Thursday, December 31, 2020

என்னே தமிழின் இளமை! - நெத்துரு

 என்னே தமிழின் இளமை! - நெத்துரு


-- முனைவர்.ப.பாண்டியராஜா


வீட்டு ஹாலில் தரையில் அமர்ந்து, மதிலில் சாய்ந்துகொண்டு, கால்களை நீட்டியவாறு சாய்வுப்பலகையில் மாணவர்களின் விடைத்தாள்களை வைத்துக்கொண்டு திருத்தி மதிப்பெண்கள் போட்டுக்கொண்டிருந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. வாசலில் அழைப்பு மணி அடித்தது. ஒருவாறு எழுந்து, எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு நடந்து வந்து கதவைத் திறந்தாள். எதிர்வீட்டுக்காரி! ஒரு கன்னடப் பெண். பேச்சுத்தமிழைப் புரிந்துகொள்வாள். ஆனால் கன்னடத்தில்தான் பேசுவாள். நம் தமிழ்ப்பேராசிரியையோ பெங்களூரில் சிறிதுகாலம் வாழ்ந்தவள். எனவே கன்னடத்தைப் புரிந்துகொள்வாள். ஆனால் தமிழில்தான் பேசுவாள். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது கேட்பவர்க்கு வேடிக்கையாய் இருக்கும்.

“வாங்க, வாங்க, எப்படி இருக்கீங்க?” என்று அந்தக் கன்னடப்பெண்ணை வரவேற்றாள் இவள்.

“நானு சென்னங்க இதேனி, நீமு ஏங்க இதேரி” என்றவாறு உள்ளே நுழைந்தாள் அவள்.

பின்னர் அவர்கள் இருவரும் இவ்வாறே பேசத்தொடங்கினர். சற்று நேரத்தில் ஒரு சிறுவன் -அந்தக் கன்னடக்காரியின் மகன் - ஐந்து வயதிருக்கும் - அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்தான்.

“ஏனு, ஆத்துரு ஆச்சு, நீனு எதுக்கு அழுத்திய” என்று பதறிப்போய்க் கேட்டவள், அவனது வலது முழங்கையில் அடிபட்டு இரத்தம் வருவதைப் பார்த்துவிட்டாள். ஏதோ தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன் கீழே விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. தன் தாய் இங்கே வருவதைப் பார்த்திருக்கிறான். உடனே அழுதுகொண்டு தாயிடம் வந்துவிட்டான்.

“ஐயோ, ரத்தம் வருதே” என்று பதறிப்போனாள் தமிழ்க்காரி.

“நெத்துரு பத்தாத, வெரசா மனைக்கு ஓகு பேக்கு, நானு பர்த்தேனி” என்று சொன்னவாறு கன்னடப்பெண் தன் பையனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தாள்.

இரத்தம் என்ற பேச்சைக்கேட்டு, வேகமாகத் தன் அறையிலிருந்து வெளியே வந்தான் அவள் கணவன்.

“என்ன ஆச்சு?” என்று அந்தக் கன்னடப் பெண் வெளியே செல்வதைப் பார்த்தவாறு கேட்டான்.

“அந்தப் பெண்ணோட மகன் கீழே விழுந்துட்டான். கையிலே அடிபட்டு இரத்தம்” என்றாள் அவள்.

“அந்தக் கன்னடப் பெண் ஏதோ சொல்லிக்கிட்டே போச்சே. என்ன அது?” என்று வினவினான் அவன்.

“அதான், ரத்தம் வருது, சீக்கிரம் வீட்டுக்குப் போகணும், நான் வர்ரேன்”ன்னு சொல்லிட்டுப் போறா. “நெத்துரு பத்தாதா’ன்னா - ரத்தம் வருது’ன்னு அர்த்தம்” என்றாள் அவள்.

