்குச் செல்லப்போகிறார் என்பதை அறியா பாலகன், நீ அசலூருக்குச்  சென்றால் நான் அழமாட்டேன். ஆனால் என்னை விட்டு எப்படிப் பிரிந்து செல்வாய்" என்று கேட்கிறான் பாலகன் உலகநாதன்.
                        தனது பையனிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் வ.உ.சி.யின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகுகிறது.
                        பெருகி வரும் கண்ணீரைத் துடைக்க வ.உ.சி. கைக்குட்டையைத் தேடி எடுப்பதற்கு முன் இளம் பாலகன் உலகநாதன் தனது பிஞ்சுக் கரங்களால் தந்தையின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.
                        என்னசெய்வதென்று அறியாத வ.உ.சி. பிள்ளையிடம் மயங்கிய மனநிலையிலிருந்து தன்னைத் திடப்படுத்திக் கொண்டு தனது பாலகனின் கண்களில் வரும் கண்ணீரைத் துடைத்து விடுகிறார் வ.உ.சி.
                        பின்பு தனது பையனிடம் அய்யா யாரழுதாலும் நீ அழாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று பாலகனைத் தேற்றி விட்டு உச்சி மோந்து முத்தம் கொடுத்து தனது மைத்துனரிடம் பையனை நன்றாகப் பார்த்துக் கொள் என்று ஒப்படைக்கிறார்.

                        இந்த நிகழ்வை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணிய சிவா, மற்றும் குருநாதன், சிறை வார்டர்கள் பையனுக்கும் வ.உ.சி.க்கும் இடையே நடந்து கொண்டிருந்த பாசப் போராட்டம் அவர்களுடைய கண்களையும் குளமாக்கி விட்டன.  பின்பு வ.உ.சி. ”தவத்தின் பயனிது தளரற்க” என்று கூறி அவர்களையும் ஆசுவாசப்படுத்துகிறார்.

                        அதற்குள் வ.உ.சி மற்றும் சிவாவை அழைத்துச் செல்ல எண்ணிலடங்கா போலீசார்படை வெளியில் தயாராக இறங்கியது. நாலா பக்கமும் போலீசு படை. தெருவெங்கும் ஒரே பரபரப்பு. தெருவின் நாலா பக்கமும் வெடிகளை வெடித்து உசார்படுத்தி இரண்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு பொது மக்களும் நாலா பக்கமும் சூழ அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

                        என்ன தீர்ப்பு வந்தாலும் சந்திக்கத் தயாராக இருந்த மனநிலையில் பின்ஹே முன்பு தீர்ப்புக்காக நிறுத்தப்பட்டார்.

தனது சுயசரிதையில்:
                        “ஏதிவண் நிகழினும் இளைத்திடேல்” என்று கூறியிருக்கிறார் வ.உ.சி. ஆனால் பின்ஹேயின் தீர்ப்பு நெல்லை மக்களை மட்டுமல்ல, இந்தியாவைத் தாண்டி லண்டன் வரை கற்றோர் மனமும் கலங்கடித்த தீர்ப்பாக வெளிவந்தது.

                        “சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இருவர்க்கத்தாரிடைய பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட, சாவிற்குப் பின் ராஜதுவேஷத்தையூட்டும் என்று எழுதிய தீர்ப்பினை வாசித்தார்.

                        அரசை எதிர்த்துப் பேசிய சொற்பொழிவுக்காகச் சுப்பிரமணிய சிவாவிற்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை.சிவாவிற்குத் தனது இல்லத்தில் வ.உ.சி அடைக்கலம் கொடுத்தமைக்காக ஒரு 20 வருட ஆயுள் தண்டனையும், நெல்லையில் அரசை எதிர்த்துப் பேசிய ஒரு சொற்பொழிவுக்காக இன்னொரு இருபது வருடமும் ஆக 40 வருட ஆயுட்கால தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

