Thursday, April 23, 2020

இதயத்தை அள்ளும் இளங்கோவடிகள் !


இதயத்தை அள்ளும் இளங்கோவடிகள் !

- முனைவர். ஒளவை அருள்

 

  இன்றைய நாள் (24-4-2020) இளங்கோவடிகள் படிமச்  சிலைக்கு மாலை அணிவிக்கும் நன்னாளாகக் கருதப்படுகிறது.

  அன்னைத்தமிழுக்கு அழகு சேர்க்கும்  அணிகலன்களாக இலக்கியங்கள் அமைந்துள்ளன.

  கவியோகி சுத்தானந்த பாரதியாரின் தமிழ் வாழ்த்துப்   பாடல் ஒரு காலத்தில் பாட நூல்களிலிருந்தது.

“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் 
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் 
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் 
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் 
பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த்  
திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க !”  

  என்பது அந்தப் பாடலாகும்.

  இந்த வரிசையிலேயே சிலம்பைத் தொடர்ந்து சேர நாட்டில் வாழ்ந்த மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ்த்தாயின் திருவடியில் சிலம்புக் கீழ்க் கால் விரலுக்கு அணிகலனாக மனோன்மணீயத்தை அணிவித்தார்.

  இளங்கோவடிகள் சேர நாட்டு இளவரசர் . சிலப்பதிகாரத்தில் அவர் துறவு பூண்ட கதையும் வருகிறது. 

  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்பது போல 
  முத்தமிழ், 
  மூவேந்தர்,
  மூன்று நீதிகள்,
  மூன்று தலைநகரங்கள் – 
  மூன்று நகரங்களின் பெயர்களிலும் மூன்று எழுத்துகள்,  
  மூன்று காண்டங்கள் 
  மூன்று பத்துக் காதைகள்  
  முதன்மை பெற்ற கதை மாந்தர்கள் மூவர் 

எனப்  பொருளாலும், புனைவுகளாலும், வடிவாலும், வனப்பாலும், சிலப்பதிகாரத்தைப் புதுமையாகப் புனைந்தார்.

  சேர இளவரசர் ஆனாலும் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியதாகப் பொதுமை  பொலிந்த  இலக்கியமாகச் செய்தார். இளங்கோவடிகள், நாடாளும் அரச மரபினர் கவிதை புனைவதைப் போலவே, கற்றறிந்த கலைக்களஞ்சியமாகவும்  துறவு வாழ்க்கையில் வாழ்ந்திருக்கிறார்.

  பனையோலைகளைப்  பின்னி நிறமூட்டிய அந்த ஓலைத்தடுக்கை  உற்று நோக்கும் இளங்கோவடிகள், காட்டுக் குறத்தியின் கைவண்ணத்தைத்  "தாலப்புல்லின் வால் வெண்தோட்டுக் கைவல்   மகடுஉ  கவினுறப் புனைந்த செய்வினை தவிசு" என்று ஓவியம் போல வரைகிறார்.

  ஆடற்கலை, இசைக்கலை, அழகுக்கலை, கட்டிடக்கலை, வணிகக்கலை என்று அடுக்கினால் எண்ணெண்   கலைகளையும் நுண்மையாக அறிந்து பண்பாட்டு புதையலாகச்  சிலப்பதிகாரக் காவியத்தைப்  படைத்தார்.

  சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், எழுத்தின் திறனையோ, இன்சொல்லின் அழகையோ,  பொருளின் அழுத்தத்தையோ எதனை வியந்து நான் முழுத்தும் பழுதற்ற முத்தமிழ்ப் பாடலுக்கு உரையெழுதத் துணிந்தேன் என்று அவையடக்கமாகக் கூறுகிறார்.

  சிலப்பதிகாரம் படைத்துக் காட்டிய பூம்புகார் பதினாறாம் நூற்றாண்டைய இலண்டன் மாநகரத்தைப்  போலக்  காட்சிதரும் என்று கல்வெட்டுப் பேராசிரியர் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிட்டார்.

