Tuesday, March 27, 2018

சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை...——  ருத்ரா இ.பரமசிவன்.

ஓவியம்: ஷண்முகவேல் - ‘வெண்முரசு’


சிலம்பி வலந்த பொரிசினை ஓமைக்
கான்செறி முள்ளிய பரல்வெங்காட்டின்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை திரங்கிய
வரி வரி சுழிநீர் வந்து வந்து அலைப்ப‌
அகல்திரைப் பௌவம் ஆழத்திருந்து
வாட்சுறா போழ்ந்த கொடுவாய் அன்ன‌
உடலும் தின்னும் உள்ளும் தின்னும் அவ்
உடல் ஊறு நோயும் உள்சுடு நோயும்
நோன்றல் ஆற்றிய பின்னை எஞ்சும்
என்பு நெய்த கூடு உயிரிழை நைந்து!
தழல் உண்டவள் போலும் எரிந்தேன்
ஆயினும் அஃது வான் ஈர் தண்மழை.
தகரத்துச் சாந்தின் ஒள்ளிய‌ ஞெகிழி
உன் கூடல் உள்ளிய களிப்பின் செத்து
இன் தீ காட்டும் இமிழ்தரும் நின்பெயர்.
புல்வேய் குரம்பை போர்த்த குடுமியில்
நறவுபெய் நடுநிலா பூக்கள் தடவி அவன்
உறவு காட்டும் அம்மவோ பெரிதே."சுள்ளியம் பேர் ஆறு"  - பாடல் குறித்து

அகநானூறு "களிற்றியானை நிரை" தொகுதியில் 149 ஆம் பாடல் "எருக்காட்டூர் தாயங்கண்ணனார்" என்னும் ஆழ்ந்த புலமையுள்ள‌ சங்கத்தமிழ்  புலவரால் பாடப்பட்டது. அவர் அதில் சேரநாட்டு ஆறான‌ "சுள்ளியம் பேர் ஆறு" அலையெழுப்பிக்கொண்டு வெள்ளிய நுரைப்பூக்களை அகலப்பரப்பிக்கொண்டு ஓடும் "அழகை "சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க" என்று சிறப்புற எழுதியிருக்கிறார். அந்தச் சொற்றொடர் ஏதோ நம்மை அந்த ஆற்றில் ஒரு படகில் ஏற்றி அது வெண்நுரைப்படலம் கிழிபடச் சென்று கொண்டிருப்பதைப்போலவே உணர்ந்தேன். அந்த சொற்றொடரைத் தலைப்பாக்கி எழுதிய ஒரு சங்கநடைச் செய்யுட்கவிதையே இந்த "சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை" ஆகும்.

இந்தப்பாடலில் தலைவனைப்பிரிந்து வாடும் தலைவியின்"பிரிவுத்துயரம்" தான் விவரிக்கப்படுகிறது.

பொழிப்புரை:

சிலம்பி வலந்த பொரிசினை ஓமைக்
கான்செறி முள்ளிய பரல்வெங்காட்டின்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை திரங்கிய 
வரி வரி சுழிநீர் வந்து வந்து அலைப்ப‌

தலைவன் பொருள்தேடிச்செல்லும் காடும் ஆறும் தான் தலைவியின் கண்முன்னே வருகின்றன.ஓமை மரங்கள் அடர்ந்த அந்தக்காட்டில் சிலந்திகள் நூல்கள் பின்னும் சுள்ளிகளாய் இருக்கும் கிளைகளேஅதிகம் உள்ளன.அந்த முட்காட்டில் பருக்கைக்கற்கள் காலில் இடறுகின்றன. அந்தக்காட்டில் "சுள்ளியம் பேராறு" வெண் நுரை பூத்து ஆற்றுநீர்ப்பரப்பில் சுருக்கங்கள் போன்ற (திரங்கிய) சிற்றலைகளை உருவாக்குகின்றன.அவை சுழித்து சுழித்து வரி வரிகளாய் அவளைச்சுற்றியே வந்து அலைக்கழிப்பது போல் துயரம் கொள்கிறாள்.

அகல்திரைப் பௌவம் ஆழத்திருந்து
வாட்சுறா போழ்ந்த கொடுவாய் அன்ன‌
உடலும் தின்னும் உள்ளும் தின்னும் அவ்
உடல் ஊறு நோயும் உள்சுடு நோயும்
நோன்றல் ஆற்றிய பின்னை எஞ்சும்
என்பு நெய்த கூடு உயிரிழை நைந்து!

அகன்ற பேரலைகள் தளும்பும் கடலின் அடி ஆழத்திலிருந்து சுறா மீன்கள் வருகின்றன.கூரிய கொம்பு உடையச் சுறாமீன்கள் வாய்கள் பிளப்பது போல் அந்தக் காதல் நோய் அவளை விழுங்க முனைகிறது என்கிறாள் தலைவி. அந்நோய் அவள் உடலில்ஊறி உள்ளத்துள் சூடு ஏற்றுகிறது.இப்படி இந்நோய் என்னைச் சிதைத்த பின் என் நைந்த உயிரிழைகொண்டு நெய்யப்பட்ட என் எலும்புக்கூடுதான் மிஞ்சும் என்கிறாள்.

தழல் உண்டவள் போலும் எரிந்தேன்
ஆயினும் அஃது வான் ஈர் தண்மழை.
தகரத்துச் சாந்தின் ஒள்ளிய‌ ஞெகிழி 
உன் கூடல் உள்ளிய களிப்பின் செத்து
இன் தீ காட்டும் இமிழ்தரும் நின்பெயர்.

அவள் சொல்கிறாள்: நெருப்பையே உண்டுவிட்டவள் போல் ஆனேன்.இருந்தாலும் எனக்குள் அவன் நினைவு வானத்தைப் பிளந்து கொட்டும் குளிர்மிக்க மழையாகத்தான் (வான் ஈர் தண்மழை) இருக்கிறது.மணம் பொருந்திய சந்தன மரத்தை வெட்டி எரித்த ஒளிமிக்க நெருப்பின் கொழுந்தாக சுடர் வீசுகிறது."உன்னோடு இன்புற்றுக் களிப்பாக இருந்தது போல் எண்ணி (களிப்பின் செத்து) இந்த இனிய தீயையும் உணர்கிறேன்.இது உன்னைத்தான் எனக்குக் காட்டுகிறது.உன் பெயரின் ஒலி கூட அதில் கேட்கிறது."

புல்வேய் குரம்பை போர்த்த குடுமியில்
நறவுபெய் நடுநிலா பூக்கள் தடவி அவன்
உறவு காட்டும் அம்மவோ பெரிதே.

புல்லில் வேயப்பட்ட சிறு வீடுகள் சூழ்ந்த அந்த மலை உச்சியில் நடு இரவின் நிலா ஒளி பொழிகிறது.அது ஒரு மயக்கம் தரும் இனிய தேன்மழையை தூவுகிறது.அது பூக்களை வருடி ஒளி பூசுகிறது. அதில் என் தலைவனின் காதல் உறவு எவ்வளவு பெருமை மிக்கதாய் மிளிர்கிறது!


படம் உதவி: http://www.jeyamohan.in/61436#.WroYpojwaUk

________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)
உலக ஐயை ஒன்றுகூடல்

— முனைவர்.க.சுபாஷிணி


பெண்களுக்கென ஒரு மாநாடு . . .
அது பெண்களைச் சிறப்பித்த ஒரு மாநாடு . . .
ஆளுமை நிறைந்த பெண்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்த ஒரு மாநாடு . . .
ஆய்வுலகில் ஈடுபட்டிருக்கும் பெண்களை மேலும் ஊக்குவித்த ஒரு மாநாடு . . .
ஆம். முதலாம் உலக ஐயை மாநாடு கடந்த 17.03.2018 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

         தமிழகம், இலங்கை, மலேசியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துபாய், வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பெண் ஆளுமைகள் இந்த ஆய்வுக்கருத்தரங்கில் வந்து கலந்து கொண்டனர். இணையத்தின் வழியே நல்ல செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்; திறமையாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமானதாகச் செயல்படுத்திக் காட்டலாம் என்பதற்கு உதாரணமாக இந்த மாநாடு நடைபெற்றது.

         ஈராண்டுகளுக்கு முன்னர் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களால் துவக்கப்பட்டு, இணையவழி ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் குழு “ஐயை வாட்சப் குழுமம்”. ஆய்வுத் தளத்தில் இயங்கும் பெண்களை ஒருங்கிணைத்து பெண்களின் அளப்பறியச் சக்தி, ஆக்ககரமான செயல்பாடுகளையும் தரமான ஆய்வுகளையும் முன்னெடுக்க ஒரு அமைப்பு தேவை எனச் சிந்தித்து இக்குழுமத்தைத் தொடக்கியதால் இன்று உலகின் 145 நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுமமாக இக்குழு செயல்பட்டு வருகின்றது. இக்குழுமத்தின் முதல் ஆய்வு மாநாட்டில் பெண் ஆய்வாளர்களே முற்றும் முழுதுமாக வழங்கிய 23 கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் “தீ இனிது” என்ற பெயருடன் ஆய்வுக்கருத்தரங்கம் நடைபெற்ற நாளில் வெளியிடப்பட்டது.         இந்த ஆய்வுக்கருத்தரங்கத்தை இந்தியத் தூதரகத்தின் கலை கலாச்சாரப் பிரிவுத் தலைவர் திரு.அய்யனார் அவர்கள் தொடக்கி வைத்தார். தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி வழிநடத்த, பேராசிரியர்.நா.கண்ணன் திறனாய்வு செய்ய, பேராசிரியர் அரங்க மல்லிகா முறைப்படுத்த, திரு.ஒரிசா பாலு நெறிப்படுத்த இந்த ஆய்வுக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

         பெண்கள் தொடர்பான, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பெண் ஆளுமைகள் பற்றின, பெண் சாதனைகளை விளக்கும், வரலாற்று, சமூகவியல், மானுடவியல், ஊடகவியல் எனப் பன்முகத்தன்மையில் அமைந்த கட்டுரைகளை ஆய்வாளர்கள் முன் வைத்தனர். அவற்றில் சில கட்டுரைகளைப் பற்றிய சிறிய குறிப்புக்களோடு அவை சொல்லும் செய்திகளைக் காண்போமே!

         முனைவர் அரங்க மல்லிகா ”ஔவையும் பௌத்த மீளாய்வும்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்த ஆய்வு மாநாட்டிற்காக வழங்கியிருந்தார். தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகவும், அக்கல்லூரி மகளிர் மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பில் இருப்பவர் இவர்.

         தனது கட்டுரையில் இவர், மக்கள் இயற்கையோடும் சமூகத்தோடும் இணைந்து வாழ்வதற்குரிய அறநெறிகளை வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த உலகச் சிந்தனையாளர்களான சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், காண்ட், ஹெகல் முதலிய அறச்சிந்தனையாளர்களோடு வள்ளுவர் சிந்திக்கத்தக்கவர் என்று குறிப்பிட்டு அவர்களூடே பெண்பாற் புலவரான ஒளவையாரும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டியவர் எனக் குறிப்பிடுகின்றார்.

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே (மூதுரை-8)

         பௌத்தத்தின் ஐவகை சீலங்களைக் கடைப்பிடித்து வாழும் நெறியை ஒளவையின் இந்த மேற்குறிப்பிட்ட செய்யுள் நன்கு வெளிப்படுத்துகின்றது. தமிழ்ச்சூழலில் புத்தர் கற்பித்த பௌத்த அறக்கருத்துக்கள் ஒளவையின் எழுத்துக்களிலும் பின்பற்றப்பட்டிருப்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை முன் வைக்கின்றது. எவ்வுயிர்க்கும் துன்பம் தராத நினைவுகளும் சொற்களும், செயல்களும் பஞ்ச சீலங்களாகிய பொய்யாமை, களவாமை, கள்ளுண்ணாமை, காமம் கொள்ளாமை, கொலை செய்யாமை என்ற ஐந்தையும் மனதில் கொண்டு அறத்துடன் வாழ வழி வகுத்த பௌத்தக் கருத்துக்களை ஒளவையார் தன் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை எனப் பிரித்து விளக்குவதை இவ்வாய்வுக் கட்டுரை தெளிவு படுத்துகின்றது. ஒளவை தமிழ் இலக்கிய சங்கப்பாடல்களில் 59 பாடல்களைப் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் வழங்கியுள்ளார். அவற்றில் 33 புறப்பாடல்களும் 26 அகப்பாடல்களும் அடங்கும்.

         எது அறம்? எது அறமல்ல? எது நல்லது? எது கெட்டது? என்ற வாதமும் நவீனத்திறனாய்வுக்கு அடிப்படை தத்துவங்களாகக் காணப்படுகின்றன. இக்கட்டுரையில் ஆசிரியர், அயோத்திதாசர் ஒளவையை அம்பிகாதேவி எனக் குறிப்பிடுவதை விளக்கி அதற்கான சான்றுகளை முன் வைக்கின்றார். ஒளவையின் இலக்கியக் கருத்தியலை அறம் சார்ந்த சிந்தனைகளோடு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கான விடுதலை வரலாற்றின் மறு உருவாக்கக் கருத்தியலை அயோத்திதாசர் சிந்தனை வழியாக இந்திய வரலாற்றை மாற்ற, இந்தியத் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தை ஒளவையார் தமிழகமெங்கும் எடுத்துச் சென்று அறப்புரட்சியை விதைத்திருக்கின்றார். என தன் கருத்தை இவ்வாய்வுக் கட்டுரையின் வழி பதிந்திருக்கின்றார் முனைவர் அரங்க மல்லிகா.

         கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறி அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சிந்தியா லிங்கசாமி, “பழந்தமிழ்ப் பெண்களின் அரசியல் மற்றும் நிர்வாகத்திறன்” என்ற தலைப்பில் தமிழ் மண்ணிற்கும் கொரியாவிற்கும் உள்ள தொடர்பினையும் அத்தொடர்பு உருவாகக் காரணமாயிருந்த ஒரு பெண்மணியைப் பற்றியும் தனது ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். கடல் பயணம் மேற்கொண்டு ஒரு அரசியாக, நாட்டின் தலைவியாக நிர்வாகம் செய்த ஆய்வேளிர் நாட்டு தமிழ்ப்பெண் செம்பவளத்தின் நிர்வாகத் திறனை ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்திருக்கின்றது.

         பழந்தமிழ்ப் பெண்களின் வீரத்தை மீட்டெடுத்து, அவர்களின் ஆளுமைத் திறன், விவேகம், துணிச்சல், வீரம், போன்ற குணங்களை இக்கால பெண்கள் கற்றுக் கொண்டு துணிச்சலுடன் செயலாற்ற வேண்டியதை இக்கட்டுரையின் வழி கட்டுரையாசிரியர் முன் வைக்கின்றார்.

