Friday, July 31, 2020

கணிதமும் தமிழும்

கணிதமும் தமிழும்

முனைவர்.ப.பாண்டியராஜா


கணிதமும் தமிழும் - பகுதி 1:
இவை இரண்டும் இரு துருவங்கள் என்று நினைப்போர் உண்டு. தமிழ் வழியாகக் கணிதத்தைப் படிக்கவேண்டுமென்றால், கணிதப் புத்தகங்களை நிறைய தமிழில் எழுதவேண்டும். ஆனால் கணிதம் வழியாகத் தமிழைப் புரிந்துகொள்ளமுடியுமா? கம்பனின் சொல்திறனைப் பற்றி இலக்கியவாதிகள் நிறையப் பேசுவார்கள். அது அவரவர் திறமையைப் பற்றியது. திறமையுள்ளவர்கள் பேசினால் கம்பர் மிகப் பெரிய ஆளாகத் தோன்றுவார். எனவே அது subjective. பேசுகிற ஆளைப் பொருத்தது. ஆனால் கம்பரின் திறமையைக் கணிதம்வழியாக ஆயமுடியுமா? முடியும். கீழே வருவதைச் சற்றுக் கவனமாகப் படியுங்கள். 
கணிதம் என்றாலே சிலருக்கு அச்சம் ஏற்படலாம். ஆனால் இதற்கு அந்த அச்சம் தேவையில்லை.  முதலில் ஒரு முன்னுரை.

ஒரு குழந்தை பிறக்கிறது. அப்போது அதன் உயரத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். நாளாக ஆகக் குழந்தை வளரத்தொடங்கும்போது அதன் உயரம் மிக அதிக வேகமாக அதிகரிக்கும். ஒரு வருடத்துக்கு ஒருமுறை குழந்தையின் உயரத்தை அளந்தால் அது கூடிக்கொண்டே போவதை அறியலாம். ஆனால், நாளாக ஆக இவ்வாறு கூடும் வேகம் குறைந்துகொண்டே போகும். என்ன குழப்பமாக இருக்கிறதா? ஒன்றுமில்லை. முதலில் 1 அடியிலிருந்து 2 அடி ஆகிறது. இப்போது வளர்த்தி 1 அடி. அப்புறம் 2 அடியிலிருந்து 2 3/4 அடி ஆகிறது. இப்போது வளர்த்தி 3/4 அடி. இவ்வாறு வளர்ந்துகொண்டே வரும்குழந்தை ஒரு நிலையில் வளர்த்தி நின்றுவிடுகிறது. அப்புறம் இருக்கிற வளர்த்திதான். கூடுவதில்லை.

இப்பொழுது ஒரு மேடைப்பேச்சாளர் பேசுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். முதல் அரை மணிநேரத்தில் அவர் 500 சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். அவற்றில் பல இரண்டு முறை, மூன்று முறை என்று திரும்பத்திரும்ப வந்திருக்கும். இவ்வாறு திரும்ப வருவதைக் கணக்கில் கொள்ளாமல் அவர் பேசிய தனிச் சொற்களை மட்டும் எண்ணுங்கள்.  ஓர் எடுத்துக்காட்டு பாருங்கள்.
”நான் காபி குடித்தேன். அப்புறம் நான் டீ குடித்தேன்.”
இப்பொழுது இதில் இரண்டு வாக்கியங்கள் இருக்கின்றன. மொத்தம் 7 சொற்கள். இதில் ’நான் ’ என்பதும் ’குடித்தேன்’ என்பதும் இரண்டு முறை வருகின்றன. இவற்றில் ஒன்றை எடுத்துவிட்டால் மொத்தம் தனிச் சொற்கள் 5. 
இவ்வாறாக, ஒருவர் பேச்சில் மொத்தம் எத்தனை சொற்கள் அவற்றில் தனிச்சொற்கள் எத்தனை என்று எண்ணவேண்டும். 
பேச்சாளர் முதல் அரைமணி பேசியதில் 500 சொற்கள் அவற்றில் 300 தனிச் சொற்கள் என்று வையுங்கள். அடுத்த அரைமணியில் அடுத்த 500 சொற்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இந்த 1000 சொற்களில் எத்தனை தனிச் சொற்கள் இருக்கும். இன்னொரு 300 இருக்குமா? இருக்காது. முதல் 300 -இல் உள்ள தனிச் சொற்களில் சில இங்கு இரண்டாம் முறை வந்திருக்கும். எனவே மொத்தத் தனிச்சொற்கள் 450 இருக்கலாம்.

இவ்வாறாக அவர் பேசிக்கொண்டே இருந்தால் புதுப்புதுச் சொற்கள் வந்துகொண்டேவா இருக்கும்? ஒரு நிலைக்குப் பிறகு அவர் இவ்வளவு நேரம் சொன்ன சொற்களையே திரும்பத்திரும்பச் சொல்லுவார். கருத்துக்கள் புதிதாக இருக்கலாம். ஆனால் சொற்கள் அவ்வளவுதான். குழந்தையின் வளர்ச்சி மாதிரி.
இப்போது இதற்கும் கம்பனுக்கும் என்ன சம்பந்தம்? ஒருசிலர் யூகித்திருப்பீர்கள்.
அடுத்த பகுதியில்  அதனை விளக்குகிறேன்.

கணிதமும் தமிழும் - பகுதி 2:
நான் ஏற்கனவே சொன்ன குழந்தையின் வளர்ச்சி அல்லது ஒரு மேடைப் பேச்சாளரின் பேச்சு ஆகியவற்றை நினைவில் கொள்ளுங்கள். இவற்றைப்  போன்றதுதான் ஒரு படைப்பாளியின் படைப்பும். ஒரு புலவர் தொடர்ந்து பாடல்கள் இயற்றிக்கொண்டே வருகிறார் என்றால், அவர் நிறையச் சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார். அவற்றில் பல திரும்பத்திரும்ப வருவன. அவற்றை விட்டு அவர் பயன்படுத்திய தனிச் சொற்களின் எண்ணிக்கையை அவரது சொல்திறம் (Vocabulary) எனலாம். இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அவர் மிக சொல்வளம் மிக்க புலவர் எனலாம். இதைக் கணக்கிடும் முறை இதுதான்.

முதலில் அவர் மொத்தம் எத்தனை சொற்களை அந்த நூல் முழுக்கப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்க்கவேண்டும். எளிமைக்காக, அவர் 1000 சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்போம். இப்போது இதனை 10 பிரிவுகளாகப் பிரிக்கிறோம். ஒவ்வொரு பிரிவிலும் 100 சொற்கள் இருக்கும். இப்போது முதல் 100 சொற்களில் எத்தனை தனிச் சொற்கள் இருக்கின்றன என்று கணக்கிடவேண்டும். ஒரு முறைக்கு மேல் வரும் சொற்களைத் தவிர்த்துவிட வேண்டும். அவர் சுமார் 60 தனிச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதாவது 40 சொற்களை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருக்கிறார். இப்போது அடுத்த 100 சொற்களை எடுத்துக்கொள்வோம். இந்த முதல் 100+100 = 200 சொற்களில் 60 + 60 =120 தனிச்சொற்கள் கிடைக்காது. ஏனென்றால் முதலில் இருக்கும் 60 தனிச்சொற்களில் சில இப்போது இரண்டாம், மூன்றாம் முறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதுதான் நடைமுறை. எனவே இப்போது 110 தனிச்சொற்கள் இருக்கலாம். இனி அடுத்த 100 சொற்களை எடுத்து இந்த 200+100 = 300 சொற்களிலுள்ள புதுச் சொற்களை எண்ண வேண்டும். இது சுமார் 135 இருக்கலாம். இவ்வாறாகச் சென்றுகொண்டே இருந்தால் அவர் 800 சொற்களை அடையும்போது 250 புதுச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று கொள்வோம். குழந்தையின் வளர்ச்சி ஒரு வயதுக்குப்பின் அதே அளவில் நின்றுவிடுகிறமாதிரி, இனிப் புதுச்சொற்கள் வரமாட்டா, வந்தாலும் மிகச் சொற்பமாகவே இருக்கும். ஆகவே அடுத்த 900, 1000 சொற்களை எடுக்கும்போது மிகக் குறைந்த அளவு புதுச் சொற்களே கிடைக்கும். ஆனால், 2 இலட்சம் சொற்களுக்கும் அதிகமாக இருக்கும் கம்பராமாயணத்தில் இந்தப் புதுச் சொற்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வரக் காண்கிறோம். இது தமிழின் சொல்வளத்தையும் குறிக்கும், கம்பரின் சொல்திறத்தையும் குறிக்கும். ஒரு திரைப்படத்தில் வைரமுத்து கூறுவாரே, “என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு” ”சரக்கிருக்குது, முறுக்கிருக்குது, மெட்டுப்போடு” - அதைப் போல கம்பரே ஓரிடத்தில் கூறுகிறார், இராமனின் அம்பறாத்தூணியிலிருந்து எடுக்க எடுக்க அம்புகள் வந்துகொண்டே இருக்கின்றனவாம், எதைப் போல? கவிஞர் வாயிலிருந்து வரும்  சொற்களைப் போல.

கம்பரின் சொல்திறம் என்ற அம்பறாத்தூணியிலிருந்து புதுப்புதுச் சொற்கள் வந்துகொண்டே இருக்கின்றன - எதைப் போல?  இராமனின் அம்பறாத்தூணியிலிருந்து வரும் அம்புகளைப்போல.

இனி ஆய்வுக்கட்டுரை - அடுத்த பகுதியில்.
பி.கு: இது அத்தனையும் செய்ய மனித முயற்சியால் ஆகாது. ஒரு கணினியில் பாடல்களை ஏற்றி, கணினி நிரல் (computer Program) மூலம் ஆய்வுசெய்யவேண்டும். அத்தகைய நிரல் ஒன்றை நான் உருவாக்கிச் செய்த ஆய்வு இது.

கணிதமும் தமிழும் - பகுதி 3:
முதல் இரண்டு பகுதிகளும் முன்னுரைகள். இப்போதுதான் வருகிறது உண்மை ஆய்வுக்கட்டுரை. 
கம்பராமாயணத்தில் சொல்வள வளர்ச்சி வீதம்
Relative Growth of vocabulary (RGV)
in kambarAmAyanam

1. Relative Growth of vocabulary (RGV) என்றால் என்ன?
vocabulary என்பதைச் சொல்வளம் எனக் குறிப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் (text) உள்ள தனிச்சொற்களை அதன் vocabulary எனலாம். அதாவது, அப் பகுதியில் 1000 சொற்கள் இருந்தால், பல சொற்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவ்வாறு அதிகப்படியாக வரும் சொற்களைத் தவிர்த்துவிட்டு ஒவ்வொரு சொல்லையும் ஒருமுறைமட்டுமே எடுத்துக்கொண்டால் அதுவே அப்பகுதியின் சொல்வளம் ஆகும். 1000 சொற்கள் உள்ள பகுதியில் 250 தனிச்சொற்கள் இருப்பின், அப்பகுதியின் சொல்வளம் 250/1000 = 25/100 = 25% எனலாம். எனவே அதன் சொல்வளம் குறைவு எனக் கொள்ளலாம். அதாவது மிகச் சிலவான சொற்களே அங்கு திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது அதன் பொருள். மாறாக, அங்கு 800 தனிச்சொற்கள் இருப்பின் அதன் சொல்வளம் 80% எனலாம். அப்படிப்பட்ட பகுதியைச் சொல்வளம் மிக்க பகுதி எனலாம். அதாவது, அங்கே நிறைய புதுச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனலாம். அப்படிப்பட்ட பகுதி வாசிப்போரின் சொல்வளத்தைக் கூட்டும்.

இப்போது, ஒரு பெரிய பகுதியில் மொத்தம் 1000 சொற்கள் இருப்பதாகக் கொள்வோம். இதனை 10 சமபாகங்களாகப் பிரிப்போம். இப்போது முதல் 100 சொற்களில் 45 தனிச் சொற்கள் இருப்பதாகக் கொள்வோம். இது இப் பகுதியில் 45/100 = 45% ஆகிறது. தொடர்ந்து அடுத்த 100 சொற்களை எடுத்து, இப்போது முதல் 100+100=200 சொற்களில் சுமார் 90 புதிய தனிச்சொற்கள் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஏற்கனவே முதல் 100 சொற்களில் இருக்கும் தனிச்சொற்களில் பல இங்கு மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவைபோக, இப்போது முற்றிலும் புதிய தனிச்சொற்கள் 30 இருக்கலாம். எனவே, முதல் 200 சொற்களில் இப்போது 45+30=75 தனிச் சொற்கள் உள்ளன. இது மொத்தத்தில் 75/200 = 38% ஆகிறது. எனவே, தனிச்சொற்கள் கூடுதலாகக் கிடைத்தாலும் அவற்றின் வளர்ச்சி குறைந்துகொண்டுவருவதைக் காணலாம். தொடர்ந்து, அடுத்த 100 சொற்களையும் எடுத்து, இப்போது முதல் 300 சொற்களைக் கொண்டால், இப்போது தனிச்சொற்கள் இன்னும் குறைவாக இருக்கும். இப்போது 300 சொற்களில் தனிச்சொற்கள் 100 எனக்கொண்டால் இது மொத்தத்தில் 100/300 = 33% ஆகிறது. எனவே, தனிச்சொற்களின் விழுக்காடு மேலும் குறைந்திருக்கிறது. அதாவது தனிச்சொற்களின் எண்ணிக்கை மேலும் மேலும் கூடினாலும், அவற்றின் வளர்ச்சிவீதம், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருவதைக் காணலாம். இதைத்தான் Relative Growth of vocabulary (RGV) என்கிறோம். இதைப்போல் ஒவ்வொரு ஆயிரம் சொற்களையும் எடுத்து, தொடர்ந்து கணக்கிட்டால், போகப் போக, தனிச்சொற்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதைக் காணலாம். 

