Saturday, November 30, 2019

கீழடியால் நாம் பெறுவது என்ன?

கீழடியால் நாம் பெறுவது என்ன?

—  முனைவர் சிவ. இளங்கோ          பூமியில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் வரலாறு உண்டு. பூமி, சூரியக்குடும்பம், பேரண்டம் ஆகியவற்றுக்கும் வரலாறு உண்டு. ஆனால் வரலாறு என்பது மனித இனத்தைச் சார்ந்தே உருவாக்கப்படுகிறது. மனிதனின் சிந்தனை வளர்ச்சியே அதற்குக்காரணம். அதேநேரம், போகிற போக்கில் எதையும் சொல்லிவிடுவது வரலாறாகாது. இதற்குப் புராணம், இதிகாசம், வேதம், சாத்திரம் என்பவை சரியான எடுத்துக்காட்டுகள். சான்றுகளுடன் கூடியவையும், அறிவியல் வழியிலும் நிறுவக்கூடிய வையும்தான் வரலாறாக வரலாற்றாய்வாளர்களால் ஏற்கப்படுகிறது. ஆனால் அந்த வரலாற்றுக் காலத்துக்கு ஒரு வரையறை (கி.மு.300) வைத்து அதிலிருந்து வரலாற்றுக் காலம் என்றும், அதற்கு முற்பட்டது வரலாற்றுக்கு முந்தைய காலம் எனவும் இந்தியத் தொல்லியல் துறை வரையறை செய்திருக்கிறது. அந்த வரையறையை உடைத்துப் புதிய வரலாற்றுக்கால வரையறையை ஏற்படுத்தியதுதான் கீழடி அகழ்வாய்வுகளின் முடிவுகள்.

          கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. வைகை நதிக்கரையின் போக்கோடு இயைந்திருந்து புதையுண்டுபோன ஒரு நகர நாகரிகம். இந்தியாவில் சிந்துவெளிக்கும் அடுத்த ஓர் நகர நாகரிகம் இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல ஆய்வுகளில் பல பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை நடந்த அகழ்வாய்வுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 1,35,600 புதைபொருட்கள் கிடைத்து தமிழகத் தொல்லியல் துறை வசம் உள்ளன. அதில் 10 விழுக்காடு கூட காட்சிப்படுத்தப் படவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒரு புதையல் என ஆங்காங்கே கிடைத்து வருகிறது. அவை அந்தந்தப் பகுதிகளின் நாகரிக வளர்ச்சியைக் கூறுகின்றன. ஆனால் ஒரு நகரமாக, நகர அமைப்புடன், அதன் அடையாளங்களுடனும், வசதிகளுடனும் கூடிய ஒரு நாகரிகமாக அறியப்படுவது சிந்துவெளி நகர நாகரிகத்தையடுத்துக் கீழடி நகர நாகரிகம்தான். இது கங்கைச் சமவெளி நாகரிகக் காலத்தோடு சமன்படுவது என்ற நிலையைக் கங்கைச் சமவெளியினர் மறுத்துக் கொண்டிருக்கின்றனர்.

          இந்திய அரசின் தொல்லியல்துறை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வு செய்துவருகிறது. அதேபோல் கீழடியிலும்  2014 இல் இருந்து மூன்று முறை அகழ்வாய்வு செய்தது. மூன்றாவது அகழ்வாய்வின் போது திடீரென்று இது அகழ்வாய்வு நடத்துவதற்கு ஏற்ற இடமாக இல்லை என்று கூறி நிறுத்திவிட்டது.

          கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை மக்கள் ஆர்வம் பெருகி வர, தமிழக அரசின் தொல்லியல்துறை 2017ஆம் ஆண்டில் தொடங்கி இருமுறை அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொண்டு உடனடியாக அறிக்கையும் வெளியிட்டு இருக்கின்றது. தமிழக அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொண்டுள்ள நாற்பது அகழ்வாய்வுக் களங்களில் மிக விரைவில் அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்பட்டது கீழடி அகழ்வாய்வில்தான். அதற்கு நன்றிக்கடன் போலவே கீழடியின் முடிவுகள் வரலாற்று வரையறைக் காலத்தையே தகர்க்குமளவில் அமைந்திருக்கின்றன. ஆம், கி.மு.300ஆம் ஆண்டை வரலாற்றுக் காலத் தொடக்கம் என்பது போய், கி.மு. 600 எனச் சொல்லவைக்கிறது கீழடி. இன்னும் தோண்டினால் வரலாற்றுக் காலம் இன்னும் பின்னோக்கிப் போகக் கூடும் என்று தமிழர்கள் மகிழவும், பிறர் அச்சம் கொள்ளவும் கூடும். இனக் குழுக்களாக இருந்த மனிதர்கள் வேட்டையாடி உணவுத் தேவைகளை நிறைவு செய்துகொண்ட காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. இம்மக்கள் ஆற்றோரப் பகுதிகளின் வளமையைக் கண்டு அங்கேயே நிரந்தரமாகத் தங்கி தங்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டும், தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்துகொண்டும் நாகரிகச் சமூகமாக வளர்ச்சி நிலையை அடைந்தனர். இது உலகமெங்கும் நாகரிகக் குடியிருப்பை ஏற்படுத்தியது. மெசபடோமியா, எகிப்து ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளியை மையமாகக் கொண்டு எழுந்த சிந்துவெளி நாகரிகம் போன்று தற்போது கண்டெடுக்கப்பட்ட வைகைக் கரை நாகரிகம் தமிழர்களின் தொன்மை நாகரிகத்திற்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

படம் உதவி: தமிழக தொல்லியல் துறை

          வெறும் குடியிருப்புப் பகுதிகளாக மட்டும் இல்லாமல் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான நகர அமைப்பையும், அதற்கான கட்டிடங்களையும் கீழடி வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட செங்கற் சுவர்கள், தரைத்தளங்கள், வீட்டின் அமைப்பிலான பக்கச் சுவர்கள், கூரை ஓடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் நேர்த்தியான அளவுகளும், உறுதியான கட்டுமானத்திற்கான தொழில்நுட்பமும் இவற்றை இணைப்பதற்கான மரம், இரும்பு ஆணி இவற்றின் பயன்பாடும் தமிழ் மக்களின் கட்டிடக்கலையறிவைப் பறை சாற்றுகின்றன. இப்பகுதியில் கிடைத்துள்ள ஆணி முதலான பொருட்களால் இரும்பின் பயன்பாடு இம்மக்களுக்கு இதற்கு 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருக்கும் நிலையை உறுதி செய்கிறது. கூரை ஓடுகளில் காணப்படும் மழைநீர் ஒழுக்கின் அமைப்பு, வீதிகள் அல்லது கட்டிடங்களிலிருந்து கழிவுநீர் வெளியேறும் அமைப்பு ஆகியவை சங்க காலத்தில் நிலவிய சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வுகளில் பெரும்பாலும் முதுமக்கள் தாழி மட்டுமே கிடைத்திருப்பதால் தமிழ்நாடு ஒரு வாழ்விடமாக இருந்திருப்பதை ஐயத்திற்குள்ளாக்கி, அதன் வழி சங்க இலக்கியங்களையும் கற்பனைக் கதைகளாகச் சித்தரிக்கும் வட இந்தியப் பார்வையை உடைக்கும் சம்மட்டியாக இன்றைய கீழடியில் புதைந்திருக்கும் கட்டிடங்கள் விளங்குகின்றன.

படம் உதவி: தமிழக தொல்லியல் துறை

           ஒரு நாகரிகத்தைத் தோற்றுவித்த மக்கள், அதுவும் ஒரு நகர நாகரிகத்தைக் கட்டியமைத்த மக்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள், பிற்காலச் சந்ததியினர்க்கு ஓர் எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கும். கீழடி மக்களின் வேளாண் சார்ந்த சமூகத்திற்கு அடையாளமாக விளங்கும் நீர் மேலாண்மையை விளக்கும் உறைக்கிணறுகள், காளை, பசு, ஆடு, கோழி ஆகியவற்றின் பயன்பாட்டை விளக்கும் அப்பறவை மற்றும் விலங்குகளின் எலும்புகள் இவையெல்லாம் ஆய்வுக்குட்படுத்திய பின்னர் 2600 ஆண்டுகளுக்கு முன்பான தமிழர் பண்பாட்டைக் கூறுகின்றன. 

          புனேவில் உள்ள டெக்கான் கல்லூரி ஆய்வகத்தில் (டெக்கான் – தட்சிணம் – திராவிடம்) ஆய்வு செய்த பின்னர் திமில் உள்ள காளையின் எலும்பாக அது கண்டறியப்பட்டுள்ளது. திமிலுள்ள காளைகள் தமிழ்ப் பண்பாட்டின் வீர அடையாளத்திற்குரியவை. சங்க இலக்கியங்கள் அனைத்துமே காளைகளைப் பற்றியும், அக்காளைகளைத் தழுவும் மானுடக் காளைகள் (இளைஞர்கள்) பற்றியும் விரிவாகக் கூறுகின்றன. காதலியைத் தழுவும் முன்பு காளையைத் தழுவ வேண்டும் என்பதை வீரமாகவும், விளையாட்டாகவும் அமைத்துக் கொண்ட ஒரு பண்பாட்டைக் கற்பனையாக்க எத்தனை நெஞ்சுரம் அல்லது வஞ்சகம் வேண்டும்! ஆனால் அது கற்பனையல்ல, இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் சங்க இலக்கியப் பண்பாட்டின் நீட்சி என்பதைக் கீழடியில் புதைந்துள்ளவை எடுத்துக் கூறுகின்றன. அது  2,600  ஆண்டுகளுக்கு முன்பான நகர நாகரிகத்தோடு மட்டும் முடிந்து விடுவதல்ல. அதற்கும் மேலே விரிந்து கொண்டே போகிறது. சிந்து வெளியின் அடையாளம் என்ன என்று ஒரே சொல்லில் பதில் கேட்டால் யாருமே திமில் உள்ள காளை அல்லது எருதினைத்தான் கூறுவார்கள். சிந்துவெளியின் அத்தனை முத்திரைகளிலும் திமில் உள்ள காளை உருவம் இருக்கிறது. காளையை அடக்கும் வீரர்களைத் திமிறிப் பந்தாடும் காட்சிகளை உடைய முத்திரைகளும் சிந்துவெளியில் உள்ளன. சிந்துவெளிக் காளைகளையும், ஏறு தழுவுதலையும் அப்படியே காட்சிப் படுத்தியிருக்கும் சங்க இலக்கியங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதில் பல தவறான கருத்துகளே இதுவரை நிலவி வந்தன. சிந்துவெளி நாகரிகமும், சங்க இலக்கியப் பனுவல்களும், கீழடி நகர நாகரிகமும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து இந்தியா முழுவதும் கோலோச்சியிருந்த தமிழர் நாகரிகத்தைத் தற்போது உறுதிப்படுத்தி இருக்கின்றன. இவையெல்லாம், வாய்மொழிப் பாட்டாக உருவெடுத்து ஓர் இலக்கியமாக வளரும் காலநிலைகளெல்லாம், தமிழர் இருப்பை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு செல்லக் கூடிய நிலையை உறுதிப்படுத்துகின்றன.

          கீழடித் தமிழ்ச் சமூகம் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததைப் போலவே இரும்புப் பொருட்கள் தயாரித்தல், தச்சு வேலை, பானை வனைதல், நெசவு, அணிமணிகள் செய்தல் ஆகியவற்றைத் துணைத் தொழில்களாகக் கொண்டிருந்தது. அணிகளில் தங்க அணிகலன்களும், கண்ணாடி மணிகளும் கிடைத்துச் செல்வந்தரும், சாதாரண மக்களும் ஒன்றாக வாழும் சமுதாயமாகக் காணப்படுகிறது. தாயம், பாண்டி முதலிய விளையாட்டுகளுக்கான சில்லுகள், பகடைக் காய்கள், சதுரங்கக் காய்கள், வட்டச் சுற்றிகள், வண்டிச் சக்கரங்கள் (இவை பெரும்பாலும் சுடுமண்களால் செய்யப்பட்டவை) ஆகியவை அதிக அளவில் கிடைத்து, வாழ்க்கையைக் கூடிக் களித்துக் கழிக்கும் முறையில் வாழ்ந்திருக்கின்றனர் என்று தெளிவுபடுத்துகிறது. “முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால் முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல” என்று சங்க இலக்கியம் (கலித்தொகை) சொல்கிறது. காதலர் கூடியிருக்கும் நிகழ்வைத் தாய விளையாட்டில் பகடையை உருட்டிப் பத்து எண்ணிக்கை பெற்றால் எப்படி மனம் மகிழுமோ அப்படி மகிழ்ந்திருந்ததாகச் சங்க இலக்கியம் வரைகிறது. அந்தப் பகடைக் காய்களைத்தான் இப்போது கீழடி சான்றாக அளித்திருக்கிறது.

