Friday, July 23, 2021

பண்பாட்டுப் புரிதலில் ஒரு மாற்றுக் கண்ணோட்டம்

-- முனைவர் ஆனந்த் அமலதாஸ்


“பண்பாடு” என்பது என்ன என்பதைக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம். பண்பாடு என்பது ஏதோ ஒருவகையான  கட்டிடக்கலை என்று பல கோபுரங்களை மட்டும் எண்ணாமல் அல்லது சித்திரம், சிலைகள், ஆடல் பாடல் கலைகள் என்று குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் விரிந்த அளவில் கணிக்கும் பொழுது அது நமது வாழ்வை அமைக்கும் அடிப்படை கோட்பாட்டைக் குறிக்கும் எனலாம்.

பண்பாடு மாறிக் கொண்டேயிருக்கும். நிலையான பண்பாட்டு அடையாளம் என்று ஏதும் இல்லை. அதன் சில அடையாளங்களைக் குறியிட்டு அப்படியே சிலையாக்கி அருங்காட்சியகத்தில்  வைத்து விட்டால் அது செத்தது எனலாம். எப்படி ஒரு மொழி பேசப்படவில்லை யென்றால் அது செத்த மொழி என்போமோ அதுபோலத்தான் பண்பாடும்.

இப்படி பண்பாட்டின் சிறப்பை அடையாளப் படுத்தி ஆராய்ச்சியாளர்கள் அட்டவணை போட்டுக் காட்டுவார்கள். அதில் ஒரு தெளிவு இருக்கும். இது உண்மைதான். ஆனால் அப்படி அவைகளை ஆவணக்கூடங்களில் வைத்து விட்டால் இது பெரிதா, மற்றவர்களுடையது பெரிதா என்ற சர்ச்சைக்கு இட்டுச் சென்று பண்பாட்டின் மோதலில் முடியும். அதைத்தான் சாமுவேல் ஹண்டிங்டன் தனது “பண்பாட்டின் மோதல்” (Clash of Civilisation) என்ற நூலில் குறிக்கின்றார்.

ஆனால் பண்பாடு என்பதை உண்மையில் பிரித்துக் காட்ட முடியும். அதற்குத் தனித்தன்மை உண்டு. அதனால் மற்றவர்களோடு உறவு கொள்ளும் இணைப்புப் பாலம் உடைந்து போகவில்லை. ஏனெனில் அந்தத் தொடர்பு உறவினால் தான் வாழ்கிறது, வளர்கிறது. இது தொடர்நிலை. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்பாட்டுக்கு என்ன அடையாளம் காட்டலாம்? இளங்கோ அடிகளா? கம்பனா?  பாரதியா? பாரதிதாசனா? இவர்களில் யார் தமிழ்ப் பண்பாட்டின் பிரதிநிதி? இவர்கள் ஒவ்வொருவரின் பின்னணி வேறு, சிந்தனை முறை வேறு. ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் தமிழ்ப் பண்பாட்டின் தொடர் உறவின் பங்காளிகள். 

இவர்கள் ஒரு வலையில் உள்ள முடிச்சுகள் மாதிரி. ஒவ்வொரு முடிச்சும் முக்கியம். இந்த முடிச்சுகளை எல்லாம் வெட்டிவிட்டால் வலையே பாழடைந்து விடும். ஆனால் ஒவ்வொரு முடிச்சும் தனியாக இருந்தாலும் அதற்கு மதிப்பு இல்லை. அது போலத் தான் பண்பாட்டின் பங்காளிகளும்.

பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நிலப்பகுதியில் தான் வளரும். குறிஞ்சி மலரோ, மல்லிகை மொட்டோ தானாக மட்டும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நிலப்பரப்பில்தான் தோன்றும். பண்பாடும் அப்படித்தான். வரலாறு படைப்பவனும் வரலாறு எழுதுபவனும் தனிப்பட்ட மனிதர்கள்தான். ஒட்டுமொத்தமாக எதுவும் எழாது. ஒரு செயற்குழு அமைத்து வரலாறு எழுதுவதில்லை. நமது திணைக்கோட்பாட்டை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தோன்றியது என்பது அதன் தனித்துவம். அதன் பெருமை.

முரண்பாடான கண்ணோட்டம் கொண்டவர்களானாலும் நாம் எல்லோரும் கூடி வாழ முடியும். ஒரே இனத்தவர் என்பதால் மட்டும் அல்ல, ஒரே சமயத்தவர் என்பதால் அல்ல, மனிதப் பண்புள்ளவர் என்பதால். நம்மிடம் ஏற்றத்தாழ்வு உண்டு. கணக்கியல்படி (Mathematically) நாம் சமமானவர்கள் என்றல்ல. சமத்துவம் என்பது திறமைகளின் அடிப்படையில் அல்ல. நாம் தேடும் சமத்துவம் மனிதனின் தனித்துவ மகத்துவத்தின் மதிப்பின் அடிப்படையில் உள்ளது. மனிதர்களாகிய நாம் சமமானவர்கள்  (As persons we are equal). சமுதாய அளவில் ஏற்றத்  தாழ்வு இருக்கலாம். இது நிலையானது அல்ல.  அது மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் தனிமனிதனின் மதிப்பு, அவன் தனித்துவம் நிலையானது. “சொர்க்க வாசலுக்குமுன் தோட்டியும் சரி தொண்டைமானும் சரி” என்பது தே நோபிலி சுட்டிக்காட்டிய ஒரு பழமொழி. இது சாதி-சமயப் பூசல்களிடையே அவர் கொடுத்த பதில். சமூக வேறுபாட்டை, ஏற்றத்தாழ்வை இயற்கையின் நியதி, கர்மம், தெய்வ பராமரிப்பு என்று பலவிதமாய் விளக்கம் கொடுத்தாலும் அடிப்படை உண்மை நிலை ஒன்றுதான்.

முதலில் நமது அடிப்படைத் தேவைகள் நிறைவுபெற வேண்டும். அவை யாவை?  உணவு – உடை – உறையும் வீடு – என்று சொல்வதுண்டு. ஆனால் இவை இருப்பதால் மட்டும் நிறைவான வாழ்வு வந்துவிடாது. மகிழ்ச்சி நிறைந்து வழியாது. ஏனெனில் மனிதன் மனிதனாய் வாழ மனிதனுக்கு இதற்கும் அடிப்படையான தேவைகள் உண்டு. மற்றவர் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்; என்னை மதிக்க வேண்டும்; உறவு கொள்ள இடம் கொடுக்க வேண்டும். அது இல்லாமல் மனிதனாய் வாழ முடியாது. நமது முரண்பாடுகள், எதிர்ப்பு போராட்டங்கள் எல்லாம் இங்குதான் தொடங்குகின்றன. மேல்நிலைக்கு, உயர்படிக்கு ஏற வேண்டும். சமூக அளவில், உணர்ச்சி அளவில், சிந்தனை அளவில், ஆன்மீக அளவில் அது கிடைக்கும் வரை நாம் ஆதங்கத்தோடு அலைந்து கொண்டுதான் இருப்போம்.