ஒரு ஆசிரியர் எழுதிக்கொண்டே போகும்போது, எவ்வளவு நேரம்தான் அவருக்குப் புதிய தனிச்சொற்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்? இது அவரின் சொல்வளத்தைப் பொருத்தது. எப்படி இருந்தாலும், ஒரு மிகப் பெரிய பகுதியை எடுத்துக்கொண்டால், ஒரு அளவுக்குப் பிறகு அவரின் சொல்வளம் குறைந்துகொண்டே சென்று, அவரின் RGV 0-வை எட்டும். இனிமேல் அவர் ஏற்கனவே எழுதிய சொற்களைத்தான் பயன்படுத்திக்கொண்டே இருப்பார். எனவே இருவேறு ஆசிரியர்களின் ஒரே அளவு பகுதியை எடுத்து, அப்பகுதியில் அவர்களின் RGV – ஐக் கண்டால் அவர்களின் சொல்வளத்தை ஒப்பிடமுடியும். இதை, மனித முயற்சியில் செய்வது மிகவும் கடினம். எனவே, இதற்கான கணினி நிரல்கள் ஆசிரியரால் எழுதப்பட்டு, கம்பராமாயணத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் RGV கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொள்கை அளவில் மேற்சொன்ன எடுத்துக்காட்டு சரியாகப்பட்டாலும், பயன்பாட்டில் மிகவும் கவனமாக இதனைக் கையாளவேண்டும். முதலில் சொல் என்றால் என்ன என்பதில் தெளிவு தேவை. இந்த ஆய்வுக்காக இந்த ஆசிரியரால் ஒரு சொற்பிரிப்புக் கொள்கை உருவாக்கப்பட்டு, அதன் முறையில் சொற்கள் பிரிக்கப்பட்டு கணினி நிரல்களால் கணக்கிடப்பட்டுள்ளன. அடுத்து, தனிச்சொற்கள் எவை என்பதிலும் கொள்கைகள் வேறுபடுகின்றன. படி = study , படி = step படி = a measure என்பவை ஒரே சொல்லா அல்லது வெவ்வேறா? படிக்க, படித்து, படித்தான், படித்தாள் ஆகியவை வெவ்வேறு சொற்களா அல்லது ஒரே சொல்லின் இலக்கண வேறுபாடுகள்தானா (grammatical variations)? இன்னோரன்ன பல இடர்பாடுகள் உண்டு. கணினி நிரல்கள் சொற்களின் உருவ வேறுபாடுகளை வைத்தே சொற்களைக் கணக்கிடுகின்றன. இரண்டு சொற்களில் எழுத்துக்கள் ஒரே மாதிரி இருந்தால் அவை ஒரே சொல்லாகவும், ஏதேனும் ஓர் எழுத்து மாறுபட்டால் அவை தனித்தனிச் சொற்களாகவும் கணினி கொள்ளும்.
 
மேலும் ஒரு ஆசிரியர் எதற்காக எழுதுகிறார்?; யாருக்காக எழுதுகிறார்?; எதைப்பற்றி எழுதுகிறார்?; என்பதைப் பொருத்து அவரின் நடையும், சொல்தேர்வும் வேறுபடலாம். இவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும். சிறுவர்க்கான ஒரு நூலில், ஆசிரியர் தன் சொல்வளத்தை எல்லாம் காட்டியிருப்பார் எனக் கொள்ளமுடியாது. ஓர் இலக்கிய இதழுக்கும், ஒரு சாதாரண (வெகுஜன) இதழுக்கும் கதை எழுதும் ஒரே ஆசிரியர், இரண்டிலும் ஒரே சொல்வளத்தைக் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. எனவே, ஒப்பீட்டுப் பின்புலங்கள் மிகவும் ஒத்துப்போகும் பகுதிகளையே சொல்வள ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 

2. கம்பராமாயணத்தில் RGV
இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட சொற்பிரிப்பு நெறிகளின்படி, கம்பராமாயணத்தில் மொத்தம் 2,40,568 சொற்கள் இருக்கின்றன. இதனைப் பத்துப்பாகங்களாகப் பிரிக்கிறோம். ஒவ்வொரு பாகமும் 24,056 சொற்கள் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு பாகத்திலுமுள்ள 24,056 சொற்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொற்களைத் தவிர புதிய சொற்கள் எத்தனை என்று கணக்கிடவேண்டும். முதல் 24,056 சொற்களில் 9575 தனிச் சொற்கள் கிடைக்கின்றன. இது 39.8% ஆகும். அடுத்த 24,056 சொற்களையும் சேர்த்து மொத்தம் 48,112 சொற்களில் 15,635 தனிச் சொற்கள் கிடைக்கின்றன. பார்த்தீர்களா! இப்போது நமக்கு 15,635 – 9575 = 6060 புதிய தனிச் சொற்கள்தான் கிடைத்துள்ளன. 

அடுத்த 24,056 சொற்களையும் சேர்க்க, இப்போது 48,112 + 24,056 = 72,168 சொற்களில் 20,877 தனிச் சொற்கள் ஆக இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் புதுச் சொற்கள் 20,877 – 15635 = 5242 மட்டுமே. ஆக நாம் ஒவ்வொரு 24,056 சொற்களாக அதிகரித்துக்கொண்டே செல்லும்போது நமக்குக் கிடைக்கும் புதிய தனிச் சொற்களின் எண்ணிக்கை 9575, 6060, 5242 எனக் குறைந்துகொண்டே வருகிறது. எனவே, அதிகரித்துக்கொண்டுவரும் தனிச் சொற்களின் வளர்ச்சிவீதம் குறைந்துகொண்டே வருவதைக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின்னர், இந்தப் புதிய தனிச் சொற்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து, தனிச் சொற்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு நிலையான எண்ணிக்கையை அடையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் கம்பனின் இராமாயணத்தைப் பொருத்தமட்டில் அவ்வாறு நடைபெறவில்லை என்பதனைக் காணலாம்.
இந்த அட்டவணையைக் கவனியுங்கள்.

எண். சொற்களின் விழுக்காடு தனிச்சொற்கள்(%) புதிய %
 எண்ணிக்கை தனிச்சொற்கள்
1. 24,056 10% 9575 20.75% 9575 39.8%
2. 48,112 20% 15,635 33.88% 6060 25.2%
3. 72,168 30% 20,877 45.24% 5242 21.8%
4. 96,224 40% 25,565 55.40% 4688 19.5%
5 1,20,280 50% 29,693 64.34% 4128 17.2% 
6.  1,44,336 60% 33467 72.52% 3774 15.7%
7. 1,68,392 70% 36732 79.60% 3265 13.6%
8.  1,92,448 80% 39987 86.65% 3255 13.5%
9. 2,16,504 90% 43065 93.32% 3078 12.8%
10 2,40,560 100% 46,144 100% 3079 12.8%

கம்பராமாயணத்தில் உள்ள மொத்தச் சொற்கள் 2,40,568 எனவும் இதில் உள்ள தனிச்சொற்கள் 46,144 எனவும் பார்த்தோம்.
இங்குள்ள அட்டவணைகளில் 7 நிரல்கள் (Colums)உள்ளன. 
நிரல் - 1. வரிசை எண். கம்பராமாயணத்தில் உள்ள மொத்தச் சொற்கள் 10 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது கம்பனில் உள்ள மொத்தச் சொற்களின் எண்ணிக்கை மட்டமாக்கப்பட்டு (round off) 2,40,560 ஆகிறது. இதனைப் பத்துப்பத்தாகப் பிரிக்க, 24,056, 48,112, 72,168, 96,224….. என்ற எண்கள் பெறப்படுகின்றன. 

இவை நிரல் -2 இல் தரப்பட்டுள்ளன. மொத்தச் சொற்களில் இவை 10%, 20%, 30%, 40% என்றாகிறது இல்லையா! 

இந்த விழுக்காடு நிரல் - 3 இல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைக்குள் அமைந்த தனிச்சொற்களைக் காணவேண்டும். அதாவது முதல் 24,056 சொற்கள் எடுக்கப்பட்டு, அவற்றில் உள்ள தனிச்சொற்கள் கணக்கிடப்படுகின்றன. அது 9575 ஆகும். 

இது நிரல் - 4 இல் தரப்பட்டுள்ளது. இந்த 9575 சொற்கள், மொத்தத் தனிச்சொற்களான 46,144 இல் 20.75% ஆகும். 

இது நிரல் - 5 இல் தரப்பட்டுள்ளது. இதே போல், அடுத்த 24,056 சொற்களையும் சேர்த்து மொத்தம் 48,112 சொற்களில் உள்ள தனிச்சொற்கள் 15,635. இதன் விழுக்காடு 33.88 எனப் பெறப்படுகிறது. இவ்வாறாக 10 நிரைகளும் கணக்கிடப்படுகின்றன. 

எடுக்கப்பட்டுள்ள பத்துப் பகுப்புகளில் ஒவ்வொரு பகுப்பிலுமுள்ள 24,056 சொற்களில் கிடைக்கும் தனிச் சொற்கள் நிரல் – 6 இல் கொடுக்கப்பட்டுள்ளன. 

நிரல் 4-இல் உள்ள எண்களில், ஒவ்வொரு எண்ணையும் அதன் முந்தைய எண்ணைக் கழிக்கக் கிடைக்கும் எண்கள் இவை. ஒவ்வொரு நிலையிலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள தனிச் சொற்களைத் தவிர்த்துப் புதிதாக அந்தப் பகுப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தனிச் சொற்களின் எண்ணிக்கையை இவை குறிக்கும். இவற்றின் எண்ணிக்கை போகப்போகக் குறைந்துகொண்டே வருவதைக் காணலாம். நிரை (Row) 5-ஐக் கவனியுங்கள். இது வரிசை எண் 5 –க்கு நேரானது. அதுவரையிலான மொத்தச் சொற்கள் 1,20,280. இதற்கு நேரான புதிய தனிச்சொற்களைப் பாருங்கள். அது 4128. இது அந்தப் பகுப்புக்குரிய 24,056 சொற்களில் 17.2% ஆகும். அதாவது சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சொற்களைப் பயன்படுத்திய பிறகும், அடுத்த பகுப்பில் நூற்றுக்குப் பதினேழு சொற்கள் புதிய சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது கம்பரின் சொல்வளத்தைக் குறிக்கிறது இல்லையா! இதேபோல் கடைசி நிரையைக் கவனியுங்கள். காப்பியத்தைப் பாடி முடிக்கின்ற நிலையிலும், அந்த இறுதிப்பகுப்பில் 12.8% புதிய தனிச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார் புலவர். ஒருவேளை இன்னும் பாடியிருந்தாலும், அதாவது இரண்டரை இலட்சம் சொற்களைப் பயன்படுத்திய பின்னரும், அதுவரை பயன்படுத்தியிராத புதிய தனிச் சொற்களை நூற்றுக்குப் பன்னிரண்டு என்ற விழுக்காட்டில் அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது பெரும் வியப்பைத் தருகிறது. 

இதனை ஒரு வரைபடம் மூலமும் வரைந்து காட்டலாம். X-அச்சில் மொத்தச் சொற்கள் எண்ணிக்கையையும், Y-அச்சில் தனிச்சொற்கள் எண்ணிக்கையையும் எடுத்துக்கொண்டு, நிரல் 2-இல் உள்ள எண்களை X- அச்சிலும், நிரல் 4-இல் உள்ளவற்றை அவற்றுக்கான Y-அச்சு வழியும் குறித்து அந்தப் புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும் வரைகோடு சொல்வள வளர்ச்சியைக் குறிக்கும்.

பார்க்க - படம்


ஆசிரியர் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே தனிச்சொல்லாக இருந்தால் (கொள்கையளவில்) இந்த வரைகோடு ஒரு நேர்கோடாகத் தோன்றும். இதனோடு ஒப்பிடும்போது சொல்வள வரைகோடு முதலில் உயரே எழும்பி, போகப்போக உயரம் குறைந்துவருவதைக் காணலாம். புதுச்சொல் பயன்பாடு போகப்போகக் குறைந்தால் இந்த வரைகோடு போகப் போக மிகவும் வளைந்து X- அச்சுக்கு இணையான ஒரு கோடாக மாறிவிடும். அதாவது மிக அதிகமான சொற்கள் உள்ள ஒரு பெரிய பகுதியில், RGV (தனிச்சொல் வளர்ச்சி வீதம்) குறைந்துகொண்டே வந்து மேலும் வளர இயலாத நிலையை எட்டும் என உணரலாம். மாறாகக் கம்பனில் இந்த வளைகோடு மேலும் மேலும் உயர்ந்துகொண்டே செல்வதைக் காண்கிறோம். 

கம்பராமாயணத்தில், இராமன் போருக்குப்புறப்படத் தன் வில்லையும், அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணியையும் எடுத்துக்கொண்டான் என்று சொல்ல வந்த கம்பர், இராமனது அம்பறாத்தூணி, எடுக்க எடுக்க அம்புகள் குறையாதது என்று குறிப்பிடுகிறார். அதனைத் தொலைவு இலாத் தூணி என்கிறார் கம்பர். இதற்கு ஓர் அழகிய உவமையைக் கூறுகிறார் கம்பர். கவிஞர்களின் நாவிலிருந்து வரும் சொற்கள் போல இந்த அம்புகள் குறையாமல் வந்துகொண்டே இருக்கும் என்று குறிப்பிடும் கம்பர் கூறுகிறார்:
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும்
சொல் எனத் தொலைவிலாத் தூணி தூக்கினான் – யுத்தகாண்டம்- முதற்போர்புரிபடலம் – 114.

இராமனின் இந்தத் தொலைவிலாத் தூணிபோன்றதே நம் கம்பரின் வற்றாத ஊற்றாய் பெருகிக்கொண்டு வரும் அவரின் சொற்கள் என்னும் அம்பறாத்தூணி.



Sunday, July 26, 2020

தமிழர்களின் மாதப்பெயர்கள் தமிழா?

தமிழர்களின் மாதப்பெயர்கள் தமிழா?

-- திருத்தம் பொன். சரவணன்


முன்னுரை:
            தமிழர்களின் காலக்கணக்கு மிகப்பழமை வாய்ந்தது. ஒருநாளின் உட்கூறுகளைச் சிறுபொழுது என்றும் ஏனையவற்றைப் பெரும்பொழுது என்றும் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணம் வகுத்துக் கூறியது தொல்காப்பியம். அதுமட்டுமின்றி, நாள், பொழுது, ஆண்டு எனக் காலம் தொடர்பான அனைத்துப் பெயர்களையும் கூட விதிமுறைக்கு உட்பட்டே தமிழர்கள் அமைத்தும் இருந்தனர். 

            இந்நிலையில், தமிழர்கள் பின்பற்றி வருவதான சித்திரை முதல் பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்றும் அவை சமற்கிருத சொற்களை அடியொட்டியே அமைக்கப் பெற்றவை என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இந்த மாதப் பெயர்கள் எவையும் இல்லை என்ற ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் செய்யும் வாதம் தவறானது என்றும் இந்த மாதப் பெயர்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்றும் இக் கட்டுரை நிறுவுகிறது.

தமிழரின் மாதப்பெயர்கள் தமிழே !
            தமிழர்கள் பின்பற்றி வருகின்ற சித்திரை முதலான 12 மாதப் பெயர்களும் தமிழே ஆகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இந்தப் பெயர்கள் இல்லை என்பதால் இவை தமிழ் அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. காரணம், இன்று நாம் புழங்கி வரும் ஏராளமான தமிழ்ச்சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. இவையெல்லாம் சங்ககாலத்திற்குப் பின்னால் வந்த புலவர்கள் காலந்தோறும் உருவாக்கிய புதிய தமிழ்ச் சொற்கள் ஆகும். அப்படி உருவாக்கப்பட்டவை தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதப் பெயர்களும். இந்த தமிழ்மாதப் பெயர்களின் மூலமாக விளங்கிய தமிழ்ச் சொற்கள் எவை என்று கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.



            இனி ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய மேற்காணும் மூலத் தமிழ்ப்பெயர் தோன்றிய முறையினையும் அவற்றின் பொருளையும் விரிவாகக் கீழே காணலாம்.

சித்திரை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்டு வருகிறது. இதனை மறுத்துத் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மாதமாகும் என்று கூறுவோரும் உளர். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. முதுவேனில் காலத்தின் துவக்கமான இம்மாதத்தில் வெயிலானது அதிக ஒளியுடன் கடும் வெப்பத்துடன் சுட்டெரிக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            சீ (=ஒளி) + தெறு (=மிகு, சுடு) + ஐ = சீத்தெறை >>> சித்திரை = மிகுதியான ஒளியுடன் கூடிய வெப்பம் சுடுகின்ற காலம்.

