Sunday, February 28, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 10

-செல்வன்.


சன்னா: வேளச்சேரி பிரகடனம் தான். அந்தப் பிரகடனத்தை சிறுத்தைகள் 2007 செப்டெம்பரில் கொண்டுவந்தார்கள். இந்தப் பிரகடனத்திற்கு பின் கட்சியில் உள்ள அனைத்துப் பதவிகளும் கலைக்கப்பட்டன. புதியதாக இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய அனைத்துப் பகுதி மக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இதன்பின் 2008 மார்ச் 21 முதல் தலித்துகள், முஸ்லிம்கள், தலித் அல்லாதவர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் பதவியேற்றார்கள். தலித் அல்லாதவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவதற்கான ஒரு காரணம் தமிழ்த் தேசியமாகும். கட்சியை ஜனநாயகமயமாக்கவும் இது உதவியது

பேரா யூகோ: இது வரவேற்கத்தகுந்த மாற்றமாகும். ஆனால் கட்சி தொண்டர்கள் சொல்வது என்னவெனில் "20 வருடங்களாகக் கட்சிக்கு உழைத்தோம். கட்சிக்காக அடிபட்டோம். சிறைச்சாலைக்குச் சென்றோம். இப்போது கட்சியாக மாறியவுடன் தலித் அல்லாதவர்கள் பதவிக்காக கட்சியில் சேருகிறார்கள்" என்கிறார்கள். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தலித் அல்லாதவர்களை ஏற்றுக்கொண்டார்களா?

சன்னா: தலித் அல்லாதவர்கள் தலித்துகளை ஏற்றுகொள்ளாமல் இருப்பது போல தலித்துகள் மத்தியிலும் தலித் அல்லாதவர்கள் மேல் அதே போன்ற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அத்தகைய தயக்கம் இல்லாமல் இருக்காது. அது இல்லையெனச் சொல்லி நாம் உண்மையை மூடி மறைக்கவும் முடியாது. நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு கட்சி என்பது ஒரு சமூகத்தின் கருத்துக்களின் வெளிப்பாடே ஆகும். உங்கள் கட்சிவேலை முடிந்தபின் நீங்கள் வீட்டுக்குத் தான் செல்லவேண்டும். வீட்டுக்குப் போனாலும் கட்சிவேலையை செய்வதை நிறுத்த முடியாது. கட்சியும் சமூகமும் ஒன்றே. ஆக சமுதாயத்தில் என்ன பிரச்சனைகளை சந்திக்கிறோமோ அதைக் கட்சியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. தலித் ஒருவரின் வீட்டருகே உள்ள இன்னொருவர் தலித்தை புறக்கணித்து, தலித்தின் வீட்டை எரித்து, சாதிமோதலை உருவாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகையில் தலித்துகளுக்கு தலித் அல்லாதவர்கள் மேல் சந்தேகம் வரத்தான் செய்யும். சமுதாயம் மாறினால் தான் இத்தகைய தயக்கமும், சந்தேகமும் கட்சிக்குள்ளும் நீங்கும். சமுதாய இயக்கங்கள் இத்தகைய கோணத்தில் சிந்தனைகளைக் கொண்டிருக்கையில் சாதிய வழி கண்ணோட்டங்களும் நீடிக்கவே செய்யும். ஆக தலைமை பதவியில் இருப்பவர்கள் இதை உணர்ந்து சமுதாய மனமாற்றத்துக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

ஒரு இயக்கமாக நாம் அந்த நோக்கத்தை முன்னிறுத்தி பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் செய்து வருகிறோம். அத்துடன் நில்லாது அதை மேலும் துரிதப்படுத்தவும் இருக்கிறோம். அப்படிச் செய்கையில் "நான் கட்சியில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை" என்பது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். அந்தக் கேள்வி ஏன் தவறானது எனில் தலித் அல்லாதவர்கள் தலித்துகளின் தலைமையை ஏற்றுக் கட்சியில் இணைகையில் அது தலித்துகளுக்கு கிடைக்கும் ஒரு அரசியல் அங்கீகாரமே ஆகும். இந்தக் கோணத்தை நாம் பரவலாக புரியவைக்க வேண்டும். ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறோம்.

பேரா யூகோ: தலித் அல்லாதவர்கள் கட்சியில் சேர்கையில் தனிநபர்களாக சேர்கிறார்களா அல்லது அவர்களது இனக்குழுவின் சார்பில் இணைகிறார்களா?

சன்னா: தற்போதைய நிலையில் அவர்கள் தனிநபர்களாக தான் இணைகிறார்கள்.

பேரா யூகோ: அப்படியானால் இது தேர்தல் ரீதியாகக் கட்சிக்கு பெரிய அளவிலான வலுவை அளிக்காது. ஆனால் தேர்தல் அரசியலைக் கூட ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் தலித் அல்லாதவர்கள் கட்சியில் இணைவதால் சமூகரீதியான பயன்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?

சன்னா: நாங்கள் அரசியலில் இறங்கி ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின்னரே இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்தல் புறக்கணிப்பை நாங்கள் தொடர்ந்திருந்தால், இத்தகைய வாய்ப்புக்கள் மிகக் குறைந்திருக்கும். ஏனெனில் தலித் அல்லாதவர்கள் எங்கள் கட்சியில் இணைந்தாலும் அவர்கள் புரட்சிகர மனப்பான்மையுடன் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் எனக் கூற இயலாது. அவர்கள் ஒரு ஜனநாயக சக்தி என வேண்டுமானால் கூறலாம். புரட்சிகர நோக்கம் கொண்ட இடைநிலை சாதிகள் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்தபோதும் எங்களுடன் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். பதவிகளை எதிர்பார்த்து அவர்கள் எங்களுடன் இணையவில்லை. இப்போதும் அவர்களுக்கு அந்த நோக்கம் இல்லை. அவர்கள் கட்சிக்குள்ளும், அடிமட்ட அளவிலும் அமைதியாக அதிகம் வெளித்தெரியாமல் இயங்கி வருகிறார்கள். அவர்களைக் கட்சியின் தூண்கள் எனலாம். ஆனால் புதிதாக கட்சியில் சேரும் தலித் அல்லாதவர்களை வெறுமனே ஜனநாயக சக்திகள் என்றே கூற இயலும். கட்சிக்கு அவர்களால் பலனுண்டு. கட்சியால் அவர்களுக்குப் பலனுண்டு. இத்தகைய புரிதலுடனே இந்த உறவு தொடர்கிறது எனினும் காலப்போக்கில் இது மாறும் என எதிர்பார்க்கலாம்.


---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________
 

Kurunthogai Translation

-- ப. பாண்டியராஜா.


வேம்பின் பைம் காய் என் தோழி தரினே
தேம் பூம் கட்டி என்றனிர்; இனியே
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண் நீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே!
பாடல் : குறுந்தொகை 196

When my friend gave you a green unripe fruit of the neem tree
You said,”It was a sweet good jaggery cube”, but now
Even if she gives you
The clear cool water from the mountain spring in Pari’s Parampu Hills,
As cool as the chillness in the month of Thai,
You say, “It tastes astringent”
Oh, chief, so is the level of your love now.


காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலப்பு இல் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.
பாடல் : குறுந்தொகை 41

When my beloved is beside me, being greatly delighted,
I would be joyous like a festive town, yeah surely,
In the little hamlet nearby the path on a wasteland,
Deserted by its people, the squirrels play in the courtyard
Of a lonely house, lacking of grandeur, so I would be,
And distressed, my friend, when he leaves me.

யாரினும் இனியன்! பேர் அன்பினனே!
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்,
தேம்பொதிக்கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன்! பாணன் வாயே!
பாடல் : குறுந்தொகை 85

He -
With fresh incoming wealth -
In whose village, the male house sparrow with hopping gait,
In order to lace a nest for laying eggs and hatching,
Rends the fragrance-less white flowers of the sugarcane holding so much sweetness;
He –
In Sweetness is second to none; His love is so abounding;
            So says his friend, the bard.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!
பாடல் : குறுந்தொகை 167

With the soft, Glory Lily-like fingers, she kneads the maturely fermented curd,
Unwashed, she adjusts the pallu of her rinsed saree;
Her kohl applied eyes, like the blue water lily, are filled with seasoning smoke,
The delicious but sour liquid curry, she cooked by strained stirring,
Her husband eats and says, "very fine";
Her face with bright forehead delights subtly.ஒரு நாள் வாரலன், இரு நாள் வாரலன்;
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி, என்

நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
வேறு புல நன் நாட்டு பெய்த
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே!
பாடல்:குறுந்தொகை 176

He did not stop with coming on one day or two days;
He did come on many days and also uttered humble words;
And thereby softened my good heart. And then –
He was gone like a fully grown honeycomb on a hill;
Oh! Where would he be now, my lord and support?
My heart is perturbed,
Like the murky waters that come from rains with thunderstorm in a distant country.
 சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.
பாடல் : குறுந்தொகை 119

The small beautifully striped young one of a white snake
Would afflict a wild elephant;
Likewise-
A young lass, with sprout-like bright teeth,
And hands with bangles – It was she who afflicted me.


பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே!

பாடல் : குறுந்தொகை 156

Oh Brahmin! Oh Brahmin!
Holding as staff the peeled off branch of the palasa tree with red flowers,
And also a low hanging kamaNTalam,
Oh Brahmin of austere food!
In the words of your scripture which you learn not by writing (but by chanting),
Is there a remedy for bringing together the separated?
Or is it only a delusion?
எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ
நீடு இரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே

பாடல் : குறுந்தொகை 374

After unfolding the concealed story
By presenting convincingly to our parents,
Resulting in the leader of the hills coming to us seeking wedlock,
With the just intention of doing good,
This blurred hometown –
Which interweaved stories more complex
Than the nest of the arch-winged weaver bird in the tall dark palmyra tree,
Finally concurs with our stand.
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇய பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே

பாடல் : குறுந்தொகை 87

The fearful ancient God in the maraa tree in the village courtyard
Will punish the wicked people, they say; Even a little
Wicked is not my man from the mountainous terrain,
My forehead had become pale just because of its longing for his love;
My large soft shoulders have become thin just because my heart melted for him.
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே!

பாடல்: குறுந்தொகை 54

Only my body is here; All my other good things
Have gone to him – that man of the forest terrain,
Where –
Like the bent fishing rod bounces back after being let free by the fish which bit it,
The green bamboo bent by a wild elephant rises high again
When it let it go fearing the sound of the hurling of the sling.
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே
பாடல் : குறுந்தொகை 58

Oh my friends who chide me!
If your chidings can stop my body from thinning out, it would be good.
But this sharp sting of separation is spreading all over my body,
And it is hard to stop it,
Like the melting of a ball of butter placed on a hot rock under the raging sun,
Guarded by a speechless man without hands.___________________________________________________________
  
 

Dr. Pandiyaraja
pipiraja@gmail.com
http://sangamconcordance.in/
___________________________________________________________
 

சென்னையின் நீர்வழித்தடங்கள் - அடையாறும் அதன் கரைகளும்

-- நரசய்யா.


 உலகின் நாகரிகங்கள் எல்லாமே நீர்வழித்தடங்களின் கரைகளில் தான் துவங்கின. அப்படித்தான் இந்தியாவின் முதல் நாகரிகமான சிந்துசமவெளியும், சிந்துநதிக் கரையில் துவங்கிற்று. சங்கப் பாடல்களில், தமிழக ஆறுகளின் பயனும் அவற்றின் பெருமையும் பாடப்பட்டுள்ளன. தமிழகக் கடல்வழி வணிகம், ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடங்களில் இருந்த நகரங்களில் தான் பெருமளவில் நடந்து கொண்டிருந்தது.

அன்றைய நாட்களில், நாகரிகத்தில் இந்தியர்களைவிடப் பின்தங்கியிருந்த ஐரோப்பியர்கள், கடல்வழி வணிகத்தின் பெருமையை முற்றிலும் உணர்ந்து, இந்தியாவின் செல்வத்தையும் தெரிந்து கொண்டு, 15ம் நுாற்றாண்டில் இந்தியாவை நோக்கித் தம் பார்வையைத் திருப்பினர்.அன்று, இந்திய நாடு ஒற்றுமை குலைந்து பல சிற்றரசர்கள் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்த நேரம். ஐரோப்பியர்களின் ஆளுமைக்கு ஒரு பெரும் நல்வரவளிக்கும் விருந்தாகவே ஆகிவிட்டது.

பொருளீட்டுவதற்காக ஸ்பானியர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் கீழைநாடுகளை நோக்கிச் செல்லும் அவா ஏற்பட்டபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியைத் தீர்த்து வைக்க அன்றைய போப்பாண்டவர் முன் வந்தார். ஏனெனில் அவ்விரு நாட்டினரும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் மத்தியஸ்தத்திற்கு போப்பாண்டவரை நோக்கினர். 'பேப்பல் புல்' என்றறியப்பட்ட போப்பாண்டவரின் ஆணை, 1493ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி உலகை அசோரஸ் என்ற தீவின் வழியாக, வடக்கிலிருந்து தெற்காக இரண்டாகப் பிரித்து, கிழக்குப் பகுதிகளை போர்த்துகீசியர்களுக்கும் மேற்குப் பகுதிகளை ஸ்பானியர்களுக்கும் அவர் பகிர்ந்தளித்தார்.


ஆங்கிலேயர்களின் தேர்வு:
நில, நீர் ஆக்கிரமிப்புகள் ஒன்றும் புதிதல்ல; அன்றே துவங்கி விட்டன. வேடிக்கை என்னவெனில் இவ்வுலகம் போப்பாண்டவருக்கும் சொந்தமானதல்ல! அவ்வாறுதான் வாஸ்கோடகாமா, கோழிக்கோடு வந்தடைந்து மெல்ல மெல்ல இன்றைய கேரள நாட்டின் முக்கியப் பகுதியைப் போர்த்துகீசியர்களுடையதாக்கிக் கொண்டான்!அங்கிருந்து போர்த்துகீசியர்கள், கோரமண்டலக் கரையிலும் தமது ஆக்கிர மிப்பைக் கிறிஸ்தவ மத பரப்புதலுடன் துவக்கினர். 16ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அவர்கள், இன்றைய சாந்தோமை அடைந்தனர். சாந்தோம், அன்று மயிலாப்பூரின் ஒரு பகுதியாக இருந்தது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்னரே, மயிலாப்பூர் ஒரு பாதுகாக்கப்பட்ட துறைமுகமாக விளங்கியதற்குச் சான்று, பொன்னேரி, வீற்றிருந்த பெருமாள் கோவிலில், 11ம் நுாற்றாண்டின் கல்வெட்டாகக் காணக் கிடைக்கின்றது. மயிலாப்பூரின் தெற்குப் பகுதி, அடையாறு கடலில் சங்கமிக்கும் இடத்திற்கு சற்றே வடக்கில் இருந்தது. கோரமண்டல் கரை வந்த போர்த்துகீசியர்கள், அடையாறு சங்கமிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வடக்கில், தமது கோட்டை ஒன்றை அமைத்தனர்.

தமது வணிகத்திற்காக, ஆங்கிலேயர்கள், 17ம் நுாற்றாண்டு துவக்கத்தில், கோரமண்டலக் கரையில் ஒரு ஆற்றின் முகத்துவாரத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தனர். அடையாறு முகத்துவாரம் சிறந்ததாகத் தெரிந்தாலும், அருகில் போர்த்துகீசியர்கள் இருந்தமையால், கூவம் முகத்துவாரத்தைத் தேர்ந்தெடுத்தனர்.  வடக்கில் பழவேற்காடு, டச்சுக்காரர்கள் கைகளில் இருந்தது. போர்த்துக்கீசியர்களின் சாந்தோம் கோட்டை, ஆங்கிலேயர்களால் 17ம் நூற்றாண்டு இறுதியில், தரைமட்டமாக்கப்பட்டது. 1749ல் அந்த இடம், ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமாகிற்று. அப்போது அடையாறு, ஒரு சிறந்த ஆறாகத் திகழ்ந்தது. அது கடலில் கலக்குமிடம் -கழிமுகப் பகுதி, இயற்கையின் எழில் மிகு பகுதியாக அமைந்திருந்தது. பறவைகளின் ஒரு பெரும் சரணாலயமாகவும் இருந்தது. கடந்த, 1639ல் இங்கு வந்த ஆங்கிலேய வணிகர்களான ஆண்ட்ரூ கோகன் எனபவரும் பிரான்சிஸ் டே என்பவரும், அன்றைய நாயக்க அரசப் பிரதிநிதியான தாமரல வெங்கடாத்ரியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, கூவம் முகத்துவாரத்தில் தமது வணிக தலத்தை நிறுவிக் கொண்டனர்.  அதுதான் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையாக உருவானது. அப்போது, சாந்தோமில் போர்த்துகீசியர் பலம் சற்றே குறைந்திருந்தது. ஆங்கிலேயர் பிராடஸ்டண்டு பிரிவை சேர்ந்தவர்கள்; போர்த்துகீசியர்கள் கத்தோலிக்கர்கள். ஆகையால் இருவரிடையேயும் பகை புகைந்து கொண்டு இருந்தது.


