Monday, January 18, 2021

நெசவாளர்களும் துணிவணிகர்களும் நூல் விமர்சனம்நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)

நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

வண்ண வண்ண ஆடைகளை விரும்பாத மனிதர்கள் தான் உண்டா? சென்ற மாதம் ஒரு சேலை வாங்கி இருப்போம். ஆனால் இன்று யாராவது அணிந்திருக்கும் சேலை அழகாகக் கண்களைக் கவர்ந்தால் அதனையும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழாமலில்லை. பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் வகைவகையாக ஆடைகளை வாங்கி அணிந்து அழகு பார்ப்பதில் தனிக் கவனம் செலுத்தத் தவறுவதில்லை. சிறு குழந்தைகளிலிருந்து வயதான மூத்தவர்கள் வரை எல்லோருக்குமே மனதைக் கவர்வது மனிதர்கள் நாம் அணிந்து கொள்கின்ற வகை வகையான ஆடைகள் தான்.

ஆடைகளை வாங்கி அணிகின்ற நம் ஒவ்வொருவருக்கும் ஆடை உற்பத்தியின் பின்னால் இருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அதிகம் கவனம் செல்வதில்லை. பொதுவாக எடுத்துக் கொண்டால் துணி நெ-நெய்வதற்குத் தேவையான நூலை உருவாக்கப் பருத்தி விவசாயம் அடிப்படையாக அமைகிறது. அதன் பின்னர் பருத்திப் பஞ்சிலிருந்து நூல் உருவாக்கம் நூலுக்குச் சாயம் ஏற்றும் தொழில், துணி உருவாக்கம், துணியில் வண்ணம் திட்டுவது, சாயத்தில் முக்குவது, துணிக்கு அச்சு செய்வது என்ற வகையில் முதல்கட்ட பணிகள் அமைகின்றன. இப்படி உருவாக்கப்பட்ட துணிகளை வெவ்வேறு வகையான ஆடைகளாகத் தைப்பது அல்லது சேலை போல உருவாக்குவது என்பது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைகிறது. இதனையடுத்து இப்படித் தனித்தனியாக உருவாக்கிய ஆடைகளை வணிகம் செய்வது என்பது நிகழ்கிறது.

தமிழகம் மிக நீண்ட நெசவு பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. நமக்கு இன்று கிடைக்கின்ற ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான தாலமி போன்றோரது ஆவணக் குறிப்புகளும், ரோமானிய வர்த்தக குறிப்புகளும், இன்றைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகர வணிகர்களின் குறிப்புகளும் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்திலேயே தமிழக நிலத்தில் உருவாக்கப்பட்ட துணிவகைகள் ஐரோப்பியச் சந்தையில் புகழ்பெற்று பொருளாதார பலமிக்க வணிகப் பொருளாக இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.

மிக நீண்டகாலமாக தமிழகத் தொழில் பண்பாட்டில் மிக முக்கிய அங்கம் வகித்த ஒரு தொழிலாக நெசவுத் தொழில் அமைகிறது. நெசவுத்தொழிலைச் சார்ந்து பல்வேறு தொழில்கள் தொடர்பு கொண்டிருப்பதால் மிக விரிவான பொருளாதார தொடர்புடைய முக்கியத் தொழில் என்ற சிறப்பையும் நெசவுத்தொழில் பெறுகிறது. ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட நெசவுத் தொழிலின் சிறப்பு பற்றி பேசும் நமக்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த நெசவுத்தொழில் எவ்வகையில் செயல்பட்டது என்பதைப்பற்றிய தகவல்கள் பேசப்படாமலேயே இருக்கின்றன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
கிபி 16 ஆம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுகின்ற பெருவாரியான வரலாற்று ஆய்வாளர்கள் பொதுவாகப் பேசிச் செல்லும் ஆய்வுத் தளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆய்வுத் தளத்தை மையமாகக்கொண்டு மிக விரிவான சான்றுகளுடன் முனைவர் எஸ்.ஜெசீல ஸ்டீபன் "நெசவாளர்களும் துணி வணிகர்களும் (கிபி 1502-1793 )" என்ற நூலை ஆங்கிலத்தில் வழங்கி இருக்கின்றார். இதனை மறைந்த முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ந.அதியமான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

முனைவர் ஜெயசீல ஸ்டீபன் மிக நீண்ட ஆய்வு அனுபவமும் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். இவரது ஒவ்வொரு நூலும் தமிழக வரலாற்றை மிக மிக நுணுக்கமான பார்வையுடன் மிக விரிவான பற்பல ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் திகழக்கூடியவை. இவருக்குள்ள பன்மொழி திறன் இவரது ஆய்வுகளுக்குக் கூடுதல் பலம். போர்த்துக்கீசிய மொழி, லத்தீன், பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி ஆகியவற்றில் ஆழமான திறன் கொண்டவராக இவர் திகழ்கிறார். இத்தகைய மொழி ஆளுமை இருப்பதால் இவரது ஆய்வுகள் முதன்மைத் தரம் வாய்ந்த ஆவணங்களை அலசிப் பார்த்து அதிலிருந்து சான்றுகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.

