Friday, August 14, 2020

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

--  ரெங்கையா முருகன்

(வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு 07/07/1908)

            1908 ம் ஆண்டு மார்ச் மாதம் வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் இணைந்து அன்றைய வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்புப்பேச்சு நிகழ்த்தியமைக்காக இந்தியத் தண்டனைச் சட்டம் 124-A. மற்றும் 153 – A ஆகிய சாதாரண பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நடத்திய விசாரணைக்குப் பின்பு திருநெல்வேலி ராஜநிந்தனை வழக்காக மாறியது.

            1908 மார்ச் 17 ம் தேதி வ.உ.சி, சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் மூவர் மீதும் இந்த வழக்கைத் தொடுத்தவர் எல்.எம், வின்ச். கோரல்மில் வேலை நிறுத்த போராட்ட வெற்றி, பி.சி.பால் சிறையிலிருந்து வருகையையொட்டிய மாபெரும் சிறப்பு அரசியல் கூட்டங்கள், ஆரம்பத்தில் 500 பேர் கூடிய கூட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 3000 பேர்க்கு மேல் கூடிய கூட்டங்கள் போன்றவை ஆங்கிலேயருக்குக்  கிலியை உண்டாக்கியது.

            இக் கூட்டத்தில் சுதேசிய கொள்கைகளான புறக்கணிப்பு, மற்றும் சுயராஜ்ஜியம், காலணியாதிக்க எதிர்ப்புணர்வு அனல் கக்கும் பேச்சுக்கள் நெல்லை மக்களை எழுச்சியடையச் செய்தது.  தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் அசர வைக்கும் மேடைப் பேச்சினால் சாதாரண அடித்தட்டு மக்களிடையே அரசியல் உணர்வை எழுப்பியதால் நெல்லை, தூத்துக்குடி எங்கும் வந்தேமாதரம் கோசம் வானைப் பிளந்தது.பாளையங் கோட்டையிலிருந்து  நடந்து சென்று கொண்டிருந்த ஹார்வி சகோதரர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். சுதேசிய உணர்ச்சியின் மிகுதியால் திருநெல்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்த புகழ் பெற்ற ஐரோப்பிய ஏபெல் சர்க்கஸ் கம்பெனி பொதுசனங்கள் ஆதரவின்மையால் முடங்கியது.  தமிழகமெங்கும் சுதேசிய பற்றாளர்கள் உருவாகி அரசியல் சொற்பொழிவாற்றி சுதேசிய கொள்கைகளைப் பரப்பியதில் ஜி.சுப்பிரமணிய அய்யர், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா போன்றோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.

            இதற்கிடையே சுதேசிய எழுச்சியைக் கண்டு எரிச்சலடைந்த கலெக்டர் வின்ச் அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காக வழக்கு கோரி வ.உ.சி, சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள். மேலும் 107வது பிரிவு 4வது விதியின் கீழ் சட்டம் வகுத்துரைக்கும் விசாரணை முடியும் வரை தனது விருப்பப்படி சிறைக்காவலில் வைக்க நீதிபதிக்கு அதிகாரமுண்டு. மார்ச் 12 ம் தேதி மூவரும் நன்னடத்தை உத்தரவாதம் வழங்கினாலும் கலெக்டர் வின்ச் ஏற்க மறுத்ததோடு மாவட்ட சிறையில் வைத்து ஏப்ரல் 1 ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தான்.வின்ச் தனது அதிகார மமதையினால் சட்டச்சூழ்ச்சியின் மூலம் மூவரையும் கட்டாய காவலில் வைக்கப்பட்டதால் கொதிப்படைந்த நெல்லை மக்கள் கலகத்தில் இறங்கினர். பத்மநாப அய்யங்கார் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