         தஞ்சையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித்துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர் வே.ரேகா, தொட்டி நாயக்கர் வாழ்க்கை முறை என்ற கட்டுரையை வழங்கினார். தனது கட்டுரையில் இவர் தொட்டி நாயக்கர்கள் எனப்படும் சேலம் அருகே சிற்றூரில் வாழும் ஒரு சமூகத்தில், பெண்களின் நிலையைப் பற்றி விவரித்து இவ்வாய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.

         இச்சமூக மகளிர் இன்றும் ரவிக்கை அணிவதில்லை. பெண்கள் ரவிக்கை அணிவது ஒரு தெய்வக்குற்றம் என்ற மூட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களாக இவர்கள் இன்றும் இருப்பதை நேரடி களப்பணி வழியாக இவர் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏனைய சமூகத்தவர்களிடையே உள்ளது போலவே பெண்களுக்கான சில உரிமைகள் தடை செய்யப்பட்டிருப்பதை இவரது ஆய்வுக் கட்டுரை வெளிச்சப்படுத்துவதாக உள்ளது. அவற்றுள் சில.

பெண்கள் சைக்கிளில் செல்லும் வழக்கம் இல்லை.
பெண் பூப்பெய்தியதும் அவளுக்கென்று தனி வீடு வைத்து அங்கு அவள் தனிமைப்படுத்தப்படுகின்றாள். மாதவிடாய் முடிந்த பின்னரே வீட்டிற்குள் வர அப்பெண் அனுமதிக்கப்படுகின்றாள்.
பூப்பெய்திய பெண் ரவிக்கை அணியத்தடை உள்ளது. இது தெய்வக் குற்றமாகின்றது.
பெண் தலையைப் பின்னி சடை போட்டுக் கொள்ளக்கூடாது. கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிற ஆடவர்கள் வீட்டிற்கு வந்தால் பெண்கள் அப்போது வீட்டினுள் நுழையக் கூடாது. அவர்கள் சென்ற பின்னரே வீட்டிற்குள் வர வேண்டும்.
பெண்கள் ரவிக்கை போடாமல் இருப்பதால் பல பொது இடங்களுக்குச் செல்லத் தயங்குகின்றனர். சேலையை சுற்றிக் கொண்டு கூனிக் குறுகி அமர்ந்திருக்கின்றனர்.

         இச்சமூகத்தில் உள்ள இவ்வகை மூட நம்பிக்கைகளினால் பெண்கள் கல்வி அறிவு இன்றியும் வெளி உலக அனுபவம் இன்றியும் முன்னேற்றம் காண முடியாது தவிப்பதை கட்டுரையாசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கியிருக்கின்றார்.

         தமிழகத்தின் பாத்திமா கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளரான சே.சலோமி இராஜரீகம் “ஜானகி ஆதிநாகப்பனின் ஆளுமைத்திறன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வழங்கியிருந்தார். பத்மஸ்ரீ ஜானகி அவர்கள் 1925ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தவர். இந்திய சுதந்திர விடுதலைக்கான போராட்டம் தலைதூக்கியிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் படையில் தன்னை இணைத்துக் கொண்டு அப்படையின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்றுக் களமிறங்கி போராடிய பெண்மணியாவார். பர்மா இந்தியா எல்லையில் நிகழ்ந்த போரில் இவர் களத்தில் இருந்து செயலாற்றினார்.

         இந்தியாவிற்கு வெளியே பத்மபூஷன் விருதுபெற்ற முதல் பெண்மணி இவர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. 1946ம் ஆண்டு மலேசிய இந்தியர் காங்கிரசை அதன் முதல் தலைவர் ஜான் திவி அவர்கள் தொடங்கிய போது அவருடன் இணைந்து செயலாற்றினார். மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகி மலேசிய இந்தியர் காங்கிரசின் மகளிர் பகுதி சார்பில் மேலவை உறுப்பினராகவும் இவர் சேவையாற்றினார் என்பதை ஆய்வாளர் தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். தமது கணவர் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனுடன் இணைந்து தமது இறுதி மூச்சு உள்ளவரை இவர் பொதுத்தொண்டாற்றினார்.

         தன் இளம் வயதில் தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜான்சிராணி படையில் துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றவர்; மன உறுதியும் மன வலிமையும் நாட்டுப்பற்றும் கொண்ட பெண்மணியாக உதாரண மகளிராகத் திகழ்ந்தார் என்பதைக் கட்டுரை ஆசிரியர் தமது கட்டுரையில் சிறப்பாக வழங்கியுள்ளார்.

ஐயை சிவசித்ரா,  “சின்னப்பிள்ளை -  தமிழக கிராமப்புறப் பெண்களின் தன்னெழுச்சி வரலாறு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வழங்கியிருந்தார். எழுதவும் வாசிக்கவும் தெரியாத ஒரு கிராமத்துப் பெண்பிள்ளை தான் சின்னப்பிள்ளை. இவர் தன் முயற்சியால் நட்ட விதை இன்று ஆலமரமாகச் செழித்து வளர்ந்து பல கிராம மகளிருக்கு உதவும் கரமாக விரிந்திருக்கின்றது. “தன்” என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி ஆறு லட்சம் உறுப்பினர்களுடன் இன்று இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் 12 மாநிலங்களில் தற்சமயம் இந்த அமைப்பு கிளைவிட்டுப் பரவி விரிந்திருக்கின்றது. இந்தக் களஞ்சியத்தின் இன்றைய சேமிப்பு 281 கோடி இந்திய ரூபாய் என்பதைக் கட்டுரை விவரிக்கின்றது.
சின்னப்பிள்ளை கள்ளந்திரி என்ற கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் திருமணம். புல்லுச்சேரி கிராமத்திற்கு வருகின்றார். சில பண்ணையார்களுக்குச் சொந்தமாக இருக்கும் விளைநிலங்களில் வேலை செய்து கூலித் தொழிலாளியாக அவர் வாழ்க்கை தொடர்கின்றது. 1990 வாக்கில் இத்தகைய கூலித்தொழிலாளிகளின் மேற்பார்வையாளராக இருந்த போதிலும் தன் சக தொழிலாளர்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படத்தொடங்கினார். அந்தச் சூழலில் அந்தக் கிராமத்திற்கு திரு.வசிமலை அவர்கள் வருகின்றார்கள். இவர் கிராமப்புற மேம்பாட்டிற்காகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர். அவரது வழிகாட்டுதலுடன் சின்னப்பிள்ளை சேமிப்புத் திட்டத்தை தொடங்குகின்றார்.

முதலில் 20 பெண்கள், மாதம் 20 ரூ முதலீட்டில் ஆரம்பித்த இந்த முயற்சி படிப்படியாக கிராமம் கிராமமாக விரிவடைந்தது. இந்த முயற்சி வெற்றியடைய முக்கியக் காரணமாக இருந்தது சின்னப்பிள்ளையின் நேர்மை, உதவும் மனம், எதிர்காலத்தைப் பற்றிய தூரநோக்குச் சிந்தனை மற்றும் இதில் உறுப்பினர்களாக தம்மை இணைத்துக் கொண்ட பெண்களின் கடும் உழைப்பும் நம்பிக்கையும் தான். இப்படி படிப்படியாக வளர்ந்து இன்று பல கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு நிழல் தரும் குடையாக இருக்கின்றது இந்த “தன்” அமைப்பு. சின்னப்பிள்ளையின் சேவையைப் பாராட்டி இந்தியப் பிரதமர் மத்திய அரசின் விருதான “ஸ்த்ரீசக்திபுஷ்கர்” விருதினை 1999ம் ஆண்டு வழங்கினார் என்பது பெருமையளிக்கும் செய்தி அல்லவா.

அடுத்து நாம் காணவிருப்பது கடந்த ஆண்டு மதத்தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் பற்றிய ஒரு கட்டுரை.

தமிழகத்தின் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் ஐயை முனைவர்.கு.உமாதேவி “கௌரி லங்கேஷின் தாய்மொழி தார்மீகம்” என்ற கட்டுரையின் வழி இந்த ஆளுமையின் தன் தாய்மொழி சார்ந்த செயல்பாடுகளை விவரிக்கின்றார்.கௌரி கர்நாடகா மாநிலத்தில் 1962ம் ஆண்டு பிறந்தவர். 1985ம் ஆண்டு முதல் 1990 வரை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் பணியாற்றியவர். நவீன கன்னட எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும் லங்கேஷ் என்ற பத்திரிக்கையைத் தொடக்கியவருமான ப்ரகதி ரங்காவின் மகள். ஆங்கிலக் கல்வியை கற்றவர். தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு லங்கேஷ் பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். ஆங்கில வழிக்கல்வி கற்றவருக்குக் கன்னட மொழி பத்திரிக்கையை நடத்துவது, அதிலும் கொள்கை மாறாத வகையில் திறம்பட நடத்துவது என்ற சவால் இருந்தது. விமர்சனங்கள் எழுந்தன. ஆகினும் தன் தாய்மொழி மீது கொண்ட தீவிர ஈடுபாட்டினாலும், சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாட்டுடனும் தனது பணியைத் தீவிரமாக முன்னெடுத்தார் கௌரி லங்கேஷ். கன்னட மொழியைக் கற்கத் தொடங்கிய இவர், தன் பத்திரிக்கை வாயிலாக 850 க்கும் மேற்பட்ட திரை-புத்தக விமர்சனங்கள், சுயவரலாறு கட்டுரைகள், விளையாட்டுத் தொடர்பான கட்டுரைகள் என எழுதியிருக்கின்றார். தாய்மொழிப் பற்று, தாய்மொழி அடையாளம், தாய்மொழி பேணுதல் என்ற வகையில் தனது கருத்துக்களை முன் வைத்து மிகத் தீவிரமாக செயலாற்றியவர் இவர்.

இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதன் பிரதிநிதியாக கௌரி மதச்சார்பற்றவராக, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக தன் செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.

தாய்மொழியில் கற்கும் போது ஏற்படும் புரிதல் ஆழமானது. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்கும் திறன் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. தாய்மொழியை மறந்தவர்களாக இருப்பது பெருமையல்ல. எனக்குத் தமிழ் தெரியாது என ஆங்கிலத்தில் சொல்லிச்சிரிக்கும் பலரை நாம் இன்று காண்கின்றோம். அது தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய ஒரு வித உளவியல் பிரச்சனையே. எந்த வயதிலும் ஒரு மொழியைக் கற்க விரும்புவோர் முயற்சி செய்தால் நிச்சயம் கற்றுக் கொள்ள முடியும். அதிலும் ஒருவர் தனது தாய்மொழியை இளம் வயதில் கற்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் மனம் தளராது முயற்சித்தால் நிச்சயம் மொழித் திறனைப் பெறலாம். தன் தாய்மொழியில் சீரிய பங்காற்றலாம் என்பதற்குக் கௌரி லங்கேஷ் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றார் என்பதை இக்கட்டுரையின் வழி ஆசிரியர் முன்வைக்கின்றார்.

அடுத்த கட்டுரை மௌனமாகப் பெண்கள் அனுபவித்து வரும் பாகுபாடு, அதனால் ஏற்படும் சமூக வலிகள் பற்றி பேசுகின்றது. ஐயை கி.உமாமகேஸ்வரி “மௌனப் பெருங்கடல்” என்ற தலைப்பில் சமூகப்பார்வையை ஆழமாகத் தன் கட்டுரையில் முன்வைக்கின்றார். பெண் சமத்துவம், பாரதி கண்ட புதுமைப்பெண் என்றெல்லாம் நாம் பேசிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் தமிழ்ச்சமூகத்தில் பெண்களைத் தொடர்ந்து வரும் சில கொடுமைகளின் சுவடுகளை ஒதுக்கித் தெள்ளிவிட்டுச் செல்ல முடியாதல்லவா?

இந்தக் காலகட்டத்திலும் விதவைகள் என அடையாளப்படுத்தப்பட்டு அவமானங்களையும் இன்னல்களையும் அனுபவிக்கும் பெண்கள் நம்மில் இருக்கவே செய்கின்றனர். அப்படி விதவை என அடையாளமிட்டு அழைக்கப்படுவோர் அனுபவிக்கும் வலிகள் பன்முகத்தன்மை கொண்டவை. தனிமை தரும் வேதனை, பொருளாதாரச் சார்பு நிலை, உலகம் என்ன சொல்லுமோ என எதிலும் பயம், பதற்றம், பாலியல் ரீதியான பிரச்சனைகள், பழமைவாத சமூகம் தரும் தாக்கம், குடும்ப சுமை என இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சமூகத்தில் மனைவியை இறந்த கணவனை சடங்கு ரீதியாக நம் சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் கணவனை இழந்து விட்டாலோ விதவை என்ற ஒரு பட்டம் தானே கிடைத்து விடுகின்றது. இந்தக் காலத்திலும் கூட மங்கல காரியங்களிலிருந்து விலக்கப்பட்டவளாக அத்தகைய பெண்கள் வாழ்கின்றார்கள். ஆதலால், நம் சமூகத்தில் “விதவை” என்ற சொல்லாடலே  புழக்கத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றார் கட்டுரை ஆசிரியர்.

         இப்படி பல்வேறு கோணங்களில் பெண்களின் சமகால சமூக, பொருளாதார சிந்தனைகளை ஆய்வுத் தகவல்களை முன் வைக்கும் வகையில் உலக ஐயை மாநாட்டில் கட்டுரைகள் படைக்கப்பட்டன. பெண் என்பவளது உலகம் ஆண் வரையறுக்கும் அல்லது சமூகம் கட்டமைக்கும் எல்லைகளுக்குள் முடங்கி விடுவதல்ல; மாறாகப் பெண் தன் ஆற்றலை வெளிப்படுத்தி திறமையுடன் செயல்பட்டால் உலகை ஆளலாம் என்ற ஊக்க மந்திரத்தை வழங்கிய நிகழ்வாக இந்த உலக ஐயை மாநாடு நடைபெற்று முடிந்தது. ஒரு பெண்ணுக்கு பலம் அவள் பெரும் கல்வியும் அவள் மன உறுதியும் தான். தெளிந்த சிந்தனையும், சீரான கருத்துக்களும், தன்னைப்பற்றிய சரியான புரிதலும் கொண்ட பெண்கள் சாதனைகளைச் செய்தோராகப் பரிமளிக்கின்றனர்.