நெசவுத்தொழில் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா..? இதற்கென்று ஒரு ஆய்வு நூல் தேவையா? எனச் சிலர் கேட்கலாம். அப்படிக் கேட்போருக்கு ஏராளமான பதில்களை முன்வைக்கிறது இந்த நூல்.

நூலாசிரியர் இந்த நூலுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டம் என்பது ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் கால கட்டம் மட்டுமே. அதாவது கிபி 1502 ஆம் ஆண்டிலிருந்து 1793ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நெசவுத் தொழில் துணி வணிகர்களின் செயல்பாடுகள், சோழமண்டல கடற்கரையோர வணிக முயற்சிகள் இவை ஏற்படுத்திய தாக்கங்கள், ஐரோப்பியர்களுடனான வணிகத் தொடர்புகள், கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ற வகையில் இந்த நூல் அமைகிறது.

நூல் தமிழாக்க அறிமுக உரையுடன் தொடங்குகிறது. அதனை அடுத்து ஆங்கில நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற நன்றியுரை இடம்பெறுகிறது. அதன்பிறகு நூலாசிரியர் பற்றிய ஒரு குறிப்பும் நூலில் பயன்படுத்தப்பட்ட சொற்குறுக்கங்கள் பட்டியலும் இடம்பெறுகின்றன. நூலை தொடங்குமுன் நூலின் மையக் கருத்திற்கான காட்சி அமைப்பு விளக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்தார் போல கிபி. 1502ஆம் ஆண்டிலிருந்து 1641ஆம் ஆண்டுகளில் தமிழகக் கடற்கரை பகுதியிலிருந்து வளைகுடா இந்தோனேசியா தீவுக்கூட்டப் பகுதிகளுக்குப் போர்த்துக்கீசியர் நிகழ்த்திய துணி வணிகம் பற்றி ஒரு தனி அத்தியாயம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் போர்த்துக்கீசியர்கள் தமிழகக் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் தங்கள் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருந்த படியினால் தமிழக நெசவாளர்களின் துணிகளை அவர்கள் எவ்வகையில் பெற்று அதனை கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்தார்கள் என்பதை இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது.

இதற்கு அடுத்தபடியாக வருகின்ற மூன்றாம் அத்தியாயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அத்தியாயத்தின் தலைப்பு `செட்டியார் முதலியார் பிள்ளை மரக்காயர் வணிகர்கள் 16-18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் மேற்கொண்ட துணி வணிகம் மற்றும் பொருள் நிலவியல் என்பதாகும். இந்தப் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்ற ஆழமான செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஒரு அத்தியாயத்திற்கு மட்டுமே நூலாசிரியர் 346 அடிக்குறிப்பு சான்றுகளாக வழங்கியிருக்கின்றார் எனும்போது எத்தனை தகவல்களை இது உள்ளடக்கி இருக்கும் என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

அதனையடுத்து முடிவுரை வருகிறது. நூலில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லடைவுகளும் அவற்றிற்கான விளக்கங்களும் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. நூலுக்குப் பயன்பட்ட ஆய்வு நூல்களின் பட்டியல் அதனையடுத்து இடம்பெறுகின்றது. இறுதியாகப் புத்தகத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நிலவரைப்படங்களும் தமிழகக் கடற்கரையோர முக்கிய வணிகத் தளங்களின் பெயர்களும் காட்டப்பட்டுள்ளன.

மொத்தம் 220 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக இந்த நூல் அமைகிறது.
நீண்டகாலமாகவே தமிழக சோழமண்டல கடற்கரை ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பகுதி. இடைப்பட்ட காலத்தில் அரேபியர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த தமிழகக் கடற்கரை பகுதியில் மீண்டும் வணிக முயற்சிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக கிபி 15ம் நூற்றாண்டு தொடக்கத்தைக் கூறலாம். வாஸ்கோட காமாவின் இந்தியாவிற்கான வருகை இதுவரை மறைந்திருந்த வணிகக் கதவுகளை மீண்டும் திறப்பதாக அமைந்தது. தொடர்ச்சியாகப் போர்த்துகீசிய வணிகர்கள் கோவா மற்றும் கேரளாவின் கடற்கரை பகுதி மட்டுமல்லாது தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் தங்கள் வணிக முயற்சிகளைத் தொடங்கினர். போர்த்துக்கீசியர்களின் முயற்சி ஐரோப்பாவில் ஏனைய பிற நாடுகளில் வணிக ஆர்வத்தை எழுப்பியதால் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின. ஏற்கனவே இத்தாலி வணிகர்கள் மற்றும் அரேபிய வணிகர்கள் மூலமாகத் தென்னிந்திய வணிக வளம் பற்றி ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் அதிகமாகவே அறிந்திருந்தனர். ஆக, போர்த்துக்கீசியர்கள் அதற்கடுத்து டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை வணிகத்திற்குத் தகுந்த இடமாகக் காணத் தொடங்கி வணிக முயற்சிகளைக் கட்டமைக்கத் தொடங்கினர்.

