Saturday, November 16, 2019

காலந்தோறும் திருத்தங்கல்

காலந்தோறும் திருத்தங்கல்

— முனைவர் ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
          தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியுடன் இணைந்துவிட்ட திருத்தங்கல் ஊராட்சிப்பகுதிக்கு சங்ககாலத்திலிருந்து தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. இன்று சிற்றூராக இருப்பினும் வரலாற்றுக் காலத்தில் புகழ்பெற்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊராக இருந்தது. இவ்வூரின் இருப்பிடமும் அதற்கு ஒரு காரணமாயிற்று.

மேலைநாட்டார் பயணக் குறிப்பில் தங்கால்:
          டாலமி தன் பயணக்குறிப்புகளில் தமிழகத்து உள்நாட்டு ஊர்களை வரிசைப்  படுத்துகிறார். அப்பட்டியலில் அவர் ‘தங்கலா’ என்று சுட்டுவது இன்றைய திருத்தங்கல் ஆகும். கடலோடி வாணிபம் செய்த மேலைநாட்டார் தமக்குப் பின் வரும் தலைமுறையினர்க்கு உதவும் வகையில் எழுதி வைத்த நிலவியல் குறிப்புகளில் இடம் பெறும் தகுதியைத் திருத்தங்கல் பெற்றிருந்தது.

சங்க இலக்கியத்தில் தங்கால்:
சங்க காலப் புலவர்கள் சிலரின் பெயர்கள் தங்கால் என்னும் அடையுடன் உள்ளன. தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், தங்கால் பொற்கொல்லனார், தங்கால் பொற்கொல்லன் தாமோதரனார், தங்கால் பொற்கொல்லன் வெண்- நாகனார் ஆகிய புலவர் பெயர்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. இப்பெயர்களில் காணப்பெறும் தங்கால் என்பதே திருத்தங்கலின் பண்டைப் பெயர் வடிவமாகும். இன்றும் திருத்தங்கலில் உள்ள நூறடி உயரக் குன்றில் எழுந்தருளி இருக்கும் பெருமான் தங்காலப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவ்வூரின் சுற்று வட்டாரங்களில் பெண்களுக்குத் தங்காலம்மாள் எனப் பெயரிடும் வழக்கம் 20ம் நூற்றாண்டு வரை நிலவியது.

சிலப்பதிகாரத்தில் தங்கால்:
          கண்ணகி மதுரையை எரித்த போது; அவளுக்குப் பின் வந்து தோன்றிய மதுராபதித் தெய்வம் பாண்டியன் பெருமையை உணர்த்தப் புகுங்கால்; தங்காலில் நிகழ்ந்ததாக ஒரு செய்தியைக் கூறியே தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. 

                    “செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர்
                    தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப்
                    பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து”
                    - (கட்டுரை காதை-74-76); என்றும்,

                    “தடம்புனற் கழனித் தங்கால்”
                    - (மேற்.- 118) என்றும்
இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதிலிருந்து அறியலாகும் செய்திகளாவன; தங்கால் பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அது மறையவர் மிகுந்த ஊர் ஆகும். அவ்வூரில் பசுமையான போதி மன்றம் ஒன்றும் இருந்தது. தங்காலருகே கழனிகள் வளம் பெறும் அளவுக்கு ஆறு ஒன்றும் ஓடியது. எனவே விளைச்சல் மிகுந்த ஊர் ஆகும். திருத்தங்கலை அடுத்து இன்று ஓடும்  அர்ச்சுனா நதி என்ற காட்டாறு பண்டு வளமான ஆறாக ஓடியது எனலாம். தி.செல்வக்கேசவராய முதலியார் தனது ‘கண்ணகி சரித்திரம்’ என்ற நூலில் இன்றைய திருத்தங்கலே பண்டைத் தங்கால் என்கிறார்.

