Wednesday, April 29, 2020

வனப்பூறும் தமிழே உனக்கென் சரணம்வனப்பூறும் தமிழே உனக்கென் சரணம்


 —  வித்யாசாகர்உலகாள எழுத்தாகி எனையாளும் மொழியே
உனைப் போற்றி வினைசெய்ய வரம் தாயென்
தமிழே, மனதாலும் நினைவாலும் ஒலியாக
எழுவாய், வரியாக வடிவாக உயிர்போல அமைவாய்!

பலகாலம் கருவாக உயிராகச் சுமந்தேன், உளகாலம்
உனதாகி உன்னுள்ளே உயிர்ப்பேன், மறவாது
மருவாது வரையின்றி நிலைப்பாய், உன் மடிமீது
தமிழ்பேசி உயிர்தீர அமர்வேன்!

அணைத்தாலும் மறுத்தாலும் மூப்பில்லை
உனக்கு, மழைபோல வனம்போல இயல்பேயுன் சிறப்பு,
அரிதாகி வலிதாகி கடலோடுமிருப்பாய் மலையோடுமிருப்பாய்
பேசாதார் பேசுகையில் நீயே முதலாய் சிறப்பாய்!

அதிகாலை மழைதானே மண் வாசம்
பரப்பும், நீ முதலாகப் பிறந்தாயே மொழிவாசம்
பரப்பு, தீநாக்கு சூடின்றி ஒளியெங்கும் நிரப்பு
உனை அறியாதார் அறிகையிலே அமிழ்தம்போல் இனிப்பு!

உயிர்போல எங்கும் உணர்வோடு உள்ளாளே
நீதான், உனை மகளாக்கிக் கொஞ்சுகையில், பா
மாலைகள் குவிவது வரம்தான், அதற்காக நீயென்ன
சிறியவளா சொல் சொல்.. ?

எமைப்பெற்ற பெரும்பேறு உனதன்றோ தாயே ?
உளம்பொங்கும் மகிழ்வாலே நான் துதிப்பவளும்
நீயே, உனக்காக ஒரு புள்ளி தமிழாலே தொட்டேன்
நீயள்ளி பிரபஞ்சத்தைத் தீயாகத் தின்றாய்;

எனக்காக எனக்காக எந் தமிழாக நின்றாய்
வான்முட்ட உயர்ந்தாளே உனக்கென்
சரணம் சரணம்!! வனப்பூறும் தமிழே
உனக்கென் சரணம் சரணம்!!


தொடர்பு: வித்யாசாகர்  (vidhyasagar1976@gmail.com)
எங்கும் தமிழ்

எங்கும் தமிழ்

 ——    கவிஞர் அமீர்

நிலா வந்தாள்
நில் என்றாள்!
ஏன்? என்றேன்
கவிதை என்றாள்!

இதோ...

சோகத்தைச்  சொல்வதற்கு
சொந்தமென்று இருப்பது நீதான்...
சந்தோஷத்தில் சேர்த்தணைத்து
சிரிக்க வைப்பதும் நீதான் ...

உண்டு களித்து
உறக்கத்திலும் நீதான்...
கண்டு ரசிக்கும்
விழிப்பிலும் நீதான்...

எங்கும் நிறைந்தவன்
எதிலும் இருப்பவன்
இறைவன் என்பது பொய்!

எனக்கு
எங்கும் நிறைந்து
எதிலும் இருப்பது
நீ தான்... என்றேன்!

தன்னைத்தான் சொல்வதாக நினைத்து நிலா சிரித்தது...

என் தாயாம்
தமிழைச் சொல்கிறேன்
என்பதைப் புரியாமல்!


தொடர்பு: கவிஞர் அமீர் (ameerjann@gmail.com)
சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை

சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை

  —   இலக்குவனார் திருவள்ளுவன்


        கணினி உகத்தில் கணினி வழியாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர் சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசா. அன்றைய மதுரை /இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்னும் சிற்றூரில் சித்திரை 17, 1974 / 30.04.1943 இல் பிறந்தவர்; தமிழ் வளர்ச்சிக்கான அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகிறார். ஆசிரியர் ப.பரமசிவத்திற்கும் ஆசிரியை ஞா.பொன்னுத்தாய்க்கும் திருமகனாகப் பிறந்ததால் ஆசிரியப்பணியில் இயல்பாகவே நாட்டம் கொண்டார். ஆசிரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியரான இவரின் வாழ்க்கைத்துணைவி திருவாட்டி சு.வனசாவும் இளம் முனைவர் பட்டமும் கல்வியியல் முதுகலைப்பட்டமும் பெற்ற ஆசிரியரே.


        தமிழியல், கணக்கியல், கணினியியல் ஆகிய துறைகளில் பட்டங்கள் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 37 ஆண்டுகள்(1964 – 2001) கணக்கறிவியல் துறையில் ஆசிரியப்பணியாற்றியுள்ளார். இவர் கணக்கில் முதுஅறிவியல் பட்டம் படித்துப் பணியில் சேர்ந்தாலும் பின்னர்(1971-72) இத்துறையில் இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1964 இல் கணக்குப் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தவர் 2001இல் முதுகலைக் கணக்குத் துறையின் தலைவராகப் பணிநிறைவு எய்தினார்.

        கல்விமீதும் தமிழ் மீதும் தணியா ஆர்வம் கொண்டுள்ள இவர், தொடர்ந்து மொழியியல் சான்றிதழ்(1978-79), தமிழ் முதுகலை(1980), மொழியியல் முனைவர் பட்டம்(2001) பெற்றுள்ளார். இடையில், கணினியியலில் பட்டயமும் பட்டமேற்படிப்புப் பட்டயமும் பெற்றுள்ளார்.

        தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்கப்பட்ட இவரது முனைவர் ஆய்வுப் பட்டத் தலைப்பு: “எழுத்துத் தமிழின் மொழியியல் கூறுகளின் புள்ளிவிவரப் பகுப்பாய்வு – தொல்காப்பியம் முதல் இக்காலம் வரையிலான கால முறைப்படியும் ஒத்தக் காலத்தின் படியுமான மொழியியல் கூறுகள் ஆய்வு (A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – A diachronic and synchronic study of linguistic features starting from tolka:ppiyam and up to modern times.)” என்பதாகும்.

        இக்காலகட்டத்தில், விடுதிக்காப்பாளர்(1983-86), கணினி செயல்பாட்டிற்கான பட்டமேற்படிப்புப் பட்டயக்கல்வியின் மாலைநேரப் படிப்பிற்கான இயக்குநர்(1986-1995), கணினி அறிவியல் துறைத் தலைவர்(1991-1995),கணினி சார் புலத்தலைவர்(1995-97), துணை முதல்வர் (1997-98) எனப் பல பொறுப்புகள் மூலம், கல்விநலனிலும் மாணாக்கர் நலனிலும் சிறப்பாகக் கருத்து செலுத்தி அனைவர் பாராட்டையும் பெற்றார்.

        சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம் (Coining of Technical words in Sangam literature) என்னும் இவரது முதல் கட்டுரை அறிவியல் இதழான கலைக்கதிரில் வெளிவந்தது. தொடர்ந்து செம்மொழித் தமிழ் இலக்கிய இலக்கணம் சார்ந்து, தமிழ் இலக்கணத்திற்கு வளம் சேர்க்கும் வகையிலும் தமிழ்க்கணினிப்  பயன்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையிலும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பதினெட்டுக் கருத்தரங்கங்களில் பங்கேற்குக் கட்டுரைகள் அளித்துள்ளார்.

        தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகம் நடத்திய  கணக்கு-புள்ளியியல் கலைச்சொற்கள் புனைவு, திரட்டல், தொகுத்தல் கருத்தரங்கத் தலைவராக இரு முறை (6/1984,6/985) இருந்து வழிநடத்தியுள்ளார்.

        இவரது குறிப்பிடத்தக்கப் பணி தமிழ் இலக்கியத் தொடரடைவு(Concordance for Tamil Literature) என்னும் இணையப்பதிப்பாகும். சங்க இலக்கியச்சொல்லடைவு வையாபுரியாராலும் பிறராலும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஆசியவியல் நிறுவனம், செருமானிய அறிஞர்கள் தாமசு இலெகுமண், தாமசு மிலிடென் ஆகியோரைக் கொண்டு  பழந்தமிழ்ச்சங்க இலக்கியச் சொல்லடைவை வெளியிட்டது(A word index of old Tamil caṅkam literature / by Thomas Lehmann and Thomas Malten, 1992). முனைவர். பெ. மாதையனை நூலாசிரியராகக் கொண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம் சங்க  இலக்கியச் சொல்லடைவு வெளியிட்டுள்ளது(2003). தமிழ் இணையக்கல்விக்கழகமும் சங்க இலக்கியச் சொல்லடைவினை இணையத்தில் பதிப்புள்ளது. பேரா.காமாட்சி முதலான அறிஞர்களும் இப்பணியில் இறங்கி உள்ளனர். எல்லாப்பணிகளுக்கும் தலைமை நிலையில் உள்ளதாகப் போற்றத்தக்கது இவரது இணையவழியிலான தொடரைவுப்பணியாகும்.

        தொல்காப்பியம், சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை), பதினெண்கீழ்க்கணக்கு, (திருக்குறள் உட்பட அனைத்து 18 நூல்கள்), திருக்குறள்(மட்டும் – தனியாக), ஐம்பெருங்காப்பியங்கள், முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள், கம்பராமாயணம், நளவெண்பா, பெருங்கதை, கலிங்கத்துப்பரணி, வில்லி பாரதம் (புதியது), பக்தி இலக்கியம், கூட்டுத்தொடரடைவுகள்,  இடம் பெற்றிருக்கும்.

        மேலும், படிப்போருக்குப் பயன்தரும் வகையில் சொற்பிரிப்பு நெறிகள் குறித்தும் அருமையாக விளக்கியுள்ளார்.

        தொடரடைவில் குறிப்பிட்ட சொல், எந்தெந்த இடத்தில் வருகிறது என்பது வரிசைப்படியாகத்தரப்படுகின்றன. ஒரே சொல், வெவ்வேறு பொருளில் வருவதை இதன் மூலம் அறிய இயலாது. சொற்களை வகைப்படுத்தி, அந்த வகைகளுக்கேற்ற முறையில் சொல்வகுப்புத் தொடரடைவு  அளித்துள்ளார். எனவே, படித்துப்புரிந்து கொள்வதற்கு எளிதாகும்.

        சான்றுக்கு ஒன்று: அகல் என்னும் சொல் வினைச்சொற்களாகவும் பெயர்ச்சொற்களாகவும்  நீங்கு, விலகு அகன்ற, அகலமான, அகலமான இடம் என்னும் பொருள்களில் வருவதை வகைப்படுத்தித் தருகிறார்.

        இந்தத் தொடரடைவுகளை tamilconcordance.in என்ற இணையதளத்தில் காணலாம்

        சொல்லடைவுகளைப் பயன்படுத்தும் பொழுது  சொற்களுக்கான பொருள்களை வேறு நூல்களிலோ வேறு தளங்களிலோ தேடாமல், இங்கேயே அறிய வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் வரும்.

        அந்த எண்ணத்தை ஈடேற்றும் வண்ணம் இப்போது முனைவர் பாண்டியராசா உருவாக்கியுள்ளதுதான் சங்கச்சோலை < sangacholai.in > என்ற இணையதளத்தில் உள்ள சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியம் என்ற பகுதி.        “சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூற்களில் காணப்படும் அரிய சொற்களை, அவற்றுக்கான தமிழ், ஆங்கிலப் பொருள்களுடன், அச்சொற்கள் அப் பாடல்களில் பயின்று வருகின்ற இடங்களில் சிலவற்றையும் கொடுத்து, தேவையான இடங்களில் படங்களையும் கொடுத்து, விளக்க முற்படும் தளம் இது”.


இப்போது, 
            ‘அ’ முதல் ‘ஔ’ முடிய உள்ள உயிர் எழுத்துக்களுக்குரிய 495 சொற்களும்
            ‘க’ முதல் ‘கௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 352 சொற்களும்
            ‘ச’ முதல் ‘சோ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 250 சொற்களும்,
            ‘ஞ’,‘ஞா’,‘ஞி’,‘ஞெ’,‘ஞொ’- வுக்குரிய 40 சொற்களும்
            ‘த’ முதல் ‘தௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 440 சொற்களும்,
            ‘ந’ முதல் ‘நௌ’ முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 315 சொற்களும்,
            ‘ம’ முதல் ‘மௌ’முடிய உள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குரிய 641 சொற்களும்,
            ‘ய’,‘யா’,‘யூ’ – வுக்குரிய  24 சொற்களும்
            ‘வ’,‘வா’,‘வி’,‘வீ’,‘வெ’,‘வே’,‘வை’,‘வௌ’-க்குரிய 610 சொற்களும்
ஆக மொத்தம் 3962 சொற்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

        தேவையான சொல்லின் முதல் எழுத்தைத் தட்டினால், அந்த எழுத்தில் தொடங்கும் எல்லாச் சொற்களும் இடது பக்கம் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும். அதில் நாம் தேடும் சொல்லைச் சொடுக்கினால், அச் சொல்லைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.

இணைய வழியிலான பல்வேறு அகராதிகள் உள்ளன. அவற்றில் சிறப்பாக உள்ளது தமிழ்ப்புலவர் அகராதி  < https://www.tamilpulavar.org/ > யாகும். இதில் பொதுச்சொற்கள், கலைச்சொற்கள், முதலான வகைகளுடன் ஆங்கில அகராதிகளும் இடம் பெற்றுப் பேருதவியாக அமைந்துள்ளது. ஆனால் இவற்றில் நாம் சொல்லைக் குறிப்பிட்டுப் பொருள்காண வேண்டும். தொடரடைவில் சங்க இலக்கியம் முதலான நூல்களில் உள்ள அனைத்துச் சொற்களும் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து வரும் இடத்தைக் காண முடியும். சங்கச்சோலையில் உள்ள சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியத்தில், சங்க இலக்கியத்தில் உள்ள அரிய சொற்களை அவற்றின் பொருளுடன் காண முடியும்.