இந்த வணிக முயற்சிகள் தான் இன்றைக்கு நமக்கு இந்தியாவைப் பற்றி மட்டுமல்லாது மிகக் குறிப்பாகத் தென்னிந்தியாவின் நில வரைபடம் மற்றும் இலங்கையின் நில வரைபடம் தொடர்பான ஆவணங்கள் நமக்குக் கிடைப்பதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆங்கிலத்தில் cartography என்று சொல்லப்படுகின்ற ஒரு தனித் துறையை ஐரோப்பியர்கள் தங்கள் கடல் பயணங்களுக்காக மிக விரிவாகப் பயன்படுத்தினார்கள். இந்தியாவுடனான வணிகம் என்பது ரோமானிய காலம் தொடங்கி முக்கியத்துவம் பெற்றதால் அப்போதிருந்தே நில வரைபடங்கள் உருவாக்கம் என்பது ஐரோப்பிய வணிகர்களது முக்கியமான ஒரு செயல்பாடாகவே இருந்தது. கி பி 16ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் இன்றைய இலங்கை பற்றிய குறிப்பிடத்தக்க வரைபடங்கள் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் தாங்கள் காண்கின்ற காட்சிகளைத் துல்லியமாக ஓவியங்களாக வரைந்து அவற்றை ஆவணப்படுத்தி வைக்கும் செயலையும் ஐரோப்பிய வணிகர்களது குழுவில் இடம் பெற்ற வரலாற்று அறிஞர்களும் பாதிரிமார்களும், செயல்படுத்தினர். இத்தகைய நில வரைபடங்களும் ஓவியங்களும் தான் இன்றைக்கு நாம் கடந்த ஐநூறு ஆண்டுகால தமிழகத்தின் சமூக நிலையையும் புவியியல் சூழலையும் அறிந்துகொள்ள நமக்கு முதன்மை நிலை ஆவணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

சோழர் காலத்துக் கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் நெசவாளர்களின் நிலையை விளக்கும் செய்திகளை நமக்குத் தருகின்றன. கிபி 970லிருந்து 985 காலகட்டத்தில் ஆட்சிசெய்த சோழமன்னன் மதுராந்தக உத்தம சோழன் காலத்துச் செப்பேடு ஒன்று காஞ்சிபுரத்தில் கச்சிப்பேடு, கருவுளான்பாடி, கஞ்சகப்பாடி, அதிமானப்பாடி, ஏற்றுவழிச்சேரி ஆகிய நெசவாளர் குடியிருப்பிலிருந்த பட்டு சாலியர்களுக்கு 200 தங்க காசுகளை வைப்புத் தொகையாகக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. `தறிப்பட்டம்`, `தறி இறை` மற்றும் கிபி 10ம் நூற்றாண்டில் `தறி தரகு` என்னும் வரி சோழர்களின் ஆட்சிக்காலத்தில் நெசவாளர்களுக்கு விதிக்கப்பட்டது என்ற செய்தியையும், தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளில் `தறிப் புடவை` `தறி ஆக்கம்` என்ற இரண்டு வகை வரிகள் விதிக்கப்பட்டன என்ற செய்தியும் செங்கல்பட்டு, வட ஆற்காடு ஆகிய பகுதிகளில் `தறிப் புடவை` என்னும் வரி கி பி 11ம் நூற்றாண்டில் வசூலிக்கப்பட்டதையும் கல்வெட்டுச் செய்திகளின் வழி அறியமுடிகிறது. இவை மட்டுமன்றி `அச்ச தறி` எனக் குறிப்பிடப்படும் ஒரு வகை வரியும் `பறை தறி` அதாவது நெசவுத் தொழில் செய்யும் பறையர்கள் கட்ட வேண்டிய வரி, 'சாலிகைத் தறி` என்ற சாலிய நெசவாளர்களுக்கான ஒரு வகை வரி, `பஞ்சு பீலி` அதாவது பங்கு வணிகத்தில் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வரி என பல்வேறு வகைப்பட்ட வரி நெசவாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த செய்திகளைக் கல்வெட்டுச் சான்றுகள் விளக்குவதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இப்பகுதிக்கு நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள ஆய்வு நூல்களில் மிக முக்கியமாகத் தென்னிந்தியக் கல்வெட்டியல் ஆய்வு நூல்கள் பல இடம்பெறுகின்றன.

