Friday, May 28, 2021

பேராசிரியர் தொ. பரமசிவன் நினைவுகள்- க.பூபாலன், சிங்கப்பூர்


கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே கொரோனா என்னும் கொடுந்தொற்று நோயினால் உலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அதிலிருந்து இன்னும் மீளாத சூழலில், 2020 டிசம்பர் 24 அன்று அன்று தொ.ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. தமிழர் வரலாற்று அறிஞரும் திராவிடப் பண்பாட்டு ஆய்வாளருமான தொ.ப. அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் அதேவேளையில், அவரின் கருத்தியலையும் ஆய்வுப் படைப்புகளையும் குறித்துப் பகிர்ந்துகொள்வது அந்த அறிஞருக்கு நாம் செலுத்தும் பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்ற நோக்கத்தில் உருவானதே இக்கட்டுரை.

தமிழ்நாட்டிலுள்ள நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950-ல் பிறந்த தொ.பரமசிவன் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பொருளாதாரத்தில் பெற்றார். பிறகு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்திற்காகத் தமிழ் பயின்றார். மேற்படிப்பை முடித்ததும் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி மற்றும் மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிறகு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர்ந்தவர், 1998 முதல் 2008 வரை அங்குத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். பணிக்காலத்தில் ஏராளமான மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியிருக்கிறார்.

அவர் தமிழாசிரியராக மட்டும் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தால் இன்று இவ்வளவுதூரம் அவரைக்குறித்து நாம் பேசிக்கொண்டிருப்போமா என்பது அய்யமே. தமிழ்க் கற்பித்தலைத் தாண்டி தமிழர் பண்பாட்டு ஆய்வுப் பணிகளிலும் தொ.ப. தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1976இல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணியில் சேர்ந்தபோது, அவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, ‘கோயிலைப் பற்றி ஆய்வு செய்’ என்று சொல்லியுள்ளார். அதன்படி ‘அழகர்கோயிலை’ தொ.ப. ஆய்வுசெய்தார். 

எதையும் புதிய பார்வையுடனும் வரலாற்றுத் தேடலுடனும் சிந்திக்கக்கூடியவராக இருந்த தொ.ப., கள ஆய்வு என்பதன் பெருமையை அப்போது உணரத்தொடங்கினார். புத்தகங்களுக்குள்ளேயே, நூலகங்களுக்குள்ளேயே ஆராய்ச்சி என்ற நிலைமாறி, தெருவையும் ஆய்வையும் இணைக்கிற கள ஆய்வினை அவரது ‘அழகர்கோயில்’ வரலாற்று ஆய்வில் சாத்தியமாக்கினார். அந்த ஆய்வு அவரைப் பல இடங்களுக்கு இழுத்துச் சென்றது. அதற்காக அவர், குடும்பத்தை ஊரிலே விட்டுவிட்டு, கோயிலைப் பற்றி ஓர் ஆண்டுக்காலம் கள ஆய்வு செய்துள்ளார். இன்றைக்கும் அவரின் அந்த ஆய்வுமுறை ஆய்வாளர்கள் மதிக்கக் கூடிய ஒன்றாக நீடிக்கிறது. 

தெருவிலே சந்திக்கிற எல்லா மனிதர்களும் வாசிப்பதற்குரிய புத்தகங்களே என்ற ஞானத்தை அப்போது பெற்றதாகத் தொ.ப. கூறுகிறார். கோயிலைப் பற்றிய தொ.ப.வின் ஆய்வுடைய தனித்தன்மை என்ன? என்ற கேள்விக்குத் தொ.ப.வே இவ்வாறு பதில் கூறுகிறார்:
“நான் அழகர்கோயிலைப் பற்றிக் கள ஆய்வு செய்தேன். அதைச் சமூகவியல் பார்வையுடன் செய்தேன். அதற்கு முன்பு கோயில் ஆய்வுகள் என்றால் கட்டட ஆய்வுகள், கலை ஆய்வுகளாகவே இருந்தன. அதைவிட்டுக் கோயிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்லப்படவில்லை. என்னுடைய ஆய்வு முழுக்க முழுக்க கோயிலுக்கும் மக்களுக்குமான தொடர்பிலே மையம் கொண்டது.

