Tuesday, April 29, 2014

ஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க! இங்கே கொடுங்க!


எழுதியவர்:

கீதா சாம்பசிவம்

  

இந்தப் படம் ஏற்கெனவே போட்டுட்டேன்.  திரு இன்னம்புரார் வீட்டுச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அரிசி உப்புமா பண்ணி எடுத்துச் சென்றேன்.  அப்போ இந்தப் பெரிய உருளியில் செய்தேன்.  இதில் செய்தால் எத்தனை மணி நேரம் வைத்திருந்தாலும் களிம்பு ஏறிக் கைத்துப் போகாது.  கைக்காத வெண்கலம் என்றே சொல்வோம் இதை.  இவை அதிகமாய்க் கிடைக்குமிடம் முன்னெல்லாம் நாகர்கோயில்.  நாகர்கோயில் வெண்கலம் என்றும் சொல்வார்கள்.  என்னுடைய வெண்கலப் பானை, வெண்கல உருளி எல்லாமும் நாகர் கோவில் வெண்கலம் தான்.
படத்தில் முன்னால் தெரிவது பித்தளைத் தாம்பாளம். ஒரு லிட்டர் தண்ணீர் கொள்ளுமளவுக்கு ஆழமானது.  இதில் சாப்பாடுகள் வைக்க முடியாது.  பூஜை, தர்ப்பணம் இன்ன பிறவற்றிற்குப் பயன்படுத்துகிறோம்.  பின்னால் தெரியும் வெண்கலப்பானை கால்படி வெண்கலப்பானை என்று பெயர்.  ஆனால் நல்ல அரிசி என்றால் கால்படி போட முடியாது.  கால்படி என்பது மெட்ராஸ் வழக்கில் இரண்டு ஆழாக்கு ( 400) கொள்ளளவு.   தென்மாவட்ட வழக்கில் இரண்டு அரைக்கால்படி உழக்கால் போட்டால் கால்படி. அதே (400) கொள்ளளவு.  சொல்வது தான் மாறுபடும். பக்கத்தில் உள்ளது சின்ன உருளி. இதுவும் வெண்கலம் தான்.  இதிலும் உப்புமா, பொங்கல் போன்றவை செய்யலாம்.  குழம்பு வைக்கலாம். மேலுள்ளதிலும் குழம்பு வைக்கலாம்.  இனிப்புகள் செய்ய சர்க்கரைப் பாகு வைத்துக் கிளறலாம்.  அடிப்பிடிக்கும் பயம் இல்லாமல் கிளற முடியும்.  மேலுள்ள உருளியில் தான் முதல் முதல் கோதுமை அல்வாவும், மைசூர்ப்பாகும் செய்யக் கற்றுக் கொண்டேன்.மாக்கல் சட்டி இது.  கல்சட்டி சமையல் என்றாலே தனி ருசி தான்.  இன்று கூட முருங்கைக்காய்க் குழம்பு இதில் தான் செய்தேன்.  கீரை மசிப்பதெனில் கல்சட்டி தான்.  ஊறுகாய்கள், உப்பு, புளி, மாவடு போட்டு வைக்கலாம்.  இதைவிடப் பெரிய கல்சட்டி எல்லாம் எங்க வீட்டில் இருந்தன.  என்னைக் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுத்துட்டாங்க.  இது நான் ரொம்ப ஆசைப்பட்டுக் கும்பகோணத்தில் வாங்கினது.  வாங்கினதும் எண்ணெயில் மஞ்சள் பொடியைக் குழைத்துக் கல்சட்டியில் தடவி ஊற வைக்க வேண்டும்.  பின்னர் இரண்டு, மூன்று நாட்களுக்கு அரிசி கழுவிய கழுநீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.  அதன் பின் சமைக்கத் தொடங்கலாம்.  அடுப்பில் போட்டு அடியில் தாளிதம் செய்து குழம்பு வைக்கலாம்.  புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு போன்றவை செய்யலாம்.  ருசியில் நிச்சயம் மாறுபாடு இருக்கும்.  அதுவும் குமுட்டி அடுப்பில் கல்சட்டி போட்டுச் செய்தால் அந்த ருசி தனி.இடப்பக்கம் தெரியும் சின்ன ஜாடி உப்பு ஜாடி.  கல்யாணம் ஆகிக் குடித்தனம் வந்தப்போ ரங்கநாதன் தெரு பழைய ரத்னா ஸ்டோரிலே வாங்கியவை இவை.  இதிலே ஒன்று உடைந்து விட்டது.  மூடி இருந்தது.  அதை எங்க பையர் விளையாடி உடைத்தார்.  நடுவில்  நீலக்கலரில் இருப்பது அமெரிக்காவில் எங்க பெண் என் ஜாடிப் பைத்தியத்தைப் பார்த்துட்டு வாங்கிக் கொடுத்தாள்.  சின்னதில் இருந்து பெரிசு வரைக்கும் கிட்டத்தட்ட ஏழோ என்னமோ.  ஶ்ரீரங்கம் வருகையில் அங்கே உறவினருக்கு இரண்டைக் கொடுத்துவிட்டேன்.   இப்போ இதில் புளி போட்டு வைக்கிறேன்.  அன்றாடத் தேவைக்கான புளி இதில் இருக்கும்.   அடுத்து இருக்கும் உயரமான ஜாடி ராஜஸ்தானில் ஊறுகாய்க்கு என வாங்கினது.  அதுவும் பல வருடங்கள், பல ஊர்கள் கண்டுவிட்டது.  இப்போ மொத்தப் புளியையும் அதில் அடைத்து வைக்கிறேன்.
மாவடு போட்டு வைக்கவென சென்னை ஈவ்னிங் பஜார் கண்ணாடிக்கடையில் வாங்கிய பாட்டில் இது.  இன்னொன்றும் உண்டு.  அதில் போன வருஷத்து மாவடு இருக்கிறது.  இதில் இந்த வருஷத்து மாவடு.  ஊறுகாய்களைக்குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கம் இல்லை.  மாசக்கணக்கா இருந்தாலும் வெளியேயே வைக்கிறேன்.  சரியான உப்பு, காரம், எண்ணெய், கடுகுப்பொடி போன்றவை போட்டுவிட்டால் பல வருஷங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.  போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சி விட்டால் இந்த வருஷம் அதில் வெல்லத்தைப் பாகு வைத்துக் காய்ச்சி ஆற வைத்துச் சேர்த்து ஜீரகப் பொடியைப் போட்டு வைப்பேன்.  சப்பாத்திக்கு, பரோட்டாவுக்குத் தொட்டுக்க சைட் டிஷோடு இதுவும் துணையாக இருக்கும். நாளாக ஆக வெல்லத்தில் ஊறி இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த கலவையாக சுவை தூக்கி அடிக்கும்.  இப்போ ரங்க்ஸுக்கு இனிப்புச் சேர்க்கக் கூடாது என்பதால் அந்தத் திப்பிச வேலை எல்லாம் பண்ணமுடியலை.  குமுட்டி அடுப்பு இன்னொரு நாள் போடுகிறேன்.