        எவ்வாறு இஃது அமைந்துள்ளது என்பதற்கு ஒரு சான்று.

        அஃகு – (வி) நுண்ணியதாகு, சுருங்கு, குறை, become minute, shrink, be reduced in size, quantity etc.,
                அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
                இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 551,552
                பரந்த அரச உரிமையையும், குறுகிய அறிவினையும்,
                ‘இல்லை’ என்று விரித்த கையினையும் உடையோராய்;
                நல்லகம் நயந்து, தான் உயங்கிச்
                சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8

                நமது நல்ல நெஞ்சத்தை விரும்பி வருந்தி
                அதை நமக்குக் கூறவும் இயலாது மனம் குன்றினான் .
இவ்வாறு சொல்லின் தமிழ்ப்பொருள், ஆங்கிலப்பொருள், சொல் இடம் பெற்றுள்ள இலக்கிய அடிகள், நூலின் பெயர், பாடல் / அடி எண் முதலியவை நமக்குக்கிடைக்கின்றன.

        ஏறக்குறைய ஈராண்டுகளில் இவ்வருவினைப் பணியை முடித்துள்ளார்.  மீளாய்வு செய்து, விட்டுப்போன சொற்கள், கிடைக்கக்கூடிய தேவையான படங்கள், சொற்களுக்கான இணைப்புகள் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, விடுபாடு, தேவைப்படும் மாற்றம் முதலியவற்றைத் தெரிவிக்க வேண்டியுள்ளார்.  நானும் ‘அர்’ விகுதியில் உள்ள சொல்லின் ‘அன்’ விகுதிச்சொல்லையும் சேர்த்து அஃது இடம் பெறும் இடங்களைக் குறிக்க வேண்டும்  என்றும் இடம் பெற்ற சொல்லில் பயன்பாட்டு இடம் ஒன்று விட்டுப்போனதையும் தெரிவித்துள்ளேன். இதுபோல் அனைவரும் தெரிவிப்பின் அவர் எண்ணப்படி இதனைத்  தனி இணையதளமாக மாற்றிச் செவ்வையாய்த் தர இயலும்.

        இன்றைய அவரின் 77ஆம் பிறந்தநாளின் பொழுது அவர் நலம், வளம்,புகழ் நிறைந்து தமிழுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்நன்னாளில் அவரின் செயற்கரிய பணிகளைக் குறிப்பிடுவதன் காரணம்,  தமிழ் மாணாக்கர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சொல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் முதலான அனைவரும் இவரது தளத்தை நன்கு பயன்படுத்திப் பிறருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்குத்தான்.

        மேலும், தமிழக அரசு இவரது பணிக்கான செலவினை விடக் கூடுதல் தொகையைப் பரிசாக அளித்து இவரைப் போற்ற வேண்டும்! அஃது இதுபோன்ற பணிகளில் ஈடுபடத் தமிழ் ஆர்வலர்களுக்கு உந்துதலாக அமையும். செம்மொழித்தமிழாய் மத்திய நிறுவனமும் நல்கைத் தொகை வழங்க வேண்டும்! வாய்ப்புள்ள கொடை உள்ளம் கொண்ட நல்லோரும் உதவலாம்!

        தமிழ்ச்சொற்கள் தேடுகருவியை அளித்துள்ள முனைவர் பாண்டியராசா, பைந்தமிழுக்கு மேலும் வளம் சேர்ப்பாராக!

முனைவர் பாண்டியராசா
மனைபேசி: மதுரை 0452-2537931 ; சென்னை 044-22201244
அலைபேசி: 99944 89388
மின்வரி: ppandiyaraja@yahoo.comநன்றி: அகரமுதல
Monday, April 27, 2020

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி

 – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்


          தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி குறித்து  வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் புதிய ஆதாரங்கள்

          தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் 1999 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டிய போது எதிர்பாராதவகையில் நூற்றுக்கணக்கான “ஈய” நாணயங்கள் வெளிவந்துள்ளன. இவற்றை முதலில் அவதானித்த அவ்வூர் மக்கள் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணராது அந்நாணயங்கள் பலவற்றை பழைய பொருட்களை வாங்கும் கடைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர். இந்நிலையில் இது பற்றிய செய்தி நாணயவியல் அறிஞரும், 1990 காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதியாகவும் இருந்த திரு. ராஜாவிக்கிரமசிங்கே  அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் பிரான்ஸ் நாட்டு நாணயவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராகக் கடமையாற்றி வரும் எமது நாட்டுப் பேராசிரியர் பொபேஆராய்ச்சியுடன் இணைந்து மக்களால் விற்பனை செய்த கடைகள், நாணயங்கள் வெளிவந்த இடங்கள், அவ்வூர் மக்கள் எனப் பல இடங்களிலிருந்து இந்நாணயங்கள் பலவற்றைச் சேகரித்து அவற்றைச் சிறந்த முறையில் ஆவணப்படுத்தி Ruhuna an Ancient Civilization Revisit என்ற நூலில் வெளியிட்டிருந்தனர்.

          இந்நாணயங்கள் பலவற்றின் முன்பக்கத்தில் பிராமி எழுத்தில் அதை வெளியிடக்காரணமாக இருந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது இந்நாணயங்களின் சிறப்பான அம்சமாகக் காணப்படுகின்றது. இவை பண்டைய இலங்கையில் வழக்கிலிருந்த எழுத்து, மொழி, ஆட்சியிலிருந்த சிற்றரசர்கள் முதலானவற்றை அறிந்து கொள்ள நம்பகரமான சான்றாகக் காணப்படுகின்றன. நாணய மற்றும் சாசனவியல் அறிஞர்கள் இந்நாணயங்களில் தெளிவாகக் காணப்படும் எழுத்துக்களின் எழுத்தமைதியைக் கொண்டு இவை 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இவை தென்னிலங்கையிலேயே வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதை நாணயங்கள் காணப்பட்ட இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் நாணய அச்சுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் நாணயங்களும், நாணய அச்சுக்களும் காணப்பட்ட இடம் பண்டைய காலத்தில் நாணயங்களை உற்பத்தி செய்யும் தொழிற் கூடமாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

          இந்நாணயங்கள் பற்றி முதலில் ஆய்வு செய்த பேராசிரியர் பொபெயாராச்சி மற்றும் ராஜாவிக்கிரமசிங்கே ஆகியோர் நாணயங்களில் உள்ள எழுத்து வடிவத்தை வடபிராமியாகவும், அவற்றின் மொழியைப் பிராகிருதமாகவும் பார்த்தனர். ஆயினும் இரண்டு நாணயங்களில் தமிழ்ப் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதை முக்கிய அம்சமாக்கச் சுட்டிக்காட்டிய அவர்கள் தமிழ் மொழியில் புலமையற்ற காரணத்தால் அவற்றின் பெயர்களைப் பிராகிருத மொழியாகவே பார்த்தனர். இந்நிலையில் இந்நாணயங்கள் தொடர்பாகக் கொழும்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட தென்னிந்தியத் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் வை.சுப்பராயலு அவர்கள் இந்நாணயங்கள் பற்றிய நூலை என்னிடம் தந்து நாணயங்களில் பொறிக்கப்பட்ட பெயர்களை மீள்வாசிப்பு செய்யுமாறு கூறியிருந்தார். இதற்கு வேண்டிய நாணய மூலப் பிரதிகளையும் (Coins Replica), நாணயங்களுக்குரிய அரிய புகைப்படங்களையும் பேராசிரியர் பொபெயாராச்சி மற்றும் ராஜாவிக்கிரமசிங்கே ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்நாணயங்கள் அனைத்தும் ஈயத்தில் வெளியிடப்பட்டிருப்பதால் கணிசமான நாணயங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் தேய்வடைந்து வாசிக்கப்படமுடியாத நிலையில் உள்ளன. ஆயினும் தேய்வடையாத நாணயங்களைக் கொண்டு அவற்றில் பொறிக்கப்பட்ட பெயர்கள் தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளுக்கு உரியவை என்பது தெரிகின்றது. அவற்றுள் ஐந்து நாணயங்களில் உதிரன், மஹாசாத்தன், கபதிகஜபன், தஜபியன், தி~புர சடணாகராசன், சோழ(ட)ணாக(ன்) முதலான பெயர்கள் தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர்களின் பின்னொட்டு சொல் தமிழில் ஆண்மகனைக் குறிக்கும் “அன்” என்ற ஆறாம் விகுதியில் முடிவதால் இவை தமிழ்ப் பெயர்கள் என்பதில் ஐயமில்லை. இந்த வாசிப்பைப் பேராசிரியர் சுப்பராயலு, தமிழ்ப் பிராமியின் தந்தை என அழைக்கப்படும் ஐராவதம் மகாதேவன் உட்படத் தென்னிந்திய, இலங்கை சாசனவியல் அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுகளில் பொருத்தமானதாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

          பண்டைக்கால நாணயங்கள் பொதுவாக அரசனால் அல்லது சிற்றரசனால் வெளியிடப்பட்டவை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அரசனின் அனுமதி பெற்ற வணிகர்களும், மதநிறுவனங்களும் நாணயங்கள் வெளியிட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. இது பற்றிக் கௌடில்லியனின் அர்த்தசாஸ்திரத்திலும் குறிப்புக்கள் உள்ளன. இந்நிலையில் இந்நாணயங்களில் ஒன்றில் தமிழில்; “திஷபுர சடணாக ராசன்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் விளக்கம் தென்னிலங்கையில் திஷபுரம் என்ற இடத்தில் ஆட்சிபுரிந்த சடணாகராசன் (அரசன்) வெளியிட்ட நாணயம் என்ற பொருளில் அமைந்துள்ளது. இந்நாணயங்களிலிருந்து இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளமையும், அவர்களிடையே தமிழ் அரச மரபு தோன்றியிருந்தமையும்; தெரியவந்துள்ளது. சமகாலத்தில் இலங்கையின் பல பிராந்தியங்களில் இனக்குழுத் தலைவர்கள், சிற்றரசர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியோரின் ஆட்சி இருந்ததற்கு நம்பகரமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 22 பிராமிக் கல்வெட்டுக்களில் “வேள்” என்ற தமிழ்ச் சொல் காணப்படுகின்றது. இச்சொல் சிற்றரசன், தலைவன், உயர் அதிகாரி ஆகிய உயர் பதவியிலிருந்தவர்கள் பயன்படுத்தி ஒரு பட்டப் பெயராகும். பேராசிரியர் றோமிலாதபார் வடமொழியில் “ராஜா” என்ற பட்டம் என்ன பொருளைக் குறித்ததோ அதே பொருளைத் தமிழில் “வேள்” என்ற பட்டம் குறிப்பதாகக் கூறுகின்றார். அண்மையில் சங்ககால அரச உருவாக்கம் பற்றி ஆய்வு செய்த கலாநிதி பூங்குன்றன் சங்க காலத்தை ஒத்த வேளிர் ஆட்சி சமகாலத்தில் இலங்கையிலும் இருந்ததற்குப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் “வேள்” என்ற பட்டத்தைச் சான்றாகக் காட்டியுள்ளார். இவ்விடத்தில் ஏறத்தாழ இந்நாணயங்களின் சமகால வரலாறு கூறும் மகாவம்சத்தில் துட்டாகாமினி மன்னன் அநுராதபுரத்தில் எல்லாள மன்னனை வெற்றி கொள்வதற்கு முன்னர் அவனுக்குச் சார்பாகத் தென்னிலங்கையில் ஆட்சிபுரிந்த 32 தமிழ்ச் சிற்றரசர்களை வெற்றி கொள்ளவேண்டி இருந்ததாகக் கூறியிருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. இவ்வாதாரங்கள் சங்ககாலத்தின் சமகாலத்தில் இலங்கைத் தமிழரிடையேயும் அரச மரபு தோன்றியிருந்ததை உறுதி செய்வதாக உள்ளன.
தொடர்பு:
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
https://www.facebook.com/push.malar


Sunday, April 26, 2020

ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம்


ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம்

 —  ரெங்கையா முருகன்

          ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம்  ஓவியர் கொண்டையராஜு அவர்களின் மாணவர்.

          காலனிய வருகைக்குப் பின்பாக போட்டோ ஸ்டுடியோக்களில் ஐரோப்பிய மாடலின் பின்னணியில் நம்மவர்களின் முக உருவங்கள் போட்டோ எடுத்து வீட்டின் சட்டகங்களில் மாட்டி வைக்கும் நாகரீகம் உருவானது. போட்டோ ஸ்டூடியோவுக்குச் சென்றால் ஒவ்வொரு ஸ்டுடீயோவிலும் பேக்ரவுண்ட் டிசைனில் ஐரோப்பிய மாடல் பூ போட்ட பால்கனி கிரில், அழகு மிக்க தூண்கள், நீண்ட முக்கோண ஸ்டாண்டில் பூ வைக்கப்பட்ட ஜாடி, காற்றில் அசைந்தாடும் கொடிகள் போன்ற பேக்ரவுண்ட் டிசைன் ஸ்டுடியோ அரங்கின் பின்பக்கம் இருக்கும். அந்த பேக்ரவுண்ட் டிசைன் முன்பாக நம்மை உட்கார வைத்து படம் எடுப்பர்.

          இந்த ஸ்டுடியோவிற்கான பேக்ரவுண்ட் டிசைன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரர் கோவில்பட்டி மீனாட்சிசுந்தரம் அவர்கள். 60- 70களில் இவர் வரைகின்ற போட்டோ ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன் காஷ்மீர் முதல் தமிழகம் வரை வர்த்தக ரீதியாகப் பெரிய வரவேற்பு இருந்தது. இவருக்கு இன்று வயது 92. வெண்கலக் குரலில் அப்படியே கர்நாடக சங்கீதம் பாடுவதில் கெட்டிக்காரர்.