          இப்பொருள்களின் உற்பத்தி உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமல்லாமல் இலங்கை, கிரேக்கம், எகிப்து, ரோம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, முத்து, மிளகு போன்ற பொருட்களும் வணிகம் செய்யப்பட்டுள்ளன. தங்கம், மதுவகைகள், நறுமணப்பொருட்கள் ஆகியவை இறக்குமதி செய்யப் பட்டு வணிகம் செழிப்பாக நடைபெற்ற வரலாற்றை கீழடி மண் கூறுகிறது.

          பானை வனைதல் என்பது ஆதி குடிகளின் பண்பாடு கலந்த தொழில். விதவிதமான பானைகளோடு சுடுமண் பொம்மைகள் பற்பல உருவங்களில் செய்யப்பட்டு வந்தன. இவ்வுருவங்கள் அக்காலத்து மக்களின் உணவுப் பழக்கங்கள், விளையாட்டுப் பழக்கங்கள், அவர்கள் வளர்த்த விலங்குகள், பறவைகள், அவர்களிடையே நிலவிய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன. சுடுமண்ணிலேயே வண்ணமேற்றும் முறை, சூளையில் ஏற்றித் தேவைக்கேற்ப கடினப்படுத்துதல் போன்ற தொழில் நுட்பங்கள் மிகவும் கைவரப்பெற்ற சமுதாயமாகவே கீழடி இருந்துள்ளது. இவை தவிர வேறு கடவுள் உருவங்கள், சடங்கு முறைப் பொருட்கள் ஏதும் கீழடியில் கிடைக்கவில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பு மதச்சார்புள்ளவர்களை திடுக்கிட வைத்திருக்கிறது.

          தமிழ்ச்சமூகம் என்பது தாய்த்தெய்வ வழிபாடுள்ள ஒரு சமுதாயமாகத்தான் அறியப்படுகிறது. அதனால் எந்தக் காலம் ஆனாலும் தாய்த் தெய்வ உருவங்கள் அகழ்வாய்விலும் கிடைக்கும். மேற்பரப்பிலும் இன்றும் காணப்படும். அதன் நீட்சியாக இன்றுவரை அம்மன் வழிபாடுகளும், சிறுதெய்வ வழிபாடுகளும் இருந்து வருகின்றன. ஆதி குடிகள் என்பதை நிரூபிக்கும் இவ்வகை வழிபாடுகள் தமிழ்க் குடிகளில் பரவலாகக் காணப் பட்டவையே. இயற்கையோடு ஒன்றியிருந்த இவற்றிற்குச் சமய மதிப்பேதும் இல்லை. மேலும் சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வியலில் நடுகல் வழிபாடு, கொல்லிப்பாவை, மரத்தில் உறையும் தெய்வம், காணுறை தெய்வம், அணங்கு, வேலன் வெறியாட்டு எனப் பல்வகை பண்பாட்டுப் பழக்கங்களைப் பட்டியலிடுகின்றன. தமிழர்க்கேயுரிய முன்னோர் வழிபாட்டு முறையும், குலதெய்வ வழிபாட்டு முறையும் இன்றளவும் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருவதை நீண்ட நெடிய பண்பாட்டுத் தொடர்ச்சியாகத் தான் கருதமுடிகிறது.

          இந்தியா முழுவதிலும் பரவியிருந்த தமிழ்ச் சமூகத்தோடு சேர்ந்து வளர்ந்த சமயமாக சமணமும், அதனையடுத்து பவுத்தமும், ஆசீவகமும் இருந்திருக்கின்றன. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சமயங்கள் அசோக மன்னர் காலத்தில் அரசாங்க ஆதரவுடன் இந்தியா முழுமையும் குறிப்பாகத் தென்னகத்தில் அதிகமாகப் பரவின. அப்போது கூட உருவ வழிபாடுகள் ஏதும் இருந்திருக்கவில்லை. அசோகர் காலத்தில் ஒரு நினைவுச் சின்னமாக நிறுவப்பட்ட புத்தரின் காலடி உருவம் பின்னாட்களில் வழிபாட்டு உருவமாக மாறியது. இதன் பின்னர் கி.பி.4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வைதிகச் சமயங்களின் ஊடுருவல் காரணமாகச் சமணம், பவுத்தம், ஆசீவகம் ஆகியவையும் உருவ வழிபாட்டை ஏற்று மெல்ல மெல்ல வைதீகத் தெய்வங்களின் கற்பனை உருவங்கள் கடவுள்களாக்கப்பட்டன. அதிலிருந்தே சடங்கு முறைகளும் தொடங்கின. ஆகையால் கி.மு.300 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கிடைக்கும் பொருட்களில் தாய்த் தெய்வம், முன்னோர் வழிபாடு, நடுகல் ஆகியவை தவிர்த்து வேறு கடவுள் உருவங்களோ, சடங்கு நடந்த சான்றுகளோ கிடைப்பதற்கு வழியேயில்லை.

                    “ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
                    ஒளிறுஏந்து  மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
                    கல்லே பரவின் அல்லது நெல்உகுத்துப் பரவும்
                    கடவுளும் இலவே”
என்று புறநானூறு தெளிவாக வரையறை செய்கிறது. தமிழ்ச் சமுதாயத்தைக் காக்கப் போரிட்டு மாண்ட வீரனுக்கு எழுப்பப்படும் நடுகல்லைத் தவிர படையல் செய்யக்கூடிய வேறெந்தக் கடவுளும் இல்லையென மூவாயிரம் ஆண்டுப் பண்பாடு தெளிவாகத் தெரிவிக்கிறது.

          தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கீழடியில் கிடைத்ததுதான் தமிழர்களின் வரலாற்றுக் காலத்தைச் (சங்க இலக்கிய காலத்தை) பின்னோக்கிச் செலுத்தி தமிழர்களை நெஞ்சு நிமிர வைத்துள்ளது. இதுவரை கீழடியில் தமிழி எழுத்துகள் கொண்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்னர், தமிழகத்தில் நடைபெற்ற வேறு சில அகழ்வாய்வுகளில் தமிழி எழுத்துள்ள மோதிரங்களும், தேனூரில் கோதை என்ற பெயருடன் ஏழு தங்கக் கட்டிகளும் கிடைத்துள்ளன. 32க்கும் மேற்பட்ட ஊர்களில் தமிழியில் எழுதப்பட்ட 110 கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அறிவியல் சோதனைகளில் இவற்றின் ஆண்டுகள் 2400, 2500 என முடிவுகள் கிடைத்தாலும், பலரும் அதைப் பொருட்படுத்த வில்லை. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட அசோகன் கல்வெட்டுக் காலத்தையே வரலாற்றுக் காலத்திற்கு எல்லையாகக் கொண்டு, அந்தக் கண்ணாடியைக் கழற்றாமலேயே எல்லா ஆய்வு முடிவுகளையும் ஆய்வாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அரசாங்கமும் அப்படியே, அரசியலும் அப்படியே. இம்முறைதான் மக்கள் பார்க்கத் தொடங்கினர். மெரினா சல்லிக்கட்டு எழுச்சிக்குப்பின் தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஒரு விழிப்புணர்ச்சி மக்கள் மனதில் ஓர் ஓரமாக இருந்து கொண்டேயிருந்தது. அந்த இயல்பான தன்னெழுச்சியின் வினைதான் இன்று கீழடியின் வரலாற்றுக் காலத்தையும் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது.

          அசோகன் பிராமியிலிருந்துதான் எழுத்தறிவுக் காலம் தோன்றியது என்ற அடிப்படையில் இந்தியாவின் வரலாற்றுக் காலம் என்பது 2300 ஆண்டுகளோடு வரையறை செய்யப்பட்டு எல்லோராலும் ஏற்கப்பட்டும் வந்தது. இதனால் அசோகர் காலத்திற்கு முன்னர் தமிழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட போதெல்லாம் அதன் காலம் 2300க்கு பிறகே என்பதும், அந்த எழுத்துமுறை கூட அசோகன் பிராமி எழுத்து முறையிலிருந்து வந்தவையே என்பதும் எழுதப்படாத சட்டமாக இருந்தன. தமிழ்நாட்டு ஆய்வாளர்களில் சிலருக்கு, 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் வெளியில் சொல்லமுடியாமல் தவித்து வந்தனர். இதற்கும் தலையில் பிறந்த ஆதிக்கமே காரணம். அதனால்தான் எழுத்துருக் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட போது அவ்வெழுத்தைப் பிரம்மனின் பெயரால் பிராமி என்றழைத்தனர். பிரம்மன் தானே படைப்புக்கடவுள்? ஆக, பிரம்மனால் படைக்கப்பட்ட பிராமி எழுத்தை அசோகர் கல்வெட்டில் பொறித்ததால் அது அசோகன் பிராமி ஆனது. இந்தியா முழுமையும் அசோகன் பிராமிக் கல்வெட்டுகளே காணப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்து வந்தன. இந்தியா முழுமையும் இதுவரை கிடைத்திருக்கும் சுமார் 1 இலட்சம் கல்வெட்டுகளில் 60000 தமிழி எழுத்துக் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. தெலுங்கில் 10000, கன்னடம் 15000, சமஸ்கிருதம் 5000, பிறமொழிகளில் 15000 என்றும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதில் தமிழைத்தவிர ஏனையவை அனைத்தும் கி.பி. 500 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டவை. 13ஆம் நூற்றாண்டில் தான் வட்டெழுத்து + கிரந்தத்துடன் கூடிய மலையாளக் கல்வெட்டு கிடைத்தது.

          இப்படி இந்தியாவிலேயே காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டுகள் கிடைத்தும், அவை அசோகன் காலமான 2300க்குப் பிந்தியவை என்ற முத்திரையிலும், அசோகன் பிராமி எழுத்து முறையிலிருந்து அவை மாறுபட்டதால் தமிழ் பிராமி என்று வேறுபடுத்தியும் கூறிவந்தனர். ஆனால் 2600க்கும் முற்பட்ட தமிழில் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்து, கல்வெட்டுத் தமிழியின் உண்மை நிலையை உணர வைத்திருக்கிறது. இனி இந்தியாவின் வரலாற்றுக் காலவரையறை 2600 (தற்காலிகமாக) என்றும், இந்தியாவின் முதல் எழுத்துமுறை தமிழே என்றும், அசோகன் பிராமி எழுத்துமுறை, தமிழி என்னும் எழுத்து முறையிலிருந்தே பெறப்பட்டது என்றும், இனி பிராமியே இல்லாத தமிழாக அதாவது தமிழியாக இது வழங்கப்படும் என்பதும் தற்போது மக்கள் எடுத்த முடிவுதான். இதைத்தான் இனி ஆய்வாளர்களும், அரசாங்கமும் பின்பற்றவேண்டும். அப்படித்தான் தமிழக அரசின் கீழடி அகழாய்வு அறிக்கையும் அண்மையில் வெளியிடப் பட்டிருக்கிறது.

