Showing posts with label வித்யாசாகர். Show all posts
Showing posts with label வித்யாசாகர். Show all posts

Saturday, November 27, 2021

மாறாத விடியலின் அழகும் வீசும் காற்றும்...



-- வித்யாசாகர்



விளக்குகள் அணைந்தாலென்ன
விடியல் இயல்புதானே
காத்திரு;

நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன
விட்டில் பூச்சு ஒன்று வரும்
காத்திரு;

 
கற்றது வேறானாலென்ன
அறிவு உன்னுடையது தானே
காத்திரு;

யார்விட்டுப் போனாலென்ன
உயிர் உண்டுதானே
காத்திரு;

உலகம் எப்படி இருந்தாலென்ன
நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும்
காத்திரு;

யாரால் எது செய்யமுடியா விட்டாலும்
உன்னால் எல்லாம் முடியும்
காத்திரு;

நம்பிக்கைதான் வாழ்க்கை
நம்பு, நம்பிக்கையோடு எழுந்து
இந்த உலகம் பார்

யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள்
ஏதோ போனாலும் ஏதோ வருகிறது
போனது கிடைப்பதுமில்லை
வருவது நிற்பதுமில்லை;
பிறகேன் வருத்தம் ?

எல்லாம் மாறும், நம்பியிரு
பூக்கள் நிறைந்த காடுகளில்
ஒரு மலர் உதிர்வதும்
ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில்
எல்லாம் மாறுவதும் கூட
இயற்கையின் இயல்புதானே?

பிறகு நீயென்ன? நானென்ன?
போவதை விடு
வாழ்வதை எண்ணிக் காத்திரு;

இருக்கும் காலம் அத்தனையும்
உயிர் மிக்கவை,
இந்த உலகம் உயிர்கள் வானம் பூமி மழை கடல்
காற்று சூரியன் நிலா காடு அத்தனையும் உயிர் மிக்கவை
அவையெல்லாம் உனக்காகக் காத்திருக்கிறது

நீ தான்
ஏதோ ஒன்றிற்காக மட்டுமே மயங்கி
காத்திருந்து பிரிந்து ஒடுங்கி
ஒன்றிற்காக மட்டுமே அழுது
ஒன்றிற்காக மட்டுமே சாகிறாய்
ஒன்று போனால், எல்லாம் போனதாய் முடிகிறாய்;

சற்று யோசி;
சாதல் பிழையன்று
தனித்து வலித்து சாதல்
சரியுமன்று;

வாழ்ந்து காட்டப் பிறந்தவர்கள் நாம்
வாழ்தலே விதி, வாழ்தலே வரம்;

சரி சரி; விடு
நிறைய யோசிக்காதே
நீ உயிர்த்திருக்க
உள்ளிழுக்கும் காற்று இந்தப் பிரபஞ்சம் வரை
நிறைந்தேயிருக்கிறது; போ

மிச்சமிருக்கும் நாட்களையேனும்
மகிழ்வோடு வாழ்ந்துவிடு!!




-----------------------

வித்யாசாகர், குவைத்
தொலைபேசி எண்: +965 97604989, +919840502376
இயற்கையைக் காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Friday, May 21, 2021

தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா...

 தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா...


 ——   வித்யாசாகர்





ஒவ்வொரு விதைக்குள்ளும்
ஒரு காடிருக்கும் என்பார்கள்
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே
மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,

கவலை விடு, நம்பிக்கைக் கொள்
பிணங்களுக்குப் பூச்செண்டு என்னும்
அவச்சொல் அழி, 
மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று  உணர்;
உயிர்ச்சொல் கொண்டு 
நெஞ்சுக்குள் அடைமழையெனச் சூழும்
கண்ணீரை அகற்று, மரணத்தைச் சபி;

விழும் ஒரு சொட்டுக்கண்ணீர்
கடைசி விசும்பலின் சாட்சியென்று
சபதமெடு;
கைகோர்த்து நிற்கவோ தோள்புடைத்து எழவோ
எவரையும் தேடாதே; 
உன்னால் மட்டுமே உன்னை உயிர்ப்பிக்கவியலும்;
நீ முயன்றெழுதலே
நீ பிறருக்குச் செலுத்தும் முதல் நன்றி;

நீயும் நானும் வேறல்ல
நமக்குள் உயிர் ஒன்றுதான்
அதைப் பறிக்கும் பயத்தை முதலில் அடித்துவிரட்டு
உயிர்க்குமொரு திமிரை உடம்புள் செறிந்து நிரப்பு
உன்னால் ஆனது உலகு, உன்னால்
எல்லாமாகும் நம்பு;

இப்பிரபஞ்சமெங்கும்
நிறைந்துகொள்
மரணத்திற்கு அடங்காத வாழ்வின்
கடைசிமூச்சை எடுத்துக்கொண்டு
ஒவ்வொரு அருகாமை மனிதரையும் தேடி ஓடு;
நீ பிணமல்ல என்று காட்டு;

இழுப்பதும் விடுவதும்
உன்னால் முடியும்போதே
திமிறி எழு;
ஒரு தீப்பிழம்பென மீண்டெழுந்து வா;
இந்த வாழ்க்கை
எல்லோருக்கும் பாடமாகட்டும்
வெற்று மரணமாக வேண்டாம் கேள்;

மாயும் மனிதர்களை
மருந்தும் காக்கவில்லை
மரணமும் தீண்டவில்லை; பயத்தில் மடிகிறார்கள்
பயம் ஓருயிரைக் கொல்லுமெனில்
நம்பிக்கை ஏன் ஓர் உயிரைத் தேற்றாதா?
நம்பிக்கை ஒரு உயிரைக் காக்காதா?

அவன்
அவள்
எல்லாம் சேர்ந்து தான் நாம்
அது பாசத்தால் நெய்த வலை; ஆனால்
உயிர்க்குத் தெரிந்தது ஒன்று தான்; அது நீ; 
அந்த நீ நினைத்தாலன்றி
இனி நமக்கு விடியலில்லை.

உன்னால் முடியும்
சாகமுடிபவர்களுக்கு வாழ முடியாதா என்ன?
முடியும். 
ஒரு துளி காற்று;
ஒரு துளி நம்பிக்கை; 
ஒரு துளி வேகம் மனதிற்குள் நிரப்பிக் கொண்டெழு;
துளித் துளியாய் 
நம்மை நாம் சேர்த்துச் சேர்த்து 
தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா;
வீழ்வது மரணம், அது எல்லோராலும் இயலும்
வாழ்வதே நீ; அது உன்னால் மட்டுமே முடியும்; வாழ்ந்துகாட்டு!!

---

வித்யாசாகர், குவைத்
தொலைபேசி எண்: +965 97604989, +919840502376
இயற்கையைக் காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!



Wednesday, April 29, 2020

வனப்பூறும் தமிழே உனக்கென் சரணம்



வனப்பூறும் தமிழே உனக்கென் சரணம்


 —  வித்யாசாகர்



உலகாள எழுத்தாகி எனையாளும் மொழியே
உனைப் போற்றி வினைசெய்ய வரம் தாயென்
தமிழே, மனதாலும் நினைவாலும் ஒலியாக
எழுவாய், வரியாக வடிவாக உயிர்போல அமைவாய்!

பலகாலம் கருவாக உயிராகச் சுமந்தேன், உளகாலம்
உனதாகி உன்னுள்ளே உயிர்ப்பேன், மறவாது
மருவாது வரையின்றி நிலைப்பாய், உன் மடிமீது
தமிழ்பேசி உயிர்தீர அமர்வேன்!

அணைத்தாலும் மறுத்தாலும் மூப்பில்லை
உனக்கு, மழைபோல வனம்போல இயல்பேயுன் சிறப்பு,
அரிதாகி வலிதாகி கடலோடுமிருப்பாய் மலையோடுமிருப்பாய்
பேசாதார் பேசுகையில் நீயே முதலாய் சிறப்பாய்!

அதிகாலை மழைதானே மண் வாசம்
பரப்பும், நீ முதலாகப் பிறந்தாயே மொழிவாசம்
பரப்பு, தீநாக்கு சூடின்றி ஒளியெங்கும் நிரப்பு
உனை அறியாதார் அறிகையிலே அமிழ்தம்போல் இனிப்பு!

உயிர்போல எங்கும் உணர்வோடு உள்ளாளே
நீதான், உனை மகளாக்கிக் கொஞ்சுகையில், பா
மாலைகள் குவிவது வரம்தான், அதற்காக நீயென்ன
சிறியவளா சொல் சொல்.. ?

எமைப்பெற்ற பெரும்பேறு உனதன்றோ தாயே ?
உளம்பொங்கும் மகிழ்வாலே நான் துதிப்பவளும்
நீயே, உனக்காக ஒரு புள்ளி தமிழாலே தொட்டேன்
நீயள்ளி பிரபஞ்சத்தைத் தீயாகத் தின்றாய்;

எனக்காக எனக்காக எந் தமிழாக நின்றாய்
வான்முட்ட உயர்ந்தாளே உனக்கென்
சரணம் சரணம்!! வனப்பூறும் தமிழே
உனக்கென் சரணம் சரணம்!!


தொடர்பு: வித்யாசாகர்  (vidhyasagar1976@gmail.com)




Sunday, April 12, 2020

உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்...



 —  வித்யாசாகர்


உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்...

          அன்பால், நம்பிக்கையால், நமது அறத்தின் வலிமையால், பண்பின் உயர்வு கருதி நாம்  இயற்கையால் மீண்டும்  நிச்சயமாக மன்னிக்கப் படுவோம். மீண்டும் அனைவருமாய் வென்றெழுந்து வருவோம். 

          மீண்டெழுவோமெனும் சமத்துவச் சிந்தனைகளோடு மேலும் ஆழ்மனத்திலிருந்து தூய தாயன்பு பெருக்கி, கருணையைக் கூட்டி, நட்பு வலுத்து, நானிலம் சிறக்க நாடெங்கும் நம்பிக்கையைப் பரப்புவோம், வாருங்கள்...

          இப்போதைக்கு நம்மிடமிருக்கும் பெரும்பலத்தின் மூலமே இந்த நம்பிக்கை தான். நற்சிந்தனைகள் தான். நன்னடத்தையும் நல்ல ஆரோக்கியத்திற்கான புரிதலையும், மண்ணின் மரபூரிய மருத்துவமென அனைத்தோடும் சேர்ந்து நாம் விரைவில் மீண்டெழ மிக அரியதொரு நல்ல வாழ்க்கையை நாமெல்லோரும் வாழ்வோமெனும் நம்பிக்கை தான் இப்போதைக்கு நம்மோடு பிறந்த சொத்து.

          மகிழ்ச்சி என்பது இம்மண்ணின் உயிர்க்கெல்லாம் பொது என்பதை மறந்ததொன்றே மனிதர் நாம் செய்த மாபெருங் குற்றம். அதைப் புரியும் தருணமிது. தெளியும் அறிவு பெறின்;அது நமக்குக் காலம் தரும் கொடை. இன்னொரு வாய்ப்பு என்பதை மகிழ்வோடு ஏற்போம்.

          அதை ஏற்கும் அறிவு நமக்குண்டு. நமக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றையும் எல்லோரும் உணர்கிறோம். எல்லாம் தெரிகிறது ஆனாலும் எதையும் எதற்கோ இன்னும் மறுக்கிறோம். 

          மனதை உடைத்துக்கொண்டு வந்து விழிகளில் நிறையும் அழையைப்போல, நம் மனச்செருக்கு குபீரென பீரிட்டு வெளியே வந்து விழுந்து விடுமானால் பிறகு பாருங்கள் நமக்கு மரணம் பற்றிய பயம் உடனே போய்விடும். வாழ்வதற்கு தன்னைத்தானே நாம் வீரியத்தோடு தயாராகி விடுவோம்.

