Thursday, October 18, 2018

தமிழ்ப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள் கருத்தரங்கம் - நிகழ்வுத் தொகுப்பு

—   இரா.குமரகுருபரன்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று உலகப்பொதுமறை கூறும். தமிழகத்து நாட்டுக்கலைகளில் சதிர் மறைந்து பரதநாட்டியம் வளர்ந்தது.  சமஸ்கிருதம் நல்ல கலை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து வெற்றிகண்டது. பரதக்கலை இதைப்பின்பற்றியது. சரித்திரமற்ற அகதிகளாக நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருவது போன்று, பூர்வகுடித்தொடர்பின்றி  உள்நாட்டில் தமிழ்மக்கள் அகதிகளானோம்! நம்மை மீட்டெடுக்க வேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்.

தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி ஐடி துறை சம்பாத்தியத்தில் தமது நேரம் சக்தியைச் செலவிடுவதற்குப் பதிலாக தமிழ்ச்சேவை செய்து வருகிறார்!... அவருடன் நானும் அமெரிக்காவின் 'பெட்னா' கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இந்திய ஆட்சிப் பணி வகிக்கும் திரு. த. உதயச்சந்திரன் பள்ளிக்கல்வித்துறை வந்து எதிர்கால சந்ததியினருக்கு பயன்பெறும் வகையில் பாடத்திட்டத்தை அளித்துவிட்டு, தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டு, கீழடி ஆய்வுக்கு நிதியுதவி பெற்றுத் தந்திருக்கிறார்!... தமிழக அமைச்சர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்களும் கீழடியில் தனிக்கண்காட்சிக்கூடம் அமைய இடமொதுக்கி உதவிவருகிறார்.

கீழடி மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் நாட்டியப்பெண், கொற்றவை சிற்பங்கள் கிடைத்துள்ளன. வீரமிகு பெண்கள் வழிபாடு  இது. மூத்தோர் வழிபாடு வேறு, மதநம்பிக்கை வேறு. ஆய்வுகள் மூலம் உண்மைகள் வெளிவரும். 

திருவள்ளுவர் சமணத்துறவி என்று ஆய்வுகள் கூறுகின்றன. 'இலக்கியம் இருண்ட காலம்' என்பதாகச் சொல்லப்படும் களப்பிரர் காலகட்டத்தில்தான் திருக்குறள், சமணக்காப்பியங்கள் சிலப்பதிகாரம், வளையாபதி, பவுத்தக் காப்பியமான மணிமேகலை எழுதப்பட்டன!

மொட்டையடித்த சமணத்துறவிகள் சிலைகள் முருகன்- வள்ளி -தெய்வானை என்று மாற்றப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  ஆளுகின்ற அரசு ஆதரவுடன் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்ல, ரோமிலுள்ள பாந்திய மதக் கோவில், கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது! சமுதாயச் சூழலில் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

பல்துலக்க உப்பும் சாம்பலும் உபயோகித்த நமது மக்களைக் கிண்டல் பண்ணிவிட்டு, "உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கிறதா?" என்று கேட்டு வசதியாக விற்பனை செய்கிறது நவீன மார்கெட்டிங் தொழில்நுட்பம்!... இதையும் நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம்!... தற்காப்புக் கலையான சிலம்பம் பொழுதுபோக்குக் கலையானது!"புதியன புகுதலும் பழையன கழிதலும்!"... எதை ஏற்பது? எதைக் கழிப்பது? இது எளிதான காரியமல்ல. 

"பாரடைஸ் லாஸ்ட்" காவியக்கவிதை எழுதிய ஆங்கிலக் கவி ஜான் மில்டன்  சொல்வது போல, 'தேர்ந்தெடுத்த அறிஞர்கள்' மூலம் நம்மை நாமே மீட்டெடுக்கும் முயற்சிகள் கட்டாயம் தேவை. மனதில்  உறுதியுடன் பயணிப்போம்." என்ற திருமிகு கோ.பாலச்சந்திரன், இ.ஆ.ப. (ஓய்வு)  வாழ்த்துரையுடன் தமிழ் மரபு அறக்கட்டளை, சங்கம் -4 ஒருங்கிணைப்பில் "தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடல் நிகழ்வு, ஆனந்தன் (முரசு) குடும்பத்தினர் பறையிசை முழங்க,  சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையிலமைந்த தமிழ் மையத்தில், அக்டோபர் 14, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கியது.

தமது நெறியாள்கையில், "நல்ல தெளிவுடன் தமிழுக்கான சிறந்த முன்னெடுப்பு, நாட்டுக்கலை பற்றிய திருமிகு பாலச்சந்திரன்  அவர்கள் ஆற்றிய உரை" என்று தமிழ்மரபு  அறக்கட்டளைத் தலைவர் முனைவர் சுபாஷிணி குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், "தமிழ்புராதனச் சின்னங்கள் பற்றிய விழிப்புணர்வை  தமிழகம் மட்டுமின்றி மலேசியா, ஐரோப்பிய நாடுகள், கனடா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் ஏற்படுத்துவதில் தமிழ்மரபு  அறக்கட்டளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் கிடைக்கும் தமிழ்மரபுச் சுவடுகள் மூலம் முன்னோடிகள் பங்களிப்பை அறியமுடிகிறது. அமெரிக்காவின் பெட்னா நிகழ்வில் பறையிசையுடன் தொடங்கியதைப்போல இங்கும் நிகழ்ந்திருக்கிறது.

காந்தி, கவுதம சன்னா  உள்ளிட்ட வழக்கறிஞர்கள்  சான்றுகளுடன் ஆராய்ந்து,  உண்மைகளை வெளிக்கொணர்கின்றனர். இது வரப்பிரசாதம். நாடகக்கலையில் கவுதம சன்னா எழுதிய "மத்தவிலாச மறுப்பு என்னும் சுத்த விலாச விவேகம்" எனும் மறுப்பு நாடகப்பனுவலின் பகுதிவாசிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ள மு. புருஷோத்தமன், பேரா. டே. ஸ்டான்லி, க.வெங்கடேசன், கவிஞர் முத்துக்கந்தன் பேரா. பிரபாகரன் ஆகியோரை வரவேற்கிறேன். ஓவியர் 'சந்ரு' வரைந்த ஓவியங்களுடன் எனது முன்னுரையுடனும் தயாராகிக் கொண்டிருக்கும் நூல் அது" என்று தெரிவித்தார். பிரஹசனம் இலக்கியத்தில் கேலி வகைமையில் அமையும். கி.பி. 590-630 ஆண்டுகளில் மகேந்திரவர்மபல்லவன் எழுதிய மத்தவிலாச பிரஹசனம் நாடகப்பனுவலில் காபாலிகர்கள், பவுத்த பிக்குகள், காளாமுக சைவர்கள் பாத்திரங்கள்  இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பனுவல் வாசிப்பு நிகழ்ந்தது.  

"தமிழ்ப்பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்" கருத்துரையாடலில்  சென்னைப் பல்கலைக்கழகம்-தமிழிலக்கியத் துறை  இணைப்பேராசிரியர் கோ. பழனி, திருப்பூர் எல்ஆர்ஜி. அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ஜா. அமைதி அரசு, சென்னை மாநிலக் கல்லூரிப்பேராசிரியர் இரா. சீனிவாசன், கரந்தைத் தமிழ்ச் சங்கக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் மு. செல்லன், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் க.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  

"கண்ணப்பத் தம்பிரான் வழிவந்த சம்பந்தன் இரணியவதம் தஞ்சை மாவட்டப் பதிவு ஆகும்.  தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வ. அய். சுப்பிரமணியன் துணை வேந்தராக இருந்த காலத்தில் கேரள கதகளியானாலும் யக்ஷகானம் ஆனாலும் கலைஞர்களுக்குப் பாகுபாடின்றி ₹ 6000 வழங்கி, கூத்து, அடவுகளை
ஆவணப்படுத்தினார். தப்படிக்கும் ஆதிக்கலை நாடகாசிரியர் சே. இராமானுஜம் முன்முயற்சியில் கல்லூரிகளில் பிரபலமானது. நந்தன் கதை நாட்டார் கலையானது. குடவாயில் பாலசுப்பிரமணியன் பங்களிப்பும் முக்கியமானது.  மனுநீதி ராஜா கதை மீட்டுருவாக்கம் காத்திரமானது.  இழவுவீட்டில் தப்பு அடிப்பவன் காசு கொடுப்பவன் முகம் பார்த்துக் கொண்டே அடிக்கவில்லை என்றால் பிழைப்பில்லை...இது தெரிவது அவசியம்...பிரகலாத சரித்திரம் அமுதுப்படையல், அரவான், அரிச்சந்திரன் குறித்த பதிவுகள் உண்டு. பாடல்கலைஞர்கள் ஏற்பாட்டில்  'தவளை பஸ்கி', கம்பு சுற்றுதல், பின்னல்  ஆட்டம். மார்ஷல் கலைகள், சவுராஷ்டிரர்களின் பஜனைமடம், ருக்மாங்கதன் ஏகாதசிப் பட்டினி (மாமியார் மருமகள்) ஆகிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று அமைதி அரசு வலியுறுத்தினார். 

கோ. பழனி கருத்துரையில் "அருகிவரும் லாவணிக்கலை குறித்து அக்கறை தெரிவித்தார். சடங்கிலிருந்து விலகிச் சென்றால் இக்கலையைக் காப்பாற்ற முடியாது. வடிவம் சார்ந்த மாற்றம் புதுப்பித்தலில் கவனம் வேண்டும்.வடக்கத்தி, தெற்கத்தி, மேற்கத்திய பாணிகள் உள்ளிட்ட உட்பிரிவுகள் இதில் உண்டு.  107  கலைஞர்கள் களஞ்சியத்தை நான் தொகுத்துள்ளேன். அறியப்படாத படைப்பாளிகள்,  36  பழங்குடியின மக்கள் மொழிகள் ஆவணப்படுத்தப்படவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார். 

இரா. சீனிவாசன் கருத்துரையில்,  "நாட்டுப்புறக் கலை ஆய்வுகள் பனுவலாகவும் காட்சிவடிவக் கலைகளாகவும் பதியப்படவேண்டும். கோட்பாட்டுச் செல்நெறிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். எம்.டி. முத்துக்குமாரசாமி (நாட்டாரியல் மையம்) பங்களிப்பு காத்திரமானது. நரிக்குறவர் குடும்பங்களுக்குப் பயிற்சி, ஒப்பனை, கலைவடிவக் கருவிகள் செய்ய ஏற்பாடு, ஆபரணப் பனுவல்த் தொகுப்புருவாக்கம் உள்ளிட்ட அடிப்படை நடவடிக்கைகள் தேவை. வட்டார அளவில் கலைகள் பராமரிப்பது அவசியம். லாவணியில் 100  பாணிகள்  உண்டு. அறிவுபூர்வமாக அறிவார்ந்த புலமை தானாகத் தோற்றுவாயிலிருந்து உருவாக வேண்டும். எனது ஆய்வு  தொண்டை மண்டல கதைப்பாடல்களில்தாம். முத்துப்பட்டன் கதை, கதைப் பாடல்களாக (ballads) வழங்கப்படுகிறது. தோற்பாவைக்கூத்துக் கலைஞர்கள் இரவு பத்து மணிக்குத் தொடங்கி, காலை ஐந்து மணிக்கு முடிப்பதுண்டு...ஒரே கலைஞரும் இதைச்செய்வதுண்டு!  பெண்கள் பகுதிக் கதைப்பாடல்களில் மூக்குச்சந்திரன் உருப்பாட்டு முக்கியமானது.  இதில் பனுவலை  உளவியல் ரீதியாக  மேம்படுத்துவது (improvisation) பெண்களே" என்று குறிப்பிட்டார்.

செல்லன் தமது கருத்துரையில், "உள்ளூர்க்கதை மறைக்கப்படுதலைப் பாளையங்கோட்டை நாட்டாரியல் மையம் கூத்துக் களஆய்வு செய்து தெரிவித்துள்ளது. சமகாலச் சிந்தனை மாற்றம் முக்கியமான விஷயம். தோலினால் பறைசெய்யப்படுவது மறைந்து, செயற்கைத்தோலினால் (fibre) ஆக்கப்படுகிறது. கூத்து 'காஸ்ட்யூம்' ஆய்வில் வைக்கோல் ஆடைகள், கஞ்சிப்பசையிட்ட பருத்திச்சேலைகள் வரவு ஆகியவற்றால் அரை கிலோவாகக் குறைந்து பிளாஸ்டிக் வடிவில் வந்து விட்டது தெரியவருகிறது. இனக்குழு வகைமை பரிணாமம் 
( Ethnic type evolution) ஏற்பட்டுவிட்டது.  ஆற்காட்டுப் பாணி தெருக்கூத்துக்கலை திரௌபதையம்மன் கோவில் இருக்குமிடங்களில் ஜீவிக்கிறது. பத்தாயிரம் கலைஞர்கள் உண்டு. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கடலூர், விழுப்புரம், புதுவை, அரியலூர் (ஒருபகுதி ), ஆந்திரா, ஈழம்(வடமொழி,தென்மொழி, மலையகத்தமிழர் கூத்துகள் ) உள்வேறுபாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இதில் கல்வராயன் மலைக்கூத்துக் குழுக்கள் கோவையிலும், கன்னடம் பேசும் கலைஞர்கள் நிகழ்த்தும் கூத்துகளில் இரணியன் கூத்திலும் வேறுபாடு ஏற்பட்டது. குரும்ப இளைஞர்கள் ரத்தத்திலேயே கூத்து கலந்துள்ளது. ஒருசிலரே பெண் கலைஞர்கள்;  அரவாணிகள் பெண்பாத்திரங்கள் தாங்கி நடிக்கின்றனர்!" என்று குறிப்பிட்டார். 

நாட்டார் பாடல்களைப்பாடி விளக்கத்துடன் தகவல்களை வழங்கினார் க.வெங்கடேசன். 

தகவல் வங்கி, இணைந்தவகைச் செயல்பாடு (Network), கல்லூரிகளில் நான்கு அல்லது ஐந்து துறைகள் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்துவது, வாட்ஸப் குழு அமைப்பு, 'தமஅ' தொழில்நுட்பப் பயிற்சி நடத்துவது, புலம்பெயர்ந்தோருக்கான குழு அமைப்பு, விழிப்புணர்வுக் கருத்தரங்கம், கருவிகள்/காட்சிப்படுத்துதல், மரபுவிளையாட்டுக் கலைக்கண்காட்சி, பேருந்து ஏற்பாடு ஆகிய முதல்கட்ட நடவடிக்கைகளை எடுக்க, தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் தலைவர் முனைவ‌ர் சுபாஷிணி முன்மொழிந்தார்.  இன்னம்பூரான், சந்திரபோஸ், சவுந்தரராஜன்,  குமரகுருபரன், லோகநாதன் ஆகியோர் உரிய ஆலோசனைகளை வழங்கினர். ஸ்ரீதேவி உதயன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.  காந்தி, கவுதம சன்னா ஆகியோர் ஏற்பாடு உதவி செய்தனர். அசோக்,  சிவரஞ்சனி, செழியன், நானா ஆகியோர் அரங்கப்பணியில் உதவினர்.

அரங்கம் ஏற்பாடு செய்து உதவிய ஜகத் கஸ்பர், நிகழ்வுக்கு உதவிய கோ. பாலகிருஷ்ணன், இஆப உள்ளிட்ட ஆளுமைகளுக்கும் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும்  முனைவர் சுபாஷிணி நன்றி கூறினார். 





Monday, October 15, 2018

ஐரோப்பாவில் பாதுகாக்கப்படும் தமிழ்மரபுச் செல்வங்கள்

தலையங்கம்: ஐரோப்பாவில் பாதுகாக்கப்படும் தமிழ்மரபுச் செல்வங்கள்

வணக்கம்.


1999ம் ஆண்டு ஜூலை மாதம் எனது முதுகலைப் பட்ட ஆய்வின் போது ஜெர்மனியின் எஸ்லிங்கன் பல்கலைக்கழகத்தில் கோடை விடுமுறை காலத்தில் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்ய, சில அயலக மாணவர்கள் செக் நாட்டின் தலைநகரமான ப்ராக் நகருக்குச் சென்றிருந்தோம். அங்கே பிரமாண்டமான கட்டிடங்களையும் சிற்பங்களையும் பார்த்து வரும் வேளையில் ஒரு அருங்காட்சியகத்திற்குச் செல்லும் வாய்ப்பும் அமைந்தது. அங்குக் கண்ணாடி அலமாரிகளுக்குள் சிவப்பும் கருப்புமான மை எழுத்துக்களில் எழுதப்பட்ட தோலினால் செய்யப்பட்ட அட்டைப்பகுதியைக் கொண்ட பைபிள் பிரதி ஒன்றினை நான் பார்க்க நேரிட்டது. அதன் காலம் கி.பி. 12 என அறிந்து கொண்டேன். இப்படி பழமையான தமிழ் ஆவணங்கள் இருக்கின்றனவா என எனக்குள் ஆரம்பித்த தேடல் முயற்சி எனக்குப் பல சிறந்த அனுபவங்களை இன்று வரை அளித்துக் கொண்டிருக்கின்றது.



சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நண்பர் அளித்த நூல் எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. German Indology என்பது நூலின் பெயர். இதனை  முனைவர்.சு.மோகனவேலு என்ற ஆராய்ச்சியாளர் எழுதினார் என்றும் அவர் சில காலங்கள் ஜெர்மனிக்கு வந்து தங்கியிருந்து ஆவணங்களை ஆராய்ந்து இந்த நூலை எழுதினார் என்றும்  அறிந்து கொண்டேன். நூலை வாசிக்கத் தொடங்கியபோது அந்நூல் குறிப்பிடும் செய்திகளை வாசித்து வியந்தேன்.