இன்னும் ஈயச் செம்பு இருக்கிறது.  அதில் தான் தினம் ரசம் வைக்கிறேன்.  வரும் விருந்தினருக்குத் தக்கவாறு ரசம் வைக்க வித்தியாசமான அளவுகளில் ஈயச் செம்பு, ஈய அடுக்கு இருக்கின்றன.  அவற்றைப் பின்னர் பகிர்கிறேன்.  வெளியே சின்ன ஈய அடுக்குத் தான் நாலு பேருக்கு ரசம் வைக்கும் அடுக்குத் தான் இருக்கு.  அதைப் படம் எடுக்க மறந்துட்டேன். 

ராஜலக்ஷ்மி உப்பை ஜாடியில் போட்டு வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார்.  அதன் பின்னூட்டங்களில் பாரம்பரியப் பாத்திரங்கள் குறித்த பேச்சு வர  அதைத் தொடர்ந்து நான் தினமும் புழங்கும் சில பாரம்பரியப் பாத்திரங்கள் இங்கே படங்களில்.  இப்போதைய நான் ஸ்டிக் உலகில் இவற்றின் பெயர் தெரிந்தவர் மிகக் கொஞ்சமாகவே இருப்பார்கள்.  இன்னும் பெரிய திருச்சூர் உருளியும் இருக்கிறது.  அதை எல்லாம் தினமும் புழங்க முடியாதென்பதால் பெட்டியில் இருக்கு.  வெளியே எடுத்தால் படம் எடுத்துப் போடறேன்.
திரையிசையில் பாரதிதாசன்


திரையிசையில் பாரதிதாசன்
தேமொழி


பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) மறைந்து ஐம்பது ஆண்டுகளாகிவிட்டன.  புரட்சிக் கவிஞரின் பாடல்கள் திரையிசையிலும் வெளிவந்துள்ளன.

திரைப்படம் எடுக்க விரும்பி சென்னை வந்தாலும், திரையிசைப் பாடல்கள் எழுதுவதில் பங்கு பெற்றாலும் திரைத்துறை பாரதிதாசன் விரும்பிய, அவர் ஆர்வத்தைக் கவரும் ஒரு துறையாக இல்லாது போனது.

தனது சுயமரியாதைக்கு ஊறு விளைவிக்கிறது என்று எண்ணிய பொழுது பெருந் தொகையையும், நல்ல பல படங்களின் ஒப்பந்தங்களையும் துச்சமென மதித்து, புறக்கணித்து, அவற்றைத் தூக்கி எறிந்து வெளிநடப்புச் செய்தார். 

வளையாபதி என்ற திரைப்படத்தில் அவர் எழுதியதை மாற்றி அமைத்த திரைத்துறையினரின் செயல் அவரது தன்மானத்திற்கு இழுக்கு என்று அவர் கோபம் கொண்டதாகச் சொல்வர். 

திரைபடத் துறையை விரும்பாத அவரது கருத்தை எதிரொலிக்கும் பாடல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.  


பாரதிதாசன் அன்றைய தமிழ்த் திரைப்படத் துறையின்  நிலையைப் பற்றி  எழுதிய ஒரு கவிதை இது .

    என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
    எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
    ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
    உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
    ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
    ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
    ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
    ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

    வட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
    மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
    வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
    வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
    அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
    அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

    கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
    கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
    பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
    பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
    சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
    சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
    வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
    மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
    இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம்
    இதனால்ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!​


திரைப்படத் துறையை அவர் புறக்கணித்தாலும், திரைப்படத் துறை அவரைப் புறக்கணிக்க விரும்பியதில்லை.  அவர் மறைந்த பிறகும் அவரது பாடல்களை தக்க காட்சியமைப்பிற்கு ஏற்பப்  பயன்படுத்தி வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.  அதிலும் அவர் சார்ந்திருந்த திராவிடக் கழக கட்சியின் வழி வந்த கலையுலக மக்கள், அவரது எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் இதனை அவ்வப்பொழுது செய்து வந்தார்கள்.

எனவே, அவர் திரைப்படத் துறையை புறக்கணித்தாலும், திரை இசையில் அவரது பாடல்கள் அவர் கருத்தை முழங்கி வந்தன.  

அவற்றில் மக்களின் கருத்தைக் கவர்ந்த சில பாடல்கள் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. தமிழுக்கும் அமுதென்று பேர்
[http://youtu.be/39LJ3tcafB8] தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
பயிருக்கு வேர் .

தமிழ் எங்கள் இளமைக்குப்  பால்
ஆஆஆஆஆஆஆஆஆ
தமிழ் எங்கள் இளமைக்குப்  பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்....
சங்கே முழங்கு
[http://youtu.be/tpvOyMEPfOw]

சங்கே முழங்கு , சங்கே முழங்கு , சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு ...சங்கே முழங்கு!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்,
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
சங்கே முழங்கு, சங்கே முழங்கு, சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்,
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே!
சங்கே முழங்கு

வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல்
கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து
வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!
தமிழ் எங்கள் மூச்சாம்!
 துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

[http://youtu.be/kLV7EQJULdY]


பெற்றோர் ஆவல்
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...
குலிங்கிடும் பூவிலெல்லாம்  
[http://youtu.be/PIUTLcyYeP4]குலிங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால்
நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே
ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய்
கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை
கொள்ளும் நேரம் என்ன சொல்வேன்
மணமும் தென்றல் காற்றும்
ஒன்றை ஒன்று மருவிடுதே

அளாவி வானத்தையே
தாவும் ஒரு மாமுரசை
அன்பால் முல்லை கொடி ஓடித் தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

[குலிங்கிடும் பூவிலெல்லாம்]

அதலால் இன்ப வாழ்வு
கை கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே காதலால் நாமிருவர்
சேர்ந்தே இன்பமெல்லாம்
வாழ்ந்தே வாழ்ந்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாமே வாழ்ந்திடுவோம்

என் போல் பாக்கியவதி
யாரும் இல்லை உலகினிலே
இன்பம் இன்பம் நம்
இரண்டு மனம் ஒரு மனமே

[குலிங்கிடும் பூவிலெல்லாம்]
சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப்பாரினிலே ...
[http://youtu.be/BAe7us5Q5yY]இப்பாடல் "நீங்களே சொல்லுங்கள்" என்ற தலைப்பில் பாரதிதாசனால் எழுதப்பட்டப் பாடல், கொட்டை எழுத்துக்களிள் உள்ள வரிகள் திரையிசைப் பாடலில் இடம்பெற்றன......

