Thursday, July 1, 2021

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை - கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள் 

-- முகமது ஷபி 


canada.jpg


ஜூலை 1, இன்று, தற்போதைய கனடா உருவான நாள்! கனடாவின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் தேசிய நாள். 1867 ஜூலை 1இல் சிதறிக்கிடந்த பிராந்தியங்கள் கூட்டமைப்பாக ஒன்று கூடிய நாள். தேசிய விடுமுறை, ஊர்தோறும் அணிவகுப்புகள், பாராளுமன்றம் உட்பட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை, எங்கெங்கு காணினும் வெள்ளை சிவப்பு நிறத்திலான கனடிய தேசியக்கொடிகள் என விழாக்கோலம் பூணும் இந்த நாள் இந்த வருடம் மயான அமைதியுடன் தொடங்குகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கனடாவின் வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளமற்ற மண்ணறைகள் தான் அதற்குக் காரணம். சிறுபிள்ளைகளின் மண்ணறைகள். ஆம், 1800களின் இறுதியிலும் 1900களின் முற்பகுதியிலும் அன்றைய கனடிய அரசினாலும், கிருத்துவ ஆலயங்களாலும் கனடிய பூர்வக்குடிப் பிள்ளைகளுக்குத் தங்களது கலாச்சாரத்தைக் கற்றுக்கொடுக்க கூட்டாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பள்ளிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள்.

அன்றைய காலகட்டத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டு, அரசாங்க வலிமையைப் பயன்படுத்தி, பெற்றோர்கள் அனுமதி இல்லாமல், பிள்ளைகளை அவர்களிடமிருந்து கட்டாயப்படுத்திப் பிரித்து, அவர்கள் சந்திக்க வராதவண்ணம் வெகுதூரத்தில் பள்ளிகளை அமைத்து, விடுமுறைகளுக்கு வீடுகளுக்கு அனுப்பாமல், அடித்துத் துன்புறுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நோய்கள் வந்தால் நிராகரித்து, பட்டினி போட்டு, அவர்கள் மொழியினை பேசவிடாமல், அவர்களின் மரபுகளைப் பின்பற்றவிடாமல், இந்த இன்னல்களால் இறந்தபோது அதை அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தாமல், அனாதைப்பிணங்களாக எந்த அடையாளமுமின்றி புதைத்துள்ளனர். 

2015இல் இதை விசாரிக்க அமைக்கப்பட்ட உண்மை மற்றும் சமரசத்திற்கான குழு அன்றைய காலகட்டத்தில் கலாச்சார இன ஒழிப்பில் கனடிய அரசாங்கம் ஈடுபட்டது எனத்தெரிவித்துள்ளது. ஆனால், தோண்டத்தோண்டக் கிடைக்கும் பிணங்களோ, அது வெறும் கலாச்சார இனவழிப்பா, அல்லது இனப்படுகொலையுடன் கூடியதா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மூன்று பள்ளிகள் இருந்த இடங்களில் மட்டுமே தோண்டியுள்ளனர் என்பதும், கனடா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பள்ளிகள் இருந்தன என்பதும், கடைசி பள்ளி 1998இல் மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் பாராளுமன்ற கனடா நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனேடியப்பிரதமர் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட  அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் பலரும் இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்குபெறுவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இழவு வீட்டில் கொண்டாட்டம் இல்லை என்ற தர்க்கத்தைத் தாண்டியது இந்தக் காரணம். 1867இல் உருவாக்கப்பட்ட கனடா இந்த மண்ணறைகளின் மேலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன அழிப்பிற்கும் கனடா உருவாவதற்கும் நேரடித் தொடர்புள்ளது. பூர்வக்குடியினரின் நிலத்தை ஏமாற்றிப்பிடுங்கி, அவர்கள் பண்பாட்டையும், மொழிகளையும் அழித்து, அவர்கள் பிள்ளைகளைப் பிரித்து, துன்புறுத்திக் கொன்றபின் உருவானதே தற்போதைய கனடா என்பது கசக்கும் உண்மை. இதனாலேயே சில சமூக ஆர்வலர்கள் கனடா நாள் என்ற ஒன்றையே இனி முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தத் துவங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி வெறும் குறியீடுகளான ஆதரவைக் கைவிட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசினை வலியுறுத்தி வருகின்றனர்.

தோண்டப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளிருந்த இடங்களில் உடல்களுக்கான தேடுதலை மேற்கொள்வது, இந்த விசாரணையை அரசே நடத்துவது, இதில் தொடர்புடைய நபர்களுக்குத் தண்டனை வாங்கித்தருவது, நிலங்கள் தொடர்பான பூர்வக்குடியினர் மேல் அரசு தொடுத்திருக்கும் வழக்குகளைத் திரும்பப்பெறுவது, மற்றும், உண்மை மற்றும் சமரசத்திற்கான குழு சமர்ப்பித்த 94 கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது போன்றவையாகும். 

இதைப் பற்றி Tamil Canadian Centre for Civic Action அமைப்பு கூறுகையில் கனடியத் தமிழர்களைக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும், குடியமர்ந்தவர்களாக பூர்வக்குடியினருக்கு நீதியை உறுதிப்படுத்துவது தமிழர்களின் கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளது. வேறு சிலர், குறிப்பாக வலது சாரி அரசியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் கனடா நாளை கொண்டாடுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தக் கொடூர நிகழ்வையும் தாண்டி அவர்கள் கனடா நாள் கொண்டாடப்படவேண்டுமென்றும் அவர்கள் கனடியாராக இருப்பதில் எப்பொழுதும் பெருமை கொள்ளவேண்டுமென்றும் பிரச்சாரம் செய்தவண்ணம் உள்ளனர்.

பல இனத்தைச் சேர்ந்த, பல நாடுகளிலிருந்து வந்த, பல மொழிகள் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழும் நாடாக கனடா கருதப்பட்டாலும், அவர்களை அடிப்படையில் இரண்டு வகைகளாகவே பிரிக்கலாம். பூர்வக்குடியினர் மற்றும் குடியமர்ந்தவர்கள். பிரிட்டிஷ், பிரெஞ்சு மக்கள் துவங்கி தமிழ் மக்கள் வரை இங்கே குடியமர்ந்தவர்களே. இருநூறு வருடங்களுக்கு முன் பூர்வக்குடியினரின் நாடாக, வீடாக இருந்த நிலங்களை இன்று பங்குபோட்டுக்கொண்டவர்களே. அவர்களை நன்றியுடன் நடத்தப்படாவிட்டாலும், சக மனிதர்களாக நடத்தியிருக்க வேண்டும். கனடாவை மீண்டும் பெருமையாக பார்க்க விரும்புவோர் பூர்வக்குடியினருக்கு நியாயம் கிடைப்பதில் தீர்க்கமாக இருப்பதிலிருந்தும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதிலிருந்தும் துவங்க வேண்டும்.


கட்டுரையாளர்: முகமது ஷபி
கனடாவில் வாழும் இந்தோ - கனடிய சூழலியல் செயற்பாட்டாளர், மனித உரிமை செயற்பாட்டாளர்
தலைப்பு; எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது
நன்றி-அரண்செய் 

No comments:

Post a Comment