Sunday, January 3, 2021

சங்கச் சுரங்கத்தில் பண்பாட்டுப் புதையல் – ஆர்.பாலகிருஷ்ணன் இஆப

 சங்கச் சுரங்கத்தில் பண்பாட்டுப் புதையல் – ஆர்.பாலகிருஷ்ணன் இஆப


— அ. குமரேசன்


திரு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப: ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகப்  பணியாற்றியவர். ஓய்விற்குப் பிறகு தற்போது அம்மாநிலத்தின் சிறப்புத் திட்டங்களுக்கான தலைமை ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். திராவிடவியல் அறிஞரான இவருக்கு சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவரது “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருது பெற்றது.

திராவிட மொழியியலையும் சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து இவர் முன்வைத்துள்ள புதிய கருதுகோள்கள் ஒரு நூற்றாண்டுக் காலமாகத் தொடர்கின்ற “திராவிடக் கருதுகோள்” என்னும் புதிரின் மீது பாய்ச்சிய மின்னல் வெளிச்சங்கள் எனலாம். “இடப்பெயர்ச் சான்றுகளும், சங்க இலக்கியம் மீள் நினைவுகளைப் பேசுகிறது என்கிற முன்வைப்பும்” ஆகிய இவ்விரண்டும் இவர் நம் அறிவுலகுக்கு அளித்துள்ள இரு பெரும் கொடைகள். “சங்கச் சுரங்கம்” என்கிற தலைப்பில் இவர் ஆற்றிவரும் தொடர் உரைகள் ஒளிக்கீற்றுகள்.

இந்தியப் பண்பாட்டின் பன்மியத்தை “மழைக்காடு” என்று புதிய கண்ணோட்டத்தில் உருவகப்படுத்துகிற இந்த ஆய்வாளர், பண்பாட்டுத் திருவிழாவாகிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி செம்மலர் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். 
| செம்மலர், ஜனவரி – 2021 இதழுக்காக  நேர்காணல்: அ.குமரேசன் | 


பண்பாடு, பண்பாட்டுத்தளம் இவற்றை நீங்கள் என்ன பொருளில் எடுத்துக்கொள்கிறீர்கள்?
பண்பாடு மானுடவியலின் மையப்புள்ளி. மனிதர்களுக்கென்று உலகளாவிய சில பொதுவியல்புகள் உள்ளன. அதே நேரத்தில் மனித சமூகங்களுக்குள் சிறிதும் பெரிதுமான கால நில வரையறைகளுக்குள் கற்றுத்தரப்பட்ட கற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு பழக்கவழக்கங்களும் இயல்புகளும் தனித்துவமான  உணவு உடை, கலை, என்று பல்வேறு வகைகளிலும் வெளிப்படுகின்றன. ஒருவகையில் பண்பாடு ஒரு சமூகம் தனது இருப்பை வெளிப்படுத்த நிலைநிறுத்தும் குறியீடுகளின் கூட்டுவடிவம்  போலவே தோன்றுகிறது. அது இயங்கும் சூழலும் நோக்கமும் பயனுமான காரணிகளும் களங்களுமே பண்பாட்டுத்தளமாகும். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்ற சங்க இலக்கியம் ஒரு சிறந்த புரிதல். ஒரு தொடர் இயக்கமான பண்பாடு காலம், இடம், புறச்சூழல், அகச்சூழல்களால் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது.

பண்பாடும், நாகரிகமும் மாறுபட்டவையா? பண்பாடு என்றால் குடும்ப, சமூக வாழ்க்கை முறைகள் என்றும், நாகரிகம் என்றால் அந்தந்தக் காலத்து நவீனங்களோடு கலந்த நடைமுறைகள் என்றும் பொதுவான புரிதல் இருக்கிறதல்லவா?
இரு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆனால் ஒன்றல்ல என்ற ஒரு கருத்து உண்டு. திருந்திய ஒழுக்கம் பண்பாடு, திருந்திய வாழ்க்கை நாகரிகம் என்று பாவாணர் கூறியதாக நினைவு. ஆனால் சிந்துவெளிப் பண்பாடு என்கிறபோது நான் அதை பண்பாடு/ நாகரிகம் என்ற இருநிலைகளையும் உள்ளடக்கிய சொல்லாகவே பயன்படுத்துகிறேன். அதைப் போலவே தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம் என்ற இரண்டையும் ஒரு தளத்தில் வைத்தே நான் பேசிவருகிறேன்.

