Tuesday, January 28, 2020

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியவர் யார்?

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியவர் யார்?

——   மா.மாரிராஜன்          இது என்ன கேள்வி???!!!

          பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே.

          ஆம்...   இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால்,  இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்; 1858 ல்... ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்து, பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போதைய ஆங்கில அரசால் 1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது (Archaeological survey of india - ASI).  இத்துறையின் சென்னை மாகாண  கல்வெட்டியல் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஹூல்ஸ் (Dr. Euger julius theodor Hultzsch).

          ஹூல்ஸ் 1886 ல் அசோகரது கல்வெட்டைப் படியெடுத்தார், 1886 டிசம்பரில் மாமல்லபுரம் கல்வெட்டைப் படித்தார், 1887 டிசம்பர் மாதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகிறார்.கோவிலைக் கட்டியது கரிகால் சோழன், தனக்கு வந்த வியாதி தீர கைங்கரியமாய் கோவிலைக் கட்டினான். மோர் விற்ற அழகி என்னும் மூதாட்டி கதை என்று செவிவழிச் செய்திகள் வழக்கத்திலிருந்த நேரம் அது.

          பெரிய கோவிலுக்கு வருகிறார் ஹுல்ஸ். கோவிலின் அமைப்பும் பிரம்மாண்டமும் அவரை உறைய வைத்தது. தன்னிச்சையாக அவரிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தை...

"The great temple"

          கோவிலின்  வாயில் முதல் கொண்டு எங்கெங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள். அழகான தமிழ் எழுத்துக்களில் அமைந்த கல்வெட்டுகள். தனக்கு இங்கு நிறையவே வேலை இருக்கிறது என்று முடிவு செய்கிறார் (பிற்பாடு அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்தகவல்களை விவரிக்கிறார்).  பொறுமையாகக் கல்வெட்டுகளை வாசிக்கத்தொடங்கிய அவர், கல்வெட்டுகளின் தொடக்கத்தைத் தேடினார். மிகச்சரியாக ஸ்ரீ விமானத்தின் வடப்புறம் சென்றடைந்தார். சண்டிகேசர் கோவிலுக்கு எதிரே விமானத்தின் வடப்புற அதிட்டானத்துப் பட்டிகை, அங்குதான்... அந்த வரிகள் இருந்தன.

          இராஜராஜனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் அக்கல்வெட்டில்,
"பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி இராஜராஜீவரம்"          இந்த வரிகளை வாசித்த பிறகு கோவிலைக் கட்டியது பேரரசன் இராஜராஜன் என்று வெளியுலகிற்கு முதன் முதலாக அறிவிக்கிறார்.

          அப்போது இராஜராஜனை இவ்வாறு அழைத்தார்.

"The great king"

          பிறகு, தனது பரிவாரங்களுடன் கோவிலில் முகாமிட்டு அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து அச்சு நூலாக வெளியிடுகிறார். இவரது பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் இவரது உதவியாளர் வெங்கையா.  1887 - 1891 வரை நான்கு ஆண்டுகள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வேலை நடந்தது.  தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எண் 2 ல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சு நூலாக வெளிவரத் தொடங்கியது.

          இராஜராஜேச்சரமும், இராஜராஜனும், பெருவுடையாரும், அனைத்து மக்களின் இதயங்களை ஆக்கிரமித்தார்கள்.

"The great temple"
     
"The great king"
தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)

Saturday, January 25, 2020

கற்குவேல் அய்யனார் கோயில்

கற்குவேல் அய்யனார் கோயில்


——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


திருச்செந்தூரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது குதிரைமொழி கிராமம். இது ஒரு தேரி குடியிருப்பு.  தேரி என்றால் செம்மண்.  குமரிமுனையிலிருந்து தொடங்கி நாங்குநேரி, சாயர்புரம் வரை தேரி விரிந்து கிடக்கிறது. ராபர்ட் புரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவர் இங்கு கிடைத்த புதிய கற்கால கருவிகளை ஆராய்ந்து இவை 10,000 ஆண்டிற்கு முற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். கால்டுவெல் தேரி மண்ணை எடுத்து வியன்னா ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்து இம்மண்ணை போன்று வேறு எங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.


குதிரைமொழி கிராமத்தில் கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. கற்குவேல் அய்யனார் மானாடு என்பது  மானவீரவளநாடு  என்றும் அழைக்கப்பெற்றது. இங்கு கி.பி. 1639 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது.  இப்பகுதியை ஆண்ட 10 நாடார் குறுநில மன்னர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் உள்ளது. இக்கல்வெட்டில் இந்த ஐயனார் கருக்கு வேலையன் என்று குறிக்கப்படுகிறார். கி.பி. 1703 இல் செம்பால் செய்த நகரா ஒன்று தானமாக அளிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

மூலவர்:
கற்குவேல் அய்யனார்; மகாமண்டபத்தில் விநாயகர், லாட சன்னியாசி போன்றோர் அமைக்கப்பட்டுள்ளனர்.பரிவார தெய்வங்கள்:
பரிவார தெய்வங்களாக முன்னடியான், வன்னியராசர், பட்டவராயன், சுடலைமாடன், கருப்பசாமி, சின்னத்தம்பி, மாடசாமி, பொன் காத்த அய்யனார், பெரியாண்டவர், இருளப்பர், பிண மாலை சூடும் பெருமாள் செருக்கன், துப்பாக்கி மாடசாமி, எமதர்மர், புலமாடி அம்மன், புலமாடன் சாமி போன்றவர்கள் உள்ளனர் .பெண் தெய்வங்கள்:
பேச்சி அம்மன், பிடிமண் அம்மன், பத்திரகாளி, பிரம்மசக்தி, இசக்கி அம்மன் மற்றும் சப்தகன்னியர்கள் பெண் தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள்.திருவிழா:
கள்ளர் வெட்டு திருவிழா; இந்த திருவிழா கார்த்திகை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வில்லுப்பாட்டு இசைக் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியர், மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharmThursday, January 23, 2020

இதுவல்லவோ எங்கள் வடசென்னை!!!

இதுவல்லவோ எங்கள் வடசென்னை!!!

——   எம்.ராஜா


            தீபாவளி, பொங்கல் தினத்தன்று வெறிச்சோடி கிடக்கும் சென்னை சாலைகளை வைத்தே அறிந்து கொள்ளலாம் சென்னையில் தற்போது வாழும் பெரும்பாலான மக்களின் பூர்விகத்தை. தன்னைத் தேடி வருபவர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது சென்னை. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட நம்பிக்கையுடன் ஒரு கூட்டம் சென்னை எக்மோர், சென்ட்ரல் மற்றும் கோயம்பேட்டில் இறங்கி நம்பிக்கையுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறது.

            இந்த சென்னை பட்டணத்திற்கென்று ஒரு கதை இருக்கிறது, அது இங்கு இருந்த அல்லது இருக்கும் கட்டிடங்களைப் பற்றிய கதை அல்ல;  இந்த கட்டிடங்களில் மறைந்து கிடக்கும் இந்த மண்ணின் பூர்வ குடிகளின் கதை, கறுப்பர் நகரத்தில் வாழ்ந்தவனின் உழைப்பே மதராசப்பட்டிணத்தை உலகின் ஒரு முக்கியமான தொழில் நகரமாக, நமது தலைநகரமாக உருவாக்கியது. அதன் பயனை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் உருவாக்கித் தந்த மதராஸ் நகரத்திலே நாம் நமது கனவுகளைத் துரத்திக் கொண்டிருக்கிறோம், அதற்கான நன்றி நம் எண்ணத்தில் இருப்பது நலம். 

            இதன்படி பார்த்தால் 370 வருடங்களுக்கு முன் மதராஸின் கறுப்பர் நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதனுக்கும் இப்போது சென்னைக்கு 'ஐ.டி' (IT) வேலை தேடி வரும் இளைஞனுக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத தொடர்பிருக்கிறது. அந்த தொடர்பை நோக்கிய தேடலாகவே தமிழ் மரபு அறக்கட்டளை- பன்னாட்டு அமைப்பின்  "மரபு நடை" அமைந்தது. 

            வட சென்னையின் வரலாற்று எச்சங்களை நோக்கிய பயணம் தொடங்கிய இடம் பாரிஸ் கார்னர் என்கிற பாரி முனை. பாரிமுனையில் இருக்கும் உயர்நீதிமன்றத்தின் வாகன நிறுத்தத்தில் கூடி சக பயணிகளைச் சந்தித்துக் கொண்டோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் திரு.சுபா மற்றும் வட சென்னையின் வரலாற்றை விளக்க வந்திருந்த நிவேதிதா லூயிஸ் அவர்கள் இந்த பயணத்தின் நோக்கம் மற்றும் நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினர்.

            உயர்நீதிமன்றத்தின் சுவரில் இருக்கும் எம்டன் கல்வெட்டைப் பார்வையிட்டோம். இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களை மிரட்ட எம்டன் என்னும் ஜெர்மானியக் கப்பலிலிருந்து சென்னை நோக்கி குண்டு வீசப்பட்டது. அந்த இடத்தில் அமைந்துள்ள கல்வெட்டே இது. குண்டு விழுந்த நேரத்தில் மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?!! இந்தியாவின் தெற்கு பகுதியில் இருப்பதால் அமைதி பூங்காவில் வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ஆனால் நமது ஊரில் வந்து ஜெர்மானியக் கப்பல் பயம் காட்டி சென்றிருப்பது ஆச்சரியமான செய்தியே. இதனால் ஆங்கிலேயர் காலத்தில் சென்னையின் முக்கியத்துவத்தை உணரவும் முடிகிறது.

            ஆங்கிலேயர் காலத்தில் சென்னை கறுப்பர் நகரம் மற்றும் வெள்ளையர் நகரம் எனப் பிரிக்கப்பட்டது. ஆங்கிலேயருக்குச் சேவை செய்வதற்காகக் கோட்டைக்கு வெளியே மக்கள் குடியமர்த்தப்பட்டனர். தொழில் வாரியாக தெருக்கள் பிரிக்கப்பட்டது. அதன் அடையாளமான ஸ்தூபி அமைக்கப்பட்டது. டேர் ஹவுஸ் (Dare House) கட்டிடத்தின் அருகே ஒரு மூளையில் இந்த எல்லைக் கல்லைப் பார்க்க முடிந்தது. எவ்வளவு பெரிய சமூக மாறுதலை ஏற்படுத்திய நிகழ்வின் அடையாளம் இப்படி மறைந்து கிடக்கிறது எனத் தோன்றியது.

            டாட்டா, வாடியா, கோத்ரேஜ் என இந்தியாவில் தொழில்துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இவர்கள் அனைவரும் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். பல இனக்குழுக்கள் வாழ்ந்த வணிக மையம் சென்னை, இதில் பார்சிகளுக்கு முக்கிய இடமுண்டு. அப்படி வரும் பார்சி வணிகர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட சத்திரமே " அஞ்சுமண் பாக்". நாங்கள் சென்ற போதும் அதில் பார்சி இனத்தவர்கள் தங்கியிருப்பது தெரிய வந்தது. அந்த வளாகத்திலேயே பார்சிகளின் கல்லறை உள்ளது. அதில் புகழ்பெற்ற பெயர்கள் பல உள்ளன, நம்மைக் கவனிக்க வைத்தது "கிளப் வாலா" (clubwala) அவர்களின் பெயர். மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வர்க் ஆரம்பித்தவர் இவரே. இன்று இந்த முயற்சியால் பல லட்சம் விளிம்பு நிலை மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். 

            சத்திரத்திற்கு அருகிலேயே பார்சிகளின் நெருப்புக் கோவில் உள்ளது (பார்சிகள் நெருப்பை வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்). இதன் உள்ளே பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை. சென்னையில் இருக்கும் ஒரே நெருப்புக் கோயில் இதுவே. ரமலான் மாதத்தின் ஒரு நாள் இங்குள்ள இஸ்லாமியர்கள் இந்த கோவிலைச் சேர்ந்த அரங்கில் வந்து நோன்பு திறக்கிறார்கள், அன்று அது பார்சிகள் அளிக்கும்  விருந்து. ஒரு காலத்தில் பெரிய வளாகமாக இருந்த இந்தக் கோவில் தனது எல்லையைச் சுருக்கிக்கொண்டு, அருகில் அமைந்திருக்கும் தேவாலயத்திற்கும், பள்ளிக்கும் இடமளித்துள்ளது. மதங்கள் இணையும் மகத்தான இடம் இதுவே எனத் தோன்றியது.            யுனானி மருத்துவமனை வளாகத்தை மக்கள் கிளி பங்களா என்றும் அழைக்கிறார்கள், கிளிகள் கூட்டமாக இங்குக் கூடுவது இதற்குக் காரணம். வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை உணர முடிந்தது. மூலிகை தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிட்டியது. சி.எஸ்.ஐ (CSI)  ராஜகோபால் பள்ளி 150வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. ராயபுரம் பகுதியில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பள்ளி இது. சென்னையே காலராவில் அவதிப்பட்ட பொழுது 40,000 பேருக்கு இங்கு சிகிச்சை நடந்துள்ளது ஒரு ஆச்சரியமான செய்தி. 