          தமிழக காலண்டர் ஓவிய பிதாமகன் கொண்டையராஜுவின் அத்தியந்த சீடர்களில் ஒருவர். கொண்டையராஜூவின் ஒவ்வொரு சீடர்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு கொண்டையராஜூவின் பிரதம சீடர் டி.எஸ். சுப்பையா ஓவியங்களில் கண்ணுக்கு முக்கியத்துவம் இருக்கும். அணிகலன்கள் மிக நுட்பமாக வரைவார். ராமலிங்கம் ஓவியங்களில் உடல் அமைப்பு தூக்கலாக இருக்கும். மீனாட்சி சுந்தரம் அவர்கள் காலண்டர் ஓவியங்கள் வரைந்தாலும் போட்டோ ஸ்டுடியோவிற்கான அரங்கின் பேக்ரவுண்ட் சீன்கள் வரைவதில் தனித்துவமாக ஜொலித்தவர்.

          இவரது அறிமுகம் எனக்குக் கனடா மானுடவியலாளர் ஸ்டீபன் இங்க்லீஸ் எழுதிய “Suitable For Framing:The work of a Modern Artist” கொண்டையராஜூ குறித்தான ஆய்வுக் கட்டுரைக்காக 1981 வாக்கில் மீனாட்சி சுந்தரம் அவர்களையும் சந்தித்து நேர்காணல் கண்டிருக்கிறார். இந்த ஆய்வுக் கட்டுரை மூலம் இவரைக் காண வேண்டும் என ஆவல் பிறந்தது.

          இவரைச் சந்திக்க நானும், மிக்சிக்கன் பல்கலைக் கழக பேராசிரியரும், புகழ் பெற்ற ஆவணப்பட இயக்குநருமான திரு. சுவர்ணவேல் அவர்களும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நேர்காணலுக்காகச் சந்தித்தோம்.  மிகவும் வெள்ளந்தியான பேச்சு. தன்னை முன்னிறுத்துக் கொள்ளாமல் எல்லாம் அண்ணா, அண்ணா (குரு கொண்டையராஜூ) என்று தனது குருவைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தார். அண்ணா இல்லேன்னா நானெலாம் ஒன்றுமே இல்லை என்று நீண்ட நேரமாகக்  கொண்டையராஜூ குறித்துப்  பேசி சில நேரங்களில் அவர் நினைவில் மூழ்கி உணர்ச்சிவசப்படுகிறார்.

          குரு- சீடன் உறவு என்பது இவருடைய காலங்களோடு அந்த ஆத்மார்த்தமான பந்தம் முடிந்துவிடும் என்று உணர வைத்தார். பெரிதாக எதையும் சாதிக்க வில்லை. அண்ணா சொன்னதைச் செய்வேன் என்றார். ஆனால் காலத்திற்குத் தகுந்தவாறு பல முக்கிய காலண்டர் ஓவியங்கள் வரைந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் தெரியாத அப்பாவியாகவே காணப்பட்டார்.

          விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானம் இவர் பிறந்த கிராமம். சிறு வயதிலேயே பஜனை மடங்களில் இவர் பாடும் பாடல்களினை கேட்கப் பல மூத்த அக்கிரகாரத்துப் பெண் ரசிகைகள் இவரது பாடலில் மயங்கி பெரிய மதிப்பு இவருக்கு உண்டாகி இருக்கிறது.  மிகவும் ஏழ்மையான விவசாய பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர். படிக்கும் போதே ஓதுவார் ஒருவரிடம் சேர்ந்து தேவாரம், திருவாசகம் இசையுடன் படிக்க கற்றுக் கொண்டவர். பின்பு கோவிந்தராஜன் என்னும் நட்டுவனாரிடம் வர்ணம், ஜதி, மெட்டு போன்ற கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டார்.

          திருவிழாவின் போது பஜனைப் பாடல்கள் பாடும் அழகைக் கண்டு அக்கிரகாரத்துப் பெண்கள் ”டேய் மீனாட்சி சுந்தரம் அந்த கீர்த்தனையை பாடுறா” என்று விரும்பி கேட்பார்களாம். ஒருசமயம் இவரது ஊர்க் கிராமக் கோவில் திருவிழாவில் இவர் வெண்கல குரலில் பாடும் அழகைக் கேட்கிறார் திருவிழாவிற்கு வந்திருந்த சேத்தூர் ஜமீன்தார். பின்பு ஜமீன்தார் இவரைப் பாராட்டி விட்டு பங்களாவுக்கு வரச் சொல்லிப் போய் விட்டார். ஆனால் இவர் ஜமீன்தார் பங்களாவுக்குச் செல்லவில்லை.

          இதற்கிடையில் அங்குத் தற்செயலாக வந்திருந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளுக்குச் சொந்தமான மதுரை மீனாலோசனி பால சந்திர சபா நாடகக் குழுவினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இவரது பாடலில் மயங்கி, எங்களது நாடகக் குழுவிற்கு வருகிறாயா என்று கேட்க, தனது குடும்பச் சூழலுக்குப் போய்விடலாம் என இவர் விருப்பம் தெரிவிக்க, அப்பொழுதே நாடக கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார். ஒப்பந்தம் செய்யப்படும் போது மாதம் ரூபாய் 10 சம்பளம். அட்வான்ஸ் தொகை 50 ரூபாய்.

          1938 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் கப்பல் ஏறி இலங்கை யாழ்ப்பாணம் போய் இறங்கிய போது 11 வயதே நிரம்பிய பாலகன்.  இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இறங்கி கம்பெனிக்குச் செல்கிறார்.   நாடகக் கம்பெனி முன்பு ஓவியர் கொண்டயராஜுவின் இரு பக்கமும் இரண்டு நாய்கள் உடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த நாய்களுக்கு எனாமல் தட்டில் கொஞ்சம் சோறும், கறிகளும் இருந்தன. இப்படித்தான் முதன் முதலில் அண்ணாவைக் கண்டேன் என்று நினைவு கூறுகிறார். அந்த நாய்களைக் கண்டு பயந்தபடி இவர் நிற்க, ஓவியர் கொண்டையராஜு அவர்கள் நாயைப் பார்த்துப் பயப்பட வேண்டாம், அருகில் வா என்றழைத்தார்.

          “நீ ஒன்னும் பயப்படாத, ராஜபாளையத்தில் உள்ள நம்ம பய கந்தசாமி, உன் வருகை குறித்து காகிதம் எழுதியிருந்தான். நான் உன்னை நல்லவிதமாகப் பார்த்துக் கொள்கிறேன்," என்றாராம்.  அண்ணா கொண்டையராஜு அவர்கள் மிகப் பெரிய நாய்ப் பிரியர். அவர் நாடகக் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்குக் கப்பலில் பயணிக்கையில் அவருடைய வளர்ப்பு பிராணியான இரண்டு நாய்களையும் ஏற்ற மறுத்து விட்டார்களாம் கப்பல் கம்பெனி. நாய்களை ஏற்றவில்லையென்றால் நானும் வரவில்லை என்று பயணம் செய்ய மறுத்து விட்டாராம். கொண்டையராஜூ வரவில்லையென்றால் நாடகமே நடத்தமுடியாது என்று எண்ணிய நாடக கம்பெனி கப்பல்  நிறுவனத்தில் இதமாகப் பேசி லஞ்சத்தைக் கொடுத்து நாய்களைக் கப்பலேற்றிக் கொண்டு வந்தாராம் அண்ணா என்று தனது குரு குறித்து புன்முறுவலுடன் கூறினார்.

          நாடக கம்பெனி முதலாளி மதுரை பழனியாபிள்ளை முதலில் என்னை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார். நான் நன்றாக உட்கார்ந்து சம்மணங்காலிட்டு தொடையில் தாளம் தட்டிக் கொண்டே பாடிய போது நாடக கம்பெனி உறுப்பினர்கள் அனைவரும் என்னை ஆச்சரியமாகப் பார்த்து ரசித்தார்கள்.  அக்கால நாடகத்தில் இன்றைய காலம் போல ஸ்பீக்கர் கிடையாது. மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நாடகத்திற்குத் தேவையான போது உச்சபட்ச குரலில் பாடுவது பிரதான வேலையாக அமைந்து விட்டது.  இலங்கையில் அக்கால நாடகங்களில் விளம்பரத்துக்காக நோட்டீஸ் அச்சடிக்கும் போது சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கொண்டையராஜூவின் ஓவியங்கள் இடம் பெற்ற நாடகம் என்றுதான் அச்சடிப்பார்களாம். அந்த அளவுக்கு கொண்டையராஜூவின் நாடகத் திரைச்சீலை ஓவியங்களுக்கு மவுசு இருந்துள்ளது.

          சிறு வயதிலேயே பிழைப்புக்காக நாடக கம்பெனிக்கு மீனாட்சிசுந்தரம் வந்து விட்டதால் இயல்பாகவே யாவருக்கும் உதவி செய்திடும் உத்தம குணம் வாய்த்த ஓவியர் கொண்டையராஜூக்கு மீனாட்சிசுந்தரத்தைப் பிடித்து விடுகிறது. கொண்டையராஜூவின் அன்பு கலந்த அரவணைப்பும் கிடைத்து விடுகிறது.  நாடகம் முடிந்த பின்பு ஓய்வுள்ள நேரங்களில் ஓவியர் கொண்டையராஜூ நாடகத்திற்குத் தேவையான காட்சிகளை வரைந்து கொண்டிருப்பார். அச்சமயம் ஓவியம் வரைவதைப் பார்த்துக் கொண்டிருப்பாராம் மீனாட்சிசுந்தரம்.

          ஒருநாள் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து நாம் தொடர்ந்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கமுடியுமா என்று யோசித்த வேளையில் கொண்டையராஜூவிடம் போய் எனக்கு ஓவியம் கற்றுத் தருவீர்களா? என்று தனது ஆசையைத் தெரிவிக்க, உடனே அவரும் ஓவியம் வரையச் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டார். நாடக நேரங்களில் நடித்து விட்டு ஓய்வு நேரங்களில் ஓவியமும் கற்றுக் கொள்கிறார் மீனாட்சி சுந்தரம்.

          இதற்கிடையில் இலங்கையில் ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்திக் கொண்டு வரும் வேளையில் இரண்டாம் உலகப் போர் வந்தது. நாடக கம்பெனியை நடத்த முடியாமல் திணறினர். ஓவியர் கொண்டையராஜூ நாடகக் கம்பெனியை இந்தியாவிற்குக் கொண்டு வர முயன்றார். ஆனால் கொண்டு செல்வதற்குப் பணம் இல்லை. பணம் திரட்டுவதற்காக கொண்டையராஜூ மட்டுமே இந்தியாவிற்குப் பயணம் ஆனார்.  அச்சமயத்தில் நான் அண்ணாவைப் பார்த்து அழுது விட, கவலைப்படாதே, என்று என்னைத் தேற்றி விட்டு இந்தியா சென்று நான் பணம் திரட்டிவிட்டு விரைவில் வந்துவிடுவேன் என்று கூறி விட்டுச் சென்றுவிட்டார். நாங்கள் நாவலப்பட்டியிலிருந்து திரிகோணமலைக்கு வந்து விட்டோம். அங்கு உள்ள கடற்கரையில் எல்லா நாட்டுக்  கப்பல்களும் நிற்கும். ஏக்கத்துடன் அண்ணாவின் வருகையை எதிர்பார்த்துக்  காத்துக் கொண்டிருப்பேன். இவ்வாறாக வேடிக்கையாகப்  பார்த்துக் கொண்டே கொழும்புக்குப்  பயணம் ஆகி, கொழும்பிலிருந்து கப்பல் ஏறி ராமேஸ்வரம் வந்து அடைந்ததாகக்  கூறினார். நாடக கம்பெனியின் அனைத்துச் சாமான்களையும் அப்படியே இலங்கையில் விட்டு இந்தியா வந்து சேர்ந்து விட்டோம்.

          இந்தியா வந்து சேர்ந்ததும் திரும்ப நாடகக் கம்பெனியை உயிரூட்டி ராஜபாளையத்தில் நடத்த முடிவு செய்தோம். ஆனால் நாடக கம்பெனி ஒரு நிலையில்லாமல் தத்தளித்துக் கொண்டே வந்தது. நாடகமே நடத்தமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுச் சூனியமாகி விட்டது. அண்ணா உடன் இருந்த நாங்களோ செய்வதறியாது தவித்தோம்.  கொண்டையராஜு ஜமீன்தாரைச் சந்தித்து என்னை நம்பி இவ்வளவு பேர் இருக்கிறார்கள் “இனி மேல் எங்கே செல்வது என்றும் ஒன்றும் புலப்படவில்லை” என்று புலம்ப, ஜமீன்தாரோ நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். நான் இடம் தருகிறேன் என்றார்.

          ஓவியர் கொண்டையராஜூ பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். தனக்கென்று சொத்து சுகம் சேர்த்துக் கொள்ளாதவர். தனது சீடர்களுக்காகவே வாழ்ந்தவர். கோவில்பட்டியில் ஓவியர் கொண்டையராஜு இருந்த இல்லத்திற்குப் பெயர் திருவிலாஸ் என்று பெயர். இவரது சீடர்களான டி.எஸ். சுப்பையா, எம்.ராமலிங்கம், டி. எஸ். அருணாசலம், செண்பகராமன், சீனிவாசன் மற்றும் நான் போன்ற பல்வேறு சீடர்களும் வெவ்வேறு சாதி பின்புலத்திலிருந்தாலும் அவரது பிள்ளைகள் மாதிரி அவரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்போம்.

          ஆகையால் வீட்டின் முதலாளி குமாரசாமி நாடார் ஓவியர் கொண்டையராஜூவைப் பார்த்து “என்னய்யா சோசலிசம், சோசலிசம் என்று எல்லோரும் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் நீதான் அய்யா உண்மையான சோசலிசத்தை நடத்துகின்றீர் என்று கூறுவார். ஏனெனில் பல சாதிகளிலிருந்து வந்தாலும் வேலை பார்ப்பவர்கள் சாதிகளும் பார்ப்பதில்லை. ஒரே மாதிரியான சாப்பாடுதான் அனைவருக்கும். தினமலர் ஆசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தி கூட அண்ணாவின் சீடரே.