நம் நாட்டில் மிகப்பெரிய சமூக நிறுவனம் என்பது கோயில்தான். மற்ற சமூக நிறுவனங்கள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. காலனி ஆட்சியில் அழிந்ததுபோக மிஞ்சியது கோயிலும் சாதியும் தான். இந்த இரண்டு சமூக நிறுவனங்களுக்கிடையே உள்ள தொடர்பைப் பற்றியதுதான் என்னுடைய ஆய்வு. குறிப்பிட்ட நான்கு சாதிகளுக்கும் அழகர்கோயிலுக்கும் உள்ள உறவையே அந்த ஆய்வில் விவரித்திருக்கிறேன்”.

அவரின் ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களும் மிகச்சிறந்த ஆய்வு என்ற முடிவை எட்டியதால், மதுரைப் பல்கலைக்கழகம் அதை நூலாக வெளியிட்டது. இந்த வரலாற்று ஆய்வுநூல்தான் தொ.ப. தனித்த அடையாளத்துடன் தமிழர்களிடத்தில் அறிமுகமாக அடிப்படைக் காரணமாக அமைந்தது. ‘அழகர்கோயில்’ என்ற அந்தப் பண்பாட்டு ஆய்வுநூல் வெளிவந்தபோது தொ.ப.வுக்கு 29 வயது. அவர் அவ்வாய்வில் கையாண்ட கள ஆய்வு முறையை சமூகவியல் பார்வையுடன் அவரின் அடுத்தடுத்த படைப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும், கட்டுரைகளுக்கும் அடித்தளமாக அமைத்துக்கொண்டார். 

தொ.ப நம்முடைய அன்றாட வாழ்வில் உள்ள நம்பிக்கைகள், சமயங்கள், பண்பாடுகள் சம்பந்தப்பட்ட செய்திகள், நாட்டார் தெய்வங்கள், அதன் வழிபாட்டுமுறைகள், ஆய்வுகள் என மானுடவியல் கள ஆய்வு முறையின் வழியாக தமிழர்களின் வரலாற்றை எழுதி ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், தெய்வங்களும் சமூக மரபுகளும், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், செவ்வி (நேர்காணல்கள்), விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள் போன்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். 

தொ.ப. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்து வளர்ந்தவர். குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. அவர் பிறந்த ஊரின் சூழலும் பின்புலமும்தான் அவரை மாறுபட்டுச் சிந்திக்கத் தூண்டியது. மேலும் அக்காலகட்டத்தில் திராவிட இயக்கத்தில் உருவான வாசிப்புப் பயிற்சியும் முக்கிய பங்காற்றியுள்ளது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம், அதிலும் முதல் தலைமுறையில் கல்வி பயின்றவர்களிடம், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

“என்னைப் போன்றவர்களுக்கு விளையாட்டைப் போலவே, வாசிப்பும் பழக்கமானது; அதிலும் வாசிப்பு, அரசியல் வாசிப்பாக இருந்தது. நான் பத்து வயதிலேயே முரசொலி வாசிக்கத் தொடங்கிவிட்டேன். நான் மட்டும் அல்ல, சராசரி வாசிப்புத் தன்மை அன்றைக்குத் தமிழ்நாட்டிலே நன்றாக இருந்தது. 1962ஆம் ஆண்டுத் தேர்தலில் அண்ணா தோற்றுப் போனதற்கு நாங்கள் நான்கு ஐந்து நண்பர்கள், (எட்டாம் வகுப்பு மாணவர்கள்) பள்ளி மைதானத்திலே நின்று, ‘அண்ணா தோற்றுப்போய்விட்டாரே’ என்று அழுதோம். எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே அந்த அளவுக்கு வாசிப்பு, அரசியல் ஈடுபாடு இருந்தது” என்று தொ.ப. குறிப்பிடுகிறார்.