            மிஷனரிகளாக இந்தியா வந்தாலும் பல சவால்களுக்கு இடையே அவர்கள் பல தியாகங்களைச் செய்து இந்த மண்ணின் மக்களுக்குத் தொண்டு செய்திருக்கிறார்கள் என்பதற்கு 'ஸ்கட்டர்' (Schudder) அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்லறையே சாட்சி. ஸ்கட்டர் அவர்களே இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையாய் விளங்கும் வேலூர் சிஎம்சி (CMC) கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் என்பது ஒரு முக்கியமான செய்தி.

            'நார்த்விக்' (Northwick) பள்ளியை நாங்கள் அடைந்த போது ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வகுப்பிற்கு வந்திருந்த மாணவர்களை வைத்தே இந்த பள்ளி எந்த மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது என உணர முடிந்தது. பள்ளியின் உள்ளே அமைந்துள்ள பழைய தேவாலயத்தைக் காண வாய்ப்பு கிடைத்தது. கடவுளிடம் தனது கோரிக்கையை வைப்பதற்காக மாணவர்கள் தேவாலய சுவரில் எழுதி வைத்திருக்கும் சில வாசகங்கள் அவர்களின் பொருளாதார, குடும்ப மற்றும் சமூக நிலையை உணர்த்தியது.

            N4 துறைமுகம்- காசிமேடு அடைந்த போது சற்று தயக்கமாக இருந்தது ஆனால் அங்கிருந்த மக்கள் மிகவும் அன்போடு எங்களை வரவேற்றனர். கப்பல் எப்படி உருவாக்கப்படுகிறது என நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. நாகூர் ஆண்டவர் கொடிமரம் காணும் வாய்ப்பு கிடைத்தது, தமிழர்கள் வாழும் கடற்புறங்களில் இந்த கொடிமரம் இருப்பது ஒரு சுவாரஸ்யமான தகவல், இது சமூக நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது.

            நிகழ்ச்சியின் இறுதியில் உண்மையான வடசென்னை மற்றும் அதன் மக்கள் பற்றி எழுத்தாளர் திரு.கௌதம சன்னா உரையாற்றினர். வடசென்னை பற்றிய பல பிம்பங்களை உடைத்தெறிந்தது அந்த உரை. சென்னையை உருவாக்கியவன் கண்ணுக்குத் தெரியாத சுவருக்கு அந்த பக்கம் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறான் என உணர முடிந்தது. 

            வரலாற்று நடை முடித்து வீடு திரும்பும்போது வட சென்னை பற்றிய புரிதல் வேறாய் மாறி இருந்தது. இன்று அமீபா போல் படர்ந்து கிடக்கும் சென்னையை உருவாக்கியவர்களின் கதைகள் வடசென்னையின் ஒவ்வொரு தெருவிலும் நிறைந்திருக்கிறது என்பதை உணரச் செய்தது இந்தப் பயணம்.தொடர்பு:
எம்.ராஜா <rajglitz@gmail.com>
Wednesday, January 22, 2020

திருக்குறள் - சிறப்பு திருமுறை ஆகமம்

திருக்குறள் - சிறப்பு திருமுறை ஆகமம்

"சொல்லாக்கியன்"


            திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு. களப்பிரர் அதிகார உச்சத்திலிருந்த காலம். சில காலம், திருக்குறள் முறையாக அரங்கேற்றப் படாமல் தடுக்கப்பட்டதாய் கூறப்படுகின்றது. அது பௌத்தம் மற்றும் சமணத்தையும் எதிர்ப்பதாய் கருதப்பட்டிருக்கக் கூடும். ஆனால், அதன் பொருண்மையும் வெளிப்பாடும் குறிப்பிட்ட சமயங்களைக் குறிப்பதாக இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இருப்பதால், செம்மையான வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்கின்றமையால், முழுமையாகப் புறக்கணிக்க முடியவில்லை. மேலும், புலவர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அது ஏற்கனவே புழக்கத்தில் வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. திருக்குறளைப் பற்றிய பற்பல சான்றோர்களின் கருத்துகளும், ஆய்வுக் குறிப்புகளும்தான் அதை அரங்கேற்ற நிர்ப்பந்தித்திருக்க வேண்டும். ஏனென்றால், தமிழ் இலக்கிய வரலாற்றில் வேறெந்த தனி நூலுக்கும், புலவருக்கும் இத்தகைய புகழ்மாலை பரவலாக அணியப்படவில்லை. அதுதான் இன்று பாயிரமாக, திருவள்ளுவ மாலையாக மணக்கின்றது.  

            திருவள்ளுவர் வாய்மொழி செய்தியாக தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்றே சமீபகாலம் வரை கருதப்பட்டார், கூறப்பட்டார், கற்பிக்கப்பட்டார். ஆனால், இப்பொழுது, பல சமயங்களும் திருக்குறளுக்கு உரிமை கொண்டாடுவது போல், பல சமூகத்தினரும் திருவள்ளுவருக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதற்குக் காரணம், அது இன்றைய உலகளாவிய வாழ்வியல் சூழலுக்கும் பொருந்தும் தன்மை, எல்லா நாட்டவரும் வியந்து விரும்பி ஏற்கும் தன்மை. திருக்குறள் இன்று உன்னதமான உலக இலக்கியமாகக் கருதப்படத் துவங்கியுள்ளது. வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளைக் காட்டும் கையேடாக மிளிர்கின்றது. திருவள்ளுவரோ உண்மையாகவே உலகக் குடிமகனாக நோக்கப்படும் காலம் வந்து கொண்டிருக்கின்றது. குறளின் அறம் காட்டும் வழியில்  மக்கள் நடந்தால் பொருளாதார வளமும், அமைதியான ஆட்சியும், மட்டில்லாத இன்பமும் உலகமெலாம் நிலவும். பல்வேறு நாட்டு மாந்தர் ஒற்றுமையான உலகக்குடிகளாகவும், இன்று நிலவும் இந்த பூமியே சுவர்க்கமாகவும் ஒளிரும்.  

            திருக்குறளை முதலில் அறநெறி நூல் என்றனர். அதன் ஞான மரபைக் கண்ணுற்று மறைநூல் என்றனர். அதன் தத்துவ அடிப்படையை உணர்ந்து தமிழ்வேதம் என்றனர். அதன் சரியைகளையும், கிரியைகளையும், ஓகத்தையும் (யோகத்தையும்), ஞானத்தையும் அறிந்துணர்ந்தால் அதைத் திருமுறை என்றும் ஆகமம் என்றும் கூறலாம்.

திருமுறை என்றால் என்ன? ஆகமம் என்றால் என்ன? அவற்றின் தோற்றம் எவ்வாறு?
திருமுறை = திரு + முறை. 
இறை + வழி. இறைமையை அடையும் வழி.
சமணர்கள் ஆகமங்களைக் கொண்டிருந்தனர். 
பௌத்தர்கள் நிகாயங்களைக் கொண்டிருந்தனர். 
தத்தம் சமய தத்துவங்களில் கூறப்படும் மெய்மைகளை உணர்வதற்கான நடைமுறை செயல்பாடுகளை, குறிப்பாக விளக்குவதே ஆகமம் அல்லது நிகாயம் ஆகும். 

ஆகமம் = ஆக் + அம் + அம். ஆகின்ற தன்மை. மெய்யாகும் தன்மை. பரம்பொருளாகும் தன்மை. இறைமையாகும் தன்மை.
நிகாயம் = நி + காயம் = இன்மை + தேகம். தேகமற்ற உணர்வு. பிரபஞ்ச மனநிலை.
சமணம் மற்றும் பௌத்தம், இந்திய நிலப்பரப்பில் உலகக் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன. 

சமணம்:
            உலகம் தெய்வத்தால் படைக்கப்படவில்லை, அது துவக்கமும் முடிவுமின்றி தொடர்ந்து நிலவுகின்றது. சீவன்சீவனற்றது என இரண்டுமாய் ஆனது உலகம். சீவன், மறுபிறப்பு எடுப்பதற்கான காரணம், அதன் ஆன்மாவைச் சேரும் கருமமாகும். மனித வாழ்க்கையின் இலட்சியம், கருமத்திலிருந்து விடுதலை பெற்று சித்தர் உலகை அடைவதும், பிறப்பறுத்தலுமாகும்

அதற்கான நடைமுறை; 
1. எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் அகிம்சை; அல்லது ஊறுவிளைக்காமை
2. உண்மை, 
3. களவாமை
4. துறவிகளின் காமமின்மை மற்றும் குடும்பங்களில் தம்பதியர்களுக்கிடையிலான நேர்மை, 
5. பற்றின்மை 
என சமணம் மொழிகின்றது. துறவு வாழ்க்கையை முன்னிலைப்படுத்துகின்றது. ஆனால், பெண்களுக்குத் துறவையும், விடுதலையையும் மறுக்கின்றது. 

பௌத்தம்: 
பௌத்த தத்துவமும், உண்மைகளும், நடைமுறைச் செயல்பாடுகளும் கீழ்வருவன;

மூன்று பிரபஞ்ச உண்மைகள்:
1. பிரபஞ்சத்தில் எதுவும் அழிவதில்லை.
2. எல்லாம் மாறிக்கொண்டே உள்ளது.
3. காரணமின்றி விளைவில்லை என்பது விதி.

நான்கு உன்னத உண்மைகள்:
1. வாழ்வு துன்பமயமானது.
2. பற்றால் துன்பம் ஏற்படுகின்றது.
3. துன்பம் மற்றும் ஆசையிலிருந்து விடுதலை பெற முடியும்.
4. அதற்கு, எட்டுவகை வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 

எட்டுவகை வழிகள்:
1. சரியான புரிதல். (நான்கு உன்னத உண்மைகள்)
2. சரியான சிந்தனை. (விருப்பு, வெறுப்பின்மை)
3. சரியான பேச்சு. (பொய், புறம் கூறாமை)
4. சரியான நடத்தை (கொல்லாமை, ஊறு செய்யாமை, களவாமை, காமமின்மை, மது அல்லது போதைப் பொருள் உட்கொள்ளாமை)
5. சரியான வாழ்வாதாரம். (இரத்தல், ஊறின்றி உழைத்தல்)
6. சரியான முயற்சி. (நல்ல சிந்தனையை வளர்த்தலும், தீய சிந்தனையை விலக்கலும்)
7. தியானம்.
8. சமாதி.
தியானமும் முடிவாய், சமாதியும்தான், புத்தமதத்தின் மிக உயர்ந்த இலக்குகள். பின்பு, 'யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' எனும் நோக்கில், புத்தமதக் கொள்கைகளைப் பரப்புவதே, வாழ்வியலாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

            புத்தர் ஞானம் பெற்ற பிறகு, முதலில், முன்னாளில் தன்னுடன் ஞானத்திற்காக முயன்ற நண்பர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர்களும் ஏற்கனவே பக்குவம் பெற்றிருந்ததால் விரைவாக ஞானத்தை உணர்ந்தனர். அடுத்து, அவர் தன்னுடைய நீண்ட 45 வருடக்காலத்தில் சந்தித்த பல்லாயிரக் கணக்கான மக்களின் மனவளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆலோசனைகளைக் கதை, உபதேசம், விவாதம் போன்ற வெவ்வேறு வடிவங்களில் வழங்கினார் (ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேற்கொண்ட உரையாடல் முறை, விவாதம் வகையைச் சார்ந்தது). 

            அவை பல்வேறு நிகாயங்களாய் உருப்பெற்றன. அவற்றில் மனம் எந்தெந்த வகைகளில் தன் இயக்கத்தை இழக்கின்றது, அப்பொழுது தோன்றும் உணர்வுநிலை என்ன, அதன் வெளிப்படு பண்புகள் என்ன என்று கூர்ந்து கவனமாகக் கவனிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறுதியாக, ஒற்றைச் சொல்லால், புன்முறுவலால், மௌனத்தால், பார்வையால், புத்தரால் ஞானத்தைப் போதிக்க முடிந்தது. அதாவது, மனத்தின் இயக்கத்தை நிறுத்தி, தோன்றும் உணர்வைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து நிலைக்க வைப்பது.  இதை, ஒரு உளவியல் தந்திரமாக, மந்திரமாக வளர்த்தெடுத்தனர். ஜென் பௌத்தம் எனும் பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் அது ஆர்வத்துடன் பயிற்றுவிக்கப்படுகின்றது.

            நாலந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், பல்வேறு பௌத்தம் சார்புடைய அரசுகள் வீழ்ந்ததும், களப்பிரர் அழிந்ததும், பௌத்தர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதைக் கொள்கை அளவில் தவிர்த்ததுதான் காரணமாகும். ஆனால், சீனம் சென்ற இளவல் தாமோ எனும் போதி தர்மன், தற்காப்புக்காக முன்னொரு காலத்தில் தான் போர்க்களத்தில் பயன்படுத்திய களரியைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று முன்மொழிந்து செயல்படுத்தினான்.      

களப்பிரர் காலம்:
            களப்பிரர் வரலாறு சமீபகாலம் வரை இருண்டே இருந்தது. பூலாங்குறிச்சி கல்வெட்டுதான் அக்காலம் பொற்காலமாய் இருந்திருப்பதற்கான அடிப்படைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. அக்காலத்தில், சமண மற்றும் பௌத்த சமயங்கள் அரசியல் செல்வாக்குடன் வலிமையாய் இருந்தன என்றும், வளமும், வாணிபமும், செல்வமும் செழித்தன என்றும், தமிழில் ஐம்பெருங்காப்பியங்களும், பிற படைப்பாக்கங்களும் தோன்றின என்றும் அறிகின்றோம். இந்தக் கால கட்டத்தில், பொருள் வாணிபத்துடன், கருத்து பரிமாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. பௌத்தம் கடல் கடந்து, பர்மா (பர்மம்), தாய்லாந்து (தாய்நிலம்), கொரியா(கொரியம்), சீனம், சப்பான் முதலிய தெற்கு ஆசிய நாடுகளில் தழைத்தது. 

