Showing posts with label முனைவர்.ப.பாண்டியராஜா. Show all posts
Showing posts with label முனைவர்.ப.பாண்டியராஜா. Show all posts

Friday, July 30, 2021

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை


-- முனைவர் ப.பாண்டியராஜா


மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடியது மதுரைக்காஞ்சி என்னும் பாடல். பத்துப்பாட்டு நூல்களுள் ஆறாவதாக அமைந்த இப்பாடல், 782 அடிகளைக் கொண்டு பத்துப்பாட்டின் பாடல்களுள் மிகப் பெரிய பாடலாக அமைந்துள்ளது. இதன் பெயருக்கேற்றவாறு, இப்பாடல் 202 அடிகளில் அன்றைய மதுரை நகரின் அமைப்பை மிக விரிவாக எடுத்தியம்புகிறது. இதிலிருந்து மதுரை நகரின் உட்பகுதி ஏறக்குறைய 2000 ஆண்டுகாலமாக, மிகப்பெரும் மாற்றங்களுக்கு உட்படாமல் இருந்து வந்திருக்கிறது என அறிகிறோம்.
மதுரைக்காஞ்சி காட்டும் மதுரையைப் பார்ப்பதற்கு முன்னர், இன்றைய மதுரையின் உட்பகுதியை ஓரளவு உற்று நோக்குவோம். மதுரையின் மையப்பகுதியாக இருப்பது மீனாட்சியம்மன் கோவிலாகும். இது 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் கொண்டு ஏறக்குறைய ஒரு சதுர வடிவில் சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுச் சுவருக்கு உட்புறமான நான்குபக்கங்களிலும் தெருக்கள் உள்ளன. இவை ஆடி வீதிகள் எனப்படும். இவை அமைந்திருக்கும் திசையினைப் பொருத்து, இவை (கிழக்கு ஆடி வீதி) கிழக்காடிவீதி, தெற்காடிவீதி, மேற்காடிவீதி, வடக்காடி வீதி என்று அழைக்கப்படும். இந்தச் சுற்றுச்சுவருக்கு நான்கு திசைகளிலும் வாசல்களுண்டு. மேலும் இந்தச் சுற்றுச்சுவர்களுக்கு வெளிப்பக்கமாக நான்கு திசைகளிலும் தெருக்கள் உள்ளன. இவை சித்திரை வீதிகள் எனப்படும். இவையும் கிழக்குச் சித்திரைவீதி, தெற்குச் சித்திரை வீதி எனத் தாம் இருக்கும் திசைகளைப் பொருத்துப் பெயர்களைப் பெறும். இந்தச் சித்திரை வீதிகளுக்குச் சற்றுத் தள்ளி நான்கு பக்கங்களிலும் தெருக்கள் உண்டு. அவை ஆவணிமூல வீதிகள். இந்த ஆவணிமூல வீதிகளுக்குச் சற்றுத்தள்ளி நான்கு பக்கங்களிலும் மாசி வீதிகள் உள்ளன. இந்த மாசிவீதிகளுக்குச் சற்றுத்தள்ளி நான்கு பக்கங்களிலும் வெளிவீதிகள் உள்ளன.
இந்த வீதிகளின் அமைப்பைக் காட்டும் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


சங்ககால மதுரையில் நகரின் மையப்பகுதியாக அரசனின் அரண்மனை இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். இதைப் பரிபாடல் அடிகளால் அறிகிறோம். அரண்மனையைச் சுற்றி ஆடி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணிமூல வீதிகள் இருந்திருக்கின்றன. ஆவணிவீதிகளுக்குச் சற்றுத் தள்ளி வெளியே நகரின் கோட்டை அமைந்திருக்கிறது. கோட்டையைச் சுற்றி அகழி இருந்திருக்கிறது. அகழியை ஒட்டி நான்கு பக்கங்களிலும் வெளிவீதிகள் இருந்திருக்கின்றன. அதாவது இன்றைய மாசி வீதிகள்தான் பாண்டியர் காலத்து வெளிவீதிகள். இதற்குச் சான்றுகள் இன்றும் இருக்கின்றன.
முதலாவதாக, மேல ஆவணிமூல வீதிக்கும், இன்றைய மேல மாசி வீதிக்கும் இடையில் ஒரு சிறிய வீதி மேலப் பாண்டியன் அகில் தெரு என்ற ஒரு பெயரில் இருக்கிறது. அகழி என்பது அகழ் ஆகிப் பின்னர் அது அகில் ஆகிவிட்டது. அகழி என்பது கோட்டைக்கு வெளியில் இருப்பது. எனவே பாண்டியர் காலத்தில் மேல ஆவணி மூல வீதிக்கும், மேல மாசி வீதிக்கும் இடையில் கோட்டையும், கோட்டைக்கு வெளிப்புறமாக, மேல மாசி வீதியைத் தொட்டுக்கொண்டு அகழியும் இருந்திருக்கவேண்டும். எனவே இன்றைய மேலமாசிவீதி அன்றைய வெளிவீதி என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சங்க கால மதுரையின் மேற்கு எல்லை இதுவே. இதேபோல் மற்ற மூன்று பக்கங்களிலும் கோட்டையும் அகழியும் இருந்து, கோட்டை இடிக்கப்பட்டு அகழி தூர்க்கப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. இப்போது அந்தத் தெருக்கள் பெயர் மாற்றம் பெற்று அடையாளம் அற்றுப்போய்விட்டன. வடக்கே சங்கீத விநாயகர் கோவில் தெரு, வித்துவான் பொன்னுசாமி பிள்ளை தெரு எனப் பெயர் மாற்றம் பெற்ற இந்த வடக்குப் பாண்டியன் அகிழ்தெரு, முதலில் பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அகழியைச் சரியாக மூடாததால் தெரு பள்ளமாக இருந்தபோது இந்தப் பெயர் பெற்றது எனலாம். தெற்குப் பக்கத்தில் இதன் பகுதி ஜடாமுனிகோவில் சந்து எனப் பெயர்பெற்றிருக்கிறது.
கிழக்குப்பக்கம் பாண்டியர் கோட்டை இருந்ததற்கான இரண்டு அடையாளங்கள் இன்றும் உள்ளன. கீழஆவணி மூலவீதியிலிருந்து கீழமாசிவீதிக்குச் செல்லும் தெரு இப்போது அம்மன் சன்னதித் தெரு எனப்படுகிறது. இந்தப் பகுதியின் நடுவில் ஓர் உயரமான வாயில் இருக்கிறது. இதற்கு விட்டவாசல் என்று பெயர். அதாவது, நாயக்கர்கள் பாண்டியன் கோட்டையைத் தகர்த்தபோது இடிக்காமல் விட்டுவிட்ட வாசல்பகுதி இது. வரலாற்றுப் புகழ் மிக்க இந்த அமைப்பு இன்று ஆக்கிரமிப்பாளர்களால் பொலிவிழந்து பார்ப்போரின் கண்களிலிருந்து நீரை வரவழைக்கும் நிலையில் உள்ளது. இந்த வாசலின் உயரே ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 1935-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முதலாம் நாள் அன்றைய நகர் நிர்வாகப் பொறியாளராக இருந்த ஜி.எம்.பிலிப் என்பவரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு Ancient Monument என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறது.
THIS STRUCTURE WAS FORMERLY THE EASTERN GATE WAY OF THE OLD PANDIAN FORT. ANY PERSON DESTROYING, DEFACING, REMOVING, ALTERING OR IN ANY WAY INJURING ANY PART OF IT OR CAUSING IT TO BE SO DAMAGED WILL BE PROSECUTED. (S.D) G.M.PHILIP. 1-2-35. EXECUTIVE ENGINEER
“இந்தக் கட்டிடம் முன்னர் பண்டைய பாண்டியன் கோட்டையின் கிழக்கு வாயிலாக இருந்துள்ளது. இதை அழிக்கவோ, சிதைக்கவோ, உருமாற்றம் செய்யவோ அல்லது எவ்விதத்திலேனும் இதற்கு ஊறு விளைவிக்கவோ செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்பதே அச் செய்தி. குறைந்தது 700 ஆண்டுக்காலப் பழமையைக் கொண்ட இந்த ஒப்பற்ற வரலாற்றுச் சின்னம் நம்மவர்களாலேயே இப்போது பாழ்படுத்தப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

இந்த வாயில் ஒரு மன்னனின் கோட்டை வாயிலாக இருந்தது என்னும் அளவுக்கு அழகும் பொலிவும் உள்ளதாகத் தோன்றவில்லை என்பது உண்மையே. ஆனால் இது பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது என்பதை நினவிற்கொள்ளவேண்டும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
இப்போது கிழக்குக்கோபுரம் என்று அழைக்கப்படும் வாயிலே சங்ககாலப் பாண்டியர் காலத்தில் பாண்டியர் அரண்மனைக்கு முதன்மை நுழைவாயிலாக இருந்தது. இதனுள் நுழைந்து நேரே சென்றால் மன்னனின் அரசவை இருந்திருக்கும். களப்பிரர்க்குப் பின்னர் வந்த இடைக்காலப் பாண்டியர் காலமான 7-ஆம் நூற்றாண்டில் இதுவே சிவன் கோவில் சன்னதியாக இருந்தது. இந்தக் கிழக்குக் கோபுர வாயிலே அன்றைய கோயில் வளாகத்துக்கு ஒரே நுழைவாயிலாக இருந்திருக்கும். எனவே அதற்கு நேரே செல்லும் தெரு கோட்டை மதிலை அடையும் இடத்திலேயே கோட்டைக்குரிய முதன்மை வாசல் இருந்திருக்கும். அதன் பின்னர் பிற்காலப்பாண்டியர் காலமான கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான் அம்மன் சன்னதி உருவாக்கப்படுகிறது அதற்கும் பின்னர் பிற்காலப்பாண்டியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான் இந்த அம்மன் சன்னதி விரிவாக்கம் செய்யப்படுகிறது.
எனவே கோட்டைக்குரிய முதன்மை வாயில் இந்த அம்மன் சன்னதிக்கு நேரே இருக்கும் பண்டைய பாண்டியர் கோட்டை வாயில் அல்ல என்பது புரியும். அந்த முதன்மை வாயில் இன்றைய புதுமண்டபத்துக்கு நேர் கிழக்கே இருக்கும் ராயர்கோபுரமே என்பது தெளிவு. அதனை இப் படம் தெளிவுபடுத்தும்.


படத்தில் வலக்கோடியில் unfinished Gopuram என்று காட்டப்பட்டிருக்கும் பகுதியே சங்க கால மதுரை நகரின் முதன்மை வாயிலாக இருந்திருக்கும். இங்கே இருந்த அந்த அழகும் பொலிவும் மிக்க முதன்மை வாயிலை திருமலை நாயக்கர் இடித்துவிட்டு அதைவிட மேலும் பொலிவுள்ள கோபுரமாகக் கட்ட எண்ணியுள்ளார். மிகவும் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய பக்க மதில்களைக் கொண்ட இரு பெரும் தூண்களை அவர் நிறுவினார். இது இன்றும் 50 அடி உயரத்துக்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் இந்தக் கோபுரம் முற்றுப்பெறவில்லை. சங்கப் பாண்டியரின் முதன்மை வாயில் இருந்த இடம் இன்று மிகவும் பொலிவிழந்து நிற்கிறதைப் பாருங்கள்.
பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –
ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழமாசிவீதியிலிருந்து கிழக்குக் கோபுரம் நோக்கி -


பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –
ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழ ஆவணிமூலவீதியிலிருந்து கீழமாசி வீதி நோக்கி -
மாசி வீதிகளுக்கும் உட்புறத்தில் பாண்டியன் அகழியும் அதனை அடுத்துக் கோட்டையும் இருந்ததற்கான சான்று இன்னொன்றும் உள்ளது. கீழேயுள்ள படத்தில் நீங்கள் காண்பது இன்றைய கீழமாசிவீதியின் ஒரு பகுதி.

இங்கிருக்கும் கட்டடத்தின் ஒரு பகுதியை நீங்கள் இன்றும் பார்க்கலாம். இங்குக் காணப்படும் வீதியே கீழமாசிவீதி. அதனை அடுத்து வலப்புறம் கருப்பாக இருப்பது அங்கிருந்த அகழியை மூடியதால் ஏற்பட்ட பள்ளம். இதன்மேல்தான் இன்றை கீழமாசிவீதிக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.


இதே கட்டிடம் மீண்டும் 1880-களில் எடுக்கப்பட்டுள்ளது. கீழமாசிவீதியில் 1990-களில் எடுக்கப்பட்ட அதே இடத்துடன் ஒப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளது.