பண்ணை வீடுகள்:
அழகான அடையாற்றங்கரையோ ஆங்கிலேயர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தது. இருமருங்கிலும் பசுமை நிறந்து கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது. நீளத்தில் கூவத்தை விட குறைவான அடையாற்றின் பிறப்பிடம் கூடுவாஞ்சேரி செம்பரம்பாக்கம் ஏரியருகில், செம்பரம்பாக்கம் போன்ற சில நீர்நிலைகளின் உபரிநீரும், மற்ற சில ஆறுகளின் உபரிநீரும் அடையாற்றில் கலந்து ஓடுகிறது. இந்தியாவின் சிறந்த நதிகளைப் போல ஏதோ மலைப்பாங்கான இடத்தில் தோன்றிய நதியல்ல அடையாறு; ஏரிகளின் உபரிநீர் வடியும் ஒரு வடிகால் தான். அங்கிருந்து, 40 கி.மீ., ஓடிய பின், கடலில் சங்கமிக்கிறது. சென்னை நகரத்தில், நந்தம்பாக்கம் வாயிலாக நுழையும் அடையாறு, நகரத்துள் 13.5 கி.மீ., துாரத்திற்கு ஓடுகிறது. கூவத்தைப் போலல்லாது, இதன் முகத்துவாரம் விரிந்து பரந்து கிடக்கிறது. இந்த முகத்துவார பரப்பளவு, 300 ஏக்கர். சென்ற நுாற்றாண்டின் முதல் பாதி வரை இப்பகுதி, சிறந்த மீன்வள நீர்ப் பரப்பாக இருந்தது. மீனவர்கள் வாழ்வாதாரமாகவும் விளங்கியது. சுற்றிலும் பெரும் மீனவ சமுதாயமே செழிப்பாகத் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தது. சென்ற நுாற்றாண்டின் பிற்பகுதியில், மாசு மிக்க பகுதியாக மாறி மீன்வளம் செத்து விட்டது. சுனாமியின் போது நடந்த நல்ல நிகழ்வு, பின்னோக்கி வந்த பேரலைகளால் (அவை சைதாப்பேட்டை வரை வெள்ளமெடுத்தன) அடையாற்றின் பெரும்பகுதி சுத்தப்படுத்தப்பட்டு விட்டது தான்!  பதினேழாம் நுாற்றாண்டின் இறுதி வரை, ஆங்கிலேயர் சென்னையின் இன்றைய தெற்குப் பகுதிக்கு வரவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டிலும், அதன் பின்னரும் தமது ஆக்கிரமிப்புகளை அவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கையில், தெற்கு நோக்கி நகர்ந்தனர்.

சிறு கிராமங்கள் வழியாக எழில் மிகு நதியாக ஓடிக்கொண்டிருந்த அடையாற்றின் இரு மருங்கிலும், சிறு கோவில்களும் வசிக்குமிடங்களும் அமைந்திருந்தன. சலனமற்ற அந்நாட்களின் வாழ்வு சிறந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இயற்கையை ரசித்தவர்கள். அடையாற்று கரையினில் அவர்கள் பண்ணை வீடுகள் கட்ட துவங்கினர். இந்த இடத்தைப் பற்றிய முதற்குறிப்பு, மெட்ராஸ் கலெக்டரின் 1806ம் ஆண்டு அறிக்கையில் தென்படுகிறது [1]. அதன்படி ஒரு பெரும் பரப்பளவு (50 காணி நிலம்) பனை மரத் தோட்டமாக இருந்தது. அதன் உரிமையாளர் வெங்கடாசலபதி என்பவர். 1807ம் ஆண்டில் அதிகார பூர்வமாக இந்த சொத்துரிமை அவருக்குக் கலெக்டரால் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்புலமாக இருந்தவர் ஆலந்த நாராயணசுவாமி நாயக் என்பவர். அங்கு இரு சிறு கோவில்களும் இருந்தன. அதில் ஒன்று கடாரி அம்மன் கோவில். இந்த நாயக், அடையாற்றின் வடகரை முழுவதையும் சொந்தம் கொண்டாடியவர்! துரதிர்ஷ்டவசமாக இவர் முத்துக் குளிப்பதில் போட்டிருந்த செல்வமெல்லாம், 1821ல் தொலைந்து விட, இவ்விடங்கள் ஆங்கிலேய பிரபுக்களுக்கு விற்கப்பட்டன. கடந்த, 1792ல் இருந்து, 1831 வரை ஐ.சி.எஸ்., அதிகாரியாக இருந்த, எல்.ஜி.கே.முர்ரே என்பவரிடம், நாயக் கடன்பட்டிருந்தார். ஆகையால் அவர் கைக்கு, நாயக்கின் பெரும் பகுதி சொத்துகள் போய்விட்டன.


பிராடீஸ் கேசில்:
அவர் இந்த நிலங்களை, எட்வர்ட் பிரான்சிஸ் எலியட் என்பவருக்கு விற்றார். இவர் பெயரில் தான் எலியட்ஸ் பீச் இன்று அறியப்படுகிறது. இந்த எலியட்டின் தந்தை, மெட்ராஸ் கவர்னராக 1814 - 1820 காலகட்டத்தில் இருந்தவர்.பின்னர் பல கைகள் மாறி நிலங்கள் பக், நார்ட்டன் போன்றோருக்குச் சொந்தமாயின. அடையாற்று கரையை ஒட்டிய இடங்கள் விற்கப்பட்டு, அங்கு ஆங்கிலேயர்கள் தமது பண்ணை வீடுகளைக் கட்டிக் கொண்டனர். மேற்கு முனையில் அவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் ஒன்று தான் கிரேஞ்ச் என்று அன்றறியப்பட்ட இன்றைய காஞ்சி என்னும் இல்லம். இப்போது அண்ணா மேலாண்மைக் கல்லுாரி. 1853ம் ஆண்டு ஜான் ப்ரூஸ் நார்ட்டன் (நன்கறியப்பட்ட வக்கீல் நார்ட்டனின் தந்தை) என்பவரால் இது கட்டப்பட்டது. அன்றைய பிராடீஸ் கேசில் - இன்றைய தென்றல் (இசைக் கல்லுாரி) எனப்படும் கட்டடத்தின் கதையே விசித்திரமானது. சாந்தோமின் தெற்குப் பகுதியில், கிவிபிள் தீவு என்பது அடையாறு முகத்துவாரத்தில் உள்ளது. இப்போது அது கல்லறைகள் நிறைந்த இடம்.

அதன் தெற்கில் அடையாற்றங்கரையின் எழிலில் மயங்கிய ஜேம்ஸ் பிராடீ என்ற ஆங்கிலேயர், இங்கு, 11 ஏக்கர் நிலத்தை வாங்கி,1796 - -98ல் ஒரு பெரும் மாளிகை கட்டினார். அதன் பெயர்தான் பிராடீஸ் கேசில். 

அங்கு குடியேறும் முன்னரே அவர் மனைவி ஒரு கெட்ட கனவு கண்டதாகவும், அதனால் அவருக்கு அவ்வீடு செல்லத் தயக்கம் இருந்ததாகவும், பென்னி என்ற ஆங்கிலப் பெண்மணி, 'கோரமண்டல் கோஸ்ட்' என்ற பத்திரிகையில் கூறியுள்ளார்.  அவர்கள் அங்கு குடியேறியவுடன் அவர்களது, 600 ஆண்டுகள் பழமையான குடும்ப ஆவணங்கள், ஒரு தீ விபத்தில் சாம்பலாயின. சில நாட்களுக்குப் பின், பிராடி ஒரு படகில் தனது வீட்டருகில் அடையாற்றில் பொழுது போக்கச் சென்று கொண்டிருக்கையில், படகு கவிழ்ந்து அவர் அங்கேயே மூழ்கி இறந்தார். தாளாத துயரத்தில் அவரது மனைவி அங்கிருந்து வேறு வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த, 1866ம் ஆண்டில் ஜான் மெக்கைவர் என்பவர் இங்கு குடியேறினார். 1866 டிச., 23ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட இவ்வீட்டிற்கு கர்னல் டெம்பிள் என்பவர் விருந்தாளியாக வந்திருந்தார். அவர் மெக்கைவரின் இரு குமாரிகளையும் அழைத்துக் கொண்டு, கேப்டன் ஹோப் ஸ்கட்மோர் போஸ்டாக் என்பவருடன் ஒரு படகில் உல்லாசமாகச் சென்றார். ஆனால் அடையாற்றின் துரோகத்தால் (அப்படித்தான் அவர்கள் கருதினர்) அந்த படகு கவிழ்ந்ததில் அடையாற்றின் பசிக்கு, போஸ்டோக் தவிர மற்றவர்கள் விருந்தாகினர். அன்றிலிருந்து அந்த மாளிகை பேய் மாளிகையாகிவிட்டது! இன்று பிராடீஸ் கேசில் என்ற பெயர் மாற்றப்பட்டு, தென்றல் என்ற பெயரில், இசைக் கல்லுாரி செயல்படுகிறது [2].

கடந்த, 1700களில் அடையாறுதான் சென்னையின் தெற்கு எல்லையாகத் திகழ்ந்தது. ஆயினும் இரண்டு ஆங்கிலேயர்கள் ஆற்றைத் தாண்டித் தெற்கில் பண்ணை வீடுகள் கட்டினர். 