ஜெர்மனியில் தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவை ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் பழமையானவை என்றும், இம்முயற்சிகளில் ஈடுபட்டோர் ஒருவரல்ல; மாறாகப் பலர் என்றும் அறிந்து கொண்டதில் வியப்பு மேலும் அதிகரித்தது.

இதன் தொடர்ச்சியாக, அலுவலக நேரமும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏனைய பல பணிகள் போகவும் கிடைத்த நேரங்களில் ஐரோப்பியத் தமிழ் தொடர்புகள் பற்றி தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகள் தேடலின் பயனாக, எங்கெங்கு இத்தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்ற தகவல்களைத் தொகுக்கத் தொடங்கினேன். அதன் பயனாக இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகம், பாரீஸ் நகரிலுள்ள பிரான்சு தேசிய நூலகம், கோப்பன்ஹாகனிலுள்ள அரச நூலகம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று சில குறிப்பிடத்தக்க தமிழ் ஓலைச்சுவடிகளையும் காகித ஆவணங்களையும் பார்த்து வரும் வாய்ப்பினை அமைத்துக் கொண்டதில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ் ஓலைச்சுவடிகளையும் காகித ஆவணங்களையும் மின்னாக்கம் செய்து இவற்றிற்கான கணிம பாதுகாப்பினைச் சாத்தியப்படுத்தினோம். இதில் முத்தாய்ப்பாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை ஜெர்மனியின் கிழக்குப்பகுதி நகரமான ஹாலே நகருக்கு நான் சென்று அங்கு ஃப்ராங்கெ கல்வி நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு அமைகின்றது.

சீர்திருத்தக் கிருத்துவம் எனும் தத்துவக் கோட்பாட்டின் தாயகம் ஜெர்மனி. ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான விட்டன்பெர்க் நகரத்தில் கி.பி.16ம் நூற்றாண்டில் பேராசிரியர். டாக்டர். மார்ட்டின் லூதர் உருவாக்கிய கருத்தாக்கம் பின்னர் படிப்படியாக துரித வளர்ச்சியை அடுத்த நூற்றாண்டிலேயே சந்தித்து தனி ஒரு மதமாக ஜெர்மனியில் நிலைபெற்றதோடு ஸ்கேண்டிநேவிய நாடுகளிலும் கிளைவிட்டது. அச்சமயத்தில் இப்புதிய சமயக் கோட்பாட்டிற்கான சமய ஆசிரியர்களை உருவாக்கும் பணியை ஜெர்மனியின் ஹாலே நகரில் அமைந்திருக்கும் ஃப்ராங்கே கல்விக்கூடம் ஏற்றது. இங்குக் கல்வி கற்று தயாரான பாதிரிமார்கள் உள்ளூரிலும் ஐரோப்பாவெங்கினும் மற்றும் உலகநாடுகள் பலவற்றிற்கும் மறைபரப்பும் பணியாளர்களாகச் சென்றனர். அப்படிச் சென்றவர்களில் சிலர் தமிழகம் சென்று அங்குச் செயல்படுத்திய சமூக நிகழ்வுகள் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறவேண்டியவை; ஆனால் பெரிதாக பேசப்படாதவை.

இந்த ஆய்வுகளை முன்னெடுக்கும் முகமாகத் தமிழ் மரபு அறக்கட்டளை கி.பி.18ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் கி.பி.20ம் நூற்றாண்டு வரை தமிழகத்திற்குச் சென்று பணியாற்றிய ஐரோப்பிய பாதிரிமார்களின் ஆவணப்பதிவுகளை மின்னாக்கம் செய்தும், ஆய்வு செய்தும் அவை குறிப்பிடுகின்ற செய்திகளைத் தமிழ் ஆய்வுலகில் வெளியிடும் பணியினை தொடங்கினோம். அதன் ஒரு மைல்கல்லாக அமைவது இந்த ஹாலே ஃப்ராங்கே கல்வி நிறுவனத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளையின் அண்மைய பயணமும் அதில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளுமாகும்.





ஹாலே ஃப்ராங்கே கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ள சுவடிகளில் முப்பது ஓலைச்சுவடிகளும் ஏறக்குறைய இருபது கையெழுத்து ஆவணங்களும் இந்த அண்மைய முயற்சியின் போது ஆராயப்பட்டன. இவை அனைத்தும் மூல ஆவணங்கள் என்பது இதன் தனிச் சிறப்பாகும். இவை கூறும் செய்திகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளாக ஆய்வுக்கட்டுரைகளாக வெளிவரும். இதுமட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள ஆவணங்களைப் பற்றிய தொடர் ஆய்விலும் தமிழ் மரபு அறக்கட்டளை ஈடுபட்டுத் தொடர்ந்து பயணிக்கும்.

இணைந்து வாருங்கள்!



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Sunday, October 14, 2018

தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கும் தீர்மானங்கள்

தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கும் தீர்மானங்கள்:


          வரலாற்றுக் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் மரபு பல்வேறு கூறுகளோடும் பல்வேறு மாற்றங்களோடும் பல்வேறு உள்வாங்கல்களோடும், சிறப்புக்களோடும், வீழ்ச்சிகளோடும், எழுச்சிகளோடும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பழங்குடி சமூகங்களாக இருந்து  நாகரிகமடைந்து அரசுகளும் பேரரசுகளும் நகரக் கட்டுமானங்களும்  புனிதச் சின்னங்களும் இலக்கிய வளங்களும் கொண்ட தமிழர்களின் வரலாறு, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், தொல்லியல் ஆய்வுகள், வழக்காறுகள், நாட்டார் கலைகள், வாய்மொழி இலக்கிய வகையினங்கள், கோயில்கள், குலமரபுச் சின்னங்கள், இலக்கியங்கள் மற்றும் நவீனக் காலத்திற்குத் தம்மை உருமாற்றிக் கொண்ட  ஆவணங்களாகச் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை ஒருமுகப்படுத்தித் தொகுத்து பரந்து பட்ட ஆய்விற்கு உட்படுத்துவதின் மூலமே துல்லியப்படுத்தப்பட்ட தமிழர்களின் வரலாறு கிடைக்கும். இதன் மூலம் மட்டுமே உலக அரங்கில் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவத்துவத்தை உறுதி செய்ய முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டோடு தனது பயணத்தைத் தொடர்ந்து  தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கிறது. 


1. தமிழர் வரலாறு மற்றும் மரபுகளைப் பாதுகாக்கின்ற வகையில்  தமிழகத்தின் கிராமங்கள், சிற்றூர்கள், நகரங்கள், பெரு நகரங்கள் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகங்களை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள வரலாற்றுத் துறை, தமிழ்த்துறை,  ஓலைச்சுவடி மற்றும் அரிய ஆவணங்கள் துறை, கடலாய்வுத் துறை போன்ற துறைகளின் மாணவ மாணவியரிடையே செய்முறைப் பயிற்சியில் உள்ளுர் அருங்காட்சியக பராமரிப்பு என்பது அறிமுகப்படுத்தப்பட்டுச் சேர்க்கப்பட வேண்டும். அப்படிச் சேர்க்கப்படுமாயின் தமிழகத்தின் வட்டாரங்கள் அளவில் அருங்காட்சியகங்களை உருவாக்க முடியும். தமிழகத்தின் எல்லாக் கலை, வாழ்வியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் உலகத்திற்கும் கொண்டு சேர்க்க முடியும். இந்த வட்டார அருங்காட்சியகங்களைக் கல்லூரிகளிலோ அல்லது அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலோ ஒரு சிறிய இடத்தில் அமைப்பதின் மூலம் உருவாக்கலாம். கடந்த ஈராண்டுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக சில கல்லூரிகளிலும் தனியார் பள்ளிகளிலும் இந்த அருங்காட்சியகத் திட்டத்தைத் தன்னார்வமாகச் செயல்படுத்தி வருகிறோம் என்பதை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறோம். வட்டார அருங்காட்சியகங்களில் கிராமப்புற வாழ்வியல்  தகவல்கள், கைவினைப் பொருட்கள் மட்டுமின்றி, மக்கள் பண்பாட்டு நடவடிக்கைகளான கூத்து, பாடல்கள், நடனங்கள், கதைகள் மற்றும் நிகழ்த்துக் கலைகளில் விழியப் பதிவுகளின் (வீடியோ) படிகள் வைக்கப்பட வேண்டும். 
 
2. தமிழகத்திற்கு வெளியே அயல்நாடுகளில் உள்ள ஆவணப்பாதுகாப்பகங்களில் பாதுகாக்கப்படுகின்ற  ஓலைச்சுவடிகள் அங்கு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும் அவை தொடர்பான ஆய்வுகள் நிகழ்த்தப்படாமலேயே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் தமிழக மற்றும் தமிழர் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய ஆவணங்களாகும்.  தமிழ் மரபு அறக்கட்டளை இதுவரை ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ள ஐரோப்பிய ஆவணப்பாதுகாப்பகங்களிலுள்ள தமிழ் அரிய ஆவணங்கள் முறையாக மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு அவை தமிழக பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

3. கல்வெட்டு, ஓலைச்சுவடி வாசிப்பு என்பது தற்போது கல்லூரிகளின் தமிழ்த்துறைகளில் ஒரு பாடமாக இல்லாத நிலை இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கல்வெட்டுக்களையும் ஓலைச்சுவடிகளையும் வாசிக்கும் திறன் படைத்தோர் இல்லாத நிலை உருவாகும் அபாயகரமான சூழல் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கல்லூரிகளில் துணைப்பாடமாக அல்லது பட்டயப் பாடமாகத் தொல்லியல் பாடத்தை அறிமுகம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

4. தமிழர் மரபு விளையாட்டுக்களையும் வீர விளையாட்டுக்களையும் உலகம் தழுவிய வகையில் மீள் அறிமுகம் செய்யப்படவேண்டியது அவசியம். உடலுக்கு ஊக்கத்தையும் உள்ளத்திற்கு மலர்ச்சியையும் தரக்கூடியன தமிழர் மரபு விளையாட்டுக்கள். இப்பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றிய அறிமுகம் இல்லாத தலைமுறையாக இன்று நமது இளம் தலைமுறையினர் வளர்வதும் இவ்விளையாட்டுக்களைப் பெரியோரும் படிப்படியாக வழக்கில் இருந்து ஒதுக்கி வருவதும் கண்கூடு. நுணுக்கமான தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை நாம் மறப்பது நமது பாரம்பரியத்தில் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமமாகும்.     தமிழ் மரபு அறக்கட்டளை இதனைக் கருத்தில் கொண்டு தமிழர் வழக்கில் இருந்த பல்வேறு விளையாட்டுக்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதனை இவ்வாண்டின் முக்கிய நடவடிக்கையாக மேற்கொண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிந்து கொள்வது அவற்றை இல்லங்களில் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கருத்தினை முன் வைக்கின்றது.

5.  தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையாக மாற்றப்பட்டு கீழடி உள்ளிட்ட அனைத்து அகழ்வாராய்ச்சிப் பணிகளையும் சுயமாக மேற்கொள்ள வேண்டும். இந்த அகழ்வாய்வுத் துறையில் அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள்,  வரலாற்று ஆய்வாளர்கள்,  கல்வெட்டு ஆய்வாளர்கள், வரலாற்று பொறியியல் ஆய்வாளர்கள், நாணயவியல் ஆய்வாளர்கள், சுவடி ஆய்வாளர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வு ஆணையம் (Tamil Nadu History Research Council/Commission) தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பின் கீழ் தமிழகத்தின் வரலாற்று ஆய்வு மற்றும் தொகுப்பு நிகழ்த்தப்பட வேண்டும்.

6.  வைகை நதிக்கரை நாகரிகம் தொன்மையானது. இந்தியத் தொல்லியல் துறையின் பணியை மேற்கொண்டு தமிழகத்தின் வைகை நதிக்கரையோரத்துப் பகுதியில் அகழ்வாய்வுகளை 2014 முதல் மத்திய தொல்லியல் துறையின் சார்பில் நடத்தி சங்க கால நகரமொன்றினைத் தனது ஆய்வின் வழி வெளிப்படுத்தினார் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன். 

இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பெரும் எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழகத்தில் முதன்முறையாகச் சங்க கால நகரமொன்று இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்டது. வீடுகள், கிணறுகள், தொழிற்கூடங்கள், அலங்காரப் பொருட்கள், வடிகால்கள் எனப் பல தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இக்கண்டுபிடிப்பானது சங்ககாலத்தில் தமிழகத்தில் வளமான நகர நாகரிகம் இருந்ததை உறுதிசெய்வதாக அமைந்தது. கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, பின்னர் ஆதிச்சநல்லூரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்விற்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் பேசப்படுகின்ற ஒரு அகழ்வாய்வாகக் கீழடி அகழ்வாய்வு அமைகின்றது.  

ஆதிச்சநல்லூரில் ஜெர்மனியின் டாக்டர்.யாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். இங்குக் கிடைத்த அகழ்வாய்வுச்சான்றுகள் அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அறிகின்றோம். பின்னர் லூயிஸ் லப்பிக் என்ற பிரஞ்சுக்காரர் 1904லும், அலெக்ஸாண்டர் ரீ என்ற ஆங்கிலேயர் 1905லும்  அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர் என அறிகின்றோம். இவை சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படாமல் பாதுகாப்பில் மட்டும் இருப்பதாக அறிகின்றோம். 2004ல் இந்திய அரசின் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டவை பற்றிய அறிக்கை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த அகழாய்வில் கி.மு1800 என அறியப்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இறந்தோருக்கான முறையான ஈமச்சடங்குகள் நடந்தமையை உறுதி செய்யும் தாழிகள் கிடைக்கப்பட்டன  அவற்றில் உள்ள எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு அவை தொல்தமிழ் எழுத்துக்கள் என்றும் கண்டறியப்பட்டன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட தாழிகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் அது இன்று செயல்படாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. 

உலகளாவிய அளவில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறும் இடங்களில் அங்குக் கிடைக்கப்பெற்ற அரும்பொருட்களைக் காட்சிப் படுத்துவதுதான் இயல்பு. ஆனால் இன்று நாம் ஆதிச்சநல்லூரிலும் சரி கீழடியிலும் சரி இங்குக் கிடைத்த அரும்பொருட்களைக் காட்சிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருப்பது வரலாற்றின் மேல் நமக்கு அக்கறையில்லாத தன்மையினை தான் வெளிப்படுத்துகின்றது. மிக இயல்பாக நடைபெற வேண்டிய விசயங்களுக்குக்குக் கூட போராட வேண்டிய சூழ்நிலை எழுவது ஏன் என்ற கேள்வியே மேலோங்குகின்றது. 

கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வில் நமக்கு மேலும் ஏறக்குறைய 7000 சங்ககால அரும்பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்பது இந்த ஆய்வு மேலும் வைகை நதிக்கரை பகுதியில் விரிவாகவும் விரைவாகவும் தொடரப்பட வேண்டும் என்ற கருத்தினையே வலியுறுத்துகிறது.  

இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகள் வாக்கில் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வாழ்வியல் அமைப்புக்களின் வெளிப்பாடுகளைக் கீழடி அகழ்வாய்வு புலப்படுத்தியுள்ளது. இவை வெளிப்படுத்தும் முறையான கட்டுமான அமைப்பு பண்டைய தமிழர்தம் வாழ்வியல் மேன்மையை உலகுக்கு அறிவிப்பதாக அமைகின்றது. ஆக கீழடியில் அகழ்வாய்வினை மேற்கொண்டு இச்செய்திகளை வெளியிட்ட திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் கீழடி தொடர்பான ஆய்வறிக்கைகள் வெளியிடப்படுவதில்  தடைகள் ஏற்படக்கூடாது என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலியுறுத்துகிறது. 

இதன் தொடர்ச்சியில், கீழடியில் இங்குக் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் ஒரு பிரத்தியேக அருங்காட்சியகம் கீழடியிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழ் மரபு அறக்கட்டளைக் கேட்டுக் கொள்கின்றது. இதே போல ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் முறையாகச் செயல்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது. இவை மட்டுமன்றி தமிழகத்தின் பண்டைய கடற்கரை நகரங்களில் விரிவான் தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படத் தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்றும் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.




வெளியீடு
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
14.10.2018

இராசேந்திர சோழனுக்கு உணவு சமைத்த பெண்மணி யார்?

— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


குமரி நகரில் ஒரு கோயில்:




          கோயில் கல்வெட்டுகளிலிருந்து பல்வேறு செய்திகளை அறிந்துகொள்கிறோம். அரசன், அவனுடைய போர் வெற்றிகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகள் எனப் பல்வகையான செய்திகள்.  ஆனால், குமரி மாவட்டத்துக் குமரியில் இருக்கும் குகநாதசுவாமி கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. கங்கையும் கடாரமும் கொண்ட பேரரசன் முதலாம் இராசேந்திர சோழன், யார் சமைத்த உணவை உண்டான் என்னும் ஒரு சுவையான செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. குமரியில் உள்ள குகநாதசுவாமி கோயிலின் அர்த்தமண்டபத்தில் தெற்கு அதிட்டானத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

T.A. கோபிநாத அய்யரும் குகநாதசுவாமி கோயிலும்:
          திருவாங்கூர் தொல்லியல் வரிசை நூல் தொகுதிகளில் எட்டாம் தொகுதியில், தொல்லியல் அறிஞர் T.A. கோபிநாத அய்யர் அவர்கள் சோழர் கல்வெட்டுகள் ஆறு என்னும் தலைப்பில் தொகுத்துள்ள கல்வெட்டுகளில் மேற்படிக் கல்வெட்டும் ஒன்று. குமரியில் நாம் அறிந்த கோயில் குமரி அன்னையின் கோயில் மட்டுமே. 1911-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்த நூல் தொகுதியில் அய்யர் அவர்கள் குறிப்பிடும்போது, ”குகநாதசுவாமி கோயில், தற்போது கன்னியாகுமரியின் பிராமணக் கிராமத்திலிருந்து அரைப் பர்லாங்கு தொலைவில் அமைந்துள்ளது. கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோயிலின் சுற்றுப்பகுதி முழுதும் வௌவால்களும், பாம்புகளும் கொண்ட ஒரு குகை போலத் தோற்றமளிப்பதால் இக்கோயிலைக் குகநாதசுவாமி கோயில் என அழைக்கிறார்கள் போலும்”  எனக் குறிப்பிடுவது கருதத்தக்கது. அவர் காலத்தில், தொல்லியல் சார்ந்த பணிச் சூழல் எவ்வாறு இருந்தது என்றும், எல்லாவகையான இடர்ப்பாடுகளையும் சந்தித்துக் கொண்டே பணியாற்றியவர்களின் கடமை உணர்வையும் நாம் ஒருவாறு உணர இயலும். 1911-ஆம் ஆண்டில் வௌவால்களும் பாம்புகளும் சூழ்ந்து சிதைவுற்ற நிலையில் இருந்த அக்கோயிலின் இன்றைய நிலை என்ன என்று அறிய இணையத்தில் தேடியபோது, கோயில் புதுப்பொலிவுடன் மீளக் கட்டப்பெற்றுள்ளதைக் காண்கிறோம்.  தமிழ் நாட்டுச் சுற்றுலாத்துறையின் தளத்தில், இக்கோயிலை முதலாம் இராசராசன் கட்டுவித்தான் என்னும் குறிப்பு உள்ளது. இந்தத் தளத்தில் உள்ள கோயிலின் ஒளிப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. சில முக நூல் பதிவுகளில் உள்ள படங்களும் அவ்வாறே. படங்களைக் காணும்போது, முக நூல் பதிவுகளில் சிலர் குறிப்பிட்டவாறு கோயில், வட இந்தியப் பாணியில் அமைந்த தோற்றத்தைத் தருகிறது. ஓர் ஆசிரமத்தைப்போலத் தோற்றமளிப்பதாகவும் ஒருவர் குறிக்கிறார். கல்வெட்டுகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.


கல்வெட்டுப் பாடம்:

குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள். 

1   ஸ்வஸ்திஸ்ரீ பூர்வ்வதேசமும் ங்கையுங் கடாரமுங்கொண்டருளின  கோ
2   ப்பரகேசரி பன்மராயின உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்
3   கு யாண்டு இருபத்து நாலாவது ராராப்பாண்டி நாட்டு உத்த
4   ம சோழவளநாட்டுப் புறத்தாய நாட்டு குமரி ராரா [ஈ] ச்வர
5   ம் உடையார்க்கு உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு திருவமுது அடும்
6   பெண்டாட்டி அருமொழிதேவ வளநாட்டுப் புலியூர் நா [ட்] டுப் பாலையூர் தி
7   ட்டை சோழகுலவல்லி வைச்ச திருநூந்தாவிளக்கு ஒன்றுக்கு வைச்ச சா
8   வா மூவாப் பேராடு ஐம்பது இவ்வாடு ஐம்பதுங்கொண்டு இத்தேவர்

கல்வெட்டுச் செய்திகள்:
          முதலாம் இராசேந்திரன் பரகேசரிப் பட்டம் சூடியவன். கல்வெட்டில் அவனது நீண்ட மெய்க்கீர்த்திப் பகுதி இல்லை. கீழ்த்திசை நாட்டையும் கங்கையையும் கடாரத்தையும் வென்றவன் என்று மட்டுமே சுருங்கச் சொல்கிறது. கல்வெட்டின் காலம் அவனுடைய இருபத்து நாலாவது ஆட்சியாண்டான கி.பி. 1036-ஆம் ஆண்டு. குமரிப் பகுதி ராஜராஜப்பாண்டி நாட்டில் (மண்டலப்பிரிவில்) உத்தம சோழ வளநாட்டில் புறத்தாய நாட்டைச் சேர்ந்ததாக இருந்தது. மேற்படி குகநாதசுவாமி கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ராஜராஜ ஈச்வரம் என்னும் பெயர் பெற்றிருந்தது. இக்கோயிலில் நுந்தாவிளக்கு எரிப்பதற்காக ஐம்பது ஆடுகளைக் கொடையாக அளித்த பெண்மணி இங்கு குறிப்பிடத்தக்கவள். அவளுடைய பெயர் சோழகுலவல்லி என்பதாகும். அவள் சோழநாட்டு அருமொழிதேவ வளநாட்டைச் சேர்ந்த புலியூர் நாட்டுப் பாலையூர் திட்டையைச் சேர்ந்தவள். தற்போது தஞ்சைக்கருகில் திட்டை என்னும் ஊர் உள்ளது. இருப்பினும், “இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்” என்னும் நூலில், புலியூர் நாடு திருவாரூர்ப் பகுதியில் இருந்ததாகக் குறிப்புள்ளது. எனவே, சோழகுலவல்லி என்னும் இந்தப் பணிப்பெண் திருவாரூர்ப் பகுதியைச் சேர்ந்தவள் எனலாம். 

          இந்தச் சோழகுலவல்லி என்பவள், இராசேந்திர சோழனின் பணிப்பெண்களுள் ஒருத்தி. பணிப்பெண்களில் சற்றுச் சிறப்புப் பெற்ற பெண்மணி. இராசேந்திர சோழனுக்கே உணவு சமைக்கும் பணியில் இருந்தவள்.  இதை, ” உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு திருவமுது அடும் பெண்டாட்டி”  என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. “அடுதல்”/”அட்டுதல்” என்பது சமைத்தலைக் குறிக்கும் சொல்லாகும். உணவு சமைக்கும் இடம் “அட்டில் பள்ளி” என்றும், ‘அடுக்களம்” என்றும் “மடைப்பள்ளி” என்றும் பலவாறாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும். தற்போதைய வழக்கில் நாம் அடுக்களை என்று குறிக்கிறோம். ”பெண்டாட்டி”  என்னும் சொல் சோழர் காலத்தில், பணிப்பெண்களைக் குறித்தது. சமையற்கூடங்களில் பணி செய்யும் பெண்களைக் கல்வெட்டுகள் “மடைப்பள்ளிப் பெண்டாட்டி” என்று குறிப்பிடும். சோழர் காலக் கல்வெட்டுகளில் “வேளத்துப் பெண்டாட்டி” என்னும் சொற்றொடரும் காணப்படுகிறது. இது அரண்மனைப் பணிப்பெண்டிரைக் குறிப்பதாகலாம். வேளம் என்பது (அரண்மனையில்?) பணிப்பெண்களின் இருப்பிடத்தைக் குறிக்கும். (கட்டுரை ஆசிரியர் கருத்து : வேளம் என்பது வேளகம் என்பதன் திரிபாகலாம். திருவாங்கூர் தொல்லியல் வரிசை நூலின் நான்காம் தொகுதியில் பதிப்பாசிரியர், கோட்டயம் ஊரின் பழம்பெயர் கோட்டையகம் என்று குறிக்கிறார். இக்கருத்தை அடியொற்றிப் பார்க்கையில், வேளகம் என்பது வேளம் எனத் திரிந்திருக்கக் கூடும் எனக் கருதத் தோன்றுகிறது).  


துணை நின்ற நூல்கள்:
1   TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES.
2  இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்.
  (கி.பி. 800 - 1300)
 -  எ.சுப்பராயலு, கௌ. முத்துசங்கர், பா. பாலமுருகன்







___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.






கல்வெட்டில் ஒரு வெண்பா


— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை:
          தமிழில் செய்யுள் வடிவம் என்பது மிகப்பழமையானது. சங்ககாலத்து மக்கள் தமக்குள் உரையாடிய பேச்சு வழக்கு உரைநடையாய் இருந்துள்ளமை இயல்பு. எனினும், எழுத்து வடிவத்தில் கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது பெரும்பாலும் செய்யுள்  நடையாகவே  இருந்தது எனலாம்.  செய்யுள் இயற்றியோர்  அப்புலமை பற்றியே புலவர் என்னும் பெயர் பெற்றார் எனலாம்.  புலவரே அன்றி, அவரைப் புரந்த ஆட்சியாளரும் தமிழில் கொண்ட புலமையால் செய்யுள் யாத்துள்ளனர். எந்நேரமும் அரசியலின் அழுத்தம் சூழ்ந்த நிலையில் ஆட்சிக்கட்டிலில் இருந்த அரசரும் கலையுள்ளம் கொண்டிருந்தனர் என்பதையும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் சுவையையும் நுகர்ந்து வாழ்ந்தார்கள் என்பதையும் வரலாற்று வாயிலாக அறிகிறோம்.

          செய்யுள் இயற்றிய சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், சோழன் நல்லுருத்திரன், சோழன் நலங்கிள்ளி, தொண்டைமான் இளந்திரையன், பாண்டியன் அறிவுடை நம்பி, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற பழந்தமிழ் மன்னர்கள் இருந்தார்கள். பிற்காலத்தே வந்த மன்னர்களுள், மகேந்திர பல்லவன் ”மத்தவிலாசப்பிரகசனம்”  நாடக நூல் எழுதியதும், பல்லவ மன்னன் நந்திவர்மன் தமிழ் மீது கொண்டிருந்த பற்றால், அறம் வைத்துப்பாடிய “நந்திக்கலம்பகம்” நூலைக் கேட்டு உயிரிழந்ததும், குறுநில மன்னர் கொங்கு வேளிர் “பெருங்கதை” எழுதியதும் எனப் பல்வேறு செய்திகளை நாம் அறிந்திருக்கிறோம். இவ்வாறு, அரசர்களுக்கும் தமிழுக்குமான உறவு நெருக்கம் கொண்டது. பல்லவர் காலக் கல்வெட்டுகளைப் படித்துக்கொண்டிருக்கையில், பல்லவ மன்னன் அபராஜித வர்மன் இயற்றிக் கல்வெட்டில் பொறித்துவைக்கப்பட்டதாக ஒரு வெண்பாப் பாடலைப் படிக்க நேர்ந்தது. அதைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு.

 திருத்தணி:
திருத்தணி என்றதும் முருகன் கோயில்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அவ்வூரில் வீரட்டானேசுவரர் கோயில் என்னும் பெயரில் ஒரு சிவன் கோயில் உண்டு. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்றது. கல்வெட்டுகளில் திருத்தணியின் பழம்பெயர் “திருத்தணியல்”  என்று காணப்படுகிறது.

பல்லவர் கல்வெட்டு:
மேற்படி வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறைத் தென் சுவரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று பாடல் வடிவில் அமைந்துள்ளது. பாடலின் வடிவம் வெண்பா. இக்கல்வெட்டின் வரியில், வெண்பாவைப் பாடியவர் பல்லவ அரசரே என்று குறிப்பிட்டுள்ளது.  இக்கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூலின் பன்னிரண்டாம் தொகுதியில் (கல்வெட்டு எண் : 94) உள்ளது.

கல்வெட்டும் அதில் உள்ள வெண்பாவும்:



ஸ்வஸ்திஸ்ரீ 
திருந்து திருத்தணியல் செஞ்சடை ஈசர்க்கு
கருங்கல்லால் கற்றளியாநிற்க  - விரும்பியோ(ன்)
நற்கலைகளெல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி 
பொற்பமைய செய்தான் புரிந்து
இ வெண்பா பெருமானடிகள் தாம் பாடி அருளுத்து

கல்வெட்டுச் செய்திகள்:
கல்வெட்டு, நம்பி அப்பி என்பவர் திருத்தணிச் சிவன்கோயிலைக் கற்றளியாகக் கருங்கல்லைக் கொண்டு கட்டுவித்தான்  என்பதை அரசனே தன் வெண்பாப்பாடல் மூலம் அறிவிக்கிறான் எனக்கூறுகிறது.  எனவே, இதற்கு முன்னர் கோயில், செங்கல் கட்டுமானமாக இருந்தது என்றும், நம்பி அப்பி என்பவன் கல் கட்டுமானமாகக் கட்டுவித்தான் என்பது தெரிகிறது. கோயில் கட்டுவித்த பணியை, ஒரு வெண்பாப் பாடல்மூலம் அரசனே பாராட்டி மகிழ்கிறான். கல்வெட்டு பொறிக்கப்படும்போது அரசனே இடை புகுந்து தமிழில் ஒரு வெண்பாவைப் பாடி அருளுகிறான் என்பது ஓர் அரிய செய்தி.  இக்கோயிலின் இன்னொரு கல்வெட்டில், இதே நம்பி அப்பி  ஊரில் உள்ள உழுகுடிகளிடமிருந்து ஆயிரம் குழி நிலத்தை விலைக்கு வாங்கிக் கோயிலுக்குக் கொடையாக அளிக்கிறான் என்னும் செய்தியும், இக்கொடைச் செய்தி அபராஜித வர்மனின் பதினெட்டாவது ஆட்சியாண்டில் கல்வெட்டில் பொறிக்கப்படுகிறது என்னும் செய்தி உள்ளது. இக்கல்வெட்டில் கோயிலின் பெயர் வீரட்டானம் எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மேற்படி வெண்பாக் கல்வெட்டில் ”இ வெண்பா பெருமானடிகள் தாம் பாடி அருளு(வித்)தது”  என்னும் வரி பல்லவ மன்னன் அபராஜிதனே என நூலின் பதிப்பாசிரியர் நிறுவுகிறார்.




சான்றுகள்:
I. A. R. No. 114 of 1925; S. I. I. Vol. XII. No. 94.
2. சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 26.




படம் உதவி:
வரலாறு விரும்பிகள் சங்கம் Varalaru Virumbigal Sangam - VVS
@pswhatsapp
https://www.facebook.com/pswhatsapp/photos/pcb.1941550629408298/1941550536074974/?type=3&theater




___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.



அங்காள ஈஸ்வரி அம்மன் கதைப்பாடல் (முத்தாலம்மன் கதைப் பாடல்*)