வைகாசி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் இரண்டாவது மாதமாகக் கருதப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கு 31 நாட்கள் உண்டு. முதுவேனில் காலத்தின் இறுதியான இந்த மாதத்தில் சூரியன் தனது கூர்மையான வெப்பக் கதிர்களால் சினங்கொண்டு எரிக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வை (=கூர்மை) + காய் (=சின, எரி) + இ = வைகாயி >>> வைகாசி = சூரியன் கூரிய கதிர்களால் சினந்து எரிக்கும் காலம்.

ஆனி:
            தமிழ்ப் புத்தாண்டின் மூன்றாவது மாதமே ஆனி மாதமாகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. இளவேனில் பருவத்தின் முதலாவதான இம்மாதத்தில் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து அடங்கத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            ஆன் (=குறை, அடங்கு) + இ = ஆனி = வெப்பம் குறைந்து அடங்கும் காலம்.

ஆடி:
            தமிழ்ப் புத்தாண்டின் நான்காவது மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. இளவேனில் பருவத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் காற்று அதிகமாகவும் மிகுந்த பலத்துடனும் வீசும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            அடி (=வீசு, தாக்கு) >>> ஆடி = காற்று வேகமாக வீசித் தாக்கும் காலம்.

ஆவணி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் ஐந்தாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. கார்காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் மழை குறைவாகப் பெய்து பூமியை மேற்புறமாக நனைத்து நெகிழ்க்கும். இதனால், உழவர்கள் காளைமாடுகளைக் கொண்டு தமது வயல்களை உழுது விதைப்புக்குத் தயார் செய்வர்.  இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            ஆ (=காளை) + பணி (=வேலை) = ஆபணி >>> ஆவணி = காளைகளைக் கொண்டு வேளாண் பணியைத் தொடங்கும் காலம்.

புரட்டாசி:
            தமிழ்ப் புத்தாண்டின் ஆறாவது மாதம் புரட்டாசி ஆகும். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. கார்காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் மழை நன்றாகப் பெய்து குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளை நீரால் நிரப்பும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            பூரணம் (=நிறைவு) + அயம் (=நீர், நீர்நிலை) + இ = பூரணாயி >>> புரடாசி >>> புரட்டாசி = நீர்நிலைகள் நீரால் நிறையும் காலம்.

ஐப்பசி:
            தமிழ்ப் புத்தாண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். இந்த மாதத்திற்கு 29 நாட்கள் உண்டு. கூதிர்காலத்தின் முதலாக வரும் இந்த மாதத்தில் மழையானது தொடர்ந்து விடாமல் மிகுதியாகப் பெய்து வெள்ளம் ஏற்பட்டுச் சிதைவினை உண்டாக்கும். மழை பெய்துகொண்டே இருப்பதால் குளிர்ச்சியும் மிகுதியாக இருக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            அழி (=பெருகு, சிதை) + மழை = அழிமழை >>> அயிமயை >>> ஐபயி >>> ஐப்பசி = மழையின் பெருக்கத்தால் வெள்ளம் ஏற்பட்டுச் சிதைவு உண்டாகும் காலம்.

கார்த்திகை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் எட்டாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. கூதிர்காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் மழை குறையத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            கார் (=மேகம், மழை) + திகை (=அடங்கு, முடிவுறு) = கார்த்திகை = மேகங்கள் மழையைக் குறைத்து முடிவுறும் காலம்.

மார்கழி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் ஒன்பதாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. முன்பனிக் காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் குளிர்ந்த காற்று வீசும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            மருக்கம் (=காற்று) + அளி (=குளிர்ச்சி) = மருக்களி >>> மார்கழி = குளிர்ந்த காற்று வீசும் காலம்.

தை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பத்தாவது மாதம் ஆகும். ஆனால் இதுதான் தமிழரின் உண்மையான புத்தாண்டு துவக்கம் என்று பல ஆதாரங்களுடன் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. முன்பனிக் காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் தான் மக்கள் புத்தாடை அணிதல், மாலைசூடுதல், அலங்கரித்தல், திரளாகச் சூழ்தல், மரக்கன்றுகளை நடுதல், புதியதில் புகுதல், உருவாக்குதல் போன்ற பல மங்கல வினைகளைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், தை என்ற ஒற்றைத் தமிழ்ச் சொல்லுக்கு மேற்காணும் வினைகள் அனைத்தையுமே பொருட்களாகத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இனி, இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            தை (=உடு, சூடு, அலங்கரி, சூழ், மரக்கன்று, நடு, புகு) = புத்தாடை உடுத்தி மாலைசூடி அலங்கரித்த பலர் சூழ்ந்து மரக்கன்றுகளை நட்டுப் புத்தாண்டில் புகுகின்ற காலம்.

மாசி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பதினொன்றாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. பின்பனிக் காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் தான் கல்வி கற்பதற்கான தொடக்க வேலைகள் நடைபெற்றன. இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வாசி (=கல், பாடு, இசை) >>> மாசி = புதிதாகக் கற்றலும் பாடுதலும் இசைத்தலும் ஆகிய வினைகள் செய்யும் காலம்.

பங்குனி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பன்னிரண்டாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. பின்பனிக் காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் தான் நீர்நிலைகளில் உள்ள நீரெல்லாம் ஆவியாகி வற்றத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வறம் (=வற்றுகை, நீரில்லாமை) + குளம் (=நீர்நிலை) = வறக்குளம் >>> பாற்குணம் + இ >>> பக்குணி >>> பங்குனி = நீர்நிலைகள் நீரின்றி வற்றும் காலம்.

முடிவுரை:
            இதுவரை கண்டவற்றிலிருந்து, தமிழரின் மாதப் பெயர்கள் பன்னிரண்டும் தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டே தோன்றின என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, தை என்ற தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் கூறியுள்ள பல்வேறு பொருட்களை நோக்குங்கால், பழந்தமிழர்கள் தை மாதத்தில்தான் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடி இருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.





Saturday, July 18, 2020

தெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்

தெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும் 

- முனைவர்.இரா.அனுசுயா


தமிழ்நாட்டில் மொத்தம் 72 பாளையங்கள் இதில் 18 பாளையங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. நாயக்கர்களால் பட்டியலிடப்பட்ட 72 பாளையங்களே அனைவருக்கும் தெரிந்த ஜமீன்களாக இருக்கின்றன. பல ஜமீன்கள் இருந்ததற்கான சுவடுகள் இருப்பினும் வரலாற்றில் இடம்பெறாத நட்டாத்தி ஜமீன், சாத்தான்குளம் ஜமீன் என சாதிவாரியான பல ஜமீன்கள் வரலாறு வெளி உலகத்திற்குத் தெரியாமலே அழிந்து போயின. 

பாளையக்காரர்கள் ஆட்சி முறையை முதலில் அங்கீகரித்தவர் மதுரையில் ஆளுநராக இருந்த விசுவநாத நாயக்கர். இவ்வாறு பட்டியலிடப்பட்ட ஜமீன் வரிசையில் வந்தவர் தான் ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற குறளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த திருநெல்வேலி சிங்கம்பட்டி ஜமீன் 31வது பட்டம் TNS தீர்த்தபதி ஐயா.   இவரது முழுப்பெயர் தென்னாட்டுப் புலி நல்லகுத்தி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாகமுத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. தாத்தா மற்றும் தந்தையின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். பாண்டியர்களின் வழித் தோன்றல்களான இவர்கள் பாளையக்காரர்களாக, குறுநில மன்னர்களாக பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்து ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களுக்கு 8000 கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர். 

ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்பே பாளையக்காரர்கள், குறுநில பரப்பை ஆள்பவர்கள் ஜமீன்களாகப் பெயர் மாற்றம் பெற்றார்கள். 1936ல் TNS தீர்த்தபதி ஐயா அவர்களுக்கு 3 வயது இருக்கும் போது சிங்கம்பட்டி ஜமீனுக்கான மன்னராக முடிசூட்டப்படுகிறது. மன்னர்களுக்கு ஆயகலைகள் கற்றுக் கொடுப்பது வழக்கம். ஆனால் தீர்த்தபதி ஐயா ஆயக்கலைகள் அனைத்தும், கற்கவில்லை. எனினும் ஆங்கிலப் புலமை, வில்லேற்றம், துப்பாக்கி சுடுதல், ரகபி, வாள்வீச்சு, பாலே நடனம் என அரச குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். வெளிநாடு சென்று படிக்க வைப்பது இவர்களது குடும்ப வழக்கம். 2ம் உலகப் போரின் காரணமாக இவரை இலங்கையிலுள்ள கண்டி பல்கலைக்கழகத்திலே படிக்கச் சென்றார். அப்போது கண்டியில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு (England Oxford) பல்கலைக்கழக பேராசிரியர்களே வகுப்பு எடுப்பது வழக்கம். ஆகவே இவரது ஆங்கிலப் புலமையானது, இன்றும் பலருக்கு ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தது. 

1952ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு இவர் நிர்வகித்து வந்த சொத்துக்கள் உரிய முறையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முடிசூடியதால் இன்றளவும் இவர் மன்னராகக் கருதப்பட்டார். மன்னருக்கே உரிய பண்பு நலன்களுடன் வாழ்ந்தவர். மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்வது, இரத்த தானம் அளிப்பது என்று தானங்கள் பல செய்தவர். அம்பையில் இவர் அளித்த நிலக்கொடையில் தான் அரசு பள்ளிக்கூடமும், அரசு மருத்துவமனைகளும் அமைத்துள்ளது. தீர்த்தபதி பள்ளி, தீர்த்தபதி மருத்துவமனை என்றே அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா ராஜமார்த்தாண்ட வர்மனுக்குப் போரில் ஜமீன் குடும்பம் உதவி செய்ததால் இவர்களுக்கு 6000 ஏக்கர் அன்பளிப்பு வழங்கப்பட்டது. காரையார் சொரிமுத்து கோயில் அறங்காவலர். ஆடி அமாவாசை அன்று நடைபெறும் திருவிழாவில் ராஜ உடையில் ராஜகுடையுடன் மன்னராக வீற்றிருந்து சம்பிரதாயமாக விழாவினை தொடங்க பூசாரி உத்தரவு கேட்பதும் தீர்த்தபதி ஐயா விழா தொடங்க ஆணை பிறப்பிப்பதும் வழக்கம். 6000 ஆண்டுகளுக்குப் பழமையான இக்கோவிலில் மன்னரிடம் கேட்ட பின்பே பூக்குழி திருவிழா தொடங்கும்.   

இவரது அரண்மனையில் முன்னோர்கள் பயன்படுத்திய வாள், தங்கப்  பல்லக்கு, அரசாங்க கடிதங்கள், குறுநில மன்னர்களுடன் தொடர்பிலிருந்ததற்கான சான்றுகள், 1000 குதிரைகள் பராமரிக்கப்பட்ட இடம், பல்லக்கு ஊர்வலம், வில்லு வண்டி எனப் பல அரிய செய்திகள் பராமரிக்கப்பட்டு மக்களது பார்வைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவரது அரண்மனை அருங்காட்சியகத்தில் நமக்கெல்லாம் நன்கு பழக்கமான மெனுகார்டு அப்போதே அவர்கள் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்க முடியும். நீர் வடிகட்டித்  தரும் மண்பாண்டங்கள், கெடாமல் இருக்கும் ஹாட்பாக்ஸ், வேட்டை துப்பாக்கிகள், குப்பிகள், குதிரைக்  குளம்பினால் செய்யப்பட்ட ஆஷ் ட்ரே, அக்கால ரேடியோ செட் எனப் பல அரிய பொருட்களைப் பார்க்க முடியும். வில் கம்புகள், போர்க்கருவிகள், வாள் வகைகள், யானை பொம்மை என வீரம் சார்ந்த கருவிகள் பல வகைப்பட்டவை காணக்கிடைக்கின்றன. சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள யானை பொம்மை அரிய வரலாற்றை உள்ளடக்கியது. ஜமீனால் அதிக சிரத்தையோடு பாதுகாக்கப்பட்டு வந்த இந்த பனையோலையால் செய்யப்பட்ட யானை பொம்மை விவேகானந்தரால் சேதுபதி ராஜாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. பின்பு ராஜா தன்னுடைய பேத்தி வள்ளி நாச்சியாருக்கு தற்போதைய ராஜாவின் தந்தையாருக்குத் திருமணம் முடித்த போது சீதனமாகக் கொடுக்கப்பட்டது. தாய் வீட்டுச் சீதனம் என்பதாலேயே அதிக பராமரிப்புடன் பாதுகாக்கப்படுகிறது. இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தான் விவேகானந்தர் சிகாகோ மாநாட்டிற்குச் சென்றுவரக் காரணமாக இருந்தவர். 

மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான மாஞ்சோலை எஸ்டேட் ஒரு வழக்கு செலவிற்காக ஆங்கிலேயருக்குக் குத்தகைக்கு விடப்பட்டு பின்பு கைமாறியது. சிங்கம்பட்டி ஐமீன் அவர்கள் செல்வமும், வீரமும், கல்வியும் பாரம்பரியமும் மிக்க குடும்பத்தில் பிறந்து மன்னராக இருந்தாலும் பண்பிலும் அன்பிலும் சிறந்து விளங்கியவர். அவருக்கு மிகவும் பிடித்தமானது வில்வண்டி. இத்தகைய வில்வண்டியை 25,000 ரூபாயில் செலவு செய்து பராமரித்து வைத்துள்ளார். பார்வையாளராக வருபவர்கள், மாணவர்கள் விரும்பினால் இத்தகைய அரச வில்லு வண்டியில் பயணிக்கவும் அனுமதியளிப்பார்.  மனிதர்களிடம் மட்டுமல்லாது விலங்குகளிடமும் அன்பாக இருந்தவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் இறந்த போது அதற்கு நினைவுத்தூண் எழுப்பியவர். நூல் குறிப்புகளும் எழுதி வைத்துள்ளார். ஒரு மன்னர் பரம்பரையையே அழகாக வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றி நமக்குத் தந்து மறைந்துள்ளார்.


முனைவர்.இரா.அனுசுயா, உதவிப் பேராசிரியை 

சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை


Wednesday, July 15, 2020

தலையங்கம்: பொது முடக்கக் காலம் தனிமனித வளர்ச்சிக்கான காலம்

தலையங்கம்:  பொது முடக்கக் காலம்  தனிமனித வளர்ச்சிக்கான காலம் 




வணக்கம்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் -  (குறள் எண்:394; அதிகாரம்:கல்வி)

கட்டாயமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் அமைந்துவிட்ட போதும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளைச் செயலாற்றிக் கொண்டே வருகின்றோம். கடந்த மூன்று மாதங்களில் இணைய வழியாகச் சிந்தனைக்கு விருந்தாகப் பலதரப்பட்ட நிகழ்வுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கி இருக்கின்றோம் என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.

ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை மலையகப்பகுதியின் இரத்தினபுரி மாவட்டத்தில்  தமிழ் மக்கள்  வசிக்கின்ற 58 தோட்டங்களில் 232 பிரிவுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஐரோப்பியக் கிளை வழங்கிய நன்கொடை  190ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒருவார கால உணவுப் பொருள் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமைந்தது.  இதே போலத் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளூர் ஒன்றியம், காக்கழனி-நுகத்தூர் ஊராட்சியில் வசிக்கின்ற 150 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை நன்கொடை வழங்கி உதவினோம்.

நீண்ட கால திட்டங்களில் ஒன்றான இணையவழிக் கல்விக் கழகத்தைத் தொடக்கும் முயற்சி இவ்வாண்டு சாத்தியப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இவ்வாண்டு மே மாதம் 19ம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளையின் முதன்மைநிலை இணையக் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்.மாண்புமிகு திரு.க. பாண்டியராஜன் அவர்கள் தொடக்கி வைத்த இந்த நிகழ்வில் தமிழக அரசின் அதிகாரிகளும் கலந்து சிறப்பு சேர்த்தனர். `கடிகை` இணையக் கல்விக் கழகம் உலகத் தமிழ் மக்களின் அறிவுத்தேடலுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் ஓர் கல்விப்பாலமாகும். 

கடந்த ஆண்டு, அதாவது 2019 ஆம் ஆண்டில், இரண்டு முறை கல்வெட்டுப் பயிற்சிகளைத் தமிழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தினோம். இதன்வழி ஏறக்குறைய முந்நூறு  மாணவர்கள் பயிற்சிகளில் கலந்து பயன் பெற்றனர். ஊரடங்கு விதிகள் நடப்பில் உள்ள இந்தக் காலகட்டத்தில், வரலாறு தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சென்று செல்வதிலும் தரமான பயிற்சிகள் உலகத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு ஜூன் மாதம் இரண்டு நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளை சோழர் காலத் தமிழ் கல்வெட்டுகள் பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் தமிழகம் மட்டுமன்றி ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும்  169 மாணவர்கள் ஜூன் 19லிருந்து 21 வரை, மூன்று நாட்கள் நடந்த கல்வெட்டுப் பயிலரங்கத்தில் பங்குகொண்டனர்.

ஒவ்வொரு வார இறுதியிலும் அறிஞர்களை அழைத்து அவர்களது ஆய்வுகள் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வார இறுதி நாட்கள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்ந்து வருகின்றன. அதுமட்டுமின்றி கடிகை முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் வழியாக மூன்று சிறப்பு நிகழ்ச்சிகளையும் கடந்த மூன்று மாதங்களில் நிகழ்த்தி இருக்கின்றோம்.  கடிகை கல்விக்கழகத்தின் முதல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒரிசா மாநில அரசின் சிறப்பு ஆலோசகரும், சிந்துவெளி ஆய்வாளருமான திரு.பாலகிருஷ்ணன் இஆப அவர்களது சிறப்புரை நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து நிறவெறிக்கும் இனவாதத்திற்கு எதிரான சிந்தனைகளை ஆராய்ந்து அலசும் வகையிலான உரை நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து சிறப்பு சேர்த்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் மேம்பாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களது காமராஜர் சிறப்புரை இவ்வரிசையில் இடம் பெற்று பெருமை சேர்த்தது.

இடைவிடாது பல்வேறு உரை நிகழ்ச்சிகள் தொடர்ந்தாலும் காலத்திற்கேற்ற வகையில் பெண்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஐந்து நாட்கள் சிறப்புப் பெண்கள் கருத்தரங்கத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஜூலை மாதம் 8ம் தேதிமுதல் 12ம் தேதி வரை நிகழ்த்திப் பல பெண் ஆளுமைகளை இணையவழி கலந்துரையாட வைத்து சாதனை புரிந்தது. இந்தக் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இணைந்ததோடு, ஆய்வுரையும் வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்பு கூட்டினார். இந்த ஐந்து நாட்கள் கருத்தரங்கின் முக்கியத் தீர்மானங்களாகக் கீழ்க்காணும் செயல்பாடுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை இறுதி நாள் நிகழ்ச்சியில் அறிவித்தோம்.

1. துறை சார்ந்த வல்லுநர்களாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் பெண்களை உலகுக்கு அடையாளப்படுத்தி அவர்களது திறனை ஊக்குவிக்கும் முயற்சிகளாகத்  தமிழ் மரபு அறக்கட்டளையின் வார இறுதி சொற்பொழிவுகளில் மிக அதிகமாகப் பெண்களுக்கு அவர்களது அனுபவ மற்றும் ஆய்வுப் பணிகளைப் பற்றி உரையாற்ற வாய்ப்புகள் வழங்குவது.

2.  பொதுவாகவே சமூகத்தில் பெண்கள் இரண்டாம் தரம் அல்ல. ’ஆணுக்குப் பெண் சமம்’ என்ற பேச்சுக்கள் கூட இனி வேண்டாம்.  அது போலித்தனமானதே. ஆகையால், அடிப்படை மனித உரிமையைப் பேணும் வகையில் பெண்களைத் தரம் தாழ்த்தி அவர்களை அலங்கார பொம்மைகளாகப் பார்க்கும் நடவடிக்கைகளை முற்றிலும்  தவிர்க்க வேண்டும்.  கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் பொன்னாடைகளையும், பரிசுகளையும்  தூக்கிக் கொண்டு வந்து நிற்கும் அலங்காரப் பதுமைகளாகப் பெண்களைப் பார்க்காமல் அவர்களது அறிவைக் கொண்டாடும் ஒரு சமூகமாக  நமது சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்துவது.

3. பெண்கள் தங்களைப் பலவீனமாகக் காட்டிக் கொள்வதில் பெருமை இல்லை. உடல் ரீதியாகவும் உள்ளத்தளவிலும் துணிச்சலும் பலமும் பொருந்தியவர்களாகப் பெண்கள் இருக்க வேண்டியது அவசியம்.  ஆரோக்கியமான உணவு, சிறப்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல் , தைரியமாகப் பேசுதல் போன்ற பண்புகளைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள அவ்வப்போது வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது.

4. கிராமப்புற பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆய்வுத் துறைகளில் முறையான முன்னெடுப்புக்கள், ஆய்வுக்கு வழிகாட்டுதல் போன்ற வகைகளில் வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகையின் வழியாகத் தொடங்கப்பட  உள்ளது.  இன்றைய நிலையில் ஆய்வுக்குக் காசு வாங்கும் போக்கும் ஆய்வுக் கூடங்களில் பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் முயற்சிகளையும்  கண்டிப்பதோடு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்குத் தகுந்த உதவிகளைச் செய்வது.

5. வணிகத்தில் ஈடுபடும் பெண்களுக்கும், விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில், சுய மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்கள் என்ற  வகையிலான நிகழ்ச்சிகளையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை இணையக் கல்விக்கழகம் யோசித்து வருகின்றோம்.  கைத்தறி நெசவு சார்ந்த துறையில் பெண்களுக்கு உதவும் முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பாட்டில் உள்ளன. இது மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

6. மாற்றுப்பாலினத்தோர் (Transgender)  சமூகப் பிரச்சனைகளை ஆராயும் வகையில் வார இறுதி  இரண்டு நாள் இணைய வழிக்கருத்தரங்கம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

7. பெண்கள் மீது நடக்கும் இணையத் தாக்குதல்கள் (Cyber attack)  வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.பல வேளைகளில் எந்த வித அடிப்படை ஆதாரமுமின்றி பெண்களை சமூக நடவடிக்கைகளை முடக்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் சமூக விரோதிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு,   இணையத் தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையிலும் அத்தகைய அறமற்ற செயலைச் செய்வோரை சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்வது.

ஆகிய தீர்மானங்கள் இப்பெண்கள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டன.

ஆய்வு நோக்கங்களையும் சமூக நலன் சார்ந்த நோக்கங்களையும் முன் வைத்து பல்வேறு நடவடிக்கைகளை உலகத் தமிழர்களுக்காகச் செயலாற்றி வருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. உலகம் முழுவதும் விரைவில் ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டு பொதுமக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இந்த காலாண்டிதழை உங்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
ஜூலை 15, 2020



Monday, July 13, 2020

வையத்தலைமை கொள்

வையத்தலைமை கொள்

-- முனைவர். ஆ. பாப்பா

தமிழ் மரபு அறக்கட்டளை - கடிகையின்
வையத்தலைமை கொள் - பெண்கள் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

துணிந்து சொல் (08-07-2020)
            ஐந்து நாட்கள்  கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வு அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாந்தினி பீ அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அன்றைய நிகழ்வுக்கான நோக்கவுரையில் வீடு, வெளி இரண்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண் ஒரு கருத்தினைக் கூறும்போது உடன் வெளிப்படுகின்ற எதிர்க் கருத்தினை எதிர் கொள்கின்ற சக்தி பெண்களுக்குத் தேவை, பொருளாதாரத்தில் உயர்வு மற்றும் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பெண்களும் வேண்டும் என்கிற நோக்கங்களை முன் வைத்ததோடு தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளைக் களங்கப்படுத்தும் வகையில் பலர் பேசி வருகிறார்கள். அப்பேச்சுக்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்று நம்புவோம் எனவும் பேசினார். 
            பல்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆறு ஆளுமைகள்  தாம் படித்ததை, தள்ளி நின்று தாம் பார்த்ததை மட்டுமோ பேசாமல் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
            ஊடகங்களில் பெண்கள் எதிர் நோக்கும் சிக்கல்களைத் திருமிகு கிருத்திகா தரன் இணையத்தின் மூலம் பெண்கள் தம்மை உயர்த்திக் கொள்ளுவது சாத்தியமா? என்கிற வினாவுடன் தொடங்கி இணையம் பெண்ணினது அடையாளத்தை அழிக்கிறது, இணையத்தில் பயன்படுத்தப்படும் வசைச்சொற்கள் பெண்பாலைச் சார்ந்தவை, பெண்கள் இணையத்திற்கு இரையாவது, நண்பர்களை நம்ப முடியாமலும் செய்ய வைக்கும் இணையம் போன்ற கருத்துக்களை முன்வைத்ததோடு இணையம் பாலினமற்ற இணையமாக மாறவேண்டும், பாலினமற்ற சமூக மாற்றத்திற்குப் பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
            ஆசிரியரான முனைவர் செந்தமிழ்ச்செல்வி; குடும்பங்களில், பணிபுரியுமிடங்களில், வெளியிடங்களில் நிகழும் வன்முறையைப் பெண்களால் துணிந்து சொல்ல முடியவில்லை.  என்றும் பள்ளிகளில் பெண்களும் சிறுமிகளும் படும் துன்பங்களையும் எடுத்துரைத்தார்.
            ஆணவப்படுகொலைகள் பற்றிப் பேசிய முனைவர் சத்யாதேவி இது அதிகம் பேசப்படுவது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான். பெண் உடல் முதன்மைப்படுத்தப்படுவதும் உடைமை பொருளாகக் கருதப்படுவதும் அவளுக்கென மனம், அறிவு, வெளி இருக்கிறதென்று நினைக்காததும் இதற்குக் காரணம். சாதி குறித்த சிந்தனை படித்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது, தனி மனித மாற்றம்தான் இதற்குத் தீர்வு என்றும் கூறினார்.
            குடும்ப வன்முறை பற்றிப் பேசிய முனைவர் அனுசுயா வன்முறை என்பது அடிப்பது மட்டுமல்ல. உடல், உளம் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று நிலைகளில் பெண்களுக்குக் குடும்ப வன்முறைகள் நடைபெறுகின்றன. 80% பெண்கள் இதை வெளியில் சொல்வதில்லை என்பதோடு சில கணக்கெடுப்புகளைக் கூறி அந்தக் கணக்கெடுப்புகளிலும் வேறுபாடுகள் காணப்படுவதைச் சுட்டிக் காட்டினார். 
            சமுதாயத்தில் சாதீயச் சிக்கல்கள் பற்றிய தனது கருத்துக்களை முன்வைத்த வழக்கறிஞர் சினேகா சிறுவயதில் அவரது தந்தை பள்ளிப் படிவத்தில் சாதி சமயமற்றவர் என்று நிரப்பிச் சமர்ப்பித்ததையும் அதனால் அவரது குடும்பம் சந்தித்த அனுபவங்கள், கலப்புத் திருமணம் என்று கூறாமல் சாதி மறுப்புத்திருமணம் என்று கூறவேண்டும், சாதி என்பது பிறப்பு தொடங்கி இறப்பு வரை அனைவரிடத்திலும் இருக்கிறது என்பதோடு ஒவ்வொரு பிரச்சனைக்கும் பெண்களாகிய நாம் ஒன்றிணையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
            மாற்றுத்திறனாளியாகத் தான் எதிர்கொண்ட சிக்கல்களைப் பள்ளி தொடங்கி கல்லூரி, பணியிடம், பொதுவெளி எனப் பேசிய உலகம்மாள் அரசுப் பள்ளியில் படித்தது வாழ்க்கையைக் கற்றுத்தந்ததாகப் பெருமையாகக் கூறினார். சுதந்திரம் நமக்குள்ளிருந்தே வரவேண்டும், அதைச் சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். நம்மையே முதலில் முன்மாதிரியாகக் காண வேண்டும், கட்டுப்பாடுகளை எப்படி உடைக்க வேண்டும் என்பதில் தெளிவும் அதில் முட்டி நிற்காமல் பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும், நமக்கான பொறுப்பை எப்படிக் கையாளுகிறோம் என்பது முக்கியம் என்று தெரிந்தாலே தடைகளிலிருந்து வெளிவர முடியும் என்று கூறினார்.
            முதல் நாள்  நிகழ்வு மூன்று மணிநேரம் மலர்விழியின் சிறப்பான நெறியாள்கை மற்றும் பங்கேற்பாளர்களின் வினாக்கள் மற்றும் கலந்துரையாடலோடு தொய்வின்றி நடந்து முடிந்தது.

