Thursday, December 31, 2020

என்னே தமிழின் இளமை! - நெத்துரு

 என்னே தமிழின் இளமை! - நெத்துரு


-- முனைவர்.ப.பாண்டியராஜா


வீட்டு ஹாலில் தரையில் அமர்ந்து, மதிலில் சாய்ந்துகொண்டு, கால்களை நீட்டியவாறு சாய்வுப்பலகையில் மாணவர்களின் விடைத்தாள்களை வைத்துக்கொண்டு திருத்தி மதிப்பெண்கள் போட்டுக்கொண்டிருந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. வாசலில் அழைப்பு மணி அடித்தது. ஒருவாறு எழுந்து, எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு நடந்து வந்து கதவைத் திறந்தாள். எதிர்வீட்டுக்காரி! ஒரு கன்னடப் பெண். பேச்சுத்தமிழைப் புரிந்துகொள்வாள். ஆனால் கன்னடத்தில்தான் பேசுவாள். நம் தமிழ்ப்பேராசிரியையோ பெங்களூரில் சிறிதுகாலம் வாழ்ந்தவள். எனவே கன்னடத்தைப் புரிந்துகொள்வாள். ஆனால் தமிழில்தான் பேசுவாள். அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது கேட்பவர்க்கு வேடிக்கையாய் இருக்கும்.

“வாங்க, வாங்க, எப்படி இருக்கீங்க?” என்று அந்தக் கன்னடப்பெண்ணை வரவேற்றாள் இவள்.

“நானு சென்னங்க இதேனி, நீமு ஏங்க இதேரி” என்றவாறு உள்ளே நுழைந்தாள் அவள்.

பின்னர் அவர்கள் இருவரும் இவ்வாறே பேசத்தொடங்கினர். சற்று நேரத்தில் ஒரு சிறுவன் -அந்தக் கன்னடக்காரியின் மகன் - ஐந்து வயதிருக்கும் - அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்தான்.

“ஏனு, ஆத்துரு ஆச்சு, நீனு எதுக்கு அழுத்திய” என்று பதறிப்போய்க் கேட்டவள், அவனது வலது முழங்கையில் அடிபட்டு இரத்தம் வருவதைப் பார்த்துவிட்டாள். ஏதோ தெருவில் விளையாடிக்கொண்டிருந்தவன் கீழே விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. தன் தாய் இங்கே வருவதைப் பார்த்திருக்கிறான். உடனே அழுதுகொண்டு தாயிடம் வந்துவிட்டான்.

“ஐயோ, ரத்தம் வருதே” என்று பதறிப்போனாள் தமிழ்க்காரி.

“நெத்துரு பத்தாத, வெரசா மனைக்கு ஓகு பேக்கு, நானு பர்த்தேனி” என்று சொன்னவாறு கன்னடப்பெண் தன் பையனை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தாள்.

இரத்தம் என்ற பேச்சைக்கேட்டு, வேகமாகத் தன் அறையிலிருந்து வெளியே வந்தான் அவள் கணவன்.

“என்ன ஆச்சு?” என்று அந்தக் கன்னடப் பெண் வெளியே செல்வதைப் பார்த்தவாறு கேட்டான்.

“அந்தப் பெண்ணோட மகன் கீழே விழுந்துட்டான். கையிலே அடிபட்டு இரத்தம்” என்றாள் அவள்.

“அந்தக் கன்னடப் பெண் ஏதோ சொல்லிக்கிட்டே போச்சே. என்ன அது?” என்று வினவினான் அவன்.

“அதான், ரத்தம் வருது, சீக்கிரம் வீட்டுக்குப் போகணும், நான் வர்ரேன்”ன்னு சொல்லிட்டுப் போறா. “நெத்துரு பத்தாதா’ன்னா - ரத்தம் வருது’ன்னு அர்த்தம்” என்றாள் அவள்.

இதைச் சொன்னதும், சில வினாடிகள் ஆழ யோசித்தபடி இருந்த அவள், விடுவிடு-வென்று தன் அறைக்குள் நுழைந்தாள். ஒரு புத்தகத்தைக் கைகளில் விரித்துப் பிடித்தபடி அதனைப் புரட்டிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அவன் அந்தப் புத்தகத்தின் அட்டையைக் குனிந்து பார்த்தான். பதிற்றுப்பத்து - மூலமும் உரையும் என்று அதில் போட்டிருந்தது.

