Monday, February 8, 2016

ஆதி மொழி தொல்காப்பியம் பாணினீயம் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு நூல் - நூல் மதிப்புரை

--- சேசாத்திரி சிறீதரன் 


சட்டம்பி திருவடிகள் சுவாமி (1853 - 1924) கேரளத்தில் குமுக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட சிறீ நாராயண குருவிற்கு குருவாய் அமைந்தவர். தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் இவர்1915 இல் இயற்றிய மொழியியல் ஒப்பாய்வு நூல் தான் ஆதி மொழி என்பது. அரிதினும் அரிதாக இதுகாறும் எவரும் செய்திராத வகையில் இந்நூலில் தமிழ் சமற்கிருதம் ஆகிய மொழிகளின் முதன்மையான இலக்கண நூல்களான தொல்காப்பியம் பாணினீயம் ஆகியவற்றை ஒப்பிட்டு இம்மொழிகளின் அமைப்பில் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் சிறந்த முறையில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றோடு நில்லாமல் தமிழ், பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றின் தொன்மையைப் பற்றிக் கூறும் போது தமிழ் இம்மூன்றில் மூத்த முதுமொழி என்றும் பிராகிருதம் தமிழுக்குப் பின்னது என்றும் சமற்கிருதம் பிராகிருதத்திற்கும் பிற்பட்டது என்றும் நிறுவியுள்ளார். சமற்கிருத இலக்கணத்தினும் தமிழ் இலக்கணம் பழமையானது என்று கூறுகிறார். https://en.wikipedia.org/wiki/Chattampi_Swamikal


176 பக்கங்கள் கொண்ட இந்நூல் வித்தியாதிராச தரும சபையால் கடந்த 31/01/2016 அன்று அவ்வை திரு நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டது. நான் ஆனந்த மார்க்க பிரச்சாரக சங்கத்தில் ஊழ்கம் பயின்றுவந்த நாளில் 9 ஆண்டுகள் முன்னம் அதில் உறுப்பினராக இருந்த திரு பி. சுப்பிரமணியம் பிள்ளை என்ற மலையாளி தந்த குறுநூல் ஒன்றில் இந்த சட்டம்பி திருவடிகள் இயற்றிய ஒப்பாய்வு நூல் "ஆதிபாஷா" தமிழையே ஆதிமொழி எனக் குறிப்பதாக இருந்த செய்தியால் ஈர்ப்புற்று வித்தியாதிராச தரும சபையின் பொதுச் செயலர் திரு சி.கெ. வாசுக் குட்டன் அவர்களைத் தொடர்பு கொண்டு 1998 இல் கெ. மகேசுவரன் நாயரால் மலையாளத்தில் வெளியிடப்பட்ட இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதைப் பேரா இரா. மதிவாணன் நல்ல முறையில் செய்யவல்லவர் என்று கூறி இருவருக்கும் தொடர்பை ஏற்படுத்திவைத்து சில மாதங்களில்(2007 இல்) மொழிபெயர்ப்பு முடிவடைந்தது. பல்வேறு காரணங்களால் நூல் வெளியீடு தடைப்பட்டு எமது தொடர்ந்த வற்புறுத்தலால் 2016 சனவரி இல் வெளியானது.


இந்நூல் தமிழார்வலர்கள், தமிழ் சமற்கிருதம் அறிந்த அறிஞர்கள், அயலக பல்கலையில் பயிலும் மாணவர்கள் கற்றுவிக்கும் பேராசிரியர்கள் ஆகியோருக்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். விலை உரூ. 180/-