          காரணம் நம்மில் பிரிவு எங்கே? நம்மில் உயர்ந்தோர் யார் தாழ்ந்தோர் யார்? பணமொன்றைத் தூக்கி ச்சீயென வெளியே வீசிவிட்டு பகட்டுத்தனமும் புகழின்றி மனதின் நிர்வாணத்தோடு கனவு  கண்டு பாருங்கள் யாதுமற்று நம்மை; நாம் அத்தனைப் பேரும் ஒன்றே, ஒன்றேயெனப் புரியும். 

          பிறகு இதில் யார் இறக்க? யார் பிழைக்க? பிழைத்தால் அத்தனைப் பேரும் பிழைப்போம். இறந்தால் அத்தனைப் பேரும் இறப்போம். நம்மில் பேதமில்லையென்று ஒன்றி எல்லோரும் நாதத்துள் நிறைக்க ஏற்போம்.

          அப்போது அந்த தானெனும் சுடுமண் வந்து வெளியே கொட்டிவிடும். உள்ளே அழகாகத் தெய்வீகம் மலர்ந்துகொள்ளும். எல்லோர்மீதும் இன்னும் அன்பு சுரக்கும். பிற உயிர்கள் தான் மொத்தத்தில் பெரிதாகத் தெரியும்.

          அப்படியொரு மனம் மலர்ந்த தெய்வீகத்தோடு தாய்மையோடு இவ்வுலகை நாம் காணவேண்டும். பேருவகையோடு மனதால் கட்டியணைத்து இந்த இயற்கை அன்னையை நாமெல்லோரும் கூட்டாகச் சேர்ந்து காக்கவேண்டும்.

          ஒரு இலை பறிக்க மனசு அஞ்ச வேண்டும். ஒரு பூ பறிக்கக்கூட உயிர் வலிக்க வேண்டும். உயிர்கள் எனில் வெட்டுவாயா? பெண்கள் எனில் கழுத்தை அறுப்பாயா? எண்ணவே நமது மனம் பதைபதைக்க வேண்டும். பதைக்கும் உயிர்களின் வலியது புரிந்தால் யாரை அடித்தாலும் நமக்கும் வலிக்கும். யாரை நொந்தாலும் நமக்கும் நோகும்.

          நோக வேண்டும். பிறருக்கு வலித்தால் நமக்கும் வலிக்குமே எனும் போலெண்ணி நாம் வாழவேண்டும். நாமும் மிருகம் தானே? ஆனால் அனைத்தையும் பகுத்தாராயக் கூடிய உயிரின் பச்சை வாசம் என்னவென்று புரிந்த மிருகமில்லையா? அது ஒவ்வொரு மனிதர்க்கும் பொருந்தவேண்டும். 

          பசித்தால் வேறென்ன செய்ய? காய் காய்த்தால் பறிப்போம், கனி கனிந்தால் பறிப்போம், வேர் இலை விதை உயிர் கிளை மரம் குருவி பறவை உயிர்கள் அனைத்தையும் பசித்தால் பறிப்போம், பறிப்போம், தின்போம். பசி யாரை விட்டது? பசித்தால் புசிப்போம் தான்; ஆனால் கூடவே அவைகளைக் காப்போம் என்பதே கவனத்தில் வலுக்கவேண்டும்.

          மரம் வளர்த்து உயிர் பெருக்கி காற்று மணக்க மணக்க இந்த மண்ணை பெரு வாஞ்சையோடு காப்போம். எல்லோரையும் எப்போதும் நாம் வாழ்விப்பவர்களாகவே பிறக்கிறோம். அதற்கே போராடிக் கொள்ளும் மகோன்னத தருணமிது.

          எனவே, போராட்டத்தை ஆயுதங்களால் அல்ல மனதால் கைக்கொண்டு எண்ணங்களால் வலிமைப் பூண்டு அன்பினால் ஒன்றிணைந்து உடலாகத் தனித்தும் உயிராகச் சேர்ந்தும் இப்பிரபஞ்சமென அறிவால் கனத்திருப்போம் உலகத்தீரே.

          நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிக்கை கொண்டே உயிர்ப்பு. நம்பிக்கையொன்றே நம்மிடம் முழுதாய் இருக்கும் எல்லாம். அத்தகைய ஆழமான நம்பிக்கை நிச்சயமாக நமைக் காக்கும். நாமிந்த பிரபஞ்சத்தைக் காக்க மட்டும் மனதளவில் தயாராவோம். 

          ஆயிரம் கரோனாவின் பிரச்சனை என்றாலும் பயமென்றாலும், அதற்கெல்லாம் அப்பாலோர் இயற்கையின் பெருஞ்சிரிப்பை நாம் இரு கண்கொண்டு காணாமல் இல்லை. இன்று இயற்கை நம் கண்ணிற்குக் காட்டும் பேரெழில் பல மனித இறப்புகளுக்கு நடுவேயும் தனித்து நின்றுகொண்டு தனக்கானதொரு நியாயத்தைப் பேசி பேசி கத்தி கதறி வெளிறிய முகத்தோடு தான் அப்பாவி மனிதர்களையும் சேர்த்தே கொன்றுகொண்டுள்ளது.

          அதன் வலியைப் புரிவோம். இயற்கை நம்மை எக்கணத்திலும் முழுதாய் கொல்லாது. புரிய வாய்ப்பு தந்து தந்தே தன்னை கோடான கோடி வருடங்களுக்கும் மேலாக நம்மோடு உயிராகவும் உடலாகவும் மரமாகவும் செடியாகவும் பூவாகவும் பறவையாகவும் கடலாகவும் மலையாகவும் வியாபித்து வைத்து நதியின் எழிலென எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

          அதன் நியாயத்தை, இயற்கையைக் காக்க வேண்டிய அவசரத்தை, அதற்கான அக்கறையை, மிகப் பெரியதாகப் புரிந்து நம் அறிவிற்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும். என்னைக் கேட்டால் இது ஒரு சபதத்திற்கான தருணம் என்றெண்ணுகிறேன். காரணம், உடல்நலமின்றி நான் மருத்துவரிடம் செல்லும் காலத்தில் 'எனக்கு ஓய்வில்லை, அதனால் உடலில் கவனம் செலுத்தவில்லை, பல வேலைகளில் இருக்கிறேன்' என்பேன், அதற்கு, மருத்துவர் கேட்பார்; உங்களைத் தூக்கி நாளை ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்பார். 

          அப்படித்தான் இந்த இயற்கை நமைத் தூக்கி இன்று ஐ.சி.யூ.வில் வைத்துவிட்டு இன்னபிற அனைத்தையும் உடனே மற, உன்னை நினை, உனது மண்ணை நினை, உனைச் சூழ்ந்த இந்த உலகை உனதென நினை, உனக்காக மட்டும் இந்த நானிலத்தை மாசுபடுத்தி ஒழித்து வெப்பத்தால் அலைக் கற்றைகளால் மின்னெந்திரங்களைக் கொண்டு எமை மாய்ப்பதை நிறுத்து என்று உயிர்க்கொன்று உயிர்க்கொன்று கத்தி கத்தி சொல்கிறது. இனியும் நாம் மாறாது போனால் இன்னும் எத்தனை கரோனா வருமோ என்று தெரியாதெனக் கொஞ்சம் மிரட்ட மட்டுமே செய்கிறது, அந்த நம் மருத்துவரைப் போல.

          அல்லாது இயற்கை நமை என்றும் காக்குமேயொழிய கொல்வதில்லை. எனவே அது புரிந்து ஒரு நல்ல சபதமெடுப்போம் "எப்போதுமே இனி மாறமாட்டேன் இயற்கையே, உனை நெஞ்சாரக் காப்பேன், எதன் பொருட்டும் உன்னை விட்டுத் தருகிலேனென" நாம் தனித்தனியே ஒவ்வொருவராய் சத்தியம் செய்து, நம் எதிர்கால பயணத்திற்காக உயர் பக்குவமடைய வேண்டிய வேளை இதுவென்று எண்ணியொரு இயற்கைக்கான தாய்மைப்பூண்ட சாத்தியத்தை ஒன்றாய் கூடி எடுப்போம்.

          இந்த உயிர்களின் மகிழ்ச்சி, பச்சை மரங்களின் ஆடல் பாடல், குருவி காக்கைகளின் கும்மாளம், வானத்தில் மிக ஒய்யாரமாகக் கேட்கும் காற்றின் ஒலி, கடலின் இசை, மழையின் ஆட்டமென இவை அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டுமாய் இனி நமது தேவைக்காகவேனும் பாதுகாக்கத் துவங்குவோம். நல்லதே எண்ணுவோம். எல்லாம் மாறும். எல்லாம் நன்றே மாறுமென்று நம்புவோம். நம்பிக்கையொன்றே வாழ்க்கை. நம்பிக்கையொன்றே எல்லாம்.

          வாழ்க மக்கள். வாழ்க உயிர்கள். ஓங்கியெழுக எனது இயற்கையின் நேசம். உள்ளார்ந்து அமர்க எம் பிற உயிர்களின் பற்று. உலகெங்கும் அமைக அமைதி நன்றே. நலமே எங்கும் விழைக நன்றே.




தொடர்பு: வித்யாசாகர்  (vidhyasagar1976@gmail.com)





Saturday, November 9, 2019

தீர்வில்லா நிறத்தினழகு; வாழ்க்கை...

தீர்வில்லா நிறத்தினழகு; வாழ்க்கை...

 —  வித்யாசாகர்


இவ்வுலகின் தெருக்களில்
சட்டைக் கிழித்துத் திரியும் மனிதர்கள்
மனதால் மிக ஏராளம்,
அவர்கள் மௌனத்தின் அரிதாரம்;

சிரிக்கும் முகத்துள்ளிருந்து
மௌனமாக வடியும் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கமுடிந்தோர் எண்ணற்றோர்,
அணைத்தோர் நகைத்தோரினும் குறைவு;

வாழ்வின் யதார்த்தங்கள்
கண்டு முறைப்பதும் காரி உமிழ்வதும்
கடைநிலை மனிதர்க்கும் சமம்தான்,
மேல்நிலை முதலாளிக்கும் சமம்தான்;

கல்லறை அறியும் வலிகளும்
வலி மூடிய கல்லறைகளுமாகத்தான்
மனிதர்களின் வாழ்க்கை முடிகிறது,
இருந்தும் பயணிக்கிறோம்? உயிர்த்திருக்கிறோம்;

யாரோ அடிக்கையில் 'வேறேதோ
கிடைக்காமையினால்' எல்லோராலும்
ஒரு குழந்தையைப்போல் அழமுடிவதில்லை,
அழாமலும் யாருமிங்கு சிரிப்பதில்லை;

கதவுகள் ஒரு பொழுதில் அதுவாகத்தான் திறக்கிறது
அதுவாகவே மூடிக்கொள்கிறது,
திறப்பது எதனாலாயிருந்தாலும்
மூடுபவர்கள் நாமாகவே இருக்கிறோம்;

ஏதோ சந்து முனையில் நின்று
நீள் வட்டமாய் சிறுநீர் கழிக்கும் சிறுவனைப்போல
மனது வட்டமாய் நீளமாய் நீள,
அதீத கனவுகளோடு முடிகிறது வாழ்தலென்பது;

முடியட்டும்.., அதனாலென்ன
வாழ்தலின் இடைப்பட்ட நாட்களிலிருந்து
ஏதேனும் ஒன்றேனும் நாளை நம்
வரலாறாக எழுதப்பட்டு விடாதா என்ன?