நெசவு போற்றுவோம்  (09-07-2020)
            இரண்டாம் நாள் கருத்தரங்கு நெசவு போற்றுவோம் என்கிற தலைப்பில் பருத்தி, நெசவு – நம் பண்பாடு என்று நெசவுக்கலையின் இன்றைய நிலை மற்றும் அதனை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. இன்றைய கருத்தரங்கு ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி அகிலா செழியனின் வரவேற்புரையுடன் தொடங்கியது.
            தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷினி, சேலம் ஆரண்யா அல்லி இயற்கை பண்ணை உரிமையாளர் ஆரண்யா அல்லி மற்றும் அமெரிக்கா 'டிரடிஷனல்  இந்தியா' நிறுவனத்தின் புஷ்பா கால்டுவெல் ஆகிய மூவரும் இந்த  நிகழ்வின் சிறப்புரையாளர்கள். மூவரும் நெசவுத் தொழிலை மீட்டெடுப்பதற்கு முழு மூச்சுடன் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.
            சுபாஷிணி அவர்கள் தமது நோக்கவுரையோடு கைத்தறித் தொழில், தொழிலாளர் நிலை, தங்கள் குழு சென்ற மரபுப்பயணம், களப்பணி பற்றிப் பேசினார். கைத்தறி குறித்துத் தம் அமைப்பின் ஆவணங்களான ஒலி, ஒளிப்படக் காட்சிகளையும் ஒளிபரப்புச் செய்தார். இக்காட்சிகள் நெசவுத் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
            வேளாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆரண்யா அல்லி அவர்கள் நெசவுத் தொழிலாளர்களுடன் வாழ்ந்தும் தொழில் செய்வதோடு இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தும் வருபவர். நெசவுத் தொழில், தொழிற்கருவிகள், தொழிலாளர்கள், சேலை வகைகள், வடிவமைப்புகள், உற்பத்தி, சந்தைப்படுத்துதல்,  காலந்தோறும் நெசவுத்தொழில் சந்தித்த சிக்கல்கள், சவால்கள், அரசுச் சட்டங்கள், இன்றைய மாற்றங்கள், அனைத்திற்கும் மேலாகத் தமது அனுபவங்களையும் எடுத்துரைத்தார். இவரது நிறுவனம் இரண்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறது.
            சேலத்தில் பிறந்து இன்று அமெரிக்காவில் வசித்துவரும் புஷ்பா கால்டுவெல் அவர்கள் தம் சகோதரியுடன் இணைந்து இந்தியாவில் 40 தமிழ்க்குடும்பங்கள் உள்பட 100 நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கையிலெடுத்துச் செயலாற்றுகிறது இவரது டிரடிஷனல்  இந்தியா என்கிற அமைப்பு,  உழவும் நெசவும் அவருக்கு  இரு கண்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆதரவுடன் தாம் செயல்பட்டு வருவதையும் கூறினார். தமிழகத்தில் கல்லூரிகளில் கைத்தறி விழிப்புணர்வு முகாம்கள் நடத்திவருவதையும், தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து சென்னை எத்திராஜ்  கல்லூரியில் நடத்தப்பட்டது பற்றியும், தன்னோடு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டிருப்பது, கைத்தறி உடுத்துவதன் நோக்கம் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
            திருவள்ளுவர், தமிழ்த்தாய் உருவங்கள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் வரையப்பட்ட கைத்தறிச் சேலைகள் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ் விழாக்களில் விற்பனை செய்யப்பட்டது. இன்றைக்கு நெசவுத்தொழில் செய்து வருபவர்கள்தான் கடைசித் தலைமுறை.  மக்கள் ஆர்வம் குறைந்து கொண்டே வருவது, இதனை அழியாமல் காப்பது நமது கடமை, நாம் செய்ய வேண்டியவை போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வின் பங்கேற்பாளர்கள் நெசவுத் தொழிலை நசிய விடாமல் செய்யவேண்டும் என்று கூறியதோடு நிறைய வழிமுறைகளையும் சொல்லியது கருத்தரங்கின் நோக்கத்தைப் பாதி வெற்றி பெறச் செய்ததாகவே நினைக்கமுடிகிறது. இந்த  நிகழ்வு முனைவர் பாப்பா அவர்களின் ஒருங்கிணைப்புடன் இனிதே முடிவடைந்தது.   

செம்மை மாதர் (10-07-2020)
            பல்துறைப் பெண்ணாளுமைகள் என்கிற பொருளிலமைந்த மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குத்  திருமிகு தர்மசீலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமிகு வசந்திரவி அவர்களின் நெறியாளுகையுடன் இன்றைய நிகழ்வு கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும், இலக்கியத்தில் பெண்கள், தொழில் நுட்பத்தில் பெண்கள், வரலாற்றில் முதன்முதலில் தடம் பதித்த பெண்கள் என்கிற நான்கு தலைப்புகளில் நான்கு ஆளுமைகளால் நிகழ்த்தப்பெற்றது.
            பெண் கல்வி கற்பது சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும், அதிகமான வாசிப்பு திறந்த மனப்பான்மையை வளர்க்கும், அது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழி வகுக்கும் என்கிற தனது நோக்கவுரையை முனைவர் சுபாஷிணி முதலில் முன்வைத்தார்.
            தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் தேமொழி ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண் கல்வியின் நிலை, பெண் கல்விக்கான தடைகளும் காரணங்களும் குடும்பம் மற்றும் சமூகத்தில் பெண் கல்வி குறித்த சிந்தனைகள், இன்றும் பெண் கல்வியின் நோக்கத்தில் ஒன்றாக நல்ல மணமகனைத் தேர்ந்தெடுத்தல் என்பது அமைந்திருப்பதையும், இந்தியாவில் இந்திராகாந்தி மற்றும் காமராசர் காலத்தில் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பெண் கல்வி வளர்ச்சிக்குக் கொஞ்சம் உதவியமை போன்றவை பற்றிப் பேசினார். இன்றும் கல்லூரிகளில் பெண் துறைத்தலைவர்கள், இருபாலரும் இணைந்து செயல்படும் விழாக்கள், பணியிடங்களில் சமவிகித வாய்ப்பு கிடைக்காமை, நடத்தப்பெறும் கருத்தரங்குகளில் பேசுவதற்குப் பெண்களுக்குத் தரப்படும் முன்னுரிமை குறித்த கணக்கெடுப்புகளையும்,   அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு மாறுதல்கள் ஒடுக்கப்பட்ட பெண்களின் தொழிற்கல்விக்குப் போடும் தடை,  அதனால் அவர்கள் கனவு  கனவாகவே இருப்பது ஆகிய கருத்துக்களைச் சான்றுகளுடன் பேசினார்.
            இலக்கியங்கில் பெண்கள் பற்றிப் பேசிய முனைவர் மஞ்சுளா அவர்கள் சங்ககாலத்தில் கல்வி பரவலாக்கப்பட்டிருந்தது, கருத்துச்சுதந்திரம் இருந்தது, பெண்கல்வி மறுக்கப்படவில்லை என்றும்  சங்கப்புலவர் வெண்ணிக்குயத்தியார், வெளிப்படையாகத் தன் காதலைக் கூறிய ஆண்டாள், சமையலறைதான் உன் அதிகாரம் என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட அடிமைத்தளையிலிருந்து வெளிவரக் கதை எழுதிய அம்பை, பெண் உடல் அரசியலைக் கவிதையாக்கிய சல்மா ஆகியோரது படைப்புகளை விளக்கியதோடு அப்படைப்புகள் அவ்வக் காலகட்டத்தைப் பிரதிபலிப்பதோடு காலத்தின் கலகக் குரல்களாக ஒலித்தவை என்றே பார்க்க வேண்டும் என்றும் பேசினார்.
            அறிவியல் சிந்தனை அக்காலத்திலிருந்தே பெண்களுக்கு இருந்திருக்கிறது என்று வரலாற்றடிப்படையில் துவங்கிய பேராசிரியர் மாலா நேரு தொழில் நுட்பத்துறையில் பெண்களுக்கான நிலை குறித்துப் பேசினார். உலக அளவில் பார்க்கும்போது இந்தியாவில் அறிவியலில் பெண் பங்களிப்பு குறைவுதான், தொழில் நுட்பத்தில் பெண்கள் தலைமை ஏற்காததற்குக் காரணம் குடும்பச்சூழல், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும்  பெண்களின் திறமைகள் முடக்கப்படுவதும் என்று கூறியதோடு, பெண்களின் துறைசார் திறமைகளை முதலில் உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும், பெண்கள் ஒருங்கிணைந்து கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்த வேண்டும், சில தொழில் நிறுவனங்கள் செய்வது போலப் பெண்களுக்கென சிறப்பு வேலை நேரம், காலத்தை உருவாக்க வேண்டும் என்று வழிமுறைகளையும்,  பெண்களுக்குத் தன்னார்வமும் இலக்கும் இருந்தாலே சாதிக்கலாம், அறிவுசார் சமூகமே இன்றைய தேவை, அதற்குப் பெண் கல்வி இன்னும் பெண் தொழில் கல்வி அவசியம் என்றும் கூறித் தனது உரையை முடித்தார்.
            சரித்திரம் பேசாமல் விட்ட பெண்கள் பற்றி வரலாற்றாளர் நிவேதிதா லூயிஸ் பேசினார். பொதுவுடைமையைப் பொதுவாக்கப் பாடுபட்டவரும் அரசியலில் திருப்பங்களை உருவாக்கியவருமான மணலூர் மணியம்மா, இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ஏ. லலிதா, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அரசியலில் திருப்பங்களை உருவாக்கிய கதீஜா யாகூப் ஹாசன், இசைக்கு மதமில்லை என்று கூறிய இசுலாமிய நாதஸ்வரப் பெண் கலைஞர் காலிஷாபீ மெகபூப், சென்னைப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் மீனாட்சி, தமிழகத் தொல்லியல் துறையில் பணி செய்த மார்க்சிய காந்தி உள்ளிட்ட எட்டு பெண்கள் பற்றிப் பேசினார். பெண்கள் பற்றிய வரலாறு அதிகம் எழுதப்படவில்லை, சிறுபான்மையினப் பெண்களின் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும், தொழில்நுட்பம் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் நாம் இன்றைய பெண்களின் வரலாற்றை நாம் ஆவணப்படுத்திவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   

தளை தகர்ப்போம் (12-07-2020)
            பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய நான்காம் நாள் கருத்தரங்கு எழுத்தாளர் மலர்விழி அவர்களின் நெறியாளுகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் தேமொழியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. 
            கடந்த சில நாட்களாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்கிறோம். ஊரடங்கு நேரத்தில் குடும்ப வன்முறைகள் அதிகமாகியுள்ளன. ஆகவே பெண்கள் தங்களுக்கெதிரான பிரச்சனைகளை மனம் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு வழிமுறைகளை அமைத்துத் தரும் வகையில் இன்றைய அமர்வுகள் நடத்தப்படவேண்டும் என்கிற தமது அவாவை நோக்கவுரையாகத் தலைவர் சுபாஷிணி வைத்தார். 
            உளவியல் மருத்துவ நிபுணரும் சமூக ஆர்வலருமான ஷாலினி அவர்கள் உள அடிப்படையில் பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் குறித்துப் பேசினார். அனைத்து உயிரினங்களிலும் பெண் உயிரினம் மட்டுமே வலிமை மிகுந்தது. ஆரம்பக் காலத்தில் முதலில் இடம்பெயர்ந்த மக்கள் தாய்வழிச் சமூகமாக எந்தப் பிரச்சனையுமின்றி வாழ்ந்தனர். இரண்டாவதாக வந்தவர்களே தந்தைவழிச் சமூகமாகப் பெண்களை அடிமைப்படுத்தும் சமூகமாகப் பல கட்டுப்பாடுகளைக் கொணர்ந்தனர். பெண்கள் தங்கள் வலிமையை மறந்து ஆண்களைப் போற்றத் தொடங்கியதோடல்லாமல் தங்கள் வழித்தோன்றல்களையும் அப்படியே வளர்த்து அதுவே இன்று இயலாமையாக உருவெடுத்திருக்கிறது என்பதைச் சமயங்கள், வழிபாடு, மணமுறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்ற ஆதாரங்களுடன் வரலாறு, பண்பாட்டு  ரீதியாகவும் தெளிவாக விளக்கினார். இன்னும் பெண் என்பவள் இருவித மனநிலையினை உடையவள். இதை ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். சிந்தனையே இல்லாமலும் அதே நேரம் மிக அதிகப்படியான சிந்தனையும் கூடாது. படித்தவர்களிடம்தான் அதிகம் தயக்கமும் பயமும் காணப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனம் வேண்டும் என்றும் கூறினார். 
            வழக்கறிஞர் கிருபா முனுசாமி பெண்கள் தங்கள் பிரச்சனைகளைச் சொல்வதற்கு இங்கு தளமே இல்லை என்று தொடங்கி வரலாற்றடிப்படையில் சட்டம் குறித்துப் பேசினார். முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி வரைக் குற்றங்கள் மட்டுமே சட்ட அடிப்படையில் பார்க்கப்பட்டன. அவர்கள் சமயம் மற்றும் பண்பாட்டு விசயங்களில் தலையிடக்கூடாது என்று நினைத்தனர். பாலியல் வன்கொடுமைச்சட்டம், பெண்கள் சொல்வதை நம்பவேண்டும் என்கிற நிலைப்பாடு போன்றவை   கொண்டுவரப்பட்டதன் பின்னணியினைப் பாப்ரிதேவி, மதுரா, சக்தி வாஹிணி போன்ற வழக்கு விவரங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார். இன்றும் நீதி மன்றங்கள்,  பிற இடங்களிலும் பாலினம், சாதி குறித்த பாகுபாடுகள் இருப்பதைத் தன் அனுபவங்களின் வாயிலாக எடுத்துரைத்தார்.  பெண்களுக்குப் பெண்களே எதிரிகளாகவும் உதவும் மனப்பான்மை இல்லாதிருப்பதும் மாறவேண்டும். நாமனைவரும் ஒரே குரலாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சட்டம், நீதிமன்றம் இன்னும் பிற அமைப்புகள் எல்லாம் நமக்குப் பயனுள்ளவையாக அமையும். நீதி மன்றங்களில் சாட்சி என்பது மிகவும் முக்கியம். பெண்கள் அதற்கு முன்வருவதில்லை. மூன்றாம் நபராக முகத்தைக் காட்டாமல் பாதிக்கப்பட்டவருக்கு உதவிசெய்யலாம். நாம் ஒற்றுமையாக முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
            பள்ளிகளிலேயே குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலையையும் உடல் தொடர்பான விசயங்களைச் சொல்லித்தருவதுமே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பாக அமையும் என்று தலைவர் சுபாஷிணி அவர்கள் கூறப் பின் பங்கேற்பாளர்களின் வினாக்கள், கலந்துரையாடலுடன் கருத்தரங்கம் நிறைவுபெற்றது.   