பெண்கள் என்றால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பெண்களைப் பற்றிப் பேசினால் அது அவர்களது பலகீனத்தை முன்வைத்து எழுப்பப்படும் நிகழ்வுகளுக்கு எழும்பும் எதிர்வினைகளும் செயல்பாடுகளும் எனக் காண்பது ஒரு வித கண்ணோட்டம். இது இன்றைய அளவில் இன்னமும் தொடர்கின்ற ஒரு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால் இக்காலத் தமிழ்ப்பெண்கள் பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களாக இருக்கின்றனர். வீடு என்ற நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடுபவர்களாக இவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களல்ல. தன்னையும் வளர்த்துக் கொண்டு, தன் குடும்பத்தையும் அரவணைத்துக் கொண்டு, தன் குடும்ப பொருளாதாரத் தேவைகளையும் முன்னெடுத்துச் செயல்படுத்தும் செயல்திறன் மிக்கோராக இக்காலப் பெண்கள் வளர்ச்சி கண்டிருக்கின்றனர்.

கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாம் உலக ஐயை மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்க வந்த பெண்டிர் பலர் சமூகப் பார்வையைக் கொண்ட ஆளுமைகளாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் படைத்த கட்டுரைகள் பெண் இனத்தின் பல்வேறு கோணங்களை ஆய்வுப்பூர்வமாக அலசுவதாக அமைந்திருந்தது.

அயலகத்திலிருந்து வந்து கலந்து கொண்டு பங்களித்த ஆய்வாளர்களுடன் மலேசியாவின் கல்விக்கழகங்கள் சிலவற்றிலிருந்தும் ஆசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் திரளாகப் பங்கு கொண்டு பயன்பெற்றனர். பல நாடுகளைச் சார்ந்த மகளிர் இதுவரை வாட்சப் குழுமம் வாயிலாக மட்டுமே சந்தித்தவர்கள் நேரிலே சந்தித்து ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி மகிழ்ந்தனர்.

பெண்கள் எனப் பேசத்தொடங்கினால் பிரச்சனைகள் தானே முன் நிற்கின்றன என்ற கருத்திற்கு மாற்றாக இருந்தது இந்த ஆய்வுக் கருத்தரங்க நிகழ்வு. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஒலித்தன. ஆக்கப்பூர்வமான நட்புச் சூழல் விதைக்கப்பட்டது இந்த நிகழ்வில். இது வளர்ந்து ஆலமரமாகி விழுதுகள் விட்டு வளரும்.

இந்த அமைப்பின் அடுத்த மாநாடு ஐரோப்பாவில் நடைபெறும் என்ற நற்செய்தியும் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த அமைப்பில் இணைந்து மேலும் தம் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மகளிர், ஐயை மலர்விழி பாஸ்கரன் அவர்களை +60166236471 என்ற வாட்சப் எண் வழி தொடர்பு கொண்டு தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

மகளிர் மேன்மை காக்கும் இந்த ஐயை குழுமத்திற்கு என் நல்வாழ்த்துகள்!

Friday, March 23, 2018

இந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு

“ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து இந்துக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு”திருமதி. வலன்ரீனா இளங்கோவன்
B.A (Hons), PGD.Edu, M.A(Dist)
முதுதத்துவமாணி பட்ட ஆய்வாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.

பேராசிரியர்.மா.வேதநாதன்,
இந்துநாகரிகத்துறை, கலைப்பீடம்,
யாழ்.பல்கலைக்கழகம், இலங்கை.


அறிமுகம் :- 
ஈழத்தமிழரின் வரலாற்று அடையாளங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய இக்காலப்பகுதியில் அவர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு பற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன. ஈழத்தமிழரின் கலாச்சார மையமாகத் திகழும் யாழ்ப்பாணக் குடாநாடு நீண்டகால வரலாற்றையும், தொடர்ச்சியான பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்ட பிரதேசமாக விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் இந்துக் கோயில்களை அடிப்படையாகக் கொண்ட கலைமரபு வளர்ச்சியுற்று வந்துள்ளதை அறிய முடிகின்றது. அவ்வகையில் ஒரு காலகட்டத்தில் கோயில்களில் பக்திபூர்வமாக இறைவனுக்கு நிருத்த தானமாகப் பெண்களால் நிகழ்த்தப்பட்டு வந்த நிகழ்த்துக் கலையே சின்னமேள ஆடற்கலை மரபு ஆகும்.

சின்னமேளம் :- 
கோயில் ஆராதனை சார்ந்த நாட்டியத்தில் பெண்கள் மட்டும் ஆடும் நடனமும் கோயில்களில் தேவதாசிகளால் ஆடும் நடனமும் ‘நட்டுவமேளம்’ என்றும், ஆண்கள் மட்டும் செய்யும்முறை ‘நாட்டியமேளம்’ என்றும், ‘பெரியமேளம்’ என்பது டோல், சண்ணாய, தாளம் ஆகியவை இணைந்த இசைக்குழு என்றும், சின்னமேளம் என்பது சுருதி, முகவீணை,  மிருதங்கம், தாளம் என நிருத்தியத்தில் வாசிக்கும் “இசைக் குழுவினர் கூட்டமே” என்றும் கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் பரதக்கலைக் களஞ்சியம் எனும் ஆய்வு நூலில் குறிப்பிடுகின்றார். (ஸ்ரீராம தேசிகன், 2001:42)

‘சதிராட்டம்’ என அழைக்கப்பட்டு வந்த தாசிகளின் ஆட்டமானது சினிமாவின் தாக்கத்தால் ‘சதிர்’ ஆட்டத்தின் தன்மையற்று ஒருபுதுவித ஆடலாகத் தோன்றியமையால் மக்கள் ‘சதிர் ஆட்டம்’ என்று அழைக்காது ‘சின்னமேளம்’ என்று அழைத்திருக்கக் கூடும்.

‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் ‘சின்னமேளம்’ என்பது சதிர் ஆட்டத்திற்கு வாசிக்கப்படும் தோற்கருவி என்றும், இலங்கையில் திருவிழா போன்றவற்றில் திரைப்படப் பாடலுக்கு ஆடும் நடனம், dance performed to the tunes of film songs (as part of temple festivals)  இந்தமுறை திருவிழாவிற்கு மூன்றுசோடி சின்னமேளம் பிடித்துள்ளார்கள். பெரியமேளக் கச்சேரி முடிந்ததும் சின்னமேளக் கச்சேரி தொடங்கும்” என்றும் குறிப்பிடப்படுகின்றது. (ராமகிருஷ்ணன் 2011:590)

சின்னமேளத்தின் தோற்றம் :-
தமிழர் தம் நாட்டியக் கலையானது ஆரம்பக் காலத்தில் ‘கூத்து’ என்ற பெயருடன் விளங்கியது. இருபதாம் நூற்றாண்டு வரை சதிராட்டம், தாசியாட்டம், தேவரடியார் ஆட்டம் எனப் பெயர் பெற்று விளங்கியதாகத் தெரிகின்றது. எனினும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் முன்பின்னாக இது ‘சின்னமேளம்’ என அழைக்கப்படுவது பெருவழக்காக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் செட்டிமார்கள் கட்டிய கோயில்களில் இறைவனுக்கு ஆடற்கிரியை வழங்குவதற்காக இலங்கைக்குக் கூட்டி வரப்பட்டவர்கள் தமிழகத்து ஆடல் மங்கையர்கள். இவர்களைப் போல் இலங்கையிலும் ஆடல் மங்கையர்கள் இருந்துள்ளார்கள். இவ் ஆடல் மங்கையரின் ஆடல்களே ‘சின்னமேளம்’ என்று அழைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தகையோர் கோயில் ஆடல் மங்கையர்களாகக் கடமையாற்றிய அதேவேளையில் சிறிய நிலமானியப் பொருளாதார முறையை அடியொற்றிய பரத்தைத் தொழில் புரிந்து காதற் பரத்தைகளாக வாழ்ந்து வந்தனர் என்பதனை நட்டுவச்சுப்பையனார் எழுதிய கனகிபுராணம், நாவலர் பிரபந்தத்திரட்டு என்னும் நூல்கள் வாயிலாகவும் உறுதி செய்ய முடிகின்றது.

எனவே தாசிகள் என்ற பரத்தை தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த ஆடற்கலையே ‘சின்னமேளம்’ என்று மக்கள் அழைத்ததாக அறிய முடிகின்றது. அரசவைக் களங்களிலும், சில ஆண்டவன் சந்நிதிகளிலும் ஆடப்பட்டு கால ஓட்டத்தில் எல்லாக் கோயில்களிலும் இடம்பெறும் நிகழ்ச்சியாக வளர்ந்தது. அங்கெல்லாம் கோயில் பூசைகளில் நட்டுவ மேளத்தைக் கண்ட மக்கள், தேவதாசிகள் ஆட்டத்திற்குச்  சிறிய அளவிலான மேளம் (மிருதங்கம்) பாவிக்கப்படுவதனைக் கண்டு அதனை (சின்னமேளம்) என அழைக்க முற்பட்டு நாளடைவில் அம்மேளம் பாவிக்கும் நாட்டியக் கலையையே ‘சின்னமேளம்’ என்ற பெயர் கொண்டு அழைக்கும் மரபு தோன்றியது எனக் கலாநிதி பத்மா சுப்பிரமணியம் போன்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

எனவே ஆரம்பத்தில் சின்னமேளம் என்பது மிருதங்கத்தினைக் குறித்துப் பின்னர் இவ்வாத்தியத்துடன் ஆற்றுகையை நிகழ்த்தும் குழுவினரையே குறிப்பிட்டிருத்தல் வேண்டும். இதனால் இந்நடனத்தை ஆடும் பெண்களை ‘சின்னமேளக்காரி’ என்று அழைக்கும் மரபு யாழ்ப்பாணத்தில் பெருவழக்காக நிலவியது.

‘சின்னமேளம்’ என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் பிரபல்யம் அடைய ஏனைய பெயர்கள் பின்னடைந்தன. இப்பெயர் தமிழகத்தைவிட யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் அடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இவ் ஆடற்கலை பெருவளர்ச்சி கண்டு மிகப் பிரபல்யமடைந்தமையைப் பற்றி அறிய முடிகின்றது.

சின்னமேளத்தின் வளர்ச்சி :-
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த பிரித்தானியரர் ஆட்சியே இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதி வரை (1948) ஈழத்திலும் இந்தியாவிலும் தொடர்ந்து இருந்து வந்தது. எனவே காலவளர்ச்சிக்கு ஏற்ப யாழ்ப்பாணத் தமிழகத் தொடர்புகள் இக்காலத்தில் நெருக்கமாயின. இதனால் சமய கலை கலாச்சார ஊட்டம் மேன்மேலும் நெருக்கம் அடைந்தது. தமிழகத்து பல்துறைக் கலைஞர்கள் ஈழத்தினைத் தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இவர்கள் ஈழத்திற்கு வந்து செல்வதை புகழ் தரும் நிகழ்வாகக் கருதினர் எனத் தெரிகின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழகக் கலையலையில் ஆடல் மகளிர் பலர் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றதாகவும், சிலர் இங்கு நிலையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. ஆரம்பக்காலத்தில் யாழ்வண்ணார் பண்ணையில் (1900ஆம் ஆண்டில்) புத்துவாட்டி மடுவமே தேவதாசிகளின் முக்கிய வதிவிடமாக இருந்தாகத் தெரிகின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் “புத்துவாட்டி” குடும்பத்தினரை விட்டு  யாழ்ப்பாணத்தின் இசை, நாடக, நடன வரலாறுகளை எழுத முடியாது” என்று கூறியமை இக்கருத்தினை உறுதிசெய்கின்றது. (வலன்ரீனா 2008:17).

ஆரம்பத்தில் கோயில் கலை மரபாக சமயச் சடங்குகளுடன் ஒட்டிய கலையாக விளங்கிய இவ் ஆடற்கலை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தினைத் தொடர்ந்து நாடக மேடைகளிலும் இடம்பெறலாயிற்று. ஆடல் மகளிர் நாடகங்களில் நடிக்கவும் செய்தனர்.  இவ்வாறு நடித்தவர்களில் இராஜலக்சுமி, கன்னிகா பரமேஸ்வரி என்பவர்கள் முக்கியமானவர். 1910க்களில் புத்துவாட்டி சின்னத்தம்பி என்பவர் அங்கு ஏற்படுத்திய நாடகக் கொட்டகையில் தமிழக நாடக, ஆடற்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. புத்துவாட்டியார் மடுவத்தில் ஆரம்பத்தில் இருந்த தேவதாசிகளில் செல்லக்கண்டு, இராஜலக்சுமி, இராஜாம்பாள் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகக் கூறப்படுகின்றார்கள்.

கோவில்களில் சின்னமேள ஆடல் நிகழ்வுகள் :-
யாழ்ப்பாணத்துக் கோவில்களிலே கோயில் திருவிழாக்களின்போது, வசந்த மண்டபத்தில் முதலில் தவில் நாதஸ்வரக் கச்சேரிகள் ஆரம்பமாகும். இக்கச்சேரியானது களைகட்டி வாசிக்கப்படும்  போது, அடுத்த நிகழ்வாகச் சின்னமேளக் கச்சேரிக்கான ஆயத்தங்கள் நடைபெறும்.  அதன் முன்னோடியாகச் சின்னமேள நிகழ்ச்சிக்குரிய பக்கவாத்தியக் கலைஞர்களான மத்தளக்காரரும், ஆர்மோனியக்காரரும் தென்படுவார்கள். பார்வையாளர்கள் இவர்களைக் கண்டதும் தவில் நாதஸ்வரக் கச்சேரிகளின் ரசனையை விடுத்து சின்னமேள நிகழ்ச்சியை எதிர்பார்த்து ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிவிழுத்திக் கொண்டு சபையில் அமர்வார்கள். இதனால் தவில் கலைஞர்கள் தங்கள் கச்சேரிகளை இடையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்நிலையைப் பற்றி பல்துறைக் கலைஞரும், நாதஸ்வரக் கலைஞருமான  திரு.வி.மாசிலாமணி அவர்களின் மனைவி முத்துலட்சுமி அவர்களின் கீழ் கண்ட செவ்வி எடுத்து விளக்குகின்றது.
“சபையோரின் ஆரவாரத்தினால் களைகட்டி அற்புதமாக வாசித்துக் கொண்டிருக்கும் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மேளத்தையும் நாதஸ்வரத்தையும் கட்டிக்கொண்டு எழும்பிச்  செல்லவேண்டிய நிலை உருவாகும்.”. (வயது 89, 23.03.2017 முத்துலட்சுமி.மா, வீட்டுப்பணி – நேர்காணல்).

சின்னமேள ஆடல் நிகழ்வானது தவில், நாதஸ்வர நிகழ்வுகளையெல்லாம் பின்தள்ளி முதன்மையான இடத்தைப் பெறுவதற்கு அக்கால சமூக நிலையையும் ஒரு காரணம் என்று பல முதியவர்களின்  செவ்விகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

அதாவது, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது மிகக்குறைவு. பொது இடங்களில் அவர்களைக் காணும் வாய்ப்பு அக்கால இளைஞர்களுக்கு மிகவும் குறைவாக இருந்தமையால் அழகும் கவர்ச்சியும் மிக்க சின்னமேள ஆடல் மகளிரைக் காண்பது இளைஞர்களுக்கு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது. எனவே எல்லாத் தடைகளையும் தாண்டி வந்து இச்சின்னமேள ஆடல்களை  முண்டியடித்துக்கொண்டு வந்து இளைஞர்கள் பார்ப்பதில் வியப்பேதுமில்லை.