          உலகில் பேச்சுமொழி என்பது 20000 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம். அதுவும், தமிழின் வளமையைப் பார்த்தால் அது 50000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேச்சுமொழியாக இருந்திருக்கும் என்பது பாவாணர் போன்றோரின் கருத்து. ஆனால் எழுத்து முறை (வரி வடிவம்) என்று வரும்போது இந்தியாவின் முதல் வரிவடிவம் சிந்துவெளி எழுத்துதான். ஆனால் அது குறியீடுகளைக் கொண்ட எழுத்தாக இருப்பதனால் அதைப் படித்தறிவதில் ஒருமித்த கருத்து இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், அவை தமிழுக்கு முன்னோடியான குறியீடுகள் என்பதில் பெரும்பாலானோரின் கருத்துக்கள் ஒன்றுபடுகின்றன. சிந்துவெளி எழுத்தைச் சுட்டிக்காட்டி இந்தியாவின் முதல் எழுத்து மொழி தமிழ்தான் என்று கிளைட் விண்டர்ஸ் என்ற ஆப்பிரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர் தனது ‘Dravidian Origin of the Harappan Civilization’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆப்பிரிக்க – இந்தியப் பழங்குடி மக்கள் திராவிடர்களே என்றும், சிந்துவெளி மொழியே தமிழ்நாட்டில் இன்று பேசப்படும் மொழி என்றும் அறிவிக்கும் ‘Journey of Man’ என்ற  தனது ஆய்வுக் கட்டுரையை 07.07.2019 சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டில் ஸ்பென்சர் வெல் என்ற ஆய்வாளர் சமர்ப்பித்தார். அரேபியருக்கும் ஆங்கிலேயருக்கும் மூத்த தொல்குடியினர் திராவிடர் என்றும், அவர்களே இன்றைய தென்னிந்தியர் என்றும், அவர்களின் மொழியே தமிழ் என்றும், பிரான்சு நாட்டு மானுடவியல் ஆய்வாளர் ரொமைன் சிமெனல் அண்மையில் புதுச்சேரியில் நேர்காணலில் கூறியுள்ளார். பின்லாந்து அறிஞர் அஸ்கோ பார்ப்பலோவும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியருமான ஜார்ஜ் எல். ஹார்ட் போன்றோரும் சிந்துவெளியின் மொழி தமிழே என்று தங்கள் ஆய்வுகளின் வழி வெளிப்படுத்தி உள்ளனர். 


          கீழடி தமிழி எழுத்துப் பொறிப்புகளில் ஆதன், குவிரன், கோதிரையன் என்ற தமிழ்ப் பெயர்கள் படிக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கம்போல் சில வல்லுநர்கள் இவை கடன் வாங்கப்பட்ட சொற்கள் என வலிந்து கருத்துத் திணிப்பு செய்து வருகின்றனர். இதில் தமிழர்களும் உண்டு. அவர்களில் சில ஆய்வாளர்களும் உண்டு என்பது பெரும் வேதனை. ஆதன், ஆதிரை, சாத்தன், தித்தன் ஆகியவை தமிழ்மொழியின் அடிப்படைப் பெயர்கள். தமிழ்நாட்டிலும், மலையாள நாட்டிலும் ஆதன் பெயரை முன்னொட்டு, பின்னொட்டாகக்  கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. (ஆதம்பாக்கம், ஆதனூர்) ‘வாழி ஆதன் வாழி அவினி’ என்கிறது குறுந்தொகை. ஆதன் என்ற பெயருக்குத் தலைவன், மன்னன், ஆதல் மூச்சு, உயிர்வளி என்றெல்லாம் பொருளுண்டு. நெடுவேள் ஆதன், நல்லியாதன், நெடுஞ் சேரலாதன், ஆதன் அழிசி, ஒய்மான் வில்லியாதன் (இலங்கை மன்னன்) என்று இன்னும் பல தமிழ் மன்னர்களின் பெயர்கள் ஆதன் என்று வழங்குபவை.

          அதேபோலக் குவிரன் என்ற சொல்லையும் வடமொழி என்று நிறுவுதற்காக ஐராவதம் மகாதேவனைச் சுட்டுகின்றனர். ஏற்கனவே பல கல்வெட்டுகளிலிருந்த குவிரன் என்றபெயரை குபேரன் என்று மாற்றிப் படித்து, மாற்றியும் பொருள் சொன்னார் மகாதேவன். ஆகா, மகாதேவனே சொல்லிவிட்டார் என்று காலஞ்சென்ற அவரைப் போய் வம்புக்கிழுக்கின்றனர் சிலர். மகாதேவன் இத்தவறு மட்டுமல்ல ஆதன் என்ற பெயரை, தானம் என்று படித்தார். கணி என்ற தூய தமிழ்ப் பெயரை அழுத்தம் கொடுத்து (Gani) என்று படித்து வேற்றுமொழிச் சொல்லாக்கினார். நல்ல வேளை கணியன் பூங்குன்றனாரும் பிற கணியர்களும் இப்போது இல்லை. இப்படியாகத் தமிழியைப் படிப்பதில் மகாதேவன் செய்திருக்கும் தவறுகளை அவர் இருக்கும்போதே பலர் சுட்டிக்காட்டி உள்ளனர். அதில் சில திருத்தங்களை அவர் ஏற்றுக்கொண்டார். 
          குவிதல், குனிதல், குமிதல் ஆகிய மூன்று சொற்களும் கூம்பிய வடிவத்தைக் காட்டும். நெல் மற்றும் தானியங்களைக் குவித்தால் அது குவியல் எனப்படும். இதைப் பேச்சு வழக்காகக் கொண்டால் கி.மு. 2000 ஆம் ஆண்டுக்கும் மேல் செல்லும். செல்வம் குவிந்தவனைக் குவிரன் என்று சொல்வதும் தமிழ் வழக்கம். அன் என்ற விகுதியைச் சேர்த்து பெயர்ச் சொல்லாக அழைப்பது பழந்தமிழர் வழக்கம். வேலன், ஆதன், குமரன் என்பதுபோல. அதுபோலவே குவி என்ற பகுதியுடன் அன் என்ற விகுதி சேர்ந்து ‘ர்’ என்ற ஒற்றுச் சொல்லோடு குவிரன் என்ற பெயர்ச் சொல்லாக ஆகிறது. இப்பெயர் கொடுமணலில் நான்கு சில்லுகளில் காணக்கிடைக்கிறது. ஒன்றில் குவிரன் அந்தை என்ற பெயர் உள்ளது. இதற்குக் குவிரன், ஆதன் தந்தை என்று பொருள் கொள்ள வேண்டும். மேலும் காலத்தால் முற்பட்ட குகைக் கல்வெட்டுகளிலும் குவிரன் என்ற பெயர் காணப்படுகிறது. இந்தக் குவிரன் மிகப் பிற்காலத்தில் குபேரன் என்று மருவி அழைக்கப்பட்டு அதற்கொரு கதையும் கட்டப்பட்டு இப்போது குபேரனிலிருந்து குவிரன் வந்ததாகக் கண்டுபிடிக்கிறார்கள். இந்தியா ஆசியக் கண்டத்தில் மோதும் ஒரு தீவாக டெத்தீஸ் என்ற கடலில் பன்னெடுங்காலம் பயணித்தது. அது தீவாக இருந்த கதையை நால்வலந்தீவு (நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு) என்று பழந்தமிழ் கூறுகிறது. அதுவே திரிந்து நாவலந்தீவு என்று வழங்கலாயிற்று. எதையுமே சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துவிட்டால் அது உடனே அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அதுபோல நாவலந்தீவை மொழி பெயர்த்தனர். ஆனால் நாவல் என்பதை நாவல்பழம், நாவல் மரம் எனப் பொருள் கொண்டு அம்மொழியில் நாவலுக்கு ஜம்பு என்ற பெயரானதால் ‘ஜம்ப்வித்தீவஹ’ என்று மொழி பெயர்த்தனர். சில காலம் சென்று அதுவே ‘ஜம்புத்தீவு’, சம்புத்தீவு என்று தமிழுக்கு வந்தது. பிற்காலத் தமிழ்ப் பாடல்களில் வரும் சம்புத்தீவு என்ற பெயரைக் கொண்டு இது சமற்கிருதத்தில் கடன் வாங்கப்பட்ட சொல் என்று கூறுபவர்களை நாம் எப்படிப் பார்ப்பது? திருவள்ளுவர் நகர் என்ற பெயர் டி.வி. நகராகிப் பின் தமிழன்பர் ஒருவரால் தொலைக்காட்சி நகரான கதைதான். இப்படித்தான் குவிரன் என்ற சொல்லை ஆய்வாளர்களும் கையாள்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு கதைகளைத் தாங்கித் தாங்கியே தமிழ் இன்னமும் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

          பொதுவாக உலகம் முழுவதிலும் சேர்த்து எழுத்து தோன்றிய காலம் இன்றிலிருந்து பின்னோக்கி 5000 ஆண்டிலிருந்து 8000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று ஆய்வாளர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனாலும் வரலாற்றுக் காலமாக 2600 ஆம் ஆண்டை முன்னிறுத்தக் காரணம் புதிய கற்கால எழுத்து என்று கூறப்படும் டிஸ்பிலியோ டேப்லெட் எழுத்துமுறை கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதுதான். மேலும் ருமேனியாவில் டார்டேரியா டேப்லெட் என்று அழைக்கப்படும் தொடக்கக் கால எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டு மொழிகளும் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. எனவே உலகத்தின் முதல் எழுத்து முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டான 2600 ஐ வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகக் கொண்டனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் அசோகன் பிராமி என்னும் எழுத்து முறையின் தொடக்கக் காலமாக 2300 அமைவதால், இந்தியாவில் வரலாற்றுக் காலம் என்பது 2300 ஆக வரையறை செய்யப்பட்டு வந்தது. கீழடிக்கு முன்பே பொருந்தல், கொடுமணல் அகழ்வாய்வுப் பொருட்களைக் கரிமப் பகுப்பாய்வு  செய்தபோது அவை கி.மு. 400, 500 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவையாகத் தெரியவந்தன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளோ கி.மு.900 வரை பழமையை எட்டியது.

          இந்திய மொழிகளான பாலி, பிராகிருதம், தமிழ் ஆகியவற்றின் வரிவடிவங்களைப் புத்தர்தான் ஏற்கனவே வழக்கிலிருந்த எழுத்து முறையைக் கொண்டு உருவாக்கினார் என்று பண்டிதர் அயோத்திதாசர் கூறி 100 ஆண்டுகளுக்கும் மேலாயிற்று. ஏற்கனவே வழக்கிலிருந்த எழுத்துமுறை என்றது தமிழியைத்தான். புத்தரின் காலமோ சரியாக 2600 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் கீழடியில் கிடைத்த தமிழி எழுத்து முறையால் இந்தியாவின் வரலாற்றுக் காலம் 2600 வரை என்று பின்னோக்கிச் செல்கிறது. அதாவது உலகத்தின் தொன்மை எழுத்து முறைகளாக கிரீஸ், ருமெனிய நாடுகளின் எழுத்துமுறைக் காலத்திற்குச் சமமாக இந்தியாவின் தமிழ் மொழியைத்தான் முன்னிறுத்த முடிகிறது. கீழடியிலும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் முறையான அகழ்வாய்வு செய்தால் இதன்காலம் இன்னும் பின்னோக்கிப்போய் உலகின் தொன்மை எழுத்தாகத் தமிழ் மொழியே அறிவிக்கப்படும்.

          ஏற்கனவே சிந்துவெளி மொழியின் காலம் 5000 ஆண்டுகளாகக் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் மறைந்த காலத்திற்கும், தமிழ் எழுத்து முறை எழுதப்பட்ட காலமான 2600 ஆம் ஆண்டிற்கு முன்பும் ஆன ஒரு கால இடைவெளியில் ஒரு வரிவடிவம், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பயன்பாட்டிலிருந்திருக்கிறது. அது குறியீடுகளும், கீறல்களும் கொண்ட ஒரு எழுத்து வடிவம். இவ்வெழுத்து முறை இன்னும் படித்தறியப்படவில்லை. அதற்கென்று ஒரு பெயர் வைக்கப்படவுமில்லை. சிந்துவெளி நாகரிகத்திற்கு அடுத்த செப்புக் காலப் பண்பாட்டின் தொடர்ச்சியான பெருங்கற்காலப் பண்பாட்டில் இக்குறியீடுகள் பயன்பாட்டிலிருந்துள்ளன. தொல்குடிகள் பயன்படுத்திய கருப்பு, சிவப்பு பானை ஓடுகளிலும், பெருங்கற்கால ஈமச் சின்னங்களிலும் (முதுமக்கள் தாழி போன்றவை) இக் குறியீடுகளும், கீறல்களும் காணப்படுகின்றன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன் குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் மற்றும் பல தென்னிந்தியப் பகுதிகளிலும் இவ்வகைக் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளதாகத் தமிழக அரசின் அறிக்கை கூறுகிறது. மேலும் இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாமா ஆகிய பகுதிகளிலும் இவை பயன்பாட்டிலிருந்திருக்கின்றன. இவை படித்தறியப் பட்டுவிட்டால், சிந்துவெளிக் குறியீட்டு எழுத்து முறைகளும் படிக்கப்பட்டுவிடும். தமிழோடு தொடர்புடைய இப்பழைமையான  எழுத்து முறை படிக்கப்பட்டு விட்டால் இந்தியாவின் எழுத்து முறையின் காலம் சிந்துவெளியின் காலமான 5000 ஆண்டுகள் என்று அறியப்பட்டு உலகத்தின் முதலில் தோன்றிய மொழியாகவும், முதலில் எழுத்து முறையை உருவாக்கிய மொழியாகவும் தமிழ்மொழி சான்றுகளுடன் அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுவிடும். 

