Thursday, September 22, 2016

பெரியவா

-- ருத்ரா இ.பரமசிவன்இது
அறிந்தவருக்கும்
புரிந்தவருக்கும்
மட்டுமே
மந்திரச் சொல்.
நானும் கூட என்மனைவியுடன்
அவருக்கு
கனகாபிஷேகம்
நடைபெற்ற ஆண்டு.
இந்து மதத்தின் பொய்மைக்கூடு
எனும் பெரிய முட்டையில்
ஊர்ந்து கொண்டிருந்த எறும்பு அவர்.
கடைசி வரை அதை
சுற்றிச் சுற்றிப்பார்த்து
சூட்சுமம் அறிய முயன்றார்.
நான் பார்க்கும் போது
அந்த பொய்மைக்குளியலில் தான்
கனத்த கண்ணாடிகளின் வழியே
விறைத்து வெறித்துக்கொண்டிருந்தார்.
கியூவில் நின்று
கண்டோம்.
தங்க மழை என்றார்கள்.
ஏன்
ஆன்மா
தங்கத்தில் தான் கரைசல் ஆகுமா?
அதனால் தான்
பிரம்மனை
ஹிரண்ய கர்ப்பன் என்கிறார்களா?
அவன் விந்தணு கூட‌
ஹிரண்ய ரேதஸ் தானா?
ராமகிருஷ்ணர்
ஒரு தடவை மெத்தையில்
இரண்டு மூன்று மெத்தையை
சேர்த்து வைத்த ஒரு மெத்தையில்
படுக்க வைத்தார்களாம்.
அப்போதும் அதில்
அவர் படுக்கவில்லையாம்
ஏதோ உறுத்தியதாம்.
என்ன ஏது? என்று பார்த்தார்களாம்
அடியில்
ஒரு தங்க நாணயம் இருந்ததாம்.
எனவே
தங்கத்தின் ருசியெல்லாம்
பக்தனின் ருசி.
கடவுள் ருசியும் அப்படியே.
பக்தர்களின்
பசியும் ருசியும்
கடவுள் மேல் ஏறியது.
பசியில்லாமல்
கல்லும் மண்ணும் கூட இல்லை.
எல்லாமே இங்கு பசி.
தீரும் பசியை
தீரா பசி தின்னு கொண்டே இருக்கும்.
பிணம் இஸ் ஈக்குவல் டு உயிர்
எனும்
விளக்கெண்ணெய் தத்துவமே அத்வைதம்.
அது அதாக புரிய அல்லது தெளிய‌
பிறந்து பார்த்து
இறந்து பார்த்து
பிறந்து பார்த்து
இறந்து பார்த்து
..............
................
அஸ்பர்ஸ யோகம்!
பிறப்பு இறப்புகளை
தொடாத உயிராக‌
நான் உலவுவது எப்படி?
"நான்" என்பதிலிருந்த‌
என் உயிர் சதை எலும்பு ரத்தம்
இன்னும் ஆத்மாவையும் உள்ளிட்ட‌
எல்லா மண்ணாங்கட்டியையும் தான்
உறிஞ்சிய பிறகு மறுபடியும்
உலவுவது?
உடனே ஆவி அப்படி இப்படி என்று
பேத்தகூடாது!
எது அந்த மெய்மை?
ஒரு பூச்சியின்
கூழ் சதை சிறகு உயிர் எல்லாவற்றையும்
தின்றுவிட்ட எறும்புகள்
இன்னும் அந்த‌
எலும்பு மிச்சங்களை
இழுத்துக்கொண்டு போவது போல்
அந்தக் கேள்வி
இழுத்துக்கொள்ளப்பட்டு
நகர்ந்து கொண்டிருக்கிறது!

ஸீரோவைப் புரட்டிப்பார் இன்ஃபினிடி.
இன்ஃபினிடியை திறுப்பிப்போடு ஸீரோ
என்றும்
ஒரு மொட்டைக்கணக்கு உண்டு.
இந்த இன்ஃபினிடி கணிதத்தின்
தீர்வு கண்ட‌
மெய்யியல் விஞ்ஞானி
எனக்குள்
பிம்பம் காட்ட‌
எவர்
எப்போது வருவாரோ
காத்திருக்கிறேன்
எரியும் வரட்டிகளில்
நான் காணாமல் போகும் வரை.
______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

Friday, September 16, 2016

மறைமலை அடிகள்

-- மாயோன் .டி. எஸ். வேதாசலம் சுவாமி என்ற பெயரை மறைமலை அடிகள் என தனித்தமிழில் மாற்றியவர்.