இதைச் சொன்னதும், சில வினாடிகள் ஆழ யோசித்தபடி இருந்த அவள், விடுவிடு-வென்று தன் அறைக்குள் நுழைந்தாள். ஒரு புத்தகத்தைக் கைகளில் விரித்துப் பிடித்தபடி அதனைப் புரட்டிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அவன் அந்தப் புத்தகத்தின் அட்டையைக் குனிந்து பார்த்தான். பதிற்றுப்பத்து - மூலமும் உரையும் என்று அதில் போட்டிருந்தது.

அவள் சொல்லப்போவதை எதிர்பார்த்து அவன் காத்திருந்தான்.

திடீரென்று அவள் கண்கள் மலர்ந்தன.

“இங்க பாருங்க, ”நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்”’னு பதிற்றுப்பத்துல நாப்பத்தி ஒம்பதாம் பாடல்ல வருது. அதுக்குப் பொருள் சொல்ற ஔவை துரைசாமியார் சொல்றார்,  “குருதி அளைந்ததினால் சிவந்த கையினை உடைய போர்வீரர்” அப்படீன்னு. குருதி’ன்னா ரத்தம்தானே. அப்படீன்னா நெய்த்தோர்-ங்கிற தமிழ்ச் சொல்தான் இப்ப கன்னடத்துல நெத்துரு'ன்னு வருது.” என்றாள் அவள் பரபரப்பாக.

“பதிற்றுப்பத்து’ன்னா, சங்க காலத்துச் சேரமன்னர்களப் பத்திய பாடல்கள்தான. சங்ககாலத்து வடசேரநாடுதான இப்ப கர்நாடகாவுல இருக்கிற தெற்குப் பகுதி. அப்ப இந்தச் சொல் தமிழ்நாட்டுல இருந்து மேற்க போயி, அப்புறம் வடக்க போயிருக்குமோ?” என்று அவன் தன் கொஞ்சநஞ்ச தமிழ் அறிவைக் காட்டினான்.  

அதனை உடனே ஏற்றுக்கொள்ளாத அவள், தன் மடிக்கணினியை இயக்கி ஏதோ தேடிப்பார்த்தாள். “நெய்த்தோர் அப்படீங்கிற சொல் சங்க இலக்கியத்துல ஏழு தரம் வருது.” என்றாள் அவள்.

“அது என்னென்ன?” என்றான் அவன்.“சொல்றேன்” என்று சொன்ன அவள் கணினியை அவன் பக்கம் திருப்பினாள்.அவன் படித்தான்.

செம் மறு தலைய நெய்த்தோர் வாய - நற் 2/4
நெய்த்தோர் அன்ன செவிய எருவை - ஐங் 335/2
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி - பதி 30/37
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் - பதி 49/10
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் - பரி 10/12
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் - அகம் 9/9
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் - அகம் 375/7

“நீங்க சொல்றபடி, நெய்த்தோர்’ங்கிற சொல் பதிற்றுப்பத்துல ரெண்டு தரம் வருது. ஆனா நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், அகநானூறு’ன்னு பல இலக்கியங்கள்’ளயும் அது வருது’ல்ல. அப்படியே பாத்தாலும் பதிற்றுப்பத்துல அந்தப் பாட்ட எழுதுன புலவர்கள் சோழநாட்டயோ, பாண்டிய நாட்டயோ சேந்தவங்களா இருக்கலாமுல” என்று அவள் ஐயத்தைக் கிளப்பினாள். 

“இருக்கலாம், அந்தப் பாட்டுகள எழுதின புலவர்கள் எல்லாம் தமிழ் நாட்டுல எந்தப் பக்கத்தச் சேந்தவங்க’ன்னு முழுக்க ஆராயணும்” என்றான் அவன்.

“எப்படியோ, நெய்த்தோர் அப்படீங்கிற நம்ம தமிழ்ச்சொல் - ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்ம இலக்கியத்துல வாழ்ந்துக்கிட்டிருந்த சொல், இன்னக்கி இன்னொரு திராவிட மொழியான கன்னடத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கு” என்று பெருமையுடன் சொல்லி முடித்தாள் அவள்.