          இந்தியாவைப் பொறுத்தவரை இது தமிழர்களுக்குப் பெருமையாக இருந்தாலும் பிற மொழியினர் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூக்குரலைத் தள்ளிவிட்டு அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அப்படிப் பட்ட அரசியலே இந்தியாவில் பன்னெடுங்காலமாக நடந்துகொண்டு வருகிறது. ஆகவேதான் இதுபோன்ற ஆய்வுகளைத் தாமதப்படுத்தும் நிலையை மத்திய அரசு மேற்கொள்கிறது. ஆனாலும் இன்றைய மத்திய அரசின் தலைமை அமைச்சர் உலகத்தின் மூத்த மொழியாகத் தமிழை முதன்மைப்படுத்திக் கூறுவது வரவேற்புக்கு உரிய ஒன்றுதான். அதுவும் அமெரிக்க நாட்டில் அவர் அப்படிக் கூறியதோடு மட்டுமல்லாமல் சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பாடலின் வரிகளையும் தமிழிலேயே கூறி, அப்புலவர் 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் கூறியிருக்கிறார். இது அமெரிக்கப் பத்திரிக்கைகளில் எல்லாம் செய்தியாக வந்திருப்பதுடன், இந்தியாவின் புதிய கருத்தாகவும் மொழிக் கொள்கையாகவும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.

          தமிழுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உலகத்தின் அதிகாரத் தலைமை நாட்டினில் இப்படிக் கூறியிருப்பது மறுக்கவியலாத சான்றுகள் உறுதியானதால்தான் என்று நம்பலாம். தமிழின் அத்தனை வளங்களையும் தமதாக்கிக் கொண்ட சமஸ்கிருத மொழியைக் காட்டிலும், மூத்த மொழி தமிழ் மொழியே என்று இந்தியத் தலைமை அறிவிப்பதன் பின்னணியில் எத்தனையோ தவிர்க்கவியலாத அரசியல் இருக்கக்கூடும். ஆனாலும் ஏதோ ஒரு கட்டம் வரை நின்று நிதானித்து உண்மையைப் பட்டவர்த்தனமாக அறிவிக்கும் இந்நிலைக்கு, இப்படிப்பட்ட அகழ்வாய்வுகளின் வழி வெளிப்படும் அறிவியல் பூர்வமான உண்மைகளும், அதை அக்கால இலக்கியங்களில் பாடிவைத்துத் தமிழர்களின் வாழ்வியலை எழுதப்பட்ட வடிவில் தரும் சங்க இலக்கியங்களுமே காரணம் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். இந்த உணர்வுதான் அகழ்வாய்வின் இடங்களையும், கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாப் பொருட்களையும் காப்பாற்றித் தமிழர் வாழ்வும், சங்க இலக்கியமும் ஒன்றே என உலகம் அதிர முழங்க வைக்கும்.சான்றுகள்:
1. கீழடி – வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 2019.
2. உலகத்தமிழ் மாநாடு – சிகாகோ, ஜூலை, 4 – 7 தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகள்.
3. சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை 27 – 28, செப்டம்பர் 2019 ஆகிய நாட்களில் நடத்திய கல்வெட்டியல் கருத்தரங்கச் சொற்பொழிவுகள். 
4. இந்தியத் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் நேர்காணல் – 27.09.2019.
5. இந்தியத் தொல்லியல்துறை ஆய்வாளர் எஸ். ராஜவேலு அவர்களுடன் நேர்காணல் – 28.09.2019.
6. ஒடிசா அரசின் ஆலோசகர் திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (சிந்துவெளி ஆய்வாளர்). அவர்களுடன் நேர்காணல் – 28.09.2019.
7. சங்க இலக்கிய நூல்கள்.
8. ஐம்பெரும், ஐஞ்சிறுங் காப்பியங்கள்.
தொடர்பு: முனைவர் புதுவை சிவ. இளங்கோ (ilangosiva57@gmail.com)Saturday, November 23, 2019

தீ நாக்கு

தீ நாக்கு

 ——   குமரி ஆதவன்முலை திருகியெறிந்து
தீ பரப்பி நீதி கேட்டாள் ஒருத்தி

தீ எரியும் நாக்கோடு
ஊர் எரித்துப்போனாள் மற்றொருத்தி
அதே நாக்கால்
நாடெரித்துப்போனான் வேறொருவன்

எரித்ததில் எரிந்தது அநீதி
என்றாள் ஒற்றை முலைச்சி
எரித்ததில் எரிந்தான் எதிரி
என்றாள் மற்றொருத்தி
எரித்ததில் எரிந்தது மிலேச்சர்
என்றான் வேறொருவன்

ஒற்றை முலைச்சி
கணவனோடு வானகம் போனபிறகு
நீதிக்காய் முலைதிருகி எறியவும்
அநீதி எரிக்கவும்
எவரும் துணியவில்லை
தீ நாக்கர் மட்டும்
எரிப்பதை நிறுத்தவில்லை!

சொல்லெறிய செலவில்லை
எரிந்தால் வழக்கில்லை
தலைவெடித்து வந்தவன்
தாறுமாறானால் தவறில்லை
தாய் தகப்பனுக்குப் பிறக்காமல்
ஆணுடல் வெடித்து வந்ததால்
இரக்கமென்றொருபொருள்
இல்லாமல் போனார்
இதயமும் இல்லாதுபோனார்

மனித நாக்கு தீ நாக்கானபின்
திசையெல்லாம் எரிகிறது
நீதியெல்லாம் சாகிறது!
மண்ணுக்குச் சொந்தக்காரர்
மடிகிறார்
பிழைப்புக்கு வந்தவர் வாழ்கிறார்
ஆடு மாடு மேய்த்தவன் கையில்
கோல் வந்தது
ஆடு மாட்டோடு ஆண்டவனும் 
அடிமையானான்

வானகம் போன
ஒற்றை முலைச்சி
ஒருநாள் பூமிக்கு வருவாள்
கோபம்தாளாமல்
மறுமுலை திருகி எறிவாள்
எரியும் தீயில்
தீ நாக்கு எரியும்
தீமையும் எரியும்!


Sunday, November 17, 2019

யுகப்போர்

யுகப்போர்

——   சி. ஜெயபாரதன்


ஆகாவென் றெழுந்தது  யுகப்போர் ! 
பூகோளம்  சூடேறும் ! 
பேரளவு வெள்ளம் ஓடும் !
பேய்மழைப் பூதம்
வாய் பிளக்கும் !
கடல் உயரம் எழும் !
கடல் உஷ்ணம் ஏறும் !
வீடுகள் மூழ்கின !
வீதிகள் நதியாயின !
பாதைகள் மறைந்தன !
பாலங்கள் முறிந்தன !
நாடு, நகரம், வீடு யாவும்
ஓடும்  ஆற்றில்
ஓடங்கள் ஆயின !
சீர்வளச் செல்வம் யாவும்
நீரோட்  டத்தால்
பாழ்பட்டுப் போயின !
இயற்கையும் மனித
செயற்கையும்  சேர்ந்து  அழித்தன !
பெரு நிதி வேண்டும்
திரும்பிப் பெற.
மனிதர்
விழித்துக் கொண்டார் !
யுகப் போரைத்
தகர்க்க
ஒன்று சேர்ந்தார் !  மனத்தில்
உறுதி கொண்டார்.
தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)Saturday, November 16, 2019

அதியரும் கொங்குநாடும்

அதியரும் கொங்குநாடும்

 ——    துரை.சுந்தரம்   


வாணவராயர் அறக்கட்டளைச் சொற்பொழிவு:
          கோவையில், மாதந்தோறும், வாணவராயர் அறக்கட்டளையினர் ஏற்பாட்டில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. பெரும்பாலும் அவை, வரலாறு தொடர்புடையனவாக அமைவது வழக்கம். அவ்வகையில், 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்கள் அதியரும் கொங்குநாடும் என்றத் தலைப்பில் உரையாற்றினார்.  அது பற்றிய ஒரு பதிவு இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

முனைவர் நா. மார்க்சிய காந்தி:
          முனைவர் நா. மார்க்சிய காந்தி அவர்கள் தமிழகத் தொல்லியல் துறையில் சேர்ந்து பணியாற்றிய முதல் பெண்மணி என்பது சிறப்புக்குரியது. இச்செய்தியை அவர், 2014-ஆம் ஆண்டு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ஆற்றிய உரையில் சுவையாகக் குறிப்பிடுகிறார்.  கல்வெட்டுத் துறை அவரை எவ்வாறு ஈர்த்துப் பிடித்தது என்பதை அவர் கூற்றிலேயே இங்கு காணலாம். அவருடைய உரையில் உளம் திறந்த ஒரு நேர்மையும் எளிமையும் காணக்கிடைக்கின்றன. இந்த முழு உரையையும் கேட்பவர் கல்வெட்டியலில் ஆர்வம் கொள்ளாமல் இருக்க இயலாது.

          “ தமிழ் படித்துவிட்டு இந்தத் துறைக்கு வந்ததே ஒரு கொடுப்பினை. 1972-73 காலகட்டத்தில், கல்வெட்டுகள் படிப்பதில் ஆற்றல் உடையவர்கள் மட்டுமல்ல, படிக்கத் தெரிந்தவர்களாகக்கூட விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்தனர். தில்லியில் “தொல்லியல் பள்ளி” (SCHOOL OF ARCHAEOLOGY) என்னும் ஒரு பயிற்சி நிறுவனம் மட்டிலுமே இருந்தது. சமற்கிருதம் அல்லது வரலாறு படித்தவர்கள் மட்டுமே அதில் சேர்ந்து பயிலமுடியும். பிற மொழிப் படிப்புப் படித்தவர்க்கு அங்கு இடமில்லை. இந்திய அளவிலான கல்வெட்டுகளின் எண்ணிக்கையில், தமிழ்நாட்டில் மட்டுமே ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் கல்வெட்டுகள் இருக்கும் நிலை. இந்தப் புரிதலில், கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் திரு. நாகசாமி அவர்கள் ஏற்படுத்தினார். தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றில் விருப்பமுடைய முதுகலைத் தமிழ் மாணவர்களைச் சேர்ப்பது பயிற்சியை மகிழ்ச்சியோடு செய்வதாக இருக்கும் என்ற புரிதலில், தமிழ் முதுகலைப் படிப்புப் படித்தவர்கள் சேரலாம் என்ற நிலையை அவர் உருவாக்கினார். ஆண்டுக்கு எட்டுபேர் சேர்ப்பதாகத் திட்டம். பயிற்சி  நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே நான் படித்தேன். பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள்ளேயே, இந்த அறிவுப்புலத்துக்குக் கிடைத்த அறிமுகம் பிடிவாதமாய் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டது. வேறு வாய்ப்புகள் கிடைத்தும் இதை விட்டுப் போக இயலவில்லை. தமிழ் நாட்டில் உள்ள கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்துகொள்ளவே வாழ்நாள் போதாது. ”

          இனி, கோவை உரையிலிருந்து…….

