Wednesday, January 15, 2020

வரலாற்றுத் தேடல் பணிகளை விரிவுபடுத்துவோம்



          2019 ஆம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் புதிய பரிணாமம் எடுத்து  ஆக்கப்பூர்வமான வரலாற்றுத் தேடல், ஆவணப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான வரலாற்றுப்பயிற்சி மற்றும் உலகளாவிய தமிழ் வரலாற்றினை விரிவாக்கம் செய்யும் முயற்சி போன்றவற்றிற்குத் தொடக்கமாக அமைந்தது. தமிழகத்தில் மற்றும் இலங்கையில் வரலாற்றுத் தேடலை மற்றும் ஆவணப்படுத்தலை மைய நோக்கமாகக்கொண்டு செயல்படுத்தப்பட்ட வெவ்வேறு மரபு பயணங்கள் ஆண்டு முழுமையும் நடைபெற்றன. தமிழகத்தில் இரண்டு கல்வெட்டுப் பயிற்சிகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல்முறையாகத் திருவள்ளுவருக்குச் சிலை வைத்த பெருமையும் 2019ம் ஆண்டில் இணைந்தது. இவை தமிழ் மரபு அறக்கட்டளையின் சாதனைகளில் இணைகின்றன.

          உலக மக்களுக்குப் பொது மறையாகத் திகழும் திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு ஐம்பொன்னாலான இரண்டு திருவள்ளுவர் சிலைகள் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டன. இந்த மாபெரும் பணியுடன் இணைந்த வகையில் 19ம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு எழுதப்பட்ட இரண்டு ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்கள் ஆங்கில அறிமுக உரையுடன் தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் 2019ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பாளராக வளர்ச்சி பெற்ற வரலாற்று நிகழ்வும் அடங்குகிறது.

          1803 ஆம் ஆண்டு பாதிரியார் ஃப்ரடெரிக் காமரெர் அவர்கள் எழுதிய திருக்குறளுக்கான மொழிபெயர்ப்பு நூலும் அதனை அடுத்து 1856 ஆம் ஆண்டு டாக்டர் கார்ல் க்ரவுல் அவர்கள் எழுதிய திருக்குறளுக்கான முழுமையான ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூலும்  முதல் இரண்டு வெளியீடுகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகத்திலிருந்து டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து "திருவள்ளுவர் யார் கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்" என்ற எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களது நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மூன்றாவது நூலாக  வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக 2020ஆம் ஆண்டு வரலாறு, சமூகவியல், மானுடவியல் மற்றும் மொழி ஆய்வில் முக்கியத்துவம் பெறும் நூல்களை வெளியிடும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் செயல்படும்.

        கல்வி என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு மட்டுமே உரியதன்று. அதேபோலத்தான் வரலாறும் வரலாறு பற்றிய ஆய்வுகளும். கல்வெட்டு வாசித்தல், தொல்லியல் அகழாய்வு தொடர்பான விசயங்களைச் சாதி இன மத வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைத்து மக்களும் கற்று அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பயணம் மற்றும் கல்வெட்டுப் பயிற்சி ஆகியவை தொடர்ந்து செயலாக்கம் பெரும்.

          வரலாறு என்பது அகழ்வாய்வு என்ற ஒரு துறையில் மட்டுமே அடங்கிவிடும் ஒன்றல்ல. மானுடவியல் கூறுகள் மற்றும் சமூகவியல் பார்வையில்  வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்திச் செயல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். திட்டமிடப்படாத நகரமயமாக்கல், மக்கள் குடியேற்றம் என்ற வகையில் வரலாற்றுச் சின்னங்கள் பல சிதைக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன அல்லது உருமாற்றம்  செய்யப்பட்டு வேறு வகையில் அவை திரிக்கப்பட்டு வரலாற்றில் புகுத்தப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகள் வரலாற்றுச் சின்னங்கள் படிப்படியாக அழிந்து போகும் நிலைக்கு வழி வகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை " நம் ஊர் நம் பெருமை " என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இத்திட்டத்தின் செயல்பாடுகள் இவ்வாண்டு தொடக்கம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு சிறு சிறு ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களும், சமூகச் செய்திகளும், மானிடவியல் கூறுகளும் பதியப்பட்டு மின்னாக்கம் செய்யப்பட்டு வலையேற்றப்படும் ஒரு முயற்சி செயல்படுத்தப்படும்.

          தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு பணிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இணைந்து கொள்ளுங்கள்.

          எல்லோருக்கும் இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர்,தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு





No comments:

Post a Comment