  பூம்புகாரின் அழகையும்  அங்கே அமைந்த கோட்டங்களையும்,  மதுரையின் மதில்  அழகையும், வீதியழகையும்,வணிக மாட்சியையும் சேர நாட்டு வேந்தன் இமயத்தை நோக்கிச் செல்லும் செலவின் பெருமிதத்தையும், நாடுகள், நகரங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், வேந்தர்கள்  எனச்  சிலவற்றை அடுக்கிச் சொல்வதிலும்   ஒருமைகாண் பதிலும் அடிகள் ஈடில்லாதவர் .
        நாடாளும் அரசகுலத்தின் பெருமிதம் விளங்க வாழ்ந்த அடிகளாகிய சேரநம்பி வாழ்வில் பழகும்   எவ்வளவு எளிய பொருளையும் ஆழ்ந்தும்  கூர்ந்தும்  பார்த்துப்  பொங்கும் புலமை வெள்ளம் புரளத்  தீட்டியுள்ளார். ஆயர்பாடியில் அந்திவேளையில் கோவலன் அமர்ந்து உண்ணுகிறான். உண்பதற்குக்  கண்ணகி அழைப்பதற்கு  முன்னால் அமர்வு தவிசிடுகிறாள். இந்நாளில் அதனைத் தடுக்கு, மணை  என்பார்கள்.

  மாதவி ஆடல் நிகழ்த்திய அரங்கத்தினுடைய அமைப்பும், அளவும், வலிவும், பொலிவும் தெரிய வேண்டுமா ? இன்றைய பொறியாளர்களுக்கு இந்த அளவைகள்  ஒரு கலை விருந்து. கண்களை மூடிக்கொண்டு இன்றைய  அண்ணாமலை மன்றத்தைக் கற்பனை செய்து  காணலாம்.

  “சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகள்  வழுவாத வகையில்  அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கிய  ஓரிடத்தில்  நிலத்தை  வகுத்துக்கொண்டு, பொதிகை  முதலாய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலில்  அதுவும் ஒரு கண்ணொடு கண்ணிடை ஒரு சாணாக  வளர்ந்ததைத்  தேடிக் கண்டு கொண்டு வந்து, அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல், உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, அக்கோலால் எழுகோல் அகலமும், எண் கோல் நீளமும் ஒருகோல்  குறட்டுயரமும் உடையதாய்த், தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்குமாக  அரங்கம் ஆடல் மன்றமாயிற்று.” 

  ஆடலின் அமைதி கூறியதுடன், ஆடலாசிரியன், இசையாளன் , நன்னூற்புலவனான கவிஞன், தண்ணுமையாசிரியன், குழலோன், யாழ்ப் புலவன் முதலாகக்  கவிதை இயற்றுபவனும், இசையமைப்பாளனும், இசைக் கருவி இயக்குவோரும், ஆடல் நிகழ்த்துபவரும், ஆடல் மகளிரும் இடம் பெறுகின்றனர். ஒரு முழுமையான கலைக் குழுவின்  சித்திரமாக இது அமைகின்றது.  மேலும் ஊர்காண் காதையில் பல்வகை மணி பற்றிய அறிவைக் கோவலன் பெற்றிருந்ததைக் காணலாம். நல்மணிகளைத் தேரவும், பிறவற்றின் குற்றம் காணவும், பல்வகைக்குறைகளின் இயல்பு அறியவும் வல்லவனாகக்  காட்டியதுடன், வணிகனென்ற நிலையில் கோவலனின் மனப்பாங்குக்குப் பொருந்தக் கண்ணகியின் அழகைப் புகழும் போது,   'மலையிடைப் பிறவா மணியே ! ' 'மாசறு பொன்னே'  என்றும்  கூறுகிறான் .