                        கோர்ட் அதிர்ந்தது. தீர்ப்பைக் கேள்விப்பட்ட வ.உ.சி.யின் தம்பி மீனாட்சிசுந்தரம் பிள்ளை மனம் சித்தம் கலங்கிப் பிறழ்ந்தது.  (வ.உ.சி.யின் தம்பி மனம் பிறழ்ந்த நிலையில் 1943 வரை வாழ்ந்தவர். வ.உ.சி. மனம் பிறழ்ந்த தம்பிக்காக ”இவர் எந்தக் கடைக்குச் சென்று உணவு கேட்டாலும் கடைக்காரர்களைக் கொடுக்கும்படி வேண்டியும் அதற்குரிய தொகையைத் தாமே தந்து விடுவதாக வாக்குறுதியும் அளிக்கச் செய்து தண்டோரா மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். (அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார். பக்கம்.173)

                        ஆனால் வ.உ.சி.யின் மனமோ “இறையும் கலங்கா தென்னுளம் கவர்ந்துள்ள இறையின் கொடையென ஏற்றேன். ஆயினும் நீதியை நினைத்து நெஞ்சோடு நகைத்தேன்.” எனச் சிறிது கூட மனம் கலங்கா நிலையில் அவரவர் வினைவழி அவரவர் வினைப்பயன் என்ற நிலையில் தீர்ப்பினை கேட்டும் கலங்காதிருந்தார். கோர்ட் முன்பு கூடிய சகல ஜனங்களையும் கலைத்து விட்டு போலீசு படை சிறையை நோக்கி வ.உ.சி.யை அழைத்து வருகிறது. அந்த நிமிடத்திலிருந்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். அழைத்து வரும் வழியில் கோவில் முன் கண்கலங்கி நின்ற பெரிய மைத்துனரைப் பார்த்துக் கவலைப்படாதீர்கள் என்று தேற்றுகிறார்.  அப்படியே தந்தை உலகநாத பிள்ளை எதை நினைத்துப் பயந்தாரோ அது அவர் கண் முன் தன் மகனுக்கு நடந்த இரட்டை ஆயுட்கால சிறைவாச தீர்ப்பைக் கேட்டுக் கலங்கிய நிலையில் மகன் வ.உ.சி.யைக் கண்டு “நீ கவலைப்படாதே கடவுள் இருக்கிறார் என்று வ.உ.சி.க்கு ஆறுதல் கூறுகிறார்.


                        தனது மூத்த வயது இளம் பாலகன் உலகநாதனை வ.உ.சி.யின் கண் தேடுகிறது. அந்த நேரத்தில் மூத்த மகனைக் காணாமல் அலை பாய்ந்த நிலையில் இரண்டாவது இளம் பாலகனை மைத்துனர் தூக்கி வைத்திருப்பதைக் கண்ட வ.உ.சி.க்கு கண்களிலிருந்து பெருகும் கண்ணீரை அடக்கமுடியாமல் உணர்வு வயப்பட்ட நிலையில் பார்த்துக் கொண்டே முன்னேறிச் செல்கிறார்.   அடுத்தாக மனைவி மீனாட்சி அம்மாள் வீட்டின் மேலே தலைவிரி கோலமாகக்  கையை தலையில் வைத்து அழுது அரற்றிக் கொண்டிருப்பதைக்  காவலர்கள் அழைத்துச் செல்லும் வண்டியில் உட்கார்ந்து கொண்டே மனவேதனையுடன் மனைவியைக்  கவனிக்கிறார். வண்டியில் உட்கார்ந்த வண்ணம் தனது கைகளாலும் கண்களாலும் மனைவியைத் தேற்றி மகன்களைக்  கவனமாகக் கவனித்துக் கொள் என்று கைகள் மற்றும் கண்கள் வழியாகவே அறிவுறுத்துகிறார்.

                        அச்சமயம் வ.உ.சி. அமர்ந்த வண்டி அருகே வந்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக அம்மா வீட்டினுள் உருண்டு புரண்டு அழுது மயங்கிய நிலையைக் கூற, வ.உ.சி. மேலும் என்னசெய்வதென்றறியாது விசனிக்கும் நிலையில் சிறையை நோக்கி வண்டி வேகமாக நகர்ந்து சென்றது.

