Saturday, April 26, 2014

மரணம் என்பது என்ன?


kushwant singh
kushwant singh


4tamilmedia.com – தளத்தில் இன்று பிரசுரம் ஆகியிருப்பது

20.3.2014 அன்று மறைந்த பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் Absolute Kushwant: The Low-Down on Life, Death & Most Things In-Between – என்ற  புத்தகத்திலிருந்து:

இறப்பு என்பதை நம் வீடுகளில் அவ்வளவாக பேசுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்ததுதானே – மரணம் என்பது வந்தே தீரும்; தவிர்க்க இயலாதது என்று. பின் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசுவது இல்லை என்று நான் வியப்பதுண்டு. உருது கவிஞர் யஸ் யகானா சாங்கேசி (Yas Yagana Changezi) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘கடவுள் இருப்பதைநீ  சந்தேகிக்கலாம்; சந்தேகிக்காமல் இருக்கலாம். ஆனால் மரணம் என்பதன் நிச்சயத்தன்மையை நீ சந்தேகிக்க முடியாது’. மரணத்திற்கு ஒருவர் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.



இந்த 95வது வயதில் மரணத்தைப் பற்றி நான் நினைக்கிறேன். அடிக்கடி நினைக்கிறேன். ஆனால் அதை நினைத்து என் தூக்கத்தை இழப்பதில்லை. மறைந்து போனவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன். எங்கு இருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்? எங்கு இருக்கக்கூடும்? என்னிடம் விடைகள் இல்லை. எங்கு போகிறோம்? மரணத்திற்குப் பின் என்ன?

உமர் கய்யாம் சொல்லுகிறார் ‘எங்கிருந்தோ இந்த பூமியில் ஏன் என்று தெரியாமலேயே… மெல்ல ஓடும் நீர் போல…..’

‘அதோ ஒரு கதவு என்னிடம் திறவுகோல் இல்லை;

அதோ ஒரு திரை என்னால் ஊடுருவி பார்க்கமுடியவில்லை;

என்னைப் பற்றியும் போனவர்களைப் பற்றியும்

சின்ன சின்ன பேச்சு சில காலத்திற்கு

பிறகு பேச்சு நான், அவர்கள் யாரும் இருப்பதில்லை…..’



ஒருமுறை தலாய் லாமாவைக் கேட்டேன்: மரணத்தை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று. அவர் தியானத்தை அறிவுறுத்தினார். மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. அது என்னை பயமுறுத்துவதும் இல்லை. மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தைப் பற்றி நான் அதிகமாக நினைத்தாலும் அதை நினைத்து நினைத்து மாய்வதில்லை. மரணத்திற்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ளுகிறேன்.



அசதுல்லாகான் காலிப் சரியாகச் சொன்னார்:

‘வயது நாலுகால் பாய்ச்சலில் பிரயாணம் செய்கிறது;

யாருக்குத் தெரியும் அது எப்போது நிற்கும் என்று?

அதன் கடிவாளம் நம் கைகளில் இல்லை

நம் கால்களும் அதன் வளையத்தில் இல்லை’



என் வயதொத்தவர்கள், சமகாலத்தவர்கள் – இந்தியாவில், இங்கிலாந்தில், பாகிஸ்தானில் – எல்லோரும் போய்விட்டார்கள். இன்னும் இரண்டொரு வருடத்தில் நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. மரணத்திற்கு அஞ்சவில்லை; ஆனால் நான் பயப்படுவது ஒரு நாள் கண் தெரியாமல் போய்விட்டால்? வயதானதால் இயலாதவனாகிவிட்டால்? இப்படி ஒரு நிலையில் இருப்பதை விட இறப்பது மேல். ஏற்கனவே என் பெண் மாலாவிற்கு நான் பாரமாகவிட்டேன். மேலும் சுமக்க முடியாத பாரமாக விரும்பவில்லை.



நான் வேண்டுவது எல்லாம் மரணம் வரும்போது அது சடுதியில் வரட்டும்; அதிக வலி இல்லாமல், ஆழ்ந்த தூக்கத்திலேயே மறைவது போல. அதுவரை நான் வேலை செய்து கொண்டே ஒவ்வொரு நாளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ விரும்புகிறேன். இன்னும் நான் செய்து முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் நான் ‘பெரிய அண்ணா’ (கடவுளை இப்படித்தான் குறிப்பிடுகிறேன்) விடம் சொல்ல விரும்புவது இது தான்: ‘நான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை நீ எனக்காக காத்திரு’.



ஜெயின் தத்த்வத்தில் மரணத்தை கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நானும் இதை நம்புகிறேன். முன்பெல்லாம் உற்சாகம் குறைந்தால் நான் சுடுகாட்டிற்குப் போவதுண்டு. மனதை தூய்மைபடுத்தி, எனது மனவருத்தத்திற்கு சிகிச்சையாக இது இருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்பே எனக்காக நான் ஒரு கல்லறை வாசகம் எழுதினேன்.