  பூம்புகார் வீதிப் பெருமையைச் சொல்லும் போது காண்பவரைக்  கவர்ந்து நிற்கும் யவனர் இருக்கையும் மிளிர்ந்துள்ளது. ஆடல் அரங்கத்தில் விடுதிரை, விலகுதிரை என்ற இரு எழினிகளைக்  குறித்திருப்பதை ஆராய்பவர்கள் எழினி, யவனிகா   என்ற பெயர் ஒற்றுமைகளைக் காட்டிக் கிரேக்க நாடக அரங்குகளின் திரைஅமைப்பை இங்கே காணலாம் என்று எழுதியுள்ளனர்.

  மாதவி குளித்தெழுந்த பங்கயத் தடாகத்தில் ஊறி மிதந்த 32 வகை நறுமணப் பொருள்களையும், சேரர் செம்மல்  இளங்கோவடிகள் புலமை  மிகுந்த வரிகளில் பட்டியலிட்டுப் படம் பிடிக்கின்றார்.  அணிகலன்களென்றால்  மாதவியாளின் கால்விரல்களில் மகரவாய் மோதிரம், பீலி, காலாழி துலங்க -  அவள் கால்களில் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை சிணுங்க -  குறங்குசெறி ஒடுங்க -  ஆடைமீது முத்தரை விளங்க -  தோள்களில் கண்டிகையும், முத்துவளையும் மினுங்க -  முன்கைகளிரண்டில் சூடகம், செம்பொன்வளை, வால்வளை, பவழப்பல்வளை குலுங்க, கைவிரல்களில் முடக்கு மோதிரம், கிளர்மணி, மரகதத் தாள்செறி விளங்க -  கழுத்தில் சங்கிலி, நுண்தொடர், பூண்ஞாண், புனைவினைப் பொலிய  -   பிடரில் முத்துக்கோவை ஒளிர  -  காதுகளில் நீலக்குதம்பை, வைரக்குதம்பை அடங்க -  தலையில் வலம்புரி, தொய்யகம், புல்லகம் அணிந்து  இருபதுக்கு மேற்பட்ட  பொன்னகைகள்  பொலியும்  புன்னகை  அரசியாக  மாதவியை நம்முன் நிறுத்துகிறார்.     

  எண்ணுவது, பேசுவது, எழுதுவது ஆகியவெல்லாம் மில்டனின் படைப்பைப் பற்றி மட்டுமே என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களும், வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளிலேயே நாற்பதாண்டுகள், ஐம்பதாண்டுகள் மூழ்கிக் கிடப்பவர்களும், ஜேன் ஆஸ்டினின் ஐந்தாறு நாவல்களைத் தவிர வேறெதிலும் வாழ்க்கையைக் காண மறுப்பவர்களும், ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மூலங்களைப் பற்றிய ஆய்விலேயே ஆயுள் முழுவதையும் செலவிடுபவர்களும் இங்கிலாந்தில் உண்டு. ஹாரல்டு புளூம் எனும் யூதப் பேராசிரியர் ஐரோப்பிய இலக்கியங்களைப் பற்றி எழுதிக் குவித்திருக்கும் நூல்களைப் பார்ப்பவர், இவருக்கு உண்ணவும், உறங்கவும், உடுக்கவும் எங்கிருந்து நேரம் கிடைக்கிறதென்று வியப்புறத் தோன்றும். பேராசிரியர் மருதநாயகம் மேலைநாட்டார் இலக்கியங்களை எவ்வாறு போற்றித் துதிக்கிறார்கள் என்பதைப் பற்றி இவ்வாறு  ஆராய்ந்து கூறுவது நமக்கு மலைப்பாகப்படுகிறது. 

  சிலப்பதிகாரம் மட்டும் ஆங்கிலப் புலவர்களுக்குக்  கிடைத்திருந்தால், எங்களுக்குக் கிடைத்தது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரத்துக் கதை (Tale of Two Cities) தமிழர்களுக்கோ மூன்று நகரக் கதை (Tale of Three Cities) கிடைத்தது என்று பாராட்டிச்  சேரன் தம்பியின் இலக்கியப் புலமைக்குத் தலை வணங்குவார்கள். சிலப்பதிகாரக் களஞ்சியத்தில் தகவல்கள்  நூற்றுக் கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.