            அரசின் பிரதிநிதியாக இந்த வழக்கினை இ.பி.பாவெல் (அரசு வழக்கறிஞர்), மதுரை அமர்வு நீதிபதி ஆர்தர் பிரான்சிஸ் பின்ஹே ஆகியோர் திருநெல்வேலி துணை அமர்வு வழக்குகளை விரைவாக நடத்தப் பரிந்துரைக்கப்பட்டு, இ.எச். வாலஸ் திருநெல்வேலி துணை நீதிபதியாக்கப்பட்டார். இந்த நெல்லை வழக்கில் வ.உ.சி.க்காக வாதாடியவர் தஞ்சாவூர் என்.கே.இராமசுவாமி அய்யர் மற்றும் சடகோபாச்சாரி, நரசிம்மச்சாரி ஆகியோர். சுப்பிரமணிய சிவாவிற்காகப்  பால் பீட்டர் பிள்ளை மற்றும் கவுடல். இந்த கலக வழக்கில் 927 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இறுதியாக 97 பேரிடம் விசாரிக்கப்பட்டனர். ஆட்சி எதிர்ப்பு வழக்குகளில் 327 பேரிடம் விசாரிக்கப்பட்டனர். சுமார் 25 நாட்கள் தொடர்ந்து ஆட்சியெதிர்ப்பு வழக்கில்  பின்ஹேயால் விசாரிக்கப்பட்டனர். மார்ச் முதல் ஜூலை வரை சுமார் மூன்று மாதங்கள் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

            இந்த வழக்கு ஜூலை மாதம் 7ம் தேதி தீர்ப்பு என்று பின்ஹேயால் அறிவுறுத்தப்படுகிறது. நாடெங்கும் எப்படித் தீர்ப்பு வரக் காத்திருக்கிறதோ என்ற பரபரப்பான சூழலில் கிடக்கிறது. தீர்ப்புக்கு முன்னதாக வ.உ.சி . அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் திருநெல்வேலிக்கு வந்து தங்கியிருந்தனர். மேலும் இந்த வழக்கை நடத்தும் விதத்திலேயே தெரிந்து விட்டது. வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவினையும் சிறைக்கு அனுப்பிவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுதான்.

            இறுக்கமான சூழலில் ஜூலை 7ஆம் தேதி காலையில் வ.உ.சி.யின் மைத்துனர் பிச்சையா அவர்கள் காப்பி கொண்டு வந்து கொடுக்கிறார். மைத்துனரின் முகம் வாடிய நிலையில் இருப்பதை அறிகிறார்.ஒரு கட்டத்தில் தாளமாட்டாமல் மைத்துனர் அழுகிறார்.தெய்வச் செயல்படி நடக்கிறது மைத்துனரே. அதே தெய்வத்துணையால் சீக்கிரம் திரும்ப வருவேன் என்று கூறி மனதைத் தேற்றி என் மனைவியிடமும்(மைத்துனரின் தங்கை) கவலைப்படாமல் இருக்கச் சொல் என்று கூறுகிறார். அத்துடன் தன் பொறுப்பிலிருந்த புத்தகங்கள் மற்றும் நகைகளை மைத்துனரிடம் ஒப்படைக்கிறார்.

            மதியவேளை உணவு கொண்டு வந்த வேளையில் மூத்தமகன் தன் தந்தை பெயர் கொண்ட உலகநாதன் கேட்டைத் திறந்து வந்த வேளையில் வ.உ.சி. தனது இளம் வயது பாலகனைக் கண்டதும் பதை பதைத்துத் தூக்கி முத்தம் கொடுத்துக் கொஞ்சினார். இதனை தமது சுயசரிதையில்

            “என்னுயிர் முதல் மகன் ஏகினன் கேற்றுள். என்னுயிர் பதைத்தது; என்னுளம் அழிந்தது;எடுத்தேன்; முத்தினேன்;என் மடியில் வைத்தேன்;கொடுத்தேன் தின்பன. கூறினேன் சில சொல்.
என்று பதிவு செய்கிறார்.

            தனது குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுகிறார். மகன் உலகநாதன் வ.உ.சி.யை நோக்கிக் கீழ்க்கண்டவாறு குறுக்கு விசாரணை செய்கிறான்.