அடையாற்றின் பாலங்களும், பண்ணை வீடுகளும்

அடையாறு மற்ற நதிகளைப் போல, மலைப் பாங்கான இடத்தில் தோன்றவில்லை. மற்ற நதிகளுக்கு, மூலம், மேல் அல்லது நடுப் பகுதி கீழ்ப் பகுதி என்று மூன்று பகுதிகள் உண்டு. அடையாற்றை அவ்வாறு பிரிக்க முடியாது.

மாறாக மொத்த நீரோட்டமும் கீழ்ப் பகுதியாகவே உள்ளது. அதாவது சமவெளியில் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை எடுத்துச் செல்லும் ஒரு நீர்வழித் தடம் தான் அடையாறாக ஓடுகிறது.

மணிமங்கலம் ஏரியில், இதன் துவக்கம் இருந்தாலும், இதன் நீர்வரத்து பல ஏரிகள், குளங்கள்,- முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இருந்து தான் துவங்குகிறது.

இந்த ஆற்றின் ஆழம், 0.50 மீ., முதல் 0.75 மீ., வரை உள்ளது. ஆற்றுப் படுகை, 10.50 மீ., முதல் 200 மீ., வரை, இடங்களைப் பொறுத்து பெருகியும் குறுகியும் உள்ளது. வங்காள விரிகுடாவில் கலக்கும் இதன் நீர் பரிமாணத்தில், காலத்திற்கு தகுந்தாற்போல மாறுபடுகிறது. மழைக்காலத்தில் அதிகமாகவும் மற்ற மாதங்களில் குறைவாகவும் இருக்கும்.

பல இடங்களில் ஆழம் மிகக் குறைவாக இருப்பதாலும், கோடையில் முற்றிலும் வற்றியே காணப்பட்டதாலும் இந்த ஆற்றைக் கடக்க, பாலங்கள் எதுவும் காலனி ஆட்சிக்கு முன்னர் கட்டப்படவில்லை.

அவ்வாறு காலனி ஆட்சி ஆரம்ப கட்டத்தில் கட்டப்பட்ட கடவு, உண்மையில் ஒரு பாலமல்ல. 'காஸ்வே' என்று ஆங்கிலத்தில் அறியப்பட்ட இந்த மாதிரியான கடவுகள், தரைப்பாலங்கள் என்றழைக்கப்பட்டன. அவை ஆற்றின் நீர்மட்டத்திற்கு ஆற்றைக் கடப்பதற்குத் தகுந்தாற்போல மாட்டுவண்டிகள் செல்லவும் மனிதர்கள் செல்லவும் பயன்பட்டன. வெள்ளம் வரும் போது அவை நீரில் மூழ்கிவிடும்!

அந்த வகையில் முதல் முறையாக அடையாற்றைக் கடக்கக் கட்டப்பட்ட தரைப்பாலம், 'மார்மலாங்க் காஸ்வே'. 'மார்மலாங்க்' என்பது மாம்பலம் என்பதின் திரிபு. மாம்பலம் என்ற பெயரே மஹாபில்வக்ஷேத்திரம் என்ற பெயரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்குச் சரித்திரச் சான்று கிடைக்கவில்லை.


மார்மலாங்க் காஸ்வே (1):
ஆர்மேனியர்கள் (அரண்மனைக்காரர்கள் என்ற வழிமொழிச் சொல்லிலும் அறியப்பட்டவர்கள்) மதராசுக்கு, 1666ம் ஆண்டிலேயே வந்துவிட்டனர். இப்போது அந்த வம்சாவளியில் சென்னையில் அதிகமாக எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெர்ஷியாவிலிருந்து வந்த இந்த வணிகர்கள், மதராஸ் வணிகத்தில், முக்கியமாக விலையுயர்ந்த கற்கள், துணிமணிகள் ஏற்றுமதியில் பங்கு பெற்றனர். 1688ம் ஆண்டில் இருந்து, கம்பெனி வணிகத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

அவர்களில் ஒரு சிறந்த வணிகப் பெருமகன், கோஜா பெட்ரஸ் உஸ்கான் என்பவர். அவர்தான், 1726ம் ஆண்டில், 'மார்மலாங்க்' தரைப்பாலத்தைக் கட்டியவர். அதற்கான சான்று இருமொழிக் கல்வெட்டுச் சாசனமாக இன்றும் காணக் கிடைக்கிறது.

கத்தோலிக்கரான இவர்தான், பரங்கிமலையில் ஏறுவதற்கு வசதியாகப் படிகளும் கட்டியவர். பாலமும் அந்த படிகளும் அவரது சொந்தச் செலவில் அமைக்கப்பட்டன. 'உஸ்கான் அறக்கட்டளை' அவர் உருவாக்கியது தான். அதற்கான ஆவணங்கள் இன்றும் உள்ளன.

அவர், 1751, ஜனவரி 15 அன்று காலமானார்; உடல் வேப்பேரியில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அன்று கட்டிய அந்த பாலம், 196௬ம் ஆண்டில், முழு பாலமாக மாற்றப்பட்டு, மறைமலை அடிகள் பாலம் என, பெயரும் மாற்றப் பட்டது.

கி.பி., 18ம் நூற்றாண்டில் தரைப்பாலம் கட்டிய பிறகு தான் அடையாற்றைக் கடக்கும் வசதிகள் ஏற்பட்டன. முக்கியமாகக் கத்தோலிக்கர்கள் தான் அந்த பாலத்தைப் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் அப்போது அந்த வடகரையில், அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. வடக்கு, கிழக்குப் பகுதிகள் சையதுகான் என்பவர் கைவசம் வந்தது. அவர் பெயரால், பின்னாளில் சையதுகான் பேட்டையாகிக் காலப்போக்கில் சைதாப்பேட்டையாகப் பரிணமித்தது.


அடையாற்றின் இரண்டாவது பாலம்:
எல்பின்ஸ்டன் என்பவர்,1837- 1842ம் ஆண்டு வரை, மதராசின் கவர்னராக இருந்தார். இவர் தான் மெரீனா கடற்கரையை உருவாக்கியவர். 1840ம் ஆண்டில், அடையாற்றில் இரண்டாவது பாலம் கட்டப்பட்டு, அதற்கு இவரது பெயரும் சூட்டப்பட்டது. இந்த பாலம் தான், 1973ல், 58 லட்சம் ரூபாய் செலவில், திரு.வி.க., பாலமாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த பாலத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, விரிவாக்கப்பட்டது. பழைய பாலம் இன்றும் உள்ளது.

கடந்த, 1876- 78 காலகட்டத்தில் ஒரு பெரும் புயல் மதராசைத் தாக்கியபோது பழைய பாலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பாலத்தின் ஒரு தூண் புயலால் தகர்க்கப்பட்டது.

கடந்த, 1840ம் ஆண்டு வரை, அடையாற்றின் வடபகுதியில் தான் பண்ணை இல்லங்கள் கட்டப்பட்டன. கைமாறி விட்ட வீடுகளில் பல, இப்போது அரசுக்குச் சொந்தமாக உள்ளன. சில, தனியார் வசமுள்ளன. இன்று போட்கிளப் இயங்குமிடம், 1892ம் ஆண்டு வரை ஒரு ஆங்கிலேயருக்குச் சொந்தமான பண்ணை வீடாகத்தான் அடையாற்றை ஒட்டி இருந்தது.

மற்றொன்று 'யெர்ரோலைட்' என்ற பெயர் கொண்டது. இன்று அங்குதான் ஆந்திர மஹிள சபா உள்ளது. சற்றே வடபுறம் இருந்த, 'பக் ஹவுஸ்' இப்போது, சத்ய சாய்பாபா பிரார்த்தனை மையமாக செயல்படுகிறது.

இந்த பாலம் கட்டிய பின், அடையாற்றின் தெற்குப் பகுதி ஆங்கிலேயர்களின் ஆவலைத் தூண்டியது. அவ்வாறு தெற்குக் கரையில், கடற்கரையருகில் கட்டப்பட்ட இல்லங்களில் முக்கியமானது, 27 ஏக்கரில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம். 1780ம் ஆண்டில், ஜான் ஹட்டல்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. அதே போல தென்கரையில், சிறிதே மேற்கில், எல்பின்ஸ்டன் தோட்டம் உருவானது.

ஆக இந்த இரண்டு கட்டடங்கள் தான், எல்பின்ஸ்டன் பாலத்தின் தெற்கில் இரு மருங்கிலும் இருந்தன. வேறு பெரிய வீடுகள் எதுவும் கிடையாது. 19ம் நூற்றாண்டில், அன்றைய அரசு அலுவலகங்கள் உதகமண்டலத்திற்கு மாற்றப்பட்டன. அதனால், கேட்பாரற்று இருந்த இந்த தோட்ட வீடுகளும், முதல் வாய்ப்பு கிடைத்தபோது விற்கப்பட்டன.