நீங்களே சொல்லுங்கள்

சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே -- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!  உங்கள் வேரினிலே....


நித்தம் திருத்திய நேர்மையினால்மிகு
நெல்விளை நன்னிலமே! -- உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்த அக் காலத்திலே -- எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.


மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம்வகுத்தார் -- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! -- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? -- நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்ததுமெய் அல்லவோ?


கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் -- எங்கள்
சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பில்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! -- உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளர் தடக்கைகளே!

தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? -- பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?


எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ -- இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை -- சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.

  புதியதோர் உலகம் செய்வோம்!

 புதியதோர் உலகம் செய்வோம்!

என்றாலே பாரதிதாசன்தான் நினைவு வருவார்.

இவர் "புதியதோர் உலகம் செய்வோம்!" என்பதை இரு பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். 

வேறு யாரும் இச்சொற்றொடரை பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஒரு பாடல் கீழே.

முன்னேறு!

சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்
பேசு சுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!
ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில்
ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.

அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற
அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?
கொண்டு விட்டோம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
கொழித்து விட்டோம் என்றிங்கே கூறுவார்கள்.
பண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,
முகம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச்
சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை!
சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!


புதியதோர் உலகம் செய்வோம்!
என்ற தலைப்பில் மேலும் இரு பாடல்கள் உள்ளன.
அந்த இரு பாடல்களுமே திரையிசையில் வெளி  வந்துள்ளது.

புதிய உலகு செய்வோம் 
[http://youtu.be/zZXfePZSFv4]
[இந்தப் பாடல்தான் 'புதிய உலகு செய்வோம்' என்ற தலைப்பிலேயே பாரதிதாசனால் எழுதப் பெற்ற  பாடல்]


புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
புதியதோர் உலகம் ...

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதெ ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் ...

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள் தனி எனும் மனிதரைச் சிரிப்போம்!
புதியதோர் உலகம் ...

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் ...

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...மற்றொரு பாடல் 'சந்திரோதயம்' என்ற படத்தின்  தலைப்புப் பாடல்.  இதில் ...

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் செய்வோம்...

என்ற வரிகளை  'புதிய உலகு செய்வோம்'  என்ற பாடலில் இருந்து எடுத்து
பிறகு அவருடைய 'பத்திரிகை' என்ற பாடலில் வரும் சில வரிகளுடன் கலந்து (கதை நாயகன் கதையின்படி பத்திரிகை நடத்தும் தொழிலில் உள்ளவர்)
மேலும் சில வரிகளையும் இணைத்து கீழ் வரும் பாடலாக வெளிவந்தது.

கடைசியில் வரும் சில வரிகள் பாரதிதாசன் கவிதை நூல்களில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.

பாரதிதாசனின் எழுத்து என்பது  எப்படி இருக்க வேண்டும் என்று கொண்டிருந்த கொள்கையை வெளிப்படுத்தும் வரிகள் அந்த இறுதியில் வரும் வரிகள்.


புதியதோர் உலகம் செய்வோம்
[http://youtu.be/uaLXjhMwfjE]


புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

[பத்திரிகை]
அறிஞர் தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்
நறுமண இதழ்ப்பெண் ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

[திரையிசைப் பாடலுக்கான சிறப்பு வரிகள்]
பொது மக்கள் நலம் நாடி
புது கருத்தைச் சொல்க
உன் கருத்தை சொல்லுவதில்
ஆயிரம் வந்தாலும்
அதற்கொப்ப வேண்டாமே
அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும்
ஏடு பல வாழ்ந்தால்...
எதிர்ப்பதன்றோ தமிழர்களின்
எழுதுகோல் வேலை...
ஏற்ற செயல் செய்தற்கும்
ஏன் அஞ்ச வேண்டும்...
எங்கெங்குக் காணினும் சக்தியடா!
பாடல் இடம் பெறுவது  2 மணி நேரம் 7 நிமிடங்கள் என்ற இடத்தில்
[http://youtu.be/t_HQg0gkTaM?t=2h7m]


எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!பாவேந்தரின் நகைச்சுவை!பாவேந்தரின் நகைச்சுவை!


தமிழகத்தின் அன்றைய நிலையை (ஏன் இன்றைய நிலையும் அப்படித்தான் இருக்கிறது!) மிக அழகாகத் தன் கவிதை வரிகளில் காட்சிப்படுத்துவதில் பாவேந்தரை விஞ்சிய ஓர் கவிஞனைத் தமிழகம் காணவில்லை இன்றுவரை! தமிழ் அவர் கரங்களில் பூனைக்குட்டிபோல் கொஞ்சி விளையாடியது; இழுத்த இழுப்பிற்கு வளைந்துகொடுத்தது!


நம் மக்களிடம் நெடுங்காலமாக மாற்றமுடியாமல் இருக்கும் ஒரு பழக்கம், வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் நகைகளை அள்ளிப் போட்டுக்கொள்வதும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொள்வதும்! எளிமை என்பதை ஏட்டில்கூட எழுதிப் பார்க்க பலர் விரும்புவதில்லை. (எளிமை விரும்பியான) இறைவனைத் தொழுவதற்கு ஆலயம் செல்லும்போதும் இதே நிலைதான்!


இதையெல்லாம் கண்ணுற்ற பாரதிதாசன் நகைச்சுவையாகவும்...அதே நேரம் மக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் ஓர் அழகிய பாடலை இயற்றியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த பாவேந்தரின் பாடல்களில் இப்பாடலுக்கு எப்போதும் ஓர் முக்கிய இடமுண்டு!! :-)


’ஏசுநாதர் ஏன் வரவில்லை?’ என்பது அப்பாடலின் தலைப்பு. தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதல்லவா? பாடலிலும் ’பகடி’ கபடி விளையாடுகின்றது!