எனவே, சங்ககால மதுரை இன்றைய மதுரையின் நான்கு மாசிவீதிகளுக்கும் உட்பட்ட பகுதிதான் என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. கீழேயுள்ள படத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



சிவப்புக்கோடுகள் மதுரையின் கோட்டை மதில்கள். நீலநிறக்கோடுகள் கோட்டைக்கு வெளியே அமைந்த அகழி. இடைக்காலப் பாண்டியர் காலத்துக்கும் முற்பட்ட களப்பிரர் காலத்துக்கு முந்தைய சங்ககாலப் பாண்டியர் மதுரை இதுவேதான். ஆம், இந்தச் சிவப்புக் கோட்டுப் பகுதிதான் 2000 ஆண்டுளுக்கு மேலாய் வாழ்ந்துகொண்டிருக்கும் என்றுமுள தென்மதுரையாய் விளங்கும் மதுரை மூதூர். ஒரே ஒரு வித்தியாசம். சங்ககாலப் பாண்டியர் காலத்தில் நீலக்கோடுகளுக்கு நடுவில் இருந்தது மீனாட்சி கோவில் அல்ல. அது பாண்டியன் கோயிலாக இருந்தது. கோ என்றால் அரசன். இல் என்பது இல்லம். இதுவே சங்ககாலப் பாண்டியர் அரண்மனை.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் 
– பரிபாடல் திரட்டு 7/1-4
என்ற பரிபாடல் அடிகளில் காணப்படுவது போல, தாமரையின் இதழ்களாய் நான்கு பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில் அதன் பொகுட்டைப்போலப் பொலிவுடன் இருந்தது மன்னனின் அரண்மனை. இங்குக் குறிப்பிடும் அண்ணல் என்ற சொல் பாண்டிய மன்னனைக் குறிப்பதாக அனைத்து உரைகாரர்களும் கூறுகின்றனர்.
இதுதான் சங்ககால மதுரை. இது சங்க காலத்தில் எப்படி அமைந்திருந்தது என்பதை மதுரைக்காஞ்சிப் புலவர் கூறுகின்ற வழியே பார்க்கலாம்.
அன்றைய மதுரையின் முதன்மையான நுழைவாயில் இன்றைய எழுகடல் தெருவில் இருக்கும் ராய கோபுரம் ஆகும். இந்த வாயிலை ஒட்டித் தென் வடலாக அமைந்திருக்கும் அகழி நீண்டு படுத்திருக்கும். பூமியின் அடிப்பகுதி வரை ஆழமாக அமைந்திருந்த தெளிவான நீரைக்கொண்ட பெரும் பள்ளம் - மண்ணுற வாழ்ந்த மணி நீர்க் கிடங்கு (மது 351) என்கிறார் புலவர்.
இந்த அகழியை அடுத்து கோட்டையும் வாயிலும் அமைந்திருக்கின்றன.
விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை - (352) வானளவு உயர்ந்து, அதில் பலவிதப் படைகலங்களைக் கொண்ட மதில் என்கிறார் புலவர். அகழியைத் தாண்டி உள்ளே செல்வதற்குரிய பாலத்தை அடுத்து நகருக்குள் நுழையும் வாயில் இருக்கிறது. வையை அன்ன வழக்குடை வாயில் என்கிறார் புலவர். அன்றைய வைகையில் ஓயாமல் தண்ணீரோடிக்கொண்டே இருந்தது. அதைப்போல மக்கள் ஓயாமல் நகருக்குள் செல்வதும், நகரைவிட்டு வெளியே வருவதுமாக ஓயாமல் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவர்கள் முதலில் பார்ப்பது - ஆறு கிடந்தன்ன அகல் நெடும்தெரு - (359) அந்தக் கீழ ஆவணி மூலவீதி தென் வடலாக ஒரு பெரிய ஆற்றினைப் போல அகன்று நீண்டு கிடக்கின்றது. அதன் இரு பக்கங்களிலும் வான் வரை உயர்ந்த, பல சாளரங்களையுடைய நல்ல வீடுகள் இருக்கின்றன. முரசறைவோர் பேரொலியுடன் முரசறைந்து மக்களுக்கு செய்திகளை அறிவித்துக்கொண்டிருக்கின்றனர். மதுரையில் நுழைந்தவுடன் புலவர் நமக்குக் காட்டுவது - ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமம் (365)- ஓவியத்தில் பார்ப்பதைப் போன்ற இரண்டு பெரிய கடைத்தெருக்கள். இவை என்னவாய் இருக்கும்?. நியமம் என்பது அங்காடி. எனவே இவை நாளங்காடி, அல்லங்காடி என்ற பகல் கடைத்தெரு, இரவுக்கடைத்தெரு ஆகிய இரண்டு கடைத்தெருக்கள். இவற்றில் முதலில் நாளங்காடியைப் புலவர் முதலில் குறிக்கிறார் (430). அடுத்து வடக்கு, மேற்கு, தெற்கு ஆவணிமூல வீதிகளைச் சுற்றிவிட்டு மீண்டும் இறுதியில் அல்லங்காடியைக் காட்டுகிறார் (544) எனவே நகரில் நுழைந்து வலப்பக்கம் திரும்பினால் கீழாவணிமூல வீதியின் வடக்குப்பக்கம் இருப்பது நாளங்காடி. அப்படியே ஆவணிமூல வீதியைச் சுற்றி மீண்டும் கீழாவணிமூலவீதிக்கு வந்தால் கீழாவணிமூலவீதியின் தெற்குப்பக்கம் இருப்பது அல்லங்காடி.
இன்று பெருநகரங்களில் கூட்டமான நேரங்களில் காவல் ஊர்திகள் (Police Van) பெரும் வீதிகளில் சுற்றிவருவதுபோல, அன்றைய மதுரையில் கூட்டமான ஆவணிமூல வீதிகளில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றின் நடமாட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. இனிப்புகள், பூக்கள், பூமாலைகள், இடித்த சுண்ணாம்பு, வெற்றிலை, பாக்கு, சங்கைச் சுட்ட சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றைத் தட்டுகளில் வைத்துக்கொண்டு தலைச்சுமையாக விற்போர் திரிந்துகொண்டிருப்பர்.
அடுத்து, நரைத்த கூந்தலையுடைய முதுபெண்டிர் வீடுவீடாகச் சென்று பூவிற்றுத் திரிகின்றனர். தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்ட இளம்பெண்கள் இளைஞருடன் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கின்றனர், அந்த நாளங்காடி கடைத்தெருவானது மிகுந்த ஆரவாரம் உடையதாக விழாக்கொண்டாடும் ஊர் போலக் காட்சியளிக்கின்றது.
செல்வர்கள் தேர்களில் அங்குமிங்கும் விரைந்துகொண்டிருக்கிறார்கள். செல்வப் பெண்டிர் தம் வீட்டு மாடங்களில் இருந்தவாறு நகர்க் காட்சிகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறாக, வடக்காவணிமூல வீதியைக் கடந்து மேலாவணிமூல வீதிக்கு வருகிறோம். அங்கு சிவன் கோயில், பௌத்த, அந்தணர், அமண் பள்ளிகள் வரிசையாக அடுத்தடுத்து இருக்கின்றன. அவற்றை அடுத்து மன்னனின் அறங்கூறவையமும், காவிதிப் பட்டம் பெற்றோரின் மனைகளும் இருக்கின்றன. அதையடுத்து வாணிகர் பகுதி தொடங்குகிறது. மலையிலும்,நிலத்திலும், நீரிலும் விளையும் பல்வேறு பண்டங்களாகிய மணிகள், முத்துக்கள், பொன் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களை அங்கே விற்கிறார்கள். அதையடுத்து நாற்பெருங்குழுவினர் கூடுமிடம் இருக்கிறது.
அதையடுத்து, மேலாவணிமூல வீதி முடிந்து, தெற்காவணிமூல வீதி தொடங்குகிறது. இதைக் காட்டும் புலவர்
கோடு போழ் கடைநரும் - மது-511
என்று கூறுகிறார். கோடு என்பது சங்கு. அந்தக் காலத்தில் சங்கை அறுத்து வளையல்கள் செய்வார்கள். இன்றைக்கும் மேலாவணிமூலவீதியில் தெற்கு ஓரத்தில் வளையல்காரத்தெரு இருப்பதைப்பார்க்கலாம். அதையடுத்து தெற்காவணிமூல வீதி தொடங்குகிறது. இன்றைக்கும் அந்தத் தெருவுக்கு நகைக்கடைத் தெரு என்று பெயர். அங்கு நடைபெறும் தொழில்களைப் புலவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்.
---------- ------------ திருமணி குயினரும்,
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்,
பொன் உரை காண்மரும், --- மது 511-513.
---------------- ------------- அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,
சுடுதலுற்ற நல்ல பொன்னால் விளங்கும் அணிகலன் செய்வாரும்,
பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும்,
அண்மைக் காலம்வரை தெற்காவணி மூல வீதியின் இறுதிப்பகுதியில் மத்தியஸ்தர் கடை உண்டு. ஏதேனும் நகைக்கடையில் வாங்கின தங்கத்தின் மாற்றின் மீது ஐயம் கொண்டால் இந்த மத்தியஸ்தர் கடையில் சரிபார்த்துக் கொள்ளலாம். இதைத்தான் அன்றைய பொன் உரை காண்மர் என்று புலவர் கூறுகிறார். இந்த மத்தியஸ்தர் கடையுடன் நகைக்கடைப் பகுதி முடியும், இன்றைக்கு இது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு அங்குத் துணிக்கடைகள், செப்புப்பாத்திரக் கடைகள், பூக்கடைகள், வாசனைப் பொருள்கடைகள் ஆகியவை இருந்திருக்கின்றன. இந்தப் பகுதியை ஒட்டி அண்மைக்காலம்வரை உணவு விற்பனைசெய்யப்பட்டு வந்துள்ளது. அதற்குச் சோற்றுக்கடைத் தெரு என்று பெயர் இருந்தது. பிரபல நாடக நடிகரான தி.க.சண்முகம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்” இந்தச் சோற்றுக்கடைகள் சங்ககால மதுரையிலேயே , அதுவும் இதே பகுதியில், இருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார் (மது. 527 - 535). அதன் ஒரு பகுதி இது. .
புகழ்படப்பண்ணிய பேரூன் சோறும்
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன் சோறு தருநர் பல்வயின் நுகர - மது. 533-535
இதையடுத்து அல்லங்காடி இருப்பதாகப் புலவர் குறிப்பிடுகிறார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது கீழாவணிமூலவீதியின் தெற்குப் பகுதி.
இவ்வாறாக இந்த நான்கு ஆவணிமூல வீதிகளிலும் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால், அவர்கள் தங்கள் கால்களை உரசிக்கொண்டு நெருக்கியடித்துத் திரிந்துகொண்டிருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர - மது. 522.
ஆக, ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாக, மதுரை நகரத்தின் மையப்பகுதியான மாசிவீதிகளுக்குட்ட பகுதி சீருடனும் சிறப்புடனும் பெரிதான மாற்றங்களின்றி, நாயக்கர் கால விரிவாக்கத்திற்கு முன்னர் வரை, பொலிவுடன் திகழ்ந்தது என மதுரைக்காஞ்சி மூலம் அறிகிறோம்.





Sunday, January 24, 2021

ஔவையின் ஆத்திரம்

ஔவையின் ஆத்திரம்

--  முனைவர்.ப.பாண்டியராஜா


காவு என்றால் தோளில் தொங்கப்போடு என்று பொருள். ஒரு நீண்ட கழியில் இரு முனைகளிலும் ஏறக்குறைய சம எடையுள்ள பொருள்களைக் கட்டித் தொங்கவிட்டு, அந்தக் கழியைத் தோளில் சுமந்தவாறு எடுத்துச்செல்வது பண்டைய மக்கள் வழக்கம். இதிலிருந்து வந்ததுதான் காவடி என்ற சொல்.

இப்பொழுது மலைபடுகடாம் என்ற நூலிலிருந்து ஒரு காட்சியைப் பார்க்கலாம். ஒரு பாணர் கூட்டம் ஏதாவது ஒரு புரவலனைத் தேடிப் புறப்படுகிறது. முதலில் ஒரு பாணன் தன்னுடைய இசைக்கருவிகளையெல்லாம் இரண்டு சம எடை கொண்ட மூட்டைகளாகக் கட்டி, பின்னர் அவற்றைக் காவடியில் சேர்த்து தூக்குகிறான்.
             திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
             நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
             மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு,
             கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
             இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
             விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
             நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
             கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,
             நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
             கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,
             நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்

இங்கே முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை ஆகியவை இசைக்கருவிகள். இவற்றைப் பலாக்காய் மூடைகள் போல் இரண்டு மூடைகளாகக் கட்டுகிறான். இந்த மூட்டை கலப்பை எனப்படுகிறது. இது உழுகிற கலப்பை அல்ல. கலம் + பை. அதாவது இசைக் கலங்களை வைக்கும் பை. இந்தக் காலத்துச் சில பாட்டிமார் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பை போல் பெரிதாக இருக்கும். அதன் வாயில் நீண்ட கயிறு இருக்கும். அதை இரண்டு பக்கமும் இழுத்தால் வாய் மூடிக்கொள்ளும். இதன் கடைசி அடியைப் பாருங்கள்.

நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்நேர் சீர் என்பது சம எடையைக் குறிக்கும்., முதலில் இரண்டு பைகளில் சம எடை உள்ளவைகளாகப் போட்டு, பின்னர் வாயை மூடுகிறான். இதுதான் சுருக்குதல். பின்பு இதனைக் கழியில் கட்டித் தோளில் தூக்கி வைக்கிறான் - அதனைக் ’காய’ என்ற சொல் குறிக்கிறது. காவு, காவிய, காய என்று வரும். காவுதல் என்றால் தோளில் சுமத்தல் என்று பொருள் என்று கண்டோம். இரண்டு சம எடைகளாகப் போட்டு, கழுத்தைச் சுருக்கி மூடி, காவடியில் கட்டி, தோளில் தூக்கிப்போட்ட இசைக்கலப் பைகளை உடையவர்களே என்று இதற்குப் பொருள். இந்தக் கலப் பைகளில் இரண்டு கயிறுகள் இருக்கும். ஒன்று காவடிக் கம்பில் தொங்க விட, அடுத்தது பையின் வாயை மூட.
இப்போது ஔவைக்கு வருவோம். ஔவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிச் செல்கிறார். அவரை நன்கு வரவேற்ற அதிகன் என்ன காரணத்தினாலோ பரிசில் கொடுக்கக் காலம் தாழ்த்துகிறான். 



பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஔவையார் ஒரு நாள் பொங்கி எழுந்துவிட்டார். தனது இசைக்கல மூட்டை முடிச்சுகளுடன் அவசரம் அவசரமாக வாசலை நோக்கி நடக்கிறார். அங்கிருக்கும் வாயில் காப்பவனைப் பார்த்துக் கூறுகிறார்:
வாயிலோயே வாயிலோயேவள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம்உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்துவரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கைபரிசிலர்க்கு அடையா வாயிலோயேகடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சிதன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து எனவறும் தலை உலகமும் அன்றே அதனால்காவினெம் கலனே சுருக்கினெம் கலப் பைவாயில் காப்பவனே! பரிசிலர்க்கு அடையாமல் வரவேற்கிறாய் நீ, ஆனால் பரிசில் தராமல் ஏமாற்றுகிறான் உன் மன்னன். அவனுக்குத் தான் யார் என்று தெரியவில்லை. நான் யார் என்றும் தெரியவில்லை. உலகத்தில் அறிவும் புகழும் உடையவர்கள் செத்துப்போய்விடவில்லை என்று ஆத்திரத்துடன் கூறும் கடைசி அடியைக் கவனியுங்கள்.

காவினெம் கலனே சுருக்கினெம் கல பைகலங்களைக் கட்டித் தூக்கித் தோளில் போடுகிறேன் (காவினெம்). அதன் வாயைச் சுருக்கி மூடுகிறேன் (சுருக்கினெம்) என்கிறார் புலவர். இதனை மலைபடுகடாம் அடியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.      நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் - மலைபடுகடாம் - முதலில் பையைச் சுருக்கிப் பின்னர் தோளில் போடுதல் - இது நிதானத்தில் செய்வது. காவினெம் கலனே சுருக்கினெம் கலப் பை - ஔவையார் - முதலில் தோளில் தூக்கிப்போட்டுப் பின் பையைச் சுருக்குதல் - இது ஆத்திரத்தில் வந்த அவசரம்.இரண்டு சொற்களை மாற்றிப்போட்டுத் தன் ஆத்திரத்தை எவ்வாறு ஔவையார் வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.


‘தமிழ்மணி’ - தினமணி நாளிதழில் பதிவு செய்த நாள்: (24-1-2021-ஞாயிறு) 

Thursday, December 31, 2020

என்னே தமிழின் இளமை! - நெத்துரு

 என்னே தமிழின் இளமை! - நெத்துரு


-- முனைவர்.ப.பாண்டியராஜா


வீட்டு ஹாலில் தரையில் அமர்ந்து, மதிலில் சாய்ந்துகொண்டு, கால்களை நீட்டியவாறு சாய்வுப்பலகையில் மாணவர்களின் விடைத்தாள்களை வைத்துக்கொண்டு திருத்தி மதிப்பெண்கள் போட்டுக்கொண்டிருந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. வாசலில் அழைப்பு மணி அடித்தது. ஒருவாறு எழுந்து, எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு நடந்து வந்து கதவைத் திறந்தாள். எதிர்வீட்டுக்காரி! ஒரு கன்னடப் பெண். பேச்சுத்தமிழைப் புரிந்துகொள்வாள். ஆனால் கன்னடத்தில்தான் பேசுவாள். நம் தமிழ்ப்பேராசிரியையோ பெங்களூரில் சிறிதுகாலம் வாழ்ந்தவள். எனவே கன்னடத்தைப் புரிந்துகொள்வாள். ஆனால் தமிழில்தான் பேசுவாள். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது கேட்பவர்க்கு வேடிக்கையாய் இருக்கும்.

“வாங்க, வாங்க, எப்படி இருக்கீங்க?” என்று அந்தக் கன்னடப்பெண்ணை வரவேற்றாள் இவள்.

“நானு சென்னங்க இதேனி, நீமு ஏங்க இதேரி” என்றவாறு உள்ளே நுழைந்தாள் அவள்.

பின்னர் அவர்கள் இருவரும் இவ்வாறே பேசத்தொடங்கினர். சற்று நேரத்தில் ஒரு சிறுவன் -அந்தக் கன்னடக்காரியின் மகன் - ஐந்து வயதிருக்கும் - அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்தான்.

“ஏனு, ஆத்துரு ஆச்சு, நீனு எதுக்கு அழுத்திய” என்று பதறிப்போய்க் கேட்டவள், அவனது வலது முழங்கையில் அடிபட்டு இரத்தம் வருவதைப் பார்த்துவிட்டாள். ஏதோ தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன் கீழே விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. தன் தாய் இங்கே வருவதைப் பார்த்திருக்கிறான். உடனே அழுதுகொண்டு தாயிடம் வந்துவிட்டான்.

“ஐயோ, ரத்தம் வருதே” என்று பதறிப்போனாள் தமிழ்க்காரி.

“நெத்துரு பத்தாத, வெரசா மனைக்கு ஓகு பேக்கு, நானு பர்த்தேனி” என்று சொன்னவாறு கன்னடப்பெண் தன் பையனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தாள்.

இரத்தம் என்ற பேச்சைக்கேட்டு, வேகமாகத் தன் அறையிலிருந்து வெளியே வந்தான் அவள் கணவன்.

“என்ன ஆச்சு?” என்று அந்தக் கன்னடப் பெண் வெளியே செல்வதைப் பார்த்தவாறு கேட்டான்.

“அந்தப் பெண்ணோட மகன் கீழே விழுந்துட்டான். கையிலே அடிபட்டு இரத்தம்” என்றாள் அவள்.

“அந்தக் கன்னடப் பெண் ஏதோ சொல்லிக்கிட்டே போச்சே. என்ன அது?” என்று வினவினான் அவன்.

“அதான், ரத்தம் வருது, சீக்கிரம் வீட்டுக்குப் போகணும், நான் வர்ரேன்”ன்னு சொல்லிட்டுப் போறா. “நெத்துரு பத்தாதா’ன்னா - ரத்தம் வருது’ன்னு அர்த்தம்” என்றாள் அவள்.

இதைச் சொன்னதும், சில வினாடிகள் ஆழ யோசித்தபடி இருந்த அவள், விடுவிடு-வென்று தன் அறைக்குள் நுழைந்தாள். ஒரு புத்தகத்தைக் கைகளில் விரித்துப் பிடித்தபடி அதனைப் புரட்டிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அவன் அந்தப் புத்தகத்தின் அட்டையைக் குனிந்து பார்த்தான். பதிற்றுப்பத்து - மூலமும் உரையும் என்று அதில் போட்டிருந்தது.

அவள் சொல்லப்போவதை எதிர்பார்த்து அவன் காத்திருந்தான்.

திடீரென்று அவள் கண்கள் மலர்ந்தன.

“இங்க பாருங்க, ”நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்”’னு பதிற்றுப்பத்துல நாப்பத்தி ஒம்பதாம் பாடல்ல வருது. அதுக்குப் பொருள் சொல்ற ஔவை துரைசாமியார் சொல்றார்,  “குருதி அளைந்ததினால் சிவந்த கையினை உடைய போர்வீரர்” அப்படீன்னு. குருதி’ன்னா ரத்தம்தானே. அப்படீன்னா நெய்த்தோர்-ங்கிற தமிழ்ச் சொல்தான் இப்ப கன்னடத்துல நெத்துரு'ன்னு வருது.” என்றாள் அவள் பரபரப்பாக.

“பதிற்றுப்பத்து’ன்னா, சங்க காலத்துச் சேரமன்னர்களப் பத்திய பாடல்கள்தான. சங்ககாலத்து வடசேரநாடுதான இப்ப கர்நாடகாவுல இருக்கிற தெற்குப் பகுதி. அப்ப இந்தச் சொல் தமிழ்நாட்டுல இருந்து மேற்க போயி, அப்புறம் வடக்க போயிருக்குமோ?” என்று அவன் தன் கொஞ்சநஞ்ச தமிழ் அறிவைக் காட்டினான்.  

அதனை உடனே ஏற்றுக்கொள்ளாத அவள், தன் மடிக்கணினியை இயக்கி ஏதோ தேடிப்பார்த்தாள். “நெய்த்தோர் அப்படீங்கிற சொல் சங்க இலக்கியத்துல ஏழு தரம் வருது.” என்றாள் அவள்.

“அது என்னென்ன?” என்றான் அவன்.“சொல்றேன்” என்று சொன்ன அவள் கணினியை அவன் பக்கம் திருப்பினாள்.அவன் படித்தான்.

செம் மறு தலைய நெய்த்தோர் வாய - நற் 2/4
நெய்த்தோர் அன்ன செவிய எருவை - ஐங் 335/2
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி - பதி 30/37
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் - பதி 49/10
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் - பரி 10/12
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் - அகம் 9/9
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் - அகம் 375/7

“நீங்க சொல்றபடி, நெய்த்தோர்’ங்கிற சொல் பதிற்றுப்பத்துல ரெண்டு தரம் வருது. ஆனா நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், அகநானூறு’ன்னு பல இலக்கியங்கள்’ளயும் அது வருது’ல்ல. அப்படியே பாத்தாலும் பதிற்றுப்பத்துல அந்தப் பாட்ட எழுதுன புலவர்கள் சோழநாட்டயோ, பாண்டிய நாட்டயோ சேந்தவங்களா இருக்கலாமுல” என்று அவள் ஐயத்தைக் கிளப்பினாள். 

“இருக்கலாம், அந்தப் பாட்டுகள எழுதின புலவர்கள் எல்லாம் தமிழ் நாட்டுல எந்தப் பக்கத்தச் சேந்தவங்க’ன்னு முழுக்க ஆராயணும்” என்றான் அவன்.

“எப்படியோ, நெய்த்தோர் அப்படீங்கிற நம்ம தமிழ்ச்சொல் - ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்ம இலக்கியத்துல வாழ்ந்துக்கிட்டிருந்த சொல், இன்னக்கி இன்னொரு திராவிட மொழியான கன்னடத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கு” என்று பெருமையுடன் சொல்லி முடித்தாள் அவள்.

“பார்த்தீர்களா! நம்முடைய சங்கச் சொல் இப்போது அண்டைவீட்டுச் சொந்தக்காரரின் வீட்டில் அழகாக ஆட்சிபுரிகிறது.என்னே! தமிழின் இளமை! ”         

 



 



 

Monday, April 13, 2020

நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால் சரியான விளக்கம் கிடைக்குமா ?



—   முனைவர்.ப.பாண்டியராஜா


          நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால்  சரியான விளக்கம்  கிடைக்குமா? என்ற ஒரு கேள்வி எழுந்தது. இதைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் தற்செயலாக எனக்குச் சில விளக்கங்கள் கிடைத்தன. இப்போது நான் உருவாக்கிக்கொண்டிருக்கும் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியத்திற்காக, ‘விதிர்’ என்ற சொல்லை விளக்க முற்படுகையில் இது நிகழ்ந்தது.

குறும்பூழ் எனப்படும் காடைப்பறவைக்கு மேனி முழுக்கப் புள்ளி புள்ளியாக இருக்கும். யாரோ ஒருவர் சிவந்த அரக்கினை அதன் உடம்பில் தெளித்துவிட்டாற்போன்று அது இருக்கிறதாம்.

                    விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி
                    காமர் சேவல் - அகம் 103/3,4

தெளித்தன போலும் அழகிய சிறிய பலவாய புள்ளிகளையுடைய
அழகிய குறும்பூழ் சேவல்         
என்கிறது அகநானூறு.

          ஒரு பாத்திரத்தில் ஏதோ ஒரு குழம்பில் ஐந்து விரல்களையும் மேலாக நனைத்து, விரல்களைக் குவித்துப் பின்னர் ஒரு பரப்பின் மீது விசையுடன் பலமுறை தெறித்துவிட்டாற்போன்று அந்தப் புள்ளிகள் இருக்கின்றனவாம். இதைத்தான் ’விதிர்த்த போலும்’ என்கிறது பாடல்.

          திருமண நிகழ்ச்சிகளில் வாசலில் நுழையும்போது பன்னீர் தெளிக்கிறார்கள் இல்லையா? அதுவும் விதிர்த்தலே.

          அடுப்பில் ஒரு திறந்த சட்டியில் ஏதோ வெந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு கரண்டியும் போடப்பட்டுள்ளது. கரண்டி சுடத்தானே செய்யும்? அதை அறியாமல் ஒருவர் அந்தக் கரண்டியின் கைப்பிடியைப் பிடிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவருக்குக் கை சுட்டுவிடும். உடனே அவர் என்ன செய்வார்? கரண்டியை விட்டுவிட்டு, கையைப் பலமுறை உதறுவார் இல்லையா? அதுவும் விதிர்த்தல்தான்.

