Showing posts with label Ranjani Narayanan. Show all posts
Showing posts with label Ranjani Narayanan. Show all posts

Saturday, April 26, 2014

ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?




Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.

ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.

எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.

கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை  (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு  நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.

மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்……..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.

முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.

என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் -  ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு  கட்டாயம்

இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.

முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை  படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம்  சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்  மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.

உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.

போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.

வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;  10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு  மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.

இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை  (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை  தற்செயல் என்று சொல்லலாமா?

நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.

யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.

2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.

இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.

நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?

(written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan.

சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’








2014 ஏப்ரல் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான கட்டுரை





நிறைய எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தாலும், ஒரு சிலரது எழுத்துக்கள் நம்மை மிகவும் கவர்ந்து விடுகின்றன. அந்த சிலரில் இன்று மறைந்த குஷ்வந்த் சிங் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர். நிறைய எழுதியிருக்கிறார். இவரது எழுத்துக்களில் கிண்டலும் கேலியும் அதிகமாக இருக்கும். எல்லோரையுமே நகைச்சுவை கலந்து சாடியிருப்பார். அதுவே இவரது எழுத்துக்களுக்கு சுவாரஸ்யம் கூட்டியது என்று சொல்லலாம். சம்பந்தப்பட்டவர் படித்தால் கூட நிச்சயம் சின்ன புன்னகையாவது செய்வார். பிறகுதான் கோபித்துக் கொள்வார். அவருக்கும் கூட சிலசமயம் இவர் எழுதுவது ‘நிஜம்தானே?’ என்று தோன்றலாம்!



இவர் எழுதும் பெரிய நூல்களை விட தினசரியில் இவர் எழுதி வந்த சின்ன சின்ன பத்திகள் மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தவை. மற்றவர்களைப் பற்றி மட்டுமல்ல; தனது தவறுகளையும் வெளிப்படையாக பேச இவர் எப்போதும் தயங்கியது இல்லை. இவர் எழுதிய பத்திகளில் நான் படித்தவற்றில் எனக்கு நினைவு இருப்பது இதோ:



வெளிநாடு போயிருந்தபோது ஒருமுறை வயிற்று உபாதைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றாராம். மருத்துவர் இவரைப்பார்த்து, ‘கடந்த ஒரு வாரத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டுவிட்டு இவர் சொல்வதைக் குறித்துக் கொண்டாராம். மருந்து எழுதிக்கொடுத்துவிட்டு, ‘ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.



ஒருவாரம் கழித்து இவர் மருத்துவமனைக்குப் போனபோது அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒரு மேஜையின் மேல் இருந்ததாம். அதனுள் நிறைய திரவம், நிறைய திடப்பொருள் என்று ஒரு கலவை. அதைப்பார்க்கவே இவருக்கு ஒரு மாதிரி இருந்ததாம். மருத்துவர் சொல்லும்வரை காத்திருக்காமல், இவரே கேட்டாராம்: ‘அந்த ஜாடிக்குள் என்ன?’ என்று. ‘நீ ஒரு வாரமாக என்னென்ன சாப்பிட்டாயோ அதெல்லாம் அந்த ஜாடிக்குள் இருக்கிறது’ என்று பதிலளித்தாராம் மருத்துவர். ‘வயிறு என்பதை வயிறாக நினை. இதைபோல ஒரு கண்ணாடி ஜாடி என்று நினைத்து கிடைத்ததை எல்லாம் அதற்குள் போடாதே!’ என்றாராம் மருத்துவர்.



அவரது பெயரைப்போலவே மிகவும் ஜாலியானவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது எழுத்துக்களுக்கு ரசிகர்கள் உண்டு. 99 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஒரு மனிதனின்  என்ன தேவை என்று பட்டியலிடுகிறார்:



முதல் தேவை: பரிபூரண ஆரோக்கியம். சின்ன நோய் என்றால் கூட உங்கள் சந்தோஷத்தை அது பாதிக்கும்
இரண்டாவது தேவை: போதுமான அளவு வங்கித் தொகை: இது லட்சக்கணக்கில் இல்லாமல் போனாலும், வாழ்க்கையின் வசதிகளை அளிக்க வல்லதாக இருக்கவேண்டும். வெளியில் போய் சாப்பிடுவதற்கும், அவ்வப்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கும், பிடித்த இடங்களைப் போய் பார்த்து வருவதற்கும், விடுமுறையை மலை வாசஸ்தலத்திலோ அல்லது கடற்கரை அருகிலோ கழிக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறை உங்களை நிலைகுலையச் செய்யும். கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகளில் வாழ்வது தவறான பழக்கம். நம்மைப் பற்றிய பிறரது கணிப்பில் நம் மதிப்பு குறையும்.
மூன்றாவது தேவை: சொந்தவீடு. நம் வீட்டில் கிடைக்கும் சுகம் வாடகை வீடுகளில் கிடைக்காது. சின்னதாக ஒரு தோட்டம். நம் கையால் விதை போட்டு சின்னஞ்சிறு செடிகள் முளைத்து பூக்கள் மலருவதைப் பார்ப்பதும், அவற்றுடன் ஒரு நட்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.
நான்காவது தேவை: நம்மைப் புரிந்துக்கொண்ட ஒரு மனைவி/கணவன்/ ஒரு நண்பன். புரிதல் இல்லாத வாழ்வில் சேர்ந்து இருந்து, ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொள்வதை விட மணவிலக்கு எவ்வளவோ மேல்.
ஐந்தாவது தேவை: நம்மைவிட நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருத்தல்: பொறாமை உங்களை அரித்துவிடும். மற்றவருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
ஆறாவது தேவை: விலகி இருத்தல். வதந்திகளைப் பரப்புபவர்களை கிட்டே நெருங்க விடாதீர்கள். அவர்களது வார்த்தைகள் உங்களை செயலிழக்கச் செய்வதுடன், உங்கள் மனதையும் விஷமாக்கும்.
ஏழாவது தேவை: உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். தோட்டவேலை, புத்தகம் படித்தல், எழுதுதல், படங்கள் வரைதல், விளையாடுதல் அல்லது இசையைக் கேட்டல் என ஏதாவது உங்களுக்கென்று வேண்டும்.
எட்டாவது தேவை: தினமும் காலையும் மாலையும் 15 நிமிடங்கள் சுயபரிசோதனைக்கு ஒதுக்குங்கள். காலை பத்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தவும், 5 நிமிடங்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவும் ஒதுக்கவும். அதேபோல மாலை 5 நிமிடங்கள் மனதை நிலைநிறுத்தவும், பத்து நிமிடங்கள் என்னென்ன செய்து முடித்தீர்கள் என்று பார்க்கவும் நேரத்தை செலவிடுங்கள்.
கடைசியாக கோபம் கொள்ளாதீர்கள். முன்கோபம், பழி வாங்கும் எண்ணம் வேண்டவே வேண்டாம். உங்களின் நண்பர் கடுமையாகப் பேசினால் கூட சட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள்.


இவையெல்லாவற்றையும் விட மிகவும் தேவையான ஒன்று:

இறக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வருத்தங்களோ, உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எந்தவிதமான மனக்குறைகளோ இல்லாமல் மரணிக்க வேண்டும். பாரசீக மொழியில் கவிஞர் இக்பால் சொல்லுவதை நினைவில் கொள்வோம்: ‘உண்மையான மனிதனின் லட்சணங்கள் என்ன தெரியுமா? மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பதுதான்’.


2014 மார்ச் மாதம் 20 நாள் மரணத்தைத் தழுவிய இந்த மனம்கவர் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்!




 கட்டுரை ஆக்கம்:  ரஞ்சனி நாராயணன்

மரணம் என்பது என்ன?


kushwant singh
kushwant singh


4tamilmedia.com – தளத்தில் இன்று பிரசுரம் ஆகியிருப்பது

20.3.2014 அன்று மறைந்த பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் Absolute Kushwant: The Low-Down on Life, Death & Most Things In-Between – என்ற  புத்தகத்திலிருந்து:

இறப்பு என்பதை நம் வீடுகளில் அவ்வளவாக பேசுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்ததுதானே – மரணம் என்பது வந்தே தீரும்; தவிர்க்க இயலாதது என்று. பின் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசுவது இல்லை என்று நான் வியப்பதுண்டு. உருது கவிஞர் யஸ் யகானா சாங்கேசி (Yas Yagana Changezi) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘கடவுள் இருப்பதைநீ  சந்தேகிக்கலாம்; சந்தேகிக்காமல் இருக்கலாம். ஆனால் மரணம் என்பதன் நிச்சயத்தன்மையை நீ சந்தேகிக்க முடியாது’. மரணத்திற்கு ஒருவர் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.



இந்த 95வது வயதில் மரணத்தைப் பற்றி நான் நினைக்கிறேன். அடிக்கடி நினைக்கிறேன். ஆனால் அதை நினைத்து என் தூக்கத்தை இழப்பதில்லை. மறைந்து போனவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன். எங்கு இருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்? எங்கு இருக்கக்கூடும்? என்னிடம் விடைகள் இல்லை. எங்கு போகிறோம்? மரணத்திற்குப் பின் என்ன?

உமர் கய்யாம் சொல்லுகிறார் ‘எங்கிருந்தோ இந்த பூமியில் ஏன் என்று தெரியாமலேயே… மெல்ல ஓடும் நீர் போல…..’

‘அதோ ஒரு கதவு என்னிடம் திறவுகோல் இல்லை;

அதோ ஒரு திரை என்னால் ஊடுருவி பார்க்கமுடியவில்லை;

என்னைப் பற்றியும் போனவர்களைப் பற்றியும்

சின்ன சின்ன பேச்சு சில காலத்திற்கு

பிறகு பேச்சு நான், அவர்கள் யாரும் இருப்பதில்லை…..’



ஒருமுறை தலாய் லாமாவைக் கேட்டேன்: மரணத்தை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று. அவர் தியானத்தை அறிவுறுத்தினார். மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. அது என்னை பயமுறுத்துவதும் இல்லை. மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தைப் பற்றி நான் அதிகமாக நினைத்தாலும் அதை நினைத்து நினைத்து மாய்வதில்லை. மரணத்திற்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ளுகிறேன்.



அசதுல்லாகான் காலிப் சரியாகச் சொன்னார்:

‘வயது நாலுகால் பாய்ச்சலில் பிரயாணம் செய்கிறது;

யாருக்குத் தெரியும் அது எப்போது நிற்கும் என்று?

அதன் கடிவாளம் நம் கைகளில் இல்லை

நம் கால்களும் அதன் வளையத்தில் இல்லை’



என் வயதொத்தவர்கள், சமகாலத்தவர்கள் – இந்தியாவில், இங்கிலாந்தில், பாகிஸ்தானில் – எல்லோரும் போய்விட்டார்கள். இன்னும் இரண்டொரு வருடத்தில் நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. மரணத்திற்கு அஞ்சவில்லை; ஆனால் நான் பயப்படுவது ஒரு நாள் கண் தெரியாமல் போய்விட்டால்? வயதானதால் இயலாதவனாகிவிட்டால்? இப்படி ஒரு நிலையில் இருப்பதை விட இறப்பது மேல். ஏற்கனவே என் பெண் மாலாவிற்கு நான் பாரமாகவிட்டேன். மேலும் சுமக்க முடியாத பாரமாக விரும்பவில்லை.



நான் வேண்டுவது எல்லாம் மரணம் வரும்போது அது சடுதியில் வரட்டும்; அதிக வலி இல்லாமல், ஆழ்ந்த தூக்கத்திலேயே மறைவது போல. அதுவரை நான் வேலை செய்து கொண்டே ஒவ்வொரு நாளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ விரும்புகிறேன். இன்னும் நான் செய்து முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் நான் ‘பெரிய அண்ணா’ (கடவுளை இப்படித்தான் குறிப்பிடுகிறேன்) விடம் சொல்ல விரும்புவது இது தான்: ‘நான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை நீ எனக்காக காத்திரு’.



ஜெயின் தத்த்வத்தில் மரணத்தை கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நானும் இதை நம்புகிறேன். முன்பெல்லாம் உற்சாகம் குறைந்தால் நான் சுடுகாட்டிற்குப் போவதுண்டு. மனதை தூய்மைபடுத்தி, எனது மனவருத்தத்திற்கு சிகிச்சையாக இது இருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்பே எனக்காக நான் ஒரு கல்லறை வாசகம் எழுதினேன்.

இங்கே உறங்குகிறான் ஒருவன்

மனிதனையும், ஏன் இறைவனையும் கூட

சாடத் தயங்காத ஒருவன்

இவன் ஒரு பதர்,  இவனுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள்

மோசமாக எழுதுவதை நகைச்சுவை என்று நினைத்தவன்

பாவி மகன் ஒழிந்தான் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்



1943 ஆம் வருடத்திலேயே (எனது இருபது வயதுகளில் இருந்தேன் அப்போது) என்னுடைய நினைவுநாள் செய்தி எழுதினேன். பல வருடங்களுக்குப் பின் இது ‘இறப்பிற்குப் பின்’ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் வெளியானது. என்னுடைய மறைவு ‘டிரிப்யூன்’ பத்திரிகையில் இப்படி வருகிறது:

முதல் பக்கத்தில் ஒரு சின்ன புகைப்படத்துடன்: ‘சர்தார் குஷ்வந்த் சிங் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஒரு இளம் விதவையையும், இரண்டு சின்னக் குழந்தைகளையும், ஏராளமான நண்பர்களையும், நேசித்தவர்களையும் விட்டுவிட்டுச் சென்று விட்டார், செய்தி அறிந்து சர்தாரின் வீட்டிற்கு வந்தவர்கள் தலைமை நீதிபதி, பல மந்திரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் உதவியாளர்கள்’.



என் மனைவி இறந்த போது மரணத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஒரு லோகாயுதவாதி. மதம் சார்ந்த சடங்குகளில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. நான் ஒரு தனிமை விரும்பி ஆதலால் என் நண்பர்கள், உறவினர்கள் என்னை சமாதனப்படுத்த வருவதை தவிர்த்தேன். மனைவி இறந்த அன்று இரவு தனிமையில் இருட்டில் எனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அந்த இரவுப் பொழுதை கழித்தேன். சிலசமயம் அடக்க முடியாமல் அழுதேன். வெகு சீக்கிரம் தேறினேன். ஓரிரு நாட்களில் எனது மாமூல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். விடியலிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உழைத்தேன். இனி தனிமையில்தான் வாழவேண்டும் என்ற நிதர்சனத்தை, காலி வீட்டில் எனது மீதி வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற நிலையை என் மனதிலிருந்து மறக்க இந்த உழைப்பு உதவியது. நண்பர்கள் வந்து எனது சமநிலையை கெடுப்பதற்குமுன் கோவாவிற்குச் சென்றுவிட்டேன்.



இறந்த பின் புதைக்கப்படுவதையே விரும்பினேன். எந்த மண்ணிலிருந்து வந்தோமோ அதே மண்ணுக்குப் போகிறோம், புதைக்கப்படுவதால். பஹாய் முறையில் நம்பிக்கை கொண்ட நான் இறந்த பின் என்னைப் புதைக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் ஒப்புக்கொண்ட அவர்கள், பிறகு ஏதேதோ சட்டதிட்டங்களுடன் வந்தார்கள். ஒரு மூலையில் புதைக்கப்பட்டு எனது புதைகுழி அருகே ஒரு அரச மரம் நடவேண்டும் என்றேன். இதற்கும் சரி என்றவர்கள் பிறகு வந்து எனது புதைகுழி ஒரு வரிசையின் நடுவில் இருக்குமென்றும், மூலையில் இருப்பது சாத்தியம் இல்லையென்றும் சொன்னார்கள். எனக்கு இது சரிவரவில்லை. இறந்தபின் எல்லாம் ஒன்றுதான் என்று தெரிந்தாலும் ஒரு மூலையில் புதைக்கப்படுவதையே விரும்பினேன். இன்னொன்றும் அவர்கள் சொன்னார்கள் நான் இறந்தபின் சில பிரார்த்தனைகளை சொல்வார்கள் என்று. இதற்கும் நான் ஒப்பவில்லை –  நான் மதத்தையோ, மதச் சடங்குகளையோ நம்பாதவன் என்பதால்.



நான் இப்போதைக்கு நல்ல ஆரோக்கியத்தில் இருந்தாலும் அதிக நாட்கள் என்னிடம் இல்லை என்று தெரியும். மரணத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மரணம் என்பது எனது பாவ புண்ணியங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நாள் என்பதையும், சுவர்க்கம் நரகம் இவற்றிலும் நம்பிக்கை இல்லை. மறுபிறவியிலும் நம்பிக்கை இல்லை. அதனால் மரணம் என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும்.  மரணமடைந்தவர்களைக் கூட நீ விடுவதில்லையா என்று என்னை விமரிசிக்கிறார்கள் சிலர். மரணம் ஒருவனைத் தூய்மைப்படுத்துவதில்லை. ஒருவர் ஊழல்வாதியாக இருந்தால் மரணத்திற்குப் பின்னும் அவரை நான் விடுவதில்லை; சாடுகிறேன்.



மரணம் என்பதன் இறுதிநிலையை ஏற்றுக்கொள்ளுகிறேன். மரணத்திற்குப் பின் நமக்கு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவர் அமைதியாக மரணத்தைத் தழுவ நாம் உதவ வேண்டும். தான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த உலகம் இரண்டிலும் சமாதானம் அடைந்தவனாக முழுமை அடைந்தவனாக மரணத்தை தழுவ வேண்டும்.



எல்லாவற்றையும் விட மரணவேளையில் வருத்தங்களோ, மனக்குறைகளோ இல்லாதவனாக ஒருவன் இருக்க வேண்டும். பாரசீகக் கவிஞன் இக்பால் சொன்னது போல: ‘உண்மையான மனிதனின் அறிகுறி என்ன என்று என்னைக் கேட்டால் – மரணம் வரும்போது அவனது இதழில் புன்னகை இருக்க வேண்டும்!’



தமிழ் மொழியாக்கம், கட்டுரை ஆக்கம்: ரஞ்சனி நாராயணன் 



சரியாத்தான் சொன்னாரு குஷ்!

Wednesday, April 23, 2014

இனிய 450வது பிறந்த நாள், மிஸ்டர் ஷேக்ஸ்பியர்!

 


கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு மேலாக ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கொடுங்கனவாக இருந்துவருகிறார், ஷேக்ஸ்பியர்.

பாவம், எத்தனை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இவரது குழப்பமான நாடகங்களையும், அதில் வரும் குழப்பமான கதாபாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமே என்று  நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியாது. இவரது நாடகங்களை நடிப்பவர்கள் எத்தனை பேர் இவரது புகழ் பெற்ற வசனங்களையும், இறவா வரம் பெற்ற வரிகளையும் மேடையில் மறக்காமல் பேசவேண்டுமே என்று தவிக்கிறார்களோ, தெரியாது.

ஏன் தான் இவரது துன்பக்கதைகளுக்கு பக்கம் பக்கமாக விரிவுரை எழுதினோம் – பேசாமல் ஹாலிவுட் நகைச்சுவை படங்களுக்கு விரிவுரை எழுதியிருக்கலாம் என்று பல ஆங்கில பேருரையாளர்கள் வருந்திக் கொண்டிருப்பார்களோ? எப்படியாயினும், இவர்கள் எல்லோரும் ஷேக்ஸ்பியரை நேசிப்பவர்களே, அதில் சந்தேகமில்லை.

இப்படி எல்லோரையும் ஏதோ ஒருவிதத்தில் கவர்ந்த, ஆங்கில இலக்கியத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்த  மகா கவிஞன், நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் 450 வது பிறந்த நாள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இவர் யார், இவருக்கு ஏன் இத்தனை பெயரும் புகழும் என்று பார்ப்போம்:

முதலில் அவரது கொடையாண்மையைப் பார்ப்போமா? ஆங்கில மொழிக்கு இவர் அளித்த வார்த்தைகள் 1700 க்கும் அதிகம். அதுமட்டுமா? ஆங்கில மொழியில் இருக்கும் பெயர் சொற்களை வினைச் சொற்களாகவும், வினைச்சொற்களை பண்புச் சொல்லாகவும் மாற்றி, பழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு முன்னொட்டு (prefix), பின்னொட்டு (suffix)  சேர்த்து அவற்றை புது வார்த்தைகளாக மாற்றி, புத்தம்புது அசல் வார்த்தைகளையும் கண்டுபிடித்து ....எத்தனை எத்தனை செய்திருக்கிறார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பல சொலவடைகள் இவரது எண்ணத்தில் உதித்தவை. எதாவது நமக்குப் புரியவில்லை என்றால் “It’s Greek to me’ என்கிறோமே, இந்த சொற்றொடர் ஷேக்ஸ்பியரால் பயன்படுத்தப்பட்டது. உண்மையில் அவருக்கு கிரேக்க மொழி தெரியாதா? கிரேக்கத்தை மையக் கருத்தாக வைத்து Timons of Athens, Troilus and Cressida போன்ற நாடகங்களை எழுதியவருக்கு கிரேக்க மொழி தெரியாதா? இல்லை கிரேக்கர்களை வெறுப்பேற்ற இப்படிச் சொல்லுகிறாரா? அவருக்கே வெளிச்சம்!

இவர் பயன்படுத்திய நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் சில சொற்றொடர்கள்: ‘vanish into thin air’, too much of a good thing, seen better days, live in a fool’s pradise...... இவற்றை தவிர 38 நாடகங்கள், 154 சானேட்ஸ் (14 வரிகள் கொண்ட பாடல்கள்), மற்றும் பல பல்சுவை பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவரது நாடகங்களில் மெல்லிய நகைச்சுவையிலிருந்து ஆழ்ந்த துன்பியல் சுவை வரை  காணலாம். இந்நாடகங்களின் கதாபாத்திரங்கள் மனிதனின் நல்ல பக்கங்களையும், கெட்ட பக்கங்களையும் காட்டுபவையாக இருக்கின்றன. இவர்கள் உயிரோட்டமுள்ளவர்களாக நம்முடனேயே வாழுபவர்கள். பலதலமுறை வாசகர்களும் நாடக விரும்பிகளும் இந்தக் கதாபாத்திரங்களை விரும்புவார்கள் அல்லது இவர்களை வெறுப்பதற்கு முயற்சிப்பார்கள்

ரோமியோ ஜூலியட்டை ஈர நெஞ்சத்துடன் நினைக்காத காதலர்கள், காதல் கதைகள் உண்டோ? தமிழ் சினிமாக்களில் காணப்படும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிலவும் கடுமையான பகைமையை மீறி அங்கு இருக்கும் இரு இளநெஞ்சங்களில் மலரும் காதல் – இவரது கொடைதான். மென்மையான மேக்பெத் மெல்ல மெல்ல பழிவாங்கும் வில்லனாக மாறுவதாகட்டும்; ஒதேல்லோவின் கண்மூடித்தனமாக பொறாமையாகட்டும் – மனித இனத்தின் உணர்ச்சிக் குவியல்கள் இவரது கதாபாத்திரங்கள்.

ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவன் என்ற ஊரில் பிறந்த இவரது பிறந்த தேதி நிச்சயமாகத் தெரியவில்லை. ஞானஸ்நானம் செய்யப்பட போது இவருக்கு இடப்பட்ட பெயர் கிலியாமஸ் பிலிய ஜோஹனஸ் ஷேக்ஸ்பியர். (Guiliamus filius Johannes Shakspere) லத்தீன் மொழியில் இதன் பொருள் வில்லியமின் மகன் ஜான் ஷேக்ஸ்பியர் என்பது. இவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது ஏப்ரல் 26, 1564. அதனால் இவர் பிறந்தது ஏப்ரல் 23 ஆக இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். மறைந்ததும் ஏப்ரல் 23 அன்று தான், வருடம் 1616.

எழுதுவது, நாடகங்களை தயாரிப்பது, நடிப்பது என்று லண்டன் நகரிலேயே தனது வாழ்நாளை கழித்தாலும், தான் பிறந்த சின்னஞ்சிறு ஊரை மறக்காமல் அடிக்கடி வந்துபோய்க் கொண்டிருந்தார் இவர்.

இவர் எப்போது எழுதத் தொடங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் 1592 ஆம் வருடத்திலேயே இவரது நாடகங்கள் லண்டன் நகரில் அரங்கேறத் தொடங்கிவிட்டன. அப்பொழுதே இவரை கடுமையாக விமரிசித்தவர் ராபர்ட் கிரீன். ‘எல்லாம் தெரிந்தவன் போல காட்டிகொள்ளும் ஒன்றுக்கும் உதவாதவன், இரண்டாம்தர எழுத்தாளன்’ என்று ஷேக்ஸ்பியரை வர்ணித்தார். பென் ஜான்சன் இவரை கொஞ்சம் கூட கற்பனைத் திறன் இல்லா கவிஞன் என்று கூசாமல் திட்டினார். ஆனால் அகராதிகளின் தந்தை என்று அழைக்கப்பட்ட சாம் ஜான்சன் ஷேக்ஸ்பியரின் மிகப்பெரிய விசிறி. ஏனென்றால் ஷேக்ஸ்பியர் இல்லையென்றால் ஒலியியலில் 2,000 வார்த்தைகள் குறைந்திருக்குமே!

எழுத்தாளர், நடிகர், நாடக ஆசிரியர் இவை தவிர ஷேக்ஸ்பியர் ஒரு சிறந்த தொழிலதிபராகவும் இருந்தார். அவரும் அவரது சகாக்கள் சிலரும் சேர்ந்து சொந்த நாடகக் கம்பனி ஒன்றை தேம்ஸ் நதியின் தெற்கு கரையில் ஆரம்பித்து அதற்கு குளோப் என்று பெயரும் இட்டனர். உலகமே நாடக மேடை என்று சொன்னவரின் நாடகக் கம்பனிக்கு இதைவிட பொருத்தமான பெயர் உண்டோ? இதில் வந்த வருமானத்தை மிகவும் பத்திரமாக மறுபடி மறுபடி முதலீடு செய்து லண்டன் நகரில் பல சொத்துக்களையும், ஸ்ட்ராட்போர்டில் இருந்த இரண்டாவது பெரிய வீட்டையும் வாங்கினார் ஷேக்ஸ்பியர்.

பாரிசிலும், லண்டனிலும், மற்ற ஐரோப்பிய நகரங்களிலும் இவரது 450வது பிறந்த நாளைக் கொண்டாட விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர் பிறந்த ஸ்ட்ராட்போர்டு அபான் ஏவனிலும் பல கலை நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

நாமும் இந்த மகா கவிஞனை வாழ்த்துவோம், வாருங்கள். இனிய 450 வது பிறந்த நாள் வாழ்த்துகள் மிஸ்டர் ஷேக்ஸ்பியர்.

4தமிழ்மீடியாவிற்காக:  ரஞ்சனி நாராயணன்