          சோழ நாட்டைச் சேர்ந்த பராசரன் என்பான் தமிழ் மறையோரைப் போற்றும் சேரனின் அவை சென்று தன் திறமையைக் காட்ட விரும்பினான். தன்னூர் விட்டுக் கிளம்பி; காடும் நாடும் ஊரும் போகி; நீடுநீர் மலயம் பிற்படச் சென்று; சேர நாட்டை அடைந்து; அங்கே வேந்தன் முன்னர் தன் நாவன்மை வெளிப்படும் படியாக மறையோதி மிக்க பரிசில்களைப் பெற்றான். தன் ஊர் திரும்பும் வழியில் தங்காலின் போதி மன்றத்தில் தங்கி இளைப்பாறினான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி;
                    “குண்டப் பார்ப்பீர் என்னோ டோதியென்
                    பண்டச்  சிறுபொதி கொண்டு போமின்”;
என்று அவன் அழைத்த போது; தக்கிணன் என்னும் சிறுவன் தன் மழலை மாறாமொழியில் மகிழ்ச்சி பொங்கப் பராசரனோடு ஒப்ப; வேத மந்திரங்களைக் குற்றமின்றி ஓதியமை கண்டு மனம் நெகிழ்ந்தான். தான் சேரனிடம் பரிசாகப் பெற்ற ஆபரணங்களை அவனுக்கு அணிவித்து மகிழ்ந்தான் பராசரன். பின்னர் தன் ஊர் நோக்கிப் பயணித்தான். தக்கிணன் திடீரென்று முத்தப்பூணூலும், பொற்கடகமும், தோடும் அணிவதைக் கண்ட அரசு அலுவலிளையர் ‘இவன் தந்தைக்குப் புதையல் கிடைத்துள்ளது; அதை அவன்  மன்னனுக்குக் கொடுக்காமல் தானே வைத்துக் கொண்டான்’ என்று அவனது தந்தை வார்த்திகனைச் சிறையில் இட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகையோ அழுதாள்; புரண்டாள்; தன் கணவன் எத்தவறும் செய்யவில்லை என்று அரற்றினாள்; ஏங்கினாள்; அவளது துன்பம் தெய்வத்தின் சந்நிதியை எட்டியது. மதுரையிலிருந்த கொற்றவை கோயில் கதவு திறக்க இயலாதபடி மூடிக் கொண்டது. செய்தி அறிந்த பாண்டிய மன்னன் மருண்டான். தன் செங்கோல் வளைந்ததென்று புரிந்துகொண்டான். ஏவலிளையர் மூலம் வார்த்திகன் அநியாயமாகச் சிறைப்படுத்தப்பட்டமை அறிந்தான். உடன் சிறைவீடு செய்தான். அது மட்டுமின்றித் தன் மார்பு நிலத்தில் தோய வார்த்திகன் முன்னர் வீழ்ந்து வணங்கினான். மாநகர் மதுரை முழுதும் கேட்கும்படியாகக் கொற்றவை கோயில் கதவு திறந்தது. ‘இனிமேல் பாண்டியநாட்டில் யாருக்குப் புதையல் கிடைத்தாலும் அது மன்னனுக்குரியது ஆகாது; எடுத்தவருக்கே சொந்தமாகும்’ என்று தன் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தினான். அச்சட்டத்  திருத்தத்தை முரசு முழக்கி அறிவித்தான். மேலும் வார்த்திகனுக்கு திருத்தங்கல் ஊரையும், வயலூரையும் தானமாகக் கொடுத்தான்.

          பாண்டியமன்னன் வார்த்திகனுக்கு அளித்த வயலூர் தன் பெயரிலேயே வளத்தைத் தாங்கி நிற்கிறது. வயலூர் என்ற பெயர் உருபாலியனியல் மாற்றங்கட்கு உட்பட்டுள்ளது. ஆற்றின் தென்கரையில் திருத்தங்கலும்; வடகரையில் வயலூரும் இருந்திருக்க வேண்டும். இன்றைய வெள்ளூரே இப்புவியியலுக்கு ஏற்ப அமைந்துள்ளது. பெயர்மாற்றத்தைப் பின் வருமாறு விளக்கலாம். மொழிமுதல் அகரம் எகரமாக மாறிப் பின் மொழியிடையில்  முதல் மெய் மறைந்து அடுத்த மெய் இரட்டித்துள்ளது.

          வயலூர் > வெயலூர் > வெல்லூர் > வெள்ளூர்
தமிழில் மொழிமுதல் அகரம் எகரமாக மாறும் போக்கை இன்றும் காணலாம்.