          ஒரு தலைவனும் தலைவியும் தனிமையில் சந்தித்துக்கொள்கிறார்கள். சங்க கால வழக்கப்படி, ஆண்கள் தலையில் மாலை அணிந்துகொள்வது வழக்கம். இதைக் கண்ணி என்பார்கள். அன்றைய காலத்தில் ’கிராப்’ வெட்டிக்கொள்ளும் பழக்கம் கிடையாது. தலைமுடியை உச்சிக்குடுமி போல் கட்டி, அதை மலர்ச் சரத்தால் சுற்றிக்கொள்வர். இது ஆண்கள் தலையில் அணியும் மாலை. கண்ணி எனப்படும். பெண்கள் சூடிக்கொள்ளும் பூச்சரம் கோதை எனப்படும். ’கூந்தல் வேய்ந்த கோதையும்’ என்கிறது பெருங்கதை. தலைவி என்ன செய்கிறாள் - தலைவன் கண்ணியைக் கழற்றித் தன் கூந்தலுக்குள் செருகிக்கொள்கிறாள். வெளியில் தெரியும்படி அணிந்துகொள்ளமுடியாது. பூச் சூடாமல் வெளியில் சென்றவள் பூவுடன் திரும்பி வந்தால் வீட்டில் கேள்வி கேட்பார்களே!

          வீட்டுக்கு வந்தவளின் தலைமுடியைச் செவிலித்தாய் அவிழ்க்கிறாள். உள்ளே மறைத்துவைத்திருந்த பூ வெளியில் வந்து விழுகிறது. அப்பனும் ஆத்தாளும் வீட்டில்தான் இருக்கிறார்கள். அவள் வெளியில் பூச்சூடாமல் சென்றது அவர்களுக்குத் தெரியாது போலும். எனவே அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. செவிலித்தாய்மட்டும் கவனித்துப் புரிந்துகொள்கிறாள். எனினும், வெளியில் வந்து விழுந்த பூவைப் பார்த்துத் திடுக்கிட்டுப்போன செவிலி, “ஐயோ, குட்டு வெளிப்பட்டுவிடும் போலிருக்கிறதே” என்று கையைப் பலமுறை உதறியவாறு வேகமாக வெளியில் சென்று மறைகிறாள்.

          இந்தச் சூழலை மனத்திற்கொண்டு, “அச்சச்சோ” என்று கூறிக்கொண்டு நீங்கள் கைகளை உதறிப்பாருங்கள். இதுவும் விதிர்த்தலே. இது என்னுடைய விளக்கம் அல்ல. இதற்கு ஒரு சங்கப்பாடல் உண்டு.

                    புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்
                    முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால்
                    கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
                    வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
                    அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
                    அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ
                    அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்
                    நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
                    நீங்கி புறங்கடை போயினாள் - கலி 115/11,12

இதன் பொருள்:
ஆட்டினத்து ஆயர்மகன் சூடி வந்த ஒரு முல்லைச் சரத்தையும், தலைமாலையையும், மெல்லிய இயல்புடையவளே! என்னுடைய கூந்தலுக்குள் வைத்து முடிந்திருந்தேன், தோழியே!
என் செவிலித்தாய் என்னுடைய தலைக்கு வெண்ணெய் தடவுவதற்காக என் கூந்தலை விரித்துவிட என் தாயும், தந்தையும் வீட்டிலே இருக்கும்போது, செவிலித்தாய் பதறிப்போக, அவள் முன் விழுந்தது அந்தப் பூ;
அதனை ஏன் என்று அவள் கேட்கவுமில்லை, கோபப்படவும் இல்லை,         
நெருப்பைக் கையால் தொட்டவர் அக் கையை விதிர்க்குமாறு போலக் கையை விதிர்த்து வீட்டைவிட்டு நீங்கி வாசலுக்கு வெளியே சென்றாள்.
"நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்" என்ற தொடர் இக்காட்சியில் வரும் விதிர் என்ற சொல்லை நன்கு விளக்கும்

          இப்போது இன்னொரு காட்சிக்குச் செல்வோம். இது ஒரு திருமணக் காட்சி.
                    ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப
                    தண் நறும் சாந்தம் கமழும் தோள்மணந்து - அகம் 186/11,12

இதன் பொருள்:
மிக்க தண்மை வாய்ந்த முழவினைக் குறுந்தடியால் அடிக்கவும்
தண்ணிய நறிய சந்தனம் நாறும் தோளையுடையவளை மணம்புரிந்து
என்பது இதன் பொருள் என்கின்றந்த உரை.
முழவு = மத்தளம். குணில் = குறுந்தடி. எறிதல் = அடித்தல்.
ஆனால் இங்கே விதிர்ப்ப என்ற சொல்லுக்கு எந்த உரைகாரரும் வேறு விளக்கம் தரவில்லை. எறி குணில் விதிர்ப்ப என்பதற்குக் குறுந்தடியால் அடிக்க என்றுமட்டுமே உரை சொல்கின்றனர். இங்கு ‘எறி குணில் விதிர்ப்ப’ என்ற தொடரை உற்றுப்பார்க்கவேண்டும். அடிக்கின்ற குறுந்தடி அடிக்க என்பது கூறியது கூறல் ஆகாதா?

          முதலில் குறிப்பிட்ட பல வகை விதிர்ப்புகளை உற்றுநோக்குங்கால், விதிர்த்தலில் ஒரு விரைவான செயல் (quick action) தெரிகிறது. எனவே, இங்குக் கூறப்பட்டுள்ள ’எறி குணில் விதிர்ப்ப’ என்பதிலும் ஒரு விரைவான செயல் இருக்கவேண்டும். ’அடிக்கும் குறுந்தடி வேகமாக இயங்க’ என்ற பொருள் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இங்குக் குறிப்பிடப்படும் முழவினைத் தடியால் விதிர்ப்பது என்பது, ஒரு மண நிகழ்வின் போது நடப்பதாகும். ’எறி குணில் விதிர்ப்ப---தோள் மணந்து’ என்று வருவதால், தற்காலத்துத் திருமணங்களில் மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டும் நேரத்தில் எழுப்பப்படும் கெட்டிமேளம் போல் அன்றைக்கும் விரைவாக முழவு அடிக்கப்படுவதையே பாடலாசிரியர் ’எறி குணில் விதிர்ப்ப’ என்கிறார் என்று தோன்றுகிறது. எனவே, ‘எறி குணில் விதிர்ப்ப’ என்பதற்குக் ’கெட்டிமேளம் முழங்க’ என்று பொருள்கொள்ளலாம்.

இப்பொழுது சொல்லுங்கள்:
நாம் வாழும் காலத்து வாழ்வியல் கோணத்தில் தொன்ம இலக்கியங்களைப் படிப்பதால்  சரியான விளக்கம்  கிடைக்குமா ?


தொடர்பு:
முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/



Saturday, March 21, 2020

நீறு ஆடிய களிறும் வெண்கோயில் மாசும்



—   முனைவர்.ப.பாண்டியராஜா


          பாடல்களில் வரும் உவமைகளில் சில கவிதைக்கு அழகூட்டும்; சில காட்சிக்கு மெருகேற்றும், இன்னும் சில புலவரின் கூர்த்த அறிவைக் காட்டும். இவை மூன்றுமே அமையப்பெற்ற ஓர் உவமையை இங்குக் காண்போம்.

                    அறம் நிலைஇய அகன் அட்டில்
                    சோறு வாக்கிய கொழும் கஞ்சி
                    யாறு போல பரந்து ஒழுகி
                    ஏறு பொர சேறாகி
                    தேர் ஓட துகள் கெழுமி
                    நீறு ஆடிய களிறு போல
                    வேறுபட்ட வினை ஓவத்து
                    வெண் கோயில் மாசு ஊட்டும் - பட் 43 - 50

          சோழநாடு சோறுடைத்து என்பார்கள். வற்றாத காவிரியால் வளம் கொழித்த அன்றைய சோழநாட்டில் ஒரு காட்சி இது. இன்றைக்குப் பஞ்சகாலத்தில் கஞ்சித்தொட்டிகள் அமைத்து, இல்லாதோர்க்கு உணவளிப்பர். அன்றைக்கும் இது போல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் காவிரி பாயும் நாட்டில் கஞ்சித்தொட்டிகளா? அவ்வளவு வறுமையா? என்று வியக்க வேண்டாம். உழைக்க முடியாதோரும், கவனிப்பார் இல்லாதோரும், சோற்றுக்கு வழியின்றிப் பிச்சையெடுத்துப் பிழைப்பர். இது அரசுக்கு இழிவானது. இந்த இழிவைப் போக்க, கரிகால்வளவன் தன் ஊர்களில் அட்டில்களை உருவாக்கினான். (அட்டில் = அட்டு + இல்) அடுதல் என்பது சமைத்தல் என்ற பொருள் தரும். எனவே அட்டில் என்பது சமையலறை என்ற பொருள் தரும் அழகிய சிறிய சொல். இன்றைக்கு நாம் அதைப் பெரும்பாலும் கிச்சன் (kitchen) என்றே சொல்லிப் பழகிவிட்டோம். சிறிது சிறிதாக இம்மாதிரிச் சொற்களைப் பயன்படுத்துவது நாம் தமிழுக்கு - நம் தமிழுணர்வுக்குச் செய்யும் தொண்டு ஆகும். 

          இந்த அட்டிலில் வடித்துக்கொட்டிய கஞ்சி ஆறு போல ஓடுகிறதாம். முன்பெல்லாம், சோற்றை ஆக்கி, வடிப்பார்கள். வடிக்காமல் ஆக்குவதைப் பொங்குவது என்பார்கள். விறகடுப்பில் இது சிரமமானது. சரியான பக்குவத்தில் இறக்கிவைக்காவிட்டால், சோறு அடிப்பிடித்துப்போகும்,  அல்லது வேகாமலோ, குழைந்தோ போய்விடும். எனவே, அரிசியை உலையிலிட்டு, நிறைய நீர் வார்த்து, கிண்டிக்கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது, அகப்பையால் எடுத்து வெந்துவிட்டதா என்று நசுக்கிப் பார்ப்பார்கள் (ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்).  சரியான பதத்துக்கு வந்தவுடன் மீதமுள்ள நீரை வடித்துவிடுவார்கள். அதற்கு, பாத்திரத்தின் மேல் துளையிட்ட ஒரு தட்டை மூடி, முன்புறமாக ஒரு சட்டியை வைத்து அதன் விளிம்பில் சாய்த்து வைப்பார்கள். எஞ்சியுள்ள நீர் எல்லாம் இறங்கிவிடும். இந்த நீரையே கஞ்சி என்பார்கள். பெரும்பாலும் இதை மாடுகளின் குழிதாளியில் ஊற்றிவிடுவார்கள். அல்லது பருத்தி ஆடைகளுக்கு விறைப்புக்காகப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு வடித்து விடுவதால், சோறு பெரும்பாலான சத்துகளை இழந்துவிடுகிறது என்பர் அறிவியலார்.

          மன்னன் அமைத்த அட்டில்களில் எந்நேரமும் சோறாக்கி வடித்துவிடுவதால், கீழே கொட்டிய கஞ்சி தெருக்களில் ஆறு போலப் பரந்து ஒழுகியதாம். இது மிகைப்படுத்தல் ஆகாதா? இல்லை. மாறாக வியப்பையும், பெருமையையும் தோற்றி நிற்பது. ஓர் அரசியல் நிகழ்ச்சிக்கு வந்த பெருந்திரளான கூட்டத்தைப் பார்த்துக் கடலெனத் திரண்ட கூட்டம் என்று வருணிப்பதோ, கண்கள் மிக்க நீர் சொரிந்தால், மழையெனப் பெருகிய கண்ணீர் என்று கூறுவதோ மிகைப்படுத்தல் ஆகாது. இது அன்றாட வழக்கு. நம் மரபுகளில் ஒன்று. சொல்லப்போனால், இப்போது சொன்னது இங்குள்ள ஒவ்வோர் அடிக்கும் பொருந்தும்.

          மாடுகள் கஞ்சியை விரும்பிக் குடிக்கும். வீட்டு மாடுகளை அவரவர்கள் பார்த்துக்கொள்வர். முந்தைய காலங்களில், ஒவ்வோர் ஊரிலும், சாமிக்கு நேர்ந்துகொண்டு, காளைக் கன்றுகளைப் படைப்பார்கள். இவற்றைக் கோயில் மாடுகள் என்பர். பார்ப்பதற்கு முரட்டுக்காளைகள் போல் தோன்றும். ஆனால் யாரையும் முட்டமாட்டா. அவை ஊர் முழுக்கச் சுற்றித்திரியும். அப்படிச் சுற்றித் திரியும் காளைகள் ஒன்றையொன்று பார்த்துவிட்டால், சீறியெழுந்து பாய்ந்து சண்டையிடும். அப்படிப்பட்ட காளைகள் இந்தக் கஞ்சியைக் குடிக்க வருகின்றன. போட்டியிருந்தால் சும்மா விடுமா? இவற்றின் சண்டையில், கஞ்சியும் மண்ணும்  கலந்து தெருவே சேறாகிவிடுகிறது. இந்தச் சேற்றின் மீது வேகமாகத் தேர்கள் ஓடிவந்தால் எப்படியிருக்கும்? பார்த்தவர்கள் பயந்துபோய் ஒதுங்கிக்கொள்வார்கள். அப்படி ஒதுங்கமுடியாத சுவர்களில் இந்தச் சேறு திட்டுத்திட்டாய்ப் படிகிறது. அரண்மனை அட்டில் அல்லவா? அதன் சுவர்கள் நன்கு வெள்ளை அடிக்கப்பட்டு அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டனவாய்த் திகழ்கின்றன. இந்த வெண்சுவற்றில் கருப்புக்கருப்பாகச் சேறு அப்பிக் கிடக்கிறது. இக்காட்சி, புலவருக்கு, சுண்ணாம்பைப் பூசிக்கொண்ட யானையைப் போல் தோன்றுகிறது. நீறு என்பது வெண்சாம்பல் என்ற பொருள் தரும். நெற்றியில் பூசிக்கொள்ளும் விபூதி என்பது திருநீறு - திருநீர் அல்ல.