அன்றைய காலத்தில்  சுவாமி வீதியுலா வரும்போது ஆடல்மகளிர் சுவாமிக்கு முன்பாக நடனமாடிக்கொண்டு சென்றதாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு சுவாமிக்கு முன்பாக புனிதமாக தெய்வீக மணங்கமழ சின்னமேள ஆடல் நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் அறியமுடிகின்றது. இவ்வாறான நிகழ்ச்சிகள் சின்னமேளக்; கலைக்குரிய தெய்வீகப் பின்புலத்தை வளமூட்டுவதாக அமைகின்றது.

சின்னமேளம் ஜனரஞ்சகமடைதல்:- 
யாழ்ப்பாணத்துக் கோயில்களில் பக்தி பூர்வமாக ஆடப்பட்டு வந்த ஆடற்கலையானது வெகுவிரைவில் கோயிற்கலையாக இல்லாது வருமானம்  தேடுவதற்குரிய கலையாக மாறியது. ‘சின்னமேளம்’ என்ற நாமம் யாழ் குடிமக்கள்; ஒவ்வொருவருக்கும் மனப்பதிவு பெற்றது. கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது சமய நோக்கிலன்றிக் கேளிக்கைக்குரிய நிகழ்வாக இவ் ஆடற்கலை பெருவளர்ச்சி கண்டது. தவில் நாதஸ்வர நிகழ்ச்சிகளை எல்லாம் பின்தள்ளி முதன்மையான இடத்தைப் பெற்றது.

இந்துக்கோயில் திருவிழாக்களில் இறுதி நிகழ்ச்சியாகச் சின்னமேளம் நடைபெறும். இக்கருத்தை எடுத்துக்கூறிய முதியவர்கள் பலர் "விருந்திற்குப் பாயசம் போல ஒவ்வொரு கோயில் நிகழ்ச்சிகளிலும் சின்னமேள ஆடல் சிறப்பான நிகழ்வாக இறுதியில் இடம்பெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.(வலன்ரீனா 2008 : 18) சின்னமேளம் எந்தெந்த ஆலயங்களில் எல்லாம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதாக அறியப்படுகின்றது.

சின்னமேளக் குழுக்கள் உருவாகுதல்:-
இந்நிலைமை 1930களில் உச்சமடைந்து காணப்பட்டதாக அறியப்படுகின்றது. இந்நிகழ்வுகள் வருமானம் தேடும் ஒரு கலையாக அமைந்ததால் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வசதி படைத்தவர்களிற் சிலர் சின்னமேளக் குழுக்கள் (செற்றுக்களை) உருவாக்கினர். இவர்கள் தென் இந்தியாவில் இருந்து தரகர்கள் மூலம் தொடர்புகொண்டு ஆடல் மகளிரை வரவழைத்தனர். இவ்செற்றுக்களை வைத்திருக்கும் உரிமையாளர்களின் பெயர், ஊர் என்பன சேர்த்து அக்குழுவினர் அழைக்கப்பட்டனர். இவற்றில் புத்தூர் மார்க்கண்டு செற், கொக்குவில் சின்னத்துரை செற், நீர்வேலி வைத்திலிங்கம் செற், இணுவில் சரவணமுத்து செற், விளான் பஞ்சலிங்கம் செற், ஆவரங்கால் யூனியன் செல்லத்துரை செற், கீரிமலை பொன்னுச்சாமி செற், அளவெட்டி ஐயாத்துரைசெற், வண்ணார்பண்ணை இராமசாமி செற், வறணி சின்னத்தம்பி செற், கச்சாய் குஞ்சையா செற், நாச்சிமார் கோவிலடி வேணுகோபால் செற், சிறுவிளான் நாகலிங்கம் செற், வடலியடைப்பு பஞ்சலிங்கம் செற், சுதுமலை மணியம் செற் போன்றவை  குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அத்தோடு சில குழுக்கள் ஆடல்களை ஆடியவர்களின் பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தன. எடுத்துக்காட்டாகச்  சரசு விசாலினி செற், விஜயா செற், மல்லிகா செற், அம்பிகா செற், ஈஸ்வரி சகோதரிகள் செற், ரூசிஸ்ரேஸ் செற், லக்சுமி சகோதரிகள் செற், இராமலட்சுமி செற், முல்லை சகோதரிகள் செற், நாகேஸ்வரி செற், இந்திராசந்திரா செற் என்பன குறிப்பிடத்தக்கன. இவ்வாறான 40ற்கு மேற்பட்ட செற்றுக்கள் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம் பெற்றிருந்தன என்பது அறியப்படுகின்றது.

தமிழ்நாட்டு நடனமகளிரின் வருகை:-
யாழ்ப்பாணத்தில் பொதுவாக ஆலய உற்சவங்கள் பங்குனி மாதம் முதல் புரட்டாதி மாதம் வரையுள்ள 6 மாதங்களும் நடைபெறும். இவ் ஆறு மாதங்களுக்கும் நடன விருந்தளிப்பதற்காகத் தமிழகத்தில் இருந்து ஒப்பந்தம் பேசி நாட்டிய மகளிர் இங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள கோவில்களில் ஆடல் நிகழ்ச்சிகளை ஆற்றுகை செய்தார்கள். அவர்களுக்கு வீட்டு வசதி, உணவு வசதி, சமையற்காரர் வசதி எல்லாவற்றையும் “செற்” முதலாளி ஏற்படுத்திக் கொடுத்தார் என அறியப்படுகின்றது.

Palinda Stephen de Silva Collection-A.W.A. Plate: Sinhalese


செற்றுக்களை வைத்திருந்த முதலாளிகள் இந்நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திச் செய்வதன்மூலம் ஆடல் மகளிரின் ஒப்பந்தப் பணத்தையும் மற்றும் செலவுகளையும் நீக்கி நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொண்டார்கள் எனத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கும்பகோணம், பண்ருட்டி, எண்கண், குழிக்கலை, வேதாரணியம் முதலான இடங்களில் இருந்து ஆடல் மகளிர் இங்கு வந்ததாக அறியப்படுகின்றது. இவ்வாறு வந்தவர்களில் தாராபாய், எண்கண் ராஜலக்சுமி, அம்புஜம், செல்லக்கண்டு, கோகிலாப்பட்டு, ஆனந்தவல்லி, கமலகுமாரி, மீனாம்பாள், எண்கண்ணாள், இந்திரா சந்திரா, வேணுபத்மா, யசோதா, சிறிவாஞ்சியம் போன்றோர் பிரபல்யம் ஆனவர்கள் எனக் கூறப்படுகின்றது.

1930ஆம் ஆண்டின் பின் சின்னமேளக் கச்சேரி மேலும் பிரபல்யமடைந்ததற்கான சூழல்கள் ஏற்பட்டன. தமிழகத்தில் “தேவதாசிகள் தடைச்சட்டம்” கொண்டு வரப்பட்டது, எனவே அங்கு தேவதாசிகள்  தொழில் இழந்து வருமானம் இழந்து வாழும்நிலை ஏற்பட்டது. இந்நிலைமை அவர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி வருவதற்குக் காரணமாக  அமைந்தது.

வெளியரங்குளில் சின்னமேளம்:-
ஜனரஞ்சகக் கலையாக வளர்ச்சி கண்ட சின்னமேள ஆடற்கலை கோயில் உற்சவங்கள் திருவிழாக்களில் மட்டுமன்றி திருவிழாக்களின்போது நிறுவப்பட்ட தண்ணீர்ப்பந்தல்கள், திருமணச்சடங்குகள், பொதுநிறுவனங்களின்  விழாக்கள்,  மிருகபலி நிகழ்வுகள் போன்றவற்றிலும் இடம்பெற்று வந்ததாகவும், விழாக்களில் இவ் ஆடற்கலையின் தேவையை பூர்த்தி செய்வதற்கு  செற்றுக்களின் தொகைபோதா நிலை கூட ஏற்பட்டது எனக் கூறப்படுகின்றது.

தாக்கு திறன் மிக்க கலையாகச்  சின்னமேளம்:-
திருவிழாக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களை அழைக்கும் நிலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பலமேடைகளில் சின்னமேள நிகழ்வுகள் இடம்பெறலாயின. மேலும் சின்னமேள ஆடல்மகளிரை கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, நாவலப்பிட்டி, புத்தளம், ஹற்றன், மாத்தளை, அம்பாறை என இலங்கையின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று நிகழ்ச்சிகள் நடாத்துவது வழக்கமாக இருந்தது.

சின்னமேள ஆடற்கலை கோயில் திருவிழாக்களில் முக்கிய இடம்பெற்ற வேளையில்,  கோயில்களில் ஆடுவதற்குக் குழுக்களின் தொகை போதாத போதும், ஒரு இரவில் பல கோவில்களுக்குச் சென்று ஆடவேண்டிய நிலை ஏற்பட்ட போதும், இந்நிகழ்வுகளை இரவில் ஆற்றுகை செய்வதற்கு நேரம்போதாது இருந்தமையாலும்; பகலிலே இந்நிகழ்வுகளை நடாத்தும் நிலையும் ஏற்பட்டது. நிகழ்வுகள் இரவில்; நடைபெறும்போது மக்கள் இரவிரவாக கண்விழித்திருந்து உற்சாகமாக இந்நிகழ்வுகளைப் பார்த்தார்கள்; என்று கூறப்படுகின்றது. அத்தோடு இந்நடனத்தை ஆடும்பெண்களுக்கு பரிசுப் பொருட்களை உபயகாரரும் பொதுமக்களும் அள்ளி வழங்கியதாகக் குறிப்பிட்டார்கள். அக்கால இளைஞர்கள் இந்நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு பெற்றோருக்குத் தெரியாமல் சென்று பார்ப்பதாகவும் பல முதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இச் சம்பவங்களை ஆறுமுகநாவலரும் “பற்பல மாணவர்கள் இராத்திரியிலே திருவிழா என்றோடிச் சனக்கூட்டத்திலே நெருங்குண்டு தள்ளுண்டு அடியுண்டு நுழைந்து தாசிகளுடைய நாட்டிய கீதங்களை பார்த்துங் கேட்டுங் கெட்ட வார்த்தைகளுங் கெட்ட செய்கைகளும் பழகிக் கொண்டதும் அவர்கள் இராப்பாடமும் இழந்து இருபது இருபத்தைந்து நாளிகை வரையும் நித்திரை இழந்து.....”
எனக் கண்டித்துக் கூறியிருக்கின்றார். இவ்வாறே சின்னமேள ஆடல்நிகழ்வுகள் இளைஞர்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தமை புலனாகின்றது.


Company Painting of an Indian dancer, late 18th or early 19th century.
National Museum of Denmark (Inv.no. D.2037) c. 1770-1850

சின்னமேளத்தின் உச்சக்காலம் :-
யாழ்ப்பாணத்தில் 1930 முதல் 1960 வரை சின்னமேளத்தின் உச்சக்காலம் எனக் குறிப்பிடலாம். கோயில்களில் இவ் ஆடலை ஆடுவதற்குத் தமிழக  ஆடல் மகளிரின்   தொகை  போதாது இருந்தமையும், 1960களில் இந்தியாவில் இருந்து இங்குவந்து போவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவும் புதிய நிலை ஒன்று  தோன்றியது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் இந்துக்கோயில்களில் ஆடல்  நிகழ்வுகளை  நடாத்துவதற்கு இன, மத, பேதமின்றி பெண்களை அழைத்து ஆடல்களை ஆடப்பழக்கி கோவில்களில் ஆடுவதற்குரிய  ஒழுங்குகளைச் சின்னமேள செற் உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.

இவ்வாறு புத்தளத்தில் இருந்து கிறிஸ்தவரான றீற்றா, கொழும்பைச் சேர்ந்த சிங்களப் பெண் “நோனா”, பறங்கி இனத்தைச் சேர்ந்த “அன்ரா” போன்றோரும், புத்தளத்தைச் சேர்ந்த றலி, நல்லி, மாத்தளை சறோசா, சிலாபம் கனகா, முல்லைச் சகோதரிகள், கிளிநொச்சி சரசுவதி மட்டக்களப்பு சறோசா, கொழும்பைச் சேர்ந்த சறோ, கனகா, சசிகலா, சந்தானலக்சுமி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சின்னமேளத்துறை வறுமையில் வாடிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பணம் சேர்ப்பதற்குச் சுலபமான ஒரு வழியாக விளங்கியமையால் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரும் சின்னமேளம் ஆட ஆரம்பித்தனர். இவ்வாறானவர்களில் நாகேஸ்வரி, நாகபூசணி, சறோசா, அம்பிகா,  ராணி, மல்லிகா, அன்னம்மா, சிவகாமி, கன்னிகா பரமேஸ்வரி, நீலாம்பிகை, புஸ்பாம்பிகை, நகுலாம்பிகை, லக்சுமி, விஜயா, சுப்புலக்சுமி, விசாலினி, கானசரஸ்வதி, சீதாலக்சுமி, மகாலக்சுமி, ஜனா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இக்காலப்பகுதியில் சாஸ்திரியமாக ஆடப்பட்டு வந்த சின்னமேள ஆடற்கலையானது திசைமாறி திரைப்படங்களின் செல்வாக்கால் திரைப்படப்பாணியில் உச்சக்கட்டத்தை அடைந்தமையை நோக்க முடிந்தது. அத்தோடு சின்னமேள ஆடற்கலையானது வேறொரு பாணியில் திசை திரும்ப வழிவகுத்தது. திரைப்படப் பாடல்களுக்கு ஆடுவது அக்கால மக்களுக்கு இரசனையைக் கொடுத்ததால் இப்பாடல்களுக்கு ஆடல்களை ஆடுவதையே மக்கள் பெரிதும் விரும்பினர். இரசிகர்கள் “இன்னுமொருமுறை, இன்னுமொருமுறை” என்றும் “மேலும் ஒன்று மேலும் ஒன்று” என்று கோரிக்கை விடுப்பதும் அவர்களது கோரிக்கையை நடனமகளிர் நிறைவேற்றுவதும் அக்காலத்தில் சர்வசாதாரணமாக இருந்தது. சின்னமேளம் “நேயர் விருப்ப நிகழ்ச்சியாக” மாறியிருந்தது. இவ்வாறான நிகழ்ச்சிகள் இல்லாவிடில் திருவிழா  உயிர்ப்பற்றதாகக் காணப்பட்டது.