            அதே சமயம், வைதிக மதங்கள் (சைவம், வைணவம்), ஆதரவற்ற நிலையில், வலுவிழந்திருந்தன. பிரமதேய நிலங்களும், சதுர்வேதி மங்கலங்களும் பறிக்கப்பட்டு, உழைக்கும்  மக்களுக்கு மறு பங்கீடு செய்யப்பட்டன. களப்பிரரின் இறுதிக் காலத்தில் அதிகாரம் குவிந்ததால், கேள்விகள் இன்றி ஆட்சி தொடர்ந்ததால், சமய, சமூக, அரசியல், பொருளாதார சீர்கேடுகளும், கலாச்சார பண்பாட்டு நெறிதவறுதல்களும் பெருகின. மாற்றம் அவசியமானது.

பக்திமார்க்கம்:
            மாற்றம், பக்திமார்க்கமாய் வந்தது. புலம் பெயர்ந்த வைதிக சிந்தனையாளர்கள் தங்கள் தத்துவங்களை மீளாய்வு செய்தனர். சமண ஆகமங்களையும், பௌத்த நிகாயங்களையும் உள்வாங்கி புதிய வைதிக ஆகமங்களை உருவாக்கினர். ஆனால், அவற்றின் ஊற்றுக்கண்ணாய் வேதத்தையே குறித்தனர். வேதங்களில் உள்ள மிகப்பெரும் சிக்கல் என்னவென்றால், பிராமணர்கள் இறைவனின் உயர்ந்த தலையிலிருந்து தோன்றியதாயும், அரசப்பிரிவினர் மார்பிலிருந்து உதித்ததாயும், வணிகரும் வேளாளரும் தொடையிலிருந்து பிறந்ததாயும், அடியாட்களும் சேவகர்களும் இறைவனின் கால்களிலிருந்து தோன்றியதாகவும் கூறப்படுவதுதான். தகுதிகள் மாறினாலும், இதை நிலையான தன்மையுடையதாயும், பிறப்பின் அடிப்படையில்  தொடரச்செய்வதாயும் இருத்துவதுதான் எல்லா சமூக, பொருளாதார, அரசியல், அதிகார சமமற்றத் தன்மைகளுக்கும், அடிமைத்தளைகளுக்கும், கொடுமைகளுக்கும் அடிப்படைகளாய் அமைகின்றன.

            பிறக்கும்போது சூத்திரனாய்ப் பிறந்து, நல்ல ஒழுக்கத்தாலும் செயல்பாட்டாலும் இரண்டாம் பிறப்புள்ள பிராமணனாகின்றான் என்று கூறினாலும், நடைமுறையில் பிராமண சாதியில் பிறக்காத பிறருக்கு அத்தகைய வாய்ப்புகள் வழங்கப்பட்டதில்லை, வழங்கப்படுவதில்லை. இத்தகைய அடிப்படைகளின் மேல் கட்டுமானமாக எழுப்பப்பட்டதுதான் மனுநீதியும், ஆகமங்களும். 

            பிராமணர்கள் வேள்விகளிலிருந்தும், மந்திரங்களிலிருந்தும் பிரிக்க முடியாத வண்ணம் வரலாற்றுமுறையில் இறுக்கமாகப் பிணிக்கப்பட்டுள்ளனர். வேள்விகளும், இறைமொழி என நம்பப்படுகின்ற சமஸ்கிருத மொழியிலான மந்திரங்களுமின்றி, தங்கள் வாழ்வுச் செயல்பாடுகளை அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத வண்ணம், இளவயதிலிருந்தே, சிற்சில இன்றைய மதங்கள் போன்று, இக்கருத்துகள் ஆழ விதைத்து வளர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பதிவுகளை அவ்வளவு எளிதாக நீக்க முடிவதில்லை. விஞ்ஞானமும் தருக்கமும் இதன் எல்லைக்குள் நுழைய முடிவதில்லை. கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை எதுவும் தானாகவே மாறிவிடுவதால், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுபோல், எப்பாடு பட்டாயினும் அக்கொள்கையைக் காக்கின்றனர்.   
  
            பிராமணர்களின் மூதாதையர்களாகிய ஆரியர்களின் முதன்மையான வாழ்விடம் பனிகள் நிரம்பிய குளிர்பிரதேசமாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் உயிர்வாழ்வதற்கே தீ அவசியமாய் இருந்திருக்க வேண்டும். அதை உருவாக்குவதும், தொடர்ந்து காப்பதும், அவர்களின் கலைகளாகவே தொடர்ந்திருக்கும். அதுவே, அவர்களது போர்களில் முக்கிய பங்காற்றி இருக்கும். எனவேதான், தீயின் மற்றொரு வடிவமான வேள்வியையும், அதனோடு இணைக்கப்பட்ட மந்திரங்களையும், அவர்கள் மரபுரீதியாகவே விலக்க முடியாமல் இருக்கின்றனர் போலும். அவர்கள் தங்கள் வாழ்வில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. பிறர்தம் வாழ்வின் ஒழுக்கங்களிலும், செயல்பாடுகளிலும் அவற்றைத் திணிக்கும்போதுதான், அவையின்றி வாழ்வு குலையும் எனும் மாய பிம்பத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தும் போதுதான், அவற்றை தங்களின் சொந்த வாழ்வாதாரமாக ஆக்கிக் கொள்ளும்போதுதான், அவற்றை அடுத்து உயர்ந்த சிந்தனைக்கு வரவிடாமல் செய்யும்போதுதான் கவலை உண்டாகின்றது.

ஆகமங்கள் யாவும், பொதுவாக, கீழ்க்காணும் நான்கு பகுதிகளைக் கொண்டனவாய் அமைக்கப்பட்டுள்ளன:
1. சரியை: ச் + அர் + இயை. இயக்கம் அறுத்து இணை. உடலின் செயலின்மை.
2. கிரியை: க் + இர் + இயை. மெய்யை நிலைத்து இணை. உடலின் அசையாமை.
3. யோகம்: ய் + ஓக் + அம். நிலையாய் முழுமையான மெய்யாய் இருக்கும் தன்மை. இறைமையுடன் இணைவது.
4. ஞானம்: ஞான் + அம். நானாகும் / தானாகும் / சித்தமாகும் தன்மை. இறைமையாய் நிலைப்பது.

            சமணத்தின் துறவு இன்றியும், பௌத்தத்தின் முயற்சி இன்றியும், இறைமையைப் பக்தி வழிபாடுகள் மூலம் அடையலாம் என்று வேதாந்த வைதிக சமயத்தினர், புராணங்களையும், பண்ணமைந்த பாடல்களையும் இயற்றி நாடெங்கும் பரப்பினர். அதுவரை, சிவனையும் (பதி), சீவனையும் (பசு) பற்றி மட்டுமே தத்துவங்கள் விளக்கின. ஆனால், இக்காலத்தில், "பாசம்" எனும் புதிய காரணியை உள்நுழைத்தனர். அந்த பாசத்திற்கு தாங்கள் கருவியாய் உதவுவதாய் கூறிக்கொண்டனர். அதுவரை, யோகம் மற்றும் தியானம் மூலம் ஞானம் பெறும் வழிகள் கூறப்பட்டன. இப்பொழுதோ, "பக்தி" எனும் "பாசத்"தின் மூலம், இறைவனை அடையலாம் என கற்பிக்கப்பட்டது. அது எளிமையான பாதை என நிலைநிறுத்தப்பட்டது. திருமந்திரம், பெரிய புராணம் உள்படத் திருமறைகளும், பிரபந்தங்களும், ஆகமங்களும் உருவாக்கப்பட்டன. 

ஆகமங்கள் பலவாயினும், ஒன்பது முதன்மையான ஆகமங்களாகக் கூறப்படுபவை, கீழ்வருமாறு:
1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தம், 5. வாதுளம், 6. வியாமளம், 7. காலோத்தரம், 8. சுப்ரம், 9. மகுடம்.
ஞானம் அடையும் வழி மற்றும் தன்மையைக் கொண்டு, ஆகமங்களுக்குப் பெயர் சூட்டியது போல் தோன்றுகின்றது.  ஆகமங்களில் பக்திவழியின் விரிவாக்கமாகச் சடங்குகளும், பூசைகளும், சரியையாகவும் கிரியையாகவும் முன்மொழியப்பட்டன. யாகங்களும், பூசைகளுமே, மோட்சத்திற்கான வழிகளாக முன்மொழியப்பட்டன. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அவையே முன்வைக்கப்பட்டன. யோகமும், ஞானமும் பெயரளவில் நின்றன. யோகம், ஞானம் கற்காத பழியை மக்கள் மீதே சாற்றினர். அவர்கள் பக்குவம் எய்தவில்லை, எனவே, உருவ வழிபாடுகளும் பூசைகளும் தேவை என்றனர். ஆட்சியும் அதிகாரமும் வைதிகருக்குச் சாதகமாக, பெரும்பான்மையான பௌத்தர்கள் இலங்கைநாடு அகன்றனர். சில சமணர்கள் கழுவேறி இருக்கலாம். பொது மக்கள் சைவ மற்றும் வைணவ மதங்களுக்கு மாறினர். பௌத்தக் கோயில்களின் ஆனந்த புத்தர், அனந்தசயன பெருமாளானார். சமணக் கோயில்களின் அருகக்கடவுள் முருகக்கடவுளானார். புதிய சைவ, வைணவ கோயில்களும் கட்டப்பட்டன.

            களப்பிரர் பிடுங்கி உழைப்பாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பிரமதேயங்களும், சதுர்வேதி மங்கலங்களும் மீட்கப்பட்டு, மீண்டும் பிராமணருக்கே வழங்கப்பட்டன. தங்கள் உற்பத்திக்கும், செயல்பாட்டிற்கும் வேண்டிய வகுப்பினரை சமூக படிநிலையில் இருத்தினர். நிலத்தை இழந்து எதிர்த்தவர்களோ, பள்ளர் பறையரென மொத்த சமுதாயத்திற்கும் அடிமைப்படுத்தப்பட்டனர். அதனால்தான், பிராமணரின் நேரடியான ஈடுபாடு இன்றியேகூட இடைச் சாதியினரின் வன்முறையால், சாதியம் மீண்டும் மீண்டும் நிலைநிறுத்தப்படுகின்றது. பள்ளர், பறையரும் ஆதிக்கம் செலுத்த, சமுதாயத்தில் பொருளாதார வலிமையற்று, சமூக ஒழுங்கு பிறழ்ந்தவர்களை, அருந்ததியர் எனும் பெயரிட்டு உருவாக்கியது. இவ்வாறு, சாதிய அமைப்பு ஆதிக்க மற்றும் இடைநிலை சாதிகளின் படிநிலைச்  சுரண்டலுக்கு எளிமையாக வழிவகுத்தது.

            ஒருவேளை, காட்சி மாறிய காலத்தில் யோகமும், ஞானமும், வைதிக மதச்செயல்பாடுகளிலும் உயரிய இடத்தை வகித்திருந்திருக்கலாம். ஆனால், பின்னாளிலும், இந்நாளிலும், சரியை மற்றும் கிரியை மட்டுமே நடைமுறைகளாக உள்ளன. யோகமும், ஞானமும் கொள்கையளவில் மட்டுமே நிலவுகின்றன, நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. ஏனென்றால், அதைப் போதிப்பவருக்கு, பொருள்வகையான எந்தப் பயனும் கிடைப்பதில்லை. 

சித்தாந்தம்:
            பரஞ்சித்தம், இறைமை சித்தமாய் உள்ளது. சித்தம்பரம், தனிமனித சித்தம் இறைமையாய் உள்ளது. சித்தமாதியந்தம், சித்தமே துவக்கமும் முடிவுமாய் இருக்கின்றது. சித்தத்தில் சித்தமாய் உறைதலே யோகமாகும், ஞானமாகும். சித்தர்களுக்குச் சரியையோ, கிரியையோ, யோகமோகூட கிடையாது. அவர்களின் நேரடிப்பாதை ஞானமே. சித்தர்கள், அமைப்பற்று இயங்குபவர்கள், இயக்கமாய் இயங்குபவர்கள். தனித்தன்மை இழப்பவர்கள். சமுதாய நலனுக்கென தமை வழங்குபவர்கள், தெய்வமாய், இறைமையாய் நிலைப்பவர்கள் அவர்கள். 
திருக்குறள்:
            இத்தகைய பன்மைப் பண்புகளைக் கொண்ட காலகட்டத்தில்தான், திருக்குறள் தோன்றியது. 

            சமணத்தாலும், பௌத்தத்தாலும் துறவு வாழ்க்கை முன்னிலைப்படுத்தப்பட்டது. சோம்பித்திரிந்தவர்கள் மிகுந்தனர், போலித்துறவிகளாக அவர்கள் மாறினர். உழைப்பவர்கள் குறைந்தனர், உழைப்போர் பெரிதும் சுரண்டப்பட்டனர். யாகம், பூசை என வேறு வகைகளில் வைதிக மரபினரும் மக்களைச் சுரண்டினர். 
இவற்றையெல்லாம் கண்ட திருவள்ளுவர், சமநிலை கொண்டு நீடித்து இயங்கும் ஒரு சமுதாய அமைப்பிற்கான முழுமையான வாழ்வியல் தத்துவத்தை, கொள்கை  வரையறையை, திட்ட அமைப்பை, நடைமுறை செயல்பாடுகளை, திருக்குறளாக வழங்கினார் போலும்.

