தீ நாக்கு
—— குமரி ஆதவன்
முலை திருகியெறிந்து
தீ பரப்பி நீதி கேட்டாள் ஒருத்தி
தீ எரியும் நாக்கோடு
ஊர் எரித்துப்போனாள் மற்றொருத்தி
அதே நாக்கால்
எரித்ததில் எரிந்தது அநீதி
என்றாள் ஒற்றை முலைச்சி
எரித்ததில் எரிந்தான் எதிரி
என்றாள் மற்றொருத்தி
எரித்ததில் எரிந்தது மிலேச்சர்
என்றான் வேறொருவன்
ஒற்றை முலைச்சி
கணவனோடு வானகம் போனபிறகு
நீதிக்காய் முலைதிருகி எறியவும்
அநீதி எரிக்கவும்
எவரும் துணியவில்லை
தீ நாக்கர் மட்டும்
எரிப்பதை நிறுத்தவில்லை!
எரிந்தால் வழக்கில்லை
தாறுமாறானால் தவறில்லை
தாய் தகப்பனுக்குப் பிறக்காமல்
இல்லாமல் போனார்
இதயமும் இல்லாதுபோனார்
மனித நாக்கு தீ நாக்கானபின்
திசையெல்லாம் எரிகிறது
நீதியெல்லாம் சாகிறது!
மடிகிறார்
பிழைப்புக்கு வந்தவர் வாழ்கிறார்
ஆடு மாடு மேய்த்தவன் கையில்
கோல் வந்தது
ஆடு மாட்டோடு ஆண்டவனும்
அடிமையானான்
வானகம் போன
ஒற்றை முலைச்சி
ஒருநாள் பூமிக்கு வருவாள்
எரியும் தீயில்
தீ நாக்கு எரியும்
தீமையும் எரியும்!
No comments:
Post a Comment