                        சிறைக்குள் சென்றதும் துணை சிறை அதிகாரி உட்படச் சிறையிலிருந்த சிலர் வ.உ.சி.யை நெருங்கி வந்து அழுதபடியே தனது ஆற்றாமை நிலையை வெளிப்படுத்தினர். அவர்களைத் தேற்றும் விதமாகக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

                        “அப்பா நீ இனி மேல் அயரேல்’ என்றான்
                        “அயர்தல் என்றும் அணுகா தென்னை;
                        “உயர்தல் ஒன்றே ஓன்றும் என்றேன்” என்று கூறுகிறார்.

                        சிறைக்குள் அடைக்கப்பட்டதும் மரத்தின் பட்டையை ஒத்த முரட்டுத் துணியால் ஆன காலும் கையமல்லாத கால் சட்டை மற்றும் கைச் சட்டை ஒன்றும், தலைக்குக் குல்லா கொடுத்து அணியச் சொன்னார்கள். அதை அணிந்ததும் முண்டம் போல் இருந்தது என்கிறார் வ.உ.சி.

                        மேலும் அந்த உடை “எம்பெயர் உயரவும், எம்முருத் தாழவும்” இருந்தது எனப் பகடியாகக் கூறுகிறார்.

                        காலுக்கு ஒரு விலங்கு அணிவிக்கப்பட்டதைக் காலுக்குக் கரும் பொற் கழலணி” எனக் கீழ்க்கண்டவாறு பகடியில் கூறும் வ.உ.சி. அவர்கள்

                        ”தந்தான் வலது கால் தண்டைகள் எமக்கே
                        அறும் பொன் காலிடல் அபசாரமாதலால்
                       இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே” என்று குறிப்பிடுகிறார்.

                        சாப்பிடுவதற்குச் சட்டியும் கலயமும் அளிக்கப்பட்டது . இரவு நன்றாகத் தூங்கி எழுந்த காலை வேளையில் கல்லும் மண்ணும் நிறைந்த புளுத்த கேழ்வரகு கூழ் அளிக்கப்பட்டது. கூழை உண்ண முடியாமல் கொட்டி விடுகிறார்.

                        சிறை அதிகாரிகள் வந்து கோயமுத்தூர் மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்வதாகத் தகவல் தரப்பட்டது. அதன்படி சுப்பிரமணிய சிவாவினை வணங்கிவிட்டு, இறைவனையும் வணங்கினார்.சிறை வெளியில் கேட் அருகே வந்த பொழுது வண்டியில் ஏற்றிக் கொண்டு வ.உ.சி. செல்லும் வழியில் எண்ணற்றோர் கூடி வழி அனுப்பும் வேளையினில் மீண்டும் மைத்துனர் வந்து நீங்கள் சிறையிலிருந்து வெளிவரும் நாளை எப்போது உங்களைக் காணப் போகிறேன் என்று அழுது புலம்புகிறார். மைத்துனரை வணங்கி விட்டு விடை பெற்றுச்  செல்லும் வழியெங்கும் வ.உ.சியைக் கண்டு பொதுசனங்கள் தாளாது அழுகையுடன் வழி அனுப்புவதைப்  பார்க்கிறார்.

                        வ.உ.சி.க்காக கோர்ட்டில் வாதாடிய சடகோபாச்சாரியார் மற்றும் வெங்கு அய்யர் ஆகியோர் வண்டி அருகில் வந்து உங்களை எப்படியாவது சிறைவாசத்திலிருந்து மீட்டெடுப்போம் என்று ஆறுதல் தரும் மொழியைப் பகர்கின்றனர்.   சுதேசியத்தை விடாதீர்.அது ஒன்றே நம்மை மீட்டெடுப்பதற்கான தீர்வு என்று கூடிய கூட்டத்தில் பகர்கிறார். கூடிய கூட்டமும் ஒருங்கிணைந்து நன்றெனச் சுதேசியத்தைக் கைவிட மாட்டோம் என்று பகர்கின்றனர்.