            தந்த அப் பொருளை வெற்று சட்டமாகவோ, சலிப்பூட்டும் அறிவுரையாகவோ இல்லாமல், உவமையணிகளுடனும், இசைமைப் பண்புடனும், தொல்காப்பியத்தின் இலக்கணங்களுக்கு இலக்கியச் சான்றாய் அமைவதுபோல், திருக்குறளைப் படைத்துள்ளார், மகான் திருவள்ளுவர்.

தத்துவம்:
            இப்பிரபஞ்சம் எப்படி உருவானது? உயிர்கள் எவ்வாறு தோன்றின? மனிதர்களாகிய நாம் எப்படிச் சிறப்படைந்தோம்? நம்முடைய வாழ்வின் பயன் யாது? இத்தகைய அடிப்படையான கேள்விகளுக்கெல்லாம், முதல் குறள், பதில் இறுக்கின்றது. படைப்பிற்கு மகுடம் சூட்டினாற்போல், கடவுள் வாழ்த்தில் இருப்பின் மற்றும் வாழ்வின் தத்துவத்தையும் பயனையும் முன்வைக்கின்றார். 

            அகர முதல எழுத்தெலா மாதி
            பகவன் முதற்றே உலகு.

            அகரம் எனப்படும் "அ" எனும் எழுத்தொலிதான் திரிந்து மற்ற எல்லா உயிர் எழுத்துகளாகவும், மெய்யுடன் கலந்த ஆய்த எழுத்தாகவும், ஆய்தம் ஒன்றிய எல்லா மெய்யெழுத்துகளாகவும், உயிர்மெய் எழுத்துகளாகவும், அசையாகவும், சொல்லாகவும், தொடர்மொழியாகவும், சொற்றொடராகவும், மொழியாயும் விளங்குகின்றது. அகரமே மொழியாகின்றது. அகரமின்றி மொழியில்லை. மொழியெல்லாம் அகரமே! 

            அகரத்தைப் போன்றே, பொருண்மையான விண்வெளியை அகமாய்க் கொண்ட இறைவன் (பகவன் = ப் + அகம் + அன்), நுண்துகள்களாகி, இணைந்து அணுவாகி, கலந்து பொருளாகி, பிணைந்து உயிராகி, நினைந்து மனிதராகி, இனிமையான உலகாகி இயங்குகின்றான். இறைமையே உலகாகின்றது. இறைமையின்றி உலகில்லை, இயற்கையில்லை. இருப்பன யாவும் இறைமையே! நாமெல்லாம் இறைமையே! 

            'நீரின்றி அமையாது உலகு' என்றதனால், உயிர் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும், வாழ்வதற்கும், தண்ணீர் இன்றியமையாதது எனும் அறிவியல் யதார்த்தத்தை, மிகவும் இயல்பாக, "கடவுள் வாழ்த்து"க்கு அடுத்த "வான் சிறப்பு" எனும் அதிகாரத்தில் கூறியுள்ளது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். அரசன் அல்லது ஆட்சி அதிகாரம் என்பதன் முதன்மையான பணி நீர்மேலாண்மையை நிர்வகிப்பதுதான்.    

            நீத்தார்ப்பெருமையை முன்வைப்பதன் மூலம், அத்தகையோராய் முயல்வதற்கான தூண்டுதல் தரப்படுகின்றது.  மனிதவாழ்வோட்டத்தின் அடிநாதமாய் விளங்க வேண்டியது அறம் ஒன்றுதான். அதுவே, அனைவரது வாழ்வின் இயங்குவிசையாய் இருக்க வேண்டும். அதுவே, சுயவழிகாட்டி. அறமற்ற எந்த ஒன்றையும் செய்ய முற்படும்போதே அறிவார்ந்த மனம் எச்சரிக்கை செய்கின்றது. அதன் குரலைச் செவிமடுத்தால், குற்றம் இழைக்காமல், மாற்று வழியில் முன்செல்லலாம். புறக்கணித்தால், பின்னாளில், வருந்த வேண்டி வரும். 

ஞானயோகம்:
            கல்வியின் மூலம், இறைமையை அறிந்துணர்ந்து அதற்கு இணையாக நிலைப்பதே வாழ்வின் முடிவும், பயனுமாகும். அதற்கான மந்திரக்குறள்:
            கற்க கசடற கற்பவை கற்றபின்
            நிற்க அதற்கு தக.

            தொல்காப்பியம், எழுத்து அதிகாரம், நூற்பா 367-ன் படி, லகார ஒற்றெழுத்தை இறுதியாகக் கொண்ட பெயர்ச்சொல், வேற்றுமைப் பொருளில், வல்லின எழுத்தை முதலாய்க் கொண்ட சொல்லுடன் புணரும்போது, அந்த "லகார" ஒற்றெழுத்து, "றகார" ஒற்றெழுத்தாய் திரியும். அல்வழியில், "தகரமும் றகாரமாய்" திரியும்.
எனவே, 
"கற்க" என்பதன் திரியாத வடிவம், "கல் + க". கல்போன்று மெய்.
"கசடற" = கசடு + அற. தேங்கி நின்று, அடைப்பை உருவாக்குவது கசடு. எழுந்த எண்ணமே மீண்டும் மீண்டும் எழுவது. ஓய்வில்லாத எண்ணம்.
"கற்பவை" என்பதன் திரியாத வடிவம், "கல் + ப + வை". கல்போன்று மனம்.
"கற்ற" என்பதன் திரியாத வடிவம், "கல் + த". கல்லான தேகம்.
"நிற்க" என்பதன் திரியாத வடிவம், "நில் + க". நிலைக்கும் நுண்பொருண்மை.
அதற்கு = இறைமைக்கு.
தக = சமமாய்.

            மெய்யெனும் உடலானது கல்போன்று அசையாமையில் நிலைக்கையில், நீள்கின்ற எண்ணவோட்டம் எனும் கசடு அறுகின்றது. எண்ணமற்ற மனம், அசையாமையில் நிலைக்கையில், தேகம் கல்லாய் சமையும். பின்பும், அசையாமையில் தொடர்ந்து நிலைக்க, இறைமையின் நுண்பொருண்மைத் தன்மையாகும்.  அதாவது, உடல்வினை அடங்க, ஐம்புலன் அடங்க, மனம் அடங்கும். மனமடங்க உயிர்மை விளங்கும். உயிர்மையுடன் எண்ணமற்ற மனம் ஒன்ற, இறைமை துலங்கும். இறைமையுடன் அழுந்த, இருத்தல், ஆலாய்  கிளைத்து கல்லாய் நிலைக்கும். 

            இவ்வாறு இறைமையுடன் இணங்கியவரே, தான், தனது, புறம் என்பனவற்றை  நீத்தவர். அவர், இறைமையைப்போல் செயற்கரிய செய்வார். இந்த யோக, ஞான நிலையை இளமையிலேயே எய்துதல் பொதுவாக இயலாத காரியம். ஏனெனில், வாழ்வின் ஓட்டத்தில் பல ஆசைகளுக்கான தூண்டுதல்கள் நிகழும். அவற்றை இயல்பாக ஒதுக்கிவிட்டு முன்செல்லுதல் கடினமான செயல். இளமையில், அது தேவையும் இல்லை. 

இல்லறம்:
            எனவே, துறவறத்தைக் காட்டிலும், முதன்மையான அறமாக இல்லறத்தைத் திருவள்ளுவர் முன்மொழிந்ததுதான் மிகவும் புரட்சிகரமான கருத்தாகும். இது முதலில், மக்களைச் சமுதாய வெளிக்குள்ளேயே இருத்தியது. மனித உழைப்பையும் சமூக வளத்தையும் உறுதிசெய்தது. சமூக அங்கத்தினர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்களையும், அவர்கள் ஆற்ற வேண்டிய சமூகக் கடமைகளையும், மிகவும் விஞ்ஞான முறையில், சுயமுரண்பாடற்ற வகையில் தந்துள்ளார், வள்ளுவப் பெருந்தகை. 

            துறவறத்தால் சமூகத்திற்கு விளையும் பயன் என்ன? தனிமனிதர்கள் ஞானம் அடைவதாலோ, முக்தியடைவதாலோ, பொது மக்களுக்கு என்ன இலாபம்? பிறரின் உழைப்பைப் பிச்சையாகவும் வாங்குவது சரியா? துறவு மேற்கொண்டோர், பற்று நீத்தாராகி சமுதாயத்திற்குக் கல்வி, உடல்நலம், மனநலம், ஒழுக்கம், படைப்பாக்கம், ஆலோசனை போன்றவற்றை வழங்கினால்தான் தாங்கள் சமுதாயத்திற்குப் பட்ட கடனை திருப்பி செலுத்துபவராவர். இல்லையெனில், சமுதாயத்திற்கு பாரமாக, சுமையாகவே இருப்பர். இதை அறிந்த ஜென் புத்த மதத்தினர், ஜப்பானில், இயன்றவரை தங்கள் உழைப்பைக் கொண்டே உயிர் வாழ்கின்றனர். ஒருசில சமணரும், பௌத்தர்களும் மக்களுக்கு வேண்டிய கல்வி, ஆலோசனை, படைப்பாக்கம் போன்றவற்றை அளித்துள்ளனர். குறிப்பாக, சித்தர்கள், மருத்துவத்தை தங்கள் கடமையாகவே கொண்டிருந்தனர் போலும். 

            மேலும், ஒரு சிலர் மட்டும் ஞானம் பெறுவது என்பது பாரபட்சமாகும். எனவே, மக்கள் அனைவரும் பொதுவாக உழைத்தும், உழைக்க முடியாதவருக்கு (முதியவர், சிறுவர், நோயுண்டோர், விருந்தினர் போன்றோர்க்கு) உதவியும், தாம் உழைக்க முடியாதபோது பிறரிடம் இருந்து உதவி பெற்றும் வாழ்வது, வாழ்வின் ஓட்டத்தில் தவிர்க்க முடியாததாகும்.  

            இயக்கம் அறுதல் எனும் சரியையும், உடல் நிலைத்தல் எனும் கிரியையும், இல்லறவாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கின்றன. தான் உழைத்து, உழைக்க முடியாதவருக்கு உதவுவது என்பதே, தன்னை இறைமைக்கு உயர்த்திக் கொள்வதாகும். இனிமையாகப் பேசுவது பிறருக்கு மட்டுமல்லாது, தனக்கும் இன்பம் தரும், பெருமிதம் வரும். தனக்கு உதவியவர்களுக்குத் தேவையுள்ளபோது உதவுவது மனநிறைவை ஏற்படுத்தும். நடுவுநிலைமையுடன் இருத்தல், மனத்தை அமைதியாக்கும், உறுதியாக்கும்.   அம்மனம் அசையாது, மெய்யும் நிலைபெறும். 

            கற்புடைய பெண்ணை மனைவியாகக் கொண்டாலே, கணவனின் மனம் சஞ்சலம் கொள்ளாது. மெய்யும் அமைதிப்படும். பிள்ளைப்பெறுதல் என்பதே என்பதே மனம் நிறைவாகும் நிகழ்வு. அதன் மெல்லிய உணர்வு அசையாமைக்கு வழிகோலும். தன்குழந்தை சிதறச்செய்யும் எளிய கூழை வாயால் வழித்து உண்ணுதலும், கண்களைக் கிறங்க வைக்கும், உலகையே மறக்கவைக்கும் அமிழ்தமாகும். பிள்ளைகளின் உடலைத் தீண்டுதலும், அவர்களின் பேச்சைக் கேட்டலும்கூட, மெல்ல உணர்ந்தால், இன்பம் தருவதாகும். தன்னை எவர் மிஞ்சினும், மனதில் ஆற்றாமை தோன்றும், ஆனால், தம்மக்கள் தம்மைவிட உயர்கின்றார்கள் என்றால் பெருமை உணர்வே தோன்றுகின்றது. இயல்பான நட்பும் அன்பும் உடைய கணவனும் மனைவியும், ஒருவருக்கு ஒருவர் அமைதிதரும் உயிர்நிலைபெறச் செய்யும் பெருமை உணர்வை அளிப்பர். சமூகத்தில் தொடர்ந்து இருந்து, உழைத்து, பகிர்ந்து, கலந்து வாழ்வதற்கான அவசியத்தை உருவாக்குவது, மனைவியும் பிள்ளைகளுமாவர்.