வேறென்ன, வலியும் கண்ணீரும்
வென்றதும் தோற்றதும்
உண்மையும் பொய்யுமான
வாழ்தலும் சாதலுமுமே யில்லையா, வரலாறென்பதும் (?)!!



தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)




Monday, November 4, 2019

எங்கள் கனவு

—  வித்யாசாகர்


எங்கள் கனவுகளுக்குச் சிறகுகள் முளைப்பதில்லை
வானில் பறப்பவையோ
வண்ணங்களால் ஆனதுவோ
இல்லையெங்கள் கனவுகள்;

உறக்கத்தில் வருவதோ
வண்ணந் தீட்டிய அழகோகூட இல்லையெங்கள்
கனவிற்கு, எங்களின் கனவுகளெல்லாம்
நிர்வாணம் இழக்காதவை;
 
நினைவில் ததும்பும் எண்ணக் குழந்தைகள்
போலே; எண்ணியதை எண்ணியாங்கு
செய்யவிழையும் சிந்தனையின் சிலிர்ப்புகள்
அருஞ்செயல்களின் முதலெழுத்துகள் அவை;

எளியோர்க்குத் திறக்காத கதவும், எதிர்வீட்டில்
மூடாத கூரையும், இன்னும்
கிழிசல் மூட்டாத கால்சட்டையையும் மாற்றும்
கனமான கனவுகள் அவை;

ஒரு செங்கோல் கேட்டு அதை அறத்தொடு
போற்றும் கனவும், பசுந்தோட்கள் அன்றி
பணிவிடைச்செய்யும் அரசுமாய் நாடிய
வாழ்வியல் கனவு அது;

பெண் ஆண் ஏற்றயிறக்கமின்றி, பாசமிகு உறவும்
பழி வீண் வஞ்சமெழாது மக்கள்
பண்பிலும் அன்பிலும் நெருங்கி இரத்தக்கோடுகள் அழித்து
ஒரு கூட்டிற்குள் அடங்கும் உயரிய கனவு அது;

இரவில் நம்பிக்கையை உடுத்திக்கொண்டு
பகலில் சாதிகளை சோற்றுக் கல்லென அகற்றி
மனிதத்துள் மறுநாட்களைத் தரிசிக்கும்
எளியோரின் 'இன்பக் கனவு' எங்கள் கனவு;

உலகை ஒரு சிறு புள்ளியெனவும்
மனதிற்குள் இவ்வுலக நேயர்களைத் தேடும்
அறிவோடும், பிறப்பை அறங்கொண்டு சலிக்கும்
புனிதர்களின் கனவு எங்கள் கனவு;

பணத்தால் உறவு கிழிவதையும்
பொருட்களால் மட்டுமே ஆன உலகை
அன்பிட்டுத் தைக்கவும், ஒரு ஊசி வேண்டும் என்றனர்
பலநாள் கனவு கண்டோர்;

ஊசி என்னவோ
வள்ளுவத்துள் விழுந்துகிடக்கிறது
வாருங்கள், ஊசியை எடுக்க வள்ளுவத்தைப் படிப்போம்
வள்ளுவத்தின் வழியே தமிழமுது குடிப்போம்;

தமிழமுதின் தனிச்சுவையில் இனி
அறத்தின் கதவுகள் அதவாகத் திறந்துகொள்ளும்,
எங்களின் கனவுகளுக்கும் இனி
சிறகுகள் முளைக்கும்; வண்ணங்கள் தீட்டப்படும்!!






தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)






Saturday, May 18, 2019

த்தூ...

 —  வித்யாசாகர்


பனையோலை காலத்தைத்
தமிழாலே நெய்தோரே,
ஒரு பிடி தமிழள்ளி
உயிர்வரைக் குடித்தோரே;

பசுமாட்டு சாணந் தட்டி
பசி நெருப்பைத் தணித்தோரே,
சுரைக்காயில் சட்டிசெய்து
சம தர்மத்தை அளந்தோரே;

மரத்திலும் நதியிலும்
இறையச்சம் கண்டோரே,
கும்பிட்ட படையலையும்
நான்கு காகத்தோடு தின்றோரே;

உண்மைக்கும் வீரத்திற்கும் உயிரை
நன்றியோடு தந்தோரே,
அன்பென்றும் காதலென்றும் சொல்லி
அறத்தால் உயர்ந்தோரே;

எங்கே தொலைத்தீர்
யாரிடம் விற்றீரையா உம்மை ?
எங்கே காற்றில் போனதோ உங்கள்
மாண்பும் அறிவும் அறமும் ?

இருப்பது ஓருடல் ஓருயிர்
அதைச் சாதியால் பிரிப்பீரோ ?
மதத்தால் பிரிந்து
பின் மனிதத்தைக் கொல்வீரோ?

மானுடம் வெறுக்குதய்யா..
மனசு வலிக்குதய்யா..
ஐயோ; நெஞ்சு பதைக்குதய்யா
நித்தம் மரணம் மரணம் உயிர்கள் துடிக்குதய்யா..

எக்குலம் உன் குலம்
இன்று இரத்தக் குளம் ஆகலாமா?
எம் மொழி எவ்வினம் நீ
சாதி பார்த்துச் சாகலாமா?

ஓங்கி ஓங்கி வெட்டுகிறாய்
நீ கால காலத்தின் நீதிக்கு முப்பாட்டன் அறிவாயோ?
நீண்டு நீண்டு முடியா வரலாறு
அதை நீ ஒற்றைச் சாதிக்குள் அடைப்பாயோ?

அடித்தாலே வலிக்கிறதே; நீ அறுக்கிறாயே?
பொறுக்குமா நெஞ்சம்??
உயிரோடு புதைக்கிறாயே எரிக்கிறாயே
சகிக்குமா தாய்மை யுள்ளம் ??

ஆணென்றும் பாராமல்
பெண்ணென்றும் கூசாமல்,
குழந்தை கிழத்தைக் கூட
கொள்ளுதையா உன் சாதி;

மனிதத்தையும் மதிக்காமல்
சமயத்தையும் நினைக்காமல்
கடவுளின் பேர் சொல்லிக்
கொன்று குவிக்குதையா உம் மதம்;

சுட்டுச் சுட்டு வீழ்த்துவாய்
எல்லாம் வீழ்ந்தபின் நாளை
சுடுகாட்டில் அமர்ந்து அழுதால் -
அடங்கிவிடுமா உனது சாதி வெறி ? மத வெறி?

இருப்பவர் சிரிப்பவர் போனபின்
எஞ்சிய பிணக்காட்டில் நாளை
யாரைக்கண்டு அணைப்பாய்
எதன் வழி நாளை பிறப்பாய் ?

காறியுமிழ்கிறது உன் பிறப்பு
உன் பிணத்தின் மீதும் முகத்தின் மீதும்

த்தூ..!!!

தூக்கிக்கொண்டு ஓடு உன் கோபத்தை
நீயில்லா தெருக்களில் மீண்டும் பிறக்கட்டும்
சாதியின்றி மதமின்றி அந்த
பனையோலைக் காலத்தைத் தமிழாலே நெய்தவர்கள்!!



தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)




Saturday, March 23, 2019

கனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்...



 —  வித்யாசாகர்



தட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும்
முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும்,
எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும்
திமிராட்டம் ஒடுங்கட்டும் 'எம் தமிழருக்கு இனி விடியட்டும்!

திக்கெட்டும் நாடட்டும் தமிழர் கூடிகூடி வெல்லட்டும்
எந்நாடு எம்மக்கள் எல்லாம் ஈரேழுலகமும் பாடட்டும்,
கடுங்கோபம் பொங்கட்டும் கனல் கொட்டி ஆடட்டும்
சிந்திய துளி இரத்தத்திற்கெல்லாம் நீதி கிட்டும் வரை இனி போராட்டம்!!

வெண்சங்கு முழங்கட்டும்
தமிழா விழி விழியென யெம் பறை ஒலிக்கட்டும்,
நீதி கேட்டு சொற்கள் அறையட்டும்
நெற்றிப் பொட்டிலும் நேர்மையே தெறிக்கட்டும்!

எத்தனை மார்புகள் வேண்டும் விரியட்டும் விரியட்டும்
அவர்கள் சுடட்டும், நெஞ்சு நிமிர்த்தி நில் தாங்கட்டும்,
ஒரு தமிழச்சி, தமிழ்மண் காக்க
எம்முயிர் வேண்டுமோ; கொண்டு மூடட்டும்!

சடுசடுவென சுட்ட கூட்டம்; இனி எம் மண்ணில்
தலை காட்டாமல் நில்லட்டும்! குத்தி குத்தி
உயிர்க்கொன்ற கொண்டாட்டம் இனி
இறுதியென்றுச் சொல்ல எம் இளைஞர் கூட்டம் வெகுண்டெழட்டும்!

நடுநடுங்க ஓடட்டும் சதி தீர தூர ஒழியட்டும்
சட்டங்கள் திருந்தட்டும் திருத்தங்கள் வெல்லட்டும்,
திபுதிபுவெனக் கொன்ற வெறியாட்டம் இனி
அடியடியென அடிக்க ஓயட்டும்!

மூடுங்கள் மனக்கதவுகளை இனி
அறிவு கொஞ்சம் விழிக்கட்டும்,
மூடாத தொழிற்கழிவுகள் ஒழியட்டும், பிறர்
தந்திரங்கள் மொத்தமும் தோற்கட்டும்!

மண் மெல்லச் சுவாசிக்கட்டும்
வசந்தம் மீண்டுமெமெக்கு வரட்டும்,
நாடு நாடு அது  நமக்காகட்டும், வீடு அரசியல் லட்சியமெல்லாம்
எம் விடுதலை விடுதலையொன்றே மூச்சாகட்டும்!!





தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)







Saturday, January 19, 2019

தமிழ் ஆள; தமிழ் பேசு...

—  வித்யாசாகர்


          ஜென்மராஜ், ப்ரஷாத், ஹரிஷ், ஹிருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இவையெல்லாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு.



          என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் பொருத்து மொழியும் பல மாறுதலுக்கிணங்க தானே திரிந்தும் கலந்தும் விடுகிறது. எனவே எதையும் முற்றிலும் தமிழில்லை என்று அகற்றிவிடலாமா? அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா? எல்லாம் தமிழ்தான் ஆயினும் கலப்புத்தமிழ் இல்லையா என்று வருந்தியே நகர்வதா???

          இவையெல்லாம் சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் பிற மொழிச் சொற்கள் அல்லது பிற மொழிக் கலாச்சாரத்தால் வந்த சேர்ப்புகள் இல்லையா ? என்றாலும், அனைத்து மொழிக்குமே தாய் ‘நம் ஆதி மொழி’ தமிழ் தான் என்பதிலும் எண்ணற்றோருக்கு உலகளவில் மாற்றுக் கருத்தில்லையே.



          எனவே இவையெல்லாம் தமிழுக்கு பிறமொழிகளிடமிருந்து வந்துள்ளது என்பதை விட, தமிழிலிருந்து தான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதை உலகமே இதோ மெல்ல மெல்ல ஏற்று வருகிறது. இவ்வருட கனடா ஜப்பான் லண்டன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் என உலகளாவிய பல பொங்கல் தினக் கொண்டாட்டங்களும் அதற்கொரு சான்று.

          என்றாலும் குழந்தைகளுக்கு பெயரிடுகையில், விளக்கமளிக்க அவசியமற்றவாறு தனித்தமிழில் மிக அழகாக எவ்வித சார்புமற்று வைக்கலாம். வெண்ணிலா, அறிவு, செல்வன், மதிநிறை, குறள், அருவி, மல்லி.. என்றெல்லாம்.