                        “அய்யா அம்மை (அம்மா-வ.உ.சி. மனைவி) அழுது கொண்டிருக்கிறாள்" என்றான்.
                        “அய்யா நீயும் அம்மாவோடு சேர்ந்து அழுதையா” என்று கேட்கிறார்.
                        “நான் அழவில்லை. ஆனால் உன்னை இன்று பொழுதடைந்ததும் அசலூருக்கு கூப்பிட்டுப் போகிறார்களாமே மாமா சொல்கிறான், நிசம்தானா அய்யா ” என்று மழலை மொழியில் கேட்க, அவரோ என்ன சொல்வதென்று அறியாமல்
                        “மாமா உன்னை அழ வைக்க அப்படிச் சொல்லியிருக்கிறான்” என்று பையனைத் தேற்றுகிறார்.
                        "சரி அது போகட்டும். நான் அசலூரு சென்றால் நீ அழாமல் தைரியமாக இருப்பியா” என்று சின்னஞ்சிறு பாலகனிடம் கேட்கிறார்.
                        சிறைக்குச் செல்லப்போகிறார் என்பதை அறியா பாலகன், நீ அசலூருக்குச்  சென்றால் நான் அழமாட்டேன். ஆனால் என்னை விட்டு எப்படிப் பிரிந்து செல்வாய்" என்று கேட்கிறான் பாலகன் உலகநாதன்.
                        தனது பையனிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் வ.உ.சி.யின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகுகிறது.
                        பெருகி வரும் கண்ணீரைத் துடைக்க வ.உ.சி. கைக்குட்டையைத் தேடி எடுப்பதற்கு முன் இளம் பாலகன் உலகநாதன் தனது பிஞ்சுக் கரங்களால் தந்தையின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.
                        என்னசெய்வதென்று அறியாத வ.உ.சி. பிள்ளையிடம் மயங்கிய மனநிலையிலிருந்து தன்னைத் திடப்படுத்திக் கொண்டு தனது பாலகனின் கண்களில் வரும் கண்ணீரைத் துடைத்து விடுகிறார் வ.உ.சி.
                        பின்பு தனது பையனிடம் அய்யா யாரழுதாலும் நீ அழாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று பாலகனைத் தேற்றி விட்டு உச்சி மோந்து முத்தம் கொடுத்து தனது மைத்துனரிடம் பையனை நன்றாகப் பார்த்துக் கொள் என்று ஒப்படைக்கிறார்.

                        இந்த நிகழ்வை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணிய சிவா, மற்றும் குருநாதன், சிறை வார்டர்கள் பையனுக்கும் வ.உ.சி.க்கும் இடையே நடந்து கொண்டிருந்த பாசப் போராட்டம் அவர்களுடைய கண்களையும் குளமாக்கி விட்டன.  பின்பு வ.உ.சி. ”தவத்தின் பயனிது தளரற்க” என்று கூறி அவர்களையும் ஆசுவாசப்படுத்துகிறார்.

                        அதற்குள் வ.உ.சி மற்றும் சிவாவை அழைத்துச் செல்ல எண்ணிலடங்கா போலீசார்படை வெளியில் தயாராக இறங்கியது. நாலா பக்கமும் போலீசு படை. தெருவெங்கும் ஒரே பரபரப்பு. தெருவின் நாலா பக்கமும் வெடிகளை வெடித்து உசார்படுத்தி இரண்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு பொது மக்களும் நாலா பக்கமும் சூழ அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

                        என்ன தீர்ப்பு வந்தாலும் சந்திக்கத் தயாராக இருந்த மனநிலையில் பின்ஹே முன்பு தீர்ப்புக்காக நிறுத்தப்பட்டார்.

தனது சுயசரிதையில்:
                        “ஏதிவண் நிகழினும் இளைத்திடேல்” என்று கூறியிருக்கிறார் வ.உ.சி. ஆனால் பின்ஹேயின் தீர்ப்பு நெல்லை மக்களை மட்டுமல்ல, இந்தியாவைத் தாண்டி லண்டன் வரை கற்றோர் மனமும் கலங்கடித்த தீர்ப்பாக வெளிவந்தது.

                        “சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இருவர்க்கத்தாரிடைய பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட, சாவிற்குப் பின் ராஜதுவேஷத்தையூட்டும் என்று எழுதிய தீர்ப்பினை வாசித்தார்.