          கோவில்பட்டியில் தேவி ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கி அண்ணாவும் ஐந்து சீடர்களும் சேர்ந்து புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சிவகாசியில் அருணகிரி நாடார் நேஷனல் லித்தோ பிரஸ் ஆரம்பிக்கிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆப்செட் அச்சகங்கள் உருவாகின. அத்தனை ஆப்செட்காரர்களும் ஓவியர் கொண்டையராஜூ மூலம் கடவுள்படக்  காலண்டர் வரைந்து வெளியிடுவதற்கு வரிசைகட்டிக் கொண்டு நிற்பார்கள்.

          இதில் ஒவ்வொருவரும் காலண்டர் பட ஓவியங்களில் தனித் திறமையைக் காட்டிப்  படம் வரைந்து கொடுத்தாலும் கொண்டையராஜூ பெயரைப் போட்டு தன் பெயரை பின்னால் இணைத்துக் கொள்வார்கள். எம்.ராமலிங்கம் வரைந்த கடவுள் காலண்டர் படம் மிகவும் பிரபலமாகி விட்டதால் முதன் முதலாக ராமலிங்கம் தனது குரு பெயர் போடாமல் தனது பெயரிலேயே காலண்டர் ஓவியங்கள் வெளியிட்டார்.

          பின்பு படிப்படியாக ஒவ்வொருவரையும் அவர்கள் வரைந்த நாட்காட்டி ஓவியங்களுக்கு அவரவர் பெயரிலேயே வர அவரே (கொண்டையராஜு) அனுமதித்தார். எனது கடவுள் பட காலண்டர் ஓவியங்கள் கடைசி வரை அண்ணாவின் பெயரைப் போட்டுத்தான் எனது பெயரைப் போட்டு வந்ததாகக் கூறுகிறார்.

          மீனாட்சி சுந்தரம் அவர்கள் வரைந்து மிகவும் புகழ் பெற்ற படங்கள் விவேகானந்தர், காஞ்சி பெரியவர் படம், வாமனன், ஆதாம் ஏவாள், சில தேசிய தலைவர்கள் முகப்போவியப்  படங்கள் இருந்தாலும், போட்டோ ஸ்டுடியோவுக்கான பேக்ரவுண்ட் டிசைன் வரைவதில் தனிக் கவனம் செலுத்தியவர். இதனைத் தவிர நேம் போர்டு டிசைன் வரைவது போன்றதும். தேவி ஆர்ட் ஸ்டுடியோ மூலமாக இந்தியா முழுமைக்கும் இவரது ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன் பேனர் எண்ணற்ற அளவில் வரைந்து கொடுத்த இந்தக் கைதான் என்று இப்பொழுது அவர் இருக்கும் நிலையில் என்னால் நம்ப முடியவில்லை.

          ஒருதடவை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இதழில் வடநாட்டு ஓவியர் வரைந்த காந்தி படத்தைப் பார்த்து அதை அப்படியே மறு உருவக் காப்பி எடுத்துச் சிறப்பாக வரைந்து காலண்டர் படமாக வந்து விட்டது. பொதுவாகக் கோவில்பட்டி ஓவியர்கள் வடநாட்டு ஓவியர்களுடைய நல்ல காந்தி, புத்தர் படைப்புகள் வரும் பொழுது அதனை அப்படியே காப்பி அடிப்பது வழக்கம்தான்.

          அது மாதிரி மீனாட்சிசுந்தரம் அவர்கள் வரைந்த காந்தி படத்தின் மூல ஓவியர் வழக்குப் போட்டு விட்டார். இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது அக்காலத்தில் ஓவியர் உலகில் இந்த வழக்கு பரபரப்பாகப் பேசப்பட்டு வந்துள்ளது . ஓவியம் வரைந்த இவர் தனது குருவின் பெயரைத் தாங்கி வந்ததால் அண்ணா (கொண்டையராஜூ) கோர்ட் கூண்டில் சாட்சி சொல்ல வேண்டியதாயிற்றாம். கொண்டையராஜூ தனது கூர்த்த மதியினால் மூல ஓவியத்திற்கும், இவர் வரைந்த ஓவியத்திற்கும் காந்திபடத்தில் உள்ள தொண்டைப் பகுதியின் வித்தியாசத்தை எடுத்துக் கூறி நீதிபதி நம்பும்படி கூறி வழக்கு தள்ளுபடியாகி விட்டதாம் என்று சொல்லிக் கொண்டு சிரித்து விட்டார்.

          ஜவஹர்லால் நேரு தூத்துக்குடி வருகை தந்த போது கமலா நேருவை கட் அவுட்டாக வரைந்து வைத்திருந்தாராம். அப்படத்தைப் பார்த்து யார் வரைந்தது என்று கேட்டுக் கூப்பிட்டு மீனாட்சி சுந்தரம் அவர்களை நேரு பாராட்டியுள்ளார்.  ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியைப் போன்று வரைந்து கீழ் மூன்று மனிதர்களை வரைந்து தீயவை கேட்காதே, தீயவை பேசாதே, தீயவை பார்க்காதே என்று இவர் வரைந்த காலண்டர் ஓவியம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டதாம் அந்த நாளில். ஒரு தடவை கோவில்பட்டியில் சுபாஷ் சந்திரபோஸ் குறித்தான நாடகம் நடத்தினோம்.  அந்த நாடகத்திற்காக போஸ் கட் அவுட் வரைந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வேளையில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு போலீஸ்காரர் மக்கள் ஊர்வலத்துக்கிடையில் மாலை போட்டாராம். அன்றைய வெள்ளையர் ஆட்சி கட் அவுட்டுக்கு மாலை போட்ட போலீசாரை அடையாளம் கண்டு சஸ்பெண்ட் செய்து விட்டார்கள் என்று நினைவினைக் கூர்ந்தார்.

          கோவில்பட்டியில் கொண்டையராஜுவின் சீடர்கள் அனைவரும் போட்டோ ஸ்டுடியோ தனித் தனியாக நடத்தி வந்த வேளையில் இவரும் லலிதா ஸ்டுடியோ என்ற பெயரில் சிறப்புடன் நிர்வகித்து வந்தார். வயது முதிர்ந்தவுடன் ஸ்டுடியோவினை வேறு நபரிடம் கொடுத்து விட்டுக் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகத் தனது மனைவியுடன் மதுரை திருநகரில் வசித்து வருகிறார். கோவில்பட்டி மாரீஸ் அவர்கள் மீனாட்சி சுந்தரம் அவர்களை மாமா என்று அன்புடன் அழைத்து பாசம் காட்டி வருபவர். என்னிடம் எட்டு வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நலிந்த கலைஞர்களுக்கான நாடக ஓவியக் கலைஞர்களுக்கான முதியோர் பென்சன் ஏற்பாடு செய்யச் சொல்லி என்னிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார். எனக்கோ எப்படிப் போய் துறையை அணுகுவது என்று தெரியாமல் காலமும் கடந்து போய் விட்டது. சென்ற வருடம் மனைவியும் காலமாகி விட்ட பின்பு தனது மகளின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

          நானும் அவரிடம் போய் முதியோர் பென்சனுக்கு ஏதாவது முயற்சி செய்யலாமா என்று கேட்டேன். அவர் அதெல்லாம் எதற்கு. கலெக்டர் ஆபீசுக்கு இதற்கென அலைய வேண்டும். என்னால் அலைய முடியாது. எனக்கு ஒன்றும் குறைவில்லை. என்னை என் பெண் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். வாழ்வது வரைக்கும் வாழ்ந்து பார்த்து விடுகிறேன் என்ற வெண்கலக் குரலில் பலத்த சப்தத்துடன் சிரிக்கிறார்.

          சென்னை பல்கலையில் வீ.அரசு அவர்கள் ஏற்பாடு செய்த வெகுசனகலாசாரம் கருத்தரங்கின் ஒரு பகுதியாக கொண்டையராஜூ ஓவியர்களின் சீடர்களில் ஒருவராக இருக்கும் இவரை கவுரவப்படுத்தும் விதமாக இவரது ஒப்புதலை எவ்வளவோ மன்றாடி நானும் மாரீஸ் அவர்களும் முயற்சி செய்தோம். நேரிடையாக முதிய வயதைக் காரணம் காட்டி மறுத்து விட்டார். தன்னை எப்பொழுதுமே முன்னிறுத்திக் கொள்ள விரும்பாத அதே வேளையில் தனது குருவினை மட்டுமே நினைவலைகளில் போற்றி கொண்டாடுகிறார்.

          தமிழக அரசு இவரை நலிந்த ஓவிய நாடகக் கலைஞர்களுக்கான பிரிவில் முன் வந்து உதவினால் நல்லது. ஏனெனில் அன்றைய கால நாடகக் கம்பெனியிலிருந்து கொண்டையராஜூ சீடர்களில் ஓவியராக மாறியவர் மீனாட்சிசுந்தரம். பழைய நாடகக் கம்பெனி குறித்த செயல்பாடுகளினை சிரிக்கச் சிரிக்கத் தனது வெண்கலக் குரலில் பேசும் அழகே அலாதியானது. இவருடன் நடித்த நாடகக் கலைஞர்கள் பலர் பழைய கால சினிமாக்களில் வந்துள்ளனர். இவர் மட்டுமே நாடகத்திலிருந்து ஓவியராகப் பயணித்து ஸ்டுடியோ நடத்திவிட்டு இன்று தனது மகள் வீட்டின் அரவணைப்பில் மதுரையில் வாழ்ந்து வருகிறார்.


குறிப்பு: கொண்டையராஜூ ஓவியரின் சீடர்கள் அனைவரையும் 2012 - 2015 வாக்கில் நேர்காணல் செய்தது. 2015 பெரு மழை வெள்ளத்தில் அழிந்து விட்ட நேர் காணல்களை முடிந்த வரை மீட்டெடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதி இது.

படம் 1: கே.எஸ். மீனாட்சி சுந்தரம் (வயது 92)
படம் 2: காஞ்சி பெரியவர்
படம் 3: ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன்
படம் 4 - 5 : ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன்
படம் 6: ஆதாம் ஏவாள்
படம் 7: வாமனன்


படங்கள் உதவி: கோவில்பட்டி மாரீஸ்

தொடர்பு:
ரெங்கையா முருகன்
https://www.facebook.com/rengaiah.murugan.73


Thursday, April 23, 2020

தமிழே வணக்கம்

தமிழே வணக்கம்    
                                                          
 - வி.அன்பரசி

தமிழே வணக்கம்  
என் இனிய தமிழே வணக்கம்(2)   
சங்கம்தனை கொண்ட செந்தமிழே வணக்கம் 
சிங்காரத் தமிழே செங்கதிர்ச்சுடரே
தீந்தமிழே வணக்கம் (என் இனிய...)

உனைக்கண்டு வியந்தேன் 
உளமார மகிழ்ந்தேன் 
உனைப்பாட விழைந்தேன் 
உலகறிய மொழிந்தேன் 
கவலைகள் தணிந்தேன்  
கருத்தினில் ஒளிர்ந்தேன் 
கலக்கம் மறந்தேன் 
கரைசேரத் துணிந்தேன் ( என் இனிய...)

நின்மொழி கண்டேன் 
நிலையொன்றில் நின்றேன்                   
வரம் கொண்டேன்   
சிரம் நிமிர்ந்தேன்        
சீரோடும் சிறப்போடும் செழிப்போடும் 
நின்னை எண்ணி வாழும் மனிதம் 
வாழவழி செய்தாய் நன்னடை கொண்டு நித்தமும்
வாழிய வாழியவே 
என் இனிய தமிழே வாழியவே (என் இனிய...)

தென்னகம் குடிகொண்டாய்
பார்போற்றும் பைந்தமிழே  
தென்றலாய் வந்தகிலமெலாம் போரகற்றும் சங்கத்தமிழே 
எத்திக்கும் பரவும் எழிலே!! 
திகைக்கும் பொன்மொழியே!!! திக்கெங்கும் செழித்திட       
வாழிய வாழியவே 
என் இனிய தமிழே வாழியவே (என் இனிய...)

இதயத்தை அள்ளும் இளங்கோவடிகள் !


இதயத்தை அள்ளும் இளங்கோவடிகள் !

- முனைவர். ஒளவை அருள்

 

  இன்றைய நாள் (24-4-2020) இளங்கோவடிகள் படிமச்  சிலைக்கு மாலை அணிவிக்கும் நன்னாளாகக் கருதப்படுகிறது.

  அன்னைத்தமிழுக்கு அழகு சேர்க்கும்  அணிகலன்களாக இலக்கியங்கள் அமைந்துள்ளன.

  கவியோகி சுத்தானந்த பாரதியாரின் தமிழ் வாழ்த்துப்   பாடல் ஒரு காலத்தில் பாட நூல்களிலிருந்தது.

“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் 
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் 
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் 
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் 
பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த்  
திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க !”  

  என்பது அந்தப் பாடலாகும்.

  இந்த வரிசையிலேயே சிலம்பைத் தொடர்ந்து சேர நாட்டில் வாழ்ந்த மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ்த்தாயின் திருவடியில் சிலம்புக் கீழ்க் கால் விரலுக்கு அணிகலனாக மனோன்மணீயத்தை அணிவித்தார்.

  இளங்கோவடிகள் சேர நாட்டு இளவரசர் . சிலப்பதிகாரத்தில் அவர் துறவு பூண்ட கதையும் வருகிறது. 

  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்பது போல 
  முத்தமிழ், 
  மூவேந்தர்,
  மூன்று நீதிகள்,
  மூன்று தலைநகரங்கள் – 
  மூன்று நகரங்களின் பெயர்களிலும் மூன்று எழுத்துகள்,  
  மூன்று காண்டங்கள் 
  மூன்று பத்துக் காதைகள்  
  முதன்மை பெற்ற கதை மாந்தர்கள் மூவர் 

எனப்  பொருளாலும், புனைவுகளாலும், வடிவாலும், வனப்பாலும், சிலப்பதிகாரத்தைப் புதுமையாகப் புனைந்தார்.