பாடலின் கருத்து: தேவாலயத்தில், எளிமையை விரும்பும் பாதிரியார் ஒருவர் ஒருநாள், “இனிமேல் யாரும் தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், கால் போன்ற எட்டு உறுப்புக்களிலும் நகைகள் அணிந்துகொண்டு வந்து தேவகுமாரனைத் தரிசிக்கக் கூடாது!

அதுமட்டுமல்ல….ஆடம்பரமான ஆடைகளும் உதவாது; எளிமையான, விலைமலிவான ஆடைகளை அணிந்துவந்தால்தான் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவீர்கள்! இல்லையென்றால் no entry” என்று (தெரியாத்தனமாக) ஓர் உத்தரவு போட்டுவிட்டார்!


உத்தரவு போட்டதுதான் தாமதம்…அதன்பிறகு தேவாலயத்தின் பக்கம் ஓர் ஈ, காக்காய் கூட எட்டிப் பார்க்கவில்லை. தேவாலயமே வெறிச்சோடிப் போனது; வெலவெலத்துப்போனார் பாதிரியார்.


நீண்ட நேரம் (குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி) ஆழ்ந்த யோசனை செய்துவிட்டுத் தேவாலய வாசலில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்தார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்…”இனிமேல் பக்தகோடிகள் அனைவரும் தலை, காது உள்ளிட்ட எட்டுறுப்புக்கள் மட்டுமின்றி இமைகள், உதடு, நாக்கு போன்ற உறுப்புக்களிலும் நகைகள் போடலாம்! அதுமட்டுமா? நீங்கள் உங்கள் அழகைப்(!) பார்த்து ரசிப்பதற்கு வசதியாகப் புதிதாக ரசம்பூசப்பட்ட பளபளப்பான ஆளுயரக் கண்ணாடி ஒன்றும் (உடனடியாகத்) தேவாலயத்தில் மாட்டப்படும்!”  :-)


அறிவிப்பைப் படித்தனர் மக்கள்; மகிழ்ச்சியில் மலர்ந்தன அவர்தம் முகங்கள்! அலைகடலெனத் திரண்டுவந்தனர் தேவாலயத்திற்கு! ஆனால் ஒருவர்மட்டும் தேவாலயத்திற்கு வரமறுத்துவிட்டார்! அவர் யார் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? அவர்தான் ’ஏசுநாதர்!’


கோயிலுக்குச் செல்லும்போதேனும் நம் மக்கள் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடாதா என்ற பாவேந்தரின் ஏக்கமே இந்தப் பாடல்!


தலைகாது மூக்கு கழுத்துகை மார்புவிரல்
தாள்என்ற எட்டுறுப்பும்
தங்கநகை வெள்ளிநகை ரத்தினமி ழைத்தநகை
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென் றேபாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!


நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள் உதடுநாக்கு
நிறையநகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும்உண்டென
இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்துசேர்ந்தார்
ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே
இனியபா ரததேசமே!


இதைத்தான் ”ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்கிறார் கவியரசர்!ஆக்கம்: திருமதி மேகலா ராமமூர்த்தி

Monday, April 28, 2014

மாமியாரும், ஜாடியும்

 
ஒரு நாள் பத்து பதினைந்து வருடம் முன்பாக  அதிகாலை நேரம்  ,வாசல் தெளித்து  கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தேன்.  அன்று வெள்ளிக் கிழமை . கையில் வைத்திருந்த செம்மண் டப்பியை எடுத்து, தண்ணீர் விட்டுக் குழைத்து, கோலத்திற்கு செம்மண் இட்டு முடிக்கவும்,  உப்பு விற்பவன் கைவண்டியில் உப்பு மூட்டையை பாதித் திறந்த வண்ணம்  சாய்த்து  , எங்கள் தெருவுக்குள் நுழையவும்  சரியாயிருந்தது  .  " உப்பு ! உப்பு ! " என்று கூவிக் கொண்டே வந்தார் .

பக்கத்து வீ ட்டு மாமி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து உப்பு வாங்கிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டே , நான் உள்ளே நுழைந்து கேட்டை மூடி விட்டு உள்ளே போகத் திரும்பினேன்.

உப்பு விற்பவர் என்னைப் பார்த்து, " உப்பு வாங்கலையா தாயி? வெள்ளிக் கிழமை உப்பு   வாங்கும்மா. மஹாலக்ஷ்மி  வீட்டிற்கு  வருவாள் ." என்று சொல்ல, நானோ, " இதெல்லாம் வியாபார உத்தி ."  என்று மனதில் சொல்லிக் கொண்டே  " இன்றைக்கு வேண்டாம் " என்று உள்ளே நுழைந்து  அடுத்த வேலைகளை ஆரம்பித்தேன்.  இன்று  பள்ளிக்கு சீக்கிரமே வேறு செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே குளிக்கக் கிளம்பினேன்.

குளித்து விட்டு வந்து குக்கரை அடுப்பில் வைத்து விட்டு  நறுக்கி வைத்திருந்த பீன்ஸைப் போட்டு  தாளித்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  எல்லாம் போட்டு  கேசை சிம்மில் வைத்து விட்டு  தட்டை போட்டு மூடினேன் . உப்புப் போடவில்லை என்பது  நினைவிற்கு வர  ,உப்பு  ஜாடிக்குள்  கையை விட  , அதென்னவோ கை உள்ளே  போய்க் கொண்டே இருந்தது. உப்பு தட்டுப் படவேயில்லை. கையால் துழாவி, கொஞ்சமாயிருந்த உப்பைப்போட்டு விட்டு  மேலும் தேவைப்பட,  டேபிள் சாலட்டை  போட்டு அன்றைய சமையலை முடித்தேன்.

உப்பு விற்பவரிடம் வேண்டாம் என்று சொன்னோமே. வாங்கியிருக்கலாம் . சரி , ஆனது ஆச்சு. மாலை  வீட்டிற்கு வரும்போது உப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து  அவசரவசரமாக பள்ளிக்கு நடையைக் கட்டினேன்.

பள்ளி  வேலையில் ,உப்பு வாங்க வேண்டியதை அடியோடு மறந்தே போனேன் என்று தான் சொல்ல வேண்டும். மாலை  வீட்டிற்குள் நுழைந்ததுமே  , " உப்பு ஜாடியில் உப்பே இல்லை. இப்படியா உப்ப காலியாகும்  வரை  வாங்காமல் இருப்பார்கள். நல்லா குடித்தனம் செய்கிறாய் போ "  என்று மாமியாரிடம் பாட்டு வாங்கினேன். அன்று அவர் மேல் எனக்குக் கோபம் வந்தாலும், அதில் இருக்கும் உண்மை பின்னர் புரிந்தது.  என் மருமகளிடம்  நானும் இப்பொழுது இதை அறிவுறுத்தத் தவறுவதில்லை.