முந்நீர் மகடூஉ (12-08-2020)
            கடல் தாண்டித் தடம் பதித்த பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் குறித்து வெளிநாடுகள், மாநிலத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் ஏழுபேரும், சிறப்புச் செய்ய ஒருவருமாக ஐந்தாம் நாள் நிகழ்வு செல்வி ப்ரீத்தியின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இன்றைய நிகழ்வு எழுத்தாளர் மலர்விழி பாஸ்கரனின் நேர்த்தியான நெறியாளுகையுடன் நடைபெற்றது. 
            தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷிணி அவர்கள் ஊரடங்கு நேரத்தில் தமது நிறுவனம் நடத்திய, இனி நடத்தப்போகிற நிகழ்வுகள், செயல்பாடுகள் பற்றியும் இன்றும் பெண்கள் இரண்டாம் தரத்திலேயே மதிக்கப்படுகிறார்கள், ஆண், பெண் சமம் என்பதே போலித்தனமானது, பெண்களின் ஆரோக்கியமான உணவு, தானாக முடிவெடுத்தல், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவை நிறைந்த சமூகமே முன்னேற்றமான சமூகம் என்றும் தமது நோக்கவுரையில் கூறினார். 
            ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமணியம் புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களைக் கலாச்சாரம், கல்வி, வேலை, குடும்பம், மொழி, பொதுவெளியாகிய சமூகம் ஆகிய நிலைகளில் விளக்கினார். நமது மற்றும் புலம்பெயர் கலாச்சாரம் ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தல், சொந்த நாட்டில் கற்ற கல்வியின் மதிப்பீடு, மீண்டும் படித்தல், அனைத்து வேலைகளையும் தாமே செய்வதால் ஏற்படும் மன அழுத்தம், விளைவாகக் குடும்பப் பிரச்சனை, புலம் பெயர் நாட்டின் சட்டங்களை அறிய வேண்டிய கட்டாயம், பாலியல் துன்புறுத்தல் அனைத்திற்கும் மேலாக அந்நாட்டுச் சொந்தக்காரர் நம்மை நடத்தும் விதம் என்று விரிவாக எடுத்துரைத்தார். நேர நிர்வாகம் தானாகவே வந்துவிடும் என்றும் கூறினார். 
            அமெரிக்காவில் Reaction Team என்கிற அமைப்பின் மூலம் சமூகத் தொண்டாற்றி வரும் திருமிகு ப்ரவீணா அவர்கள் புலம்பெயர் பெண்களின் பொருளாதாரம் பற்றிப் பேசும்போது திருமணமாகி இங்கு வரும் படித்த / படிக்காத பெண்கள் கணவனைச் சார்ந்தவர்களாகவும் வீட்டு வேலைகளைப் பார்ப்பதே போதும் என்றும் நினைக்கிறார்கள். பணியிலிருந்தாலும் தமது மற்றும் கணவரது வங்கிக்கணக்கு, சொத்து, பொருளாதாரம் பற்றிய சிந்தனை இல்லாமலும்  இருக்கிறார்கள். ஆணை வீட்டுச் சார்புடையவனாகவும் பெண்ணைப் பொருளாதாரச் சார்புடையவளாகவும் வளர்க்கவேண்டும். பெண் கல்வியினால் பயனொன்றுமில்லை, அக்காலத்தில் பாட்டிமார் தம் அஞ்சறைப் பெட்டியில் பணம் சேர்த்து வைத்த புத்திசாலித்தனம் கூட இன்றைய படித்த பெண்களிடத்தில் இல்லை, அசாதாரணச் சூழலில் கையற்று நிற்கும் பெண்களே அதிகம். இந்நிலை மாறவேண்டும் என்பதைத் தம் அனுபவத்தின்வழி எடுத்துரைத்தார். 
            ஐரோப்பாவில் பெண்களுக்கான வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஜெர்மனியின் செல்வி கார்த்திகா அவர்கள் கலாச்சாரங்கள் கலந்த சமூகம் இது, அந்நிய தேசம் என்பதால் பெரியவர்கள் இளையோரை வெளியில் அனுப்ப யோசிக்கிறார்கள், அவர்கள் நம்பிக்கையோடு எங்களை வெளியில் அனுப்புவதற்கு ஏற்ற வகையில் திடமான மனதோடு அந்நியச் சவால்களை எதிர்த்து நிற்கும் மனத்தோடும் தமிழ்ப் பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்கிற முயற்சியில் இருப்பதாகக் கூறினார்.
            மலேசியாவில் ஆசிரியர் பணியிலிருக்கும் திருமிகு சரஸ்வதி ஜகதீசன் அவர்களின் மலேசியாவில் பெண் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த உரை ஆய்வாகவே இருந்தது. இங்கு B40 குழுவினர்தான் அதிகம் சவால்களை எதிர்கொள்பவர்கள். இதற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்கள் கல்வி பயிலுதல், வீட்டுப்பாடம் செய்வதில் சிக்கல், சின்னத்திரை மோகம் அதிகம், தாய்மார்கள் தங்கள் பெண் பிள்ளைகளைச் திரைப்பட நடிகர் போலக் காட்டுவதால் மனப்பிறழ்வு, உருவம், நிறம், மொழி என்கிற வகையில் மற்றவர்களோடு ஈடுகொடுக்க முடியாமல் மனப்பிறழ்வு, வெளியிலுள்ள படிப்பைக் கைவிட்ட ஆண்களால் தடம் மாறுதல், மதுப்பழக்கத்திற்கு உள்ளாதல் போன்ற காரணங்களைச் சுட்டியதோடு மலேசியப் பெண்கள் சவால்களை எதிர்கொள்வதில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறினார். 
            சிங்கப்பூர்ச் சூழலில் சமூகத் தொண்டாற்றுதல் குறித்துப் பேசிய திருமிகு வசந்தி அவர்கள் பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு இது என்பதால் தனது பெற்றோர் தனக்கு அனுமதி அளித்ததாகக் கூறிய இவர் சமூகத் தொண்டாற்றுவது தனியாகவா, அமைப்புடன் சேர்ந்ததா, தொண்டாற்றக்கூடிய துறையைத் தேர்தல், அத்துறையறிவு பெறுதல்,  தொண்டு அமைப்புகளின் சட்டதிட்டங்களை அறிதல், அந்நிறுவனங்களின் பயிற்சிக்குட்படுதல், தமது பாதுகாப்பு, பொருள், நேரம் செலவிடல், திறன் போன்ற உதவிகளை முடிவு செய்தல் ஆகிய வழிமுறைகளையும்  இத்தகைய தொண்டுகளின் மூலம் நேர மேலாண்மை, புத்தாக்கச்சிந்தனை, திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்ற திறன்களைத் தான் கற்றதையும் நெஞ்சுரம், உறுதி, நன்றியுணர்வு, தோல்வி கண்டு துவளாமை போன்ற குணங்களைப் பெற்றதையும் கூறியதோடு ஒவ்வொருவரும் இன்னொருவர் வாழ்வில் தன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றும் முடித்தார்.
            உத்திரப் பிரதேசம் அலிகார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் சாந்தினிபீ அவர்கள் உத்தரப்பிரதேச படித்த பெண்கள் பற்றிப் பேசினார். சாதி, மதம், நிறம், ஊர் பற்றிய விவரங்களெல்லாம் தெரியாமல் இவர்கள் பேசுவதேயில்லை. கலப்புத் திருமணத்தை இன்றும் வியப்பாகத்தான் பார்க்கிறார்கள். பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இல்லை, அரசியல் பேசும் பெண்களோடு பேசுவதும் பழகுவதும் தப்பு என்று ஆண்கள் கருதுவது, ஆணின் முன்னேற்றத்திற்குப் பெண்ணின் பழக்கவழக்கங்கள் தடையாக இருப்பதாகச் சாடுவது போன்ற தமது கருத்துக்களை எடுத்துரைத்தார்.  
            பப்புவா நியூ கினியாவிலிருந்து பேசிய சுபா அபர்ணா சசீந்திரன் அவர்கள் வரலாற்றுப்படையில் உலக அளவில் சாதனைப் பெண்கள் பற்றிப் பேசினார். பெண்களின் பயம் மிகப்பெரிய வைரஸ், பெண்கள் தடைக்கற்களை மட்டும் பார்க்காமல் வெற்றியை, சாதனைகளை மட்டுமே பார்க்கவேண்டும், தம் தனித்துவத்தைக் கண்டுபிடித்து அதை வளர்த்தெடுக்கவேண்டும், பப்பு கினியாவில் பெண்கள் முழுப் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள், பெண்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும், பெண்கள் இயல்பிலேயே தன்னாற்றல் மிக்கவர்கள், அதை வளர்க்க வேண்டும் என்று கூறுவதே தப்பு, உந்து சக்தி உள்ளே இருக்கிறது அதை வெளியே தேட அவசியமில்லை என்று முடித்தார்.     
            எல்லாவற்றிற்கும் தாய் பெண் மட்டுமே என்கிற மூதாதையரின் பாடல் வரிகளோடு தனது உரையைத் தொடங்கிய இன்றைய நிகழ்வின் சிறப்புரையாளர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அரிஸ்டாட்டில் பெண்கள் குறித்துக் கீழான கண்ணோட்டம் கொண்டவர் என்றும் இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் சாதனை படைத்ததாகக் கூறப்படுகிறது, வரலாற்றைப் பார்த்தால் உலகளவில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பண்டைக்காலத்திலிருந்தே சாதனை படைத்திருப்பதையும் பட்டியலிட்டுக் காட்டினார்.  
            பெண்கள் பற்றிய பொய்யான கருத்தாக்கங்கள் இந்த நூற்றாண்டில்தான் அதிகம். தமிழ் இலக்கியங்களில் பெண்கள் வேள்விகளில் கலந்து கொண்டமைக்கான குறிப்பு இருப்பதையும் வாழ்க்கைத் துணைநலம் என்கிற அதிகாரத்தை எடுத்துவிட்டே திருக்குறளைப் பாடமாக வைக்கவேண்டும் என்று பெரியார் கூறியதையும் சுட்டிக்காட்டிய அவர் பகுத்தறிவு அறிவுசார் சமூகத்திற்குத் தேவை, கல்வி மட்டுமே நமக்கான அடையாளமல்ல, வாழ்க்கை அனுபவம் மிக அவசியம், அதிகாரத்திற்கு முன்பாகப் பெண்கள் தைரியமாகப் பேசுவது முக்கியம் என்றும் கூறினார். உலகம் அனைவருக்குமானது என்கிற புரிதலோடு செயல்படுவோம் என்று முடித்தார்.  






Saturday, July 11, 2020

கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்

கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்

-- தேமொழி  


            தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு  அமைப்பின், "கடிகை" - தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகம் வழங்கும் "வையத்தலைமை கொள்"  என்ற பொருண்மையில் நிகழ்த்தப்படும் உலக மகளிர் கருத்தரங்கில்,  "செம்மை மாதர்" என்ற  மூன்றாம் நாள் கருத்தரங்கின் பிரிவின் கீழ்  ""கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்""  என்று பெண்கல்வி குறித்து,  சென்ற நூற்றாண்டின் துவக்கம் முதல்  பெண்களின் கல்வியின் நிலை தலைமுறைகளாக்  கண்ட மாற்றங்கள்  குறித்து நான் செய்யும் ஒரு  மீள்பார்வைதான்  இக்கட்டுரை. 

            அனைவருக்கும் கல்வி குறித்து முக்கியத்துவம் புரிய வேண்டும்.  அந்தப் புரிதல் இல்லாத காரணத்தால், தெளிவான சிந்தனையும், விழிப்புணர்வும் இன்றி இந்தியா 200 ஆண்டுகளுக்கு மேல் அடிமை நாடாக இருந்தது. அதில் பெண்களின் நிலையும் அடிமைக்கு அடிமை என்ற நிலையிலிருந்தது. கல்விதான் நிலையை மாற்றியது என்பதை நாம் அறிவோம். விடுதலைப் போராட்டத்தைத் துவக்கி முன்னின்று நடத்தியவர் பெரும்பாலும் பிரிட்டிஷ் இந்தியாவின் குடிமக்களாகப் பிறந்து ஆங்கிலேயர் ஆட்சி உருவாக்கித் தந்த வாய்ப்பில் இங்கிலாந்து சென்றோ, அல்லது பிரிட்டிஷார் உருவாக்கிய மெக்காலே கல்வித் திட்டம் தந்த பயிற்சியால் உலக அறிவு பெற்று தங்கள் உண்மை நிலையை உணர்ந்தவர்களாக மாறியவர்கள்தாம்.   அவ்வாறுதான்,  பெண்களுக்கான கல்வி வாய்ப்பும் கிடைக்கப் பெற்றவுடன் அவர்களது  அறிவுக் கண்ணும் திறந்தது.  தங்கள்  மீது பல்லாண்டுகளாக நடத்தப்படும் அடக்குமுறையையும், தங்களின் திறமையின்  மூலம் அவர்கள் அடையக் கூடிய  பரந்த வெளியையும் பெண்கள் உணர்ந்து கொண்டார்கள். 

            ஆனால் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு கல்வி கற்பது என்பது பாதி கிணறு தாண்டும் ஒரு நிகழ்வு மட்டுமே. கற்ற கல்வியைப் பயனுக்குக் கொண்டுவந்து  தன்னையும், தனது குடும்பத்தையும், தனது சமூகத்தையும் உயர்த்தி அதனை முன்னேற்ற வழியாக  மாற்றிக் கொள்வது அடுத்த கட்டம். ஆண் பெண் என அனைவருக்குமே இது பொருந்தும். இன்று பெண்களைப் பொறுத்தவரையில் வாழ்வின் நிலையில் முன்னேற்றம் என்பதில் கல்வியின் மூலம் பாதிக்கிணற்றை எளிதாகத் தாண்டிவிடும் சூழ்நிலை வந்துவிட்டது .. அடுத்த பாதி .. அதாவது கற்ற கல்வியைப் பயனுக்குக் கொண்டு வந்து அடுத்தவரைச் சாராமல் சுதந்திரமாக வாழ்வது, தான் அடைய விரும்பும் குறிக்கோளை எட்டுவது,  அதில் அவர்கள் இன்று என்ன நிலையில் உள்ளார்கள் என்பது  பெண்கள் அனைவரும் தங்களையே  கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.  

            அக்கேள்வியில்தான்  அவர்களது  எதிர்காலம் அடங்கியுள்ளது, முன்னேறுவதற்கு முட்டுக்கட்டை போடும் இடையூறுகளைக் களைவதும், பெண்களின் திறமைக்கு மதிப்பளிக்காமல், அவர்கள் திறமையை  வெளிக்காட்ட விடாமல் இடையூறு செய்பவர்கள் எவரையும் ...... அது, மற்றொரு பெண்ணோ அல்லது ஆணோ, அல்லது  அரசு எடுக்கும் திட்டங்களோ அது எந்த வடிவில் வந்தாலும், அந்த இடையூறு செய்பவர்களை ஒருகை பார்ப்பதையும் பெண்கள் தங்கள் கவனத்தில் இருத்த வேண்டும்.  

            முதலில் கல்வி கற்பதில் பெண்களின்  கல்வி நிலை எவ்வாறு இருந்தது?  அதற்கான கட்டமைப்பு எவ்வாறு இருந்தது? அதற்கான சமூகச் சூழல் எவ்வாறு இருந்தது? அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும்  கொண்டு வந்த மாற்றங்கள்  என்ன?  என்பதைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.  ஏன் என்றால் நாம் கடந்து வந்த பாதை குறித்து அறிவது  நமது வெற்றியைக் கொண்டாடவும்  எதிர்காலத்தைத் திட்டமிடவும் உதவும். 

            சங்ககாலத்தில்  சாதாரண மக்களும் கல்வி அறிவு பெற்றவராக இருந்தனர், கீழடி மட்பாண்ட தொல்லியல் தடயங்கள்  காட்டுவது போல சற்றொப்ப 2600  ஆண்டுகளுக்கு முன்னரே சாதாரண  தமிழ் மக்களும் வீட்டில் புழங்கும் பானை சட்டிகளிலும் தங்கள் பெயர்களைக் கீறி வைத்திருந்தனர்; சங்க காலத்தில் 40க்கும் சொச்சமான பெண்பாற் புலவர்கள் இருந்தனர்; குறமகள், விறலியர், குயவர் வீட்டுப் பெண், அரசி  என எந்த நிலையில் வாழ்ந்த ஒரு பெண்ணும் என, எல்லோரும்  பாடல்கள்  எழுதினார்கள்  என்பவற்றை விரைவில் கடந்து; சென்ற  நூறு ஆண்டுகளுக்கு  முன்னர் பெண்கள் இருந்த நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.  