ஒரு சமூகத்தில் கூடிவாழும் பொழுது ஓர் அமைப்பு வேண்டும். பல் வேறு பணிகள் செய்ய அதற்கு ஏற்ற ஆட்கள் வேண்டும். உலக வங்கி தொடங்கி, கிராமப் பஞ்சாயத்து வரை  ஒருவர் நிர்வாகப் பொறுப்பில் இருக்க வேண்டும். அவருக்கடியில் பல துறைகளில் மற்றவர் பணி செய்ய வேண்டும். இத்தகைய அமைப்பில் மேலினம், கீழினம் என்பதற்கு இடமில்லை. பல்வேறு தொழிலோ பணியோ செய்யலாம், செய்யவும் வேண்டும். அதனால் தனிப்பட்டவரின் மதிப்பும் தனிமனிதனின் தனித்தன்மையும் இழந்துபோகாது. 

பண்பாடு என்பது தனிமனிதனின் பெருமையை, சிறப்பை நிலைநாட்ட உதவுவதற்கு இல்லை. அப்படி நடக்கின்றது என்றால் அது ஓர் அபத்தம் (Perversion).  தனக்காக போஸ்டர் ஒட்டி, தனது உருவத்தைப் பெரிதாகக் கருதுவதில்தான் பாசிசம் தொடங்குகிறது. 

பண்பாடு ஓர் ஊற்று போன்ற பொதுச்சொத்து. அது இதற்கு மாறாக பணி செய்கிறது. இத்தகைய குறுகிய வேலியைத் தாண்டிக் கட்டமைப்புகளை உடைத்தெறிவது, உலகோடு ஒத்து வாழும் நிலைக்கு, தனது சுயநலக் கோட்பாட்டுக்கு வெளியே வாழ இடம் தேடுகிறது. தனிப்பட்டவர் தளத்திலிருந்து பொதுத் தளத்தைத்  தேடுவது.

ஊற்றுச்சுனை போன்ற பொதுச்சொத்துக்கு விளம்பரம் தேவையில்லை. பிரச்சாரம் செய்து ஆட்கள் சேகரிக்க வேண்டியதில்லை. கோஷம் எழுப்பத் தேவையில்லை.  மதிப்பீடுகள் வேறு, பொதுச் சொத்து (Resources) வேறு. மதிப்பீடுகள் ஆட்களைச் சேகரிக்கும். போதகர்கள் வேண்டும். சமய மதிப்பீடுகளை நிலை நாட்டுவது போல் ஆகிவிடும்.

இந்தியப் பண்பாடு என்பது பல மரபுகளால் உருவாக்கப்பட்ட சொத்து.  பன்மைத்தனம் பெற்றது. ஏதோ ஒரு சமயம், ஓர் இனம், ஒரு சிந்தனைக் கோட்பாட்டால் உருவானது அல்ல. பலரும் இதன் பங்காளிகள், பங்கு அளித்தவர்கள் இடையே வேறுபாடுகள் உண்டு. அதனால் அவர்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் பண்பாட்டின் ஊற்றுக்கள்.

பல நதிகள் பாய்ந்தோடி கடலில் சங்கமம் ஆவது போல பல மரபுகள், கோட்பாடுகள் சேர்ந்து உருவானது இந்தியப் பண்பாடு. ஒவ்வொன்றும் பண்பாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்திருக்கிறது, செழிப்படைய வழி வகுத்தது, புதிய கண்ணோட்டத்தினை இன்றும் தூண்டுகின்றது.

இப்பொழுது ஐரோப்பாவிலும் பெரிய குழப்பம். அவர்கள் உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் உடைந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் பிரான்சுவா ஜீலியன் (2017) சொல்வது இது. தொடக்கத்திலேயே ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி எது, என்பது தெளிவில்லை. ஒரு சிலர் கருத்து: கிறிஸ்துவ நம்பிக்கையும் அதன்வழி எழுந்த பண்பாட்டுக் கோட்பாடு என்றனர். மற்றவர் அதற்கு மாறாக, இல்லை, சமயம் தாண்டிய பகுத்தறிவுப் பண்பாடு (Enlightenment) என்றனர். அவர்களுக்குள் ஒன்றித்த தெளிவு இல்லை. அதனால் முகப்புரை (Preamble) இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதன் விளைவு இப்பொழுது தெரிகிறது. சமய நம்பிக்கையும், பகுத்தறிவும் முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் அவை இரண்டும் ஒன்றிணைந்து வாழ முடியும். 

நமது நாட்டில், நம் மத்தியில்; நடப்பதும் அப்படித்தான். நமது பண்பாட்டில் பல்வேறு பங்காளிகள்; அங்கத்தினர்கள் உண்டு. இப்பண்பாட்டின் சொத்து எல்லோருக்கும் சொந்தம். வைதிக மரபு பெரியது. அதற்கென தனிவரலாறு உண்டு. ஆனால் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்ட மற்றவர்களை ஒழிக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் கடவுள் எதிர்ப்புவாதிகளும் கூடிவாழ முடியும், கூடிவாழ வேண்டும். அவர்களை ஒன்றிணைப்பது சமயம் சாராத அறநெறியின் அடிப்படையில் அமையவேண்டும்.

இயற்கையின் சொத்துக்கள், சுற்றம் சூழல் பாதிப்பு, அழிவு பற்றி பலர் கவலை கொண்டுள்ளனர். Bio-diversity அளவு குறைந்து கொண்டே போவது பற்றி பலர் ஆராய்ந்து அதைத்தடுக்க எடுத்து வரும் முயற்சிகளும் பாராட்டுக்குரியது.  அதைப்போல ஏன் கலாச்சார அழிவுக்கு, பண்பாட்டுச் சிதைவுக்கு போதிய எதிர்ப்பு, பாதுகாக்கும் போதிய முயற்சிகள் இன்னும் எழவில்லை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக இந்திய இஸ்லாமிய வரலாற்றைக் கவனிக்கலாம். சமய நல்லிணக்கத்திற்கு அவர்கள் பங்களிப்பு அதிகம். ஆல் பிரூனி முதன் முதலாக பாதஞ்சலி யோகம் என்ற சமஸ்கிருத நூலை அரபியில் மொழிபெயர்த்து குர்ஆனோடு நல்லிணக்கம் செய்தார். பிறகு அக்பர் பல்வேறு சமய பிரதிநிதிகளை அழைத்து உரையாடல் பண்பாட்டை உருவாக்கினார். அவருக்குப்பின் தாரா சிக்கோ 50 உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அதன் வழியாக ஐரோப்பியர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள வழி வகுத்தார். இத்தகைய முயற்சிகள் இஸ்லாமிய மரபின் பங்களிப்பு.