“பார்த்தீர்களா! நம்முடைய சங்கச் சொல் இப்போது அண்டைவீட்டுச் சொந்தக்காரரின் வீட்டில் அழகாக ஆட்சிபுரிகிறது.என்னே! தமிழின் இளமை! ”         

 



 



 

Saturday, December 12, 2020

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்

எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்

-- தேமொழி 


திருப்பாவை கூறும் அறிவியல் என்ற கருத்தில் ஆண்டாளின் பாடல் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்பட்டு வருவது வழக்கம். "ஆழிமழைக் கண்ணா", "அறிவியல்" என்ற ஒரு கூகுள் இணையத் தேடலில் 300க்கும் மேற்பட்ட முடிவுகள் கிடைக்கின்றன என்பதே, அது எந்த அளவு பண்டைய தமிழர் கொண்டிருந்த அறிவியல் அறிவிற்குச் சான்றாக,  பரவலாக மக்களிடம் சென்று சேர்க்கப் படுகிறது என்பதை அறியலாம். அடுத்து வருவது அது போன்ற ஒரு பதிவில் கொடுக்கப் பட்டிருந்த விளக்கம். 

            ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
            ஆழியுள் புக்கு முகந்து கொடு, ஆர்த்து ஏறி
            ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
            பாழியந்தோள் உடைப் பற்பநாபன் கையில்
            ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
            தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
            வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும்
            மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் 
                      (திருப்பாவை-4)

மழைக்கு தலைவனே! நீ சிறிதும் உன் வள்ளன்மை ஒன்றையும் மறைக்காதே! நீ கடலுள் ஆழப் புகுந்து நீரை முகந்து பெரு முழக்கோடு வானில் ஏற வேண்டும். உலகுக்கு காரணனான உன் மேனி போல் கறுத்து, வலிய தோள்களையும் உந்தியில் தாமரையையும் உடைய வலக்கையில் உள்ள, சக்ராயுதம் போல் ஒளிவிட்டு இடக்கையிலுள்ள வலம்புரி சங்கு போல முழங்கி உலகிலுள்ளார் அனைவரும் வாழும்படி நோன்பு நிற்கும் நாங்களும் நீராடவும் காலம் கடத்தாமல் பெருமான் கையிலுள்ள சார்ங்க வில்லில் ஏவிய அம்பு மழை போல் பெய்வாயாக. (உரை-வைணவச் செம்மல் டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்) [1] 

‘திணைமாலை நூற்றைம்பது’ என்ற நூலின் முல்லைத் திணை குறித்த  அகப் பாடல்களிலும் கடல் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மேலெழுந்து மேகமாகி, பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற கருத்து இடம் பெறுகிறது [2].   

திணைமாலை நூற்றைம்பது:
எளிய வழியில் அகப் பாடல்கள் கூறும் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் குறித்து அறிய ‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் பாடல்கள் உதவுகின்றன. மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது என்ற நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘ஏலாதி’ நூல் இயற்றிய அதே கணிமேதாவியார் இயற்றிய நூல் இது. இவர் கி.பி.5 - ஆம் நூற்றாண்டினர் [3].  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்ற செய்தியையும் ஏலாதி நூலின் முகவுரையின் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்நூலில், அகத்திணை ஒழுக்கம் குறித்த வெண்பாக்கள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசையில் அமைந்துள்ளன.

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தொடுத்துள்ள மையால் ‘திணைமாலை’ என்றும், நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும் இந்நூல் பெயர் பெற்றது என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் என மொத்தம் 150 பாடல்கள் இருக்க வேண்டிய நிலைக்கு மாறாக, இந்நூலில் குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளதால் மொத்தம் 153 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் இறுதியிலே காணப்பெறும் பாயிரச் செய்யுள் ஒன்றையும் கணக்கில் கொண்டால் இந்நூல் மொத்தம் 154 பாடல்களைக் கொண்டதாகும். 