          வெள்ளைக்காரர்கள் இப்படித்தான் அவர்கள் மொழிக்கு நிறைவாக, ஸ்டவ், ஸ்ட்ரீட், ட்ரீ, ஸ்டீல், கேவ், மூன், கேட், ஃபிஷ், ஜாஸ்மின், காட் என்றெல்லாம் வைக்கிறார்கள்.

          நாம் கூட முன்பு இப்படியெல்லாம் வைத்திருந்தோம்; சிவப்பு, செவலை, கருப்பு, தேனு, அடுப்பு, பறி, சூரியன், சந்திரன் என்றெல்லாம் நிறைவாக நம் சொல்லினிக்க மொழியினிக்க வைத்திருந்தோம்.

          ஏனென்றால்  பெயர் என்பது ஒருவரை அழைக்க, குறிப்பிட என்றாலும் வாழ்நாள் முழுவதும் வெற்றி வெற்றி என்று அழைப்பதொரு போற்றுதலும் இல்லையா? தாத்தா போல வரவேண்டும், பாட்டி போல இருக்க வேண்டும், சூரியனைப்பொல ஒளிர வேண்டும், அருவி போல நிறைய வேண்டும் எனப் பலவாறு எண்ணற்ற மேற்கோள்கள், எதிர்பார்ப்புகள், நன்னெறி கொண்ட சிந்தனைகள், மொழிச் சீர் கொண்ட சொற்கள், பலவகைகள், தவிர நேர்மறை எண்ணங்கள் புக, வர, வளர என பல ஆழப் பார்வை பெயர் வைக்கையில் உளம்நிறைவதுண்டு.

          இடையே கூட ஒரு குழந்தைக்கு ‘மதிநிறைச் செல்வன்’ என்று வைத்தோம், அவர்கள் வீட்டில் மதி என்றழைக்கிறார்கள், அழைக்க ஏதுவாக இருக்குமென்று.

          அப்படி மதி, குயில், அகில், முகில், குறள், வெள்ளி, வாணி, அருள், மணி, சுடர், பாரி, ஓரி, நீதி, கொடை, தனம், அன்பு, நதி, மணி, முத்து, மரகதம், பவளம், குழலி, எழிலி, குறளி, வெண்பா என எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் பெயர்கள் மிகச் சிறப்பாக நம்மிடையே உண்டு அவற்றையெல்லாம் நாம் பார்த்து பார்த்து வைத்துப் பழக பழக மேலுள்ள கலப்புவகைப் பெயர்களின் மீதான ஆசை தானே ஒழியும். பின் பழக்கமும் அங்ஙனம் மெல்ல மாறிவிடும்.

          பிறமொழி புகுதலை தடுத்து நிறுத்துகையில் தான் நம் மொழியின் வளம் மிகப் பெருகும். இது நமது தமிழுக்கென்று மட்டுமல்ல அவரவர் தாய்மொழிக்கும் பொருந்தும்.

          வெறுமனே, ஒரு எண்ண பரிமாற்றம் தானே மொழி என்றெண்ணக்கூடாது. தகவலறிவிக்கத் தானே என்று விட்டுவிடலாகாது தமிழை நம்மால். மொழி தான் நிலத்தைப் பிரிக்கிறது என்பார் ஐயா கவிஞர் வைரமுத்து.

          அங்ஙனம் நிலம் பிரிகையில் இனம் மாறிவிடுமோ எனும் நெடிய பதட்டம் இருக்கிறது. சான்றுகளை நாம் பல மாநிலப் பிரிவுகளின் வழியே கண்டுதான் வருகிறோம். அன்று நாம் சேர்ந்து கட்டிய நதியிலிருந்து வரும் தண்ணீரின்றி மொழிவாரியாகப் பிரிக்கப்படுகிறது.

          ஆக, இனம் மாறிக்கொண்டால் பழக்கவழக்கங்கள் சிதையும். அல்லாது, வெற்றிக் குவிப்புகள் இடம் மாறிவிடும். வரலாறு பிழையாக பிழையாக பேசப் புறப்பட்டு விடுவர் பலர். எண்ணற்ற குழப்பங்கள் மொழி திரிவதால் காலமாற்றங்களிடையே நிகழ்ந்துவிடும்.

          எனவே மொழிமீது அக்கறை கொள்ளுங்கள். அவரவர் மொழிமீது அவரவர் அக்கறை கொள்ளுங்கள். தெலுங்கு பேச சந்தர்ப்பமோ, ஹிந்தி பேச சூழலோ, ஆங்கிலம் பேச கட்டாயமோ இருப்பின் அங்கே கசடற பேசுவோம். பேசப் பயிற்சி எடுப்போம்.

          பல மொழி கற்றுக்கொள்வது பல மனிதர்களைப் புரிய அணுக ஏற்க மறுக்க வாதிடச் சொல்லித்தர வணிகம் செய்ய தேவைப்படும். பிற மொழிகளைக் கற்றல் என்பது திறனைக் கூட்டும். அவர்களின் பண்பாடு, வரலாறு உயர் குறிப்புகள் என அனைத்தையும் அறியலாம் தவறில்லை.

          ஆனால் எவ்வாறு அம்மொழிகளைக் கற்று மிக நேர்த்தியாகப் பேசுகிறோமோ; அங்ஙனம் நம் மொழியையும் அதன் செழுமையோடு பேசுவதும் உச்சரிப்பதும் எழுதுவதும் பகிர்வதும் இன்றியமையாத ஒன்றாகும். எம்மொழியும் செறிவோடு பேசுகையில் கேட்கையில் அழகுதாம்.

          ஆயினும் நமக்கு நமது தமிழ் மிகச் சிறப்பான ஒன்றாகும். மூப்பு நிறைந்த நமது மொழியைப் பிற மொழிகளைக் கலந்து சிதைப்பது நல்ல அறிவன்று. நீங்களே அதைத் தனித்து தமிழில் பேச பேச முற்றிலும் உணர்வீர்கள்.

          எனவே முதலில் நேரம் சொல்வதில், வழி சொல்வதில், பெயரிடுவதில், தொழில் துவங்குவதிலிருந்து துவங்குங்கள். இவை தான் இன்றைய முழுச் சான்றுகள் நாம் நமது அழகு தமிழை சிதைத்துவிட்டோம் என்பதற்கு.

          எனவே அங்கிருந்து துவங்கி எங்கும் நிறைந்த மொழி எம் தமிழை ஒரு தமிழரின் மரபு அறிய, மறம் உணர்த்த, மாண்பு நிலைக்கத் தூக்கி பிடித்திருப்போம். தவறில்லை. மெல்ல மெல்ல வெறியின்றி குழப்பம் விடுத்துத் தெள்ளு தமிழில் பேசி நமக்குள் நாம் மகிழ்வோமே உறவுகளே.

          தவறாக எண்ணாதீர்கள், இவையெல்லாம் என் அறிவிற்குப் பட்டது. எல்லாம் சரியென்றில்லை. பிற கருத்துக்களும் அமையலாம். அவரவர் கருத்தை நான் ஏற்கத் தயார் எனினும் தமிழ் நம் மூலம் என்பதை எல்லோருமே அறிகிறோம், பிறகதை அழகுறப் பேசுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு தமிழை எப்போதும் நம் இனியதொரு அடையாளமாக வைத்திருப்பதற்குத் தயங்குவானேன்.

          குறைந்த பட்சம் வீட்டில் பிறமொழி கலப்பின்றி பேச முயலுங்கள். நண்பர்களோடு உறவினர்களோடு அக்கம்பக்கம் பழகுகையில் தூய தமிழ்பேசி பழகுங்கள். குழந்தைகள் நம்மிடம் பேசுகையில், குழந்தைகளிடம் நாம் பேசுகையில், குழந்தைகள் பிறரிடம் பேசிப் புழங்குகையில் பிறமொழி கலவாமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.

          குழந்தைகள் நம் வரம். தமிழ் அவர்களுக்கு நாம் தரும் வரம். அதை உடைக்காது தருவோமே? எனக்கு நம்பிக்கையுண்டு; இப்போதெல்லாம் நம் மக்கள் மிக அறிவாகச் செறிவாக பாரம்பரியம் கெடாது வாழத்துவங்கி விட்டனர். எனவே தமிழையும் அழகாக உணர்வோடு சேர்த்து கலப்பின்றி பேசி மகிழ்வாரென்று எனக்குப் பெரிய நம்பிக்கையுண்டு.

          என்றாலும் ஒன்று உண்மை. மொழி சார்ந்து நாமெல்லாம் சிந்திக்க பழகிவிட்டோம். இனி; நம் காதுகளில் பேசக்கேட்கும் பேசப்படும் தமிழும் மேலும் இனித்துவிடும் என்பது சத்தியம்.

          அதற்கு நன்றி. வணக்கம். வாழ்க!!


குறிப்பு: நீ முதலில் வித்யாசாகர் என்ற பெயரை தமிழில் வையிடான்னு திட்டி விடாதீர்கள். ஒன்று; வித்யா என்பது அன்று என் இறந்த தங்கையின் பெயர். அதனால் இன்று எனது மகளின் பெயர். எனவே அஃதென் பெயரும் கூட... எல்லாவற்றையும் விட, அறிவுக்கடல்னு தமிழில் வைத்தால் மிக அதீதமாகிவிடலாம். நான் கடல் அல்ல; நீங்களெல்லாம் கலந்திருக்கும் கடலின் ஒரு துளி.



தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)






Wednesday, January 9, 2019

கண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் தமிழர்கள்)

——    வித்யாசாகர்


கூடுகளைத் தேடாமல் சிறகுகளுக்குள் அடங்கிக்கொண்டவர்கள் நாங்கள். கதகதப்பிற்கு மாறாக நெருக்கத்தின் வெப்பத்தால் தகித்தாலும் ஒற்றுமையெனும் வலிமைக்காய் கைகால் முடங்கிக்கொண்டு லட்சிய முழக்கத்தை நிறுத்திக்கொள்ளாத நெறியுள்ள வானம்பாடிகள் நாங்கள். எங்களுக்கு கனவு பறப்பதாக இல்லை வாழ்வதாக இருக்கிறது, ஆம் அது எல்லோருக்குமான வாழ்வு.

சிக்கித் தவித்து துடித்து பசியில் வாடி, ஏழ்மையில் நலிந்து, எதற்கும் விலைபோனவர்களாய் வாழும் இலவச விரும்பிகளான எம் சமுதாயத்திற்கு ஓர் விடிவு வேண்டும். நாங்கள் சிறகடித்து பறக்கும் வானத்தைப் பற்றி பேசுவதேயில்லை, பசியை எல்லோருக்கும் போக்கிடாத கனவுதனை தீதென்று எண்ணி அஞ்சுகிறோம்.

ஆதி மனிதர்களான நம்மிடம் எல்லையற்ற பலமும் அறிவும் இருக்கிறது, மரபூரிய மாண்பும் மறமும் விஞ்சியிருக்கிறது, ஆயினும் ஏன் எங்குக் காணினும் இரண்டாம் பட்சமாய் எட்டித் தள்ளப்படுகிறோம்? எட்டித் தள்ளியபின்னும் எதற்கு அஞ்சி நிற்கிறோம்? யார் எம் சிறகுகளை உடைப்பவர்? கனவுக்குத் துயிலும் தூக்கத்தை எம் விடுதலையோடுச் சேர்த்து, கொண்டுபோனவர் எவர்? எமக்குத் தெரியும்’ யாருமில.