கல்ச்சர், சிவிலைசேசன் என்ற இரு ஆங்கிலச் சொற்களுக்கும் இடையிலான வேறுபாட்டுக்குப் பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பண்பாடு என்று சொல்லும்போது ஒரு இனம், மொழி, நிலப்பகுதி என்ற வரையறைக்குள் நின்று பேசுவதாகவும் நாகரிகம் என்று சொல்லும்போது மேலும் உயர்ந்த, பண்பட்ட, விரிவான, தொழில்நுட்பங்கள், சட்டதிட்ட நெறிமுறைகள் கூடிய பன்முகமான ஒரு பரந்த பொருண்மையைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனால் “பண்பாடு”- பண்பிலாமை, நாகரிகமானவர்- நாகரிகமற்றவர் என்ற ஒப்பீட்டு இருமைகளால் இச்சொற்கள் மதிப்பீடு செய்யப்படுவதையும் கருத்தில்கொண்டு இரண்டிற்கும் நான் பொதுவாகப் பண்பாடு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன்.

“நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்ற நற்றிணையை (355) அடியொற்றிய ”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்”  என்ற திருக்குறளும் நினைவிற்கு வந்தாலும் நான் பண்பாடு என்ற சொல்லையே விரும்பிப் பயன்படுத்துகிறேன். சங்க இலக்கியத்தில் பண்பு என்ற சொல் 45 முறை பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட பண்பின், பண்பு, பண்பே போன்ற சொல்லாக்கங்களுக்கும் பஞ்சமில்லை. எனவே பண்பாடு என்ற பதத்திற்கே எனது வாக்கு. சூழலைக் குறித்து அது தனிமனிதர் பற்றியதா, ஒரு குழுவைப்பற்றியதா, மொழி பேசுவோர் பற்றியதா அல்லது பரந்து விரிந்த நாடு அல்லது அதற்கும் பெரிதான அடையாளங்கள் பற்றியதா என்று புரிந்துகொள்வதில் அப்படி ஒன்றும் பெரிதாக சிரமம் இருப்பதாகத் தோன்றவில்லை.

சமூக வளர்ச்சியில் பண்பாட்டுத்தளம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அல்லது, சமூக வளர்ச்சி பண்பாட்டுத்தளத்தில் தாக்கம் செலுத்துகிறதா?
இந்தக் கேள்வியைச் சற்று மாற்றிக்கொண்டு சமூகப் பொருளாதாரம்- பண்பாடு என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இதை விவாதிப்பதற்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் மீது அம்மக்கள் வாழும் புறச்சூழல் குறிப்பாக புவிச்சூழல் செலுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒருவகையில் நிலத்தையும் காலநிலை என்ற பொழுதையும், அதாவது பெரும்பொழுதாகிய காலத்தையும் சிறுபொழுதாகிய நேரத்தையும் முதல் பொருள் என்றும், அந்த நிலத்திற்குரிய உணவு, மரம், விலங்குகள், பறவைகள், தொழில், இசைக்கருவி என்று பல்வேறு கூறுகளைக் கருப்பொருள் என்றும், ஒரு குறிப்பிட்ட மனித உணர்வை அல்லது வாழ்வியல் சூழலை உரிப்பொருளாகவும் கட்டமைக்கிற பழந்தமிழ் திணைக்கோட்பாடு உணர்த்தும் கருத்தாக்கத்தை நாம் உள்வாங்கவேண்டும். பண்பாட்டை புவிச்சூழல் தீர்மானிக்கிறது என்ற புவிநியதி வாதம், தீர்மான வாதம் என்று கூறுகிறார்கள். இதை நான் ஒரு சார்ந்தியங்கியல் என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்.