இவ்வாறு இந்திய யூதர்களும்,; கிறித்தவர்களும், பிறகு இங்குக் குடியேறிய பாரசீகர்களும், பல்வேறு வகையில் இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றார்கள். இவர்கள் அந்நியர்கள் என்று சொல்லி இந்தியப் பண்பாட்டின் சொத்து எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம் என ஒரு வர்க்கம் மட்டும் ஆதிக்கம் கொண்டாடும் மனநிலையும் செயல்முறையும் நம்மை ஒன்றிணைத்துக் கூடிவாழ வழிவகுக்காது. அழிவுக்குத்தான் இட்டுச்செல்லும்.---

Thursday, July 22, 2021

எழுத்துப் பிழையற!- சொ.வினைதீர்த்தான்


பாடல்:-
          அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
          எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
          விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
          கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.
        (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்,  பாடல் - 2

பொருள்:-
தன்னால் அழிந்தவர்களுக்குப் பிறப்பின்மையை வழங்கும்  முருகனின் பெருமைகளைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழை இல்லாமல் இன்று கற்பதை விடுத்துக் கொடியவனாகிய எமன் வீசுகின்ற பாசக் கயிறு நம் கழுத்தைச் சுருக்குப்  போட்டு இழுக்கின்ற அன்று கற்பதால் என்ன பயன்? 
நான் பக்திப் பாடல்களை இன்றைய வாழ்வியல் நெறிகளுடன் பொருத்திப் (Correlate) பார்த்து எண்ணிப்பார்ப்பதுண்டு.
பாடலில் எழுத்துப் பிழையின்றிக் கற்க வேண்டும் அதுவும் இன்றே கற்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வலியுறுத்துகிறார்.   ஏன் எழுத்துப் பிழையின்றிக் கற்க வேண்டும்? ஒலிப் பிழை, சொற்பிழை, எழுத்துப் பிழை இம்மூன்றும் பொருட் பிழைக்கு வழிவகுக்கும் பொருள் புரியாமல் படித்தால் தெளிவு பிறக்குமா? கற்றதானால் ஆய பயன் விளையுமா? சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவாரே உய்தி அடைவார்!
அடுத்துக்  "கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?" "சாகப் போறபோது சங்கரா சங்கரா என்றால் என்ன பயன்?" "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்றெல்லாம் கூறுவார்கள். எதனையும் உரிய காலத்தில் செயலாற்றினாலே தகுந்த பயன் விளையும்.
"ஒன்றே செய்; நன்றே செய்; இன்றே செய் என்கிறது தமிழ். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். "பருவத்தே பயிர் செய்" என்பதும் ஆன்றோர் வாக்கு.

          அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
          பொன்றுங்கால் பொன்றாத் துணை
        (குறள் எண்:36)
பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தினை உடனடியாகச் செய்யவேண்டும் என்கிறது வள்ளுவம். நாளை, நாளையென்றால் நாளை நம்முடையதா அல்லது நமனுடையதா என்று தெரியாத வாழ்வு இது.  எனவே கற்கவேண்டியதை உரிய காலத்தில் கற்க வேண்டும். 
முருகன் ஞானம், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, மன நிம்மதி, இக பர சௌபாக்கியம் ஆகியவற்றின் குறியீடு என்பார்கள். எனவே
எழுத்துப் பிழையின்றிக் கற்பதும் உரிய காலத்தில் கற்பதும் அளவில்லா ஞானத்தையும் செல்வத்தையும் அனைத்தையும் அடைகிற வழி!


Sunday, July 18, 2021

தலையங்கம்: நூல்களை அறியத் தடையேது? அறிவோம் நூல்களை!

    — முனைவர் க.சுபாஷிணி 

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றுமோர் சமூக நலன் சார்ந்த திட்டம் 'சுவலி' ஒலிப்புத்தக மென்பொருள். இதன் வெளியீடு ஜூலை 18ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. சுவடி நூல்களை ஒலிவடிவத்தில் கேட்டுப் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இந்தத் திட்டத்தில் கைப்பேசி வழியாக ஒலிவடிவத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன. 

சுவலி எவ்வகையில் ஒருவருக்குப் பயன்படும்?

அ. நம் சூழலில் சிலருக்குத் தமிழ் நூல்களை வாசிக்க ஆர்வம் இருக்கும்; ஆனால் மொழித்திறன் இல்லாமையால் வாசிக்கத் தெரியாது... இத்தகையோருக்கு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைக் கேட்பதன் வழி நல்ல தரமான நூல்களை அறிமுகப் படுத்துவது

ஆ. பார்வைத் திறனற்றோருக்கு ஏராளமான நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை ஒலிப்புத்தகமாக அறிமுகப்படுத்துவது

இ. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் கைவசம் இல்லாத போதும் அவற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு ஒலிப்புத்தகமாக வழங்குவது

ஈ. சிலருக்குத் தூரப்பயணங்களில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பாடல்களைக் கேட்பதற்குப் பதிலாக நூல்களை வாசித்துக் கொண்டே செல்லலாம் என்று தோன்றும். ஆனால் ஒலிப்புத்தகமாக இருக்கும் போது அது சாத்தியப்படும்

கைப்பேசி இல்லாதவர்கள் குறைவு என்ற நிலை ஏற்பட்டுவிட்ட இக்காலச் சூழலில் இப்படிப் பல வகையில் உங்களுக்கு சுவலி உதவ முடியும்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சுவலி திட்டக் குழுவினர் பொது மக்கள் நலன் கருதி தங்கள் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட்டு ஒலிப்புத்தகங்களை உருவாக்கும் பணியில் இணைந்துள்ளனர். மலர்விழி பாஸ்கரன், ப்ரின்ஸ் கென்னத், செல்வமுரளி ஆகிய மூவரது துணையுடன் ஆர்வமிக்க தன்னார்வலர்களுடன் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

    உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஆர்வமுள்ளோர் இப்பணியில் நீங்களும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆரவாரமின்றி அமைதியாக நாம் செய்யக்கூடிய ஒரு சமூகப் பணி இது!