கொங்கு நாட்டு அதியர்கள்:
          பழங்காலத்தில், கொங்குநாட்டில் சிறு சிறு தலைவர்கள் மிகுதியும் இருந்தனர். இவர்கள், குடி மரபுத் தலைவர்கள், ஊர்க்கிழார்கள் எனப் பல பெயர்களால் அறியப்பட்டவர்கள். அவ்வாறான தலைவர் மரபுகளுள் சிறந்த ஒரு மரபு அதியர் மரபு. சங்க நூல்களில் அதியரைப் பற்றிய பாடல்கள் என நாற்பத்து நான்கு உள்ளன. மூவேந்தர்களை அடுத்த ஒரு நிலையில் வைத்துப் பாடப்பெற்ற தலைவர்கள் அதியர் ஆவர். தமிழகத்தின் வடவெல்லையில் அவர்களது இருப்பிடம் அமைந்திருந்தது. மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் இணையும் பகுதி அவர்கள் பகுதி. கனிம வளங்களும், காட்டு வளங்களும் நிறைந்த பகுதி. மலைபடு பொருள்களின் வளத்தால் வணிக வழிகள் நிறைந்த பகுதியாகத் திகழ்ந்தது. குறு நாடு என்னும் நாமக்கல் பகுதி அதியர் நாடாக அறியப்படுகிறது.

நடுகல் வழிபாடு:
          இடைக்காலத்தைச் சேர்ந்த சமண, பௌத்தத் தடயங்கள் இங்குக் கிடைத்துள்ளன. நடுகல் வழிபாடு மிகுதியாக இருந்த பகுதி அதியர் பகுதி. பூசல் என்னும் சிறு போர்கள் மிகுதியும் நிகழ்ந்துள்ளன. எனவே, நடுகற்களும் மிகுதி. நடுகற்களில் அதிய மரபுத் தலைவர்கள் பேசப்படுகிறார்கள். ஒட்டம்பட்டி, இருளப்பட்டி ஆகிய ஊர்களில் இவ்வகை நடுகற்கள் உள்ளன.

குடைவரைக் கோயில்:
          பல்லவர், பாண்டியர் போன்று அதியரும் 6-7-ஆம் நூற்றாண்டில் நாமக்கல் பகுதியில் வைணவம் சார்ந்த குடைவரைக் கோயிலை எழுப்பியிருக்கிறார்கள்.

கங்கரோடு போர்:
          கங்கர்கள் தர்மபுரியைத் தாண்டிப் படையெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அதியரைத் தாக்கியுள்ளனர். ஆனால், அதியர் கங்கரை அடிப்படுத்தினர்தலைக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் எல்லைக்காவல் பணி அதியர் பணியாக இருந்தது.

சோழர் தொடர்பு:
          குறும்பனையூர் அதியன் ஒருவன், திறை கொடாது சோழரை எதிர்த்த செய்தி பெரியபுராணத்தில் காணப்படுகிறது.  அதியர், அரசியல் அறிவு நிரம்பப்பெற்றவர்கள்; சோழர், அதியர்களிடம் பெண்ணெடுக்கும் வகையில் சோழருடன் உறவு பேணப்பட்டது. பதிற்றுப்பத்தில் அதியர், வேளிர் குடியில் பெண்ணெடுத்த செய்திக் குறிப்பு உள்ளது. அதியரும் சேரரும் மழவர் என்று போற்றப்படுகின்றனர். வீரமும் இளமையும் உள்ளவர் மழவர். சோழர்களின் வீழ்ச்சிக் காலமான 12-13-ஆம் நூற்றாண்டில் அதியர் சிற்றரசர்களாய்த் திகழ்ந்தனர். அதியமானார் என்னும் பெயருடன் சோழ அரசர் போலத் தோற்றம் கொண்டிருந்தனர்.  இராஜராஜ அதியமான் என்னும் பெயரும், விடுகாதழகிய பெருமாள்  என்னும் பெயரும் அறியப்படுகின்றன. இராஜராஜ அதியமானின் மகன் விடுகாதழகிய பெருமாள் என்று கூறப்படுகிறது. பேரரசர்கள், அதியரைப் பயன்படுத்தி -  அதியர் துணையுடன் -  போசளரைத் தடுக்கின்றனர். 

சமணத்துக்கு ஆதரவு:
          அதியர் சமணர்களுக்கு ஆதரவு தந்தவர்கள். வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருமலையில் அதியர் கல்வெட்டு உள்ளது. கோட்டைக் கோயிலுக்கு அதியனே நேரில் வந்து நீர்வார்த்து நிவந்தங்கள் அளித்திருக்கிறான். எழினி, அஞ்சி ஆகியவை சங்ககாலத்தில் அதியருக்கு வழங்கிய பெயர்களாகும். புகழ் பெற்ற ஜம்பை பிராமிக்கல்வெட்டில் அஞ்சி என்னும் பெயர் உள்ளது.
          ”ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி
என்பது கல்வெட்டு வரி. “ஸதியபுதோ”  என்பதில் உள்ள ’சதிய’  என்னும் சொல், தொல் திராவிடமொழிச் சொல் வடிவமாகும். ‘அதிய’ என்பதன் பழம் வடிவம். “ஸதியபுதோ”  என்னும் சொல் மௌரியப் பேரரசன் அசோகனின் கல்வெட்டில் காணப்படும் பிராகிருதச் சொல்லாகும்.  மௌரியர்கள் மலைகளில் வழியை அமைத்துக்கொண்டு வந்தார்கள் என்னும் குறிப்பு சங்க நூல்களில் காணப்படுகிறது.

நாமக்கல் குடைவரைக் கோயில்:
          அதியர், நாமக்கல்லில் இரண்டு குடைவரைக் கோயில்களை எழுப்பியுள்ளனர். நாமக்கல்லின் பழம்பெயர் திரு ஆலைக்கல் என்பதாகும். கி.பி. 860-இல் இக்குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டன. இரண்டுமே வைணவக் கோயில்கள். ஒன்றில் பால நரசிம்மர் அமைதியான தோற்றத்துடன்.  ஹரிஹர மூர்த்தியின் உருவமும் இதில் உள்ளது. இன்னொன்றில் அனந்த சயனச் சிற்பம். பல்லவர், பாண்டியர் கால அனந்த சயனச் சிற்பங்களில் காணப்படாத ஒரு சிறப்புக்கூறு இந்தச் சிற்பத்தில் காணலாம். நாகத்தின் முகத்தில் சிம்ம முகம் இருப்பதே அச்சிறப்புக்கூறு. திருமாலின் ஆயுதங்கள் மனித உருவமாக வடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் கீழே பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது. இங்கு வாமனச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. வாமனச் சிற்பத்தைச் சுற்றிலும் பல உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவை மார்க்கண்டேய புராணத்தில் வரும் பாத்திரங்களாகும்.  மாவலிச் சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது வாமன அவதாரம் நிகழ்ந்தது. எனவே, வாமனர் சிற்பத்தொகுதியில் குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. 

பல்லவ கிரந்தம்:
          நாமக்கல் குடைவரைக் கோயிலில் பல்லவ கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.  கோயிலின் பெயர் “அதியேந்திர விஷ்ணுகிருகம்”. இது பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. அதியனின் சிறப்புப் பெயரான “அதிய அன்மயன்”  என்னும் பெயரும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சமற்கிருதப் பெயரான “அதிய அன்மய”  என்பது தமிழ்ப்பெயர்களில் உள்ள “அன்”  விகுதி சேர்த்து எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற குடைவரைக் கோயில்கள்:
          தான்தோன்றி மலையில் உள்ள முழுமை பெறாத அரைகுறைக் குடைவரைக் கோயில் அதியர் பணி எனக் கருதப்படுகிறது. இதுவும் ஒரு வைணவக் கோயிலாகும். கோயிலின் பூதவரி  பார்க்கும்படியுள்ளது.

          கூத்தம்பூண்டியிலும் முழுமை பெறாத ஒரு குடைவரைக்கோயில் உள்ளது. இதுவும் அதியர் பணியே.

அதியரின் இறுதிக்காலம்:
          தலைக்காட்டுப் பகுதியில் நடந்த ஒரு போர் பற்றிய கல்வெட்டில் அதியமான் ஒருவனின் பெயரும், அவன் போரில் இறந்த  செய்தியும் காணப்படுகிறது.  அதியரின் இறுதிக்காலங்களில் அதியமான் குலத்தவர், கொங்குச் சோழரின் கீழும், பாண்டியரின் கீழும் அதிகாரிகளாகப் பணியாற்றினர். 

முடிவாக:
          அதியர் வணிகத்தில் சிறந்தவராய்த் திகழ்ந்தனர். அதியர் காலத்தில் வணிக வழிகள் பல இருந்துள்ளமைக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. தகடூரிலிருந்து காஞ்சி வரையில் சென்ற ஒரு பெருவழி அதியமான் பெருவழி என்னும் பெயரால் வழங்கியது. மற்றொரு பெருவழி பற்றிய கல்வெட்டில் “நாவல் தாவளம் 27” என்னும் எழுத்துப்பொறிப்பு காணப்படுவதோடு “27”  "29" என்னும் எண்களைக்க் குறிக்கும் வகையில் குறியீட்டுக் குழிகள் செதுக்கப்பட்டுள்ளன.


 ‘அதியமான் பெருவழி’ நாவற் வளத்திற்கு காதம் 27, என்றும் 29 என்றும் குறிப்பிடும் இரு மைல் கற்கள் (காதக் கற்கள்) - படம் உதவி: தமிழக தொல்லியல் துறை

மற்றொரு கல்வெட்டில், “மகதேசன் பெருவழி”  என்னும் பெயர் காணப்படுகிறது.தொடர்பு: 
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.காலந்தோறும் திருத்தங்கல்

காலந்தோறும் திருத்தங்கல்

— முனைவர் ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
          தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியுடன் இணைந்துவிட்ட திருத்தங்கல் ஊராட்சிப்பகுதிக்கு சங்ககாலத்திலிருந்து தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. இன்று சிற்றூராக இருப்பினும் வரலாற்றுக் காலத்தில் புகழ்பெற்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக இருந்தது. இவ்வூரின் இருப்பிடமும் அதற்கு ஒரு காரணமாயிற்று.

மேலைநாட்டார் பயணக் குறிப்பில் தங்கால்:
          டாலமி தன் பயணக்குறிப்புகளில் தமிழகத்து உள்நாட்டு ஊர்களை வரிசைப்  படுத்துகிறார். அப்பட்டியலில் அவர் ‘தங்கலா’ என்று சுட்டுவது இன்றைய திருத்தங்கல் ஆகும். கடலோடி வாணிபம் செய்த மேலைநாட்டார் தமக்குப் பின் வரும் தலைமுறையினர்க்கு உதவும் வகையில் எழுதி வைத்த நிலவியல் குறிப்புகளில் இடம் பெறும் தகுதியைத் திருத்தங்கல் பெற்றிருந்தது.

சங்க இலக்கியத்தில் தங்கால்:
சங்க காலப் புலவர்கள் சிலரின் பெயர்கள் தங்கால் என்னும் அடையுடன் உள்ளன. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், தங்கால் பொற்கொல்லனார், தங்கால் பொற்கொல்லன் தாமோதரனார், தங்கால் பொற்கொல்லன் வெண்- நாகனார் ஆகிய புலவர் பெயர்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. இப்பெயர்களில் காணப்பெறும் தங்கால் என்பதே திருத்தங்கலின் பண்டைப் பெயர் வடிவமாகும். இன்றும் திருத்தங்கலில் உள்ள நூறடி உயரக் குன்றில் எழுந்தருளி இருக்கும் பெருமான் தங்காலப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவ்வூரின் சுற்று வட்டாரங்களில் பெண்களுக்குத் தங்காலம்மாள் எனப் பெயரிடும் வழக்கம் 20ம் நூற்றாண்டு வரை நிலவியது.

சிலப்பதிகாரத்தில் தங்கால்:
          கண்ணகி மதுரையை எரித்த போது; அவளுக்குப் பின் வந்து தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியன் பெருமையை உணர்த்தப் புகுங்கால்; தங்காலில் நிகழ்ந்ததாக ஒரு செய்தியைக் கூறியே தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. 

                    “செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர்
                    தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப்
                    பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து”
                    - (கட்டுரை காதை-74-76); என்றும்,

                    “தடம்புனற் கழனித் தங்கால்”
                    - (மேற்.- 118) என்றும்
இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதிலிருந்து அறியலாகும் செய்திகளாவன; தங்கால் பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அது மறையவர் மிகுந்த ஊர் ஆகும். அவ்வூரில் பசுமையான போதி மன்றம் ஒன்றும் இருந்தது. தங்காலருகே கழனிகள் வளம் பெறும் அளவுக்கு ஆறு ஒன்றும் ஓடியது. எனவே விளைச்சல் மிகுந்த ஊர் ஆகும். திருத்தங்கலை அடுத்து இன்று ஓடும்  அர்ச்சுனா நதி என்ற காட்டாறு பண்டு வளமான ஆறாக ஓடியது எனலாம். தி.செல்வக்கேசவராய முதலியார் தனது ‘கண்ணகி சரித்திரம்’ என்ற நூலில் இன்றைய திருத்தங்கலே பண்டைத் தங்கால் என்கிறார்.

          சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் என்பான் தமிழ் மறையோரைப் போற்றும் சேரனின் அவை சென்று தன் திறமையைக் காட்ட விரும்பினான். தன்னூர் விட்டுக் கிளம்பி; காடும் நாடும் ஊரும் போகி; நீடுநீர் மலயம் பிற்படச் சென்று; சேர நாட்டை அடைந்து; அங்கே வேந்தன் முன்னர் தன் நாவன்மை வெளிப்படும் படியாக மறையோதி மிக்க பரிசில்களைப் பெற்றான். தன் ஊர் திரும்பும் வழியில் தங்காலின் போதி மன்றத்தில் தங்கி இளைப்பாறினான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி;
                    “குண்டப் பார்ப்பீர் என்னோ டோதியென்
                    பண்டச்  சிறுபொதி கொண்டு போமின்”;
என்று அவன் அழைத்த போது; தக்கிணன் என்னும் சிறுவன் தன் மழலை மாறாமொழியில் மகிழ்ச்சி பொங்கப் பராசரனோடு ஒப்ப; வேத மந்திரங்களைக் குற்றமின்றி ஓதியமை கண்டு மனம் நெகிழ்ந்தான். தான் சேரனிடம் பரிசாகப் பெற்ற ஆபரணங்களை அவனுக்கு அணிவித்து மகிழ்ந்தான் பராசரன். பின்னர் தன் ஊர் நோக்கிப் பயணித்தான். தக்கிணன் திடீரென்று முத்தப்பூணூலும், பொற்கடகமும், தோடும் அணிவதைக் கண்ட அரசு அலுவலிளையர் ‘இவன் தந்தைக்குப் புதையல் கிடைத்துள்ளது; அதை அவன்  மன்னனுக்குக் கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டான்’ என்று அவனது தந்தை வார்த்திகனைச் சிறையில் இட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகையோ அழுதாள்; புரண்டாள்; தன் கணவன் எத்தவறும் செய்யவில்லை என்று அரற்றினாள்; ஏங்கினாள்; அவளது துன்பம் தெய்வத்தின் சந்நிதியை எட்டியது. மதுரையிலிருந்த கொற்றவை கோயில் கதவு திறக்க இயலாதபடி மூடிக் கொண்டது. செய்தி அறிந்த பாண்டிய மன்னன் மருண்டான். தன் செங்கோல் வளைந்ததென்று புரிந்துகொண்டான். ஏவலிளையர் மூலம் வார்த்திகன் அநியாயமாகச் சிறைப்படுத்தப்பட்டமை அறிந்தான். உடன் சிறைவீடு செய்தான். அது மட்டுமின்றித் தன் மார்பு நிலத்தில் தோய வார்த்திகன் முன்னர் வீழ்ந்து வணங்கினான். மாநகர் மதுரை முழுதும் கேட்கும்படியாகக் கொற்றவை கோயில் கதவு திறந்தது. ‘இனிமேல் பாண்டியநாட்டில் யாருக்குப் புதையல் கிடைத்தாலும் அது மன்னனுக்குரியது ஆகாது; எடுத்தவருக்கே சொந்தமாகும்’ என்று தன் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தினான். அச்சட்டத்  திருத்தத்தை முரசு முழக்கி அறிவித்தான். மேலும் வார்த்திகனுக்கு திருத்தங்கல் ஊரையும், வயலூரையும் தானமாகக் கொடுத்தான்.

          பாண்டியமன்னன் வார்த்திகனுக்கு அளித்த வயலூர் தன் பெயரிலேயே வளத்தைத் தாங்கி நிற்கிறது. வயலூர் என்ற பெயர் உருபாலியனியல் மாற்றங்கட்கு உட்பட்டுள்ளது. ஆற்றின் தென்கரையில் திருத்தங்கலும்; வடகரையில் வயலூரும் இருந்திருக்க வேண்டும். இன்றைய வெள்ளூரே இப்புவியியலுக்கு ஏற்ப அமைந்துள்ளது. பெயர்மாற்றத்தைப் பின் வருமாறு விளக்கலாம். மொழிமுதல் அகரம் எகரமாக மாறிப் பின் மொழியிடையில்  முதல் மெய் மறைந்து அடுத்த மெய் இரட்டித்துள்ளது.

          வயலூர் > வெயலூர் > வெல்லூர் > வெள்ளூர்
தமிழில் மொழிமுதல் அகரம் எகரமாக மாறும் போக்கை இன்றும் காணலாம்.

          கட்டியா > கெட்டியா எனும் பேச்சு வழக்கு மாற்றம் நோக்குக.
மொழியிடையில் இரண்டு மெய்கள் அடுத்தடுத்து இருப்பின் முதல் மெய் மறைந்து இரண்டாவது மெய் இரட்டிக்கும் போக்கு இடைக்கால இலக்கியங்களில் காண இயல்கிறது. சொர்ணம் > சொரனம் > சொன்னம்; பட்டினத்தாரின் திருவேகம்ப மாலை “சொன்ன விசாரம்”- (பா- 8) என்கிறது. ‘ல்ல்’ பேச்சு வழக்கில் ‘ள்ள்’ என்று கட்டிலாது மாறுவதை இன்றும் காண்கிறோம்.

          மெல்ல > மெள்ள
இங்ஙனம் வயலூர் > வெள்ளூர் என்ற மாற்றம் உருபொலியன் மாற்ற விதிகட்கு ஒத்து வருவதால் இன்றைய வெள்ளூரைப் பண்டைய வயலூர் எனல் தகும். ஒரு நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்றி வைக்கும் காரணி;  திருத்தங்கல் நிகழ்வு எனச் சொல்லக்கூடிய வகையில் கதையின் போக்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


பக்தி இலக்கியத்தில் தங்கால்:
          பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியில்;
          “தமர் உள்ளும் தஞ்சை தலைஅரங்கம் தண்கால்”- (பா- 70) என்று இவ்வூர் இடம்பெறுகிறது.
          திருமங்கை ஆழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில்;
          “தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி”- (பா- 17) என்று இவ்வூரைச் சிறப்பிக்கிறார்.

தன் சிறிய திருமடலில்;
          “பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்”- (அடி- 142) என வைணவப்  பதிகளின் வரிசையில் சேர்த்துள்ளார்.
அதற்குரிய வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ‘குளிர்ந்த காற்றுபோலே அடியாரின் சிரமங்களைத் தீர்க்கும் தன்மை உடையவன் என்றன்றோ தண்கால் என்று பெயராயிற்று’ என  இவ்வூரைப் பற்றிச் சிலாகித்து உரைக்கிறார்.

பெரியதிருமடலிலும்;
          “தண்கால் திறல்வலிமை”- (அடி- 240) என்று இவ்வூர் சிறப்பிடம் பெறுகிறது.

அத்துடன் பெரிய திருமொழி;
          “பேரானைக் குறுங்குடியெம் பெருமானைத் திருத்தண்கால்  ஊரானைக்”- (5ம் பத்து- 6ம் பா)
காண்பது பற்றிப் பெருமை பேசுகிறது.  இங்கு தங்காலுடன் ‘திரு’ என்னும் அடைமொழி சேர்ந்துள்ளமை நோக்கத்தக்கது.

கல்வெட்டுக்களில் தங்கால்:
          தங்கால் குன்றில் பள்ளிகொண்ட பெருமாளுடன் ஒரு குடைவரையும், திருநின்ற நாராயணப்பெருமாள் கோயிலும், கருநெல்லிநாத சுவாமி கோயிலும், காலத்தால் பிற்பட்ட முருகன் கோயிலும் உள்ளன. இத்தலம் பெருமாளுக்குரிய 108திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். மேற்சுட்டிய கோயில்களுள் மொத்தம் 39 கல்வெட்டுகள் உள்ளன. தொல்லியல் ஆய்வுத்துறை படியெடுத்த அவற்றுள் கோயிலின் வரலாறும்; அதைச்சார்ந்த ஊரின் வரலாறும் விளக்கம்  பெறுகின்றன. ‘கருநிலக்குடிநாட்டுத் திருத்தங்கல்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய மல்லி, ஆனையூர், வடபட்டி, பெரியகுளம், பனையூர் முதலிய இடப் பெயர்களையும் காண இயல்கிறது. இக்கோயில் பற்றி ஆய்வு செய்த முனைவர் திருமதி இரத்தின மாலா சந்திரசேகரன் அவர்கள்; திருநின்ற நாராயணப்பெருமாள் சந்நிதிக்கு எதிரே மகாமண்டபத் தரையில் பாண்டியன் மாறன் சடையன் காலத்தில் வெட்டப்பட்டுக் கண்டெடுத்த வட்டெழுத்துக் கல்வெட்டே காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். கருநெல்லிநாத சுவாமி கருவறையின் வடக்குச் சுவரிலுள்ள கல்வெட்டு இறைவனைத் திருநெல்வேலி நாதன் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஊரின் ஒருபகுதி பள்ளிச்சந்தமாக வழங்கப்பட்டு இருந்ததெனச் சொல்லும் கல்வெட்டும் உண்டு. சோழன் உய்யநின்றாடுவானான குருகுலத்தரையன் என்னும் அதிகாரி செய்த திருப்பணிகள் பல.

புராணங்களில் தங்கால்:
          வடமொழியில் எழுதப்பட்ட இத்தலம் பற்றிய புராணத்தை M.R.ஸ்ரீனிவாச ஐயங்கார் தமிழில் ‘திருத்தங்கல் ஸ்தலபுராண வசனம்’ எனத் தமிழாக்கம் செய்துள்ளார். ‘திருமகள் தங்கும் இடமாதலால் திருத்தங்கல்’ என்று பெயர்க் காரணம் கூறுகிறார். நூலினுள்ளே தங்கால் என்னும் பெயரைப் பலமுறை எடுத்தாண்டுள்ளார். N.S. தாத்தாச்சாரியார் திருத்தங்கல் தல வரலாறு ஒன்றை எழுதியுள்ளார். ‘ஸ்ரீதேவி அரிய தவம் இயற்றிய இடம் ஆதலால் ஸ்ரீக்ஷேத்திரம்’ என்பது அவர் தரும் விளக்கம். திருப்பதி நாராயணப்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமணம் காணச் செல்லும் பொழுது இருட்டிவிடவே; வழியில் இவ்விடத்தில் தங்கியதால் திருத்தங்கல் என்று பெயர் பெற்றதென இராமநாதபுர மாவட்ட விபரத் தொகுப்பு கூறுகிறது. அத்தொகுப்பில் ஈசன் இருநெல்லிநாதன் என்றும் சுட்டப்படுகிறான்.

மூவேந்தர் நாடுகளை இணைத்த வழியில் தங்கால்:
          சேரநாட்டையும் சோழநாட்டையும் இணைத்த ஒரு பாதையின் இடையில் தங்கால் இருந்தது. சேரநாட்டிலிருந்து சோழபாண்டிய நாடுகளுக்குச் செல்லப் பதினெட்டுக் கணவாய்கள் இருந்தன என்று விக்கிரம சோழன் உலா சொல்கிறது.
                    “....................................................தூதற்காப்
                    பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும்
                    கொண்டு மலைநாடு கொண்டோனும்”- (அடி.- 32-34)
எனும் பகுதி  நோக்கற்குரியது. பதினோராம் நூற்றாண்டில் தன் ஒற்றன் பொருட்டு உதகை என்று அழைக்கப்பட்ட வஞ்சிமாநகரத்தை அழித்த ராஜராஜ சோழன் பதினெட்டுக் கணவாய்கள் வழியாகச் சேரநாட்டைத் தாக்கித் தனதாக்கினான் என்று சேரநாடும் செந்தமிழும் பற்றிப் பேசும் செ.சதாசிவம் கூறியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக்  காலத்தில் பேருந்து வழித்தடங்களும், தொடர்வண்டித் தடங்களும் மலிய;  போக்குவரத்து ஒழிந்ததால் கணவாய்கள் தூர்ந்து விட்டன. திருத்தங்கலுக்குத் தென்மேற்கே இராஜபாளையம் அருகே பல்லிளிச்சான் கணவாயும், வடமேற்கே கூமாபட்டிக் கணவாயும் இருந்தமை பொதுமக்கள் வழக்கிலிருந்து அறியும் செய்தி ஆகும். சிலப்பதிகாரக் கதாபாத்திரம் ஆகிய பராசரன் இக்கணவாய்களுள் ஒன்றன் வழியாகத் திருத்தங்கல் அடைந்தான் என்று கதை சொல்வது அறிவாராய்ச்சிக்கு ஏற்புடைய செய்தியே ஆகும்.