ஆனால் பண்பாடு, சமூகவியல், அரசியல் பொருளாதாரம் என்ற கூட்டசைவில் எது என்ன விகிதம் என்று துல்லியமாக எடைபோடுதல் சாத்தியம் இல்லை. பண்டமாற்று முறையிலேயே புவிச்சூழலையும் மீறிய புதிய கூறுகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பரவத் தொடங்கிவிட்டன. பண்டமாற்றுதான் பண்பாட்டு மாற்றத்தின் தொடக்கப்புள்ளி. வேளாண்மை ஒரு தொழிலாக உருவெடுத்தபோது புன்செய் மேட்டுநிலம், நீர்வளம் மிக்க மருதநிலம் அவற்றின் உற்பத்தித் திறன், அவற்றின் மதிப்பு, சந்தை ஆகியவற்றால் மதிப்பிடப்பட்டபோது மலைப் பெருமிதத்தைப் பின்னுக்குத் தள்ளி, காடுகொன்று நாடாக்கப்பட்ட புதிய விளைநிலம் முன்னுக்கு வருகிறது. பிறகு தொலைதூர வணிகம் சமூகப் பண்பாட்டு முன்னுரிமைகளைத் தலைகீழாக்கிவிடுகிறது. மக்களின் உணவு மாறும்போது கடவுள்களின் படையல்களின் நிறமும் குணமும் கூட மாறிவிடுகிறது. நெல்லும் கரும்பும் பெருமிதமாகும் சூழலில் வரகு வாழ்ந்துகெட்ட பயிராகிறது. கேழ்வரகைக் கேட்பாரில்லை. திணறுகிறது தினை.

இவ்வாறு அரசியல், போர்கள், மேட்டுக்குடிகளின் ஆதிக்கம், வணிகப் பொருளியல், தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பல காரணிகளால் பண்பாடு பல்வேறு தாக்கங்களை எதிர்கொள்கிறது. மேற்கத்திய காலனியாதிக்கம் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவில் இவ்வளவு ஆங்கிலம் இருக்காது. இந்த மேற்கத்தியத் தொடர்பு பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை. இவற்றில் எவை  நேர்மறை விளைவுகள், எவை எதிர்மறை விளைவுகள் என்பது பார்வையைப் பொறுத்து. அத்தகைய மதிப்பீடுகளைத் தாண்டி தாக்கம் நிகழ்ந்தது என்பதுதான் பொது உண்மை. மொகலாய அரசுகள் இந்தியாவின் பண்பாட்டிலும் சமூகத்திலும் செலுத்திய தாக்கங்களின் தடயங்களை அப்படியெல்லாம் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியுமா? உணவுப் பழக்கங்களிலும் கட்டடக் கலையிலும் அக்காலகட்டம் ஏற்படுத்திய தாக்கங்களை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?  சமூக வளர்ச்சி, பொருளாதார மாற்றங்கள் எவ்வாறு ஒரு தொடர் இயக்கமாக இருக்கிறதோ அதைப் போலவே பண்பாட்டு மாற்றங்களும். எந்த குறிஞ்சி நிலப்பெண் எப்போது உடன்கட்டை ஏறினாள்? அத்தகைய கருத்தாக்கம் எப்போது நுழைந்தது? எப்போது எதனால் மறைந்தது? இவை மட்டுமல்ல பொங்கல் வாழ்த்து அட்டை எப்போது தோன்றியது எப்போது குறைந்தது என்பது கூட இந்தக் கேள்வியோடு தொடர்புடையதுதான்.