தானானே தானானே தாணத்தந்தம் தானானே
தொந்திக் கணபதியே கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டைகொஞ்ச  முன்நடவாய் பிள்ளையாரே
சொல்வாக்கு தப்பாதே சக்கம்மாள் தாயாரே
மாராடி பாசிக்காரி மகிழ்வுடனே வரம்கொடம்மா
முள்கோட்டைத் தாயேநீ முன்நின்று வரம்கொடம்மா
சேவல்கொடி அழகன்அவன் திருச்செந்தூர் வேலன்அவன்      (10)
தமிழுக்கு அதிபதியாம்  நல்லதமிழ் தாருமைய்யா
முருகா சரஸ்வதியே சதுர்முகனார் தேவியரே
என்நாவில் குடியிருந்து நல்லோசை தாருமைய்யா
காளியம்மன் தன்கதையை கருத்துடனே நான்பாட
மாரியம்மன் தன்கதையை மனம் மகிழ்ந்து நான்பாட
என்தாயே ஈஸ்வரியே  வலதுபுறம் வந்திடம்மா
வனத்தில் பிறந்தவளாம் வனபூஜை கொண்டவளாம்
பச்சரிசி வனத்திலேயும் மகிடனும் ஆண்டு வந்தான்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுரானே மகிடனுமே
அரக்கிமகன் அரக்கனாம் அரனேசிவனே யெனறு    (20)
அருந்தவமும் செய்யுறானாம்
கரக்கண்டரைப் பார்க்கவே கடுந்தவமும் செய்யுறானாம்
ஈஸ்வரனை தான்நினைச்சு இருந்துதவம் செய்யுறானாம்
மகிடனோட தவபூஜை  தானறிந்தார் ஈஸ்வரனும்
கைலாச லோகம் விட்டு கரக்கண்டரும் வாராராம்
தவத்திலிருக்கும் மகிடனே தகுந்தவரம் கேளு என்றார்
என்குழந்தை பாலகனே என்னவரம் வேண்டுமென்றார்
என்னைப்போல் ஆண்பிள்ளை எனக்கு எதிரியும் ஆகவேண்டாம்
ஆண் பிள்ளை கையாலே  எனக்கு அழிவே வேண்டாமையா
என்று தானே மகிடனுமே வரமுந்தானே கேட்டானாம்      (30)
கேடு கெட்ட அரக்கனுக்கு கேட்ட வரம் கொடுத்தாராம்
அவன் ஆடுறானாம் பாடுறானாம் அட்டகாசம் பண்ணுறானாம்
தவம்செய்யும் முனிவரோட தவத்தை யெல்லாம் அழிக்கிறானாம்
முப்பத்து முக்கோடி  முனிவர்களும் தேவர்களும்
ஒன்றாக சேர்ந்து கொண்டு மகிடன் செய்யும் கொடுமைதனை
எம்பெருமான் கண்ணனிடம் முறையிடவே போறாகளாம்
வைகுண்டம் போறாகளாம் பார்த்தாரே எம்பெருமான்
ஆண்பிள்ளை கையாலே அழிவில்லை மகிடனுக்கு
பெண்பிள்ளை கையாலே அழிவுண்டு என்று தானே
முறையாகத் தெரிந்து கொண்டு ஏது செய்வோம் என்று தானே      (40)
எம்பெருமான் பார்க்கையிலே சிவனாரின் பூஜைக்கு
தரணிதனில் பூவெடுத்தாள் என் தாயே நாக கன்னி
நாககன்னி நாகராசா செய்துவரும் பூஜைதனை
தானறிந்தார் மாயவனும்
கையினால் பூவெடுத்தால் காம்பழுகி போகுமுன்னு
விரலாலே பூவெடுத்தால் வெந்தழுகி போகுமுன்னு
தங்கத்தினால் ஊசி கொண்டு  தனி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி
வெள்ளியினால் ஊசி கொண்டு விழி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி      (50)
தண்ணியையும் திரட்டினாளாம் அரனோட பூஜைக்கு
என்தாயே நாககன்னி நாககன்னி நாகராசா
சிறப்புடனே பூஜைதனை  செய்துவரும் வேளையிலே
கொங்கு பெருத்த வனம் கொன்றைகள் பூத்த வனம்
மூங்கில் பெருத்த வனம் முனிவர்கள் ஆளும் வனம்
ஏலக்காய் காய்க்கும் வனம் ஈஸ்வரியாள் ஆண்ட வனம்
சாதிக்காய் காய்க்கும் வனம் தவ முனிவர் ஆண்ட வனம்
அந்த வனத்திலேயும்  அண்ணனும் தங்கையுமாய்
நாககன்னி நாகராசா பூஜைசெய்யும் வேளையிலே
வட்டமிடும் கருடனுடன் வாராரே எம்பெருமான்      (60)
பார்த்தாளே நாககன்னி என்தாயே நாககன்னி
வயத்துல கர்ப்பமாச்சி என்தாயே நாககன்னி
அழுது புலம்பினாளாம்  என்தாயே நாககன்னி
அண்ணனிடம் வந்தாளாம் பார்த்தாரே நாகராசா
பூஜைக்கு வேண்டாமென்று அடித்தல்லோ விரட்டிவிட்டார்
என்தாயே நாககன்னி அழுது புலம்பிக் கொண்டு
ஒட்டாரம் காட்டுக்குள்ளே பரிதவிச்சி நின்னாளாம்
என்தாயே நாக கன்னி
ஒன்னாவது மாத்தையிலே உடம்பெல்லாம் நோகுதின்னா
2வது மாத்தையிலே தலையும் தான் சுத்துதின்னா      (70)
3வது மாத்தையிலே  முகமெல்லாம் வெளுத்து நின்னா
4வது மாத்தையிலே நடையும் தளர்ந்து விட்டா
5வது மாத்தையிலே அடிவயிறும் கனக்குதின்னா
6வது மாத்தையிலே அரனாரை நினைச்சாளாம்
என்தாயே நாக கன்னி
7வது மாத்தையிலே ஏங்கி நின்னு அழுதாளாம்
8வது மாத்தையிலே எட்டெடுத்து வைக்கவில்லை
என் தாயே நாக கன்னி
9வது மாத்தையிலே தயங்கிநின்னு தான்அழுதாள்
10வது மாத்தையிலே பார்வதியைத் தான்நினைச்சா      (80)
என்தாயே நாககன்னி பார்த்தாளே பார்வதியும்
குறிசொல்லும் பாப்பாத்தி  வேடம்கொண்டு பார்வதியும்
கூடை இடுப்பில்கொண்டு பிரம்பும்தான் கையில்கொண்டு
என்தாயே ஈஸ்வரியே வாராளே பார்வதியும்
என்தாயே ஈஸ்வரியே அழுவவேண்டாம் கலங்கவேண்டாம்
வலதுபுறம் நான்இருக்கேன் என்றுசொல்லி பார்வதியும்
தன்னையும் தான்காட்டினாளாம் கருத்தையும்தான் மாத்தினாளாம்
ஒட்டாரம் காட்டுக்குள்ளே ஒத்தநல்ல குலவைபோட்டு
என் தாயே ஈஸ்வரியே ஏழுபேரும் பிறந்தாளாம் 
1வது பிறந்தவளாம் காளியம்மன் பிறந்தாளாம்      (90)
2வது பிறந்தவளாம் மாரியம்மன் பிறந்தாளாம்
3வது பிறந்தவளாம்  முத்துமாரி பிறந்தாளாம்
4வது பிறந்தவளாம் ராக்காச்சி பிறந்தாளாம்
5வது பிறந்தவளாம் துர்க்கையம்மன் பிறந்தாளாம்
6வது பிறந்தவளாம் பேச்சியம்மன் பிறந்தாளாம்
7வது பிறந்தவளாம் முத்தாலம்மன் பிறந்தாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அவள்அழகு பிறந்தஇடம் அயோத்திநகர் பட்டினமாம்
என்தாயே ஈஸ்வரியே
பம்பை பிறந்தஇடம் பளிங்குமா மேடையிலே      (100)
என்தாயே ஈஸ்வரியே
பிரம்பு பிறந்த இடம் பிச்சாண்டி சன்னதியாம்
சடையே பிறந்ததம்மா சதுரகிரி மேடையிலே
என்தாயே ஈஸ்வரியே
சிலம்போ பிறந்ததம்மா சிவசக்தி மேடையிலே
உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே
என்தாயே ஈஸ்வரியே நாககன்னி நாககன்னி
கடமையும்தான் முடிஞ்சிருச்சு நல்லபதவி தாரேன்என்று
சொல்லியே பார்வதியும்  சிவலோகம் அனுப்பிவைச்சா
என்தாயே ஈஸ்வரியே      (110)
அக்காதங்கை ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
ஊட்டுநல்ல வேண்டுமென்று பரமனையும் பார்க்கப்போனாள்
என்தாயே ஈஸ்வரியே மலையாம் மலைகடந்து
வனமாம் வனம்கடந்து வந்தாளே ஏழுபேரும்
என்தாயே ஈஸ்வரியே
எமனோட வாசலிலே எருமைக்கடா காவுகொண்டாள்
பரமனோட வாசலிலே பால்பசுவை காவுகொண்டாள்
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே மோசம்போனோம் என்று சொல்லி
தர்ப்பப்புல்லை புடுங்கினாரே வைரவனை படைச்சாரே       (120)
வைரவனை கையில்கொண்டு வாராளே வனப்பளிச்சி
என்தாயே ஈஸ்வரியே
பச்சரிசி வனத்துலேயும் மகிடாசுரன் உறங்குறானே
அவனையும்தான் கொன்றுவாம்மா
வரமும் தாரேன் என்று பரமனுமே சொன்னாரே
என்தாயே ஈஸ்வரியே
போனாளே ஏழுபேரும்  உறங்குறான் மகிடாசுரன்
என்தாயே ஈஸ்வரியே
பனை மரத்தை தான் புடுங்கி பந்துபோல வீசினாளாம்
என்தாயே ஈஸ்வரியே       (130) 
மகிடனோட சண்டைபோட்டா
மணிக்குடலைத் தான்பிடுங்கி மாலைபோல் போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
எலும்பையும் தான்முறிச்சி இரத்தத்தையும் குடிச்சாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அக்காதங்கை ஏழுபேரும் கைலைமலை போறாளே
கோபத்தோட வாராளே  என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் வந்தாளே மகிடனை அழித்துவிட்டோம்
வரமுந்தானே வேண்டுமின்னு என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே ஒருவண்டி முத்தெடுத்து      (140)
காளியிடம் கொடுத்தாரே என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தை தான்எடுத்து  பவளம்போல கொடுத்தாரே
முத்துக்களைத் தானெடுத்து பூலோகம் போகச் சொல்லி
பரமனும் சொன்னாரே என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் ஏச்சிப்புட்டான் என்றுசொல்லி
பச்சைமுத்தைத் தான்எடுத்து பரமனுக்கே போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
உச்சியிலே போட்டமுத்து உடம்பையும்தான் துளைக்குதின்னார்
மார்புல போட்டமுத்து மார்பையும்தான் துளைக்குதின்னார்
கணுக்காலில் போட்டமுத்து  காலெல்லாம் நோகுதின்னார்       (150)
கண்ணுல போட்டமுத்து கண்ணே தெரியலன்னார்
காந்துதே காந்துதே காந்தாரி போட்ட முத்து 
எரியுதே எரியுதே ஏழுபேரும் போட்ட முத்து
என்றுசொல்லி பரமனுமே ஏங்கிநின்னு அழுதாரே
என்தாயே ஈஸ்வரியே  பார்த்தாளே பார்வதியும்
தலைவாழை இலைவிரிச்சு சங்கரனை படுக்கவைச்சா
ஈனாத வாழையிலே ஈஸ்வரரை படுக்கவைச்சா
அண்ணனையும் தான்நினைத்தாள் என்தாயி பார்வதியும்
பார்த்தாரே மாயக்கண்ணன் குழலோடு வந்தாரே
காராம் பசுவும் கொண்டு  கக்கத்திலே கம்பளியாம்      (160)
எங்கமாயக் கண்ணனுக்கு கடைவாயில் சங்குழலாம்
எங்கமாயக் கண்ணனுக்கு
நானூறு மாட்டுலேயும்  நடுப்பாலை பீச்சி வந்தார்
எங்கமாயக் கண்ணன் கெண்டியிலே பாலெடுத்து
எங்கமாயக்கண்ணன் கடைவாயில் ஊத்தினாராம்
என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தைத் தான்வாங்கி வறுத்துநல்லோர் கொடுத்தாரே
முந்தியையும் தான்ஏந்தி முழங்காலும் தானும்போட்டு
பார்வதி தேவியுமே மடிப்பிச்சை கேட்டாளே
வேர்வையும் வழித்துப் போட்டா வேப்பமரம் ஆனதுல்ல       (170)
வேப்பக்குலையை தான்ஒடிச்சி  பரமனுக்கு வீசிவிட்டா.
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
முத்தையும்தான் இறக்கினாளாம்  பரமனுமே எழுந்துவிட்டார்
என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் விடையும்பெற்று பூலோகம் காக்கப்போறோம்
என்றுசொல்லி ஏழுபேரும்  பூலோகம் போய்ச்சேர்ந்தார்.
என்தாயே ஈஸ்வரியே
ஒட்டாரம் காட்டோரம் ஓலை பறிகொடுத்தா
தில்லைவனக் காட்டுக்குள்ளே சேலை பறிகொடுத்தா      (180)
என்தாயே ஈஸ்வரியே
வந்து இறங்கினாளாம் மக்களுக்கு முத்து போட
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தார்கள் பெரியவர்கள் நாட்டுப் பெரியவர்கள்
நல்லமனிதர் ஒன்றுகூடி ஏதுசெய்வோம் என்றுஎண்ணி
எம்பெருமானை வேண்டிநிற்க  எம்பெருமான் அருளாலே
அக்காதங்கை ஆறுபேர்க்கும் அவரவர்க்கு ஏற்றதொரு
ஆலயமும் ஏற்படுத்தி ஆறுகால பூஜைகளும்
ஆண்டுக்கொரு திருவிழாவும் அனைவருமே சேர்ந்துவந்து
ஆலயத்தில் கூடிமகிழ உலகத்  தாயான      (190)
எங்க முத்தாலம்மனுக்கு
தனித்துநின்ன தாயான தங்கமுத்தா லம்மனுக்கு
வாருமம்மா முத்தாளம்மா உனக்கேத்த ஆலயமும்
நாங்கள் அமைத்துதாறோம் என்றுசொல்லி மக்களெல்லாம்
சொல்லி வருகையிலே என்தாயே முத்தாளம்மா
எனக்கேத்த கோயிலும் எங்குமே இல்லையே
எனக்கேத்த இடமும்தான் முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயே முத்தாளம்மா அன்றுபிறந்து அன்றழிவேன்
மக்கள் செய்யும் பூஜையிலே  மனமுவந்து வந்திடுவேன்
என்றுமே சொன்னாளாம் அன்றுபிறந்து அன்றழிவேன்      (200)
வணங்கிநின்ற மக்களுக்கு வரங்களும் நான்கொடுப்பேன்
செட்டியாரு செய்துவரும் உருவத்திலே நான்வருவேன்
அன்றுபிறந்து அன்றுஅழிவா என்றுதானே அறிந்துகொண்டு
7வது தாயான  எங்க முத்தாலம்மனுக்கு
ஏற்றதொரு இடமுந்தானே முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயி முத்தாளைக்கு மக்கள்செய்யும் பூஜையிலே
அக்காதங்கை ஆறுபேரின் அருள்வாக்கும் கிடைத்திடுமாம்
என்றுமே அறிந்துகொண்டு அம்மாவந்து இறங்கியிருக்கா
குளுமையும் தான்செய்ய வேண்டும்  என்தாயே ஈஸ்வரியே
என்று பெரியவர்கள் உண்மையாகப் பேசிக்கொண்டு      (210)
முளைப்பாரி போடவேண்டும் சாம்பானைக் கூப்பிட்டு
ஒருவீடு தப்பாம சாட்டிவாடா சாம்பாகுட்டி
என்று நல்லோர் சொன்னார்கள் என்தாயே ஈஸ்வரியே
திருமுகத்து பெண்களெல்லாம்  ஒருமுகமாய் கூடிநின்று
சின்னகொட்டான் பெட்டிகொண்டு தெருக்களெல்லாம் பயிரெடுத்து
வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட
என்தாயே ஈஸ்வரியே
காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டப்பயறு
சிறு பயறும் தானெடுத்து என்தாயே ஈஸ்வரியே 
கம்பங் கொல்லையிலே கம்பந்தட்டை எடுத்துவந்து      (220)
சம்சாரி படப்புலயும் சம்பாவைக்க ரெண்டெடுத்து
என் தாயே ஈஸ்வரியே
ஆட்டாந் தொழுதிறந்து ஆட்டெருவ தான்எடுத்து
மாட்டாந் தொழுதிறந்து மாட்டெருவ தான்எடுத்து
என்தாயே ஈஸ்வரியே
குசவனாரு சுல்லையிலே குடத்தோடு எடுத்துவந்து
வட்டவட்ட ஓடுதட்டி என்தாயே ஈஸ்வரியே
ஆட்டெருவ கீழ்பரப்பி  அம்மாமுத்த மேல்பரப்பி
மாட்டெருவ கீழ்பரப்பி மாரிமுத்தை மேல்பரப்பி
என்தாயே ஈஸ்வரியே      (230)
முளைபோட்ட மூணாம்நாளு  முளைகளெல்லாம் பீலிவிட
பீலியிட்ட சத்தம்கேட்டு பெண்களெல்லாம் நீராடி
நீராடி நீர்தெளித்து நீலவர்ணப் பட்டுடுத்தி
வாங்களம்மா தோழிமாரே வளைஞ்சிநின்னு கும்மியடிப்போம்
என்தாயே முத்தாளம்மா
வெள்ளிக் கிழமையன்று வெள்ளிரதம் போலிருப்பா
என் தாயே முத்தாளம்மா
சனிக்கிழமை இரவுகொண்டு சல்லிவேரும் போட்டிடுமாம்
ஞாயிற்று கிழமையன்று நல்லமுளை கொண்டிடுமாம்
என்தாயி முத்தாளைக்கு என்தாயி ஈஸ்வரிக்கு       (240)
பச்சைமண்ணை எடுத்துத்தானே பாங்குடனே பீடம்செய்து
என்தாயி முத்தாளைக்கு  என்தாயி ஈஸ்வரிக்கு
ஈரமண்ணை எடுத்துத்தானே இன்பமுடன் பீடம்செய்து
பாலரெல்லாம் ஒன்றுசேர்ந்து பாங்குடனே பீடம்கட்டி
பாசத்துடன் அழைத்திடுவோம் என்தாயி முத்தாளையும்
செட்டியொரு தானாக செய்துவரும் உருவத்திலே
துள்ளியே வந்திடுவாள் பாலர்கள் செய்துவைத்த
பீடத்திலும் வீற்றிருப்பாள் என்தாயி முத்தாளையும்
செவ்வாய் கிழமையன்று வெளியேற நினைச்சிடுவா
என்தாயே முத்தாளம்மா  பெண்களெல்லாம் ஒன்றுகூடி      (250)
குளித்து திலகமிட்டு என்தாயே முத்தாளம்மா
தூத்து தொளிக்கச்சொன்னா தோரணங்கள் கட்டச்சொன்னா
வேப்பிலையும் தோரணமும் வாங்கரும்பும் சாத்துவாராம்
மாவிலையாம் தோரணமாம் எங்கமுத்தா லம்மனுக்கு
கோழி கொழுக்கட்டையாம்  முட்டை முருங்கைக்காயாம்
என்தாய்க்குப் படைச்சிவச்சி உறுமிக்கொட்டும் தான்முழங்க
கொட்டுமேளம் தான்முழங்க முளைப்பாரி தலையில்வைச்சி
ரதவீதி சுத்திவந்து என்தாயி முத்தாளம்மா
முச்சந்தியில் வீற்றிருப்பா காதோலை கருகமணி
இடதுபுறம் வீற்றிருக்க  மஞ்சளையும் குங்குமமும்      (260)
வலதுபுறம் வீற்றிருக்க என்தாயி முத்தாளைக்கு
பானக்காரம் கரைச்சிவைச்சி வேப்பம்பாலும் கரைச்சிவைச்சி
துள்ளுமாவும் இடிச்சிவைச்சி என்தாயி முத்தாளைக்கு
இளநீர்க்கண் திறந்துவைச்சி சித்தாடை உடுத்திவைச்சி
எலுமிச்சை மாலைபோட்டு  நிறமாலை தானும்சாத்தி
என்தாயி முத்தாளைக்கு
தென்னம்பூவை சிரசில்வைச்சி கும்பக்கலயம் தானும்வைச்சி
முத்துப்போல இலங்குறாளாம்  எங்கள் முத்தாளம்மா
வெண்பொங்கல் தானும்வைச்சி அழைக்கிறோம் மாதாவே
வருந்தி அழைக்கிறேனே வனக்கிளியே வந்திடம்மா      (270)
கூப்பிட்டு நான்அழைச்சேன் குயில்மொழியே வந்திடம்மா
என்தாயே முத்தாளம்மா மஞ்சள் சேலைக்காரி
மாராடி பாசிக்காரி  மடிநிறைந்த மகிழம்பூவாம்
அடுக்குமல்லி தொடுக்குமல்லி ஆனந்தமாய் பிச்சிரோஜா
என்தாயே ஈஸ்வரியே
கூப்பிட்ட சத்தமும்தான்  கோவிலுக்கு கேக்கலையோ
அழைக்கிற சத்தமுந்தான் ஆலையமும் கேக்கலையோ
கல்லான உன்மனசு கரையவேணும் இந்தநேரம்
இரும்பான உன்மனது இளகவேணும் இந்தநேரம்
என்தாயே முத்தாளம்மா ஆறுபேரும் வாராளாம்      (280)
பம்பையும் தான்முழங்க  உறுமிக் கொட்டும் தான்முழங்க
ஆனந்தமா வாராளே வாராளே வாராளே
மாகாளி வாராளம்மா சிலம்போசை கேட்குதம்மா
காவிநல்ல பட்டுடுத்தி காளியம்மன் வாராளே
மஞ்சள்நல்ல பட்டுடுத்தி மாரியம்மன் வாராளே
முகத்து அழகுக்காரி  முத்துமாரி வாராளே
அரக்குநல்ல பட்டுடுத்தி ராக்காச்சி வாராளே.
சிவப்புநல்ல பட்டுடுத்தி துர்க்கையம்மன் வாராளே
பச்சைநல்ல பட்டுடுத்தி பேச்சியம்மன் வாராளே
முத்துமுத்தாய் பட்டுதுலங்க முத்தாளம்மா வாராளே      (290)
என்தாயே ஈஸ்வரியே
ஏற்றதொரு பட்டுடுத்தி ஏழுபேரும் வாராளே
ஒத்தநல்ல குலவைபோட்டு ஓங்காரி வாராளம்மா
குற்றம்குறை இருந்தாலும் ஏழைமக்கள் பூஜையம்மா
குணமயிலே ஏத்துக்கம்மா என்தாயி முத்தாளம்மா
சாமக்கோழி கூவையிலே சேவலையும் காவுகொண்டா
மஞ்சள்பாலைத் தான்குடிச்சா பானக்காரம் தான்குடிச்சா
துள்ளுமாவும் சாப்பிட்டாளாம் வெண்பொங்கலும் சாப்பிட்டாளாம்
என்தாயி ஈஸ்வரியாள்  வயிறுநல்லா குளிர்ந்திருச்சி
பசியும்நல்லா அடங்கிருச்சி மனசும்நல்லா நிறைஞ்சிருச்சி      (300)
மக்களுக்கு நல்லவரம் தந்தேன் என்று 
என்தாயே ஈஸ்வரியாள்
மஞ்சளையும் காக்கவேணும் குங்குமத்தைக் காக்கவேணும்
உழைக்கிற மக்களுக்கு உள்ளம்மகிழ வரம்கொடம்மா
என்தாயே முத்தாளம்மா நாளைக்கு பயணமின்னு
ஏங்கிநின்னு அழுதாயோ முகம்கோணி நின்னாயோ
என்தாயி முத்தாளம்மா  வருந்தாதம்மா ஏங்காதம்மா
வருகிற வருசத்திலே வளரும்பிறை நாளையிலே
உன்னையும் தான் அழைக்கிறோமே
முளைப்பாரி தானும்போட்டு  குளுமையும் தான்செய்திடுவோம்      (310)
என்று சொல்லி மக்களெல்லாம் ஒரு முகமாய் நிக்கையிலே
என் தாயி முத்தாளம்மா என்தாயி ஈஸ்வரியாள்
மனம்மகிழ்ந்து போறாளே மகிழ்ச்சியுடன் போறாளே
என்தாயே முத்தாளம்மா
அன்றுபிறந்து அன்றழிவா அரசிலையில் வீத்திருப்பா
ஒரு நாளிருந்துமே
உலகமே ஆண்டிடுவா உத்தமியாம் முத்தாலம்மா
சித்திரைத்தேர் ஓடுதம்மா சிவகாசி வீதியிலே
சிவகாசி பத்ரகாளி சேவிப்போர்க்கு வரம்தருவா
ஆயிரங் கண்ணுடையாள் அனைவரையும் காத்திடுவாள்      (320)
சக்கம்மா தாயிஅம்மா  சமயம்வந்து வரம்கொடுப்பா
சிவகாசி மாரியம்மா சீக்கிரம் வரம்கொடுப்பா
இருக்கன்குடி மாரியம்மா இருந்துநல்லா வரம்கொடுப்பா
சமயபுரம் மாரியம்மா சாய்ந்திருந்து வரம்கொடுப்பா
கண்ணபுர மாரியம்மா கண்ணையும்தான் கொடுத்திடுவா
வேற்காட்டு மாரியம்மா வேண்டும்வரம் தான்கொடுப்பா
கடும்பாடி மாரியம்மா கருத்தையும்தான் கொடுத்திடுவா
கோவியனூர் மாரியம்மா கேட்டவரம் தான்கொடுப்பா
பாளையத்து மாரியம்மா பார்த்திருந்து வரம்கொடுப்பா
முன்னிருக்கும் முத்தாளம்மா பூடத்தின் அருகினிலே்      (330)
நின்றுபாடும் அருந்தவப் புதல்வி யம்மா
என்தாயே முத்தாளம்மா
மங்களமாம் மங்களம் எங்கும் நிறைந்திருக்கும்
மங்களம்

