Thursday, September 22, 2016

பெரியவா

-- ருத்ரா இ.பரமசிவன்



இது
அறிந்தவருக்கும்
புரிந்தவருக்கும்
மட்டுமே
மந்திரச் சொல்.
நானும் கூட என்மனைவியுடன்
அவருக்கு
கனகாபிஷேகம்
நடைபெற்ற ஆண்டு.
இந்து மதத்தின் பொய்மைக்கூடு
எனும் பெரிய முட்டையில்
ஊர்ந்து கொண்டிருந்த எறும்பு அவர்.
கடைசி வரை அதை
சுற்றிச் சுற்றிப்பார்த்து
சூட்சுமம் அறிய முயன்றார்.
நான் பார்க்கும் போது
அந்த பொய்மைக்குளியலில் தான்
கனத்த கண்ணாடிகளின் வழியே
விறைத்து வெறித்துக்கொண்டிருந்தார்.
கியூவில் நின்று
கண்டோம்.
தங்க மழை என்றார்கள்.
ஏன்
ஆன்மா
தங்கத்தில் தான் கரைசல் ஆகுமா?
அதனால் தான்
பிரம்மனை
ஹிரண்ய கர்ப்பன் என்கிறார்களா?
அவன் விந்தணு கூட‌
ஹிரண்ய ரேதஸ் தானா?
ராமகிருஷ்ணர்
ஒரு தடவை மெத்தையில்
இரண்டு மூன்று மெத்தையை
சேர்த்து வைத்த ஒரு மெத்தையில்
படுக்க வைத்தார்களாம்.
அப்போதும் அதில்
அவர் படுக்கவில்லையாம்
ஏதோ உறுத்தியதாம்.
என்ன ஏது? என்று பார்த்தார்களாம்
அடியில்
ஒரு தங்க நாணயம் இருந்ததாம்.
எனவே
தங்கத்தின் ருசியெல்லாம்
பக்தனின் ருசி.
கடவுள் ருசியும் அப்படியே.
பக்தர்களின்
பசியும் ருசியும்
கடவுள் மேல் ஏறியது.
பசியில்லாமல்
கல்லும் மண்ணும் கூட இல்லை.
எல்லாமே இங்கு பசி.
தீரும் பசியை
தீரா பசி தின்னு கொண்டே இருக்கும்.
பிணம் இஸ் ஈக்குவல் டு உயிர்
எனும்
விளக்கெண்ணெய் தத்துவமே அத்வைதம்.
அது அதாக புரிய அல்லது தெளிய‌
பிறந்து பார்த்து
இறந்து பார்த்து
பிறந்து பார்த்து
இறந்து பார்த்து
..............
................
அஸ்பர்ஸ யோகம்!
பிறப்பு இறப்புகளை
தொடாத உயிராக‌
நான் உலவுவது எப்படி?
"நான்" என்பதிலிருந்த‌
என் உயிர் சதை எலும்பு ரத்தம்
இன்னும் ஆத்மாவையும் உள்ளிட்ட‌
எல்லா மண்ணாங்கட்டியையும் தான்
உறிஞ்சிய பிறகு மறுபடியும்
உலவுவது?
உடனே ஆவி அப்படி இப்படி என்று
பேத்தகூடாது!
எது அந்த மெய்மை?
ஒரு பூச்சியின்
கூழ் சதை சிறகு உயிர் எல்லாவற்றையும்
தின்றுவிட்ட எறும்புகள்
இன்னும் அந்த‌
எலும்பு மிச்சங்களை
இழுத்துக்கொண்டு போவது போல்
அந்தக் கேள்வி
இழுத்துக்கொள்ளப்பட்டு
நகர்ந்து கொண்டிருக்கிறது!

ஸீரோவைப் புரட்டிப்பார் இன்ஃபினிடி.
இன்ஃபினிடியை திறுப்பிப்போடு ஸீரோ
என்றும்
ஒரு மொட்டைக்கணக்கு உண்டு.
இந்த இன்ஃபினிடி கணிதத்தின்
தீர்வு கண்ட‌
மெய்யியல் விஞ்ஞானி
எனக்குள்
பிம்பம் காட்ட‌
எவர்
எப்போது வருவாரோ
காத்திருக்கிறேன்
எரியும் வரட்டிகளில்
நான் காணாமல் போகும் வரை.
______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

No comments:

Post a Comment