                        அரசை எதிர்த்துப் பேசிய சொற்பொழிவுக்காகச் சுப்பிரமணிய சிவாவிற்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை.சிவாவிற்குத் தனது இல்லத்தில் வ.உ.சி அடைக்கலம் கொடுத்தமைக்காக ஒரு 20 வருட ஆயுள் தண்டனையும், நெல்லையில் அரசை எதிர்த்துப் பேசிய ஒரு சொற்பொழிவுக்காக இன்னொரு இருபது வருடமும் ஆக 40 வருட ஆயுட்கால தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

                        கோர்ட் அதிர்ந்தது. தீர்ப்பைக் கேள்விப்பட்ட வ.உ.சி.யின் தம்பி மீனாட்சிசுந்தரம் பிள்ளை மனம் சித்தம் கலங்கிப் பிறழ்ந்தது.  (வ.உ.சி.யின் தம்பி மனம் பிறழ்ந்த நிலையில் 1943 வரை வாழ்ந்தவர். வ.உ.சி. மனம் பிறழ்ந்த தம்பிக்காக ”இவர் எந்தக் கடைக்குச் சென்று உணவு கேட்டாலும் கடைக்காரர்களைக் கொடுக்கும்படி வேண்டியும் அதற்குரிய தொகையைத் தாமே தந்து விடுவதாக வாக்குறுதியும் அளிக்கச் செய்து தண்டோரா மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். (அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார். பக்கம்.173)

                        ஆனால் வ.உ.சி.யின் மனமோ “இறையும் கலங்கா தென்னுளம் கவர்ந்துள்ள இறையின் கொடையென ஏற்றேன். ஆயினும் நீதியை நினைத்து நெஞ்சோடு நகைத்தேன்.” எனச் சிறிது கூட மனம் கலங்கா நிலையில் அவரவர் வினைவழி அவரவர் வினைப்பயன் என்ற நிலையில் தீர்ப்பினை கேட்டும் கலங்காதிருந்தார். கோர்ட் முன்பு கூடிய சகல ஜனங்களையும் கலைத்து விட்டு போலீசு படை சிறையை நோக்கி வ.உ.சி.யை அழைத்து வருகிறது. அந்த நிமிடத்திலிருந்து சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். அழைத்து வரும் வழியில் கோவில் முன் கண்கலங்கி நின்ற பெரிய மைத்துனரைப் பார்த்துக் கவலைப்படாதீர்கள் என்று தேற்றுகிறார்.  அப்படியே தந்தை உலகநாத பிள்ளை எதை நினைத்துப் பயந்தாரோ அது அவர் கண் முன் தன் மகனுக்கு நடந்த இரட்டை ஆயுட்கால சிறைவாச தீர்ப்பைக் கேட்டுக் கலங்கிய நிலையில் மகன் வ.உ.சி.யைக் கண்டு “நீ கவலைப்படாதே கடவுள் இருக்கிறார் என்று வ.உ.சி.க்கு ஆறுதல் கூறுகிறார்.


                        தனது மூத்த வயது இளம் பாலகன் உலகநாதனை வ.உ.சி.யின் கண் தேடுகிறது. அந்த நேரத்தில் மூத்த மகனைக் காணாமல் அலை பாய்ந்த நிலையில் இரண்டாவது இளம் பாலகனை மைத்துனர் தூக்கி வைத்திருப்பதைக் கண்ட வ.உ.சி.க்கு கண்களிலிருந்து பெருகும் கண்ணீரை அடக்கமுடியாமல் உணர்வு வயப்பட்ட நிலையில் பார்த்துக் கொண்டே முன்னேறிச் செல்கிறார்.   அடுத்தாக மனைவி மீனாட்சி அம்மாள் வீட்டின் மேலே தலைவிரி கோலமாகக்  கையை தலையில் வைத்து அழுது அரற்றிக் கொண்டிருப்பதைக்  காவலர்கள் அழைத்துச் செல்லும் வண்டியில் உட்கார்ந்து கொண்டே மனவேதனையுடன் மனைவியைக்  கவனிக்கிறார். வண்டியில் உட்கார்ந்த வண்ணம் தனது கைகளாலும் கண்களாலும் மனைவியைத் தேற்றி மகன்களைக்  கவனமாகக் கவனித்துக் கொள் என்று கைகள் மற்றும் கண்கள் வழியாகவே அறிவுறுத்துகிறார்.

                        அச்சமயம் வ.உ.சி. அமர்ந்த வண்டி அருகே வந்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக அம்மா வீட்டினுள் உருண்டு புரண்டு அழுது மயங்கிய நிலையைக் கூற, வ.உ.சி. மேலும் என்னசெய்வதென்றறியாது விசனிக்கும் நிலையில் சிறையை நோக்கி வண்டி வேகமாக நகர்ந்து சென்றது.