(முற்றும்)




*  சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள் தொகுப்புப் பணி: தகவல் தந்தவரும் திரட்டியவரும் அங்காள ஈஸ்வரி அம்மன் பாடல் என்று தான் தலைப்புக் கொடுத்து உள்ளனர். ஆனால் உள்ளே அந்தப் பெயரே இல்லை. முத்தாலம்மன் என்ற பெயர் தான் உள்ளது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் அப்பெயரை இட்டு உள்ளேன்.
— முனைவர் ச.கண்மணி கணேசன்





________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)

Tuesday, October 9, 2018

காவிரியின் வடக்கே முசிறி-பெரம்பலூர் பகுதியில் பண்டைய பௌத்தச் சுவடுகள்

 – தேமொழி 



          தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல்  (1940) முதற்கொண்டு,   தொடர்ந்து  பல பெளத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து, சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட  "தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம்" என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் 1998 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நூலில், தமிழகத்தில் காணப்பெறும்  புத்தர் சிலைகளென  19 புத்தர் சிலைகள் காணப்படுகின்றன எனக் குறிப்பிடும் பெளத்த சிலைகள் ஆய்வாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், தொடர்ந்து தனது களஆய்வுகள் மூலம் மேலும் ஒரு 65 புத்தர் சிலைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியுள்ளார். 

          கால்நூற்றாண்டிற்கும் முன்னர் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தொடங்கி,  வரலாறு கூறும்  அக்கால  சோழமண்டலத்தில் (அல்லது பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சியில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஜில்லா பகுதிகளில்) புத்தர் சிலைகளைத் தேடி ஆய்வு மேற்கொண்டு பற்பல புத்தர் சிலைகளை தமிழரின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளரான முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள். சோழர் ஆட்சியின் இறுதிக்காலம் வரை  பௌத்தம் செழித்திருந்தது என்பது ஆய்வுவழியாக இவர் கண்டறிந்த செய்தி. மேலும்  இவர், சில சிலைகளை புத்தர் என்று அறிந்தோ அல்லது அறியாமலோ  மக்கள் வணங்கி வழிபட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.  

          இந்நாட்களில் மேற்சொன்ன  திருச்சி தஞ்சை மாவட்டங்களும் தேவைக்கேற்பவும் காலமாறுதலுக்கேற்பவும் பற்பல மாவட்டங்களாகப்  பிரிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் கிடைத்து வரும் புத்தர் சிலைகளில் பெரும்பான்மை அமர்ந்த கோலத்தில் தியானம் செய்யும் புத்தரின் உருவங்கள். புத்தரின் சிலையுருவத்தின் தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர் வடிவில் முடி, நீண்டு தொங்கும் காதுகள், இதழ்களில் புன்னகையுடன் கண்களைச் சிறிதே மூடிய நிலையில் அமைதியான முகம், பரந்த மார்புடனும்  திரண்ட தோள்களுடனும் மார்பில் மேலாடையும் இடையில் ஆடையும் அணிந்திருக்கும் நிலை, கையில் தர்மசக்கரக்குறியும்   நெற்றியில் திலகக்குறியும் போன்ற அடையாளங்கள் என்ற  பொதுக் கூறுகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் புத்தர் சிலைகளே பெரும்பாலும் சோழமண்டலப் பகுதியில்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. 



          பா.ஜம்புலிங்கம் வெளிக்கொணர்ந்த புத்தர் சிலைகளில் சற்றே மாறுபட்டு கவனத்தைக் கவர்வது "மீசை வைத்த புத்தர்" சிலை (பார்க்க: தமிழ்முரசு நாளிதழ் -  ஜூலை 1999 செய்தி).   திருச்சி மாவட்டத்தின்  முசிறி வட்டத்தில் மங்கலம்  என்ற சிற்றூரின் அரவாண்டியம்மன் கோவில் (அரவாயி அம்மன் கோவில் எனவும் அழைக்கப்படும் இக்கோயிலின் புவியிடக் குறியீடு: 11.050535, 78.480055) அருகே கண்டுபிடிக்கப்பட்ட  இச்சிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.  மீசையுடன் காணப்படும் இதுபோன்ற புத்தர் சிலை இதுவரை தமிழகத்தில் வேறெங்கும் காணப்பெறவில்லை.  முன்னாட்களில் இந்த முசிறி-ஆத்தூர்-பெரம்பலூர்  பகுதி வணிகத்தலமாக இருந்திருக்கக்கூடும் என்பதும், பல புத்தர் சிலைகள் காணப்படும் இப்பகுதியில்  பௌத்தம் அக்காலத்தில் செழித்திருந்திருக்கக்கூடும் என்பதும், அங்கு வணிக நோக்கில் வந்தவர் இந்தச் சிலையை உருவாக்கியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இச்சிலையின்  பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்களும்  காணப்படுகின்றது. இது சோழமண்டலத்தில் உள்ள பிற புத்தர் சிலைகளில் இருந்து வேறுபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. 
 

          பாகிஸ்தான் பகுதியில், காந்தார கலைவடிவ புத்த சமய சிற்பங்களின் பாணியில் வடிக்கப்பட்டுள்ள, மீசையுடன் கூடிய 'போதிசத்துவ மைத்ரேயர்' (கிமு 3 - 4ம் நூற்றாண்டு) சிலையின் வடிவத்தைப் போல, மீசையுடன் கூடிய இந்த  6 அடி உயரப் புத்தர் சிலையைப் பா. ஜம்புலிங்கம் அடையாளம் காட்டிய  பின்னர், சிலை புத்தரின் சிலை எனத் தெளிவாகத் அறிந்த பின்னரும், அப்பகுதி மக்கள் புத்தரை 'செட்டியார்' என அழைக்கத் தொடங்கியதாகவும், அரவாண்டியம்மனைக் குலதெய்வமாகக் கொண்ட அவர்கள்  'அருள்மிகு செட்டியப்பன் சுவாமி' என்றழைத்த இந்த மீசை புத்தருக்கு அங்கு ஒரு கோவில் கட்டி வழிபட விருப்பம் தெரிவித்ததாகவும் அன்று வெளிவந்த நாளிதழ் செய்தி கூறுகின்றது.  



          பொதுவாக, சோழ நாட்டில் புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டைச் செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.   தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் பெரண்டாக் கோட்டையில் உள்ள புத்தர் சிலையை, அது புத்தர் என அறியாது ஊர்மக்கள்  ‘சாம்பான்’ என்றும், அய்யம்பேட்டையில் 'முனீஸ்வரன்' என்றும், பெருஞ்சேரியில் 'ரிஷி'என்றும் கூறி வழிபட்டு வருகிறார்கள். 

          புத்தர் உயிர்க்கொலையை மறுத்தவர். ஆனால், மங்கலம் அரவாண்டியம்மன் கோயிலிலோ பிராணிகளைப் பலி கொடுப்பது வழக்கம்.  இதனால் புத்தருக்கு தனியாக சந்நிதி ஒன்று கட்டி, அங்கு புத்தர் சிலையை எழுந்தருளச் செய்து, பலியிடும் நாட்களில் அதைப் புத்தர் காணாதவாறு, புத்தருக்கு முன்னர் ஒரு  திரைச் சீலை அமைத்து மூடிவிடுவதை வழிபடும் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். 

          காவிரியின் வடகரையில் முசிறி அருகே அமைந்துள்ள மீசை புத்தர் போலவே; காவிரியின் வடகரையில் பெரம்பலூர் செல்லும் வழியிலும், திருச்சிக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில் புத்த சமயம்  தழைத்திருந்து இன்று மறைந்து போனதன்  அடையாளமாகத் தொல்லியல் தடயங்களாகப் பற்பல புத்த சிலைகள் காணப்படுவதை, மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில் கொடுத்துள்ளார்.  அப்பகுதி அவ்வாறே கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 
                    "பயணநேரம் என்னவோ மூன்று மணிநேரந்தான். ஆனால், வழியெங்கும் விரவிக் கிடந்த புத்தர் சிலைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே சென்றதால்தான் அவ்வளவு நேரம். ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் புத்த மதம் தழைத்தோங்கியிருந்திருக்க வேண்டும். சைத்தியங்களும் விகாரைகளும் அங்கு இருந்திருக்க வேண்டும். புத்தம் சரணம் கச்சாமி என்ற பிக்குகளின் சரண கோஷங்கள் இரவு பகலாக அந்தப் பகுதிகளில் எதிரொலித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் தெருவுக்கு ஒன்று வயலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அத்தனை புத்தர் சிலைகள் எப்படி வந்திருக்க முடியும்? அதிலும் அமர்ந்த நிலையிலிருந்த ஒரு சிற்பம் கிட்டத்தட்ட ஆறு அடிக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. இதில் வருத்தம் தரக்கூடிய சுவாரசியமான நிகழ்ச்சி என்னவெனில், 'இதை புத்தர் என்று யார் சொன்னது? இவர் கொங்குச் சாமியார்!' என்று அங்கே இருந்தவர்கள் கூறியதுதான்" 
- ச. கமலக்கண்ணன்

          முசிறி-மங்கலம் மீசை புத்தரை செட்டியார் என அப்பகுதி மக்கள் அழைப்பது போலவே, பெரம்பலூர் மாவட்டம் தியாகனூர்ப் பகுதி மக்களும் புத்தரை கொங்குச் சாமியார் என அழைக்க விரும்புகிறார்கள். கிடைத்துள்ள இரு   6 அடி  உயரச் சிலைகள் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஒரு புத்தர் சிலைக்குத் தூண்களுடன் அமைந்த சிறு கோவிலும் (புவியிடக் குறியீடு: 11.560897, 78.780151), வயல்வெளியில் கிடைத்த மற்றொரு புத்தர் சிலைக்கு  தியாகனூர்ப் பகுதியில் தியான மண்டபம் ஒன்றும் உருவாக்கி (புவியிடக் குறியீடு: 11.558442, 78.779749) புத்தர் சிலையை வழிபாட்டிற்குரிய சிலையாகவும் மாற்றிவிட்டிருக்கிறார்கள் அவ்வூர் மக்கள்.  





          கோவிலில் இந்துக்கடவுளை வழிபடும் முறையிலேயே பூசைகள், வழிபாடுகள், அலங்காரங்கள்,  சர்க்கரைப்பொங்கல் சுண்டல் படையல்களுடன்  இந்தச் சாக்கிய முனி வழிபடப்படுகிறார்.  பெரம்பலூர் மாவட்டத்திலும், சேலம் மாவட்ட  தியகனூர் பகுதியைச் சுற்றி மேலும் பல புத்தர் சிலைகள் இருப்பதாக நாளிதழ் செய்தியொன்றும் கூறுகிறது.  ஆறகழூர், வீரகனூர், பரவாய், ஓகளூர் சிற்றூர்களும் கிராமங்களும் கொண்ட இப்பகுதியில் காணப்படும் புத்தர் சிலைகளை பொதுவாக 'பெரம்பலூர் புத்தர்கள்' என்று குறிப்பிடும் முறை இன்று வழக்கத்தில் உள்ளது. ஒரு சில சிலைகளைத் தவிர்த்து பெரும்பாலானவை தலை துண்டிக்கப்பட்டோ அல்லது சிதைக்கப்பட்டோ அழியும் நிலையில் உள்ளன. இப்பகுதி இலக்கியத்தில் மகதநாடு என்று அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. 

          சில புத்தர் சிலைகள்,  குறிப்பாக அரியலூர் மாவட்டத்தின் கீழக்கொளத்தூர், அரியலூர், கங்கைகொண்ட சோழபுரம் இடங்களில் கிடைத்த புத்தர் சிற்பங்கள்  கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டாலும், பெரம்பலூர் புத்தர் சிலைகள் பல பொதுவெளியில் பாதுகாப்பின்றியே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கவலை.  சிலநாட்கள் கழித்து அதே இடத்திற்கு மீண்டும் ஆய்விற்குச் செல்லும்பொழுது சிலைகள் சிதைக்கப்பட்டோ, காணாமலே போய்விடுவதோ பெரும்பாலோர் எதிர்கொள்ளும் அனுபவங்கள்.  தொல்லியல் ஆர்வலர்கள்  தனிப்பட்ட ஆர்வத்தில் களஆய்வு செய்து கண்டுபிடிக்கும் தொல்லியல் சிலைகளும் தடயங்களும் உடனடியாக பாதுகாப்புள்ள அருங்காட்சியகங்களுக்கு அரசால் மாற்றப்படுமானால் சிலைத்திருட்டுகளும் தவிர்க்கப்படும், நம் வரலாற்றுச் சின்னங்களையும் அழிவில் இருந்து காக்கலாம்.  வரலாற்றை  அறிவதிலும் மீட்டெடுப்பதிலும் இந்தத் தொல்லியல் தடயங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களும் உணர வேண்டும், அரசும் பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். 





