Sunday, May 30, 2021

"நந்தன் - வீரநந்தன்"


-  முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.


நந்தன் - இடைச்செருகல், மேலாதிக்கம், காலக் கண்ணாடிகளின் தொடர் குறியீடு; சுந்தரர் தொடங்கி அயோத்திதாசர் ஊடாகப் புதுவைச் சிவம் வரை


இந்திய வரலாறு மகாவீரர், புத்தர் காலத்தில் இருந்து தொடங்குகிறது. அதற்கு முன்னும், பின்னும் ஏராளமான தொன்மங்களும், புராணங்களும் உண்டு. சமயச் சண்டைகளை ஊதிப் பெரிதாக்கவும், அதிகார மையத்தின் பார்வை தங்களை விட்டு அகலாது இருக்கவும், கரணம் போடும் குரங்குகள் போல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இட்டுக்கட்டி உருவாக்கப்பட்டவைதான் தொன்மங்களும், புராணங்களும். தொன்மங்கள் இனக்குழு காலத்திலிருந்து தொடர்பவை. ஏதோ ஒரு நிகழ்ந்த நினைவைக் கொண்டு, பனி மலையில் இருந்து கீழே உருளும் ஒரு சிறிய பொருள் பெரிய பனி உருண்டையாக வந்து சேர்வதைப் போன்றவை தொன்மங்கள். அதிலிருக்கும் சிறு துளி உண்மை கூடப் புராணங்களில் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தின் பதினெட்டு மகா புராணங்களும், பதினெட்டு உப புராணங்களும் இவ்வகையே. பாலி, பிராகிருத மொழிகளில் சமண, பௌத்த வரலாறு கூறும் ஒரு சில புராணங்களின் பெரும்பகுதி தவிர்த்துப் பிற அனைத்துமே மேற்கூறிய வகையே. தமிழ் நம் மொழி, செம்மொழி என்றாலும்கூட மற்ற மொழிகளின் கற்பனை வளத்தையும் தாண்டி அதிகமான பொய்களைப் புராணங்களாகப் பொதிந்து வைத்திருக்கும் மொழி என்ற பெருமையையும் அளிக்கவல்லது. அதில் தலையான இடம் பிடிப்பவை திருவிளையாடல் புராணமும், பெரியபுராணமும். இன்றைக்குக் காட்டுமிராண்டித்தனம் என்பனவற்றையெல்லாம் நடந்த கதைகளைப் போல் மாற்றி வைத்திருக்கும் அதி அற்புதப் புலவர்களைக் கொண்ட மொழியும் தமிழ் மொழியே. இது மொழி வளம் சார்ந்த கருத்தன்று. சமூக மேலாதிக்கத்தின் அடிப்படைக் கருவைத் தேடும் கருத்து.

தமிழ்ப் புராணங்களில் தழுவல்களே அதிகம். அதேநேரம் தமிழ்ப் புலவர்களின் கற்பனை வளத்திற்கு எடுத்துக்காட்டாகச் சிவாச்சாரியாரின் கந்த புராணம் (கி. பி. 14), பரஞ்சோதியின் திருவிளையாடற்புராணம் (கி. பி. 16), சேக்கிழாரின் பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம் - கி. பி. 12) ஆகியவை உள்ளன.1   இவற்றுள் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளைக் கூறுகிறது. அவற்றுள் ஒன்றுதான் நந்தன் கதை. நந்தன் என்பவர், சாதியில் தாழ்ந்தவர் என்றும், ஒரு பார்ப்பன வேதியனிடம் கொத்தடிமையாக வேலை செய்தவர் என்றும், தன் குலதெய்வ, சிறுதெய்வ வழிபாட்டை விட்டு விட்டு வேதியர்களைப் போல் பெருந்தெய்வ (சைவ) வழிபாட்டில் கொண்ட மோகத்தால், தன் சாதிக் கீழ்மையைப் போக்கிக்கொள்ள முன்வந்து, யாகத்தில் இறங்கி, அவ்வாறே பார்ப்பானாக மாறி, முக்தி அடைந்தார் என்பது சேக்கிழார் எழுதியுள்ள நந்தன் கதை. இக்கதைக்கு முதல் நூலாக, அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்கிற நான்கு சமயக் குரவர்களில்2  ஒருவரான சுந்தரர், சிதம்பரம் கோயில் சிவனடியார்களைப் பற்றிப் பாடிய "திருத்தொண்டத் தொகை திருப்பதிகம்"3  என்னும் நூல் அமைகிறது.  இதில், 'செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்' என்று இருக்கும் ஒரே ஓர் அடிதான் பிற்காலத்தில் நந்தன் கதையாக உருவெடுத்தது. இதன்பிறகு நம்பியாண்டார் நம்பி என்பவர், பொல்லாப் பிள்ளையார் மேல் கொண்டிருந்த பக்தியால், அபய குலசேகர சோழப் பேரரசருடன் சென்று, சிதம்பரம் கனகசபையில் தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்து, அதில் மன்னன் சில, பல சேர்த்தும், நீக்கியும் செப்பேடாக வரைந்து கொண்ட பின்னர், நம்பியாண்டார் அவற்றின் வழி "திருத்தொண்டர் திருவந்தாதி" பாடியதாகவும், அதில் ஏற்கனவே சுந்தரர் பாடிவைத்த ஓரடியுடன், திருநாளைப் போவாரின் ஊர் ஆதனூர் என்றும், புறத் தொண்டு செய்யும் மரபினர் அதாவது புலையர் என்னும் சாதியினர் என்றும் ஒரே ஒரு செய்யுளைச் சேர்த்துப் பாடியுள்ளார். சாதியின் பெயர் இலக்கியத்தில் புகுந்த காலமாகவும், இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் இதைக் கொள்ளலாம். 

இதற்குப் பிறகு அநபாயச் சோழன் காலத்தில் (கி.பி.1156) அரசவைப் புலவராக இருந்த அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார், சமணராக இருந்த அநபாயச் சோழன் என்னும் மன்னனை சைவ சமயத்தவராக மாற்றிய பெருமை கொண்டவர். மன்னன் படித்து வந்த, திருத்தக்கதேவர் இயற்றிய, சமணக் காப்பியமான "சீவக சிந்தாமணி"யை (கி. பி. 9 -10) இழித்தும், சைவ அடியார்களின் பெருமையை உயர்த்தியும் சேக்கிழார் கூற, "சமணம், சீவக சிந்தாமணியைப் பெற்றுள்ளது. சைவத்திற்கு என்ன உள்ளது?" என்று மன்னன் வினவ, "சமணம், பவுத்தம் இவ்வுலக வாழ்க்கையை (இகம்) மட்டும் கூறுகின்றன. சைவம், இவ்வுலக வாழ்வு நீங்கியோர் வானுலகத்திலும் வாழும் வாழ்க்கையைக் (இகம்-பரம்) கூறுகிறது" என்கிறார் சேக்கிழார். அறம், பொருள், இன்பம் ஆகியவையே சமண, பௌத்த, ஆசீவக சமயங்களின் கோட்பாடுகள்.  வைதீகம் கூறும் வீடுபேற்றைச் சேர்த்துக் கூறுவது சைவ, வைணவக் கோட்பாடுகள். அதாவது இல்லாத ஒரு வாழ்க்கையைக் (இறந்த பிறகான வாழ்க்கை) கட்டமைத்து, இதையே சைவ சமயத்தின் பெருமையாகவும், பிற சமயங்களைத் தாழ்த்தும் அளவுகோலாகவும் சேக்கிழார் கூறுகிறார். தான் கூறியதை நிறுவுவதற்காக வலிந்து சைவ புராணம் பாடினார் சேக்கிழார். அதுவும் அறுபத்து மூன்று சிவனடியார்களின் கட்டுக் கதைகளை எழுத முடியாமல் தவித்த போது, சிவபெருமான் தோன்றி 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்க, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று தொடங்கிப் பதின்மூன்று சருக்கங்களில் பாடினார் என்பதுதான் சிவனடியார்கள் எழுதிவைத்த புராணத்தின் புராணக்கதை. அதுதான் பெரிய புராணம். சிதம்பரம் கனக சபையில் தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்த கதைகள் இருக்க, சமணத்திற்குச் சீவக சிந்தாமணி (9 - 10 ஆம் நூற்றாண்டு) இருப்பதைப் போல் சைவத்திற்கென்று நூல்கள் உண்டோ? என்றும், பெரியபுராணம் என்பதாக ஒன்று உண்டோ? என்றும் அநபாயச் சோழன் அரசவையில் கேட்ட செய்தியினால், பத்தாம் நூற்றாண்டு வரை சைவப் புராணங்கள் ஏதும் இல்லை என்று பொருள்படுகிறது. அநபாயச் சோழன் காலத்தை வைத்துப் பெரிய புராணம் எழுதிய காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. 