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பருத்தி துணிகள் சோழர்கள் காலத்திலேயே கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா தீவுக்கூட்டங்கள், தாய்லாந்து, இன்றைய மியன்மார் ஆகிய பகுதிகளுக்கு வணிகம் செய்யப்பட்டன என்ற செய்திகளும் கிடைக்கின்றன. சீனாவுடனான மிக நீண்ட கால வணிகத் தொடர்பு சிறப்புக் கவனம் கொள்ளப்பட வேண்டியது. சீனாவில் `சாம்` அரசர்களின் ஆட்சியின் போது அதாவது கிபி 960 இருந்து 1278 காலகட்டத்தில் பல்வேறு வகை துணிகள், வண்ணம் பூசப்பட்ட ஜமக்காளங்கள், வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பட்டு கைக்குட்டைகள் போன்றவை தமிழக கடற்கரை வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட செய்திகளையும், சீனாவிற்கெனவே சிறப்பாக மனித உருவம், குதிரை உருவம், யானை உருவம் போன்ற விலங்குகள் உருவம் வரையப்பட்ட கைக்குட்டைகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டன என்ற செய்தியையும் நூலில் காண முடிகிறது. கிபி 12-13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் பாண்டியர் கால கல்வெட்டுகள் நெசவுத் தொழிலில் ஆளுமை நிறைந்த கைக்கோளர், சாலியர், நெசவாளர்களின் சாதிகளாகக் குறிப்பிடுகின்றன.
தமிழகச் சூழலில் கைக்கோளர், சாலியர், தேவாங்கர் ஆகிய மூன்று வகைப்பட்ட சமூகங்கள் பெருவாரியாக நெசவுத் தொழில் செய்யும் சமூகங்களாக அறியப்படுகின்றன. செட்டியார்கள், முதலியார், பிள்ளை, மரக்காயர் ஆகிய சமூகத்தார் துணி வணிகம் செய்யும் தொழிலை முன்னெடுத்தவர்களாக அமைகின்றனர். நூலாசிரியர் செட்டியார் சமூகத்தில் பல்வேறு வகை செட்டியார்களைக் குறிப்பிட்டு இடங்கை வலங்கை வேறுபாடுகளையும் அவர்களது வணிக முயற்சிகளையும் நூலின் பல பகுதிகளில் விளக்கிச் செல்கின்றார். அதேபோல முதலியார் சமூகத்தவர்கள் துணி வணிகத்தில் பொருளாதார பலத்துடன் கோலோச்சிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளை விரிவாக வழங்கி இருக்கின்றார். விவசாயத்தில் கவனம் செலுத்திய பிள்ளை சமூகத்தார் துணி வணிகத்திலும் ஈடுபட்டு மலாயா இந்தோனேசியா தீவுக் கூட்டங்களில் பெரும் வணிகம் நடத்திய செய்திகளையும் கீழக்கரை, காயல்பட்டினம், நாகூர், பரங்கிப்பேட்டை போன்ற பகுதிகளில் குடியேறிய மரக்காயர்கள் கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய வகையில் வணிக முயற்சிகளில் வெற்றி கண்ட வரலாற்றுச் செய்தியையும் அறியமுடிகிறது.

தமிழகச் சோழமண்டல கடற்கரையில் பொருளாதார பலம் பொருந்திய ஒரு வடிவமாக நெசவுத்தொழில் அமைந்திருப்பதை அறிந்துகொண்ட ஐரோப்பிய வணிகர்கள் சோழமண்டல கடற்கரை பகுதியை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சி மிகப் பெரிது. போர்த்துக்கீசியர்கள் வசமிருந்த வணிக செயற்பாடுகளைப் பலமிழக்கச் செய்து டச்சுக்காரர்கள் மிகத் துரிதமாக கி பி 16ம் நூற்றாண்டில் தங்கள் ஆளுமையை விரிவாக்கினர். மலாயாவின் மலாக்கா பகுதியைப் போர்த்துக்கீசியர் வசம் இருந்து கைப்பற்றி பிறகு இந்தோனேசியாவையும் கைப்பற்றி காலனித்துவ ஆட்சியையும் செயல்படுத்தினர்.

கிபி 1511 ஆம் ஆண்டு மலாயா சுல்தான்களிடம் இருந்த மலாக்காவை போர்த்துக்கீசியர் கைப்பற்றினர். ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1641 ஆம் ஆண்டு மலாக்கா டச்சுகாரர்கள் வசம் விழுந்தது. இக்காலகட்டத்தில் தமிழகத்தின் சோழமண்டல கடற்கரை பகுதிகளில் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்து அப்பகுதியில் தங்கள் ஆளுமையை நிலைநாட்ட பெரும் முயற்சி எடுத்தது டச்சு கிழக்கிந்திய கம்பெனி. தங்களிடம் 'கர்தாஸ்' என்ற சான்றிதழைப் பெற்ற வணிக நிறுவனங்கள் மட்டுமே வணிகம் செய்ய முடியும் என்ற அளவிற்குத் தமிழக சோழமண்டல கடற்கரையில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயல்பட்டது. இந்தக் 'கர்தாஸ்' என்ற சொல் இன்று மலாய் மொழியில் `கெர்த்தாஸ்` அதாவது `தாள்` என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகப் பயன்பாட்டில் உள்வாங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இப்படி போர்த்துக்கீசிய, டச்சு ஆதிக்கத்தில் பல ஐரோப்பிய சொற்கள் மலாய் மொழியில் புழக்கத்தில் உள்வாங்கப்பட்ட வரலாறு தனி ஆய்வுக்கு நம்மை கொண்டு செல்லும்.