பாரதியார் மறைந்த பிறகு ஒரு நூறாண்டுகளை நாம் அடுத்த ஆண்டு கடக்கப் போகிறோம். "பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப் பீழை யிருக்குதடி"   என்று மனம்  நொந்துப்  பாடிய பாரதிதான் புதுமைப் பெண்கள் குறித்து கற்பனை செய்து, காலத்தைக் கடந்தும்  பாடினார். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றுதான் சென்ற நூற்றாண்டில் சமுதாயம் இருந்தது.  ஆனால் பாரதியோ,  
                        "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
                        எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்
                        வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
                        விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் .. .. .. 

                        பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
                        பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
                        எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
                        இளைப்பில்லை காணென்று கும்மியடி"
            என்று  இவ்வாறு ‘கற்பனையில்’ மட்டுமே  பாடிடும் நிலை இருந்த காலமது. அவரது கற்பனையில் பெண்கள் கல்வி பெற்று முன்னேறிவிட்டதாகப் பாடிக் கும்மியடித்தார். 

            பெண்கள் ஏன் கல்வி கற்க வேண்டும்.... என்று கூறப்படும் காரணமேகூட பல வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது எனலாம்.  பெண்கள் விரும்பிய துறையைத் தேர்வு செய்து, அது கல்விப் புலமோ,  கலைப்புலமோ, அரசியல் புலமோ, அறிவியல் புலமோ, சமூகத் தொண்டோ, தொழிலோ அல்லது வணிகமோ, அது எதுவாகவும் இருக்கட்டும்,  அத்துறையில் குறிப்பிடத்தக்கச் சாதனை செய்தவர்  இந்தப் பெண்மணி  என்ற ஒரு  நிலையை எட்டுவதற்கு அவர்கள் போடவேண்டியது ஒரு எதிர் நீச்சலாகவே இருக்கிறது. 

            அவ்வாறு  முன்னேறும் வழியிலும் உச்ச நிலையை எட்டி வெற்றிக் கொடி நாட்ட  ஏற்படும் இடையூறுகளும் பற்பல.  பொருளாதாரம் போன்ற ஒரு சில தடைகள் என்பது   இருபாலருக்கும் பொது என்றாலும் "கண்ணாடிக் கூரை" என்று உயரமுடியாத தடையில் சிக்கிக் கொள்வது பல பெண்களின் நிலை. "The system is at fault", "The double standard"  என்று சமூகத்தில் ஊறிப்போயுள்ள சமூகத் தடை  நிலைகள் அவை. ஒரு சில அரசுப்பணி போன்ற சூழல் தவிர்த்து,  பணியில் முன்னேற்றம், பதவி உயர்வு, தலைமைப் பொறுப்பு, நல்ல வேலை வாய்ப்புகள்  கிடைக்கப்பெறாமல்  எளிதில் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படும் சூழல் இருந்து வருகிறது.  இவ்வாறு  ஆண்கள் எதிர் கொள்ளாத வகையில், பெண்களுக்கு,  அவர்கள் பெண்கள் என்ற பாலினத் தகுதியின் காரணமாக அவர்கள்  தனிப்பட்ட முறையில் அவர்கள் எதிர் கொள்ளும்  தடைகள் பல உண்டு. 

            கரடுமுரடான பாதையில் பயணித்துத்தான், பல எதிர்ப்புகளைச் சமாளித்துத்தான் பெண்கள்  தாங்கள் கனவு கண்ட குறிக்கோள் என்ற இடத்தைச் சேர வேண்டியிருக்கிறது.  காலத்தில்  முன்னும் பின்னும் என்ற ஒரு மீள்பார்வை செய்து பெண்களின் நிலை என்ன? பெண்கள்  கடந்து வந்த பயணத்தில் அவர்கள் முந்தைய தலைமுறை செப்பனிட்டுத் தந்த பாதையில் எளிதாகப் பயணித்து அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டுகிறார்களா?  அல்லது விடுதலை பெற்ற ஒரு நாட்டில், பாடுபட்டு தங்கள் முன்னோர்  பெற்றுத் தந்த சுதந்தரத்தின் அருமை தெரியாமல் வரும் தலைமுறை பொறுப்பற்று இருப்பது போல இருக்கிறார்களா? அவர்களுக்கு வெற்றிகளுக்கு  இன்றும் இருக்கும் இடையூறுகள் என்ன ? என்று சற்றே ஆராயலாம். 

            முதலில் கடந்து வந்த தடைகள் குறித்து ஒரு மீள் பார்வை... 
            அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற ஒரு நிலை கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தது. இதை ஒரு பழமொழியாகவே சொல்லி பெண்களை முடக்கிவிட்ட ஒரு அவலநிலை  அன்று.  பிறகு தொடர்ந்து வந்த மற்றொரு காலத்தில் தங்கள் உயர் தகுதி நிலையைப் பறைசாற்றிக் கொள்ள, அதாவது நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள் என்று கதைகளிலும் படங்களிலும் காட்டப்படுவது போல, மேல் வர்க்கம்  எனக் கருதப்படும்  பெற்றோர்  சிலர், பிறந்த வீட்டிற்கு ஒரு "ஸ்டேட்டஸ் சிம்பல்" அல்லது புகுந்த  வீட்டில் படித்த மருமகள் அல்லது கணவன் பெருமை பேச  ஒரு "டிரோஃபி வொய்ஃப்" தகுதி என்று பெண்கள் கல்விப்  புகட்டப் பட்டனர். பெருமைக்காகப் படிக்கும்/படிக்க வைக்கப்படும் பெரிய இடத்துப்  பெண்கள் என்ற இந்த நிலை தவிர்த்து பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டதில்லை.  படிக்க வைத்து வீட்டில் பதுமையாக இருத்தி அழகு பார்ப்பது, பெருமை பேசுவது என்ற அளவில் பெண்கல்வி நின்றுவிடும்.   பெண்களைப் படிக்க வைப்பது நல்ல தகுதியுள்ள மணமகனைத் திருமணம் செய்து வைக்க  என்பது போன்ற எண்ணங்கள் இன்றும் கூட மக்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. 

            இவை போன்ற ஒருசில விதிவிலக்கான சூழல்கள்  தவிர்த்து,  பெண்களின் கல்விக்கு வெளியுலகம் தடை போட வேண்டும் என்பதில்லை,  சிலசமயம் குடும்ப உறவுகளும் கூட நேர்முகமாகத் தடை செய்வதும்,  அல்லது மறைமுகமாகப் பெண்களின் கடமைகள் குறுக்கே நிற்பதும் உண்டு. 
            அவ்வாறு பெண்கள் எதிர் கொண்ட (எதிர்கொள்ளும்?) கல்வித்தடைகள்:   
            1. குடும்பச் சூழல்:
             முன்னர் குடும்பங்கள் பெரிய குடும்பமாக இருக்கும், குறைந்தது ஒவ்வொரு  வீட்டிலும் 5 அல்லது 6 பிள்ளைகள்  இருப்பர்.   ஆகவே, அம்மாவுக்கு எடுபிடி உதவி தேவை, சமைக்க, பாத்திரம் விளக்க, துணி தோய்க்க, அடுத்து வரிசையாகப் பிறக்கும் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்வது என்ற ஒரு  குடும்பச் சூழல்.   மகப்பேறு காலத்திலும் முன்னர் பல பெண்கள் உயிரிழந்தனர். அம்மாவிற்கு உடல் நலமில்லை, அல்லது அம்மாவே இல்லை  என்பது போன்ற ஒரு  நிலையில்  யார் பிள்ளைகளைப் பாரமரிப்பது, வீட்டு வேலைகள் செய்வது? இது போன்ற  நிலையில்  குடும்பப் பொறுப்பை ஏற்கப்  பெண்கள் கல்வி நிறுத்தப்படுவதுண்டு. 

            2. பெண்களின் பருவ வயது மாறுதல்:
            பிறகு நடுநிலைப் பள்ளியுடன் பெண் கல்வியை நிறுத்துவதும் உண்டு.  கணவன் எழுதும் கடிதத்தைப் படிக்கும் அளவிற்குக் கல்வி அறிவு போதும் என்ற  ஒரு   மனநிலை.  அதுவும் பெண் பெரிய பெண்ணாகிவிட்டால்  உடனே கல்வியை நிறுத்திவிடுவார்கள்.  ஏன் வம்பு, படிக்க அனுப்பினால் அதனால்  என்னென்ன  தொல்லைகள்  வருமோ என்ற கவலை. மேலும், காதல் விவகாரத்தில் பெண்கள் விழுந்தால்  உடனே படிப்பை நிறுத்தி சொந்தத்தில் ஒரு திருமணம் செய்துவிடுவார்கள். காலாகாலத்தில் ஒரு கல்யாணம் செய்து பொறுப்பை முடித்துவிட வேண்டும். எத்தனைக்காலம்தான் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது? என்பது போன்ற எண்ணங்கள் மக்கள் மத்தியிலிருந்தது. 

            3. கல்விக்கான கட்டமைப்புகள் இல்லாமை:
            பல ஊர்களில் நடுநிலைப் பள்ளிக்கு மேல் வகுப்புகள் இல்லாதிருந்தது. அவ்வாறு  இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியோ அல்லது வகுப்போ  இருப்பதில்லை. சிலர் விரும்பிய வகையில்  பெண்களுக்கான  தனி உயர்நிலைப்பள்ளி இல்லை என எத்தனை எத்தனையோ பெண்கல்விக்கான தடைகள்.

            4. பிற்போக்கு எண்ணங்கள்:
            பெண் படித்து என்ன செய்யப் போகிறாள்,  அவள் சமைப்பது குடும்பத்தைப் பராமரிப்பது  போதும்  என்ற எண்ணம் உள்ளவர் வாழ்ந்த  காலம் சென்ற நூற்றாண்டு. பெண்களைப் படிக்க வைப்பது அவர்கள் சுற்றத்திலேயே இருக்காது, படித்த பெண் கெட்டுப் போகும்,  பெண்ணுக்குப் படித்த திமிர் வந்துவிடும், பெண் "வாயாடி"யாக மாறிவிடுவாள். எதிர்க்கேள்வி எழுப்பும்  மனப்பான்மை  வந்துவிடும்.   "ஒவ்வொருவரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்ற பிற்போக்குக் கொள்கைகள்  மக்களிடம் பரவலாக இருந்தது. 

            5. பொருளாதாரச் சூழலில் இரண்டாம் நிலை:
            பள்ளியில் கட்டணக் கல்வி என்ற முறை இருந்தது. பணவசதி இல்லையென்ற சூழல் இருப்பின்,  மகனுக்குத்தான்  முதல் வாய்ப்பு.  ஆண் கல்விக்கு முன்னுரிமை.  மகன் படித்து குடும்பத்தைக் காப்பாற்றுவான்.   மகள் படிப்பு குடும்பத்திற்கு உதவப் போவதில்லை . அப்படியே செலவு செய்து படிக்க வைத்தாலும் மீண்டும் வரதட்சிணை, நகை நட்டுப் போட்டு கல்யாணச் செலவு வேறு. எனவே  பெண்ணை படிக்க வைத்தால் இரட்டைச்   செலவு என்பதும் பல குடும்பங்கள் எதிர்கொண்ட சூழ்நிலை. 

            6. குறுகிய கல்வி வாய்ப்புகள்:
            நோபிள் ப்ரோஃபெஷன் எனப்படும் கல்விப்புலமும், மருத்துவப் புலம் மட்டுமே பெண்களுக்கான தொழில் புலமாகவே ஒதுக்கப்பட்டதும்  ஒரு காலம்.  பெண்கள் படித்து  பள்ளி ஆசிரியர், மகப்பேறு மருத்துவர், கொஞ்சம் செவிலியர் என்றுதான் பணிகள் செய்ய முடிந்தது. தொழிற் கல்வியாக  இல்லாவிட்டால் வங்கியில்  கணக்கர், தட்டச்சுப் பயின்ற அலுவலர் போன்ற பணிகள் தவிர வேறு வாய்ப்புகள் இல்லை. பொறியாளர், வழக்கறிஞர் போன்ற தொழிற்  கல்விகளுக்குப்  பெண்களைப்  படிக்க வைக்கப்  பல குடும்பங்கள் முன் வந்ததில்லை. 

            7. சிறந்த முன்மாதிரி அமையாத சூழல்:
            அவ்வாறு தொழில் கல்விகளிலும், தலைமை இடங்களிலும் ஒரு பெண்ணாளுமையைப் பார்த்து பெண்களும் தங்கள் முன்மாதிரியாக அவர்களைக் கொள்ள வாய்ப்பும் இருந்ததில்லை. 

            சென்ற 20 ஆம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் பெண்கள் எதிர் கொண்ட இச்சூழல் படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக சமூக மாறுதல்களை எதிர் கொண்டு வந்தது. அதற்கு, அரசு எடுத்த நடவடிக்கைகள் , சமூகச் சூழலில் தோன்றிய மாறுதல்கள், குடும்பச் சூழலிலும் பெற்றோரின் மனப்பான்மையிலும் ஏற்பட்ட முன்னேற்றம் போன்றவை காரணங்களாக அமைந்தன.   அவற்றை அடுத்து சற்று விரிவாகப் பார்ப்போம்.  இதற்காக அமெரிக்க 'பியூ ஆய்வு மையம்' சென்ற நூற்றாண்டில் பிறந்தவர்களைத்   தலைமுறைகளாகப் பிரிக்கும் அடிப்படையைப் பின் பற்றிப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில், இந்தியாவிலும், தமிழகத்திலும் இதே காலகட்டத்தில்தான் குறிப்பிடத்தக்க  மாறுதல்களும்  நிகழ்ந்தன.  
            சென்ற நூற்றாண்டில்,
            பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் பிறந்தவர்கள் (1945க்கு முன் உள்ள காலகட்டத்தில்) பிறந்து வளர்ந்தவர்கள், 
            விடுதலை பெற்ற இந்தியாவில் (1946 முதல் 1964 காலகட்டத்தில்) பிறந்து வளர்ந்தவர்கள், 
            அதற்கு அடுத்த தலைமுறையினர் (1965 முதல் 1980 காலகட்டத்தில்) பிறந்து வளர்ந்தவர்கள், 
            அவர்களுக்கும் அடுத்த தலைமுறையான (1981 ஆண்டுக்குப் பின்னர்) பிறகு பிறந்து வளர்ந்தவர்கள் 
            எனப் பிரிக்கலாம்.  இவர்களை முறையே சைலண்ட், பேபி பூமர், ஜெனெரேஷன்-எக்ஸ், மில்லினியல் [Generation classification by Pew Research Center: Silent Generation (before 1945), Baby Boomers (1946-1964), Generation X (1965-1980), Millennials(after 1981), ref: https://www.pewsocialtrends.org/] என்று அழைக்கப்படுவார்கள். இந்தத்  தலைமுறைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி சுமார் 15-20 ஆண்டுகள் போல இருக்கும்.  ஒவ்வொரு தலைமுறையினரும்,  ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் கொண்ட   சூழல்களின்  தாக்கத்தின் எதிரொலியாக உருவெடுத்து வருபவர்கள்.  