  சேர இளவரசர் ஆனாலும் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியதாகப் பொதுமை  பொலிந்த  இலக்கியமாகச் செய்தார். இளங்கோவடிகள், நாடாளும் அரச மரபினர் கவிதை புனைவதைப் போலவே, கற்றறிந்த கலைக்களஞ்சியமாகவும்  துறவு வாழ்க்கையில் வாழ்ந்திருக்கிறார்.

  பனையோலைகளைப்  பின்னி நிறமூட்டிய அந்த ஓலைத்தடுக்கை  உற்று நோக்கும் இளங்கோவடிகள், காட்டுக் குறத்தியின் கைவண்ணத்தைத்  "தாலப்புல்லின் வால் வெண்தோட்டுக் கைவல்   மகடுஉ  கவினுறப் புனைந்த செய்வினை தவிசு" என்று ஓவியம் போல வரைகிறார்.

  ஆடற்கலை, இசைக்கலை, அழகுக்கலை, கட்டிடக்கலை, வணிகக்கலை என்று அடுக்கினால் எண்ணெண்   கலைகளையும் நுண்மையாக அறிந்து பண்பாட்டு புதையலாகச்  சிலப்பதிகாரக் காவியத்தைப்  படைத்தார்.

  சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், எழுத்தின் திறனையோ, இன்சொல்லின் அழகையோ,  பொருளின் அழுத்தத்தையோ எதனை வியந்து நான் முழுத்தும் பழுதற்ற முத்தமிழ்ப் பாடலுக்கு உரையெழுதத் துணிந்தேன் என்று அவையடக்கமாகக் கூறுகிறார்.

  சிலப்பதிகாரம் படைத்துக் காட்டிய பூம்புகார் பதினாறாம் நூற்றாண்டைய இலண்டன் மாநகரத்தைப்  போலக்  காட்சிதரும் என்று கல்வெட்டுப் பேராசிரியர் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிட்டார்.

  பூம்புகாரின் அழகையும்  அங்கே அமைந்த கோட்டங்களையும்,  மதுரையின் மதில்  அழகையும், வீதியழகையும்,வணிக மாட்சியையும் சேர நாட்டு வேந்தன் இமயத்தை நோக்கிச் செல்லும் செலவின் பெருமிதத்தையும், நாடுகள், நகரங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், வேந்தர்கள்  எனச்  சிலவற்றை அடுக்கிச் சொல்வதிலும்   ஒருமைகாண் பதிலும் அடிகள் ஈடில்லாதவர் .
        நாடாளும் அரசகுலத்தின் பெருமிதம் விளங்க வாழ்ந்த அடிகளாகிய சேரநம்பி வாழ்வில் பழகும்   எவ்வளவு எளிய பொருளையும் ஆழ்ந்தும்  கூர்ந்தும்  பார்த்துப்  பொங்கும் புலமை வெள்ளம் புரளத்  தீட்டியுள்ளார். ஆயர்பாடியில் அந்திவேளையில் கோவலன் அமர்ந்து உண்ணுகிறான். உண்பதற்குக்  கண்ணகி அழைப்பதற்கு  முன்னால் அமர்வு தவிசிடுகிறாள். இந்நாளில் அதனைத் தடுக்கு, மணை  என்பார்கள்.

  மாதவி ஆடல் நிகழ்த்திய அரங்கத்தினுடைய அமைப்பும், அளவும், வலிவும், பொலிவும் தெரிய வேண்டுமா ? இன்றைய பொறியாளர்களுக்கு இந்த அளவைகள்  ஒரு கலை விருந்து. கண்களை மூடிக்கொண்டு இன்றைய  அண்ணாமலை மன்றத்தைக் கற்பனை செய்து  காணலாம்.

  “சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகள்  வழுவாத வகையில்  அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கிய  ஓரிடத்தில்  நிலத்தை  வகுத்துக்கொண்டு, பொதிகை  முதலாய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலில்  அதுவும் ஒரு கண்ணொடு கண்ணிடை ஒரு சாணாக  வளர்ந்ததைத்  தேடிக் கண்டு கொண்டு வந்து, அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல், உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, அக்கோலால் எழுகோல் அகலமும், எண் கோல் நீளமும் ஒருகோல்  குறட்டுயரமும் உடையதாய்த், தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்குமாக  அரங்கம் ஆடல் மன்றமாயிற்று.” 

  ஆடலின் அமைதி கூறியதுடன், ஆடலாசிரியன், இசையாளன் , நன்னூற்புலவனான கவிஞன், தண்ணுமையாசிரியன், குழலோன், யாழ்ப் புலவன் முதலாகக்  கவிதை இயற்றுபவனும், இசையமைப்பாளனும், இசைக் கருவி இயக்குவோரும், ஆடல் நிகழ்த்துபவரும், ஆடல் மகளிரும் இடம் பெறுகின்றனர். ஒரு முழுமையான கலைக் குழுவின்  சித்திரமாக இது அமைகின்றது.  மேலும் ஊர்காண் காதையில் பல்வகை மணி பற்றிய அறிவைக் கோவலன் பெற்றிருந்ததைக் காணலாம். நல்மணிகளைத் தேரவும், பிறவற்றின் குற்றம் காணவும், பல்வகைக்குறைகளின் இயல்பு அறியவும் வல்லவனாகக்  காட்டியதுடன், வணிகனென்ற நிலையில் கோவலனின் மனப்பாங்குக்குப் பொருந்தக் கண்ணகியின் அழகைப் புகழும் போது,   'மலையிடைப் பிறவா மணியே ! ' 'மாசறு பொன்னே'  என்றும்  கூறுகிறான் .

  பூம்புகார் வீதிப் பெருமையைச் சொல்லும் போது காண்பவரைக்  கவர்ந்து நிற்கும் யவனர் இருக்கையும் மிளிர்ந்துள்ளது. ஆடல் அரங்கத்தில் விடுதிரை, விலகுதிரை என்ற இரு எழினிகளைக்  குறித்திருப்பதை ஆராய்பவர்கள் எழினி, யவனிகா   என்ற பெயர் ஒற்றுமைகளைக் காட்டிக் கிரேக்க நாடக அரங்குகளின் திரைஅமைப்பை இங்கே காணலாம் என்று எழுதியுள்ளனர்.

  மாதவி குளித்தெழுந்த பங்கயத் தடாகத்தில் ஊறி மிதந்த 32 வகை நறுமணப் பொருள்களையும், சேரர் செம்மல்  இளங்கோவடிகள் புலமை  மிகுந்த வரிகளில் பட்டியலிட்டுப் படம் பிடிக்கின்றார்.  அணிகலன்களென்றால்  மாதவியாளின் கால்விரல்களில் மகரவாய் மோதிரம், பீலி, காலாழி துலங்க -  அவள் கால்களில் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை சிணுங்க -  குறங்குசெறி ஒடுங்க -  ஆடைமீது முத்தரை விளங்க -  தோள்களில் கண்டிகையும், முத்துவளையும் மினுங்க -  முன்கைகளிரண்டில் சூடகம், செம்பொன்வளை, வால்வளை, பவழப்பல்வளை குலுங்க, கைவிரல்களில் முடக்கு மோதிரம், கிளர்மணி, மரகதத் தாள்செறி விளங்க -  கழுத்தில் சங்கிலி, நுண்தொடர், பூண்ஞாண், புனைவினைப் பொலிய  -   பிடரில் முத்துக்கோவை ஒளிர  -  காதுகளில் நீலக்குதம்பை, வைரக்குதம்பை அடங்க -  தலையில் வலம்புரி, தொய்யகம், புல்லகம் அணிந்து  இருபதுக்கு மேற்பட்ட  பொன்னகைகள்  பொலியும்  புன்னகை  அரசியாக  மாதவியை நம்முன் நிறுத்துகிறார்.     

  எண்ணுவது, பேசுவது, எழுதுவது ஆகியவெல்லாம் மில்டனின் படைப்பைப் பற்றி மட்டுமே என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களும், வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளிலேயே நாற்பதாண்டுகள், ஐம்பதாண்டுகள் மூழ்கிக் கிடப்பவர்களும், ஜேன் ஆஸ்டினின் ஐந்தாறு நாவல்களைத் தவிர வேறெதிலும் வாழ்க்கையைக் காண மறுப்பவர்களும், ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மூலங்களைப் பற்றிய ஆய்விலேயே ஆயுள் முழுவதையும் செலவிடுபவர்களும் இங்கிலாந்தில் உண்டு. ஹாரல்டு புளூம் எனும் யூதப் பேராசிரியர் ஐரோப்பிய இலக்கியங்களைப் பற்றி எழுதிக் குவித்திருக்கும் நூல்களைப் பார்ப்பவர், இவருக்கு உண்ணவும், உறங்கவும், உடுக்கவும் எங்கிருந்து நேரம் கிடைக்கிறதென்று வியப்புறத் தோன்றும். பேராசிரியர் மருதநாயகம் மேலைநாட்டார் இலக்கியங்களை எவ்வாறு போற்றித் துதிக்கிறார்கள் என்பதைப் பற்றி இவ்வாறு  ஆராய்ந்து கூறுவது நமக்கு மலைப்பாகப்படுகிறது. 

  சிலப்பதிகாரம் மட்டும் ஆங்கிலப் புலவர்களுக்குக்  கிடைத்திருந்தால், எங்களுக்குக் கிடைத்தது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரத்துக் கதை (Tale of Two Cities) தமிழர்களுக்கோ மூன்று நகரக் கதை (Tale of Three Cities) கிடைத்தது என்று பாராட்டிச்  சேரன் தம்பியின் இலக்கியப் புலமைக்குத் தலை வணங்குவார்கள். சிலப்பதிகாரக் களஞ்சியத்தில் தகவல்கள்  நூற்றுக் கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.

  அருகன் பெயர்களை அடுக்கி உரைப்பதும், பிறவா யாக்கை  பெரியோன் கோயில் என்று சிவன் கோயிலையும், திருப்பதியில் திருவேங்கடவனின் நின்ற கோலத்தையும், திருவரங்கத்தில் கிடந்த வடிவத்தையும் காட்டுவது போலவே ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப் பற்றியும் குன்றக் குரவையில் முருகனைப் பற்றியும் வேட்டுவ வரியில் கொற்றவையையும் குறிப்பிட்டுள்ளார்.  சமய நல்லிணக்கமும், சமரசப் பொதுமையும் சேரர் குலத் தோன்றலிடம் தழைத்தோங்குகின்றன.

  தமிழகப் படை வீரர்கள்  மலை முதுகு நெளிய நடந்தனராம். தமிழ்  என்றால் மொழி மட்டுமன்று. காதல், இனிமை, இலக்கியம் என்று பல பொருள் படுவதுபோலப் படைவீரர்களின் ஆற்றலைக் கூடத்  தமிழ் என்றே பாடிய தமிழ் மறவர் இளங்கோவடிகள் ."காவா நாவில் கனக விசயனும் அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்" என்று கூறியதாக அமைத்துள்ளார். தென்தமிழ் ஆற்றல் என்றே மேலும் சில இடங்களில் காணலாம்.

  “அரசியலில் தவறு செய்தவருக்கு அறமே கூற்றாவதும்”   
  “பத்தினி மகளிரை உயர்ந்தோர் பாராட்டிப் போற்றுவதும்” 
  “ஊழ்வினை விடாது வந்து ஊட்டும்” 

  என்ற மூன்று உண்மைகளை  நூலிழை போலக்  கோர்த்துச் சிலப்பதிகாரக் காப்பியத்தின் செம்பொருளை இளங்கோவடிகள் வலியுறுத்தினார்.

  பாண்டிய நாட்டில் அரசியலில்  தவறு நடப்பதும், சேர நாட்டில் பத்தினிக்  கடவுளைச்   சிறப்பித்துப் போற்றுதலும்,சோழ   நாட்டில் யாழிசை மேல் ஊழ்வினை ஆட்சி செய்தலையும் காணலாம்.

  செழிப்பான மாபெரும் செல்வக் குடும்பத்தின் மங்கலத் திருமணம் என்ற வகையில் யானை மீது மகளிர் அமர்ந்தபடி ஊர்வலம் வந்து கண்ணகி-கோவலன் திருமணச் செய்தியை மாநகர மக்களுக்கு அறிவித்தார்களாம்.

  தமிழ்நாட்டு மக்களுக்குக் காவிரியாறு அன்னை போல் இருந்து அமுதூட்டினாலும்,  சோழ நாட்டுக்குக் காவிரிநாடு என்றே பெயர். உழவர்களைக்  காவிரி தன்  புதல்வர் என்று புகழ்கிறார்.

  மன்னவராகப் பிறந்து ஆட்சி செய்வது பெருந்துன்பம் தரும்  கடினமான பணியாகும்.மக்களுக்கு எல்லா நிலைகளிலும் வளத்தையே வழங்கும் இடர்ப்பாடுகள் உள்ள பொறுப்பு என்று மேலை அரசியலறிஞர் கூறுவதைச்  சேரன் செங்குட்டுவனின்  சொற்கள் அப்படியே மெய்ப்பிக்கின்றன. 

  மழை பெய்யாது போனால் மனம் கலங்கும். உயிர்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் மனம் நடுங்கும். இப்படி அச்சத்துக்கு நடுவில் அகப்பட்டு அல்லலுறும் வாழ்க்கை தான் அரச வாழ்க்கை. இது துன்பம் தருவதே தவிரத் தொழுதற்குரிய பெருமை இதில் இல்லை என்று சேரன் செங்குட்டுவன் கூறுவதாகச் சேரர் தோன்றல் அரசுப் பொறுப்பின் கடமைச்சுமையைக் காட்டினார்.  