ஆம்; யாருமில எமை வஞ்சித்தவர். எங்களை எம்மினத்தை யாராலும் தோற்கடிக்கவோ ஏமாற்றவோ முடியாது, ஆனால் தோற்க எங்கோ பிசகி எப்படியோ நாம் தயாராகிவிட்டோம். ஏமாற ஏனோ சம்மதித்து சம்மதித்து பெரியதொரு சதியின் பள்ளத்தில் விழத் தானே பழகிக்கொண்டோம். அதிலிருந்து நாமெல்லாம் வெளியே வருகையில், தம் எண்ணத்துள் தாம் வென்றுநிற்கையில் எமது அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் நாளை விண்ணில் தானே பறக்கத் துவங்கிவிடும்.

எனவே நாங்கள் எங்கள் தூக்கத்தைத் தொலைத்து எமது தலைமுறையின் கனவுகளுக்கு விடைதனை  தேடி கடல் தாண்டி அலைகிறோம். எமது விடுதலை இதோ எங்களின் சட்டைப்பையில் உண்டென்று எங்களின் பிள்ளைகள் நம்பும் புள்ளியில் எங்களின் ஏக்கங்களுக்கும் நாளை சிறகு முளைத்துவிடும்.

அதற்குச் சான்றாகத்தான் நாங்கள் கூடுகளாய்ப் பிரிந்துகொள்வதில்லை. மாறாக ஒற்றைக் கூட்டிற்குள் அடங்கிப் போகிறோம். ஏதோவொரு நாட்டிற்குள்ளும் தமிழர்களாக மட்டுமே அடையாளப் படுகிறோம். அந்தத் தமிழரெனும் கூட்டிற்குக் குச்சிகளை தேடியலைந்து தங்கக் கம்பிகளை முடைந்துவிட்ட எங்களின் சேர சோழ பாண்டிய மன்னர்களான பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நன்றி.

ஏதோ முடிந்தது வாழ்வென ஓய்ந்துவிடாமல் எப்பொழுதும் உழைப்பு உழைப்பு வெற்றி வெற்றி என்று  நாடு நாடாகத் தேசம் தேசமாக ஓடி ஓடி எங்கும் எப்பொழுதும் எதற்கும் தளர்ந்து நின்றுவிடாமல் உழைத்து உழைத்து முன்சென்ற எங்களின் கனவுத் தொழிற்சாலைகளுக்கும், அனைத்து வியர்வை வைரங்களுக்கும், எங்களன்பு உழைப்பாளிகளான மொத்த வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கும்  இந்த மழைநேரத்து உதவிக்கான மாண்பு சொறிந்த நன்றி. வெறும் குச்சிகளை தங்கக் கம்பிகளாக்கிய பல தொழிலாளர்களுக்கும்  முதலாளிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் நன்றி. 

வெறும் நன்றியோடு நிற்பதெங்கே, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமைத் தேரிழுப்போம். மழை வெள்ளம் இடி மின்னல் எது வரினும் நாம் ஒன்றே என கூடி நிற்போம். நம்மில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளெல்லாம் இடிந்துபோகட்டும் இனி. அன்புத் தீயிட்டு எரிப்போம் தீயெண்ணத்தை. அதில் சாதித் திமிரது இருந்தாலும் பொசுங்கிப்போகட்டும். வானத்து விண்மீன்களை இழுத்து எம் வரிகளுள் கட்டிவைப்போம். காதலர்கள் கைகோர்த்துச்செல்கையில் பின்னே வண்ணங்களாய் மின்னட்டுமந்த விண்மீன்களெல்லாம். வாழ்க்கையை மிக அழகியலோடு வாழ்வோம், வருங்காலத்திற்கு நல்லதாக நம் வரலாறு மிஞ்சட்டும் தோழர்களே..

வாய்மையையும் உழைப்பையும் அறத்தையும் ஒவ்வொரு சொல்லுக்கும் போற்றுவோம்; வாழ்ந்தவர் தமிழரென்று இந்த உலகம் தானே நமை அடையாளங் கண்டுகொள்ளட்டும். அன்று பறக்கும் தமிழரின் வெற்றிக் கோடிக்கு மகிழ்ச்சியின் வண்ணங்களும், இனி நாம் ஒற்றுமையில் தோற்காத ஒற்றை நிறமுமே பூசப்பட்டிருக்கட்டும்.

வாழ்க எந் தமிழர்தம் நாடு; வளர்க எம்மக்கள்..



தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)



Thursday, December 20, 2018

கைப்பேசியும் களவுபோன நாட்களும்..



  —   வித்யாசாகர்



நாட்களைக் கைப்பேசிக்குள் தொலைக்குமொரு
ஆபத்தான கணப்பொழுது,
எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும்
இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும்
வலிநிறைந்த மனசெனக்கு,

மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர்
பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம்
மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும்
திரிந்து கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து
பின்னறையை நோக்கி நடக்கிறேன்,

இரத்த சகதியில்
கசங்கிய மலர்போன்றோரு மகனை
ஊர் பேர் தெரியாத சிலர் தூக்கிவந்து
மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்,

ஒரு வரலாறு எழுதுமளவு கேள்விகள் பல
கேட்டுமுடிய
பெரிய மருத்துவர் ஒருவர் ஓடிவந்து
இன்சூரன்ஸ் பற்றியும்,
அவன் வேலைப்பார்க்கும் நிறுவனம், சம்பளம்
பற்றியெல்லாமும் கேட்டுக்கொண்டு
அவசர சிகிச்சை அறைக்குள் அவனைக்
கொண்டுசெல்ல ஆணையிடுகிறார்.,

திடுமென அவருடைய கைப்பேசி கத்த
அதை எடுத்துக்கொண்டு
செவிலிப்பெண்ணொருத்தி ஓடிவருகிறாள்..

கைப்பேசியில் அலறிக்கொண்டிருந்த மனைவி
மருத்துவரிடம் என்னங்க நம்ம பையன்
போன்பேசிட்டேப் போய் லாரியில் மோதிட்டானாம்
என்கிறாள்,

மருத்துவருக்கு ஏதோ சட்டையின்
நிறம் பார்த்த நினைவு சடாரென வந்து
கவனத்தில் அறைய
பதறியடித்துக் கொண்டு
அவசரசிகிச்சை அறைக்குள் ஓடுகிறார்..

அவருக்கு
மூடியிருந்த வெள்ளைத்துணியை யகற்றி
யாரென்று முகம் திருப்பிப் பார்ப்பதற்குள்
கை காலெல்லாம் படபடவென நடுங்கிற்று
தடதடவென உடம்பு ஆடியது
மூச்சு முட்டி மயக்கம் வருவது போலிருந்தது

கைப்பேசிக்குள் மனைவி கதறும்
சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது..



தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)


Friday, August 3, 2018

பெரும்பேர் கொண்டயென் நாடு...

——    வித்யாசாகர்




பச்சை பச்சை காடெங்கும்
இச்சை இச்சை ஆண்டைகளே,
பழுத்தமரம் ஊரெங்கும்
உடம்புண்ணும் பாவிகளே;

மெத்து மெத்தாய் பொய்கள்கூறி
ஆதிகுடியை யழிக்கிறதே,
பட்டுகெட்டும் திருந்தாது
பண்டை வளம் ஒழிக்கிறதே..

கொத்தக் கொத்தாய் கொன்றதையும்
முத் தமிழால் திட்டிவைத்தோம்,
எள்ளளவும் பகையில்லை
மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்..

சட்டம் செய்த மேதைகளின்
அறிவினிலே தீ யிட்டு
சட்டம்பேணும் அரசியலில்
வானளவு கிழிசல் ஆச்சே..

நெஞ்சளவு நீரடங்கி காவிரியில்
கோடிழுத்தோம்,
வஞ்சப்பட்டு வஞ்சம் செய்து
வரண்டநில வெடிப்பில் மாண்டோம்

பிறந்து மண்ணில் விழுந்தபோது
இரத்தம் ஒன்றே இரத்தம் ஒன்றே.,
கையெடுத்து வணங்கும்போதும்
புத்தம் ஒன்றே புத்தம் ஒன்றே

பின் –

பெற்றதாய் வயிறெங்கும்
வெடிவெடிப்பாய் கோடுகளேன் ???
ஒற்றுமையின் கரங் கோர்த்து
எம் வளத்திற்காய் பாடுபடேன்...


________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)



Tuesday, July 31, 2018

பெண்மை வாழ்கவென்று...

——    வித்யாசாகர்




பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து
எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து
பாலூட்டி பச்சைமார்பு வெடித்து
பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து
எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே..
எனதுயிர் அம்மாவே!!

தாயாகி மகளுமாகி முதலுமாகி
கடைவரைக் காப்பவளாகி,
கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே
காமம் பிசைந்து;
களங்கமில்லா வாழ்க்கை வாழ
இரண்டாம் வரம் தந்தவளே..
மணம் கொண்டவளே.. என் துணையாளே!!

எனை முழுதாய் விழுங்கி நானாய் தெரிந்தவள்
நானாய் வாழ நல்அப்பனைச் செய்தவள்
பெயரை கடமைக்குச் சேர்க்காமல்
உயிருக்குள் போட்டவள்,
உரிமையைக் கூட யாருக்கோ கொடுப்பதை
எனக்காய் ஏற்றவளே, என் மகளே!!

முத்தத்தால் எனை வளர்த்து முழுமூச்சு
நீ நினைத்து, பித்தென ஆகி என்னால்
பிசைந்த சோற்றோடு பண்புகளூட்டி,
பெற்றவளே தான்போல உன்
பன்மாத தூரத்திலும்
எனைவிட்டகலாத என்னக்காளே, உயிரானவளே!!

அண்ணாவின் அர்த்தத்தில் அப்பாவைச் சேர்த்தவளே
அன்பு அன்பென்று ஈந்து பிறவிப்பிணிக் கொன்றவளே
பொன்னும் பொருளும் கேட்போர் மத்தியில்
அண்ணனை மட்டும் கேட்டவளே,
தாய்மையை முன்பே போதித்தும், என்
தங்கையாய் யானவளே.. பேரன்புத் தங்கையே!!

சுட்டதும் கைவிட்ட இனிப்பல்ல நீ
உயிர் விட்டாலும் மாறாத அறத்தின்
அன்பு நீ,
கண்டதும் கேட்டதும் பார்த்ததுமல்ல;
உடன் வாழ்ந்த உயிர்பூச்சு நீ, உள்ளக்
கோயில் நீ தோழி; உள்ளே சாமியும் நீ தோழி!!

பட்டப்பகலை இருட்டாக்கி
இருட்டின் அழகை உனக்காக்கி, உன்போல்
காணா குருடென்று, இப்பவும்கூட எனையாளும்
எந்தாய் நிலம் போல் என்னுள்
நீக்கமற நிறைந்தவளே
கண்ணுக்குள் காதல் வரைந்தவளே, என்னவளே காதலியே!!

தெய்வம் யார் நீதானென்பேன்
தாயைக் கேட்டால் நீயே என்பேன்
தமக்கை தோழிக்கும் நீயே முதலென்பேன்
ஏற்கவேண்டியதை கற்கப் பணித்தவளே
'அ' எனில் அம்மா என்றவளே
யென் ஆசிரியப் பெரும்பேறே.. குருவே!!

பெண்ணே மொத்தத்தில் உனை
வணங்குதலன்றி வேறென்னச் செய்வேன் ?
“பெண்மை வாழ்கவென்று” புகழாது
பணியென்னக் கேட்பேன்??
தமிழுக்குள் உனையன்றி சிறக்க
சொல்லெங்கே கொய்வேன்? பெண்ணே;

நீயின்றி யில்லை உலகு, நீயே யெம் ஆதி மரபு!!


