Tuesday, July 27, 2021

வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்

வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்

-- தேமொழி 
 
ஓய்மா நாட்டை ஆண்ட தலைவன் நல்லியக்கோடன் என்ற வள்ளல்.  நல்லியக்கோடனைப் பாடிப் பரிசில் பெற்று அவனது தலைநகரான கிடங்கில் என்ற ஊரிலிருந்து திரும்புகிறான் பாணன் ஒருவன்.  வழியில் வறுமையில் வாடிய பாணன் ஒருவனைப் பார்த்து வருந்தி, அவனுக்கு உதவுவதற்காக நல்லியக்கோடனைச் சென்று பார்த்து உதவி பெறுவாயாக  என்று வழி கூறி ஆற்றுப்படுத்துகிறான்.  

ஓய்மா நாட்டின்  தலைநகருக்குப் போகும் வழியில் நல்லியக்கோடனின் ஆட்சிக்கு உட்பட்ட எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய நகரங்கள் உள்ளன என்று வழி கூறும் பாணன் வறிய பாணனிடம் கூறுகிறான். வழியில் உள்ள நகரங்களின் அமைப்பையும், நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறையையும் இப்பாடலின் மூலம் விளக்குகிறார் புலவர் நத்தத்தனார் தாம் இயற்றிய சிறுபாணாற்றுப்படை நூலில். 

page 239.JPG
ஆற்றுப்படுத்தும் பாணன், குடும்பத்தோடு எதிர்ப்பட்ட வறிய பாணனிடம் பின்வருமாறு கூறுகிறான்: வழியில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள எயிற்பட்டினம் என்ற  ஊரில் கடல் அலைகள் கொண்டு வந்து ஒதுக்கிய அகில் மரக் கட்டைகள் பார்ப்பதற்கு உறங்குகின்ற ஒட்டகங்கள் போன்று கிடக்கும். அத்தகைய அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி வடிகட்டிய கள்ளை மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு உணவாகக் கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில் கோமான் நல்லியக்கோடனைப் பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப ஆடியும் செல்லும் பொழுது அதைக்கேட்டு  மகிழும் மீனவர்களின் வீடுகள் தோறும், அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் குழல் மீன் சூட்டைப் (நெருப்பில் சுடப்பட்ட குழல் மீன் கருவாடு) பெற்று உண்டு மகிழலாம் என்று கூறுகிறான். இச்செய்திகள் சிறுபாணாற்றுப்படை நூலின்  146 முதல் 163 வரையில் உள்ள அடிகளில் இடம் பெறுகின்றன. 

சிறுபாண் ஆற்றுப்படை:
     பழம் படு தேறல் பரதவர் மடுப்பக்
     கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,
     தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி,
     அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
     வறல் 'குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்'

சிறுபாணாற்றுப்படையில் நெய்தல் நில மக்களின் உணவாக 'குழல் மீன்' குறிப்பிடப்படுகிறது.  
“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்” (வரி: 163) 
என்று சுடப்பட்ட  குழல் மீனை விருந்தினர்க்கு அளித்து மகிழ்வர் நெய்தல் நில மக்கள் என்று குறிப்பிடும் வரி தமிழ் இணையக் கல்விக்கழகம் சேமிப்பில் உள்ள சிறுபாண் ஆற்றுப்படை ஓலைச் சுவடியில்  அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. 
s113b015-palm leaf.jpg

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் குழல் மீன் என்பதன் விலங்கியல் பெயர் 'சின்காதாய்ட்ஸ் பைகுலேட்டஸ்' (Syngnathoides biaculeatus). இது ஆங்கிலத்தில் Alligator pipefish என்று குறிப்பிடப்படுகிறது.  குழல் மீன் என்பது கடல் கொவிஞ்சி என்று வழங்கப்படுவதாகவும் தெரிகிறது. 

தமிழகத்தின் கிழக்குக் கரையோரமாக (மன்னார் வளைகுடா மற்றும் பால்க் வளைகுடா பகுதிகளில்) 7 இனங்களைச் சேர்ந்த குழல் மீன்கள் கிடைப்பதாக அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகிறது.  அதில் அதிக அளவில் கிடைப்பது 'சின்காதாய்ட்ஸ் பைகுலேட்டஸ்' என்ற குழல் மீன் வகையாகும். இங்கு ஆழமற்ற கடற்பகுதியில் கடற்செடிகள், கடற்பாசிகள் மற்றும் இறந்த பவளப்பாறைகள் நிறைந்த பகுதியில் குழல் மீன்கள் வாழ்கின்றன.  
Pipe Fish - Syngnathoides_biaculeatus.jpg

மீன்களின் உருளையான, சுமார் முக்கால் அடி வரை வளரும் உருவ அமைப்பை  ஒட்டியே  தமிழ்ப் பெயரும் ஆங்கிலப் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.  இது தனது உருவத்தையும் நிறத்தையும் ஒட்டிய கடற்தாவரங்களுக்கு  இடையே தலைகீழாக மிதந்த வண்ணம் உள்ள, மெக மெதுவாக நீந்தும் மீன். அதன் வேகம் குறைவு என்பதால் எதிரிகளுக்கு உணவாகாமல் தப்பிக்கும் பொருட்டு அதன் உடல்  அமைப்பு சூழலுக்கு ஏற்ப தகவமைந்த நிலையில் உள்ளது. தனது வளையக்கூடிய உடலால் செடிகளையும் பவழப்பறைகளையும் பற்றிக்கொள்ளும். (காணொளி காண்க: https://youtu.be/r5fWUPQOnSA)
___________________________________________________________

உதவிய தளங்கள்:
[1] சிறுபாண் ஆற்றுப்படை ஓலைச் சுவடி, தமிழ் இணையக் கல்விக்கழகம்

[2] Seahorses and pipefishes of the Tamil Nadu coast, Murugan A., Dhanya S., Rajagopal S., and  Balasubramanian T.; Current Science 95(2): 253-260, 2008

[3] Alligator pipefish - From Wikipedia:

[4] காணொளி:
Alligator pipefish (Syngnathoides biaculeatus)  #shorts
-----

No comments:

Post a Comment