தமிழ், சமசுகிருதம், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். அன்றைய காலத்தில் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து, தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போன நிலையில் தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழையும், தமிழ்ச்சொற்களையும் மீட்டெடுத்தவர்.

இயற்கை மொழியான தமிழில், பிறமொழிகளைக் கலப்பதை, உடலுறுப்புகளை வெட்டிவிட்டு அவ்விடங்களில் செயற்கையான மண்ணாலும், மரத்தானாலும் ஆன உறுப்புகளை வைப்பது போன்றது என எளிய முறையில் விளக்கி, பிறமொழிச் சொற்களை விலக்கியவர். சங்க இலக்கியங்கள் எல்லாம் படிக்கச் சொல்லியவர்; குறிப்பாகத் தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு என்றவர். உலகில், முதன்முதலில் மொழியின் எழுத்துகளை உயிர்,மெய் எனப் பகுத்தது தமிழரே என விளக்கியவர்.

தமிழர் யாரும் இந்துக்கள் இல்லை என விளக்கியவர். உயர்தனிச் செம்மொழி எனத் தமிழின் பெருமைகளை, அருமைகளைத் தமிழர் அறியச் செய்தவர். இன்று மக்களை முட்டாளாக்கும் "இந்தி பொது மொழி" என்ற பொய்யுரையை அன்றே உடைத்தவர். தமிழிசையை மீட்டெடுக்க விரும்புவர். ஆலயங்களில் தமிழை வழிப்பாட்டு மொழியாக்க விரும்பியவர்.

1902'இல் தமிழ் வடமொழியில் இருந்து பிறந்ததா என்ற கட்டுரையில்  சமசுகிருதம் தமிழுக்கு தாய் என்ற பொய்யுரையை உடைத்தவர். ஆரியர் வேறு, தமிழர் வேறென்று 1904'இல் பேசி, தமிழரே இந்நாட்டின் பூர்வகுடி மக்களென்றும் மக்களுக்கு விளக்கியவர். ஆரிய எதிர்ப்பு என, தமிழரிடத்தில் ஆரிய வெறுப்பை விதைக்காமல், வெறுப்பில்லாமல் சமசுகிருதத்தை நன்கு கற்ற பிறகு  ஆரியத்தை எதிர்த்தவர். 1913'இல் சாதி வேற்றுமையை எதிர்த்துப் பேசியவர்.  மக்கள் யாவரும் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தியவர்.

‘ஆங்கிலமும், சமசுகிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டுக் காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம்,  சமசுகிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்தியவர், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார்.

தமிழ்க்கடல்,தனித்தமிழ்த் தந்தை  என்றழைக்கப்பட்டவர். ‘‘அடிகளே தென்னாடு... தென்னாடே அடிகள்’’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க-வால் புகழப்பட்டவர்.

இன்றும், தமிழின் தூய்மை கெடாமல் இருக்க, மறைமலை அடிகளாரின் முயற்சிகள் தான் முக்கிய காரணம்.  மெய்யாகத் தமிழை வளர்க்க அரும்பாடு பட்ட மறைமலை அடிகளார் தனது 75'ஆவது அகவையில் 15-09-1950'இல் மறைந்தார்.

தமிழகத்தில் தமிழில் பேசினால் இழிவு, தமிழ் ஏன் கற்க வேண்டும்,தமிழ் கற்றால் பயனில்லை,தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து பேசுவது என்றெல்லாம் பலர் மயக்கத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் மறைமலை அடிகளின் வரலாறு அறியாமல் இருப்பதே. அவரது நினைவு நாளில் அவராற்றிய அரும்பணிகளை நம்மால் முடிந்தவரை மயக்கத்தில் இருப்போருக்கு எடுத்துரைப்போம்.
______________________________________________________
 
Maayon TS
ts.maayon@gmail.com
______________________________________________________

Sunday, September 11, 2016

ஒரு தரிசனம்

-- ருத்ரா இ.பரமசிவன்
அந்த சொரிநாய்
லாரியில் அடிபட்டு
செத்து விழுந்தது.