________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)




Sunday, April 29, 2018

இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம்


——    வித்யாசாகர்


நூல்:  இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம்
ஆசிரியர்:  ஏம்பல் தாஜுமுல் முகம்மது
வெளியீடு:  நியூ லைட் புக்சென்ட்டர், மாத்தூர், மணலி, சென்னை - 68
ஆண்டு: 2018

அமுதூறும் சொல்லழகு
அகிலம் போற்றும் மொழியழகு
வான்தோறும் புகழ்மணக்கும்
வள்ளுவம் பாடிய தமிழழகு..

அத்தகு தேனூறும் தமிழுக்கு வணக்கம்!!

வயிற்றுவலி வந்தவருக்குத்தான் பிறருடைய வலி தெரியும் என்பார்கள், அது புத்தகம் எழுதி வெளியிடுவோருக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. புத்தகம் வெளியிடுவது என்பது ஒரு மனக்குழந்தையை சிந்தனையின் அழகோடு பிரசவிப்பதற்கு சமம். அதிலும் இது மதம் பற்றிய புத்தகம். தொட்டால் அல்ல, வாயால் சொன்னாலே உயிர்சுடும் மதங்களின் தன்மையினை, அதன் கூறுகளை, சாராம்சத்தைச் சொல்லி நாமெல்லோரும் ஒன்றெனக் கைகூப்பும், மனதை மனதால் நெய்யும் படைப்பிது.

இந்த “சமய நல்லிணக்கம்” எனும் நூல் இஸ்லாத்தை நன்றாக பிறமதத்தினரும் அறிவதற்கேற்ற ஒரு பொக்கிஷமாகும். இது வெறும் தனித்த ஒருவரின் சிந்தனையோ வெறும் கருத்தோ அல்ல இப்படைப்பு, இது ஒரு அகம் பண்பட்டதன் வெளிப்பாடு. ஒரு காய் கனிந்து ஞானம் வெளிப்பட்டதன் கூப்பாடு. பலாப்பழம் பழுத்தால் அதன் வாசனையை யாரால் மறைக்க இயலும் ? முடியாதில்லையா ? அப்படித்தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஐயா தாஜுமுல் முகம்மது அவர்களும் தனது மனதால்’ கண்ணியத்தால்’ கனிந்து போனதன் பலனை இப்படைப்பின் வாயிலாகப் பொதுவெளிக்கு எடுத்துவைத்திருக்கிறாரென்பது மதிக்கத்தக்கச் செயல்.

எனக்கொரு ஆசையுண்டு, இஸ்லாத்தை முழுதாக படித்துவிட வேண்டுமென்று, காரணம் நமக்குள்ளிருந்து முரண்கள் அகற்றப்படவேண்டும். இஸ்லாத்தின் முழுமையான சகோதரத்துவமும், கண்ணியமும், உயிர்நேயமும் காக்கப்படவேண்டும். எங்கள் தெரு மத்தியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய பாயினுடைய வெள்ளைத்தாடியும் அவருடைய வெள்ளை மனசும் போல எனக்கு எல்லோரையும் காண ஆசை.

நிறைய முரண்கள் குரான் கடந்து நம்மிடையே உண்டு. குரான் என்றில்லை; மதம் ஒரு பாடம் தானே? ஆன்மிகம் ஒரு பயிற்சி தானே? அது ஒரு தவிர்க்க வேண்டாத இயல் இல்லையா? அப்படி நோக்கினால் அனைத்து மதத்தினுடைய நோக்கமும் குற்றம் உடையது அல்ல, ஆனால் அவற்றை நாம் முழுதாக எல்லோரும் அறிவதில்லை அல்லது எல்லோரும் பொதுப்படையாக உணர்வதுமில்லை. வெறும் முரண்களை மட்டும் சுமந்துகொண்டு கடவுள் என்கிறோம், எதிரெதிரே நின்று ஒருவர் ஒருவரைக் கொல்லவும் துணிகிறோம். பிறகு மதம் போதித்ததன் பயன்தான் என்ன? நமக்குத்தான் “எனது-உனது” என்று சண்டையிட்டு சுயநலத்தை வென்றெடுக்கவே வாழ்க்கை முடிந்துவிடுகிறதே.

என்றாலும் அப்படிப்பட்ட ஒரு சுயநலக் கூட்டிலிருந்து ஒதுங்கி, தன்னைக் கம்பீரமாக நீக்கிக்கொண்டு, தானும் தனித்துவிடாமல், இத்தகைய ஒரு அன்பின் பெருந்திரள் ஒன்றைத் திரட்டும் விதமாக, உலக அமைதி வேண்டி ஒரு நல்ல படைப்பினை தந்த ஆசிரியர் ஏம்பல் தாஜுமுல் முகம்மது அவர்களுக்கு எனது சிரந்தாழ்ந்த நன்றியும் வணக்கமும்.

இந்தப் புத்தகம் பேசும் இஸ்லாம் பற்றிய தகவல்கள் ஏராளம், சமய நேர்த்தி குறித்தும், மத நல்லிணக்கம் வேண்டிடுமென்று அறிந்தாலும் பொதுவாக அனைத்துக் கருத்துக்களும் இஸ்லாம் சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் கண்ணியத்தையும் நேர்மையையும் அன்பையும் பேசி, பெருங்கருணையை விழியிலேற்றி, வாழ்வோர் அதன்படி நடக்க நல்ல பல போதனைகளையும் சொல்லி, சமத்துவத்தைத் தனது முகமாக்கிக்கொண்டு நல்லவொரு சகோதரத்துவத்தை முன்வைக்கும் மதமாகவும் இஸ்லாத் இருப்பது உண்மை.

அத்தகு இஸ்லாத்தின் அறிவுரைகளை இறையுணர்வு மிக்கோர் தெளிவாக படித்தறிந்து அறியப்படவேண்டிய ஒன்றென்பதில் மாற்றுக்கருத்தில்லை. இஸ்லாத்தின் வழியே நின்று மானுட அன்பையும், மனிதருக்கான நீதியையும் போதிக்கத் துணிபவையாகவே இப்படைப்பினை படைக்க விரும்பியிருக்கிறார் ஆசிரியர்.

இப்படைப்பு சமய நல்லிணக்கத்தைப் பற்றியது என்பதாலும், இறைவணக்கம் செய்வோருக்கு அல்லது இறையுணர்வு கொண்டவர்களுக்கு பொதுவாக படித்தறியத் தக்க நூல் என்பதாலும் இதை முழுதாக வாசிக்கும் கடமையினை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இதன் தலைப்பினால் என்னுள் ஏற்பட்ட ஒரு நல்லுணர்வை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

முதலில் கடவுள் என்பது யாதுமிலாதது. எங்கும் நிறைந்தது. எல்லாம் அதுவானது, பெரிய சூச்சுமமெல்லாம் இல்லை, எனக்கு உயிர் போகையில் உனக்கு ரத்தம் தந்து காப்பாற்ற மதமோ சாதியோ அல்லது வேறெந்த பெரிதோ சின்னதோ தேவைப்படவில்லை யெனில்; மேல்கீழ் அடையாளம் நமக்குள் இல்லாது மனிதத்தோடு நம்மால் பிறருக்கு உதவ இயலுமெனில் நாமெல்லோரும் தெய்வீகம் உள்ளவர்களே.

பொதுவாக வணங்குவது என்பது நன்றி கூறுவது தான் இல்லையா? எனக்குச் சோறு போட்டா உனக்கு நன்றி. என்னைக் கொஞ்சம் சுமந்துவந்து உனது வண்டியில் இங்கே இறக்கினால் உனக்கு நன்றி, எனக்குப் பேச பத்து நிமிடம் இங்கே அவகாசம் கொடுத்தால் அதற்கு நன்றி. பிறகென்ன ஒரு உதவிக்கு நாம் மனிதத்தோடு காட்டும் நன்றி வணங்குவது தான் என்றால்; யோசித்துப் பாருங்கள், இந்தக் காற்றும்’ இந்த நீரும்’ இந்த வானும்’ இந்த மண்ணும்’ எனக்கு உயிர் தந்து’ உடல் தந்து’ இந்தப் பிரபஞ்சம் எனக்காய் எனக்காய் அனுதினமும் காத்துக் கிடக்கிறதே, அதற்கு நன்றி கூற வேண்டாமா? அதை வணங்க வேண்டாமா ? அந்த வணங்கும் பண்பு.. ஒரு நன்றியுணர்வு.. உள்ளே கனத்து குவியவேண்டாமா? அதற்குத்தான் ஆன்மிகம் என்ற ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

ஆன்மீகமெனும் “நம் வாழ்ந்துதீர்ந்த பல பெரியோர்களின் வாழ்வனுபவத்தினால்” சீர்ப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம், ஒருசேர்ந்த நற்கருத்துக்களின் கோர்வை, அவ்வப்பொழுதில் காலமாற்றம் சார்ந்து வழிநடத்தத் தக்க அறிவுரைகளின் திரள் என ஒன்று தேவைப்படுகிறது. ஆன்மீகம் எனில் மாயையோ மந்திரமோ கண்டதெல்லாம் இல்லை, அதெல்லாம் சொல்லப்பட்டிருக்கலாம் என்றாலும் அது ஒரு ஒருவழி புரிதல், யாரோ சுமந்துவந்தது, நமது கூட்டுவாழ்வில் கலந்துபோயிற்று, அவற்றை அங்கேயே விடுவோம்.

அதேநேரம், ஒரு முழுநம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்த சில காட்சிகளை’ தோற்றத்தை’ சாட்சியைப்போன்ற பல ஏற்பாடுகளை கண்முன் வைக்க முற்படுவதே ஆன்மீகத்தின் பல கோட்பாடுகளுக்கும் நீதிநெறிகளுக்கும் கொண்டாட்டங்களுக்குமான காரணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பொதுவில் ஆன்மிகமென்பது ஒரு வேருக்கு ஈரமென்ற நீர் பாய்ச்சுவதுபோல, முழுக்க முழுக்க அறிவு சார்ந்தது ஆன்மிகம். அது ஒரு இயல். அந்த இயலுக்கு நாம் வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் பல விதமானது, பல வழியானது, ஆனால் அனைத்துப் பாடத்தின் நோக்கமுமே இந்த இயற்கையெனும் பெருங்கருணையை அடைவதன்றி வேறில்லை.

இந்த உலகம் கோடானுகோடி வருடங்களைத் தாங்கி உருவானது, வெறும் இரண்டாயிரம் ஐந்தாயிரம் பத்தாயிரம் பற்றி மட்டுமே நமது கவலையும் கேள்விகளும் சண்டைகளும் இருக்கிறது. என்னைக்கேட்டால் எல்லாவற்றையும் விட மனிதம் மிக முக்கியமானது. எனது அன்புச் சகோதரர்கள் நீங்கள் முக்கியமானவர்கள். உங்களின் அன்பு பெரிது. தியாகம் பெரிது. இந்த எல்லோருக்குமான அன்பும், நமது எல்லோரின் மகிழ்ச்சியும், வாழ்வும், நமது மண்ணில் நிலவவேண்டிய அமைதியுமே மிக முக்கியமானது. அதற்குள் எந்தப் போட்டியையும் சண்டையையும் பிரிவையும் யாருமே கொண்டுவந்துவிடாதீர்கள்.