விஷயத்திற்கு வருகிறேன்.  உப்பு வாங்கப் போக வேண்டுமா? அலுப்பாக இருந்தது. என் பெண் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் , "கொஞ்சம் உப்பு வாங்க வேண்டுமடி  .ப்ளீ ஸ்.......  கொஞ்சம் வாங்கி வருகிறாயா? " என்று அவளிடம் கெஞ்சினேன்.

" எனக்கு செமஸ்டர் பரீட்சை  வருகிறது படிக்கப் போகிறேன் " என்று அவள் மறுத்தாள் .

பின்னாலேயே  என் பையன் வீட்டிற்கு வர , அவனிடமும் உப்பு வாங்க கெஞ்சினேன்.  அவனும் ஏதோ  ஒரு காரணம் சொல்லி வாங்கிவர  முடியாது  என்பதை சொல்லி விட,

என்னவரை விடுவேனா? அவரிடமும்  சொல்லிப் பார்த்தேன். அவரோ," நாளை ஒரு நாள்  உப்பு இல்லாமல் சாப்பிடுவோம்  என்று  ஒரு தீர்வு சொல்லி விட்டு அவர் வேலையைப் பார்க்க சென்று விட்டார்.

இத்தனை பேரை கெஞ்சியதற்கு, நாமே  சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு கிளம்ப , அப்பொழுது பார்த்து பக்கத்து வீட்டிலிருந்து சுபா மாமி தன பெண்ணின் வளை காப்பிற்கு  வரச்  சொல்லி  குங்குமச் சிமிழுடன் வர, அவருடன் உட்கார்ந்து அளவளாவினேன். அவர் கிளம்பும் போது மணியைப் பார்த்தால் எட்டு. இந்த ராத்திரியில்  எங்கே கடைக்குப் போவது? நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டேபிள் சாலட்டை வைத்து  நாளை  சமையலை முடிக்க தீர்மானித்து, இரவு சாப்பாட்டுக் கடையை   ஆரம்பித்தேன். என் மாமியாருக்கு  மட்டும் என் மேல் சரியானக் கோபம்.  ஒன்றும் செய்ய முடியாமல் இரவு உணவை முடித்து விட்டு படுத்தாகி விட்டது.

பாதி ராத்திரி இருக்கும், குளிர ஆரம்பித்தது. இடி, மழை, மின்னல், அறை  ஜில்லென்று இருக்க, எழுந்து பேனை  நிறுத்தி  விட்டுப் படுத்தேன். காலை  ஐந்து மணிக்கு அடித்த அலாரத்தை தலையில் தட்டி  சமாதானப் படுத்தி  விட்டு எழுந்தேன்.

காலை சமையலுக்கு   கல் உப்பு  எடுக்கப் போன கையை  , டேபிள் சால்ட்  இருக்கும் ஜாடி பக்கம் திருப்பினேன்.  உள்ளே கிடந்த ஸ்பூனால் மெதுவாக உப்பு அள்ளலாம் என்று பார்த்தால் ஸ்பூன் " டங் " என்று ஜாடியின்  அடியில் போய் விழுந்தது. உப்பு எங்கே போச்சு? நேற்று  இரவு படுக்கப் போகு முன் கூட  கால் ஜாடிக்கு மேலிருந்ததே.  என்று நினைத்துக் கொண்டே  ஜாடிக்குள் எட்டிப் பார்த்தேன்.

" ஜாடி காலி " . இது எப்படி ?..குழம்பினேன்.

உப்புத் திருட்டு போனது பற்றி   அப்புறம் தீர விசாரித்துக் கொள்ளலாம் . இப்ப சமையலுக்கு என்ன செய்வது?  கடைக்குப் போகலாம் என்றால் மழை  ஆசை தீரக் கொட்டிக் கொண்டிருந்தது.

என் பையன் , " அம்மா, காபி கொடுக்கிறாயா ? " என்று கேட்டுக் கொண்டே வர,, அவன் மேல் எரிந்து விழுந்தேன். நீயாகட்டும் உன் அக்காவாகட்டும், உங்கப்பாவாகட்டும் , எனக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்  "என்று திட்ட  கண்ணைக் கசக்கிக் கொண்டே(தூக்க கலக்கம் தான்) என் பெண்ணும் வந்து சேர்ந்தாள் .

" உப்பு இருந்ததே  அம்மா? நேற்று  சட்னிக்கு  போதவில்லை என்று  நான் தானே இன்னும் கொஞ்சம்போட்டேன். அப்ப இருந்ததே " என்று  என் பெண் சொல்ல, அவளிடம், " இதோ பார் ஜாடியை, " என்று ஜாடியை காட்டினேன். அவள், என் பையன் என்று மாறி மாறி   ஜாடிக்குள்  பார்க்க,  என்னவரும் அங்கே ஆஜர். "

" ஏன் எல்லோரும் ஜாடிக்குள் தலையை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். யார் தலையாவது மாட்டிக் கொள்ளப் போகிறது என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் ஜோக்கடிக்க "  எனக்கோ பயங்கர எரிச்சல். (பின்னாளில்  அழகான ராட்சசியே பாட்டு டிவியில் வரும் போதெல்லாம் எனக்கு இவர் அடித்த இந்த ஜோக் சரியாய் நினைவிற்கு வரும்.)

அவரும் ஜாடிக்குள் பார்த்து  விட்டு ஸ்பூனால்  அவரும் துழாவ , "வெறும் தண்ணி தான் வருது "  என்று கமல்ஹாசன் பாட்டு மாறி சொல்ல ,

இதற்காகவே காத்திருந்தாற். போல் என் மாமியாரும் , " சொன்னால் கேட்கலை என்றால் இப்படித்தான். " என்று பழி தீர்த்துக் கொள்ள , என் கண்ணில் நீர் தளும்பி , கீழே இறங்கத்  தயாரானது.
திடீரென்று எனக்கு உரைத்தது, அட......உப்பு ஜாடியில் இருந்ததால்  அதுவும் தூள்  உப்பானதால், சீதோஷ்ண  உபயத்தில்  கரைந்து உப்புத்தண்ணீர. ஆகி இருக்கிறது என்பது புரிய உப்பிற்குப் பதிலாக உப்புத் தண்ணீரை வைத்து  சுமாராய் சமையல் முடித்தேன்.