உள்ளடக்கம்

1. தொடக்கம் - பிராரம்பம்

2. எழுத்தியல் - அட்சர நிரூபணம்

3. புணரியல் - சந்தி நிரூபணம்

4. சொல்லியல் - பத விவஸ்தா நிரூபணம்

5. பால் இயல் - லிங்க நிரூபணம்

6. எண் இயல் - வசன நிரூபணம்

7. வேற்றுமை இயல் - விபக்தி நிரூபணம்

8. அடிச்சொல் இயல் - தாது நிரூபணம்

9. தமிழ் சமற்கிருதம் ஒற்றுமை வேற்றுமைகள்

10. ஆதி மொழி - ஆதிபாஷா

தொடக்கம் பக்கம். 2

வீசிதரங்க நியாயம்: தொடக்கத்தில் ஒரு அலை புறப்பட்டு கரையைத் தொடுவதற்கு முன்பே அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து வந்து அலையடுக்குகளாக உருவெடுக்கின்றன. அது போல் முதலில் தோன்றிய ஒரு மொழியின் விளைவாக அடுத்தடுத்து பல மொழிகள் உருவெடுக்கும் வரலாற்றுக்கு அலை அடுக்கு முறை என்பது உவமையாகிறது.

கதம்ப மூல நியாயம்: கடம்ப மரத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சேர மொட்டுகள் அரும்பி அவை ஒரு சேர மலரும். இதைப் போலவே ஒரு நேரத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு மொழிகள் தோன்றியிருக்கக் கூடும் என்பதற்கு இது உவமையாகக் கூறப்படுகிறது.


எழுத்தியல் பக்கம் 25 - 26:

பிராகிருதம் சமற்கிருதமயமாக்கப்படாத தனக்கே உரிய முந்து எழுத்து வடிவங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால் சமற்கிருதத்தைவிடப் பிராகிருதம் காலத்தால் மிக மிக முந்தையது என்பது பெறப்படுகிறது.

மேலும் சமற்கிருதம் ஒருமை இருமை பல என்னும் எண்பாகுபாடு உள்ளது. அதனை வசனத்ரையம் என்கின்றனர். ஆனால் பிராகிருதத்தில் "த்விவசனஸ்ய பஹுவசனம்" எனக் கூறப்பட்டிருப்பதால் ஒருமை பன்மை எனும் இரண்டல்லாது இருமை (த்விவசனம்) என்பது அறவே இல்லை.

சமற்கிருதத்திலிருந்து பிராகிருதம் தோன்றியிருந்தால் சமற்கிருதம் ஏற்றுக் கொண்ட இருமை எண் (த்விவசனம்) இல்லாமலிருக்கக் காரணமில்லை.


புணரியல் பக்கம் .48

ஏனைய உலக மொழிகளில் இல்லாத சொற்புணர்ச்சி (சந்தி) இலக்கணம் தமிழிலும் சமற்கிருதத்திலும் மட்டும் காணப்படுகின்றன.


சொல்லியல் பக்கம் 67

சமற்கிருதத்திலுள்ள சொற்கள் யாவும் 'கிரியா தாது' எனும் வினைச் சொற்களிலிருந்து தோன்றியவை. ஆனால் முன்னொட்டுகள் பெறாத தனித்த வினைச் சொற்கள் சமற்கிருதத்தில் இல்லை.

பக்கம் 69 - 70
சமற்கிருதத்தில் எல்லாச் சொற்களும் தாதுக்கள் எனும் சொல்லடியில் தோன்றினாலும் இந்த வடிவத்தில் வினைச் சொற்கள் ஆவதில்லை. அவற்றோடு முன்னொட்டுகள், பின்னொட்டுகள் சேர்ந்தால் தான் வினை வடிவம் பெறும். தமிழில் வினைச் சொற்களுக்கு முன்னொட்டு பின்னொட்டுப் போன்றவை அறவே தேவையில்லை. இவற்றை உற்று நோக்கும்போது தமிழ் சமற்கிருதம் எனும் இரண்டு மொழிகளுக்கும் இடையே உள்ள வலுவான பெரிய வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.