பல முரணான கதைகள் சமயங்களில் உண்டு. குறிப்பாக இந்துமதத்தில் பல உதாரான புருசர்கள் பற்றியும் தத்துவார்த்த நெறிகளும் கதைகளின் வழியே மதங்களின் வழியே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவை மட்டுமே இத்தனைக் கோடானுகோடி ஆண்டுகளின் இறுதி முடிவுல்ல இல்லையா? அது ஒரு பாடம், ஒரு பாதை, ஒரு மண்ணின் தோன்றல்களால் போதிக்கப்பட்ட நெறியது. கற்பனையினூடே கடவுளை போதித்ததால் கல்லென்று ஒதுக்கிய' கடவுளென்று நம்பிய' இருபாலரைக் கொண்ட மதமது. அதையும் நாம் அறிவைக் கொண்டே பார்க்கவேண்டும். தெளிவின்வழி மட்டுமே உணரவேண்டும். கண்ணுக்குப் புலப்படாத அல்லது அறிவுக்கு எட்டாத எதையுமே அத்தனைச் சட்டென ஏற்றுக் கொள்வதற்கில்லை.

எனினும், ஒரு முட்டாளிடம் சென்று நீ முட்டாளென்றால் அவனுக்கும் கோபம் வரும். ஒன்றைச் சொல்லித்தர வேண்டுமெனில் ஒரு நண்பனாக அவரவருகில் சென்றமர்ந்து கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால் நாமெல்லோரும் எப்போதுமே எதிரெதிரே அமர்ந்துகொள்கிறோம், அதனால் தான் நீதியும் தர்மமும் எவர்பக்கமிருந்தும் எவருக்குமே புரிவதில்லை. எல்லோருக்கும் பொதுவாய் கிடைப்பதுமில்லை. முதலில் இஸ்லாத்தும் இதர மதங்களும் சொல்லித்தரும் கருணையைப் பெரிதாய் உணருங்கள். சகோதரத்துவத்தைக் கையில் எடுங்கள். அருகருகே அமருங்கள். எல்லோரும் ஒரு குடும்பமாய் அன்புசெய்யுங்கள். பிறகு அவரவர் மண்ணின் வாழ்வுமுறைக்கு ஏற்ப வழிபாடுகளும் அவரவருக்கு அவரவருடையது என்பதும் தானே எல்லோருக்கும் புரிந்துபோகும்.

எந்த மதமாயினும் சரி அறிவைக் கொண்டு பார்க்கமுடிந்தால், மனதைக் கொண்டு பார்க்கமுடிந்தால் இரண்டே இரண்டு தெரியவரும்; ஒன்று நானும் நீயும் வேறல்ல என்பதும், மற்றொன்று பிற உயிர்கள் நோகக் கூடாது என்பதும். ஆக நாம் நினைப்பதெல்லாம் ஒன்றே. எதிர்பார்ப்பதும் அறிவதும் எல்லாம் ஒன்றே. எனது எண்ணம் வேறில்லை உனது வேறில்லை. எனது தேவை வேறில்லை உனது வேறில்லை. நம் எல்லோருமே நிம்மதி.. நன்னடத்தை.. நேர்மை.. அறம்.. எனச் சுழன்று சுழன்று ஒரேபோலான பல வட்டங்களுள் சுழலும் அறிவு மனிதர்கள் அவ்வளவே.

நமக்கு நம் மண்ணுள் தோன்றிய இயற்கையை வணங்குபவர்களாக இருந்தாலும் சரி, கருணையைப் போதிப்பவர்களாக இருந்தாலும் சரி, கண்ணியத்தைக் காப்பவர்களாக இருந்தாலும் சரி, மன்னித்து மாண்பு வலுத்த எவராயினும் சரி எல்லோரும் ஒரு குடிலின் பல பிள்ளைகள் அவ்வளவே. நமக்குள் பேதமில்லை, மேல்கீழ் இல்லை. வழிமுறைகள் பல, மதங்கள் பல., வழிபாடு.. பல..பல; இருந்துபோகட்டுமே, எனினும் நமக்கு உயிர் ஒன்றே. எல்லோரும் தேடும் இறை ஒன்றே. அதை அவரவர் வழியில் பொதுவாய் வணங்கி நன்னயம் போற்றி நமது மானுடப் பண்பினை வளர்க்கச் செய்வோம்.





________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)








Wednesday, April 4, 2018

கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்...



——    வித்யாசாகர்





பாலையின் சுடுமணலில்
வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்;
குளிர்காற்றில் ஆசைகளைக் கொய்து
விடுமுறையில் மட்டுமே கொஞ்சம்
வாழ்ந்து கொண்டவர்கள்..

போர்வைக்குள் சுடும்
கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்;
ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி
கனவுகளுள்
வயதைத் தொலைத்தவர்கள்..

வரிசையில் நின்று நின்றே
வானத்திற்கு
ஏணியைப் போட்டவர்கள் நாங்கள்;
கைப்பேசிக்குத் தெரிந்த முத்தத்தில்
கருத்தரிக்காத முட்டைகளை உடைத்தவர்கள்..

பெண்ணெனும் மந்திரச் சொல்லுள்
புன்னகையை ஒளித்தவர்கள் நாங்கள்;
அத்தைப் பெண்ணோ.. மாமனின் மகளோ..
பக்கத்து வீடோ.. காதலியோ,
அழுகையை மட்டுமே
மரணம் வரை சுமப்பவர்கள்..

வலிக்குமொரு பாடல் வந்தால்கூட
துடி துடிக்கும் பித்தர்கள் நாங்கள்;
அழுக்குத் தலையணையோ
அன்றைய சினிமாவோ
கதைப் புத்தகமோ பழைய கடிதங்களோ
எதையோ படித்து எதற்கோ உயிரை நொந்தவர்கள்..

உறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே
வழுக்கையானவர்கள் நாங்கள்;
வாட்சப்பில் காதலியையும்
மின்னஞ்சலில் அம்மா பெயரையும்
வங்கிக் கணக்கில் அப்பாவும்
கைப்பேசி முகப்பில் அக்காப் பிள்ளைகளையும் வைத்து
தனைமட்டும் முழுதாய் இழந்தவர்கள்..

பிரிவெனும் துயரில் நொந்து
பாதி இரவில் பலமுறை எழுந்தழுது
பேருக்கொருமுறை
மீண்டுமிறப்பவர்கள் நாங்கள்;
அம்மாவைத் தேடி மனைவியைத் தேடி
பிள்ளைகளைப் பிரிந்து
மௌனக் குழிக்குள் சோகமாய் சரிபவர்கள்..

கூலிக்கு வேலையின்றி
மேலே படிக்க வாய்ப்புமின்றி
திறமைதனை
அரபிகளுக்கு அடகுவைத்தவர்கள் நாங்கள்;
கூரைவீட்டிற்கு ஓலை முடையவும்
கிழிந்த காற்சட்டைக்கு சன்னலை மூடவும்
சாய்ந்த சவுக்குக் குளியலறைக்கு
ஒரு புதிய மூங்கில் கதவு போடவுமே
கடவுச்சீட்டோடு எங்களின் கனவுகளையும் விற்றவர்கள்..;

ஆம்.......
நாங்கள் பாலைமண்ணின் சுடுமணலில்
எங்களின் வாழ்வையும் சுட்டவர்கள்..


படம் உதவி: http://www.telanganaheadlines.in/

________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)






Thursday, March 22, 2018

சிட்டுக்குருவிகளுக்கு சாகாவரம் வேண்டும்...


——    வித்யாசாகர்


மிக இனிமையான நாட்கள் அவை
காலையில் வரும் சூரியனைப்போல
அத்தனை ஒளியானது சிட்டுக்குருவியின் உடனான நாட்கள்..

ஓடிப்பிடித்து அகப்பட்டுக்கொண்ட மழைத்தும்பிக்குப்பின்
ஒருநாள் சிட்டுக்குருவியொன்று
கைகளில் சிக்கிக்கொண்டதையும் மறக்கவேமுடிவதில்லை.,

காற்றை கையிலள்ளிக்கொண்ட மகிழ்ச்சி
அன்றைய தினத்தின் பரிசாக
இன்றுவரை எனக்கு நினைவிலுண்டு..

விடியலில் ஐந்தாறு மணிகளுக்கிடையில்
நானும் எனது தங்கையும் வாசல் படிக்கட்டில் வந்தமர
நான்கைந்து சிட்டுக்குருவிகள் எதிரே அமர்ந்து
முகம் பார்த்து பார்த்து தலை சாய்த்துச் சாய்த்து
கத்துவதைக் கண்டதெல்லாம் அழகைக் கண்டதன் சாட்சி அடையாளங்கள்

அந்த கிரீச் கிரீச்சென கத்தும்
சிட்டுக்குருவிகளின் மொழிக்கான அர்த்தத்தை
மௌனமாக பின்னொரு நாள்தனில் அசைபோடுகையில்
தங்கையின் இல்லாயிடம் உயிருக்குள் அப்படி வலித்ததுண்டு.

தங்கையைப்போல் சிட்டுக்குருவிகளும்
எனக்கு மறப்பதேயில்லை..

எங்கள் வீட்டு ஜூலி
வாசலிலமரும் சிட்டுக்குருவிகளுக்கு
இன்னொரு தோழி,
ஜூலி சிட்டுக்குருவிகளை விடுவதேயில்லை
ஓடியோடி அவற்றை துரத்தும்
சிட்டுக்குருவிகள் மாறி மாறி அதன் தலையில் சென்றமரும்
வவ்..வவ் எனும் ஜூலியின் கோபத்தில்
விடிகாலை மணல்வாசத்தோடு சிட்டுக்குருவிகளால் சிலிர்த்துபோகும்..

தூக்கம் விழித்து சன்னலைக் காண்கையில்
பீறிட்டுவரும் சூரிய ஒளியோடு
ரக்கை படபடக்க வந்தமரும்
ஒரு சிட்டுக்குருவியின் முகத்தில்
ஒரு உலக மொழிபேசும் இயற்கையின் சத்தியத்தை
எத்தனைப் பேர் கண்டிருப்பீர்களோ தெரியாது
எனக்குச் சிட்டுக்குருவியின் சப்தம் குவைத்திலும் ஒன்றுதான்
என் வீட்டுக் கூரைமீதும் ஒன்றுதான்

யாருக்கு எப்படியோ;
எனக்கந்த என் காதலியின் வீட்டுச் சன்னலும்,
வீட்டுவாசலில் கருப்புசாமியாய் வளர்ந்திருந்த
வேப்ப மரத்தடியும்,
உடைந்தக் கண்ணாடிச் சில்லுகளில் தெரியும்
நினைவுகளாக
அந்நாட்களின் மொத்த வாழ்வுமே
அந்தச் சிட்டுக்குருவிகளின் நினைவோடே இன்றுமிருக்கிறது

சிட்டுக்குருவியோடான நாட்கள்
உண்மையிலேயே எனக்கு
மிக இனிமையானவை...


________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)


Tuesday, February 3, 2015

சிந்தனை களம்: படித்தால் பெரியாளாகி விடுவாய்

--வித்யாசாகர்.

ஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது. நிறையப் புரிந்து ஆழ்ந்து சிந்தித்து சட்டென தெளிய படிப்போரால் முடிகிறது.

நடுத்தரத்தன்மையை மனதுள் நிலைக்கச் செய்தல் படித்தலால் கைவரப்படுவதை தொடர்ந்து படிப்போரால் அறியமுடிகிறது. விதைத்தால் விளையும் நிலம்போல படிப்பினால் உதிக்கும் ஞானம் வெளியெங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச்செய்யும். மகிழ்ச்சியை எதுவென்று அறியக்கூடிய அறிவுக்கூர்மையை படிப்பு மேம்படுத்தும். அதன்பொருட்டாக ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து நாம் தாள்களை புத்தகங்களை கண்டறியும்முன்னரே ஓலையில் எழுதத் துவங்கிய நமது முன்னோர்களையும் நாம் எடுத்துணர வேண்டும்.