  சேரன் செங்குட்டுவனைப் பற்றிய ஒரு சுவையான செய்தி. சேர மன்னனின் எடையளவைக்  கண்டறிய  அறிஞர் மு.இராகவையங்கார், ஒருவாறு கணக்கிட்டு 300 முதல் 375 பவுண்டு (136 கிலோ முதல் 170 கிலோ) வரை என்று குறித்துள்ளார். மகுடம், மார்புக்கவசம், உடைவாள், கால் புதையரணம், இடையில் அணிந்த கச்சு எல்லாம் சேர்த்துத்தான் துலாபாரம் நடந்தது. 50 துலாபாரம் பொன் என்று குறித்துள்ளார். உயரத்தை நம்மால் அளவிட்டு அறிய முடியவில்லை.   

  சிலப்பதிகாரத்தை முடிமன்னர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் என்று நாடெங்கும் பரப்பிய நம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., அவர்கள், சென்னையில் 24.04.1956 இல்  செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாகச்  சென்னை மாவட்டத் தமிழரசுக் கழகத்தாரால் இளங்கோ விழாவைத்  தொடங்கி வைக்கச் செய்தார். 

  இந்த வகையிலும், சிலப்பதிகாரத்தில் 28 நாள் நிகழ்ந்த இந்திர விழவூரெடுத்த காதையில் குறிப்பிடப்படும்  சித்திரைத் திங்களின் சித்திரை முழுநிலவைக் கருதியும்  எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு இந்திரா விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 24ம் நாளில் இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. 

  சிலப்பதிகாரம் ஈடு இணையற்ற முத்தமிழ்க்காப்பியம். இயல், இசை, நாடகம் பின்னிப் பிணைந்த பெருங்காப்பியம். சிலப்பதிகாரத்தை நினைக்கும் போது ஒரு வகையில் மனம் கலங்குகிறது. சேர நாடு நம்மோடு சேராத நாடாயிற்று. பூம்புகார் கடலில் மூழ்கியது. மதுரையின்  ஒரு பகுதி கனலில் கரிந்தது. வஞ்சி மாநகரம் எங்கே என்று தேட முடியாதபடி  மணலில் புதைந்தது. காற்சிலம்பு அணிவதை மகளிர் எப்போதோ மறந்துவிட்டனர். 

  இந்திர விழா ஊர் மக்களால் இப்போது கொண்டாடப்படுவது இல்லை. யாழ் இப்போது இல்லை .கோவலன் கொல்லப்படுகிறான், பாண்டியன் அரசுக்கட்டிலில் விழுந்து இறக்கிறான். கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறக்கிறாள். அடைக்கலம் தந்த இடைக்குல மாதரி தீப்பாய்கிறாள். கவுந்தியடிகள் உண்ணாநோன்பிருந்து உயிர் விடுகிறார். கோவலன் தாயும், கண்ணகி தாயும் உயிர் துறக்கின்றனர், பூம்புகாரின் பொற்கொடி  மாதவி புத்த மதத் துறவியாகிறாள், கோவலன், கண்ணகி தந்தையர் துறவறம் கொள்கின்றனர் . இவ்வாறு அவலக்கடலில் அடுக்கிய இடுக்கண்களால் துன்பியல் நாடகத் தொடர்ச்சி நிறைவடைகிறது.

  சிலப்பதிகாரம் ஓர்  அரிய பெரிய ஆவணம்.
  நீங்காத நினைவுச் சின்னம்.
  பண்பாட்டின் பெட்டகம்.
  பழங்கலைகளின் புதையல். 


நன்றி: உலகத்தமிழ் 
   

முனைவர்.  ஒளவை அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை
தமிழ்நாடு அரசு
Saturday, April 18, 2020

ஹிந்தியில் வழங்கும் உயிர் இடம் பெயர்ந்த தமிழ்ச் சொற்கள்

ஹிந்தியில் வழங்கும் உயிர் இடம் பெயர்ந்த தமிழ்ச் சொற்கள்   

—   முனைவர்.ச.கண்மணி கணேசன் முன்னுரை:
தமிழில் பண்டுதொட்டு வழங்கும் சில சொற்கள் உருபொலியனியல் விதிகளுக்கு உட்பட்ட சில மாற்றங்களை ஏற்று ஹிந்தியில் வழங்குவதைத் தொகுத்துக் காட்டும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகக் கருதக்கூடிய ஹிந்தியில் வழங்கும் சொற்கள் பெரிதும் சம்ஸ்கிருத வழக்குகளைப் பின்பற்றி அமைந்திருக்கும் ஆதலால்; இக்கட்டுரை தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றுள்ள சொற்களை அடையாளம் காணும் முயற்சியாக அமையும். இன்றைய தமிழ் வழக்குகளும், ஹிந்தி வழக்குகளும் முதல்நிலைத் தரவுகளாக அமைய; தொகைநூல் வழக்குகளும், உருபொலியனியல் விதிகளும், ஒத்த பிற மாற்றங்களும் துணை ஆதாரங்களாக அமைகின்றன.

            அரசு >>> राज 
தொகை நூல்களில் ‘அரசு’ என்னும் சொல் மன்னன் என்றும் அரசாங்கம் என்றும் பொருள்பட்டு முறையே; 
அரசே     அரசோ     அரசோடு     அரசும்     அரசின்     அரசன்     அரசனை     அரசியல்     அரசு 
எனப்பல உருபுகளுடனும் விகுதிகளுடனும் சேர்ந்து 44முறை பயின்று வருகிறது. வடமொழியில் வழங்கும் ‘ராஜ்’ என்ற சொல்லுடன் ஒலியொப்புமையும் பொருள் ஒப்புமையும் கொண்டுள்ள இச்சொல் பின்வரும் மாற்றத்திற்கு உட்பட்டு உள்ளது.          
arasu >>>  raasu >>>  raaj 
இது உயிர் இடம்பெயரல் என்னும் விதி அடிப்படையில் அமைந்த மாற்றம் ஆகும் (இக்கால மொழியியல்- உருபொலியனியல்).

இந்தோஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் ஒரு கிளையாகிய இந்தோஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஹிந்தியில் வழங்கும் இம்மாற்றம் இந்தோ ஐரோப்பிய மொழி வழக்காறுகளோடு ஒப்புநோக்கற்குரியது.
royal     region     regal     right     rule     regular     regiment     real     rank     realm
போன்ற சொற்கள் அனைத்தும் தொடர்புடையன என்னும் கருத்து நிலவுவதும் சிந்திக்கத் தக்கது. இவ்ஆங்கிலச் சொற்கள் லத்தீன், பழைய ஃபிரெஞ்ச், போர்ச்சுகீஸ், சமஸ்கிருதம், பழைய ஐரிஷ், டச்சு, மூல ஜெர்மானியம், ஜெர்மானியம் போன்ற மொழிகளிலிருந்து வந்து ஆங்கிலத்தில் வழங்குவன. தமிழில் உள்ள ‘அரசு’ மூலச்சொல் என்பதைப் பிற உயிர் இடம் பெயர்ந்த சொற்களைக் கொண்டு நிறுவலாம்.                                                                    
ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள rice என்னும் சொல் தமிழிலுள்ள ‘அரிசி’ என்ற சொல்லில் இருந்து அதே உயிர் இடம்பெயரல் என்னும் விதிக்கு உட்பட்டு அடைந்த மாற்று வடிவம் என்பதில் ஐயமில்லை. ‘வெள் அரிசி’, ‘கழைநெல் அரிசி’, ‘வரகின் அரிசி’, ‘கொய்குரல் அரிசி’, ‘தினை அரிசி’, ‘அவைப்பு மாண் அரிசி’, ‘அவையா அரிசி, ‘புகர்வை அரிசி’, ‘முரியா அரிசி, ‘வால் அரிசி’, ‘குற்று அரிசி’, ‘பண்ணை வெண்பழத்து அரிசி’, ‘நெல்லின் அரிசி’ எனப் பல பெயரடைகளோடு ‘அரிசி’ என்னும் சொல் தொகை நூல்களில் 21முறை பயின்று வருகிறது.            
arisi >>> raisi  >>> rais 
ஆங்கிலத்தில் rice என்று எழுதுவோம். மொழியியலாளர் பலரும் ஏற்றுக்கொண்ட இம்மாற்றம் உயிர் இடம்பெயரல்  என்ற விதியைப் பின்பற்றியே விளக்கம் பெறுகிறது.   .

            அமர் >>> मार
'அமர்'  என்ற சொல் சண்டை அல்லது போர் என்ற பொருளிலும் தமிழில் வழங்கியது. தொகைநூல்களில் 71இடங்களில் இப்பொருண்மைப் பயன்பாட்டைப் பார்க்க இயல்கிறது. உயிர் இடம் பெயரல் என்னும் மாற்றத்தை அடையும் போது;   
amar >>> maar 
என்றாகி ஹிந்தியில் அடித்தல் எனும் பொருளில் வழங்குகிறது.

            உலகு >>> लोग  
உலகு என்ற தமிழ்ச்சொல் தொகைநூல்களில்;
உலக      உலகு     உலகத்தான்     உலகத்தானும்     உலகத்தானே     உலகத்து     உலகத்தும்     உலகத்துள்     உலகத்துள்ளும்     உலகத்தோர்க்கு     உலகத்தோர்க்கே     உலகத்தோரே     உலகம்     உலகமும்     உலகமொடு     உலகமோடு     உலகில்     உலகிற்கு     உலகினும்     உலகினுள்     உலகுடன்     உலகும்     உலகே     உலகின்        
எனப் பல்வேறு பின்னொட்டுக்களை  இணைத்துக் கொண்டு 184இடங்களில் பயின்றுவந்துள்ளது. இடப்பெயராகவும் இடவாகுபெயராகவும் தமிழில் வழங்கும் உலகு என்ற சொல்லில் உயிர் இடம்பெயர்ந்து; பின்வரும் மாற்றத்தை அடைகிறது.     
ulahu >>>lauhu >>> laug  >>> log 
ஹிந்தியில் log = மக்கள் என்ற பொருளில் வழங்குகிறது.

            அரண் >>> राणा 
‘அரண்’ என்னும் தொகை நூற்சொல் காவல் தரும் எயில், மதில், காடு முதலியவற்றுக்கு உரியதாக வழங்கியுள்ளது. 
அரண்கள்     அரணம்     அரணமும்     அரணால்     அரண்     
போன்ற சொல்வடிவங்களைத் தொகை நூல்களில் மொத்தம் 44இடங்களில் காணஇயல்கிறது. உயிர் இடம் பெயர்ந்து; பின்னர் ‘ஆ’காரத்துடன் இணைந்து ஹிந்தியில் கோட்டைக்குரியவன் என்னும் பொருள்படுகிறது. 
araṇ >>> rāṇ
rāṇ + aa = rāṇā 
ராணா பிரதாப்சிங் என்ற பெயரில் உள்ள ‘ராணா’ அவனைக் கோட்டையின் தலைவன் என்றே உணர்த்தி நிற்கிறது.

            உறுப்பு >>> रूप 
உடலின் பல்வேறு பாகங்கள் அல்லது முதற்பொருளின் பல்வேறு சினைப்பகுதிகளைக் குறிப்பதாகத் தமிழில் வழங்கும் 'உறுப்பு' என்ற சொல் தொகை நூல்களில் 4 இடங்களில் பயின்று வரக் காண்கிறோம்.
uṟuppu>>> ruup
ஹிந்தியில் ruup = உருவம் என்று பொருள்படுகிறது.    

            மா >>> आम 
மாமரம் என்னும் முதற்பொருளையும் மாம்பழம், தளிர் என்னும் சினைப்  பொருட்களையும் குறிக்கும் 'மா' என்னும் சொல் தமிழ்த்தொகை நூல்களில் 48 இடங்களில் உள்ளன. ‘’மாஅத்த’ என்று சொல்லிசை அளபெடையாகவும் பயின்று வருகிறது. ஹிந்தியில் உயிர் இடம் பெயர்ந்து;
Maa >>> aam 
என்றாகி மாம்பழத்தைக் குறிக்கிறது.    

            அலை >>> हिला  
அங்குமிங்குமாக இயங்குதல் என்னும் பொருளிலும்; அத்தன்மை உடைய நீரலையைக் குறிப்பிடுவதாகவும்; ‘அலை’ என்ற சொல் பல உருபுகளுடனும் இணைந்து; பல்வேறு வடிவங்களைப் பெற்றுத் தமிழில் வழங்கி வந்துள்ளது.
அலை     அலைக்க     அலைக்கும்     அலைக்குமே     அலைத்த     அலையில்     அலையால்     அலையா     அலைத்தென     அலைத்ததால்     அலைத்ததற்கு     அலைத்தரும்     அலைத்தாய்     அலைத்தான்     அலைத்தன்றே     அலைத்தி              அலைத்து அலைப்ப         அலைப்பவும்              அலைப்பேனா அலைஇயர்
எனப் பலவாறாகப் பயின்று வருவதைத் தொகைநூல்களில் 106 இடங்களில் காண்கிறோம். ஹிந்தியில் உயிர் இடம் பெயர்ந்த பின் ‘அசைய‘ என்னும் பொருள்பட; 
alai >>> hilaa 
என்று மாறி வழங்குகிறது. பின்னர் நீரலை என்னும் பொருள் தருவதற்கு;
hilaa >>> hilor 
என்று மாறி வழங்குகிறது.

முடிவுரை:
‘அரசு’ என்ற தமிழ்ச் சொல்லின் ஆக்கமும் மாறுபாடுகளும் பரந்து விரிந்த ஆய்விற்குரியது. அலை, மா, உறுப்பு, அரண், உலகு, அமர், அரிசி முதலிய சொற்கள் அடைந்துள்ள மாறுபாடுகளும் பயன்பாடுகளும்; இது போன்ற பிற சொற்களைத் தேடும் ஆவலைத் தூண்டுகின்றன.                                              

துணைநூற்பட்டியல்:
Lifco’s Hindi -Tamil Dictionary- S.R.Sarangapani (General editor)- lst edition reprint- 1992
முத்துச்சண்முகன் - இக்கால மொழியியல்- முதல் பதிப்பு- 1972 
நன்றி http://tamilconcordance.in/TABLE-sang.html   


தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி

 

Thursday, April 16, 2020

இணையம்வழியே தொடரும் நம் வரலாற்றுத் தேடலுக்கான பயணம்வணக்கம். 