தமிழகத் தொல்லியல் துறையினால் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு நிகழ்ந்து வருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகளின் போது  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உறைகிணறுகள், முதுமக்கள் தாழிகள் திறந்த நிலையிலும் மூடிகளுடனும் என்ற வகையில் கிடைத்திருக்கின்றன. இவற்றுக்குள் காணப்பட்ட எலும்புக்கூடுகள், பற்கள் மற்றும் பல்வேறு சான்றுகளை ஆய்வுக் குழு ஆய்வு செய்து வருகின்றது என்ற செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கின்றோம். ஆதிச்சநல்லூர் ஈமக்கிரியைப் பகுதி என்று பரவலாகக் கூறப்பட்ட நிலையில் அதன் அருகேயே சிவகளையில் மக்கள் வாழ்விடப் பகுதி தொடர்பான பல்வேறு ஆதாரங்களும் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இது தமிழகத் தொல்லியல் அகழாய்வு கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்துக்கனவாக அமைகிறது. 

நீண்ட காலமாக அகழாய்வுப் பணிகள் செய்யப்படாமல் இருந்த கொற்கையில் மீண்டும் விரிவான கள ஆய்வுப் பணிகள் தொடங்கியிருப்பதும் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.

கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஆய்வுப்பணியில் நம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அகரம் பகுதியில் அழகிய கொண்டையுடன் கூடிய ஒரு பெண் உருவம் போன்ற தோற்றம் கொண்ட ஒரு மண்பொம்மை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான காலகட்டத்தில் சிகை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் அளித்து உயர் பண்பாட்டுடன் தமிழ்ச் சமூகம் வாழ்ந்தது என்பதைச் சான்று பகரும்  ஆதாரமாகவும் இது அமைகிறது. இதுமட்டுமல்ல; தொடர்ந்து உறைகிணறுகள், தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள் என ஏராளமான அரும்பொருட்கள் கிடைத்த வண்ணமுள்ளன.

கீழடி மட்டுமன்றி ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை எனப் பல பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகள் தமிழ் வரலாற்றில் முக்கியத்துவம் பெறக்கூடிய பல்வேறு சான்றுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இத்தகைய தொல் பொருட்களின் மரபியல் மரபணு சோதனைகளைச் செய்ய ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மரபணு சோதனை ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது (https://www.hindutamil.in/news/tamilnadu/688231-sivakalai-excavation-1.html). கரிம ஆய்வுகளை உடனுக்குடன் செய்து தொல்பொருட்களின் காலச் சூழலை நிர்ணயப்படுத்தும் செயல்பாடுகள் இதனால் துரிதப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற அகழாய்வுகளோடு மட்டும் நின்று விடாமல் உலகளாவிய வகையில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளையும் அவற்றின் போது கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களையும் தமிழக ஆய்வாளர்கள் அயலக ஆய்வறிஞர்களுடனும் இணைந்த வகையில் ஆய்வு செய்யவும், இணைந்த வகையிலான  கூட்டு முயற்சிகளையும் கருத்தரங்கங்களையும்  ஏற்பாடு செய்யவும் தமிழகத் தொல்லியல் துறை  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.


தமிழால் இணைவோம்!


அன்புடன்

முனைவர்.க.சுபாஷிணி


Thursday, July 15, 2021

அகரம் அழகி  —  தேமொழி 

   
    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, பிப்ரவரி 2021 முதல் நடக்கும் 7-ம் கட்ட அகழாய்வில், அகரத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் முகம் கொண்ட பொம்மை ஜூலை 15, 2021 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் இரா.சிவானந்தம் மேற்பார்வையில்  அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில், 3 ஆவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் இந்த கழுத்தளவு சுடுமண் பொம்மை கிடைத்துள்ளது.  
    பண்டைக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியதாகக்  கண்டறியப்பட்டுள்ள, அழகிய வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள  சுடுமண்ணாலான இந்தப் பெண் பொம்மையின் காதிலும் நெற்றியிலும் அணிகலன்களுடன், முகத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமும் தீட்டப்பட்டுள்ளது.  இந்தப் பெண்மணியின் தலைமுடி, தலையின் இடப்புறமாக இழுத்து வாரி முடியப்பட்டு பெரிய அளவில் கொண்டை போடப்பட்டுள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சிற்பியின் பார்வையில் மண்பொம்மை குறித்த விளக்கம்:
    பெருந்தச்சர் (ஸ்தபதி) கரு.ஜெயராமன் அவர்களின் கருத்து  — ஆண், பெண் சிற்பங்களைச் செதுக்கும் பொழுது அவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தலை அலங்காரம், புருவம், கண், நெற்றி, உதடு, காதணி, ஆடைகள், கைகளில் வைத்திருக்கும் பொருட்கள், அணிகலன்கள், பெண் எனும் பொழுது மார்பகங்கள், இடை என வேறுபடுத்திக் காட்டுவார்கள். இந்த கழுத்தளவு சிலையினை ஆணா பெண்ணா என்று பார்ப்பதற்கு காதணி, நெற்றி, கண், மூக்கு சிகை அலங்காரத்தை வைத்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. அந்தவகையில் சிகை அலங்காரம் (கொண்டையை) வைத்து சில கருத்துக்களைப் பகிர வேண்டி உள்ளது. பொதுவாக ஆண்களுக்கான கொண்டையானது மேல் முகமாக தூக்கி இருக்குமாறு அமைக்கப்படும். பெண்களுக்கான கொண்டை எனும் பொழுது தலை மட்டத்திலும் அல்லது அதற்குக் கீழாகவும் இருக்குமாறு காட்டப்படும்.  அதற்குக் காரணம் பொதுவாக பெண்களுக்கான கூந்தலானது ஆண்களைவிட அதிக அளவு இருப்பது இயல்பு. அந்த வகையில் அதிக பாரம் கொண்ட முடியைத் தூக்கிக் கட்டும்பொழுது இயல்பாகவே சரிந்து இருக்கும். குறைவான கூந்தலைத் தூக்கிக் கட்டும்பொழுது தலைக்கு மேலே நிற்கும் எனும் காரணத்தால் சிற்பியானவர் பெண் கூந்தலைத் தலை மட்டம் அல்லது அதனை விடக் கீழ் நோக்கியோ இருக்குமாறு அமைப்பார். இதன் காரணத்தால் இந்த அகரம் அகழாய்வில் கிடைத்த சிற்பத்தைப் பெண் சிற்பமாக இருக்கலாம் எனச் சிற்பியின் பார்வையில் முடிவு செய்யலாம்.   மேலும் இச்சிற்பத்தின் கீழ்ப் பகுதியும் கிடைக்கும் பட்சத்தில் அதனை ஆய்வு செய்து ஆணா பெண்ணா என உறுதியிட்டுக் கூறலாம்.
    தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சர், மாண்புமிகு. திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் — “தமிழ்ப் பொண்ணு!” இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள். இந்த ‘ஹேர் ஸ்டைல்’ எல்லாம் அந்தக் காலத்திலேயே அத்துப்படி"   என்று பகிர்ந்து கொண்ட தகவலும் படமும் தந்த ஆர்வத்தில் கணினி மூலம் நான் உருவாக்கிய படங்களை இங்கு கொடுத்துள்ளேன்.  
    இந்தச் சுடுமண் பொம்மையின் காலம் குறித்து  அறிய, மேற்கொண்டு  இது ஆய்விற்கு உள்ளாக்கப்படும்.