          வெண்மையான சுண்ணத்துகளில் விழுந்தெழுந்த களிறு, கருமையான சேறு படர்ந்த வெண்சுவருக்கு உவமை.
உவமானம்          ←→          உவமேயம்
களிறு          ←→          சுவர்
சுண்ணம்          ←→          சேறு
இவ்வாறு நேர்நேராய் அமைந்த பொருள்களில் ஒரு முரண் இருப்பதைக் கவனித்தீர்களா?

களிற்றின் நிறம் கருப்பு          ←→          சுவரின் நிறம் வெள்ளை
சுண்ணத்தின் நிறம் வெள்ளை          ←→          சேற்றின் நிறம்.கருப்பு.

          அதாவது, வெள்ளை நிறச் சுண்ணம் பூசிய கறுப்பு நிறக் களிறு, கறுப்பு நிறச் சேறு படர்ந்த வெள்ளை நிற மதிலுக்கு ஒப்பாகிறது. இப்படி முரண்பாடான உவமையைக் கையாளலாமா?

          சாதாரணமாக, முகத்தில் தாடி, மீசை வைப்பது வழக்கம். சிலர் மிகப் பெரிய தாடி,மீசை வைத்திருப்பர். காதுவரை உயர்ந்த தாடி கன்னங்களையும் மறைத்து நிற்கும். மீசையோ மிக உயர்ந்து மேலுள்ள மூக்கையே மூடிவிடும். அப்படிப்பட்டவர்களைப் பற்றிக் கூறும்போது, தாடிமீசைக்குள் முகத்தை வைத்திருப்பவர்கள் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவது வழக்கம். இப்பொழுது உங்கள் ஐயம் தீர்ந்துவிட்டதா? இல்லையென்றால் விளக்குகிறேன்.

          வெள்ளையும் கருப்புமாக ஒரு யானை வந்தால் நமக்கு ஐயம் எழுவதில்லை. கரிய யானை வெள்ளையாக எதையோ அப்பிக்கொண்டு வந்திருக்கிறது என்போம். வெள்ளையும் கருப்புமாக ஒரு சுவர் இருந்தாலும் நமக்கு ஐயம் இல்லை. ஆனால், வெண்மையான சுவரில், ஏகப்பட்ட கருப்பு இருந்தால், வெள்ளைச் சுவரில் கருப்பு அப்பியிருக்கிறதா அல்லது கரிய சுவரில் யாரோ அங்கங்கே வெள்ளை தடவியிருக்கிறார்களா என்று வேடிக்கையாகக் கேட்போம். மிகப் பெரிய அளவில் கஞ்சி ஓடி, மிகப் பெரிய அளவில் சேறு உருவாகி, அதன் துகள்கள் மிகப் பெரிய அளவில், இது வெள்ளையாக இருந்த சுவர்தானா என்று நாம் வியக்கும் அளவுக்குப் படிந்திருக்கிறது என்பதை வலியுறுத்தவே புலவர் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் எனலாம்.

          இது தொடர்பான இன்னொரு கேள்வி. கருப்புக் குதிரைகள் உண்டு. வெள்ளைக் குதிரைகளும் உண்டு. வரிக்குதிரையின் படத்தைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளைக் குதிரையின் மீது கருப்புக் கோடுகளா அல்லது கருப்புக் குதிரையின் மீது வெள்ளைக் கோடுகளா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!







தொடர்பு:
முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/






Sunday, December 15, 2019

சங்க இலக்கியத்தில் மிதவை

சங்க இலக்கியத்தில் மிதவை

 
—   முனைவர்.ப.பாண்டியராஜா


          மிதவை என்பதற்கு மிதப்பு அல்லது சோறு, கூழ், கும்மாயம் என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி. மிதப்பு என்பது நீரில் மிதந்து செல்வது. அதாவது தெப்பம் (float, raft) என்று சொல்லலாம். சோறு,கூழ், கும்மாயம்  என்பன உணவுப்பொருள்கள். கும்மாயம் என்பது  குழைய வைத்த பருப்பு.  ஓர் உணவுப்பொருள் மிதவை அல்லது மிதக்கின்ற ஒன்று என்று குறிப்பிடப்படுவது ஏன் என்று ஆராய முனைகிறது இக்கட்டுரை.

                    வெண் கிடை மிதவையர்  நன் கிடை தேரினர் - பரி 6/35

என்ற பரிபாடல் அடியில் வரும் மிதவை என்பதற்குத் தெப்பம் என்றே உரையாசிரியர்கள் பொருள்கொள்கின்றனர். இந்த ஓர் இடத்தைத் தவிர மிதவை என்ற சொல் வருமிடங்களில் அது ஓர் உணவுப்பொருளாகவே கொள்ளப்படுகிறது. அவற்றைப் பார்ப்போம்.

                    செ வீ வேங்கை பூவின் அன்ன
                    வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த
                    சுவல் விளை நெல்லின் அவரை அம் புளியங்கூழ் - மலை 434-436

இதனைப் பலவாறாகத் திரித்தும், மாற்றி எழுதியும் நச்சினார்க்கினியர் பொருள்கொள்வார்.
செ வீ வேங்கை பூவின் அன்ன அவரை - சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினையொத்த நிறத்தையுடைய அவரை விதை
வேய் கொள் அரிசி - மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி
சுவல் விளை நெல்லின் அரிசி - மேட்டுநிலத்தே விளைந்த நெல்லின் அரிசி
சொரிந்த மிதவை புளியங்கூழ் - இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழை
          இவர் மிதவை என்பதற்குக் குழைவான (சோறு) என்று பொருள்கொள்கிறார்.

இதனை ஆற்றொழுக்காகவே, அதாவது, இருக்கிறபடியே, பொருள்கொள்வார் பொ.வே.சோமசுந்தரனார்.
சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த
மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசியினாலாய சோற்றின்கண் சொரிந்த
மேட்டு நிலத்தின் விளைந்த நெல்லின் அரிசியை விரவி அவரை விதையினாற் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழை
          இவர் மிதவை என்பதற்குச் சோறு என்று பொருள்கொள்கிறார்

சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினைப்போன்ற மூங்கில் அரிசிச் சோற்றில், மேட்டு நிலத்தில் விளைந்த
நெல்லின் அரிசியை விரவி அவரை விதையாற் புளியைக் கரைத்துச் செய்த புளியங்கூழை - இது ச.வே.சு - உரை
          இவரும் மிதவை என்பதற்குச் சோறு என்றே பொருள்கொள்கிறார்.

          இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்தப்பகுதி, 'புல் வேய் குரம்பை'-களில், அதாவது குடிசைகளில் வாழும் முல்லைநில மக்களின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக்கூறும் வகையில் அவர்களின் வீட்டுக்கு இரவில் சென்றால் கிடைக்கக்கூடியது என்று புலவர் குறிப்பிடுவது.
இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


                    கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
                    கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
                    வாங்கு கை தடுத்த பின்றை - அகம் 37/12-14

கொள்ளும் பயறும் அழகு பொருந்தப் பாலுடன் கலந்து ஆக்கிய, வெள்ளிக்
கம்பியை ஓர் அளவாக நறுக்கிய வெள்ளிய அவிழ்க் கஞ்சியை
வளைத்துண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர் - ந.மு.வே.நாட்டார் உரை.
          இவர் மிதவை என்பதற்குக் கஞ்சி என்று பொருள்கொள்வார். பின்னர் மிதவை - கூழ் என்று விளக்குவார்.

கொள்ளும் பயறும் பாலோடு விரவிச் சமைத்த,
வெள்ளிக்கம்பியை ஓரளவாகத் துணித்துப்போட்டாற் போன்ற வெள்ளிய பருக்கைகளைக் கொண்ட கூழையும்
வயிறாரப் பருகி, இனி வேண்டா என்று வளைந்த கையால் தடுத்த பின்றை
- பொ.வே.சோமசுந்தரனார் உரை
          இவரும் மிதவை என்பதற்குக் கூழ் என்று பொருள்கொள்வார்.

          இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இது பாலைத்திணைப் பாடலாயினும், உழவர்கள் 'வைகு புலர் விடியலாகிய' அதிகாலையில் நெல் கதிரடிக்கும் களத்தில் வேலை செய்கையில், இந்தக் கஞ்சியை வாங்கிக் குடித்துவிட்டுத் தம் பணியைத் தொடர்வர் என்று பாடல் கூறுகிறது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
          பெரும் சோற்று அமலை நிற்ப - அகம் 86/1,2

உழுத்தம் பருப்புடன் கூட்டிச்சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு
பெரிய சோற்றுத் திரளையுடைய உண்டல் இடையறாது நிகழ
- ந.மு.வே.நாட்டார் உரை

உழுத்தம் பருப்புப் பெய்து சமைத்த கொழுவிய களியாகிய மிதவையோடு மிக்க சோற்றினையும் சுற்றத்தாரும்
பிறரும் உண்ணுதலாலே உண்டாகும் ஆரவாரமும் இடையறாது நிற்பவும்
- பொ.வே.சோமசுந்தரனார் உரை
விளக்கம் - உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை என்பது ஒருவகைத் துணை உணவு; அஃதாவது உழுத்தம் பருப்புப் பொங்கல் என்றவாறு.

          எனவே இருவரும் மிதவை என்பதற்குப் பொங்கல் என்றே பொருள் கொண்டிருக்கின்றனர்.

          இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்த நிகழ்ச்சி, பாடலில், ’கனை இருள் அகன்ற கவின்பெறு காலை’-யில் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
          தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே - அகம் 340/14,15

பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மாவைத்
தயிரிட்டுப் பிசைந்த கூழினைக் கொடுப்போம் உனக்கு
- ந.மு.வே.நாட்டார் உரை
இங்கு, தயிர் மிதி மிதவை மா ஆர்குநவே என்று பாடங்கொண்டு, கூழினை உன் குதிரைகள் உண்பனவாகும் என்று இவர் பொருள்கொள்கிறார்.

தயிர் மிதி மிதவை - gruel mixed with curds - வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

பச்சையான மீனை விற்றுப் பெற்ற வெண் நெல்லினது மாவைத் தயிர்விட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை உன் குதிரைகள் உண்ணத் தருவோம்.ச.வே.சு - உரை.
இவர், தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே என்று பாடங்கொண்டும் ,குதிரைகளுக்கு என்று வலிந்து பொருள்கொள்கிறார்.
இங்கும் மிதவை என்பதற்குக் கூழ் என்றே பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது.

          இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, தலைவன் இரவில் தங்கினால் இரவு உணவாகத் தலைவன் தனக்கோ, தன் குதிரைக்கோ தலைவியிடம் பெறும் உணவாகவே இந்த நெய்தல் திணைப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல்
          தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
          வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
          ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
          அவரை கொய்யுநர் ஆர மாந்தும் - புறம் 215/1-5

கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்
தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த
வேளையினது வெள்ளிய பூவை வெள்ளிய தயிரின்கண் பெய்து,
இடைமகள் அடப்பட்ட அழகிய புளியங்கூழையும்
அவரை கொய்வார் நிறைய உண்ணும்  - ஔவை.சு.து. உரை
விளக்கம் - வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத் தாளிதம் செய்யப்பட்ட புளியங்கூழ் ஈண்டு அம்புளி மிதவை யெனப்பட்டது.

பிளவைக் கொண்ட வரகுக் கதிரின் அரிசியைக் குற்றி வடிக்கப்பெற்ற சோற்றையும் பூப்பொடி எருப்போலக் கிடக்கும் தெருவில் புழுதியில் மலர்ந்த வேளைப் பூவினைத் தயிரில் கலந்து ஆயர்மகள் ஆக்கிய இனிய  புளியங்கூழையும் அவரை பறிப்பார் நிரம்ப உண்ணும் - ச.வே.சு - உரை.

          இங்கும் நாம் கவனிக்கவேண்டியது இந்த மிதவை ’ஆய்மகள்’ சமைத்தது, அதாவது, இடையர் வீட்டு மக்கள் உண்ணுவது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்


          பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் - மலை 416,417

பல ஆட்டினங்களையுடைய திரள்களிலே இராக்காலத்தையுடையிராய்ச் செல்லின்
பாலும் பாற்சோறும் நுமக்கு என்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவீர் -  நச்சினார்க்கினியர் உரை.

பொ.வே.சோமசுந்தரனாரும் இதனையே பொருளாகக் கொள்வார்.
பின்னர், விளக்கத்தில், மிதவை - பாற்சோறு, இனி, மிதவை வெண்ணெயுமாம் என்பார் அவர்.

          இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, இந்த மிதவை இடைக்குல மக்களின் இரவு உணவு என்பதை. இரவில் திடீரென்று அவர்கள் வீட்டுக்குப் போனாலும், உடனே கிடைப்பது.
இதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட குறிப்புகளினின்றும் நாம் பெறுவது :
1. மிதவை என்ற உணவுப்பொருள் குறிப்பது: 1) சோறு, 2) கூழ் அல்லது கஞ்சி, 3) பொங்கல், 4)  பால்சோறு,    5) வெண்ணெய்.
2. இது 1) அரிசியினால் செய்யப்படுவது, 2) கொள்ளும் பயறும் கலந்து செய்வது, 3) உழுந்தங்களியினால் ஆனது,   4) அரிசிமாவினால் ஆனது, 5) வரகுச்சோறு, வேளைப்பூ கடைந்தது ஆகியவை கலந்தது.
3. இது உழைப்பாளிகளான நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் (middle/lower middle class people) உணவு.
4. இந்த உணவு காலையிலோ, இரவிலோ உண்ணப்படுகிறது.
5. எதிர்பாராமல் திடீரென்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகட்கு உடனடியாக எடுத்து உண்ணக்கொடுப்பது.