யாருக்கும் கவலை இல்லை.
அதைச்சுற்றி
போலீஸ்காரர் சாக்பீஸால்
வட்டம் போடவில்லை.
போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு
வாகனங்கள்
சந்து பொந்துகளுக்கு
திருப்பிவிடப்படவில்லை.
அந்த நாயின் சடலம்
காலபைரவரின்
கசங்கிப்போன
வாகனம் அல்லவா?
ஆனாலும் அது
கண்டு கொள்ளப்படவில்லை.
பக்கத்துக் கோயிலில்
எண்ணெய்ப் பிசுக்கில்
பளபளப்பாய்
கால மூர்த்தியின்
உற்ற தோழனாய்
இருக்கும்
அந்த சிலை
இங்கே ரோட்டின் ஓரத்தில்
ரத்த குங்குமத்தில்
சத்தமின்றிக் கிடந்தது.
திருச்சங்குகள் முழங்காத
உடுக்கைகள் ஒலிக்காத
திருவாதிரைக்காட்சி அது.

சாவதற்கு முன் அது
எந்த காலை தூக்கியிருக்கும்?
இடது காலோ
வலது காலோ...
காலைத்தூக்கிய
ஊர்த்துவ தாண்டவங்களின்
ஊளைக்குரல்கள் அங்கே
மௌனத்தில்
திருப்பள்ளியெழுச்சி பாடின.
அந்த சிவன் "சிவனே" என்று
அங்கு கிடந்தது.
ஐந்து சபையில்
அது என்ன சபை ?
எலும்பும் சதையுமாய் கிடக்கும்
அந்த சபையில்
சில காக்கைகள் வந்து
பதஞ்சலிகளாயும் வியாக்கிர பாதர்களாயும்
சூத்திரங்கள் கத்தின.

கோவிலைச்சுற்றி மக்களின்
ஈசல்கள்.
ஈசன் விளையாட்டின்
"ஈக்குவேஷன்களை" புரிந்து கொள்ளாத
ஈக்களின் கூட்டங்கள்.
இறப்பெல்லாம் பிறப்பு.
பிறப்பெல்லாம் இறப்பு.

நாய் பிடிக்கும் வண்டியோடு
சுறுக்கு கம்பிகளுடன்
சிவனின் பூதகணங்கள் போல
வந்த சிறு கும்பல்
அந்த நாய்க்குப்பையை
துப்புரவு செய்யும் முன் கொஞ்சம்
துப்பறியத் துவங்கியது.

"எந்த லாரிடா இப்டி அடிச்சு போட்டது"
"தெரியலை"
"சாதி நாயான்னு பாருடா"
"சாதியா?
இந்த சாதிகளுக்கெல்லாம்
எந்த லாரிடா வரப்போகுது?"
"அது இருக்கட்டும்டா
உடம்புலே டிசைன் டிசைனா
அந்த கலரப் பாரு"
நெத்தியிலெ பாரு
நாமம் போட்ட மாதிரியாவும் இருக்கு
விபூதிப்பட்டை மாதிரியும் இருக்கு"
அதன் வர்ணத்தைப்பற்றிய
நேரடி வர்ணனை அது.
எந்த பேட்டை நாயோ.
அதன் கோத்திரம் என்ன?
நைத்ரூபமா?
நசிகேதமா?
"அடேய் ஆணா பொட்டையா பாருடா."
"ஆண்தாண்டா"
"ஆனா கழுத்தில் பட்டை இருக்குடா.
வீட்டு நாய் தான்"
அடையாளம் கண்டுகொண்ட குஷியில்
இந்த கரிசனம் மட்டுமே
அங்கு இருந்தது.
அது என்ன ஆருத்ரா தரிசனமா? என்ன
ஓதுவார்கள்
முப்பது திருவெம்பாவை பாட்டுகள் பாட.
அத்துடன்
குப்பையும் காலி.
கும்பலும் காலி.______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________