ஐரோப்பிய வணிக நிறுவனங்கள், குறிப்பாக டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரெஞ்சு அரசு ஏற்படுத்திய கட்டுப்பாடுகளைச் சமாளித்து தமிழ் வணிகர்கள் கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் வணிகம் நடத்திய காலகட்டமாக கிபி 16, 17, 18 ஆகிய காலகட்டங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மிக நீண்டகாலமாக மிகத் தரம் வாய்ந்த கப்பல்களைக் கட்டக்கூடிய திறமை பெற்றவர்கள் தமிழர்கள். காற்றின் திசை அறிந்து கப்பலைச் செலுத்தக்கூடிய தொழில் திறன் தமிழ் வணிகர்களுக்குத் தொடர்ந்து இருந்தது. மிகத் தொடர்ச்சியாக வணிகக் கப்பல்களைக் கட்டி பெருமளவில் வணிக முயற்சிகளை நூற்றாண்டுகளாகச் செய்து வந்த அனுபவம் தமிழர்களுக்கு உண்டு. அதற்கு சான்றளிக்கும் வகையில் நூலாசிரியர் வழங்கியிருக்கும் தரவுகள் நமக்கு அமைகின்றன.

துணி வணிகத்தில் ஈடுபட்ட பல முக்கியஸ்தர்கள் பற்றிய செய்திகள் நூலில் நமக்குக் கிடைக்கின்றன. பாண்டிச்சேரியிலிருந்து வலங்கைப் பிரிவைச் சேர்ந்த முதலியார் வணிகர்கள் 'சங்கரபாணி` என்ற பெயர் கொண்ட ஒரு வணிகக் கப்பலை 1739ம் ஆண்டு வாக்கில் சொந்தமாக வைத்திருந்தனர். மயிலாப்பூர் பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை பொருட்களை ஏற்றிச் சென்றது இந்த கப்பல். இந்தக் கப்பலின் தலைமை மாலுமியாகப் பிரகாசம் என்பவர் இருந்தார் என்றும் இந்தக் கப்பலிலேயே தங்கி வணிகம் மேற்கொண்ட வணிகராக ஜெநிவாச முதலியார் இருந்தார் என்றும் இதேபோல சார்லஸ் என்ற பெயர் கொண்ட கப்பலுக்குத் தலைமை மாலுமியாக குமரப்பிள்ளை இருந்தார் போன்ற செய்திகளையும் நூலின் வழி அறிய முடிகின்றது.


தனித்தனி தீவுகளாக நெசவாளர்கள் வணிகம் செய்வதற்குப் பதிலாக வணிகர்கள் கூட்டமைப்பை உருவாக்கி வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரெஞ்சு அரசும், டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் தமிழகத் துணி வணிகர்களுக்கு அழுத்தம் கொடுத்தன. அதனடிப்படையில் பழவேற்காடு, பாண்டிச்சேரி காரைக்கால், பரங்கிப்பேட்டை, நாகூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் துணி வணிகர்கள் கூட்டுச் சரக்கு நிறுவனங்கள் பல உருவாக்கம் கண்டன. இத்தகைய வணிக அமைப்புகளில் செட்டியார், முதலியார், நாயக்கர், வேளாளர்கள் (பிள்ளை),  மரக்காயர் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

கைக்கோள முதலியார் தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்து மலாயாவின் மலாக்கா பகுதியில் துணி வணிகம் செய்யத் தொடங்கினர். இவர்களில் பலர் மலாக்காவில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டனர். உள்ளூர் மலாய் பெண்களை மணந்து மலாக்கா செட்டிகள் என்ற புது இனம் ஒன்று இன்று மலேசியாவில் இருப்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வு காரணமாக அமைகிறது. 1835 ஆம் ஆண்டு சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் புதிய நெசவு மையம் ஒன்றை சின்னத்தம்பி முதலியார் என்ற பெயர் கொண்ட நெசவாளர் ஒருவர் தொடங்கினார். ஆண்டியப்ப முதலியார் என்பவர் டச்சுக்காரர்களுக்குப் பரங்கிப்பேட்டையிலிருந்து துணிகளைப் பெற்றுத் தந்தார் என்ற செய்தியையும் அறிய முடிகிறது. கனகராய முதலியார் என்பவர் மிகப் பெரிய வணிகராக இக்காலகட்டத்தில் திகழ்ந்தார் என்பது நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்கள் வழி அறிய முடிகிறது. இப்படித் துணி வணிகம் மேற்கொண்டிருந்த கனகராய முதலியாரும், பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களும் 1768 ஆம் ஆண்டு அளவில் பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள பல ஊர்களில் உள்ள பல நிலங்களுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள் என்ற செய்தியும் அறியமுடிகிறது. துணி வணிகம் மிகப்பெரிய பொருளாதார மேம்பாட்டை இவ்வணிகர்களுக்கு அமைத்துக் கொடுத்தது.
இடையர் பிரிவைச் சேர்ந்த நைனியப்ப பிள்ளை சென்னைக்கு அருகில் உள்ள பெரம்பூரில் இருந்தவர். இவர் பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்து அங்கு துணி வணிகத்தை மிகச்சிறப்பாக மேற்கொண்டிருந்தார். ஆனால் பிரெஞ்சு ஆளுநரான ஹெர்பாருடன் ஏற்பட்ட பிணக்கு அவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய செல்வந்தராகத் திகழ்ந்த நைனியப்ப பிள்ளையைப் பொய் குற்றம்சாட்டி சிறைக்கு அனுப்பி 1717 ஆம் ஆண்டு சிறையிலேயே அவர் இறந்து போன துயரச் சம்பவமும் நிகழ்ந்தது. இந்த வழக்கை மேல்முறையீடு செய்து பிரெஞ்சு அரசாங்கம் செய்த ஆய்வில் அவர் மீது குற்றமில்லை என்பது உறுதியாகி அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவரது வாரிசுகளுக்கு 1719 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்ற இந்தச் செய்தியையும் நூலில் அறிய முடிகிறது.