முடிவுரை:
          வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரை திருத்தங்கல் பல பெருமை பெற்றுச் சமய அரசியல் மாற்றங்கட்கு உட்பட்டமை இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டிய ஆய்வாகும்.


குறிப்பு:
அந்ஜா கல்லூரி இலக்கிய மன்றக் கூட்டத்தில்  ஆற்றிய  "காலந்தோறும் திருத்தங்கல்" என்ற உரையின் சாரம் தான்இக்கட்டுரை.
தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி
Thursday, November 14, 2019

பிரம்மதேசக் கோயில் கல்வெட்டுகள் தரும் செய்திகள்

ச.பாலமுருகன்          தமிழகத்தின் முக்கிய ஆறாகவும் பழங்கால மக்கள் வாழ்ந்த தடயங்களைக்கொண்டதாகவும் விளங்குவது பாலாறு ஆகும். பிரம்மதேசம் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இப்பாலாற்றின் கரையில் அமைந்துள்ள மற்றொரு ஊரான பில்லாந்தாங்கல் என்ற ஊரில் பழங்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கருவிகள், கோடரிகள், கத்திகள் போன்ற பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றை நோக்கும் போது இவ்வூரும் பழங்காலந்தொட்டே மக்கள் வசிக்கும் ஊராக இருந்திருக்கலாம். மேலும் இவ்வூர்க் கல்வெட்டுகளில் இவ்வூர் முக்கிய வழித்தடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுவதால் இது மக்கள் போக்குவரத்து, வணிகம், விவசாயம் ஆகியவற்றில் சிறந்த ஊராக பண்டைய காலத்திலிருந்திருக்க வேண்டும். 
          வரலாற்றுக்கால தொடக்கக் காலமான சங்ககாலம், சங்கம் மருவிய காலச் சான்றுகள் நேரடியாகக் கிடைக்கப்பெறவில்லை எனினும், இவ்வூர் 9 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து முக்கிய வழிபாட்டு இடமாக இருந்துள்ளது. இங்குள்ள இரண்டு பண்டைய கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரின் வரலாற்றை மிக அழகாக விளக்குகின்றன. 

பிரம்மதேசத்தின் கல்வெட்டுகள்:
          இவ்வூரில் மொத்தம் 90 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் கல்யாணவரதர் கோயிலில் ஒன்றும், செல்லியம்மன் கோயிலில் ஒன்றும், சந்திரமௌலீஸ்வரர் கோயிலின் வெளிப்புறத்தில் ஒன்றும், உருத்திர கோட்டீஸ்வரர் கோயிலில் நான்கும் மற்றவை சந்திரமௌலீஸ்வரர் கோயிலிலும் உள்ளன.  இக்கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது பல்லவர் காலத்துக் கல்வெட்டு ஆகும்.  கம்பவர்மன் காலத்தில் (பொ.ஆ.866) கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கப்பெறும் பழைய கல்வெட்டு ஆகும். அரசர்கள்:
          பிரம்மதேசம் கோயில் கல்வெட்டுகளில் பல்லவ அரசர் கம்பவர்மன், சோழ அரசர்களில் ஆதித்தியன், பராந்தக சோழன், சுந்தரசோழன், பார்த்திவேந்திரவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன், வீரகம்பண்ணன் ஆகியோரது கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் வீர கம்பண உடையாரின் கல்வெட்டே காலத்தால் பிந்தியதாகும். 

ஆட்சிப்பகுதி:
          தொண்டை மண்டலத்தின் அமைந்துள்ள பிரம்மதேசம் கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு கரைக்கோட்ட பிரம்மதேயம் என்று குறிப்பிடுகிறது. இதில் ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்பது சோழர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிப்பிரிவாகும். தாமர் கோட்டம் என்பது தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களுள் ஒன்றாகும். (தாமர் என்பது தற்போது தாமல் என்ற பெயராலே வழங்கப்படுகிறது) தாமர் நாடு என்பது தாமர் கோட்டத்தில் உள்ள பல நாடுகளில் இதுவும் ஒன்றாகும். ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்ற ஆட்சிப்பிரிவு 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலிருந்து குறிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய கல்வெட்டுகளில் தாமர்கோட்டம் மட்டுமே குறிக்கப்படுகிறது. மேலும் இவ்வகைப்பாட்டில் பற்று என்ற வருவாய்ப்பிரிவு இவ்வூர் கல்வெட்டுகளில் அதிகம் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கோட்டங்கள்
          பிரம்மதேசம் தாமர் கோட்டத்தில் உள்ள ஒரு பிரிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவ்வூர் கோயிலுக்கு அளித்த கொடைகளைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகளில் பல்வேறு கோட்டங்களிலிருந்து கொடைகள் வரப்பெற்றுள்ளன. குறிப்பாக படுவூர் கோட்டம், புலியூர் கோட்டம், சோழநாட்டுக் கிழார் கூற்றம், ஊற்றுக்காடு கோட்டம், வெண்குன்றக்கோட்டம், புறழ்கோட்டம், செங்காட்டுக் கோட்டம், காலியூர் கோட்டம் போன்றனவாகும்.  இதுபோல நாட்டுப்பிரிவுகளில் இன்னம்பர் நாடு, சக்ரப்பாடி, நீர்வேளுர்நாடு, மழநாடு, இங்கநாடு, உம்பர்நாடு, புலியூர்நாடு, பெரும்பாணப்பாடி நாடு, படுவூர்நாடு போன்றவையும் ஊர் என்ற பிரிவில் சங்கரப்பாடி, மாங்காடு, விதியூர், நெல்வேலி, வள்ளிவயம், இலங்காடு, தும்பூர், திரைராஜ்யகடிகா, தில்லைச்சேரி, அறியூர், மும்முடிச்சோழபுரம், பறியலூர், குண்டூர், ஆற்றூர், மயிலாப்பூர், காந்தப்புர பேட்டை  போன்றன. இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் கோட்டங்கள் காவிரி வடகரையிலிருந்து தொண்டைமண்டலத்தின் வடஎல்லை வரை நீண்ட பகுதிக்குள் அமைந்துள்ளன.  இக்கோயில் மிக்க புகழ்பெற்றிருந்தது என்பதாலேயே இவ்வளவு பெரும் பரப்பிலிருந்து பல்வேறு சமூகப் பிரிவிலிருந்து கொடைகள் பெற்றுத் திகழ்ந்தது. 

ஊர்ச்சபைகள்:
          சோழர் கால ஆட்சியின் முக்கியச்சிறப்பாகக் கருதப்படுவது ஊர்ச்சபைகள் அல்லது குழுக்களின் உருவாக்கமும் அதன் செயல்பாடும் ஆகும். சங்க காலத்தில் இனக்குழுவாக இருந்த மனித சமூகம் வேளாண்மை, நெசவு, சிற்பக்கலை, ஓவியக்கலை உள்ளிட்ட துறைகள் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. சோழர்காலத்தில் உச்சநிலையை அடைந்த இக்கலைகளுடன் ஊர் உருவாக்கம், கோயில்கள், தெருக்கள், ஏரிகள், மடங்கள், அன்னசத்திரங்கள், பாசனவசதி, நில அளவீடுகள்  போன்ற மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் உருவாகி நிலைபெற்றன. ஊரில் உருவான சமுதாய சொத்துக்களைப் பராமரிக்கவும், கோயிலில் தொடர்ந்து பூசைகள், வழிபாடுகள் நடைபெறவும், ஊர் அளவிலான குழுக்களும் சபைகளும் தோன்றி துறைவாரியான பணிகளை மேற்கொண்ட தகவல்கள் கல்வெட்டுகளில் காணலாம். 

          பிரம்மதேசம் என்ற ஊர் தற்போது சிறிய ஊராட்சியாக உள்ளது. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியின் நிர்வாகம் செய்யக்கூடிய அலகாக அமைந்திருந்தது. இவ்வூரில் பல்வேறு குழுக்களும் வாரியங்களும் செயல்பட்ட விவரங்கள் கல்வெட்டில் காணக்கிடைக்கின்றன. பொதுவாக ஊரில் உள்ள சபை ஊரின் செல்வந்தர்களால் அல்லது பிராமணர்களால் அமையப்பெற்றிருக்கும். இச்சபையின் கீழ் பல வாரியங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. 

          பிரம்மதேசம் கல்வெட்டில் பெருங்குறி மகாசபை என்ற அமைப்பு முக்கியத்துவம் பெற்ற ஒரு சபையாகக் குறிக்கப்பட்டுள்ளது. இச்சபை ஊரில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்துச் செயல்பட்டுள்ளது.  இச்சபை புளியமரத்தின் கீழ் கூடிய முடிவெடுத்தது பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சபையின் கீழ் அல்லது இது போன்ற பிற சபைகளான கம்மாளர்சபை, ஆளுங்காணத்து குழு, கணவாரியப் பெருமக்கள், ஏரிவாரியப் பெருமக்கள், கிராமந்தர் என்ற நீர்பாசனப்பிரிவு, இவற்றுடன் அஞ்சஷட்டசதத்து சபை என்கிற நாலாயிரவர் சபை போன்றவை கல்வெட்டுகளில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு கோட்டங்களிலிருந்து வரும் கொடைகளைப் பெற்று அதை வாரியங்கள் வாரியாக செயல்படுத்தும் பணியை இச்சபைகள் செய்கின்றன.  இச்சபைகள் ஊரின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைப்பாகவும் நிர்வாக அலகாகவும் செயல்பட்டது பற்றி அறியலாம். கச்சி ஏகம்பத்து திருவுண்ணாழிகை சபை பற்றிய குறிப்பும் உள்ளது. இக்குழுக்களின் உறுப்பினர் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. 

ஏரிகள்:
          மக்கள் வாழ்க்கையில் உயிர்நாடியாகத் திகழ்வது நீர். இந்நீரைச் சேமிக்கவும் பயன்படுத்தவும் ஆதி காலத்திலிருந்தே மக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். ஆதிகால மக்கள் நீர் இருக்கும் இடமான ஆற்றங்கரையிலே தங்களது குடும்பங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். பின்னர் வேளாண்மை பெருகிய போது ஆற்றிலிருந்து நீரைத் தொலை தூரத்திற்குக் கொண்டு செல்ல வாய்க்கால்களையும் அந்நீரைச் சேமிக்க ஏரிகளையும் வெட்டினர். தொண்டை மண்டலப்பகுதியில் பாலாறு, தென்பெண்ணையாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் இருந்தாலும் அவற்றில் ஆண்டு முழுக்க நீர் இருக்காது என்பதாலும் மழை குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே பெய்யும் என்பதாலும் நீரைச் சேமிக்க ஏரி, குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளைத் தமிழர்கள் அமைத்தனர். அதில் முக்கியமான பாசன ஆதாரமாக விளங்குவது ஏரி. சோழர்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் உருவாக்கம் பெற்றது பற்றிப் பல கல்வெட்டுகளில் காணலாம். 
          பிரம்மதேசம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் என்பதால் அவ்வாற்றிலிருந்து நீர் கொண்டு வந்த சேர்க்க போதிய நீர் ஆதாரங்களை அமைக்கத் தேவையேற்பட்டதன் விளைவாக அவ்வூரில் பல ஏரிகள் வெட்டுவித்துப் பயன்படுத்தப்பட்ட தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவ்வூரில் திகைத்திறல் ஏரி, பனையுடைநல்லூர் ஏரி, குந்தவை பேரேரி, வீரமாதேவி பேரேரி, இராசேந்திரசோழப் பேரேரி, சுந்தரசோழப் பேரேரி, தூரேரி, கடப்பேரி, சம்புவராயர் பேரேரி, மதுராந்தகப் பேரேரி  என்ற ஏரிகள் பற்றிய குறிப்புகளும் பரமேசுவர வாய்க்கால், ராமவாய்க்கால், சோழபாண்டிய வாய்க்கால் போன்ற வாய்க்கால்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழபாண்டிய பேராறு, திருவெக்கா ஆறு, வேகவதி ஆறு போன்ற ஆறுகளின் பெயர்களின் இக்கல்வெட்டுகளில் காணலாம். 