ஆனால் சில பண்பாட்டு மரபுகள் நீண்ட நெடுங்காலமாக, எத்தனையோ சமூகப் பொருளாதார வளர்ச்சிகளையும் வீழ்ச்சிகளையும் கடந்து தொடர்கின்றன. தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் இடையிலான குறியீடுதான் ஜல்லிக்கட்டு போன்ற சமூகப் பண்பாட்டு நிகழ்வுகள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒருவகையில் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பண்பாடு மற்றும் அது சாந்த பண்பாட்டு அரசியல் ஆகியவற்றிற்கு இடையில் ஊடாடும் தொடர்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தனிமனிதர் வாழ்வு, லட்சியம், கொள்கை, அணுகுமுறை இவற்றில் பண்பாட்டுத்தளத்தின் பங்கு என்ன?
தனிமனிதர் வாழ்வு லட்சியம், கொள்கை, அணுகுமுறை ஆகியவற்றில் அவர் தன்னைச் சுற்றிக் கண்ணுறுகிற, பங்கேற்கிற பண்பாட்டுச் சூழலின் தாக்கம் இருக்கிறது என்பதில் ஐயமே இல்லை. ஆனால் அது எல்லா தனிமனிதர்களையும் ஒரே மாதிரியாக வழிநடத்துகிறதா என்ற கேள்வியும் உடன் எழுகிறது. அடிப்படையில் ஒருவரின் லட்சியம் கொள்கை அணுகுமுறையில் “சொந்த விருப்பம்” என்பதும் இருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் ஒரே நிகழ்விற்கு பல்வேறு நிலப்பகுதியினரும் மொழியினரும் வெவ்வேறு வகையில் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதில் கூட இதற்கான விடை இருக்கிறது. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதலெனில் அந்தப் பக்குவத்தைப் பண்பாட்டுச் சூழல் கற்றுத்தரும். வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் முற்பிறவியின் பாவ புண்ணியங்கள் காரணம் என்பதை மக்களின் பொதுப்புத்தி ஏற்றுக்கொண்டால் கண்முன் நடக்கும் அவலங்கள் எல்லாம் மனசை உறுத்தாது. தத்துவம் பேசிக் கடந்து செல்லும் மனநிலை தோன்றும். அதே நேரத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும் என்பது போன்ற சிந்தனைகள் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் அதன் தாக்கம் இருக்கவே செய்யும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்திருக்கும் நான் இதுபற்றி நடைமுறை வாழ்வியல் நோக்கில் யோசித்திருக்கிறேன். ரயில் பயணத்தில் முன்பதிவு செய்த இருக்கைகள் என்பதையே மதிக்காமல் உள்ளே புகுந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஒரு தவறாகவே கருதப்படாத பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் பிற பகுதிகளில் அவ்வாறு நிகழ்வதில்லை. தனிமனிதர்களின் அணுகுமுறைகளில் பண்பாட்டுச் சூழல் தாக்கம் புரிவதாகவே தோன்றும். “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்ற ஔவையாரின் பாடல் மிகவும் யோசிக்க வேண்டிய கருத்து.

பண்பாட்டு முன்மாதிரிகள் என்று எதைக் கொண்டாடுகிறோமோ, யாரைக் கொண்டாடுகிறோமோ அதன் தாக்கம் தனிமனிதர்களின் அணுகுமுறையில் இருக்கும். அரசுகளையும் ஆட்சியதிகாரங்களையும் நோக்கி வினா எழுப்பும் தொன்மரபுக்கதைகள் நிலவும் பண்பாட்டிற்கும், பெண்கள் உடன்கட்டை ஏறுவதைக் கொண்டாடும் மரபிற்கும் வேறுபாடு இருக்கவே செய்யும். மொத்தத்தில் பண்பாட்டுத்தளத்தில் முன்னுரிமையளித்து முன்னிறுத்தப்படுகிற கருத்தாக்கங்கள் தனிமனிதர்களின் மீது தாக்கம் புரிகிறது என்றே நான் நம்புகிறேன். ஆனால் அந்தத் தாக்கம் அனைவரின் மீதும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை; அங்கே சுயபுத்தி முக்கியமாகிறது.

பண்பாட்டுத்தளத்தில் அரசியலின் இடம் என்ன?
அரசியலும் பண்பாடும் ஒருவகையில் ஒன்றின் மீது பிறிதொன்று தொடர்ந்து தாக்கம் செய்கிற சகபயணிகள் தான். இன்னும் சொல்லப்போனால் பல நேரங்களில் பண்பாட்டுத் தளம் என்ற மேடையில் நின்று தான் பல அரசியல் சித்தாத்தங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இனம், மொழி, பண்பாட்டு மேன்மை போன்ற ஆயுதங்களைக் கொண்டுதான் உலகில் பல போர்கள் நடந்துள்ளன. தங்களது மொழியைப் பேசுபவர்களை “வேற்றவர்கள்”, “காட்டுமிராண்டிகள்” என்று வெறுப்பை உமிழ்வதிலிருந்து பண்பாட்டு அரசியல் தோன்றுகிறது. “நல்லது இது; கெட்டது இது” என்று ஒருசார்பாக வகுத்துக் கொடுத்த பண்பாட்டுத் தளத்தில் தனிமனிதர்களின் சுயசிந்தனைக்கு மதிப்பில்லாமல் போகிறது. அதுவே அரசியலை வழிநடத்தும் உத்தியாகும்போது அரசியல் ஆபத்து நிறைந்ததாகிறது.