நூலில் ஆசிரியர் மிக விரிவாக வழங்கியிருக்கும் முக்கியமான ஒரு தகவலாக ஆனந்தரங்கம் பிள்ளையின் துணிவணிக முயற்சிகளைக் கூறலாம். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு இன்று நமக்குப் பிரெஞ்சு இந்தியாவின் மிக முக்கியமான தகவல்களை அளிக்கின்ற  ஆவணமாகத் திகழ்கின்றது. ஒரு துபாஷியாக, வணிகராக மட்டுமன்றி ஆற்காட்டில் நெசவு மையத்தைத் தொடங்கித் துணி வணிகத்தை மிக விரிவாக செய்தவர்களில் முக்கியமானவர் ஆனந்தரங்கம் பிள்ளை. பாண்டிச்சேரியில் நாணய சாலைக்குத் (அக்கசாலை) தேவையான வெள்ளியை அளிக்கும் இருவரில் ஒருவராகவும் இவர் திகழ்ந்தார் என்பதை அறியும் போது அவரிடமிருந்த சொத்து மதிப்பை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது. தமிழக வணிகர்களுக்கு மட்டுமன்றி டச்சுக்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பெரிய பொருள் படைத்த மனிதராக ஆனந்தரங்கப்பிள்ளை திகழ்ந்தார். தனது இரண்டு மகன்களான அய்யாசாமி மற்றும் அண்ணாசாமி பிள்ளை இருவரும் இறந்து போனதால்  தந்தையை இழந்த தனது தம்பி மகனான ரங்கப் பிள்ளை என்பவரை தன் மகனாக வளர்த்தார். அவரும் ஆனந்தரங்கம் பிள்ளை போலவே மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். வணிகர் என்ற நிலைக்கும் மேல் நிலக்கிழார் ஆகவும் வரி வசூலிப்பவர் ஆகவும் ஆனந்தரங்கம் பிள்ளை இருந்தார். பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட போரின்போது ஆங்கிலேயர்கள் பழம் தரும் மரங்களை வெட்டி சாய்த்தும் அவர்களிடமிருந்த வீடுகளை எரித்து கதவு நிலைகளைப் பெயர்த்தும் பெரிய சேதத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி சேதப்பட்ட வீடுகளைச்   சரி செய்து கொடுத்து பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவினார் என்ற செய்திகளையும் அவரது நாட்குறிப்பு ஆவணங்கள் கூறுகின்றன.

பரங்கிப்பேட்டையில் மரக்காயர்களின் துணி வணிகம் பற்றி இந்த நூல் பல தகவல்களைத் தருகின்றது. அரேபியாவிலிருந்து தமிழகப் பகுதிகளில் குடியேறி உள்ளூர் மக்களை மணந்து பெருகிய இஸ்லாமிய வணிகர்கள் தான் இந்த மரக்காயர்கள் எனப்படுபவர்கள். இவர்கள் கப்பல்களுக்கு உரிமையாளர்களாகவும் தென்கிழக்காசிய நாடுகளில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்பவர்களாகும் விளங்கினார்கள் என்பதையும் இவர்களில் பெரும்பாலோர் பழவேற்காடு, கூனிமேடு, நாகூர், கீழக்கரை, காயல்பட்டினம், காயல் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது. போர்த்துகீசியர்களுக்கும் மரக்காயர்களுக்கும் தொடர்ந்து வணிக பூசல்கள் இருந்துவந்தன. அந்த வகையில் ஒரு சர்ச்சையின் போது கோபமுற்ற போர்த்துக்கீசியர்கள் மரக்காயர்கள் கப்பல்களை 1625 ஆம் ஆண்டு கொளுத்தினர் என்ற செய்தியையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். தேவனாம்பட்டணத்தில் வசித்த மரக்காயர்கள், டச்சுக்காரர்களுடன் வணிக உறவினை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் வணிக முயற்சிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்கள். பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்தோனேசியாவின் ஆச்சே, சுமத்ரா,  மலாயா  ஆகிய பகுதிகளுக்குக் கப்பலில் சென்று அவர்கள் வணிகம் நடத்தினார்கள். அவர்கள் பன்மொழி திறனாளர்களாகவும் இருந்தார்கள். தமிழகத்திலிருந்து துணிகளை ஏற்றிக்கொண்டு சென்று இந்தோனேசியாவிலிருந்து தகரத்தை அவர்கள் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். மலாக்கா, இந்தோனேசியா நாடுகளின் சிற்றரசுகளின் மன்னர்களோடு நேரடி தொடர்பு வைத்திருந்தனர். அவர்களுடன் துணி வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர் என்ற செய்திகளும் கிடைக்கின்றன.