          உலக மக்கள் அனைவரது சிந்தனையும் இன்று COVID-19  வைரஸ் பற்றியதாகவே இருக்கின்றது. ஒட்டுமொத்த உலகின் பெரும்பகுதியைச் செயலிழக்க வைத்திருக்கிறது இந்த நுண்ணுயிர் கிருமி. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது;  உலகப் பொருளாதாரம் எப்படி மீண்டு வரும் என்பது நம் முன்னே எல்லோருக்கும் இருக்கின்ற மிகப் பெரிய கேள்வி. இதற்கிடையே தான் தொடர்கிறது நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுத் தேடலுக்கான பயணம்.

          இவ்வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பாக வெளிவந்த `திருவள்ளுவர் யார்- கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்` என்ற திறனாய்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. திருக்குறள் ஐரோப்பியத் தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு லத்தின் மொழி தொடங்கி வெவ்வேறு ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த காலகட்டத்திற்குப் பிறகு கிபி 19ஆம் நூற்றாண்டில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பற்றி பல்வேறு புனை கதைகள் உருவாக்கப்பட்ட சூழலைச் சுட்டிக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடு தான் இந்த நூல். அறிவுக்குப் பொருந்தாத கதைகளைத் திருவள்ளுவரின் பின்புலத்தின் மீது ஏற்றி, திருவள்ளுவரின் பெருமையைக் குறைத்துச் சிதைக்கும் முயற்சிகளை வெளிச்சப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது இந்த நூல்.  வரலாற்றில் கட்டமைக்கப்பட்டுள்ள பொய்க் கதைகளை உடைத்துச் சிதைத்து மக்கள் சிந்தனையில் தெளிவு ஏற்படுத்த வேண்டியதும் நமது கடமைகளில் ஒன்றாக அமைகின்றது.

          ஐரோப்பா மட்டுமன்றி, இந்தியாவிலும் ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே இருக்கின்ற பலருக்கு அறிவுத் தேடலுக்கு உகந்த வகையில் பயனுள்ள நடவடிக்கைகளை உருவாக்கித் தரவேண்டும் என்ற சிந்தனையில் தமிழ் மரபு அறக்கட்டளை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் இணையவழி உரைகளை ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, இந்திய-இலங்கை நேரம் காலை 11 மணிக்கும் இரவு 10 மணிக்கும் குறிப்பிட்ட ஒரு துறையில் ஆய்வு தரத்துடன் கூடிய வகையிலான உரைகள் இப்போது தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த பேஸ்புக் நேரலை உரைத்தொடர் நிகழ்ச்சி தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்ற மூன்றாம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரண்டு ஆய்வுச் சொற்பொழிவு என்ற வகையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

          உலகத் தமிழ் மக்களின் கவனத்தை வரலாற்று ஆய்விலும், தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுச் சூழலிலும் குவிக்கும் வகையில், உலகின் பல நாடுகளிலிருந்து ஆய்வறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு பெற்று வருகின்றார்கள். ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஆய்வறிஞர்கள் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து ஆற்றிய உரைகளின் பட்டியலை இந்தக் காலாண்டிதழில் காணலாம். அந்த வகையில் முதல் 15 நாட்களில் 30 ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.          பேரிடர் காலங்களில் சாலைகளும் பிற பொது போக்குவரத்து வசதிகளும் இல்லாத பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லல்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் உலகின் பல பகுதிகளில் அடிப்படைத் தேவைகளும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா ஊரடங்குக் காலகட்டத்தில் நம் ஒவ்வொருவராலும் இயன்ற வகையில் உதவிக்கரம் நீட்ட வேண்டியது நமது கடமை தான்.

          இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன  மூக்குவத்தை தேயிலை பெருந்தோட்டப் பொதுமக்களுக்குத் தேவைப்படுகின்ற அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) நன்கொடையை வழங்கி உள்ளது.  ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 600 பெறுமானமுள்ள உணவுப்பொருட்கள் என்ற வகையில் 190 குடும்பங்களுக்கு இந்த அவசரக்கால உதவித்தொகை வழங்கப்படுகின்றது. நம் கண்களுக்கு எதிரே பொதுமக்களும் குழந்தைகளும் பசியால் வாடித் தவிப்பதைத் தவிர்ப்பதற்கு நம்மால் முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டி கை கொடுப்போம். சக மனிதரின் பசிப்பிணியைப் போக்குவது தான் நாம் இந்தப் பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமையாகத் தமிழ் மரபு அறக்கட்டளை கருதுகின்றது.

          COVID-19  வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளிலிருந்து உலக மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் கட்டுக்கோப்புடனும் மீண்டு வருவோம். இவ்வாண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும்கூட இணையம் நமக்கு அளித்திருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் வரலாற்று பாதுகாப்பு பற்றியும் வரலாற்று ஆய்வுகளைப் பற்றியுமான ஆய்வுரைகளை பேஸ்புக் வழி நேரலையாகத்  தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களுக்கு வழங்கிவருகின்றது. அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்கள் வரலாற்று ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் எனத் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.


அன்புடன்
முனைவர் க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
16.4.2020


____________________________________


          தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன  மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

          இத்தொகை இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் மலை உச்சியில் மக்கள் குறைவாக நடமாடும் பகுதியில் கொரோனா நிவாரண நிதி கிடைக்காமல் அல்லல்படும் மக்களுக்காக ஆசிரியர் சிவராஜ் கேட்டுக் கொண்டமையினால் வழங்கப்பட்ட நிதி உதவியாகும்.

இந்த நிதி உதவி வழங்கியதில் பங்கு கொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக்  கிளையினர்:
ஜெர்மனி - இலங்கை ரூபாய் 72,325.00/-
1. ஆசிரியர் சிவஞானம்
2. திரு.ஸ்ரீகந்தா குடும்பத்தினர்
3. திரு.கௌதம சன்னா
4. திரு. கார்த்தீஸ்வரன் காளிதாஸ்
5. திரு.கார்த்திக் சௌந்தரராஜன்
6. திரு.பாலலெனின்
7. முனைவர்.க.சுபாஷிணி

டென்மார்க் - இலங்கை ரூபாய் 6,000.00/-
1. திரு. தருமகுலசிங்கம்

நோர்வே - இலங்கை ரூபாய் 21,675/-
1. திரு.வேலழகன் மற்றும் நண்பர்கள்

          ஒரு குடும்பத்திற்கு 600 ரூபாய் வீதம் பெறுமானமுள்ள ஒரு வாரத்திற்கான உணவுப்பொருட்கள் இத்தொகையிலிருந்து 190 குடும்பங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளது.  இன்று இத்தொகை அனுப்பப்பட்டு அவசரக்கால உதவிக்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் வழி இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன  மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.

          இதன் வழி மலை உச்சியில் தேயிலைத் தோடங்களில் பணி புரியும் 190 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உணவுத் தேவைக்கு நாம் உதவியிருக்கின்றோம். தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குச் செல்லவில்லையென்றால் அன்றைய சம்பளம் இல்லை என்ற நிலையில் இம்மக்கள் வாழ்கின்றார்கள். ஊரடங்கு காலத்தில் இந்த உதவித் தொகை பல குடும்பங்களின் அடிப்படை உணவுத் தேவைக்கான தற்காலிக உதவியாக அமைகின்றது.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

___________________________________________

Monday, April 13, 2020

நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால் சரியான விளக்கம் கிடைக்குமா ?—   முனைவர்.ப.பாண்டியராஜா


          நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால்  சரியான விளக்கம்  கிடைக்குமா? என்ற ஒரு கேள்வி எழுந்தது. இதைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் தற்செயலாக எனக்குச் சில விளக்கங்கள் கிடைத்தன. இப்போது நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியத்திற்காக, ‘விதிர்’ என்ற சொல்லை விளக்க முற்படுகையில் இது நிகழ்ந்தது.

குறும்பூழ் எனப்படும் காடைப்பறவைக்கு மேனி முழுக்கப் புள்ளி புள்ளியாக இருக்கும். யாரோ ஒருவர் சிவந்த அரக்கினை அதன் உடம்பில் தெளித்துவிட்டாற்போன்று அது இருக்கிறதாம்.

                    விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
                    காமர் சேவல் - அகம் 103/3,4

தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையுடைய
அழகிய குறும்பூழ் சேவல்         
என்கிறது அகநானூறு.

          ஒரு பாத்திரத்தில் ஏதோ ஒரு குழம்பில் ஐந்து விரல்களையும் மேலாக நனைத்து, விரல்களைக் குவித்துப் பின்னர் ஒரு பரப்பின் மீது விசையுடன் பலமுறை தெறித்துவிட்டாற்போன்று அந்தப் புள்ளிகள் இருக்கின்றனவாம். இதைத்தான் ’விதிர்த்த போலும்’ என்கிறது பாடல்.

          திருமண நிகழ்ச்சிகளில் வாசலில் நுழையும்போது பன்னீர் தெளிக்கிறார்கள் இல்லையா? அதுவும் விதிர்த்தலே.

          அடுப்பில் ஒரு திறந்த சட்டியில் ஏதோ வெந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு கரண்டியும் போடப்பட்டுள்ளது. கரண்டி சுடத்தானே செய்யும்? அதை அறியாமல் ஒருவர் அந்தக் கரண்டியின் கைப்பிடியைப் பிடிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவருக்குக் கை சுட்டுவிடும். உடனே அவர் என்ன செய்வார்? கரண்டியை விட்டுவிட்டு, கையைப் பலமுறை உதறுவார் இல்லையா? அதுவும் விதிர்த்தல்தான்.

          ஒரு தலைவனும் தலைவியும் தனிமையில் சந்தித்துக்கொள்கிறார்கள். சங்க கால வழக்கப்படி, ஆண்கள் தலையில் மாலை அணிந்துகொள்வது வழக்கம். இதைக் கண்ணி என்பார்கள். அன்றைய காலத்தில் ’கிராப்’ வெட்டிக்கொள்ளும் பழக்கம் கிடையாது. தலைமுடியை உச்சிக்குடுமி போல் கட்டி, அதை மலர்ச் சரத்தால் சுற்றிக்கொள்வர். இது ஆண்கள் தலையில் அணியும் மாலை. கண்ணி எனப்படும். பெண்கள் சூடிக்கொள்ளும் பூச்சரம் கோதை எனப்படும். ’கூந்தல் வேய்ந்த கோதையும்’ என்கிறது பெருங்கதை. தலைவி என்ன செய்கிறாள் - தலைவன் கண்ணியைக் கழற்றித் தன் கூந்தலுக்குள் செருகிக்கொள்கிறாள். வெளியில் தெரியும்படி அணிந்துகொள்ளமுடியாது. பூச் சூடாமல் வெளியில் சென்றவள் பூவுடன் திரும்பி வந்தால் வீட்டில் கேள்வி கேட்பார்களே!

          வீட்டுக்கு வந்தவளின் தலைமுடியைச் செவிலித்தாய் அவிழ்க்கிறாள். உள்ளே மறைத்துவைத்திருந்த பூ வெளியில் வந்து விழுகிறது. அப்பனும் ஆத்தாளும் வீட்டில்தான் இருக்கிறார்கள். அவள் வெளியில் பூச்சூடாமல் சென்றது அவர்களுக்குத் தெரியாது போலும். எனவே அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. செவிலித்தாய்மட்டும் கவனித்துப் புரிந்துகொள்கிறாள். எனினும், வெளியில் வந்து விழுந்த பூவைப் பார்த்துத் திடுக்கிட்டுப்போன செவிலி, “ஐயோ, குட்டு வெளிப்பட்டுவிடும் போலிருக்கிறதே” என்று கையைப் பலமுறை உதறியவாறு வேகமாக வெளியில் சென்று மறைகிறாள்.

          இந்தச் சூழலை மனத்திற்கொண்டு, “அச்சச்சோ” என்று கூறிக்கொண்டு நீங்கள் கைகளை உதறிப்பாருங்கள். இதுவும் விதிர்த்தலே. இது என்னுடைய விளக்கம் அல்ல. இதற்கு ஒரு சங்கப்பாடல் உண்டு.

                    புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்
                    முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்
                    கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
                    வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
                    அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
                    அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ
                    அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்
                    நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
                    நீங்கி புறங்கடை போயினாள் - கலி 115/11,12

இதன் பொருள்:
ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே! என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே!
என் செவிலித்தாய் என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக, அவள் முன் விழுந்தது அந்தப் பூ;
அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை,         
நெருப்பைக் கையால் தொட்டவர் அக் கையை விதிர்க்குமாறு போலக் கையை விதிர்த்து வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள்.
"நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்" என்ற தொடர் இக்காட்சியில் வரும் விதிர் என்ற சொல்லை நன்கு விளக்கும்

          இப்போது இன்னொரு காட்சிக்குச் செல்வோம். இது ஒரு திருமணக் காட்சி.
                    ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
                    தண் நறும் சாந்தம் கமழும் தோள்மணந்து - அகம் 186/11,12

இதன் பொருள்:
மிக்க தண்மை வாய்ந்த முழவினைக் குறுந்தடியால் அடிக்கவும்
தண்ணிய நறிய சந்தனம் நாறும் தோளையுடையவளை மணம்புரிந்து
என்பது இதன் பொருள் என்கின்றந்த உரை.
முழவு = மத்தளம். குணில் = குறுந்தடி. எறிதல் = அடித்தல்.
ஆனால் இங்கே விதிர்ப்ப என்ற சொல்லுக்கு எந்த உரைகாரரும் வேறு விளக்கம் தரவில்லை. எறி குணில் விதிர்ப்ப என்பதற்குக் குறுந்தடியால் அடிக்க என்றுமட்டுமே உரை சொல்கின்றனர். இங்கு ‘எறி குணில் விதிர்ப்ப’ என்ற தொடரை உற்றுப்பார்க்கவேண்டும். அடிக்கின்ற குறுந்தடி அடிக்க என்பது கூறியது கூறல் ஆகாதா?

