Sunday, May 30, 2021

"நந்தன் - வீரநந்தன்"


-  முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.


நந்தன் - இடைச்செருகல், மேலாதிக்கம், காலக் கண்ணாடிகளின் தொடர் குறியீடு; சுந்தரர் தொடங்கி அயோத்திதாசர் ஊடாகப் புதுவைச் சிவம் வரை


இந்திய வரலாறு மகாவீரர், புத்தர் காலத்தில் இருந்து தொடங்குகிறது. அதற்கு முன்னும், பின்னும் ஏராளமான தொன்மங்களும், புராணங்களும் உண்டு. சமயச் சண்டைகளை ஊதிப் பெரிதாக்கவும், அதிகார மையத்தின் பார்வை தங்களை விட்டு அகலாது இருக்கவும், கரணம் போடும் குரங்குகள் போல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இட்டுக்கட்டி உருவாக்கப்பட்டவைதான் தொன்மங்களும், புராணங்களும். தொன்மங்கள் இனக்குழு காலத்திலிருந்து தொடர்பவை. ஏதோ ஒரு நிகழ்ந்த நினைவைக் கொண்டு, பனி மலையில் இருந்து கீழே உருளும் ஒரு சிறிய பொருள் பெரிய பனி உருண்டையாக வந்து சேர்வதைப் போன்றவை தொன்மங்கள். அதிலிருக்கும் சிறு துளி உண்மை கூடப் புராணங்களில் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தின் பதினெட்டு மகா புராணங்களும், பதினெட்டு உப புராணங்களும் இவ்வகையே. பாலி, பிராகிருத மொழிகளில் சமண, பௌத்த வரலாறு கூறும் ஒரு சில புராணங்களின் பெரும்பகுதி தவிர்த்துப் பிற அனைத்துமே மேற்கூறிய வகையே. தமிழ் நம் மொழி, செம்மொழி என்றாலும்கூட மற்ற மொழிகளின் கற்பனை வளத்தையும் தாண்டி அதிகமான பொய்களைப் புராணங்களாகப் பொதிந்து வைத்திருக்கும் மொழி என்ற பெருமையையும் அளிக்கவல்லது. அதில் தலையான இடம் பிடிப்பவை திருவிளையாடல் புராணமும், பெரியபுராணமும். இன்றைக்குக் காட்டுமிராண்டித்தனம் என்பனவற்றையெல்லாம் நடந்த கதைகளைப் போல் மாற்றி வைத்திருக்கும் அதி அற்புதப் புலவர்களைக் கொண்ட மொழியும் தமிழ் மொழியே. இது மொழி வளம் சார்ந்த கருத்தன்று. சமூக மேலாதிக்கத்தின் அடிப்படைக் கருவைத் தேடும் கருத்து.

தமிழ்ப் புராணங்களில் தழுவல்களே அதிகம். அதேநேரம் தமிழ்ப் புலவர்களின் கற்பனை வளத்திற்கு எடுத்துக்காட்டாகச் சிவாச்சாரியாரின் கந்த புராணம் (கி. பி. 14), பரஞ்சோதியின் திருவிளையாடற்புராணம் (கி. பி. 16), சேக்கிழாரின் பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம் - கி. பி. 12) ஆகியவை உள்ளன.1   இவற்றுள் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளைக் கூறுகிறது. அவற்றுள் ஒன்றுதான் நந்தன் கதை. நந்தன் என்பவர், சாதியில் தாழ்ந்தவர் என்றும், ஒரு பார்ப்பன வேதியனிடம் கொத்தடிமையாக வேலை செய்தவர் என்றும், தன் குலதெய்வ, சிறுதெய்வ வழிபாட்டை விட்டு விட்டு வேதியர்களைப் போல் பெருந்தெய்வ (சைவ) வழிபாட்டில் கொண்ட மோகத்தால், தன் சாதிக் கீழ்மையைப் போக்கிக்கொள்ள முன்வந்து, யாகத்தில் இறங்கி, அவ்வாறே பார்ப்பானாக மாறி, முக்தி அடைந்தார் என்பது சேக்கிழார் எழுதியுள்ள நந்தன் கதை. இக்கதைக்கு முதல் நூலாக, அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்கிற நான்கு சமயக் குரவர்களில்2  ஒருவரான சுந்தரர், சிதம்பரம் கோயில் சிவனடியார்களைப் பற்றிப் பாடிய "திருத்தொண்டத் தொகை திருப்பதிகம்"3  என்னும் நூல் அமைகிறது.  இதில், 'செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்' என்று இருக்கும் ஒரே ஓர் அடிதான் பிற்காலத்தில் நந்தன் கதையாக உருவெடுத்தது. இதன்பிறகு நம்பியாண்டார் நம்பி என்பவர், பொல்லாப் பிள்ளையார் மேல் கொண்டிருந்த பக்தியால், அபய குலசேகர சோழப் பேரரசருடன் சென்று, சிதம்பரம் கனகசபையில் தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்து, அதில் மன்னன் சில, பல சேர்த்தும், நீக்கியும் செப்பேடாக வரைந்து கொண்ட பின்னர், நம்பியாண்டார் அவற்றின் வழி "திருத்தொண்டர் திருவந்தாதி" பாடியதாகவும், அதில் ஏற்கனவே சுந்தரர் பாடிவைத்த ஓரடியுடன், திருநாளைப் போவாரின் ஊர் ஆதனூர் என்றும், புறத் தொண்டு செய்யும் மரபினர் அதாவது புலையர் என்னும் சாதியினர் என்றும் ஒரே ஒரு செய்யுளைச் சேர்த்துப் பாடியுள்ளார். சாதியின் பெயர் இலக்கியத்தில் புகுந்த காலமாகவும், இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் இதைக் கொள்ளலாம். 

இதற்குப் பிறகு அநபாயச் சோழன் காலத்தில் (கி.பி.1156) அரசவைப் புலவராக இருந்த அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார், சமணராக இருந்த அநபாயச் சோழன் என்னும் மன்னனை சைவ சமயத்தவராக மாற்றிய பெருமை கொண்டவர். மன்னன் படித்து வந்த, திருத்தக்கதேவர் இயற்றிய, சமணக் காப்பியமான "சீவக சிந்தாமணி"யை (கி. பி. 9 -10) இழித்தும், சைவ அடியார்களின் பெருமையை உயர்த்தியும் சேக்கிழார் கூற, "சமணம், சீவக சிந்தாமணியைப் பெற்றுள்ளது. சைவத்திற்கு என்ன உள்ளது?" என்று மன்னன் வினவ, "சமணம், பவுத்தம் இவ்வுலக வாழ்க்கையை (இகம்) மட்டும் கூறுகின்றன. சைவம், இவ்வுலக வாழ்வு நீங்கியோர் வானுலகத்திலும் வாழும் வாழ்க்கையைக் (இகம்-பரம்) கூறுகிறது" என்கிறார் சேக்கிழார். அறம், பொருள், இன்பம் ஆகியவையே சமண, பௌத்த, ஆசீவக சமயங்களின் கோட்பாடுகள்.  வைதீகம் கூறும் வீடுபேற்றைச் சேர்த்துக் கூறுவது சைவ, வைணவக் கோட்பாடுகள். அதாவது இல்லாத ஒரு வாழ்க்கையைக் (இறந்த பிறகான வாழ்க்கை) கட்டமைத்து, இதையே சைவ சமயத்தின் பெருமையாகவும், பிற சமயங்களைத் தாழ்த்தும் அளவுகோலாகவும் சேக்கிழார் கூறுகிறார். தான் கூறியதை நிறுவுவதற்காக வலிந்து சைவ புராணம் பாடினார் சேக்கிழார். அதுவும் அறுபத்து மூன்று சிவனடியார்களின் கட்டுக் கதைகளை எழுத முடியாமல் தவித்த போது, சிவபெருமான் தோன்றி 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று தொடங்கிப் பதின்மூன்று சருக்கங்களில் பாடினார் என்பதுதான் சிவனடியார்கள் எழுதிவைத்த புராணத்தின் புராணக்கதை. அதுதான் பெரிய புராணம். சிதம்பரம் கனக சபையில் தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்த கதைகள் இருக்க, சமணத்திற்குச் சீவக சிந்தாமணி (9 - 10 ஆம் நூற்றாண்டு) இருப்பதைப் போல் சைவத்திற்கென்று நூல்கள் உண்டோ? என்றும், பெரியபுராணம் என்பதாக ஒன்று உண்டோ? என்றும் அநபாயச் சோழன் அரசவையில் கேட்ட செய்தியினால், பத்தாம் நூற்றாண்டு வரை சைவப் புராணங்கள் ஏதும் இல்லை என்று பொருள்படுகிறது. அநபாயச் சோழன் காலத்தை வைத்துப் பெரிய புராணம் எழுதிய காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. 

புராணங்கள்  பிற்காலத்தவை:
அவுரங்கசீப் அரசாண்ட காலத்தில் தான் (பதினேழாம் நூற்றாண்டு) இந்து மத புராணங்களும், கதைகளும் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்பர் (1542-1605) காலத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஒரு பாதிரியாரால் கொண்டு வரப்பட்டு, விளைவிக்கப்பட்டவையே உருளைக்கிழங்கு மற்றும் புகையிலைச் செடிகள். இக்குறிப்பை அக்பரின் மகன் ஜஹாங்கீர் (1569-1627) தனது 'தாஜுக்' என்ற நூலில் எழுதி இருக்கிறார். புகையிலையின் உற்பத்தி, சுருட்டாக மாறியபோது அவுரங்கசீப் (1618-1707) அதனைத் தடை செய்திருக்கிறார். சீக்கிய குரு கோவிந்த சிங்கும் (1666-1708) அதனைத் தடை செய்திருக்கிறார். அதேநேரம் சுருட்டு பிடிக்கும் பிராமணன் பன்றியாய்ப் பிறப்பான் என்கிறது பத்மபுராணம். நரகத்துக்குப் போவான் என்கிறது பிரம்மாண்ட புராணம். எல்லாப் புராணங்களும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வியாச முனிவரால் எழுதப் பட்டவை என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்கள் என்பதை அக்பரும், அவுரங்கசீப்பும் நிரூபிக்கிறார்கள். மேலும், அப்புராணக் கதைகளில் இடம்பெறும் சில வழக்குச் சொற்கள் போர்த்துக்கீசியர் காலத்துச் சொற்களாக உள்ளன. இன்றைய காரைக்கால் பகுதியில் போர்த்துக்கீசியர் காலத்தில் ஓடங்கள் போகும் ஓடக்கால் பகுதியின் இரு பக்கங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சேதம் நேரா வண்ணம் சுண்ணாம்பினால் காரை பூசினார்களாம். அதனால் 'காரை' பூசப்பட்ட ஓடக் 'கால்' பகுதிகள் 'காரைக்கால்' என வழங்கப் படுவதாகப் போர்த்துகீசியர் வரலாற்றில் கூறப்படுகிறது. பெரியபுராணத்தில் காரைக்கால் என்னும் போர்த்துக்கீசியர் காலத்துச் சொல் இடம் பெறுவதால் அப்புராணம் நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். தெலுங்கு மொழியின் பெயர் திருமலைராயன் பட்டினத்தை ஆண்ட திருமலைராயன் காலத்திற்குப் பின்பே தமிழில் வழங்கப்பட்டு வருவதைத் தஞ்சாவூர் குறிப்புப் புத்தகங்களினால் அறியலாம். அப்படிப் பார்த்தால் பெரியபுராணத்தில் தெலுங்கு என்னும் சொல் இடம் பெறுவதை வைத்து அப்புராணம் முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டது எனலாம். இன்றும் இடங்கை சாதிக் கலவர காலத்தின் விசுவபிரம வமிசத்தாரில் ஒருவரையாவது நாயன்மாராகச் சேர்க்காததால் பெரியபுராணத்தின் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு உள்ளாக இருக்கலாம். பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியில் பதினெட்டுப் புராணம் பற்றிய குறிப்பில் பெரியபுராணம் இல்லாததால் அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தைக் கொண்டதாக இருக்கலாம். 

பொதுவாக ஆரியர்கள் (பிராமணர்கள்) தென்னாட்டிற்குக் குடிபுகுந்த காலம் எட்டாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது (க. அப்பாதுரை, பக்கம் 63). வடநாட்டில் அசோக மாமன்னரிடம் அடங்கிக் கிடந்த வைதீகம், கணிஷ்க மன்னர்கள் காலத்தில் காலில் விழுந்து பிச்சை எடுத்துக் கொள்ள அனுமதி பெற்றது. இதை வைத்து, வைதிகப் பார்ப்பனர்கள், சிறிது சிறிதாகச் சமண, பௌத்த சமயங்களில் ஊடுருவி, அவற்றைச் செல்லரித்தது போல் ஆக்கி விட்டு, வைதீகத்தைப் பழஞ் சமயமாகப் பொய் கூறி, வளம் பெற்று, எட்டாம் நூற்றாண்டு வாக்கில் தென்னாடு புகுந்து, இங்கும் சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்களை அழித்து, அவர்களின் கோயில்களைச் சைவ, வைணவக் கோயில்களாக மாற்றி, கற்பனை ஆபாசக் கதைகளைப் பக்தி இலக்கியங்களாக வடித்து, ஆரியப் பண்பாட்டைத் திணித்து வந்தனர். சமண, பௌத்தர்களின் காலக் கணிப்பாகப் பாலி மொழியில் இருந்த அறுபதாண்டுக் கணக்குகளை வைதீகம், சமஸ்கிருதம் என்று சொல்லி அதற்கொரு மிக ஆபாசக் கதையைக் கற்பித்தும், பின்னாட்களில் தமிழ்ச் சமணர்களின் வானியல் கண்டுபிடிப்புகளை வைதிகப் பஞ்சாங்கத்தில் அடைத்துவைத்து, எல்லாமும் தமதே என்று ஏய்த்துப் பிழைக்கலாயினர். அதே வகையில் தான் சதுர் யுகக் கணக்குகளைக் (நான்கு யுகங்கள் - கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்) கூறி நம்ப முடியாத, பொய்யான கணக்குகளை ஏற்படுத்திக் கொண்டனர். தமிழர்களின் வானியல் அறிவையும், அற்புதக் கண்டுபிடிப்புகளையும் தமிழர்களைக் கொண்டே தீயிட வைத்தனர். எஞ்சியவற்றில் வைதிகக் கருத்துகளை இடைச்செருகல்களாக நிரப்பி, அவற்றையும் தாங்களே அச்சில் ஏற்றி, தமிழ்த் தொண்டின் தலைமையில் 'தாத்தா' வென நிலைத்தனர். சீன யாத்திரிகரான யுவான் சுவாங், ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து, தென்னாட்டில் காஞ்சிபுரம் வரை யாத்திரிகராக வந்தபோது, அவர் கண்டதெல்லாம் சமணப் பள்ளிகள் என்றும், பௌத்த விகாரங்கள் என்றும், குடிமக்கள் எல்லாம் சமண, பௌத்தர்களாக இருந்தனர் என்றும் குறிப்பு எழுதி வைத்துள்ளார் (க. அப்பாதுரை, பக்கம் 64). இங்குக் குறிப்பிட்டுள்ள பல  காலக் கணக்குகளையும், சுந்தரர் முதல் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் வரையில் திருநாளைப்போவாரை நந்தனாக்கி விரித்த கதைகள் வரை "நந்தன் சரித்திர தந்திரம்" என்ற நூலில் நமக்கு விரிவாக அளித்து இருப்பவர் பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914) அவர்கள். அவரை வழிமொழிந்து "நந்தனாரும் இந்து மத புராணங்களும்" என்ற தலைப்பில் நூலாக அளித்து இருப்பவர் பண்டிதமணி க. அப்பாதுரையார் அவர்கள்.

நந்தன் என்ற திருநாளைப்போவார்:
மேற்கூறிய பெரிய புராணத்தில் வரும் 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் பெறுபவர் தான் நந்தன். இதில்தான் திருநாளைப்போவார் என்பவரின் பெயர் நந்தன் என்றும், நந்தன் தாழ்ந்த சாதியினர் என்றும், வேதியன் பேச்சைக் கேட்டு வேள்வியில் குதித்துச் சாதித் தீட்டு ஒழிந்தவராகவும் கற்பிக்கப்படும் கதை இடம்பெற்றுள்ளது. அதாவது 'திருநாளைப்போவார்' என்று பக்தி இலக்கியக் காலத்தில் (6-9 ஆம் நூற்றாண்டு) சுந்தரர் எழுதிவைத்த ஒற்றைக் குறிப்பு, பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி என்பவரால் ஒரு செய்யுள் அளவில் சிறிது ஓதப்பட்டு, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழாரால் 37 பாடல்களில் கண், காது, மூக்கு மற்றும் முழு உடம்புடன் உலவ வைத்துவிட்டது. சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள், மன்னர்களின் ஆதரவுடன் தமிழகப் பகுதிகளில் செழித்தோங்கி இருந்த காலத்தில், பக்தி இயக்கங்களாக உருவெடுத்த சைவ, வைணவ சமயத்தினர் தங்கள் சமயங்களை வளர்க்கவும், அதற்காக மன்னர்களை மயங்க வைக்கவும் பாடிய கட்டுக் கதைகளின் தொகுப்புதான் தமிழ்ப் புராணங்கள். தொழில்முறைப் பிரிவுகளாக ஒரே சமூகத்தில் ஒன்றாக வாழ்ந்திருந்த தமிழ்ச் சமூக அமைப்பினில் தொழில் முறையைச் சாதிகளாக்கி, அதில் உட்பிரிவுகளை உருவாக்கி, அதில் ஏற்றத் தாழ்வுகளை இட்டுக்கட்டிச் சொல்லும் சாதியப் பிரிவினைகளே, அந்நாளின் சமயச் சண்டைகளுக்குப் பின்னால் பூதாகரமாக நின்றிருந்தன. பக்தி இலக்கியக் காலங்களில் சமயச் சண்டைகளுக்காக உருவாக்கப்பட்ட வாய்மொழிக் கதைகள், அடுத்து வந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் சாதியை எதிர்க்கும் விதமாக அல்லாமல், சாதியை ஏற்று நிறுவும் வகையில் சாதிய மோதலாக மாறிவிட்ட சமுதாயத்தின் பின்னணியில் இப்படிப்பட்ட புராணக்கதைகளே இடம் பெறுகின்றன. சமணமும், பௌத்தமும், ஆசீவகமும் தோற்று சைவமும், வைணவமும் வென்ற குறியீடுதான் பக்தி இலக்கியங்கள். கொல்லாமை, ஊன் உண்ணாமை, பொய் கூறாமை, பிறன்மனை நோக்காமை என்று அறங்கூறும் சமயங்களின் வாழ்வியலை விட, பிள்ளைக்கறியும் உண்ணலாம், எப்பெண்ணையும் கூடலாம், எப்படியும் வாழலாம் என்கிற ஆபாசம் நிறைந்த வாழ்வியலை இயல், இசை, கூத்துடன் அனுபவிக்கலாம் என்பதும், அதையும் பக்தி ரசம் சொட்டும் வகையில் பாடலாகவும், இலக்கியமாகவும் ஆக்கலாம் என்று மாற்றிய வகையில், அறங்களை விடவும் ஐம்புலன்களையும் கட்டவிழ்த்துவிடும் இரசனை வாழ்வியலே வென்றது.

வணிகச் சமூக அமைப்பான சமணம் தோற்றதால் சமூகப் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் சாதாரண சிற்றரசர்கள் மாபெரும் மன்னர்களாக, சக்கரவர்த்திகளாக மாறி, கோவில்களை நிர்மாணித்து, அவற்றையே பொருளாதார மையங்கள் ஆகவும், கலைக்கூடங்கள் ஆகவும் நியமித்து, மக்களை மயக்கி, தாங்கள் கூறும் சமயத்தில் கட்டிப்போடும் நிலையில் மாபெரும் வெற்றி பெற்றனர். மேலும் பேரரசைக் கட்டிக்காக்க அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைக்கும் தேவை மன்னர்களுக்குக் கடமையானது. இந்தத் தேவை, தொழில் முறையிலான சமூகத்தைப் பல பிரிவுகளாக்கித் தனித்தனிச் சமூகமாக மாற்றிக் கொண்டிருந்தது. எத்தனைச்சமூகம் உருவானாலும் அத்தனையையும் மன்னர் காக்க வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டது. அதற்கேற்ற சமயங்களாகச் சைவமும், வைணவமும் சமுதாயத்தில் சாதிகள் நிலைநிறுத்தத்தோடு சேர்ந்து ஏற்றம் பெற்றன. இதற்காக, உழைக்கும் மக்களையே புலையர், பறையர் என்று சமுக இழிவுக்கு ஆளாக்கி விட்டு, அவர்களையே சிவனடியார்களாக உயர்த்தவும் சைவமும், வைணவமும் தயங்கவில்லை. இதை அந்நாளைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றும் கூறலாம். இவ்வகையில் சேக்கிழார் காலத்துச் சமூகம் சாதிகளுக்கான சமூக விதிகளை நிர்ணயித்து, சமய உரிமையோடு இலக்கியத்திலும் பதிந்து வைக்கும் நிலை அரச போகத்துடன் உறுதியானது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நந்தன்:
பக்தி இலக்கியக் காலத்தின் இறுதிப் பகுதியான பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு நந்தன் குறித்த புராண, இலக்கியப் பதிவுகள் ஏதும் இல்லை. எழுநூறு ஆண்டுகளில் பக்தி இலக்கியக் காலம், தொன்னூற்றாறு வகைகள் கொண்ட சிற்றிலக்கியக் காலமாக மாறிப் போயிருந்தது. அனைத்துச் சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும் சைவ, வைணவக் கோயில்களாக மாறி இருந்தன. வைதிகக் கோலோச்சலில் பார்ப்பனர்கள், மன்னர்களைக் காலில் விழ வைத்தனர். மன்னன் நாடாண்டான். பார்ப்பனர்கள் நிலமாண்டனர். நிலவுடைமைச் சமுதாயம் சதுர்வேதி மங்கலங்களாக நிலை பெற்றது. ஐரோப்பியர்கள் ஐம்பத்தாறு நாடுகளை ஒன்றிணைத்து, இந்தியா என்னும் துணைக் கண்டமாக்கிட, ஆளும் அரசியல் நிலை மன்னராட்சியில் இருந்து பெரிதும் மாறிப் போயிருந்தது. சமூக நிலையில் சாதிப் பிரிவினைகள் உச்ச நிலையில், மேலாதிக்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்படிப்பட்ட சூழல்களின் இடையில் நந்தன், கடவுளால் நேரடியாகப் பறையராகவும், கொத்தடிமையாகவும் படைக்கப் பட்டதாகக் காவியம் படைப்பது இலக்கியப் புலமையாக மட்டுமல்ல, தேச பக்தியாகவும் பார்க்கப் பட்டது. நந்தன் கதையை எட்டாம் நூற்றாண்டில் சுந்தரரும், பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழாரும் கொஞ்சங் கொஞ்சமாய் வளர்த்து, அவரவர் காலத்துச் சூழ்நிலையால் மெருகேற்றி, தமிழ்ப் புராணக் கதைகளாக அளித்தார்கள். திருநாளைப் போவார் நந்தனாராக, தாழ்ந்த சாதியினராக, பார்ப்பானின் கொத்தடிமையாக, அதை விரும்பி ஏற்றுக் கொள்பவராகப் படைத்தளிக்கப் பட்டார். இக் காலக் கண்ணாடிகளின் தொடர் குறியீடாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 - 1881) இயற்றிய 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனை' என்னும் கதாகாலட்சேபம், பாரதியாரின் சொந்த ஊரான காரைக்காலில் (பிரெஞ்சிந்தியா) வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் அவ்வூரின் பிரெஞ்சுக் கலெக்டர் சீசே என்பாரின் பெருமுயற்சியால், 1848 ஆம் ஆண்டில், இக் கதாகாலட்சேபம் "திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனை" என்ற பெயரில் தமிழ் அச்சில் வெளியிடப்பட்டது.

இப்படிப்பட்ட ஓர் அடிமைக் கற்பனைக் கதையைப் படைத்ததற்காகக் கோபாலகிருஷ்ண பாரதியார் பெரிதும் பாராட்டப்பட்டார். பார்ப்பன உலகம் அவரை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியது. காந்திய அமைப்புகள் நந்தன் நாடகத்தைத் தேச விடுதலைப் போராட்டமாக உருவகப்படுத்திக் கொண்டாடின. தங்கள் மீது சுமத்தப்பட்ட சாதி, அடிமை ஆகிய தளைகளில் இருந்து விடுதலை பெறப் போராடாமல், பார்ப்பானாக மாறுகின்ற வித்தையைக் கற்றுத் தேறும் பாத்திரப் படைப்பாக நந்தனை ஆக்கி வைத்ததைச் சீர்திருத்தம் என்று கூறி உச்சிக் குடுமியை முடிந்து கொள்ளும் கலிகாலம் பிறந்திருந்தது. அதேநேரம் கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்களைத் தாங்களே, தங்கள் முயற்சியால் உயர்த்திக்கொள்ளப் போராடிய இயக்கங்களும் இருந்தன. அதற்காக வேறு மதங்களைத் தழுவுதல் போன்ற தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. மகாத்மா ஜோதிராவ் புலே (1827-1890), தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான வழியாகக் கல்வியை முன்வைத்தார். அண்ணல் அம்பேத்கரும் (1890-1956) புலேவின் கொள்கைகளை ஆதரித்தார். தாழ்த்தப்பட்டோர் தங்களை உயர்த்திக் கொள்ளும் வழிகளில் பக்தியையும் ஒன்றாக சீக்கியப் பாவலர் கபீர்தாசர் (1440-1518) போன்றோர் முன் வைத்தனர் (காலந்தோறும் நந்தன் கதை, பக்கம் 10-12). இதில் சமூக நிலையாலும், பொருளாதார நிலையாலும் தாழ்த்தப்பட்டோர் தங்கள் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை (சிறுதெய்வ வழிபாடு முதலிய) விட்டுவிட்டு, முற்றிலும் புதிய ஆரியப் பண்பாடான பெருந் தெய்வ வழிபாடுகளுக்கு மாறுவது என்பதுதான் தாழ்த்தப்பட்டோர் உயர்வதற்கான, மேனிலை ஆக்கத்திற்கான வழியென்னும் கருத்தும் சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலரால் மார்க்சியப் பூணூலாக அணியப் பெற்றது. இப்படிப்பட்ட ஒரு பண்ணைச் சீர்திருத்தவாதியான கோபாலகிருஷ்ண பாரதியார், அதே வழியில் நந்தனையும் மேனிலையாக்க கதாநாயகனாகத் தன்னுடைய காலட்சேபத்தில் மாற்றுகிறார். "தெரு வாசற்புறத்தினில் ஏசிக்கொண்டும், கையைக் கொட்டிக்கொண்டும், விரும்பிய மதுவுண்டு கெக்கலித்தும், பறை வாத்தியமும் வெகு நேர்த்தியுடன் இருக்கும் புலைப்பாடி" என்று பாரதியார் வருணிக்கும் அச்சேரியில்தான் நந்தன் "கள்ளுண்ணாத, ஊனுண்ணாத, அதேநேரம் சாதிமுறை தவறாத சிவனடியாராக" வாழ்ந்து வந்தார் என்று காட்சிப் படுத்தப் படுகிறார். "சாதிக்கொடுமையின் முன் செயலற்று நிற்கின்ற சிவபக்தியின் மறுபெயரே நந்தன்" எனும் கூற்று "மாற்றத்தை விரும்பாத ஒரு மக்கள் கூட்டத்தையும், அது தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளான கொடிய சூழ்நிலையையும் குறிப்பதாகவே அமைந்துள்ளது" என்பதை நந்தன் குறியீடாக ஏற்க வைக்கிறது (சுந்தரராஜ் மாணிக்கம்: காலந்தோறும் நந்தன்: பக். 1). பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலக் கண்ணாடியில் தெரிவதெல்லாம், உலக சாம்ராஜ்ஜியம் அமைத்த இங்கிலாந்தின் காலனியாதிக்கக் கதைகளின் பார்ப்பனிய நிறுவன மயமாக்கலும், அதனால் நிலவிய சமூக, பொருளாதார வீழ்ச்சிகளும்தான்.

நந்தன் கதை, புலவர்களால் அறியப்பட்ட புராணங்களில் இருந்தவரை, மக்கள் இலக்கியமாகப் பரவவில்லை. ஆனால் பிற்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) இசைக் கீர்த்தனைகளாக இயற்றப்பட்ட "நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்" மூலம் விரைவில் பல இடங்களில் பாடப்பெற்றும், நடிக்கப் பெற்றும், கூத்தாக நிகழ்த்தப் பெற்றும் பெரிய அளவில் பிரபலமடைந்தன. கூத்து வடிவினில் எப்படி நள தமயந்தி, திரௌபதி (பாஞ்சாலி) சபதம், கீசக வதம், அனுமன் பக்தி என்று அனைத்து ஆரியக் கதைகளும் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள் வரை உள்நுழைந்தனவோ, அதேபோல ஒரு புது வரவாகப் புகுத்தப்பட்ட நந்தனார் சரித்திரக் கதையும், கூத்தும் தமிழ்நாடெங்கும் பிரபலமாகிச் சாதிய அமைப்பினை மேலும் வலுப்படுத்தக் காரணமாயிற்று. சாதியில் இருந்து விடுபடுவது என்பது பெருந்தெய்வ வழிபாடு அல்லது ஆரியப் பண்பாட்டை நோக்கி நகர்வது என்ற, பார்ப்பனர்களால் கதைகளில் மட்டும் ஏற்கக் கூடியதும், நிஜத்தில் ஏற்றுக் கொள்ளாததுமான சீர்திருத்தமாகப் பரவ வைத்தது. இதையே சாதியை ஒழிக்கும் பொதுமை வழியாகவும், மேனிலைச் சீர்திருத்தமாகவும் கண்டனர் பார்ப்பனர்களும், அவர்களைச் சார்ந்து நின்ற பிற ஆதிக்கச் சாதிகளும்.

இப்படிப்பட்ட மேல்நிலைச் சீர்திருத்தத்தைத் தான் அயோத்திதாசர் கடுமையாகச் சாடுகிறார். 'இந்துக்கள்' என்ற மோசடிப் பெயரைத் தாங்கிப் பாழடைந்து போக வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். "மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளோ" எனப் பாரதியாரின் கீர்த்தனைகளைக் கொட்டாய்களில் பாடி நடிப்பது என்பது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது சுமத்தும் பெரும் அவமரியாதை என்று உள்ளம் கொதிக்கிறார் அயோத்திதாசர். "புலால் உண்பவன் புலையன் என்றால் கொழுத்த மாடு, குதிரைகளை யாகங்களில் கொன்று தின்ற பார்ப்பனர்களும் புலையர்தானே? பன்றிக் கறி தின்ற சிவனும், கண்ணப்பனும் புலையர்தானே? பசியினால் நாய்க்கறி தின்ற விசுவாமித்திரன் புலையன் அல்லவா? இப்படியான அவமரியாதையை நிறுத்தவில்லை என்றால் பறையன் பறையனே; பார்ப்பான் பார்ப்பானே; வேசிமகன் ஆகிய சூத்திரன் வேசிமகனே என்பது ஏற்கும்படி ஆகிவிடும்" என்றும் அயோத்திதாசர் எச்சரிக்கிறார். அதனால் நந்தன் நாடகம், கூத்து, இசைப்பாடல், கீர்த்தனைகளை என அனைத்தையும் தடை செய்யக் கோரும் அயோத்திதாசர், அதற்கு மூலமான நந்தன் குறித்துக் கூறும் புராணங்களையும், நந்தன் கீர்த்தனைகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். பௌத்தர்கள் உருவாக்கிய புராணங்களை அழித்து வேஷ பிராமணர்கள் ஏற்படுத்திக்கொண்ட புராணங்கள் அத்தனையும் கட்டுக் கதைகளே என்பதால் அவற்றைப் புறந்தள்ள வேண்டும் என்றும் பண்டிதர் கூறுகிறார் (அயோத்திதாசப் பண்டிதரின் சொற்பொழிவுகள், பக்கம் 64). ஆனால் அயோத்திதாசர் விரும்பியது எதுவும் நடக்கவில்லை. அவர் 1914 ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். அதற்குப் பின்னர் கூத்து வடிவம் நாடகமாக வளர்ந்து, பின் திரைப்படமாகவும் வளர்ச்சி கண்டது. நந்தன் நாடகங்களும், திரைப்படங்களும் 'தமிழ் கூறும் நல்லுலகம்' எங்கும் சக்கைப் போடு போட்டுச் சாதிவெறியைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தன.

நந்தன் கதையை ஒரு 'தந்திரக் கதை' என்று கூறும் அயோத்திதாசர், இக்கதையினால் ஒடுக்கப்பட்ட மக்களை 'இந்து என்னும் கள்ள மதத்தில்' ஆடுகளை அடைப்பது போல அடைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். மேலும் பழந்தமிழ் அரசர் குடிகளில் ஒன்றான நந்த வமிசத்தைச் சேர்ந்தவர்களைப் புலையர் என்றும், பறையர் என்றும் கூறுவதையும், அவர்களைத் தாழ்ந்த சாதியார் என்று கூறுவதையும் அயோத்திதாசர் கிஞ்சித்தும் ஏற்கவில்லை. சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் நந்தன் ஒரு பௌத்த அரசனாகக் குறிக்கப் பெறுகிறார். மகத நாட்டு மன்னர் வம்சத்திலும் நந்தன் என்னும் மன்னன் உண்டு. கபிலவஸ்துவின் இளவரசனாக இருந்தவர்களில் ஒருவர் நந்தன் என்று இரேனியஸ், ஓல்டன்பர்க் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சமண, பௌத்தக் காலக் கணிப்புப்படி பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுக் கணக்கில் 26 ஆவது ஆண்டாக 'நந்தன' வருகிறது. அவ்வாண்டில் பிறக்கும் அரசரின் குழந்தைக்கு நந்தன் (தமிழில் நற்குழவி) என்று பெயரிடுதல் வழக்கமாக இருந்தது. 4 அவ்வாறு தியாகச் சாம்பான் மகளுக்கும், சோழ மன்னனுக்கும் மகனாகப் பிறந்த குழந்தைக்கு நந்தன் என்று பெயரிட்டதையும், அவன் சோழமண்டலம் அரசர்களில் ஒருவராக ஆட்சி செய்தவர் என்றும் தஞ்சை வேதநாயக சாஸ்திரி தொகுத்த ஓலைச்சுவடி (கி.பி. 1798) தெரிவிக்கிறது (கோகில அம்பல அன்பானந்தன், பக்கம் 17). சமண, பௌத்தச் சமயங்களை அழித்து, இந்தியாவின் மெய்ஞ்ஞானத் தெய்வத்தை (புத்தரை) மறைக்க அஞ்ஞானத் தெய்வங்களை உண்டாக்கி விட்டார்கள் என்று கூறும் அயோத்திதாசர், "ஒதுக்கப்பட்ட பூர்வத் தமிழர்களே உங்கள் உறக்கத்தை விட்டுப் பௌத்தரென்று வெளி வாருங்கள்" என்றும் அழைப்பு விடுக்கிறார்.

வீரநந்தன்:
தன்னைத் தாழ்ந்த சாதி என்று வேதியப் பார்ப்பான் சொல்வதை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அடிமையாக உழைப்பதும், தன் மக்களுக்கும், குல தெய்வத்திற்கும் துரோகம் செய்துவிட்டுப் பெருந் தெய்வத்தை (சிவனை) ஏற்று, யாகத்தில் மூழ்கி, தாழ்ந்த சாதி என்னும் கறையைப் போக்கிக் கொண்டு கைலாயம் ஏகும் நந்தனை அயோத்திதாசர் முற்றாக மறுக்கிறார்; வெறுக்கிறார். வேதியன் சொல்வதுபோல தாங்கள் தாழ்ந்த சாதியார் இல்லை என்றும், தாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்றும் நந்தனும், அவனைச் சேர்ந்தவர்களும் போராடி இருக்க வேண்டும்; அவர்கள் வீரர்களாக வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அயோத்திதாசரின் எதிர்பார்ப்பு.

அப்படி அவர் எதிர்பார்த்தபடி நந்தனை வீரனாகவும், பகுத்தறிவாளராகவும் காட்டும் நாடகத்தை ஒருவர் படைத்திருக்கிறார். அவர்தான் கவிஞர் புதுவைச் சிவம் (1908 - 1989). அவர் எழுதிய நாடகத்தின் பெயரே "வீரநந்தன்". இந்நாடகம் முழுவதும் நந்தனை ஒரு போராட்டக்காரராகவே காட்சிப்படுத்துகிறார் புதுவைச் சிவம். அதனாலேயே நந்தனுக்கு "வீரநந்தன்" என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். புராணக் கதைகளைப் பற்றிய மறு சிந்தனைகளின் விளைவாக, புரட்சிக்காரனான நந்தன், பார்ப்பனர்களால் பழிவாங்கப் படுவதாகக் கூறி நந்தன் வாழ்வு சீர்திருத்த வழியைச் சார்ந்ததே என்பதை நிறுவும் அடிப்படையில் இந்நாடகம் இயற்றப்பட்டுள்ளது.

1925 ஆம் ஆண்டு வாக்கில் தோற்றம் பெற்ற சுயமரியாதை இயக்கம், 1930ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி பெற்று, சென்னை மாகாணத்திலும், புதுச்சேரியிலும் இன உணர்வுச் சிந்தனைகள் உருவாகக் காரணமாக அமைந்தது. புதுமை, பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்களும், அவற்றின் பொருளும் தமிழ்பேசும் மக்களிடையே மறுமலர்ச்சிச் சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. திராவிட இன உணர்வும், திராவிடரின் வீழ்ச்சிக்கு ஆரியரே காரணம் என்ற எண்ணமும் மேலோங்கி, ஆரியக் கலப்புள்ள எவற்றையும் அவை எவ்வடிவத்தில் இருந்தாலும் எதிர்க்கும் அல்லது மறு சிந்தனைக்கு உள்ளாக்கும் போக்கும் நிலவின. இந்நிலைக்குக் கடவுளைப் போதித்த புராணங்களும், கடவுள் தன்மைக்கு அருகில் வைத்துப் போற்றப்பட்ட கலைகளும் கூட விதிவிலக்காகவில்லை. இப்புதிய அலை நாடக உலகிலும் வீசியது. பக்தியை விளக்கும் புராண நாடகங்களே பெரிதும் நிலவியிருந்த நாடக மேடைகளில் சமூக நாடகங்களும், சீர்திருத்த நாடகங்களும் உள்நுழைந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றன.  மேலும், புராணங்களை மறுத்துப் புதிய சிந்தனைப் போக்கில் அவற்றைச் சொல்லும் முயற்சிகளும் நடைபெற்றன. இம்முயற்சியில் முதலாவதாக, இரணியனைத் திராவிட மக்களின் பாதுகாவலனாகச் சித்தரிக்கும் பாரதிதாசன் இயற்றிய 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகத்தைக் குறிப்பிடலாம். இந்நாடகம் 1934 ஆம் ஆண்டு சென்னையில் மேடையேறியது. திராவிட இனத்தவரையும், தமிழ்ப் பண்பாட்டையும் இழித்துக் கூறுவதாகவும், ஆரியப் பண்பாட்டைப் போற்றுவதாகவும் உள்ள புராண, பக்தி இலக்கியங்களை, அவை தமிழிலக்கியமாக இருந்தாலும் கூட அவற்றைப் புறந்தள்ள வேண்டியது தமது கடமை என்று திராவிட இயக்கத் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். இதை மனதில் கொண்டு, "தமிழரின் வீழ்ச்சி அல்லது இராமாயணச் சாரம்" என்ற தலைப்பில், 1935ஆம் ஆண்டில், இராமாயணக் கதையைத் தமிழர் - ஆரியர் போராட்டமாக, நாடகக் கதையாக எழுதியுள்ளார் புதுவைச் சிவம். சற்றேறக்குறைய இக்கால கட்டத்தில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கிந்தனார் காலட்சேபம் என்ற பெயரில் ஒரு காலட்சேபத்தைத் தனது 'நல்ல தம்பி' திரைப்படத்தில் சேர்த்து அவரே நடித்திருந்தார். நந்தன் கதையைச் சீர்திருத்தி, கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் கல்வி கற்கச் செல்லும் 'கிந்தன்' என்பவரின் கற்பனைக் கதையாக மாற்றியிருந்தார். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் திராவிட இயக்கக் கருத்தியல் உள்ள திரைப்படமாக அது அமைந்திருந்தது.

மேற்குறிப்பிட்ட கருத்தியல்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து சீர்திருத்தக் காரராக மாறிய நந்தன் கதையைப் புதிய சிந்தனைப் போக்கில் அளிக்கும் முயற்சியே புதுவைச் சிவத்தின் வீரநந்தன் நாடகம் ஆகும். நந்தனாரை வீரநந்தன் ஆக்கியதும், வேத விற்பன்னர்களுக்கு மனித உரிமை குறித்து நந்தன் போதிப்பதும், புத்தரின் போதனையால் நந்தன் சீர்திருத்தவாதியாக மாறுவதையும், இந்நாடகத்தின் சிறப்பம்சங்களாகக் கொள்ளலாம். மனிதன் தாழ்ந்தவனல்ல என்று நந்தன் வாதிடுவதும், ஊர் மக்களிடம் நந்தன் சாதியை மறுத்துப் பேசுவதும், தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என நந்தன் கூறுவதும், நந்தன் புத்த தம்மப் போதனையை ஏற்பதும், கடவுளுக்குப் பலியிடுவதை வன்முறையால் தடை செய்வதும், தில்லையில் தீட்சிதர்கள் அக்கினிக் குண்டத்தில் தள்ளி விடுவதும், நந்தனார் சரித்திரத்தில் ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வீர நந்தன் நாடகத்தில் நந்தனும் அவரைச் சேர்ந்தவர்களும் தீண்டாமையால் துன்புறுத்தப் படுவதற்கும், பின் நந்தன் வஞ்சகமாகக் கோயிலுக்குள் தனியாக வரவழைக்கப்பட்டு அக்கினி குண்டத்தில் தள்ளப்படுவதற்கும் ஆரியப் பார்ப்பனர்களே காரணம் என்று மிக வெளிப்படையான நோக்கில் நாடகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மைக் கதை என்றும், புராணத்தில் வரும் நந்தன் கதை ஆரியப் பார்ப்பனரின் கபட நாடக 'அக்கிரமக் கதை' என்றும் நாடக இறுதிக் காட்சி அமைப்பில் விளக்கமும் தரப்பட்டுள்ளன. விளக்கம் என்னவென்றால், நந்தனின் வழக்கமான பெரிய புராணக் கதையைக் காலட்சேபம் செய்யும் பாகவதனை மறித்து வீரன் என்பவன், 'நந்தன் பார்ப்பனர்களால் பழிவாங்கப்பட்ட கதையே உண்மைக் கதை' என்று கூறுகிறான். பாகவதன், 'நான் வயிற்றுப் பிழைப்புக்காரன்' என்கிறான். வீரனோ, 'ஆரியரின் புரட்டு இது' என்று கூறி 'இனி பழங்கதை பேசலாகாது' என்று பாகவதனை எச்சரித்து அனுப்புகிறான். அந்த நாடகத்தின் இறுதிக் காட்சி இப்படி முடிகிறது. இக் கதையை முழுவதுமாகத் திராவிடர் - ஆரியர் பிரச்சனையாக புதுவைச் சிவம் மாற்றிவிடுகிறார். நந்தனைக் கொலை செய்வது மட்டுமில்லாமல் நந்தனைப் புஷ்பப் பல்லக்கு வந்து கயிலைக்கு அழைத்துச் செல்வதாகச் சேரி மக்களிடம் கூறி அவர்களை நம்ப வைப்பதும், இக்கதையையே காலங்காலமாகக் கூறிவருவதும், 'ஆரியப் பார்ப்பனரின் கபடநாடகமே' என்று இறுதியில் புதுவைச் சிவம் நாடகக் காட்சிகளை அமைத்திருக்கிறார். அவருடைய காலக் கண்ணாடியில், வீரநந்தன் நாடகம், ஒரு தன்மானப் புரட்சி வீரனை, அயோத்திதாசர் காட்டிய தமிழ் பௌத்த அடையாளத்துடன், ஆரியத்தை வீழ்த்தும் ஒரு போர்வாளாகக் காட்டி மின்னுகிறது.

வீர நந்தன் நாடகம், 1940 - 1945 ஆம் ஆண்டுகளின் இடையில் உருவாக்கம் பெற்றதாகப் புதுச்சேரி அரசு வெளியிட்ட *"புதுவைச் சிவம் நாடகங்கள்" என்ற நூலில் குறிக்கப்பெற்றுள்ளது. இந்நாட்களில் பண்டிதர் அயோத்திதாசரைக் கவிஞர் புதுவைச் சிவம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அயோத்திதாசர் கற்பனையில் வெளிப்படுத்திய, போராட்டக் குணமுள்ள நந்தனைப் புதுவைச் சிவம் கதாபாத்திரமாகத் தன் நாடகத்தில் உலவ விட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வே எனலாம். சமூக அக்கறையும், சீர்திருத்த எண்ணமும் கொண்டவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து இருப்பதற்கு அயோத்திதாசரும், புதுவைச் சிவமும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்துள்ளனர். 

கவிஞர் புதுவைச் சிவம் 1945 - 1950 காலகட்டத்தில் எழுதிய வீர நந்தன் நாடகம், புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை நடத்திய கவிஞர் புதுவைச் சிவம் பிறந்தநாள் விழாவிலும், புதுச்சேரி நாடக விழாக்களிலும் பன்முறை நடைபெற்றுள்ளது. புதுவைப் பல்கலைக் கழகத்தில், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கலை அரங்கில் 8.5.2019 அன்று வீர நந்தன் நாடகம், நாடகத்துறை ஆய்வு மாணவர்களைக் கொண்டு நவீன நாடகமாக நிகழ்த்தப்பட்டது. கவிஞர் புதுவை சிவம் எழுதிய 22 காட்சிகள் கொண்ட நாடகக் கதையை ஆறு காட்சிகளாக மாற்றி இக்கட்டுரை ஆசிரியர் வசனமும் எழுதியுள்ளார். அதில் ஐந்தாம் காட்சியின் வசனங்கள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 



"வீர நந்தன்" - நாடகம்:

நாடகக் காட்சி 5 


(நந்தன் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். திடீரென்று அமைதியும், அருளும் சூழ்ந்த வேறோர் இடத்திற்கு வந்ததாக உணர்கிறான். தொடுவானம் போன்ற தூரத்தில் இருந்து புறப்பட்ட ஒளியில் புத்தரின் உருவம் அவன் கண்ணுக்கு மெல்ல மெல்லப் புலனாகிறது. நந்தன் மெல்ல அவரை நெருங்குகிறான். அவரின் பாதத்தில் வீழ்ந்து…)


நந்தன்: ஐயனே! ஐந்திரனே! அறவாழியே! என் வணக்கத்தை ஏற்று என்னைத் துயரத்திலிருந்து காத்தருளுங்கள்! 

புத்தர்: நந்தனே! நீ துயரமாக நினைப்பது என்ன?

நந்தன்: ஆதி பகவனே! நானும் என்னைச் சேர்ந்தவர்களும் இச்சமூகத்தில் மிகவும் இழிவு படுத்தப் படுகிறோம். வேண்டுதல் வேண்டாமை இலாதவனே! இருபிறப்பாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு கூட்டத்தார் எம்மை ஒரு பிறப்பாளர் என்று கூறி அடிமையாக ஆட்படுத்துகின்றனர் அறிவனே!

புத்தர்: ஒரு பிறப்பாளனோ அல்லது இருபிறப்பாளனோ, எவன் ஒருவன் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்ட மறுக்கிறானோ, பிறர்க்குத் தீங்கு விளைவிக்க நினைக்கிறானோ, அவனே கீழ்ச்சாதி ஆவான். எவனொருவன் கிராமங்களையும் குடியிருப்புகளையும் அழித்து நாசப்படுத்துகிறானோ, தனக்குச் சொந்தமில்லாத பொருட்களை எடுத்துக் கொள்கிறானோ, பொய் சொல்கிறானோ, சக மனிதர்களை மதிக்காமல் இருக்கிறானோ, அவனே கீழ்ச்சாதி ஆவான். எவனொருவன் வசதி வாய்ப்போடு இருந்தும் ஏழை எளியவர்க்கு உதவ மறுக்கிறானோ, செல்வனாக இருந்தும் தன் வயதான தாய் தந்தையரைக் காப்பாற்றாமல் இருக்கிறானோ அவனே கீழ்ச்சாதி ஆவான். பிறப்பால் எவனும் பிராமணனும் அல்ல. எவனும் கீழ்ச்சாதியானும் அல்ல. 

நந்தன்: மலர்மிசை ஏகிய மகானே! தங்களின் அறிவுரை கோலோச்சிய இந்த நாட்டில் இன்னும் பேதங்கள் நிலவுவதைத் தாங்கள் அறிவீர் அல்லவோ? தங்கள் தம்மத்தை மீறிய வல்லமையும் உண்டோ விநாயகனே? 

புத்தர்: நான் கடவுள் அல்ல. கடவுள் அவதாரமும் அல்ல. நான் கூறும் கருத்துக்கள் கடவுள் என நம்பப்படும் ஒருவரின் வார்த்தைகள் அல்ல. அவரின் அருள் பெற்றவை அல்ல. அவரால் வெளிப்படுத்தப் பட்டவையும் அல்ல. சாதாரண மனிதன் ஆகிய என்னால் அனுபவத்தில் உணரப் பட்டவை. இவை எந்தவிதமான கேள்விக்கும் உட்படுத்தப்படலாம். ஏற்கப்படலாம். ஏற்க மறுக்கவும் படலாம். 

நந்தன்: தனக்குவமை இல்லா சாத்தர் பிரானே! சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒன்று இருப்பதாகக் கூறி, மோட்சத்தைக் கற்பித்து, சடங்குகளை வற்புறுத்தி எங்களை சழக்கர்கள் ஆக்கிவிட்டார்கள் ஜகந்நாதனே!

புத்தர்: நந்தா கடவுள் என்பது ஒரு யூகக் கருத்து மட்டுமே! கடவுள் நம்பிக்கை எந்தப் பயனையும் அளிப்பதில்லை. அது பெரும் துன்பத்தைத் தான் விளைவிக்கும். இவ்வுலகமும், உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்றால் உலகச் செயல்பாடுகளில் மனிதனின் பங்கு ஏதும் இருக்காது. கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என்பது போலவே ஆத்மாவை நம்புவதும் மூட நம்பிக்கையே. அறிவின் அடிப்படையில் கடவுள், ஆன்மா, மோட்சம் என்பவை கற்பிக்கப்பட்டவையே. தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் பேணாது வெறும் சாத்திரம் சடங்குகளைக் கடைப்பிடிப்பது அறிவீனமே!

நந்தன்: எண்குணத்தோனே! இவைதான் தங்களின் தம்மம் என்றால் இன்று தங்கள் தம்மம் தவறாகக் கற்பிக்கப்படுகிறதே!

புத்தர்: நாம் காலச்சக்கரத்தில் ஐக்கியப்பட்டு இருக்கிறோம். காலச்சக்கரம் சுழலக் கூடியது. அதன் ஈர்ப்பு விசை தம்ம சக்கரத்தோடு பொருந்தியது. இந்த இந்திர நாட்டை வைதீகம் ஆளும் நிலை வந்தால் தம்மசக்கரம் வைதீகச் சக்கரமாகக் கற்பிக்கப்படும். அந்த நிலை வரும்போது நீங்கள் மட்டுமல்ல நானும் அந்நியமாவேன்!

நந்தன்: ஐயனே! அனைத்தும் உணர்ந்த அவலோகிதனே! துக்கத்திலிருந்து விடுதலை பெறவே உன்னைச் சரணடைந்தேன். உங்களையும் சூழ்ச்சி சூழுமானால் எங்கள் நிலை யாதாகும் அறிவனே!

புத்தர்: நந்தா ஆயுதத்தோடு வந்து ஒருவன் பூமியை வெட்டி மண்ணைத் தோண்டுகிறான். பூமி அவன் மீது கோபப்படுமா?

நந்தன்: ஐந்தவித்த ஆற்றல் உடையவனே! அவ்வாறு பூமி செய்யாது. 

புத்தர்: தூரிகை, மை முதலானவைகளுடன் ஒருவன் காற்றில் ஓவியம் வரைய முயல்கிறான். அது முடியுமா?

நந்தன்: முடியாது முதல்வனே! 

புத்தர்: கங்கையை நெருப்பிட்டு ஒருவன் கொளுத்த முயல்கிறான். அது இயலுமா? 

நந்தன்: இயலாது இறைவனே! 

புத்தர்: நந்தா! பூமி எவ்வாறு வருந்துவதில்லையோ, காற்று எவ்வாறு இடம் தருவதில்லையோ, கங்கை எவ்வாறு தீயில் சிக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறதோ அது போலவே உங்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளையும், அவதூறுகளையும் பொறுத்துக் கொள்ளவேண்டும்! 

நந்தன்: வாலறிவனே!  இதற்கு மேலுமா நாங்கள் பொறுமை காக்க வேண்டும்? 

புத்தர்: ஆம் நந்தனே! எதையும் பொருட்படுத்தாமல் பொறுமை காத்து நீங்கள் உயிரினங்கள் மீது அன்பும், கருணையும் செலுத்தவேண்டும். அக்கருணை அளவற்றதாகவும், எல்லையற்றதாகவும் அமையவேண்டும். அவ்வாறு செய்வதில் உங்கள் மனம் கங்கையைப் போல் ஆழமாகவும், பூமியைப் போல் உறுதியாகவும், காற்றைப்போல் தூய்மையானதாகவும் இருக்கவேண்டும். காலச்சக்கரத்தைத் தான் தம்மச் சக்கரமாக உருவகப் படுத்தி இருக்கிறேன். காலச்சக்கரம் சுழலக் கூடியது. அது தம்மச் சக்கரத்தைச் சுழலவும் செய்விக்கும். நிலை நிறுத்தவும் செய்யும். எதையும் எதிர் கொள்ளுவாய் நந்தா! உன் மனமே உன்னை ஆளட்டும்!

          புத்தம் சரணம் கச்சாமி!
          சங்கம் சரணம் கச்சாமி!
          தர்மம் சரணம் கச்சாமி!



அடிக்குறிப்புகள்:
1.  கந்தபுராணத்தின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றன. திரு அருணாசலம் என்பவர் இதன் காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு என்று தோராயமாக வரையறை செய்துள்ளார். திருவிளையாடற் புராணம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டு என்றும், பெரியபுராணம் எட்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையிலும் காலக் கணிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆய்வுகள் மேலும் தொடரக் கூடும். (விக்கிப்பீடியா). (இவற்றை இயற்றிய புலவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த மன்னர்களை வைத்து இவர்களின் காலமும் குறிக்கப்படுவதால் ஆய்வுகளில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன).

2.  பக்தி இலக்கியக் காலத்துப் பிதாமகர்களான சமயக் குரவர்கள் நால்வரின் காலமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. புராணங்களில் வரும் சில நிகழ்வுகளை வைத்தும், அவர்கள் வாழ்ந்த காலத்து மன்னர்களின் ஆட்சிக் காலத்தை வைத்தும் இப்புலவர்களின் காலமும் வரையறை செய்யப் பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தார் என்ற குறிப்பைக் கொண்டு, அவரது காலம் கி.பி. 640 - 656 என்று குறிப்பிடப்படுகிறது. இவரது காலத்தை வைத்தே, இவரினும் வயது முதிர்ந்தவரான திருநாவுக்கரசர் (அப்பர்) காலம் கிபி 580 என்று கணக்கிடப்பட்டு கி. பி. 580 - 660 என்று அவரது காலம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நரசிம்மவர்மர் ஆட்சிக்காலத்தை (கி. பி. 700 - 728) வைத்துச் சுந்தரர் காலம் எட்டாம் நூற்றாண்டு என்றும் குறிக்கப் பெறுகிறது. இரண்டாம் வரகுண பாண்டியன் முடிசூடிய காலத்தை (கி. பி. 863) வைத்து மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுகிறது (விக்கிப்பீடியா).

3.  சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகை "சிறுத்தொண்டர் தொகை" என்றும் குறிக்கப்படுகிறது (சுந்தரராஜ் மாணிக்கம் பக். 33).

4.  ஆதன் என்பது தமிழ் மரபில் தோன்றிய தொன்மையான பெயர். தலைவன் என்றும், அரசன் என்றும் பொருள்படும். "வாழியாதன்" என்று சங்க இலக்கியங்கள் தலைவனை விளிக்கின்றன. "நெடுஞ்சேரலாதன்" போன்ற மன்னர்கள் பெயர்களும் தமிழிலக்கியத்தில் வழங்கி வருகின்றன. ஆகவே ஆதனூர் என்பது ஒரு காலத்தில் அரசனாக இருந்த ஒருவரின் பெயரால் வழங்கப்பட்ட ஊராகவும், அம்மக்கள் அவ்வரச குலத்தவராகவும் இருந்திருக்கலாம் என்பது இக்கட்டுரை ஆசிரியரின் எண்ணம். மேலும், சித்தர் தத்துவங்களில், ஆன்ம தத்துவங்கள் 24 ஆகக் குறிக்கப் பெறுகின்றன. ஆனால் முற்காலக் கபிலரின் சமயமான எண்ணியம் 24 ஆன்மத் தத்துவங்களோடு 25 ஆவது பொருளாக நித்தியமான ஒருவன் ஆதன் (புருடன்) என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. (குணா: எண்ணியம்: பக். 1).


உதவிய நூல்கள்:
1.  க. அயோத்திதாச பண்டிதர், நந்தன் சரித்திர தந்திரம், 2017, அயோத்திதாசர் பதிப்பகம், சென்னை. / க. அப்பாதுரை, நந்தனாரும் இந்து மதப் புராணங்களும், 2017, அயோத்திதாசர் பதிப்பகம், சென்னை.
2.  பிரமிளா குருமூர்த்தி, கோபாலகிருஷ்ண பாரதியார், 2018, சாகித்திய அகாடமி, புதுடெல்லி. 
3.  மா. உத்திராபதி, காலந்தோறும் நந்தன் கதை, 1989, நேத்ரா வெளியீடு, சென்னை. 
4.  புதுவைச் சிவம் நாடகங்கள், 2000, கலை பண்பாட்டுத்துறை, புதுச்சேரி அரசு. 
5.  முனைவர் பெ. விஜயகுமார், அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள், 2021, பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை. 
6.  முனைவர் சிவ இளங்கோ, கவிஞர் புதுவைச் சிவத்தின் சீர்திருத்த நாடகங்கள், 2012, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
7.  தர்மானந்த கோசம்பி, பகவான் புத்தர், 2018, சாகித்திய அகாடமி, புதுதில்லி.
8.  முனைவர் சுந்தரராஜ் மாணிக்கம், காலந்தோறும் நந்தன், 1991, தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை.
9.  குணா, எண்ணியம், 2013, தமிழக ஆய்வரண், பெங்களூரு.

-------------------








Friday, May 28, 2021

பேராசிரியர் தொ. பரமசிவன் நினைவுகள்



- க.பூபாலன், சிங்கப்பூர்


கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே கொரோனா என்னும் கொடுந்தொற்று நோயினால் உலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அதிலிருந்து இன்னும் மீளாத சூழலில், 2020 டிசம்பர் 24 அன்று அன்று தொ.ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. தமிழர் வரலாற்று அறிஞரும் திராவிடப் பண்பாட்டு ஆய்வாளருமான தொ.ப. அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் அதேவேளையில், அவரின் கருத்தியலையும் ஆய்வுப் படைப்புகளையும் குறித்துப் பகிர்ந்துகொள்வது அந்த அறிஞருக்கு நாம் செலுத்தும் பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்ற நோக்கத்தில் உருவானதே இக்கட்டுரை.

தமிழ்நாட்டிலுள்ள நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950-ல் பிறந்த தொ.பரமசிவன் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பொருளாதாரத்தில் பெற்றார். பிறகு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்திற்காகத் தமிழ் பயின்றார். மேற்படிப்பை முடித்ததும் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி மற்றும் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிறகு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர்ந்தவர், 1998 முதல் 2008 வரை அங்குத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். பணிக்காலத்தில் ஏராளமான மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியிருக்கிறார்.

அவர் தமிழாசிரியராக மட்டும் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தால் இன்று இவ்வளவுதூரம் அவரைக்குறித்து நாம் பேசிக்கொண்டிருப்போமா என்பது அய்யமே. தமிழ்க் கற்பித்தலைத் தாண்டி தமிழர் பண்பாட்டு ஆய்வுப் பணிகளிலும் தொ.ப. தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1976இல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணியில் சேர்ந்தபோது, அவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, ‘கோயிலைப் பற்றி ஆய்வு செய்’ என்று சொல்லியுள்ளார். அதன்படி ‘அழகர்கோயிலை’ தொ.ப. ஆய்வுசெய்தார். 

எதையும் புதிய பார்வையுடனும் வரலாற்றுத் தேடலுடனும் சிந்திக்கக்கூடியவராக இருந்த தொ.ப., கள ஆய்வு என்பதன் பெருமையை அப்போது உணரத்தொடங்கினார். புத்தகங்களுக்குள்ளேயே, நூலகங்களுக்குள்ளேயே ஆராய்ச்சி என்ற நிலைமாறி, தெருவையும் ஆய்வையும் இணைக்கிற கள ஆய்வினை அவரது ‘அழகர்கோயில்’ வரலாற்று ஆய்வில் சாத்தியமாக்கினார். அந்த ஆய்வு அவரைப் பல இடங்களுக்கு இழுத்துச் சென்றது. அதற்காக அவர், குடும்பத்தை ஊரிலே விட்டுவிட்டு, கோயிலைப் பற்றி ஓர் ஆண்டுக்காலம் கள ஆய்வு செய்துள்ளார். இன்றைக்கும் அவரின் அந்த ஆய்வுமுறை ஆய்வாளர்கள் மதிக்கக் கூடிய ஒன்றாக நீடிக்கிறது. 

தெருவிலே சந்திக்கிற எல்லா மனிதர்களும் வாசிப்பதற்குரிய புத்தகங்களே என்ற ஞானத்தை அப்போது பெற்றதாகத் தொ.ப. கூறுகிறார். கோயிலைப் பற்றிய தொ.ப.வின் ஆய்வுடைய தனித்தன்மை என்ன? என்ற கேள்விக்குத் தொ.ப.வே இவ்வாறு பதில் கூறுகிறார்:
“நான் அழகர்கோயிலைப் பற்றிக் கள ஆய்வு செய்தேன். அதைச் சமூகவியல் பார்வையுடன் செய்தேன். அதற்கு முன்பு கோயில் ஆய்வுகள் என்றால் கட்டட ஆய்வுகள், கலை ஆய்வுகளாகவே இருந்தன. அதைவிட்டுக் கோயிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்லப்படவில்லை. என்னுடைய ஆய்வு முழுக்க முழுக்க கோயிலுக்கும் மக்களுக்குமான தொடர்பிலே மையம் கொண்டது.

நம் நாட்டில் மிகப்பெரிய சமூக நிறுவனம் என்பது கோயில்தான். மற்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. காலனி ஆட்சியில் அழிந்ததுபோக மிஞ்சியது கோயிலும் சாதியும் தான். இந்த இரண்டு சமூக நிறுவனங்களுக்கிடையே உள்ள தொடர்பைப் பற்றியதுதான் என்னுடைய ஆய்வு. குறிப்பிட்ட நான்கு சாதிகளுக்கும் அழகர்கோயிலுக்கும் உள்ள உறவையே அந்த ஆய்வில் விவரித்திருக்கிறேன்”.

அவரின் ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களும் மிகச்சிறந்த ஆய்வு என்ற முடிவை எட்டியதால், மதுரைப் பல்கலைக்கழகம் அதை நூலாக வெளியிட்டது. இந்த வரலாற்று ஆய்வுநூல்தான் தொ.ப. தனித்த அடையாளத்துடன் தமிழர்களிடத்தில் அறிமுகமாக அடிப்படைக் காரணமாக அமைந்தது. ‘அழகர்கோயில்’ என்ற அந்தப் பண்பாட்டு ஆய்வுநூல் வெளிவந்தபோது தொ.ப.வுக்கு 29 வயது. அவர் அவ்வாய்வில் கையாண்ட கள ஆய்வு முறையை சமூகவியல் பார்வையுடன் அவரின் அடுத்தடுத்த படைப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும், கட்டுரைகளுக்கும் அடித்தளமாக அமைத்துக்கொண்டார். 

தொ.ப நம்முடைய அன்றாட வாழ்வில் உள்ள நம்பிக்கைகள், சமயங்கள், பண்பாடுகள் சம்பந்தப்பட்ட செய்திகள், நாட்டார் தெய்வங்கள், அதன் வழிபாட்டுமுறைகள், ஆய்வுகள் என மானுடவியல் கள ஆய்வு முறையின் வழியாக தமிழர்களின் வரலாற்றை எழுதி ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், தெய்வங்களும் சமூக மரபுகளும், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், செவ்வி (நேர்காணல்கள்), விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள் போன்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். 

தொ.ப. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்து வளர்ந்தவர். குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. அவர் பிறந்த ஊரின் சூழலும் பின்புலமும்தான் அவரை மாறுபட்டுச் சிந்திக்கத் தூண்டியது. மேலும் அக்காலகட்டத்தில் திராவிட இயக்கத்தில் உருவான வாசிப்புப் பயிற்சியும் முக்கிய பங்காற்றியுள்ளது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம், அதிலும் முதல் தலைமுறையில் கல்வி பயின்றவர்களிடம், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

“என்னைப் போன்றவர்களுக்கு விளையாட்டைப் போலவே, வாசிப்பும் பழக்கமானது; அதிலும் வாசிப்பு, அரசியல் வாசிப்பாக இருந்தது. நான் பத்து வயதிலேயே முரசொலி வாசிக்கத் தொடங்கிவிட்டேன். நான் மட்டும் அல்ல, சராசரி வாசிப்புத் தன்மை அன்றைக்குத் தமிழ்நாட்டிலே நன்றாக இருந்தது. 1962ஆம் ஆண்டுத் தேர்தலில் அண்ணா தோற்றுப் போனதற்கு நாங்கள் நான்கு ஐந்து நண்பர்கள், (எட்டாம் வகுப்பு மாணவர்கள்) பள்ளி மைதானத்திலே நின்று, ‘அண்ணா தோற்றுப்போய்விட்டாரே’ என்று அழுதோம். எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே அந்த அளவுக்கு வாசிப்பு, அரசியல் ஈடுபாடு இருந்தது” என்று தொ.ப. குறிப்பிடுகிறார்.

தொ.ப. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளர். பெரியாரியச் சிந்தனையாளர். தந்தை பெரியாரை அழைத்து 1970களில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக நிகழ்ச்சியை காரைக்குடியில் நடத்தியவர்களுள் ஒருவர். தன் இறுதிமூச்சு வரை பெரியாரிய சிந்தனையிலிருந்து மாறாமல் இருந்தவர். 95 விழுக்காடு நான் “பெரியாரிஸ்ட்”தான் என்று அழுத்தமாகக் கூறியவர். “கலை, பண்பாடுகள் பற்றி பெரியார் அவர்கள் புரிந்து கொண்டதில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. எனினும், அவரது காலம் வேறு என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று தொ.ப. சொல்லியுள்ளார். அதேபோல் தனக்குத் தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று தெளிவாகக் கூறியதோடு இறுதிவரை அக்கொள்கையைக் கடைப்பிடித்தும் வாழ்ந்தவர்.

தொ.ப. ஒரு “பெரியாரிஸ்ட்”, திராவிட இயக்கத்தின் தாக்கம் உள்ளவர் அப்படி இருக்கையில் அவர் மேற்கொள்ளும் பண்பாட்டு ஆய்வுகள் பெரியாரின் கருத்துகளுக்கு முற்றிலும் முரண்படாதா? என்ற கேள்விக்கும் தொ.ப.வே பதில்  கூறுகிறார்:
“மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். பெரியார், ஆகம வழிப்பட்ட விழாக்களையும் பெரிய கடவுள்களான பிள்ளையாரையும் ராமனையும் எதிர்த்தாரே தவிர, அவர் சுடலைமாடனையும் கருப்பசாமியையும் காத்தவராயனையும் எதிர்த்தாரா? இல்லையே… ஏனென்றால் பெரியாரின் நோக்கம் என்பது மானுட விடுதலை என்பதுதான். ஆகமவழிபாடு, ஆகமநெறிக்குட்பட்ட நிறுவனங்கள், தெய்வங்கள், அதற்குரிய சடங்குகள் தோன்றும்போதுதான் கருமார்கள் உருவாகி அடிமைத்தனமும் சேர்ந்தே வருகிறது. நாட்டார் தெய்வ வழிபாட்டில் அடிமைத்தனம் கிடையாது” என்று விளக்கம் கூறியிருக்கிறார்.

மேலும், “நாட்டார் மரபு என்பது, எப்பொழுதும் வைதீக மரபுக்கு எதிரானது. வைதீக மரபு எப்பொழுதும் அதிகாரம் சார்ந்தது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளாதது நாட்டார் மரபு. இதில் ஆன்மீக அதிகாரம் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தனித்த அதிகாரம் கொண்ட பூசாரி யாருமில்லை. ஒரு மனிதர், பூசை வேளையில் மட்டுமே நம்மைவிட்டுச் சற்று விலகி இருக்கிறார். பூசை முடிந்ததும் மீண்டும் நம்மோடு இணைந்து கொள்கிறார். இங்கு அதிகாரமோ ஏற்றத் தாழ்வோ இல்லை.

எனக்குத் தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவற்றை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். கோவிலுக்குப் போகும் அனைவரும் தினசரி சிவபூசையோ விஷ்ணுபூசையோ செய்கிற மக்கள் அல்ல. கோயில் என்பதும் திருவிழா என்பதும் நிறுவனங்கள். திருவிழாக்களின்றி ஒரு சமூகம் இயங்கமுடியாது. திருவிழாக்கள் ஒரு சமூகம் இளைப்பாறிச் செல்கிற இடமாக உள்ளது. அதுதான் கோயிலும்கூட. இந்தக் கோயில்கள் அதிகார மையமாக மாற்றப்பட்டபோது பெரியார் அதைக் கண்டனம் செய்தார்” என்றும் தொ.ப தன் புரிதலை முன்வைக்கிறார். 

பண்பாடு என்பது மதம் சார்ந்தது அல்ல என்றும் அது நிலம் சார்ந்தது என்று தொ.ப. தெளிவுபடுத்துகிறார். ஏனென்றால் உலகில் மதங்களெல்லாம் உருவாகிச் சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் பண்பாடு உருவாகிப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மதம் என்பது ஒரு நிறுவனக் கட்டுமானம். அது நிறுவனமாக மாறுவதற்கு முன்னாலேயே, மனிதன் எப்பொழுது மனிதனானானோ அப்பொழுதே ஒரு பண்பாடு உருவாகிவிட்டது. இந்தப் பண்பாடு நிலம் சார்ந்துதான் உருவாகிறது.

எடுத்துக்காட்டாகச் சொல்லுவதானால் திராவிடப் பண்பாடு, அரேபியப் பண்பாடு, சீனப் பண்பாடு, தென்னமெரிக்க மக்களின் பண்பாடு என்று பல்வேறு வகையான நிலம் சார்ந்த பண்பாடுகள் உருவாகின. இதை வரலாற்றிலே படிப்பதாக இருந்தால் கூட மஞ்சளாற்றங்கரை நாகரிகம், நைல் நதிக்கரை நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், காவிரிக்கரை நாகரிகம் என்றுதான் படிக்கிறீர்கள். எனவே பண்பாடு என்பது நிலம் சார்ந்தது.

திராவிடம் பற்றி தொ.ப குறிப்பிடுகையில், திராவிடம் என்பது அரசியலைத் தாண்டிய பண்பாட்டு அர்த்தம் கொண்டது என்றும் அது இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது என்றும் கூறுகிறார். “நான்கு தென்மாநிலங்களிலுள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமை நிலவுகிறது. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். முதலில் தாய்மாமனுக்கான மரியாதை, இரண்டாவது தாய்த்தெய்வ வழிபாடு, மூன்றாவது இறந்த உடலுக்கான மரியாதை. இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் இவை தொடர்கின்றன”. இது போன்று இன்னும் பல சமூக அரசியல் சார்ந்த பார்வைகளைப் புதிய கோணங்களில் விளக்கியுள்ளார். 

மேற்கூறிய தொ.ப.வின் கருத்துகள் பனிப்பாறை நுனிபோல ஒரு சிறுபகுதி மட்டுமே. அவரது கட்டுரைகளையும் ஆய்வுநூல்களையும் அகழ்ந்து வாசித்தால் ஏராளமான தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.  நாட்டார் தெய்வங்கள் குறித்த பண்பாட்டு ஆய்வுக்காக கால்நடையாகவே பெரும்பயணம் மேற்கொண்ட அவருக்கு, நீரிழிவு நோய் காரணமாக நடக்க இயலாத சூழல் உருவானது மனதளவில் ஒரு சோர்வை உண்டாக்கி இருக்கவேண்டும். தன் பாளையங்கோட்டை வீட்டிலேயே இருந்த அவர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக 2020 டிசம்பர் 24 அன்று மறைந்தார். எழுத்தாளர், சிந்தனையாளர், பண்பாட்டு ஆய்வாளரான தொ.ப.வின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் தொ.ப.வுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், "பகுத்தறிவாளர்கள் பக்தியைப் பேசமாட்டார்கள். பக்தி இலக்கியம் படிக்க மாட்டார்கள். ஆனால், தொ.பரமசிவன் பெரியாரைப் பற்றியும் பேசுவார், பெரியாழ்வாரையும் பற்றிப் பேசுவார். பல்துறை வித்தகர். மானுடவியல் சார்ந்து இயங்கியவர்கள் தமிழகத்தில் குறைவு. ராகுல சாங்கிருத்தியாயனுக்குப் பிறகு, மயிலை சீனி வேங்கடசாமிக்குப் பிறகு தொ.பரமசிவனை நாம் வைக்கமுடியும். கடவுள் மறுப்பை மனதில் கொண்டிருந்தாலும் கோயில்கள் குறித்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்தவர்” என்கிறார். கு.ஞானசம்பந்தன் தொ.ப.விடம் கடவுள் இல்லையா? என்று கேட்டபோது, ‘நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நல்லது என்றுதான் சொல்கிறேன்’ என்று தொ.ப. கூறியதுதான் பின்னாளில் ‘தசாவதாரம்’ திரைப்பட வசனமாகப் புகழடைந்தது. 

தொ.ப. தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்காக சமஸ்கிருதமும் பயின்றுள்ளார். தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றான அழகர்கோயிலை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல் வைணவத்தையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்துள்ளார். வைணவத்தின் தத்துவார்த்தமான உள்ளடுக்குகளின்‌ மீது புது வெளிச்சம்‌ பாய்ச்சியவர்‌ அவர் என்று நடிகர் கமலஹாசன் தொ.ப. மறைவுக்கு எழுதிய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “அவருக்குக்‌ கடவுள்‌ நம்பிக்கை இல்லை. ஆனால்‌, தனது நம்பிக்கையையும்‌ ஆய்வையும்‌ போட்டுக்‌ குழப்பிக்கொள்ளாத அந்தச்‌ சமநிலையே அவர்‌ மீது எனக்குப்‌ பிரேமையை உருவாக்கியது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அய்ரோப்பாவில் உள்ள ஜெர்மனியில் இயங்கி வரும் தமிழ் மரபுடைமை அறக்கட்டளை (Tamil Heritage Foundation International) என்ற பன்னாட்டு அமைப்பின் சார்பாக தொ.ப அவர்களைப் பாராட்டி 2015ஆம் ஆண்டின் ‘சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்’ என்ற விருதினைக் கொடுத்துள்ளார்கள்.  தொ.ப. மறைந்த பின்பு, 2020 டிசம்பர் 27 அன்று ஜெர்மனியிலிருந்து தமிழ் மரபுடைமை அறக்கட்டளையின் சார்பாக நினைவு அஞ்சலிக் கூட்டத்தை காணொளி வாயிலாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் பேசிய அறக்கட்டளையின் தலைவர் முனைவர்.சுபாஷிணி அவர்கள் நினைவுகூறும்போது தொ.ப.வுக்குப் பெரியாருடன் எடுத்துக்கொண்டதுதான் மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று குறிப்பிட்டார். 


“பெரியார் கொள்கைகள் ஒருபோதும் சாகாது. மானுட விடுதலை ஒன்றுதான் பெரியாரின் நோக்கம். அதற்கு எதிரான அத்தனை அம்சங்களையும் அவர் எதிர்த்தார். அதனால் யாரெல்லாம் மானுட விடுதலையை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பெரியாரிடம் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு” என்று கூறி பெரியாரியச் சிந்தனையாளராகத் திகழ்ந்த தொ.பரமசிவன், பெரியார் நினைவு நாளிலேயே மறைந்தார் (டிசம்பர் 24).

நேர்மையோடு திறனாய்வு செய்வதில் பெரும் பங்காற்றிய சீரிய சிந்தனையாளர்.  தொல் படிமங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்களிலிருந்து மட்டுமே வரலாற்றுத் தொன்மங்களைப் பார்க்கும் ஆய்வுச்சூழலை மாற்றி, நாட்டார் வழக்கு பற்றிய கதையாடல்களின் வழியாகப் பொதுமை நெறியில் நின்று விளிம்புநிலை மக்களின் பண்பாட்டில் இருந்து தமிழர் பண்பாட்டைக் கட்டியெழுப்பி மீட்டுருவாக்கம் செய்தவர். 

புத்தாக்கச் சிந்தனையோடு பல நூல்களை எழுதி, செம்மொழித் தமிழுக்கும், தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் ஒப்பற்ற தொண்டு புரிந்த மாமேதை பேராசிரியர் தொ.பரமசிவன். அந்த சிறந்த ஆய்வாளரின் நூல்களை நாம் படித்துப் பயன்பெற வேண்டும். அவருக்கு சிங்கப்பூரிலும் ஒரு நினைஞ்சலிக் கூட்டம் நடத்தி மரியாதை செலுத்தவேண்டும்.





தமிழ் அழகியல்


- இந்திரன்


பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே இதன் பதிலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலைத் தத்துவ சாத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள். இத்தகைய தத்துவார்த்தத் தேடலை ‘அழகியல்’ (AESTHETICS) என்று பெயர்சூட்டி வளர்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் இது நிகழவில்லை. தமிழ் அழகியல் எனும் ஒரு துறையை நாம் வளர்த்தெடுக்கவில்லை. தொல்காப்பியர் என்கிற ஒருவரை நாம் ஓர் இலக்கணவாதியாகத்தான் இனம்கண்டிருக்கிறோமே தவிர, அவரை ஓர் அழகியல்வாதியாக நாம் இனம்காணவில்லை. சம்ஸ்கிருதத்தில் ‘நாட்டிய சாஸ்திரம்’ எழுதிய பரதமுனியை அழகியல் வாதியாக புரிந்துகொள்வதுபோல, காஷ்மீரத்தைச் சேர்ந்த அபினவகுப்தர் ஓர் அழகியல்வாதியாக அடையாளம் காணப்படுவதுபோல, ஐந்திணைக் கோட்பாடுகளை விரிவாக விளக்கியிருக்கும் தொல்காப்பியரைத் தத்துவார்த்த முறையில் நாம் ஆராயத் தவறிவிட்டோம். தொல்காப்பியர் ஓர் அழகியல்வாதி என்பதைத் தமிழர்களாகிய நாம் சொல்லத் தவறுகிறபோது, அவர் எப்படி ஓர் உன்னதமான அழகியல்வாதி என்பதை மலையாளக் கலை இலக்கியவாதியான அய்யப்பப் பணிக்கர்தான் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.


இதற்குக் காரணம் என்ன?
முதலில் நாம் நமது ஓவியம், சிற்பம், கவிதை, இசை ஆகிய அனைத்தையும் பற்றி ஆராய்வதற்கான கோட்பாடுகளை மேற்குலகிலிருந்து மிக எளிதில் இறக்குமதி செய்துகொள்கிறோம். தற்காலக் கவிஞர்களும் ஓவிய, சிற்பக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை எடைபோடுவதற்கான தத்துவார்த்தமான தராசுத் தட்டுகளை நாம் தமிழ்ப் பண்பாட்டு மண்ணிலிருந்து உருவாக்காமல், இரவல் சிந்தனைகளோடேயே திருப்தி அடைந்துவிடுகிறோம். இன்னமும் மேலைச் சிந்தனையாளர்களே நமது சிந்தனை எஜமானர்களாக இருக்கிறார்கள். கீழைச் சிந்தனையாளர்கள் யார், அவர்களின் பெயர்கள் என்ன, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த தேடல்களைத் தமிழ் எழுத்தாளர்களும் ஓவிய, சிற்பக் கலைஞர்களும் கொண்டிருக்க வில்லை.

தமிழ், தமிழன், தமிழ் அடையாளம் என்று பேசுவது கிரகமயமான இன்றைய உலகத்துக்கு ஒத்துவராத ஒன்று என்று நம்பத் தொடங்கிவிட்டோம். தமிழ் அழகியல் என்று பேசுவது ஓர் அரசியல் சொல்லாடலே தவிர, அது ஒரு தத்துவார்த்த சொல்லாடல் அல்ல என்று நம்பும் கலைஞர்கள் இங்கே நிறைந்து இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் தமிழ்க் கவிஞனுக்கும், சிற்பிக்கும், ஓவியனுக்கும் இரட்டைத்தலை முளைத்துவிடுகிறது. அவன் ஓர் உள்மனிதனாகவும் வெளிமனிதனாகவும் ஒரே நேரத்தில் வாழ நிர்பந்திக்கப்படுகிறான்.

அடையாளச் சிக்கல் – இதுதான் தமிழனின் முக்கியப் பிரச்சினை. நான் யார்? இந்தக் கேள்வியைத் தமிழன் தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறபோது அவனுக்கு இரண்டு விடைகள் கிடைக்கின்றன. ஒன்று, ‘நீ உலக முழுமைக்கும் சொந்தமான உலக மனிதன்’ இரண்டு, ‘நீ பண்பாட்டுச் செழுமை மிக்க ஓர் இனத்தின் பிரதிநிதி’. இவை இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவனுக்குச் சிக்கல். அதுவும் தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் காலகட்டத்தில் இந்த அடையாளச் சிக்கல் இன்னும் தீவிரப்பட்டுவிடுகிறது. நமது மரபுரீதியான கலைகளுடன் புதிய தொழில்நுட்பம் மோதி, புதிய புதிய கலை வெளிப்பாடுகளைக் கோருகிறது. இதற்காகத் தமிழ்க் கலைஞன், தற்காலத்துக்கான புதிய தமிழ்அழகியல் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவரையிலும் நாம் வைத்திருக்கும் அழகியல் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டி
யிருக்கிறது.

19-ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிவுஜீவிகள் பலர், மேலைப் பண்பாடுதான் உயர்ந்தது என்றும் கீழைப் பண்பாடு காட்டுமிராண்டித்தனமானது (Exotic) என்றும் வெளிப்படையாக எழுதியது இன்னமும் நம் அடிமனங்களை ஆட்சி செய்கிறது. இது இந்தியாவுக்கு மட்டும் நிகழ்ந்தது அல்ல. அரபுலகிற்கும் இதுவே நிகழ்ந்தது. ஆப்ரிக்காவுக்கும் இதுவே நிகழ்ந்தது. ‘யார் வெற்றி அடைகிறார்களோ, யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்களால்தான் வரலாறு எழுதப்படுகிறது’ என்று சொன்னார் எட்வர்ட் செய்த் எனும் பின்காலனிய விமர்சகர். இவர் எழுதிய ‘ஓரியன்டிலிசம்’ மேற்குலகம் கட்டி யெழுப்பிய பல மாயைகளை உடைத்தது. இதுவேதான் ஆப்ரிக்காவுக்கும் நிகழ்ந்தது. பிரிட்டிஷ்காரர்கள் ஆப்பிரிக்காவில் நுழைந்ததின் பின்னர்தான் ஆப்பிரிக்க வரலாறே தொடங்குகிறது என்று சொன்னார்கள். அதற்கு முன்னால் இருந்த ஆப்பிரிக்காவின் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவை அனைத்தும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தியவை என்றும் அவை காட்டுமிராண்டித்தனமானவை என்றும் பிரிட்டிஷ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் நம்பச் செய்தார்கள். இதனை ஃபிரான்ஸ் ஃபனான் எனும் மார்ட்டினிக் தீவைச் சேர்ந்த கறுப்பு உளவியல்வாதியும் பண்பாட்டு கலகக்காரருமான அறிவுஜீவி, தனது ‘WRETCHED OF THE EARTH’ நூலின் மூலமாகத் தகர்த்தார். இந்த மேற்குலகத் தராசுத் தட்டுகளை கிராம்சி, ஃபனான், எய்மீ சீசர், மிஷெல் ஃபூக்கோ, பார்த்தா மிட்டர் என்று பல அறிவுஜீவிகள் கேள்விக்குட்படுத்தினார்கள். 

இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகத்தையும், அஜந்தா ஓவியங்களையும் உலக வெளிச்சம்பட காண்பித்துக் கொடுத்து பெருமைப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான். ஆனால், அதே நேரத்தில் தங்களை இந்தியவியல் வல்லுனர்களாகச் சொல்லிக்கொண்ட மேல்நாட்டு அழகியல்வாதிகள் பலரும் இந்தியாவின் கலைப்படைப்புகள் கைவினைப் படைப்புகள்தானே (CRAFT OBJECTS) தவிர அவை நுண்கலைப்படைப்புகள் (FINE ART OBJECTS) அல்ல என்று தீர்ப்பு கூறினார்கள்.

விக்டோரியா காலத்து மாபெரும் கலை விமர்சகரான ஜான் ரஸ்கின், இந்திய கலை மரபுகளைப் பற்றி மோசமான கருத்துக்களைக் கூறியிருக்கிறார். “மொத்த பூமியின் மீதுள்ள மோசமான கலைகளின் தொல்வகைமை” (The archetypal of bad art of all earth – John Ruskin.) என்று ஜான் ரஸ்கின் இந்தியக் கலைப் படைப்புகளைப் பற்றி எழுதினார். இந்திய புதைபொருள் ஆராய்ச்சி மையத்தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், ஹரப்பா நாகரிகத்தை நமக்குக் கண்டுபிடித்து வழங்கியவர். அவரேகூட இந்தியப் படைப்புகள் எந்த அளவுக்குக் கிரேக்கப் படைப்புகளை ஒத்துள்ளனவோ அந்த அளவுக்குத்தான் அவை சிறந்தவை என்று கருத்து தெரிவித்தார். எனவே, அவர் கிரேக்கக் கலைக்கான அழகியல் அளவு கோல்களைக்கொண்டே இந்தியக் கலைகளை மதிப்பிடுபவராக இருந்தார். இந்திய அழகியல் என்ற ஒன்றே இங்கு இருக்கவில்லை என்று அவர் கருதினார்.

உலகப் புகழ் பெற்ற ஜெர்மானிய தத்துவ மேதையான ஹெகல், இந்தியக் கலைப்படைப்புகளை ‘அதீதக் கற்பனைகள்கொண்ட பகுத்தறிவுக்கு ஒத்துவராத வடிவங்கள்’ (THE IRRATIONAL FORMS OF FERMENTING FANTASY - HEGEL) என்று கருத்துரைத்தார். இவ்வாறு வரலாற்றுரீதியாகவே மேற்குலகினால் கீழ்த்தரமாக எடைபோடப்பட்டதற்குக் காரணம், நம்முடைய கலைப்படைப்புகளை எடை போடுவதற்கு மேற்குலகின் தராசுகளையும் எடைக் கற்களையும் அவர்கள் பயன்படுத்தியதே. இதனால்தான் தமிழர்களின் கலைப்படைப்புகளை எடைபோடுவதற்கு நமது அழகியல் தத்துவங்களைப் புரிந்துகொள்ளாத, மேல் நாட்டு தராசுகளும் எடைக்கற்களும் போதுமானவை அல்ல என்று நான் பேச முற்பட்டேன்.

நமது கலைப்படைப்புகளை மதிப்பீடு செய்வதற்கு மேலை நாட்டிலிருந்து பெறப்பட்ட கோட்பாடுகளைப் பயன்படுத்தாமல்,  தமிழ் தத்துவ மரபிலிருந்தும் தமிழ்ப் பண்பாட்டு மரபிலிருந்தும் பெறப்பட்ட நம்முடைய அளவுகோல்களைப் பயன்படுத்தினால்தான் நமது கலைப்படைப்புகளின் உண்மையான மதிப்பு உலகுக்குத் தெரியவரும். எனவே, நமக்கான ‘தமிழ் அழகியல்’ என்ற ஒன்றை நாம் தற்கால வெளிச்சத்தில் கட்டியெழுப்ப வேண்டிய அதிமுக்கியத் தேவை நமக்கு ஏற்படுகிறது. ‘தமிழ் அழகியல்’ என்பது ஒரு தத்துவச் சொல்லாடல் என்பதை நாம் மறக்கவே கூடாது. அழகியல் என்பதே தத்துவசாத்திரத்தின் ஒரு பகுதிதான். தமிழர்களின் கலை, இலக்கியம், நடனம், இசை, விளையாட்டு என்று அனைத்திலிருந்தும் தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான தத்துவார்த்தமான புரிதல்களைத் தொகுத்தும், வகுத்தும் நமக்கேயான தற்காலத் தன்மையுடைய தமிழ் அழகியல் ஒன்றைக் கட்டி எழுப்ப முடியும்.

இதனை உணர்ந்ததின் வெளிப்பாடாக நான் 1994-ல் ‘தமிழ் அழகியல்’ எனும் புத்தகத்தை எழுதினேன். அதனை வெகுவாகக் கொண்டாடிய டாக்டர் சிவத்தம்பி அதனை ஈழத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பாடப் புத்தகமாக வைத்தார். இதன் அடுத்தகட்டமாக ‘ART TAMOULE’ என்னும் பிரெஞ்சு தலைப்பில் பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில்  ‘செலக்டிவ் ஆர்ட் காலரி’ எனும் மேல்நாட்டவர்களின் காலரி ஒன்றில் 20 முக்கியத் தமிழ்நாட்டு ஓவியர்களின் ஓவியங்களைக் கண்காட்சியாக வைத்தேன். இவ்வாறு எங்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் ஓவியம், தமிழ் சிற்பம், எனும் கண்காட்சிகளை நிகழ்த்துவதின் மூலமாக தமிழ் அழகியல் என்ற ஒன்றை மேற்குலகமும் கீழை உலகமும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும்.

தமிழரின் மிக முக்கிய கலைப்படைப்புகளில் ஒன்றான நடராசர் சிற்பத்தையே, ஒரு கலைப்படைப்பு என்று ஏற்றுக்கொள்ள இந்த உலகம் ஆரம்பத்தில் தயங்கியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 18 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களில் சேகரிக்கப்பட்ட இந்தியக் கலைப்படைப்புகளை ஆராய்வதற்காக என்னை லண்டனுக்கு அனுப்பியது. அப்போது, விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் இந்தியக் கலை பற்றிய கண்காட்சிக் கூடத்தின் மையப் பகுதியில் சிவ நடனம் செப்புத்திருமேனி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நான் அந்த நடராஜர் சிலை அங்கு வந்து சேர்ந்ததின் வரலாற்றை ஆராயத் தலைப்பட்டேன். அக்கலைப்படைப்பு தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, கடற்பயணம் செய்து, அந்த அருங்காட்சியகத்தின் மையப்பகுதியை அடைவதற்கு முன்னால் சந்தித்த கலைரீதியான தவறான புரிதல்கள் எனது ஆய்வில் தெரியவந்தன.

அப்படைப்பு முதன் முதலாக விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்குள் வந்தபோது, அதனை நுண்கலைப் பிரிவில் வைக்காமல்  மக்கள் இன அமைப்பியல் பகுதியில் (ETHNOGRAPHY SECTION) ஆப்பிரிக்க முகமூடிகளும் கெல்டில் இனப் பண்பாட்டுப் பொருள்களும் இருந்த பகுதியில்தான் வைத்திருந்தார்கள். அது கலைப்பகுதியில் வைக்கத் தகுந்தது அல்ல என்று பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தினர் கருதினர்.




டாக்டர் ஆனந்த கே.குமாரசுவாமி ‘சிவ நடனம்’ (DANCE OF SIVA) எனும் புத்தகத்தை 1918-ல் எழுதி, சிவநடனம் என்பதின் தமிழ்ப் பண்பாட்டு ரீதியான கலைஅர்த்தங்களை எடுத்துச் சொன்ன பிறகுதான், நடராசர் சிற்பம் ஒரு நுண்கலைப்படைப்பு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகுதான் அது விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தின் கலைப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டது என்கிற உண்மை எனது ஆய்வில் தெரியவந்தது.

ஒரு பிரதியை வாசிக்கும்போது, வாசகன் அந்தப் புத்தகத்தை எந்த இடத்தில் வைத்து வாசிக்கிறான் என்பது, அந்தப் புத்தகம் தரும் அர்த்தத்தை அதிகமாக மாற்றிவிடாது. ஆனால், ஒரு கலைப்படைப்பைப் பொருத்தமட்டிலும் அப்படி இல்லை. ஒரு கலைப்படைப்பை எந்த இடத்தில் வைத்து ஒரு பார்வையாளன் பார்க்கிறான் என்பதைப் பொறுத்து அந்த கலைப்படைப்பின் அர்த்தம் மாறிவிடும்.

நான் லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் வைத்துப் பார்த்த சிவநடன உலோகச் சிற்பத்தைவைத்து இதனை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தச் சிற்பத்தை காலில் பூட்ஸ் அணிந்த நிலையில் அருகில் சென்று நான் ஆராய முடிந்தது. அதே சிற்பத்தை நான் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பார்த்திருந்தால் - அதனை ஒரு வழிபடப்படும் வடிவமாகக் கருதுவதால் - காலில் பூட்ஸுடன் அருகில் சென்று ஆராய முடிந்திருக்காது. அது ஒரு தெய்வ விக்கிரகமாக மட்டுமே கருதப்பட்டிருக்கும். அது ஒரு கலைப்படைப்பு என்பதைக் காட்டிலும் அது ஒரு வணங்கப்படும் சாமி சிலை என்பதாகவே உணரப்பட்டிருக்கும். எனவே, ஒரு கலைப்படைப்பின் அர்த்த உற்பத்தியும் அதற்குள் தொழிற்படும் தமிழ் அழகியலும் அந்தப் படைப்பை பார்வையாளன் எந்த நாட்டில், எந்த இடத்தில், எந்த வெளிச்சத்தில், எந்தப் பகுதியில், வைத்துப் பார்க்கிறான் என்பதைப் பொருத்து முடிவு செய்யப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைப் புதுமைப்பித்தன் 1935-ல் எழுதிய தனது ‘சிற்பியின் நரகம்’ எனும் சிறுகதையில் ஆராய்கிறார். புதுமைப்பித்தனின் இந்தச் சிறுகதையில், தமிழகத்து சிற்பியின் சிவ நடனப் படைப்பு ஒன்றைப் பார்க்கிற பைலார்க்கஸ் எனும் யவன கதாபாத்திரம் கலையின் பரவசத்தில் பேசுவதற்கு, சிற்பி சொல்லுவதாக புதுமைப்பித்தன் எழுதுகிறார்: “சீ பைலார்க்கஸ் உன் வெறி பிடித்த கொள்கைகளுக்கு யவனன்தான் சரி! அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் – அவனுக்குத்தான் சரி உன் பேத்தல்.” என்று எழுதியதின் மூலமாக நமது கலைப்படைப்புகளை அன்னிய நாட்டு மதிப்பீடுகளால் எடைபோட முடியாது என்பது புதுமைப்பித்தனின் கருத்தாக இருப்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

சிற்பியின் கனவுக் காட்சியாகப் புதுமைப்பித்தன் தன் சிறுகதையில் எழுதிக் காட்டுகிறார். தனது கலைப்படைப்பு கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டதைப் பார்க்கிற, அதைப் படைத்த சிற்பி மனம் துடித்துப்போகிறான். கடவுள் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கலைப்படைப்பை நோக்கி, கூடிய கூட்டம் கீழே பார்த்து விழுந்து வணங்கியபடி  ‘எனக்கு மோட்சம் வேண்டும்’ என்று கத்துகிறார்களே தவிர, யாருமே தனது கலைப்படைப்பைப் பார்த்து ரசிக்க வில்லையே என்று துடிக்கிறான் சிற்பி. ‘அந்த கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது ஏறிட்டுப் பார்க்கவில்லை. இப்படியே தினமும் நாட்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன – அந்த அனந்தகோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே.” என்று கலைஞன் பதறுவதாக எழுதுகிறார். தனது கலைப்படைப்பை யாரும் ரசிக்காமல் அதனை சாமியாகக் கும்பிடுவதைச் சகிக்காத சிற்பி, அந்தச் சிலையை உடைத்துப் போடுவதாகக் கனவு காண்பதாக எழுதுகிறார் புதுமைப்பித்தன். ஒரு கலைஞனின் அவஸ்தை இன்னொரு கலைஞனுக்குத்தானே புரியும்? நான் லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் சிவநடனத்தை அருகில் சென்று அதன் கலை நேர்த்தியை ஆராய்ந்த போது எனக்குப் புதுமைப்பித்தனின்  ‘சிற்பியின் நரகம்’ கதைதான் நினைவில் வந்து சுழற்றிப்போட்டது.

புதுமைப்பித்தனின் கலைப்பித்துப் பிடித்த தமிழ்க் கவிஞர்களும், ஓவியர்களும், சிற்பிகளும் இன்றும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் மேலைநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் தங்கள் படைப்புகளில் தமிழ் அழகியலை சுவாசிக்கத் தொடங்குகையில் அவர்களின் படைப்புகள் தனித்துவமாகப் பிரகாசிக்கவே செய்யும்.

சாந்தி நிகேதனின் மூத்த ஓவியராகவும் கலை விமர்சகராகவும் திகழ்ந்த கே.ஜி.சுப்பிரமணியத்தின் வார்த்தைகளில் சொல்வதானால்,   ‘நவீன இந்திய ஓவியர்கள், தங்கள் மரபுகளோடு உண்மையான இணக்கம் கொள்வார்களேயானால் அவர்களது மரபு, பல தலைகள்கொண்ட அசுரனைப்போல உயிர் பெற்றெழுந்து பல வாய்களின் மூலமாகப் பேசத் தொடங்கிவிடும்.’




நன்றி: விகடன் தடம்; மே - 2018 




Monday, May 24, 2021

அவர்கள் என்ன செய்வார்கள்??!!!!


 --கோ.லீலா


கொத்துமல்லி கறிவேப்பிலை
மணக்கும் புதினா
பூண்டோடு வெங்காயம்
சிறியதும் பெரியதும்
நாட்டு தக்காளி
பாத்து வாங்கியாச்சு
முட்டையும் ரொட்டியும்
அவசியமாய் இஞ்சி
கூடவே எலுமிச்சை
பல பழ வகைகள் கேட்டு
வாங்கியாச்சு...
பாலோடு வெண்ணெய்
திரளான நெய் பார்த்து
பனீரும் கூடையில் போட்டாச்சு
டீதூள்காஃபிதூள்
நாட்டு சர்க்கரை  உப்பு
சுக்கு மசாலா வகையோடு
குறைவில்லா பருப்பு வகை
செலவுப்பெட்டி நிரப்பிடலாம்...
பட்டை இலவங்கம் ஏலக்காய்
ரோஜா மொக்கு கடல்பாசி
நட்சத்திர பட்டையோடு 
மங்களூர் மொக்கும் இருக்கு
சமையலறை மணக்க
வத்தல் வடக வகைகள்
முந்திரி திராட்சை பாதாம்
பிஸ்தா குங்குமப்பூ
பச்சரிசி பாசுமதி
சீரக சம்பாவோடு தினசரிக்கு
விக்கிரவாண்டி அரிசி
பாத்து வாங்கியாச்சு
பதப்பட்ட பட்டாணி கொண்டக்கடலை
நிலக்கடலை கடலை வகை
சரிபார்த்தாச்சு...
பச்சையும் சிவப்புமாய்
வகையாய் காய்கறிகள்
குவிச்சாச்சு...
மருந்து தைலம் நாப்கின் இருக்கா
தேடிப்பார்த்து வாங்கியாச்சு
ஒரு வாரத்துக்கு யாரையும்
கூப்பிட முடியாது தண்ணீரை
மேல்தொட்டிகீழ்தொட்டி
நிரப்பியாச்சு...
பூ தோட்டத்திலேயே பூக்குது
சுமை கொஞ்சம் குறைச்சாச்சு...

அடடா !
பற்றில்லா மனசு இதுவா?

தந்திரமாய் எல்லாம் முடித்து
சாவகாசமாய் யோசிக்கிறது
மானங்கெட்ட மனசு 
என்ன செய்வார்கள் 
சாலையோரத் தோழர்கள் !

-கோ.லீலா



Sunday, May 23, 2021

சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் - நூல் மதிப்புரை

தேமொழி 


தன் ஊரைப் பற்றிய முதல் ஆய்வு நூலாக எழுதிய  'வடலூர் வரலாறு', அடுத்து 'தமிழரின் வரலாற்றுப்பதிவுகள்', என்ற தொடர் வரலாற்று ஆய்வு நூல்களின் வரிசையில் 'சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்'   என்ற நூலையும் வெளியிடுகிறார் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியின்  வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ஜெ ஆர் சிவராமகிருஷ்ணன் அவர்கள். 



தலவரலாறு என்று ஒரு ஊரின், கோயிலின் நம்ப இயலாத புராணக் கதைகள் கொண்ட நூல்களைப் பார்த்து, படித்து அத்தகைய நூல்கள் மீது ஒவ்வாமை கொண்டவர்களுக்கு; சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் இருக்கிறது என்று அறிவியல் எனும் பெயரில் பகிரப்படும் கட்டுக்கதைகள் படித்துக் கடுப்பானவர்களுக்கு; இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, தொல்லியல் செய்திகள் போன்ற தரவுகளின் அடிப்படையில் ஒரு ஊரின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் படிப்பது ஆறுதலாக இருக்கிறது. தமிழக வரலாற்றுச் சிறப்பு  மிக்க ஊர்கள் அனைத்தையும் இவ்வாறு அவற்றின் வரலாற்று அடிப்படையும் அறிய ஆர்வமும் எழுகிறது. 

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பது போல,  சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி என்பது ஒரு சொல்வழக்கு.  அவ்வாறே,  உங்கள் வீடு மதுரையா  அல்லது சிதம்பரமா என்பதும்;  அதாவது வீட்டில் யார் அதிகார நிலையில் உள்ளார்கள் கணவரா மனைவியா என்பதை அறிய குறிப்பிடும் ஒரு வழக்கமும்  உண்டு.   இது போல ஆன்மிகம் மாற்றும்  சமூகவியல் வழக்காறுகளில் இடம் பெறும்  சிதம்பரம் என்பது அதன் பிற்காலப் பெயர், முன்னர் அவ்வூரின் பெயர் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் பெரும்பற்றப்புலியூர் என்று இருந்தது என்பதை ஒரு வரலாற்றுத் தகவலாக நூல் மூலம் அறிய முடிகிறது. சிதம்பரத்தில்  நூலில் பல வரலாற்றுச் செய்திகள் புதியவனாகவும் கருத்தைக் கவர்வனவாகவும் உள்ளன.  

தேவாரக் காலத்தில் தில்லையின் புவிசார் அமைப்பை 'கழி சூழ் தில்லை' என்று  (கழி சூழ் தில்லையுள் - தேவா-சம்:866/2) அந்த இலக்கியம் குறிப்பிடும்.  ஆகவே, சிற்றம்பலத்தில் கூத்தாடும் சிவன் எழுந்தருளியுள்ள கோயில் தில்லை மரங்கள் (Excoecaria agallocha) சூழ்ந்த கழிமுகப் பகுதியின் உப்பங்கழி சதுப்புநிலக்காடுகளில் இருப்பது என்றும்;  பக்தி இலக்கியங்களின் வழியே ஊரின் பழம்பெயர் தில்லை என்பதை ஏறத்தாழ எல்லோருமே அறிந்திருப்போம்.  கோயில் சிற்றம்பலம் என்பது காலப்போக்கில் சிதம்பரமாக மருவி, பிற்காலத்தில் அதுவே ஊரின் பெயராகவும் மாறிவிட்டது என்பதையும் அறிந்திருப்போம். ஆனால் முதலாம் இராஜேந்திர சோழன், தனது புதிய தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி.1014 முதல் கி.பி. 1022) அது முற்றுப்பெறும் வரை  தில்லையை ஒரு  8 ஆண்டுகளுக்குத் தனது தற்காலிகத் தங்குமிடமாகவும், அரசியல் தலைமையிடமாகக் கொண்டிருந்தார்.  அந்தக் காலகட்டத்தில்  கடல்கடந்து  இந்தியப் பெருங்கடல் பரப்பில் செய்த பல போர்கள்,  இலங்கையை வென்றது, அரபிக்கடல் பகுதியில் இருந்த பழந்தீவு பன்னீராயிரம் பகுதியில் போர்  நிகழ்த்தி வென்றதும் அதே காலம்தான்  என்பது புதிய தகவல். இதற்கு இப்பகுதியின் கடல் நீரோட்டமும், தேவிக்கோட்டை  பகுதியில் கடல்  கலம் செலுத்தும் ஆழமுடன் போர்க்கப்பல்களின்  துறைமுகமாக அமைந்திருக்கக் கூடியதாகவும் இருந்திருக்கக் காரணமாக இருக்கலாம் என்று  ஆசிரியர் கருதுகிறார்.  இதுவும் ஓர் அரிய வரலாற்றுத் தகவல். 

முதலாம்  இராஜேந்திரசோழனின் ஆட்சிக்காலத்தில் பெரும்பற்றப்புலியூர் 11 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்திலிருந்து சுமார் ஒரு 450 ஆண்டுகளுக்கு, சற்றொப்ப பொது ஆண்டு 1500கள்  வரை 'தனியூர்' என்ற சிறப்புடன் தன்னாட்சி நடத்தும் நிலையில்  இருந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. அத்துடன்  அரசர்களின் அதிகாரத் தலையீடு இல்லாவிட்டாலும்கூட, மன்னர்களின் தனிக் கவனத்திற்கு உள்ளான ஊராக சிதம்பரம் இருந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. பொதுவாகவே தனியூர்கள் என்பவை 10 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஊர்களாக இருந்தன என்பது நூலால் அறியக்கூடிய ஒரு சிறந்த வரலாற்றுத் தகவல். 

ஒரு பகுதியில் நிகழும் சமூக மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பங்கள், கல்வியியல் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, மொழியாளுமை, கலை, கட்டடக் கலை போன்றவற்றையும்;  அவற்றில் நிகழக்கூடிய படிநிலை மாற்றங்கள் போன்றவற்றையும்  தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையாக விளங்குவது அப்பகுதியின் நிலவியல் கூறேயாகும் என்ற கருதுகோளை  நூலாசிரியர் அடிப்படையாகக் கொள்கிறார். அதன் கூறுகளைப் பலகோணங்களில் ஆராய்ந்து  ஒரு ஊரின் நீடித்த நிலைத்தன்மையை நிலவியலின் புவிசார் கூறுகளே தீர்மானிக்கின்றன என்ற அடிப்படை கோட்பாடே சிதம்பரம் இன்று வரை நீடித்திருக்க முதன்மைக் காரணமாகும் என்பது  இந்த நூலின் சாரம். 'சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்' என்ற நூலின் தலைப்பிற்கு ஏற்ப, அதிலிருந்து திசை விலகாமல் தொல்லியல் கல்வெட்டுகள், இலக்கியங்கள் தரவுகள் மூலம் தனது கருத்தை நிறுவுகிறார் ஆசிரியர். 

ஊர்கள் தோன்றுவது இயல்பாகவும் இருக்கலாம், ஒரு திட்டமிடப்பட்ட குடியேற்றமாகவும் இருக்கலாம். ஆற்றங்கரையில் நாகரீகம் வளர்ந்தது.  ஆற்றோரம் உழவுக்கு, குடிநீருக்கும் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் மனித குடியேற்றம் நிகழ்வது, பின்னர் அது சீரமைத்தலுக்கு உள்ளாகி கட்டுப்பாட்டிற்குள் வருவது இயல்பாக ஊர் உருவாகும்  முறை. பெரும்பாலும் இதுவே வழக்கம்.  திட்டமிட்டு இடத்தைத் தேர்வு செய்து  புது ஊர் உருவாக்குவது  பெரும்பாலும் குறைவாகவே இருப்பது வழக்கம்.  திட்டமிடப்பட்ட ஊர்களின் தோற்றத்தின் காரணங்கள் அழிவுக்குப் பின் புது வாழிடம், பற்றாக்குறை காரணமாக புதிய விரிவாக்கம்  போன்றவற்றைக் காட்டலாம்.  இன்றைய  சந்திரபாபு நாயுடு திட்டத்தில் ஆந்திராவின் அமராவதி  போன்று திட்டமிட்டு உருவாக்கப்படும் புதிய ஊர்கள் குறைவு. 

சிதம்பரமும் அவ்வாறு திட்டமிடப்பட்ட ஊர் என்பதற்கு என்னென்ன சான்றுகள் ? 
இனவரைவியலைத் தீர்மானிப்பது மானுடம் சார்ந்த நிலவியல் அமைப்பாகும். நில வியல் அமைப்பும் அதன் சூழலும் சாதகமாகும் பட்சத்தில் அங்கே பண்பட்ட நாகரிகம் தோற்றம் பெறுமென்பது இனவரைவியலின் முதன்மைக் கோட்பாடாகும் என்ற அறிமுகத்துடன் நூல் துவங்குகிறது. மனித உறைவிடங்களின் மொத்தத் தொகுப்பு ஊர். அந்த ஊரின் தோற்றமும் அமைப்பும் என்ற கோணத்தில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 

சிதம்பரம் பகுதிக்கான புவியமைப்பு வரை படத்தின் (Geomorphological mapping) தரவுகள் சொல்வது, கடற்பகுதி வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாவதைத் தடுக்கும் பொருட்டு 14 மீட்டர் உயரம் கொண்ட மணல் எக்கரில், அல்லது மணற்குன்றில் கோயில் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றி ஊர் அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க மரத்தினால் கட்டப்பட்டிருந்த சிற்றம்பலம் எனப்போற்றப்படும் மன்றத்தை காடவர்கோன் சிம்மவர்மன் அமைத்தான் என்று தொடங்குகிறது ஊரின் தோற்றத்தின் வரலாறு. பல்லவர், சோழர், பிற்காலப் பல்லவர், பாண்டியர், நாயக்கர் காலங்களில் படிப்படியான முறையில் வளர்ச்சி அடைந்த ஊர் என்பதற்கு தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகளாக 237 கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றில் பதிவாகியுள்ள  கோயில் நிர்வாகம், அதிகாரிகள், கணக்கர்கள், நிலம், செல்வம்  போன்ற தகவல்கள் மூலம் கோயில் மற்றும் ஊரின் வளர்ச்சியை அறிய முடிகிறது.  இக்கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு சோழர் காலற்றவை, மற்றுமொரு மூன்றில் ஒரு பங்கு பாண்டியர்களின் கல்வெட்டுகள், பிறிதும் ஒரு மூன்றில் ஒரு பங்கு பல்லவர், நாயக்கர், மற்றும் பிற துண்டு கல்வெட்டுகள். கல்வெட்டுகள் தரும் செய்திகள் மூலம் ஊர் உருவாக்கத்திலும் கோயில் திருப்பணிகளிலும் சோழர்களின் பங்களிப்பே பெரும்பான்மை  இருந்துள்ளதைக் காட்டுகிறது.  மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு அவர்களின் பங்களிப்பு ஊர் உருவாக்கத்தில் அமைந்துள்ளது. சோழர்கள்  தங்களது குலதெய்வமான  தில்லைக் கூத்தனின் கோயிலையும், அப்பகுதி மக்களின் வாழ்வு சிறக்க ஊரினையும் தொடர்ந்து வளர்த்து வளப்படுத்தியுள்ளார்கள்.  

தெருவிளக்கு அமைப்பது, வீதியின்  அகலத்தை  200 அடிகளுக்கு அதிகரிப்பது, குடியிருப்பு வளாகங்கள், குளங்கள்,  ஊர் விரிவாக்கம், கோயில் விரிவாக்கம், விக்கிரம சோழன் திருச்சுற்று திருமாளிகை, கோயிலின் மேற்கு கோபுரம், கடற்கரைப் பெருவழி, கடற்கரை தேவிக்கோட்டை வரை பசுமை தோப்புகள்  என்று தென்னிந்தியாவின் முதல் பசுமை நகரம் என்று கூறும் அளவிற்கு விக்கிரம சோழன் காலத்தில் தில்லை  பலவகையிலும் மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது மகன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், இன்றும் பயன்பாட்டில் உள்ள நாற்புறமும் கூடங்களோடு கூடிய திருக்குளம், கிழக்கு கோபுரம் எனத்  தொடர்ந்து கோயிலும் ஊரும் விரிவடைந்துள்ளது. 

மக்கள் அமைதியாக வாழ்வதற்கான வாழ்வியல் சூழலில் எந்தப் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிடாமல் அவர்களின் நலனைத் தொடர்ந்து கவனித்து அனைத்து மக்கள் நல  வாழ்வை முன்னிறுத்தி தன்னிறைவு பெற்ற வாழிடங்களாக அமைய  அக்கால அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகளையும் எடுத்துவந்தன என்று கூறுகிறார்  ஆசிரியர். இக்கொள்கைக்கு உதவும் நோக்கில் பண்டைய காலத்தில் ஊர் உருவாக்கத்தின்  கட்டுமான அலகுகளாக கூரம் செப்பேடு கூறும் தகவலையும் சுட்டிக் காட்டுகிறார்.  பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில் ஆட்சி செய்த முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.670  685) என்ற பல்லவ மன்னர் வெளியிட்ட கூரம் செப்பேட்டின் வாயிலாக,  ஊர் உருவாக்கத்தின்  அடிப்படை முக்கிய அலகுகளான 9 கூறுகளாக;  [1]  விவசாய உற்பத்திக்கு ஏற்ற தரமான மண்வளம், [2] நிரந்த நீர் மேலாண்மைத்திட்டம், [3] தண்ணீர் பகிர்மான அலகுகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு, [4]  கட்டுமானத்திற்கு ஏற்ற தரமான மண், [5] சமூகவியல் மையமாக கோயில் மற்றும் மண்டபங்கள், [6] கூள வாணிக பெருமக்கள், [7] கருவி தயாரிப்போர், [8] அறச்செயல்களுக்கான நிரந்தர வைப்பாக வழங்கப்பட்ட தானங்கள், [9] பொது இடுகாடு போன்றவை இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். 

அரண்மனை வளாகத்தை மையப்படுத்தி தலைநகரையும், கோயிலை மையப்படுத்தி புதிய ஊர்களை உருவாக்கி அதில் மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் அக்கால மன்னர்கள். இதுதான் ஊர்மயமாக்கலின் முதல் படிநிலையாகும். நீரும், வயலும் சூழ்ந்த இடமே ஊர் உருவாக்கத்தின் முதல் நிலை என்று கூறும் ஆசிரியர்,  இவை  எவ்வாறு சிதம்பரத்தில் செயல்படுத்தப்பட்டது என்று தொல்லியல் சான்றுகளின் உதவி கொண்டு ஆராய்கிறார்.  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்புகள், நீர் மேலாண்மை, நூலகம் அல்லது சரஸ்வதி பண்டாரம், ஆவணக்களரி பண்டாரம், பல்தொழில் பின்புலம் கொண்ட புதிய மக்கள் குடியேற்றங்கள் உருவாக்கம், மருத்துவச்சாலை, உணவுச்சாலை, கலை, கல்வி வளர்ச்சி  என்ற பல பிரிவுகளில் சிதம்பரம் வளர்ச்சியைச் சான்றுகளுடன் முன்வைக்கிறார். சிதம்பரத்தின் நிலவியல் அமைப்பு ஊர் தொடர் வாழிடமாக தொடரக்  காரணம், ஊர் உருவாக்கிய மன்னர்கள் - கையாண்ட மக்கள் நலன் சார் அலகுகள் ஊர் தொடர்ச்சிக்குக் காரணம்  என்று கூறி, சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் எவ்வாறு இன்றும் அது சிறந்த வாழிடமாக இருப்பதற்கான காரணங்களை எளிய முறையில் சிறப்பாக விளக்கியுள்ளார் வரலாற்றுப் பேராசிரியர்.  அவருக்கு எனது பாராட்டுகள். எனது கோணத்தில் மேலும் பல கல்வெட்டுத் தகவல்களைப் பார்க்க விரும்பியிருந்தேன், சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் மேலும் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பது எனது பரிந்துரை. 


நூல் திறனாய்வு: 
சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் 
முனைவர் ஜெ ஆர் சிவராமகிருஷ்ணன் 
பேராசிரியர் - வரலாற்றுத்துறை 
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி 
தஞ்சை 
வெளியீடு - 2021
---

Friday, May 21, 2021

தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா...

 தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா...


 ——   வித்யாசாகர்





ஒவ்வொரு விதைக்குள்ளும்
ஒரு காடிருக்கும் என்பார்கள்
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே
மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,

கவலை விடு, நம்பிக்கைக் கொள்
பிணங்களுக்குப் பூச்செண்டு என்னும்
அவச்சொல் அழி, 
மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று  உணர்;
உயிர்ச்சொல் கொண்டு 
நெஞ்சுக்குள் அடைமழையெனச் சூழும்
கண்ணீரை அகற்று, மரணத்தைச் சபி;

விழும் ஒரு சொட்டுக்கண்ணீர்
கடைசி விசும்பலின் சாட்சியென்று
சபதமெடு;
கைகோர்த்து நிற்கவோ தோள்புடைத்து எழவோ
எவரையும் தேடாதே; 
உன்னால் மட்டுமே உன்னை உயிர்ப்பிக்கவியலும்;
நீ முயன்றெழுதலே
நீ பிறருக்குச் செலுத்தும் முதல் நன்றி;

நீயும் நானும் வேறல்ல
நமக்குள் உயிர் ஒன்றுதான்
அதைப் பறிக்கும் பயத்தை முதலில் அடித்துவிரட்டு
உயிர்க்குமொரு திமிரை உடம்புள் செறிந்து நிரப்பு
உன்னால் ஆனது உலகு, உன்னால்
எல்லாமாகும் நம்பு;

இப்பிரபஞ்சமெங்கும்
நிறைந்துகொள்
மரணத்திற்கு அடங்காத வாழ்வின்
கடைசிமூச்சை எடுத்துக்கொண்டு
ஒவ்வொரு அருகாமை மனிதரையும் தேடி ஓடு;
நீ பிணமல்ல என்று காட்டு;

இழுப்பதும் விடுவதும்
உன்னால் முடியும்போதே
திமிறி எழு;
ஒரு தீப்பிழம்பென மீண்டெழுந்து வா;
இந்த வாழ்க்கை
எல்லோருக்கும் பாடமாகட்டும்
வெற்று மரணமாக வேண்டாம் கேள்;

மாயும் மனிதர்களை
மருந்தும் காக்கவில்லை
மரணமும் தீண்டவில்லை; பயத்தில் மடிகிறார்கள்
பயம் ஓருயிரைக் கொல்லுமெனில்
நம்பிக்கை ஏன் ஓர் உயிரைத் தேற்றாதா?
நம்பிக்கை ஒரு உயிரைக் காக்காதா?

அவன்
அவள்
எல்லாம் சேர்ந்து தான் நாம்
அது பாசத்தால் நெய்த வலை; ஆனால்
உயிர்க்குத் தெரிந்தது ஒன்று தான்; அது நீ; 
அந்த நீ நினைத்தாலன்றி
இனி நமக்கு விடியலில்லை.

உன்னால் முடியும்
சாகமுடிபவர்களுக்கு வாழ முடியாதா என்ன?
முடியும். 
ஒரு துளி காற்று;
ஒரு துளி நம்பிக்கை; 
ஒரு துளி வேகம் மனதிற்குள் நிரப்பிக் கொண்டெழு;
துளித் துளியாய் 
நம்மை நாம் சேர்த்துச் சேர்த்து 
தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா;
வீழ்வது மரணம், அது எல்லோராலும் இயலும்
வாழ்வதே நீ; அது உன்னால் மட்டுமே முடியும்; வாழ்ந்துகாட்டு!!

---

வித்யாசாகர், குவைத்
தொலைபேசி எண்: +965 97604989, +919840502376
இயற்கையைக் காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!



Tuesday, May 18, 2021

இயன்றதும் இயலாததும்!

இயன்றதும் இயலாததும்!

 -- சொ. வினைதீர்த்தான் 


புறநானூற்றுப் புலவன் ஆவூர் மூலங்கிழார் இன்றைக்கு நிர்வாகவியல், வாழ்வியல் நெறி பேசுகிறவர்கள் எல்லாம் உரைக்க முயலுகிற உயர் "ஆளுமை" பண்பைப் புறநானூறு பாடல் எண் 196ல் தெளிவாக உரைக்கிறார்.

பாண்டியன் நன்மாறனைப் புலவர் பரிசில் வேண்டிப் புகழ்ந்துரைக்கிறார். கேட்டிருந்த பாண்டியன் புலவருக்குப் பரிசு நல்காமல் ஏனோ காலம் கடத்துகிறான். புலவர் மூலங்கிழார் சினம் அடைகிறார். "ஆள்வினைப் பண்பை" எடுத்து ஓதுகிறார்.

king.jpg

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;"
அதாவது ஒரு விடயம் முடியுமென்றால் முடியும் என்று உடன் செயலாற்றலும் இயலாதென்றால் "முடியாது" என்று உடன் கூறிவிடுதலுமே "ஆள்வினைப் பண்பின்" வெளிப்பாடு! முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது கேட்டவனுக்கு வருத்தம் தருவது மட்டுமல்லாது முடிவெடுக்காது காலந் தாழ்த்தியவனுக்கும் கேடு விளைவிக்கும்.

"ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்"
முடியாததை முடிப்பேன் என்றலும், முடிந்ததை முடித்துக்கொடுக்காததும் ஒருவனுடைய புகழுக்கு இழுக்கு! அவனுடைய ஆளுமையின் குற்றம். அன்று இந்தக் குற்றம் எங்கும் எவரிடத்தும் இருந்ததில்லை என்பதைப் புலவர் கீழ்வருமாறு பதிவு செய்கிறார்.

"அனைத்தா கியர்  எனைத்தும்சேய்த்துக் காணாது கண்டனம்"
எந்த அரசரிடமும் இல்லாத ஆளுமைக் குற்றம் உன்னிடம் இருப்பதைக் காண்கிறேன். அது உன்னையும், உன் பிள்ளைகளையும், உன்னுடைய அரசாங்கத்தையும் பாதிக்கும். எனவே உன்னுடைய மக்கள் நன்றாக இருக்க, உன் எஞ்சிய நாட்கள் சிறப்பாக அமையப் பாண்டியனே உடனே "முடிவெடுத்து"  "இயன்றதற்கு"  உடன்பட்டு செயலாற்றி அப்பொழுதே நிறைவேற்று! இயலாதாயின் "இயலாது" என்பதினைக் கூறி உடனே மறுத்துவிடு. குலம் அழிக்கும் ஆள்வினைக் குறையான "நாநயக் குறையை" மாற்றிக்கொள்.

"அதனான் நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளி மறை "நாணலது" இல்லா கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே!"
பாடலில் புலவனின் பெருமிதம் நிறைவுப் பகுதியில் பதிவு செய்யப்படுகிறது. புலவன் கூறுகிறான்  "அரசனே நீ பரிசில் தராததால் நான் ஒன்றும் வெயிலிலும் பனியிலும் மடிந்துவிட மாட்டேன். எனக்கு வறுமை புதிதில்லை. வீசுகின்ற காற்றைத் தடுக்க வல்ல ஆனால் சரியான கூரையில்லாத என் வீட்டில் மங்கல நாண் அல்லது வேறு அணி அணிந்திராத என் மனைவியிடம் நான் செல்கிறேன். "நிறை காக்கும் காப்பு" என்னும் உள்ளதைக் கொண்டு நிறைவு காணும் அவள் குணம் எங்களைக் காக்கும்" 

புறநானுறு பாடல் 196.
ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் நன்மாறனைப் பாடியது.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும் வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளிமறை நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே"

"இயன்றது என்றால் அந்த நொடியே செய்க; இல்லென்றால் உடனே இதமாக மறுத்துவிடுக!" 
---

கி.ரா. என்னும் அபூர்வம் .....

கி.ரா. என்னும் அபூர்வம் .....

-- ச.தமிழ்ச்செல்வன், மதிப்புறு தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

goodbye ki ra2.jpg

இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “ரயிலுக்கு டிக்கட் வாங்கிட்டேன். ரயிலுக்குக் காத்திருக்கிறேன்” என்று சொன்னார். அந்த ரயில்வந்துவிட்டதுதான். ஆனாலும் கி.ரா.வின் கதை ரயிலின் சக்கரங்கள் ஒருபோதும் நிற்கப்போவதில்லை. 

“மனிதருள் நீ ஓர் அபூர்வமான பிறவி. அதாவது உன் இயற்கையைச் சொல்லுகிறேனே ஒழிய தூக்கி வைத்துப் பேசவில்லை.  உன் உள்ளத்திலே என்னென்னவோ ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் வெளிப்படையாக ஒரு சொல்லும் சொல்லாத அடக்கம் உன்னிடம் பலப்பட்டு இருக்கிறது. ஏதோ ஒரு ஆழங்காண முடியாத சமுத்திரந்தான்.” 
- கரிசல் இலக்கிய முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனுக்கு அமரர் கு.அழகிரிசாமி எழுதிய கடிதம் இவ்வாறு துவங்குகிறது. அக்கடிதத்தை இப்படி முடிக்கிறார்: “நண்பர்களுடைய இதயங்கள் உயர்ந்த புஸ்தகங்கள். அவற்றைப் பக்கத்திலிருந்து கொஞ்ச நாள் வாசிக்க வேண்டும்; தூரத்திலிருந்து கொஞ்சநாள் வாசிக்க வேண்டும். அவற்றில் இலைமறை காய்மறையாகக் கிடக்கும் உண்மைகளை ஓரளவாவது படித்துப் புரிந்துவிட்டால் அவன்கவிஞன் தானே?...மற்ற புத்தகங்கள் ஒரு பக்கமிருக்கட்டும்; நீ ஒரு நவீன புத்தகமாய்த்தான் இருக்கிறாய். இன்றைக்கில்லாவிட்டாலும் இன்னும் 50 வருஷம்கழித்து உன் ‘கதை’ ஒரு உயர்ந்த குணச்சித்திரமாக எத்தனையோ பேரின் இதயங்களைப் போய் குலாவத்தான் போகிறது.”

வரலாற்றில் முதல் முறையாக:
இது அருள்வாக்கு அல்லதான். ஆனால் கு.அழகிரிசாமி அன்று 1945 இல் சொன்னது இன்று அப்படியே நடந்துவிட்டது. நாங்கள் ’நைனா’ என்று அன்புடன் விளிக்கும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்கிற மனிதரின் ‘கதை’ இன்று முடிந்திருந்தாலும் அவர் கதையை உலகமே பேசும் நிலை உண்மையில் உருவாகிவிட்டது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக அரசு மரியாதையுடன்  ஒரு எழுத்தாளரின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.அவர் இடைசெவல் கிராமத்தில் இருந்தார். நான் பக்கத்து நகரமான கோவில்பட்டியில் இருந்தேன். அன்றாடம் கோவில்பட்டிக்கு வந்து போகிறவர்தான் அவர். ஆனாலும் அவரை நான் 1978 இல் தான் முதன்முறையாகச் சந்தித்தேன். ஒரு குடையுடன் வேட்டியை மடித்துக்கட்டி கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருந்தார். அந்த முதல் காட்சி அப்படியே என் மனசில் சித்திரமாக இன்றும் நிலைத்திருக்கிறது. கையெழுத்து இதழ்கள் அப்போது பிரபலம். ஓவியர் மாரீஸ் நடத்திய ஒரு கையெழுத்து இதழில் வந்திருந்த என் கதையை அவர் ஏற்கனவே வாசித்திருந்தார் போலும். என்னை அவருக்கு மாரீஸ் அறிமுகம் செய்து வைத்த அடுத்த நிமிடமே அந்தக்கதையைப் பற்றிப் பேசத் துவங்கினார். பின்னர் அவர் தொகுத்த கரிசல் கதைத்திரட்டில் முதல் கதையாக என்னுடைய ‘வெயிலோடு போய்’ கதையை வைத்தார். சின்னப்பையனாக இருந்த எனக்கு  அன்று அது  பெருமித உணர்வைத்தந்தது.

முதல் வட்டார வழக்குச் சொல்லகராதி:
மாரீஸ், உதயசங்கர், ஆசிரியர் முருகன் உள்ளிட்ட இளவல்கள் அடிக்கடி இடைசெவல் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள். அவர்கள் “கரிசல்வட்டார வழக்குச் சொல்லகராதி” தயாரிக்கும் பணியில் நைனாவுக்கு உதவிக்கொண்டிருந்தார்கள். தமிழின் முதல் வட்டார வழக்குச் சொல்லகராதி அதுதான். சோவியத் நாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய அரசு செய்த காரியங்களில் ஒன்று இது. தமிழ்நாட்டில் எந்த அரசும் பல்கலைக்கழகமும் செய்யாதபணியை கி.ரா. செய்து காட்டினார். அதனைத்தொடர்ந்துதான் கண்மணி குணசேகரனின் நடுநாட்டுச் சொல்லகராதி, பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச்சொல்லகராதி போன்றவை எல்லாம் வந்தன.‘வண்டல்’ வட்டார வழக்குச் சொல்லகராதிக்கான நம் தோழர் சோலை சுந்தரபெருமாளின் முயற்சி இன்னும் முடிவுறாமல் நிற்கிறது.

பேச்சு வழக்கைக் கொச்சை மொழி என்று தமிழ்ப்பண்டித உலகம் சிறுமைப்படுத்தி வந்த பின்னணியில் பேச்சு மொழியை நவீன இலக்கியத்தின் மொழியாகமாற்றி வெற்றிக்கொடி நாட்டியவர் கி.ரா. இதை ஒரு பண்பாட்டு அரசியல் நடவடிக்கையாக நாம் பார்க்க வேண்டும். உழைக்கும் மக்களின் மொழிக்கும் அவர்களின் சொற்களுக்கும் உரிய இடத்தைப் பெற்றுத்தரப் போராடிய படைப்பாளி  என்று அவரைக் கொண்டாட வேண்டும்.

கோபல்லபுரம்:
முஸ்லீம் ராஜாக்களின் கொடுமைக்குப் பயந்து தெலுங்கு பேசும் மக்களின் ஒரு பகுதி அங்கிருந்து தப்பி தென் தமிழகம் வந்த கதையைத்தான் “கோபல்லபுரம்”, “கோபல்ல புரத்து மக்கள்” என்கிற நாவல்களாகப் படைத்தார். அவருடைய பூர்வீகக் குடும்பமும் அதில் ஒன்றுதான். ஆனால் வரலாற்றின் சுவாரஸ்யம் என்னவென்றால் கி.ரா.வின் பேத்தி அம்சா, முகம்மது ஆசீஃப் என்கிற ஒரு இஸ்லாமிய இளைஞரையே காதலித்தது தெரியவந்தபோது, சுமுகமாகவும் கொண்டாட்டமாகவும் அத்திருமணத்தை முடித்து வைத்தார் நைனா என்பதுதான். சாதி, மதங்கள் கடந்த முற்போக்குப் படைப்பாளியாகத் தன் எழுத்திலும் நிஜவாழ்விலும் தன்னை நிறுவிக்கொண்டவர் கி.ரா.

கம்யூனிஸ்ட் போராளி:
ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத குணாளன் அவர். அவர் ஒரு எழுத்தாளர் என்பது இடைசெவலில் யாருக்குமே தெரியாது. அங்கே அவர் ஒருவிவசாயி. 40களில் கம்யூனிஸ்ட் கட்சியை அப்பகுதியில் கட்டிய ஒரு போராளி. கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே தைரியமாக மேதினத்தில் செங்கொடி ஏற்றியவர். “நான் எழுதுகிறேன் என்பதே ரொம்ப நாட்களுக்கு இங்கே யாருக்குமே தெரியாமல் இருந்தது. கொஞ்சம் பிரபலம் ஆக ஆக, தூரத்திலிருந்தெல்லாம் ஆட்கள் தேடிக்கொண்டு வர வர, சந்தேகம் பலப்பட்டுப்போச்சு. கிராமம் என்பது ரொம்பச் சின்ன வட்டம். தும்மினாலே ஊர் பூராவும் கேட்கும்! இதுக்குப்பிறகு என் சொந்தக்காரர்களே, ‘ஏப்பா..நீ என்னமோ எழுதியிருக்கயாமே..கொஞ்சம் கொடேன் படிச்சிப்பாக்கட்டும்’ என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்” என்று இதைப்பற்றி அவர் ‘கரிசல்காட்டுக் கடுதாசி’ நூலின் முன்னுரையில் எழுதுகிறார். ஜூனியர் விகடனில் வெளியான அத்தொடர் அவரை இன்னும் பரவலான வாசகத்தளத்துக்கு எடுத்துச்சென்றது.

இசையில் அவருக்கு ஈடுபாடு அதிகம். நாதஸ்வரக்கலைஞர் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் முறையாகச் சங்கீதம் கற்றவர். மட்டுமின்றி அன்று அவரது சமகாலத்தில் வாழ்ந்த இசைமகா சமுத்திரம் விளாத்திகுளம் சாமிகள், காருக்குறிச்சி அருணாசலம், கம்யூனிஸ்ட் மேடைகளில் கொடிகட்டிப்பறந்த வில்லிசைக்கலைஞர் சாத்தூர் பிச்சக்குட்டி ஆகியோருடன் நெருக்கம் கொண்டிருந்தவர். இதையெல்லாம் விட முக்கியமானது பெரிதும் வெளிச்சம் பெறாத கலைஞர்களை அவர் கொண்டாடியதுதான்.

ஒரு உதாரணம். வில்லிசைக் கலைஞரான சிவகிரி எஸ்.எம்.கார்க்கி ஆயிரக் கணக்கான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தை சாதாரண மக்களிடையே கொண்டு சென்றவர். காலவேகத்தில் அவரது பாடல்களும் அவரது வாழ்க்கை வரலாறும் காற்றில் கரைந்துவிட்டன. ஆனால் அவரைப்பற்றி கி.ராஜநாராயணன் எழுதிய இந்த வரிகள் கல்வெட்டாய் நிலைத்துநிற்கின்றன: “கலைச்செல்வன் கார்க்கியின் வில்லுப்பாட்டில் என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம் நாடோடிப் பாடல்களை ஜீவனோடு பாடுவதுதான். ஆகாஷ்வானியின் சங்கீத டைரக்டர் நம்முடைய தோழர் கார்க்கியின் வில்லுப்பாட்டில் பாடும் நாட்டுப் பாடல்களை காது கொடுத்து கேட்க வேண்டும். கச்சேரி ஆரம்பத்தில் சபை வணக்கம் செலுத்தும்போதும், சுதந்திரத்திற்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திப்பாடும் போதும் நம்முடைய உடம்பு புல்லரிக்கிறது. ரத்தம் சூடேறுகிறது. உஷ்ணமான சுவாசம் வெளிவருவதோடு கண்கள்குளமாகி விடுகின்றன...”

40களில் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கிசான் சபாவுடனும் இணைந்து பயணித்த அவரது அனுபவங்களே தோழன் ரெங்கசாமி, கரண்டு, கதவு உள்ளிட்ட பல சமூக விமர்சனம் நிரம்பிய கதைகளின் ஆதாரம். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதை அவரது மனம் இறுதிவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. சொல்லிக்கொண்டே இருப்பார்.

நாட்டுப்புற இலக்கியங்கள்:
அவரது இன்னுமொரு மகத்தான பங்களிப்பு நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரித்து அச்சில் கொண்டுவந்தது. 1960 இல் கோவையில் முதன் முதலாக தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாநாடு கூடியபோது தோழர் நா.வானமாமலை அவர்களின் தலைமையில் நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்க என்று ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த அறைகூவலை கி.ரா. தன் வழியில் இறுதிவரை முன்னெடுத்துச்சென்றார். காலமாகிவிட்ட எழுத்தாளர் கழனியூரான், பாரததேவி போன்றோர் இடையில் அவரோடு வந்து இணைந்து அவருக்கு ஒத்தாசையாக இருந்தார்கள். நாட்டுப்புற இலக்கியங்களில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் உட்பொதிந்திருப்பதாக இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த- முசோலினியால் சிறையிலடைக்கப்பட்ட- தோழர் அந்தோனியோ கிராம்ஷி குறிப்பிடுவார். ஆகவே நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிப்பது என்பது. அய்யோ பாவம், அவற்றைச் சேகரிக்க ஆளில்லையே என்பதற்காகச் செய்வதில்லை. உழைக்கும் மக்களின் சிந்தனைப்போக்கைப் புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான கருவி என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே  நா.வானமாமலை அவர்களின் வழியில் கி.ரா. முன்னெடுத்த மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நடவடிக்கை அது.

“ஒருவனுக்கு, ஒருநூறு நாடோடிக்கதைகள் தெரிந்திருந்தால் போதும்; ஓரளவு உலக ஞானம் படைத்தவனாகிவிடுவான். நம்முடைய வீடும், நமது பெற்றோர்களும், பள்ளிக்கூடங்களும் வாத்தியார்களும் எவ்வளவுதான்  உலக விஷயங்களைப்பற்றி நமக்கு விளக்கிச் சொன்னாலும் பல விஷயங்கள் நமக்குத் தெரிவிக்கப்படாமலேயே மிச்சம் விழுந்து விடுகிறது. இந்தக் கதைகள் நமக்கு நண்பர்களைப்போன்றது - நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்படி – இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளும்படி செய்துவிடுகின்றன…. இந்தக்கதைகளின் முக்கியப் பிறப்பிடமும், இருப்பிடமும்  எழுதப்படிக்கத் தெரியாத  சாதாரண பாமர ஆண் பெண் விவசாய மக்களிடம்தான்” என்று கிராமியக்கதைகள் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எவ்வளவு தெளிவான பார்வையுடன் அவர் இயங்கியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

இதன் நீட்சியாக அவர் நம் மக்களிடம் புழங்கும் பாலியல் கதைகளையும் தொகுக்கத் துவங்கினார். மறைவாய் சொன்ன கதைகள், பாலியல் கதைகள் என்று புத்தகமாகவும் கொண்டு வந்தார். “பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத்திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது, பேதமை மானுடவியலில் இதெல்லாம் இருக்கு. மனுசன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் மனுஷ நாத்தம் இருக்கும்” என்று சொன்னார்.

மாபெரும் அரசியல் பணி:
என்னவெல்லாம் நம் பாட்டாளிகளிடம், அவர்களின் வாய் மொழிக்குள், புதைந்து கிடக்கிறதோ அதையெல்லாம் ஒண்ணுவிடாமல் வெளியே கொண்டுவந்து விட வேண்டும் என்கிற முனைப்பும் வேகமும்தான் அவரை இயக்கியது எனலாம். இது எவ்வளவு பெரிய அரசியல் பணி என்பதைத் தமிழ்ச்சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இதை வேறு யாரும் செய்யாததால் நான் கதை எழுதுவதைத் தள்ளி வைத்துவிட்டுச் செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

புதுச்சேரியில்:
ஏழாவது வகுப்பைக்கூடத் தாண்டாத அவர் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்ற அழைக்கப்பட்டதும் அரசின் குடியிருப்பிலேயே இறுதி மூச்சுவரை வாழ்ந்ததும் நமக்கு ஒரு முக்கியமான சேதியைச் சொல்கின்றன. படிப்பு என்பது பள்ளிக்கூடத்தில் இல்லை. அல்லது பள்ளிக்கூடத்தில் மட்டும் இல்லை.‘பள்ளிக்கூடம் இல்லா ஊருக்குப் பாடம் படிக்கப் போறேண்டா’ என்று பாடிய பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக்கான ரத்தசாட்சியாக கி.ரா.நிற்கிறார். “மழைக்காகத்தான் நான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன். அப்போதும்கூட நான் மழையைத்தான் பார்த்துக்கொண்டு நின்றேன் ” என்பது அவரது மிகப்புகழ்பெற்ற தன் வரலாற்று வாசகம்.

குழந்தைகளுக்கான நாவல் என்கிற முயற்சியிலும் கி.ரா. இறங்கினார். பிஞ்சுகள் என்கிற நாவல் அவ்வகைமையில் முக்கியமான பங்களிப்பு.

‘கதவு’
அவருடைய நாவல்களைப்போலவே அவருடைய சிறுகதைகள் தனித்த முத்திரை பதித்தவை.”கதவு” என்னும் கதை அவருக்கு அழியாப் புகழைத்தந்த கதை. வறுமையின் காரணமாக அரசாங்கத்துக்குத் தீர்வை-வரி- கட்ட முடியாத ஓர் ஏழைக்குடும்பத்தின் வீட்டுக்கதவைக் கழற்றிக்கொண்டுபோய் விடுகிறது அரசாங்கம்.   கதவு இல்லாததால் கைக்குழந்தையை தேள் கடித்து விடுகிறது. அதனால் குழந்தை இறந்துவிடுகிறது. இரவில் கடுங்குளிரில் நடுங்குகிறார்கள்.  காய்ச்சி வைத்திருந்த கஞ்சியை கதவு இல்லாததால் நாய் குடித்துவிடுகிறது. அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். தூக்கிச் செல்லப்பட்ட கதவு பள்ளிக்கு அருகில் உள்ள சாவடியில் உள்ளதைக் கண்டு பூரிக்கிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள். அதை பலமாக பற்றிக்கொண்டிருந்தார்கள் என்று முடிப்பார். சத்யஜித்ரேயின் “பதேர் பாஞ்சலி” படத்தில் வரும் குடிசைக்காட்சிதான் நமக்கு ஞாபகம் வரும்.அப்படி ஓர் அழியாச்சித்திரமாக கதவு கதை தமிழர் நெஞ்சங்களில் நின்றாடுகிறது.  

வேட்டி
வேட்டி என்கிற கதையில் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரைச் சந்திக்கப் பிரமுகர்கள் வருகிறார்கள்.“பரபரப்போடு எழுந்து நின்று இடது கையால் வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக்கொண்டு அவர்களை வரவேற்கத் தயாரானார்” என்று எழுதுவார்.இந்த ஒருவரியே சுதந்திர இந்தியாவின் அகத்தைப் படம்பிடிப்பதாக அமையும். பெரும்பாலும் கிராமப்புற விவசாயம் சார்ந்த வாழ்க்கையை மையமிட்டே அவரது அத்தனைக்கதைகளும் எழுதப்பட்டுள்ளன. விவசாயிகள் மத்தியில் களப்பணி ஆற்றச்செல்லும் ஒவ்வொரு தோழனும் வாசித்திருக்க வேண்டியவையாக அவரது சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றை அவர் சொல்லும் விதமும் கைக்கொள்ளும் மொழியும் அப்படைப்புக்களுக்கு புதிய அழகையும் அடர்த்தியையும் தருகின்றன.

பெண்களுக்கு கம்பீரம்:
அவருடைய கதைகளில் பெண்கள் கம்பீரமாக நிற்பார்கள். வேலை..வேலையே வாழ்க்கை என்கிற கதையில் வரும் கெங்கம்மாள் ஒரு உதாரணம்.”தலைக்கோழி கூப்பிட்டதும் வழக்கம்போல முழிப்புத்தட்டியது. தொழுவில் மாடுகள் மணியோசையும் அவைகள் கூளம் தின்னும்போது காடிப்பலகையின் சத்தமும் கேட்டது. கெங்கம்மா படுக்கையில் இல்லை.” அவள் எழுந்து வேலைகளைத் துவங்கிவிட்டாள். ஒரு நாளின் பொழுது முழுவதும் வேலை வேலை எனக்கடக்கும் கிராமத்து விவாசாயக் குடும்பத்துப் பெண்ணின் வாழ்விலிருந்து தறித்து எடுக்கப்பட்ட ஒரு கீற்றாக இக்கதை விளங்கும். அக்கதை முடியும் பத்தி முக்கியமானது; “புருஷன் பக்கத்தில் வந்து படுக்கையை விரித்தாள். லாந்தரை சுருக்குவதற்குமுன் நாகையா அவளை ஒருதரம் பார்த்தார். அந்த முகத்தில் துளிகூடக் களைப்போ ஆயாசமோ இல்லை. எப்படி அவளால் இப்படித் திகழ முடிகிறது? அந்தக்கணத்தில் அவருக்குப் பளிச்சென்று மனசில் ஒன்று தட்டுப்பட்டது. ’நாம் வாழ்க்கை வேறு வேலை வேறு என்று நினைக்கிறோம்; இவளோ வேலையே வாழ்க்கையாக விளங்குகிறாள்’. தன் அருகே தலை சாய்த்த தன் மனையாட்டியை இறுகப்பற்றி முகர்ந்தார். பூசுப்பொடியோ சோப்பு வாடையோ முதலிய எதுவும் இன்றி சுயம்பான, தனீ மனுஷி வாடைதான் அவளிடம் இருந்தது. ”நான் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது இந்தக்கதை கோவில்பட்டியிலிருந்து வெளியான ‘நீலக்குயில்’ மாத இதழில் வெளிவந்தது.முதன் முதலாக நான் வாசித்த கி.ரா.வின் கதை இதுதான். இன்றைக்கு “வேலையே பண்பாடாக..(WORK AS CULTURE) என்கிற விவாதம் மார்க்சிய அறிவுலகில் நடப்பதைப் பார்க்கிறோம். அதை இந்தக்கதைபோல எளிமையாக யாரால் சொல்லமுடியும்? இந்தக்கதையில் கிறங்கிப்போனவன் தான் அப்புறம் கி.ராவின் எழுத்தைத் தேடித்தேடிப் படிக்கலானேன். பாட்டாளிகளுக்காக இலக்கியம் படைக்க நினைக்கும் இளம் படைப்பாளிகளுக்கு இந்தக்கதை பெரிய பாடமாக இன்றைக்கும் நிற்கிறது.

இடையறாது எழுதிக்கொண்டிரு!:
படைப்பாளிகள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னுமொரு சேதி உண்டு.“இடையறாது எழுதிக் கொண்டிரு” என்கிற சேதி. 93 வயதில் இந்து தமிழ்திசை இதழில் “மனுசங்க” என்கிற தொடரை எழுதினார். 97 வயதில் “அண்டரண்டாப்பட்சி” என்கிற குறுநாவலை எழுதினார். எழுதவே முடியாமல் போன கடைசி சில காலம் ஆண்ட்ராய்ட் தொலைபேசியை வாங்கித்தரச்சொல்லி அதன்வழி இணைய இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றார். இறுதிவரை இயங்கு என்று நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார். முப்பது வயதுக்கு மேல்தான் எழுதத்துவங்கினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வழங்கியவை ஒவ்வொன்றும் முத்துக்களும் பவளங்களும்தான்.

அவருடைய முன்னோர்கள் தெலுங்கர்கள். தாய்மொழி தெலுங்கு. அவர் வீட்டில் பேசிய மொழி தெலுங்கு. ”ஆனால் தெலுங்கில் எனக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாது” என்றார். இந்த வீட்டுமொழிப் பின்னணியுடன் தான் அவர் தமிழுக்கு சாகித்ய அகாடமி விருதையும், கனடா இலக்கியத்தோட்ட விருதையும் கொண்டு வந்து தந்தார். ஞானபீடப்பரிசையும் நோபல் பரிசையும் கூடத் தமிழுக்குப் பெற்றுத் தரும் வல்லமை அவர் படைப்புக்களுக்கு உண்டு. இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “ரயிலுக்கு டிக்கட் வாங்கிட்டேன். ரயிலுக்குக் காத்திருக்கிறேன்” என்று சொன்னார். அந்த ரயில்வந்துவிட்டதுதான். ஆனாலும் கி.ரா.வின் கதை ரயிலின் சக்கரங்கள் ஒருபோதும் நிற்கப்போவதில்லை.

செவ்வணக்கம் தோழர் கி.ரா.!