          எந்தவோர் உரையாசிரியரும் இந்த உணவுப் பொருள் ஏன் மிதவை எனப்படுகிறது என்பதற்கான விளக்கம் அளிக்கவில்லை. மிதவை என்பதன் அடிச் சொல் ’மித’ (float).  மிதப்பது மிதவை என்ற பொருளில் நீரின் மேல் மிதக்கும் தெப்பம் போன்றவற்றை மிதவை எனலாம். பரிபாடலில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதைக் கண்டோம்.


ஆனால் இந்த உணவுப்பொருள் எதன் மீது மிதக்கிறது?
          பொதுவாகச் சிற்றூர்களில் உள்ள உழைப்பாளிகள் வீட்டில் ஒருநேரம் மட்டும்தான் சமையல் நடக்கும். அவரவர் தொழிலைப் பொருத்து, காலையிலோ, மாலையிலோ ஒருநேரம் சமைப்பார்கள். அவ்வாறு காலையில் சமைத்து மீந்ததை மாலையிலோ, மாலையில் சமைத்து மீந்ததைக் காலையிலோ உண்பார்கள். ஆக்கிய சோறு கெட்டுவிடாமல் இருக்க அதன்மேல் நீர் ஊற்றி வைப்பார்கள். சில இடங்களில் இதனை வெந்நிப்பழசு என்பார்கள். சில சமயங்களில் இந்தப் பழைய சோறும் நொசநொசத்துப்போய்விடும். எனவே சோற்றைக் குழைவாக ஆக்கி, கைச்சூட்டில் உள்ளங்கையில் உருட்டி, உருண்டைகளாக ஆக்கி, ஒரு பெரிய சட்டியில் மோரிலோ, புளிச்சதண்ணி எனப்படும் புளித்த நீரிலோ போட்டுவிடுவார்கள். தேவைப்படும்போது ஒரு உருண்டை அல்லது ஒரு மிதவையை எடுத்து, பால், தயிர், மோர், புளிச்சதண்ணி அல்லது புளிப்பாகக் கடைந்த கீரை ஆகியவற்றை ஊற்றி, கூழாகப் பிசைந்துகொண்டு உண்பார்கள்.

          அந்தக் காலத்தில் மிகவும் ஏழைமக்கள் கேப்பைக் களியைக் கிண்டி, இவ்வாறு உருண்டைகளாக்கி ஏதாவது ஒரு நீர்மப்பொருளில் மிதக்கவிட்டு வைத்திருப்பார்கள். அதுவும் இடையர் வீடுகளில் பாலுக்கா பஞ்சம்? திடீரென்று இரவில் விருந்தாளிகள் வந்துவிட்டால், அந்த நேரத்தில் அடுப்புப் பற்றவைக்க மாட்டார்கள். இருக்கிறது பால், மிதக்கிறது களி மிதவை. பாலும், மிதவையும் பண்ணாது கொடுத்துவிடுவார்கள்.


          பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் என்ற மலைபடுகடாம் வரிக்கு இதுதான் சிறந்த பொருளாகலாம்.

          நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற ஒரு பாடல் உண்டு. நெல்லை யாராவது சோறாக ஆக்குவார்களா? நெல்லைக் குற்றி அரிசியாக்கி, அதனை நீரிலிட்டு வேகவைத்த சோறுதான் நெல்லுச்சோறு.

          கேப்பைக்களி என்கிறோம்.  கேப்பையைத் (கேழ்வரகு) திரித்து,மாவாக்கி, நீரில் கரைத்து, கிண்டிவிட்டு வேகவைத்து, சற்று இறுகிய பின்னர் உருண்டையாக்கினால் அது கேப்பைக்களி. அதை மோரில் மிதக்கவிட்டால் களி மிதவை.

          வெண்ணெல் மாஅ தயிர் மிதி மிதவை’ என்ற அகநானூறு அடிக்கு இவ்வாறுதான் பொருள்கொள்ளவேண்டும்.

          எனவே, பச்சரிசிச் சோற்றைக் குழைய ஆக்கியோ, அரிசி அல்லது பயறுகளின் மாவைக் களியாகக் கிண்டியோ,  சூடாக முதலில் உண்டுவிட்டு, மீந்ததை உருண்டைகளாக்கி ஒரு நீர்ப்பொருளில் மிதக்கவிடுவதே மிதவை.

          எனவே இது உருண்டைச் சோறு அல்லது களியுருண்டை. பின்னர் இதனைப்  பாலிலோ, தயிரிலோ, புளித்தநீரிலோ, புளிப்பான கீரைக்கடைசலிலோ கரைத்துக் கூழாகக் குடிப்பது வழக்கம்.

          இன்றைக்கும் இந்தப் பழக்கம் சிற்றூர்களில் ஏழைபாழைகளின் மனைகளில் நடப்பதைக் காணலாம்.

          இந்தப் பொருளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மிதவை என்றசொல் வரும் பாடல்வரிகளைப் படித்துப்பாருங்கள். கூழின் சுவையையும், அதைக் கூறும் தமிழின் இனிமையையும் ருசிக்கவும், ரசிக்கவும் செய்யலாம்.




தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/





Saturday, December 7, 2019

சங்க இலக்கியத்தில் மாமை

சங்க இலக்கியத்தில் மாமை

—   முனைவர்.ப.பாண்டியராஜா


          இந்த மாமை என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்.

          காதலன் பிரிந்து வெளியூர் சென்றால், பிரிவுத்துயரால் வாடிய காதலியின் மேனியில் பசலை படரும் என்றும், இந்தப் பசலை பீர்க்கம் பூவைப்போலப் பொன்னிறம் உடையது என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்தப் பசலை என்பது பிரிவு ஏக்கத்தால் உடல் மெலிந்து உடலின் நிறம் மாறி, வெளுத்துப் போவதைக் குறிக்கும் என்று இன்றைய உரையாசிரியர்கள் கூறுகின்றனர். இதனை ஓர் அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிப்பிடுகிறது.
                    காடு இறந்தனரே காதலர் மாமை
                    அரி நுண் பசலை பாஅய் பீரத்து
                    எழில் மலர் புரைதல் வேண்டும் - அகம் 45/6-8

இதன் பொருள்:
காதலர் வறண்ட நிலத்தைக் கடந்துதான் சென்றிருக்கிறார், எனது மாமையோ
மெல்லிய நுண்ணிய பசலை படர்ந்ததால், பீர்க்கங்கொடியின்
அழகிய மலரைப் போன்று மாறிவிட்டது.

          எனவே, மாமை என்பது மேனியின் நிறம் என்பது தெளிவாகிறது. பொதுவாக, மாமை என்பதை மாந்தளிர் நிறம் என்று உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். இதைத்தான் இப்போது மாநிறம் என்கிறோம். இருப்பினும் சில அகராதிகள் இதனைக் கருமை நிறம் (black) என்று குறிப்பிடுகின்றன. எனவே, இந்த மாமை என்பது என்ன நிறம் என்பதைச் சங்க இலக்கியங்களின் மூலம் தெளிவாகக் காண்பதே இக்  கட்டுரையின் நோக்கம்.

(1)
                    நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை
                    களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
                    வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் - மலை 35-37

இதன் பொருள்:
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், மாமை நிறத்தில்
களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பெரிய யாழை

          இந்த உவமையை வைத்து, களங்கனி கருப்பாக இருப்பதால், மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.

          ஆனால், களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர், பச்சை நிறக் களாக்காய், நிறம் மாறி சற்று சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும். அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம். இங்கு, ’களங்கனி மாமை’ என்னாமல், ’மாமை களங்கனி’ என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். எனவே ’மாமை களங்கனி’ என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.



(2)
                    வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
                    மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை - குறு 147/1,2

இதன் பொருள்:
வேனிற்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாநிறமும்

          பாதிரியில் மூன்று வகை உண்டு;  அவை 1. பழுப்பு நிறம் (purple) 2. வெள்ளைநிறம் 3. பொன் நிறம்.

          இவற்றில் இங்கு புலவர் குறிப்பிடுவது பழுப்பு வகைப் பாதிரியே. அதுவே மாமை நிறத்தை ஒட்டி உள்ளது.



(3)
                    கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
                    நீர் மலி கதழ் பெயல் தலைஇய
                    ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே - நற் 205/9-11

இதன் பொருள்:
வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது
மிக்க நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும்
அழகிய நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே

          பொதுவாக, தளிர்கள் இளம் பச்சைநிறத்திலோ, மாநிறத்திலோ தான் இருக்கும். கருமையாக இருக்க வாய்ப்பில்லை. எனவே ஈங்கையின் தளிரும் மாநிறத்ததுவே எனக் கொள்ளலாம்.



(4)
                    நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
                    நார் உரித்து அன்ன மதன் இல் மாமை - நற் 6/1,2

இதன் பொருள்:
நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்
நாரை உரித்து நீக்கினாற் போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும்,

                    அம்ம வாழி தோழி நம் ஊர்
                    பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
                    நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
                    இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 35

இதன் பொருள்:
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.

          ஆம்பல் மலரில் இருவகை உண்டு. 1. நீல ஆம்பல், 2. செவ்வாம்பல். செவ்வாம்பல் தண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனை உரித்தால் அது சற்றே நிறம் வெளுத்து இருக்கும். இதுவே குறைந்த மாமைநிறம்.

          எனவே செவ்வாம்பல் தண்டின் சிவப்பு நிறத்துக்கும், அதனை உரித்த பின் இருக்கும் வெளிர் சிவப்புக்கும் இடையிலான நிறமே மாமை என்பது பெறப்படும். இதனை மாந்தளிர் நிறம் எனக் கொள்ளலாம்.


          ஆம்பல் மலரைப் பார்ப்பதே அரிது. அதன் தண்டை எடுத்து அதன் நாரை உரித்து யார் பார்ப்பர் என்று எண்ணத்தோன்றும். இன்றைய கேரளாவில் நாரை உரித்த ஆம்பல் தண்டினை நறுக்கிச் சமையலுக்குப் பயன்படுத்துவர். படத்தைப் பாருங்கள். சங்கப் புலவர்கள் மிகப்பெரும்பாலும் கற்பனையாக எதையும் சொல்வதில்லை.



(5)
                    மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்
                    தாதின் துவலை தளிர் வார்ந்து அன்ன
                    அம் கலுழ் மாமை கிளைஇய
                    நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16

இதன் பொருள்:
மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள
தாதுடன் கூடிய தேன் துளி தளிரில் ஒழுகியது போல
சிறிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் கிழத்தி

          இங்கே குறிப்பிடப்படும் தளிர் இன்ன மரத்தது என்று குறிப்பிடப்படாவிடினும், இது மாந்தளிர் என்று கொள்வதில் தவறில்லை. இதனை மாமரம் என்றே கொள்வர் ச.வே.சு

                    திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க - அகம் 135/1
இந்தத் தளிரையும் மாந்தளிர் என்றே கொள்வர் ச.வே.சு

(6)
                    மணி மிடை பொன்னின் மாமை சாய என்
                    அணிநலம் சிதைக்குமார் பசலை - நற் 304/6,7

இதன் பொருள்:
நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்
அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் - பின்னத்தூரார் உரை.

          இங்கே, மணி - பொன், மாமை - பசலை என்ற இரண்டு இணைகள் (pairs) உள்ளன. பசலையால் மாமை கெட்டது என்பது உண்மை. ஆனால் மணியினால் பொன் கெட்டதா, பொன்னினால் மணி கெட்டதா என்பது விளக்கமாகக் கூறப்படவில்லை. பசலை பொன் நிறத்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, பொன் போன்ற பசலை மணி போன்ற மாமையைக் கெடுத்தது என்று கொள்வதற்கு ஏதுவாகும். இங்கே மணி என்பது நீலமணி என்று கொள்ளப்படுகிறது. எனவே, மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்ள ஏதுவாகிறது.

          ஆனால் ஔவை.சு.து. அவர்களின் உரை, மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல என் மாமைக்கவின் ஒளியிழக்குமாறு என் அழகிய நலத்தைப் பசலை போந்து கெடுக்கும் என்று விளக்கமாகக் கூறுகிறது. இதனை, மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல, பசலை படர்ந்ததால் என் மாமைக்கவின் ஒளியிழந்தது என்று கொள்ளலாம். எனவே மணி என்பது பசலைக்கும், பொன் என்பது மாமைக்கும் ஒப்பு ஆகின்றன.

          ஆனால், மாமை பொன் நிறத்தது அல்ல. எனவே இங்கு மணியின் நிறமோ, பொன்னின் நிறமோ ஒப்பிடப்படாமல், பதித்தலும் படர்தலும் ஆகிய செய்கைகள் ஒப்பிடப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம். பதித்த மணி பொன்னின் அழகைக் கெடுப்பது போல் படர்ந்த பசலை மாமையைக் கெடுத்தது என்று கொள்ளலாம்.