புராணங்கள்  பிற்காலத்தவை:
அவுரங்கசீப் அரசாண்ட காலத்தில் தான் (பதினேழாம் நூற்றாண்டு) இந்து மத புராணங்களும், கதைகளும் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்பர் (1542-1605) காலத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஒரு பாதிரியாரால் கொண்டு வரப்பட்டு, விளைவிக்கப்பட்டவையே உருளைக்கிழங்கு மற்றும் புகையிலைச் செடிகள். இக்குறிப்பை அக்பரின் மகன் ஜஹாங்கீர் (1569-1627) தனது 'தாஜுக்' என்ற நூலில் எழுதி இருக்கிறார். புகையிலையின் உற்பத்தி, சுருட்டாக மாறியபோது அவுரங்கசீப் (1618-1707) அதனைத் தடை செய்திருக்கிறார். சீக்கிய குரு கோவிந்த சிங்கும் (1666-1708) அதனைத் தடை செய்திருக்கிறார். அதேநேரம் சுருட்டு பிடிக்கும் பிராமணன் பன்றியாய்ப் பிறப்பான் என்கிறது பத்மபுராணம். நரகத்துக்குப் போவான் என்கிறது பிரம்மாண்ட புராணம். எல்லாப் புராணங்களும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வியாச முனிவரால் எழுதப் பட்டவை என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்கள் என்பதை அக்பரும், அவுரங்கசீப்பும் நிரூபிக்கிறார்கள். மேலும், அப்புராணக் கதைகளில் இடம்பெறும் சில வழக்குச் சொற்கள் போர்த்துக்கீசியர் காலத்துச் சொற்களாக உள்ளன. இன்றைய காரைக்கால் பகுதியில் போர்த்துக்கீசியர் காலத்தில் ஓடங்கள் போகும் ஓடக்கால் பகுதியின் இரு பக்கங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சேதம் நேரா வண்ணம் சுண்ணாம்பினால் காரை பூசினார்களாம். அதனால் 'காரை' பூசப்பட்ட ஓடக் 'கால்' பகுதிகள் 'காரைக்கால்' என வழங்கப் படுவதாகப் போர்த்துகீசியர் வரலாற்றில் கூறப்படுகிறது. பெரியபுராணத்தில் காரைக்கால் என்னும் போர்த்துக்கீசியர் காலத்துச் சொல் இடம் பெறுவதால் அப்புராணம் நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். தெலுங்கு மொழியின் பெயர் திருமலைராயன் பட்டினத்தை ஆண்ட திருமலைராயன் காலத்திற்குப் பின்பே தமிழில் வழங்கப்பட்டு வருவதைத் தஞ்சாவூர் குறிப்புப் புத்தகங்களினால் அறியலாம். அப்படிப் பார்த்தால் பெரியபுராணத்தில் தெலுங்கு என்னும் சொல் இடம் பெறுவதை வைத்து அப்புராணம் முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டது எனலாம். இன்றும் இடங்கை சாதிக் கலவர காலத்தின் விசுவபிரம வமிசத்தாரில் ஒருவரையாவது நாயன்மாராகச் சேர்க்காததால் பெரியபுராணத்தின் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு உள்ளாக இருக்கலாம். பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியில் பதினெட்டுப் புராணம் பற்றிய குறிப்பில் பெரியபுராணம் இல்லாததால் அது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தைக் கொண்டதாக இருக்கலாம். 

பொதுவாக ஆரியர்கள் (பிராமணர்கள்) தென்னாட்டிற்குக் குடிபுகுந்த காலம் எட்டாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது (க. அப்பாதுரை, பக்கம் 63). வடநாட்டில் அசோக மாமன்னரிடம் அடங்கிக் கிடந்த வைதீகம், கணிஷ்க மன்னர்கள் காலத்தில் காலில் விழுந்து பிச்சை எடுத்துக் கொள்ள அனுமதி பெற்றது. இதை வைத்து, வைதிகப் பார்ப்பனர்கள், சிறிது சிறிதாகச் சமண, பௌத்த சமயங்களில் ஊடுருவி, அவற்றைச் செல்லரித்தது போல் ஆக்கி விட்டு, வைதீகத்தைப் பழஞ் சமயமாகப் பொய் கூறி, வளம் பெற்று, எட்டாம் நூற்றாண்டு வாக்கில் தென்னாடு புகுந்து, இங்கும் சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்களை அழித்து, அவர்களின் கோயில்களைச் சைவ, வைணவக் கோயில்களாக மாற்றி, கற்பனை ஆபாசக் கதைகளைப் பக்தி இலக்கியங்களாக வடித்து, ஆரியப் பண்பாட்டைத் திணித்து வந்தனர். சமண, பௌத்தர்களின் காலக் கணிப்பாகப் பாலி மொழியில் இருந்த அறுபதாண்டுக் கணக்குகளை வைதீகம், சமஸ்கிருதம் என்று சொல்லி அதற்கொரு மிக ஆபாசக் கதையைக் கற்பித்தும், பின்னாட்களில் தமிழ்ச் சமணர்களின் வானியல் கண்டுபிடிப்புகளை வைதிகப் பஞ்சாங்கத்தில் அடைத்துவைத்து, எல்லாமும் தமதே என்று ஏய்த்துப் பிழைக்கலாயினர். அதே வகையில் தான் சதுர் யுகக் கணக்குகளைக் (நான்கு யுகங்கள் - கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்) கூறி நம்ப முடியாத, பொய்யான கணக்குகளை ஏற்படுத்திக் கொண்டனர். தமிழர்களின் வானியல் அறிவையும், அற்புதக் கண்டுபிடிப்புகளையும் தமிழர்களைக் கொண்டே தீயிட வைத்தனர். எஞ்சியவற்றில் வைதிகக் கருத்துகளை இடைச்செருகல்களாக நிரப்பி, அவற்றையும் தாங்களே அச்சில் ஏற்றி, தமிழ்த் தொண்டின் தலைமையில் 'தாத்தா' வென நிலைத்தனர். சீன யாத்திரிகரான யுவான் சுவாங், ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து, தென்னாட்டில் காஞ்சிபுரம் வரை யாத்திரிகராக வந்தபோது, அவர் கண்டதெல்லாம் சமணப் பள்ளிகள் என்றும், பௌத்த விகாரங்கள் என்றும், குடிமக்கள் எல்லாம் சமண, பௌத்தர்களாக இருந்தனர் என்றும் குறிப்பு எழுதி வைத்துள்ளார் (க. அப்பாதுரை, பக்கம் 64). இங்குக் குறிப்பிட்டுள்ள பல  காலக் கணக்குகளையும், சுந்தரர் முதல் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் வரையில் திருநாளைப்போவாரை நந்தனாக்கி விரித்த கதைகள் வரை "நந்தன் சரித்திர தந்திரம்" என்ற நூலில் நமக்கு விரிவாக அளித்து இருப்பவர் பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914) அவர்கள். அவரை வழிமொழிந்து "நந்தனாரும் இந்து மத புராணங்களும்" என்ற தலைப்பில் நூலாக அளித்து இருப்பவர் பண்டிதமணி க. அப்பாதுரையார் அவர்கள்.