          கட்டியா > கெட்டியா எனும் பேச்சு வழக்கு மாற்றம் நோக்குக.
மொழியிடையில் இரண்டு மெய்கள் அடுத்தடுத்து இருப்பின் முதல் மெய் மறைந்து இரண்டாவது மெய் இரட்டிக்கும் போக்கு இடைக்கால இலக்கியங்களில் காண இயல்கிறது. சொர்ணம் > சொரனம் > சொன்னம்; பட்டினத்தாரின் திருவேகம்ப மாலை “சொன்ன விசாரம்”- (பா- 8) என்கிறது. ‘ல்ல்’ பேச்சு வழக்கில் ‘ள்ள்’ என்று கட்டிலாது மாறுவதை இன்றும் காண்கிறோம்.

          மெல்ல > மெள்ள
இங்ஙனம் வயலூர் > வெள்ளூர் என்ற மாற்றம் உருபொலியன் மாற்ற விதிகட்கு ஒத்து வருவதால் இன்றைய வெள்ளூரைப் பண்டைய வயலூர் எனல் தகும். ஒரு நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்றி வைக்கும் காரணி;  திருத்தங்கல் நிகழ்வு எனச் சொல்லக்கூடிய வகையில் கதையின் போக்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


பக்தி இலக்கியத்தில் தங்கால்:
          பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியில்;
          “தமர் உள்ளும் தஞ்சை தலைஅரங்கம் தண்கால்”- (பா- 70) என்று இவ்வூர் இடம்பெறுகிறது.
          திருமங்கை ஆழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில்;
          “தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி”- (பா- 17) என்று இவ்வூரைச் சிறப்பிக்கிறார்.

தன் சிறிய திருமடலில்;
          “பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்”- (அடி- 142) என வைணவப்  பதிகளின் வரிசையில் சேர்த்துள்ளார்.
அதற்குரிய வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ‘குளிர்ந்த காற்றுபோலே அடியாரின் சிரமங்களைத் தீர்க்கும் தன்மை உடையவன் என்றன்றோ தண்கால் என்று பெயராயிற்று’ என  இவ்வூரைப் பற்றிச் சிலாகித்து உரைக்கிறார்.

பெரியதிருமடலிலும்;
          “தண்கால் திறல்வலிமை”- (அடி- 240) என்று இவ்வூர் சிறப்பிடம் பெறுகிறது.

அத்துடன் பெரிய திருமொழி;
          “பேரானைக் குறுங்குடியெம் பெருமானைத் திருத்தண்கால்  ஊரானைக்”- (5ம் பத்து- 6ம் பா)
காண்பது பற்றிப் பெருமை பேசுகிறது.  இங்கு தங்காலுடன் ‘திரு’ என்னும் அடைமொழி சேர்ந்துள்ளமை நோக்கத்தக்கது.

கல்வெட்டுக்களில் தங்கால்:
          தங்கால் குன்றில் பள்ளிகொண்ட பெருமாளுடன் ஒரு குடைவரையும், திருநின்ற நாராயணப்பெருமாள் கோயிலும், கருநெல்லிநாத சுவாமி கோயிலும், காலத்தால் பிற்பட்ட முருகன் கோயிலும் உள்ளன. இத்தலம் பெருமாளுக்குரிய 108திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். மேற்சுட்டிய கோயில்களுள் மொத்தம் 39 கல்வெட்டுகள் உள்ளன. தொல்லியல் ஆய்வுத்துறை படியெடுத்த அவற்றுள் கோயிலின் வரலாறும்; அதைச்சார்ந்த ஊரின் வரலாறும் விளக்கம்  பெறுகின்றன. ‘கருநிலக்குடிநாட்டுத் திருத்தங்கல்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய மல்லி, ஆனையூர், வடபட்டி, பெரியகுளம், பனையூர் முதலிய இடப் பெயர்களையும் காண இயல்கிறது. இக்கோயில் பற்றி ஆய்வு செய்த முனைவர் திருமதி இரத்தின மாலா சந்திரசேகரன் அவர்கள்; திருநின்ற நாராயணப்பெருமாள் சந்நிதிக்கு எதிரே மகாமண்டபத் தரையில் பாண்டியன் மாறன் சடையன் காலத்தில் வெட்டப்பட்டுக் கண்டெடுத்த வட்டெழுத்துக் கல்வெட்டே காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும். கருநெல்லிநாத சுவாமி கருவறையின் வடக்குச் சுவரிலுள்ள கல்வெட்டு இறைவனைத் திருநெல்வேலி நாதன் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஊரின் ஒருபகுதி பள்ளிச்சந்தமாக வழங்கப்பட்டு இருந்ததெனச் சொல்லும் கல்வெட்டும் உண்டு. சோழன் உய்யநின்றாடுவானான குருகுலத்தரையன் என்னும் அதிகாரி செய்த திருப்பணிகள் பல.