                        எண்ணிலாப் போலீஸ் பந்தோபஸ்துடன் ரயிலில் ஏற்றப்பட்டார். ஒவ்வொரு முக்கிய ரயில் நிறுத்தத்தில் எண்ணிலடங்கா மக்கள் கூடிக் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு கங்கை கொண்டான், மணியாச்சி, மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிறுத்தங்களில் தியாகப் பெருமகனை அழுகையுடன் வாழ்த்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.  கோயமுத்தூரில் இறங்கிய வ.உ.சி.யை காலிலும், கையிலும் விலங்கும் சங்கிலியும் மாட்டிப் போலீசார் அழைத்துச் சென்றார்கள். வெள்ளைக்கார சார்ஜண்டும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் பத்து ஜவான்களும் சேர்ந்து வ.உ.சி.யை அழைத்துச் சென்றது கோவை மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். வெள்ளை சார்ஜண்ட் உருவிய வாளுடன் நடந்தார். இன்ஸ்பெக்டரின் இடுப்பில் ரிவால்வர் இருந்தது. மற்ற ஜவான்கள் பையோனட் மாட்டிய ரைபிளுடன் சென்றார்கள்.கோவைச் சிறைச்சாலையில் கேட்டைத் தாழிட்டு வ.உ.சி.யை சிறையில் அடைத்தார்கள்.

                        வ.உ.சி.க்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இந்தியா மட்டுமல்ல இந்தியாவைத் தாண்டி லண்டன் வரை இந்த தீர்ப்பு சகிக்கமுடியாத அநீதி என்று ஆங்கிலேயப் பிரமுகர்களே நொந்துபோயினர். இந்தியாவில் உள்ள ஆங்கிலேயப் பத்திரிக்கைகள் ஸ்டேட்ஸ்மேன், ஸ்டாண்டர்டு போன்ற இதழ்கள் வ.உ.சி.க்கு அளிக்கப்பட்ட அநியாய தண்டனையைக் கடுமையாகக் கண்டித்தன. பிரிட்டீஸ் இந்திய மந்திரி மார்லி அவர்கள் மிண்டோவுக்கு எழுதிய கடிதத்தில் இத் தண்டனை நிலைக்காது. மிகவும் அக்கிரமமான செயல். இத் தீர்ப்பை நான் ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன் எனக் கூறி இச் செயல் வெடிகுண்டு கலாச்சாரத்துக்குத்தான் வழி செய்யும் என்று எச்சரித்தார். இவரது தீர்க்கமான பார்வை ஆஷ் கொலையில் முடிந்தது என அறியமுடிகிறது. ஆனாலும் கலெக்டர் வின்ச் இவர்களுக்கு அளிக்கப்பட்ட கடுமையான தண்டனையைக் கண்டு மக்கள் பயப்படுவார்கள். இனிமேல் எவர் ஒருவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பேசத் துணியமாட்டார்கள் என எச்சரித்தான்.                        பின்பு கடுமையான முயற்சியில் பரலி சு. நெல்லையப்பர் துணையுடன் வ.உ.சி. மனைவி மீனாட்சிஅம்மாள் விடாது முயற்சி செய்து மீண்டும் மேல் கோர்ட் சென்று வழக்காடி 1908 நவம்பர் 4 ம் தேதி சார்லஸ் அர்னால்ட் ஒயிட் மற்றும் மில்லர் ஆகியோர் அமர்வு இருக்கையில் வ.உ.சி. ஏககால ஆயுட்கால தண்டனை ஆறு வருடங்களாகக் குறைக்கப்பட்டது.  வ.உ.சி. கோவைச் சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டார். கல் உடைத்தார். சணல் இயந்திரத்தைச் சுற்றினார். இத்துடன் நல்ல பல தமிழ் நூல்களினை எழுதினார். கோவைச் சிறைக் கைதிகளின் கலகத்திற்குப் பிறகு கண்ணனூர்ச்  சிறைக்கு மாற்றப்பட்டார்.