(7)
          இதே போன்று, ஆனால் இதற்கு மாறுபட்ட உவமையைக் கலித்தொகையில் காண்கிறோம்.

                    பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
                    பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ - கலி 48/16,17

இதன் பொருள்:
பலநாளும் நினைவு வருத்துகையினாலே பசலையாலே நுகரப்பட்டவளுடைய
பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண் அது செய்த பழிகள் உண்டோ? (இல்லையே) - நச்சினார்க்கினியர் உரை.

          மணி மிடை பொன்னின் மாமை என்ற நற்றிணை உவமை போல் அன்றி, பொன் உரை மணி அன்ன மாமை என்று இங்குக் காண்கிறோம்.

          பொன்னை உரைத்த மணியும், பசலை படர்ந்த மாமையும் ஒப்பிடப்பட்டுள்ளன. எனவே பசலை பொன்னுக்கும், மாமை மணிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளன.

          பசலை பொன் நிறத்தது என்பது உண்மை. எனவே மாமை மாநிறத்தது எனக் கொள்ளலாம். இங்கே மணியை நீலமணி என்று கொண்டால், மாமை கருமை நிறமாகிறது.

          ஆனால், இவ்வுரைக்கு விளக்கம் எழுதிய பெருமழைப்புலவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். மணி என்பது நீலமணியாயின் அதனைப் போன்ற மாமை என்பது எவ்வாறு மாநிறம் ஆகும்?

          எனவே, நச். உரைக்கு மாற்று உரை காணவேண்டும், அல்லது பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று விளக்கம் காணவேண்டும். முதலில் நச். உரைக்கு மாற்று காண்போம்.

          ’பொன் உரை மணி அன்ன மாமை’ என்பதற்கு, ’பொன்னை உரைத்த மணியை ஒத்த’ என்று நச். உரை காண, புலியூர்க்கேசியார், இதனை, ‘பொன்னிலே பொதிந்த மணி போன்ற அவளது தேமல்’ என்று பொருள் கொண்டிருக்கிறார்.

          செங்கை பொதுவன் அவர்கள், இதனை , ’பொன்னில் பதிக்கப்பட்டிருக்கும் மணிக்கல் போல அவளது மாமை நிறக் கண் பசலை நோயால் வருந்துகிறது’ என்று பொருள் கொண்டிருக்கிறார்.

          எனவே இங்கு மணி பொன்னில் பொதிந்தது அல்லது மணி பொன்னில் பதிக்கப்பட்டது என்று கொண்டு, மாமையில் படர்ந்த பசலையைப் பொன்னிலே பொதிந்த மணிக்கு ஒப்பிடவேண்டியுள்ளது. இப்படிக் கொண்டால், இது மேற்கூறிய நற்றிணை உவமை போல் ஆகும்.. அதன்படி, மாமை மாந்தளிர் நிறம் ஆகிறது

          அடுத்து, பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று காண்போம். அவர், மணி - ஈண்டு நீலமணி, மாமை - மாநிறம் என்று எழுதுகிறார். இது குழப்பத்தைத் தரும் என்று கண்டோம்.

இப்போது,
          திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் 8/8

என்பதற்கு, ஔவை.சு.து. அவர்கள், அழகிய மணி போலும் மேனியையுடைய இளமகள் என்று பொருள் கொள்கிறார். அத்துடன், மணி, ஈண்டுச் செம்மணியின் மேற்று என்றும் விளக்குகிறார்.

          ஆக, பொருத்தமான இடங்களில் மணி என்பது செம்மணியையும் குறிக்கும் என்றாகிறது. எனவே, பெருமழைப்புலவர் மணி - நீலமணி என்று கொண்டிருப்பதைவிட ஔவை.சு.து. அவர்களின் மணி, ஈண்டுச் செம்மணி என்ற விளக்கத்தை இங்குக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

எனவே,
          பொன் உரை மணி அன்ன மாமைக்கண் - கலி 48/16,17

என்ற அடிக்கு, பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண் என்ற பொருளில், மணி என்பதைச் செம்மணி என்று கொண்டால், பொன்னிறப் பசலை படர்ந்த மாமையைப் பொன் துகள் படர்ந்த செம்மணி என்று கலித்தொகைப் புலவர் கூறியிருக்கிறார் என்று கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. எனவே இங்கும், மாமை என்பது செம்மணியின் மாந்தளிர் நிறம் என்றாகிறது.

(8)
                    எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
                    நறிய கமழும் துறைவற்கு
                    இனிய மன்ற என் மாமை கவினே - ஐங் 146

இதன் பொருள்:
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்
நறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இன்பமானது, உறுதியாக,  என் மாநிற மேனியழகு.

          ஞாழல் மலர்ந்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் மாமைக் கவின் இனிக்கிறது. எத்தனையோ மலர்கள் இருக்க, இந்தப் புலவர் ஞாழல் மலரைத் தேர்ந்தெடுப்பானேன்? இந்த இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போல் தெரிகிறது.

          ஞாழல் மலர் பெரும்பாலும் பொன் நிறத்தில் இருக்கும். சிவப்பு நிற ஞாழலும் உண்டு.

                    செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை - அகம் 240/1

என்ற அகநானூற்று அடியால் இதனை அறியமுடிகிறது. படத்தைப் பாருங்கள்.


          சிவந்த ஞாழல் மலர்கள் பூத்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் சிவப்பு நிறத்தை ஒட்டிய மாந்தளிர் நிற மாமையின் கவின் இனித்திருப்பதில் வியப்பென்ன?

          இதைத்தவிர, ஞாழலுடன் மாமையை முடிச்சுப்போடும் மேலும் இரண்டு பாடல்கள் உண்டு.

                    அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு
                    ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
                    இவட்கு அமைந்தனனால் தானே
                    தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே - ஐங் 103

இதன் பொருள்:
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு
ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்
இவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே
இவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.

                    எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்
                    தனி குருகு உறங்கும் துறைவற்கு
                    இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 144

இதன் பொருள்:
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்
தனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,
இப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.

          பாருங்கள், செந்நிற ஞாழல் மலர்கள் பூத்துக்கிடக்கும் அழகை, ஒரு பழுப்பு நிறக்கொக்கு கெடுப்பது போல மாந்தளிர் நிற மாமையின் அழகைப் பொன்னிறப் பசலை கெடுக்கிறதாம்.


          மாந்தளிரை நிறையப்பேர் பார்த்திருக்கமாட்டீர்கள். இதோ, இதுதான் மாமை எனப்படும் மாந்தளிர் நிறம்.





தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/













Sunday, October 6, 2019

மதர்


—   முனைவர். ப.பாண்டியராஜா


            மதர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் 28 முறை பயின்று வருகிறது. தமிழ்ப்பேரகராதி (Tamil Lexicon) இதனை வினைச்சொல்லாகவும், பெயர்ச் சொல்லாகவும் கொள்கிறது. இதனை வினைச்சொல்லாகக் கொண்டு, இதற்கு,

            செழித்தல், To flourish; to be fertile, rich or luxuriant;
            மிதமிஞ்சிக்கொழுத்தல், To be too luxuriant to be productive, as soil, plants, etc,
            மதங்கொள்ளுதல், To be affected with frenzy, as a bull or elephant;
            செருக்குதல், To be self-conceited, arrogant;
            களித்தல், To rejoice; to be full of joy,
            மிகுதல், To increase, abound,

என்ற பொருள்களும், பெயர்ச்சொல்லாகக்கொண்டு,

            செருக்கு, Pride, arrogance, self-conceit, wantonness;
            மகிழ்ச்சி, joy,
            மிகுதி, Abundance;
            பாய்ச்சல்,  Rush; gust; impulse;
            வீரம், Bravery

ஆகிய பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய அகராதிகளிலும் இவற்றையொட்டிய பொருள்களே கொடுக்கப்பட்டுள்ளன.

            இனி, சங்க இலக்கியங்களில் இச்சொல் இந்தப் பல்வேறான பொருள்களை எவ்வாறு தாங்கி வருகிறது என்று பார்ப்போம். இச்சொல், சங்க இலக்கியங்களில் வருகின்ற 28 இடங்களில், 21 இடங்களில் பெண்களின் கண்களுக்கு அடைமொழியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறு அல்லாத மற்ற பயன்பாடுகளை முதலில் பார்ப்போம்.

1.
            கடும்தெறல் இராமனுடன் புணர் சீதையை
            வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
            நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் - புறம் 378/18-20

மிக்க திறலையுடைய இராமனுடன் காட்டிற்குச் சென்ற சீதையை
மிக்கவலிமைபெற்ற அரக்கன் இராவணன் கவர்ந்துசென்றபோது
சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த வளப்பம் மிக்க அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய
என்பது இதன் பொருள்.

            எனவே, இங்கு சீதை அணிந்திருந்த அணிகலன்கள் மிகவும் விலையுயர்ந்தவையாய் இருந்திருக்குமாதலால், அவற்றை rich or luxuriant என்ற பொருளில் செழுமையான அல்லது வளப்பம் மிக்க நகைகள் எனப் பொருள்கொள்ளலாம்.

2.
            மதர் புலி வெரீஇய மையல் வேழத்து - அகம் 39/11

செருக்குற்ற புலியினைக் கண்டு அஞ்சிய மயக்கம் பொருந்திய யானைக்கூட்டம்

            இங்கே செருக்கு என்ற வினைப்பொருள் ஏற்புடையதாய் இருக்கக் காண்கிறோம்.

3.
            மதர் எழில்
            மாணிழை மகளிர் பூணுடை முலையின்
            முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு - அகம் 99/3-5

இறுமாந்த அழகினையும்
மாண்புற்ற அணியுமுடைய மகளிரது பூண் அணிந்த முலையினைப் போன்ற
முகைகள் அலர்ந்த கோங்கம்பூக்களொடு

4.
            இதழ் அழிந்து ஊறும் கண் பனி மதர் எழில்
            பூண் அக வன முலை நனைத்தலும் - குறு 348/4,5

இமையின் விளிம்பைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, இறுமாந்த அழகினையுடைய
பூண்களின் அகத்தே இருக்கும் அழகிய முலையை நனைக்கின்றதனையும்

            இங்கே, மதர் என்பது இளம்பெண்களின் எடுப்பான மார்பகங்களுக்கு அடைமொழியாகக் கொடுக்கப்பட்டிருப்பதால், மதர் என்பதற்கு, செருக்கு என்பதன் வேறொரு பொருளான இறுமாப்பு பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. பால்ஸ் மின் தமிழ் அகராதியும் மதர் என்ற சொல்லுக்கு, இறுமாப்பு, haughtiness என்ற பொருளைத் தருகிறது.

5.
            மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம் 140/10

செருக்குள்ள கயல் இரண்டு எதிர்த்துப் பொருவது போன்ற அவள் கண்கள்

6.
            நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்
            ஒள் இழை மகளிர் பள்ளி அயர - மது 622,623

பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மடப்பத்தினையும் செருக்கினையும்
ஒள்ளிய அணிகலன்களையுமுடைய மகளிர் துயிலுதலைச் செய்ய

7.
            காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ
            ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை
            கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி
            உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
            பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
            கரப்பார் களி மதரும் போன்ம் - பரி 10/63-68

காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் அக் காமக் களிப்பு தோன்ற,
ஊருக்காக மிகவும் அஞ்சி, அக் காமக்களிப்பினை ஒளிப்பார் சிலர், அவரின் நிலை
கள்ளுண்டதால் களிப்பு மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு அஞ்சி,
உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி, தம் களிப்புக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி.

            மேற்கூறிய 7 இடங்களைத் தவிர, சங்க இலக்கியங்களில் 21 இடங்களில் மதர் என்ற சொல் பெண்களின் கண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் 11 இடங்களில் ’அரி மதர் மழைக்கண்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            ’அரி மதர் மழைக் கண்’ என்ற தொடரில் வரும் மதர் என்ற சொல் பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்பதில் குழப்பம் நிலவுகிறது. இத்தொடரில் அரி (செவ்வரி), மழை (குளிர்ச்சி) ஆகிய சொற்கள் பெயர்ச்சொற்களே. எனவே மதர் என்பதனையும் ஒரு பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான உரையாசிரியர்கள் இத்தொடருக்கு, செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண் என்றே உரை கொள்கின்றனர். ஆனால், தமது விளக்கவுரையில், மதர் - செருக்கு,  மதர் - களிப்பு என்ற பொருளும் தருகின்றனர். எனவேதான் இத்தொடரில் வரும் ‘மதர்’ என்ற சொல்லை எதில் சேர்ப்பது என்ற குழப்பம் நிலவுகிறது.

            கண் என்ற சொல்லுக்கு அடையாகக் கொடுக்கப்படும் மதர் என்ற சொல் பயன்பாட்டை மூன்று விதங்களாகப் பிரிக்கலாம்.


1. தலைவி அல்லது ஓர் இளம்பெண்ணின் கண்களைப் பாராட்டும் விதமாக அமைந்திருப்பது.

            அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி
            மட மதர் மழை கண் இளையீர் - குறி 140,141

தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும்
மடப்பத்தையுடைய மதர்த்த குளிர்ந்த கண்ணினையுமுடைய இளையீரே

            அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
            பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
            திரு மணி புரையும் மேனி மடவோள்
            யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் - நற் 8/1-4

நீங்காத துயரத்தின்வாய்ப்பட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும்,
பல பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும்
அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!