தொ.ப. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளர். பெரியாரியச் சிந்தனையாளர். தந்தை பெரியாரை அழைத்து 1970களில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக நிகழ்ச்சியை காரைக்குடியில் நடத்தியவர்களுள் ஒருவர். தன் இறுதிமூச்சு வரை பெரியாரிய சிந்தனையிலிருந்து மாறாமல் இருந்தவர். 95 விழுக்காடு நான் “பெரியாரிஸ்ட்”தான் என்று அழுத்தமாகக் கூறியவர். “கலை, பண்பாடுகள் பற்றி பெரியார் அவர்கள் புரிந்து கொண்டதில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. எனினும், அவரது காலம் வேறு என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று தொ.ப. சொல்லியுள்ளார். அதேபோல் தனக்குத் தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று தெளிவாகக் கூறியதோடு இறுதிவரை அக்கொள்கையைக் கடைப்பிடித்தும் வாழ்ந்தவர்.

தொ.ப. ஒரு “பெரியாரிஸ்ட்”, திராவிட இயக்கத்தின் தாக்கம் உள்ளவர் அப்படி இருக்கையில் அவர் மேற்கொள்ளும் பண்பாட்டு ஆய்வுகள் பெரியாரின் கருத்துகளுக்கு முற்றிலும் முரண்படாதா? என்ற கேள்விக்கும் தொ.ப.வே பதில்  கூறுகிறார்:
“மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். பெரியார், ஆகம வழிப்பட்ட விழாக்களையும் பெரிய கடவுள்களான பிள்ளையாரையும் ராமனையும் எதிர்த்தாரே தவிர, அவர் சுடலைமாடனையும் கருப்பசாமியையும் காத்தவராயனையும் எதிர்த்தாரா? இல்லையே… ஏனென்றால் பெரியாரின் நோக்கம் என்பது மானுட விடுதலை என்பதுதான். ஆகமவழிபாடு, ஆகமநெறிக்குட்பட்ட நிறுவனங்கள், தெய்வங்கள், அதற்குரிய சடங்குகள் தோன்றும்போதுதான் கருமார்கள் உருவாகி அடிமைத்தனமும் சேர்ந்தே வருகிறது. நாட்டார் தெய்வ வழிபாட்டில் அடிமைத்தனம் கிடையாது” என்று விளக்கம் கூறியிருக்கிறார்.

மேலும், “நாட்டார் மரபு என்பது, எப்பொழுதும் வைதீக மரபுக்கு எதிரானது. வைதீக மரபு எப்பொழுதும் அதிகாரம் சார்ந்தது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளாதது நாட்டார் மரபு. இதில் ஆன்மீக அதிகாரம் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தனித்த அதிகாரம் கொண்ட பூசாரி யாருமில்லை. ஒரு மனிதர், பூசை வேளையில் மட்டுமே நம்மைவிட்டுச் சற்று விலகி இருக்கிறார். பூசை முடிந்ததும் மீண்டும் நம்மோடு இணைந்து கொள்கிறார். இங்கு அதிகாரமோ ஏற்றத் தாழ்வோ இல்லை.

எனக்குத் தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவற்றை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன். கோவிலுக்குப் போகும் அனைவரும் தினசரி சிவபூசையோ விஷ்ணுபூசையோ செய்கிற மக்கள் அல்ல. கோயில் என்பதும் திருவிழா என்பதும் நிறுவனங்கள். திருவிழாக்களின்றி ஒரு சமூகம் இயங்கமுடியாது. திருவிழாக்கள் ஒரு சமூகம் இளைப்பாறிச் செல்கிற இடமாக உள்ளது. அதுதான் கோயிலும்கூட. இந்தக் கோயில்கள் அதிகார மையமாக மாற்றப்பட்டபோது பெரியார் அதைக் கண்டனம் செய்தார்” என்றும் தொ.ப தன் புரிதலை முன்வைக்கிறார். 