நன்றி: பெருந்தச்சர் கரு.ஜெயராமன் அவர்களின் கருத்துரைப் பகிர்வு - முனைவர் ப.தேவி அறிவு செல்வம்

Wednesday, July 14, 2021

வீரக்குடி கரைமேல் முருக அய்யனார் கோயில் கல்வெட்டுக்கள்

-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்ஏரிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கரைமேல் முருக ஐயனார் திருக்கோயில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் வீரக்குடி என்னும் கிராமத்தில் அருள்மிகு கரைமேல் முருக அய்யனார் கோயில் என்ற பெயரில் உள்ளது.   ஐந்து நிலை இராஜகோபுரம் மற்றும் இருதள விமானத்துடனான கருவறையில் கல் சிலை உருவத்துடன் முருகன் நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள் புரிகிறார். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், முக மண்டபம் அதனை அடுத்து வாகனம், கொடிமரம், பலிபீடம் என அமைக்கப்பட்டிருக்கிறது.

கருவறையின் வெளிப்புறச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை போன்ற தெய்வங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  கோயில் வளாகத்தினுள் சோனை கருப்பசாமி, லாடசன்னாசி, பத்திரகாளி, பேச்சியம்மன், ராஜா மந்திரி, கிழவன் கிழவி (நடுக்கல்) என இவர்கள் பரிவாரத் தெய்வங்களாக தனித்தனிச் சன்னிதிகளில் வீற்றிருக்கிறார்கள். மேலும் பத்தடி உயரம் உள்ள சுதையால் ஆன யானை வாகனமும், குதிரை வாகனமும் அமைக்கப்பட்டுள்ளது.  கருவறைக்கு வலது புறத்தில் அரசமரத்தடி விநாயகர் வீற்றிருக்கிறார்.
devi.jpg

வாகன மண்டபத்தில் முருகனுக்கு உரித்தான மயில் வாகனத்துடன், நந்தி மற்றும் யானை வாகனமும் ஒரே மண்டபத்தில் காட்சியளிக்கிறது. கோயிலுக்கு வெளியே கருவறையை நோக்கி கல்லாலான மயில்வாகனம் ஒன்றும் காணப்படுகிறது. கோயிலின் இடது பக்கவாட்டில் அருள்மிகு அரியவன், தூண் உருவமாக காணப்படுகிறார். சிவராத்திரி, வைகாசி விசாகம் தைப்பூசம் , கார்த்திகை ,மாசி களரி எனத் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயிலானது பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. 

கரைமேல் முருக ஐயனார் திருக்கோயில் கல்வெட்டுக்கள்:
1.1950களில் அம்மிக்கல் ஒன்று இக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட செய்தியுடன் அம்மி கல் ஒன்று உள்ளது.
2. ஏழு வரிகள் கொண்ட துண்டு கல்வெட்டு ஒன்று எங்களால் கண்டறியப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. 
devi1.jpg
கல்வெட்டு செய்தி:
            1. உ முறுக அய்ய துணை
            2. அருகபட்டி
            3. யிறுக்கும் பகவன்
            4. புசாறி மேபடி கோல்வ
            5. மூப்பன் மேபடி கோல்வ
            6. டுகறன் முருக அண்டி
            7. மூப்பன்

இந்தக் கல்வெட்டு செய்தியினை வாசித்துத் தெரிவித்தவர் திரு. இராஜகோபால் சுப்பையா, மூத்த தொல்லியல் அறிஞர். 


----

Thursday, July 8, 2021

ஜப்பானியரின் மலாயா ஆக்கிரமிப்பு (1942 – 1945)


 -- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி. ஜப்பான் நாட்டின் வெறியாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பான் கைப்பற்றிய நாடுகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என முடிவு செய்யப் பட்டது. அந்த வகையில் அமெரிக்கா கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.  சான் பிரான்சிஸ்கோ ஒப்பந்தம் என்று பெயர். இதை ஜப்பான் சமாதான ஒப்பந்தம் என்றும் அழைப்பார்கள். இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 8, 1951-ஆம் தேதி, 48 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. 

Malacca2.JPG

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஜப்பான், போர் இழப்பீடுகளை வழங்கத் தொடங்கியது. மலாயாவுக்கும் இழப்பீடு வழங்கப் பட்டது. ஏன் என்றால் ஜப்பானின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலாயாவும் ஒன்றாகும். 
(சான்று: The Treaty of San Francisco - Treaty of Peace with Japan. It was signed by 49 nations on 8 September 1951, in San Francisco, California, U.S. at the War Memorial Opera House.)

மலாயாவுக்குப் போர் நஷ்டயீடு வழங்குவதற்கு ஜப்பான் சம்மதிக்கும் போது என்ன என்ன நடந்தன என்பதைப் பார்ப்போம்.  பணம், பொருட்கள், நிலம் போன்ற பல்வேறு வடிவங்களில் மலாயாவுக்கு இழப்பீடு வழங்கப் பட்டது.  1946-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மலாயா, சிங்கப்பூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்த  பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் ’போர் சேதக் கோரிக்கை ஆணையம்’ (War Damage Claims Commission) எனும் ஆணயத்தை அமைத்தது. 

Malacca.jpg

அந்த ஆணையம் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் மலாயாவுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு எவ்வளவு என்பதற்கான தகவல்களைச் சேகரித்தது. மலாயா மக்கள் சார்ந்த இழப்பீட்டுக் கோரிக்கையில் அடங்கியவை:
1. போரினால் ஏற்படும் நேரடிச் சேதங்கள். 
2. மலாயாவில் இருந்த ஜப்பானியத் தொழிற்சாலைகள்; சுரங்கங்கள்; கட்டுமானப் பொருட்கள்; உபகரணங்கள் போன்ற தொழில் மற்றும் வணிகத் தளவாடங்கள். 
3. மலாயாவில் சீன மக்களிடம் திணிக்கப்பட்ட கட்டாயப் பங்களிப்புகள்; ஜப்பானிய இராணுவத்திற்கு வழங்கப்பட்ட கடன் நீட்டிப்பு; மற்றும் இரயில் கட்டுமானச் சேவைச் செலவு.