தியாசபிகல் சொசைட்டி:
வரலாறு எதிர்பாராத திருப்பங்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் ஒன்று அடையாறு தியாசபிகல் சொசைட்டி மதராசுக்கு வந்த நிகழ்வு.

அதன் துவக்கம் அமெரிக்காவில். ரஷ்யப் பெண்மணியான ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கியும், கர்னல் ஹென்றி ஆல்காட் என்பவரும், தியாசபிகல் சொசைட்டி எனப்படும் பிரம்மஞான சபையை அமெரிக்காவில், 1875ல் நிறுவினர்.

இந்தியாவில் அந்த சபையின் தலைமையகத்தை நிறுவ நாட்டம் கொண்ட அவர்கள், ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தனர். பம்பாய், காசி முதலிய இடங்களில் சில நாட்கள் கழித்த பின், காசியிலிருந்து மதராஸ் வந்த அவர்கள், ஹட்டல்ஸ்டோன் கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போதைய நிலையில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம் இயற்கையின் சொல்லொணா அழகுடையதாய் இருந்திருக்க வேண்டும். அமைதியான சுற்றுச்சூழலையும் அழகையும் ஒரு பெரிய ஆலமரத்தையும் தன்னுள் கொண்டிருந்த அந்த பகுதி, மேலை நாட்டினரை ஈர்க்கும் தன்மையுடையதாகவும் இருந்தது.

அப்போது சிறிது விரிவாக்கப்பட்டு, மொத்தமாக, 30 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டிருந்த அந்த பண்ணையில் இரு வீடுகளும் இருந்தன. அவற்றின் மதிப்பு அன்று, 600 சவரன் அதாவது இந்திய மதிப்பில், 8,500 ரூபாய் என்று தெரிந்து கொண்ட இருவரும், சற்றும் தாமதியாமல், வாங்கி விட்டனர். பத்திரம், 1882, நவம்பர் 17ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதை முடித்துக் கொடுத்தவர் இந்திய சபை உறுப்பினர் பி. அய்யலு நாயுடு என்பவர்! அந்த நாள் தான் இன்றும் சபையின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், 20ம் நூற்றாண்டில் அதன் பரப்பளவு, 250 ஏக்கராக ஆகிவிட்டது. மற்றும் பல கட்டடங்களும் கட்டப்பட்டன. பல தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. அவை ஆல்காட், பெசன்ட், தாமோதர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.

இதனால் உண்டான மிகப்பெரிய பயன் என்னவெனில், அடையாறு டெல்டா நன்கு பராமரிக்கப்பட்டது. அங்கு பெரும் கான்கிரீட் கட்டடங்கள் எழுப்பப்படவில்லை ஆதலால். பறவைகள் சரணாலயமும் காக்கப்பட்டது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது. இல்லையெனில் அந்த பகுதியும் அதன் வடகரையைப் போல, முற்றிலும் பாழாகியிருக்கும்.

அதேபோல சற்றே மேற்கில், அடையாற்றின் தென்கரையில், 'எல்பின்ஸ்டன் பார்க்' என்ற ஒரு தோட்ட வீடும் இருந்தது. அதன் பரப்பளவு அந்த காலத்தில், 158 ஏக்கர். ஆற்றை நோக்கிய ஒரு பெரிய பங்களாவும் இருந்தது.


காந்தி நகர்:
அயர்லாந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மதராசில், 1875ல் துவக்கப்பட்ட ஒரு நிறுவனம், 'பேட்ரீஷியன் பிரதர்ஸ்'. டாக்டர் பென்னலி என்ற மதராசின் அன்றைய ஆர்ச் பிஷப், இவர்களை கத்தோலிக்க அனாதை நிறுவனத்தை பராமரிக்க அழைத்தார். சகோதரர் பால் ஹ்யூஜஸ் மற்றும் சகோதரர் பிண்டன் பார்க்கின்சன் என்ற இரு அயர்லாந்து நாட்டவர், இந்தியா வந்தனர்.

அந்த நிறுவனம் ஆர்மேனியத் தெருவில் இயங்கிக் கொண்டிருந்தது. அதற்காக பெரிய இடம் தேடிக் கொண்டிருந்த செயின்ட் பேட்ரிக் சொசைட்டிக்கு, இந்த, 1158 ஏக்கர் நிலமும் பங்களாவும், 1885, ஜூலை 1ம் தேதி அன்று ஆங்கிலேயரால், விற்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த, ஆர்ச் பிஷப்புடன் நேர்ந்த சச்சரவால் பரப்பளவு குறைக்கப்பட்டது.

சிறு சிறு பகுதிகளாக விற்கப்பட்டு பின்னர் காந்தி நகர் கட்டட சொசைட்டிக்கு பெரும் பகுதி விற்கப்பட்டது. அப்படி சென்னையில் சுதந்திரத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முதல் புறநகர்ப் பகுதி தான் காந்தி நகர்.

இன்றும் செயின்ட் பேட்ரிக் பள்ளி வளாகத்தில், பழைய ஆங்கிலேயர் கட்டிய விடுதி அப்படியே பராமரிக்கப்படுகிறது. அதற்கு அருகில் அடையாற்றங்கரையில் இக்கட்டடத்தின் வரலாறு கூறும் கல்வெட்டு, 1950களில் ஏற்பட்ட மாற்றங்களால் மறைந்து விட்டது.

[1] Madras Tercentenary Volume 1939 page 61[2] Madras tracing the history from 1639 K. R. A. Narasiah page 206 (கட்டுரையாளர் - எழுத்தாளர், ஆய்வாளர்)


நன்றி:  தினமலர்___________________________________________________________
  

Mr. K R A Narasiah
narasiah267@gmail.com 
___________________________________________________________
 


குறுந்தொகையின் அடிதொட்டு புதுக்கவிதை

-- யேசுராஜன்.


பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
-- குறுந்தொகை 122

விடியலை நோக்கி
நகர்கிறது இந்த இரவு
கொக்கின் முதுகை யொத்த
ஆம்பலும் குவிந்து விட
விடியதே இரவே
என்கிறது மனம்
எப்போது வருவாய்
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
-- குறுந்தொகை 2

தேடுதலே
வாழ்க்கையான
தேனெடுக்கும் வண்டே சொல்
ஊரினிலே நாட்டினிலே
உண்டான பூக்களிலே
என்னவளின் கூந்தலின்
நறுமணம் போல கண்டதுண்டா
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பொருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
-- குறுந்தொகை 3

நிலம் பெரிது நீர் பெரிது
அவை மூடும் வான் பெரிதென்பார்
நிதம் எந்தன் நெஞ்சிலாடும்
நிலவொத்த நின் முகம்காணார்
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் 
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று 
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
-- குறுந்தொகை 6

ஊரும் உலகமும் உணர்விழந்து
உருத்தெரியாமல் உறங்கிபோனதொரு- சாமத்தில் நான்
உறங்கவில்லை ஏனென
சொல்லத் தெரியவில்லை
யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே
-- குறுந்தொகை 152

மெள்ள  வளருது என்காதல்
ஆமைக்குஞ்சைப்போல் மெதுவா
மெல்ல முடியாமலும் முழுங்க முடியாமலும்
தவிக்குது ஊரு - நம் காதல்
அவிஞ்ச முட்டைபோலாகும்னு நெனப்பு
தெரிஞ்சே நினைச்சேன் உன்னை மச்சான்
விடிஞ்சா போகும் பனிபோல
துன்பம் வடிஞ்சே போகும் விரசால.
குறுந்தொகையில் புதுக்கவிதை - பாட்டுக்குப் பாட்டு

-- துரை.ந.உ.இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே
-- குறுந்தொகை 123

நடுஇரவின் மைஇருளுள் நீளும் நிழலாய்
நெடுநிலவின் பால்ஒளியில் வெள்ளை மணலாய்
புன்னைமர மத்தியில் பூத்திருந்தேன் நான்உனக்கு
என்எண்ணம் ஏன்இன்னும் இல்லை உனக்கு
அண்ணன்மார் வந்ததுதான் தப்புக் கணக்கு​

பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
-- குறுந்தொகை 122

நீள்பசுங்கால் கொக்கின்பின் வெண்முதுகை ஒத்திருக்கும்
ஆழ்குளத்தின் ஆம்பலும் கூடக் குவிந்துவிட
நீள்இரவும் வந்துவிட நான்இனி என்செய்வேன் 
வீழும்இம் மாலைக்கென் வாழ்த்து

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே   
-- குறுந்தொகை  40

என்தாயும் உன்தாயும் யாருக்கு யார்சொந்தம்
என்தந்தை உன்தந்தைக்கு எவ்வழி யில்பந்தம்
என்னைநீ உன்னைநான் எவ்வாறு தான்அறிந்தோம்
செம்மண்ணுள் பெய்தமழை நீர்போலச் செம்மையாய்
அன்பினுள் நம்முள்ளம் ஒன்றாய்க் கலந்தனவே

யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே   
-- குறுந்தொகை 54

மதிமட்டும் இங்கிருக்க., மீந்திருக்கும் பெண்மையோ....
கதிர்காப்பான் கூட்டும் கவண்ஒலிக்கு அஞ்சி
மதயானைக் கைவிட்ட மூங்கிலைப் போல,
புதுமீனைக் கைப்பற்றும் தூண்டிலைப் போல,
பொதிகாட்டின் வேந்தனைத் தேடும் வெடுக்கெனவே !

பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து           
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே 
-- குறுந்தொகை 57

மலர்நடுவே ஓர்நொடியே வந்தாலும் ஆண்டு
பலபோல் உருகும்நீர் வாழ் *மகன்றில் போல ..
அரிதாய்ப் பிரிவைக் கருதும் எமக்குள்
பிரிவுவந்தால் சேர்ந்தெம் உயிர்போகும் ....இப்பிறப்பில்
ஈருயிருர் ஓருயிராய் ஆனபிறகு இவ்வுலகில்
ஓருடலாய் வாழவைக்கும் துன்பத்தை வெல்வதற்கே.

மகன்றில் = இணைபிரியாமல் வாழும் நீர்வாழ் பறவை இனம்

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல           
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே 
-- குறுந்தொகை 58

இடித்துரைக்கும் நட்பே! உமக்கு முடிந்தால்.,
வெடிக்கும்எம் காமத்தை எம்விருப்பம் போல்நிறுத்து.
ஞாயிறு சுட்டெரிக்கும் வெம்பாறை உச்சியில்
வாயில்லான் கையில்லான் காவல்கீழ் உள்ள 
உருகிய வெண்ணையைப் போல்-பரவும் காமம்
பொறுத்துப்பின் நீக்குவது என்பது அரிதே !

கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்
-- குறுந்தொகை  103

ஆற்றின் சுழல்பல சூழ்ந்தகுளிர்ச் சூழ்நிலையில்
சேற்றில்செம் மீனுக்குக் காத்திருக்கும் வேளையதில்.....
முள்முருங்கைப் பூதோற்கும் மெல்லிறகும், கூரிய
வில்தோற்கும் செவ்வலகும் கொண்டுள்ள நாரைக்கு....
நேர்இன்னல் உண்டாக்கச் சாரலுடன் சேர்ந்தடிக்கும்,
கூர்வாடைப் போதினிலும்...வாராரோ நம்தலைவர் !
கூறவர்க்கு தோழி_நான்என் வாழ்வழிப்பேன் என்றே !!கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.                       
-- குறுந்தொகை  2

மகரந்தம் தேன்நாடி நாளெல்லாம் தேடி ,
நுகர்ந்துண்டு , பூக்களுக்குள் வாழ்ந்து வரும்வண்டே..!
என்எண்ணம் சொல்லாமல் , கண்டதைச் சொல்வாயா ,,,
என்இணையாள் , கொள்ளும் உறவில் மயிலியல்பாள் ,
பின்வரிசைப் பல்போல் மிகநெருக்கம் கொண்டிருப்பாள் ,
பெண்ணவளின் கூந்தலைக் காட்டிலும் நன்மணம்
கொண்டது எதுவுமுண்டோ நீஅறிந்த பூவினிலே...!
குறுந்தொகையில் புதுக்கவிதை படைக்கலாம்

 --திருத்தம் பொன்.சரவணன்.


இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே
-- குறுந்தொகை 123


நீ வரல, அவிங்கெ வந்துட்டாய்ங்கெ

நடுராத்திரி இருட்டு மாதிரி ஒரு நெழலு
நெலாவே காயறமாதிரி வெள்ள மணலு
புன்னமரச் சோலையில பூத்திருக்கு உன்ரோசா
அண்ணனுங்க வாராய்ங்க படகுல வெரசா
இன்னமும் நீஏன் வரல என்ராசா?
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே
-- குறுந்தொகை 122


எப்போது விடியும்?

வெள்ளக்கொக்கு முதுகு மாதிரி ஆம்பலு
வாடுறத பாக்கையிலே நோவலு
பொழுது போயி வந்துடுச்சே சாந்தரம்
அதுவும் போயி விடிவதெப்போ சீக்கிரம்?
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும்
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே  
-- குறுந்தொகை 40


செங்காட்டு மழத்தண்ணி

எங்கம்மாவுக்கு ஒங்கம்மா என்ன சொந்தம்னு தெரியல
எங்கப்பாவுக்கும் ஒங்கப்பாவுக்கும் என்ன பந்தம்னும் புரியல
நீ யாரோ இங்க நான் யாரோ அதுவும் தெரியல ஆனா
செங்காட்டுல பேஞ்ச மழத்தண்ணி மாதிரி சேந்து
ஒண்ணா கலந்துருச்சி நம்ம மனசு இப்பலேர்ந்து.
யானே ஈண்டையேனே என் நலனே
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ
கான யானை கை விடு பசும் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே   
-- குறுந்தொகை 54


உசுரு மிச்சமிருக்கா?


கட்ட மட்டுந்தான் இங்கிருக்கு என்ராசா தோட்டத்துல
கவட்டச் சத்தங்கேட்ட காட்டுயானை பயத்துல
கைவிட்ட மூங்கிமரம் நிமிந்தது சுருக்கா
சுண்டிவிட்ட மீன் தூண்டில் கணக்கா
கொண்டுபோனியே என்உசுர மிச்சந்தான் இருக்கா?
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து           
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே 
-- குறுந்தொகை 57


உடம்பு ரெண்டு உசுரு ஒண்ணு


உடம்பு ரெண்டா உசுரு ஒண்ணா இருந்ததே
கடம வந்து நம்மள வேறாப் பிரிக்குதே
நீந்துறச்சே பூவொண்ணு நடுவுல வந்தாலும்
தாந்துணையக் காணாமே அன்றிலு தவிக்குமாம்
உன்ன விட ஒண்ணும் எனக்கில்ல பெருசாவே
என்ன நீ பிரிஞ்சா உசிரில்ல ராசாவே !
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே
-- குறுந்தொகை 58


என் உசிரும் போயிருமே


கரும்பாற மேலத்தான் கண்கூசுற வெயில்லதான்
காயவெச்ச வெண்ணெக் கருவாட்டுத் துண்டத்தான்
கையில்லா ஊமையன் காப்பாத்த முடியுமாலே?
என்னக் காப்பாத்த ஏங்குறஎன் நண்பர்களே
கருவாட்டுத் துண்டெல்லாம் காக்கா தின்னுருமே
காதல் நோயாலே என்உசிரும் போயிருமே !!!
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே
-- குறுந்தொகை 103


ஆவி சோருதடி அய்த்தானக் காணத்தான்

ஆத்துத் தண்ணியில ஓடுகிற மீனத்தான்
சேத்து மண்ணுமேல நின்னுக்கிட்டு புடிக்கத்தான்
முருக்கம் பூவாட்டம் முதுகுள்ள நாரப்புள்ள
பொறுத்துக் கெடக்கையிலே பேஞ்சதடி சாரமழ
பாவம் அந்நார நடுங்குனதப் போலஎன்
ஆவி சோருதடி அய்த்தானக் காணத்தான்!!!
புனவன் துடவை பொன் போல் சிறுதினை
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்
வெறி_உறு வனப்பின் வெய்து_உற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே
-- குறுந்தொகை 105


கண்ணீர் பெருகுதடி

தோட்டக் காவலுக்கு இருந்துவந்த சாமிக்கி
தெனமு படச்சிவந்த தெனயத்தான் வெளாட்டுக்கி
தின்ன மயிலொண்ணு சாமியாடி போலத்தான்
முன்னும் பின்னுமா ஆடுனதே நடுங்கித்தான்
இன்னும் இருக்குதடி அந்நெனப்பு போகலியே
கண்ணீர் பெருகுதடி காதலனக் காணலியே. !!!
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே
-- குறுந்தொகை 107


இது என் சாபம் !

செங்காந்தள் பூப்போல கொண்டையுள்ள சேவலே
கொக்கரக்கோ என்றுநீ செய்துவிட்டாய் கூவலே
என்காதல் கணவனுடன் நானிங்கு மகிழ்ந்திருக்க
இன்பம்தான் போனதிங்கே விடிந்ததென்று நீயுரைக்க
எலியைப் பிடித்துண்ணும் பூனையின் கைகளிலே
வலுவாய் அகப்பட்டுத் துன்புறவே இரவினிலே
ஒழிவாய் இரையாகி இது என் சாபம் !
குருகு கொள குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம்
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே
-- குறுந்தொகை 127


இங்கிருந்து கெளம்புநீ

நாரஒண்ணு கெண்டமீனக் கொத்தித்தின்னப் பாத்துச்சாம்
நீருக்குள்ள கெண்டமீனு முழுகிஓடிப் போய்டிச்சாம்
போனமீனு தலையதூக்கி மேலஎட்டிப் பாத்துச்சாம்
பாத்தமீனு பக்கத்துல இருந்தவொரு தாமர
நாரமூக்கு போலிருக்க பயந்ததாம் உள்ளார
நாரபோல ஒம்பாணன் கூறுகெட்ட புளுகுணி
வேறபாணன் வேண்டாமய்யா இங்கிருந்து கெளம்புநீ.
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே
-- குறுந்தொகை 136


கண்டவுடன் பொங்கும் காலத்தையும் வென்று !!!