பண்பாடு என்பது மதம் சார்ந்தது அல்ல என்றும் அது நிலம் சார்ந்தது என்று தொ.ப. தெளிவுபடுத்துகிறார். ஏனென்றால் உலகில் மதங்களெல்லாம் உருவாகிச் சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் பண்பாடு உருவாகிப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மதம் என்பது ஒரு நிறுவனக் கட்டுமானம். அது நிறுவனமாக மாறுவதற்கு முன்னாலேயே, மனிதன் எப்பொழுது மனிதனானானோ அப்பொழுதே ஒரு பண்பாடு உருவாகிவிட்டது. இந்தப் பண்பாடு நிலம் சார்ந்துதான் உருவாகிறது.

எடுத்துக்காட்டாகச் சொல்லுவதானால் திராவிடப் பண்பாடு, அரேபியப் பண்பாடு, சீனப் பண்பாடு, தென்னமெரிக்க மக்களின் பண்பாடு என்று பல்வேறு வகையான நிலம் சார்ந்த பண்பாடுகள் உருவாகின. இதை வரலாற்றிலே படிப்பதாக இருந்தால் கூட மஞ்சளாற்றங்கரை நாகரிகம், நைல் நதிக்கரை நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், காவிரிக்கரை நாகரிகம் என்றுதான் படிக்கிறீர்கள். எனவே பண்பாடு என்பது நிலம் சார்ந்தது.

திராவிடம் பற்றி தொ.ப குறிப்பிடுகையில், திராவிடம் என்பது அரசியலைத் தாண்டிய பண்பாட்டு அர்த்தம் கொண்டது என்றும் அது இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது என்றும் கூறுகிறார். “நான்கு தென்மாநிலங்களிலுள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமை நிலவுகிறது. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். முதலில் தாய்மாமனுக்கான மரியாதை, இரண்டாவது தாய்த்தெய்வ வழிபாடு, மூன்றாவது இறந்த உடலுக்கான மரியாதை. இந்த நான்கு மொழிக்காரர்களுக்கிடையே இன்றும் இவை தொடர்கின்றன”. இது போன்று இன்னும் பல சமூக அரசியல் சார்ந்த பார்வைகளைப் புதிய கோணங்களில் விளக்கியுள்ளார். 

மேற்கூறிய தொ.ப.வின் கருத்துகள் பனிப்பாறை நுனிபோல ஒரு சிறுபகுதி மட்டுமே. அவரது கட்டுரைகளையும் ஆய்வுநூல்களையும் அகழ்ந்து வாசித்தால் ஏராளமான தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.  நாட்டார் தெய்வங்கள் குறித்த பண்பாட்டு ஆய்வுக்காக கால்நடையாகவே பெரும்பயணம் மேற்கொண்ட அவருக்கு, நீரிழிவு நோய் காரணமாக நடக்க இயலாத சூழல் உருவானது மனதளவில் ஒரு சோர்வை உண்டாக்கி இருக்கவேண்டும். தன் பாளையங்கோட்டை வீட்டிலேயே இருந்த அவர் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக 2020 டிசம்பர் 24 அன்று மறைந்தார். எழுத்தாளர், சிந்தனையாளர், பண்பாட்டு ஆய்வாளரான தொ.ப.வின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் தொ.ப.வுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், "பகுத்தறிவாளர்கள் பக்தியைப் பேசமாட்டார்கள். பக்தி இலக்கியம் படிக்க மாட்டார்கள். ஆனால், தொ.பரமசிவன் பெரியாரைப் பற்றியும் பேசுவார், பெரியாழ்வாரையும் பற்றிப் பேசுவார். பல்துறை வித்தகர். மானுடவியல் சார்ந்து இயங்கியவர்கள் தமிழகத்தில் குறைவு. ராகுல சாங்கிருத்தியாயனுக்குப் பிறகு, மயிலை சீனி வேங்கடசாமிக்குப் பிறகு தொ.பரமசிவனை நாம் வைக்கமுடியும். கடவுள் மறுப்பை மனதில் கொண்டிருந்தாலும் கோயில்கள் குறித்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்தவர்” என்கிறார். கு.ஞானசம்பந்தன் தொ.ப.விடம் கடவுள் இல்லையா? என்று கேட்டபோது, ‘நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நல்லது என்றுதான் சொல்கிறேன்’ என்று தொ.ப. கூறியதுதான் பின்னாளில் ‘தசாவதாரம்’ திரைப்பட வசனமாகப் புகழடைந்தது. 

