Thursday, August 27, 2020

ஒற்றுமை

ஒற்றுமை

-- கவிஞர் புகாரி

கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்

காற்று தறிகெட்டு
தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது
நீர் ஆவியாகிக்
கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது
நிலம் பாளம் பாளமாய்ப்
பிளந்து கிடந்தது
நெருப்பு திக்குகளெங்கும்
திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது
வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய
கிழிக்கப்பட்டுக் கிடந்தது

அலறிச் சென்ற
அவசர ஊர்தி ஒன்றின்
பின்னால் ஓடினேன்

மருத்துவமனை!
அவசர சிகிச்சைப் பிரிவு!

படுக்கையில்
அடையாளம் தெரியாமல்
ஓர் உருவம்

குளுகோஸ்
ஏறிக்கொண்டிருந்தது
ஆக்சிஜன்
பொருத்தப் பட்டிருந்தது
இதயத்துடிப்பு
கண்காணிப்பில் இருந்தது

யார் நீ…?
என்று கேட்டேன்

நான் தான் ஒற்றுமை என்றது

என்னாயிற்று…?
ஏன் இப்படி கிடக்கிறாய்…?
என்றேன்?

வெறுப்பு என்னை
வெட்டிப் போட்டுவிட்டது
அகந்தை என்னை
அறுத்துப் போட்டுவிட்டது
சுயநலம் என்னைச்
சூரையாடிவிட்டது
வன்முறை என்னை
வழித்துப் போட்டுவிட்டது
என்றது

உதவிக்கு
யாருமே வரவில்லையா…?
என்று கேட்டேன்

சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று
சமத்துவமே என்னைக் காப்பாற்று
அறமே என்னைக் காப்பாற்று
அன்பே என்னைக் காப்பாற்று
ஞானமே என்னைக் காப்பாற்று
என்று கதறினேன்…
என்றது

ஒன்றுகூடவா உன்னைக்
காக்க வரவில்லை…?
என்று கேட்டேன்

சிதைந்த தசைகளைக் கூட்டி
மிகுந்த சிரமப்பட்டு
வறட்சியாய்
ஒரு புன்னகையை உதிர்ந்தது

புன்னகைக்காதே
பதில் சொல் என்றேன்
கோபத்தோடு

எனக்கும் முன்பே
என்னைவிடவும் படு மோசமாய்
கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு
தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு
அசரசப் பிரிவுகளில்
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கின்றன சில
சவக்கிடங்கில்
அடுக்கப்பட்டுவிட்டன பல….
என்றது

என்றால்….
மனிதர்களே இல்லாத
மயான பூமியா இது…?
என்றேன் கலவரத்தோடு

அது சரி…. நீ யார்…?
உன்னால் என்னைக் காக்க முடியுமா…?
என்று கேட்டது

அடுத்தநொடி
அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்

கவியரங்கம் என்றார்கள்
எனக்கென்ன தலைப்பென்றேன்
ஒற்றுமை என்றார்கள்
இல்லாத ஒன்றை
எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்
என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்

O

குறிப்பு:  ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை


No comments:

Post a Comment