அத்தகைய சூழல்களில் முள்ளை முள்ளால் எடுப்பது போல நமது பண்பாட்டு அசைவுகளின் ஊடான ஆக்கபூர்வமான முன்னுதாரணங்களை முன்னிறுத்த வேண்டும். மாறிவரும் காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப பண்பாட்டு முன்மாதிரிகள் மாற வேண்டும். ”சதிக்கல்கள்” இன்றைய நவீனகாலத்திற்கு வழிகாட்ட முடியாது.  இன்னொரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம். மகாபாரதத்தில் வரும் துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலைக் காவு வாங்கியது அந்தக் காலகட்டத்தில் நியாயப்படுத்தி ஏற்கப்பட்டிருக்கலாம்; எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் தற்காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த பயிற்சியாளர் விருதை துரோணர் பெயரில் வழங்குவது நிகழ்காலத்திற்கான சிறந்த முன்மாதிரி அல்ல. திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்தி ஒலிம்பிக் பதக்கங்களைப் பெறுவதே நோக்கமெனில் இத்தகைய முன்மாதிரிகளைக் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைவுறுத்துவதும் பண்பாட்டு அரசியல்தான். பண்பாட்டு அரசியல் நல்லதா கெட்டதா என்பதை விட அது தவிர்க்கமுடியாத நடைமுறை எதார்த்தம் என்பதே உண்மை.

இந்தியச் சூழலில் சாதியம், மதம், இனம், மொழி ஆகியவை பண்பாட்டுத்தளத்தில் எவ்வாறு வினைபுரிகின்றன?
இந்தியச் சமூகத்தில் இவை பண்பாட்டுத்தளத்தில் மிகத் தீவிரமாக, நெடுங்காலமாக வினை புரிந்து வந்துள்ளன. இனக்குழுச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், தொழிற்புரட்சி சமுதாயம் என்று எந்தச் சூழலில் நின்று பார்த்தாலும் இத்தகைய காரணிகள் தொடர்ந்து இயங்குவதை இலக்கியத் தரவுகள், வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு உணர முடியும். இதற்குத் தற்கால மக்களாட்சி சூழல் கூட விதிவிலக்கல்ல. இந்தியத் துணைக்கண்டப் பண்பாடு பன்முகத் தன்மைகளால் கட்டமைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பழங்குடிகள், அவர்களின் மொழிகள், தனித்துவமான உணவு, உடை பழக்கவழக்கங்கள் என்று அது ஒரு மழைக்காடாகவே தோன்றுகிறது.

பல நாடுகளில் வெளிப் பண்பாடுகளின் குடியேற்றங்கள் பூர்வகுடிகளின் அடையாள அழிப்பில் முடிந்தன. அது கொடுமையான ஒரு ஆக்கிரமிப்பு மனப்பான்மையால் நேர்ந்த மாபெரும் தவறாகும். ஆனால் இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாடு அல்ல. மொழி, மதம், சாதியம் சார்ந்த ஆணவங்களும் அதிகாரம் செலுத்தும் முனைப்பும் இந்தியத் துணைக்கண்ட அரசியலின் போக்குகளைக் காலந்தோறும் பாதித்தே வந்துள்ளன. இது ஒரு தொடர் நிகழ்வு போலவே தோன்றுகிறது. இவற்றையெல்லாம் மீறி இந்தியாவின் பன்மியம் ஒரு மழைக்காட்டின் வீரியத்தோடு தொடர்ந்து இயங்குவதற்குக் காரணம், பன்முகத்தன்மை என்பது இந்தியா என்ற மழைக்காட்டின் விழுதுகள் அல்ல; கிளைகள் அல்ல; வேர்கள் என்பதால்தான்.

முன்னேறிய பண்பாட்டிற்கான அடையாளமாக எதையெல்லாம் சொல்லலாம்?
முன்னேறிய பண்பாட்டிற்கான எனது அளவுகோல்களாகக் கல்விப் பரவலாக்கம், பாலின சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றை முன்வைப்பேன். அவற்றோடு விநியோக அறத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பேன். இது உற்பத்தி பற்றியதோ, கிட்டங்கிகள் பற்றியதோ அல்ல – வினியோக அறம் பற்றியது. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வால் கட்டமைக்கப்பட்ட இணக்கமான வாழ்வியல்தான் முன்னேற்றத்தின் சிறந்த அளவீடாகும். மக்கள்தொகையில் மிகக் குறைவான சிலர் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெறுவதால் எந்த நாடும் பெருமிதம் கொள்ள முடியாது. சராசரி மனிதர்களின் வாழ்வியல்தான் ஒரு நாட்டின் உண்மை முகம்.