                        சிறைக்குள் சென்றதும் துணை சிறை அதிகாரி உட்படச் சிறையிலிருந்த சிலர் வ.உ.சி.யை நெருங்கி வந்து அழுதபடியே தனது ஆற்றாமை நிலையை வெளிப்படுத்தினர். அவர்களைத் தேற்றும் விதமாகக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

                        “அப்பா நீ இனி மேல் அயரேல்’ என்றான்
                        “அயர்தல் என்றும் அணுகா தென்னை;
                        “உயர்தல் ஒன்றே ஓன்றும் என்றேன்” என்று கூறுகிறார்.

                        சிறைக்குள் அடைக்கப்பட்டதும் மரத்தின் பட்டையை ஒத்த முரட்டுத் துணியால் ஆன காலும் கையமல்லாத கால் சட்டை மற்றும் கைச் சட்டை ஒன்றும், தலைக்குக் குல்லா கொடுத்து அணியச் சொன்னார்கள். அதை அணிந்ததும் முண்டம் போல் இருந்தது என்கிறார் வ.உ.சி.

                        மேலும் அந்த உடை “எம்பெயர் உயரவும், எம்முருத் தாழவும்” இருந்தது எனப் பகடியாகக் கூறுகிறார்.

                        காலுக்கு ஒரு விலங்கு அணிவிக்கப்பட்டதைக் காலுக்குக் கரும் பொற் கழலணி” எனக் கீழ்க்கண்டவாறு பகடியில் கூறும் வ.உ.சி. அவர்கள்

                        ”தந்தான் வலது கால் தண்டைகள் எமக்கே
                        அறும் பொன் காலிடல் அபசாரமாதலால்
                       இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே” என்று குறிப்பிடுகிறார்.

                        சாப்பிடுவதற்குச் சட்டியும் கலயமும் அளிக்கப்பட்டது . இரவு நன்றாகத் தூங்கி எழுந்த காலை வேளையில் கல்லும் மண்ணும் நிறைந்த புளுத்த கேழ்வரகு கூழ் அளிக்கப்பட்டது. கூழை உண்ண முடியாமல் கொட்டி விடுகிறார்.

                        சிறை அதிகாரிகள் வந்து கோயமுத்தூர் மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்வதாகத் தகவல் தரப்பட்டது. அதன்படி சுப்பிரமணிய சிவாவினை வணங்கிவிட்டு, இறைவனையும் வணங்கினார்.சிறை வெளியில் கேட் அருகே வந்த பொழுது வண்டியில் ஏற்றிக் கொண்டு வ.உ.சி. செல்லும் வழியில் எண்ணற்றோர் கூடி வழி அனுப்பும் வேளையினில் மீண்டும் மைத்துனர் வந்து நீங்கள் சிறையிலிருந்து வெளிவரும் நாளை எப்போது உங்களைக் காணப் போகிறேன் என்று அழுது புலம்புகிறார். மைத்துனரை வணங்கி விட்டு விடை பெற்றுச்  செல்லும் வழியெங்கும் வ.உ.சியைக் கண்டு பொதுசனங்கள் தாளாது அழுகையுடன் வழி அனுப்புவதைப்  பார்க்கிறார்.

                        வ.உ.சி.க்காக கோர்ட்டில் வாதாடிய சடகோபாச்சாரியார் மற்றும் வெங்கு அய்யர் ஆகியோர் வண்டி அருகில் வந்து உங்களை எப்படியாவது சிறைவாசத்திலிருந்து மீட்டெடுப்போம் என்று ஆறுதல் தரும் மொழியைப் பகர்கின்றனர்.   சுதேசியத்தை விடாதீர்.அது ஒன்றே நம்மை மீட்டெடுப்பதற்கான தீர்வு என்று கூடிய கூட்டத்தில் பகர்கிறார். கூடிய கூட்டமும் ஒருங்கிணைந்து நன்றெனச் சுதேசியத்தைக் கைவிட மாட்டோம் என்று பகர்கின்றனர்.