முல்லை திணைக்குரியதாக இந்த நூலில் இடம்பெறும்  31 பாடல்களின்  7 பாடல்களில் (பாடல் எண்கள்: 93, 95, 100, 104, 105, 109,114) மழை உருவாகும் அறிவியல் உண்மை இடம் பெறுகின்றது.  அதாவது, முல்லைத் திணைக்கான 31 பாடல்களைக் கணக்கில் கொண்டால், சற்றொப்ப ஐந்து பாடல்களுக்கு ஒரு பாடல் என்ற கணக்கில் மழை தோன்றும் அறிவியல் உண்மை விரவிக் கிடக்கக் காணலாம்.  இங்கு அப்பாடல்கள் திணைமாலை நூற்றைம்பது நூலில் இடம் பெரும் அதே வரிசையில் கொடுக்கப்படுகிறது [2]. 

(1)
            கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ
            இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பொருங் கடல்-
            தன்போல் முழங்கி......  (பாடல்:  93) 

விளக்கவுரை: கருமையான கடலிலிருந்து நிறைய நீரினை அருந்திய வெண்மையான தலையைக் கொண்ட முகில்கள், பெரிய கடலினில் புகுந்து மாமர வடிவுகொண்ட சூரபன்மனைக் கொன்ற முருகனின் வேலினைப் போன்று மின்னும் மின்னல்களுடன், அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் பொருமும் கடல்தனைப்  போல இடிகளை முழக்கி ஆரவாரிக்கின்றன. 

(2)
            மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி,
            கான் ஓக்கம் கொண்டு, அழகா-காண், மடவாய்!......  (பாடல்:  95) 

விளக்கவுரை: மேல்முகமாக வெப்பத்தைக் கொண்ட கதிரவன் முகந்து உட்கொண்டதால் நீர் நிறைந்த முகிலானது, கீழுள்ள புவியை நோக்கி மழையாகப் பெய்த படியினாலே, முல்லை நிலத்தின் காடுகளெல்லாம்  தழைத்தோங்கி அழகாக மாறியுள்ளதைக் காண்பாயாக  பெண்ணே!. 

(3)
            ...... ...... ...... ......  மாக் கடல்
            கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும்
            கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது ......  (பாடல்:  100) 

விளக்கவுரை: பெருங்கடலினைக்  கண்டு தன்னை நிரப்பிக் கொள்ளும்படி கடல்நீரைக் குடித்து, மழைபொழியத் தாழ்ந்து, நிறம் கருத்து,  எட்டுத் திக்குகளிலும் முகிற் கூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. கார்காலம் துவங்கிவிட்டது. ஆனால், கொடுத்த உறுதிமொழியின்படி தலைவனின் தேர் இங்கு வரவில்லை. 

(4)
            ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை,
            இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின்
            ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல்.......  (பாடல்:  104) 

விளக்கவுரை: ஐந்து நிறங்களையுடைய வானவில்லை வரைந்து வைத்து, நான்கு திக்குகளுக்கும் கடல் நீரைக் கொண்டு சென்று கொடுக்க விரும்பிய, ஈச்சம் பழத்தின் நிறங்கொண்ட மேகமானது நீரை அள்ளிக் குடித்து பெரிய மேகமானது.  பழைமையான உருவாகிய வானின் நீல நிறத்தைப் போன்று அதனுடன் ஒன்றாகப் பரவி,  இடிகளைக் கொண்டதாக மழையாகப் பொழிகின்ற வான் வெளியின் தன்மை போல,... 
(குறிப்பு: இப்பாடலில் வானவில்லிற்கு ஐந்து நிறம் என்று கூறுவதைக் காணலாம், ஒரு வேளை புலவர் கணிமேதாவியாருக்கு 'நிறக்குருடு' (Red-green color blindness ) என்று கூறப்படும் பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது) 

(5)
            எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்,
            கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண்........  (பாடல்:  105) 

விளக்கவுரை:  பகற் பொழுதினைத் தரும் கதிரவனின் கதிர்களால் குடிக்கப்பட்ட நீரைக் கொண்ட மேகம் அதை மழையாக வழங்கியதாலே,  முல்லை நிலத்தில் வளர்ந்த நெடிய கொடிகள் மரங்களிற் படர்ந்து கொண்டிருப்பதைக் காண்பாயாக!! 