            சமூக வாழ்வின் செயல்பாடுகளில், அடக்கத்தை மேற்கொள்ளச் சொல்கிறார் திருவள்ளுவர். சமூகத்தில், சொல், செயல்களில் காட்டும் அடக்கம், பின்னாளில், யோகம் செய்யும் நாளில், புலன்கள் ஐந்தையும் எளிமையாக அடக்க உதவும். ஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாட்டால் விளைவது. அது உலகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு உதவுவதோடு அன்றி, பிற்கால யோகத்திற்கும், ஞானத்திற்கும் உதவும். பிறன் மனைவியை நோக்காமல் இருத்தலை, பேராண்மை என்கிறார் வள்ளுவர். பொறுமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம் போன்ற பிற மனக்கட்டுப்பாடுகளையும், ஒப்புரவு, ஈகை போன்ற குணங்களையும் உள்ளவர், ஐம்புலன்களை எளிதாக அடக்கி, மனத்தை இருத்தி, அசையாமையில் இறைமையுடன் ஒன்றுவர். வாழ்வு என்பது சிறுசிறு இன்ப நிகழ்வுகளைக் கொண்டது. அவை, மனதையும், உடலையும் அசையாமையில் நிறுத்தவல்லது. மென்மையான அவ்வுணர்வுகளில் தொடர்ந்து நிலைப்பதுகூட மனவிடுதலைக்கு வழிவகுக்கும். பேரின்பம் அளிக்கும். 

துறவறம்:
            துறவற வாழ்விற்குப் பல வழிகாட்டி நூல்கள் ஏற்கனவே இருந்தும் துறவறவியலையும் திருக்குறளில் வைக்கின்றார் வள்ளுவர். அதில், சமூகத்துடன் வினையாற்றுகையில், துறவிகள் மேற்கொள்ள வேண்டிய பண்புகளையும் செயல்பாடுகளையும், ஒழுக்கங்களையும் நிரல்படுத்துகின்றார்.  அனைத்து உயிர்களுக்கும் காட்டும் அன்பாம் அருளுடைமை, கொல்லாமையுடன் புலால் மறுத்தல், இயல்பான ஆர்வத்துடனான தவம், பிறன் அறியாவிட்டாலும் ஒழுக்கம் தவறாமை, பிறர் பொருளைப் பறிக்கும் மனமின்மையெனும் கள்ளாமை, எவ்வுயிர்க்கும் தீமையில்லாத வாய்மை, எவரையும் வெகுளாமை, இனிமையற்றவை செய்யாமை, வாழ்வின் நிலையாமையை அறிதல், துறவின் இன்பம் அறிதல், மெய்யுணர்தலின் பயன், மெய்யுணர்ந்தப் பின்னும் தோன்றும் ஆசைகளை அறுத்தலே துறவு முழுமையாவதற்கான வழி ஆகியன, துறவு மேற்கொள்பவருக்கு உற்ற துணையாகும்.

            ஜென் தத்துவ வாழ்வில், மேற்கூறிய மனநிலைகளில் ஒன்றுவதுகூட ஞானத்திற்கு வழிகாட்டிவிடும்.  உண்மையில், முழுமையாகப் பார்த்தால், அசையாமை எனும் நிலை, ஞானமாளிகையின் வாசலுக்கு அழைத்துச் சென்றுவிடும். உடல், புலன், மனம், சுவாசம் ஆகியவற்றின் அசையாமை, ஞானத்தின் கருவறைக்குள் நிலைக்கச் செய்துவிடும். பிறப்பின் பயனை, இவ்வுலகிலேயே தந்துவிடும்.

            மனைவியும், மக்களும், கல்வியும், செல்வமும், தவமும், இன்பம் துய்த்தலும் ஊழின் பயனென்கிறார், வள்ளுவர். பிறப்பறுத்தல் என்பது தவத்தால், யோகத்தால், ஞானத்தால் ஊழ் அழிதல். இயலாவிட்டால், நல்வினைகள் ஆற்றி, வரும் பிறப்பில், நற்பயன்களைப் பெற அறிவுறுத்துகிறார், எம்பெருமான்.

அரசியல் மற்றும் அங்கவியல்:
            பொருட்பாலின் அரசியல் மற்றும் அங்கவியலில் கூறும் பண்புகள், அரசனுக்கும் அமைச்சருக்கும் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிக்கும் தேவையானது. அரசனுக்கும் அமைச்சருக்குமோ அவை மிகவும் இன்றியமையாதன. தானாக அறியும் கல்வி, பிறர் மூலம் பெறும் கேள்வி, தன்னியல்பான அறிவுடைமை, சிறுமையின்மை, அறிஞர் மற்றும் ஞானியரின் நட்பு, சிந்தித்துச் செயல்படல், சுற்றத்தை அரவணைத்தல், கடமை மறவாமை, நீதி வழுவாமை, இன்றியமையாதது அறிந்த கண்ணோட்டம், பிறர்மூலம் அறியும் ஒற்று, சோர்விலா ஊக்கம், தயக்கமில்லா முயற்சி, சிக்கலுக்கான தீர்வைச் சிந்தித்தல் போன்றவை அரசனுக்கு இன்றியமையாதவை.  

            சிக்கலைப் பலவாறு சிந்தித்து தீர்வுகூறும் சொல்வன்மை, தன்னலமற்ற செயல்பாடு, செயல்பாட்டில் உறுதி, செயலை முடித்தல், செய்தி பரிமாற்றும் தூது, மன்னரின் மனமறிந்து செயல்படல், மன்னர் வெளிப்படையாய் கூறாததையும் குறிப்பால் அறிந்து செயல்படல், சூழ்ந்திருப்பவரைக் கணக்கில் கொண்டு பேசுதல், தவறு நேரவிருக்கும் சமயத்தில் துணிந்து பேசுதல், தேர்ந்த காக்கும் நட்பைப் பேணுதல், ஆழ்ந்து அறிதல், மனச்செயல்பாடின்மையை உணர்தல், பகைகளை அறிதல், பெரியாரைப் பகைக்காமை, மனைவியின் சொல்லுக்கு அடங்காமை, அடக்கமற்ற பெண்களுடன் உறவு கொள்ளாமை, போதைப் பொருட்கள் உண்ணாமை, சூதாடாமை போன்ற குணங்கள் அமைச்சரின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை.

            அரசனும், அமைச்சனும் சிந்தித்துச் செயலாற்றுவதும்கூட, அவர்களுடைய மனவிடுதலைக்கு வழிவகுக்கும். மனித உணர்வுகளையும், சிந்தனைகளையும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்குபடுத்துவதன் மூலம், வேண்டியபொழுது, வேண்டியவாறு அவற்றை வழிநடத்த முடியும். அது, யோக மற்றும் ஞான முயற்சிக்குப் பெரிதும் உதவும். 

ஒழிபியல்:
            குடிப்பெருமை, குன்றாத மானம், தகாதன செய்யாத நாணம், சான்றாகும் ஆளுமை, குடும்ப முன்னேற்றத்திற்கான ஓய்வில்லா உழைப்பு, உழைப்பில் உயர்ந்த உழவு,  இனிமையற்ற வறுமையிலும் இரவாமை, கயமையின்மை ஆகிய குணங்கள், குடிமக்கள் யாவர்க்கும், மனம் சஞ்சலப்படாமல் இருக்க உதவும்.

காமம்: 
காமம் (க் + ஆம் + அம் = மெய்யாகும் தன்மை)
            காமத்துப் பாலை, பெண்ணை தெய்வத்திற்கு இணையாக வைத்துத் துவக்குகிறார் திருவள்ளுவர். மிகவும் நுண்மையான மெல்லுணர்வுகளை, குறிப்பால் உள்ளுணரச் செய்கின்றார். ஐம்புலன்களும் மகிழும் புணர்ச்சியை உணரச்செய்து, அவற்றின் சுகத்திலேயே ஆழ்ந்து மனத்தை இழக்கும் வித்தையைக் காட்டுகின்றார். உவமைகளின் அழகியலில் மெய்மறக்கும் தந்திரம் உபதேசிக்கிறார். அசைவில்லாத கூடலில், ஆழ்ந்த மெய்யுணர்வில், இறைமையை உணரலாம் என்கிறார். நெற்றியில் இடும் முத்தம், இறைமையை ஈடுசெய்யும் என்பார். 

            இவ்வாறு சமூக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பெறும் பல்வேறு சுகங்களை, இயந்திரகதியில் அன்றி, உணர்வுப்பூர்வமாக அனுபவித்தும், யாரும் அளவுக்கு அதிகமாகப் பாதிக்காத வகையில், அறவழியில் பொருள் ஈட்டியும், பாரபட்சமின்றி நேர்மையான ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தியும், களவு மற்றும் கற்பியல் வாழ்வில், மென்மையான காம தந்திர நுணுக்கங்களை அறிந்துணர்ந்தும், கல்வியின் யோக, ஞான பாதையில் சென்றும், இறைமையுடன் ஒன்றி, நிலைபெற்று, பிறப்பறுத்து, இறவாமையை எய்தும் வழியைக் காட்டுகின்றார், வள்ளுவப் பெருந்தகை.

            எனவே, திருக்குறளை, திருமுறை என்றும், ஆகமம் என்றும் அழைப்பது, மிகவும் பொருத்தமாய் இருப்பதைக் காணலாம். மேலும், அதன் சிறப்பு என்னவென்றால், இணக்கமான, அன்பான, இன்பமான தனிமனித, குடும்ப, சமூக, அரசியல், தேச வாழ்வியலின் ஊடே, ஞானயோகத்தை முயன்று, இறைமையுடன் ஒன்றி, இறைமையாய் நிலைப்பதுதான். உதவிய உரைகளும் நூல்களும்:
1. பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் பற்றிய திருமதி அ. பத்மாவதியின் உரை
2. சொல்லாக்கியம்
3. திருக்குறள் - ஒரு மறுவாசிப்புMonday, January 20, 2020

எனது ஊர்சுற்றிப் புராணம் - சட்ராஸ்/சதுரங்கப்பட்டினத்தில் ஒரு நாள்


 —  முனைவர்.க.சுபாஷிணிநீங்கள் உங்கள் நகரைத் துறக்கத் தயாரானால் ஆயிரக்கணக்கான நகரங்கள் உங்களை வரவேற்க முன்வரும். நீங்கள் உங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள். ஆயிரக்கணக்கான கிராமங்கள் உங்களை வரவேற்கத் தயாராக இருக்கும். ஒருசில நண்பர் சுற்றத்தாருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நண்பர்களும் சுற்றத்தாரும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்
19.1.2020

          தமிழகத்தில் கடற்கரை பகுதி நகரம் என்பதோடு அதிகம் பேசப்படாத மீனவர்கள் வாழ்கின்ற சதுரங்கப்பட்டினம் நகரிலுள்ள டச்சுக் கோட்டை இன்று இந்தியத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் தொல் சின்னங்களுள் ஒன்றாக உள்ளது. டச்சுக்காரர்கள் தமிழகத்தில் தங்கள் வணிகத்தையும் சமய முயற்சிகளையும் நிலைநாட்ட முயன்ற கி.பி. 17, 18 ஆகிய காலகட்டங்களில் இப்பகுதி டச்சுக்காரர்கள் நிறைந்த ஒரு பகுதியாக அமைந்திருந்தது. இப்பகுதியைக் கண்டுவரும் நோக்கில் நேற்று ஒரு நாள் பயணம் சென்றிருந்தேன்.

          எப்போதும்போல வாகனத்தில் செல்வதைவிட பொதுவாகனத்தில் பயணம் சென்று இப்பகுதியை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் ரயில், ஷேர் ஆட்டோ, பேருந்து எனப் பயணம் செய்து மக்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ளும் வகையில் பயணத்தை அமைக்கலாம் என்று தோன்றியது.

          சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் பயணம் முதலில். அதில் பெண்களுக்கான பகுதியில் ஏறிக்கொண்டேன். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்தப் பகுதியில் இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பலர் நின்றுகொண்டிருந்தார்கள்; சிலர் ரயில் பெட்டியில் தரையிலேயே அமர்ந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் நின்றுகொண்டே பயணிக்கும் சூழல். ஆயினும் கையில் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ஊர் சுற்றிப் பயணம் நூல் இருந்ததால் வாசிக்கத் தொடங்கினேன். பயணம் சுவாரசியமாகத் தொடங்கியது.

          அவ்வப்போது ரயில் நிற்கும் நிலையத்தில் சிலர் ஏறுவதும் இறங்குவதும் இயல்பான நடவடிக்கை. கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மல்லிகைப் பூவின் மணமும், கலவையான பல உணவு பொட்டலங்கள் திறந்து சாப்பிடுவதின் அடையாளமாக உணவின் மனமும் கலந்து ரயில் பெட்டியை நிறைத்தது. ரயில் பெட்டியில் பயணிக்கும் போது சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் தமிழகத்தில் இயல்பாகவே பயணத்தில் பசிக்கு உணவு சாப்பிடுவது அத்தியாவசியம் என்பது ஒருபுறமிருக்க, உணவு சாப்பிடுவதும் ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை இருக்கின்றது என்பதை நான் உணர்கிறேன்.

          ரயிலில் இருந்த ஒரு பெண்ணின் கையிலும் நூல் ஏதும் இல்லை. இது ஐரோப்பாவில் நாம் ரயில் பயணம் செல்லும் போது காணும் காட்சியிலிருந்து மாறுபாடான ஒரு காட்சி. ஏனெனில் ரயில் பயணங்களில் ஐரோப்பிய மக்களில் பெரும்பாலானோர் கைகளில் ஏதாவது ஒரு நூலோ அல்லது பத்திரிக்கையோ இருப்பது மிக இயல்பு. ஆனால் இங்கோ ஒருவரது கைகளிலும் ஒரு பத்திரிக்கை கூட காணவில்லை. தமிழகப் பெண்களின் வாசிப்பு நிலை குறித்த சிந்தனை என் மனதில் கேள்விக்குறியாக நிற்கின்றது.