விழாக்கள்:
          கோயில் உள்ள ஊர்களில் திருவிழாவிற்குப் பஞ்சம் இருக்காது. பிரம்மதேசத்தில் பல்வேறு கோயில்களுள்ளன. இக்கோயில்களில் பெருவீற்றை நாள்விழா, திருவோணம், ஐப்பசித்திருநாள் போன்ற விழாக்கள் நடைபெற்றது பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் கோயிலில் வழிபாட்டிற்குப் பயன்படுத்திய படையல் பற்றியக் குறிப்புகளும் காணப்படுகின்றன. அவை, இலைக்கறி, நெய், தயிர், பாக்கு, வெற்றிலை, மோர், மிளகுக்கறி, புளிக்கறி, சர்க்கரை ஆகியனவாம். 

ஊரமைப்பு:
          ஊரில் கோயில்களும் சாலைகளும், தெருக்களும் பொது இடங்களும் இருந்ததைப்பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரம்மதேசத்தில் ஆறாங்கட்டளைத்திருவீதி, பெருந்தெரு என்று தெருக்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாங்ககட்டளைத்திருவீதி என்று குறிக்கப்பட்டிருப்பதால் இவ்வூரில் இதேபோன்று ஆறு தெருக்கள் இருந்தன என்பதை அறியலாம். மேலும் இவ்வூரில் தெண்ணாயிரவர் மடம், பவித்ரமாணிக்க மடம், ஜனநாதன் மண்டபம் ஆகியன அமைந்திருந்ததைப்பற்றியும் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். 

அளவைகள்:
          தமிழர்களின் எண்ணியல் அறிவு பற்றிய அறிய சோழர்காலத்துக் கல்வெட்டுகள் மிக்க பயனுடையதாக உள்ளன. தமிழ் எண்ணியலில் மேலிலக்க எண்கள், கீழிலக்க எண்கள் என இரு பெரும் பிரிவாகப் பிரித்து கீழிலக்க எண்களில் மீச்சிறு அளவைகளாப் பிரித்துப் பயன்படுத்திய விதம் வியப்புக்குரியதாகும். ஒரலகை 320 (முந்திரி) ஆகப் பிரித்து வகைப்படுத்தும் அறிவு கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. பிரம்மதேசம் கல்வெட்டுகளில் நிலங்களைக் குழி, மா, வேலி என்ற அளவாலும், பொன்னைக் கழஞ்சு என்ற அளவிலும் முகத்தில், அளவையை மரக்கால் என்ற அளவாலும், நெல்லைக் காடி என்ற அளவாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்மக்கட்டளை என்ற நிறுத்தல் அளவை, தூனி, உழக்கு, ஆழாக்கு, செவிடறை, மஞ்சாடி, செவிடு, குண்டில், தடி, கோல் என்ற அளவைகளும் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை  அறியலாம். இப்பகுதியில் பயன்படுத்திய மரக்கால் சீரிபோழ்ந்தம் மரக்கால், அருண்மொழி தேவன் மரக்கால் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. நிலங்களை 16 சாண்கோல் என்ற அளவுகோலால் அளக்கப்பட்டது என்பதும் கல்வெட்டுகளில் மூலம்  தெரியவருகிறது. 

எண்ணுப்பெயர்ச்சொல்:
          இவ்வூரில் உள்ள ஒரு சபையின் பெயர் அஞ்சஷ்டசதத்து சபை என்ற (5 X 8 X 100) என்ற நாலாயிரவர் சபை என்ற பெயரும் ஏழாயிரவன், சதுரமூவாயிரவன், மூவாயிரத்து நூற்றுவன், மூவாயிரத்து முன்னூற்றுவன் போன்ற போன்ற எண்ணிக்கையில் பெயர் கொண்டவர்கள் உள்ளனர். இவர்கள் வணிகக்குழுக்களாக அல்லது பட்டமாக இருக்கலாம். 

பெருவழிகள்:
          இக்காலத்தைப் போன்று அக்காலத்திலும் சாலைப்போக்குவரத்து நன்முறையில் செயல்பட்டுள்ளது. தற்போது பிரம்மதேசம் அமைந்துள்ள இப்பகுதி ஒரு பெருவழியாக இருந்துள்ளது. தென்தமிழகப்பகுதியில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் பிரம்மதேசம் அமைந்துள்ளது. இதைப்பற்றி இவ்வூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதிக்கு (திருமலை) கூட்டமாகச்  செல்லும் 100 பக்தர்களுக்காக இவ்வூரில் ஜெனநாத மண்டபத்தில் உணவளிக்கவும், தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரின் எல்லையாக ராஜமல்லப்பெருவழி என்ற வழியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரம் செல்லும் சாலையாக இருக்கலாம். 

வரிகள்:
          இக்கோயில் கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டைத்தவிர மற்றவை சோழர்காலக் கல்வெட்டுகளும் ஒரு பல்லவர் கல்வெட்டும் ஆகும். இக்கல்வெட்டுகளில் தானம் பற்றிய தகவல்கள் தான் அதிகமாக உள்ளன. வரி செலுத்த வேண்டியது பற்றிய விவரங்கள் இல்லை. மேலும் இக்கோயிலில் காணப்படும் விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டான கம்பண்ண உடையார் கல்வெட்டு (பொ.ஆ. 1363) ஆய்குடி மக்கள் மீது ஆயம், உள்ளாயம், உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்பட்டது தெரியவருகிறது. பொதுவாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் சோழர்கள் காலத்தில் வரிகள் குறைவாகவும் பிற்காலத்தில் வந்த விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில் மிக அதிகமாக வரிகள் விதிக்கப்பட்டதையும் இங்கு நோக்கத்தக்கது. 

சமூக அமைப்பு:
          பிரம்மதேசம் என்ற ஊர் அந்தணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஊர் என்பதால் இவ்வூரில் அந்தணப் பெருமக்கள் அதிகம் என்பதும் இவ்வூர் சமூக பிரிவுகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுக்களிலும் வாரியத்திலும் உறுப்பினர்களாக இருந்தார்கள் என அறியலாம். இவ்வூரில் வைணவர்கள்,  வணிகர்கள்,  வேளாண்மை செய்யும் குடிகள், கோயில் தானங்களையும் கொடைகளையும் கண்காணிக்கும் கண்காணி போன்றவர்களைப்பற்றியும் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புக்கல்வெட்டுகள்:
          பிரம்மதேசம் கல்வெட்டில் அரசாட்சி, கிராமசபை, கோயில் நிர்வாகம், நிலக்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரியவருகின்றன. இதில் சில கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவாகவும் உள்ளன. அவை;

1.  வீபரீத தண்டம்


          பிரம்மதேசம் ஊரில் அமைந்துள்ள அஞ்சஷ்டசத்தது சபை  ஏரி வாரியத்தின் கணக்கை எழுதும் கணக்கனுக்கு மதிப்பூதியம் வழங்க நிர்ணயித்துள்ளனர். மதிப்பூதியமாக தினமும் 3 நாழி நெல்லும் வருடத்திற்கு 7 கழஞ்சு பொன்னும் ஒரு சோடி ஆடையும் வழங்கிடத் தீர்மானித்துள்ளனர்.  அவர் கணக்குகளைச் சமர்ப்பிக்கும் போது தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியினை கையில் பிடிக்கவேண்டும் என்றும் கையில் தீக்காயம் ஏற்படவில்லை என்றால் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இல்லையென்றால் 10 கழஞ்சு பொன் தண்டமாக விதிக்கப்படும் என்றும் உடல் ரீதியான தண்டம் ஏதும் விதிக்கப்படாது என்ற விநோத வழக்கம் இருந்ததைக்காணலாம்.

2.  ராஜேந்திர சோழன் பள்ளிப்படையா?
          பிரம்மதேசம் சிவன் கோயில் ஒரு பள்ளிப்படைக் கோயில் என்றே செய்திகள் பரப்பப்பட்டு அதையும் சில ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டதனால் இராஜேந்திரசோழன் தனது இறுதிக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தார் என்றும் அவர் இறந்தது இங்குதான் என்றும் அவரது சமாதியே பள்ளிப்படைக் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் பரவியுள்ளன. ஆனால், கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் ஆதாரமாகக் கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். இராஜேந்திரசோழனுக்கு முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படைக் கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம். மேலும், இக்கோயிலின் கல்வெட்டில் இராஜேந்திரசோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறிய மன்னரின் தேவி வீரமாதேவியார் இறப்பிற்காகத் தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர்ப் பந்தல் அமைக்க இவரது உடன் பிறந்த சகோதரர் மதுராந்தகன் என்னும் பரகேசரி வேளான் என்பவனுக்கு நிலம் விற்றுக் கொடுத்துள்ளார். இதில் வீரமகாதேவியார் உடன்கட்டை ஏறிய தகவல் இருப்பதால்தான்  இங்கு இராஜேந்திரசோழன் இறந்தான் என்று நம்புகின்றனர்.          கோயில் அமைப்பு பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் ஊரின் கிழக்குப்பகுதியில் பனைமரங்கள் சூழ இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதுமாக இந்தியத் தொல்லியல் துறையினரால் சீரமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டுவருகிறது. இக்கோயில் வடபுறத்தில் சிறிய விமானமும் அதைத்தொடர்ந்து கோயிலும் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இக்கோயில் 3 தள விமானத்துடன்  அமைந்துள்ளது. விமானத்தின் நான்குபுறங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன் அமைந்துள்ளது. நந்தி அர்த்தமண்டபத்தில் அமைந்துள்ளது. கருவறையில் லிங்கமும் அதன் தென்மேற்கு மூலையில் மற்றொரு லிங்கமும் அமைந்துள்ளது. கோயிலைச்சுற்றி  சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. கோயில் விமானம் மணற்கற்களால்  அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்று பக்கமும் நிறையக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. எளிய தோற்றத்துடன் மிக்க அழகுடன் அமைந்த கோயில் இதுவாகும். இக்கோயிலில் வழிபாடு ஏதும் இல்லை.

          பாலாற்றின் கரையில் அமைந்துள்ள ருத்திர கோட்டீஸ்வரர் ஆலயம் பாழடைந்து உள்ளது. ஆனால் வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோயிலிலும் முக்கிய கல்வெட்டுகள் உள்ளன.

நடுகற்கள்/ நினைவுச்சின்னங்கள்:
          இவ்வூரில் மையத்தில் நாயக்கர் கால நவகண்ட நடுகல் ஒன்றும் மூத்த தேவி சிலை ஒன்றும் காணப்படுகிறது. இது இந்த ஊரின் சிறப்பான வரலாற்றுக்குத் தக்க சான்றாகும்.முடிவுரை:


          இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் பிரம்மதேசம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்பு சிறப்புப் பெற்ற ஊராகவும் பல்வேறு சமய, கலாச்சார, சமூக, நிலவியல், நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களுடன் எளிமையான அழகான தோற்றத்தில் அமைந்துள்ள ஊராகும். ஊரிலிருந்து தனித்து ரம்மியமாக நிற்கும் இக்கோயில் சோழர் கால கட்டக்கலைக்கும்  தொண்டைநாட்டின் வரலாற்றிற்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
குறிப்புதவி:
1. தமிழ்நாட்டுக்கல்வெட்டுகள்- திருவண்ணாமலை  மாவட்டம் தொகுதி – 1
2. விக்கிப்பீடியா


நன்றி:
புகைப்பட உதவி – திரு. சேது, திரு. சுகுமார், துணை வட்டாட்சியர்.
And unknown facebook user.குறிப்பு:
          திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியீடான "வரலாற்றில் பிரம்மதேசம்" (ஊர் வரலாறு மின்னூல் வரிசை # 1)" என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.

கட்டுரை ஆசிரியர்:
திரு. ச. பாலமுருகன்,
செயலர், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
தொலைபேசி: 9047578421
தொடர்பு:  tvmchr@gmail.com