(6)
            என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார்........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  எனது உயிர் போன்ற இனிய தோழியே! பெரிய கடலின்  நீரை அருந்தி மழை மேகங்கள் உருவாகின. 

(7)
            பாத்துப் படுகடன் மாந்திய பல்கொண்மூக்
            காத்துக் கனை துளி சிந்தாமைப் - பூத்துக்
            குருந்தே!.........  (பாடல்:  109) 

விளக்கவுரை:  ஒலிக்கின்ற கடலின் நீரைக்  குடித்துப் பல முகில்களில் பகுத்தெடுத்து, அந்த நீரைப் பாதுகாத்துக் கொண்டு வந்து, செறிவான மழைத்துளிகளை முகில்கள் நன்கு  சிதறி பெய்யாத போதும், செழித்துப் பூத்துள்ள குருந்த மரமே!

முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது கார் என்பதால், திணைமாலை நூற்றைம்பது நூலின் முல்லைத்திணைப் பாடல்களில் மழைகுறித்து பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும்,  மேற்காட்டிய ஏழு திணைமாலை நூற்றைம்பது பாடல்களில் கடல்நீர் கதிரின் வெப்பத்தால் முகிலாக  மாறி மழையாகப் பொழிவது விளக்கமாகவும், சிலபாடல்களில் அவை நன்கு அறியப்பட்ட உண்மை என்பதால் ஓரிரு வரிகளில் சுருக்கமாகக் கொடுக்கப்படுவதையும் காண முடிகிறது. இதன் மூலம்  கி.பி.5 - ஆம் நூற்றாண்டில்  மழை பொழியும் அறிவியல் அடிப்படையைத் தமிழர் பலர் நன்கு அறிந்திருந்தனர் என்பது இதனால் தெளிவாகிறது.  

"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு" என்று திருப்பாவையில் மழை குறித்து ஆண்டாள் குறிப்பிட்டது  கணிமேதாவியாருக்கும் பிற்பட்ட காலம்.  ஆழ்வார்களின் காலம் என்பது ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்று வரையறுத்தவர்  மு.இராகவையங்கார்.   'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்ற ஒரு குறிப்பு (திருப்பாவை 13:3-5) கொண்டு, ஆராய்ந்த மு. இராகவையங்கார் கி.பி. 716 ஆம் ஆண்டு திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள் என்று கூறுகின்றார்[4].  ஆகவே அதற்கும் முன்னர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே மழை குறித்த அறிவியல் தமிழகத்தில் அறியப்பட்டிருக்கிறது என்பதைத் திணைமாலை நூற்றைம்பது மூலம் அறிய முடிகிறது.  தமிழிலக்கியங்களைக் கற்றுத் துறைபோகிய  அறிஞர்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும்  மழை அறிவியல் குறித்து மேலும்  பல மேற்கோள்களைக்  காட்ட வாய்ப்பிருக்கலாம். 

எல்லாவற்றுக்கும் மேலாக, மழை தோன்றும் முறையை, அதன் அறிவியல் பின்புலத்தை, ஐந்தாம் நூற்றாண்டிலேயே (அதாவது, இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எனக் கொள்க) அறிந்திருந்த தமிழக மக்களின் வழிவந்தோர்,  இன்று வருணபகவான் மழை தருவார் என்று நீர் நிரம்பிய பெரிய பெரிய அண்டாவிற்குள் அமர்ந்து பஜனை பாடுவதையும்,  கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பதையும், பெண்ணை ஆடையின்றி தீவட்டியுடன்  ஊர்சுற்ற வைக்கும் சடங்கு செய்வதையும், இடி மின்னல் என்றால் அர்ஜுனன் தேர் ஓடுகிறது என்று 'அர்ஜுனா' 'அர்ஜுனா' என்று கன்னத்தில் அடித்துக் கொள்வதைச் செய்யும் மூடநம்பிக்கை கூட்டத்தினராக மாறியதைக் கண்டு நாம் தலைத் தலையாக அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 