தொ.ப. தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்காக சமஸ்கிருதமும் பயின்றுள்ளார். தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றான அழகர்கோயிலை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல் வைணவத்தையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்துள்ளார். வைணவத்தின் தத்துவார்த்தமான உள்ளடுக்குகளின்‌ மீது புது வெளிச்சம்‌ பாய்ச்சியவர்‌ அவர் என்று நடிகர் கமலஹாசன் தொ.ப. மறைவுக்கு எழுதிய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “அவருக்குக்‌ கடவுள்‌ நம்பிக்கை இல்லை. ஆனால்‌, தனது நம்பிக்கையையும்‌ ஆய்வையும்‌ போட்டுக்‌ குழப்பிக்கொள்ளாத அந்தச்‌ சமநிலையே அவர்‌ மீது எனக்குப்‌ பிரேமையை உருவாக்கியது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அய்ரோப்பாவில் உள்ள ஜெர்மனியில் இயங்கி வரும் தமிழ் மரபுடைமை அறக்கட்டளை (Tamil Heritage Foundation International) என்ற பன்னாட்டு அமைப்பின் சார்பாக தொ.ப அவர்களைப் பாராட்டி 2015ஆம் ஆண்டின் ‘சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்’ என்ற விருதினைக் கொடுத்துள்ளார்கள்.  தொ.ப. மறைந்த பின்பு, 2020 டிசம்பர் 27 அன்று ஜெர்மனியிலிருந்து தமிழ் மரபுடைமை அறக்கட்டளையின் சார்பாக நினைவு அஞ்சலிக் கூட்டத்தை காணொளி வாயிலாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் பேசிய அறக்கட்டளையின் தலைவர் முனைவர்.சுபாஷிணி அவர்கள் நினைவுகூறும்போது தொ.ப.வுக்குப் பெரியாருடன் எடுத்துக்கொண்டதுதான் மிகவும் பிடித்தமான புகைப்படம் என்று குறிப்பிட்டார். 


“பெரியார் கொள்கைகள் ஒருபோதும் சாகாது. மானுட விடுதலை ஒன்றுதான் பெரியாரின் நோக்கம். அதற்கு எதிரான அத்தனை அம்சங்களையும் அவர் எதிர்த்தார். அதனால் யாரெல்லாம் மானுட விடுதலையை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பெரியாரிடம் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு” என்று கூறி பெரியாரியச் சிந்தனையாளராகத் திகழ்ந்த தொ.பரமசிவன், பெரியார் நினைவு நாளிலேயே மறைந்தார் (டிசம்பர் 24).

நேர்மையோடு திறனாய்வு செய்வதில் பெரும் பங்காற்றிய சீரிய சிந்தனையாளர்.  தொல் படிமங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்களிலிருந்து மட்டுமே வரலாற்றுத் தொன்மங்களைப் பார்க்கும் ஆய்வுச்சூழலை மாற்றி, நாட்டார் வழக்கு பற்றிய கதையாடல்களின் வழியாகப் பொதுமை நெறியில் நின்று விளிம்புநிலை மக்களின் பண்பாட்டில் இருந்து தமிழர் பண்பாட்டைக் கட்டியெழுப்பி மீட்டுருவாக்கம் செய்தவர். 

புத்தாக்கச் சிந்தனையோடு பல நூல்களை எழுதி, செம்மொழித் தமிழுக்கும், தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் ஒப்பற்ற தொண்டு புரிந்த மாமேதை பேராசிரியர் தொ.பரமசிவன். அந்த சிறந்த ஆய்வாளரின் நூல்களை நாம் படித்துப் பயன்பெற வேண்டும். அவருக்கு சிங்கப்பூரிலும் ஒரு நினைஞ்சலிக் கூட்டம் நடத்தி மரியாதை செலுத்தவேண்டும்.

No comments:

Post a Comment