  அருகன் பெயர்களை அடுக்கி உரைப்பதும், பிறவா யாக்கை  பெரியோன் கோயில் என்று சிவன் கோயிலையும், திருப்பதியில் திருவேங்கடவனின் நின்ற கோலத்தையும், திருவரங்கத்தில் கிடந்த வடிவத்தையும் காட்டுவது போலவே ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப் பற்றியும் குன்றக் குரவையில் முருகனைப் பற்றியும் வேட்டுவ வரியில் கொற்றவையையும் குறிப்பிட்டுள்ளார்.  சமய நல்லிணக்கமும், சமரசப் பொதுமையும் சேரர் குலத் தோன்றலிடம் தழைத்தோங்குகின்றன.

  தமிழகப் படை வீரர்கள்  மலை முதுகு நெளிய நடந்தனராம். தமிழ்  என்றால் மொழி மட்டுமன்று. காதல், இனிமை, இலக்கியம் என்று பல பொருள் படுவதுபோலப் படைவீரர்களின் ஆற்றலைக் கூடத்  தமிழ் என்றே பாடிய தமிழ் மறவர் இளங்கோவடிகள் ."காவா நாவில் கனக விசயனும் அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்" என்று கூறியதாக அமைத்துள்ளார். தென்தமிழ் ஆற்றல் என்றே மேலும் சில இடங்களில் காணலாம்.

  “அரசியலில் தவறு செய்தவருக்கு அறமே கூற்றாவதும்”   
  “பத்தினி மகளிரை உயர்ந்தோர் பாராட்டிப் போற்றுவதும்” 
  “ஊழ்வினை விடாது வந்து ஊட்டும்” 

  என்ற மூன்று உண்மைகளை  நூலிழை போலக்  கோர்த்துச் சிலப்பதிகாரக் காப்பியத்தின் செம்பொருளை இளங்கோவடிகள் வலியுறுத்தினார்.

  பாண்டிய நாட்டில் அரசியலில்  தவறு நடப்பதும், சேர நாட்டில் பத்தினிக்  கடவுளைச்   சிறப்பித்துப் போற்றுதலும்,சோழ   நாட்டில் யாழிசை மேல் ஊழ்வினை ஆட்சி செய்தலையும் காணலாம்.

  செழிப்பான மாபெரும் செல்வக் குடும்பத்தின் மங்கலத் திருமணம் என்ற வகையில் யானை மீது மகளிர் அமர்ந்தபடி ஊர்வலம் வந்து கண்ணகி-கோவலன் திருமணச் செய்தியை மாநகர மக்களுக்கு அறிவித்தார்களாம்.

  தமிழ்நாட்டு மக்களுக்குக் காவிரியாறு அன்னை போல் இருந்து அமுதூட்டினாலும்,  சோழ நாட்டுக்குக் காவிரிநாடு என்றே பெயர். உழவர்களைக்  காவிரி தன்  புதல்வர் என்று புகழ்கிறார்.

  மன்னவராகப் பிறந்து ஆட்சி செய்வது பெருந்துன்பம் தரும்  கடினமான பணியாகும்.மக்களுக்கு எல்லா நிலைகளிலும் வளத்தையே வழங்கும் இடர்ப்பாடுகள் உள்ள பொறுப்பு என்று மேலை அரசியலறிஞர் கூறுவதைச்  சேரன் செங்குட்டுவனின்  சொற்கள் அப்படியே மெய்ப்பிக்கின்றன. 

  மழை பெய்யாது போனால் மனம் கலங்கும். உயிர்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் மனம் நடுங்கும். இப்படி அச்சத்துக்கு நடுவில் அகப்பட்டு அல்லலுறும் வாழ்க்கை தான் அரச வாழ்க்கை. இது துன்பம் தருவதே தவிரத் தொழுதற்குரிய பெருமை இதில் இல்லை என்று சேரன் செங்குட்டுவன் கூறுவதாகச் சேரர் தோன்றல் அரசுப் பொறுப்பின் கடமைச்சுமையைக் காட்டினார்.  