இந்தியப் பண்பாட்டை மழைக்காடு என்றீர்கள். எந்த அடிப்படையில் அவ்வாறு அடையாளப்படுத்துகிறீர்கள்?
மழைக்காட்டில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. ஆனால் அவை ஒன்றை ஒன்று அழித்தொழிப்பது இல்லை. அவை சேர்ந்தே சுவாசிக்கின்றன. ஒரே தரையில் வேரூன்றி வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு அடுக்குகளில் உயிர்ப்புடன் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உருக்குப் பானை – மெல்ட்டிங் பாட், காய்-கனித் துண்டுகளின் கிண்ணம் – சாலட் பௌல் என்று உருவகப்படுத்துவார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமிதத்தைக் கொண்டாட “உருக்குப் பானை” உருவகம் போதுமானதல்ல; உருக்குப் பானையில் பல்வேறு தனித்துவங்கள் உருக்கி உருக்குலைக்கப்பட்டுதான் புதிய கலவை உருவாகிறது. உருக்குப்பானை தனித்துவங்களின் சிதை. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? இதைப் போலவே “சாலட் கிண்ணம்” உருவகத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. சாலட் கிண்ணத்தில் பல வண்ணங்களில் காய்கறி, கனி வகைகள் சம இடம் பெற்றாலும் எல்லாக் காய்கறிகளும் கனிகளும் கிண்ணத்தை அடைவதில்லை. சாலட் கிண்ணம் இயற்கையானது அல்ல; செயற்கையானது; தேர்ந்தெடுக்கப்படுவது. ஆகவே நான் இந்தியப் பண்பாடு தனித்துவங்கள் உருக்குலைக்கப்படாத, இயற்கையான ஒரு “மழைக்காடு” என்ற உருவகத்தை முன்வைக்கிறேன்.

தமிழின் சங்க இலக்கியத்தை வாழ்வியல், அழகியல், உணர்ச்சி ஆகியவற்றைத் தாண்டி ஒரு புதிய இடத்தில் வைக்கிறீர்களா? அதன் அறிவியல்பூர்வ கண்ணோட்டம் குறித்து…
சங்க இலக்கியத்தை மனித சமூகத்தின் ஒரு களஞ்சியமாக, குறிப்பாக தொல்தமிழ் முன்னோடிகளின் தொடர் பட்டறிவின் ஊடாக விளைந்த பட்டறிவின் ஆவணப்பதிவாகவே நினைக்கிறேன். அதில் சமகாலத்திற்கான ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அதனால்தான் சங்க இலக்கியத்தைச் சமகாலத்தின் தேவைகள் சார்ந்து மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சிறந்த வாழ்வியல், அழகியல் இலக்கியம் சங்க இலக்கியம். ஆனால் அதன் இலக்கிய நயத்தின் பெருமைகளைக் கொண்டாடுவது மட்டும் போதுமானதல்ல. சங்க இலக்கியம் பல முக்கியமான புரிதல்களை நமக்குத் தருகிறது, நமது சமகாலப் பிரச்சனைகள் பலவற்றைக் கையாளுவதற்கு, சங்க இலக்கியத்தின் கூட்டு அனுபவம் உதவும் என்று நான் நம்புகிறேன். அதனால் அந்தக் கோணத்தில் அந்த எதிர்பார்ப்புடன் சங்க இலக்கியத்தை நான் மீள்வாசிக்கிறேன். எனது புரிதலைப் பகிர்ந்துகொள்கிறேன். அறிவியல் கண்ணோட்டத்தோடு புதிய அறிவுப்புலங்கள் சார்ந்த ஆய்வுமுறைகள் கலைச்சொற்கள் விளக்கும் முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி நமது உரையாடல்களைக் கட்டமைத்தால்தான் நாம் என்ன பேசுகிறோம் என்பது குறித்த நம்பகத்தன்மை ஏற்படும்.