படித்தலின் இன்றியமையாமையை பின்னோர் அறிய ஓலையிலேனும் எழுதிவைத்துச்சென்ற முன்னோர்களின் பிரயத்தனத்திற்குமுன் புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டு அதைப் பிரிக்காமலே கடந்துச்சென்றுவிடும் நாம் நம் நிகழ்கால நன்மையினை தொலைப்பதோடு மட்டுமில்லாது எதிர்காலப் பிள்ளைகளுக்கான வாழ்வியலையும் மாற்றியமைக்கிறோம் என்பதையும் கவனிக்கவேண்டிய கட்டாயமுள்ளது.

படிப்பு என்பது வெறும் புத்தகத்தில் படிப்பதில் மட்டுமில்லை; வாழ்க்கையின் சிறப்புகளை மனிதர்களின் மூலமும், தீமையின் நன்மையின் விளைவுகளை அளவிட்டுப் பார்ப்பதிலும், நடப்புகளை அதனதன்போக்கில் அதனதனை கவனித்து வருவதன்மூலமும், இயற்கையை அகக்கண் திறந்துப் பார்ப்பதிலும், உள்ளே உற்றுநோக்கி நோக்கி வெளியை இயக்கப் பழகுவதிலுமென, ‘படிப்பென்பது அசைவதிலும் அசையாததிலுமாய் ஏகமாக இருந்தாலும், அந்த மொத்த படிப்பினைக்கான முதலுரத்தை இடுவது புத்தகங்களே.

புத்தர் வாசித்த ரிக் வேதத்திலிருந்து தான், காற்றுவழி உள்ளே பயணித்து கல்லுக்குள்ளும் இருக்கப்பெரும் கடவுளின் சக்தியை அறியமுடிந்தது. ஆய்ந்து ஆய்ந்து அறிவதற்கான முதல் புள்ளி புத்தகங்களிலிருந்து நமக்கு எளிதாக கிடைத்துவிடுகிறது. உலகம் முழுதும் சுற்றிவந்து எல்லா ஊரிலும் மண்ணெடுத்து அதை மொத்தமாக கலந்து அதிலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்து அந்த ஒரு பிடிக்குள் இந்த ஒய்யார உலகத்தைப் பார்க்கக் கிடைப்பதற்குச் சமம்தான் சங்கிளிவழியாக வந்த உலகளாவிய மொத்த அறிவும் ஏதோ ஒரு புத்தகத்தினுள் அடங்கிப் போதலும்.

அத்தகைய புத்தங்களை அடுக்கிவைதிருக்கும் ஒவ்வொரு அகமும் அறிவு விளக்கேற்றும் கோவிலின்றி வேறில்லை. நூலகத்திலிருந்து உருவான நிறைய மேதைகள் நம் நாட்டிலுண்டு, வெளிநாடுகளிலும் உண்டு. இவ்வுலகம் ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ, அதேயளவு இந்த ஒரு பிறப்பின் அறிவினுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப்போவதும் கூட இல்லை இந்த உலகு. அத்தனையத்தனை அற்புதங்களை இயற்கை காணுமிடமெல்லாம் அடக்கி வைத்திருக்கிறது.

அண்ணாந்துப் பார்க்கும் வானத்திலும், அளந்திட இயலாது வியந்துநோக்கும் கடலிடமும் வேறென்ன சூழ்ச்சுமத்தின் ஈர்ப்பிருந்துவிடும் நமக்கெல்லாம்? கடலைப் பார்க்கையில் ஏதோ ஒரு தாய்ப்பாசம் போல மதிப்பும், அதேநேரம் எத்தனை எத்தனை மர்மங்களை அடக்கிக்கொண்டுள்ள பயமும் நமக்கு வராமலில்லையே? வானத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறோம் எல்லையை அறியவில்லையே? பூமியை சுற்றிச் சுற்றி வருகிறோம் மொத்தத்தையும் காணவில்லையே? அதெல்லாம் ஏன் அத்தனைக் கோடான கோடி மர்மங்களும், வியப்புகளும், நடப்புகளுமென எல்லாம் சூழ்ந்துள்ள இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளிதான் நாம். நாம் அதத்தனையையும் ஒரு கையில் அடக்கிக் கொள்ளும் முடுச்சிகளின் மூலத்தை அறிவதெனில் நம் கையினுள்ள பல புத்தகங்களை படித்துணருவதால் அது முடியும்.

எனவே வெற்றிகளின் மூலத்தை, தோல்வியில் தாங்கும் பக்குவத்தை, தோல்வியை வென்றெடுக்கும் தந்திரத்தை, வெற்றி தோல்வியின் சரிசமத்தை இப்படி அனைத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் நகர்விற்கேற்ப படித்தறிய நம்மால் இயலுமெனில் அதற்கு பேருதவியாய் அமைவதே நூலகங்கள்.

நூலகங்களைப் பயன்படுத்தப் பழகுங்கள். தெருவின் ஓரத்தில் ஒரு மாங்காய் மரம் வளர்ந்து நான்கு மாங்கணி கைக்கெட்டும் தூரத்தில் தொங்கினால் பறித்துன்னவும், எட்டாத உயரத்தில் இருந்தால் கல்லெறியவும் அறிவிருக்கும் நமக்கு; கால்நடக்கும் தூரத்திலுள்ள அறிவுக் கோயில்களான நூலகங்களை அவ்வப்பொழுது அணுகி பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் ஏன் பொதுவாய் எல்லோருக்கும் இருந்திருக்கவில்லை?

சினிமாவிற்குப் போகவும், பூங்காவிற்கு சென்று விளையாடவும், மாலைநேரத்தில் சிற்றுண்டிக் கடைகளுக்குச் சென்று செலவிடவும் முடிகிற நாம் நம் பிள்ளைகளுக்கு இலவசமாக திறந்துவைதுள்ள நூலகத்திற்குச் செல்வதையும் இன்றியமையாததாக எண்ணி பழக்கவேண்டும். படிப்பதை புத்தகத்தின் வழியேவும் நம் பிள்ளைகளுக்கு நாம் சிறுவயதிலிருந்தே பழக்கித் தரவேண்டும். புத்தகம் என்பது அலமாரியில் வைத்துக்கொள்ள பிறரால் தரப்படும் பரிசுப்பொருளாக மட்டும் பிள்ளைகள் அறிந்துவைத்துக் கொள்ளாதிருக்க’ அவைகளை படித்துணரும் பழக்கத்தையூட்டி, இலக்கிய அறிவை பெருக்கி, கலையின் கலாசாரத்தின் சாரம்சங்களை முன்னெடுத்து, நாளைய தலைமுறையின் இன்றைய முன்னுதாரண பிறப்புகளாகவே நாம் வாழயிருக்கிறோம் என்பதை அறிவுணர சொல்லித்தரவேண்டும்.

எதையும் கற்று அலசி ஆய்ந்து உலகின் நன்மைக்கென ஆலோசித்து சிறந்ததை ஏற்று வருத்தத்தையும் இன்னலையும் தீர்க்கத் தக ஆற்றலை, ‘படிப்பதன்மூலமும் வளர்த்துக்கொள்ளமுடிவதை’ ஒவ்வொரு வளர்ச்சியின் இடையிலும் புகட்டி பிள்ளைகளை நாம் நடைமுறை அறிவோடு வளர்க்கவேண்டும்.

நேற்றைய வரலாற்றைக் கண்டு இன்றைய காலத்து வாழ்க்கையை நிமிர்த்திக்கொள்ள புத்தகங்கள் உதவும் என்பதை அறியத்தரும் முதல்புள்ளி நமது வளர்ப்பிலும் வார்த்தையிலுமேயுள்ளது.

ஒவ்வொரு நூலகத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் மனிதர்களின் கதையும் வாழ்வும் ஏக்கமும் இழப்பின் சுவடுகளும் கொட்டிக்கிடக்கிறதென்பதை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி பழக்கிவிட்டால், அடுத்தநாள் நூலகம் தேடி அவர்களாகவே போவார்கள்.

நல்லதை அதன் விளைவோடு அறிந்து, தீயதை அதன் விளைவோடு எச்சரிக்கையுறும் அளவிலுணர்ந்து தனை செதுக்கி செதுக்கி சுதந்திரப் பிறவியாக இம்மண்ணில் நம் குழந்தைகள் வளம்வர படிப்பினை உதவும் என்பதை எடுத்துச் சொல்வது பெற்றோராகிய நமது கடமையாகவே முன்னிற்கிறது.

அரிசி விளையும் ஒவ்வொரு விளைநிலத்தின் ஈரத்திலும் ஒரு விவசாயியின் வியர்வையினுடைய ஈரம் மட்டுமில்லை, கண்ணீரும் சுட சுட இருக்கிறது. இனிக்கும் பழங்களுக்குள்ளே அந்தத் தோட்ட முதலாளியின் சிரிப்பும் வேலைக்காரனின் அழுகையும் ஏக்கமும் நிறைந்துகிடக்கிறது. விண்ணளந்து நிற்கும் அத்தனை கட்டிடங்கள் அழகழிய வீடுகள் என ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஒரு கதை வதை வாழ்க்கை கொட்டி அடைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல் கோடானகோடி கேள்வியும் பதிலுமாய் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குப் பின்னேயும் ஒரு படைப்பாளியின் கண்ணீரும் கவலையும் அழுகையும் ஏக்கமும் வலியும் உறுத்தலும் நிராசையாய் உரைந்துப்போயுள்ளது. அவைகளையெல்லாம் துடைப்பதற்கு நாம் படிக்கவேண்டும். இதோ உன் அழுகை எனது சிரிப்பிற்கான பாதையைக் காட்டியுள்ளது பாரென்று அவர்களுக்குக் காட்டவேண்டும். நீ செலவிட்ட நேரத்தில் நான் எனது அறிவுக்கண்ணை திறந்துக்கொள்வேன் கவலையுராதே என்று நம்பிக்கையூட்டவேண்டும்.

புத்தகங்களை அடுக்கியுள்ள நூலகத்திற்கு ஆயுதபூசையன்று பொட்டு வைப்பதோடு நில்லாமல் அவைகளின் கனம் உணராமலிருக்கும் அறிவு நோக்கி ஒரு செல்லக் குட்டு வைத்துக்கொள்வோம். குட்டு வலித்த இடத்திலிருந்து இனி நூலகத்திற்கான கதவுகள் வெகுவாய் திறக்கட்டும். புத்தகங்களின் ரசிக்கத்தக்க உள்பக்க நறுமணத்தைப் போல நம் வாழ்க்கையும் செம்மையுற்று நல்லெண்ணத்தின் மணம் இனி உலகெங்கும் பரவலாய் வீசட்டும்.

புத்தகதிற்குப் பின்னேயும் நூலகங்களின் பின்புறமும் நின்றழும் படைப்பாளிகளின் கண்ணீரை நம் படிக்கும் பழக்கத்தைக் கூட்டிக் கூட்டி மெல்ல துடைப்போம். அவர்களின் சிரிப்பினால் இச்சமூகம் தெளிந்த சமூகமாய் அறிவு மிளிரும் மனிதர்களோடு கூடியதாய் அமையட்டும்.

புத்தகங்கள் வாழ்க.. அச்சிடுவோர் வாழ்க.. எழுதுவோர் வாழ்க.. எழுதியதை எடுத்தடுக்கி காத்து நூலகமமைத்துத் தருவோர் வாழ்க.. படிப்போரும் படிக்க பள்ளிக்கூடம் அமைத்தோரும் வாழ்க.. எல்லோரும் படித்து, ‘விடுதலையை பெறும் அறிவோடும்’ தரும் அறிவோடும் இருந்து’ ஒவ்வொரு உயிரும் சிறந்தோங்கி’ நன்னிலந்தோறும் நலமே நலமே விழையப் பெறுக..--




வித்யாசாகர்
vidhyasagar1976@gmail.com