தமிழகக் கடற்கரை நகரமான பரங்கிப்பேட்டை  மரக்காயர்களின் மிக முக்கிய குடியிருப்பாக இருந்தமையும், கிழக்காசியா முழுமையும் மரக்காயரின் வணிகக் கப்பல்கள் துணி வணிகத்திற்காகச் சென்ற செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. 1663 ஆம் ஆண்டு இந்தோனேசியா பாந்தாமில் துணி தட்டுப்பாடு ஏற்பட்டபோது அப்பகுதியின் சுல்தான் தாமாகவே தமிழகத்துக்கு வணிகம் மேற்கொள்ள முனைந்த செய்தியும், அதற்காகப் பிரத்தியேக கப்பல்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்குத் துணி வணிகம் பெறுவதற்காக அனுப்பிவைத்த செய்திகளையும் அறிய முடிகிறது. 1667 ஆம் ஆண்டு சுல்தான் தனது சொந்தக் கப்பலைத் தமிழக துணிகளை வாங்குவதற்காகத் தயார் செய்ததையும்,   அது தொடர்ச்சியாக பரங்கிப்பேட்டைக்கு நேரடியாக வந்து துணி வணிகர்களிடம் துணிகளைப் பெற்றுச் சென்றதாகவும் அறியமுடிகிறது.  1682 ஆம் ஆண்டு பாந்தம்  பகுதியை டச்சுக்காரர்கள் கைப்பற்றியதால் இந்த முயற்சி தடைப்பட்டு மரக்காயர்கள் இந்தோனேசியாவின் ஆச்சே  துறைமுகத்துக்கு தங்கள் வணிகத்தை மாற்றிக் கொண்டனர். 

பரங்கிப்பேட்டை துணி வணிகர்களுக்கு மிக முக்கியமானதொரு துறைமுகமாக இருந்தது என்பது ஒருபுறமிருக்கக் கப்பல் கட்டும் தொழில் இங்கு மிகப் பெரிதாக இயங்கி வந்தமையும் கப்பல் பழுது பார்க்கும் தளமாகவும் இது விளங்கிய செய்திகளையும் அறிய முடிகிறது. கப்பல்களைச் செப்பனிடும் பணிக்கு மிகச் சிறந்த தொழில் வல்லுனர்கள் பழவேற்காட்டிலிருந்திருக்கின்றனர். இந்தியக் கடற்கரை பகுதிகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து பரங்கிப்பேட்டை கப்பல்களைச் செப்பனிட வந்திருக்கின்றார்கள் என்ற செய்திகளையும் அறிகின்றோம். இடைப்பட்ட காலத்தில், அதாவது 1696 ஆம் ஆண்டுக் குத்தகை ஆவணம் ஒன்று பரங்கிப்பேட்டைக்கு 'முகமது பந்தர்' என்ற பெயர் இருந்ததைக் குறிப்பிடுகிறது. முகலாய மன்னர்கள் மராட்டிய மன்னர்களுடன் போரிட்டு வெற்றி கண்டதால் அவர்கள் ஆட்சிக்குக் கீழ் இப்பகுதி வந்தமையால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். 1792 ஆம் ஆண்டு டச்சு ஆவணம் ஒன்றின் குறிப்பைக் காணும்போது மிக நீண்டகாலமாக பரங்கிப்பேட்டை சோழமண்டலக் கடற்கரையில் முக்கிய துறைமுகமாக விளங்கிய செய்தி அறியமுடிகிறது. 1857ஆம் ஆண்டு சோழமண்டல கடற்கரை டச்சு ஆளுநரின் அறிக்கையின் படி அவர்களின் வணிகம் மணிலா (பிலிப்பைன்ஸ்), மலாக்கா (மலேசியா),  ஆச்சே (இந்தோனீசியா), பர்மா,  சுலாவேசி ஆகிய பகுதிகளுக்கு விரிவடைந்து இருந்த செய்தியும், ஒரு ஆண்டுக்கு 200,000 பகோடாக்களுக்கு மேல் வணிகம் நடந்ததாகவும் அறிய முடிகிறது. பரங்கிப்பேட்டையில் உற்பத்தி செய்யப்பட்ட நீலவண்ண துணிகளுக்குப் பல இடங்களில் மிகுந்த வரவேற்பு இருந்தது. பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சீதக்காதி மரக்காயர் பிரெஞ்சுக்காரர்களிடம் வணிக உரிமம் பெற்று இந்தோனேசியாவின் ஆச்சே துறைமுகத்தில் வணிகம் மேற்கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை தவிர்த்து மரக்காயர்கள் பெரும்பாலும் நாகூரில் குடியிருக்க விரும்பினர். இதற்கு முக்கிய காரணம் அக்காலகட்டத்தில் நாகப்பட்டினத்தில் அதிகமாக டச்சுக்காரர்கள் இருந்தது தான் என்றும் அறிய முடிகிறது. துணி வணிகத்தை அடுத்து நாகூர் கப்பல் கட்டும் துறைமுகமாகவும் விளங்கியது.