பக்கம் 71 சமற்கிருதம் பேசப்படும் பேச்சு மொழியாக இல்லாததாலும் பல திசைகளிலிருந்தும் சொற்கள் வந்து சேரும் வாய்ப்பு இல்லை எனக்கருதி திசைச்சொல் என்னும் வகைப்பாட்டைச் சமற்கிருத இலக்கணத்தில் சேர்க்கவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். எனினும் தன்சொல் பிறசொல் எனும் இருவகை அதில் இல்லை என வாதிட முடியாது.


பால் இயல் பக்கம் 101
சமற்கிருதத்திலுள்ள பால் வேறுபாடுகள் குழப்பமும் பிழைபாடும் கொண்டவை என்பதைச் சமற்கிரதத்தத்தில் மாபெரும் புலமையாளராகவும் சமற்கிருதத்திற்கு அதிகாரிகளாகவும் உள்ள சமற்கிருத பெரும் பண்டிதர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.


எண் இயல் பக்கம் 107
தமிழிலுள்ள உயர்திணை அஃறிணைப் பிரிவுகள் சமற்கிருதத்தில் இல்லை. இவை காலங்கடந்து தமிழில் சேர்க்கப் பட்டவை என்று கூறுவதை ஏற்க முடியாது. உயர்திணை முன்பு வகுக்கப்பட்ட பின்னரே உயர்திணை அல்லாதது எனும் அஃறிணை காரணம் கருதிப் பெயரிடப்பட்டுள்ளது. ஆதலால் தமிழிலுள்ள உயர்திணை அஃறிணை வேறுபாடு தொடக்க காலத்திலேயே உண்டாகியிருக்க வேண்டும். இதுவே உத்திக்கும் பொருந்தியுள்ளது.

பக்கம் 109
சமற்கிருதத்தில் எண்ணிக்கையை வசனம் என்றும் பிறப்பு வழி ஆண் பெண் வேறுபாட்டை லிங்கம் என்றும் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் இந்த இருவகைக்கும் வேறுபாடு காட்டாமல் பொதுவாகப் பால் எனப் பெயரிட்டது ஏன்?

இவற்றுக்குக் காரணம் என்னவெனில் வடமொழியிலக்கணப்பாங்கு ஏற்படுவதற்கு முன்பே மிகு தொன்மைக் காலத்தில் தமிழிலக்கண வகைப்பாடுகள் தோன்றிவிட்டனவாதலால் அவற்றை மாற்றமின்றித் தமிழிலிணக்க வல்லுநர் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதேயாகும்.


ஆதிமொழி பக்கம் 175

பல்வேறு உயிரினங்கள் எங்குத் தோன்றினவோ அங்குதான் மாந்த இனமும் தோன்றியிருக்க முடியும். முதல் மாந்தன் எங்குத் தோன்றினானோ அங்குத்தான் உலக முதன் மொழியும் தோன்றியிருக்க முடியும். அந்த மாந்தனின் மொழிகள் அவனுக்குப் பிறகு தோன்றிய மாந்த இனத்துக்கும் தாய்மொழியாக அமைந்திருக்கும்.

இலங்கை தொடங்கிய அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாக உள்ள தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழியாக இருந்திருக்கும் என்னும் உண்மை இதனால் நிலை நாட்டப்படுகிறது. இப்பகுதியிலிருந்து உலக முழுவதும் பரவிய உலகமொழிகள் அனைத்துக்கும் தமிழே தாய்மொழி என்பது உறுதிப்படுவதால் தமிழை ஆதிமொழி என்று அழைக்கலாம்.நூல் கிட்டும் முகவரி:

சிறீ வித்தியாதிராச தரும சபை ,
எண் F - 13, BBC Westend,
9A, கே. கே. சாலை,
சாலிக்கிராமம்,
சென்னை - 600 093.
அலைபேசி: 98414 28004 (வாசுகுட்டன்)

விலை உரூ. 180/-
___________________________________________________________
 

சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
___________________________________________________________
 

1 comment:

  1. இலங்கையிலிருந்து இந்நூலை பெற்றுக்கொள்வது எப்படி

    ReplyDelete