1947-ஆம் ஆண்டிலிருந்து 1950-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்குத் தகவல் சேகரிப்பு. கடைசியில் மொத்த நஷ்டயீடு 67.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என முடிவு செய்யப் பட்டது. இது மலாயா சிங்கப்பூர் போர் சேதக் கோரிக்கை ஆணையம் வழங்கிய நஷ்டயீடு கணக்கு. இருப்பினும், உண்மையான மொத்த நஷ்டயீடு கோரிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம். ஏனெனில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சமநிலையான அளவிற்கு மட்டுமே இழப்பீடு கோரிக்கையை முன்வைத்தது.  இதில் வட போர்னியோவின் இழப்பீட்டுக் கோரிக்கை இருக்கிறதே அது மலாயா இழப்பீட்டுக் கோரிக்கையை விட உயர்ந்து இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தைச் சும்மா சொல்லக் கூடாது.  இழப்பீடு கோரிக்கையின்படி போர்க் கப்பல்கள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள்; தளவாட உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி ஈடு செய்தது. யாருக்கு? மலாயா அரசாங்கத்திற்கு!  ஆனால்... ஆனால்... அங்கே ஒரு பிடி இருந்தது. ஜப்பான் கொடுத்த எல்லாவற்றையும் அப்படியே எடுத்து அப்படியே மலாயாவுக்கு கொடுத்துவிட முடியாத நிலை. மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்தாலும் நடக்காத காரியம். என்ன தெரியுமா??

இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளின் (Allied Powers) ஒரு பகுதியாக பிரிட்டன் இருந்தது.   நாஜி ஜெர்மனி, ஜப்பான்; இத்தாலி போன்ற நாடுகளைத் தோற்கடிக்க அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன்; சீனா ஆகிய நாடுகள் ஒரு கூட்டணி அமைப்பை உருவாக்கின.  ஆகவே, ஜப்பான் இழப்பீடாக வழங்கும் சொத்துக்களை அந்த நேசக் கூட்டணி நாடுகளிடையே பிரிட்டன் விவாதிக்க வேண்டி இருந்தது. அந்த நாடுகளைக் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும்.

ஆக அந்த நேச நாடுகள் எல்லாம் ஒன்றுகூடி மலாயாவுக்கு ஒதுக்கிய இழப்பீடு என்ன தெரியுமா??? வேதனையாக இருக்கிறது. 
மலாயாவுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு:
(1) அமெரிக்க டாலர் 85.7 மில்லியன் (350 மில்லியன் ரிங்கிட்). 
(2) இயந்திரத் தளவாடங்கள் 809. 
(3) ஒரு பெரிய போர்க் கப்பல். 

தவிர மேலே சொன்ன இயந்திரத் தளவாடங்கள்; போர்க் கப்பல்; இவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் விற்றால் கிடைக்கும் பணம் மலாயா அரசாங்கத்திற்குப் போய்ச் சேர வேண்டும். 

ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. மலாயாவுக்கு கிடைத்த இழப்பீடு: 
1. ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிற்சாலை பொருட்கள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள். (5 விழுக்காடு). 5 %. நூறு விழுக்காட்டில் ஐந்தே ஐந்து விழுக்காடுதான் வழங்கப் பட்டது.
2. ஜப்பானியக் கடற்படையைச் சேர்ந்த 23 சின்னப் போர்க் கப்பல்கள். ஒரு பெரிய கப்பலைக் கேட்டு இருந்தார்கள். அமெரிக்கா ஒத்துக் கொள்ளவில்லை. சின்ன நாட்டிற்குச் சின்ன கப்பல்கள் போதும் என்று சொல்லி விட்டது.

முறைப்படி இழப்பீடுப் பணம் எல்லாம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஜப்பானியத் தொழிற்சாலைகள்; இயந்திரங்கள்; உபகரணங்கள்; தளவாடங்கள் போன்றவற்றை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். 23 போர்க் கப்பல்களை விற்ற பணம் மலேசிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.  ஆனால் மலாயா பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படிச் செய்யவே இல்லை. பெரும் தொகையைத் தன்னுடைய காலனித்துவ நிர்வாகச் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது. ஒன்றே ஒன்று உருப்படியாகச் செய்தது. அந்தக் காலக் கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட அரச மலாயா தொண்டர் கடற்படைக்கு (Malayan Royal Naval Volunteer Reserve) ஒரே ஒரு போர்க் கப்பலை வழங்கியது தான் உலக மகா சாதனைச் சேவை.

ஜப்பான் வழங்கிய இழப்பீட்டில் பெரும் தொகை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்டங்களைச் சீர் செய்யவும்; மலாயாவில் இருந்த ஈயச் சுரங்கங்களைச் செப்பனிடவும் பயன்படுத்தப் பட்டன.  ஜப்பானியர் காலத்தில் ஆங்கிலேய ரப்பர் தோட்டங்கள் பெரிதும் சேதம் அடைந்து விட்டதாகவும் அந்தத் தோட்டங்களை மறுபடியும் சீர் செய்ய வேண்டும் என்று சொல்லி பெருவாரியான பணம் செலவு செய்யப் பட்டது.  இந்த விசயம் துங்கு அவர்களுக்கும் தெரியும். ஜப்பான் வழங்கிய நஷ்டயீட்டுத் தொகை எப்படிச் செலவாகி இருக்கிறது கவனித்தீர்களா?

ஜப்பானின் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு முன்னதாகவே பிரிட்டிஷார்; மலாயா கூட்டாட்சி சட்டமன்றம், சிங்கப்பூர் சட்டமன்றம் ஆகியவற்றில் ஒரு சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு வந்தார்கள். அந்தச் சட்டத்தின்படி பிரிட்டிஷார் தங்கள் விருப்பப்படி இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஜப்பான் வழங்கிய போர் இழப்பீடுகளின் விளக்கம். 
(1960-ஆம் ஆண்டுகளில் ஜப்பானிய யென் கணக்கில் மலேசிய ரிங்கிட் நாணய மாற்றம்: 1 பில்லியன் யென் = 30 மில்லியன் ரிங்கிட்). போர் நஷ்டயீடு பட்டியல்:

1. மைக்ரோனேசியா (Micronesia) - (ஆண்டு 1950) - 18 பில்லியன் யென் - (540 மில்லியன் ரிங்கிட்)
2. மியன்மார் - (ஆண்டு 1954 - 1963) - 50.4 பில்லியன் யென் - (1500 மில்லியன் ரிங்கிட்)
3. பிலிப்பைன்ஸ் - (ஆண்டு 1956; 1967) - 53 பில்லியன் யென் - (1590 மில்லியன் ரிங்கிட்)
4. இந்தோனேசியா - (ஆண்டு 1958) - 63.7 பில்லியன் யென் (1910 மில்லியன் ரிங்கிட்) 
5. லாவோஸ் (ஆண்டு 1958) - 1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)
6. கம்போடியா (ஆண்டு 1959) - (1 பில்லியன் யென் - (30 மில்லியன் ரிங்கிட்)
7. வியட்நாம் (ஆண்டு 1960) - (14.04 பில்லியன் யென் - (420 மில்லியன் ரிங்கிட்)
8. கொரியா (ஆண்டு 1965) - (72 பில்லியன் யென் - (2160 மில்லியன் ரிங்கிட்)
9. மலேசியா (ஆண்டு 1967) - (2.94 பில்லியன் யென் - (90 மில்லியன் ரிங்கிட்)
10. தாய்லாந்து (ஆண்டு 1967) - (5.4 பில்லியன் யென் - (165 மில்லியன் ரிங்கிட்)
11. தைவான் (ஆண்டு 1967) - (58 பில்லியன் யென் - (175 மில்லியன் ரிங்கிட்)
12. சிங்கப்பூர் (ஆண்டு 1967) - (2.9 பில்லியன் யென் - (87 மில்லியன் ரிங்கிட்)
13. ஹாலந்து (ஆண்டு 1956) - (3.6 பில்லியன் யென் - (110 மில்லியன் ரிங்கிட்)
14. சுவிட்சர்லாந்து - Switzerland - (ஆண்டு 1955) - (33 மில்லியன் ரிங்கிட்) 
15. டென்மார்க் - (ஆண்டு 1955) - (215 மில்லியன் ரிங்கிட்)
16. சுவீடன் - (ஆண்டு 1958) - (150 மில்லியன் ரிங்கிட்) 
17. ஸ்பெயின் - (ஆண்டு 1957) - (155 மில்லியன் ரிங்கிட்)

இழப்பீடுகளுக்கான கொடுப்பனவுகள் 1955-இல் தொடங்கி 23 ஆண்டுகள் நீடித்தது. 1977-ஆம் ஆண்டு வரையில் சன்னம் சன்னமாகக் கொடுக்கப் பட்டது. மலேசியாவிற்கு எவ்வளவு பணம் எந்த ஆண்டில் கொடுக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள். 

சான்றுகள்:
1. PRESS RELEASE UNITED NATIONS COMPENSATION COMMISSION PAYS OUT US$270 MILLION" (PDF). United Nations Compensation Commission. 23 July 2019.
2. RESOLUTION 687 (1991)" (PDF). U.S. Department of the Treasury. 9 April 1991. Archived (PDF) 
3. San Francisco Peace Conference 8 Sep 1951
4. Japan's Records on War Reparations, The Association for Advancement of Unbiased View of History
5. War Responsibility, Postwar Compensation, and Peace Movements and Education in Japan

நன்றி: தமிழ் மலர் - 08.07.2021

----

Wednesday, July 7, 2021

திராவிடம் ....

-- மா.மாரிராஜன்


திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்.... 
தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்.... 
வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்.... 
இப்பெருமைமிகு சொல்லை.... 
இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்.... 

ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!!  இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?

தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க  இலக்கியங்கள் கூறும்.  ஆனால்  வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்? 
சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை... 
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட  என்றார்கள்.  

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது.  அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..
ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார்.  திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார்.  இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.

இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ  தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை.  ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர்  என்று  கூறுவார்கள்.  இவ்வாறு கூற தமிழருக்குத்தான்  உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு.  தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது.  ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?

தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;
வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். 
எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது. 
ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8). 

mari6.jpeg

மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.  தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர்  கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.  எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).

mari5.jpeg
 
ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்.... 
திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்? 
இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?
வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?
ஒரு நீண்ட பட்டியலே உள்ளது .... 

அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது  அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில்  கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி.... 

Hathigumpha inscription.jpg
mari1.jpeg
"ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"

தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.
(Epigraphia Indica. Vol. 20.No. 7 )

'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது.  தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது.  இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.

mari3.jpeg

பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு.  காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.  செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை  வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக,  வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.

mari2.jpeg

mari4.jpeg

அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து) 

ஆக, த்ரமிட, திரமிளா  என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.

வடமொழியில் தமிழ் எவ்வாறு  குறிக்கப்பட்டது என்பதை  ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..

1.காமிகாகமம்
என்னும் ஆகம  நூல்..
அர்ச்சனா விதி படலம்...

தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்)  அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும்  பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்.
"ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வா
ஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்
யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"

ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..

2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான  'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது  தமிழ் எழுத்துகளைக்  குறிக்கிறது.

3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.

4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க  "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.

5.  ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது. 

6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா  ஸங்கா' என்கிறார்.

7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.

8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.

9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.

11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.

12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.

13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.

14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.

15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை  "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.

16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.

17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில்,  "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.

18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது.  கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர்  தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.

19 . கி.பி.10  ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர்,  பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்",  அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை  த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.


References:
1.தேவநேயப் பாவாணர்; திராவிடத்தாய்.
2. ப.சண்முகசுந்தரம். உலகமொழிகளில் தமிழ்ச்  சொற்களும் இலக்கணக் கூறுகளும்.
3. Epigrphia Indica Vol. 20.
4. பாண்டியர் செப்பேடுகள் பத்து.
5. தொல்லியல் ஆய்வாளர் சு.இராஜவேலு உரையாடலில்  - திராவிடக்குறிப்பு

--

Saturday, July 3, 2021

ஃபிரான்சோயி க்ரோ - ஃபிரெஞ்சுத் தமிழறிஞர்-- கே.ஆர்.ஏ. நரசய்யா

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குவது) ஆண்டு தோறும் தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டுக்கான 'குடியரசுத் தலைவர் செம்மொழி விருதுகள்' வழங்கி வருகிறது. இதன் கீழ் வழங்கப்படும் 'குறள் பீடம்' விருது ஆண்டு தோறும் இருவருக்கு -- அயல் நாட்டினருக்கு ஒன்று, அயல் நாடு வாழ் இந்தியருக்கு ஒன்று -- (மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை ஆகியவை) வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2008-09 ஆம் ஆண்டிற்கான அயல் நாட்டினர் பிரிவில் விருது பெற்றவர் ஃபிரான்சோயி க்ரோ (François Gros,1933-2021) என்ற பிரெஞ்சுக் காரர். அன்னார் சென்ற மே 24 ஆம் தேதி 88 வது வயதில் ஃபிரான்சில் காலமானார்.