உலகக் களத்திலும், உள்நாட்டிலும் பண்பாட்டுத்தளத்தின் இன்றைய நிலை, போக்கு எவ்வாறு இருப்பதாகக் கருதுகிறீர்கள்? நம்பிக்கை அளிக்கிறதா அல்லது மருட்சியை ஏற்படுத்துகிறதா?
இரண்டும் கலந்த ஒரு கலவையான மனநிலைதான் தோன்றுகிறது. உலகம்/ இந்தியா/தமிழ்நாடு என்ற எந்த வரையறைக்குள் இருந்து யோசித்தாலும் மருட்சி அடையவும், அதே நேரத்தில் நம்பிக்கை இழந்துவிடாமல் எதிர்காலத்தை அணுகவும் காரணங்களும் அறிகுறிகளும் இருக்கவே செய்கின்றன. கடந்தகாலங்கள் பற்றிய தகவல்கள், புரிதல்கள் இல்லாமல் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பவர்களுக்குப் பயமாக இருக்கும். ஆனால் கடந்த காலங்களில் உலகமும் இந்தியாவும் தமிழ் மண்ணும் கடந்து வந்த பாதைகளைக் கவனித்தவர்களுக்கு  புதிய அபாயங்களாகத் தோன்றும் பலவும் நாம் பழகிய பாதைதான் என்பது புரியும். கடந்த காலங்கள்தான் மீண்டும் கடந்து செல்கின்றன. நான் எப்போதும் நம்பிக்கை இழப்பதில்லை. இதிலும் அப்படித்தான். இன்னும் சொல்லப்போனால் புதிய தொழில்நுட்பங்கள் புதிய சாத்தியங்களைத் தருகின்றன. “சென்று சேர்தல்” என்ற பெரும் சாத்தியப் பெருவெளியில் பேச வேண்டிய செய்திகளைப் பேசவும் வாய்ப்பிருக்கிறதே.

சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்வீர்கள். சிந்து சமவெளி நாகரிகத்தையும் வைகைக்கரை நாகரிகத்தையும் இணைக்கிற உங்கள் ஆய்வு குறித்து செம்மலர் வாசகர்களுக்கு…
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே  என்பது எதுகை மோனை முழக்கம் அல்ல. எது எது என்பது குறித்த திறந்தவெளித் தேடலின் விழைவான புரிதல் அது. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டங்கள் குறித்த மீள்கட்டமைப்பில் இரண்டு புதிர்கள். சிந்துவெளி பண்பாட்டின் மொழி எது, அம்மக்கள் யார் என்பது ஒரு புதிர்.  இன்னொரு புதிர் தமிழ்த் தொன்மங்களின் தோற்றம் பற்றியது. இந்த இரு புதிர்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.  ஒருவகையில் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான். சங்க இலக்கியம் அவ்விலக்கியம் படைக்கப்பட்ட காலத்து நிகழ்வுகளின் பதிவுகள் மட்டும் அல்ல. அதற்கு முந்தைய மீள் நினைவுகளை உள்ளடக்கிய பல் அடுக்கு இலக்கியம் என்ற புரிதலோடு சங்க இலக்கியத்தை அணுகினால் உண்மை புரியும்.  சிந்துவெளி அகழ்வாய்வுத் தடயங்கள் வன்பொருள் என்றால் அதன் மென்பொருள் சங்க இலக்கியம்தான். வேறெதுவும் இல்லை. இது வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை. பல்துறை ஆய்வுத் தரவுகள் இந்தக் கருத்தாக்கத்தை மேலும் மேலும் உறுதி செய்கின்றன. இந்தத் தொடர்ச்சியைத் தமிழ்நாட்டு அகழ்வாய்வுகளும், மரபணு சார்ந்த புதிய ஆய்வுகளும் மேலும் தெளிவாக்குகின்றன. பயணங்களால் பட்டை தீட்டப்பட்ட மக்களின் அனுபவக் களஞ்சியம் சங்க இலக்கியம். அதைக் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் பற்றிய புரிதல்கள் புதைந்திருக்கும் புதையலாகவே நான் பார்க்கிறேன். சங்கச் சுரங்கத்தைத் தொடர்ந்து தோண்ட வேண்டும். கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் போன்ற நூற்றுக்கணக்கான இடங்களைச் சளைக்காமல் தோண்ட வேண்டும்.
தோண்டுவோம்.
 

No comments:

Post a Comment