காதல் ஒருநோய் என்பார் சிலர்
காதல் ஒருபேய் என்பாரு முளர்
உண்மையான காதல் இவ்விரண்டு மன்று
மென்மையான காதல் கூடிக்குறைவ தன்று
மதம்பிடித்த யானை மரத்திலையைத் தின்று
மகிழ்ந்தருகே தங்கும் காதலதைப் போன்று
கண்டவுடன் பொங்கும் காலத்தையும் வென்று !!!
அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடுஒல்லாவே. 
-- குறுந்தொகை 5


காதலொரு நோவே தான் !!!

புன்னமரக் கெளமேல ஒறங்குதடி குறுநார
மன்னவனக் காணாமே கலங்குதடி உள்ளார
கடலுதண்ணி தெறிக்குதடி புன்னமர இலமேல
கண்ணீரு வழியுதடி அந்தமர இலபோல
ராவெல்லாம் முழிச்சிருக்கேன் ராசாவக் காணத்தான்
சும்மா சொல்லலடி காதலொரு நோவேதான் !!!
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே 
-- குறுந்தொகை 202


நெஞ்சு நோவுதடி நெனச்சுப் பாக்கயில

நெஞ்சு நோவுதடி நெனச்சுப் பாக்கயில
நெருஞ்சிப் பூவெல்லாம் அழகாத் தெரிஞ்சாலும்
நெருங்கிப் பறிக்கயிலே முள்ளு குத்திடுமாம்
நெருஞ்சிப் பூவாட்டம் எனக்கு இனிச்சவரே
நெருஞ்சி முள்ளாட்டம் நோவும் கொடுத்தாரே
நெஞ்சு நோவுதடி நெனக்காமப் போனாரே !!!
யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாய் இல் முட்டை போல உள் கிடந்து
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே
-- குறுந்தொகை 152


குத்தஞ் சொல்லுறதே ஊருக்குப் பொழப்பாச்சு !!!

அடகாக்க முடியாத முட்டையப் போலத்தான்
அவிஞ்சே போயிடுமோ என்னோட காதலுந்தான்
ஆத்தா மொகம்பாத்தே வளருமடி ஆமக்குஞ்சு
அத்தான் மொகம்பாக்க ஏங்குதடி என்நெஞ்சு
குத்தஞ் சொல்லுறதே ஊருக்குப் பொழப்பாச்சு !!!
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே 
-- குறுந்தொகை 204


காதலுக்கு பேதம் கிடையாது !!!

காதலொரு நோயென்பார் பேயென்பார் அறியார்
காதலொரு விருந்தாகக் களிப்பாரே பெரியார்
கரிந்த மேட்டினிலே முளைத்த புதுப்புல்லை
கிழட்டுப் பசுநக்கித் தின்பதில் வியப்பில்லை
காதல் எப்பொழுதும் புதுப்புல் போலத்தான்
பேதம் அதற்கில்லை இடத்திலும் வயதிலுந்தான் !!!
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி
நல் அடி பொறிப்ப தாஅய்
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே
-- குறுந்தொகை 207


ஆவி போகுதடி அதக்கேட்டுத் தான்வெரசா !!!

சொல்லிட்டுப் போனாக்க பிரிஞ்சிவர முடியாதுன்னு
சொல்லாமப் போனாரே என்ஆச ராசாக்கண்ணு
ஓம மரத்துமேல ஒத்தப் பருந்தோட
ஓச வழித்தொணயா ஒதுங்கி நடக்கையில
காலு சுட்டுடுச்சாம் காஞ்ச பூமியில
காலு சுட்டதுல கொப்புளிச்சுப் போனதால
காட்டு வழியெல்லாம் காலுவெக்க மாட்டாம
தாவிப் போனாராம் தங்கமான என்ராசா
ஆவி போகுதடி அதக்கேட்டுத் தான்வெரசா !!!
Saturday, February 27, 2016

ராஜா தேசிங்கு


 --கோ.செங்குட்டுவன்.

"தேஜ் சிங்”, “ஜெயாசிங்”, “தஜாப்சிங்” - இப்படித்தான் ஆங்கிலேய ஆவணங்கள் உச்சரிக்கின்றன. ஆனால், நாம் அழைப்பது ராஜா தேசிங்கு அல்லது தேசிங்கு ராஜா. இந்த ரஜபுத்திர இளைஞனுக்கு வயதோ 21. செஞ்சி மண்ணில் ஆட்சிசெய்தது, மொத்தமே 10 மாதங்கள்தான். ஆனால் வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார்.

இவனதுத் தந்தை சொரூப் சிங். முகலாய மாமன்னன் ஔரங்கசீபின் புண்டேலா (பன்டேல்கன்ட்) தளபதியாக இருந்தவர். 1700 ஜனவரியில் செஞ்சியின் ஆளுநராக சொரூப்சிங்கை நியமித்தார் ஔரங்கசீப். இப்போது அவரது ஆளுகையின் கீழ் வழுதாவூர், திண்டிவனம், திருவாமாத்தூர், அசப்பூர், திருக்கோவலூர், வேட்டவலம் ஆகியப் பகுதிகள் அடங்கியிருந்தன. நாம் இங்குப் பார்க்கப்போவது ராஜா தேசிங்கு குறித்து என்பதானால், சொரூப்சிங்கை விடைபெற வைக்கலாம் எனக் கருதுகிறேன். 1713 இறுதியில் அல்லது 1714 தொடக்கத்தில் இவர் இறந்திருக்கலாம். அப்போது பேரரசுக்கு இவர் நிலுவையில் வைத்திருந்த வரி 70லட்சம் ரூபாய்.

தந்தையின் மரணச் செய்தியறிந்து, பண்டேல்கன்ட்டில் இருந்து தனது இளம் மனைவி இராணிபாயுடன் செஞ்சி விரைந்து வந்தார் ராஜா தேசிங்கு. தந்தைக்கான இறுதிக் காரியங்களை செய்தக் கையுடன், 1714 ஜனவரியில் செஞ்சி அரசுக்கானப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். “என்ன இருந்தாலும் ஆற்காடு நவாபிடம் அனுமதி பெற வேண்டாமா?” உடனிருந்தவர்கள் தயக்கத்துடன் கேட்டனர். ”என் தந்தைக்கு பரம்பரை அரசுரிமை வழங்கியவர் நவாப் அல்ல. டெல்லிப் பேரரசர். நான் பதவியேற்க யாருடைய அனுமதியும் தேவையில்லை” எனும் அனல் கக்கும் வார்த்தைகள்தான் தேசிங்கிடமிருந்து வந்தது. செஞ்சியின் ஆட்சித் தொடர்ந்தது.

தேசிங்கின் செயல் நவாபிடம் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு அவரது எதிர்வினை வேறுவிதமாக இருந்தது. சொரூப்சிங் செலுத்த வேண்டிய வரி இன்னும் நிலுவையில் இருக்கிறதே! இதனை வசூலித்துவர, தனது செயலாளர் தோடர்மாலை செஞ்சிக்கு அனுப்பி வைத்தார். மேலச்சேரியில் முகாமிட்டிருந்த நவாபின் செயலாளரை, ராஜா தேசிங்கு சென்று பார்த்தார். அப்போதும் அவர் குதிரையைவிட்டு கீழே இறங்கவில்லை. இதனைத் தொடர்ந்து தக்க விவரங்களுடன் கோட்டைக்குச் சென்ற தோடர்மால், செஞ்சி அரசரைச் சந்தித்தார்.

“வரியா? நிலுவையா? நான் செலுத்த வேண்டுமா?” இப்போதும் தேசிங்கின் கண்கள் சிவந்தது. தோடர்மால் கொண்டுவந்த கடிதம் தரையைத் தொட்டது. தொடர்ந்து அமைதி காத்த தோடர்மால், கடிதத்தினை பொறுமையுடன் குனிந்து எடுத்துக் கொண்டார். இதுகுறித்தத் தகவலை நவாபிற்குச் சொல்லவும் அவர் தவறவில்லை. தேசிங்கின் செய்கைகள் ஆற்காட்டு ஆட்சியைத் தொடர்ந்து அவமதிப்பதாக இருக்கிறதே என ஆத்திரமடைந்த நவாப் சாதத்துல்லாகான், செஞ்சியின் மீது படையெடுக்க முடிவு செய்தார்.