உதவிய தளங்கள்: 
[1] ஆண்டாளின் மழை அறிவியல்! – https://minnambalam.com/k/2017/04/26/ad3

[2] கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

[3] தமிழ் இலக்கிய வரலாறு, ரா. சீனிவாசன், 3-சங்கம் மருவிய காலம், எட்டாம் பதிப்பு : 1997
https://ta.wikisource.org/s/99ul

[4] ஆண்டாள், முனைவர் சி. பாலசுப்பிரமணியன், முதற் பதிப்பு : மார்ச், 1994. பக்கம் 34 
https://ta.wikisource.org/s/1321

நன்றி: சிறகு 
____________________________

Friday, December 11, 2020

திருக்குறள் குறியீடு படங்கள்

 நீங்கள் திருக்குறளில் விருப்பம் உடையவரா?

நீங்கள் திருக்குறளில் விருப்பம் உடையவரா? அப்படியானால் சிறு படங்கள் மூலம் குறியிடப்படும் 10 திருக்குறள்களைக் கண்டு பிடியுங்கள் என்று ஒரு எண்ணிப்பார்க்கும் பயிற்சி முகநூல், புலனத்தில் பகிர்ந்திருந்தேன்.

ஆர்வத்துடன் முயன்று பல நண்பர்கள் குறட்பாக்கள் கண்டுபிடித்து எழுதினார்கள். சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தற்போது விடைக்கான குறள் தந்துள்ளேன்.


வாழ்த்துகள்!

சொ.வினைதீர்த்தான்

_________________________

1. 

👍🗣️👎🗣️🍎🚫🍏✅

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

2. 

💦🌷👱❤️📈

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளததனைய உயர்வு

3. 

💰💰👂💰👉💰💰1⃣

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

4. 

🔥🔫🩹🩹🚫👅🔫🤕

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

5. 

👕😔🖐💁‍♂🤝

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

6. 

💬❔❔👄👂👉💬❔💬👁️🧠

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

7. 

🧠❔👉🤒🙋‍♂🤒

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை

8. 

🐇🏹🎯🐘🎯❌🗡️👌

கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது

9. 

❤️❔🔒😢💓

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்

10. 

👱🧔❌🌏🤫🚫

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்




----

Saturday, December 5, 2020

நிறைவான ஒரு ஒரு நிகழ்வு

-- மாரிராஜன் 


நேற்று ( 4.12 .2020 ) நடைபெற்ற ஐரோப்பாவில் நிறுவப்பெற்ற  திருவள்ளுவர் சிலைகளின்  ஓராண்டு நிறைவு நாள்.  இந்நாளை ஐரோப்பியத் தமிழர் நாளாக ஏற்றுக்கொண்ட நாள்.  கடந்த வருடம் சரியாக இந்நாளில்தான் ஜெர்மனி அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக ஐயன் திருவள்ளுவரின் இரண்டு வெண்கலச் சிலைகள் இடம்பெற்றன.


தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்வுகளில்.. மகுடமாகத் திகழ்வது இந்நிகழ்வு..


கனவுகள் காண்பது எல்லோருக்கும் எளிது. கண்ட அக்கனவை நிஜமாக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும்.  அந்த பாக்கியத்தை சற்று அதிகமாகப் பெற்றவர்தான் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர். சுபாஷிணி அவர்கள்.

ஐரோப்பா..ஜெர்மனி..

லிண்டன் அருங்காட்சியகத்தில் ஐயன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ வேண்டும் என்பது சுபாஷிணி அவர்களின் கனவு. இக்கனவு நிஜமாவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

தமிழகத்தில் சிலை செய்து, தமிழக அரசின் அனுமதி பெற்று, ஜெர்மனி கொண்டுவந்து, அருங்காட்சியகத்தின் வழிகாட்டுதல் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து சிலையை நிறுவி, அதை ஒரு மாபெரும் விழாவாக எடுத்து...எளிதான ஒரு செயல் அல்ல..