          நான் பயணித்த ரயில் பகுதியில் பெரும்பாலான பெண்களின் கைகளில் செல் போன் இருந்தது. அதில் நகைச்சுவை நடிகர்களின் காணொளிகள், பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. சிலர் சாட் செய்து கொண்டும் குறுஞ்செய்தி பரிமாறிக் கொண்டுமிருந்தனர்.

          ரயிலில் பயணத்தின் ஊடே வணிகமும் நடைபெறுகிறது. ஒரு குறவர் பெண் ஒரு நிலையத்தில் ஏறிக்கொண்டார். உரத்த குரலில் பாசி மணிகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் கைகளில் ஏந்திக் கொண்டு உரத்த குரலில் கூவிக் கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் பொருட்கள் வாங்கிக் கொண்டார்கள். சற்று நேரத்தில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க, கந்தலான ஒரு சுடிதார் உடை அணிந்த இளம்பெண் சமோசா கூடையைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். `ஐந்து சமோசா பத்து ரூபாய்` என்று உரத்த குரலில் கூவி வியாபாரம் செய்து கொண்டு வந்தார். சில பெண்கள் அவரிடம் வாங்கினார்கள். ஒரு பெண்மணி அவரிடம் இன்னொரு நிலையத்தில் 7 சமோசா பத்து ரூபாய்க்குக் கிடைக்கிறது என்று பேரம் பேசினார். `ஐயாயிரம் ரூபாய்க்குக் கவலைப்படாமல் பட்டுச்சேலை வாங்கும் பெண்கள் பத்து ரூபாய்க்கு 5 சமோசா வாங்குவதில் கூட பேரம் பேசுகிறார்களே`, என்ற எண்ணம் என் மனதில் தோன்றாமல் இல்லை.

          இடையில் ஒரு மூன்றாம் பாலினப் பெண் ஒருவர் ஏறிக்கொண்டார். அவரும் உரத்த குரலில் ஏதோ கூற, ஒரு சில பெண்கள் கையிலிருந்த காசுகளை அவரது கையில் வைக்க, இவர் காசு கொடுத்த பெண்ணின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் கொடுப்பது என்ற ஒரு சடங்கு நடந்தது. அவர் மிகுந்த உரிமையோடு காசு கேட்பது போல அந்தச் சூழல் எனக்குத் தோன்றியது. அடுத்து, கண்பார்வையற்ற ஒரு இளைஞர் ஒரு இளம் பெண்ணையும் அவள் கையில் குழந்தையுடன் என அழைத்துக் கொண்டு ஒரு நிலையத்தில் ஏறிக்கொண்டார். அவர் தன் பார்வைக் குறைவைக் காரணம் சொல்லி தனக்குக் காசு கொடுக்க உரத்த குரலில் கேட்டுக்கொண்டார். சில பெண்கள் காசு கொடுத்தனர்.

          இப்படி பலதரப்பட்ட நிகழ்வுகள் அந்த மகளிர் ரயில் பகுதிக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தன. நூல் வாசிப்பிற்கு இடையே இந்த நிகழ்வுகளையும் நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

          பல வண்ணக் கலவையாகக் கண்களை நிறைந்திருந்த ரயில் பெட்டியிலிருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நான் இறங்கிக் கொண்டேன். என்னுடன் சதுரங்கப்பட்டினம் செல்ல வந்திருந்த தோழர் ரேஷல் என்னைச் செங்கல்பட்டில் சந்திப்பதாகத் திட்டம்.  ரயில் நிலையத்தில் படிகளில் ஏறி வரும்போது இடதுபுறத்தில் கடலைக் காண்பது போன்ற ஏரி. தூரத்தில் சிறிய குன்றுகள், பசுமையுடன். ஏரிக்கரை மேல் ஏராளமான குப்பைகள். இயற்கையை பாழ்படுத்தும் மனிதர்களை மனதிற்குள் சபித்துக் கொண்டேன்.

          படிகளின் மேல் ஏறி வரும் போது ஒரு பகுதியில் நின்று ஏரியை ரசிக்கத் தோதாகப் படிகள் உள்ளன. நான் அங்கு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். ஏரியைப் பார்த்து ரசித்தேன். ஒரு குடும்பத்தினர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இயற்கையின் பின்னணியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வகையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

          மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதி. அதனால்தான் ஏரி, குளங்கள், ஆறுகள், கடல், மலைகள், குன்றுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் காணும்போது நமது மனித மனம் நெகிழ்கிறது; மகிழ்ச்சி அடைகின்றது. நீண்ட நேரம் இந்த இயற்கையோடு நமது நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும் முயல்கின்றது. ஆனால் பல்வேறு பணிகளுக்கு இடையே மாட்டிக் கொள்ளும் இக்காலத்து மனிதர்களாகிய நாம் நம்மைச் சுற்றி இருக்கின்ற இயற்கையைக் காணவும் ரசித்து அனுபவிக்கவும் கூட என்றாவது ஒரு நாள் தான் நேரத்தை ஒதுக்கிக்கொள்கின்றோம் என்பது பெரும் குறைதான். நாம் நமக்கு நன்மை செய்து கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இயற்கையோடு நமது காலத்தைச் செலவிட வேண்டும். நம் மன மகிழ்ச்சிக்கு அதுதான் அடிப்படையாக அமையும்.

          சற்றுநேரம் ஏரியைப் பார்த்து ரசித்துவிட்டு படிகளில் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன். வழி எங்கும் சிறுநீர் துர்நாற்றம். கடந்து செல்லும் ஒவ்வொருவரும் இந்த துர்நாற்றத்தை அனுபவித்துக்கொண்டே தான் செல்ல வேண்டிய சூழல். மக்கள் துர்நாற்றத்தை இயல்பாகப் பழகி விட்டார்கள்; ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இல்லையென்றால் இதனைத் தடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும்; மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும் அல்லவா?!

          செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் வாசலில் நிறைய ஆட்டோ வாகனங்கள் காத்திருந்தன. ரயில் நிலையத்திற்கு முன்னே மகாத்மா காந்தியின் உருவச்சிலை. அதைச் சுற்றி சிறிய பூங்கா.. பார்ப்பதற்கு மனதிற்கு இதமான காட்சியாக அது இருந்தது. சற்று நேரத்தில் தோழி ரேஷல் வந்து சேர்ந்தார். முதலில் ஒரு காப்பியும் பசிக்கு ஏதாவது உணவும் சாப்பிட வேண்டும் என்று சொல்ல, ஒரு சிறு கடைக்குள் சென்றோம். ஒரு தோசை ஆர்டர் செய்தேன். நேரமாகி இருந்ததால் சட்னி-சாம்பார் அனைத்தும் சுவையில்லாமல் இருந்தது. ஆனால் காப்பி சுவையாகவே இருந்தது.

          அங்கிருந்து புறப்பட்டு முதலில் திருக்கழுக்குன்றம் செல்லலாம் என முடிவாகியது. ஷேர் ஆட்டோ சவாரி செல்லலாம் என்று முடிவெடுத்தோம். தமிழகத்தில் ஷேர் ஆட்டோவில் எனது முதல் அனுபவம் இது. ஷேர் ஆட்டோவில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். எங்களுக்கே தயாரித்தது போன்ற ஒரு ஆட்டோ. சுற்றுப் பயணிகளுக்கு மிகத் தோதாகப் பின்பக்கம் மறைப்பு ஏதுமில்லாமல் திறந்து இருந்தது. வெளியே தெரியும் சாலைக் காட்சி, சாலையில் செல்லும் மாடுகள், அவற்றை ஓட்டிச் செல்லும் மக்கள் எனப்  பார்த்துக்கொண்டே வந்தோம்.

          ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. சில பெண்கள் ஏறிக்கொண்டார்கள். அந்த இடத்தில் சாலையின் இடதுபுறத்தில் ஆட்டு இறைச்சி விற்கும் சிறிய கடை ஒன்று இருக்கின்றது. ஆட்டு இறைச்சியை வெட்டிவிட்டு தோலைக் கட்டி வரிசையாகத் தொங்க விட்டிருந்தார்கள். நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். காலை வேளை என்பதால் ஆட்டிறைச்சி வாங்க சிலர் வந்திருந்தார்கள்.

          நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மிக அழகாக ஜோடிக்கப்பட்டுடிருந்தது. ஆட்டோ வாகனத்திலேயே பாடல் கேட்டு ரசித்துக் கொண்டு வரும் வகையில் ரேடியோ, சிடி என அசத்தியிருந்தார் அந்த ஓட்டுநர். 90களின் இறுதியில் வந்த இசையமைப்பாளர் தேவா மற்றும் இளையராஜா இசையமைத்த பாடல்கள்.. . இந்தப் பயணத்தை எனக்கு தேவலோகத்தைச் சுற்றிப் பார்ப்பது போல மிக இனிமையான அனுபவமாக மாற்றித் தந்தது.

          ஷேர் ஆட்டோவில் எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்த மேலும் ஐந்து பெண்கள் எங்களுடன் பேசிக் கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். முதல் முறை பார்த்தாலும் உறவுக்காரர்கள் போலப் பேசும் அந்தப் பண்பு என் மனதை மகிழ வைத்தது. அவர்களிடம் பேசிக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தோம். இரண்டு பேருக்குமே சேர்த்து 30 ரூபாய் தான்.

          அதிர்ச்சியா.. ஆச்சரியமா..? இவ்வளவு குறைந்த தொகையில் பயணம் செய்ய முடிகிறதே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வார இறுதி நாட்களில் அருகாமையில் இருக்கும் பல ஊர்களுக்கும் தமிழக மக்கள் பயணித்து வரலாம். இதனால் புதிய புதிய இடங்களை நாம் பார்த்து ரசிக்கலாம் என்பதோடு ஷேர் ஆட்டோ, உணவகங்கள், சிறு சிறு வியாபாரங்கள் எனத் தமிழக மக்களின் சுய உற்பத்தி வணிகமும் பெருக வாய்ப்பாகுமே எனத் தோழியிடம் மனதில் பட்டதைத் தெரிவித்துக் கொண்டேன்

          சுற்றுலா செல்வது, பயணம் செல்வது என்றால் அது வெளிநாடுகளுக்குத் தான், என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. நமது பக்கத்து ஊரில் உள்ள ஏராளமான இயற்கை பகுதிகளுக்குச் சென்று வருவதும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சென்று பார்த்து வருவதும் கூட சுற்றுலா தான்.

          பயணம் சென்று ஓர் இடத்தைப் பார்ப்பதை யாராவது நேர விரயம் என்று சொன்னால் அவர்களை நான் கண்டிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில், பயணம் செல்வது மட்டும்தான் நம் அறிவினை விசாலமாக்கும்; நம் சிந்தனையை விரிவாக்கும்; நம்மை இந்த இயற்கையின் அங்கமாக்கிக் கொள்ள நமக்குத் தகுதியை அளிக்கும்.

          திருக்கழுக்குன்றம் வந்தடைந்தது எங்கள் ஷேர் ஆட்டோ. நாங்கள் இறங்கிக்கொண்டோம். எதிரே பிரமாண்டமான திருக்கழுக்குன்றம் கோவில் கண்களில் தென்பட்டது. உள்ளே சென்று கோயிலையும் அதிலுள்ள சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் பார்க்க ஆவல் இருந்தாலும், அன்று நேரம் போதாது என்ற காரணத்தால் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

          அங்கிருந்து மற்றொரு ஷேர் ஆட்டோ எடுத்து வெங்கம்பாக்கம் செல்ல வேண்டும் எனத் தோழி சொல்லி இருந்தார். அங்குக் காத்திருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். முந்தைய ஷேர் ஆட்டோ போல இது இல்லை. புறப்பட்டு சில நிமிடங்களில் ஏதோ இயந்திரக் கோளாறு. சாலையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ஷேர் ஆட்டோவை நிறுத்தி அதில் எங்களை ஏற்றிவிட்டார்கள். பத்து நிமிட பயணத்தில் வெங்கம்பாக்கம் வந்தடைந்தோம்.

          அடுத்து அங்கிருந்து மேலும் ஒரு ஆட்டோ எடுத்து சதுரங்கப்பட்டினம் செல்ல வேண்டும். சாலையின் இடது புறத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். எங்களைத் தவிர வேறு யாரும் அதில் இல்லை என்பதால் வாகன ஓட்டி ஷேர் ஆட்டோவை எடுக்காமல் காத்துக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. அதில் நான்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களது உடை அவர்கள் ராணுவ வீரர்கள் என்பதை வெளிப்படுத்தியது.

          5 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு எங்கள் வாகன ஒட்டி அவர்களிடம் சென்றார். அவர்களை அழைத்து வந்து எங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம். அவர்கள் தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள். இந்த குட்டி வாகனத்தில் ஏற்கனவே இரண்டு பேர் பெண்கள் இருக்கின்றோம். இதில் மேலும் 4 பெரிய பைகளுடன் இந்த 4 ஆண்களும் ஏறினால் வண்டியில் இடம் இருக்குமா என்பது அவர்கள் சந்தேகமாக இருந்திருக்கலாம்.

          எங்களை அவர்கள் பார்க்க, நாங்கள் கையசைத்து வாருங்கள் சேர்ந்து பயணிக்கலாம் என்று அழைத்தோம். எங்களிடம் வந்து உள்ளே எப்படி இந்தப் பெரிய பைகளை வைப்பது எனக் கேட்க, தோழி ரேஷல் அவர்களுக்கு வழி காட்டினார்.  பைகளை ஒருவழியாக ஷேர் ஆட்டோவில் அடுக்கி வைத்துவிட்டு அவர்கள் நால்வரும் அமர்ந்து கொண்டார்கள். நான்கு பேருக்குமே தமிழ் தெரியாது. இந்தி மொழி மட்டுமே பேசுகிறார்கள்.