ஆற்காடு படை செஞ்சியை நோக்கி முன்னேறியது. இதில் இடம்பெற்றிருந்த வீரர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம். இதையறிந்த ராஜாதேசிங்கு, எதிரிகளை சந்திக்கப் புறப்பட்டுவிட்டார். அப்போது அவருடன், உயிர் நண்பனான, வழுதாவூர் கில்லேதார் மகமத்கான் உள்ளிட்ட 800இல் இருந்து ஆயிரம் பேர் மட்டுமே. வராக நதிக்கரையில் கடலி எனுமிடத்தில் இரண்டு படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மகமத்கான் வீழ்த்தப்பட்டார்.

இதனால் தேசிங்கின் தாக்குதலில் வேகம் அதிகரித்தது. நவாபின் தளபதியான தௌலத்கான், தேசிங்கின் வாளுக்கு இறையானான். பழிக்குப் பழி! இதனால் அதிர்ச்சியடைந்த ஆற்காட்டுப்படை, தேசிங்கை சூழ்ந்தது. வீரன் ஒருவனது துப்பாக்கியில் இருந்து சீறிய குண்டுக்குப் பலியானார் தேசிங்கு. இது நடந்தது 03.10.1714.

முன்னதாக, போருக்குப் போவது பற்றி உத்தரவுக் கேட்க சென்றபோது, சிங்கவரத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள், தலையைத் திருப்பிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தேசிங்கு–மகமத்கான் நட்பு, இந்து–முஸ்லிம் ஒற்றுமைக்கானக் கருத்தாக இருக்கிறது. மண மேடையில் அமர்ந்திருந்த மகமத்கான், நண்பன்–செஞ்சி அரசனுக்குப் பாதிப்பு என்றவுடன், மணமாலையை உதறிவிட்டு, போர்க்களத்துக்குச் சென்றதும், வீரமரணம் அடைந்ததும் வியந்து போற்றப்படுகிறது.

நவாபின் ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்தபோதிலும், வரி செலுத்த மாட்டேன் எனச்சொன்ன தேசிங்கின் அசாத்திய துணிச்சல் வரலாற்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது. அதே நேரம் மிகப்பலம் பொருந்திய எதிரிப் படையை, சிறிய எண்ணிக்கையிலான வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ராஜா தேசிங்கு எதிர்கொண்டு சென்றது சரியா? எனும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

விவாதங்களும் விமர்சனங்களும், ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம், ராஜா தேசிங்கு (அ) தேசிங்கு ராஜாவின் புகழ்பாடும் கதைப்பாடல்கள் ஏராளம். இந்தக் கதைகளை வரலாறாக எடுத்துக் கொள்வதும், கதையாகவே பார்ப்பதும் அவரவர் விருப்பம்!


இராணிபாயுடன் ராஜாதேசிங்கு சிற்பம்
கோட்டை அருங்காட்சியகம், செஞ்சி

கடலியில் நடந்தப் போரில் ராஜா தேசிங்கு சுட்டுக் கொல்லப்பட்டாலும், அவரை உயிருடன் பிடிக்க வேண்டுமென்பதுதான் ஆற்காடு நவாப் சாதத்துல்லாகானின் விருப்பமாம். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மையுங்கூட!

தந்தைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையைப் பயன்படுத்தி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தேசிங்கின் செயல், ஆற்காட்டை அவமதிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் இதற்கான எதிர்வினை என்பது உடனடியாக நிகழவில்லையே?

10 மாதங்கள் தேசிங்கின் ஆட்சி அனுமதிக்கப்பட்டுதானே வந்தது?

செஞ்சியின் வரி பாக்கியை வசூலிக்க டெல்லியில் இருந்து வந்துவிட்டார்கள். அவர்களுடன் தன்னுடைய செயலாளரையும் செஞ்சிக்கு அனுப்பி வைக்கிறார் நவாப். சென்ற இடத்தில் குதிரையின் மீதிருந்தே, லாலா தோடர்மாலுக்கு வணக்கம் சொன்னது, அவர் எடுத்துச் சென்ற கடிதத்தைத் தரையில் வீசியது – போன்ற நிகழ்வுகள் சாதத்துல்லாகானின் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த நெருப்பை விசிறியது என்று சொல்லலாம்.

ராஜா தேசிங்குப் படையில் இருந்தவர்கள் சில நூறு பேர்கள்தாம். ஆற்காட்டுப் படையிலோ பல ஆயிரம் பேர். ஆனாலும் தேசிங்கை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதுதான் நவாபின் ஆணை. அதற்கானக் காரணம்? தெரியவில்லை!

படைத்தளபதிகளுள் ஒருவரான தௌலத்கானை, தேசிங்குக் குத்திக் கொன்றார். அப்போதும்கூட, “அவரைக் கொல்லுங்கள்” என்று நவாப் கட்டளையிடவில்லை.

இந்தப் போரில் நவாப்புக்கு மிகவும் கைகொடுத்தவர் வெங்கடகிரி (நெல்லூர் மாவட்டம்) கில்லேதாரான பங்காரு யச்சம நாயக்கர். அவரும்கூட, தன் படையினரிடம் “தேசிங்கை உயிருடன் பிடிக்க வேண்டுமென்று”தான் ஆணையிட் டிருந்தாராம். ஒருகட்டத்தில் தேசிங்கின் குதிரையின் கால்கள் வெட்டப்பட்டன. இதனால் தரையில் நின்று ஈட்டியைச் சுழற்ற வேண்டிய நிலை. இப்போதும்கூட தேசிங்குக் கொல்லப்பட வில்லை.

யச்சம நாயக்கரின் படைப்பிரிவைச் சேர்ந்த ஒருவன், கேடயத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, தேசிங்கை உயிருடன் பிடிக்க நெருங்கினான். அப்போது அவனைத் தனது ஈட்டியால் குத்திக் கொன்றார் தேசிங்கு. இப்போதுதான் “கொல்லுங்கள்” எனும் உத்தரவு யச்சம நாயக்கரிடம் இருந்து வெளியானது. துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்த வீரன் ஒருவன் தேசிங்கை சுட்டுக் கொன்றான்.

செஞ்சி அரசாங்கம் நவாபின் கைகளில் வெகுசீக்கிரத்தில் விழுந்தது. கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தேசிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ரஜபுத்திர வழக்கப்படி, கணவன் உடலுடன் உடன்கட்டையேறுவதற்கு ராணிபாய் அனுமதிக்கப்பட்டாள். ராஜா தேசிங்கு உடல் எரியூட்டப்பட்டதாகச் சொல்லப்படும் செட்டிக்குளக்கரையில், அரச, வேப்ப மரங்கள் நடப்பட்டு பூங்கா ஒன்றும் உருவாக்கப்பட்டது.

இராணிபாயின் நினைவாக, ஆற்காடு அருகே உள்ள ஒரு ஊருக்கு ராணிப்பேட்டை எனும் பெயரை வைத்தார் நவாப். செஞ்சியின் ஆட்சியில் இருந்த தேசிங்கின் ஆதரவாளர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். விருப்பமில்லை என்றவர்கள், பண்டேல் கன்ட்டுக்கு அனுப்ப ப்பட்டனர். தேசிங்கு வீழ்ந்த இடத்தில் வெற்றி நகரம் எனும் பொருள் வழங்கும் “பதேபட்” என்ற புதிய நகரம் உருவாக்கப்பட்டது. தேசிங்கு, அவரதுக் குதிரை, மகமத்கான் ஆகியோருக்குக் கல்லறைகள் ஏற்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. போரில் உயிர்நீத்த மகமத்கானின் நண்பர்கள் இருவருக்குக் கோட்டைக்கு வெகுஅருகில் கல்லறைகள் ஏற்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.


இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியிலும், “தேசிங்குடன் போர் புரிவதற்கு, டெல்லி பேரரசிடம், நவாப் சாதத்துல்லாகான் அனுமதி பெற்றாரா?” - இதுவரை விடை தெரியாத ஒரு வினா இது! ராஜாதேசிங்கை வீழ்த்தி, வெற்றி பெற்றதன் நினைவாக எழுப்பப்பட்ட சாதத்துல்லா கான் மசூதி, செஞ்சிக் கோட்டை வளாகத்தில் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இங்குப் பொறிக்கப்பட்டிருந்த பெர்ஷியன் மொழிக் கல்வொட்டொன்று இவ்வாறு சொல்கிறது:
“மேன்மைக்குரிய சாதத்துல்லாகானுக்கு ஹைதரின் ஆசிகள் கிடைக்கட்டும். எல்லாம் வல்ல இறைவனின் இணையற்ற கருணையினால் செஞ்சிக் கோட்டையை இவர் கைப்பற்றினார்”.

___________________________________________________________
கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com ___________________________________________________________