சின்னமேள ஆடல்களில் சாஸ்திரிய நடனங்களுடன் சாகசச் செயல்கள் செய்து ஆடுவது, மேலைத்தேச பொப்பிசைப் பாடல்களுக்கு ஆடுவது போன்ற நடனங்களும் ஆடப்பட்டதுடன் லைற் நடனங்கள், ஆடைகளைக் கழற்றி ஆடும் துகிலுரி நடனமான “காபறே” நடனங்கள் என்பவற்றையும் ஆடி ஆடல்மகளிர் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை மக்கள் விரும்பியமையாலும், ஆண்கள் இந்நடனமாடும் பெண்களுக்குப் பரிசுகளை வாரி வழங்கியமையாலும் ஆடல்மகளிரும் அவர்களது வறுமையின் காரணமாக தமது மனம்போன போக்கில் மாற்றங்களைப் புகுத்தி நெறி தவறி ஆடினார்கள் என்று அறியப்படுகின்றது.

சின்னமேள ஆடற்கலையின் வீழ்ச்சியும் பின்புலமும் :-
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து சின்னமேள ஆடற்கலை வளர்ச்சியடைந்தது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதிய மாற்றங்களைப் பெற்று ஒப்பற்ற மக்கள் கலையாக உயர்ச்சி பெற்ற காலப்பகுதியிலேயே அக்கலையின் வீழ்ச்சிக்கான காரணிகளும் எதிர்நிலையாக  வளர்ந்து வந்தன. இருபதாம் நூற்றாண்டின் முன் ஆலயக் கிரியைகளில் இணைந்திருந்த இவ் ஆடற்கலையினால் ஏற்பட்ட தீமைகள் எண்ணில் அடங்காதவை.  இத்தீமைகளைக் கண்ணுற்ற பல பெரியார்கள் இக்கலையை தீவிரமாகக் கண்டித்து ஒதுக்க  முயன்றார்கள். இவ்வாறு கண்டனங்களை மேற்கொண்டோரில் ஆறுமுகநாவலர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் தனது யாழ்ப்பாணச் சமயநிலை என்னும் நூலிலே,
“சைவசமயிகளே! உங்கள் கோயில்களில் பொதுமகளிருடைய நடன, சங்கீத, வாண விளையாட்டு முதலியவற்றை ஒழித்து விடுங்கள் நிர்வாணமாயும் காமத்தை வளர்ப்பதற்கு ஏதுவாயும் உள்ள பிரதிமைகளையும்,படங்களையும் அமைப்பியாது ஒழியுங்கள். சைவப்பிரசங்கங்கள், வேதபாராயணம், தேவார திருவாசக பாராயணம் முதலியவற்றைச் செய்யுங்கள்...” என்று கண்டித்தார்.(ஆறுமுகநாவலர் 2017 : 29)

1930ஆம் ஆண்டின் பின்னர் இக்கலையானது பணம் சம்பாதிப்பதற்கு உரிய ஒரு துறையாக மாறியமை, சமூகப் பொருளாதார  அரசியல் மாற்றங்களினால், மக்களுடைய வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், சனத்தொகை அதிகரித்தமை, திரைப்படங்கள் தோன்றிச் செல்வாக்குச் செலுத்தியமை, மேலைத்தேச கலைகளின் செல்வாக்கு போன்றவை இப்பாரம்பரியக் கலையின் அழிவிற்கு வழிவகுத்த காரணிகள் ஆயின.

மேலும் இலவசக்கல்வியின் தோற்றத்தினால் குறிப்பாக பெண்கள் கல்வியறிவு பெற்று வந்தமையால் இக்கலையை வெறுத்து ஒதுக்குகின்ற ஒரு நிலை பெண்கள் மத்தியில் தீவிரமாக ஏற்பட்டதாகத் தெரிகின்றது. தேவதாசிகள் தடைச்சட்டம், சிங்களத் தடைச்சட்டம், செந்நெறி நாட்டியக்  கலையின் பரம்பலும், வளர்ச்சியும், இன உணர்வு வளர்ச்சி, தமிழின உரிமைப் போராட்டம் போன்ற காரணிகளும் இக்கலைவடிவத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாக அமைந்தன.

ஆணாதிக்கமும் ஆடல்மகளிரின் அவலநிலையும்:-
ஆரம்பத்தில் தெய்வீகக்கலையாக ஆலயங்களில் ஆடப்பட்டு வந்த இவ்ஆடற்கலையானது  ஆண்களின் தவறான பார்வையாலும் அணுகுமுறைகளாலும் வீழ்ச்சி கண்டது. ஆடல் மகளிரின் வறுமையினையும், சமூக ஆதரவற்ற நிலையையும் சாதகமாகப் பயன்படுத்தி பாலியல் இச்சைக்கு பலிக்கடாவாக்கியதன் விளைவாக இக்கலை நலிவடையத் தொடங்கியது.

சாஸ்திரிய நிலைப்பட்ட கலைகளின் எழுச்சி அவை உயர்நிலைப்பட்ட மக்களின்  குறிப்பாக யாழ்ப்பாண உயர் வேளாளரின் ஆதரவைப் பெற்றதால் பெரும்பாலும் அடிநிலை சமூகப் பெண்களால் ஆடப்பட்ட சின்னமேள நாட்டியக்கலை ஒடுக்கப்பட்ட கலையாக கணிக்கும் மரபு உண்டானது.

ஆறுமுகநாவலர் போன்ற சமூக சமயப் பெரியார்கள், சைவசமயிகளின் சமூக அந்தஸ்தும் சமயப் புனிதமும் இழக்கப்படுவதற்கு இத்தகைய சின்னமேள ஆடலும், அதனை ஆடும் பெண்களும் காரணம் எனவும் கூறப்படுகின்றது. இதனால் சின்னமேளக்கலை அதன் ஆடுகளமான கோயில்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சின்னமேளக்கலையின் முதற்களமாக இருந்த வண்ணார்பண்ணை சிவன்கோவிலில் நாவலரின் எதிர்ப்பும் ஆரம்பமானது. காலகதியில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில், சுட்டிபுரம் அம்மன் கோவில் உள்ளிட்ட எழுபதுக்கு மேற்பட்ட ஆலயங்களிலும் சின்னமேளக்கலை தடைசெய்யப்பட்டது. இதனால் ஏதிலிகள் ஆக்கப்பட்ட சின்னமேள ஆடல்மகளிர் தமது வாழ்வுக்கான புதிய சூழலைத் தேடவேண்டிய  நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஆடல்மகளிரிற் சிலர் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளுக்கு மதம்மாறி புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்து முதலாளிமார்களில் சிலர் அவர்களை தங்கள் காதற்பரத்தையராக ஆக்கிக் கொண்டனர். பாலியல் அடிமைகளாக நடாத்தினார்கள். அதனாலும் சின்னமேளக் கலைஞர்கள் மீதான சமூகத்தின்பார்வை மாறாத தடையாகக் காணப்பட்டது. இம்மகளிர் இன்று முதியவர்கள் ஆகிவிட்ட சூழலிலும் கூட அவர்களின் மீதும் அவர்களின் தலைமுறையினர் மீதும் இப்பழி நீங்கவில்லை. ஒருகாலத்தில் உன்னத கலைஞராக விளங்கிய இவர்கள் இன்று தாம் சின்னமேளக்கலைஞர் என்று கூறமுடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமகாலத்தில் சின்னமேளம் குறித்து எழுந்த இலக்கியப் பதிவுகள் கூட இக்கலையை இழிவுபடுத்துவனவாகவே எழுந்துள்ளன.

இதற்குக் காரணம் இவற்றை எழுதியவர்களும் ஆண்களே. எடுத்துக்காட்டாக நட்டுவச் சுப்பையனார் எழுதிய “கனகிபுராணம்”; கனகி என்னும் ஆடல் மகளின் ஆடற்கலை நுட்பங்களைக் கூறாமல் அவளிடம் வந்துசென்ற உயர்வர்க்கத்தினரைப் பட்டியலிடுவதாக அமைந்துள்ளது.
“நட்டுவ னொருவனாலே நாடகசாலை வந்தாள்
செட்டியில் ஒருவன் பட்டான் சேணியர் இருவர் பட்டார்
மட்டுவில் குருக்கள் பட்டார் கொக்குவிற் சுப்பன் பட்டார்
மட்டிகள் இவரைப் போலப் பட்டவர் பலபேர் அம்மா”
என்று கூறப்படுகின்றது. (சிவலிங்கராஜா 2003:118).

இப்புராணத்தைக் கூட ஆண்கள் விட்டுவைக்கவில்லை. இப்புராணத்தின் சிலபாடல்களே இன்று எமக்குக் கிடைக்கின்றன. ஏனையவை இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக கலாநிதி.எஸ்.சிவலிங்கராஜா குறிப்பிடுவது இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. சமயப்பெரியார்களின் தூரநோக்கற்ற கண்டனங்களும் புனிதமான இக்கலைமரபு அழிந்துபோவதற்குக் காரணமாக அமைகின்றது. இக் காரணங்களால் தாங்கள் ஒரு சின்னமேளக் கலைஞர் என்று தம்மை வெளிப்படுத்தத் தயக்கம் காட்டும் நிலையையும் சின்னமேள ஆடல் மகளிரிடம் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

முடிவுரை:-
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான ஆணாதிக்க சமூகத்தின் செயல்களும், ஒடுக்கு முறைகளும், பாலியல் வன்மங்களும் புனிதமான ஒரு கோயிற்கலை மரபு அழிந்துபோவதற்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதனை அறிய முடிகின்றது. இறைவனுக்கு வழிபாடாற்றும் வழிபாட்டு முறையில் இருந்த ஓர் ஆடல்மரபு பல்வேறுபட்ட காரணங்களினால் கைவிடப்பட்டமை  உணரப்பட்டுள்ள இவ்வேளையில் இறைவனுக்கு வழிபாட்டின்போது மீண்டும் இவ் ஆடற்கிரியை நடைபெறவும், மறுமலர்ச்சி அடையவும் வழிசமைக்கப்பட வேண்டும் என்ற தேவை உணரப்படுவது காலத்தின் தேவை என்பதுடன் அது யாழ்ப்பாணத்தின் தனித்துவ மரபு என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

துணை நூல்கள்
1)     நட்டுவச் சுப்பையனார் (பதிப்பாசிரியர் வட்டுக்கோட்டை இராமலிங்கம்)., 1961, கனகி புராணம், சுதந்திரன்  அச்சகம், கொழும்பு.
2)     சிவத்தம்பி, கா., 2000, யாழ்ப்பாணம் சமூகப்பண்பாடு கருதுநிலை, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
3)     மகேஸ்வரன், வ., 2011, உருத்திர கணிகையர் கலாச்சாரத் திரட்டு, இந்துசமய  கலாச்சார அலுவல்கள் திணைக்களம்.
4)     பவித்திரா, ஏ., 2006, நடனச் சுவடுகள், உப்புக்குளம், மன்னார்.
5)     Raghavan, M.D., Tamil culture in Ceylon, Kalai Nilavan Limited, „Shantham‟, Colombo.co.(N.D)
6)     ஸ்ரீராமதேசிகன், எஸ்.என்., 2001இ பரதக்கலைக்களஞ்சியம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை.
7)     28.06.1936, தேவாலயங்களும் தேவதாசிகளும், ஈழகேசரி.
8)     பரதன்., 07.04.1946, ஆலய நடனம், ஈழகேசரி, ஞாயிறு வாரஇதழ்.
9)     வலன்ரீனா இளங்கோவன்., 2008, யாழ்ப்பாணத்து நாட்டிய மரபுகள், வெற்றிமணி வெளியீடு. ஜெர்மனி.
10)     ஆறுமுகநாவலர், 2017, யாழ்ப்பாணத்துச் சமயநிலை, நாவலர் நற்பணி மன்றம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
11)     கணேசலிங்கன், செ., 2009, நீண்டபயணம், குமரன் புத்தக இல்லம்.
12)     ஸுந்தரம். பி.எம்., 2003, மரபுதந்த மாணிக்கங்கள் டாக்டர்.வே.ராகவன், நிகழ்கலை மையம், சென்னை.
13)     சுந்தரம்பிள்ளை காரை., 1990, ஈழத்து இசைநாடக வரலாறு, கழக வெளியீடு.
14)     சிவசாமி, வி., 2005, பரதக்கலை, யாழ்ப்பாணம், இலங்கை.
15)     சிவலிங்கராஜா, எஸ்., 2003, ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை.


_____________________


Thursday, March 22, 2018

குறிப்பறிதல்

——    பழமைபேசிசிந்திலுப்பு பள்ளத்து மேவெள்ளத்துல
சிக்கிகிட்ட  அல்லாரும்
ஊரு வந்து சேந்துட்டாங்க!
அல்லாரும்
ஊரு வந்து சேந்துட்டாங்க!!
கலைஞ்சமுடி கலைஞ்சபடி
சின்னக்கனகா திரும்பத்திரும்ப
மெட்டுப்பிறழாமல்
ஓயாமற் கொள்ளாமல்
வருவோர் போவோரிடம்
சொல்லிக் கொண்டிருக்க
தாயம்மாக் கெழவி அரற்றினாள்
புள்ளமனசு ஒத்தயாடு கணக்கா அலமோதுது?
பட்டீகவண்டர் மகன் ஊடு வந்து சேந்தானா?
ஆராவது ஒரு எட்டுப் போயி
பாத்துப்போட்டு வந்து சொன்னாத்தான் என்ன??


________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)

நச்சு வட்டம்

——  ருத்ரா இ.பரமசிவன்.
எனக்குத்தெரியாது என்று
தெரியாது.
எனக்குத் தெரியாது என்று
தெரியும்.
எனக்குத் தெரியும் என்று
தெரியாது.
எனக்குத் தெரியும் என்று
தெரியும்.
அறிவின் நான்கு நிலைகள் பற்றி
அறிஞர்களின் கருத்து.
நான்காவது நிலையே
ஆன்றோர் நிலை.
முதல் நிலையே
பிள்ளைநிலை.
மனிதனின் குறுக்குவெட்டுத்தோற்றம்
மூளையைப் பற்றியது அல்ல.
உணர்வைப்பற்றியது.
கல்லும் புழுவும்
சமன்பாட்டுக்குள் வராது.
புல்லும் புழுவும்
சமன் செய்து சீர் தூக்கலாம்.
உயிர் தான் அங்கு இணைப்பிழை.
இன்னும்
மனிதர்கள்
மண்ணுக்குள்ளிருந்தும்
கல்லுக்குள்ளிருந்தும்
விழித்து எழுந்த பாடில்லை.
சதை கிழிக்கும் கோரைப்பல்லோடு தான்
அவன் தூக்கம் கலைத்தான்.
அவன் இமைகள் உயர்ந்த போது
"கல்லைக்"கொண்டு தான்
"கல்"வி கற்றான்.
வாயின் மாமிச நாற்றம் நின்றபோது
சொல்லைக்கற்றான்.
படிப்படியாய்
அவனுக்கே அவன் கடவுள் ஆனான்.
புரியாதவர்கள்
கல்லின் முன் நிற்கிறார்கள்.
புரிந்தவர்கள்
தந்திரம் செய்தார்கள்.
மனிதன் மனிதனைத் தின்ன ஆரம்பித்தான்.
நச்சு வட்டம் சுழல்கிறது.