          தனக்குத் தெரிந்த இந்தி மொழியில் தோழி ரேஷல் அவரிடம் பேச்சுக் கொடுத்தார். அவர்கள் கல்பாக்கம் செல்வதாகவும் தாங்கள் காத்திருந்த பஸ் வரத் தாமதமானதாகவும் தெரிவித்தார்கள். சில நிமிடங்களில் கல்பாக்கம் வந்து சேர,  அவர்கள் இறங்கிக் கொண்டார்கள்.

          தமிழகத்தில் வேலை செய்யும் போது தமிழ் மொழி தெரிந்துகொள்ள வேண்டாம் என்ற சிந்தனையுடன் இவர்கள் வேலை செய்வது வெளிப்படையாகத் தெரிகின்றது என நாங்கள் பேசிக்கொண்டோம்.

          கல்பாக்கத்திலிருந்து எங்கள் ஷேர் ஆட்டோ தனது பயணத்தைத் தொடர்ந்தது. சற்று நேரத்தில் சதுரங்கப்பட்டினம் வந்து சேர்ந்தோம். ஷேர் ஆட்டோவிற்கு மொத்தம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு இறங்கிக் கொண்டோம். அருகிலேயே சாத்துக்குடி ஜூஸ் வண்டி ஒன்றை வைத்துக்கொண்டு ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார். அவரும் ஒரு வட இந்தியர். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுகின்றார். இருவரும் இரண்டு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிக்கொண்டோம். தமிழகத்தின் சிற்றூர்களிலும் வட இந்தியர்கள் நம்பிக்கையோடு தங்கள் வணிக முயற்சியைத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இது உறுதிப்படுத்தியது.

          நாங்கள் இறங்கிய பகுதிக்கு எதிர்புறத்தில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை தனது பிரம்மாண்டம் குறையாமல் காட்சி அளித்துக் கொண்டு நின்றது. எதிர்புறத்தில் அலைகள் ஆர்ப்பரிக்கக் கடல் காட்சி.

          ஒவ்வொருமுறையும் கடற்கரையோரப் பகுதியைக் காணும்போது எனது பிறந்த ஊரான மலேசியாவின் பினாங்குத் தீவு மனதில் காட்சியாக வந்து செல்லத் தவறுவதில்லை. இளம் வயதில் மனதில் பதிந்து வைத்த காட்சிப் பதிவு மனக்கண்ணில் ஓட எதிரிலிருந்த கடல் காட்சி என்னை இயல்புநிலைக்கு மீண்டும் கொண்டு வந்தது.

          சுனாமி அலை தாக்கியபோது இப்பகுதியில் பெருத்த சேதம் ஏற்பட்டதாகவும், தனது சமூக சேவை அமைப்பு வழியாக இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் வழங்கிய உதவிகள் பற்றி தோழி விவரித்துக் கொண்டே வர, நாங்கள் கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

          சட்ராஸ் அல்லது சதுரங்கப்பட்டினம் என்ற பெயர் ஓரிரு முறை மட்டுமே சில டச்சு ஆவணங்களில் பார்த்த நினைவு எனக்கு உண்டு. ஆயினும் இப்பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. இது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதை வரைபடத்தில் பார்த்திருந்தேன். ஆனால் ஆழமாக மனதில் ஏனோ இது பதியவில்லை. தோழி ரேஷல் எனது வரலாற்று ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இந்த இடத்திற்கு நான் வரவேண்டும் எனச் சொல்லியிருந்தார். ஆக இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இச்சிற்றூரை எனக்கு அறிமுகப்படுத்திய ரேஷலுக்கு நான் நன்றி சொல்வது கடமையாகும்.

          தமிழக நில வரைபடத்தில் மாமல்லபுரத்திற்கு அடுத்த நகரமாக சதுரங்கப்பட்டினம் வருவதை நினைவுபடுத்திக் கொண்டேன். மதியம் ஏறக்குறைய 12 நெருங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் கோட்டையின் வாயில் பகுதி வந்தடைந்து உள்ளே அனுமதி உண்டா என்று தேடிப் பார்த்தோம். இந்தியத் தொல்லியல் துறையின் ஊழியர் ஒருவர் அங்கு அமர்ந்திருந்தார். அவருடன் அவரது நண்பர் ஒருவரும் அமர்ந்திருந்தார். அவரிடம் இந்தக் கோட்டையை நாங்கள் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு கோட்டையைப் பற்றி சற்று விசாரித்தோம். கோட்டையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய லேமினேட் செய்யப்பட்ட அட்டைகளை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் கோட்டையின் வரலாறு பற்றிய செய்திகள் வழங்கப்பட்டிருந்தன. அதனை வாசித்து விட்டு ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துவரக் கிளம்பினோம்.

          இன்று நாம் காணும் சதுரங்கப்பட்டினம் கிபி 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.  கி.பி. 1353ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு  ஒன்று இப்பகுதியை ராஜநாராயணன் பட்டினம் எனக் குறிப்பிடுகின்றது என்றும், இப்பகுதியைச் சோழ மன்னர்களின் கீழ் ஆட்சி செய்த சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர் என்றும்,  கி.பி.1337லிருந்து 1367ம் ஆண்டில் ஆட்சி செய்த சிற்றரசரின் நினைவாக இப்பெயர் அமைந்ததாகவும், கி.பி.15ம் நூற்றாண்டு விஜயநகர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இங்குள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று இப்பகுதியைச் சதிரவாசகன்பட்டினம் என்றும் குறிப்பிடுவதைத் தகவல் அட்டையில் உள்ளக் குறிப்புக்களின் வழியாக அறிந்து கொண்டோம்.   கடற்கரை துறைமுகப் பட்டினமாக விளங்கிய இப்பகுதி மெல்லிய மஸ்லீன் துணிகள் மற்றும் முத்துக்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆகிய தொழிலுக்காகப் பிரசித்தி பெற்ற ஒரு நகரமாக அன்று விளங்கியது.

          இன்று நாம் காணும் சிதிலமடைந்த கோட்டை டச்சுக்காரர்களால்  17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் இக்கோட்டையைத் தாக்கி டச்சுக்காரர்களிடமிருந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டது. பின்னர் சதுரங்கப்பட்டினம் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

          1620 தொடங்கி 1769 வரை இப்பகுதியில் பணியாற்றிய முக்கிய டச்சு அதிகாரிகள் சிலரது கல்லறைகள் இக்கோட்டையின் வலது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் மேற்பகுதியிலும் கல்வெட்டும் அரசு முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசு முத்திரையிலும் வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறையின் மேற்பகுதி அமைந்திருக்கின்றது. கல்லறை பகுதிக்கு அடுத்து ஒரு கட்டிடம் உள்ளது. சிதிலமடைந்த கட்டடத்தின் உள்ளே சென்று பார்த்தோம். பின்னர் வெளியே வந்து ஏனைய பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
          ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் தென்னிந்தியப் பகுதியில் ஆளுமை செலுத்திய ஐரோப்பியர்களின் வரிசையில் போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதிலும் குறிப்பாகச் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியான பழவேற்காடு, மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆளுமை ஒரு நூற்றாண்டுக்கும் மேல்  பலம் பொருந்தியதாக அமைந்திருந்தது.

          சதுரங்கப்பட்டினம் நெசவாளர்கள் நிறைந்த ஒரு பகுதியாக 16ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தது. மிக முக்கியமாக மெல்லிய மஸ்லீன் துணிகள் ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்ததன் விளைவாக இப்பகுதியில் டச்சுக்காரர்கள் ஒரு தொழிற்சாலையை  அன்று அமைத்தார்கள். சதுரங்க பட்டினத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட மஸ்லீன் துணிகள் ஐரோப்பாவிற்குக் கப்பல்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன. வணிகம் மிகச் சிறப்பாக வளர்ந்ததால் டச்சுக்காரர்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்ட முயன்று இன்று நாம் காணும் இக்கோட்டையைக் கட்டினார்கள்.

          டச்சுக்காரர்களிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இதனைப் பாதுகாக்கவில்லை. இன்று இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. சதுரங்கப்பட்டினம் உள்ள பகுதிக்கு அருகில் தான் கல்பாக்கம் அணு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. 

          சிதிலமடைந்து காட்சியளித்தாலும் இக்கோட்டை இன்றும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு சின்னமாகவே திகழ்கின்றது. கோட்டைக்குள் உள்ள கல்லறையில் உள்ள சின்னங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.  ஒரு கல்லறையில் கப்பல் வடிவமும் மற்றொரு கல்லறையில் சூலம், ருத்ராட்சம், விலங்கு சின்னமும், மற்றுமொரு கல்லறையில் புலியின் சின்னமும், மற்றுமொரு கல்லறையில் மீன் சின்னமும் என வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறைகள் டச்சு மொழி கல்வெட்டுகள் இணைந்த வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுகள் மற்றும் சின்னங்கள் சொல்லும் செய்திகளை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக ஆய்வு மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். ஆய்வுக்கு வழிவகுக்கும் சிறந்த களமாக இப்பகுதி உள்ளது என்பதை நானும் தோழி ரேஷலும் பேசிக்கொண்டே கொளுத்தும் மதிய வெயிலில் நடந்தோம்.

          இக்கோட்டை வளாகத்திற்குள்ளேயே ஒரு கிணறு இருக்கின்றது. விரிந்த கிளைகளுடன் கூடிய 200 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு புளியமரமும் இருக்கின்றது. கோட்டையை முழுமையாகப் பார்த்துவிட்டு தொல்லியல் துறை பணியாளரிடம் நன்றி சொல்லி வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டுவிடைபெற்று அங்கிருந்து புறப்பட்டோம்.

          ஒரு காலத்தில் பெரும் வணிக நகரமாகவும், ஐரோப்பியர்கள்  விரும்பி வாழ்ந்த ஒரு நகரமாக இருந்த சதுரங்கப்பட்டினம் இன்று ஆள் நடமாட்டம் குறைந்து முக்கியத்துவம் குறைந்த ஒரு நகரமாகக் காட்சியளிக்கின்றது.  சதுரங்கப்பட்டினம் இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதிதான். கடற்கரையும் இருப்பதால் மிகச் சிறப்பாக இப்பகுதியை ஒரு சுற்றுலாத்தலமாக அரசு மாற்றி அமைக்கலாம். அப்படிச் செய்யும் பொழுது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் விரிவாக அமையும். சுயதொழில் பெருகும். அதேசமயம் வரலாற்றுச் சிறப்பும் பாதுகாக்கப்படும்.

          தமிழகத்தின் உள்ளே ஒவ்வொரு இடத்திற்குப் பயணிக்கும் போதும், இவ்வளவு இயற்கை வளத்தைப் பொருளாதார ரீதியாக வலுவாக மாற்றாமல் இருக்கிறார்களே என நினைத்து நான் வருந்துகின்றேன். இயற்கை வளம் இல்லாத எத்தனையோ நாடுகள் தமது தீவிர முயற்சியினால் நாட்டின் வளர்ச்சியை உயர்த்தி இருக்கின்றன. ஆனால் தேவைக்கு அதிகமான மனித வளம், இயல்பான இயற்கை வளம், வணிகத்திற்கு ஏற்ற இயற்கை சூழல் என அமைந்த பல சிற்றூர்கள் தமிழகத்தில் அதன் சிறப்பும் பொலிவிழந்து பரிதாபமாகக் காட்சி அளிப்பது வேதனையை அளிக்கின்றது.

          சதுரங்கப்பட்டினத்திற்கான எனது பயணம் தமிழகத்தில் டச்சுக்காரர்களின் ஆளுமையை ஓரளவு நேரடியாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு வழங்கியது. இதேபோல அடுத்து  மற்றுமொரு தமிழகத்துக் கடற்கரையோர நகருக்கு விரைவில் செல்லவேண்டும் என்று மனதில் திட்டம் ஓடத்தொடங்கிவிட்டது.  வரலாற்றுத் தேடல் நிறைந்த பயணத்திற்கும் ஆய்விற்கும் தான் முடிவில்லையே.