எத்தனையோ தடைகள்..... 

ஏராளமான பிரச்சனைகள். கடும் மன உளைச்சல். வீண் வம்பர்களின் விமர்சனங்கள்.

தடைகள் அனைத்தையும் உடைத்து, அருங்காட்சியகத்தில் சிலையை நிறுத்தி  தான் கண்ட கனவை நிஜமாக்கினார். இவரது இந்த சாதனை மூலம் சரித்திரத்திலும் இடம்பெற்றார்.

சிலை நிறுவிய ஓராண்டு நிறைவு விழாதான் இந்நிகழ்வு.

ஏறக்குறைய மூன்று மணிநேரம், வள்ளுவன் காட்டிய வழியை நினைவு கூர்ந்த நிகழ்வு.

நிகழ்வின் துவக்கமே அசத்தல். திருக்குறள் சிலவற்றுக்கு இராகம் கொடுத்து இசையுடன் பாடி அபிநயம் பிடித்த அற்புதமான நிகழ்வு. 

குறளுக்குப் பரதம் ஆடிய அந்த தமிழ் பெண். ஆடலும், பாடலும் பரவசம். இது முன்னமே பதிவு செய்த ஒன்றுபோல் தெரிகிறது. முழுவதையும் பார்க்க ஆவல். 

நிகழ்வின் முன்னோட்டமாக சுபாவின் முன்னுரையைத் தொடர்ந்து..அருங்காட்சியக் காப்பாளர் டாக்டர். ஜார்ஜ் நோவாக் அவர்களின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். வணக்கம் என்று அவர் ஆரம்பித்தது சிலிர்ப்பு.

முன்னாள் மொரிஷியஸ் துணைஅதிபர் திரு.வையாபுரி பரமசிவம் பிள்ளை அவர்களின் உரையும் சிறப்பான ஒன்று.

குறள் பற்றி பேசும் இடத்தில் அவசியம் நான் இருப்பேன் என்ற கொள்கையுடன் இருக்கும் திரு.பாலகிருஷ்ணன். இ.ஆ.ப. அவர்களின் பொழிவு வழக்கமான வள்ளுவத்தைப் பகிரும் அவரின் உரை. தயவு கூர்ந்து வள்ளுவனுக்கு  எந்த ஒரு சமய மத போர்வையும் போர்த்தாதீர்கள். வேட்டி கட்டிய தமிழனின் தோழன்தான் வள்ளுவன்.  அருமையான சொல்லாடல். நோபல் விருதைவிட நான் ஒரு தமிழ் மாணவன் என்பதே எனது மகுடம் என்ற அவரது கருத்திடல் இளம் தலைமுறையினரிடம் சேரவேண்டிய ஒன்று.

திருக்குறளுக்கு ஏராளமான விளக்கவுரை எழுதியாகிவிட்டது. திருக்குறளை திறனாய்வு செய்யவேண்டும் என்று திரு.பாலசந்திரன் இ.ஆ.ப அவர்களின் கோரிக்கை சரியான ஒன்று. 

திருவள்ளுவர் சிலையின் உருவாக்கம் குறித்த திரு. சன்னாவின் சுருக்கமான உரை.

அப்புறம்..

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய .. மலர்விழி, குமரன் மற்றும் கார்த்தி.

மிகையில்லா ஆளுமை. அருமை. வாழ்த்துகள்.

மழலைக் குரலில் திருக்குறளைக் கேட்க அவ்வளவு ஆனந்தம்.

அந்தத் தமிழ் பிள்ளைகள் தமிழுடன் வளர்வார்கள். வரும் காலம் அவர்களுக்கே.

மொத்தத்தில்..

உலகத்தமிழர்கள் ஒன்று கூடி வள்ளுவனை ஆராதனை செய்த நிகழ்வு..

" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு .... " என்ற பாரதியின் வரிகளுக்குப் பொருத்தமானது நேற்றைய நிகழ்வு.