அவள் சொல்லப்போவதை எதிர்பார்த்து அவன் காத்திருந்தான்.

திடீரென்று அவள் கண்கள் மலர்ந்தன.

“இங்க பாருங்க, ”நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்”’னு பதிற்றுப்பத்துல நாப்பத்தி ஒம்பதாம் பாடல்ல வருது. அதுக்குப் பொருள் சொல்ற ஔவை துரைசாமியார் சொல்றார்,  “குருதி அளைந்ததினால் சிவந்த கையினை உடைய போர்வீரர்” அப்படீன்னு. குருதி’ன்னா ரத்தம்தானே. அப்படீன்னா நெய்த்தோர்-ங்கிற தமிழ்ச் சொல்தான் இப்ப கன்னடத்துல நெத்துரு'ன்னு வருது.” என்றாள் அவள் பரபரப்பாக.

“பதிற்றுப்பத்து’ன்னா, சங்க காலத்துச் சேரமன்னர்களப் பத்திய பாடல்கள்தான. சங்ககாலத்து வடசேரநாடுதான இப்ப கர்நாடகாவுல இருக்கிற தெற்குப் பகுதி. அப்ப இந்தச் சொல் தமிழ்நாட்டுல இருந்து மேற்க போயி, அப்புறம் வடக்க போயிருக்குமோ?” என்று அவன் தன் கொஞ்சநஞ்ச தமிழ் அறிவைக் காட்டினான்.  

அதனை உடனே ஏற்றுக்கொள்ளாத அவள், தன் மடிக்கணினியை இயக்கி ஏதோ தேடிப்பார்த்தாள். “நெய்த்தோர் அப்படீங்கிற சொல் சங்க இலக்கியத்துல ஏழு தரம் வருது.” என்றாள் அவள்.

“அது என்னென்ன?” என்றான் அவன்.“சொல்றேன்” என்று சொன்ன அவள் கணினியை அவன் பக்கம் திருப்பினாள்.அவன் படித்தான்.

செம் மறு தலைய நெய்த்தோர் வாய - நற் 2/4
நெய்த்தோர் அன்ன செவிய எருவை - ஐங் 335/2
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி - பதி 30/37
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் - பதி 49/10
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் - பரி 10/12
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் - அகம் 9/9
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் - அகம் 375/7

“நீங்க சொல்றபடி, நெய்த்தோர்’ங்கிற சொல் பதிற்றுப்பத்துல ரெண்டு தரம் வருது. ஆனா நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், அகநானூறு’ன்னு பல இலக்கியங்கள்’ளயும் அது வருது’ல்ல. அப்படியே பாத்தாலும் பதிற்றுப்பத்துல அந்தப் பாட்ட எழுதுன புலவர்கள் சோழநாட்டயோ, பாண்டிய நாட்டயோ சேந்தவங்களா இருக்கலாமுல” என்று அவள் ஐயத்தைக் கிளப்பினாள். 

“இருக்கலாம், அந்தப் பாட்டுகள எழுதின புலவர்கள் எல்லாம் தமிழ் நாட்டுல எந்தப் பக்கத்தச் சேந்தவங்க’ன்னு முழுக்க ஆராயணும்” என்றான் அவன்.

“எப்படியோ, நெய்த்தோர் அப்படீங்கிற நம்ம தமிழ்ச்சொல் - ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்ம இலக்கியத்துல வாழ்ந்துக்கிட்டிருந்த சொல், இன்னக்கி இன்னொரு திராவிட மொழியான கன்னடத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கு” என்று பெருமையுடன் சொல்லி முடித்தாள் அவள்.

“பார்த்தீர்களா! நம்முடைய சங்கச் சொல் இப்போது அண்டைவீட்டுச் சொந்தக்காரரின் வீட்டில் அழகாக ஆட்சிபுரிகிறது.என்னே! தமிழின் இளமை! ”         

   

No comments:

Post a Comment