Francois Gros.jpg

1963 ஆம் வருடம் புதுச்சேரிக்கு வந்திருந்த இவருக்குத் தமிழ் கற்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதற்கு உந்துதல் அளித்தவர் அவரது ஆசானான ஜீன் ஃபிலியோசாட் என்ற ஆசிய மொழிகளின் (சமஸ்கிருதம், பாலி, திபெத்தியன் மற்றும் தமிழ்) வல்லுநர். அவர்தான் புதுச்சேரியில், ஒரு பிரெஞ்சு பள்ளியைத் தொடங்கியவர். அவர் க்ரோவைப் புதுச்சேரி சென்று அங்கு தமிழ் மொழி ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையைச் சேர்ந்த பரிபாடலை ஃபிரெஞ்சு மொழி பெயர்ப்பு செய்யச் சொல்லியும் பணித்தார். அதன்படி க்ரோ 1963 ல் புதுவை சென்றார். அதே போல அவர் செய்வித்த மற்றொரு சிறந்த காரியம் தேவாரத்தின் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு. அந்த நூல், நம் நாட்டின் சாகித்ய அகாதெமி போலுள்ள அந்நாட்டின் அகாதெமியின் செயின்தார் விருதினை 1969 ஆம் ஆண்டில் பெற்றது.

அவரது 70ஆம் ஆண்டு நிறைவின் போது சௌத் இண்டியா ஹொரைசன்ஸ் (South India Horizons) என்ற ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்நூல் தொகுப்பாளர்கள் ழான் லு செவாலியர் என்ற ஃபிரெஞ்சுக்காரரும் இவா வில்டன் என்ற ஜெர்மானியப் பெண்மணியும் ஆவர். இவர்கள் க்ரோ விடம் பயின்றவர்கள். நூல் எழுத முருகையன் என்ற ஓர் ஆய்வாளரும் உதவி புரிந்துள்ளார். அதில் 16 நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்கள் (தத்துவவியலாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், கல்வெட்டாய்வாளர்கள்) க்ரோவைப் பற்றிய கட்டுரைகள் எழுதியுள்ளனர். முக்கியமாக ஃபிரான்ஸ் நாட்டில் தமிழ் ஆய்வில் க்ரோ ஒரு முன்னோடி என்று அறியப்படுகிறார். அவரிடம் பயின்ற பலர் தமிழ் மொழியில் சிறப்பான பணிகள் செய்துள்ளனர்.

அவரது கட்டுரைகளும் மற்ற எழுத்து வடிவங்களும் தொகுப்பாக டீப் ரிவர்ஸ்: செலக்டட் ரைட்டிங்ஸ் ஆன் டமில் லிடரேச்சர் (Deep Rivers: Selected Writings on Tamil Literature) என்ற  ஃபிரெஞ்சு நூலில் கொணரப்பட்டது. இது 2009 ல் பி. போஸ்மென் என்பவரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்நூலில் காணப்படும் கட்டுரைகளினின்று அவரது தமிழ்ப் படிப்பின் ஆழமும் மொழியில் இருந்த அவரது அபார வீச்சும் அறியப்படுகிறது. சங்க, பக்தி இலக்கியங்கள் தவிர தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள் முதலியனவும் இதில் அடங்கும்.

தமிழ் பக்தி இலக்கியத்தில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. காரைக்காலம்மையார் பனுவல்களையும் அவர் தமது மொழியில் இயற்றியிருக்கிறார். பக்தி இலக்கியத்தில் அவர் போற்றப்படுவது அவரது தேவாரத்து மொழிபெயர்ப்பால்.  இந்த ஃபிரெஞ்சு நூல் யுனெஸ்கோ வின் உதவியுடன் 1984 ல் பதிப்பிக்கப்பட்டது. தவிரவும் பெரிய புராணம், மற்றும் அருணகிரிநாதர் பாடல்களையும் மொழி பெயர்த்துள்ளார். 

மூதறிஞர் நாகசுவாமியுடன் வரலாற்றையும் தொல்லியலையும் கலந்து உத்திரமேரூர் மீது ஒரு பெருங்கட்டுரை எழுதியுள்ளார். அது (உத்திரமேரூர்: கதைகள், வரலாறு மற்றும் நினைவுச் சின்னங்கள் - ஃப்ரெஞ்சு இன்ஸ்டிட்யூட், பாண்டிச்சேரி 1970ல் வெளியிட்டது) ஒரு சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

தமது உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அவர் தமது நாட்டுக்குத் திரும்பிவிட்டார்.

தமிழ் மொழியைப் பற்றிய அவரது கருத்து: "தமிழ் மொழியின் எழுத்து அளவை விட அதன் தரத்தால் ஒரு சிறப்பான மொழியென்ற தகுதியை அதைப் போன்ற ஐரோப்பிய மொழிகளை ஒத்துப் பெறுகிறது. செம்மொழி என்பது அந்நிலையைப் பெறுவதற்கு அதன் மொழிபெயர்ப்புகள் எல்லா நாடுகளிலும் பெறும் வரவேற்பைப் பொறுத்துள்ளது. அது தமிழுக்குப் பெருமளவில் உள்ளது."

க்ரோ புதுவையில் ஈகோல் பிரான்செய்ஸ் டிஎக்ஸ்ட்ரீம் - ஓரியன்ட் என்ற அமைப்பின் இயக்குநராக 1977 லிருந்து 1989 வரை பணியாற்றினார்.

அங்கு பல பயிற்சிக் குழுக்களை நிறுவினார். அங்கிருந்த போது அவர் இலக்கியத் தமிழ் மட்டுமின்றித் தற்காலத் தமிழ் நூல்கள் பலவும் சேகரித்தார். எண்ணிக்கையில் அவை 10,000 ஆகும். அவற்றையெல்லாம் அவர் கனடாவின் டொராண்டோ பல்கலைக் கழகத்திற்குக் கொடையாக அளித்து விட்டார். அதைப் பற்றி அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரீலதா ராமன் சொல்கிறார். "அந்நூல்களெல்லாம் அட்டவணையிடப்பட்டு இணைய வழி படிப்பதற்கான வடிவத்திற்கு நாங்கள் ஆவன செய்து வருகிறோம். விரைவில் இத்தொகுப்பு இணைய வழியில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் கற்போருக்கும் பயனள்ளகாக அமையும்"

க்ரோ புதுவையில் இருக்கையில் திருக்குறளை (காமத்துப் பால்) தமது மொழியில் வடித்தார். அவர் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான பேராசிரியராகவும் பணி புரிந்தவர். சங்ககாலத்திலிருந்து தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்புகள் வரை இவரது ஆர்வமும் ஆய்வும் நீண்டது.

சென்னையின் க்ரியா அமைப்பின் நிறுவனர் காலஞ்சென்ற ராமகிருஷ்ணனுடன் க்ரோ கலந்து பல உன்னதப் பணிகள் ஆற்றியுள்ளார்.

க்ரோவின் மறைவு தமிழுலகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் இடையே இருந்த ஒரு பெரும் தொடர் உறவுக்கு மாபெரும் இழப்பு.


நன்றி: அமுதசுரபி | ஜூலை 2021


------------------------------------------