  சேரன் செங்குட்டுவனைப் பற்றிய ஒரு சுவையான செய்தி. சேர மன்னனின் எடையளவைக்  கண்டறிய  அறிஞர் மு.இராகவையங்கார், ஒருவாறு கணக்கிட்டு 300 முதல் 375 பவுண்டு (136 கிலோ முதல் 170 கிலோ) வரை என்று குறித்துள்ளார். மகுடம், மார்புக்கவசம், உடைவாள், கால் புதையரணம், இடையில் அணிந்த கச்சு எல்லாம் சேர்த்துத்தான் துலாபாரம் நடந்தது. 50 துலாபாரம் பொன் என்று குறித்துள்ளார். உயரத்தை நம்மால் அளவிட்டு அறிய முடியவில்லை.   

  சிலப்பதிகாரத்தை முடிமன்னர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசியக் காப்பியம், கலைமிளிர் காப்பியம் என்று நாடெங்கும் பரப்பிய நம் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., அவர்கள், சென்னையில் 24.04.1956 இல்  செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் முதன் முதலாகச்  சென்னை மாவட்டத் தமிழரசுக் கழகத்தாரால் இளங்கோ விழாவைத்  தொடங்கி வைக்கச் செய்தார். 

  இந்த வகையிலும், சிலப்பதிகாரத்தில் 28 நாள் நிகழ்ந்த இந்திர விழவூரெடுத்த காதையில் குறிப்பிடப்படும்  சித்திரைத் திங்களின் சித்திரை முழுநிலவைக் கருதியும்  எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு இந்திரா விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 24ம் நாளில் இளங்கோவடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. 

  சிலப்பதிகாரம் ஈடு இணையற்ற முத்தமிழ்க்காப்பியம். இயல், இசை, நாடகம் பின்னிப் பிணைந்த பெருங்காப்பியம். சிலப்பதிகாரத்தை நினைக்கும் போது ஒரு வகையில் மனம் கலங்குகிறது. சேர நாடு நம்மோடு சேராத நாடாயிற்று. பூம்புகார் கடலில் மூழ்கியது. மதுரையின்  ஒரு பகுதி கனலில் கரிந்தது. வஞ்சி மாநகரம் எங்கே என்று தேட முடியாதபடி  மணலில் புதைந்தது. காற்சிலம்பு அணிவதை மகளிர் எப்போதோ மறந்துவிட்டனர். 

  இந்திர விழா ஊர் மக்களால் இப்போது கொண்டாடப்படுவது இல்லை. யாழ் இப்போது இல்லை .கோவலன் கொல்லப்படுகிறான், பாண்டியன் அரசுக்கட்டிலில் விழுந்து இறக்கிறான். கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறக்கிறாள். அடைக்கலம் தந்த இடைக்குல மாதரி தீப்பாய்கிறாள். கவுந்தியடிகள் உண்ணாநோன்பிருந்து உயிர் விடுகிறார். கோவலன் தாயும், கண்ணகி தாயும் உயிர் துறக்கின்றனர், பூம்புகாரின் பொற்கொடி  மாதவி புத்த மதத் துறவியாகிறாள், கோவலன், கண்ணகி தந்தையர் துறவறம் கொள்கின்றனர் . இவ்வாறு அவலக்கடலில் அடுக்கிய இடுக்கண்களால் துன்பியல் நாடகத் தொடர்ச்சி நிறைவடைகிறது.

  சிலப்பதிகாரம் ஓர்  அரிய பெரிய ஆவணம்.
  நீங்காத நினைவுச் சின்னம்.
  பண்பாட்டின் பெட்டகம்.
  பழங்கலைகளின் புதையல். 


நன்றி: உலகத்தமிழ் 
   

முனைவர்.  ஒளவை அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை
தமிழ்நாடு அரசு
No comments:

Post a Comment