மரக்காயர்கள் தமிழ் பெண்களை மணந்து அவர்களின் சந்ததியினர் ஜாவா, சுமத்திரா, அம்போனியா ஆகிய பகுதிகளுக்குக் குடியேறிய செய்திகளையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். உதாரணமாக அப்துல் காதர் என்ற பெயர் கொண்ட ஏமனைச் சேர்ந்த இஸ்லாமியர் நாகூரில் குடியேறி அங்கு வசித்த தமிழ் பெண்ணை மணந்து கொண்டு பின்னர் 1747 ஆம் ஆண்டு மலேசியாவின் மலாக்காவிற்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தார் என்றும் அவருடைய நான்காவது மகன் மலாக்காவில் செட்டியார் வணிகரின் மகளான பெரிய ஆச்சியை மணம் செய்து கொண்டார் என்றும், அவருடைய மகன் அப்துல் காதிர் பின் முகமது இப்ராஹிம் என்ற பெயருடன் மலாக்கா துறைமுகத்தின் தலைவராக விளங்கினார் என்ற செய்தியையும் ஆவணங்களின் வழி காணமுடிகிறது. இப்படித் தமிழ் வணிகர்களுக்கும், மரக்காயர்களுக்கும் இடையே திருமண ஒப்பந்தங்கள் நிகழ்ந்த செய்திகள் வெளிப்படுகின்றன.  பல துணி வணிகர்கள் 1788ஆம் ஆண்டு பினாங்குக்கு (மலேசியா)  வணிகக் கப்பல்களைக் கொண்டு சென்று வணிகம் நடத்திய செய்தியும், பிறகு   ஆங்கிலேய அலுவலர்களின் அழைப்பின் பேரில் பினாங்கிலேயே தங்கி விட்டதாகவும் முதலில் ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள் நிரந்தரமாகத் தங்கி பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய இரண்டாயிரம் மரக்காயர்கள் நாகூரிலிருந்து பினாங்கு சென்றனர் என்றும் அறிகிறோம்.

இந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வழி தாத்தா நாகப்பட்டினத்திலிருந்து பினாங்கு பயணம் செய்தார் என்ற செய்தியை எனது தந்தையார் கூற நான் அறிந்திருக்கிறேன். இப்படி வணிகத்திற்காகச் சென்ற எனது தந்தை வழி குடும்பத்தார் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பினாங்கிலும் அதன்பின்னர் கெடா மாநிலத்தில் சுங்கைப் பட்டாணி பகுதியிலும் எனப் பரவி வணிகம் செய்த செய்திகள் இதனை வாசிக்கும் போது என் நினைவுக்கு வருகின்றன.

தமிழக வணிகர்கள் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த வணிக அறத்துடன் நடந்து கொண்டார்கள் என்ற செய்தியும், குறிப்பாகச் சென்னையிலிருந்த ஆங்கிலேயக் குடியிருப்பில் துணி வணிகர்கள் சீருடை அணிந்து வணிகம் செய்த செய்தி, இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் கொள்முதல் வணிகம் சுமுகமாக நடந்த செய்திகள் மட்டுமன்றி ஏதாவது ஏமாற்றங்கள் நடைபெற்றால் அதற்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்பட்ட செய்தி, உதாரணமாக ஏமாற்றுத்தனம் செய்த ஆண்ட செட்டி என்பவரைத் தூணில் கட்டி இருபது கசையடி தரவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட செய்திகள் என ஆவணங்கள் வெளிப்படுத்துவதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

கடல் வணிகம் என்பது தமிழர்களுக்குப் புதிய ஒன்றல்ல. மிக மிக நீண்ட காலமாகக் கடலை தன்வயப்படுத்தி   பயணங்களைத்  திறமையுடன் செயல்படுத்திய தமிழர்கள் வணிகத்தில் மிக முக்கிய பங்காற்றி இருக்கின்றார்கள். ஆனால் இது பற்றிய செய்திகள் விரிவாகப் பேசப்படுவதில்லை என்பது நம்மிடையே இருக்கும் ஒரு குறை.  அந்த நிலையைப் போக்கும் வகையில் முனைவர். ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் எழுத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூல் தமிழ் வரலாற்றுக்கு மட்டுமன்றி தமிழ் வணிகம் தொடர்பான மிக முக்கிய நூலாக அமைகின்றது.  

இந்த நூல் தமிழக பல்கலைக்கழகங்களிலும் தமிழக கல்லூரிகளிலும், தமிழ்த்துறை, சமூகவியல் துறை, வரலாற்றுத் துறை, வணிகவியல் ஆகிய துறைகளில் பாடமாக வைக்கப்பட வேண்டும். இந்த நூலில் கையாளப்பட்டுள்ள ஆய்வுத் தரம் இந்த நூலை வாசிக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் பொது வாசிப்பாளர்களுக்கும் ஆய்வுகளை முன்னெடுக்க நல்ல அனுபவமாக அமையும்!


நூல்:  நெசவாளர்களும் துணி வணிகர்களும்
ஆசிரியர்:  எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ210/-

No comments:

Post a Comment