                        எண்ணிலாப் போலீஸ் பந்தோபஸ்துடன் ரயிலில் ஏற்றப்பட்டார். ஒவ்வொரு முக்கிய ரயில் நிறுத்தத்தில் எண்ணிலடங்கா மக்கள் கூடிக் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு கங்கை கொண்டான், மணியாச்சி, மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிறுத்தங்களில் தியாகப் பெருமகனை அழுகையுடன் வாழ்த்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.  கோயமுத்தூரில் இறங்கிய வ.உ.சி.யை காலிலும், கையிலும் விலங்கும் சங்கிலியும் மாட்டிப் போலீசார் அழைத்துச் சென்றார்கள். வெள்ளைக்கார சார்ஜண்டும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் பத்து ஜவான்களும் சேர்ந்து வ.உ.சி.யை அழைத்துச் சென்றது கோவை மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். வெள்ளை சார்ஜண்ட் உருவிய வாளுடன் நடந்தார். இன்ஸ்பெக்டரின் இடுப்பில் ரிவால்வர் இருந்தது. மற்ற ஜவான்கள் பையோனட் மாட்டிய ரைபிளுடன் சென்றார்கள்.கோவைச் சிறைச்சாலையில் கேட்டைத் தாழிட்டு வ.உ.சி.யை சிறையில் அடைத்தார்கள்.

                        வ.உ.சி.க்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து இந்தியா மட்டுமல்ல இந்தியாவைத் தாண்டி லண்டன் வரை இந்த தீர்ப்பு சகிக்கமுடியாத அநீதி என்று ஆங்கிலேயப் பிரமுகர்களே நொந்துபோயினர். இந்தியாவில் உள்ள ஆங்கிலேயப் பத்திரிக்கைகள் ஸ்டேட்ஸ்மேன், ஸ்டாண்டர்டு போன்ற இதழ்கள் வ.உ.சி.க்கு அளிக்கப்பட்ட அநியாய தண்டனையைக் கடுமையாகக் கண்டித்தன. பிரிட்டீஸ் இந்திய மந்திரி மார்லி அவர்கள் மிண்டோவுக்கு எழுதிய கடிதத்தில் இத் தண்டனை நிலைக்காது. மிகவும் அக்கிரமமான செயல். இத் தீர்ப்பை நான் ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன் எனக் கூறி இச் செயல் வெடிகுண்டு கலாச்சாரத்துக்குத்தான் வழி செய்யும் என்று எச்சரித்தார். இவரது தீர்க்கமான பார்வை ஆஷ் கொலையில் முடிந்தது என அறியமுடிகிறது. ஆனாலும் கலெக்டர் வின்ச் இவர்களுக்கு அளிக்கப்பட்ட கடுமையான தண்டனையைக் கண்டு மக்கள் பயப்படுவார்கள். இனிமேல் எவர் ஒருவரும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பேசத் துணியமாட்டார்கள் என எச்சரித்தான்.                        பின்பு கடுமையான முயற்சியில் பரலி சு. நெல்லையப்பர் துணையுடன் வ.உ.சி. மனைவி மீனாட்சிஅம்மாள் விடாது முயற்சி செய்து மீண்டும் மேல் கோர்ட் சென்று வழக்காடி 1908 நவம்பர் 4 ம் தேதி சார்லஸ் அர்னால்ட் ஒயிட் மற்றும் மில்லர் ஆகியோர் அமர்வு இருக்கையில் வ.உ.சி. ஏககால ஆயுட்கால தண்டனை ஆறு வருடங்களாகக் குறைக்கப்பட்டது.  வ.உ.சி. கோவைச் சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டார். கல் உடைத்தார். சணல் இயந்திரத்தைச் சுற்றினார். இத்துடன் நல்ல பல தமிழ் நூல்களினை எழுதினார். கோவைச் சிறைக் கைதிகளின் கலகத்திற்குப் பிறகு கண்ணனூர்ச்  சிறைக்கு மாற்றப்பட்டார்.