இங்கே உறங்குகிறான் ஒருவன்

மனிதனையும், ஏன் இறைவனையும் கூட

சாடத் தயங்காத ஒருவன்

இவன் ஒரு பதர்,  இவனுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள்

மோசமாக எழுதுவதை நகைச்சுவை என்று நினைத்தவன்

பாவி மகன் ஒழிந்தான் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்



1943 ஆம் வருடத்திலேயே (எனது இருபது வயதுகளில் இருந்தேன் அப்போது) என்னுடைய நினைவுநாள் செய்தி எழுதினேன். பல வருடங்களுக்குப் பின் இது ‘இறப்பிற்குப் பின்’ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் வெளியானது. என்னுடைய மறைவு ‘டிரிப்யூன்’ பத்திரிகையில் இப்படி வருகிறது:

முதல் பக்கத்தில் ஒரு சின்ன புகைப்படத்துடன்: ‘சர்தார் குஷ்வந்த் சிங் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஒரு இளம் விதவையையும், இரண்டு சின்னக் குழந்தைகளையும், ஏராளமான நண்பர்களையும், நேசித்தவர்களையும் விட்டுவிட்டுச் சென்று விட்டார், செய்தி அறிந்து சர்தாரின் வீட்டிற்கு வந்தவர்கள் தலைமை நீதிபதி, பல மந்திரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் உதவியாளர்கள்’.



என் மனைவி இறந்த போது மரணத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஒரு லோகாயுதவாதி. மதம் சார்ந்த சடங்குகளில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. நான் ஒரு தனிமை விரும்பி ஆதலால் என் நண்பர்கள், உறவினர்கள் என்னை சமாதனப்படுத்த வருவதை தவிர்த்தேன். மனைவி இறந்த அன்று இரவு தனிமையில் இருட்டில் எனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அந்த இரவுப் பொழுதை கழித்தேன். சிலசமயம் அடக்க முடியாமல் அழுதேன். வெகு சீக்கிரம் தேறினேன். ஓரிரு நாட்களில் எனது மாமூல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். விடியலிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உழைத்தேன். இனி தனிமையில்தான் வாழவேண்டும் என்ற நிதர்சனத்தை, காலி வீட்டில் எனது மீதி வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற நிலையை என் மனதிலிருந்து மறக்க இந்த உழைப்பு உதவியது. நண்பர்கள் வந்து எனது சமநிலையை கெடுப்பதற்குமுன் கோவாவிற்குச் சென்றுவிட்டேன்.



இறந்த பின் புதைக்கப்படுவதையே விரும்பினேன். எந்த மண்ணிலிருந்து வந்தோமோ அதே மண்ணுக்குப் போகிறோம், புதைக்கப்படுவதால். பஹாய் முறையில் நம்பிக்கை கொண்ட நான் இறந்த பின் என்னைப் புதைக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் ஒப்புக்கொண்ட அவர்கள், பிறகு ஏதேதோ சட்டதிட்டங்களுடன் வந்தார்கள். ஒரு மூலையில் புதைக்கப்பட்டு எனது புதைகுழி அருகே ஒரு அரச மரம் நடவேண்டும் என்றேன். இதற்கும் சரி என்றவர்கள் பிறகு வந்து எனது புதைகுழி ஒரு வரிசையின் நடுவில் இருக்குமென்றும், மூலையில் இருப்பது சாத்தியம் இல்லையென்றும் சொன்னார்கள். எனக்கு இது சரிவரவில்லை. இறந்தபின் எல்லாம் ஒன்றுதான் என்று தெரிந்தாலும் ஒரு மூலையில் புதைக்கப்படுவதையே விரும்பினேன். இன்னொன்றும் அவர்கள் சொன்னார்கள் நான் இறந்தபின் சில பிரார்த்தனைகளை சொல்வார்கள் என்று. இதற்கும் நான் ஒப்பவில்லை –  நான் மதத்தையோ, மதச் சடங்குகளையோ நம்பாதவன் என்பதால்.



நான் இப்போதைக்கு நல்ல ஆரோக்கியத்தில் இருந்தாலும் அதிக நாட்கள் என்னிடம் இல்லை என்று தெரியும். மரணத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மரணம் என்பது எனது பாவ புண்ணியங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நாள் என்பதையும், சுவர்க்கம் நரகம் இவற்றிலும் நம்பிக்கை இல்லை. மறுபிறவியிலும் நம்பிக்கை இல்லை. அதனால் மரணம் என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும்.  மரணமடைந்தவர்களைக் கூட நீ விடுவதில்லையா என்று என்னை விமரிசிக்கிறார்கள் சிலர். மரணம் ஒருவனைத் தூய்மைப்படுத்துவதில்லை. ஒருவர் ஊழல்வாதியாக இருந்தால் மரணத்திற்குப் பின்னும் அவரை நான் விடுவதில்லை; சாடுகிறேன்.



மரணம் என்பதன் இறுதிநிலையை ஏற்றுக்கொள்ளுகிறேன். மரணத்திற்குப் பின் நமக்கு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவர் அமைதியாக மரணத்தைத் தழுவ நாம் உதவ வேண்டும். தான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த உலகம் இரண்டிலும் சமாதானம் அடைந்தவனாக முழுமை அடைந்தவனாக மரணத்தை தழுவ வேண்டும்.



எல்லாவற்றையும் விட மரணவேளையில் வருத்தங்களோ, மனக்குறைகளோ இல்லாதவனாக ஒருவன் இருக்க வேண்டும். பாரசீகக் கவிஞன் இக்பால் சொன்னது போல: ‘உண்மையான மனிதனின் அறிகுறி என்ன என்று என்னைக் கேட்டால் – மரணம் வரும்போது அவனது இதழில் புன்னகை இருக்க வேண்டும்!’



தமிழ் மொழியாக்கம், கட்டுரை ஆக்கம்: ரஞ்சனி நாராயணன் 



சரியாத்தான் சொன்னாரு குஷ்!

No comments:

Post a Comment