                        கண்ணனூர் சிறையில் மிகப்பெரிய தண்டனையான கம்பளியைப் போர்த்தி விட்டுப் பல கைதிகளைக் கொண்டு அடித்து மிதித்து உதைக்கும் முறையைக் கண்டு அஞ்சியிருந்த வேளையில் அந்த தண்டனையிலிருந்து தான் தப்பியதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
                        “எந்தச் செய்தியும் இயம்பினால் அடி விழும்
                        அடியும் வெற்றடி அன்று; கம்பளம் போர்த்
                        தடியும் மிதியும் அனேகர் தருவது.
                        கம்பளம் போர்த்து மெய் வெம்பிட அடிப்பது
                        இச் சிறை யன்றிவே றெச்சிறை யிலிலுமில்லை.
                        அடிப்பவர் கைதிகள்; அடிக்கச் சொல்லுவோர்
                        ஜெயிலினை ஆளும் ஜெயிலர் ஆகியோர்
                        எவன்தான் அஞ்சான் இக் கம்பள அடி?
                        எவன்தான் கண்டதை இயம்பத் துணிவன்?                        வ.உ.சி. சிறையிலிருந்து வருவதற்குள் வஞ்சகன் ஆஷ் மற்றும் கலெக்டர் வின்ச் முயற்சியால் அவருடைய கனவான சுதேசி கப்பல் கம்பெனியை அவரது பங்குதாரர்களை வைத்துச் சீரழித்து ஆங்கிலேயர்களிடமே விற்க வைத்து வ.உ.சி.யை அவமானப் படுத்தினர் நம்மாட்கள். ஆனால் அதே வேளையில் வங்காளத்தில் ஒருவர் வ.உ.சி.யைப் போன்று சுதேசி கப்பல் விட்ட வேளையில் ஆங்கிலேயர்கள் நெருக்கடி கொடுத்த வேளையில் வங்காள மக்கள் விட்டுக் கொடுக்காமல் மானத்தைக் காத்தனர். இங்கு வ.உ.சி.யை திட்டமிட்டு அவமானப்படுத்தி வெள்ளையர்கள் வெற்றி கொண்டனர்.

                        வ.உ.சி. சிறையை விட்டு வெளி வரும் வேளையில் அவரை வரவேற்கும் விதமாக ராமாயணத்தில் ராமபிரான் வனவாசம் முடித்து வரும் வேளையில் அயோத்தி மக்கள் எப்படி வரவேற்றனரோ அதே போல் வ.உ.சி.யை நம் தமிழக மக்கள் சிறையிலிருந்து வெளி வரும் பொழுது வரவேற்பார்கள் என்று கனவு கண்ட பாரதி கீழ்க்கண்டவாறு மூன்று பாடல்கள் எழுதி பரலி.சு. நெல்லையப்பரிடம் கொடுத்தனுப்பினார்

                        “வேளாளன் சிறை புகுந்தான்
                        தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே
                        கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ,
                        வருந்தலையென் கேண்மைக் கோவே
                        என்று எழுதி அனுப்பினார்.

                        ஆனால் மகாகவியின் இந்த வரி கானல் நீராய், கனவாய் வ.உ.சி. விசயத்தில் பொய்த்துப் போனது. செய்நன்றியறிதல் திருக்குறளுக்குப் பாத்திரமாக விளங்கிய வ.உ.சி.க்கு நம் மக்கள் காட்டிய செய்நன்றி அவரை வரவேற்கப் போகாமலிருந்ததுதான். அன்றைய காங்கிரஸ்காரர்கள் உட்படச் செல்லவில்லை.  காரணமென்னவெனில் சிறையிலிருந்து அவரை வெளியிட சில மாதங்களுக்கு முன்பாகவே பிரிட்டிஷ் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மிகவும் இரகசியமாகக் கையாண்டது.

                        24.12.1912 வ.உ.சி. விடுதலை அடைந்து அவர் போய் சேருமிடம் உடனே தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். அவர் எந்த மாவட்டத்திற்கும் செல்வதாயிருந்தால் இரயில் நிற்கும் எல்லா முக்கியமான நிலையங்களுக்கும் ஆட்களை அனுப்பி அவரை பார்க்க வருபவர்கள் பெயர்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்.  வ.உ.சி. இந்த மாவட்டத்திற்கு வந்தவுடன் அவரை பார்க்க வருபவரைக் கண்காணிக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டரையும், ஒரு தலைமைக் கான்ஸ்டெபிளையும் அனுப்புவதாகவும், அவரோடு சம்பந்தப்பட்டவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்று பதிவு செய்யப்படுவார்கள் என்றும், அரச நிந்தனைக் குற்றங்களில் ஈடுபட்டால் அவரை நாடு கடத்த மனு செய்யப்படும் என்று எச்சரிப்பதன் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் எவ்வளவு அச்சம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது.