________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)

சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்...


——    வித்யாசாகர்


மிக இனிமையான நாட்கள் அவை
காலையில் வரும் சூரியனைப்போல
அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்..

ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின்
ஒருநாள் சிட்டுக்குருவியொன்று
கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை.,

காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி
அன்றைய தினத்தின் பரிசாக
இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு..

விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில்
நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர
நான்கைந்து சிட்டுக்குருவிகள் எதிரே அமர்ந்து
முகம் பார்த்து பார்த்து தலை சாய்த்துச் சாய்த்து
கத்துவதைக் கண்டதெல்லாம் அழகைக் கண்டதன் சாட்சி அடையாளங்கள்

அந்த கிரீச் கிரீச்சென கத்தும்
சிட்டுக்குருவிகளின் மொழிக்கான அர்த்தத்தை
மௌனமாக பின்னொரு நாள்தனில் அசைபோடுகையில்
தங்கையின் இல்லாயிடம் உயிருக்குள் அப்படி வலித்ததுண்டு.

தங்கையைப்போல் சிட்டுக்குருவிகளும்
எனக்கு மறப்பதேயில்லை..

எங்கள் வீட்டு ஜூலி
வாசலிலமரும் சிட்டுக்குருவிகளுக்கு
இன்னொரு தோழி,
ஜூலி சிட்டுக்குருவிகளை விடுவதேயில்லை
ஓடியோடி அவற்றை துரத்தும்
சிட்டுக்குருவிகள் மாறி மாறி அதன் தலையில் சென்றமரும்
வவ்..வவ் எனும் ஜூலியின் கோபத்தில்
விடிகாலை மணல்வாசத்தோடு சிட்டுக்குருவிகளால் சிலிர்த்துபோகும்..

தூக்கம் விழித்து சன்னலைக் காண்கையில்
பீறிட்டுவரும் சூரிய ஒளியோடு
ரக்கை படபடக்க வந்தமரும்
ஒரு சிட்டுக்குருவியின் முகத்தில்
ஒரு உலக மொழிபேசும் இயற்கையின் சத்தியத்தை
எத்தனைப் பேர் கண்டிருப்பீர்களோ தெரியாது
எனக்குச் சிட்டுக்குருவியின் சப்தம் குவைத்திலும் ஒன்றுதான்
என் வீட்டுக் கூரைமீதும் ஒன்றுதான்

யாருக்கு எப்படியோ;
எனக்கந்த என் காதலியின் வீட்டுச் சன்னலும்,
வீட்டுவாசலில் கருப்புசாமியாய் வளர்ந்திருந்த
வேப்ப மரத்தடியும்,
உடைந்தக் கண்ணாடிச் சில்லுகளில் தெரியும்
நினைவுகளாக
அந்நாட்களின் மொத்த வாழ்வுமே
அந்தச் சிட்டுக்குருவிகளின் நினைவோடே இன்றுமிருக்கிறது

சிட்டுக்குருவியோடான நாட்கள்
உண்மையிலேயே எனக்கு
மிக இனிமையானவை...


________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)


Sunday, March 11, 2018

ஆதி மனிதர்கள் வாழ்ந்த அத்திராம்பாக்கம்
——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்

வரலாற்றிற்கு முந்தைய இந்திய தொல்லியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் (Robert Bruce Foote) அவர்களின் தொல்லியல் பயணம் 1863 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி, பல்லாவரத்தில் துவங்கியது. அன்றுதான்,  இன்றைய விமான நிலையம் உள்ள பகுதிக்கு எதிரே உள்ள கண்டோன்மென்ட் மைதானத்தின் அருகே  ஈட்டி போன்று ஒரு முனையில் மட்டும் கூறாக இருந்த கல்லாயுதம் ஒன்றை  அவர் கண்டு பிடித்தார்.  இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லாயுதம் இதுதான். தொடர்ந்து வந்த மாதங்களில் பல்லாவரம் பகுதியில் கைக்கோடரி கல்லாயுதங்கள்  இரண்டு கிடைத்தன.


அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் புவியியல் பணியைத் தொடர்ந்தபோது, அத்திராம்பாக்கதிற்கு அருகே, கொற்றலையாற்றில் கலக்கும்  ஒரு ஓடைப் படுகையில் இரண்டு பழங்கற்கால ஆயுதங்களை  ஃபுட் அவர்களின் சக பணியாளர் வில்லியம் கிங் (William King) கண்டுபிடித்தார். சில நிமிடங்களிலேயே ஃபுட்  அவர்களும் தன்  பங்கிற்கு சில  பழங்கற்கால ஆயுதங்களைக்  கண்டுபிடித்தார். இது ஒரு துவக்கம்தான். தொடர்ந்து வந்த நாட்களில் அந்தப் பகுதியில் கொற்றலை ஆற்றின் கரைகளிலும், அதற்கு வடக்கே உள்ள நாரணவீரம் ஆற்றங்கரைகளிலும் நூற்றுக்கணக்கான பழங்கற்கால ஆயுதங்களை  இருவரும் சேர்ந்து சேகரித்தனர்.

அருகேயுள்ள பகுதிகளிலிருந்து அடித்துக்கொண்டுவரப்பட்டு ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் கல்லாயுதங்கள் மட்டுமன்றி, இருந்த  இடத்திலேயே இருக்கும் கல்லாயுதங்கள் பலவும் இந்தப் பகுதிகளில் கிடைத்தன. இவை சுமார் எட்டு முதல் பத்தடி ஆழத்தில் செம்புராங்கல்லும் கூழாங்கற்களும் கலந்துள்ள படுகைகளில் காணப்படுகின்றன. இந்தக் கல்லாயுதங்கள் உருவான காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்களை  செம்புராங்கல்லில் உள்ள இரும்பு ஆக்சைட் அரித்து விட்டிருக்கும் என ஃபுட் கருதுகிறார். இவற்றிற்குக் கீழே செம்புராங்கல் படிவங்களும், இதற்கும் கீழே தாவர தொல்லுயிர் எச்சங்கள் (PLANT FOSSILS) தாங்கிய மேல் கோண்டுவானா படிவங்களும் அமைந்திருக்கின்றன. வல்லக்கோட்டை அருகே இந்த கோண்டுவானா படிவங்களில் மூன்றடி நீளமும் ஒரு அடி விட்டமும் கொண்ட கல்மரம் (FOSSILWOOD) ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப்படிவங்களில்  கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களும்  (MARINE FOSSILS) அபூர்வமாகக்  கிடைக்கின்றன. கல்லாயுதங்கள் மட்டுமன்றி, முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஈமச்சின்னங்கள் பலவும் இந்தப் பகுதிகளில் இவ்விருவராலும் கண்டறியப்பட்டன.


முழுமையாக உருப்பெற்ற கல்லாயுதங்கள் மட்டுமன்றி, அரைகுறையாய் உள்ள கல்லாயுதங்களும் அவற்றைச் செதுக்கும்போது உடைந்த சில்லுகளும் குவியல்களாக,  குப்பிடு எனும் கிராமம் அருகே  கிங் அவர்களால் 1863ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இனம் காணப்பட்டன. இதன் அடிப்படையில் இங்கே கல்லாயுதம் தயாரிக்கும் தொழிற்சாலையே ( MADRAS STONE AXE FACTORY) இருந்திருக்கலாம் என்று கிங் கருத்து வெளியிட்டார்.


இந்தப் பகுதிகளில் கிடைத்துள்ள கல்லாயுதங்கள் அனைத்துமே வன் கற்களான குவார்ட்சைட் பாறைகளால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. கல்லாயுதங்கள் செய்யப்பட்ட கற்களையும் , அல்லிக்குழி கங்லாமெரேட் கூழாங்கற்களையும் ஒப்புநோக்கிய ஃபுட், இந்தக் கல்லாயுதங்கள் செய்யப் பயன்பட்ட குவார்ட்சைட் கற்கள், அல்லிக்குழி கங்லாமெரேட் கூழாங்கற்களே என்று கருத்து தெரிவித்துள்ளார்.


அத்திராம்பாக்கதிலும் அதைச் சுற்றியும் , பழங்கற்கால கல்லாயுதங்கள் கிடைத்தப் பகுதிகளை கூகுள் பதிமத்தில் பதிவிட்டுப் பார்த்தபோது இவையனைத்தும் பழைய பாலாற்றின் கழிமுகப் பகுதியிலேயே கிடைக்கின்றன என்பது தெளிவாகிறது. வரைபடத்தில்  பழங்கற்கால ஆயுதங்கள் ( both in situ and transported)  கிடைத்த இடங்களில் சில  பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு தொல்லியல் ஆய்வுகள் நடந்த இடங்கள்  இளஞ்சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பட்டறைப்பெரும்புதூர், நெய்வேலி, வடமதுரை போன்ற இடங்கள். அத்திராம்பாக்கமும் இதில் சேரும்.

N.B.: Luminescence dating at the stratified prehistoric site of Attirampakkam, India, has shown that processes signifying the end of the Acheulian culture and the emergence of a Middle Palaeolithic culture occurred at 385 ± 64 thousand years ago (ka), much earlier than conventionally presumed for South Asia1. The Middle Palaeolithic continued at Attirampakkam until 172 ± 41 ka.
• Nature volume554, pages97–101 (01 February 2018)

________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)

Thursday, March 8, 2018

அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஆற்றிய தலைமையுரைதிருநெல்வேலி ஜில்லா 
ஆதிதிராவிடர் மகா நாடு

ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ்

தலைமைப் பிரசங்கம்


திருநெல்வேலி ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கு என்னை தலைமை வகிக்கும்படி கேட்டுக்கொண்ட வரவேற்பு கழகத்தாருக்கு நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன்.  ஓர் சமுகமோ, ஓர் தேசமோ விடுதலையடைய வேண்டுமானால் கல்வி, ஒற்றுமை, மாதர் முன்னேற்றம் இம் மூன்றும் மிகவும் அவசியமாக கவனிக்கற்பாலன. நம் நாடோ கல்வியில் மற்றெல்லா தேசங்களையும் விட மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கின்றது. அதோடு நம் நாட்டில் ஜாதி வேற்றுமை முதலிய காரணங்களால் நமக்குள்ளாக ஒருவருக்கொருவர் ஒற்றுமை கிடையாது. இத்தேசத்தில் மாதர்கள் கேவலமாக நடத்தப்படுவதைப்போல் வேறெந்த தேசத்திலும் கிடையாது. ஸ்திரீகள் பிற்போக்கான நிலைமையிலிருப்பதனால் தான் நம் நாடும் மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கிறது. மாதர்கள் எங்கு முன்னேற்றமடைகின்றார்களோ அத்தேசமே முன்னேற்றமடையும்மென்று ஓர் பெரியார் சொல்லியிருக்கிறார். ஆகவே, நாம் எல்லோரும் முன்னேற்றமடைய வேண்டுமானால் ஸ்திரீகள் முன்னேற்ற விஷயத்தில் எல்லோரும் ஏகமனதாக பாடுபடவேண்டும்.

கல்வி:
"கண்ணுடைய ரென்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்" என்றார் நம்மரபிலுதித்த திருவள்ளுவநாயனார். அதாவது முகத்தில் இரண்டு கண்களிருந்தபோதிலும் கற்றவர்களுக்கே அக்கண்கள் இரண்டும் கண்களென்றும், கல்லாத பேர்களுக்கு அவ்விரண்டு கண்களும் புண்ணுக்குச் சமானமென்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே, உலகில் ஜனித்த ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் கல்வி மிகவும் முக்கியமானது. நம்மவர்களில் அநேகர் பெண்கள் கல்வி கற்கவேண்டியது முக்கியமில்லையென்றும், ''அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்றும் சொல்லுகிறார்கள். ஏனெனில் வீட்டில் சகல காரியங்களையும் கவனிக்கவேண்டியது ஸ்திரீகளாகையாலும், குழந்தைகள் தாய்மார்களின் பராமரிப்பிலேயேயிருக்க நேரிடுவதாலும் இல்வாழ்க்கையின் பொறுப்பு பெரும்பாலும் பெண்களே கவனிக்கவேண்டியிருப்பதாலும் பெண்மணிகள் முக்கியமாக கல்வி கற்பது மிகவும் அவசியம். மற்றெல்லா தேசங்களையும் விட நம் தேசமே கல்வியில் மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கின்றது. அதிலும், நமது சமூகமோ பலவாண்டுகளாக உயர் ஜாதியாரென்போரால் புறக்கணிக்கப்பட்டு, கல்வியிலும், மற்றெல்லா விஷயத்திலும் மிகவும் பிற்போக்கான நிலைமையிலிருக்கின்றார்கள். நம் சமூகத்தில் ஆண்களே கல்வித்துறையில் மிகவும் பிற்போக்காயிருக்கிறார்களென்றால் பெண்களைக்குறித்து சொல்லுவானேன். ஆயின், இப்பொழுதோ காருண்யம் பொருந்திய அரசாங்கத்தாரால் நமக்கு கல்வியில் முன்னேற்றமடைய பல வசதிகள் செய்தளிக்கப்பட்டுள்ன. இம்மாதிரியான சந்தர்ப்பத்தை நாம் கைநழுவவிடாமல் நம் சமூகத்தார் யாவரும் கல்வியில் தேர்ந்து மற்றெல்லா சமூகத்தாரைப்போலும் முன்னேற்றமடைய வேண் டிய முயற்சிகள் செய்யவேணுமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். ஒற்றுமை:
''ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்'' என்பார்கள். அதுபோல் ஓர் குடும்பமோ, ஓர் சமூகமோ, ஓர் தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். ஆயினும், நம் தேசத்திலோ பல்வேறு ஜாதி பாகுபாடுகளினால் நம் தேசமானது இன்று இந்நிலையிலிருக்கிறது. நம் தேசத்தில் இச்சாதிப் பிரிவினை அறவே ஒழிய இன்னும் பலவாண்டுகள் செல்லுமாயினும், நம் சமூகத்தினர் நாம் முன்னேற்றமடைய வேண்டுமென்றும், எல்லா சமூகத்தினரைப்போலும் முற்போக்கடைய வேண்டுமென்பதையும், மற்றவர்களால் மிருகத்தினும் கேவலமாக நடத்தப்படுவதை விலக்கி, நாங்களும் மனிதர்கள் தான்; எல்லோரைப்போலவும் எல்லா உரிமையும் எங்களுக்குமுண்டு என்று நிரூபிப்பான் வேண்டி எல்லோரும் ஒன்றாகச் சேரவேண்டும். ''தன் கையே தனக் குதவி'' என்றவாறு நாம் யாவரும் ஒன்றுபட்டு நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையானவற்றிற்குப் பாடுபடவேண்டும். நாம் யாவரும் ஒன்றுபடுவதற்கும் நம் சமூகம் முன்னேற்றமடைவதற்கும் நமக்கு வேண்டியனவற்றை போராடி பெறுவதற்கும் நமக்குள் போதிய சங்கங்கள் ஸ்தாபிக்க வேண்டும். சங்கத்தின் மூலமாக நாம் அளப்பறிய நன்மைகள் அடையலாம். நமது சமூகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் நாம் யாவரும் ஒன்றுபட்டு நமக்குள் பிரிவினையில்லாமல் ஒற்றுமையாக யிருக்கவேண்டும்.