                        கண்ணனூர் சிறையில் மிகப்பெரிய தண்டனையான கம்பளியைப் போர்த்தி விட்டுப் பல கைதிகளைக் கொண்டு அடித்து மிதித்து உதைக்கும் முறையைக் கண்டு அஞ்சியிருந்த வேளையில் அந்த தண்டனையிலிருந்து தான் தப்பியதைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
                        “எந்தச் செய்தியும் இயம்பினால் அடி விழும்
                        அடியும் வெற்றடி அன்று; கம்பளம் போர்த்
                        தடியும் மிதியும் அனேகர் தருவது.
                        கம்பளம் போர்த்து மெய் வெம்பிட அடிப்பது
                        இச் சிறை யன்றிவே றெச்சிறை யிலிலுமில்லை.
                        அடிப்பவர் கைதிகள்; அடிக்கச் சொல்லுவோர்
                        ஜெயிலினை ஆளும் ஜெயிலர் ஆகியோர்
                        எவன்தான் அஞ்சான் இக் கம்பள அடி?
                        எவன்தான் கண்டதை இயம்பத் துணிவன்?                        வ.உ.சி. சிறையிலிருந்து வருவதற்குள் வஞ்சகன் ஆஷ் மற்றும் கலெக்டர் வின்ச் முயற்சியால் அவருடைய கனவான சுதேசி கப்பல் கம்பெனியை அவரது பங்குதாரர்களை வைத்துச் சீரழித்து ஆங்கிலேயர்களிடமே விற்க வைத்து வ.உ.சி.யை அவமானப் படுத்தினர் நம்மாட்கள். ஆனால் அதே வேளையில் வங்காளத்தில் ஒருவர் வ.உ.சி.யைப் போன்று சுதேசி கப்பல் விட்ட வேளையில் ஆங்கிலேயர்கள் நெருக்கடி கொடுத்த வேளையில் வங்காள மக்கள் விட்டுக் கொடுக்காமல் மானத்தைக் காத்தனர். இங்கு வ.உ.சி.யை திட்டமிட்டு அவமானப்படுத்தி வெள்ளையர்கள் வெற்றி கொண்டனர்.

                        வ.உ.சி. சிறையை விட்டு வெளி வரும் வேளையில் அவரை வரவேற்கும் விதமாக ராமாயணத்தில் ராமபிரான் வனவாசம் முடித்து வரும் வேளையில் அயோத்தி மக்கள் எப்படி வரவேற்றனரோ அதே போல் வ.உ.சி.யை நம் தமிழக மக்கள் சிறையிலிருந்து வெளி வரும் பொழுது வரவேற்பார்கள் என்று கனவு கண்ட பாரதி கீழ்க்கண்டவாறு மூன்று பாடல்கள் எழுதி பரலி.சு. நெல்லையப்பரிடம் கொடுத்தனுப்பினார்

                        “வேளாளன் சிறை புகுந்தான்
                        தமிழகத்தார் மன்னனென மீண்டான் என்றே
                        கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ,
                        வருந்தலையென் கேண்மைக் கோவே
                        என்று எழுதி அனுப்பினார்.

                        ஆனால் மகாகவியின் இந்த வரி கானல் நீராய், கனவாய் வ.உ.சி. விசயத்தில் பொய்த்துப் போனது. செய்நன்றியறிதல் திருக்குறளுக்குப் பாத்திரமாக விளங்கிய வ.உ.சி.க்கு நம் மக்கள் காட்டிய செய்நன்றி அவரை வரவேற்கப் போகாமலிருந்ததுதான். அன்றைய காங்கிரஸ்காரர்கள் உட்படச் செல்லவில்லை.  காரணமென்னவெனில் சிறையிலிருந்து அவரை வெளியிட சில மாதங்களுக்கு முன்பாகவே பிரிட்டிஷ் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மிகவும் இரகசியமாகக் கையாண்டது.

                        24.12.1912 வ.உ.சி. விடுதலை அடைந்து அவர் போய் சேருமிடம் உடனே தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். அவர் எந்த மாவட்டத்திற்கும் செல்வதாயிருந்தால் இரயில் நிற்கும் எல்லா முக்கியமான நிலையங்களுக்கும் ஆட்களை அனுப்பி அவரை பார்க்க வருபவர்கள் பெயர்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்.  வ.உ.சி. இந்த மாவட்டத்திற்கு வந்தவுடன் அவரை பார்க்க வருபவரைக் கண்காணிக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டரையும், ஒரு தலைமைக் கான்ஸ்டெபிளையும் அனுப்புவதாகவும், அவரோடு சம்பந்தப்பட்டவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்று பதிவு செய்யப்படுவார்கள் என்றும், அரச நிந்தனைக் குற்றங்களில் ஈடுபட்டால் அவரை நாடு கடத்த மனு செய்யப்படும் என்று எச்சரிப்பதன் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் எவ்வளவு அச்சம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது.