            இவர்களில் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் பிறந்தவர்களும்  வளர்ந்தவர்களும், அவர்களது பிள்ளைகளாகப் பிறந்தவர்களும் வளர்ந்தவர்களும் தத்தம் செயல்பாடுகளால் நாட்டிலும் கல்வியிலும் தமக்கென ஒரு கவனத்தை வகுத்து செயல் பட்டவர்கள்.  அவர்கள் ஏற்படுத்திய மாறுதல்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகக் கல்விச் சூழலிலும் நல்ல மாறுதல்களைக் கொண்டு வந்தது.  ஒரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், பெண்களுக்கு அன்று 1950களின் மத்தியிலிருந்த தடைகள் சமுதாய மனப்பான்மையின்  அடிப்படையிலும், உயர் கல்விக்கு ஆதரவான சரியான கட்டமைப்புகளும் இல்லாமல் இருந்திருப்பதும் தெரிய வரும். சில சமயங்களில், உயர் கல்வி மட்டுமல்ல,  இவை பள்ளிப் படிப்பையே தடை செய்த சூழல்களாகவும் அமைந்தன.

            விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தலைமுறைத் தமிழருக்கு  நல்ல அடிப்படைக் கல்வி கற்க, காமராஜர் காலத்தில் தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன, தேவையானோருக்கு மதிய உணவு வழங்கப் பட்டது, பள்ளியில் கல்விக் கட்டணம் என்ற முறை நீக்கப்பட்டது.  அனைவரும் அடிப்படைப் பள்ளிக் கல்வி  பெறப் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டது.  இவ்வாறு பள்ளிக் கல்வி கற்றவர் கல்வியின் அருமை புரிந்து தங்கள் பிள்ளைகளின் தலைமுறைக்குக் கல்வியும்  உயர்கல்வியும்  கொடுப்பதில் மிக ஆர்வம் காட்டினார்கள்.  அடுத்த தலைமுறைக்கும் உயர் கல்வி கற்க, குறிப்பாகப் பெண்கள் உயர் கல்வி கற்க நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன.  

            1966 இல் இந்தியப் பிரதமராகப்  பொறுப்பேற்ற இந்திராகாந்தி பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று வளரும் சிறுமிகளுக்கு முன்மாதிரியாக, நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். தமிழகத்தில் 1978 இல் கொண்டுவரப்பட்ட +2 என்ற மேல்நிலை வகுப்புத்  திட்டம் பெண்களுக்குக் கல்வியிலும், உயர் கல்வியிலும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியது.  அதுநாள் வரை பள்ளி இறுதிக்குப் பிறகு  கல்லூரிகள் அதிகம் இல்லாத காலத்தில் வேறு ஊரில் சென்று ஓராண்டு கல்லூரியின் புகுமுக வகுப்பில், ஆங்கிலப் பயிற்று மொழிக்கும் மாறிய ஒரு சூழலில்  விரைவில் கற்க இயலாது மொழிச் சிக்கல் போன்றவற்றை எதிர் கொண்டு தடுமாறிய நிலை முற்றிலும் இல்லாது  போனது. ஆண்களுக்கே அது ஒரு  நல்ல திருப்பத்தைக் கொண்டு வந்த நிலையில், பெண்களுக்கும் இது உதவியது. 

            மேல்நிலை வகுப்பில் பயில்வோருக்கு பொறியியல், மருத்துவம் எனத்  தொழிற் கல்வியில் எதையும் தேர்வு செய்யலாம் என்ற நிலை வந்தது. அதற்கு முன்னர் இவற்றில் ஏதோ ஒன்றைத்தான் தேர்வு செய்ய இயலும். அதிலும் பெண்கள் புகுமுக வகுப்பில் தோல்வி  அடைந்தால் அவர்கள் திருமணம் செய்து வைக்கப்பட்டு கல்வி முடிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளி பெண்கள் கல்வியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. தான் படித்த பள்ளியிலேயே பள்ளியை முடித்து, கல்லூரி சென்று பயிற்று மொழி மாறியதால் முதலில் துவண்டாலும், மூன்றாண்டு  கல்லூரி  படிப்பிலும், பருவமுறை பாடத்திட்ட வாய்ப்பிலும் பெண்கள் வெற்றிகரமாக உயர்கல்வியை முடித்தார்கள். அதற்குக் கல்வி பெற்ற தலைமுறையான பெற்றோர்களும், 1966 இல் இந்தியாவின்  நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தீவிர பிரச்சாரம்  செய்யப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு முறையால் குறைந்த உறுப்பினர்கள் கொண்ட சிறு குடும்பமும் காரணம் என்பதை மறுக்க இயலாது.   

            இவ்வாறு கல்வித்தடை நீங்கி அதனால் அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் பெற்ற பெண்களுக்கு கற்ற கல்வியைப்  பயனுக்குக் கொண்டுவருவது அடுத்த கட்டம். ஆனால் இதில் தடைகளும் தடங்கல்களும் அவர்களைத் தனித்தன்மையுடன் சிறந்து விளங்க விடாத நிலை இன்றும் தொடர்கிறது.  கல்வியில் தேர்ந்து விளங்கிய பெண்கள் எல்லோரும் டெஸ்ஸி தாமஸ் போன்றோ நிலையையோ,  இஸ்ரோ செய்வாய் கிரக திட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் போன்ற ஒரு உயர்நிலையை எட்ட பல தடங்கல்கள் இருக்கின்றன. 

            ஆண்கள் பெண்கள் என்று பிரிவினருக்காக தனித்தனியாக அமைக்கப்படும் நிறுவனங்கள் செயலரங்கங்கள் தவிர்த்த பொதுவாக இருபாலரும்  பங்கேற்கும் சூழ்நிலையில்,  பெண்களுக்குச் சம வாய்ப்பும் அவர்களது திறமையை மதிக்கும் வகையில் அதற்கேற்ற பங்களிப்பு வழங்குவதை முதன்மையான கொள்கையாக அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.  பணியிடங்களில் பெண்களுக்கான உரிய விகிதாச்சாரம் கொடுப்பதும், அத்துடன் அவை முக்கியமான பணிகளுக்காகவும் என்ற  நிலை இருக்க வேண்டும். கருத்தரங்கங்களில், ஆய்வரங்கங்களில்  பெண்களின் கல்விக்கும்  திறமைக்கும்  முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களுக்குப் பங்களிப்பு வழங்கப்படல் வேண்டும். ஒவ்வொரு நிகழ்வு ஏற்பாடு செய்கையிலும், பணியிடத்திலும் ஆண்டுக்கொரு முறை தங்கள் செயல்பாடுகளை மீள்பார்வை செய்து குறை இருப்பின் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானங்கள் செய்யப்பட வேண்டும். சட்டம் போட்டு அறிவுறுத்த வேண்டிய நிலைக்காகக் காத்திருக்காமல் ஒவ்வொருவரும்  தன்முனைப்புடன் மாறுதல்களை முன்னெடுப்பது இந்த நூற்றாண்டின் தேவை. பெண் கல்விக்கு ஏற்படும் தடைகளை, அந்தத் தடைகளை உருவாக்குவோர் ஆணோ பெண்ணோ அரசோ, அல்லது  யாவரும்  இணைந்து ஒட்டு மொத்த சமுதாயமோ, எவராக இருப்பினும் அவற்றை  நீக்குவது அனைவரின் பொறுப்பு. 

                        ஞான நல்லறம்வீர சுதந்திரம்
                        பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
                        நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
                        நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
                        திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
                        செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்... 
            என்று செம்மை மாதரின் இலக்கணத்தை வகுத்தளித்தார் பாரதியார். 

                        அதனால்தான், "பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்" என்றார்  தந்தை பெரியார். 


குறிப்பு:  ஜூலை 10, 2020 அன்று  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு  அமைப்பின், "கடிகை" - தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகம் வழங்கும் "வையத்தலைமை கொள்"  என்ற பொருண்மையில் நிகழ்த்தப்படும் உலக மகளிர் கருத்தரங்கில்,  "செம்மை மாதர்" என்ற  மூன்றாம் நாள் கருத்தரங்கின் பிரிவின் கீழ்  ""கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்""  என்று பெண்கல்வி குறித்து,  சென்ற நூற்றாண்டின் துவக்கம் முதல்  பெண்களின் கல்வியின் நிலை தலைமுறைகளாக்  கண்ட மாற்றங்கள்  குறித்து வழங்கப்பட்ட கட்டுரை.

தொடர்பு:
முனைவர் தேமொழி 
(jsthemozhi@gmail.com)


Friday, July 10, 2020

சிறு புன் மாலை

சிறு புன் மாலை

-- முனைவர். ப.பாண்டியராஜா


            சங்கப் புலவர்கள் சிலவேளைகளில் மாலை நேரத்தைக் குறிக்கும்போது ‘சிறு புன் மாலை’ என்கிறார்கள். அதென்ன சிறு புன் மாலை? மாலை எப்படிச் சிறியது ஆகும்? புன் மாலை புரிகிறது. புல்லிய மாலை, அதாவது பொலிவிழந்த மாலை. பளீரென்று விடிகிற காலைப்பொழுதில் மக்கள் சுறுசுறுப்புடன் இயங்குவர். ஆனால் நாளெல்லாம் வெளியில் உழைத்து வீடுதிரும்பும் வேலையாட்கள் மாலையில் களைத்துச் சோர்ந்து வீடு திரும்புவர். பகலெல்லாம் இரைதேடித் திரிந்த பறவைகள் மாலையில் தத்தம் கூடுகளைத் தேடிப் பறந்து செல்லும். மேயப்போன மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ப்பர்கள் களைப்புடன் வீடு திரும்பும் நேரம் மாலை.
            வெளியூர் சென்றிருக்கும் தலைவன் வீடு திரும்ப மாட்டானா என்று கவலையுடன் வீட்டில் தலைவி காத்திருக்கும் புல்லிய மாலை. போதாக்குறைக்கு அந்நேரத்தில் மழைவேறு பெய்தால்? ’பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை’ என்கிறது முல்லைப்பாட்டு(6). ஒரே அடியில் தொடக்கத்தில் ’பெரும்’, என்றும் இறுதியில் ‘சிறு’ என்றும் புலவர் கொடுத்திருக்கிற முரண்தொடையின் அழகை ரசித்துப் பார்க்கலாமேயொழிய, அதென்ன ‘சிறு’ புன் மாலை? அந்தச் ‘சிறு’ எதற்கு?

            சங்க மரபுப்படி, மாலை என்ற சிறுபொழுது இன்றைய மாலை 6 மணி முதல் 10 வரையில் உள்ள பொழுது ஆகும்.  இந்த மாலையைத்தான் சில நேரங்களில் ‘சிறு புன் மாலை என்கிறார்கள் சங்கப் புலவர்கள். இந்தச் ’சிறு புன் மாலை’ என்ற தொடர் சங்க இலக்கியத்தில் நான்குமுறை வருகிறது.

                        பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை - முல் 6
                        பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை - நற் 54/5
                        சிறு புன் மாலை உண்மை - குறு 352/5
                        சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என - அகம் 114/6

            முல்லைப்பாட்டில் இத்தொடருக்கு, ’சிறுபொழுதாகிய வருத்தம் செய்கிற மாலை’ என்று பொருள்கொள்கிறார் நச்சினார்க்கினியர். உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களும் இந்தத் தொடருக்கு இதே பொருள்கொள்கிறார். அடுத்து நற்றிணையில், ‘பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை என்ற அடியில் வரும் இத்தொடருக்குப் பின்னத்தூரார் ‘சிறிய புல்லிய மாலைப் பொழுதானது’ என்று பொருள் கூறுகிறார். இதே அடிக்கு உரையாசிரியர் ஔவை சு.து.அவர்கள் ‘சிறிது போதில் கழியும் புல்லிய மாலை’ என்று பொருள் கொள்கிறார். அடுத்து, குறுந்தொகையில் வரும் சிறு புன் மாலை என்ற தொடருக்கு, ’சிறிய புல்லிய மாலை’ என்றே உரையாசிரியர்கள் உ.வே.சா. அவர்களும், பொ.வே.சோமசுந்தரனார் அவர்களும் பொருள் கொள்கிறார்கள். அடுத்து அகநானூற்றுப் பாடலில் வரும் ’சிறு புன் மாலை’ என்ற தொடருக்கு, சிறுமையுடைய புல்லிய மாலை என்று, பொ.வே.சோ. அவர்களும், சிறிய புல்லிய மாலை என்று நாட்டார் அவர்களும் பொருள்கொள்கிறார்கள். ஆக பொ.வே.சோ அவர்கள், முல்லைப்பாட்டிலும், குறுந்தொகையிலும், அகநானூற்றிலும் வரும் இந்தத் தொடருக்கு, சிறுபொழுதாகிய, சிறிய, சிறுமையுடைய என்று மூன்றுவிதமான பொருள்களைக் கொண்டிருக்கிறார்.

            இப்பொழுது இத் தொடர் பாடலில் வருகின்ற இடங்களைப் பார்ப்போம்.

            முல்லைப்பாட்டில், இத்தொடர், மேயப்போன தம் தாய்ப்பசுக்கள் வீடு திரும்புவதை எதிர்நோக்கி வீட்டில் ஆவலுடன் கன்றுக்குட்டிகள் காத்துக் கொண்டிருக்கும் நேரமான மாலைப்பொழுதைக் குறிக்கப்பயன்படுகிறது. பொதுவாக மேயப்போன பசுக்கள் பொழுதுசாயும் நேரத்தில் வீடு திரும்பும். ஏறக்குறைய இன்றைய நேரப்படி மாலை 6 மணி முதல் 6:30 மணிக்குள் அவை திரும்பிவிடும்.

            நற்றிணையில், பறவைகள் இரையருந்தி வீடுதிரும்பும் நேரத்தையே புலவர் இத்தொடரால் குறிப்பிடுகிறார்.
            குறுந்தொகையில், பகலெல்லாம் மரத்தில் தங்கியிருந்துவிட்டு, இருட்டப்போகும் நேரத்தில் வௌவால்கள் வெளியே இரைதேடப் போகும் நேரத்தையே புலவர் இத்தொடரால் குறிக்கிறார்.
            அகநானூற்றில் இந்நேரம் இன்னும் மிகத்தெளிவாகக் குறிக்கப்படுகிறது.

                        உரவுக்கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு
                        அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்
                        சிறு புன் மாலையும் - அகம் 114/4-6
            ஆக, சூரியன் மறைகின்ற, மறைந்து சிறிதளவு நேரமே ஆன மாலைப்பொழுதே சிறு மாலை எனப்படுகிறது.  அதாவது, இன்றைய நேரப்படி மாலை 6 முதல் 6 1/2 வரையுள்ள நேரம் எனக் கொள்ளலாம்.
            இதனை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இதற்கு இணையான ஆங்கில வழக்கைப் பார்க்கலாம். ஆங்கில முறைப்படி, நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் அந்நேரத்தை a.m என்றே குறிப்பிடுவர். நள்ளிரவு தாண்டி 5 நிமிடங்களை 00.05 a.m என்றே குறிப்பிடுவர். இதனை ஆங்கிலத்தில் the small hours in the morning என்று குறிப்பிடுவர். அதாவது சிறு காலைப் பொழுது!! அப்படியெனில் சிறு மாலை என்று சங்கப் புலவர்கள் குறிப்பது the small hours of the evening.