          முதலில் குறிப்பிட்ட பல வகை விதிர்ப்புகளை உற்றுநோக்குங்கால், விதிர்த்தலில் ஒரு விரைவான செயல் (quick action) தெரிகிறது. எனவே, இங்குக் கூறப்பட்டுள்ள ’எறி குணில் விதிர்ப்ப’ என்பதிலும் ஒரு விரைவான செயல் இருக்கவேண்டும். ’அடிக்கும் குறுந்தடி வேகமாக இயங்க’ என்ற பொருள் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இங்குக் குறிப்பிடப்படும் முழவினைத் தடியால் விதிர்ப்பது என்பது, ஒரு மண நிகழ்வின் போது நடப்பதாகும். ’எறி குணில் விதிர்ப்ப---தோள் மணந்து’ என்று வருவதால், தற்காலத்துத் திருமணங்களில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் நேரத்தில் எழுப்பப்படும் கெட்டிமேளம் போல் அன்றைக்கும் விரைவாக முழவு அடிக்கப்படுவதையே பாடலாசிரியர் ’எறி குணில் விதிர்ப்ப’ என்கிறார் என்று தோன்றுகிறது. எனவே, ‘எறி குணில் விதிர்ப்ப’ என்பதற்குக் ’கெட்டிமேளம் முழங்க’ என்று பொருள்கொள்ளலாம்.

இப்பொழுது சொல்லுங்கள்:
நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால்  சரியான விளக்கம்  கிடைக்குமா ?


தொடர்பு:
முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/நாட்டார் வழக்காற்று முளைப்பாரிப் பாடலும் மாங்குடி கிழார் புறப்பாடலும்


—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
      தாய்த்தெய்வ வழிபாட்டிற்குரிய கும்மிப் பாடல்களில் முளைப்பாரி வளர்க்கும் முறை இடம்பெறுகிறது. களஆய்வில் சேகரித்த தனிப்பாடல்,  முத்தாலம்மன் கதைப் பாடல் இரண்டிலும் முளைப்பாரிக்குரிய பயிர்கள் எவை என்பது பற்றிய செய்திகள் உள்ளன. இச்செய்தி சங்க இலக்கியத்தில் இடம்பெறும் மாங்குடி கிழாரின் புறநானூற்றுப் பாடலை நினைவூட்டுகிறது. குறிப்பிட்ட புறப்பாடலில் இடம்பெறும் பயிர்களுக்கும்; முளைப்பாரிக் கும்மிப்பாட்டில் உள்ள பயிர்களுக்கும் ஒப்புமை இருப்பதன் காரணம் காண முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். “Who Are Dravidians?” என்ற தன் ஆய்வுக்கட்டுரையில் (ப.- 1-32) முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்க் ‘திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது’ என்று முடிபாகக் கூறியிருப்பதால் இத்தகைய ஒப்பாய்வு தேவையாகிறது.   

      முதல்நிலைத் தரவாக முத்தாலம்மன் கதைப்பாடல் செய்தி, புறம் 335ம் பாடல் செய்தி இரண்டும் அமைய; இரண்டாம்நிலைத் தரவாகத் தனிக் கும்மிப்பாட்டுச்செய்தியும் பிற புறநானூற்றுச் செய்திகளும் அமைகின்றன.  இருவேறு காலமும் வகையும் சேர்ந்த இவ்விலக்கிய ஒப்பாய்வு தமிழ்ச் சமூகவரலாற்றில் தெளிவு காண உதவுகிறது. 

முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்கள்:
      புன்செய்ப் பயிர்களே முளைப்பாரிக்கு உரிய பயிர்களாகும்.  முத்தாலம்மன் கதைப் பாடலில் முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்களாகச் சொல்லப்படுபவை காராமணி, தட்டைப்பயறு, சிறுபயறு ஆகிய மூன்றாகும்.    
            "சின்னகொட்டான் பெட்டிகொண்டு 
            தெருக்களெல்லாம் பயிரெடுத்து 
            வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட 
            என்தாயே ஈஸ்வரியே
            காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டப்பயறு 
            சிறு பயறும் தானெடுத்து 
            என்தாயே ஈஸ்வரியே… [219]

(https://kanmanitamil.blogspot.com/2019/11/blog-post.html) மூன்றையும் ஒன்றாகக் கலக்கின்றனர். மண்பானை ஓட்டை எடுத்து; ஆட்டுப்புழுக்கை, மாட்டுச் சாணம் இரண்டையும் கலந்து; கம்பந்தட்டை, வைக்கோலாகியவற்றைச் சேர்த்துப் பரப்பி; அதன் மேல் பயறுகளை விதைக்கின்றனர். இப்பயறுகள் புன்செய்ப் பயிர்வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.          


      முளைப்பாரி பற்றிய தனிக் கும்மிப்பாட்டில் மேற்சுட்டிய மூன்று பயறுகள் மட்டுமின்றி இன்னும் சில சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. அவரை, துவரை, ஐந்துவகை மொச்சை(கருப்பு மொச்சை, வெள்ளை மொச்சை, பச்சை மொச்சை, புள்ளி மொச்சை முதலியன இன்று நமக்குத் தெரிந்த வகைகள்), ஆமணக்கு, எள், சிறுபயறு, கொண்டைக்கடலை, காராமணி என்று பட்டியல் சிறிது நீள்கிறது (https://kanmanitamil.blogspot.com/2020/02/blog-post.html).  

"என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டு- அங்க 
பெரியவீடு‘ன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மா- அந்த
பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப் பண்டம் போடுங்கம்மா- அந்த 
நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மா- நம்ம 
காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மா 
அவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்கு 
எள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறு 
கடல சிறுபயறு காரமணிப் பயறு 
வாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டு 
கொண்டுவந்த பயறுகள  கொடத்துல ஊறப்போட்டு……………” 
என்ற பாடற்பகுதியைத் தொடர்ந்து செய்முறையும் நுட்பமான விவரம் கொண்டுள்ளது. எல்லாப் பயறுகளையும் ஊறப் போட்டு; மண்பானை ஓட்டில்; ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணம், கம்பந்தட்டை, வைக்கோல்; சோளத்தட்டை எல்லாம் சேர்த்துப் பரப்புகின்றனர். சாணம் கட்டியாக இல்லாதபடி பொடிக்கின்றனர். நன்கு விளைய ஏதுவாகத் தட்டைகளின் கணுக்களை நெரிக்கின்றனர். சாணத்துடன் அமுக்கி விதைக்கின்றனர். பயறுகள், எள், ஆமணக்கு அனைத்தும் புன்செய்ப் பயிர்களே.    

மாங்குடி கிழார் பாடலில் இடம்பெறும் பயிர்கள்:
            “அடலருந் துப்பின் ……………
            குரவே தளவே குருந்தே முல்லையென் 
            றிந்நான் கல்லது பூவுமில்லை 
            கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே 
            சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு 
            இந்நான் கல்லது உணாவும்  இல்லை…………
            கல்லே பரவின் அல்லது 
            நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்- 335) 
இப்பாட்டு தமிழ்ச்சமூக வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. வருணத்தார் வருகைக்குப் பின் தமிழகச் சூழல் எப்படி மாறியது என்று தொகுத்துரைக்கிறார் புலவர். குரவு, தளவு, குருந்து, முல்லை முதலிய பூக்கள் தவிர்ந்த பிற பூக்களின் பயன்பாடு போர்முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது; வேந்தர்க்கும் குறுநில மன்னர்க்கும் இடையே உருவான அதிகாரப் போட்டியில் திணை மாந்தர்க்கு; வெட்சி முதலாக வாகை ஈறாகப் போரின் பல நிலைகட்குரிய அடையாளப் பூக்களின் தேவை ஏற்பட்டது. மரபு வழிப்பட்ட வரகு, தினை, கொள், அவரை முதலிய புன்செய்ப்பயிர்களின் வேளாண்மையோடு நெல் வேளாண்மையும் செய்ததைக் குறிப்பாகச் சுட்டுகிறார். கள்ளைப் படைத்து நடுகல்லை வழிபட்ட நிலைமாறிக்; கடவுளர்க்கு நெல்தூவி வழிபடும் வழக்கம் தோன்றிய மரபு மாற்றத்தையும் ஆவணப்படுத்துகிறார். இப் பாடலைச் சமூகவரலாற்று அடிப்படையில் விளக்க பதிப்பித்தவரும் உரையாசிரியரும் முற்படவில்லை. மாங்குடிகிழார் குறிப்பிடும் தமிழர் உணவு அனைத்தும் புன்செய்ப் பயிராகும். அவரை என்பது பயறு வகைகளுக்குரிய பொதுப்பெயர் ஆகும்.   திணைமாந்தரான தொல்தமிழர் புன்செய் வேளாண்மையை மரபாகக் கொண்டவர் என்பதை எடுத்துக்காட்டும் பிற புறப்பாடல்களும் உள. 

கரும்பனூர் கிழானது ஊர்; 
            “வன்பாலாற் கருங்கால் வரகின் 
            அரிகாற் கருப்பை அலைக்கும் பூழின் 
            அங்கட் குறுமுயல் வெருவ அயல 
            கருங்கோட்டு இருப்பைப் பூவுறைக்குந்து  ”- (புறம்.- 384) 
என  வருணிக்கப்படுகிறது. காட்டில் விளையும் வரகும், அரிகாலில் வாழும் எலியைப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரமும், அதன் காரணமாக அஞ்சி ஓடும் முயலும், அதன் ஓட்டத்தில் இருப்பை மரத்துப் பூக்கள் உதிர்வதும்; அவனது புன்செய் வேளாண்மையை உறுதிப்படுத்தும் சான்றுகளாம். அவனிடம் விருந்தயர்ந்த கிணைப்பொருநன்;

            "பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் 
            அளவுபு கலந்து மெல்லிது பருகி ………….
            இருநிலம் கூலம் பாறக் கோடை"யில் (புறம்.- 381) 
            இருந்ததாகப் பாடுகிறான். ‘மன்னர் மனை சென்று ஊனுணவிற்காகக் காத்துத் துன்புற வேண்டாம்; எவ்வளவு தொலைவிலிருந்தாலும்; வறட்சிக்காலத்தில்  என்னிடம் வந்து பாலிற்கரைத்தும், பாகுடன் சேர்த்தும் வயிறார உண்டு செல்க’ என்கிறான். பாகிற் கொண்டதாவது உளுந்தங்களி ஆகும்.

       "உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை" (அகம்.- 86) 
என்று நல்லாவூர் கிழார் பாடும் உளுந்தங்களி இன்றும் கருப்பட்டிப் பாகுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு உணவுவகை ஆகும். பாலிற் பெய்த உணவு பாலுடன் கூடிய வரகரிசிச் சோறாகும்.   

ஆலத்தூர் கிழார் புன்செயில் விளைந்த வரகுச்சோற்றைப் பாலோடு உண்பதை;
            "................................புன்புல வரகின் 
            பாற்பெய்…………………………………..
            அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்" (புறம்.- 34) 
என்று விரிவாகப் பாடியுள்ளார்.

      கிள்ளிவளவன் பஞ்சகாலத்தில் பண்ணன் மக்கள் பசியாற்றிய  தன்மையைக் கூறி அவனைப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று போற்றிப்  புகழ்ந்தமைக்கும் (புறம்- 173) இப்புன்செய் வேளாண்மையே காரணம்  எனலாம். நீர்வளம் குன்றிய போதும்; அதாவது நெற்கழனி பயன்தராத போதும்;
            “வெள்ளி தென்புலத் துறைய விளைவயற் 
            பள்ளம் வாடிய பயனில் காலை……….
            வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம் 
            பெயர்க்கும் பண்ணன்” (புறம்- 388) 
என்ற அடிகள் புலவர்க்குப் புல்லின் விளைநிலத்தைத் தானமாகக் கொடுக்கக் கூடியவன் என்கின்றன.  

            வலார்கிழான் பண்ணன்;
            "பெருங்குறும் புடுத்த வன்புல இருக்கை"- (புறம்.- 181) 
உடைய  தலைவன் என்று பாடல் பெற்றுள்ளான். இங்கு வன்புலம் புன்செய் ஆகும்.   இதனால் தொல்தமிழகத்து இனக்குழுத் தலைவராகிய கிழார்கள்  புன்செய்ப்பயிர் செய்தவர் என்பதும்; வேளாளர் வந்தேறிய பின்னரே அவர் நெற்பயிர் விளைவித்தனர் என்பதும்; புன்செய் வேளாண்மை மரபின் எச்சமே முளைப்பாரி வளர்த்து வழிபடும் வழக்கம் என்பதும் புலனாகிறது.   

முடிவுரை:
      பயறுவகைகள், எள், ஆமணக்கு ஆகியவற்றை முளைப்பாரியாக வளர்த்துப் படைத்துக் கும்மியடித்து வழிபடுவது; தொல்தமிழராகிய இனக்குழுச் சமுதாயத்தின் மரபாகும். திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது என்ற முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்கின் முடிவு மீளாய்விற்குரியது.  


துணைநூற்பட்டியல்:
1.  அகநானூறு- களிற்றியானை நிரை- ந.மு.வேங்கடசாமி நாட்டார்& ரா.வேங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- முதல் பதிப்பின் மறு பதிப்பு- 2009   
2.  புறநானூறு l& ll - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- 438& 598- முதற்பதிப்பின் மறுஅச்சு- 2007
3.  Symposium On Dravidian Civilization- Andre F.Sjoberg (editor)- publn. no.1- ASIAN SERIES of the Center for Asian Studies of the University of Texas, Austin- 1971 


குறிப்பு:  இது திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 24.02.2020 அன்று நடந்த ஒப்பிலக்கிய பண்பாட்டு ஆய்வுக் கருத்தரங்கிற்கு அனுப்பிய ஆய்வுக்கட்டுரை.
தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி