Sunday, November 10, 2019

இலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்புமலர்விழி பாஸ்கரன் 
(எழுத்தாளர் மாயா)


- நாள் 1 -

            இலங்கைக்கு எனது முதல் பயணம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தன. அவற்றைச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு விமான நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்த தம்பியின் வாகனத்தில் ஏறி வவுனியா நோக்கி நடுநிசிப்பயணம் மேற்கொண்டோம். 

            தொண்ணூறுகளின் தமிழ்த்திரை இசையை ஓடவிட்டுக்கொண்டிருந்த ஓட்டுநரின் ரசனையை ரசித்தபடி வழி நெடுகிலும் இருளில் நிறம் மாறும் வண்ணவிளக்குகளின் மத்தியில் அமர்ந்து மந்தகாசமாகச் சிரித்துக் கொண்டிருந்த புத்தர்களைக் கடந்து போனோம். தமிழகத்தில் சந்திக்கு ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்பது போல இலங்கையில் புத்தர் உட்கார்ந்திருக்கிறார். 

            ஐந்து மணி சுமாருக்கு வவுனியாவின் சிறீநகர் (ஸ்ரீ நகர்) குடியிருப்புப்பகுதியில் இருந்த ஒரு நண்பர் இல்லத்தைச் சென்றடைந்தோம். விருந்தோம்பல் முகமாய் வாசலிலேயே காத்திருந்த தம்பதியர் வயதுக்கு பத்து இளமையாகத் தெரிந்தனர் என் கண்களுக்கு. அதற்குக் காரணம் அவர்கள் உணவும் நீரும் நல்மனதும் என்று பின்னர் புரிந்தது. அந்த அதிகாலையில் எங்களைச் சிறிது கண்ணயரச்சொல்லிவிட்டுப் பிட்டு அவித்துக் கொண்டிருந்தார் வீட்டுக்கார அம்மா. கட்டாந்தரையும் மின்விசிறிகள் அற்ற உறக்கமும் கண்டு பல ஆண்டுகள் ஆகியிருந்த போதும் இயல்பாகப் பொருந்திக்கொண்டது எங்களுக்கு. கிணற்றடியில் நீர் சேந்தி உடற்சூடு பறக்கக் குளித்தபின் சுடச்சுட பிட்டும் சம்பலும் ஆப்பமும் சாம்பாரும் பரிமாறினார்கள். கூடவே தேநீரும். அதற்கும் செல்ல(நாய்)க் குட்டி லைக்கா எங்களோடு பரிச்சயமாகி இருந்தாள். 

            அவர்களது குசினியில் இன்னும் புழக்கத்தில் இருக்கும் புகட்டும் விறகடுப்பும் பாத்திரங்களும் நமது எழுபதுகளின் சமையலறையை நினைவூட்டின. பொதுவான பேச்சிலும் இழையோடிய அவர்களது வருத்தத்தை மறைத்தே எங்களிடம் கலகலப்பாக இருந்தனர். கிளம்புகிற தறுவாயில் அவர் பள்ளி வருகையேட்டில் ஒட்டிச்சேகரித்து வைத்திருந்த போர்க்காலத்துச் செய்தித் துணுக்குகளையும் அதன் எதிர்வினையாய் அவருள் எழுந்த கவிதைகளையும் காட்டினார். குருதியில் நனைந்த கண்ணீரின் வாசனையை அதில் இப்போதும் நுகர முடிந்தது. நெடுந்துயரை மறக்க முயன்றபடி சிரித்துக்கையாட்டி விடைபெற்றோம். எங்களது இலக்கு மன்னார் மாவட்டம் - கட்டுக்கரை.

கட்டுக்கரை:
            வட இலங்கை, மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட மாதோட்டத்தில் அமைந்துள்ளது கட்டுக்கரை குளம். இதன் அளவைக்கண்டு இராட்சத குளம், மானமடுவாவி என்று இதனை மக்கள் அழைத்தனர் போலும். இங்கே குருவில் வான் பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.              பன்னெடுங்காலம் முன்பு இங்கு மக்கள் குடியிருப்பு இருந்ததற்கான அடையாளங்களை (குறிப்பாக இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த) ஏராளமான தொல்லியல் எச்சங்கள் வழி இந்தக்குழு கண்டுபிடித்து வகைப்படுத்தி இருக்கிறது. 1400 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு இருந்தமைக்குச் சான்றுகளாக - மட்பாண்டங்கள், நாணயங்கள், ஆயுதக்கருவிகள், சிலைகள், கைவளையல் துண்டுகள், யானையின் கால்கள், மாட்டுக்கொம்புகள், நீர்த்தாங்கிகள், நாக உருவச்சிலைகள், கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள், 75ற்கும் மேற்பட்ட யானைத்தந்தங்கள், குதிரை நந்தா அகல்விளக்குகள், குறியீடுகள், கலசங்கள், சிறுகுடம் போன்றவையும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்காலத்திய சான்றுகளாக - கல்மணிகள், கல்லினால் வடிவமைக்கப்பட்ட காப்புகள், சங்கு வளையல்கள் , மட்பாண்டங்கள் என்பனவும் இங்கிருந்து கிடைத்துள்ளன. இப்பொருள்களுடன் இவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட கற்கள், கண்ணாடிகள், சங்குகள், மட்பாண்ட அச்சுகள், இரும்புருக்கு உலைகள் போன்றவையும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றனவாம் (1).  

            கட்டி(டு) இறக்கும் துறை என்கிற பொருளைத்தரும் கட்டுக்கரை என்ற தமிழ்ப்பெயர் கடற்கரை ஒட்டிய நீர்ப்பரப்பை மையமாகக் கொண்ட குடியிருப்புப் பகுதியாக இது இருந்திருக்கக் கூடுமென்ற எண்ணத்தை நமக்குத் தோற்றுவிக்கிறது. கட்டுக்கரைக்கு வடக்கே பூநகரி பிரதேசத்தில் நாகபடு வான் என்ற குளப்பகுதியிலும் இதே போல் மூன்றடுக்கு மண்ணாய்வில் குடியிருப்புப் பகுதிக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. கட்டுக்கரை அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறித்த நூற்றுக்கும் மேற்பட்ட மட்கலன்கள் கிடைத்திருப்பதாயும் அதிலே ஒன்றில் மட்டுமே முழுமையான சொல்லான ’வேலன்’ என்ற பொறிப்பு கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வகையில் கீழடியைப்போல நீர்ப்பரப்பை ஒட்டிய நெடுங்காலப் புழக்கத்திலிருந்த வளமான குடியிருப்புப் பகுதியாக இது இருந்திருக்கிறதென்பது நமக்குப் புலனாகிறது. 

            வட இலங்கையில் மாதோட்டம், பூநகரி, மாங்குளம் போன்ற இடங்களில் பழைய கற்காலப் பண்பாட்டிற்குரிய கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன  என்றும் இப்பண்பாட்டிற்குரிய மக்களும், தமிழகத்தின் தேரிநிலப்பகுதியில் வாழ்ந்த மக்களும் மானிடவியல், மொழியியல், தொல்லியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் ஒரே இன மக்கள் என்ற கருத்தும் அறிஞர் பெருமக்கள் மத்தியில் நிலவுகிறது (2). இப்பண்பாட்டை அடுத்து கி.மு. 800-க்குப் பின்பாக தென்னிந்தியத் திராவிட மக்களது குடியேற்றம் நடந்ததற்கான சான்றுகள் வடஇலங்கை உட்பட நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது (3). 

            இங்கே கிடைக்கும் பிற நாட்டு மட்கலன்கள், காசுகள் போன்ற தொல்லியல் சான்றுகள் 2,000 ஆண்டுகளாகவே மக்கள் இங்கே வளமாக வாழ்ந்திருப்பதையும் அவர்கள் கடல் வாணிபத்தில் திறம் பெற்றிருந்தனர் என்பதையும் குறிக்கிறது. இந்தப் பகுதியிலே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய நாக அரசர்களின் பிராமி கல்வெட்டுகளையும் இங்கே நினைவு கூரவேண்டி இருக்கிறது. ஆக இது கற்காலப் பயன்பாடு துவங்கி இனக்குழுக் காலந்தாண்டி அரசு மரபுகளைச் சொல்லும் காலம் வரை நீடித்த பயன்பாட்டிலிருந்த நிலமாக இருக்கிறது.

            ஒரு வகையில் கீழடி வாழ்வியலின் நீட்சியாகவே கட்டுக்கரைப் பகுதியும் என் கண்களுக்குத் தெரிந்தது. எனினும் கீழடிக்கும் கட்டுக்கரை அகழாய்வுக்கும் நான் காணும் ஆகப்பெரிய வேறுபாடு இங்கே கிடைத்திருக்கும் சமயச்சின்னங்கள். 


            2,600ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பேசி எழுதிய மதுரை மண்ணில் இல்லாத சமயம் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய, தமிழ் இலக்கியங்களும் வரலாறும் தொடர்ச்சியாகப் பேசும் நாகநாடு என்கிற வட இலங்கை மண்ணில் வந்து சேர்ந்திருக்கிறது. 

            வியப்பூட்டும் ஐயனார் வழிபாடு, நாகர் சிலைகள், வேல், மயில், லிங்கம், நந்தி போன்றவை சிறுதெய்வ வழிபாட்டுச்சமுதாயத்திலிருந்து பெருந்தெய்வ வழிபாடு நோக்கி மாற்றம் பெறத்துவங்கிய நிலையில் இந்தச் சமுதாயம் இருந்திருக்கலாம் என்று சுட்டுகிறது. 

            கட்டுக்கரைச் சான்றுகள், இன்றளவும் தமிழர்களை இலங்கையின் வந்தேறிகளாகப் பார்க்கும் பார்வையை மாற்றும் ஆற்றல் பெற்றவையாகத் தெரிகின்றன. இன்றைய சூழலில் இலங்கையில் நடத்தப்படும் மேலதிக அகழாய்வுகள் தொல்தமிழ் நாகரீகத்தின் கடல் கடந்த புதிய பரிமாணத்தை இலங்கையில் நிலைநிறுத்தக்கூடும் என்றால் மிகையில்லை.   

            அந்த புராதன நிலத்தில் கால் பதித்துவிட்ட குதூகலத்தோடு மீண்டும் பயணப்பட்டோம், வடமேற்கே மன்னார் நோக்கி. வழியெங்கும் இருபுறமும் போர்க்காலத்தின் சுவடுகளைச் சொல்லியபடி இருக்க நாங்கள் முடிந்தவரை மனதைக்குவித்து அடுத்த இலக்கில் பதித்திருந்தோம்.

திருக்கேத்தீச்சரம்:
            கடற்கரை வெண்மணல் பரப்பில் சில மைல் தூரம் பயணம். பெருமளவு எனக்கு இராமேஸ்வர மண்ணில் இருப்பது போன்ற தோற்ற மயக்கத்தை உண்டாக்கியது. நாங்கள் சென்றது நண்பகல் வேளையாதலால் வெயில் காய்ந்தது. மன்னார் தீவுக்குள் நுழையுமுன் தலைநிலத்தின் கரையிலே அமைந்திருக்கிறது ஆலயம். சோழ பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்த, சைவப்பெரியவர்களால் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று இந்தத் திருக்கேத்தீஸ்வரம். 


            இங்கே இறைவனுக்கு நாகநாதர் என்ற பெயரும் உண்டு. இது ஆதிக்குடியினரான நாகர்கள் வழிபாட்டுத்தளமாய் இருந்திருக்கலாம், பிற்காலத்தில் கேது வழிபட்ட கோயில் என்ற புராணம் எழுந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் இப்பகுதியின் தொடர்ச்சியான பயன்பாடு. 

            Periplus of Erithryean Sea சொல்லும் மாந்தை என்ற இலங்கையின் புகழ்பெற்ற துறைப்பட்டினம் இந்த மாந்தோட்டம் பகுதி என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். வையை நதிமுகத்துவாரத்தில் அழகன்குளம் இருந்தது போல பண்டைய அரச பீடமான அனுராதபுரத்தை இணைக்கும் அருவி ஆற்றின் முகத்துவாரத்தில் மாந்தை இருந்ததாகத் தெரிகிறது(4).  

            கிரேக்க ரோமானிய வணிகத் தொடர்பு வட இலங்கையில் வலுவாக இருந்த காலத்தில் சிறப்பான துறைகளுள் ஒன்றாக இது இருந்திருக்கிறது. பின்னரும் பாண்டியர் பல்லவர் சோழர் என்று தொடர்ச்சியாகத் தமிழகத்து அரசுகளோடும் மக்களோடும் இணைப்பிலிருந்த நிலப்பகுதியாகிறது. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் இலங்கை முழுவதுமுள்ள பவுத்த சைவ சமயக் கட்டுமானங்களை அழித்து, கோட்டை கட்டிக்கொண்ட பொழுது இக்கோவிலின் பெரும்பகுதி அழிவுற்றதாக நம்பப்படுகிறது.

            1894இல் பழைய கோயிலிருந்த பகுதியில் சோழர்காலச் சிவலிங்கமும் இன்னும் பல சிற்பங்களும் கண்டெடுக்கப் பட்டன. அதன்பிறகு 400 ஆண்டுகள் கழித்து ஆறுமுக நாவலர் துவக்கிய ஆலயப்பணி இன்று வரை சீரிய முறையில் நடைபெற்று இப்போது அழகான கோயிலை உருவாக்கி இருக்கிறது. தற்போது இங்கே மீண்டும் திருப்பணி நடப்பதால் திரு உருவங்கள் பாலாலயத்தில் வைக்கப்பட்டு அங்கே வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது போலும். 

            இராஜேந்திரச்சோழன் நிறுவியதாகச் சொல்லப்படும் பெரும் லிங்கவடிவம் கோயிலின் உட்புறத்தில் கூரைவேய்ந்து வைக்கப்பட்டிருந்தது. 

            தமிழகத்துச் சிற்பிகள் கோயில் பிரகாரத்துத் தூண்களுக்காகச் செய்வித்த அருமையான சிற்பங்களைக் கண்டு ரசித்தபடி நண்பர் ஒருவர் துணையோடு, போர்த்துகீசியர்கள் இடித்துத்தள்ளிய ஆதிக்கோயிலின் இடிபாடுகள் என்று சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டோம்.

            பெரும் பள்ளங்களில் பழைய செங்கல் மற்றும் தூண் வடிவங்கள் ஆங்காங்கு வெளிப்பட்டாலும் முற்றிலும் மீட்கத்தக்கச் சான்றுகள் அந்த இடிபாடுகளுள் இனி கிடைப்பது அரிது என்றே எங்களுக்குத் தோன்றியது. அதன் பிறகு பாலாவித் தீர்த்தத்தைப் பார்த்தபடி வடக்கே மன்னார் தீவு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தோம்.

மன்னார் தீவு:
            தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆர்வலர் ஒருவர் அளித்திருந்த பழமையான வரைபட மாதிரியை வைத்துக்கொண்டு இன்றைய மன்னார் எந்த அளவுக்கு அந்த வரைபடத்தோடு ஒப்பு கொள்ளத்தக்கதாய் இருக்கிறது என்ற சிறு ஆய்வு நடத்தினோம். 

           எதிர்பார்த்தபடியே அன்றையிலிருந்து இன்றைக்கு மன்னார் பெருமளவு மாற்றம் பெற்றிருக்கிறது. வரைபடத்தில் காணக்கிடைக்கும் பல கிருத்துவ ஆலயங்களைக் கண்டடைய முடியவில்லை எனினும் அவை விட்டுச்சென்ற எச்சங்கள் விதைகளாய் மாறி இன்று விருட்சங்களாய் நிற்பதைக் காண முடிந்தது. 

            இன்றைய மக்களின் வாழ்வில் பிரித்தெடுக்க முடியாத அளவில் உட்புகுந்த சமய நெறிகளின் சாயல் பிணைந்து கிடக்கிறது. மன்னார் தீவிலிருந்து விடைபெற்றுக்கொண்டு பூநகரி வழியாக யாழ்ப்பாணம் செல்லலானோம்.

மண்ணித்தலை சிவாலயம்:
            மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வடகிழக்கே பயணப்பட்டு பூநகரி வந்தடைந்தோம். இருள் சூழத் துவங்கிய பின்மாலைப் பொழுதில் பூநகரியின் கவுதாரிமுனையில் இருந்த பழமையான சிவாலயத்தை நோக்கிய பயணம் மறக்க இயலாதது. 

          அங்கே சில காலமாகத்தான் மின்சார வசதி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். சாலையும் மிகவும் பழுதடைந்து இருளில் மிகவும் சிரமப்பட்டு மண்ணித்தலை சிவாலயம் சென்றோம். 

            வெண்மணல் குன்றுகள் ஆங்காங்கு எழுந்து நிற்க அத்தகைய மணற்குன்று ஒன்றிலிருந்து புதைந்த இந்தக்கோயில் ஒரு நாள் வெளிப்பட்டிருக்கிறது. கோறக்கற்களைக் கொண்டு அடிப்பாகமும் அதற்கு மேல் சுதை, சுண்ணாம்பு, செங்கட்டி கொண்டும் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.  ஐந்து அடி நீள அகலத்தில் கர்ப்பக்கிருகம் கொண்டுள்ளது. 

            மூன்று தளத்தில் அமைந்த இதன் விமானம் 13 அடி உயரம் கொண்டது. மூன்று நிலை விமானங்களோடு இதன் தேவகோட்டம், சாலை, கர்ணக்கூடு என்பன கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழக் கலை மரபிற்குரியதென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்(5). 

            இந்த ஆலயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்  அவர்கள்,  இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இராசேந்திரச்சோழன் காலத்தில் அநுராதபுர அரசை வெற்றிகொண்டு இலங்கையில் ஆட்சி புரிவதற்கு முன்னரே, சோழர்தம் ஆதிக்கத்தில் அரச தலைநகரங்கள் சிலவும் வட இலங்கையில் இருந்துள்ளன என்பதை இப்பகுதியில் கிடைக்கின்ற சோழர்கால தொல்லியற் சான்றுகள் உறுதி செய்கின்றன என்கிறார். அதற்கு இந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். 

            அத்தோடு மணல் மேடுகள் நிறைந்த  மண்ணித்தலை பிரதேசத்தில் கிடைக்கப் பெறாத முருகைக் கல்லையும், செங்கற்களையும் கொண்டு இந்தக்கோயில் கட்டப்பட்டதை நோக்கும் போது தொழினுட்பமும், மூலப்பொருட்களும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது என்பது திரு. புஸ்பரட்ணம் அவர்களது கருத்தாகும். 

            இதன் அருகிலேயே, தெற்கே கௌதாரிமுனையில் கைவிடப்பட்ட நிலையில் ஓர் ஆலயத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அது 70 அடி நீளத்திலும், 30 அடி அகலத்திலும் அமைந்த இவ்வாலயம் - கர்ப்பக்கிருகம், அந்தராளம், முன்மண்டபம், கொடிக்கம்பம், துணைக்கோவில் கொண்ட ஆலயம் என்ற தகவலும் நமக்குக்கிடைத்தது. 

            இது காலத்தால் மண்ணித்தலை சிவன் கோயிலை விடவும் பிற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். 

            இப்படித் தொடர்ந்து தமிழகம் நோக்கிய இலங்கைத் தலைநிலத்தின் கரையெங்கும் காணக்கிடைக்கும் வரலாற்று எச்சங்கள் இங்கே மேலும் சான்றுகளைத்தேட வேண்டிய அவசியத்தையும் கிடைத்தவற்றை முறையாகப் பாதுகாக்கும் பொருட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது. 

            நள்ளிரவு தாண்டி யாழ் வந்தடைந்தோம். மீண்டும் ஒரு புதிய இலக்கு மறுநாள் காத்திருந்தது. சான்றுகள்:
1.  2019, திருமதி சுயன் விஜயதர்சினி, நிமிர்வு இதழ், இலங்கை.
2.  Ragupathy (1987), Pushparatnam (1993).
3.  Strambalam (1990), Seneviratne (1984), Ragupathy (1987), Pushparatnam (2002).
4.  O.Bopearachchi (2004).
5.  வீரகேசரி (2018).
- நாள் 2 - 


            இரண்டாம் நாள் அதிகாலையிலேயே நெடுந்தீவு நோக்கிய பயணத்துக்குத் தயாராகிவிட்டோம்.

நெடுந்தீவு:
            யாழ்ப்பாண குடாநாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று நெடுந்தீவு. இது ஆனையிறவு (Elephant Pass)  அருகே குறுநிலப்பகுதி வழியாக வன்னி நிலத்தோடு இணைகிறது. நெடுந்தீவு பயணத்துக்காக யாழ் பேருந்து நிலையத்துக்குப் பால் அப்பங்களோடு நாங்கள் சென்ற போது எங்களுக்காகப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களும், திருமிகு. உமா சந்திரபிரகாஷ் அவர்களும் காத்திருந்தனர்.


            பணிக்குச்செல்லும் இளம்பெண்கள் பவுடர் பூச்சுகளோடு ஏறி நிரம்பிய அரசுப் பேருந்தில் நாங்களும் ஏறிக் கொண்டோம். அந்த காலத்தைய பல்லவன் டிரான்ஸ்போர்ட்டை நினைவு படுத்தியது அந்தப்பயணம். இளங்காலை வேகக் காற்று முகத்தில் அறைய, ஒல்லாந்தர் கோட்டையைப் பேருந்திலிருந்து பார்த்தபடி மண்டைத்தீவு, வேலணை வழியாக புங்குடுத்தீவு சென்றடைந்தோம்.


            மக்கள் போக்குவரத்து அதிகமற்ற சாலை வழியெங்கும் போரினால் கைவிடப்பட்ட இல்லங்கள், வாழ்வின் இழப்பைச் சொல்லிக் காட்டுவது போலச் சிதைந்து கிடந்தமை எமக்குள் வலியைப்பாய்ச்சின. அதே சமயம் வழிநெடுக கண்ணில் பட்ட பல பெயர்ப்பலகைகளில் தெரிந்த வாசிப்பு நிலையங்கள் மனதுக்கு இதம் தந்தன. புங்குடுத்தீவில் நாங்கள் இறங்கிய சமயம் மிகச்சரியாக நெடுந்தீவு செல்லும் படகு புறப்படத்தயாராக நின்றது.

குமுதினி:
            நாங்கள் ஏறிய படகு குமுதினி என்ற பெயர் கொண்டது. இந்தப்படகின் பின்னணியில் ஆழமான சோகக்கதையொன்று உள்ளதென்று உமா துவங்கினார். 1985இல் சிங்கள வீரர்கள் கையால் கைக்குழந்தை, பெண்கள் உட்பட 36 தமிழர்கள் இதே படகில் உயிரிழந்த துயரத்தை அவர் விவரிக்க, யாம் பேச்சற்றுப் போனோம். உயிர் அத்தனை இலகுவாகப் போய்விட்டதென்றால் மானுடம் எதை நோக்கித்தான் பயணிக்கிறதென்ற கேள்வி மனதைக்குடைய, கடலை வெறிக்கத்துவங்கினேன். அன்றைய இழப்பை இன்றும் மனதில் தாங்கிக்கொண்டு வாழும் அந்நிலத்து மக்களையும், யாவற்றையும் வாங்கித் தம் அடிமடியில் கிடத்திக்கொள்ளும் அந்தக்கடலும் போலவே குமுதினியும் இன்று வரை மவுனமாகக் கடலைக்கடந்து வருகிறாள்.

            நெடுந்தீவில் விருந்தினர் இல்லத்தில் எங்களுக்கு வேகவைத்த வள்ளிக்கிழங்கும் தேங்காய் சம்பலும் பரிமாறினர். பதின்ம வயதுகளில் ஊர்க்கோவில் கொடையின்போது ஆலிலையில் இப்படிச் சுட்டும் இட்டும் தின்ற நினைவு.

            பின்னர் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக வரலாற்று ரீதியில் பேரா. புஸ்பரட்ணம் அவர்களிடமும், யுத்த காலமும் அதற்குப்பின்னரும் மக்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் மற்றும் பெண்களின் நிலைப்பாடு போன்ற கருத்தியல்களை முன்வைத்து திருமிகு உமாசந்திரபிரகாஷ் அவர்களிடமும் நேர்காணலாக ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டன.

            அதன்பின் எங்களது ஆய்வுப்பயணம் தொடங்கியது. முதலில் டச்சுக்கார்கள் காலத்தில் கட்டப்பட்டதான வைத்தியசாலையும் அதில் அமைந்திருந்த புறா மாடத்தையும் பார்வையிட்டோம். மேற்கத்தியர் காலத்தில் தூது செல்ல புறாக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டமையால் அவற்றிற்காக இவ்வாறான புறா மாடங்கள் அமைப்பதும் அவர்களுக்கு இயல்பானதாக இருந்திருக்கிறது.

            இத்தகைய புறாத்தூது 1988 வரை வழக்கத்திலிருந்திருக்கிறது. மேற்திக்கில் எகிப்தியர் காலந்தொட்டு பயன்பாட்டில் இருக்கும் நூதனமான இத்தகைய  பறவை மாடங்களை அமைக்கும் வழக்கம் கீழ்த்திசைக்கடல் தேசங்களிலோ, அல்லது செங்கால் நாரையைத் தூதுவிட்ட நம் தமிழ்ப் பண்பாட்டிலோ இருக்கவில்லை என்பதை வியப்போடு நினைந்தேன்.

            மதிய உணவுக்காக நெடுந்தீவுவாசியான திரு. கணபதி அவர்கள் இல்லம் சென்றோம். பனைமரக் காடுகளுக்கு மத்தியில் குடிலமைத்து தம் மனைவி மக்களோடு வாழ்ந்து வரும் ஓய்வு பெற்ற தபாலதிகாரியான இவர் எங்களுக்காக ’ஒடியல்’ கடல் கூழ் தயார் செய்து கொண்டு இருந்தார்.

            காயவைத்த பனங்கிழங்கை உடைத்து ஒடியல் மாவு செய்யப்படுகிறது, இதைச் சேர்த்தால் தான் இந்தக்கூழுக்கு அந்த தனித்த சுவை கிட்டும் என்கிறார்கள். பனையோலைப் பிளாவில் அதை ஊற்றி, பனங்கிழங்கு உருளைகளோடு உண்ணக்கொடுத்தார்கள். நான் மீன் எடுப்பதில்லை என்று எனக்குச் சோறும், பருப்பும், கொத்தவரங்காய் பிரட்டலும் கிடைத்தது.

            உண்டு களித்து உறவாடியபின் மீண்டும் தொடர்ந்தோம் பயணத்தை. அங்கிருந்து தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடம் ஒன்றிற்கு எங்களை அழைத்துச்சென்றார் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள்.

வெடியரசன் கோட்டை/புத்த கட்டுமானம்:
            வட்டவடிவில் பீடத்தோடு பெரிய தூபியின் அடித்தளம் போன்ற நிலையிலிருந்த அது ஒரு பவுத்த கட்டுமானம். அங்கிருந்த மூன்று தூபிகளில் பெரியதது.

            அதன் அடித்தள நடைபாதையில் சில கல்வெட்டுகளையும் கண்டோம்.  அவற்றில் இரண்டு 14-15 நூற்றாண்டுத் தமிழிலும் ஒன்று 1-2ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பிராமியிலும் இருந்தன. பேராசிரியர் இவை தூபிகளல்ல பவுத்த தேராக்களின் நினைவிடங்களாக இருக்கலாம் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.

           இவ்விடம் ஒரு சாராரால் 2ஆம் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் என்பவனது கோட்டை என்றும் நம்பப்படுகிறது. இவனது பெயரில் நயினாத்தீவில் வீதி ஒன்று இருப்பதாயும் சொல்கிறார்கள். எனினும் இதற்கான உறுதியான வரலாற்றுச்சான்று ஏதுமில்லை.

            மேற்குப்பகுதியில் சோழர்காலத்து இடிபாடொன்று இருப்பதாகவும், இன்னும் ஏராளமான தொல்லியல் தளங்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பகுதியில் இருப்பதால் அவற்றை நம்மால் பார்வையிட முடியாத நிலை என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

ஒல்லாந்தர் கோட்டை:
            போர்த்துக்கீசியர், டச்சு ஆதிக்கத்திலிருந்த நெடுந்தீவு அதன் எச்சங்களாக இன்று நிற்கும் கட்டுமானங்களுள் ஒன்று தான் கடலைப் பார்த்தபடி இருக்கும் ஒல்லாந்தர்/டச்சுக்கோட்டை.


            இது ஒல்லாந்தர் கோட்டை என்றே பரவலாக நம்பப்படுகிறது. எனினும் ஒல்லாந்தர் ஆவணங்களில் இத்தகைய கோட்டை இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதே சமயம் போர்த்துக்கீசியர் பற்றிய குறிப்புகளில் நெடுந்தீவில் அவர்களது தலைமையகமாக விளங்கிய ஈரடுக்குக் கோட்டை பற்றிய குறிப்புத் தென்படுவதால் இது போர்த்துக்கீசியர் கட்டி பிற்காலத்தில் ஒல்லாந்தர் பயன்பாட்டிலிருந்திருக்கலாம் என்றும் பேராசிரியர் கருத்துரைத்தார்.

            ஒல்லாந்தர் காலத்தில் அரேபியத் தேசத்திலிருந்து தனித்துவமான குதிரைகளை இறக்குமதி செய்து வளர்த்தனர். அவற்றின் பராமரிப்புக்காகக் கட்டப்பட்ட விசாலமான குதிரை லாயமும் காணக்கிடைத்தது. மதுரையின் யானைக்கட்டித்தூண் ஏனோ என் நினைவுக்கு வந்தது.

            இன்றளவும் அந்தக்குதிரைகளின் வழிவந்த அழகுப்பரிகள் அங்கே திரிவதைக் காணமுடிகிறது.

            ஒல்லாந்தரின் வருகையோடு வந்தது குதிரை மட்டுமல்ல மற்றொரு வியத்தகு அம்சமான பெருக்கு மரம். இதுவும் இங்கே தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

            அந்தி மயங்கிய நேரத்தில் வரியோடிய நீலத்திரைகடல் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் வெற்றியின் நினைவுகளையும், தோல்வியின் ரணங்களையும், உலகறியா இரகசியங்களையும் நினைத்து பெருமூச்செறிந்தபடி விசைப்படகில் புங்குடுத்தீவு நோக்கித் திரும்பினோம். அங்கே பேருந்து சேவை முடிந்திருந்த நிலையில் தனியார் வாகனம் ஒன்றை இருத்தி யாழ்ப்பாணம் வந்தடைந்தோம்.

            மறுநாள் செல்லவிருந்த யாழ் நூலகத்தை மனதில் இருத்தியபடி உறங்கிப்போனோம்.
 - நாள் 3 - 


            காலையில் முதல் வேலையாக நல்லூர் முருகன் கோயிலுக்குச்செல்வதாக ஏற்பாடு. வழியில் சங்கிலியான் அமைச்சர் வீடு என்று பழமையான கட்டிடம் கண்ணில் படவே உள்ளே சென்றோம்.

மந்திரிமனை:
            சங்கிலியன் என்னும் 15ஆம் நூற்றாண்டுத் தமிழ் மன்னன் இலங்கை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவன். நல்லூரில் ஆட்சி செய்த இவன் போர்த்துக்கீசியருக்கு எதிராகப் பலமாகக் குரல் கொடுத்தவன். இவனது மந்திரியின் அரண்மனை தான் மந்திரிமனை என்ற பெயரோடு இப்போதும் நிற்கிறது. திராவிடக்கட்டுமானத்தில் இரண்டு தளங்களுடன் அழகுற இருந்த மாளிகை டச்சுக்காரர்கள் தம் காலத்தில் புனரமைத்துக் கொண்டதால் இப்போது இருவிதமான கட்டுமான அழகையும் தாங்கி நிற்கிறது.

            இதன் தற்போதைய உரிமையாளர் இதைச்சேர்ந்த காணியை வர்த்தக இடமாகப் பயன்படுத்துவதாகத் தெரியவந்தது. அங்கிருந்து நல்லூர் முருகனைக் காணச் சென்றோம்.

நல்லூர் கந்தசாமிக்கோயில்:
            பொன்வண்ணப்பூச்சில் அருமையான திராவிடக்கட்டுமானமாக கம்பீரமான தோற்றப்பொலிவோடு நின்றது நல்லூர் கந்தசாமிக்கோயில்.

            மூலக்கோயிலின் காலம் 10ஆம் நூற்றாண்டு என்பர். மதுரையைப் போல கோயிலை நடுவே வைத்து நாற்புறமும் வீதிகளும் சுற்றங்களும் கோட்டை மதிலுமாய் நான்கு புற வாயில்களோடு ஒரு காலத்திலிருந்த நல்லூர் நகரம், அன்றைக்குச் சிறப்புப்பெற்ற யாழ் அரசின் தலைநகராக இருந்திருக்கிறது.


            பதினேழாம் நூற்றாண்டில் போர்த்துக்கிசீயர்கள் வரும் வரை நல்லூர் ராஜதானியின் தலைமையாக இருந்து செயல்பட்டிருக்கிறது.

            சிறப்பு மிக்க அந்தக்கோயிலை அழித்து சர்ச்சுகள் மற்றும் இன்ன பிற கட்டுமானங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கீசியர்கள். தற்போதுள்ள ஆலயம் பிற்காலத்தில் எழுப்பப்பட்டு 1890களில் ஆறுமுக நாவலரின் திருப்பணியால் புனரமைக்கப்பட்டு நிற்கிறது.

            தரிசனம் முடித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை ஏற்பாடு செய்திருந்த கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஒரு சிறிய நிகழ்வில் பங்கேற்றோம். அங்கிருந்து நாகவிகாரைக்குச் சென்றோம்.

நாக விகாரை:
            புதுப்பொலிவோடு காட்சி தரும் ஒரு பண்டைய பவுத்த வழிபாட்டிடம் இந்த விகாரை.

            இதன் மூலக்கட்டுமானத்தின் காலம் பொ.மு. 3 என நம்பப்படுகிறது. பவுத்தம் பரப்ப மகா போதிக்கிளையோடு வந்த தேரி சங்கமித்ரை மற்றும் தேரோ மகிந்தன் இங்கே தங்கியதாகவும் அப்போது யாழ் நிலத்தை ஆண்ட நாக அரசன் வேண்டுகோளுக்கிணங்க போதியின் கிளையை இங்கே ஒரு வாரக் காலம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அது தேவனாம்ப்ய திஸ்ஸனின் ஏற்பாட்டில் அனுராதபுரம் செல்கிறது.  இந்தச்சிறப்பைப் பெற்றதால் இத்தளம் மக்களின் அன்புக்குரிய பவுத்த புனிதத்தலமாகிறது.

            கோயிலின் உள்ளே அமைதியும் சாந்தியும் தழும்பும் புத்த உருவங்கள் ஆங்காங்கே நம்மைப்பார்த்துச் சிரிக்கின்றன. ஆலயத்தின் சுவரெங்கும் அழகிய வண்ணங்களில் பவுத்தக் கதைகளின் ஓவியங்கள். முழுமையான அமைதியில் பத்து நிமிடங்களைக் கரைத்தபின் நிர்மலமான மனதோடு வெளியேறினோம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நாக விகாரைக்குள் பரிவார மூர்த்திகளாகக் கணபதி, அம்மன், விஷ்ணு, கந்தன் போன்ற இந்து தெய்வ உருவங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அண்மையில் சிவலிங்கம் ஒன்றும் இதில் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியதாகத் தோன்றியது.

            இதையே இந்துக்கோயில்களிலும் சர்ச்சுகளிலும் பின்பற்றினால் நலமாக இருக்கும் என்று எண்ணியபடி அங்கிருந்து கிளம்பினோம்.

யாழ் நூலகம்:
            சோலைப் பின்னணியில் பிரம்மாண்டமாக நின்றது நூலகம். வாயிலிலேயே வீணையோடு சரஸ்வதி சிற்பம் சிரித்து வரவேற்றது.

            1934இல் செல்லப்பா என்ற தனி மனிதரால் துவக்கப்பட்ட வாசிப்பு அறை மெல்ல மக்கள் மனதில் குடியேறி நூலகமானது. யாழ் மக்களோடு, வணிகர்களும், மெட்ராஸ் பைபிள் சங்கம், கொழும்பு இஸ்லாமியர் சங்கம், யாழ் வணிகர்கள் சங்கம் போன்றவை பெரிய அளவில் பங்களித்தனர். 1959இல் பெரிய நூலகமாக இது துவக்கிவைக்கப்பட்டது. அன்றைய காலத்தின் தெற்காசியாவின் மிக அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகமாகச் சிறப்புப்பெற்றது யாழ் நூலகம்.

            1981இல் ஒரு மோசமான இரவில் ஐக்கிய இந்து முன்னணிக் கட்சியின் பேரணியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பாக இரவோடு இரவாக அன்றைய இலங்கை அரசு வன்முறையைக் கட்டவிழ்த்தது. பல லட்சம் தமிழர்களின் கடைகளும் வீடுகளும் தமிழ்த் தலைவர்களின் சிலைகளும் தமிழ்ப்பத்திரிக்கை அலுவலகமும் என்று பன்முகத்தாக்குதலில் யாழ் நகரமே தீக்கிரையானது. யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய சுவடிகளும் தீக்கிரையாயின. தமிழர் தம் அறிவுலகமே இருண்டது போலத் துயருற்றனர். ஒரு இனத்தின் மீது செலுத்தப்படும் மிக மோசமான வன்முறை அவ்வினத்தின் அறிவுக்கருவூலத்தின் மீது நடத்தப்படும் வன்முறை தான். அந்த வகையில் மீளாத்துயரில் ஆழ்ந்த யாழ் மக்கள் விரைவிலேயே மீண்டனர். ஒரு வருடத்துக்குள் நூலகத்தைச் சரிசெய்து புத்தகங்களைச் சேர்க்கத்துவங்கினர், ஆனால் 1983இல் நடைபெற்ற இனக்கலவரத்தில் குண்டுமழையில் சிக்கிப் பொத்தல்களோடு கூடாகி நின்றது நூலகம், மீண்டும் 1985லும் வன்முறையைச் சந்தித்தது. இருபது ஆண்டுகள் கழித்து 2003இல் நூலகம் திறக்கப்பட்டிருக்கிறது.

            தன் கருப்பு வரலாற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பொலிவோடு இளையோரை வாசிக்க இழுத்துக்கொண்டு சுறுசுறுப்பாய் செயல்பட்டு வருகின்ற நூலகத்திலிருந்து வெளியேற மனதே இல்லை.

            இங்கே அண்மையில் இந்திய அரசு சார்பில் ஐம்பதினாயிரம் புத்தகங்கள் அனுப்பப்பட்டு நூலகத்தின் ஒரு பகுதி இந்தியப்பகுதியாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த திருமிகு அப்துல் கலாம் ஐயா அவர்களின் திரு உருவத்தைச்சுற்றிலும் புத்தகங்கள் சுவர்களாய் எழும்பி நிற்பதைக் காண்கையில் மனம் நிரம்பி வழிந்தது.

            அதன் பிறகு சுண்ணாகம் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு மாலை தேய்ந்து இருள் ஏறிய வேளையில் தான் எங்களால் கந்தரோடை செல்ல முடிந்தது.

கந்தரோடை:
            மின்சாரக்கம்பி வேலிக்குப்பின்னே அழகிய பெரும் அரைக்கோளக்குன்றுகள் இருளில் யானைக்குட்டிகள் உறங்கிக் கொண்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது. மிக நேர்த்தியான கட்டுமானத்தில் கந்தரோடை தென்பட்டது. பலவகையிலும் இது இந்தோனேசியாவின் ஜோக்ஜகர்தாவை எனக்கு நினைவூட்டியது.

            கந்தரோடை இலங்கை தொல்லியல் களத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் தளங்களுள் ஒன்று. யாழ் மாவட்டத்தின் பழமையான தொல்லியல் தளம் என்ற சிறப்பையும் பெறுகிறது. இந்த நிலப்பகுதி ஒரு காலத்தில் கதிரமலை என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்நிலத்தில் தலைநகராகச் செயல்பட்ட சிறப்பு வாய்ந்த வணிகப் பெருநகரமொன்று இங்கே இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் இது பன்னெடுங்காலமாகத் தொடர்ந்த மக்கள் பயன்பாட்டிலிருந்த நிலம் என்றும் இங்கே அகழாய்வில் கிடைத்த அரிய சான்றுகள் கொண்டு தொல்லியல் அறிஞர்கள் நிறுவ முயல்கின்றனர்.


            அவ்வகையில் மூவாயிரத்தில் இருந்து குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைச்சொல்லும் இடமாகிறது (1). இங்கே கிடைக்கப்பெற்ற அகழாய்வுப் பொருட்களில் தமிழ் பிராமி பொறித்த பானை ஓடும் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. பலதரப்பட்ட பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள், நாகம் பொறித்த நாணயங்கள், கருங்கல் அம்மி, லட்சுமி உருவம் ஆகியவை பௌத்த காலத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை.

            எனினும் சிங்கள இன எழுச்சியின் காரணமாக இங்கே தமிழ் வரலாற்றின் தரவுகளை மறுத்து அந்த கால எல்லைக்குப்பிறகு சுண்ணாகத்தில் கிடைத்த காந்தார மரபைச்சேர்ந்த புத்தர் உருவம் போன்ற பௌத்தத் தரவுகளை மட்டும் பிரபலமாக்கி, கந்தரோடை கதுரகொட என்ற பெயர் கொண்டு பவுத்த மரபுச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

            அங்கே வைக்கப்பட்டிருக்கும் முழுக்க சிங்களத்திலான அறிவிப்புப் பலகையில், இது அனுராதபுரக்காலத்திற்கும் முன்பு புத்தர் இலங்கை வந்து சுளோதரனுக்கும் மகோதரனுக்கும் இடையிலான சண்டையைத் தீர்த்தபின் ஓய்வெடுத்த இடம் என்றும் பொலனருவை காலத்தில் சிறப்பான பௌத்த விகாரையாக இருந்த இவ்விடத்தைத் திராவிட எதிரி மன்னன் சங்கிலி சிதைத்து நாசப்படுத்தினான் என்று எழுதியிருக்கிறதாம் (2).

            இங்கேயும் பலகாலமாகத் தமிழ் வரலாறு புதைக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்று தெரிந்தது. வரும் காலங்களில் மாற்றம் நிகழும் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையோடே சிங்கள இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் நின்ற புத்தரை வணங்கி மீண்டோம். அருகே விட்டுவிடக்கூடாதென அனைவரும் சொன்ன நிலாவரைக் கிணற்றைக் காண வேகமாகச்சென்றோம்.

நிலாவரைக்கிணறு:
            இருள் ஏறிவிட்டபடியால் கதவுகளடைத்துவிட்டுக் காவலர் உள்ளே உறங்கினார் போலும். நாங்கள் பல நாடுகளிலிருந்து வந்திருக்கிறோம் என்று மன்றாடியதும் சிரித்தபடி வந்து கதவு திறந்துவிட்டார்.

            உள்ளே முழுமையான சுற்றுச்சுவர்களோடு கூடிய பெரியதொரு குளத்தைக்காட்டி இது தான் நிலாவரைக்கிணறு என்றார்கள். சிவன் கோயில் தெப்பக்குளம் போன்ற அமைப்பிலிருந்த அது இரண்டு பனை ஆழமாம். சில ஆண்டுகள் முன்பு இலங்கைக் கடற்படையின் நீர்மூழ்கி ரோபோக்கள் எடுத்த புகைப்படங்களில், உள்ளே எந்தக்காலத்தோ மூழ்கிய மாட்டுவண்டி ஒன்று டைட்டானிக் போலத் தண்ணீருக்குள் தனியாகக் கிடப்பது தெரிந்தது. இது நிலத்தடி நீரோடு நேரடியாக இணைப்பில் இருப்பதால் எந்தக்காலத்திலும் வற்றுவதில்லை அதே போல இங்கிருந்து பல சுரங்கங்கள் வழியாக நீரோட்டங்கள் பாய்வதாயும் தெரிகிறது, இந்த நிலவியல் அற்புதத்திற்கு இராமாயணத்தை இணைத்த கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உண்டு. இராமர் இலங்கை நோக்கிப் படையெடுத்து வந்த நிலையில் தன் வானரப்படையின் தாகம் தீர்க்கவே அம்பெய்து நிலத்தைப் பெயர்த்த குளம் இது என்பது தான் அந்தக்கதை. இலங்கையில் சராசரி மானுட புரிதலுக்கு எட்டாத அற்புதங்களுக்கு இராமனோ இராவணனோ புத்தனோ விளக்கம் தருவது அன்றைய மக்களின் நம்பிக்கை சார்ந்த புரிதலை நமக்குக் காட்டுகிறது. அருகே மிகப்பழமையான சிவன் கோயில் ஒன்றும் உள்ளது, அது தட்சண கைலாய புராணத்தில் ’நவசைலேஸ்வரம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாயும் சொல்கிறார்கள்(3).

            இரவு உணவை எடுத்துக்கொண்ட பின் வவுனியா நோக்கிப் பயணப்பட்டோம். நடுவழியிலேயே முறுகண்டி பிள்ளையாரையும் விடவில்லை நாங்கள். யாழ்ப்பாணம்-கண்டி புறவழிச்சாலையில் இடைப்பட்ட பயணத்தை நல்லபடியாக்க அவர் அருளுவார் என்று நள்ளிரவில் கூட நிறுத்தி தேங்காய் உடைக்கத் தவறுவதில்லை ஓட்டுநர்கள். அதனால் பயண இலக்கணம் பிசகாமல் அவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு பின்னிரவு வேளையில் தான் வவுனியா வந்தடைந்தோம். சிறீநகரில் தோழர் வீட்டில் அந்த நேரத்திலும் எங்களுக்காக விழிப்போடு காத்திருந்தார்கள். விடியலுக்கு இருந்த சொச்ச நேரத்தையும் பயனாக்க உறங்கிக் கழித்தோம்.

            மறுநாள் வரலாற்றுச்சிறப்பு மிக்க அனுராதபுரம் நோக்கிய பயணம் எங்களுக்காகக் காத்திருந்தது.


சான்றுகள்:
1.  Indrapala, 2006.
2.  Samanth Subramanian,2015
3.  Mirror, 2016
- நாள் 4 -  


            நான்காம் நாள் அதிகாலையிலேயே தோழர் விருந்தோம்பலில் பிட்டும் சாம்பாரும் உண்டுவிட்டு வவுனியாவிலிருந்து அனுராதபுரம் புறப்பட்டு விட்டோம். காலை பத்து மணி சுமாருக்கு அனுராதபுரம் வந்தடைந்தோம். அனுராதபுரத்தில் ஒரு நாள் மட்டுமே இருந்த படியால் விரைவாகச் செயல்பட வேண்டியிருந்தது.

            முதலில் நாங்கள் சென்றது பழைய அனுராதபுரம் இடிபாடுகள். தொலுவில என்ற இடத்தில் அமைந்த ’ஜேதவான விகாரை’ ஒன்றின் மிகவும் விஸ்தாரமான கட்டுமானக்கூட்டம். இது ஒரு காலத்தில் ’ஆராமமாக’ (விகாரைத்தோட்டம்) இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்(1).

            பசும்புல்லோடிய தரைகளில் ஆடித்திரிந்த மயில்களுக்கு மத்தியில் ஆங்காங்கு வெளித்தெரிந்தன ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறு கட்டிடங்களின் அடித்தளங்கள். வடக்கேயும், தெற்கேயும் இரண்டு சற்றே பெரிய கட்டுமானங்கள். வட திசையிலிருந்த கட்டுமானம் ’போதிகர’ (வெள்ளரசு வீடு) ஆக இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.


            தென் திசையில் இருப்பது புத்த உருவம் தாங்கியதாக இருந்திருக்க வேண்டும், சற்றே உயர்ந்த மாடத்தில் சிலாரூபத்துக்கான இடத்தோடு இருக்கிறது இது. இங்கே கண்டெடுக்கப்பட்ட சுமார் ஐந்தரை அடி உயரப் புத்தர் சிலை தான் அனுராதபுரத்தில் கிடைத்தவற்றிலேயே அழகானதென்று சொல்கிறார்கள்.

            மூல விக்ரகத்தின் அடியிலிருந்து ஒரு சிறிய வெண்கலச்சிலையும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது(2) . அது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே படித்தளத்தில் ஒரு கல்வெட்டும் நம் கண்ணில் பட்டது. யாம் சுற்றி வருகையில் அருகிலேயே 25குழி கொண்ட கல்பாத்திரமும் (கல்களன்) காணக்கிடைத்தது. மூல விக்ரகத்தின் அடியில் இத்தகைய கல்பாத்திரங்களில், திசை சார்ந்த ‘மங்கல’ பொருட்கள் வைத்து மூடி அதன் மீது சிலையைப் பிரதிஷ்டை செய்வது இன்றும் பௌத்தம் மட்டுமல்லாமல் வேத ஆகமக் கோயில்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கென்பதை நாம் அறிவோம்.

            இதே போன்ற சூலம், மணிகள், பாதுகை மாதிரி- என்று பௌத்த நெறிப்படியான மங்கலப்பொருட்கள் வைக்கப்பட்ட கல்பாத்திரத்தை மலேசியாவின் மிகச்சிறந்த தொல்லியல் களமான ’லெம்பா புஜாங்’ அகழாய்வகத்தில் கண்ட நினைவு வந்தது.

            தொலுவிலவில் இருந்து கிளம்பி அனுராதபுர வளாகத்துள் நுழைந்தோம். அரை நாளில் பார்த்து முடிக்கமுடியாது என்று உணர்ந்து வருந்தினோம். குறைந்தபட்சமாக ’மகாபோதி’யாவது பார்த்துவிட்டுப் போகலாம் என்று அங்கே சென்றோம்.

            அருகிலேயே மரத்துக்கடியில் மிக ரம்மியமான சூழலில் ஒரு தூபியின் இடிபாடு காணக்கிடைக்க முதலில் அங்கே சென்றோம். அது சிலாசேதிய / குஜ்ஜ திஸ்ஸ என்ற தூபி என்று அறிந்தோம். அனுராதபுரத்தின் மிகப்பழமையான கட்டுமானங்களுள் ஒன்று அங்கே புதைந்திருக்கலாம் என்று தெரிந்தது. தற்போது இடிபாடாய்க் காணக்கிடைக்கும் அத்தூபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அதற்கும் முந்தைய கட்டுமானத்தின் மீது எழுப்பப்பட்டிருக்கிறது என்பது அறிஞர் துணிபு(3).

            பொ.மு. 119-109 காலத்துக் கதைகள் சில இதற்குச்சொல்லப்படுகின்றன. சத்தாதிஸ்ஸன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் குஜ்ஜதிஸ்ஸன் என்ற சக்திவாய்ந்த தேரோ ஆகாய மார்க்கமாக இங்கே வந்திறங்கினார் என்ற கதை ஒன்று. புத்தர் தன் இலங்கை வருகையின் போது இந்த இடத்திலே தன் பாதம் பதித்தார் என்பது மற்றொரு கதை.

            ஆனால் இவ்விரண்டும் தவிர்த்து இன்னொரு சுவாரஸ்யமான கதையும் உண்டு. இந்தத் தூபி இருக்கும் இடம் கோட்டைக்குச் செல்லும் பழமையான பாதையின் அருகே என்பதால், துட்டகாமினியோடு போரிட்டு மாண்ட தமிழ் அரசன் எல்லாளனுக்காக துட்டகாமினி கட்டிய தூபியாக இது இருக்கலாம் என்பது தான் அந்தக் கதை. ஆனால் இது கர்ண பரம்பரைக் கதையல்ல அறிஞர்களின் தர்க்கரீதியான கருத்து. ஆயினும் இது எல்லாளனின் கல்லறை அல்ல என்றும் மன்னர் மாளிகைக்கு அருகே அகழிக்கு அப்பால் உள்ள தக்கணத்தூபியே எல்லாளன் கல்லறை என்ற மாற்றுக்கருத்தும் உண்டு.


            ஒரு பௌத்த மன்னன் தன் எதிரியே ஆனாலும் தன்னால் போரில் வீழ்த்தப்பட்டவன் எரியூட்டப்பட்ட இடத்தில் அவனுக்கொரு தூபி எழுப்பியிருக்கிறான் என்றால் அந்த இரு மன்னர்களின் மாண்பையும் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த எல்லாளனைத்தான் நமது மனுநீதிச் சோழன் என்கிறார்கள். இது சாத்தியமா என்பது கேள்விக்குறி. மனுநீதிச்சோழனைப்போலவே பசுவின் கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்ட கதையை இவன் மீது சூட்டுகிறது மகாவம்சம். இவன் சோழ வம்சத்தினன் என்றும் இவன் தவறான மதநம்பிக்கை கொண்டவனாயினும் (அதாவது  பௌத்தம் பின்பற்றாதவன் என்ற கருத்து) நீதி வழுவாத உத்தம ஆட்சி செய்தவன் என்றும் கூறுகிறது மகாவம்சம்.

            அந்த இடத்தில் வேறெங்கும் இல்லாத ஒரு அசாத்தியமான நிம்மதி மிகுந்த அதிர்வலை சூழ்வதை அங்கு இருந்த யாவருமே உணர்ந்தோம் என்பதை இங்கே நினைவு கூர வேண்டியிருக்கிறது. நாங்கள் சென்ற சமயத்தில் அங்கே இளம் தேரிகள் சிலர் தாமரை இதழ்களை அள்ளித்தெளித்து மதுரமாய் பாளியில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தபடியால் சூழல் இன்னும் நிர்மலமாக இருக்கவே அங்கேயே ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தோம். பின்னரும் அகல மனமில்லாமல் விலகி, அங்கிருந்து மகாபோதி வளாகத்துள் நுழைந்தோம்.

            பொ.மு. 250இல் புத்தரின் கோட்பாடுகளை உலகுக்கு உரைக்கும் உன்னதப்பணியில் அசோகனின் மகன் மகா தேரோ மஹிந்தன் வந்து வழிநடத்தியபின் பௌத்தம் தழுவியவன் தேவனாம்ப்ய திஸ்ஸன். (தேவநம்பியதீசன்)

            அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அசோகரின் மகள் மகா தேரி சங்கமித்ரை போதி மரக்கிளையோடும் (வெள்ளரசு), சடங்கு சம்பிரதாயங்களுக்குத் தேவையான சகல பரிவாரங்களோடும் (மரத்துக்கு நீரூற்றத் தூய்மையான நீர்மகளிர் முதற்கொண்டு) இங்கே வந்து சேர்கிறார்(4). தேவனாம்ப்ய திஸ்ஸனிடம் அவர்கள் மரியாதையாக அளித்த அந்த போதிக்கன்று இன்று வேர் விட்டு பெருவிருட்சமாய் பரவிக் கிடக்கிறது.

            புத்த கயாவின் போதி மரத்துக்குத் தீமை நேர்ந்து அழிவுற்றபோதெல்லாம் இங்கிருந்து தான் கிளை கொண்டு செல்லப்பட்டது என்ற தகவலை எழுத்தாளர் தோழர் கவுதம சன்னா அவர்கள் சொன்னபோது வியப்பாக இருந்தது.

            பொ.மு. 249இல் முதன் முதலாக நடப்பட்டுத் தொடர்ந்து அரசாலும் மக்களாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்தப்போதி மரம். இன்றளவும் போதியோடியைந்த சடங்குகள் யாவும் பழமையின் வழமை மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதைக் கண்ணாரக்கண்டுவிடலாமென்று அருகே போனோம்.

            உயர்ந்த மாடத்தின் மீது நின்ற அந்தப்பெருமரத்தின் அருகே பெருந்திரளான கூட்டம் இருந்த போதிலும் தள்ளுமுள்ளு இல்லை இரைச்சல் இல்லை. அமைதியாக அவரவர் போதிமரத்தின் நிழலில் கண்மூடி அமர்ந்து தமக்குள் புத்தரைத் தேடிக்கொண்டிருந்தனர். யாமும் அப்படியே ஐந்து நிமிடம் அமர்ந்து அந்த அகண்ட மவுனத்தைக் கொஞ்சம் உள்ளிழுத்துக் கொண்டபின் கீழே வந்தோம்.

            போதிமரத்தின் பின்னணியில் இலங்கையில் பௌத்தம் பற்றி எழுத்தாளர் திரு கவுதம சன்னா அவர்கள் விவரிக்க தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் ஒரு காணொளி ஆவணமும் எடுக்கப்பட்டது. போதிகரத்தை விட்டு வெளியேறி நடக்கையில் அதன் வளாகத்திலிருந்த சட்டசாலை, லோகபசாதா, ரம்ஸி மாலகா, பனம்பமாலகா என்று இடிபாடுகள் தெரிந்தன.

            இதில் "லோகபசாதா" என்பது தேவனாம்ப்ய திஸ்ஸன் கட்டிய முதல் கூடம். ஒன்பது தளத்தோடு ஒவ்வொரு தளத்திலும், நவமணிகளும் வெள்ளி மணிகளும் பதித்த விதானங்களோடும் நூறு சாளரங்களோடும் கூடிய ஆயிரம் அறைகள் கொண்ட பெரும் கூடம் என்று மகாவம்சம் வர்ணிக்கும் கட்டுமானம் இது. இப்போது அவற்றின் அடித்தளக் கற்தூண்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. மரக்கட்டுமானம் எப்போதோ அழிந்துபட்டன(5).