சான்றாதாரங்கள்: 
1. சோழநாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை, பா. ஜம்புலிங்கம், தமிழ்க்கலை, தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு. 

2. தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம், (2-ஆம் பகுதி), தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, 1998.

3. மயிலை.சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957 

4. முசிறி அருகே 6 அடி உயர புத்தர்சிலை கண்டுபிடிப்பு, தமிழ்முரசு, ஜூலை 8, 1999, பக்கம் 7. 

5. மீசை வைத்த புத்தர்! சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்.   முனைவர் பா. ஜம்புலிங்கம், தி இந்து தமிழ்,  பிப்ரவரி 27, 2015.  

6. வல்லமை தாராயோ?, ச. கமலக்கண்ணன், வரலாறு, இதழ் 3,  அக்டோபர்-நவம்பர், 2004, டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்

7. Buddha at the crossroads, A., Srivatsan, Perambalur: The Hindu,  (9 June 2012).

8. Meditation centre inaugurated, Staff Reporter, Salem: The Hindu,  (29 June 2013).

9. Aravayi Amman Temple-Mangalam -  http://www.tn.gov.in/trichytourism/other.htm

புவியிடக்குறிப்புக்கள்:
Ancient Buddha Idol - Mangalam; Mangalam, Tamil Nadu 621205, India (11.050535, 78.480055)
Buddha Temple Salem Tamil Nadu, Salem, Tamil Nadu 636101, India (11.560897, 78.780151)
Buddhar Kovil, Thiyaganur, Tamil Nadu 636101, India (11.558442, 78.779749)

படங்கள் உதவி:
திரு. மகாத்மா செல்வபாண்டியன் - https://www.facebook.com/mahathma.selvapandiyan
விக்கிபீடியா




________________________________________________
தொடர்பு:
முனைவர். தேமொழி (jsthemozhi@gmail.com)







Monday, October 8, 2018

இணைய ஊடகங்களில் தமிழ் - தாக்கங்களும் வளர்ச்சியும்

–  முனைவர்.க.சுபாஷிணி 



               பதிப்புத்துறை என்பது தற்சமயம் அச்சுப் பதிப்பு முறையைக் கடந்து இணையப் பதிப்பு முயற்சிகளாக, மின்பதிப்பாக்கங்களாக வலம் வரும் காலம் இது. ஓலைச்சுவடியிலிருந்து தமிழ் கற்ற காலமென்பது படிப்படியாக, அதிலும் குறிப்பாக18ம் நூற்றாண்டின் இறுதியில் குறைய, அச்சுப்பதிப்புக் கருவிகள் பெருக பதிப்பாளர்கள் பரவலாக சுவடி நூலிலிருந்து அச்சுப் பதிப்பிற்குத் தமிழ் நூல்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்ட அதே வேளை புதிய நூல்கள் நேரடியாக அச்சுப் பதிப்பாக அச்சகத்தார் பலரால் வெளியிடப்பட்டன. கணினி தொழில் நுட்பம்,வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில், தமிழ் நூல் பதிப்புக்கள் என்பவை அச்சுப் பதிப்பு மட்டுமே என்ற நிலையைக் கடந்து மேலும் ஒரு புதிய பரிமாணம் எடுத்துள்ளது. இணைய ஊடகத்தின் வழியாகத் தமிழ் வலம் வரும் இக்காலம் உலகளாவிய அளவில் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு பொற்காலமாகும். 




               நூல்களைப் போலவே சஞ்சிகைகள் வெளியீடு என்பதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றியுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சஞ்சிகைகள் பல வெளிவந்தமை பற்றி பலரும் அறிந்திருப்போம். இத்தகைய முயற்சிகள் உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகள் சிலவற்றிலும் குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்திருக்கின்றன. 



               சென்ற 20ம் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டங்களில் தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் முயற்சியாகச் செந்தமிழ்ச் செல்வன் என்ற ஒரு சஞ்சிகை வெளியிடப்பட்டது. இதன் ஒரு சஞ்சிகையின் பிரதி தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் மின்னூலாக வைக்கப்பட்டுள்ளது. அதனைத்   தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் காணலாம். இதே போல மலேசிய சிங்கையிலும் இலங்கைத் தீவிலும் சஞ்சிகைகள் பல தமிழ் ஆர்வலர்கள் சிலரால் குறிப்பிடத்தக்க வகையிலான முயற்சிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டன. 

               ஆசிய நாடுகள் சிலவற்றில், 19ம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டங்களில் நிகழ்ந்த தமிழ் முயற்சிகளை அறியும் போது வியப்பில் ஆழ்கின்றோம். சிங்கையில் 1875ம் ஆண்டில் சிங்கை வர்த்தமாணி என்னும் சஞ்சிகை வெளியிடப்பட்டது. சி.கே.மஹ்தும் சாஹீப் என்பவரது முயற்சியால் இந்த இதழ் தொடர்ந்து சிங்கையில் பிரசுரிக்கப்பட்டு வந்தது. குலாம் காதீர் நாவலர் என்னும் தமிழ் ஆர்வலர் அன்றைய மலாயாவின் பினாங்குத் தீவில் 1883ம் ஆண்டில் வித்யா விசாரணி என்ற ஒரு சஞ்சிகையைத் தொடங்கியிருக்கின்றார். இதே காலகட்டத்தில் வித்யா ஷேடனன் என்ற ஒரு பத்திரிக்கை வெளிவந்தது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது. இலங்கையின் கண்டியிலிருந்து முஸ்லிம் நேசன் என்ற ஒரு பத்திரிக்கையும் அக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளது. உள்ளூர் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பர்மா, சைகோன், சிங்கை மலாயாவிலிருந்தும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அக்கால கட்டத்திலேயே இந்தச் சஞ்சிகையில் இடம்பெற்றன என்பதையும் அறிய முடிகின்றது. 

               பினாங்குத் தீவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத வார சஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. 1887ம் ஆண்டில் ஹிந்து நேசன் என்ற பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. 1912ம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட்டும் என்ற வகையில் ஞானாசிரியன் என்ற வாரபத்திரிக்கை வெளிவந்து பின்னர் அது தினசரி பத்திரிக்கையாக ஜனோபகாரி என்ற பெயருடன் வலம் வர ஆரம்பித்தது. மலாயாவில் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியினால் 1.1.1887ம் நாள் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட Book Registration Ordinance என்ற சட்டத்தின் கீழ் மலாயா சிங்கையில் வெளியிடப்படும் அனைத்து பதிப்பாக்கங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் இப்பகுதியில் வெளியிடப்பட்ட மாத வார தினசரி பத்திரிக்கைகளோ நூல்களோ எதுவாயினும் அதில் மூன்று படிவங்கள் பிரித்தானிய அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு படிவம் இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் இடம் பெற வேண்டும் என்ற சட்டம் அப்போது இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் விளைவாக இன்று பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்புக்களுக்கான அட்டவணையைக் கவனிக்கும் போது 1887 தொடக்கம் 1914 வரையிலும் மலாயா சிங்கையில், தமிழ் மொழியில் இக்காலகட்டத்தில் 34 தமிழ் மாத, வார தினசரி பத்திரிக்கைகள் வெளிவந்துள்ளன என்ற தகவலை அறிய முடிகின்றது. இவை மின்னூல்களாக பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. 

               கணினி தொழில்நுட்பத்தின் வழி மின்னாக்க முயற்சிகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் ஜெர்மனியில் மிக விரிவாக வளர்ந்த ப்ரோஜெக்ட் குட்டன்பெர்க் (http://www.gutenberg.org/ ) எனப்படும் திட்டம் உலக மொழிகள் அனைத்திலும் உள்ள நூல்களை மின்னூலாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. பல நூலகங்களின் மின்னாக்கப்பணிகளுக்கு அடிப்படை கருத்தாக்கத்தை வழங்கிய ஒரு முயற்சியாக இத்திட்டம் அமைந்தது. பிரித்தானிய நூலகம் அதன் எல்லா சேகரிப்புக்களையும் மின்னாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டமையினால் அங்குள்ள ஏனைய மொழி படைப்புக்கள் மின்னாக்கம் பெற்றமையைப் போலவே இந்திய மலாயா சிங்கை நாளிதழ்களும் நூல்களும் கூட மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மின்னூல்களாகக் கிடைக்கும் இவற்றைப் பெற விரும்புவோர் பிரித்தானிய நூலகத்தைத் தொடர்பு கொண்டு மின்னூலைப் பெற வாய்ப்பும் உள்ளது. 

               பரவலான கணினி மற்றும் இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பவை ஏற்படுவதற்கு முன் பலரது தீவிர தமிழ்ப்பற்றின் காரணத்தினாலும் முயற்சிகளினாலும் வெளி வந்த படைப்புக்கள் பல சேகரிக்கப்படாமலேயே அழிந்தன. அச்சு இதழ்களாக அந்தந்த நாட்டு ஆவணப் பெட்டகங்களிலும் கிராம நூலகங்களிலும் முடங்கிக் கிடக்கின்ற நிலை மட்டுமே ஏற்படும் போது, பொது மக்கள் பார்வைக்குப் பரவலாக அவை கிடைக்கும் நிலை ஏற்படுவதில்லை. ஆனால் இணையப் பரப்பில் மின்னூலாக்கம் என்ற முயற்சிகள் பரவலாக இயங்க ஆரம்பித்த பின்னர் பல சஞ்சிகைகளை இணையத்தில் மின்வடிவத்தில் காண முடிகின்றது. 

இணையத்தில் தமிழ் நூல் மின்னாக்கம் எனும் பொழுது இவ்வகை முயற்சிகளை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: 
1. அரசாங்க நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், ஆவணப் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவை சஞ்சிகைகளை மின்வடிவத்தில் மாற்றி அவற்றை இணைய வெளியில் வெளியிடுவது . 
2. தன்னார்வக் குழுக்களும் பதிப்பகத்தாரும் இணைய வெளியில் சஞ்சிகைகளை மின் வடிவத்தில் வெளியிடும் முயற்சிகள்.
3.தனிநபர் முயற்சிகளின் வழி வெளியிடப்படும் மின்சஞ்சிகைகள் பழம் சஞ்சிகைகளின் மின்னாக்கங்கள். 

               இணைய வெளியில் மின்னூல்கள், மின்சஞ்சிகைகள் வெளியீடு என்பது மட்டுமன்றி விரிவான வகையிலும் கருத்துப் பரிமாற்றங்களும் உடனுக்குடன் பதிப்பித்தல் என்ற முயற்சிகளும் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து விரிவாகிக் கொண்டே வருகின்றன என்பதைக் காண்கின்றோம். மடலாடற் குழுக்கள் இவ்வகையில் இயங்குபவையே. கருத்துப் பரிமாற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்வகைத் தளங்கள் இவ்வகை முயற்சிகளில் ஈடுபடுவோரை மிக ஈர்ப்பதால் தட்டச்சு செய்தல், தங்கள் கருத்துக்களை ஏனையோருடன் இணைய வெளியில் பகிர்ந்து கொள்தல் என்ற முயற்சிகளில் இறங்கி தங்கள் தமிழ் அறிவை படிப்படியாக உயர்த்திக் கொண்டு எழுத்தாளர்களாகப் பரிமளித்திருக்கும் நிலையில் பலர் இன்று உதாரணங்களாக இணைய உலகில் வலம் வருகின்றார்கள். இதற்கு ஒரு படி மேலாக ஃபேஸ்புக் தளங்கள் இயங்குகின்றன. தமிழிலேயே தட்டச்சு செய்து பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்கள் தமிழறிவு மேம்படும் வகையில் நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டு கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்துகின்றனர். 

               இத்தகைய முயற்சிகளினால் தமிழ் இலக்கியப் படைப்புக்களின் பரப்பும் அதன் எல்லையும் மேலும் விரிவடைந்த நிலை பெருகி வருவதைக் காண முடிகின்றது. தமிழ் இலக்கியப் படைப்புக்கள் முன்னர் படைக்கப்பட்ட இலக்கியங்களின் உட்பொருளிலிருந்து மேலும் விரிவாகி ’அயலகச் சூழலில் தமிழ்’ என்ற வகையில் தமிழ் பண்பாட்டுக் கூறுகளையும் அயலக சமூகப் பின்னணியின் சமூகக் கூறுகளையும் கலவையாகக் கொண்டு பரிமளிக்கும் நிலை உருவாகியுள்ளது என்பதைக் காண முடிகின்றது. முன்பை விட தற்காலத்தில் அதிகமான பயண இலக்கியங்கள், அயலக பின்னணி சார்ந்த இலக்கியங்கள், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை நிலையை விவரிக்கும் இலக்கியங்கள், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புக்கள் என்ற வகையில் வெளிவருகின்றன. நம் கண் முன்னே காணும் சமூக அவலங்களைப் பழகிப் போன பார்வையுடன் காணும் தன்மை மறைந்து மாறுபட்ட கோணத்தில் காணும் இலக்கியங்களும் கூட உருவாகின்றன. விரிவான வாசிப்பு, உடனுக்குடன் படைப்புக்களைச் சீர்செய்து மாற்றி தரவுகளைச் சேர்த்து வளம் மிக்க படைப்புக்களாக வழங்கும் நிலை என்பது இணைய ஊடகம் வழங்கியிருக்கும் நல்வாய்ப்பு என்றே கூறலாம். 

               இணைய ஊடகங்களில் வெளி வரும் பதிவுகள் எல்லா வேளைகளிலும் சிறப்பானவை என்றும் தரத்தில் உயர்ந்தவை என்றும் கொள்வதற்கு இல்லை என்பதும் மறுக்கப்பட இயலாது. அவசரமாகத் தட்டச்சு செய்து எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்காமலேயே, உடன் பதிலளிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தட்டச்சுதல் என்பன போன்ற நடவடிக்கைகளினால் தட்டச்சுப் பிழைகள் நிறைந்த எழுத்துப் பதிவுகளையும் இணையத்தில் பரவலாகக் காண்கின்றோம். இது மட்டுமன்றி இணையத் தொழில் நுட்ப அறிவு கொண்டோர் எவரும் ஒரு பதிப்பாளராகலாம் என்ற நிலை சுலபமாக வாய்ப்பதால் பலரும் இணையத்தில் சஞ்சிகைகள் நடத்துவது என்பது பரவலாகி விட்டது. இதில் முக்கியக் கேள்வியாக அமைவது படைப்புக்களின் தரம் எவ்வகையில் அமைந்திருக்கின்றது என்பதே. ஆக இத்தகைய விஷயங்களை உற்று நோக்கி அதனைச் சீர் செய்து தரமான இலக்கியப் படைப்புக்களையும் தமிழ் கருத்துப் பரிமாற்றங்களையும் செய்து வருவது விரிவானால் தமிழ் இலக்கிய வளர்ச்சி கணினி மற்றும் இணைய ஊடகங்களின் வாயிலாக பலதரப்பட்டோரையும் சென்று அடைவதோடு தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த வளர்ச்சியை வழிகாட்டும் என்பது உண்மையாகும்!

[2014 தினமணி ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.]



________________________________________________
தொடர்பு:
முனைவர்.க.சுபாஷிணி   (ksubashini@gmail.com)




Thursday, October 4, 2018

உத்தமம் - கல்வெட்டியல் பயிலரங்கு

உத்தமம்-கே.ஜி. பொறியியல் கல்லூரி கோவை இணைந்து நடத்திய கல்வெட்டு-ஆவணப்படுத்துதல் பயிலரங்கு
(UTHTHAMAM-KCT WORKSHOP ON EPIGRAPHY)
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



உத்தமம்:
               தமிழ் மொழியையும் தமிழ் எழுத்தையும் கணினிக்குள்ளும் கணினி வழி இணையத்துள்ளும் கொண்டு சேர்க்கத் தனி ஒருவராகவும், குழுவாகவும் பல்வேறு அமைப்புகள் பணியாற்றியுள்ளனர்; பணியாற்றிக்கொண்டும் வருகின்றனர். இவ்விருவகைப் பயன்பாடுகளையும் நாம் பயன்படுத்திக்கொண்டு வருகின்றோம். கணினி யுகத்துக்கேற்றவாறு  தமிழ் மொழியைத் தகவமைக்கும் வளர்த்தெடுக்கும் பணியாகும் இது. தமிழின் தொல்லெழுத்தான “தமிழி”  அல்லது “தமிழ் பிராமி”, தமிழ் வட்டெழுத்து ஆகிய எழுத்துருக்கள் இணைய வழிப் பயன்பாட்டில் உள்ளன. ”அன்றாள் கோ”, “அன்றாடு நற்காசு”  என்னும் தொடர்களைக் கல்வெட்டுகளில் காணலாம். கல்வெட்டு எழுதப்பெற்ற காலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனையும் (கோ), அக்காலத்தே புழக்கத்திலிருந்த நாணயத்தையும் (காசு) குறிக்கும் தொடர்கள் இவை. அதுபோல, அன்றாடு தமிழ் எழுத்துகளில் நாம் எழுதுவனவற்றைத் தமிழி எழுத்து வடிவத்திலும், வட்டெழுத்து வடிவத்திலும் நாம் காணுமாறு மாற்றித்தருகின்ற கணினி நுட்பங்கள் பல நடைமுறையில் வந்துவிட்டன.

               தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைத் தகவல் தொழில் நுட்பம் வாயிலாக உயர்த்தும் ஒரு நோக்கத்தில் இயங்கிவருகின்ற “உத்தமம்” (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – INTERNATIONAL FORUM FOR INFORMATION TECHNOLOGY IN TAMIL),  தமிழ் மொழி, எழுத்து சார்ந்த பல நுட்பங்களில் ஒன்றாகக் கல்வெட்டுகளைக் கணினிக்குள் கொணர்ந்து ஆவணப்படுத்தும்  முயற்சியில் களமிறங்கியுள்ளது.

அப்பாசாமி முருகையன்:
             
உத்தமம் அமைப்பின் தலைவரான அப்பாசாமி முருகையன் அவர்கள், 29-09-2018 அன்று, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரியில் நடத்திய ஒரு நாள் பயிலரங்கில் கல்வெட்டுகளின் தொகுப்பு, ஆவணப்படுத்துதல், பகுத்தாய்தல் ஆகியவற்றைப் பற்றி உரை நிகழ்த்தினார். கல்வெட்டுகளைப் பற்றிய அவரது இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இரண்டையும் போற்றிக் கொண்டாடினால்தான் அவற்றின் மதிப்புப் புலப்படும். கல்வெட்டுகளை அவர் போற்றிக் கொண்டாடியதை என்னால் நன்கு உணரமுடிந்ததது. காரணம், கல்வெட்டுகளைப் படித்துத் தெரிந்துகொண்ட சில ஆண்டுகளில் எனக்குக் கிடைக்கப்பெற்ற பட்டறிவே.  அது பற்றிய ஒரு பகிர்வே இந்தக் கட்டுரை.

பயிலரங்கு:
               பயிலரங்கு நடந்த இடம் முன்னர்க் குறித்தவாறு, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரி. கல்லூரியின் வளாகம் மிகப்பெரியதொரு வளாகம்.  சாலையில் அதன் நுழைவுத் தோரணத்திலிருந்து வளாகத்துள் செல்லும் பாதை நீண்ட தொலைவு செல்கிறது. பாதையின் ஒரு புறம் மரங்கள் அடர்ந்த சோலை. சோலையைக் கடந்த பின்னரே கல்லூரியின் முதன்மைக் கட்டிடம் தொடங்குகிறது. ஓர் அரண்மனையை நினைவூட்டும் பழங்கால மாட மாளிகை அமைப்பில் கட்டப்பெற்ற மாபெரும் கட்டிடம். அதன் மூன்றாவது தளத்தில், விரிவுரை அரங்கு ஒன்றில் நிகழ்வு.  ஐம்பது பேர் கலந்துகொண்ட பயிலரங்கு, வருகைப்பதிவு நிறைவுற்றதும் பத்து மணிக்கு முன்னரே தொடங்கியது. அறிமுகங்கள் நடந்தேறியதும் மேல் நிகழ்வுகள் அ.முருகையன் அவர்கள் பொறுப்பில்.

               தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஓர் அறிமுகம், அடுத்து நடுகற்கள், அதனை அடுத்துத் தமிழ்க்கல்வெட்டுகளின் மொழியும் அதன் புரிதலும் என மூன்று அடுக்குகளாக அ.முருகையன் அவர்களின் காலை நேர விளக்கவுரை அமைந்தது.  தம் இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பின் அறிவை ஓர் ஐந்து மணிக் கூற்றுக்குள் எவ்வளவு வெளிப்படுத்தமுடியும்? கேள்வியும் இயல்பானது; அவர் முயற்சியும் இயல்பானது. அயர்வு சிறிதும் உணரப்படவில்லை.

கல்வெட்டுகளின் மொழி:
               கல்வெட்டுகளில் காணப்படுகின்ற மொழி தூய்மையானதல்ல என்று சற்றே தாழ்த்திப்பார்க்கும் பார்வை வெகு காலம் இருந்துள்ளது. ஆனால் மெய்யாக அவ்வாறில்லை. நல்ல இலக்கியத் தமிழுக்கு எவ்வாறு ஓர் இலக்கணம் உள்ளதோ அவ்வாறே கல்வெட்டுத் தமிழுக்கும் ஓர் இலக்கணம் உண்டு. உயர்வு தாழ்வு அங்கே இல்லை. ஊர்திகளின் உலகம் என்றாகிவிட்ட இன்றைய சாலைகளில் ஊர்தியில் பயணம் செய்கையில் நாம் (நமது ஊர்தி), சாலை இருவருக்குமாக ஒரு தொடர்பு மொழியும் இலக்கணமும் உள்ளன. சாலைக் குறியீடுகளும் விதிகளும் அந்த இலக்கணத்தில் அடங்கும்; அதைப் புரிந்து கொண்டால்தான் பாதுகாப்பான பொருள் பொதிந்த பயணம் அமையும். அது போலவே, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றின் இலக்கணம் அல்லது விதிமுறை நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.  நாம் அறிந்துள்ள தமிழ் மொழிக்கும் கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு.

தொல்லியல் துறை:
               தொல்லியல் துறை ஆங்கிலேயரால் முதன்முதலில் ஆசியக் கழகம் (ASIATIC SOCIETY) என்னும் பெயரில் 1784-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுப் பின்னர் சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (ALEXANDER CUNNINGHAM)  என்பவரால் தொல்லியல் ஆய்வுக் கழகமாக (ARCHAEOLOGICAL SURVEY OF INDIA), 1861-இல் இத்துறை வளர்ச்சியுற்றது. 

கல்வெட்டுகள்:
               தமிழ் நாட்டு (அரசர்) வரலாறு, மக்கள் வாழ்க்கை, மக்கள் பண்பாடு, மொழி ஆகிய பல்வேறு கூறுகளை அறிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத சான்றாதாரங்களுள் கல்வெட்டுகள் மிக முதன்மையானவை.  கல்வெட்டுகளைப் படிக்கத் தற்காலம் நிறையக் கருவிகள் உள்ளன. முற்காலம் போல் அல்ல. கல்வெட்டுகள் தவிர செப்பேடுகள் அடுத்து முதன்மையானவை. தமிழ் மொழியல்லாது அரபு மொழிக் கல்வெட்டுகளும் இங்கே உள்ளன. பெரும்பாலான செப்பேடுகள் இரு மொழி கலந்து பொறிக்கப்பட்டவை. அவற்றின் தொடக்கத்தில் சமற்கிருத மொழியும் அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியும் காணப்படுகின்றன. சமற்கிருத மொழியை எழுதக் கிரந்த எழுத்து பயன்பட்டது. தமிழ் மொழியை எழுத வட்டெழுத்தும் தமிழ் எழுத்தும் பயன்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பெற்ற கல்வெட்டுகள் மிகக் குறைவான சொற்களைக் கொண்டவை. இவற்றில், பிராகிருதம், சமற்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிச் சொற்களும் கலந்து காணப்படும். தமிழ் நாட்டின் வரலாற்றையும், தமிழ் மொழியின் வரலாற்றையும் அறிந்துகொள்ள இவை இன்றியமையாதவை.

               இந்திய நாடு முழுமையும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல், இரண்டு நூற்றாண்டுக் காலம் பிராகிருத - இந்தோ ஆரிய மொழிகள் (PRAKRIT MIDDLE INDO ARYAN LANGUAGES - MIA) செல்வாக்குப் பெற்றிருந்தன. அசோகனின் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு அளவிலானவை. ஆனால், தமிழ் நாட்டில் தேனி மாவட்டம் புலிமான் கோம்பையில் கிடைத்த தமிழ் பிராமிக்கல்வெட்டு, அசோகனின் காலத்துக்கும் முற்பட்டது என நிறுவப்பட்டுள்ளது. எனவே, சங்ககாலம் எது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று. 

               கல்வெட்டுகளில் காணப்பெறும் மொழி வடிவம் வேறு. கி.பி. 4 – கி.பி. 5   நூற்றாண்டு அளவில்தான் கல்வெட்டுகளில் சமற்கிருதம் நுழைகின்றது. அதுவரை, தமிழ் மொழி மட்டுமே. காரணம், இந்திய நாடு பண்பாட்டளவில் வட நாடு, தென்னாடு என்னும் அமைப்பில் மாறுபட்டிருந்தது. எனவே, கல்வெட்டுகள், இந்திய வரலாற்றுக்கும், தமிழக வரலாற்றுக்கும் மூலச் சான்றுகளாக உள்ளன. கல்வெட்டுகளை யார் எழுதினர்? யாருக்காக எழுதினர்? என்பது தெரிந்துகொள்ளவேண்டும். மக்கள் பார்க்கவேண்டும் என்னும் நோக்கத்தில், கோயில்களில் நம் பார்வை அளவில் கல்வெட்டுகள் எழுதப்பெற்றன. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில், நம் பார்வை அளவில் நாயன்மாரின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அவை நம்மைப் பார்க்கவும் படிக்கவும் தூண்டுபவை.

               கல்வெட்டுகளைப் படிக்கையில் சமூகச் சூழல் சார்ந்த உண்மைகளின் துணையும், மொழி சார்ந்த விதிமுறைகளின் துணையும் தேவைப்படும். கல்வெட்டுகளைப் படிக்கையில் நமக்கு இயல்பாகவே ஒரு பொறையுடைமைப் (TOLERANCE) பண்பு ஏற்படுதலைக் காணலாம். கல்வெட்டுகளின் தோற்றத்தைச் சற்றே ஆய்ந்தால், கல்வெட்டுகளில் தமிழ்க்கல்வெட்டுகளே மிகத் தொன்மையானவை என்னும் உண்மை பெறப்படுகிறது. 

கல்வெட்டுகளின் தோற்றம் – காலம் ஒரு பார்வை:
மொழி தோற்றம்(காலம்)
வங்காளம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு
குஜராத்தி கி.பி. 14-ஆம் நூற்றாண்டு
மராத்தி கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டு
ஒடியா கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டு
இந்தி            ?
கன்னடம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
தெலுங்கு கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
மலையாளம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு
தமிழ் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு

              கல்வெட்டுகள், ஆட்சியிலிருக்கும் அரசருக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் குறிப்பன.  நாடு முழுதும் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில்  தமிழ்க் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் மிகுதியானவை. தமிழ்க் கல்வெட்டுகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சோழர் காலக் கல்வெட்டுகளாகும்.

கல்வெட்டுகள் குறித்த ஆய்வுக்குப் பயன்பட்ட சான்று மூலங்களும், நிறுவனங்களும் கீழுள்ளவாறு:
1.  தொல்லியல் ஆய்வுத் துறை (ARCHAEOLOGICAL SOCIETY OF INDIA) 1890-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட  கல்வெட்டுத் தொகுதிகள் 37. (SOUTH INDIAN INSCRIPTIONS – VOLUMES).

2.  தொல்லியல் கழகம், தஞ்சை (ARCHAEOLOGICAL SOCIETY, THANJAVUR).

3.  தமிழ்நாடு அரசு – தொல்லியல் துறை 1961-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட நூல்கள்.

4.  கல்வெட்டியல் பேரா. எ.சுப்பராயலு அவர்களின் கல்வெட்டு அகராதி.

5.  கல்வெட்டு அகராதி – மதுரைப் பல்கலை வெளியீடு – ஆசிரியர் கோவிந்தராஜ்.

6.  தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் 110.  கி.மு. 2 – கி.பி. 4  நூ.ஆ.

7.  நடுகல் கல்வெட்டுகள் 317.  கி.மு. 3 – கி.பி. 5-15  நூ.ஆ.

8.  கோயில் கல்வெட்டுகள், செப்பேடுகள்  28,000-க்கும் மேற்பட்டவை.
கி.பி. 5 – கி.பி. 19  நூ.ஆ.

கோயில் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில்,
பல்லவர் காலம் 6 - 9 நூ.ஆ.
முற்காலப் பாண்டியர் காலம் 6 - 9 நூ.ஆ.
பிற்காலப் பாண்டியர் காலம் 12 - 14 நூ.ஆ.
சோழர் காலம் 9 - 13 நூ.ஆ.

               இவற்றில் சோழர் கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிகுதி என்பதோடு மெய்க்கீர்த்தி என்னும் கல்வெட்டுப்பகுதியின் தோற்றமும் வளர்ச்சியும் கொண்டவை.

கல்வெட்டுகளின் அமைப்பு:
கல்வெட்டுகள் மிகுந்த கட்டமைப்பைக் (STRUCTURE) கொண்டவை.  அவையாவன:
1.  இறைவழிபாடு அல்லது மங்கலத் தொடக்கம்
2.  மெய்க்கீர்த்தி
3.  விரிவான கொடைச் செய்தி – கொடையாளி, பயனாளி போன்றவை.
4.  சான்றாளர்கள், கொடையறத்தின் காப்பு

நடுகற்கள்:
               கருநாடகத்தில் “வீரகல்லு”  என்று வழங்கும் நினைவுக்கற்கள் (HERO STONES), தமிழகத்தில் நடுகற்கள் என வழங்கும். நாட்டுப்புறப் பகுதிகளில் பொது நிலை மக்களில் ஒருவராய் இருக்கும் வீரர்கள் ஒரு பூசலின்போது இறந்துபடும் நிலையில் அவர் நினைவாக  எடுக்கப்படும் நினைவுக்கற்கள் நடுகற்களாகும்.  கல் நாட்டப்படுவதால் நடுகல் (PLANTED STONES).  வடபுலத்தார் இதை “சாயா ஸ்தம்பா”  (SHADOW PILLARS) என்பர். பூசல் என்பது ஒரு சிறு சண்டை என்னும் நிலையைக் குறிக்கும். போர் என்னும் அளவில் பெரிய சூழல் இதில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள “SKIRMISH“ என்னும் சொல்லை இதற்கு இணையாகக் குறிப்பிடலாம். பெரும்பாலும் இந் நடுகற்கள் தனிப்பட்டவர் ஒருவரின் புலத்தில் இருக்கும். பூசல், பெரும்பாலும் ஆநிரை கவரும் நிகழ்வாகவோ அல்லது ஆநிரை மீட்டல் நிகழ்வாகவோ அமையும். ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் தொல்காப்பிய இலக்கண வகையில் குறிக்கப்பெறுகின்றன. சங்க இலக்கியங்களில் காணப்பெறும் “ஆகோள்”  என்னும் சொல், இவ்விருவகைப் பூசல்களையும் குறிக்கும். சங்க இலக்கியச் சொல்லான “ஆகோள்” , புலிமான் கோம்பை நடுகல்லில் கையாளப்பட்டமை கண்டறியப்பட்டதாலும், இச்சொல் தமிழ் பிராமி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி எழுத்து அசோகனின் காலத்துக்கு முற்பட்டது என்று நிறுவப்பட்டுள்ளது. இதன்வழி, சங்ககாலத்தின் தொன்மையும் அறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நடுகற்கள் ஊர் மக்கள் எடுப்பித்தவை; அமைவிடம், பெரும்பாலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள்; கருநாடகத்தையும், ஆந்திரத்தையும் ஒட்டியுள்ள பகுதிகள். சோழ நாடு மற்றும் பாண்டிய நாட்டுப் பகுதிகளில் நடுகற்கள் மிகக் குறைவு. நடுகற்கள், கருநாடகத்துத் தாக்கம் கொண்டவை எனலாம். பெரும்பாலும் ஊரின் புறத்தே காணப்படும்.

நடுகல் சிற்பம் - எடுத்துக்காட்டு


குறிப்பு: கருநாடகத்துப்பாணியில் நிறுவப்பட்ட நடுகற்கள் மூன்று அடுக்குகள் கொண்ட புடைப்புச் சிற்பங்களைக்கொண்டிருக்கும்.  கீழ் அடுக்கில் வீரன் இறந்துபடக் காரணமான சூழல் காட்டப்பெற்றிருக்கும் .  அதாவது போர் அல்லது பூசலின் சூழல். அதற்கு அடுத்த அடுக்கில், இறந்த வீரனை விண்ணுலகுக்குத் தேவ மாதர் அழைத்துச் செல்வது போன்ற குறிப்புடன் சிற்பம் இருக்கும். இறுதி அடுக்கில், விண்ணுலகை அடைந்த வீரன் சிவலிங்கத்தை வணங்கும் காட்சி வடிக்கப்பட்டிருக்கும். (வைணவத்தில் வைணவம் சார்ந்த காட்சி இருக்கும்).

நடுகற்களில் வட்டெழுத்து:
               நடுகற்களில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகல் வட்டெழுத்துப் பொறிப்புகளில் தமிழ் மொழி மட்டுமே காணப்படுகிறது. சமற்கிருதம் முற்றாக இல்லை என்பது சிறப்பு. 9-ஆம் நூற்றாண்டு அளவில் சமற்கிருதத்தின் உள்ளீடு இந்தோ-ஆரிய மொழிகளிலும் பரவியது.  நடுகற் கல்வெட்டுகள் ஏறத்தாழ 450 கல்வெட்டுகள். இவற்றின் காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரையிலானவை. இவற்றில் தொண்ணூறு விழுக்காடு திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ளன. எண்பது விழுக்காடு பல்லவர் காலற்றவை.  நடுகற்கள், முன்னர்க் குறிப்பிட்டவாறு, ஆநிரை தொடர்பான பூசல் பற்றியன. ஆநிரை, தொறு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும். எனவே, நடுகல் கல்வெட்டுகளில், தொறுப்பூசல், தொறு கோள், தொறு மீள் என்னும் குறிப்புத் தொடர்களும், தொறுப்பூசல் அல்லாத வேறு பூசல்கள் பற்றிய கல்வெட்டுகளில் “நாடு பாவுதல்”  என்னும் குறிப்புத் தொடரும் காணப்படும்.