சங்கங்கள்:
சங்கங்கள் ஸ்தாபிப்பதன் மூலமாக நாம் எவ்வளவோ நன்மையடையலாம்.

1. நாம் அடிக்கடி ஒருவரோடொருவர் சேர்ந்து பழகுவதால் நமக்குள் பரஸ்பரம் ஒற்றுமை யேற்படும்.

2. நமக்கு வேண்டிய பள்ளிக்கூடம், கிணறு முதலிய செளகரியங்களை சாதித்துக்கொள்வதற்கு சங்கங்கள் மூலமாக மனு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

3. சங்கங்கள் மூலமாக சுற்றுப்புறங்களிலுள்ள கிராமங்களில் இராப்பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்து பகலில் வேலைகளுக்குப் போய்த் திரும்பும் சிறியோர், பெரியோர் யாவரும் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் செய்வதற்கு அநுகூலமாகயிருக்கும்.

4. நமது சமூகத்தினருக்கு மற்றவர்களால் செய்யப்படும் அட்டூழியங்களை காருண்யம் பொருந்திய அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொள்வதற்கு சங்கத்தின் மூலமாக மனு அனுப்பலாம். இன்னும் நமக்கு வேண்டியனவற்றை எல்லா செளகரியங்களையும் சங்கத்தின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள லாம்.

ஐக்கிய நாணய சங்கங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்கள்:
கூட்டுறவு சங்கங்கள் இப்பொழுது எல்லா ஊர்களிலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இம்மாதிரி சங்கங்களின் மூலமாக விவசாயிகள் தங்கள் நிலங்களை பணக்காரரிடம் அதிக வட்டிக்கு அடமானம் வைத்து நஷ்டமாகாமற்படி, ஓர் குறித்தளவு வட்டி யில்கடன் கொடுப்பதற்கு அரசாங்கத்தாரால் நிறுவப்பட்டதாகும். நம்மவர்களில் நிலங்கள் வைத்துக்கொண்டு எல்லா உயர் ஜாதி இந்துக்களைப்போலும் வரி கொடுத்துவரும் அநேகர் தங்கள் பூமிகளின்பேரில் கூட்டுறவு சங்கத்தாருக்கு மனு அனுப்பி கடன் கேட்டால் அன்னவர்களுக்கு கடன் கொடுக்க மறுக்கப்படுவதல்லாமல் உயர் ஜாதி இந்துக்களிடம் பூமியை அடமானம் செய்து ஒன்றுக்கு பத்து வட்டியாக கொடுக்கும்படியாக வற்புறுத்துவதாக சென்னையிலிருக்கும் தாழ்த்தப்பட்டார் தலைவர்களுக்கு அடிக்கடி வெளியூர்களிலிருந்து மனுக்கள் கிடைக்கின்றன. இக்கூட்டுறவு சங்கங்கள் மேல் ஜாதியாரின் பராமரிப்பிலிருப்பதால் நம்மவர்களின் மனுக்களை அவர்கள் துச்சமாக எண்ணி எறிந்துவிடுகிறார்கள். ஆகையால், நமக்கென்று தனிச்சங்கங்கள் ஏற்படுத்தி நம்மவர்கள் நஷ்டமடையாமலிருப்பதற்கு வேண்டிய ஹேதுக்களை செய்து கொடுக்குமாறு அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொள்ளுவதற்கு செய்ய வேண்டிய முயற்சிகள் யாவும் செய்ய நாம் ஒரே கட்டாக முயல வேண்டும். இம்மாதிரி தனிக்கூட்டுறவு சங்கங்கள் நமக்கு மிகவும் அவசியம்.

மாதர் முன்னேற்றம்:
''மாதர் முன்னேற்றமே தேசிய முன்னேற்றம்" என்றார் ஒரு பெரியார். மாதர்களுக்கு கல்வி எவ்வளவு அவசியமென்பதை ஒவ்வொரு ஆண் மகனும் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஓர் மாதானவள் உலகில் தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவுமிருந்து ஆடவருக்கு உதவியாயிருக்கிறாள். மாதர்கள் ஆண்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ளுகிறார்கள். ஓர் பெண்ணானவள் கற்றவளாயிருந்தால் அவள் தன் பிள்ளைகள் கல்வி விஷயத்தில் வேண்டிய சிரத்தை எடுப்பதல்லாமல், குழந்தைகள் துர்ப்பழக்கங்களுக்கு உள்ளாகி தங்களைக் கெடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பதற்கும், இல்லறத்தை சரிவர நடத்துவதற்கும், அரசியல் துறையிலும், சமூக முன்னேற்றத்திலும் தம் கணவன்மாருக்கு பக்க பலமாகயிருந்து உதவி செய்வதற்கும், ஆடவருக்கு பலவித அசந்தர்ப்பங்களால் ஏற்படும் துயரைப் போக்கி கூடுமான வரை அவர்களை சந்தோஷமாக வைக்க முயற்சி செய்யவும், நல்ல வீரர்களாகவும் புத்தியிற் சிறந்த குழந்தைகளை ஈன்றெடுத்து தேசத்திற்கு பேரும் புகழும், கீர்த்தியும் கொண்டு வருபவர்களாகவுமிருப்பதாலும், நம் நாடு தாய் நாடென்றும், நாம் பேசும் பாஷை தாய் பாஷையென்றும் கல்விக்குத் தலைவி சரஸ்வதியென்றும், செல்வத்திற்குத் தலைவி இலட்சுமியென்றும், சிறப்பாக பெண்களைக் குறித்தே சொல்லப்படுவதால் மாதர்களை கேவலம் மிருகமாக மதித்து நடந்தாமற்படிக்கு அவர்கள் முன்னேற்றமே நமது விடுதலை, நம் தேச முன்னேற்றம் என்பதை மனதிலிருத்தி ஸ்திரீகள் முன்னேற்ற விஷயத்தில் ஏகமனதாகப் பாடுபட்டு அவர்களுக்கும் தக்க கல்வியை அளிக்குமாறு மிகவும் வந்தனத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சி செய்த நன்மைகள்:
ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய விஷயங்கள், அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் திட்டங் களின் ஆரம்பத்திலேயே தீண்டப்படாதவர்களுடைய விஷயங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதைப்பார்த்த பிறகே காங்கிரஸ்காரர்கள் 1920ல் தீண்டாமை விலகினாலொழிய சுயராஜ்யம் கேட்பதில்லையென்று சொல்லி தீண்டப்படாதாரை காங்கிரஸில் வந்து சேரும்படி சூழ்ச்சி செய்தார்கள். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சட்ட மூலமாக பல உருப்படியான நன்மைகள் அதாவது கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவங்களில் நாமினேஷன் (நியமிக்கப்படல்) வசதி முதலியவைகளும், தீண்டாமை பொது வாழ்வில் பாராட்டக்கூடாதென்று தெரு, குளம், பொது சாவடி, பள்ளிக்கூடங்கள் ஆகியவைகளில் பிரவேசிப்பதற்குத் தடையில்லாதபடி சட்டங்களும் செய்த பிறகே காங்கிரஸ்காரர்கள் “ஹரிஜன சேவா சங்கம்” என்று ஒரு பெயரை உண்டாக்கிக்கொண்டு பல லட்சக்கணக்காக ரூபாய்களை வசூலித்து மேல் ஜாதிக்காரர்களே பயன் அடையும்படி செய்தார்கள். இவ்வளவுமல்லாமல் வட்டமேஜை மகா நாட்டில் காந்தியார் சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் தீண்டாமையொழிக்க முடியுமென்றும் அது வரையில் தீண்டாதாருக்கென சட்டசபை முதலிய பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள் தனித்தொகுதி மூலமோ, ஒதுக்கிவைப்பதின் மூலமோ ஏதாவது ஸ்தானங்கள் அளிக்கக் கூடாதென்றும் நமக்கு பிரதிநிதியாக சென்றிருந்த தாழ்ப்பட்டார் மாபெருந்தலைவர் அம்பேட்காரின் பிரச்சினைக்கு எதிராக வாதாடி தடைசெய்தார். 

காங்கிரஸ்காரருடைய தடையை மீறி அரசாங்கத்தாரால் நமக்கு 18 ஸ்தானங்கள் அளிக்கப்பட்டன. அதுவும் பூனா ஒப்பந்தத்தின் மூலம் பாழாக்கப்பட்டது. பூனா ஒப்பந்தம் இல்லாதிருந்திருக்குமானால் இன்று நடைபெறும் தேர்தல்களில் தகுதியுள்ளவர்களும், தங்கள் சமூக முன்னேற்றத்தை முக்கியமாகக் கருதக்கூடியவர்களும் ஆதிதிராவிடர்களுடைய பிரதிநிதிகளாக தாராளமாக வரக்கூடும். ஆனால்,  பூனா ஒப்பந்தம் மூலம் இன்று அரசியலே இன்னதென்று தெரியாதவர்களும் சமூகத்திற்கு என்ன செய்யவேண்டுமென்பதை அறியாதவர்களும்,  மேல் ஜாதிக்காரர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்களுமே பெரும்பாலும் வரமுடியும்படியாக ஏற்பட்டுவிட்டது. தேர்தல்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசிக்கக்கூடாது என்று பூனா ஒப்பந்தத்தில் விளக்கப்பட்டிருந்தும், அ து ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தும், சமீபத்திலும் காந்தியார் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் தலையிடக்கூடாதென்று கூறியிருந்தும், பிறகு காங்கிரஸ்காரர்கள் அதில் பிடிவைத்து காந்தியாருடைய அறிக் கையை மாற்றச் செய்து இப்பொழுது பூனா ஒப்பந்தத்தில் ''காந்தியின் உயிரைக் காப்பாற்ற" கையெழுத்திட்டவர்களுக்கே காங்கிரஸ்காரர் எதிர் அபேட்சகரை நிறுத்தி தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை செய்திருக்கிறார்கள் என்பதும் ஜஸ்டிஸ் கட்சியார் என்ன நன்மை செய்தார்களென்பதும் நன்றாக  விளங்கும். நிற்க.

சகோதர சகோதரிகளே !
நான் கூறின விஷயங்களை நீங்கள் பொறுமையோடிருந்து கேட்டுக்கொண்டிருந்ததோடல்லாமல், நமது சமூக முன்னேற்ற விஷயத்தில் செய்யவேண்டியவைகளைக் குறித்து சிந்தித்துப்பார்க்கும்படியாக கேட்டுக்கொள்வதோடு, மற்றுமோர் முறை என்னை இம்மகாநாட்டிற்கு தலைவியாகத் தேர்ந்தெடுத்த வரவேற்புக் கழகத்தாருக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த வந்தனத்தோடு என் உரையை முடித்துக்கொள்ளுகிறேன்.

_________________________________


திருநெல்வேலி ஜில்லா 
ஆதிதிராவிடர் மகா நாடு

ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ்
(கௌரவ நீதிபதி, சென்னை)

தலைமைப் பிரசங்கம்
31-1-1937

______________________________


துணை நின்றவை:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
http://dalitshistory.blogspot.in/2016/03/blog-post_62.html

திருநெல்வேலி ஜில்லா - ஆதிதிராவிடர் மகா நாடு, ஸ்ரீமதி மீனாம்பாள் சிவராஜ், தலைமைப் பிரசங்கம், 31.1.1937
http://www.subaonline.net/TPozhil/e-books/THF-Meenambal%20Speech-1937.pdfஉதவி: திரு. கௌதம சன்னா 
Wednesday, March 7, 2018

அல்லிக்குழி கலவைக்கல் பாறைகள் / கங்லாமெரேட் பாறைகள்——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்

தீக்குழம்பாய் சுழன்று கொண்டிருந்த புவிப்பந்து, குளிரத் தொடங்கியது.  கெட்டிப் பட்டது. பாறைகள் தோன்றின. இவையே  தீப் பாறைகள் அல்லது ‘அழற் பாறைகள்’ (IGNEOUS ROCKS). பின்னர் இந்த அழற்பாறைகள் அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் ஆட்பட்டு உருமாற்றம் அடைந்து  ‘உருமாற்றுப் பாறைகள்’ (METAMORPHIC ROCKS) உருவாகின.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களால், பூமியின் மேற்பரப்பிலுள்ள பாறைகள் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டுச் சிதைவுற்று மணலாகவும், களிமண்ணாகவும் மாற்றமடைகின்றன. குவார்ட்சைட்  போன்ற வன்பாறைகள் கற்களாக உடைந்து போகின்றன. கோணல் மாணலாகச் சிதைந்து போன குவார்ட்சைட் போன்ற வன்கற்கள் ஆறுகளில் உருட்டிக்கொண்டு வரப்படும்போது உருண்டை வடிவினைப் பெற்று வழுவழுப்பான கூழாங்கற்களாக மாறிவிடுகின்றன. ஆற்றங்கரைகளில் நாம் காணும் பெரும்பாலான கூழாங்கற்கள் குவார்ட்ஸ் அல்லது குவார்ட்சைட் கற்களாகவே இருக்கும்.

இந்த சிதைவுகள் காற்று, மழை மற்றும் ஆறுகளால் அடித்துக் கொண்டுவரப்பட்டு பெரிய ஏரி – கடல் போன்ற நீர் நிலைகளில் படிகின்றன.இந்த நிகழ்வு லட்சக்கணக்கான-கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்போது பல நூறு மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்கள் படிந்துவிடுகின்றன. இதனால் அடிப்பகுதியில் உள்ள படிவங்களில் அழுத்தமும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாகவும் இன்ன பிற புவியியல் மாற்றங்களாலும் படிவங்கள் பாறைகளாக கெட்டிப்பட்டு “படிவப் பாறைகள்” ( SEDIMENTARY ROCKS) உருவாகின்றன.