ஊர்சுற்றி மாசுபடாத இயற்கையின் மத்தியிலும், அதன் உண்மையான வாரிசுகளின் இடையேயும் மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்தால் அவனுக்கு எவ்வளவோ மகிழ்ச்சி கிட்டும். அவன் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வான். வரலாறு, மனித இனம், மொழி அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பான். அவன் அங்கிருந்து வெகுதூரம் போய் விட்டால் பழைய நினைவுகள் இனிய நினைவுகளாக நிலைத்து விடுகின்றன. அந்த இனிய நினைவுகள் அவனைப் பொறுத்தவரையில் அவனுடனே மறைந்து விடலாம். ஆனால் அவன் தன் நினைவுகளுக்கு எழுத்து வடிவம் தந்து விட்டுப் போனால் அவன் மறைந்த பின்னரும் லட்சக்கணக்கான வாசகர்களின் கண்களின் முன்னால் அவ்வினிய நினைவுகள் உயிர்பெற்று எழும்.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்
தொடர்பு: முனைவர் க. சுபாஷிணி (ksubashini@gmail.com)Wednesday, January 15, 2020

வரலாற்றுத் தேடல் பணிகளை விரிவுபடுத்துவோம்          2019 ஆம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் புதிய பரிணாமம் எடுத்து  ஆக்கப்பூர்வமான வரலாற்றுத் தேடல், ஆவணப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான வரலாற்றுப்பயிற்சி மற்றும் உலகளாவிய தமிழ் வரலாற்றினை விரிவாக்கம் செய்யும் முயற்சி போன்றவற்றிற்குத் தொடக்கமாக அமைந்தது. தமிழகத்தில் மற்றும் இலங்கையில் வரலாற்றுத் தேடலை மற்றும் ஆவணப்படுத்தலை மைய நோக்கமாகக்கொண்டு செயல்படுத்தப்பட்ட வெவ்வேறு மரபு பயணங்கள் ஆண்டு முழுமையும் நடைபெற்றன. தமிழகத்தில் இரண்டு கல்வெட்டுப் பயிற்சிகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல்முறையாகத் திருவள்ளுவருக்குச் சிலை வைத்த பெருமையும் 2019ம் ஆண்டில் இணைந்தது. இவை தமிழ் மரபு அறக்கட்டளையின் சாதனைகளில் இணைகின்றன.

          உலக மக்களுக்குப் பொது மறையாகத் திகழும் திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு ஐம்பொன்னாலான இரண்டு திருவள்ளுவர் சிலைகள் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டன. இந்த மாபெரும் பணியுடன் இணைந்த வகையில் 19ம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு எழுதப்பட்ட இரண்டு ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்கள் ஆங்கில அறிமுக உரையுடன் தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் 2019ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பாளராக வளர்ச்சி பெற்ற வரலாற்று நிகழ்வும் அடங்குகிறது.

          1803 ஆம் ஆண்டு பாதிரியார் ஃப்ரடெரிக் காமரெர் அவர்கள் எழுதிய திருக்குறளுக்கான மொழிபெயர்ப்பு நூலும் அதனை அடுத்து 1856 ஆம் ஆண்டு டாக்டர் கார்ல் க்ரவுல் அவர்கள் எழுதிய திருக்குறளுக்கான முழுமையான ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூலும்  முதல் இரண்டு வெளியீடுகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகத்திலிருந்து டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து "திருவள்ளுவர் யார் கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்" என்ற எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களது நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மூன்றாவது நூலாக  வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக 2020ஆம் ஆண்டு வரலாறு, சமூகவியல், மானுடவியல் மற்றும் மொழி ஆய்வில் முக்கியத்துவம் பெறும் நூல்களை வெளியிடும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் செயல்படும்.

        கல்வி என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு மட்டுமே உரியதன்று. அதேபோலத்தான் வரலாறும் வரலாறு பற்றிய ஆய்வுகளும். கல்வெட்டு வாசித்தல், தொல்லியல் அகழாய்வு தொடர்பான விசயங்களைச் சாதி இன மத வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைத்து மக்களும் கற்று அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பயணம் மற்றும் கல்வெட்டுப் பயிற்சி ஆகியவை தொடர்ந்து செயலாக்கம் பெரும்.

          வரலாறு என்பது அகழ்வாய்வு என்ற ஒரு துறையில் மட்டுமே அடங்கிவிடும் ஒன்றல்ல. மானுடவியல் கூறுகள் மற்றும் சமூகவியல் பார்வையில்  வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்திச் செயல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். திட்டமிடப்படாத நகரமயமாக்கல், மக்கள் குடியேற்றம் என்ற வகையில் வரலாற்றுச் சின்னங்கள் பல சிதைக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன அல்லது உருமாற்றம்  செய்யப்பட்டு வேறு வகையில் அவை திரிக்கப்பட்டு வரலாற்றில் புகுத்தப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகள் வரலாற்றுச் சின்னங்கள் படிப்படியாக அழிந்து போகும் நிலைக்கு வழி வகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை " நம் ஊர் நம் பெருமை " என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இத்திட்டத்தின் செயல்பாடுகள் இவ்வாண்டு தொடக்கம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு சிறு சிறு ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களும், சமூகச் செய்திகளும், மானிடவியல் கூறுகளும் பதியப்பட்டு மின்னாக்கம் செய்யப்பட்டு வலையேற்றப்படும் ஒரு முயற்சி செயல்படுத்தப்படும்.

          தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு பணிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இணைந்து கொள்ளுங்கள்.

          எல்லோருக்கும் இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர்,தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு

ஏறு தழுவல்

ஏறு தழுவல்

——   மா.மாரிராஜன்


          இன்றைய நாள். மாட்டுப்பொங்கல். ஜல்லிக்கட்டு. களத்தில் காளைகளும், காளையர்களும் ஆடும் ஆட்டத்தை நேரடியாகவும், தொலைக்காட்சியிலும் பார்த்துப் பரவசமடைந்தோம். இந்நிகழ்வுகளை அப்படியே நமது சங்க இலக்கியமான கலித்தொகை ஏறுதழுவல் என்னும் பெயரில் பதிவுசெய்கிறது. ஒரு நேரடி வர்ணனை போல் இக்காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது.

          மிகப்பழமையான நமது சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று கலித்தொகை. அதில், முல்லைக்கலி பாடலை இயற்றியவர் நல்லுருத்தினார் என்னும் புலவர்.

ஏறுதழுவல் நிகழ்வை அடுத்தடுத்த காட்சிகளாகப் பாடல்கள் விளக்குகிறது. களம்... காளை... வீரர்கள்... களமாடுதல்... என்று நேரடிக் காட்சியாப் பாடல்கள். இப்பாடல்களில் தமிழர்களின் பல பாரம்பரிய வழக்கங்களும், வரலற்றுத் தரவுகளும் பதிவாகியுள்ளன.

          ஆயர் குடி மக்களின் தொன்மை, பாண்டியனின் பெருமை, அவன் நிலத்தைக் கடல் கொண்டமை, குரவைக் கூத்து, என்ற பல வரலாற்றுத்தரவுகள். வழிபாடும் தமிழனது பாரம்பரிய வழக்கமாய் இருந்துள்ளது.  சிவன், பெருமாள், முருகன், இந்திரன், போன்ற தெய்வங்கள் பல பாடல்களில் சிறப்பாகத் தோன்றுகின்றனர்.

          உவமைகளாக மகாபாரத போர் நிகழ்வுகளும் காட்டப்படுகின்றன. 101 - 105 வரை மிக நீண்ட பாடல்கள்; பாடல்களின் வரிசை மாற்றி ஒரு தொகுப்பாகச் சுருக்கி.. சுருக்கி.. சுருக்கி... தொகுத்ததே நீண்ட பதிவாகிவிட்டது.

          இனி, கலித்தொகைக் காட்டும் ஏறுதழுவல் காட்சிகள்; ஆயர் குடி பெருமை மற்றும் தொன்மையைப் பறைசாற்றும் பாடலுடன் துவங்குகிறது.

"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய 
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு."

பொங்கிய கடல் வந்து தன் நிலத்தை அபகரித்தது. சினம் கொண்ட பாண்டியன், புலிச்சின்னம் கொண்ட சோழனையும், வில் சின்னம் கொண்ட சேரனையும் வீழ்த்தி தன் மீன் சின்னத்தைப் பொறித்த பாண்டியர் குடி தோன்றிய போதே தோன்றிய தொன்மைக் குடி ஆயர் குடி.

          அடுத்த பாடல் ஏறுதழுவலின் சிறப்பை மிக வீரியமாகப் பதிவு செய்கிறது.

"கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்."

கொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை, இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறப்பிலும் மணக்கமாட்டாள் ஆயர் மகள்.

          ஏறுதழுவல் விழா ஆரம்பமாக உள்ளது. மாடு பிடி வீரர்கள் வந்தனர். அவர்கள் முதலில் வழிபாடு செய்தனர்..

"துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ "

நீர்த்துறையில் இருக்கும் தெய்வம், ஆலமரத்தடி இறைவன் (சிவன்) மராமரத்து இறைவன் (திருமால்) ஆகியோரை வணங்கி ஏறு தழுவும் களத்தில் நுழைகின்றனர்.

          களத்தில் எவ்வாறான மாடுகள் இருந்தன?

" வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,   மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும்."

பனைக்கொடியுடைய குற்றமற்ற பலராமனின் வெள்ளை நிறம் கொண்ட காளை, போர் வெற்றிதரும் சக்கரத்தையுடையவனும், திருமகளை தன் மார்பில் கொண்டவனுமான திருமாலின் கரியநிறம் கொண்ட காளை, ஒளிமிகுந்த சடையில் பிறையைச் சூடி நெற்றியில் ஒரு கண்ணுடன் திகழும் முக்கண்ணனின் நிறம் போல் ஒரு காளை, மாமரமாய் நின்ற சூரனை தன் வேல் கொண்டு வதம் செய்த வேலவனின் செந்நிறத்தில் ஒரு காளை..

          ஆட்டம் ஆரம்பமானது.  எவ்வாறு..?

"மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு
அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப .

மாறு எதிர் கொண்டவர்களைத் தாக்கி அழிக்கும் சிவனின் கணிச்சிப்படையினர் போல் கொம்பு சீவப்பட்ட காளைகள் இருக்கும் தொழுவத்தில் வீரர்கள் புகுந்தனர். இடி முழக்கம் போல் பறையொலி எழும்ப ஏறுதழுவல் தொடங்கியது.

தகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன்
எதிர்எதிர் சென்றார் பலர்
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்
அவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருத்தினான்மன்ற,
அவ் ஏறு
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ
ஏறு உடை நல்லார்: பகை?

காளைகள் மேல் பாய்ந்து பிடிப்பதற்காக பெரும் ஆரவாரத்துடன் காளைகளின் எதிரே சென்றனர். கொல்லும் வில்லைபோல் வளைந்த காளை அவர்களை எதிர்கொள்ளத் தயாரானது. காளைகளின் கால்கள் தரையைக் கீற புழுதி கிளம்பியது. வீரர்கள் தன் மார்பை விரித்து தயாராக, அவர்களைக் குத்திக் கிழிக்க தன் கொம்புகளைத் தாழ்த்தியது காளை. இதைப் பார்ப்பவர்கள் கலக்கமுற்றனர். மலரும் மணிப்பூண் ஒன்றை தன் தோளில் அணிந்த ஒருவன் பாய்ந்து சென்று காளையின் திமிழைப்பிடித்து காளையை வருத்தினான். இதைக்கண்ட காளையின் சொந்தக்காரிக்கு இவன் பகை ஆவானோ?

          இனி காளைகளின் ஆட்டம்...

மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் 
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் 

மேலே சுற்றும் நூற்கண்டின் நிறமும் சிறிய சிவந்த கண்களை உடைய காளை ஒன்று, தன்னை நோக்கிப் பாய்ந்தவனைக் குத்தி தன் கொம்பில் வைத்துச் சுழற்றுவதைப் பாருங்கள். இக்காட்சியானது. அழகியசீர் நடையழகியின் (திரௌபதி)கூந்தல் பற்றி இழுத்தவனின் ( துச்சாதனன்) நெஞ்சம் பிளப்பேன் என்று வஞ்சினம் கூறியவனின் (பீமன்) செய்கையை ஒத்திருந்தது.

தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் 
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன

காளையை அடக்குவோர் தொழுவத்துள் சுழன்று சுழன்று பாய்ந்தனர். அவர்களைக் காளைகள் பார்த்துப் பார்த்துக் குத்தின. கொம்புகளிலிருந்த மாலையை வீரர்கள் அறுத்தனர். சூலம் ஏந்திய சிவன் சூடிய பிறையில் இருக்கும் மாலையைப்போல் ஒருவனது குடலை தன் கொம்புகளில் வைத்துச் சுழன்றது ஒரு காளை.

ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர், 
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ

பெரும் கூச்சலுடன் காளைகள் மேல் பாய, காளைகள் அவர்களை எதிர்கொள்ள, கொம்புகளுக்கிடையே அவர்கள் போராட, இக்காட்சி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெற்ற போர்க்களம் போல் இருந்தது.

மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும், 
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு

வீரர்களில் சிலர் காளைகளின் கொம்பைப் பிடித்தனர். சிலர் திமிலைப் பற்றினர்.சிலர் காளைகளின் தோளில் தொங்கினர்.இவர்களைக் காளைகள் தங்கள் கொம்புகளால் தடுத்து நிறுத்தியது.

"தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர், 
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ"

இவ்வாறான ஏறுதழுவல் நடைபெற்று முடிந்தபிறகு காளைகள் மேய்ச்சல் நிலத்திற்கு விடப்பட்டன. ஊரார்களும் மற்றவர்களும் ஊர் மன்றத்தில் கூடி ஒருவரையொருவர் கட்டித்தழுவி தழுஉ கூத்தாடினர்.

"ஆங்கு,
குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி, 
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே"

இவ்வாறான ஏறுதழுவுதல் நமது மரபாகும்.இதனைப் பாடி குரவைக்கூத்து ஆடி மங்காத புகழ் கொண்ட நம்தெய்வத்தைப் போற்றுவோம். கடலால் சூழப்பட்ட இந்நிலத்தை ஆளும் அரசன் வாழ்க.

          இம்மலர்ந்த உலகமும் வாழ்க.....தொடர்பு: மாரிராஜன் (marirajan93@gmail.com)