கல்வெட்டுகளில் சமற்கிருதக் கலப்பு:
               முன்னர்க் குறித்தவாறு 9-ஆம் நூற்றாண்டு வரை, கல்வெட்டுகளில் சமற்கிருத மொழியின் தடயம் காணப்படவில்லை. சமற்கிருத மொழியைக் கடன் வாங்கும் சூழலும் நிகழவில்லை.  9-ஆம் நூற்றாண்டுக்கு மேல் சமற்கிருதம் இந்தியாவின் வடபுலம் தென்புலம் ஆகிய இரு பகுதிகளிலும் கல்வெட்டுகளில் கலந்து வருவதைக் காண்கிறோம். அரசர்கள் தம் விருதுப்பெயராகச் சமற்கிருதப் பெயர்களை அணிந்துகொண்டனர். ‘பாண்டிய குலாசனி’, ‘பாண்டிய குலாந்தக’, “பாண்டிய குலபதி”, “பராந்தக”  என்பன போன்ற பெயர்களைக் காண்க. தமிழ்ச் சொற்களைச் சமற்கிருதச் சொற்களாக மாற்றும் சூழலும் உண்டு. நிலமடந்தை, பூமாதேவியாகிறாள். பெண்ணோர் பாகன், அர்த்தநாரி ஆகிறான். பல்லவர் கல்வெட்டுகளில் சமற்கிருதச் சொற்கள் தமிழ் ஒலிப்புடன் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன. “மஹேந்திர” , ’மயீந்திர”  எனவும், “ஹஸ்தி கோஸ”  என்பது “அத்திகோயத்தார்”  எனவும் எழுதப்பட்டன. சமற்கிருதச் சொற்களின் ஒலிப்பைச் சரியாக எழுதும் முயற்சியில் கிரந்த எழுத்து முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்த வகையில், “மஹாஸபை”, “ஸிலாலேகை”  போன்ற சொற்கள் எழுந்தன. சில போது, வடசொல்லின் ஈற்றில் தமிழ் ஒட்டுகளும் சேர்த்து எழுதப்பெற்றன. எடுத்துக்காட்டாக “ஸபையோம்”  என்னும் சொல். இதை, ஸபை + ய்  + ஓம் எனப்பிரிக்கலாம்.  இதில் ஸபை என்பது வடசொல். மற்றொரு சொல் அல்லது தொடர் “பிராப்தியினாலே”  என்பது. இதை, ப்ராப்தி + இன் + ஆல் + ஏ  எனப்பிரிக்கலாம். இதில், “ப்ராப்தி”  என்பது வடசொல். சில தமிழ்ச் சொற்கள், சமற்கிருதச் சொல்லுக்குத் தமிழ் வடிவம் கொடுத்துள்ளனர் எனக்கருதுமாறு அமைகின்றன. எடுத்துக்காட்டாக, “அதுல்” (ATUL) என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு “ஒப்பற்ற”  என்று பொருள் அமையும். ஒப்பற்ற அரசன் எனக் குறிப்பதற்கு இந்த “அதுல்” சொல்லைக் கையாண்டு, தமிழ் வடிவம் கொடுத்து “கோநேரின்மைகொண்டான்” என எழுதினர் எனலாம்.
[கட்டுரை ஆசிரியர் குறிப்பு : “துல்” என்பது “துலாம்”  என்பதன் அடிப்படையில் ஒரு பால் கோடாமல் நிறை காட்டுதலைக் குறிக்கும். துலாக்கோலின் தட்டுகள், இணைத்தட்டுகள்; எனவே, இணை அற்ற என்னும் நிலையைக் குறிக்க “அதுல்” என்று குறிப்பர். நேர்மறைச் சொற்களை எதிர்மறைச் சொற்களாக்கச் சமற்கிருதச் சொற்களில் “அ” எனும் ஒரு முன்னொட்டைச் சேர்ப்பர். எடுத்துக்காட்டாக, “நியாயம்” -> ”அநியாயம்” ;  “தர்மம்” -> “அதர்மம்”  என்பன போல், “துல்” -> “அதுல்”  (இணையற்ற, ஒப்பற்ற).]

மணிப்பிரவாளம்:
               தமிழில் சமற்கிருதக் கலப்பு மிகுந்தபோது அது, மணிப்பிரவாளம் என அழைக்கப்பட்டது. மணியும் பவளமும் கலந்தது போன்று என்று அதைப் பெருமைப்படுத்தியதுண்டு. மணிப்பிரவாளத்தைப் பற்றி வீரசோழியம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு மொழி:
               நாம் அறிந்துள்ள தமிழ் மொழிக்கும் கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளின் இலக்கணமும் வேறுபடும். ஒரு சில எடுத்துக்காட்டுகள் வழி இவை விளக்கப்படுகின்றன. மொழி இலக்கணத்தில், மொழியின் புறவடிவமைப்பைச் சார்ந்து பல வகைகளில் பொருள் காணல் நிகழும். இதை ஆங்கிலத்தில் (MORPHOLOGICAL CASE MARKING) எனக் குறிக்கலாம். தமிழில் உள்ள எட்டு வேற்றுமைகளில் ஒன்று இடவேற்றுமை (LOCATIVE CASE). எங்கு, எப்போது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “நான் கோவையில் குடியிருக்கிறேன்” என்னும் தொடரில், எங்கு என்னும் கேள்விக்கு “கோவையில்” என்பது விடையாக அமையும். இங்கு, “இல்” என்னும் வேற்றுமை இடவேற்றுமையாகும். இந்த இடவேற்றுமை, கல்வெட்டுகளில் இல்லாமல் போவதுண்டு (ABSENCE OF LOCATIVE). எடுத்துக்காட்டாக,

“தஞ்சாவூர்  எடுப்பித்த  திருக்கற்றளி” 
என்னும் கல்வெட்டுத் தொடரில், “இல்” என்னும் இடவேற்றுமை உருபு இல்லை. தஞ்சாவூர் என்னும் ஒருவர் கட்டுவித்த கோயில் என்னும் பொருள் இக்கல்வெட்டுத் தொடரில் அமைகிறதேயன்றித் தஞ்சாவூரில் கட்டுவித்த கோயில் என்னும் பொருள் நேரடியாக அமையவில்லை. அடுத்து, தமிழில் உள்ள இரண்டாம் வேற்றுமை பற்றியது. யார், எது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  மற்றொரு கல்வெட்டில், கோயிலில் நந்தா விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு ஆடுகளைக் கொடையாக அளித்தது பற்றிக் குறிப்பிடுகையில்,

“…… ஆடு  தொண்ணூற்றாறு”
என்னும் தொடர் உள்ளது. இதில், இரண்டாம் வேற்றுமை காட்டப்படாதது மட்டுமன்றி, எண்ணிக்கையைக் குறிக்கும் சொல் இடவல மாற்றம் பெற்றுள்ளதைக்  காணலாம். இதை ஆங்கிலத்தில், (ABSENCE OF ACCUSATIVE AND QUANTIFIER FLOATING) என்பார்கள்.  “தொண்ணூற்றாறு ஆடு”  என்றமையவேண்டிய வடிவம்,  “ஆடு தொண்ணூற்றாறு” என மாற்றமடைந்துள்ளது.

               அடுத்து, மொழி அமைப்பில், ஒரு சொற்றொடரில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை (வினை முற்று) என்னும் மரபு உண்டு. ஆங்கிலத்தில் இதை SUBJECT-OBJECT-VERB , SOV  என்பர். இந்த அமைப்பு முறை கல்வெட்டுகளில் இல்லை. இது, பின்வரும் கல்வெட்டுத் தொடர்களின் வாயிலாக அறியப்படும்;

எ-டு 1.
“யாண்டு  நந்திப்போத்தரையர்க்கு  பத்தொன்பதாவது”

எ-டு 2.
“நம்  பிராட்டியார்  கைவழி  கொடுத்த  காசு  இருநூறு”

எ-டு 3.
“திருச்சுற்று  மாளிகை  எடுப்பித்தான்  சேநாபதி  இராமன்  கிருஷ்ணன்”        

               அடுத்து, மொழி ஒலிப்புத் தொடர்பானது. இரண்டு சொற்களின் சந்திப்பில் ஏற்படும் சந்தி, கல்வெட்டுகளில் இல்லாமல் போவது (ABSENCE OF SANDHI).  கீழ் வரும் எடுத்துக்காட்டுகளைக் காண்க.

“பொற்றொக்கை  ஆர்”

“பெரும்புலி  ஊர்”

“கோ  இல்”

இவற்றைப் பழகு தமிழில், பொற்றொக்கையார், பெரும்புலியூர், கோயில் என நாம் வழங்குவோம். கல்வெட்டுகளில் அவ்வாறில்லை.

கல்வெட்டுகளின் கணினியாக்கமும் தரவு மேலாண்மையும்:
(CORPUS LINGUISTICS AND DATABASE COMPILATION)
               கல்வெட்டுகளைக் கணினிக்குள் கொணர்ந்து அதன் செய்திகளைத் – தரவுகளை -  தொகுத்தல், மேலாண்மை செய்தல், அதற்கான  தேடு பொறி அமைத்தல் ஆகிய தொழில் நுட்பம் பற்றிய கருத்துப் பகிர்வு பிற்பகல் நிகழ்வாய் அமைந்தது. ஒரு மொழி (MONOLINGUAL), ஒரு காலம் (SYNCHRONIC), வரலாற்றுப் பார்வை (DIACHRONIC) ஆகிய பல நிலைகளைப்பற்றி முருகையன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். கணினி மற்றும் கணினியாக்கம் தொடர்பான நுட்பமான செய்திகள். கணினித் தொழில் நுட்ப ஆய்வாளர்களைக்கொண்டு பல நிரல்களை (PROGRAMS) உருவாக்கிக் கல்வெட்டுகளின் தரவுத்தொகுப்பினை அமைத்துக் கல்வெட்டுகளின் பாடங்கள், கல்வெட்டுகளை நாம் புரிந்துகொள்ளும் நுட்பத்தைக் கணினிக்குள் புகுத்துதல் ஆகிய பல்வேறு கூறுகளை முருகையன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

               முன்னர் அவர் குறிப்பிட்டவாறு, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றுக்கான இலக்கணத்தையும் விதிகளையும் அறிந்திருத்தல், கணினிக்குள் பதிவு செய்யப்பட்ட தரவுத்தொகுப்பிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் (INFORMATION EXTRACTION) ஆகிய செயல்பாடுகளைக் கையாள என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றிய ஓர் அலசல். இலக்கியம் மட்டுமே அறிந்த தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், கல்வெட்டியல் அறிந்த என் போன்றோருக்கும் இந்தக் கணினி நுட்பங்கள் புதியன.  ஆனால், கணினிப் பொறியாளர்களுக்கு இது வழிகாட்டும் கல்விமுறை. மேற்குறித்த வெவ்வேறு மூன்று தளங்களிலும் பயிற்சியுடைய மூவகையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றும்போது கல்வெட்டுகளின் கணினியாக்கம் வரலாற்றையும் ஒருங்கிணைக்கவல்லது.

               கல்வெட்டுகளைக் கணினிக்கு எவ்வாறு புரியவைத்தல் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் விளக்கப்பட்டன. செங்கம் நடுகற்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கல்வெட்டுப் பாடம் (TEXT), பல பகுதிகளாகப் (SEGMENTATION) பிரிக்கப்படுகின்றன. முழுப்பொருள் தருகின்ற சொற்களாகவோ, இடத்தைப் பொறுத்துப் பொருள் கொள்ளும் சொற்களாகவோ பிரிக்கப்படுகின்றன. பின்னர் அவை, ஆள் பெயர், இடப்பெயர், எண்ணுப்பெயர் என்பது போன்ற அடையாளப்படுத்தும் பெயர்களாகக் குறிக்கப்படுகின்றன.

கல்வெட்டு -1
கோவிசைய   மயீந்திர   பருமற்கு   முப்பத்தெட்டாவது
        1                              2                   3                           4

1, 2, 3 -  ஆள் பெயர்  (pn.dat  PERSON NAME)
4 - 38 – எண்ணுப்பெயர்  ( 38.ord )  

கல்வெட்டு -2
வாணகோ    அரைசரு   மருமக்கள்     கந்தவிண்ணனார்     கூடல்    
          1                            2                   3                            4                               5

தொறுக்கொண்ட      ஞான்று
              6                                7

1, 2  - ஆள் பெயர்  -  (pn)
3  -  உறவு  -  (kindred)
4  -   ஆள் பெயர்  -  (pn)
5  -  இடப்பெயர்  -  (pln PLACE NAME)
6  -  ஆநிரை கொள்ளல் – (cattle-lift)
7  -  போது  -  (while)

கல்வெட்டுகள் சில:
               முருகையன் அவர்கள் சிறப்பான சில கல்வெட்டுகளின் படங்களைக் காண்பித்துச் செய்திகளைச் சொன்னார்.  அவற்றுள் சில இங்கே காட்டப்பெறுகின்றன:

கல்வெட்டு-1
1    பகாப்பிடுகு   லளிதாங்குரன்





கல்வெட்டு-2   (வல்லம் குடைவரைக் கோயில்)
1    சத்துரும் மல்லன் குணபரன்
2    மயேந்திரப் போத்தரைசரு அடியான்
3    வயந்தப்பிரி அரைசரு மகன் கந்த சேன
4    ன் செயிவித்த தேவகுலம்


குறிப்பு:  முதல் இரு கல்வெட்டுகளும் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனுக்குரியது.  மஹேந்திர என்பது மயேந்திர என்று மாற்றம் பெற்றது. அது போலவே, வஸந்த என்பது வயந்த என மாற்றம் பெற்றது. இரண்டாம் கல்வெட்டில் தேவகுலம் என்பது கோயிலைக்குறிக்கும்.


கல்வெட்டு-3   (பள்ளன் கோயில் கல்வெட்டு)
1    டுத்து விடுதகவென்று நாட்டார்க்குத் திருமுகம் விட நாட்டா
2    ருந் திருமுகங் கண்டு தொழுது தலைக்கு வைத்துப் படா
3    கை நடது கல்லுங் கள்ளியு நாட்டி நாட்டார் விடுந்த
4    அறையோலைப் படிக்கெல்லை கீழ்பா
5    லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி
6    ன் மேற்குமோமைக்கொல்லை எல்லை இன்னு
7    ம் தென்பாலெல்லை வேள் வடுகன் கேணியி
8    ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாடி


குறிப்பு : பள்ளன்கோயில் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது. மேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம்—வருமாறு: 

நாட்டார்-நாட்டுச்சபையார்
திருமுகம்-அரசனின்ஆணை எழுதப்பெற்ற ஓலை
தொழுது தலைக்கு வைத்து - நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.
படாகை-பிடாகை - உட்கிடை ஊர்
படாகை நடந்து  கல்லுங்கள்ளியு(ம்) நாட்டி - பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர். சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும், திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழி) பொறித்த கற்களும் நடுவது மரபு.
விடுத்த அறையோலை - கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.

முடிவுரை:
               கல்வெட்டுகள் மெய்யானவையா? கல்வெட்டுகள் நம்பிக்கைக்குரியனவா? என்று சில கேள்விகள் எழுந்தன. கல்வெட்டுகள் எவ்வாறு பொறிக்கப்பட்டன என்பதை அறிந்தால் ஐயங்கள் அகலும். அரசன் நிலக்கொடை பற்றிய ஆணையை நேரடியாக வாய் மொழி அறிவிக்கிறான். வாய்மொழி ஆணையைக் குறிக்கும் சொல் திருவாய்க்கேழ்வி. அதைச் செவிமடுத்துக் கேட்டு எழுதும் அரசு அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் திருமந்திர ஓலை. எழுதப்பட்ட ஓலையின் படி (நகல்) ஒன்று கொடை நிலம் இருக்கும் ஊரின் நாட்டார் சபைக்குச் செல்கிறது. அரசனின் ஆணையாதலால் அது திருமுகம் எனப்படுகிறது. திருமுகம் கிடைக்கப்பெற்ற நாட்டார் அதனைத் தொழுது தலைமேல் வைத்துக் கொள்கின்றனர். பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  நிலத்தின் எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நடுகின்றனர். கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றனர்.  கோயில் சுவரில் அரசனின் ஆணை, கல்வெட்டாகப் பொறிக்கப்படுகிறது. கல்லின்மேல் பொறிக்கும் முன்பு கல்வெட்டு வாசகம் கல்லில் செங்காவி கொண்டு எழுதப்படுகிறது. மக்கள் பார்வைக்கு அரசனின் ஆணை எட்டுவது இவ்வகையில்தான்.



               கல்வெட்டுகள் மிக முதன்மையான சான்றாதாரங்கள்.  கல்வெட்டுகளைப் படித்தறிதல் ஓர் அருமையான கலை. கல்வெட்டுகளைக் கணினிக்கும் இணையத்துக்கும் கொண்டு சென்று தரவுத் தொகுப்பாக்கிப் பயன்படுத்தும்போது வருங்காலத்தவர் வரலாறு அறியவும் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவும் மிகப்பயன்படும்  என்றும், இலக்கியப் பேராசிரியர்கள், கல்வெட்டு அறிந்தவர்கள், கணினித் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுகோள் விடுத்தும் முருகையன் அவர்கள் கல்வெட்டியல் பயிலரங்கை நிறைவு செய்தார்.



___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.