மணல் நிறைந்த படிவங்கள் மணற்பாறைகளாகவும் (SAND STONE), களிமண் நிறைந்த பகுதிகள் களிப்பாறைகளாகவும் (SHALE) உருப் பெறுகின்றன. மாறாக நிறைய கூழாங்கற்களும், மணலும், களிமண்ணும் கலந்துள்ள படிவங்கள் கெட்டிப்படும்போது ‘கலவைப் பாறைகள்’( CONGLOMERATE) உருவாகின்றன. கடலை உருண்டையில் வெல்லப்பாகில் வேர்க்கடலைப் பருப்பு பொதிந்து இருப்பதுபோல் கங்லாமெரேட்டில், அதாவது கலவைப் பாறையில் களிமண்-மணல் குழம்பில் கூழாங்கற்கள் பொதிந்து கிடக்கின்றன. 


கங்லாமெரேட் பாறைகள் பெரும்பாலும் சிறு சிறு மேடுகளாகத்தான் இருக்கும் அல்லது ஆற்றங்கரைகளில் வெளிப்பட்டிருக்கும். அவை மலைகளாக அமைந்திருப்பது அபூர்வம். ஆனால் அல்லிக்குழி குன்றுகள் அப்படியல்ல. 

அல்லிக்குழி குன்றுகள், சென்னையிலிருந்து அறுபது கி.மீ. வடமேற்கே,திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர எல்லையில் அமைந்துள்ளன. இந்த குன்றுகள் கங்லாமெரேட் பாறைகளால் உருவாகியுள்ளன. இவை கீழ் கிரிட்டேஷியஸ் காலத்தில் ( சுமார் 13 கோடி ஆண்டிகளுக்கு முன்) உருவான கோண்டுவானா பாறைகள். இந்தப் பாறைகளில் உள்ள அழகிய வழுவழுப்பான குவார்ட்சைட் கூழாங்கற்கள் குசத்தலையாறு     போன்ற ஆற்றங்கரைகளிலும் ஓடை ஓரங்களிலும் விரவிக் கிடக்கின்றன. இந்த கூழாங்கற்களைப் பற்றி இவ்வளவு பேசக் காரணம், இவற்றில் இருந்துதான் அத்திராம்பாக்கம் பகுதியில் வாழ்ந்த பழங்கற்கால மனிதர்கள் ஆயுதங்கள் தயாரித்திருக்கிறார்கள். படங்கள் உதவி: உதயன் மற்றும் இணையம்


________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)

கிரந்தம் கலந்த சொற்களைத் தமிழுக்கு மாற்றும் முறை: ஒரு வழிகாட்டி


——   இசையினியன்


மொழிகள் என்பது இடத்திற்கு இடம் மாறுபாடு அடைகின்றன. சில சொற்கள் பிற மொழியில் இருந்து ஒரு மொழிக்கு வரும் பொழுது, பிற மொழியின் உச்சரிப்பு மாறுபாடு அடையவே செய்யும். அவ்வாறே தமிழில் வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் கொண்டு வரும் பொழுது அச்சொற்கள் திரிந்து தமிழின் தன்மைக்கு ஏற்ப மாறுபாடு அடையும். இதைப் புரிந்து கொள்ள மறுப்பவர்களே கிரந்தம் என்னும் எழுத்து முறையைத் தமிழில் அறிமுகம் செய்து உள்ளனர். ஆனால் கிரந்தம் தமிழுக்குச் சிறப்பு செய்யும் என்ற நோக்கில் பார்த்தால், அந்த எழுத்துக்கள் தமிழின் தன்மையை மாற்றவே செய்து உள்ளன என்பதை உணர முடிகிறது.

இவ்வாறு மொழியின் தன்மை மாறாமல் தம் எழுத்திலும், பேச்சிலும் பயன் படுத்த வேண்டும் என்பவர்களுக்கு வட, ஆங்கில மொழி உச்சரிப்புகளை எவ்வாறு தமிழில் மாற்றி வழங்க வேண்டும் என்பது பற்றி நன்னூல் கூறுகின்றது. செய்யுள் வடிவில் உள்ள அந்த விதிகளைப் புரிந்து கொள்ள முற்பட்ட போது இந்தக் கட்டுரை உருவானது.

தமிழில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர் மெய் எழுத்துக்கள், ஒரு ஆய்தம் என 247 வரிவடிவ எழுத்துக்கள் இருக்கின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி பின்னர் தமிழில் கிரந்த எழுத்துக்கள் என்பவை சாதாரணமாக உபயோகம் செய்யப்பட்டன. ஏன் இந்தக் கிரந்த எழுத்துக்கள் அன்று முதல் இன்று வரை கோலோச்சி வருகின்றன? அவசியம் இந்தக் கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையா? என்பதை ஆராய முற்படும் போது சமற்கிருதத்தையும் தமிழின் எழுத்துக்களையும் ஆராய்ந்தே ஆக வேண்டும் எனும் கட்டாயம் ஏற்படுகிறது. சாதாரணமாக எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் உயிர் மெய். சரிதானே. முதலில் உயிரைப் பற்றிப் பார்ப்போம்.

உயிர் எழுத்துக்கள்:


இந்த அட்டவணையைக் காணும் போது ரு, ரூ, லு, லூ, அம், அஃ என்னும் எழுத்துக்கள் தமிழில் உயிர் எழுத்துக்களில் இல்லை. ஏன்? தமிழ் என்பது உயிர் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் வைத்து உள்ளது.

மெய் எழுத்துக்கள்:


மேலே காணும் அட்டவணையை உற்று நோக்கினால் நாம் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. முதலாவது இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துக்கள். ஒவ்வொரு மொழிக்கும் உள்ள சிறப்பான எழுத்துக்கள்.

சிறப்பு எழுத்துக்கள்:
இந்த சிறப்பு எழுத்துக்கள் என்றால் என்ன? ஒரு மொழியில் உள்ள எழுத்து மற்றொரு மொழியில் இருக்காது. அவையே சிறப்பு எழுத்துக்கள் எனப்படும்.ரு, ரூ, லு, லூ, அம், அஃ தமிழில் உயிர் அல்ல ஏன்?
உடலின் முயற்சி இல்லாமலே உயிர்பெறுவது உயிர் எழுத்து ஆகும். வட மொழியில் உள்ள இந்த ரு, ரூ, லு, லூ, அம், அஃ எழுத்துக்கள் மெய்யினால் உருவாக்கம் பெறுகின்றன. எனவே தமிழ் உயிர் எழுத்துக்களில் இவற்றை வைக்கவில்லை.

ஒரு உடலில் உயிர் மட்டும் போதுமா? உடல் இருந்தால்தானே அது மதிக்கப்படும். இப்போது உடல் பற்றி பார்ப்போம். அதாவது,  மெய் பற்றி பார்க்கப் போகிறோம்.

மெய் எழுத்துக்கள்:
உடலின் அவையங்கள் முயற்சியின் போது எழும் ஓசை மெய் எழுத்துக்கள் எனப்படுகின்றன. அடுத்து, ஆரிய தமிழ் சிறப்பு மெய் எழுத்துக்களைப் பார்க்கப் போகிறோம்.திரியும் சொற்கள்:
வடமொழியும் ஆங்கிலம் சார் மொழிகளும் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் பகுக்கப் படுகின்றன. ஒரு வகையில் பார்த்தால் இந்த மொழிகளின் ஒலி அமைப்பு ஒத்துப் போகின்றன. ஆனால் தமிழின் தனித்தன்மையின் காரணமாக இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் உள்ள மொழிகளின் வார்த்தையைத் தமிழில் கூற வேண்டுமானால் தமிழில் அல்லாத ஒலியமைப்புகள் தமிழின் இலக்கண வரம்புகளுக்கு ஏற்ப திரிந்த ஒலியாக மாறும்.

தமிழில் திரியும் வட வெழுத்துக்கள்:
மேற்கண்ட அட்டவணையின் படி பார்த்தால் பின்வரும் எழுத்துக்கள் தமிழில் திரிகின்றன.
இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐ ஐம்
பொது எழுத்து ஒழிந்த நால் ஏழும் திரியும்
நன்னூல் - எழுத்ததிகாரம் - பதவியல் 146; என்கிறது. சரி இந்தப் பாடலின் பொருளை உணர்வோம்.

தமிழில் திரியும் வட உயிர் எழுத்துக்கள்:
பாடலின் பொருளை உணர,

இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா அச்சு ... பொது எழுத்து 
ஒழிந்த நால் ஏழும் திரியும்

தொடர்ந்து,  தற்போது அட்டவணையைப் பார்ப்போம்.

தமிழில் திரியும் வட மெய் எழுத்துக்கள்:
அச்சு ஐவருக்கம் முதல்,
ஈறு
யவ்வாதி நான்மை 
ளவ்வாகும் 
ஐ ஐம்
பொது எழுத்து 
வடமொழியில் மெய் எழுத்துக்களை அச்சு என்கின்றனர்.


தமிழில் / ஆரியத்தில் உயிரில் உள்ள பத்து எழுத்துக்களும், தமிழில் / ஆரியத்தில் உள்ள பதினைந்து எழுத்துக்களும் இரு மொழிக்கும் பொதுவான எழுத்துக்கள். இவை அல்லாமல் ஆரியத்தில் உள்ள பிற எழுத்துக்கள் தமிழுக்கு வரும் போது திரிந்த எழுத்துக்களாக மாறும்.

வடமொழியின் மாற்றம் அடையும் எழுத்துக்கள்:
ரு, ரூ, லு, லூ, அம், அஃ, Kha, ga,Gha, Chha,Ja,Jha, tha, da, dha, ttha,ddha,dhaa, pha,ba,bha, Sa, sha(ஷ),ssa(ஸ),ha(ஹ),க்ஷ, ஷ்க, ஷ்ப ஆகிய எழுத்துக்கள் தமிழில் திரியும்.

சரி இதுவரை திரியும் எழுத்துக்கள் பற்றி பார்த்தோம். இனி அந்த எழுத்துக்கள் எவ்வாறு மாறும் எனப் பார்ப்போம்

எழுத்து திரிபுகள்:
அவற்றுள்,
ஏழாம் உயிர் இய்யும் இருவும் ஐ வருக்கத்து
இடையின் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேல் ஒன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே அகவும் ஐந்து இரு கவ்வும்
ஆ ஈறு ஐயும் ஈ ஈறு இகரமும்


இனி கிரந்த எழுத்துக்களில் ஒரு சொல்லை எழுத முற்படும் போது அவற்றைத் தமிழ் எழுத்துக்களில் மாற்றி எழுதும் முறையைக் கைக்கொண்டால், நாம் இறந்த பின்னும் தமிழ் வாழும் என்பதில் ஐயம் இல்லை. இந்த முறைகள் கிரந்த நீக்கியாக தனித்தமிழகராதிக்களஞ்சியம் மென்பொருளில் கிரந்த நீக்கி’கூறாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.


உரைநடையில் கூறினால்:
1.     பிற மொழி எழுத்து ரு(ர்); இ ஆகவும், இரு ஆகவும் மாறும்;
(எ.கா) ர்ஷபம் - இடபம்; மிர்கம் - மிருகம்

2.     க, ச, ட, த, ப எழுத்துக்களின் பிற உச்சரிப்புகள்;
Kha, ga, Gha, ha ==> க எனவும்;
Chha, Ja, Jha, sha, saa ==> ச எனவும்;
tha, da, dha ==> ட எனவும்;
ttha, ddha, dhaa ==> த எனவும்;
pha, ba, bha ==> ப எனவும் மாறும்.
(எ.கா)நKhaம் => நகம்; நாGaம் => நாகம், மேGhaம் => மேகம்.

3.     ஜ என்பது ய கரமாகும்;
(எ.கா) பங்கஜம் - பங்கயம்

4.     வார்த்தையின் முதலில் வரும் Sa தமிழில் ச ஆக மாறும்;
(எ.கா) Saங்கரன் - சங்கரன்
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் Sa தமிழில் ச அல்லது ய ஆக மாறும். (எ.கா)பாSaம் - பாசம்; தேSaம் - தேசம்

5.     வார்த்தையின் முதலில் வரும் ஷ தமிழில் ச ஆக மாறும்;
ஷண்முகம் - சண்முகம்;
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் Sa தமிழில் ட ஆக மாறும்.
விஷம் விடம்; ஷாஷி - சாசி

6.     வார்த்தையின் முதலில் வரும் ஸ தமிழில் ச ஆக மாறும்;
ஸபை - சபை;
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் ஸ தமிழில் ச அல்லது த ஆக மாறும்.
மாஸம் - மாசம்; மாதம்

7.     வார்த்தையின் முதலில் வரும் ஹ தமிழில் அ ஆக மாறும்;
ஹரன் - அரன்
வார்த்தையின் இடையில், முடிவில் வரும் ஹ தமிழில் க ஆக மாறும்.
மோஹம - மோகம்; மஹி- மகி

8.     வார்த்தையின் முதலில் வரும் க்ஷ தமிழில் க்க ஆக மாறும்;
பக்ஷம் - பக்கம்;
வார்த்தையின் இடையில் வரும் க்ஷ தமிழில் அ ஆக மாறும்;
க்ஷூரம் - கீரம்

9.     ஆகாரம் ஐகாரமாக மாறும்;
மாலா - மாலை; சபா - சபை

10.     ஈ என்பது இ ஆக மாறும்;
மக்ஷு - மகி

11.     வார்த்தையின் முதலில் வரும் ர தமிழில் அர, இர, உர ஆக மாறும்;
ரங்கன் - அரங்கன்; ராமன் - இராமன்; ரோமம் - உரோமம்.
வார்த்தையின் முதலில் வரும் ல தமிழில் இல, உல ஆக மாறும்;
லாபம் - இலாபம்; லோபம் - உலோபம்
வார்த்தையின் முதலில் வரும் ய தமிழில் இய ஆக மாறும்;
யக்கன் - இயக்கன்.

12.     ஈரெழுத்து ஓரெழுத்துப் போல் நிற்றல் = இகரம் வருதல்;
சுக்லம் - சுக்கிலம்; வக்ரம் - வக்கிரம்

13.     ஒற்றை அடுத்து மகர வகரம் நிற்றல் - உகரமாக மாறும்;
பத்மம் - பதுமம்; பக்வம் - பக்குவம்

14.     ஒற்றை அடுத்து நகரம் இருப்பின் அகரமாகத் தோன்றும்;
ரத்நம் - ரத் + அ + நம் - ரதனம் = அரதனம்

15.     ரகரத்தின் பின் உகரம் வருதல்;
அர்த்தம் - அருத்தம்

16.     பிறமொழிச் சொல் என்றமையால் திரிபும் கேடும் உண்டு;
சக்தி - சத்தி (திரிபு); ஸ்தூலம் - தூலம் (கெடுதல்)

இனி அடுத்த முறை எந்தக் கிரந்தம் கலந்த சொல்லைப் பார்த்தாலும் அதனை எவ்வாறு தமிழ் எழுத்துக்களில் மாற்றுவது என்பதைச் செய்து பாருங்கள். மொழியின் சுவை இன்னும் உங்களில் அதிகரிக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.