Monday, January 18, 2021

தலையங்கம்: உழவுக்கும் கைத்தொழிலுக்கும் வந்தனை செய்வோம்வணக்கம்.

மின்தமிழ் மேடை காலாண்டிதழின் வழி  உலகத் தமிழர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.   பொதுமக்களிடையே ஆய்வுத்தரம்  நிறைந்த  வரலாற்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பதை தமிழ் மரபு அறக்கட்டளையின் தலையாய பணியாக இவ்வமைப்பு தொடங்கிய காலம் முதல் செயல்படுத்தி வருகின்றோம். தமிழகச் சூழலில், மிக நீண்ட காலமாக தொல்லியல் அகழாய்வுப் பணிகளிலும், வரலாற்று ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்ற அறிஞர்களின் உரைகளைப் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்து வழங்குவதன் வழி தமிழக வரலாறு தொடர்பான  ஆய்வுப்பூர்வமான தரவுகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்க முடியும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை நம்புகின்றது. 

வரலாற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு சமூக நலனை முன்னிறுத்தும் செயல்பாடுகளின் தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ’வையத்தலைமை கொள்’ பிரிவு மாற்றுப்பாலினம் மற்றும் மாற்றுப்பாலீர்ப்பு கொண்டோர் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று நாள் இணையவழி கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது. கலையும் வரலாறும், கலாச்சாரமும் மானிடவியலும், சமூகச் சிக்கல்களும் சாதனைகளும் என்ற மூன்று பொருண்மைகளில் இந்தியா-இலங்கை ஐரோப்பா எனப் பல பகுதிகளிலிருந்து சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்ட சிறப்பான ஒரு நிகழ்வாக இது அமைந்தது. மாற்றுப்பாலினத்தவர் சந்திக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகளை அலசியதோடு அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்னெடுக்கும் வகையிலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த ஒரு ஆரம்பத்தளமாக இந்த மூன்று நாள் நிகழ்வு நடந்தேறியது. இதன் தொடர்ச்சியாக, ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுப்பாலினத்தோருக்கான அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் சீரிய பணியையும் ’வையத்தலைமை கொள்’ பிரிவு ஏற்று செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

நவம்பர் மாதத்தில்  ’வடலூர் வரலாறு - கற்காலம் முதல் தற்காலம் வரை’ என்ற தலைப்பு கொண்ட ஆய்வு நூல் அதன் நூலாசிரியர் முனைவர்.ஜே ஆர் சிவராமகிருஷ்ணன் அவர்களது மிக நீண்டகால ஆய்வுப் பணியின் பலனாக வெளிவந்துள்ளது. இணைய வழி  நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.   இந்நூலை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கி வாசிக்கலாம்.

தமிழகம் பல சமயங்களும் தத்துவங்களும் தோன்றி வளர்ந்த ஒரு நிலப்பகுதி. சமணம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்தமைக்குப் பல சான்றுகளை இன்று கல்வெட்டுகளாகவும் சிற்பங்களாகவும் காண்கின்றோம். தமிழகத்தின்  நடுநாட்டில் சமண தடையங்கள் ஏராளம்  உள்ளன. இவற்றை ஆராய்ந்து அவை பற்றிய பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மூன்று நாள் தொடர் வரலாற்று ஆய்வுரைகள் இதே காலாண்டில் நிகழ்த்தப்பட்டன.  

செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட சங்கம்பீடியா வலைப்பக்கத்தின் வளர்ச்சி பற்றிய அறிவிப்பினை மைய நோக்கமாகக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கச்சோலை வலைப்பக்கத்தை உருவாக்கிய முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களது சிறப்புரை இந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சிப் பிரிவின் ஏற்பாட்டில்  இளம் தொல்லுயிராளர் செல்வி அஸ்வதா பிஜுவின் `தொல்லுயிரியல் ஓர் அறிமுகம்` என்ற  உரையும்  இயற்கை சார்ந்த பாரம்பரிய கலைப் படைப்புகளை உருவாக்கும் முயற்சியை அறிமுகப்படுத்தும் வகையில் நுண்கலை ஆசிரியர் உமாபதி அவர்களது இணைய  வழி கைவினைக் கண்காட்சியும்  இக்காலாண்டில் இளையோருக்கான சிறப்பு அம்சமாக அமைந்தது. 

பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது திடீர் மறைவு உலகத் தமிழ் ஆய்வாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக இந்த டிசம்பர் மாதத்தில் அமைந்தது. 2015ஆம் ஆண்டு பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை `சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்` என்ற சிறப்பு செய்து கௌரவித்தோம் என்பது நினைவு கூறத்தக்கது.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.   (குறள் - 1032)  

உழவைப் போற்றுவது தமிழ்ப்பண்பாடு.  உழவர் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் உலகத் தமிழர் அனைவருக்கும்  பொங்கல் வாழ்த்துகளையும் தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி    

No comments:

Post a Comment