நந்தன் என்ற திருநாளைப்போவார்:
மேற்கூறிய பெரிய புராணத்தில் வரும் 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் பெறுபவர் தான் நந்தன். இதில்தான் திருநாளைப்போவார் என்பவரின் பெயர் நந்தன் என்றும், நந்தன் தாழ்ந்த சாதியினர் என்றும், வேதியன் பேச்சைக் கேட்டு வேள்வியில் குதித்துச் சாதித் தீட்டு ஒழிந்தவராகவும் கற்பிக்கப்படும் கதை இடம்பெற்றுள்ளது. அதாவது 'திருநாளைப்போவார்' என்று பக்தி இலக்கியக் காலத்தில் (6-9 ஆம் நூற்றாண்டு) சுந்தரர் எழுதிவைத்த ஒற்றைக் குறிப்பு, பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி என்பவரால் ஒரு செய்யுள் அளவில் சிறிது ஓதப்பட்டு, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழாரால் 37 பாடல்களில் கண், காது, மூக்கு மற்றும் முழு உடம்புடன் உலவ வைத்துவிட்டது. சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள், மன்னர்களின் ஆதரவுடன் தமிழகப் பகுதிகளில் செழித்தோங்கி இருந்த காலத்தில், பக்தி இயக்கங்களாக உருவெடுத்த சைவ, வைணவ சமயத்தினர் தங்கள் சமயங்களை வளர்க்கவும், அதற்காக மன்னர்களை மயங்க வைக்கவும் பாடிய கட்டுக் கதைகளின் தொகுப்புதான் தமிழ்ப் புராணங்கள். தொழில்முறைப் பிரிவுகளாக ஒரே சமூகத்தில் ஒன்றாக வாழ்ந்திருந்த தமிழ்ச் சமூக அமைப்பினில் தொழில் முறையைச் சாதிகளாக்கி, அதில் உட்பிரிவுகளை உருவாக்கி, அதில் ஏற்றத் தாழ்வுகளை இட்டுக்கட்டிச் சொல்லும் சாதியப் பிரிவினைகளே, அந்நாளின் சமயச் சண்டைகளுக்குப் பின்னால் பூதாகரமாக நின்றிருந்தன. பக்தி இலக்கியக் காலங்களில் சமயச் சண்டைகளுக்காக உருவாக்கப்பட்ட வாய்மொழிக் கதைகள், அடுத்து வந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் சாதியை எதிர்க்கும் விதமாக அல்லாமல், சாதியை ஏற்று நிறுவும் வகையில் சாதிய மோதலாக மாறிவிட்ட சமுதாயத்தின் பின்னணியில் இப்படிப்பட்ட புராணக்கதைகளே இடம் பெறுகின்றன. சமணமும், பௌத்தமும், ஆசீவகமும் தோற்று சைவமும், வைணவமும் வென்ற குறியீடுதான் பக்தி இலக்கியங்கள். கொல்லாமை, ஊன் உண்ணாமை, பொய் கூறாமை, பிறன்மனை நோக்காமை என்று அறங்கூறும் சமயங்களின் வாழ்வியலை விட, பிள்ளைக்கறியும் உண்ணலாம், எப்பெண்ணையும் கூடலாம், எப்படியும் வாழலாம் என்கிற ஆபாசம் நிறைந்த வாழ்வியலை இயல், இசை, கூத்துடன் அனுபவிக்கலாம் என்பதும், அதையும் பக்தி ரசம் சொட்டும் வகையில் பாடலாகவும், இலக்கியமாகவும் ஆக்கலாம் என்று மாற்றிய வகையில், அறங்களை விடவும் ஐம்புலன்களையும் கட்டவிழ்த்துவிடும் இரசனை வாழ்வியலே வென்றது.

வணிகச் சமூக அமைப்பான சமணம் தோற்றதால் சமூகப் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் சாதாரண சிற்றரசர்கள் மாபெரும் மன்னர்களாக, சக்கரவர்த்திகளாக மாறி, கோவில்களை நிர்மாணித்து, அவற்றையே பொருளாதார மையங்கள் ஆகவும், கலைக்கூடங்கள் ஆகவும் நியமித்து, மக்களை மயக்கி, தாங்கள் கூறும் சமயத்தில் கட்டிப்போடும் நிலையில் மாபெரும் வெற்றி பெற்றனர். மேலும் பேரரசைக் கட்டிக்காக்க அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைக்கும் தேவை மன்னர்களுக்குக் கடமையானது. இந்தத் தேவை, தொழில் முறையிலான சமூகத்தைப் பல பிரிவுகளாக்கித் தனித்தனிச் சமூகமாக மாற்றிக் கொண்டிருந்தது. எத்தனைச்சமூகம் உருவானாலும் அத்தனையையும் மன்னர் காக்க வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டது. அதற்கேற்ற சமயங்களாகச் சைவமும், வைணவமும் சமுதாயத்தில் சாதிகள் நிலைநிறுத்தத்தோடு சேர்ந்து ஏற்றம் பெற்றன. இதற்காக, உழைக்கும் மக்களையே புலையர், பறையர் என்று சமுக இழிவுக்கு ஆளாக்கி விட்டு, அவர்களையே சிவனடியார்களாக உயர்த்தவும் சைவமும், வைணவமும் தயங்கவில்லை. இதை அந்நாளைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றும் கூறலாம். இவ்வகையில் சேக்கிழார் காலத்துச் சமூகம் சாதிகளுக்கான சமூக விதிகளை நிர்ணயித்து, சமய உரிமையோடு இலக்கியத்திலும் பதிந்து வைக்கும் நிலை அரச போகத்துடன் உறுதியானது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நந்தன்:
பக்தி இலக்கியக் காலத்தின் இறுதிப் பகுதியான பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு நந்தன் குறித்த புராண, இலக்கியப் பதிவுகள் ஏதும் இல்லை. எழுநூறு ஆண்டுகளில் பக்தி இலக்கியக் காலம், தொன்னூற்றாறு வகைகள் கொண்ட சிற்றிலக்கியக் காலமாக மாறிப் போயிருந்தது. அனைத்துச் சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும் சைவ, வைணவக் கோயில்களாக மாறி இருந்தன. வைதிகக் கோலோச்சலில் பார்ப்பனர்கள், மன்னர்களைக் காலில் விழ வைத்தனர். மன்னன் நாடாண்டான். பார்ப்பனர்கள் நிலமாண்டனர். நிலவுடைமைச் சமுதாயம் சதுர்வேதி மங்கலங்களாக நிலை பெற்றது. ஐரோப்பியர்கள் ஐம்பத்தாறு நாடுகளை ஒன்றிணைத்து, இந்தியா என்னும் துணைக் கண்டமாக்கிட, ஆளும் அரசியல் நிலை மன்னராட்சியில் இருந்து பெரிதும் மாறிப் போயிருந்தது. சமூக நிலையில் சாதிப் பிரிவினைகள் உச்ச நிலையில், மேலாதிக்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்படிப்பட்ட சூழல்களின் இடையில் நந்தன், கடவுளால் நேரடியாகப் பறையராகவும், கொத்தடிமையாகவும் படைக்கப் பட்டதாகக் காவியம் படைப்பது இலக்கியப் புலமையாக மட்டுமல்ல, தேச பக்தியாகவும் பார்க்கப் பட்டது. நந்தன் கதையை எட்டாம் நூற்றாண்டில் சுந்தரரும், பத்தாம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பியும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழாரும் கொஞ்சங் கொஞ்சமாய் வளர்த்து, அவரவர் காலத்துச் சூழ்நிலையால் மெருகேற்றி, தமிழ்ப் புராணக் கதைகளாக அளித்தார்கள். திருநாளைப் போவார் நந்தனாராக, தாழ்ந்த சாதியினராக, பார்ப்பானின் கொத்தடிமையாக, அதை விரும்பி ஏற்றுக் கொள்பவராகப் படைத்தளிக்கப் பட்டார். இக் காலக் கண்ணாடிகளின் தொடர் குறியீடாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 - 1881) இயற்றிய 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனை' என்னும் கதாகாலட்சேபம், பாரதியாரின் சொந்த ஊரான காரைக்காலில் (பிரெஞ்சிந்தியா) வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் அவ்வூரின் பிரெஞ்சுக் கலெக்டர் சீசே என்பாரின் பெருமுயற்சியால், 1848 ஆம் ஆண்டில், இக் கதாகாலட்சேபம் "திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனை" என்ற பெயரில் தமிழ் அச்சில் வெளியிடப்பட்டது.

இப்படிப்பட்ட ஓர் அடிமைக் கற்பனைக் கதையைப் படைத்ததற்காகக் கோபாலகிருஷ்ண பாரதியார் பெரிதும் பாராட்டப்பட்டார். பார்ப்பன உலகம் அவரை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியது. காந்திய அமைப்புகள் நந்தன் நாடகத்தைத் தேச விடுதலைப் போராட்டமாக உருவகப்படுத்திக் கொண்டாடின. தங்கள் மீது சுமத்தப்பட்ட சாதி, அடிமை ஆகிய தளைகளில் இருந்து விடுதலை பெறப் போராடாமல், பார்ப்பானாக மாறுகின்ற வித்தையைக் கற்றுத் தேறும் பாத்திரப் படைப்பாக நந்தனை ஆக்கி வைத்ததைச் சீர்திருத்தம் என்று கூறி உச்சிக் குடுமியை முடிந்து கொள்ளும் கலிகாலம் பிறந்திருந்தது. அதேநேரம் கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்களைத் தாங்களே, தங்கள் முயற்சியால் உயர்த்திக்கொள்ளப் போராடிய இயக்கங்களும் இருந்தன. அதற்காக வேறு மதங்களைத் தழுவுதல் போன்ற தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. மகாத்மா ஜோதிராவ் புலே (1827-1890), தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான வழியாகக் கல்வியை முன்வைத்தார். அண்ணல் அம்பேத்கரும் (1890-1956) புலேவின் கொள்கைகளை ஆதரித்தார். தாழ்த்தப்பட்டோர் தங்களை உயர்த்திக் கொள்ளும் வழிகளில் பக்தியையும் ஒன்றாக சீக்கியப் பாவலர் கபீர்தாசர் (1440-1518) போன்றோர் முன் வைத்தனர் (காலந்தோறும் நந்தன் கதை, பக்கம் 10-12). இதில் சமூக நிலையாலும், பொருளாதார நிலையாலும் தாழ்த்தப்பட்டோர் தங்கள் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை (சிறுதெய்வ வழிபாடு முதலிய) விட்டுவிட்டு, முற்றிலும் புதிய ஆரியப் பண்பாடான பெருந் தெய்வ வழிபாடுகளுக்கு மாறுவது என்பதுதான் தாழ்த்தப்பட்டோர் உயர்வதற்கான, மேனிலை ஆக்கத்திற்கான வழியென்னும் கருத்தும் சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலரால் மார்க்சியப் பூணூலாக அணியப் பெற்றது. இப்படிப்பட்ட ஒரு பண்ணைச் சீர்திருத்தவாதியான கோபாலகிருஷ்ண பாரதியார், அதே வழியில் நந்தனையும் மேனிலையாக்க கதாநாயகனாகத் தன்னுடைய காலட்சேபத்தில் மாற்றுகிறார். "தெரு வாசற்புறத்தினில் ஏசிக்கொண்டும், கையைக் கொட்டிக்கொண்டும், விரும்பிய மதுவுண்டு கெக்கலித்தும், பறை வாத்தியமும் வெகு நேர்த்தியுடன் இருக்கும் புலைப்பாடி" என்று பாரதியார் வருணிக்கும் அச்சேரியில்தான் நந்தன் "கள்ளுண்ணாத, ஊனுண்ணாத, அதேநேரம் சாதிமுறை தவறாத சிவனடியாராக" வாழ்ந்து வந்தார் என்று காட்சிப் படுத்தப் படுகிறார். "சாதிக்கொடுமையின் முன் செயலற்று நிற்கின்ற சிவபக்தியின் மறுபெயரே நந்தன்" எனும் கூற்று "மாற்றத்தை விரும்பாத ஒரு மக்கள் கூட்டத்தையும், அது தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளான கொடிய சூழ்நிலையையும் குறிப்பதாகவே அமைந்துள்ளது" என்பதை நந்தன் குறியீடாக ஏற்க வைக்கிறது (சுந்தரராஜ் மாணிக்கம்: காலந்தோறும் நந்தன்: பக். 1). பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலக் கண்ணாடியில் தெரிவதெல்லாம், உலக சாம்ராஜ்ஜியம் அமைத்த இங்கிலாந்தின் காலனியாதிக்கக் கதைகளின் பார்ப்பனிய நிறுவன மயமாக்கலும், அதனால் நிலவிய சமூக, பொருளாதார வீழ்ச்சிகளும்தான்.

நந்தன் கதை, புலவர்களால் அறியப்பட்ட புராணங்களில் இருந்தவரை, மக்கள் இலக்கியமாகப் பரவவில்லை. ஆனால் பிற்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) இசைக் கீர்த்தனைகளாக இயற்றப்பட்ட "நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்" மூலம் விரைவில் பல இடங்களில் பாடப்பெற்றும், நடிக்கப் பெற்றும், கூத்தாக நிகழ்த்தப் பெற்றும் பெரிய அளவில் பிரபலமடைந்தன. கூத்து வடிவினில் எப்படி நள தமயந்தி, திரௌபதி (பாஞ்சாலி) சபதம், கீசக வதம், அனுமன் பக்தி என்று அனைத்து ஆரியக் கதைகளும் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்கள் வரை உள்நுழைந்தனவோ, அதேபோல ஒரு புது வரவாகப் புகுத்தப்பட்ட நந்தனார் சரித்திரக் கதையும், கூத்தும் தமிழ்நாடெங்கும் பிரபலமாகிச் சாதிய அமைப்பினை மேலும் வலுப்படுத்தக் காரணமாயிற்று. சாதியில் இருந்து விடுபடுவது என்பது பெருந்தெய்வ வழிபாடு அல்லது ஆரியப் பண்பாட்டை நோக்கி நகர்வது என்ற, பார்ப்பனர்களால் கதைகளில் மட்டும் ஏற்கக் கூடியதும், நிஜத்தில் ஏற்றுக் கொள்ளாததுமான சீர்திருத்தமாகப் பரவ வைத்தது. இதையே சாதியை ஒழிக்கும் பொதுமை வழியாகவும், மேனிலைச் சீர்திருத்தமாகவும் கண்டனர் பார்ப்பனர்களும், அவர்களைச் சார்ந்து நின்ற பிற ஆதிக்கச் சாதிகளும்.

இப்படிப்பட்ட மேல்நிலைச் சீர்திருத்தத்தைத் தான் அயோத்திதாசர் கடுமையாகச் சாடுகிறார். 'இந்துக்கள்' என்ற மோசடிப் பெயரைத் தாங்கிப் பாழடைந்து போக வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். "மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளோ" எனப் பாரதியாரின் கீர்த்தனைகளைக் கொட்டாய்களில் பாடி நடிப்பது என்பது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது சுமத்தும் பெரும் அவமரியாதை என்று உள்ளம் கொதிக்கிறார் அயோத்திதாசர். "புலால் உண்பவன் புலையன் என்றால் கொழுத்த மாடு, குதிரைகளை யாகங்களில் கொன்று தின்ற பார்ப்பனர்களும் புலையர்தானே? பன்றிக் கறி தின்ற சிவனும், கண்ணப்பனும் புலையர்தானே? பசியினால் நாய்க்கறி தின்ற விசுவாமித்திரன் புலையன் அல்லவா? இப்படியான அவமரியாதையை நிறுத்தவில்லை என்றால் பறையன் பறையனே; பார்ப்பான் பார்ப்பானே; வேசிமகன் ஆகிய சூத்திரன் வேசிமகனே என்பது ஏற்கும்படி ஆகிவிடும்" என்றும் அயோத்திதாசர் எச்சரிக்கிறார். அதனால் நந்தன் நாடகம், கூத்து, இசைப்பாடல், கீர்த்தனைகளை என அனைத்தையும் தடை செய்யக் கோரும் அயோத்திதாசர், அதற்கு மூலமான நந்தன் குறித்துக் கூறும் புராணங்களையும், நந்தன் கீர்த்தனைகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார். பௌத்தர்கள் உருவாக்கிய புராணங்களை அழித்து வேஷ பிராமணர்கள் ஏற்படுத்திக்கொண்ட புராணங்கள் அத்தனையும் கட்டுக் கதைகளே என்பதால் அவற்றைப் புறந்தள்ள வேண்டும் என்றும் பண்டிதர் கூறுகிறார் (அயோத்திதாசப் பண்டிதரின் சொற்பொழிவுகள், பக்கம் 64). ஆனால் அயோத்திதாசர் விரும்பியது எதுவும் நடக்கவில்லை. அவர் 1914 ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். அதற்குப் பின்னர் கூத்து வடிவம் நாடகமாக வளர்ந்து, பின் திரைப்படமாகவும் வளர்ச்சி கண்டது. நந்தன் நாடகங்களும், திரைப்படங்களும் 'தமிழ் கூறும் நல்லுலகம்' எங்கும் சக்கைப் போடு போட்டுச் சாதிவெறியைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தன.

நந்தன் கதையை ஒரு 'தந்திரக் கதை' என்று கூறும் அயோத்திதாசர், இக்கதையினால் ஒடுக்கப்பட்ட மக்களை 'இந்து என்னும் கள்ள மதத்தில்' ஆடுகளை அடைப்பது போல அடைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். மேலும் பழந்தமிழ் அரசர் குடிகளில் ஒன்றான நந்த வமிசத்தைச் சேர்ந்தவர்களைப் புலையர் என்றும், பறையர் என்றும் கூறுவதையும், அவர்களைத் தாழ்ந்த சாதியார் என்று கூறுவதையும் அயோத்திதாசர் கிஞ்சித்தும் ஏற்கவில்லை. சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் நந்தன் ஒரு பௌத்த அரசனாகக் குறிக்கப் பெறுகிறார். மகத நாட்டு மன்னர் வம்சத்திலும் நந்தன் என்னும் மன்னன் உண்டு. கபிலவஸ்துவின் இளவரசனாக இருந்தவர்களில் ஒருவர் நந்தன் என்று இரேனியஸ், ஓல்டன்பர்க் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சமண, பௌத்தக் காலக் கணிப்புப்படி பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுக் கணக்கில் 26 ஆவது ஆண்டாக 'நந்தன' வருகிறது. அவ்வாண்டில் பிறக்கும் அரசரின் குழந்தைக்கு நந்தன் (தமிழில் நற்குழவி) என்று பெயரிடுதல் வழக்கமாக இருந்தது. 4 அவ்வாறு தியாகச் சாம்பான் மகளுக்கும், சோழ மன்னனுக்கும் மகனாகப் பிறந்த குழந்தைக்கு நந்தன் என்று பெயரிட்டதையும், அவன் சோழமண்டலம் அரசர்களில் ஒருவராக ஆட்சி செய்தவர் என்றும் தஞ்சை வேதநாயக சாஸ்திரி தொகுத்த ஓலைச்சுவடி (கி.பி. 1798) தெரிவிக்கிறது (கோகில அம்பல அன்பானந்தன், பக்கம் 17). சமண, பௌத்தச் சமயங்களை அழித்து, இந்தியாவின் மெய்ஞ்ஞானத் தெய்வத்தை (புத்தரை) மறைக்க அஞ்ஞானத் தெய்வங்களை உண்டாக்கி விட்டார்கள் என்று கூறும் அயோத்திதாசர், "ஒதுக்கப்பட்ட பூர்வத் தமிழர்களே உங்கள் உறக்கத்தை விட்டுப் பௌத்தரென்று வெளி வாருங்கள்" என்றும் அழைப்பு விடுக்கிறார்.

வீரநந்தன்:
தன்னைத் தாழ்ந்த சாதி என்று வேதியப் பார்ப்பான் சொல்வதை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அடிமையாக உழைப்பதும், தன் மக்களுக்கும், குல தெய்வத்திற்கும் துரோகம் செய்துவிட்டுப் பெருந் தெய்வத்தை (சிவனை) ஏற்று, யாகத்தில் மூழ்கி, தாழ்ந்த சாதி என்னும் கறையைப் போக்கிக் கொண்டு கைலாயம் ஏகும் நந்தனை அயோத்திதாசர் முற்றாக மறுக்கிறார்; வெறுக்கிறார். வேதியன் சொல்வதுபோல தாங்கள் தாழ்ந்த சாதியார் இல்லை என்றும், தாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்றும் நந்தனும், அவனைச் சேர்ந்தவர்களும் போராடி இருக்க வேண்டும்; அவர்கள் வீரர்களாக வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அயோத்திதாசரின் எதிர்பார்ப்பு.

அப்படி அவர் எதிர்பார்த்தபடி நந்தனை வீரனாகவும், பகுத்தறிவாளராகவும் காட்டும் நாடகத்தை ஒருவர் படைத்திருக்கிறார். அவர்தான் கவிஞர் புதுவைச் சிவம் (1908 - 1989). அவர் எழுதிய நாடகத்தின் பெயரே "வீரநந்தன்". இந்நாடகம் முழுவதும் நந்தனை ஒரு போராட்டக்காரராகவே காட்சிப்படுத்துகிறார் புதுவைச் சிவம். அதனாலேயே நந்தனுக்கு "வீரநந்தன்" என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். புராணக் கதைகளைப் பற்றிய மறு சிந்தனைகளின் விளைவாக, புரட்சிக்காரனான நந்தன், பார்ப்பனர்களால் பழிவாங்கப் படுவதாகக் கூறி நந்தன் வாழ்வு சீர்திருத்த வழியைச் சார்ந்ததே என்பதை நிறுவும் அடிப்படையில் இந்நாடகம் இயற்றப்பட்டுள்ளது.

1925 ஆம் ஆண்டு வாக்கில் தோற்றம் பெற்ற சுயமரியாதை இயக்கம், 1930ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி பெற்று, சென்னை மாகாணத்திலும், புதுச்சேரியிலும் இன உணர்வுச் சிந்தனைகள் உருவாகக் காரணமாக அமைந்தது. புதுமை, பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்களும், அவற்றின் பொருளும் தமிழ்பேசும் மக்களிடையே மறுமலர்ச்சிச் சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. திராவிட இன உணர்வும், திராவிடரின் வீழ்ச்சிக்கு ஆரியரே காரணம் என்ற எண்ணமும் மேலோங்கி, ஆரியக் கலப்புள்ள எவற்றையும் அவை எவ்வடிவத்தில் இருந்தாலும் எதிர்க்கும் அல்லது மறு சிந்தனைக்கு உள்ளாக்கும் போக்கும் நிலவின. இந்நிலைக்குக் கடவுளைப் போதித்த புராணங்களும், கடவுள் தன்மைக்கு அருகில் வைத்துப் போற்றப்பட்ட கலைகளும் கூட விதிவிலக்காகவில்லை. இப்புதிய அலை நாடக உலகிலும் வீசியது. பக்தியை விளக்கும் புராண நாடகங்களே பெரிதும் நிலவியிருந்த நாடக மேடைகளில் சமூக நாடகங்களும், சீர்திருத்த நாடகங்களும் உள்நுழைந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றன.  மேலும், புராணங்களை மறுத்துப் புதிய சிந்தனைப் போக்கில் அவற்றைச் சொல்லும் முயற்சிகளும் நடைபெற்றன. இம்முயற்சியில் முதலாவதாக, இரணியனைத் திராவிட மக்களின் பாதுகாவலனாகச் சித்தரிக்கும் பாரதிதாசன் இயற்றிய 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகத்தைக் குறிப்பிடலாம். இந்நாடகம் 1934 ஆம் ஆண்டு சென்னையில் மேடையேறியது. திராவிட இனத்தவரையும், தமிழ்ப் பண்பாட்டையும் இழித்துக் கூறுவதாகவும், ஆரியப் பண்பாட்டைப் போற்றுவதாகவும் உள்ள புராண, பக்தி இலக்கியங்களை, அவை தமிழிலக்கியமாக இருந்தாலும் கூட அவற்றைப் புறந்தள்ள வேண்டியது தமது கடமை என்று திராவிட இயக்கத் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். இதை மனதில் கொண்டு, "தமிழரின் வீழ்ச்சி அல்லது இராமாயணச் சாரம்" என்ற தலைப்பில், 1935ஆம் ஆண்டில், இராமாயணக் கதையைத் தமிழர் - ஆரியர் போராட்டமாக, நாடகக் கதையாக எழுதியுள்ளார் புதுவைச் சிவம். சற்றேறக்குறைய இக்கால கட்டத்தில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கிந்தனார் காலட்சேபம் என்ற பெயரில் ஒரு காலட்சேபத்தைத் தனது 'நல்ல தம்பி' திரைப்படத்தில் சேர்த்து அவரே நடித்திருந்தார். நந்தன் கதையைச் சீர்திருத்தி, கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் கல்வி கற்கச் செல்லும் 'கிந்தன்' என்பவரின் கற்பனைக் கதையாக மாற்றியிருந்தார். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் திராவிட இயக்கக் கருத்தியல் உள்ள திரைப்படமாக அது அமைந்திருந்தது.

மேற்குறிப்பிட்ட கருத்தியல்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து சீர்திருத்தக் காரராக மாறிய நந்தன் கதையைப் புதிய சிந்தனைப் போக்கில் அளிக்கும் முயற்சியே புதுவைச் சிவத்தின் வீரநந்தன் நாடகம் ஆகும். நந்தனாரை வீரநந்தன் ஆக்கியதும், வேத விற்பன்னர்களுக்கு மனித உரிமை குறித்து நந்தன் போதிப்பதும், புத்தரின் போதனையால் நந்தன் சீர்திருத்தவாதியாக மாறுவதையும், இந்நாடகத்தின் சிறப்பம்சங்களாகக் கொள்ளலாம். மனிதன் தாழ்ந்தவனல்ல என்று நந்தன் வாதிடுவதும், ஊர் மக்களிடம் நந்தன் சாதியை மறுத்துப் பேசுவதும், தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என நந்தன் கூறுவதும், நந்தன் புத்த தம்மப் போதனையை ஏற்பதும், கடவுளுக்குப் பலியிடுவதை வன்முறையால் தடை செய்வதும், தில்லையில் தீட்சிதர்கள் அக்கினிக் குண்டத்தில் தள்ளி விடுவதும், நந்தனார் சரித்திரத்தில் ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வீர நந்தன் நாடகத்தில் நந்தனும் அவரைச் சேர்ந்தவர்களும் தீண்டாமையால் துன்புறுத்தப் படுவதற்கும், பின் நந்தன் வஞ்சகமாகக் கோயிலுக்குள் தனியாக வரவழைக்கப்பட்டு அக்கினி குண்டத்தில் தள்ளப்படுவதற்கும் ஆரியப் பார்ப்பனர்களே காரணம் என்று மிக வெளிப்படையான நோக்கில் நாடகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மைக் கதை என்றும், புராணத்தில் வரும் நந்தன் கதை ஆரியப் பார்ப்பனரின் கபட நாடக 'அக்கிரமக் கதை' என்றும் நாடக இறுதிக் காட்சி அமைப்பில் விளக்கமும் தரப்பட்டுள்ளன. விளக்கம் என்னவென்றால், நந்தனின் வழக்கமான பெரிய புராணக் கதையைக் காலட்சேபம் செய்யும் பாகவதனை மறித்து வீரன் என்பவன், 'நந்தன் பார்ப்பனர்களால் பழிவாங்கப்பட்ட கதையே உண்மைக் கதை' என்று கூறுகிறான். பாகவதன், 'நான் வயிற்றுப் பிழைப்புக்காரன்' என்கிறான். வீரனோ, 'ஆரியரின் புரட்டு இது' என்று கூறி 'இனி பழங்கதை பேசலாகாது' என்று பாகவதனை எச்சரித்து அனுப்புகிறான். அந்த நாடகத்தின் இறுதிக் காட்சி இப்படி முடிகிறது. இக் கதையை முழுவதுமாகத் திராவிடர் - ஆரியர் பிரச்சனையாக புதுவைச் சிவம் மாற்றிவிடுகிறார். நந்தனைக் கொலை செய்வது மட்டுமில்லாமல் நந்தனைப் புஷ்பப் பல்லக்கு வந்து கயிலைக்கு அழைத்துச் செல்வதாகச் சேரி மக்களிடம் கூறி அவர்களை நம்ப வைப்பதும், இக்கதையையே காலங்காலமாகக் கூறிவருவதும், 'ஆரியப் பார்ப்பனரின் கபடநாடகமே' என்று இறுதியில் புதுவைச் சிவம் நாடகக் காட்சிகளை அமைத்திருக்கிறார். அவருடைய காலக் கண்ணாடியில், வீரநந்தன் நாடகம், ஒரு தன்மானப் புரட்சி வீரனை, அயோத்திதாசர் காட்டிய தமிழ் பௌத்த அடையாளத்துடன், ஆரியத்தை வீழ்த்தும் ஒரு போர்வாளாகக் காட்டி மின்னுகிறது.

வீர நந்தன் நாடகம், 1940 - 1945 ஆம் ஆண்டுகளின் இடையில் உருவாக்கம் பெற்றதாகப் புதுச்சேரி அரசு வெளியிட்ட *"புதுவைச் சிவம் நாடகங்கள்" என்ற நூலில் குறிக்கப்பெற்றுள்ளது. இந்நாட்களில் பண்டிதர் அயோத்திதாசரைக் கவிஞர் புதுவைச் சிவம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அயோத்திதாசர் கற்பனையில் வெளிப்படுத்திய, போராட்டக் குணமுள்ள நந்தனைப் புதுவைச் சிவம் கதாபாத்திரமாகத் தன் நாடகத்தில் உலவ விட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வே எனலாம். சமூக அக்கறையும், சீர்திருத்த எண்ணமும் கொண்டவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து இருப்பதற்கு அயோத்திதாசரும், புதுவைச் சிவமும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்துள்ளனர். 

கவிஞர் புதுவைச் சிவம் 1945 - 1950 காலகட்டத்தில் எழுதிய வீர நந்தன் நாடகம், புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை நடத்திய கவிஞர் புதுவைச் சிவம் பிறந்தநாள் விழாவிலும், புதுச்சேரி நாடக விழாக்களிலும் பன்முறை நடைபெற்றுள்ளது. புதுவைப் பல்கலைக் கழகத்தில், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கலை அரங்கில் 8.5.2019 அன்று வீர நந்தன் நாடகம், நாடகத்துறை ஆய்வு மாணவர்களைக் கொண்டு நவீன நாடகமாக நிகழ்த்தப்பட்டது. கவிஞர் புதுவை சிவம் எழுதிய 22 காட்சிகள் கொண்ட நாடகக் கதையை ஆறு காட்சிகளாக மாற்றி இக்கட்டுரை ஆசிரியர் வசனமும் எழுதியுள்ளார். அதில் ஐந்தாம் காட்சியின் வசனங்கள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. "வீர நந்தன்" - நாடகம்:

நாடகக் காட்சி 5 


(நந்தன் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். திடீரென்று அமைதியும், அருளும் சூழ்ந்த வேறோர் இடத்திற்கு வந்ததாக உணர்கிறான். தொடுவானம் போன்ற தூரத்தில் இருந்து புறப்பட்ட ஒளியில் புத்தரின் உருவம் அவன் கண்ணுக்கு மெல்ல மெல்லப் புலனாகிறது. நந்தன் மெல்ல அவரை நெருங்குகிறான். அவரின் பாதத்தில் வீழ்ந்து…)


நந்தன்: ஐயனே! ஐந்திரனே! அறவாழியே! என் வணக்கத்தை ஏற்று என்னைத் துயரத்திலிருந்து காத்தருளுங்கள்! 

புத்தர்: நந்தனே! நீ துயரமாக நினைப்பது என்ன?

நந்தன்: ஆதி பகவனே! நானும் என்னைச் சேர்ந்தவர்களும் இச்சமூகத்தில் மிகவும் இழிவு படுத்தப் படுகிறோம். வேண்டுதல் வேண்டாமை இலாதவனே! இருபிறப்பாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு கூட்டத்தார் எம்மை ஒரு பிறப்பாளர் என்று கூறி அடிமையாக ஆட்படுத்துகின்றனர் அறிவனே!

புத்தர்: ஒரு பிறப்பாளனோ அல்லது இருபிறப்பாளனோ, எவன் ஒருவன் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்ட மறுக்கிறானோ, பிறர்க்குத் தீங்கு விளைவிக்க நினைக்கிறானோ, அவனே கீழ்ச்சாதி ஆவான். எவனொருவன் கிராமங்களையும் குடியிருப்புகளையும் அழித்து நாசப்படுத்துகிறானோ, தனக்குச் சொந்தமில்லாத பொருட்களை எடுத்துக் கொள்கிறானோ, பொய் சொல்கிறானோ, சக மனிதர்களை மதிக்காமல் இருக்கிறானோ, அவனே கீழ்ச்சாதி ஆவான். எவனொருவன் வசதி வாய்ப்போடு இருந்தும் ஏழை எளியவர்க்கு உதவ மறுக்கிறானோ, செல்வனாக இருந்தும் தன் வயதான தாய் தந்தையரைக் காப்பாற்றாமல் இருக்கிறானோ அவனே கீழ்ச்சாதி ஆவான். பிறப்பால் எவனும் பிராமணனும் அல்ல. எவனும் கீழ்ச்சாதியானும் அல்ல. 

நந்தன்: மலர்மிசை ஏகிய மகானே! தங்களின் அறிவுரை கோலோச்சிய இந்த நாட்டில் இன்னும் பேதங்கள் நிலவுவதைத் தாங்கள் அறிவீர் அல்லவோ? தங்கள் தம்மத்தை மீறிய வல்லமையும் உண்டோ விநாயகனே? 

புத்தர்: நான் கடவுள் அல்ல. கடவுள் அவதாரமும் அல்ல. நான் கூறும் கருத்துக்கள் கடவுள் என நம்பப்படும் ஒருவரின் வார்த்தைகள் அல்ல. அவரின் அருள் பெற்றவை அல்ல. அவரால் வெளிப்படுத்தப் பட்டவையும் அல்ல. சாதாரண மனிதன் ஆகிய என்னால் அனுபவத்தில் உணரப் பட்டவை. இவை எந்தவிதமான கேள்விக்கும் உட்படுத்தப்படலாம். ஏற்கப்படலாம். ஏற்க மறுக்கவும் படலாம். 

நந்தன்: தனக்குவமை இல்லா சாத்தர் பிரானே! சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒன்று இருப்பதாகக் கூறி, மோட்சத்தைக் கற்பித்து, சடங்குகளை வற்புறுத்தி எங்களை சழக்கர்கள் ஆக்கிவிட்டார்கள் ஜகந்நாதனே!

புத்தர்: நந்தா கடவுள் என்பது ஒரு யூகக் கருத்து மட்டுமே! கடவுள் நம்பிக்கை எந்தப் பயனையும் அளிப்பதில்லை. அது பெரும் துன்பத்தைத் தான் விளைவிக்கும். இவ்வுலகமும், உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை என்றால் உலகச் செயல்பாடுகளில் மனிதனின் பங்கு ஏதும் இருக்காது. கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என்பது போலவே ஆத்மாவை நம்புவதும் மூட நம்பிக்கையே. அறிவின் அடிப்படையில் கடவுள், ஆன்மா, மோட்சம் என்பவை கற்பிக்கப்பட்டவையே. தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் பேணாது வெறும் சாத்திரம் சடங்குகளைக் கடைப்பிடிப்பது அறிவீனமே!

நந்தன்: எண்குணத்தோனே! இவைதான் தங்களின் தம்மம் என்றால் இன்று தங்கள் தம்மம் தவறாகக் கற்பிக்கப்படுகிறதே!

புத்தர்: நாம் காலச்சக்கரத்தில் ஐக்கியப்பட்டு இருக்கிறோம். காலச்சக்கரம் சுழலக் கூடியது. அதன் ஈர்ப்பு விசை தம்ம சக்கரத்தோடு பொருந்தியது. இந்த இந்திர நாட்டை வைதீகம் ஆளும் நிலை வந்தால் தம்மசக்கரம் வைதீகச் சக்கரமாகக் கற்பிக்கப்படும். அந்த நிலை வரும்போது நீங்கள் மட்டுமல்ல நானும் அந்நியமாவேன்!

நந்தன்: ஐயனே! அனைத்தும் உணர்ந்த அவலோகிதனே! துக்கத்திலிருந்து விடுதலை பெறவே உன்னைச் சரணடைந்தேன். உங்களையும் சூழ்ச்சி சூழுமானால் எங்கள் நிலை யாதாகும் அறிவனே!

புத்தர்: நந்தா ஆயுதத்தோடு வந்து ஒருவன் பூமியை வெட்டி மண்ணைத் தோண்டுகிறான். பூமி அவன் மீது கோபப்படுமா?

நந்தன்: ஐந்தவித்த ஆற்றல் உடையவனே! அவ்வாறு பூமி செய்யாது. 

புத்தர்: தூரிகை, மை முதலானவைகளுடன் ஒருவன் காற்றில் ஓவியம் வரைய முயல்கிறான். அது முடியுமா?

நந்தன்: முடியாது முதல்வனே! 

புத்தர்: கங்கையை நெருப்பிட்டு ஒருவன் கொளுத்த முயல்கிறான். அது இயலுமா? 

நந்தன்: இயலாது இறைவனே! 

புத்தர்: நந்தா! பூமி எவ்வாறு வருந்துவதில்லையோ, காற்று எவ்வாறு இடம் தருவதில்லையோ, கங்கை எவ்வாறு தீயில் சிக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறதோ அது போலவே உங்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளையும், அவதூறுகளையும் பொறுத்துக் கொள்ளவேண்டும்! 

நந்தன்: வாலறிவனே!  இதற்கு மேலுமா நாங்கள் பொறுமை காக்க வேண்டும்? 

புத்தர்: ஆம் நந்தனே! எதையும் பொருட்படுத்தாமல் பொறுமை காத்து நீங்கள் உயிரினங்கள் மீது அன்பும், கருணையும் செலுத்தவேண்டும். அக்கருணை அளவற்றதாகவும், எல்லையற்றதாகவும் அமையவேண்டும். அவ்வாறு செய்வதில் உங்கள் மனம் கங்கையைப் போல் ஆழமாகவும், பூமியைப் போல் உறுதியாகவும், காற்றைப்போல் தூய்மையானதாகவும் இருக்கவேண்டும். காலச்சக்கரத்தைத் தான் தம்மச் சக்கரமாக உருவகப் படுத்தி இருக்கிறேன். காலச்சக்கரம் சுழலக் கூடியது. அது தம்மச் சக்கரத்தைச் சுழலவும் செய்விக்கும். நிலை நிறுத்தவும் செய்யும். எதையும் எதிர் கொள்ளுவாய் நந்தா! உன் மனமே உன்னை ஆளட்டும்!

          புத்தம் சரணம் கச்சாமி!
          சங்கம் சரணம் கச்சாமி!
          தர்மம் சரணம் கச்சாமி!அடிக்குறிப்புகள்:
1.  கந்தபுராணத்தின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரை என்று ஆய்வுகள் கூறுகின்றன. திரு அருணாசலம் என்பவர் இதன் காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு என்று தோராயமாக வரையறை செய்துள்ளார். திருவிளையாடற் புராணம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டு என்றும், பெரியபுராணம் எட்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையிலும் காலக் கணிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆய்வுகள் மேலும் தொடரக் கூடும். (விக்கிப்பீடியா). (இவற்றை இயற்றிய புலவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த மன்னர்களை வைத்து இவர்களின் காலமும் குறிக்கப்படுவதால் ஆய்வுகளில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன).

2.  பக்தி இலக்கியக் காலத்துப் பிதாமகர்களான சமயக் குரவர்கள் நால்வரின் காலமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. புராணங்களில் வரும் சில நிகழ்வுகளை வைத்தும், அவர்கள் வாழ்ந்த காலத்து மன்னர்களின் ஆட்சிக் காலத்தை வைத்தும் இப்புலவர்களின் காலமும் வரையறை செய்யப் பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தார் என்ற குறிப்பைக் கொண்டு, அவரது காலம் கி.பி. 640 - 656 என்று குறிப்பிடப்படுகிறது. இவரது காலத்தை வைத்தே, இவரினும் வயது முதிர்ந்தவரான திருநாவுக்கரசர் (அப்பர்) காலம் கிபி 580 என்று கணக்கிடப்பட்டு கி. பி. 580 - 660 என்று அவரது காலம் வரையறை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நரசிம்மவர்மர் ஆட்சிக்காலத்தை (கி. பி. 700 - 728) வைத்துச் சுந்தரர் காலம் எட்டாம் நூற்றாண்டு என்றும் குறிக்கப் பெறுகிறது. இரண்டாம் வரகுண பாண்டியன் முடிசூடிய காலத்தை (கி. பி. 863) வைத்து மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுகிறது (விக்கிப்பீடியா).

3.  சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகை "சிறுத்தொண்டர் தொகை" என்றும் குறிக்கப்படுகிறது (சுந்தரராஜ் மாணிக்கம் பக். 33).

4.  ஆதன் என்பது தமிழ் மரபில் தோன்றிய தொன்மையான பெயர். தலைவன் என்றும், அரசன் என்றும் பொருள்படும். "வாழியாதன்" என்று சங்க இலக்கியங்கள் தலைவனை விளிக்கின்றன. "நெடுஞ்சேரலாதன்" போன்ற மன்னர்கள் பெயர்களும் தமிழிலக்கியத்தில் வழங்கி வருகின்றன. ஆகவே ஆதனூர் என்பது ஒரு காலத்தில் அரசனாக இருந்த ஒருவரின் பெயரால் வழங்கப்பட்ட ஊராகவும், அம்மக்கள் அவ்வரச குலத்தவராகவும் இருந்திருக்கலாம் என்பது இக்கட்டுரை ஆசிரியரின் எண்ணம். மேலும், சித்தர் தத்துவங்களில், ஆன்ம தத்துவங்கள் 24 ஆகக் குறிக்கப் பெறுகின்றன. ஆனால் முற்காலக் கபிலரின் சமயமான எண்ணியம் 24 ஆன்மத் தத்துவங்களோடு 25 ஆவது பொருளாக நித்தியமான ஒருவன் ஆதன் (புருடன்) என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. (குணா: எண்ணியம்: பக். 1).


உதவிய நூல்கள்:
1.  க. அயோத்திதாச பண்டிதர், நந்தன் சரித்திர தந்திரம், 2017, அயோத்திதாசர் பதிப்பகம், சென்னை. / க. அப்பாதுரை, நந்தனாரும் இந்து மதப் புராணங்களும், 2017, அயோத்திதாசர் பதிப்பகம், சென்னை.
2.  பிரமிளா குருமூர்த்தி, கோபாலகிருஷ்ண பாரதியார், 2018, சாகித்திய அகாடமி, புதுடெல்லி. 
3.  மா. உத்திராபதி, காலந்தோறும் நந்தன் கதை, 1989, நேத்ரா வெளியீடு, சென்னை. 
4.  புதுவைச் சிவம் நாடகங்கள், 2000, கலை பண்பாட்டுத்துறை, புதுச்சேரி அரசு. 
5.  முனைவர் பெ. விஜயகுமார், அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள், 2021, பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை. 
6.  முனைவர் சிவ இளங்கோ, கவிஞர் புதுவைச் சிவத்தின் சீர்திருத்த நாடகங்கள், 2012, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
7.  தர்மானந்த கோசம்பி, பகவான் புத்தர், 2018, சாகித்திய அகாடமி, புதுதில்லி.
8.  முனைவர் சுந்தரராஜ் மாணிக்கம், காலந்தோறும் நந்தன், 1991, தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை.
9.  குணா, எண்ணியம், 2013, தமிழக ஆய்வரண், பெங்களூரு.

-------------------
No comments:

Post a Comment