            முது நீர் இலஞ்சி பூத்த குவளை
            எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
            அரி மதர் மழை கண் காணா ஊங்கே - நற் 160/8-10

நாட்பட்ட நீரினைக்கொண்ட பொய்கையில் பூத்திருக்கும் குவளை மலர்களை
எதிர் எதிராக வைத்துக்கட்டியதைப் போன்ற இவளது
செவ்வரி பரந்த செழுமையும் குளிர்ச்சியும் மிகுந்த கண்களைக் காண்பதற்கு முன்னர்

            ஒரீஇயின போல இரவு மலர் நின்று
            திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் - பதி 21/34,35

குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,

            கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை
            நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல்
            முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்
            நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை - பரி 8/74-77

குளத்திடத்து இருக்கும் நெய்தல் பூக்களையும், மலர்ந்து மணங்கமழும் மொட்டுக்களின் மணத்துடனான மலர்ச்சியினால்
கண்டோர் விரும்புவதற்குரிய நறவம் பூவின் இதழையும் போன்ற மதர்த்த மையுண்ட கண்களையும், ஒளிவிடும் நெற்றியையும்,
மொட்டாகிய முல்லையையும் வென்று, அழகிய முத்துக்களைப் போன்றிருக்கும் வெண்மையான பற்களையும் கொண்ட தலைவி
கூறியது நகைப்பதற்குரிய கனவு அன்று, உண்மையாக நடந்த நிகழ்ச்சியும் அன்று!

            திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்
            அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
            அணங்குசால் அரிவையைக் காண்குவம் - அகம் 114/13-15

செல்வமுள்ள மனையில் தங்கிய குற்றமற்ற கற்பினையும்
செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும் மூங்கிலை ஒத்த பருத்த தோளினையும் உடைய
தெய்வம் போல் சிறந்த நம் தலைவியைக் காண்போம்.

            ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
            காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது
            அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
            பெரு மலை நாடன் மார்பு புணையாக
            ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி - அகம் 312/4-8

உயர்ந்த மலையினின்றும் வீழும் மிக்க மழையாலான அருவி நீரில்,
காந்தள் பூக்களையுடைய இச்சீறூரின் அலரினைப் போற்றாது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் சிவந்திட, நாளை
பெருமலைநாட்டினனாகிய தம் தலைவனின் மார்பு தெப்பம் ஆக
விளையாடுவோம் வருவாயாக காதல் மிக்க தோழியே!

            கள்ளின்
            மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
            சின் மொழி பொலிந்த துவர் வாய்
            பன்மாண் பேதையின் பிரிந்த நீயே - அகம் 343/16-19

கள்ளால் ஆகிய
மகிழ்வு போல் மகிழ்தற்கு ஏதுவாகிய செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும்
சிலவாய மொழிகளால் பொலிவுற்ற பவளம் போன்ற வாயினையும்
பலவாய மாண்புகளையும் உடைய நம் தலைவியாகிய பேதைப்பெண்ணைப் பிரிந்த நீ

            தூமலர் தாமரை பூவின் அங்கண்
            மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன
            திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
            அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை - அகம் 361/1-4

தூய மலராய தாமரைப் பூவிடத்தே
கரிய இதழ்களையுடைய குவளை மலர் இரண்டினைப் பிணைத்துவைத்தாற் போன்ற
அழகிய முகத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும்
அழகிய வளைகளையுடைய முன்கையினையும் அழகிய வாய் இதழினையுமுடைய நம் தலைவியின்

            நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா
            கடிய கூறும் வேந்தே தந்தையும்
            நெடிய அல்லது பணிந்து மொழியலனே
            இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
            அரி மதர் மழை கண் அம் மா அரிவை
            மரம் படு சிறு தீ போல
            அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே - புறம் 349

தன் கை வேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து
கேட்டார் அஞ்சத்தக்க மொழிகளைக் கூறுகின்றான் வேந்தனும், இவள் தந்தையும்
நெடுமொழிகளைத் தவிர பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை,
இது இவர்கள் கொள்கை ஆகும், இதனை ஆராயுங்கால் கூரிய பற்களையும்
அரி பரந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையுமுடைய அரிவையாவாள்
மரத்தைக் கடையுமிடத்துத் தோன்றும் சிறு தீ அம் மரத்தை அழிப்பது போல
வருத்தம் விளைவிப்பவளாயினள் இவள் தான் பிறந்த ஊர்க்கு.

            மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள ‘மதர்’ என்ற சொல், ஒரு பாராட்டுச்சொல்லாகவே இருக்கக் காண்கிறோம். எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்பதற்கு, செழிப்பான (luxuriant), வளமைபொருந்திய (rich), மகிழ்ச்சி நிறைந்த (joyful) போன்ற பொருள்கள் ஒத்துவரும் எனத் தோன்றுகிறது. மேலும், இவற்றில் சில இடங்களில், மதர்க்கண் என்பதைக் காந்தக்கண்கள், சுண்டியிழுக்கக்கூடிய கண்கள், கவர்ச்சியான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம் எனத்தோன்றுகிறது.


2. அடுத்து, தலைவனை மயக்கி இழுக்கும் பரத்தையரின் கண்களும் மதர்க்கண்கள் எனப்படுகின்றன.

            மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
            தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால்
            இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை
            தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி - பரி 20/55-58

இணக்கமுள்ள மதர்த்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி, இளமைபொருந்திய விரல்களால்
பொருள்கொடுப்போருக்கு யாழினை இசைத்து இசையெழுப்பி இன்பமூட்டும் பொழுதே, என் அணிகலன்களையும்
அணிந்து, மகிழ்வித்து, இன்பம் வழங்குவதில் பொதுமையுடையவளே!

            சேரி
            அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
            பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
            செரு ஒழிந்தேன் சென்றீ இனி - கலி 91/12-15

சேரியிலிருக்கும்
செவ்வரி படர்ந்த மதர்த்த மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது";

            அரி மதர் மழை கண் மாஅயோளொடு
            நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
            பெரு நீர் வையை அவளொடு ஆடி
            புலரா மார்பினை வந்து நின்று எம்வயின்
            கரத்தல்கூடுமோ - அகம் 296/3-7

செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்ணினை உடைய மாமை நிறத்தையுடைய பரத்தையுடன்
நேற்றும் மணம் கமழும் பொழிலில் துயின்று இன்றும்
அவளுடன் வையையின் நீர்ப்பெருக்கில் விளையாடி
ஈரம் புலராத மார்பினையுடையையாய் எம்பால் வந்து நின்று
எமக்கு மறைத்தல் இயலுமோ?

            பரத்தையரின் கண்ணழகைத் தலைவியர் உறுதியாகப் பாராட்டமாட்டார் என்பது உறுதி. எனவே இது ஒரு வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கவேண்டும். மதர் என்ற சொல்லுக்கு with intense desire என்ற ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு. வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் தமது சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இச்சொல்லுக்கு இந்த இடங்களில் luscious என்று பொருள்கொண்டிருப்பார். இதற்கு, Having strong sexual appeal என்று பொருள். இதனை seductive, voluptuous என்றும் கொள்ளலாம். எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்ற சொல்லுக்கு போதை தரும், மயக்கம்தரும், வெறியூட்டும் என்ற பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.


3. அடுத்து, மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து கண்ணீர்விடும் ஒரு பெண்ணின் கண்களும் மதர்க்கண் எனப்படுகின்றன.

            நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
            ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் - குறி 247,248

பெரிய மழைத் துளிகள் ஓங்கிப்பாய்ந்த மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து,
ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன - (இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்),

            திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
            அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் - கலி 77/3,4

தன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, தான் விரும்பியவனுக்காக வருந்துபவளின்
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல் தெறிப்பது போல்

            ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்
            பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் - கலி 82/20,21

அப்பொழுது, 'மகளிரின் செவ்வரிபடர்ந்த, செழித்த, மைதீட்டிய கண்கள் பசந்துபோகும்படி அவருக்கு நோவைத் தரும்
உன் தந்தையின் பரத்தைமைக் குணத்தைப் போலிருக்காதே' என்றாள்,

            மதர் எழில் மழை கண் கலுழ இவளே
            பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
            மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
            அழல் தொடங்கினளே  - அகம் 120/6-9

மதர்த்த அழகினையுடைய குளிர்ந்த கண் கலங்கிட, இவள்
மிக்க நாணத்தைக் கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய
தன் மாண்புற்ற அழகு கெட ஏக்கமுற்று அமையாது
அழுதலைத் தொடங்கியுள்ளாள்

            வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
            எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
            அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே - அகம் 149/17-19

வண்டு வீழ நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்
புதிய மலர் இரண்டின் சேர்க்கை போன்ற இவளது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரினைக் கொள்ள

            நெடிது உயிர்த்து
            வருந்துவள்கொல் அளியள் தானே சுரும்பு உண
            நெடுநீர் பயந்த நிரை இதழ் குவளை
            எதிர் மலர் இணை போது அன்ன தன்
            அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே - அகம் 381/18-21

பெருமூச்செறிந்து
வருந்தியிருப்பாளோ! இரங்கத்தக்காள்! வண்டு தேனைப் பருக
ஆழமான நீரினால் தரப்பட்ட நிரையாகவுள்ள இதழ்களையுடைய குவளையது
புதிய மலராய இரண்டு பூக்களைப் போன்ற தனது
செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள

            திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாய்
            அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் - அகம் 387/1,2

இவளின் திருந்திய அணி நெகிழவும் பெரிய தோள் நெகிழவும்
அரி பரந்த மதர்த்த கண்களில் நீர் ஒழுகவும் செல்லும் தலைவரே

            கார் வான் இன் உறை தமியள் கேளா
            நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
            அரி மதர் மழை கண் அம் மா அரிவை - புறம் 147/3-5

கார்காலத்து மழையின் இனிய துளி வீழ்கின்ற ஓசையை தமியளாய்க் கேட்டு
நேற்று ஒருபக்கத்துத் தனிமைகொண்டிருந்த
அரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும் அழகிய மாமை நிறத்தினையும் உடைய அந்த அரிவையின்

            இவற்றில், சில இடங்களில், தலைவி துயருறுவதற்கு முன்னர் கண்கள் இருந்த நல்ல நிலை சுட்டப்படுவதாகக் கொள்ள இடமுண்டு. முன்பு மதர்த்திருந்த கண்கள் இப்போது கண்ணீர் மழை சொரிய என்ற பொருள் கொண்டால் இங்கு மதர் என்ற சொல்லுக்கு நாம் முதன்முதலில் (எண் 1) கண்ட பொருள் ஒத்துவரும். ஆனால்,

            நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
            அரி மதர் மழை கண் அம் மா அரிவை

என்ற அடிகளில் தனிமைத்துயரில் வாடும் மதர்க் கண்ணையுடைய அரிவை என்ற பொருள் அமைவதால், பொதுவாக, மதர் என்ற சொல்லுக்குத் தரப்படும், செழிப்பு, களிப்பு, செருக்கு ஆகிய பொருள்கள் ஏற்புடையனவாக இல்லை.

            வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும்
            கோன் ஆர் மகள்தன் வடிவம் நோக்கி - சிந்தா:12 2456/2,3

வான் நிலவு அனைய ஒளி முகமும், இளம் மானைப் பழிக்கும் மதர்த்த நோக்கும் உடைய
கோவிந்த மன்னனுடைய மகளின் வடிவழகைக் கண்டு

            என்ற சிந்தாமணி அடிகள் நமக்கு ஒரு புதுப்பொருளைத் தருகின்றன.

            மட மான் மதர் நோக்கும் என்ற தொடருக்கு ’மடமானை வென்ற மதர்த்த நோக்கும்’ என்று பொருள்கொள்வார் பெருமழைப்புலவர்.

            மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் - சிறு 31
            மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று - குறி 25
            மயில் இயல் மான் நோக்கின்
            கிளி மழலை மென் சாயலோர் - பட் 149,150
            மான் அமர் நோக்கம் காணா ஊங்கே - நற் 101/9
            பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் - கலி 58/2
            மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக - கலி 69/4
            மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து - அகம் 74/10
            மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே - அகம் 91/18
            மான் பிணை நோக்கின் மட நல்லாளை - அகம் 195/6

            ஆகிய அடிகள், பெண்கள் மானைப்போன்ற பார்வையைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றன. மானின் கண்களில் உள்ள சிறப்பு அதன் மருண்ட பார்வைதான்.

            மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து - அகம் 74/10 என்ற அகநானூற்று அடி இதனை உறுதிப்படுத்துகிறது.

            எனவே, மதர் என்பதற்கு இங்கு ’மருண்ட’ அல்லது ‘மருட்சி’ என்ற ஒரு பொருளும் உண்டு என்பது இதனால் புலப்படுகிறது.

            இந்தப் பொருளே மூன்றாவதாக இங்குக் குறிப்பிடப்படும் துயருள்ள பெண்களின் கண்ணுக்கு அடையாகக் குறிப்பிடப்படும் மதர் என்ற சொல்லுக்குச் சரியான பொருளாகும்.  ஆனால் எந்த அகராதியிலும் இந்தப் பொருள் கொடுக்கப்படவில்லை. இனிவரும் அகராதிகளில் இந்தப்பொருளும் சேர்க்கப்பட்டால், இச் சொல்லுக்குரிய பொருள் அட்டவணை முழுமைபெறும்.




___________________________________________________________
தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/