                        இந்த உத்தரவு ஸ்டூவர்ட் என்ற ஆங்கிலேயரால் இந்த ரகசிய அறிக்கை சம்பந்தப்பட்ட எல்லா காவல் நிலையங்களிலும், பொது நாட் குறிப்பேட்டிலும் மற்றும் இரயில்வே நிலையத்திலும் பதிவு செய்யப்பட உத்தரவிடப் பட்டிருக்கிறது. 1912 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் தேதி அவர் சிறைவாசத்தை முடித்து விட்டு வெளியே வரும் பொழுது அவரை வரவேற்க அவரது நண்பர் தொழுநோய் வியாதியுடன் வருகை புரிந்தவர் சுப்பிரமணிய சிவா மற்றும் அவரது தூரத்து உறவினர் கண்ணனூர் கணபதிபிள்ளை இரண்டு பேரைத் தவிர்த்து ஒரு ஆள் கூட வரவில்லை. வெளியே வந்த பிறகு கூட வ.உ.சி.யை பார்ப்பதைத் தவிர்த்தனர் பல பெரும் தலைவர்கள். தண்டனை அடைந்ததால் வழக்காடும் சன்னத் உரிமையும் பறி போனது. வ.உ.சி.யின் மனதில் தாம் தோற்றுவிட்டோம் என்ற எண்ணமும் அவரை வதைத்தது. அவரது கனவான சுதேசி கப்பலை நேர் எதிரியான பிரிட்டிஷாரிடமே விற்று விட்டதை எண்ணி எண்ணி மனம் குமைந்தார்.

                        சென்னையில் பல இன்னல்களுக்கிடையே அரிசிக் கடை, மண்ணெண்ணெய் கடை , நெய்க்கடை வைத்து அவரால் சோபிக்க முடியவில்லை. இத்துடன் சென்னையில் தொழிற்சங்கப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டார். தன்மானம் உள்ளவன் சிறை புகுந்தால் ஒன்று ஞானியாக வெளியே வருவான் அல்லது மிருகப்பிராயமாக மனிதத்தன்மை இழந்து வருவான். இது வ.உ.சி.யின் அனுபவ மொழி. அவர் வெளியே வருகையில் ஒரு ஞானியின் நிலையில்தான் வந்தார்.

                        அவரைச் சார்ந்த அரசியல் நண்பர்கள், ஆளுமைகள் கைவிட்டாலும் தமிழ் மீதுள்ள பேரன்பு அவரை திருக்குறள் மணக்குடவர் உரை பதிப்பாசிரியராகவும், தொல்காப்பியத்தைச் செதுக்கிய அன்பராகவும், சிவஞான போதத்தின் வேதாந்த உரையாசிரியராகவும், திருக்குறளும், தொல்காப்பியமும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்து தமிழர்களின் இதயங்களில் மாபெரும் துருவநட்சத்திரமாகத் தனித்துவம் அடைந்துள்ளார்.

                        வரும் 2021 ஆம் ஆண்டு வ.உ.சி.யின் 150வது ஆண்டு வரும் வேளையில் தமிழர்களான நாம் பெருமைக்குரிய தியாகியின் ஒவ்வொரு கால அடிச்சுவட்டையும் நினைக்கும் விதமாக இக்கட்டுரை எழுதப்பட்டது. 150 ம் வருடத்தில் வ.உ.சி.யை கவுரவிக்கும் விதமாகத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்த குரலுடன் இந்திய அரசாங்கத்துக்குப் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டி வேண்டுகோள் வைப்போம்.
       


நன்றி:               
இக்கட்டுரைக்கு ஓவியங்கள் வரைந்த வள்ளிநாயகம் மற்றும் சசி மாரீஸ் அவர்களுக்கும் என் நன்றி.
இக்கட்டுரை எழுத வ.உ.சி.யின் சுயசரிதை மற்றும் ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்த வ.உ.சி.யும் பாரதி பாரதியும் நூல் உதவியாக இருந்தது.தொடர்பு:
ரெங்கையா முருகன் - https://www.facebook.com/rengaiah.murugan.73