புராணங்களில் தங்கால்:
          வடமொழியில் எழுதப்பட்ட இத்தலம் பற்றிய புராணத்தை M.R.ஸ்ரீனிவாச ஐயங்கார் தமிழில் ‘திருத்தங்கல் ஸ்தலபுராண வசனம்’ எனத் தமிழாக்கம் செய்துள்ளார். ‘திருமகள் தங்கும் இடமாதலால் திருத்தங்கல்’ என்று பெயர்க் காரணம் கூறுகிறார். நூலினுள்ளே தங்கால் என்னும் பெயரைப் பலமுறை எடுத்தாண்டுள்ளார். N.S. தாத்தாச்சாரியார் திருத்தங்கல் தல வரலாறு ஒன்றை எழுதியுள்ளார். ‘ஸ்ரீதேவி அரிய தவம் இயற்றிய இடம் ஆதலால் ஸ்ரீக்ஷேத்திரம்’ என்பது அவர் தரும் விளக்கம். திருப்பதி நாராயணப்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமணம் காணச் செல்லும் பொழுது இருட்டிவிடவே; வழியில் இவ்விடத்தில் தங்கியதால் திருத்தங்கல் என்று பெயர் பெற்றதென இராமநாதபுர மாவட்ட விபரத் தொகுப்பு கூறுகிறது. அத்தொகுப்பில் ஈசன் இருநெல்லிநாதன் என்றும் சுட்டப்படுகிறான்.

மூவேந்தர் நாடுகளை இணைத்த வழியில் தங்கால்:
          சேரநாட்டையும் சோழநாட்டையும் இணைத்த ஒரு பாதையின் இடையில் தங்கால் இருந்தது. சேரநாட்டிலிருந்து சோழபாண்டிய நாடுகளுக்குச் செல்லப் பதினெட்டுக் கணவாய்கள் இருந்தன என்று விக்கிரம சோழன் உலா சொல்கிறது.
                    “....................................................தூதற்காப்
                    பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும்
                    கொண்டு மலைநாடு கொண்டோனும்”- (அடி.- 32-34)
எனும் பகுதி  நோக்கற்குரியது. பதினோராம் நூற்றாண்டில் தன் ஒற்றன் பொருட்டு உதகை என்று அழைக்கப்பட்ட வஞ்சிமாநகரத்தை அழித்த ராஜராஜ சோழன் பதினெட்டுக் கணவாய்கள் வழியாகச் சேரநாட்டைத் தாக்கித் தனதாக்கினான் என்று சேரநாடும் செந்தமிழும் பற்றிப் பேசும் செ.சதாசிவம் கூறியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக்  காலத்தில் பேருந்து வழித்தடங்களும், தொடர்வண்டித் தடங்களும் மலிய;  போக்குவரத்து ஒழிந்ததால் கணவாய்கள் தூர்ந்து விட்டன. திருத்தங்கலுக்குத் தென்மேற்கே இராஜபாளையம் அருகே பல்லிளிச்சான் கணவாயும், வடமேற்கே கூமாபட்டிக் கணவாயும் இருந்தமை பொதுமக்கள் வழக்கிலிருந்து அறியும் செய்தி ஆகும். சிலப்பதிகாரக் கதாபாத்திரம் ஆகிய பராசரன் இக்கணவாய்களுள் ஒன்றன் வழியாகத் திருத்தங்கல் அடைந்தான் என்று கதை சொல்வது அறிவாராய்ச்சிக்கு ஏற்புடைய செய்தியே ஆகும்.

முடிவுரை:
          வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரை திருத்தங்கல் பல பெருமை பெற்றுச் சமய அரசியல் மாற்றங்கட்கு உட்பட்டமை இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டிய ஆய்வாகும்.


குறிப்பு:
அந்ஜா கல்லூரி இலக்கிய மன்றக் கூட்டத்தில்  ஆற்றிய  "காலந்தோறும் திருத்தங்கல்" என்ற உரையின் சாரம் தான்இக்கட்டுரை.




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி




No comments:

Post a Comment