            அடுத்து வந்த பனம்பமாலகா தேரோ மஹிந்தனின் நினைவிடம் என்று கருதுகின்றனர்.

            அடுத்து அவ்விடத்தின் மிகமுக்கியமான கட்டுமானமும் இலங்கை பௌத்தர்களின் பேரபிமானத்துக்குப் பாத்திரமான தூபியுமான மஹாதூபி எனப்படுகிற ரத்னமாலி மகாதூபிக்குச் சென்றோம். போதி வளாகத்திலேயே தான் மகாதூபியும் இருக்கிறது.

ரத்னமாலி மகாதூபி/ருவன்வலி மகா ஸெய:
            ஆதித் தூபி சிங்கள மகாவீரன் துட்டகாமினி (பொ.மு161) கட்டியது. பின் தேவனாம்ப்ய திஸ்ஸன் காலத்தில் (பொ.மு 250) மகா தேரோ மகிந்தர் வந்து சிறப்பித்தது. சிறப்பு வாய்ந்த வரலாற்றைத் தன்னோடு புதைத்துக் கொண்டிருந்த தூபியின் நடைத்தளமெங்கும் பழைய தூண்களின் எச்சங்களும், கல்வெட்டுகளும், சிற்பங்களும், புடைப்புருக்களும் சிதறிக் கிடக்கின்றன.


            நடக்கையில் நம் காலடியில் திடீரென்று புலப்படும் கல்வெட்டுகளையும் சிலாரூபங்களையும் கண்டு வியந்தபடி சுற்றிவந்தோம். அருகிலேயே சுவையான இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு முடித்த கையோடு அபயகிரி மற்றும் விஜயபாகு ராஜாவின் மாளிகை என்று சொல்லப்படுகிற அனுராதபுரக் கோட்டை இருக்கும் தொல்லியல் வளாகத்தை வாகனப்பார்வையாக ஒரு சுற்று சுற்றியபின் மாத்தளை நோக்கிய பயணத்தைத் துவங்கினோம்.

மாத்தளை & ரத்னபுரி:
            சில மணி நேரப் பயணத்துக்குப்பிறகு மாத்தளை வந்தடைந்தோம். திடீரென்று மருத நிலத்திலிருந்து குறிஞ்சி நிலத்துக்குக் குடிபெயர்ந்தது போலத் தோன்றியது. தென்கிழக்காசியா போலவே இங்கேயும் குன்றுகள் தோறும் பெரும் புத்த ரூபங்களைச்செய்து வைத்து மகிழ்கின்றனர் மக்கள்.

            மிகவும் ரம்மியமான சூழலில் மலையகத்தின் மாத்தளை அமைந்திருக்கிறது. அங்கே சிறப்பு வாய்ந்த முத்து மாரியம்மன் கோயிலுக்கு முதலில் சென்றோம். மலையகத்து மக்களின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கிறது இந்த ஆலயம். ஏறக்குறைய 200 ஆண்டு பழமையானது. எண்பதுகளின் இனக்கலவரம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை என்று சொன்னார்கள். நல்லதொரு தரிசனத்தை முடித்த கையோடு அங்கிருந்து மலையேறி சந்தகட்டி முருகன் கோயிலை அடைந்தோம். 360பாகையும் மஞ்சுசூழ் மலைகள் சூழ குன்றின் உச்சியில் அழகுற அமைந்திருக்கிறது கோயில். அங்கிருந்த ஆஞ்சநேயர் மலை என்று ஒன்றைக் காட்டினார்கள்.

            அங்கே ஆலய நிர்வாகிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை சந்தகட்டி ஆலயம் தொடர்பாகவும் மலையகத்து மக்களின் வாழ்வியல் கலாச்சார விழுமியங்கள் தொடர்பாகவும் காணொளி ஆவணம் எடுக்கப்பட்டது. கோயில் பிரசாதமே இரவு உணவாக அங்கிருந்து ரத்னபுரிக்குப் பயணப்படலானோம்.


சான்றுகள்:
1, 2, 3, 4 & 5.  Anuradha Seneviratna, 1994.
- நாள் 5 -  


            மறுநாளின் பெரும்பகுதி பயணத்தில் கழிந்தது. மாலை வேளையில் கடினமான மலைப்பாதையில் காமன் கூத்து ஆவணப்பதிவு செய்வதற்காகச் சென்றோம். இருள் கூடிய இரவை அழகாக்கியது பழமை மாறாத காமன் கூத்து ஆவணப்பதிவு. எளிமையே உருவான கலைஞர் தம் அகவை பொருட்படுத்தாது குதூகலத்தோடு நடித்துக் காட்டிய கூத்து இரவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

            மலையகத்தின் மிகச்சிறந்த கலாச்சாரக் கூறுகளுள் ஒன்று இந்த காமன் கூத்து. இதன் 32க்கும் மேற்பட்ட கட்டங்களையும் தவறாமல் பழமை மாறாமல் இன்றும் பின்பற்றும் கூத்துக்கலைஞர்கள் இவர்கள். கம்பம் நடுவதிலிருந்து ரதி மன்மதன் திருமணம் பின்னர் கூத்து என்று மூன்று நாளும் திறம்பட நடக்கும் கூத்தைக் காண பல்வேறு ஊர்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர்.

            கூத்துக் கலைஞர்கள் பிரமனாகவும், விட்டுணுவாகவும் ரதியாகவும் ஆசையாக ஆடியும் நடித்தும் காட்டி வரலாறு சொல்லிக்காட்டியபின் தயக்கத்தோடு ‘இது தான் எங்க சொத்து’ என்று கண்கலங்கச்சொன்னது நெகிழ்ச்சியளித்தது. நாம் அவர்களது கலையை விற்றுக்காசாக்கி விடுவோமென்ற பயம் அவர்களுக்கு. அப்படித்தான் நம் கலைஞர்களை வைத்திருக்கிறோம் நாம், பயத்திலும் இருளிலும் அக்கறையற்ற உதாசீனத்திலும்.            அப்படி ஏதும் செய்துவிட மாட்டோம் உங்களைப்பற்றி ஊருக்குச்சொல்கிறோம். உங்கள் கலையும் உங்கள் பெயரும் காலம் தாண்டியும் வாழும் என்று நம்பிக்கையளித்துவிட்டு வந்தோம்.

            நம்பிக்கை அது மட்டுமே நிதர்சனம்.

            வரலாறு எவ்வளவு உயர்வானதாயினும், முன்னோர் எத்தனைச் சிறப்புடையவராயினும் அவர்கட்கும் முடிவென்று ஒன்று உண்டு. இனி வரும் தலைமுறை நம்மை விடவும் சீரும் சிறப்புமாய் கொண்டாட்டமாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தானே அத்தனை அரசர்களும் தலைவர்களும் இருந்திருப்பார்கள்.

            நமக்கடுத்தத் தலைமுறைகளும் அப்படி இருக்கவேண்டுமென்ற ஆசையும் நம்பிக்கையும் மட்டும் தானே நமக்கும் மிச்சம் இருக்கிறது. அதைச் சாயவிடாமல் காப்பதன்றி வேறேதும் செய்ய முடியாது நம்மால். அதற்கு நாம் செய்யக் கூடியவற்றில் முதன்மையானது வரலாற்றை ஆவணப்படுத்தல் தான்.

            நடந்தவற்றையும் நடப்பவற்றையும் ஆவணப்படுத்துதலின் மூலம் நமக்கான வேரை நமது விதைகளினூடே நினைவுகளாகச்செலுத்திவிடும் சாத்தியமிருக்கிறது.

            நாளைய உலகம் நலம்பெற வேண்டுமெனில் இன்றும் நேற்றும் எப்படி இருந்ததென்ற படிப்பினை அவர்கட்குத் தேவை.

            அதைச்செய்யும் பணியில் நிறைவாய் நாம்.  மனநிறைவோடு இலங்கை ஆய்வுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பினோம்.


நிறைவுற்றதுதொடர்பு: 
மலர்விழி பாஸ்கரன்- (எழுத்தாளர் மாயா) 
mayanmagal@gmail.com
No comments:

Post a Comment