                        இந்த உத்தரவு ஸ்டூவர்ட் என்ற ஆங்கிலேயரால் இந்த ரகசிய அறிக்கை சம்பந்தப்பட்ட எல்லா காவல் நிலையங்களிலும், பொது நாட் குறிப்பேட்டிலும் மற்றும் இரயில்வே நிலையத்திலும் பதிவு செய்யப்பட உத்தரவிடப் பட்டிருக்கிறது. 1912 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் தேதி அவர் சிறைவாசத்தை முடித்து விட்டு வெளியே வரும் பொழுது அவரை வரவேற்க அவரது நண்பர் தொழுநோய் வியாதியுடன் வருகை புரிந்தவர் சுப்பிரமணிய சிவா மற்றும் அவரது தூரத்து உறவினர் கண்ணனூர் கணபதிபிள்ளை இரண்டு பேரைத் தவிர்த்து ஒரு ஆள் கூட வரவில்லை. வெளியே வந்த பிறகு கூட வ.உ.சி.யை பார்ப்பதைத் தவிர்த்தனர் பல பெரும் தலைவர்கள். தண்டனை அடைந்ததால் வழக்காடும் சன்னத் உரிமையும் பறி போனது. வ.உ.சி.யின் மனதில் தாம் தோற்றுவிட்டோம் என்ற எண்ணமும் அவரை வதைத்தது. அவரது கனவான சுதேசி கப்பலை நேர் எதிரியான பிரிட்டிஷாரிடமே விற்று விட்டதை எண்ணி எண்ணி மனம் குமைந்தார்.

                        சென்னையில் பல இன்னல்களுக்கிடையே அரிசிக் கடை, மண்ணெண்ணெய் கடை , நெய்க்கடை வைத்து அவரால் சோபிக்க முடியவில்லை. இத்துடன் சென்னையில் தொழிற்சங்கப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டார். தன்மானம் உள்ளவன் சிறை புகுந்தால் ஒன்று ஞானியாக வெளியே வருவான் அல்லது மிருகப்பிராயமாக மனிதத்தன்மை இழந்து வருவான். இது வ.உ.சி.யின் அனுபவ மொழி. அவர் வெளியே வருகையில் ஒரு ஞானியின் நிலையில்தான் வந்தார்.

                        அவரைச் சார்ந்த அரசியல் நண்பர்கள், ஆளுமைகள் கைவிட்டாலும் தமிழ் மீதுள்ள பேரன்பு அவரை திருக்குறள் மணக்குடவர் உரை பதிப்பாசிரியராகவும், தொல்காப்பியத்தைச் செதுக்கிய அன்பராகவும், சிவஞான போதத்தின் வேதாந்த உரையாசிரியராகவும், திருக்குறளும், தொல்காப்பியமும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்து தமிழர்களின் இதயங்களில் மாபெரும் துருவநட்சத்திரமாகத் தனித்துவம் அடைந்துள்ளார்.

                        வரும் 2021 ஆம் ஆண்டு வ.உ.சி.யின் 150வது ஆண்டு வரும் வேளையில் தமிழர்களான நாம் பெருமைக்குரிய தியாகியின் ஒவ்வொரு கால அடிச்சுவட்டையும் நினைக்கும் விதமாக இக்கட்டுரை எழுதப்பட்டது. 150 ம் வருடத்தில் வ.உ.சி.யை கவுரவிக்கும் விதமாகத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்த குரலுடன் இந்திய அரசாங்கத்துக்குப் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டி வேண்டுகோள் வைப்போம்.
       


நன்றி:               
இக்கட்டுரைக்கு ஓவியங்கள் வரைந்த வள்ளிநாயகம் மற்றும் சசி மாரீஸ் அவர்களுக்கும் என் நன்றி.
இக்கட்டுரை எழுத வ.உ.சி.யின் சுயசரிதை மற்றும் ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்த வ.உ.சி.யும் பாரதி பாரதியும் நூல் உதவியாக இருந்தது.தொடர்பு:
ரெங்கையா முருகன் - https://www.facebook.com/rengaiah.murugan.73


No comments:

Post a Comment