அடுத்த நாளே உப்பை மூட்டையில் வாங்காத குறையாய் வாங்கி வைத்தேன். ஜாடியில் கொட்டினேன்  என்று தானே நினைத்தார்கள். அது தான் இல்லை.இந்த ஜாடியினால் தான் இப்படி சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன் என்று அழகான பிளாஸ்டிக் டப்பாக்களில் கொட்டி வைத்தேன்.

இதற்கும் என் மாமியார், உப்பை ஜாடியில் தான் வைக்க வேண்டும் என்று புலம்ப ஆரம்பிக்க , வயதானாலே ஏதாவது தப்பு கண்டு பிடிப்பார்கள் என்று அவர் வார்த்தையை காதில்  வாங்க மறுத்தேன்.

பிறகு,உப்பு மட்டுமா பிளாஸ்டிக் டப்பாவில் உட்கார்ந்து கொண்டது. சமையலறையில் அழகழகாய் பல பிளாஸ்டிக் டப்பாக்கள்  வரிசைக்  கட்டி நின்றன..பருப்பு வகைகள் , காபிப்பொடி,புளி,பொடி  வகைகள், சர்க்கரை  என்று எல்லாமே பிளாஸ்டிக்கில் தஞ்சமடைந்தன. ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டின கதையாய், மண் ஜாடிகளும், எவர்சில்வர் டப்பாக்களும் பாவமாய் பரணில் அடைக்கலமாயின.

இது நிறைய வீடுகளில் நடந்த கதை தான் என்று நினைக்கிறேன்.
ஒரு சில வருடங்கள் பிளாஸ்டிக் மேல் தாங்கொணாக் காதல் இருந்தது உண்மையே!

சில வருடங்களுக்குப் பிறகு ..............
அங்கங்கே பிளாஸ்டிக்கை வில்லன் மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். சற்றே குழம்பினேன். கொஞ்சம் கொஞ்சமாய், மார்கெட் போன ஹீரோவானார் பிளாஸ்டிக். கொஞ்சம் கொஞ்சமாய் பரணில் இருந்த எவர்சில்வர் டப்பாக்கள்
என்னைப் பார்த்து கிண்டலாய் சிரித்தபடி , மீண்டும் அலமாரியில் தங்கள் தங்கள் இடங்களில் வந்து அமர்ந்து கொண்டன.

ஜாடிகள் மட்டும் பரணில் மூலையோடு மூலையாய்......அதிலிரண்டு உடைந்தும் விட்டன.

ஒரு நாள் ,சுந்தரி , என் தோழி வீட்டிற்கு வந்திருந்தாள். நான் காபிப் போட உள்ளே போனேன். அவளும் என்னோடேயே உள்ளே வந்து டைனிங்டேபிளில் அமர்ந்து கொண்டாள். காபி குடித்துக்கொண்டே இருவரும் வம்படித்துக் கொண்டிருந்தோம்.

என்னோடு பேசிக் கொண்டே அவள் அலமாரியைப் பார்த்து எழுந்து போனாள்.நேராக, உப்பு டப்பாவைத் திறந்தாள்.

அதைப் பார்த்துக் கொண்டே , " இது என்னதிது? உப்பா ....."

" ஆமாம்."

" நீ, படித்தவள் தானே! உன் குடும்பத்தினர் உடல் நலன் மேல் உனக்கு அக்கறையே இல்லையா? புற்று நோய்க்கு பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாயிருக்கலாம் என்கிற சர்ச்சை கிளம்பியிருக்கிறதே. அந்த விவரங்களை நீ படிக்கிறாயா இல்லையா? " என்று சுந்தரி சரமாறியாகத் திட்ட ,

நானோ," அதெல்லாம் வெறும் சர்ச்சைகள் தானே சுந்தரி.  பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் தான் மழை நாட்களில்   உப்பு கரையாது. " என்று சொல்லவும் அவளுடைய கோபத்தின் டிகிரி  கூடியது.

" நான் அடுத்த முறை வரும் போது, உப்பை இப்படியே வச்சிருந்தே நான் உன்னுடன் பேசவே மாட்டேன் . ஆமாம் ஜாடியே உன்னிடம் கிடை யாதா ? இல்லையென்றால் கண்ணாடி பாட்டிலிலாவது வை. " என்று கோபப்படவும்,

நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பது புரிய ,  புதிய ஜாடியில்  மீண்டும் உப்பு கொட்டப்பட்டது.மழைக் காலத்தில் உப்பு  கரைந்தாலும் பரவாயில்லை ,உப்பே விஷமாகி விடக் கூடாதே ! நம்முன்னோர்கள் எல்லாம் மூடர்களல்லர் என்று நினைத்துக்கொண்டே  நிமிர்ந்தேன்.சுவற்றில் படமாயிருந்த என் மாமியார் ," அன்றைக்கே  சொன்னேன் கேட்டியா? "என்று கேட்பது போலிருந்தது.

பிறகு, வீட்டிற்கு வந்த என் தம்பியின் மனைவி, " அக்கா ஜாடி எங்கே கிடைக்கும்? எனக்கும் உப்பு வைத்துக் கொள்ள வேணும் என்று சொல்ல , " அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டால் இப்படித்தான் தேடி அலைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கடையின் பெயரை சொன்னேன்.

இந்த பிளாஸ்டிக் அரக்கனை  வீட்டை விட்டு  விரட்ட  நினைக்கிறேன். முடியவேயில்லையே!.  சமையலறையிலிருந்தாவது   அரக்கனை விரட்ட  தீவிர  முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
அதற்கு முதல் படியாய்  கடைக்குப் போகும் போது மஞ்சள் பை எடுத்து செல்கிறேன் .

அது சரி , நீங்கள் உங்கள் வீட்டு சமையலறையிலிருந்து  பிளாஸ்டிக்  அரக்கனை  விரட்டி விட்டீர்களா.............?


பி.கு :
" மாமியாரும் ஜாடியும் "  பதிவில், ஜாடி  படத்திற்கு,  என் மருமகள், அவளுடைய   உப்பு ஜாடி , கொடுத்து  உதவினாள் .
அவளுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

எழுதியவர் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்.

Sunday, April 27, 2014

முதியோர் காதல்!


 elderபாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவருவது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் ரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.

குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதலே!’

மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமான அளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!

மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட (குடும்ப விளக்கின் தலைமைப் பாத்திரங்களான) தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.

தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…

”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்…

”மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
இனிதாக வாழு கின்றோம்
முந்துறச் சுற்றத் தார்க்கும்
செய்வன முழுதும் செய்தோம்
இந்தநாள் வரைக்கும் வாய்மை
இம்மியும் மறந்த தில்லை

இந்நாட்டின் நலனுக்காக
நல்லறம் இயற்றி வந்தோம்
எந்நாளும் பிறர்க்குத் தீமை
எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.”

இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் அருமை மனைவியைப் பார்க்கிறார். அழகு கொலுவிருந்த அவளுடைய முந்தைய இளமைத் தோற்றமும், உடல் தளர்ந்த இப்போதைய முதிய தோற்றமும் அவருடைய மனக் கண்ணிலே மாறி மாறி வந்துபோகின்றன.

காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ…என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போலல்லவா அந்த எழில்முகம் உருமாறிவிட்டது?!” எனப் பெருமூச்செறிகிறார்!

“மேனி அழகு குலைந்துபோய்விட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கின்றது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் அந்த மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!

நெஞ்சை நெகிழச் செய்யும் அந்தப் பாடல்….

புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம் குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!

 எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது!

உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தானே! கவிஞர் வைரமுத்து சொல்வதுபோல் ’உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல்’ மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!

’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.

அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’யை இளையோர், தம்முடனே ஒன்றாக இணைந்து வசித்துவந்த, பெற்றோரிடமும் ஏனைய பெரியோரிடமும் நேரடியாகக் கற்ற அனுபவமே! இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!

’Nuclear Family’ என்று சொல்லப்படுகின்ற தனிக்குடும்ப அமைப்புமுறை கோலோச்சத் தொடங்கிவிட்ட இன்றைய சூழலில் முதிய தம்பதியர் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!

வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கதுதானே?அன்புடன்
மேகலா

வல்லமை மின்னிதழில் வெளிவந்தது.

ஆக்கம்: திருமதி மேகலா ராமமூர்த்தி

அமரருளும் ஆரிருளும் (புதிய சிந்தனை)

Inline images 1
அமரருளும் ஆரிருளும் (புதிய சிந்தனை)

“நவிறொறும் நூனயம்“ (குறள் 783) என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திருக்குறளே திகழ்கிறது.  ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு முறை கற்கும் போதும் புதிதாய் பொருளொன்று தோன்றுகிறது.  இவ்வகையில் அறத்துப்பாலில் இல்லறவியலில் அடக்கமுடைமை அதிகாரத்தில் உள்ள 
“அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை 
யாரிரு ளுய்த்து விடும்“ (குறள் 121) என்ற குறளைக் கற்றபோது எழுந்த புதிய சிந்தனை விளக்கம் இது.

அடக்கமுடமை என்ற நல்லகுணம் ஒருவனை தேவர்களோடு சேர்த்து வைக்கும்.  அடங்காமை என்ற கெட்டகுணம் அவனை மிகுந்த இருட்டான இடத்தில் தள்ளிவிடும் என்று இக்குறளுக்குப் பொருள் கூறப்படுகிறது.  இக்குறளில் உள்ள “அமரருள்“  என்ற சொல்லிற்கு உரையாசிரியர்கள் வழங்கிய விளக்கங்கள் கீழே தொகுக்கப்பெற்றுள்ளன.  பல உரையாசிரியர்கள் “அமரருள் உய்க்கும்“ என்ற சொல்லிற்குத் “தேவர்களுள் உய்க்கும்“ என்றே விளக்கம் கூறியுள்ளனர்.

“அமரருள்“ என்ற சொல்லிற்குத் “தேவர்களுள்“ என்று பொருள் கூறியுள்ளனர்.
இந்த விளக்கம் கீழ்க்கண்ட காரணங்களால் தவறாகத் தோன்றுகிறது.

1) “அடக்கம்“ என்பதற்கு எதிர்மறை “அடங்காமை“
எனவே “அமரருள்“ என்பதற்கு எதிர்மறையாக “அசுரருள்“ என்று இருக்க வேண்டும்.
நல்லனவற்றிற்கு உதாரணமாக நல்லவனை எடுத்துக் காட்டினால்,
தீயனவற்றிற்குத் உதாரணமாகத் தீயவனைக் காட்டிட வேண்டும். 
மாறாக, அமரருக்கு(தேவருக்கு) எதிர்மறையாக அசுரர் என்ற சொல் பயன்படுத்தப்படாமல், ”ஆரிருள்“ கூறப்பட்டுள்ளது.

மேலும்,
2) அடக்கம் அமரருள் (அமரர்+உள்) உய்க்கும் என்று கொண்டால்,
அடங்காமை ”ஆரிருள்+உள் (ஆரிருளுள்) உய்க்கும் என்றே குறள் இருக்க வேண்டும்.  ஆனால் இக்குறளில் ஆரிருள் (ளு - இடம்பெறவில்லை) உய்க்கும் என்றே உள்ளது.  எனவே “உள்“ என்ற சொற்பதத்தைத் திருவள்ளுவர் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே மேற்கண்ட குறளில் உள்ள, அமரருள் என்ற சொல்லை அமரர்+உள் என்று பதம் பிரிக்காமல்
அமரருள் = அமர்+அருள் என்று பதம் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.
இவ்வாறு பதம்பிரித்தால “அருள்“ என்பதற்கு எதிர்மறையாக “இருள்“ வருகிறது.

அமர் என்ற சொல் தேவரைக் குறிக்கும்.
“அமர் அருள்“ என்பது “தேவரது அருளை“க் குறிக்கும்.

எனவே மேற்கண்ட குறளை,
“அடக்கம் அமர்அருள் உய்க்கும், அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும்“
எனப் பிரித்துப் படித்து, “அடக்கம் அமர் (தேவர்) அருள் உய்க்கும், அடங்காமை ஆர்இருள் உய்க்கும்“ எனப் புதியதொரு பொருள் கொண்டால் இக்குறளுக்கான விளக்கம் சிறப்பாக அமைகிறது.
அடக்கமாக இருப்பனைத் தேவர்களின் அருள் உய்க்கும்.  அடங்காமல் இருப்பவனை ஆரிருள் உய்த்துவிடும்.

எனது விளக்கம் சரிதானே?

அன்பன்
கி.காளைராசன்

Saturday, April 26, 2014

பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!


பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!
மேகலா இராமமூர்த்தி 

முத்துலட்சுமி ரெட்டியார், மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் போன்று களப்பணியாற்றிப் பெண்ணுரிமைக்கு உழைத்தோர் சிலர்; அதுபோல் கவிப்பணியாற்றிப் பெண்டிர்தம் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டோர் வேறுசிலர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற கவிஞரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவர். தீப்பொறி பறக்கும் தன் கவிதைகள் வாயிலாகப் பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தவர் அவர்.

பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்டிர்தம் நல்வாழ்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைப் பெண்களின் மறுவாழ்வு, மணமுறிவு பெற்றவர்களின் மறுவாழ்வு என்று பல தளங்களில் தன் விரிந்த சிந்தனையைச் செலுத்தி இவையனைத்திற்கும் தம் புரட்சிப் பாக்கள் வாயிலாகத் தீர்வு(ம்) கண்டுள்ளார் பாவேந்தர்.

அகண்ட, விசாலப் பார்வையும், சமூகச் சீர்திருத்த எண்ணங்களும் இயல்பிலேயே அமையப்பெற்ற பாவேந்தர், சமுதாயத்தின் கண்களாய் விளங்கிடும் பெண்களின் அவலநிலை துடைத்திட ஆற்றிய கவிதைப் பங்களிப்பு மகத்தானது.

இந்தியத் திருநாட்டில் மண்ணடிமை ஒழிய வேண்டுமானால் முதலில் நம் வீடுகளில் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாரதிதாசன், தன் ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற காவியத்தில்,

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”
என்று அக் காவிய நாயகியின் மூலம் ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்.

பெண்கல்வியின் அவசியத்தை மிகவும் வலியுறுத்துகின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும், அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.

பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணு தற்கே!பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!…………………………………கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்அந் நிலத்தில்
புல்விளைந் திடலாம்நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை!கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனிஅங்கே
நல்லறி வுடைய மக்கள்
     விளைவது நவில வோநான்?” 

என்று பெண்கல்வியின் அவசியத்தைத் தன் ’குடும்ப விளக்கு’ என்ற நூலில் தெளிவாக விளக்குகின்றார்.

புரட்சிச் சிந்தனைகளையும், முற்போக்குக் கொள்கைகளையும் பாவேந்தரின் பாடல்கள்தோறும் காணமுடிவது ஓர் சிறப்பாகும். அதற்குப் ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரோடு பாவேந்தர் கொண்டிருந்த நட்பும் ஓர் முக்கியக் காரணம் என்று கூறலாம்.

பெண்கள் தங்கள் மணாளனைத் தாங்களே முடிவு செய்தல் வேண்டும் என்றும் பெற்றோரின்/மற்றோரின் கட்டாயத்திற்காக மணத்தல் தவறு எனவும் அறிவுரை கூறுகின்றார் இந்தப் புதுவைக் கவிஞர். இக்கருத்து எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதே அல்லவா?

’கல்யாணம் ஆகாத பெண்ணே! – உன்
கதிதன்னை நீநிச்ச யம்செய்க கண்ணே!
வல்லமை பேசியுன் வீட்டில் – பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;
நல்ல விலை பேசுவார் – உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,
கல்லென உன்னை மதிப்பார் – கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்;
வல்லி உனக்கொரு நீதி – இந்த
வஞ்சத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்
…………………………………………………………………………………………………………..
கற்றவளே ஒன்று சொல்வேன் – உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!’
  
பெண்ணை விலைபேசும் இத்தகைய வழக்கம் ’வரதட்சணை’ என்னும் பெயரில் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

கைம்பெண்களின் நல்வாழ்விற்கும் அதிகம் குரல்கொடுத்தவர் புரட்சிக் கவிஞரே என உறுதியாகக் கூறலாம். இக்கைம்மைக் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் ஆவேசம் கொண்டவராய்,

ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்
     அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்
     பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
     மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? என்று சீறுகின்றார்.

காதல் என்ற உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொதுவான ஒன்றுதானே….அதிலென்ன பேதம்? ஆண்மகன் வயதுசென்ற கிழவனாக இருந்தாலும் தன் மனைவி செத்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகிவிடுகின்றான். அது சரியே என்று ஒத்துக் கொள்ளும் இச்சமூகம் ’வாடாத பூப்போன்ற ஓர் மங்கை நல்லாள்’ கைம்மை அடைந்துவிட்டால் அவளின் நல்வாழ்வு குறித்தோ, எதிர்காலப் பாதுகாப்பு குறித்தோ சற்றும் சிந்திக்காமல் அவள் மறுமணம் புரிவது தவறு என்றும் தீது என்றும் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? என்று வினவுகின்றார். அதனை விளக்குவதற்கு அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவை; சிந்தனையைத் தூண்டுபவை.

”பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
     பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”
என்று பெண்ணிற்குத் தீங்கிழைக்கும் இச்சமூகத்தை நோக்கி வினா எழுப்புகின்றார்.

அடுத்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாக நடத்தப்படும் நாள் தமிழ்நாட்டில் என்று வருமோ? என்ற தன் ஏக்கத்தை அழகாய்ப் பதிவுசெய்துள்ளார் ஒரு பாடலில்…

”கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்த நாளோ ?” 

அதுமட்டுமன்று, திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒன்றாய் இணைந்து வாழ்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் அந்த ஆணோ அல்லது பெண்ணோ விலகி வாழ விரும்பினால் அஃது அனுமதிக்கப்படவேண்டும்; மேலும் (மணமுறிவு பெற்ற) அவர்கள் வேறு ஆடவனையோ, பெண்ணையோ மணந்து கொள்வதிலும் தவறில்லை என்ற கருத்துடைய பாவேந்தர், புரட்சிக் கவிஞராக மட்டுமின்றிப் புரட்சிச் சிந்தனையாளராகவும் தோன்றுகின்றார்.

”-------------------------------காதல்
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு பட்டால்
மடவார் பிறனை
மணக்க விடவேண்டும்
ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம்.” என்பது பாவேந்தரின் சித்தாந்தம்.

இவற்றோடு நில்லாமல், குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்யவேண்டும், குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழக் கருத்தடை முறையினைப் பின்பற்றவேண்டும் என்பன போன்ற சமூக நலத்திற்கானச் சீரிய கோட்பாடுகள் பலவற்றையும் தன் கவிதைகள் மூலம் பதிவுசெய்துள்ளார் பாவேந்தர்.

பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்தம் நல்வாழ்விற்கும் உழைத்தோர் வரிசையில் பாவேந்தருக்கும் ஓர் முக்கிய இடமுண்டு என்பதில் ஐயமில்லை.

***************